இரத்த வெறிபிடித்த
பெண்ணரசி மேரிக்கு
அஞ்சாமல் நெஞ்சுயர்த்தி
சத்தியத்தை சத்தியமாய்
முன்னின்று பிரசங்கித்து
“மனந்திரும்பு இப்போதே
மறுபடியும் வராது
இன்னோர் வேளை”
என்று அதிரடியாய்
எக்காளமிட்டார் நொக்ஸ்
ஸ்கொட்லாந்து நாட்டில்
சீர்திருத்தம் உதித்தவேளை
“பிடித்தால் விடுவேனா
உன்னை உயிரோடு”
என்ற வெறியோடு
ஏதேதோ செய்தாள்
இதயம் கல்லாக
இரகசியமாய் மேரி
தேசத்து இராணியின்
கோபத்தை உணர்ந்தும்
பிடிபட்டால் உடன்போகும்
உயிர் என்பதறிந்தும்
நிறுத்தாமல் உழைத்தார்
நொக்ஸ் தன் தேசத்தில்
அனுதினமும் தேசத்து
மக்களை சந்தித்து
சீர்திருத்த வழிகாட்டி
சிந்திப்பீர், செயல்படுவீர்
செருக்குள்ள போப்புக்கு
படிப்பிப்பீர் நற்பாடமென
சிங்கம்போல் சீறி
கத்தோலிக்க அராஜகத்தை
அடியோடு சாய்க்க
அரும்பாடு பட்டார்
ஸ்கொட்லாந்து ஈன்றெடுத்த
அருந்தவப்புதல்வன் நொக்ஸ்
கத்தோலிக்கப் பிடியிலிருந்து
திருச்சபையைக்காத்து
அருளுரை, ஆராதனை
அனைத்தும் வேதத்தின்படி
சத்தியமாய் நடக்க
உத்தமமாய் போராடி
உயிரிழக்கும் வேளையிலும்
மனிதனுக்கு அஞ்சாதவன்
மண்ணில் இங்கு மாண்டானென
மறவன் நொக்ஸ்
எழுதச் சொன்னான் தன்
கல்லறையின் தலைமாட்டில்
– சுபி –