ரிக் வொரனின் (Rick Warren) இரண்டு நூல்களைக் குறிப்பிட்டு (Purpose-Driven Life, Purpose-Driven Church) இதற்கு முன்பு எழுதியிருந்தோம். அது பற்றி சிலர் எழுதிக் கேட்டிருந்தார்கள். இந்த நூல்கள் அமெரிக்காவில் நல்ல விற்பனையைக் கண்டிருக்கின்றன. இவை ஏனைய நாடுகளையும் போய் சேர்ந்திருக்கும். ரிக் வொரனின் நூல்களில் எல்லா நூல்களையும் போலப் பொதுவான நல்ல விஷயங்களும் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. அவற்றில் காணப்படும் நல்ல விஷயங்களைவிட நிறைந்து வழியும் ஆத்மீக ஆபத்தை விளைவிக்கும் தவறான விஷயங்ளைப் பற்றித்தான் வாசகர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவற்றில் முக்கியமானவற்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்:
(1) கிறிஸ்தவ சபை வளர்ச்சிக்கும், வாழ்க்கை உயர்வுக்கும் அவர் சுலபமான வழியைக் காட்ட முயல்கிறார். அவருடைய இரண்டு நூல்களி லும் இதைப் பார்க்கலாம். நாற்பது நாட்களில் செய்ய வேண்டியதைச் செய்தால் எழுப்புதல் ஏற்படும்; வாழ்க்கை சிறக்கும் என்ற குறுக்குவழி. இதற்கு ரிக் வொரன் வேதவசனங்களை ஆதாரம் காட்டினாலும் அவற்றை வேதம் போதிக்கின்ற விதத்தில் விளக்காமல் தனது நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். இதையே கெரிஸ்மெடிக் இயக்கத்தார் தொடர்ந்து செய்து வருகின்றனர். திருச்சபை வளர்ச்சிக்கும், கிறிஸ்தவ வாழ்க்கை உயர்வுக்கும் உதவும் எந்தவிதமான குறுக்கு வழியோ, இரகசிய மான ஆத்மீகத் திடீர் மாத்திரைகளோ இருப்பதாக வேதத்தில் நாம் வாசிப்பதில்லை.
(2) ரிக் வொரனின் நூல்கள் இரண்டிலும் Pragmatism ஆளுகிறது. எதெதெல்லாம் நல்ல வெற்றியைத் தருகிறதோ அவையே சரியான வழிகள் என்பதே “பிரெக்மடிசம்”. அத்தகைய பிரெக்மடிச வழிமுறைகளை ரிக் வொரன் ஏற்கனவே தீர்மானித்துக்கொண்டு அவற்றிற்கு வேதத்தில் இருந்து ஆதாரம் காட்ட முயன்றிருக்கிறார். வேத ஞானம் அதிகமில்லாத விசுவாசிகளின் கையில் ரிக் வொரனின் நூல்கள் தாலாட்டுப் பாடும். ஏனெனில், அவர்களால் வொரனின் பிரெக்மடிச வழிகளை அடையாளம் கண்டு ஆத்மீக சிதைவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியாது.
(3) ரிக் வொரன் இந்நூல்களில் பயன்படுத்தியிருக்கும் வேத மொழி பெயர்ப்புகள் சந்தேகத்துக்குரியவை. அவை நல்ல மொழிபெயர்ப்புகளல்ல. நல்ல மொழிபெயர்ப்பாக இல்லாதவை கர்த்தரின் அதிகாரத்தைக் கொண்டிராமல் தவறான பாதைக்கு நம்மை வழிநடத்திவிடும். அத்தோடு ரிக் வொரனுடைய வேத விளக்கமுறை வழமையான வேதபூர்வமான வேத விளக்கமுறையில்லை. வேத வசனங்களை ஆராய்ந்து பார்த்து வேதம் அவற் றின் மூலம் கொடுக்கும் விளக்கங்களை அளிக்காமல் மேலெழுந்த வாரியாக வாசித்துவிட்டு தான் பார்க்க விரும்புகிற விளக்கத்தை, தனது நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளுவதற்காக ரிக் வொரன் தந்திருக்கிறார். இந்நூல்கள் குறித்து வாசகர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.