நான் ஏன் ரோமன் கத்தோலிக்கன் இல்லை!
சார்ள்ஸ் பி லெபேபிரா (Charles B LeFevre)
நான் ஏன் “புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ பிரிவைச் சேர்ந்தவன் அல்ல” என்ற தலைப்பில் அதற்கான காரணங்களைக்காட்டி ரோமன் கத்தோலிக்க மதம் ஒரு கைப்பிரதியை வெளியிட்டதை நீங்கள் அறிந்திருக்கலாம். இதைப் பற்றி அநேகர் செய்தித் தாளில் படித்து இதற்கான பதில் தரும்படி என்னிடம் கேட்டார்கள். அக்கைப்பிரதியில் ரோமன் கத்தோலிக்க மதம் வெளியிட்டுள்ள கருத்துக்களைப் பார்க்கும்போது எனக்கு பாபேல் கோபுரத்தைக் கட்டியவர்கள் மத்தியில் இருந்த மொழிக்குழப்பமே நினைவுக்கு வருகின்றது. இவர்கள் உண்மையைச் சோற்றில் மூடி மறைத்து, அறைகுறையான பல காரணங்களைக் காட்டி, வேதத்திற்கு தவறான விளக்கங்களையும் தந்திருக்கிறார்கள். மேலும் இவர்களுடைய ஏமாற்று வேலைகளையும், தவறுகளையும், புரட்டுக்களையும் நிரூபிப்பதானால் நான் ஒரு பெரிய நூலையே எழுத நேரிடும். எனவே, அநேகருடைய வேண்டுகோளை ஏற்று, “நான் ஏன் ரோமன் கத்தோலிக்கன் இல்லை?” என்பதற்கான இருபதுக்கும் மேற்பட்ட காரணங்களை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.
(1) பாவத்திலிருந்து என்னை மீட்டு இரட்சித்தவரும், ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவுக்கு நான் சொந்தமானவனானபடியாலும், அவருக்கே முழுமையாகக் கீழ்ப்படிவதாலும் அவர் தலையாக இருந்து வழிநடத்தும் அவருடைய திருச்சபையை மட்டுமே சார்ந்தவன் நான். ரோமன் கத்தோலிக்க மதத்தோடும், அதன் தலைமையோடும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இயேசு சொன்னார்: “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவரும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6). இவ்விதமாக கிறிஸ்துவுக்குள்ளாக பிதாவினிடத்தில் சேரும் பாக்கியத்தையும், இன்றியமையாத சத்தியத்தையும், நித்திய வாழ்வையும் நான் அடைந்திருக்கிறேன்.
(2) கிறிஸ்து தான் கட்டுகிறேன் என்று சொன்ன திருச்சபை, ரோமில் உள்ள கத்தோலிக்க சபையை அல்ல! (மத்தேயு 16:18). பெந்தகொஸ்தே நாளில், சுவிசேஷ அறிவிப்பின் மூலமாகவும், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தின் மூலமும் எருசலேமிலேயே தன்னுடைய பரிசுத்தமான திருச்சபையை கிறிஸ்து ஏற்படுத்தினார். அது இத்தாலிய நாட்டு ரோம் நகரில் நிறுவப்படவில்லை. எருசலேமில் திருச்சபை நிறுவப்பட்ட அந்தக் காலத்தில் ரோம் நகர் புறஜாதியாரையும் விக்கிரக வழிபாடு செய்பவர் களையுமே கொண்டிருந்தது. அங்கே ஒரு கிறிஸ்தவனாவது இருக்கவில்லை.
(3) அடுத்ததாக, இயேசு கிறிஸ்துவின் மெய்யான ஒரே திருச்சபை ரோமன் கத்தோலிக்க சபை அல்ல. கிறிஸ்து தலைமை வகிக்கும் திருச்சபையைப் பற்றிய ஒரு முக்கிய உண்மை, அது ஆவிக்குரிய நிலையிலும், ஜீவனுள்ள தாகவும் வியாபித்துக் காணப்படுவதாகும். அதாவது கிறிஸ்துவில் ஜீவனை அடைந்திருக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட விசுவாசிகளைக் கொண்ட அவருடைய திருச்சபை உயிர்த்துடிப்போடு பரந்து வியாபித்து காணப்படு கின்றது. ஆனால், புறக்கண்களால் மட்டுமே நாம் பார்க்க முடிகிற ரோம் நகரில் இருக்கும் ரோம சபை மனிதர்களால் கட்டப்பட்டதாக போப்பைத் தலைவனாகக் கொண்டு ஆவிக்குரிய நிலையில் இல்லாமல் இயங்கி வருகிறது. இங்கே நாம் இரண்டு தலைமைகளைப் பற்றி விளக்கமளித்துக் கொண்டு வருவதிலிருந்தே சரீரத்துக்கு ஒரே சமயத்தில் ஒரு தலை மட்டுந் தான் இருக்க முடியும் என்பது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. கிறிஸ்து தன்னுடைய திருச்சபைக்குத் தலையாக இருக்கும்போது போப்பை அத் திருச்சபையின் இன்னொரு தலையாக நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.
(4) பேதுருவை அடிக்கல்லாகக் கொண்டு நிறுவப்பட்டதாகத் தன்னை இனங்காட்டிக் கொள்கிறது ரோமன் கத்தோலிக்க சபை. ஆனால், கிறிஸ்து தமது சபையை அசையக்கூடிய கல்லின் மேல் (‘Petros’ or ‘Peter’) கட்டு வேன் என்று ஒருபோதும் சொல்லவில்லை. இயேசு தன்னுடைய சபையை என்றென்றும் ஜீவிக்கிற, உறுதியான, அசையாத கல்லின்மேல் (Petra) கட்டுவேன் என்றார். ‘Petra’ என்ற வார்த்தை அசையாத, ஜீவிக்கின்ற என்ற பொருளைக் கொண்டிருக்கிறது. பேதுருவும் மற்ற அப்போஸ் தலர்களும் தெய்வீக கிறிஸ்துவை என்றென்றும் ஜீவிக்கிற பாறை என்றும், திருச்சபைக்கு அவரே அஸ்திபாரம் என்றும் கூறியுள்ளார்கள். அப்போஸ்தலனாகிய பவுல் சொல்கிறார், “போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசு கிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது.” (1 கொரி. 3:11) எபேசியர் 2:20ன்படி கிறிஸ்துவே அப்போஸ்தலர்களுக்கும், தீர்க்கதரிசிகளுக்கும் அஸ்திபாரமாக இருக்கிறார். கிறிஸ்துவாகிய அஸ்திபாரம் இல்லாமல் மெய்யான திருச்சபை இருக்க முடியாது.
(5) ரோம சபை தன்னை உலகளாவிய திருச்சபையென்று பெருமையுடன் அறிவித்துக்கொண்டாலும் உண்மையில் அது மெய்யான உலகளாவிய திருச்சபை அல்ல. கத்தோலிக்கம் (Catholic) என்ற வார்த்தைக்கு “உலகளாவிய அளவில்” (Universal) என்பது பொருள். எனவே உலகளாவிய கிறிஸ்தவ சபையானது, கிறிஸ்துவின் சரீரத்திற்குள் அடங்கியுள்ள சகல விசுவாசிகளையும் உள்ளடக்கியிருக்க வேண்டும். இதுவரை வாழ்ந்து மரித்துள்ள இலட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் ரோம சபையை அறியாமலேயே வாழ்ந்திருக்கிறார்கள். அதேபோல் வாழ்ந்து கொண்டிருக்கும் இலட்சக்கணக்கான கிறிஸ்தவர்களும் ரோம சபையை அறியாமல் இருந்து வருகிறார்கள். ‘கத்தோலிக்கம்’ மற்றும் ‘உலகளாவிய’ என்ற வார்த்தைகளின் அர்த்தத்தின்படி மெய்யான உலகளாவிய திருச்சபையாக இருப்பதானால் அத்திருச்சபை ஆவிக்குரியதாக தெரிந்து கொள்ளப்பட்ட ஆத்துமாக்கள் அனைவரையும் உள்ளடக்கிய கிறிஸ்துவின் ஆத்மீக சரீரமாக இருக்க வேண்டும். ஆனால், ரோம சபையில் அதன் அதிகாரத்துக்குட்பட்டவர்கள் மட்டுமே அதன் ஐக்கியத்திற்குள் இருப்பவர்களாக இருக்கிறார்கள். ஆகவே, ரோம சபை உலகளாவிய சபை இல்லை.
(6) தன் சபையைச் சார்ந்தவர்களுடைய விசுவாசத்தின் மேலும், அவர்களுடைய நடைமுறை வாழ்க்கைமீதும் தனக்கு சர்வ அதிகாரம் இருப்பதாக ரோம சபை சொல்கிறது. இப்படி அப்போஸ்தலர்கள் கூட ஒருபோதும் சொன்னதில்லை. அப்போஸ்தலரொருவர் இன்னொரு அப்போஸ்தலர்மீது விசேஷ அதிகாரம் செலுத்தும்படி கிறிஸ்து எவருக்கும் அதிகாரம் கொடுக்கவில்லை (மத்தேயு 18:18; மாற்கு 9:33-35). அவர்கள் மேலான அதிகாரத்தையும், இடத்தையும் நாடியபோது இயேசு அவர் களுடைய ஆணவத்தையும், சுயநலத்தையும் கடிந்துகொண்டார் (மத்தேயு 20:20-27). கிறிஸ்து சிலுவையில் ஒப்புக்கொடுக்கப்பட்ட தினம் வரையும் தங்களுக்குள் யார் பெரியவன் என்பதில் அவருடைய சீஷர்களுக் கிடையில் வாக்குவாதம் நடந்தது (லூக்கா 22:24-26).
பேதுரு கோழைத்தனமாக மூன்று முறை கிறிஸ்துவை மறுதலித்திருந்தும், அவரைத் தெரியாது என்று சத்தியம் செய்திருந்தும், மற்ற அப்போஸ்தலர்களைவிட அதிக அதிகாரத்தை கிறிஸ்து பேதுருவுக்குக் கொடுத்தார் என்று ரோம சபை நம்மை நம்பச் சொல்லுகிறது. ஆனால், மனந்திரும்பும்படி பேதுருவுக்கு இயேசு ஆலோசனைகள் வழங்கியபோது, ஒரு போதகர் தன்னுடைய சபை மக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளைச் செய்யும்படி மட்டுமே அறிவுரை செய்தார். அதுமட்டுமல்லாது கிறிஸ்து தனிப்பட்ட முறையில் தன்னுடைய அப்போஸ்தர்களில் ஒருவருக்கு கொடுத்த எந்த அதிகாரத்தையும் அந்த அப்போஸ்தலன் வேறு எவருக்கும் கொடுக்க முடியாது. அது அந்த அப்போஸ்தலனுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது. நம்முடைய சொத்துக்களை நாம் நம்மைச் சேர்ந்தவர்களுக்குக் கொடுப் பதைப்போல நாம் பெற்றுக்கொண்ட ஆசீர்வாதங்களையும், சிறப்பான ஆத்மீக வரங்களையும் மற்றவர்களுக்கு தானம் பண்ண முடியாது. எனவே, பேதுருவின் வழியில் வந்ததாகக் கூறிக்கொண்டு எந்த மனிதனும் நிரந்தர மான தெய்வீக அதிகாரத்தை எவர் மீதும் செலுத்த முடியாது. கிறிஸ்து மட்டுமே அவருடைய திருச்சபையின் தலைவனாக இருக்கிறார். அந்தத் தலைவன் கட்டளையிடும்போது கப்பல் மாலுமிகள் அதற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்களே தவிர கட்டளையிடும்படியாக அல்ல.
மேலும், ஏனைய அப்போஸ்தலர்கள்மீது பேதுரு எந்தவிதத்திலும் தனது ஆதிக்கத்தையோ, அதிகாரத்தையோ செலுத்தவில்லை. மாறாக, அவர்களிடத்தில் அவர் அனுப்பப்பட்டார் என்றுதான் வேதத்தில் வாசிக்கிறோம் (அப்போஸ்தலர் 8:14). அத்தோடு, எருசலேமில் சபைத் தலைவர் களின் முதல் சபைக்கூட்டம் நடந்தபோது, அதில் யாக்கோபு தீர்ப்பை அளித்தாரே தவிர பேதுரு அதைச் செய்யவில்லை (அப்போஸ்தலர் 15:13, 20). பேதுரு உண்மையான சுவிசேஷத்தின்படி நடக்காததைக் கவனித்த போது, பவுல் அப்போஸ்தலன் அவரைக் குற்றவாளியாகக் கண்டு எல்லோருக்கும் முன்பாகவும் குற்றவாளி என்று முகத்தைப் பார்த்துக் கடிந்துகொண்டார். (கலாத்தியர் 2:11-14). பேதுரு திருச்சபை மூப்பர்களுக்குக் கொடுத்த அறிவுறையில் தன்னைக் குறித்துக் கூறும்போது “உங்களிலுள்ள மூப்பருக்கு உடன் மூப்பனும்” என்று தன்னை அவர்களுக்கு இணையாகப் பாவித்து எந்தவித அதிகாரத் தொனியும் இல்லாமல் “உங்களிடத்திலுள்ள மந்தையை மேய்த்து சுதந்திரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும் கண்கானிப்பு செய்யுங்கள்” என்று அறிவுரை கூறினார் (1 பேதுரு 5:1-3).
கிறிஸ்து பவுலை அதிகாரபூர்வமான அப்போஸ்தலனாக நியமித்தபோது பேதுருவின் சம்மதத்தைக் கேட்காமலேயே நியமித்தார். அதேபோல, இன்றைக்கும் ஆயிரக்கணக்கான போதகர்களையும், சுவிசேஷகர்களையும் ரோமின் போப்பின் ஆலோசனையைக் கேட்காமலேயே கிறிஸ்து தொடர்ந்து நியமித்து வருகிறார்.
(7) ரோம சபையானது அப்போஸ்தல சபை அல்ல. ஐந்தாம் நூற்றாண்டுகளில் இருந்து ரோம சபை பலவழிகளில் அப்போஸ்தலர்களின் உபதேசத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பிரிந்துபோனது. ஞானஸ்நானத்தை குறித்தும், திருவிருந்தைக் குறித்தும் வித்தியாசமான வழிகளை அது பின்பற்ற ஆரம்பித்தது. இதைப்போன்று இன்னும் அநேக காரியங்களில் அது அப்போஸ்தலப் போதனைகளைவிட்டு விலகித் தன்வழியில் போக ஆரம்பித்தது. அத்தோடு, தானே தீர்மானித்த புதிய போதனைகளையும், சடங்குகளையும், ஆடம்பரமான பகட்டாரவாரங்களையும் சபையோடு இணைத்துக் கொண்டது. இவற்றையெல்லாம் கர்த்தருடைய அப்போஸ் தலர்கள் ஒருபோதும் போதித்ததுமில்லை, நடைமுறைப்படுத்தியதுமில்லை. அப்போஸ்தலர்களின் உபதேசத்திற்கு மட்டுமே கட்டுப்பட்டு நடப்பதை விட்டுவிட்டு பல நூற்றாண்டுகளாகத் தானே உருவாக்கிக்கொண்ட பாரம்பரியங்களைப் பின்பற்றி ரோம சபை நடந்து வருகின்றது.
(8) ரோம சபையை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நிறுவவில்லை. முதல் நூற்றாண்டில் யூதேயா, சமாரியா, கலாத்தியா, மக்கெதோனியா மற்றும் ஆசியாவின் பல பகுதிகளிலும் அநேக திருச்சபைகள் இருந்தன (அப்போஸ்தலர் 9:31, 1 கொரிந்தியர் 16:1, 2 கொரிந்தியர் 8:1, வெளிப்படுத்தல் 1:4, 11). இந்தச் சபைகளெல்லாம் அப்போஸ்தலர்களால் நிறுவப்பட்ட அப்போஸ்தலத் திருச்சபைகளாக இருந்தன. அத்தோடு இவைகளெல்லாம் ரோம சபை நிறுவப்படுவதற்கு முன்பே உருவான சபைகளாக இருந்தன. இங்கே விசேஷமாக நாம் கவனிக்க வேண்டிய அம்சமென்னவெனில், எந்தவொரு திருச்சபையும் தன்னை மட்டுமே மெய்யான உலகளாவிய திருச்சபையாகக் கருதமுடியாது என்பதுதான். அந்தப் பெருந¢தவறைத்தான் போப்பின் ரோம சபை இன்றும் செய்து வருகிறது.
(9) அடுத்தபடியாக, நாம் கண்களால் காணக்கூடியதாக உலகத்தில் நிறுவப் பட்டிருக்கும் ஜீவனுள்ள உள்ளூர் திருச்சபைக்கும் (Visible local church) அதன் இன்னொரு பக்கமான கண்களால் காணமுடியாத ஆவிக்குரிய நிலையில் இருக்கும் உலகளாவிய ஜீவனுள்ள திருச்சபைக்குமிடையில் (Invisible Universal church) உள்ள வித்தியாசத்தை ரோம சபை சரிவர அறிந்துகொள்ளவில்லை. கண்களால் காணக்கூடியதாக உலகின் பல பாகங்களில் உள்ளூர் சபைகள் ஒன்றுக்கு மேற்பட்டதாக (Plural) இருக் கின்றன. ஆனால், ஆத்மீக ரீதியில் இருக்கும் உலகளாவிய திருச்சபையை நாம் கிறிஸ்துவின் சரீரமாகவும், கிறிஸ்துவின் மணவாட்டியாகவும்தான் பார்க்கிறோமே தவிர கிறிஸ்துவின் ‘சரீரங்களாகவும்’, ‘மணவாட்டிகளாகவும்’ பார்ப்பதில்லை. உலகளாவிய (Universal Invisible) திருச்சபையை ‘ஒன்றுக்கு மேற்பட்டதாக’ நாம் வேதத்தில் வாசிப்பதில்லை. அது எப்போதும் ஒரே திருச்சபையாக கிறிஸ்துவின் மணவாட்டியாக இருக்கிறது (1 கொரி. 12:27; கொலோ. 1:18). இந்த வேத போதனைகளின் அடிப்படையில் பார்க்கிறபோது உலகத்தில் கண்களால் காணக்கூடியதாக இருக்கும் போப்பின் ரோம சபை போப் சொல்லுவது போல் கிறிஸ்துவால் நிறுவப்பட்ட உலகளாவிய திருச்சபையாக, அவருடைய மெய்யான ஒரே ஆத்மீக சபையாக ஒருபோதும் இருக்க முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது.
(10) போப் மட்டுமே கிறிஸ்துவின் திருச்சபைக்கு ஒரே தலைவராக இருக்கிறார் என்று ரோம சபை கூறுவது முழுத்தவறு. வாக்குத்தத்தத்தின் மூலம் தன்னுடைய மக்களுக்கு ஒரு நாட்டைக் கர்த்தர் அளித்தபோது அதற்குத் தலைவனாக, அரசனாக கர்த்தர் ஒருவரையும் நியமிக்கவில்லை (நியாயாதி 17:6; 18:1). ஏனெனில், அவரே தன்னுடைய மக்களுக்கு இராஜா வாக இருந்ததினால் தம் சித்தப்படி அநேக நியாயாதிபதிகளை மட்டும் அவர்களுக்குத் தந்தார் (1 சாமு. 8:5-7). இதேபோல, தான் தலைவனாக, இராஜாவாக இருக்கும் தன்னுடைய ஒரே ஆத்மீகத் திருச்சபைக்கு அவர் எந்த மனிதனையும் போப்பாகவோ, தலைவனாகவோ நியமிக்கவில்லை (எபேசியர் 1:22, 23; கொலோ. 1:18). இஸ்ரவேலர்கள் கர்த்தரின் சித்தத்திற்கு எதிராக எப்படித் தங்களுடைய நாட்டுக்கு ஒரு மனிதனை இராஜாவாக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்களோ அதேபோல ரோம சபையும் கர்த்தரின் வேத போதனைகளுக்கெல்லாம் முரணாக, தனக்கு ஒரு மனிதனைத் தலைவனாக, போப்பாக நியமித்து, அவருக்கு மிகச் சிறந்த பரிசுத்த தலைவன் என்ற பட்டத்தை அளித்து உலகளாவிய கிறிஸ்துவின் திருச்சபைக்கு அவரே ஒரே தலைவன் என்று பெருமை பாராட்டிக் கொண்டிருக்கிறது.
(11) கிறிஸ்தவர்கள் பரிசுத்த ஆவியானவரை நாடி, அவருடைய வழிநடத்து தலின்படி நடக்க வேண்டும் என்பதை ரோம சபை அங்கீகரிக்கவில்லை; அதை அனுமதிப்பதுமில்லை. அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார், “எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்” (ரோமர் 8:14). ஆனால், ரோம சபையானது விசுவாசத்திற்குரிய அனைத்து காரியங்களிலும் போப்பின் வழிநடத்துதலை மட்டுமே கண்மூடித்தனமாகப் பின்பற்றவேண்டும் என்று ஒவ்வொருவரையும் வற்புறுத்தி அவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்துகின்றது. இவ்விதமாக போப்பானவர், தன்னைப் பரிசுத்த ஆவியானவருக்கு சமமாகக் கருதி சகலத்தையும் அறிந்த தெய்வீக குணாதிசயத்தைத் தனக்குள் கொண்டிருப்பது போல் தோற்றமளித்து பாசாங்கு செய்கிறார்.
(12) கர்த்தரின் பரிசுத்த வேதத்தைப் பற்றி ரோம சபை கொண்டிருக்கும் மனப்பான்மை முற்றிலும் தவறானது. நாம் வாசிக்கின்ற வேதத்தை ‘புரொட்டஸ்தாந்தியர்களின் வேதம்’ என்று அறிவித்து அதை எவரும் வாசிப்பதை அது தொடர்ந்து தடை செய்கிறது. புரொட்டஸ்தாந்தியர்கள் வாசிக்கும் வேதம் ரோமன் கத்தோலிக்க வேதத்தைப் போன்றதல்ல. ரோமன் கத்தோலிக்க சபை தெய்வீக வழிநடத்துதலின்படிக் கொடுக்கப்படாதவற்றையும், அப்போஸ்தலர்களால் ஒருபோதும் அங்கீகரிக்கப்படாத வற்றையும் வேதத்திற்கு சமமான அதிகாரமுள்ள நூல்களாக ஏற்று வேதத்தின் அதிகாரத்தைப் பாழாக்கி வைத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சத்தியத்திற்கு எதிரான அநேக குறிப்புகளையும் வேதமாக ஏற்று சத்தியத்தை மாசுபடுத்தி வருகிறது.
(13) ஆவியானவர் அங்கீகரிக்காத அநேக தவறான போதனைகளை வேதத்தோடு இணைத்துக்கொண்டதாலும், அப்போஸ்தலத் திருச்சபை நடைமுறையில் பின்பற்றிய அனைத்து முறைகளுக்கும் எதிரானவைகளைப் பின்பற்றியதாலும் கிறிஸ்தவ திருச்சபையில் மாபெரும் பிளவுகளை ஏற்படுத்திய பெருங்கொடூரமான குற்றத்தை ரோம சபை செய்திருக்கிறது. நம்முடைய விசுவாசத்திற்கும் நடைமுறைக்குமான ஒரே வழிகாட்டி சத்திய வேதம் என்ற கோட்பாட்டிலிருந்து முற்றாக விலகியதாலும், மனிதனுடைய மனுஷத்தனமான போதனைகளையும், பாரம்பரியங்களையும் பின்பற்றியதாலும் ரோம சபை கிறிஸ்தவ திருச்சபையில் பெரும் இடைவெளியை ஏற்படுத்தியிருப்பதால், முற்றாக மனந்திருந்தி மறுபடியும் வேத அதிகாரத்தை அது மனப்பூர்வமாக ஏற்று நடக்கின்றவரை இயேசு கிறிஸ்து ஜெபித்த கிறிஸ்தவ ஐக்கியத்தை நாம் அதோடு எந்தவகையிலும் அநுபவிக்க முடியாத நிலையை அது உருவாக்கியிருக்கிறது.
(14) வேதத்திலுள்ள அதிகாரபூர்வமாக நிலைநாட்டப்பட்ட கொள்கைகள் மற்றும் நடைமுறைக் காரியங்களையும் பல நூற்றாண்டுகளாக ரோம சபை மாற்றி அமைத்திருக்கின்றது. ஒரு சமயம் திருவிருந்தில் ரொட்டித் துண்டை மட்டும் கொடுப்பதை பல போப்புகள் கண்டித்துத் தடைசெய் தார்கள். ஆனால், 1415 ஆம் ஆண்டு முதல் அந்த நடைமுறை போப்பு களால் அங்கீகரிக்கப்பட்டு வழக்கத்தில் இருந்தது. அதற்குப் பிறகு பல நூற்றாண்டுகளாக அப்போஸ்தலர்களும் அறிந்திராத வேதத்திற்குப் புறம்பான பல போதனைகளையும், நடைமுறைகளையும் ரோம சபை வழக்கத்திற்குக் கொண்டுவந்துள்ளது. உதாரணமாக, நூறு வருடங்களுக்குள் அது மூன்று புதிய போதனைகளை உருவாக்கி வெளியிட்டது. 1854ல் இயேசு கிறிஸ்துவின் அன்னையாகிய மரியாளைக் கறையற்ற பாவமில்லாத தூய்மையான பெண்ணாக (The immaculate conception of Virgin Mary) அது அறிவித்தது. 1870ல் போப் தவறுகள் எதுவுமே செய்ய முடியாத தன்மையுள்ளவராக (The Infallibility of the Pope) அது அறிவித்தது. 1950ல் கன்னிமேரியின் விண்ணேற்பு நாளை (The Assumption of Mary) அது அறிவித்தது. ஆனால், கிறிஸ்தவ திருச்சபையோ அது நிறுவப்பட்ட முதல் நூற்றாண்டில் இருந்து இன்றுவரை வேதத்தின் அத்தனைப் போதனை களையும் எந்தவித மாற்றமுமில்லாமல் தொடர்ந்து விசுவாசித்துப் பின்பற்றி வருகிறது.
(15) ரோம சபையானது அதனுடைய அனைத்து சமய சடங்குகளையும், வேதத்திற்கு அது கொடுக்கும் வேறுபாடான விளக்கங்களையும் அவை கிறிஸ்தவ வேதத்தின் பொதுவான போதனைகளுக்கு அடிப்படையிலேயே முரணாகவும், நம்முடைய அறிவுபூர்வமான சிந்தனைகளுக்கு அப்பாற் பட்டதாகவும் இருந்தாலும் அனைவரும் அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறதோடு அவசியமானால் கட்டாயத்தின் மூலமும் அதை நிறைவேற்றப் பார்க்கிறது. உதாரணத்திற்கு திருவிருந்து பற்றிய அதனுடைய போதனையான, அப்பமும், திராட்சரசமும் முழுவதும் இயேசுவின் சரீரமாகவும், இரத்தமாகவும் மாறிவிடுகிறது (Transubstantiation) என்பதை எடுத்துக் கொள்ளுவோம். இது நிக்கோதேமு மறுபிறப்பிற்கு உலகப் பிரகாரமான விளக்கத்தைக் கொடுத்ததைப் போல சிரிப்பூட்டுகின்ற போதனையாக இருக்கின்றது (யோவான் 3:3-4). கிறிஸ்து மறுபடியும் திரும்பிவரும் வரைக்கும் அவர் நம்முடைய மத்தியஸ்தராகவும், பரிந்து பேசுகிற வராகவும் பிதாவின் வலது பாகத்தில் வீற்றிருக்கிறார் என்று வேதம் தெளிவாகக் கூறுகின்றது. ரோம சபையில் திருவிருந்தின்போது கொடுக்கப்படும் ரொட்டித் துண்டை ஆராதிக்கிறவர்கள் மனிதனால் செய்யப்பட்டமாவைக் கடவுளாகக் கருதி வணங்குகிற காரியத்தைத்தான் செய்து வருகிறார்கள்.
(16) ரோம சபையானது சுத்த மனச்சாட்சியின்படி சுதந்திரத்தோடு தேவனை ஆராதிக்க எவரையும் அனுமதிப்பதில்லை. தனக்கு வல்லமை இருக்கும் இடங்களிலெல்லாம், நாட்டு அதிகாரங்களைக்கூடப் பயன்படுத்தி தன்னுடைய அதிகாரத்திற்கு எல்லோரையும் கட்டுப்படுத்த அது முயல்கிறது. பிறருடைய உரிமைகளுக்குப் பங்கமேற்படாத வகையில் எல்லோரும் தங்களுடைய மனச்சாட்சிக்கு ஏற்ப ஆராதனையில் ஈடுபட கர்த்தர் முழு சுதந்திரத்தையும் வழங்கியிருக்கிறார். ஒவ்வொருவரும் தங்களுடைய வேதப் புத்தகத்தைத் தாங்களே வாசிக்கவும், ஆராய்ந்து படிக்கவும் கர்த்தர் அறிவுறுத்துவதோடு அவ்வாறு வேதப்படிப்பிலும், தியானத்திலும் ஈடுபடுபவர்களை ஆசீர்வதிப்பேன் என்றும் வேதத்தில் சொல்லியிருக்கிறார் (யோவான் 5:39, அப்போஸ்தலர் 17:11, வெளிப்படுத்தல் 1:3).
(17) போப் மட்டுமே இந்த உலகத்தில் “கிறிஸ்துவின் சேனாதிபதியாய்” அவருடைய பிரதிநிதியாய் இருக்கிறார் என்று ரோம சபை கூறுகிறது. ஆனால், தமக்குப் பதிலாக என்னுடைய இடத்தில் எனது பரிசுத்த ஆவியை அனுப்புகிறேன் என்று கிறிஸ்து சொல்லியிருக்கிறார் (யோவான் 14:16, 17, 16:7-15). “எங்கே இரண்டு மூன்றுபேர் என் நாமத்தில் கூடியிருக்கிறார்களோ அவர்கள் மத்தியில் நான் இருப்பேன்” என்று கிறிஸ்து கூறினார் (மத்தேயு 18:20). இதனால், அவர் ஒரு சபையில் மட்டும் அச்சபையின் தலைமையோடு இருக்கிறார் என்று இதற்குப் பொருளல்ல. மாறாக, கிறிஸ்து அவருக்குச் சொந்தமான அவருடைய மெய்ச் சபைகள் கூடிவருகிற எல்லா இடங்களி லேயும் இருக்கிறார் என்பது இதற்குப் பொருள் (மத்தேயு 18:20). பரிசுத்த ஆவியின் மூலம் இது நிறைவேறுகிறது. கிறிஸ்து எல்லா இடங்களிலும் தன்னுடைய சபைகள் கூடிவருகிற இடங்களில் அவர்களோடு இருப்பது போல் போப்பால் ஒருநாளும் செய்யமுடியாது.
(18) கர்த்தருக்கும், ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவுக்கும் மட்டுமே உரிய பெயர்களையும், பதவிகளையும். தலைமைத்துவத்தையும் சாதாரண மனிதர்களுக்கு அளித்து அவர்களை வேத போதனைகளுக்கெல்லாம் முரணானவிதத்தில் மகிமைப்படுத்துகிறது ரோம சபை. உதாரணத்திற்கு, போப்பிற்கு தலைமை ஆசாரியன் (Pontiff or High Priest) என்ற பெயரையும் பதவியையும் அது வழங்கியிருக்கிறது. ‘Pontiff’ என்ற பதம் இலத்தீன் மொழியில் இருந்து வந்தது. அதற்குப் பொருள் ‘இடைவெளியை நிரப்புதல்’ என்பதாகும். பழைய ஏற்பாட்டில் ஆசாரியர்கள் மக்களுக்கும் கர்த்தருக்கும் இடையில் இருந்து மத்தியஸ்தர்களாகப் பணிபுரிந்ததைப்போல, போப் கர்த்தருக்கும் பாவிகளாகிய மனிதர்களுக்கும¢ இடையில் இருக்கும் இடைவெளியை நிரப்புகிற மத்தியஸ்தராக பணிபுரிகிறார் என்பது ரோமன் கத்தோலிக்க மதத்தின் நம்பிக்கை. ஆனால், வேதமோ ஒரேயொரு மத்தியஸ்தரை மட்டுமே அங்கீகரிக்கிறது. கல்வாரி சிலுவையில் தன்னையே நம்முடைய பாவங்களுக்கெல்லாம் ஒரே தடவை நிரந்தரமான பூரணமான பரிகாரப் பலியாகக்கொடுத்த மனிதராகிய இயேசு கிறிஸ்துவை மட்டுமே அந்த மத்தியஸ்தராக வேதம் அங்கீகரிக்கிறது. இந்தப் பலி மறுபடியும் கொடுக்கப்பட வேண்டிய அவசியமில்லை; அத்தோடு இதைத் தொடர்ச்சி யாகக் கொடுக்க வேண்டிய அவசியமுமில்லை (யோவான் 14:6, 1 தீமோத் தேயு 2:5-6).
(19) பரிசுத்தவான்களையும் (Saints), அவர்களுடைய சிலைகளையும் வணங்கி வழிபட்டும் அவர்களிடம் ஜெபிப்பதன் மூலமும் தன்னுடைய பக்தியை வெளிப்படுத்தி, இயேசு கிறிஸ்துவுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை விடவும் அதிகமான மதிப்பளித்து வருகிறது ரோம சபை. இந்த வழிபாட்டு முறைகள் பற்றி அவர்கள் வெளியிட்டுள்ள பல வெளியீடுகளின் மூலம் இதை அறிந்துகொள்ள முடிகிறது. மேலும் ரோம சபை வழிபாட்டிற்கும் (adoration) பயபக்திக்கும் (veneration) இடையில் பெரிய வித்தியாசத்தைப் பார்க்கிறது. ஆனால், வழிபாடு அல்லது ஆராதனை என்பது வெளிப்புறமாக நம்முடைய பக்தியை வெளிப்படுத்துவதைக் குறிக்கும் வார்த்தையாக இருக்கிறது. அதேநேரம் பயபக்தி என்பது உள்ளார்ந்த ஜெபத்தில் வணங்கி வேண்டிக்கொள்ளுவதாகும். ரோம சபையின் இவ்வகையான போலித்தனமான வார்த்தை விளையாட்டின் அடிப்படையில் அச்சபையின் அநேக மக்கள் ஏமாற்றப்பட்டு விக்கிரக ஆராதனையில் ஈடுபட்டு கர்த்தருக்கு முன் குற்றவாளிகளாக நித்திய தண்டனைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். “விக்கிரக ஆராதனை” என்பது சிலை வணக்கத்தைக் குறிக்கும். “உன் தேவனாகிய கர்த்தரை நீ ஆராதித்து அவரையே நீ பணிந்து கொள்வாயாக” என்று இயேசு சொன்னார். தம்மைச் சார்ந்தவர்களை பரிசுத்தவான்களையும் (Saints) சிலைகளையும் வணங்க வைக்கும் ரோம சபை விக்கிரக ஆராதனையாகிய குற்றச் செயலில் ஈடுபட்டிருக்கிறது. ஆனால், கர்த்தரின் பத்துக்கட்டளைகளில் இரண்டாவது கட்டளையை முற்றாக நிராகரித்துவிடுகின்ற ரோம சபை பத்தாவது கட்டளையை மட்டும் இரண்டாக்கி வைத்திருப்பது ஏன்?
(20) ரோம சபையில், கிறிஸ்துவினுடைய ஆவிக்கு இடமில்லை. ரோமர் 8:9ல் “கிறிஸ்துவின் ஆவி இல்லாதவன் அவருடையவனல்லவே” என்று பவுல் கூறுகிறார். இயேசு கிறிஸ்து இரக்கமுள்ளவராகவும், அன்புள்ள வராகவும் இருந்து எவராவது தவறு செய்திருந்தபோதும் அவர்களை ஒருபோதும் துன்புறுத்தாமலும் இருந்தார். ஆனால், தன்னுடைய அதிகாரத்துக்குக் கட்டுப்படவில்லை என்ற ஒரே காரணத்துக்காக அநேக கிறிஸ்தவர்களைக் கொடூரமாகத் துன்புறுத்திப் பலியிட்டது ரோம சபை.
(21) மதச்சடங்காச்சாரியங்களின் மூலமும், ஜெபத்தினாலும், பெரிய ஆராதனைக் கூட்டங்களில் ‘மாஸ்’ நடத்தியும் மக்களுக்கு ஆத்மீக விடுதலை கொடுக்க முயல்கிறது ரோம சபை. ஆனால், பாவத்தை முழுமையாக நிவிர்த்திசெய்த இயேசு கிறிஸ்துவில் ஒருவர் வைக்கும் விசுவாசத்தின் மூலம் மட்டுமே ஆத்துமாக்களுக்கு இரட்சிப்பு கிடைக்கும் என்கிறது கர்த்தருடைய வேதமும், கிறிஸ்துவினுடைய திருச்சபையும். இத்தகைய இரட்சிப்பு ஒருவரை தேவனில் உண்மையான அன்பை வைக்கவும், அவரின் மகிமைக்காக அனைத்து நற்கிரியைகளையும் செய்யவும், அவருக்கு நன்றியுள்ளவராகவும் அவருடைய புண்ணியங்களை அறிவிக்கிறவராகவும் இருக்கும்படியாகவும் மாற்றுகிறது (எபேசியர் 2:8-9, ரோமர் 5:1, எபேசியர் 1:6-7).
(22) கிறிஸ்துவின் பரிகாரப் பலியின் பலாபலன்களை அடையும்படியாக, தங்களுடைய பாவங்களுக்கு பரிகாரமாக பாவமன்னிப்புக்குரிய பல நடவடிக்கைகளில் ஈடுபடும்படி தன்னைச் சார்ந்தவர்களை வற்புறுத்தி வழிநடத்துகிறது ரோம சபை. கிறிஸ்துவின் கல்வாரிப் பலி பூரணமான தில்லை என்பது போலவும், அதைப் பூரணமாக்க பாவிகள் மேலும் பாவப் பரிகாரச் செயல்களில் ஈடுபடவேண்டும் என்பது போலவும் நடந்து கொள்ளுகிறது ரோம சபை. பாவிகள் தொடர்ந்து பாவப் பரிகாரச் செயல் களில் ஈடுபடவேண்டுமென்பதல்ல கர்த்தர் எதிர்பார்ப்பது; அவர்கள் தங்களுடைய பாவங்களில் இருந்து மனந்திரும்புவதையே கர்த்தர் எதிர் பார்க்கிறார். அதாவது, “பாவத்திலிருந்தும், அநீதிகளிலிருந்தும் எல்லா விதமான துன்மார்க்கத்திலிருந்தும் மனந்திரும்ப வேண்டும்” என்கிறார் கர்த்தர் (ஏசாயா 55:7, மத்தேயு 9:13, 1 கொரிந்தியர் 6:9-11). ஆனால், எந்த விதமான வேத ஆதாரமுமில்லாமல் ரோம சபை மக்களைத் தன்னுடைய போலித்தனமான வழிகளைப் பின்பற்றும்படிச் செய்துவருகிறது.
(23) தேவனுக்கு விரோதமாக பாவம் செய்தவர்களை மன்னிக்கக்கூடிய வல்லமையைக் கொண்டிருப்பதாக ரோம சபை தொடர்ந்து பொய் சொல்லி வருகிறது. குற்றவாளி இன்னொரு குற்றவாளியை மன்னிக்க முடியாது. திமிர்வாதக்காரனைப் பார்த்து “நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு உன் வீட்டுக்கு போ” என்று சொல்லி அவனுடைய நோயைக் குணப்படுத்தியதன் மூலம் பாவங்களை மன்னிக்கத் தனக்கு அதிகாரம் உண்டென்பதை இயேசு சுட்டிக்காட்டினார் (மத்தேயு 9:2-7). ஒருவனுடைய நோயை நீக்குவது எத்தனை சுலபமோ அதேபோல் அவனுடைய பாவத்தையும் தன்னால் மட்டுமே நீக்க முடியும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று இயேசு எதிர்பார்க்கிறார். மேலும் “பிதாவே எங்கள் பாவங்களையும் கடன்களையும் மன்னித்தருளும்” என்று ஜெபிக்கும்படியாக நமக்கு இயேசு கற்றுக்கொடுத்தார். தேவனுக்கு மட்டுமே ஒருவரின் பாவங்களை மன்னிக்கவோ அல்லது மன்னிக்காமல் போகவு மான அதிகாரம் இருக்கிறது என்று இயேசு கூறினார் (மத்தேயு 6:9-15). பாவங்களை மன்னிக்கக் கூடிய தேவனுக்கு மட்டுமே உரிய தன்மையை வேறு எவரும் கொண்டிருக்க முடியாது.
(24) தேவனுடைய கிருபையின் மூலம் மெய்யான விசுவாசி கிறிஸ்துவுக்குள் அடைகிற பாவ மன்னிப்பின் நிச்சயத்துவம், நித்திய வாழ்வு, சந்தோஷம், மிகப் பெரிய சமாதானம் போன்ற நற்காரியங்களை ரோம சபையினால் அநுசரிக்கப்படுகிற சடங்காச்சாரியங்கள் மூலமும், மாஸ் போன்ற சம்பிரதாயங்கள் மூலமாகவும் அடையலாம் என்று ரோம சபை கூறுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது (யோவான் 5:24, 5:11-13).
(25) ரோமன் கத்தோலிக்க சபையைச் சேர்ந்த ஒருவர் மரிக்கும்போது அவர் “உத்தரிக்கும் ஸ்தலம்” (Purgatory) என்ற இடத்தை அடைவதாகவும், அவர் தன்னுடைய மன்னிப்பைப் பெற முடியாத சில நிச்சயமற்ற பாவங்களுக்காக அங்கே தண்டிக்கப்பட்டப்பிறகு ரோம சபை செய்கின்ற ஜெபத்தினாலும் மாஸினாலும் மட்டுமே மன்னிப்பைப் பெற முடியு மென்பது ரோம சபையின் போலிக்கூற்று. ஆனால், ஓர் ஆத்துமா கிறிஸ்துவின் மூலம் கிருபையினால் மட்டுமே இரட்சிப்படைகிறது என்பதுதான் வேதம் போதிக்கும் உண்மை (எபேசியர் 1:7). ஞானஸ்நானம் பெறாமல் போகும் குழந்தைகளுடைய பாவங்களைக் கர்த்தர் மன்னிக்க மாட்டார் என்றும் அவர்கள் நரக தண்டனைக்கு உள்ளாவார்கள் என்றும் ரோம சபை கூறுகிறது. நீதியும், எல்லையற்ற கருணையுமுள்ள தேவன் இந்த ஒரு காரணத்துக்காக குழந்தைகளுக்கு நித்திய தண்டனை அளிப்பார் என்பது போலிருக்கிறது ரோம சபையின் போலித்தனமான போதனை. ஆனால், கிறிஸ்துவின் மெய்யான சபை விசுவாசிகள் மரிக்கும்போது, கிறிஸ்துவின் இரத்தத்தினால் தங்களுடைய சகல பாவங்களும் மன்னிக்கப்பட்டது என்ற நிச்சயத்துடன் கிறிஸ்துவின் மகிமைக்குள் செல்கிறார்கள் என்பதே மெய்க் கிறிஸ்தவத்தின் போதனை (2 கொரிந்தியர் 5:6-8; பிலிப்பியர் 1:21-23).
(26) அப்போஸ்தலர்கள் ஏற்கனவே சுட்டிக்காட்டியபடி அநேக தவறான போலி உபதேசங்களை ரோம சபை தன்னில் கொண்டு சத்தியத்தை விட்டு விலகிப்போன சகல அடையாளங்களையும் கொண்டு நிற்கிறது. “பிற்காலங்களிலே மனசாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிக்கும் பிசாசுகளின் உபதேசத்திற்கும் செவிக்கொடுத்து விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்” என்று அப்போஸ்தலர்கள் தீர்க்கதரிசனமாகக் கூறியுள்ளார்கள் (1 தீமோத்தேயு 4:1). இவ்விதமாக ரோம குருமார்கள் மற்றவர்களுடைய பாவங்களை மன்னிக்கத் தங்களுக்கு அதிகாரம் உண்டு என்றும், அப்பத்தை இயேசுவின் சரீரமாக மாற்றும் வல்லமை தங்களுக்கு உண்டு என்றும், துறவிகளும், கன்னியாஸ்திரிகளும் திருமணம் செய்துகொள்ளத் தடைகளை ஏற்படுத்தியும் தங்களைச் சார்ந்தவர்களை வழிநடத்தி வருகிறார்கள். ஆனால் தேவன் சகலருக்குமாக திருமணத்தை ஆதியிலே ஏற்படுத்தினார் (1 தீமோத்தேயு 2:1-4, 12 எபிரெயர் 13:4). அத்தோடு, பழைய ஏற்பாட்டிலே ஆசாரியர்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று கட்டளையிட்டு அந்த சந்ததியிலிருந்துதான் “ஆசாரியர்கள்” தெரிவு செய்யப்பட வேண்டு மென்றும் விதித்திருந்தார்.
நான் ஏன் ரோமன் கத்தோலிக்கன் இல்லை என்பதற்கு கிறிஸ்தவ வேதத்தில் இருந்து இன்னும் அநேக சாட்சியங்களை உங்கள் முன் என்னால் வைக்க முடியும். ஆனால், வேதத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள உண்மைகளை கவனமாக ஆராயும் மக்களுக்கு நான் இதுவரை தந்துள்ள காரணங்களே போதுமானதாகும். அப்போஸ்தலனாகிய யோவான் சொல்லுகிறார், “இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும் விசுவாசித்து அவருடைய நாமத்தி னாலே நித்திய ஜீவனை அடையும்படியாகவும் இவைகள் எழுதப்பட்டு இருக்கிறது” (யோவான் 20:31). “அழிவுள்ள வஸ்துகளாகிய வெள்ளி யினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டோம்” என்பதும் நமக்குத் தெரிய வேண்டும் (1 பேதுரு 1:18-19).
இந்த ஆக்கத்தைப் பற்றிய ஓர் விளக்கம்:
“நான் ஏன் ரோமன் கத்தோலிக்கன் இல்லை” என்ற இந்த ஆக்கத்தை Chapel Library வெளியிட்டது. இந்த ஆக்கத்தைப் புரிந்துகொள்ள கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு காரணங்களையும் சிறிது சிந்தித்துப் பார்த்துப் புரிந்துகொள்ள வேண்டும். சிந்தனையோடு வாசிக்கிறவர்களுக்கு ரோமன் கத்தோலிக்க மதத்தின் போலிப் போதனைகளும், புரட்டுக்களும் புரியாமல் போகாது.
அத்தோடு இதில் கிறிஸ்தவ திருச்சபையை ரோமன் கத்தோலிக்க மதத்தோடு ஒப்பிட்டு விளக்கும்போது ஆக்கத்தின் ஆசிரியர் சில இடங்களில் திருச்சபையின் உலகளாவிய (Universal, Catholic) தன்மையைப் பற்றி விளக்கும்போது அதை Universal invisible சபையாக விளக்கியிருக்கிறார். அந்த விளக்கத்தை வாசகர்கள் சரிவரப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். திருச்சபையானது (Church) நாம் எப்போதுமே புறக்கண்களால் காணக்கூடியதாகத்தான் உலகத்தில் இருக்கும். கிறிஸ்து இந்த உலகத் தில் நிறுவிய திருச்சபை கண்களால் நாம் பார்க்கக் கூடியதாக பெந்தகொஸ்தே நாளில் நிறுவப்பட்டது. உலகம் முழுவதும் நிறுவப்பட்டு இன்று காணப்படுகின்ற திருச்சபைகள் அனைத்தும் (Universal local churches) நாம் கண்களால் எப்போதும் காணக்கூடியதே. கண்களால் பார்க்க முடியாத திருச்சபை என்று ஒன்று உண்மையில் இல்லை. அந்தவிதமாக திருச்சபையை வர்ணிப்பது தவறு. ஆனால், கிறிஸ்துவின் திருச்சபையை ஆத்மீக ரீதியில் விளக்கும்போது அதாவது, பரிசுத்த ஆவியால் மறுபிறப்படைந்த தெரிந்துகொள்ளப்பட்ட அனைத்து மக்களைக் குறித்து விளக்கமளிக்கும்போது அந்த விசுவாசக்கூட்டத்தை மொத்தமாக ஒரே இடத்தில் நாம் கண்களால் பார்க்க முடியாது (Invisible universal church) என்று இறையியல் விளக்கம் கொடுப்பது வழக்கம். அதில் எந்தத் தவறும் இல்லை. இந்த விதத்தில் தெரிந்துகொள்ளப்பட்ட அனைத்து மக்களையும் (The elect people of God) குறித்துப் பேசுவது இறையியல் அறிஞர்களின் வழக்கம். அந்த அடிப்படையிலேயே திருச்சபைக்கு இந்த ஆக்கத்தை எழுதியுள்ளவர் விளக்கமளித்திருக்கிறார். அது திருச்சபையின் ஒரு அம்சத்தைப் (one aspect of the doctrine of the church) பற்றிய விளக்கம் மட்டுமே என்பதையும் அதுவே திருச்சபை பற்றிய முழுமையான விளக்கம் அல்ல என்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்வது அவசியம்.