அன்று சபையில்
அதிரடியாய்ப் பேசினார்
அருமைப் பிரசங்கி
சாதியும் பொய்யாம்
குலம் கோத்திரமும் நஞ்சாம்
விசுவாசிக்கு தேவை
விசுவாசியே மணத்துணையாய்
என்று விளாசினார்
வீர முழக்கமிட்டார்
ஆகா! என்றார்கள்
அமர்ந்திருந்து கேட்ட
அருமை ஆத்துமாக்கள்
இவரல்லோ பிரசங்கி
சீர்திருத்த வேந்தன்
என்றெல்லாம் எண்ணி
இதயம் குளிர்ந்தார்கள்
பிரசங்கம் முடிந்தது
சபையும் கலைந்தது
வாசற் படியில்
வழி மறித்து நின்றான்
வாலிபன் ஒருவன்
அவனைப் பார்த்து
என்னப்பா வேண்டும்?
என்றார் கனிவாக
எங்கள் பிரசங்கி
அய்யா! உங்கள்
மகளுக்கு நான் காதலன்
குப்பத்துக் குடும்பம்
அப்பா கைக்கூலி
முன்னாள் நான் முஸ்லீம்
இப்போதோ விசுவாசி
இயேசுவுக்கு பக்தன்
இருவரும் நேசிக்கிறோம்
இதயத்தில் ஒன்றுபட்டோம்
திருமணத்தில் இணையவும்
வேண்டும் உங்கள் ஆசி
என்றான் பணிவாக
வந்ததே கோபம்எங்கள் பிரசங்கிக்கு
முகமெல்லாம் சிவக்க
உடலெல்லாம் அதிர
வாய்க்கு வந்தபடி
வாயாரத் திட்டி அவனை
வாசல்படி நோக்கி
விரட்டினார் வேகமாய்
ஊருக்கெல்லாம் உபதேசம்
தனக்கு மட்டும் தனிநீதி
வெட்கங்கெட்ட பிரசங்கியின்
வேஷம் விலகியது
வினாடிப் பொழுதில்
அன்று . . .
சுபி . . .