பத்திரிகையை வாசித்துப் பயனடைந்து வரும் நல்ல உள்ளங்கள் அனைத்திற்கும் என்னுடைய வாழ்த்துக்கள். உங்களுடைய அன்பாலும், ஜெபத்தாலும் தொடர்ந்து பத்திரிகையைத் தடையில்லாமல் வெளியிட்டு வரமுடிகிறது. கடிதங்களின் மூலம் நீங்கள் அடைந்து வரும் பயன்களை விளக்கும்போது எங்கள் தலைமேல் சுமத் தப்பட்டிருக்கும் பெரிய பொறுப்பை நாம் உணர்கிறோம். பரந்து விரிந்திரிக்கும் சமுத்திரத்தில் விழும் சிறு துளி போல் இந்தக் காலத்தில் சீர்திருத்தப் பணியை தமிழர்கள் மத்தியில் செய்யப் புறப்பட்டுக் குழந்தைபோல் தவழ்ந்துகொண்டிருக்கிறது திருமறைத்தீபம். திருமறைத் தீபம இதழ்களை வாசித்துக் கண்திறக்கப்பட்டதாக எழுதும் வாசகர்களை நினைத்துப் பெற்ற தாய் அடையும் மகிழ்ச்சியை அடைகிறார்கள் பத்திரிகைக் குழுவினரும் அவர்களைச் சார்ந்தவர்களும்.
பத்திரிகை பிறந்து பல வருடங்களாகியும் தமிழ் கிறிஸ்தவம் இருக்கும் நிலையில் நாம் பெரு மாற்றத்தைப் பார்க்கவில்லை. கிறிஸ்தவர்கள் மத்தியில் நிச்சயம் இன்று ஓர் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. நம் மத்தியில் இருக்கும் போலித்தனம் எந்தளவுக்கு வேரூன்றிப் பரவியிருக்கிறது என்ற நிதர்சனமான உண்மையையும் கிறிஸ்தவர்களில் பலர் இன்று உணர்ந்திருக்கிறார்கள். போக வேண்டிய பாதை நீண்டது என்பதை நாம் ஆரம்பத்திலேயே அறிந் திருந்தோம். நடக்கும்போது கல்லும், முள்ளும் காலில் பதிந்து இரத்தம் சொட்டும் என்பதும் தெரிந்திருந்தது. கால் தவறிச் சாணத்தில் பதிந்து அசிங்கப்பட்டுவிடும் என்பதும் நமக்குத் தெரியாமலிருக்கவில்லை. பாதை யென்றொன்றிருந்து நடக்கத்தான் வேண்டும் என்ற நிலையேற்பட்டுவிட்டால் இதெல்லாம் சகஜம்தான் என்பதும் நமக்குப் புரியாமலிருக்கவில்லை. இருக்கின்ற போலித்தனத்தை எதிர்த்துப் போராடி, இருக்கவேண்டிய சீர்திருத்தத்தை நிலைநிறுத்தப் பாடுபட்டால் காலில் பட்டுவிடும் அசிங்கத்தையெல்லாம் பொறுட்படுத்த முடியுமா? பயணத்தில் ஏற்பட்டுவருகின்ற சங்கடங்களையெல்லாம் மறந்து இதயத்தைக் களிப்படையச் செய்கிறது தொடர்ந்து நம்மோடு இணைந்து நடக்கத் தொடங்கியிருப்பவர்களின் நிலையான நட்பும், நீங்காத அன்பும். பாதை நீளமானதுதான்; பயணமும் தூரமானதுதான்; தொல்லைகளும் இனித் தொடருந்தான். முடிவைப் பற்றி மட்டும் எங்களுக்கு எப்போதும் எந்த சந்தேகமும் இருந்ததில்லை.
– ஆசிரியர்.