வாழ்க்கையில் தீர்மானம் எடுப்பது . . . !

வாழ்க்கையில் எந்தவொரு விஷயத்திலும் தீர்மானங்கள் எடுப்பதில் ஆண்மையுள்ளவர்களாக நடந்துகொள்ள வேண்டியது விசுவாசிகளின் கடமை. கர்த்தரின் சித்தப்படி நாம் எந்தவொரு விஷயத்திலும் தீர்மானம் எடுக்க வேண்டும். தீர்மானம் எடுப்பதென்பது இலகுவான காரியம் என்று நான் சொல்லவரவில்லை. அது சில வேளைகளில் சிக்கலானதாக இருந்தாலுங்கூட வாழ்க்கையில் எந்தவொரு விஷயத்தையும் கர்த்தரின் சித்தப்படி செய்வதற்காக சரியான தீர்மானங்களை எடுப்பது அவசியம். சரியான தீர்மானங்களை எடுக்காவிட்டால் நமது வாழ்க்கையில் பல தவறுகளை நாம் செய்துவிடுவோம்; அத்தோடு கர்த்தரின் வழிப்படி நடக்காமல் போய்விடுவோம்; அதன் காரணமாக ஆத்மீகம் நம் வாழ்க்கையில் குறைந்து உலகரீதியில் சமுதாயத்துக்குப் பயந்து வாழ ஆரம்பித்துவிடுவோம். விசுவாசிகள் மத்தியில் இந்த விஷயத்தில் தவறு செய்கிற மூன்றுவித மனிதர்களைப் பார்க்கலாம்:

1. விசுவாசிகளாக இருந்தும் வேதபூர்வமாக தீர்மானங்கள் எடுக்கத் தெரியாமல் அசட்டையாக நடந்துகொள்கிறவர்கள். இவர்கள் வாழ்க்கை யில் தவறுகளை அடிக்கடி செய்து அதனால் துன்பப்பட்டு முறையான பரிசுத்த வாழ்க்கை வாழ முடியாமல் தொடர்ந்து அவதிப்படுகிறவர்கள்.

2. விசுவாசிகளாக இருந்தும் கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் அடிமைப்பட்டு வேதரீதியில் தீர்மானங்கள் எடுக்காமல் உலகரீதியில் நடந்து பெயர் கிறிஸ்தவர்கள்போல் வாழ்கிறவர்கள். இவர்கள் வாழ்க்கையிலும் பரிசுத்தத்தின் வலிமையை (Power of Godliness) பார்க்க முடியாது.

3. விசுவாசிகளாக இருந்தும் உணர்ச்சித்தூண்டுகளுக்கு தம்மை அடிமைப்படுத்தி, தங்களுடைய உள்ளத்தில் ஆழமாக உணர்கின்ற எண்ணங்களைக் (Deep emotional impressions) கர்த்தரின் வழிநடத்தல்களாகவும், அவருடைய சித்தமாகவும் தவறாகக் கருதி வாழ்கிறவர்கள். இவர்கள் தாங்கள் விசுவாசிகளாக இருப்பதால் தங்ளுடைய இருதயத்தில் கிறிஸ்து தன்னுடைய சித்தங்களை ஆழமாக உணர வைக்கிறார் என்று கனவு காண்கிறார்கள். ஏதாவதொரு விஷயத்தில் கர்த்தரின் சித்தம் என்ன என்பதை அறிந்து கொள்ள இவர்கள் தங்களுடைய உள்ளத்தில் அதைக் குறித்து ஏற்படுகிற ஆழமான உணர்ச்சிகளை மட்டுமே நம்பி இருக்கிறார்கள்; அதைக் கர்த்தருடைய கிரியையாகவும் எண்ணி வாழ்கிறார்கள். சிலர் இந்த ஆழமான உணர்ச்சிகளை இருதயத்தில் ஏற்படுத்துகிறவர் பரிசுத்த ஆவியானவர் என்று தவறாக எண்ணி அந்த உணர்ச்சிகளுக்கு அடிமையாகிறார்கள். இத்தகைய எண்ணங்கள் கர்த்தர் மனிதனைப் படைத்திருக்கின்ற விதத்தை அறியாததாலும், பரிசுத்த ஆவியானவரைப் பற்றிய வேதபூர்வமான எண்ணங்களைக் கொண்டிராததாலும் ஏற்படுவதன் விளைவு. பரிசுத்த ஆவியானவர் மனிதனை ஒரு இயந்திரமாகப் பயன்படுத்துவதில்லை. மனிதன் செய்ய வேண்டிய அனைத்தையும் அவன் தானே செய்ய வேண்டுமே தவிர ஆவியானவர் அதை அவனுக்காக செய்யமாட்டார். சிலர் எனக்கு அடிக்கடி கடிதம் எழுதி ஆவியானவர் தங்களுக்கு பல காரியங்களை வாழ்க்கையில் செய்யும்படி தரிசனம் கொடுத்திருக்கிறார் என்பார்கள். ஒருவர் நியூசிலாந்துக்கு வந்து என்னோடு இணைந்து ஊழியம் செய்ய வேண்டும் என்று எழுதினார். இன்னொருவர் உலகம் முழுவதும் ஊழியக்காரர்களை அனுப்புவதற்காக இறையியல் கல்லூரி நடத்தும்படி ஆவியானவர் தனக்கு தரிசனம் கொடுத்ததாகவும் பணம் மட்டும் இருந்தால் அதைச் செய்து விடுவேன் என்று எழுதினார். இந்த இரு உதாரணங்களையும் ஆராய்வது அவசியம். இவர்கள் சொல்லும் விஷயங்களில் உள்ள தவறுகளை ஆராய் ந்து பார்ப்போம்:

1. இவர்கள் இருவருமே தவறான இறையியல் நம்பிக்கைகளை வளர்த்துக் கொண்டிருப்பதால் ஆவியானவரின் கிரியைகளைப் பற்றி வேதம் போதிப்பதை அறிந்துகொள்ளவில்லை.

2. இவர்கள் இருவரும் சிந்தித்து எதையும் ஆராயும் வழக்கத்தைப் பின்பற்று பவர்களாகத் தெரியவில்லை. ஏனெனில், தாங்கள் செய்ய விரும்பும் காரியத்தை செய்வதற்கான தகுதிகளோ, அநுபவமோ, வசதியோ தங்களுக்கிருக்கிறதா என்று ஒரு முறைகூட இவர்கள் எண்ணிப்பார்க்கவில்லை.  நியூசிலாந்துக்கு வந்து ஊழியம் செய்ய நினைக்கிற மனிதன் முதலில் நியூசிலாந்திலிருப்பவர்களைப்போல ஆங்கிலத்தில் அவர்களுடைய தொனி யில் சரளமாகப் பேசத் தெரியுமா என்று எண்ணிப் பார்க்க வேண்டும். அத்தோடு அந்தக் கலாச்சாரத்தைப் பற்றிய அறிவும் அநுபவமும் தேவை. இவையில்லாமல் அந்நாட்டு மக்கள் மத்தியில் எப்படி ஊழியம் செய்ய முடியும்? இறையியல் கல்லூரி நடத்த நினைக்கிற மனிதன் தனக்கு அதைச் செய்ய எந்தத் தகுதி இருக்கிறது என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.  இஞ்சினியர் படிப்பு படிக்காமல் எந்த அவிசுவாசியும் இந்த உலகத்தில் தான் இஞ்சினியராக வரப்போகிறேன் என்று சொன்னதில்லை. விசுவாசி களை மட்டும் ஆவியானவர் இஞ்சினியர் படிப்பு இல்லாமல் இஞ்சினியராக வர அனுமதிக்கிறாரா? உலகம் ஒழுங்காக நடக்க ஒரு நியதியை ஏற்படுத்தி வைத்துள்ள கர்த்தர் விசுவாசிகளுக்காக மட்டும் அதை மாற்றி அமைப்பாரா? விசுவாசியோ, அவிசுவாசியோ யாராக இருந்தாலும் அவர்கள் செய்யப்போகிற எதுவும் விசுவாசத்துக்குரிய காரியமாக இருந்தாலும், உலக காரியமாக இருந்தாலும் கர்த்தர் ஏற்படுத்தியுள்ள காரண காரிய நியதிகளை மீறி அவற்றை ஒருபோதும் செய்ய முடியாது.

3. இவர்கள் தங்களுடைய தகுதிகளையும், தாலந்துகளையும் சோதித்துப் பார்த்து தங்களுடைய தகுதிகள், தாலந்துகள், பலவீனங்களைப் பற்றிய முறையான அறிவைக் கொண்டிருக்கவில்லை. தன்னைப் பற்றி ஒன்றுமே தெரியாதவன் என்னைப் பொறுத்தவரையில் மூளை சரியில்லாதவன் மட்டுமே.

4. இவர்கள் இறையாண்மையுள்ள கர்த்தரின் கிரியைகளைப் பற்றியும், கிறிஸ்தவத்தைப் பற்றியும் வேதபூர்வமான சிந்தனைகளைக் கொண்டிருக்கவில்லை. இதுவரை பார்த்தவையே இவர்களுடைய தவறான நோக்கங் களுக்குக் காரணமாக அமைந்தன.

சந்தர்ப்ப சூழ்நிலைகள் காட்டும் வழி

வாழ்க்கையில் தீர்மானம் எடுப்பதற்கு நாம் சந்தர்ப்ப சூழ்நிலைகளில் மட்டும் எப்போதும் தங்கியிருக்கக்கூடாது. சந்தர்ப்ப சூழ்நிலைகளில் எது கர்த்தருடைய வழிகாட்டல், எது அவருக்கு முரணானது என்பதை இலகுவாக தீர்மானித்துவிட முடியாது. சந்தர்ப்ப சூழ்நிலைகளால் உந்தப்பட்டு இங்கும் அங்கும் தள்ளப்பட்டு காற்றில் சுழலும் இலை போல் நாம் இருந¢து விடக்கூடாது. வேதத்தில் தெளிவாக விளக்கப்பட்டிருக்கும் போதனை களையே வாழ்க்கையில் எந்தத் தீர்மானங்களை எடுப்பதற்கும் நாம் நம்பியிருக்க வேண்டும்.

என் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைக் கூற விரும்புகிறேன். என் வாழ்க்கையைப் பற்றி எழுதுகிற முதல் தடவை இதுதான் என்று நினைக்கிறேன். நான் விசுவாசியாக வளர்ந்து வந்துகொண்டிருந்த காலத்தில் என்னுடைய சபைப் போதகர் ஒருமுறை என்னைப் பார்த்து, ஊழியத்தில் ஈடுபடுவதைப் பற்றி நீஙகள் ஏன் சிந்தித்துப் பார்க்கக் கூடாது என்று கேட்டார். அந்தக் கேள்வி எனக்கு மகிழ்ச்சி அளித்தபோதும் நான் உடனடியாக ஊழிய ஆர்வத்தில் எங்கும் அலைய ஆரம்பிக்கவில்லை. அப்போது நான் என்னுடைய விவசாயப் பொருளியல் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு வேலை தேட ஆரம்பித்திருந்தேன். வேலைக்கு விண்ணப்பித்து சில வேலைகளுக்கு இன்டர்வியூ வந்து பல முறை இன்டர்வியூக்குப் போயும் சரியான வேலைகள் வந்து அமையவில்லை. என்னுடைய தந்தை வசதியுள்ளவராக இருந்ததால் எனக்கு உடனடியாக வேலை கிடைக்க வேண்டிய அவசியமும் இருக்கவில்லை. இருந்தாலும் கர்த்தர் வேலைகள் கிடைக்காதிருக்கும்படி செய்கிறார் என்று அதை ஊழியத்திற்கான அழைப்பாக தவறாக எண்ண நான் விரும்பவில்லை. அந்தத் தடைகள் மட்டும் சரியான வழிகாட்டல்கள் அல்ல என்பதில் எனக்குத் தெளிவு இருந்தது. போதகர் மறுபடியும் ஒருநாள் என்னிடம் ஊழியத்தைப் பற்றிய என்னுடைய எண்ணத்தைக் கேட்டார். உடனே நான், “அப்படி நான் ஊழியத் துக்கு போக வேண்டிய அளவுக்கு என்னிடம் எதைப் பார்த்தீர்கள்’ என்று அவரைக் கேட்டேன். அவருடைய விளக்கங்கள் வேத அடிப்படையில் அமைந்திருந்தனவா என்று பரிசோதிக்க அவருடைய பதில்கள் உதவும் என்று நினைத்தேன். அவர் கொடுத்த விளக்கங்கள் ஓரளவுக்கு எனக்கு ஏற்புடையதாக இருந்தன. அதுவும் சபை மூப்பர்களின் சிந்தனையும் அதுதான் என்று அவர் கூறினார். இருந்த போதும் இது பற்றித் தீர்மானம் எடுக்க இவை மட்டும் போதாது என்று எண்ணிய நான் தொடர்ந்து வேதத்தை ஆரய்ந்து ஊழிய அழைப்பு பற்றிப் படித்தேன். என்னுடைய வாழ்க்கை, எனக்கிருந்த தகுதிகள் பற்றி ஆராய்ந்து பார்த்தேன். வேதம் எதிர்பார்த்த பதில்களை என்னால் தரமுடிந்தபோதுதான் நான் போதக ஊழியத்துக்கு தயார் செய்துகொள்ளப் பின்னால் தீர்மானித்தேன். பல சந்தர்ப்ப சூழ்நிலைகள் வாழ்க்கையில் குறுக்குவழி காட்டியபோதும் சந்தர்ப்ப சூழ்நிலைகளை மட்டுமே வைத்து நான் போதகப் பயிற்சிக்கான தீர்மானத்தை எடுக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் இதைச் சபைக் கூட்டத்தில் சபை அங்கத்தவர்கள் முன்பு கொண்டுவந்து அவர்களும் ஊழியத்துக் கான தகுதிகள் எனக்கிருக்கிறதா என்பதைப் பார்க்கும்படிச் செய்து இதெல்லாம் நடந்து முடிந்தபின்பே ஊழியத்துக்குத் தயாராவதற்கான பயிற்சிகளுக்கு என்னை ஒப்புக்கொடுத்தேன். இந்த வேத வழிமுறைகள் எந்தளவுக்கு உதவியிருக்கின்றன என்பதை இப்போதும் நினைத்துப் பார்த்துக் கர்த்தருக்கு நன்றி சொல்கிறேன்.

சந்தர்ப்ப சூழ்நிலைகளும் வாழ்க்கையில் தீர்மானம் எடுக்கும் விஷயத்தில் பங்கு வகித்தபோதும் அவை மட்டுமே தீர்மானம் எடுப்பதற்கு போதுமானதல்ல. பல வருடங்களுக்கு முன் ஒரு முறை திருச்சி பஸ் ஸ்டான்டில் இரவு பஸ்ஸுக்காக காத்திருந்தபோது ரேடியோவில் தினகரன் அலறி ஊழியத்துக்கு வருமாறும், உடனடியாக தீர்மானம் எடுக்குமாறும் பேசியதைக் கேட்டேன். அந்தக் குரலின் வசியத்தால் ஈர்க்கப்பட்டு, தன்னைப் பற்றி ஆராய்ந்து பார்க்காமல், தனது தகுதிகள், வாழ்க்கையில் இப்போது இருக்கும் நிலை, சபை எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்க்காமல், அந்த வானொலி அழைப்பைக் கர்த்தரின் சித்தமாகவும், கட்டளையாகவும் ஏற்றுக்கொண்டால் அது எத்தனை முட்டாள்தனம்.

கர்த்தர் யோனாவுக்கு கட்டளையிட்டு நினிவே மக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கும்படிக் கூறினார். யோனாவுக்கு அது பிடித்தமானதாக இருக்கவில்லை. அவன் கப்பலேறி தர்ஷீக்குப் போகத் தீர்மானித்தான். யோப்பாவில் கப்பல் கிடைத்தது. கப்பல் பிரயாணத்துக்கு வசதியான காற்றும் இருந்தது. பிரயாணமும் சுமுகமாகப் போய் முடிந்தது.  இப்படித் தர்ஷீக்குப் போவதற்கான பிரயாணத்துக்கு சந்தர்ப்பம் நல்லபடியாக அமைந்ததை வைத்து யோனா தர்ஷீக்குப் போனதுதான் சரியான தீர்மானம் என்று கூற முடியுமா? யோனா ஏற்கனவே கர்த்தர் கொடுத்திருந்த கட்டளையை மீறிவிட்டான். அவன் எடுத்த தீர்மானம் தவறு.

வாழ்க்கையில் கர்த்தரின் வழிகாட்டளைத் தேட நாம் சந்தர்ப்ப சூழ்நிலைகள் எப்படி அமைகின்றன என்று மட்டும் பார்த்துக்கொண்டிருப்பது வெறும் சோம்பேரித்தனத்திற்கான அறிகுறி. ரோமர் 1:13ல் பவுல், “நான் உங்களிடம் வரத் தீர்மானித்திருக்கிறேன். ஆனால், இதுவரை அது முடியாமல் போனது” என்கிறார். தன்னுடைய திட்டம் நிறைவேறாமல் போன போது முதல் தடையையே முடிவான தடையாக பவுல் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்காக மீண்டும் மீண்டும் முயற்சிகள் எடுத்திருக்கிறார் பவுல். ஒரு கதவு மூடப்படுகின்றது என்பதற்காக அதுவே முடிவான கர்த்தரின் சித்தம் என்று எடுத்துக் கொள்வதும் தங்களுடைய தீர்மானம் தவறு என்று எண்ணுவதும் சரியல்ல. அந்தத் திட்டம் அந்த நேரத்திற்குத் தகுந்ததாக இல்லாமல் இருக்கலாம். தகுந்த நேரம் வரும்போது திட்டம் நிறைவேறக் கூடும். ஆகவே, தொடர்ந்து ஜெபிப்பதையும் திட்டமிடுவதையும் நாம் கைவிட்டுவிடக்கூடாது. சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் காரணம் காட்டி நாம் தைரியத்துடன் எடுக்கவேண்டிய தீர்மானங்களை எடுப்பதில் இருந்து தப்பிக்கொள்ளப் பார்ப்பது முதுகெலும்பில்லாதவர்கள் செய்கிற வேலை.

விசுவாசியான ஒருவன் தன் சபையில் விசுவாசியான ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறான் என்று வைத்துக்கொள்ளுவோம். சிறிது காலம் சென்றபின் வீட்டிலுள்ளவர்கள் அதற்குப் பெருந்தடையாக இருப்பதைப் பார்க்கிறான். வீட்டிலுள்ளவர்களைப் பகைத்துக் கொள்ள அவனுக்கு சம்மதமில்லை.  ஆகவே, அந்தத் தடையைக் கர்த்தரின் வழிகாட்டலாகக் கருதி அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும் ஆசையை அவன் விட்டுவிடுவானானால் அவன் ஆண்மையுள்ளவனே அல்ல. பெற்றோரின் தடையை மட்டும் கர்த்தரின் சித்தமாகப் பார்ப்பது அடிமுட்டாள்தனம். பெற்றோரின் வார்த்தைகளுக்கு மதிப்புத் தர வேண்டியது அவசியந்தான். அதற்காக வாழ்நாளெல்லாம் நாம் வாழ வேண்டியவளைப் பற்றிய இறுதி முடிவெடுப்பது பெற்றோராக இருந்தால் அது நாம் ஆணாயிருப்பதற்கான அறிகுறியே அல்ல. பெற்றோருக்குப் பிடிக்கவில்லை என்றால் அவர்கள் அதற்கான வேதபூர்வமான காரணங்களைக் காட்டுவது அவசியம். வேதபூரணமான காரணங்களை அவர்களால் காட்ட முடியவில்லை என்றால் அவர்களுக்குப் பிடிக்காமல் போனாலும் நாம் கர்த்தரின் வார்த்தைக்கு மட்டுமே கட்டுப்பட வேண்டும். கர்த்தரின் வார்த்தைக்கு எதிராக இருந்தால் மட்டுமே நாம் நமக்கு விருப்பமான பெண்ணாக இருந்தாலும் திருமணத்துக்கு ஒத்துக்கொள்ளக் கூடாது.

இன்னொரு உதாரணத்தைப் பார்ப்போம். நெகேமியா 2:13-15 வரையுள்ள வசனங்களில் எருசலேமுக்கு வந்த நெகேமியா ஆலயம் எந்த நிலைமையில் இருக்கிறது என்பதை ஆராய இரவு நேரத்தில் தனியே அதைப் பார்வையிடப் போனான் என்று வாசிக்கிறோம். அவன் பார்த்தறிந்த விபரங்களெல்லாம் எதிர்மறையானதாகவே இருந்தன. ஆலய வாசல்கள் மிகவும் மோசமான நிலைமையிலேயே இருந்தன. இதை வைத்து செய்ய வந்த வேலையை நிறைவேற்றமுடியாது. இந்த அடையாளங்கள் மூலம் ஆலயத்தைக் கட்ட இது நல்ல சந்தர்ப்பம் இல்லை என்று கர்த்தர் காட்டு கிறார் என்று தீர்மானித்து அவன் திரும்பிப் போகவில்லை. 17ம் வசனத்தில் அவன் தன்னோடு வந்தவர்களுக்கு ஆலயம் இருக்கும் நிலைமையை விபரித்து அதைக் கட்டிமுடிக்கத்தான் வேண்டும் என்று உறுதியாகச் சொல்வதை வாசிக்கிறோம். ஆரம்பத்தில் அவன் வேதத்தை ஆராய்ந்து பார்த்து ஆலய வாசல்களைக் கட்ட எடுத்த முடிவே சரியானது. அந்த முடிவை கர்த்தரே நேரில் வந்து நிறைவேற்றாதே என்று சொன்னால் தவிர நெகேமியா செய்யாமல் இருக்கப்போவதில்லை. சந்தர்ப்ப சூழ்நிலை களுக்கும், தன்னோடிருந்தவர்களின் உணர்ச்சி மாற்றங்களுக்கும் அவன் ஒருபோதும் இடங்கொடுக்கவில்லை. தீர்மானங்களை எடுப்பதில் நெகேமியாவில் நாம் ஆண்மையின் அடையாளத்தைப் பார்க்கிறோம்.

மன சமாதானம்

என் சபையில் ஒரு சகோதரி ஒருவன் மேல் ஆசைப்பட்டு திருமணம் செய்துகொள்ள விரும்பினாள்.  அவனோ இன்னும் விசுவாசியாக தன்னை அறிவித்து சபையில் ஞானஸ்நானம் எடுக்கவில்லை. இதை நான் விளக்கி பொறுத்திருக்கும்படி அவளுக்கு ஆலோசனை சொன்னேன். அவள் என் வார்த்தையைக் கேட்கவில்லை. திருமண நாளையும் குறித்துவிட்டு கர்த்தர் இந்த விஷயத்தில் எனக்கு மனசமாதானத்தைத் தந்திருக்கிறார் என்றாள். இப்படிப் பேசுகிற அநேகரை நாம் அன்றாடம் சந்திக்கிறோம். இது மெய் யான மன சமாதானமல்ல. தன்னுடைய உள்ளுணர்வுகளை நியாயப் படுத்திக் கொள்ளுகிற சுயநலத்தின் அறிகுறி. கர்த்தரின் தெளிவான வார்த்தைகளை நாம் மீறுகிறபோது கிறிஸ்துவின் மெய்யான சமாதானம் நம்முடைய உள்ளத்தில் ஏற்பட முடியாது. சரீரரீதியாக ஏற்படும் சுயநலத் தின் அடிப்படையிலான உணர்வுகளை நாம் கர்த்தர் தரும் சமாதானமாக தவறாக எண்ணிவிடக்கூடாது. அவை செய்யக்கூடாததைச் செய்ய சரீர இச்சை நம்மில் ஏற்படுத்தும் உணர்வுகள். கர்த்தருடைய வார்த்தைக்கு எதிரான எந்தக் காரியத்தை நாம் செய்கிறபோதும் நமக்கு தேவ சமாதானம் கிடைக்காது.

வாழ்க்கையில் கர்த்தரை மகிமைப்படுத்தும்படி விசுவாசிகள் எவ்வாறு தீர்மானங்களை எடுப்பது?

1. எதையும் சிந்தித்து ஆராய வேண்டும் (Think, Use your mind)

மனதைப் பயன்படுத்தத் தயங்குகிறவர்கள் நம்மத்தியில் அதிகம். மனதைப் பயன்படுத்த திறமையற்ற பலர் இருப்பதற்குக் காரணம் அவர்கள் வளர்ந்த வாழ்க்கை முறையாகவும் இருக்கலாம். கலாச்சாரமும் காரணமாக இருக்கலாம். தமிழினத்தில் அநேகமானோருடைய வாழ்க்கையில் தீர்மானம் எடுப்பது அவர்களைச் சுற்றி இருப்பவர்கள்தான். பிறந்ததில் இருந்து அந்த முறையிலேயே எல்லோரும் வளர்ந்து வருகிறார்கள். இருபது வயதுக்கு மேலும் பெற்றோர்தான் இன்றும் அநேக இளைஞர்களுக்கு சாப்பாட்டில் இருந்து ஆலோசனை சொல்லி வருகிறார்கள். இதெல்லாம் பலரை சுயமாக சிந்தித்து எதைப்பற்றியும் தீர்மானம் எடுக்க முடியாதபடி செய்து வைத்திருக்கிறது. மனதைப் பயன்படுத்தி எதையும் சிந்தித்து ஆராயாத விசுவாசி நல்ல விசுவாசியாக வாழ்க்கையில் ஒருபோதும் உயர முடியாது. மனதைப் பயன்படுத்தாதவன் செத்த பிணத்துக்குத்தான் ஒப்பானவன்.

அதுமட்டுமல்லாமல் பலர் நிமிடத்துக்கு நிமிடம் மாறிக்கொண்டிருக்கும் உணர்ச்சிகளின் வழிநடத்தலின்படியே நடந்து வருவார்கள். உணர்ச்சிகளின் வழிநடத்தலின்படி வாழ்கிறவன் சிந்திக்க மறுக்கிறவன் மட்டுமல்ல, சுய கட்டுப்பாடும் இல்லாதவன். அவனை நம்புவதால் ஒருவருக்கும் நன்மையில்லை. அடிக்கடி மாறுகிற நமது உணர்ச்சிகளை நாம்தான் கட்டுப்படுத்தி ஆளவேண்டுமே தவிர அவை நம்மை ஆள அனுமதிக்கக்கூடாது. ஆண்மையுள்ளவர்கள் உணர்ச்சிகளுக்கு அடிமைப்படமாட்டார்கள். நெகேமியா தன் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை எதிர்கொண்டபோது உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டு காரியமாற்றவில்லை. மனதைப் பயன்படுத்தினான்; தீர ஆராய்ந்தான்; சத்தியத்தை நினைவுகூர்ந்தான்; எடுக்க வேண்டிய தீர்மானங்களை எடுத்தான்; நிறைவேற்றினான். அவனும் பயமுறுத்தல்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது, எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது.  எதிர்காலத்தைப் பற்றிய கவலைகள் அவனுக்கு இல்லாமலிருக்கவில்லை. உணர்ச்சிகளோடு பிறந்த மனிதனாகிய அவனும் நம்மைப் போல அத்தனை உணர்ச்சிகளையும் அடைந்து அவற்றோடு போராடி, அவற்றைக் கட்டுப்படுத்தி வாழ வேண்டியிருந்தது. கர்த்தர் தனக்கு சிந்திப்பதற்கு மனதைத் தந்திருக்கிறார் என்று உணர்ந்து விசுவாசி தன் வாழ்க்கையில் ஒவ்வொரு காரியத்தைப் பற்றியும் சிந்தித்து ஆராய்ந்து பார்க்கும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இந்தச் சிந்தனை விஷயமில்லாத சிந்தனையாக இருக்கக்கூடாது. காரண காரியங்களோடு ஆராய்கிற சிந்தனையாக இருக்க வேண்டும்.

2. வேதத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும்

விசுவாசிகள் எதைக் குறித்து சிந்தித்தாலும் வேதம் அதுபற்றி என்ன சொல்லுகிறது என்று எண்ணிப்பார்க்காமல் ஒரு தீர்மானத்துக்கு வரக்கூடாது. வேத சிந்தனைகளை நாம் வளர்த்துக் கொள்கிறபோது கர்த்தரின் வழிகளை அறிந்துகொள்ளுவது சுலபமாகிறது. வேத அறிவு இங்கே எத்தனை முக்கியம் என்பதை உணர முடிகிறதல்லவா! வேதத்தில் மட்டுமே கர்த்தருடைய சித்தத்தின் மொத்தவடிவத்தையும் பார்க்கிறோம். விசுவாசி களான நாம் வாழ்வதற்கு அவசியமான அத்தனையையும் கர்த்தர் வேதத் திலேயே தந்திருக்கிறார். வேதத்தைத் தொடர்ந்து வாசித்து எடுக்க வேண்டிய தீர்மானங்கள் அதன்படி அமைந்திருக்கின்றனவா என்று ஆராய்ந்து பார்த்து நடந்து கொள்ள வேண்டும். நாம் வேதபூர்வமான சபைகளில் இருந்தால் சபைப் போதகர்களும் இதில் நமக்கு உதவி செய்ய முடியும். அவர்கள் வேத வழிகளை நமக்கு விளக்கிச் சொல்லுவார்கள். போதகர்கள் சொன்னாலுங்கூட அவற்றை வேதத்தில் நாம் பார்க்கக் கூடியதாக இருக்க வேண்டும். கர்த்தரின் சித்தப்படி எந்தத் தீர்மானங்களும் அமைய வேண்டும்

3. அதைக் குறித்து நன்றாக ஜெபிக்க வேண்டும்

ஒரு காரியத்தை செய்வதற்கு முன்னும், அதை செய்வதற்கான நட வடிக்கைகளில் ஈடுபடும்போதும், அதைச் செய்யும் போதும் ஜெபம் செய்ய வேண்டியது அவசியம். ஜெபத்தின் மூலம் நாம் கர்த்தரில் தங்கி நிற்கிறோம்; அவரோடு பேசுகிறோம்; அவருடைய துணையை நாடி வருகிறோம்; அவருடைய வழிநடத்தல்களுக்காக காத்திருக்கிறோம். இடைவிடாமல் ஜெபம் செய்யும்படி வேதம் சொல்லுகிறது.

4. தீர்க்கமாக ஒரு தீர்மானத்தை எடுத்தல் வேண்டும்

ஒரு விஷயத்தை ஆராய்ந்து அதுபற்றி காரண காரியங்களுடன் ஆழமாக சிந்தித்துப் பார்த்து, ஜெபம் செய்து வருகிறபோது கர்த்தர் நம்மைத் தம்முடைய வார்த்தையின்படி ஆவியின் துணையோடு வழிநடத்தி செய்ய வேண்டிய காரியம் பற்றிய ஆலோசனைகளை வழங்குவார். ஒரு விஷயத் தைக் குறித்து சிந்தித்திருக்கிறோம், வேத அடிப்படையில் ஆராய்ந்திருக் கிறோம், ஜெபத்தில் கர்த்தரை நாடி இருந்திருக்கிறோம். அதற்குப் பிறகு அதுபற்றி தீர்மானம் எடுக்காமல் இருப்பது தவறு. கர்த்தர் நமக்காகத் தீர்மானம் எடுக்கப்போவதில்லை. கிளி ஜோசியம் பார்க்கிறவர்கள் போல் மற்றவர்கள் நமக்காக தீர்மானம் எடுக்கும்படி எதிர்பார்ப்பதும் ஆண்மைக் குறைவான செயல். செய்ய வேண்டிய அனைத்து ஆரம்ப நடவடிக்கை களையும் சரியாக செய்யும்போது கர்த்தரின் வழி தெறியவரும். எடுக்க வேண்டிய தீர்மானம் நமக்கு எளிதில் புலப்படும். அதில் மன சமாதானம் ஏற்படும். அது தெளிவாக புத்திக்குத் தெரியும். அதுதான் செய்ய வேண்டி யது என்று கர்த்தர் உணர்¢த்தியபிறகு அதைச் செய்ய நாம் முடிவெடுக்க வேண்டும். செய்ய வேண்டியதைக் கர்த்தர் வார்த்தையில் சுட்டிக்காட்டுகிறார். அதைச் செய்ய நாம்தான் உறுதியாக முடிவெடுக்க வேண்டும்.

நம்மில் பலருக்கு பண்பாட்டைப் பற்றிப் பயம், பாரம்பரியத்தைப் பற்றிப் பயம், சமுதாயத்தைப் பற்றிப் பயம். மொத்தத்தில் நாம் பயப்படாதவைகளே இல்லை. எப்போதுமே நம்மை நாலுபேர் சுற்றியிருந்து பார்த்துக்கொண் டிருக்கிறார்கள் என்ற எண்ணத்திலேயே சாகும்வரை வாழ்ந்து செத்து மடிகிறோம். இந்தப் பயத்தால் விசுவாசிகளில் பலர் வாழ்க்கையில் தீர்மானங்களை, அவை வேதபூர்வமானவையாக இருந்தாலும் எடுக்கத் தவறி வருகிறார்கள். இந்தப் பேய்ப்பயமெல்லாம் மெய்விசுவாசிக்கு இருக்காது. கிறிஸ்துவின் அன்பை ருசி பார்த்த நாளிலேயே இதையெல்லாம் அவன் களைந்து போட்டிருப்பான். நாம் பயப்பட வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அது நமக்கு வெளியில் இருக்கவில்லை. நமக்குள்ளே இருக்கும் நமது இருதயம் மட்டுந்தான். அதை சில வேளைகளில் பாவம் பயன்படுத்தி விடலாம். அதற்கு மட்டுந்தான் நாம் பயப்பட வேண்டும். கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்யப் பயப்பட வேண்டும். வேறு எதற்கும் பயப்படக் கூடாது. விசுவாசியின் அகராதியில் பயம் என்ற வார்த்தைக்கு இடமில்லை.

5. எடுத்த தீர்மானத்தை செயல்படுத்த வேண்டும்.

தீர்மானம் எடுக்க தயங்குவதும் (Indecisiveness), தீர்மானம் எடுப்பதைத் தள்ளிப்போடுவதும் (Procrestnation) ஆண்மைக்கு அழகல்ல. இவ்வளவு தூரம் சிந்தித்து, வேதத்தை ஆராய்ந்து பார்த்து, நல்ல ஆலோசனைகளைப் பெற்று கர்த்தரின் சித்தத்தை உணர்ந்து தீர்மானத்தை எடுத்தபிறகு அதை உடனடியாக செயற்படுத்தாமல் தள்ளிப்போடுவதும், அதை நிறைவேற்றத் தயங்குவதும் ஆண்மையுள்ள செயல்களல்ல. மனதில் எதைச் செய்ய வேண்டும் என்று கர்த்தரின் வழிகாட்டுதல் மூலம் அறிந்துகொள்ளுகிற போது அதை உடனடியாக நிறைவேற்றுவது இந்தச் செயல்முறையின் கடைசிப்படி. நெகேமியாவுக்கு எதைச் செய்ய வேண்டும் என்று தெரிந்திருந்தது. அதைத்தீர்மானித்த பிறகு அதன்படி அவன் நடந்துகொண்டான்.  தீர்மானத்தை தள்ளிப்போடாமல் உடனடியாக நிறைவேற்றினான்.

ஒரு போதகர் தன்னுடைய நண்பரொருவருக்கு ஒரு விஷயத்தைப் பற்றி ஆலோசனை தந்து அதை இ-மெயிலில் அனுப்பினார். அனுப்பிய இ-மெயில் போக மறுத்தது. உடனே அவர் இதன் மூலம் கர்த்தர் நமக்கு ஏதோ சொல்லுகிறாரோ என்று நினைத்தார். பிசாசு சோதிக்கிறதோ என்ற எண்ணமும் தோன்றியது. மீண்டும் மீண்டும் பல முறை அதை அனுப்பப் பார்த்தும் அவரால் அதை அனுப்ப முடியவில்லை. மறுபடியும் தான் எழுதியதை சில தடவைகள் படித்துப் பார்த்தார். தான் எழுதியது நியாயமானது, அதில் எழுத வேண்டியவையெல்லாம் அடங்கியிருந்தன, அதற்கு மேல் செய்வதற்கு ஒன்றுமில்லை என்பதை அவர் உணர்ந்தார். அதற்குப் பிறகு அதை எப்படியாவது ஒரு கரித்துண்டைப் பயன்படுத்தியாவது பேப்பரில் எழுதிக் கழுதை மேல் ஏறிப் போய்ச் சேர வேண்டிய இடத்துக் குப் போய் கொடுக்க வேண்டியவரிடம் கொடுத்தே தீருவேன் என்று அவர் தீர்மானம் எடுத்தார். பல தடவைகள் மீண்டும் மீண்டும் இ-மெயிலை அனுப்ப முயற்சி செய்து பத்தாவது தடவை அதை அவரால் அனுப்ப முடிந¢தது. அவர் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு இடம்கொடுத்து மனதைத் தளர விட்டு செய்யத் தீர்மானித்ததை செய்யாமல் இருக்கவில்லை. இதுவே ஆண்மையுள்ளவர்கள் செய்கிற காரியம். செய்ய வேண்டியது இதுதான் என்ற உறுதியான தீர்மானத்துக்கு வந்தவுடன் அதை உயிரைக் கொடுத்தாவது செய்கிறவனே மெய்விசுவாசி. அவன்தான் ஆண்மகன்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s