இரட்சிப்பின் படிமுறை ஓழுங்கு

மகவேட்பு

இதுவரை இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கில் அழைப்பில் ஆரம்பித்து நீதிமானாக்குதல்வரையும் ஆராய்ந்து வந்திருக்கிறோம். இந்த இதழில் இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கில் அடுத்ததாக இடம் பெறும் “மகவேட்பைப்” பற்றி ஆராய்வோம். இதை ஆங்கிலத்தில் Adoption என்று அழைப்பார்கள். நீதிமானாக்குதலை அடுத்து வரவேண்டியது மகவேட்பே. கிறிஸ்து நமக்களித்திருக்கும் இரட்சிப்பின் ஆசீர்வாதங்களில் ஒன்று மகவேட்பு. இதனை புத்திரசுவீகாரம் என்றும் அழைக்கலாம். தத்தெடுத்தல் என்றும் இதற்குப் பொருள். கர்த்தராகிய பிதா கிறிஸ்துவின் மூலம் தம்முடைய மக்களை சுவீகாரப் புத்திரர்களாக தத்தெடுத்திருக்கிறார் என்பதையே மகவேட்பாகிய கோட்பாடு விளக்கு கிறது. இரட்சிப்பின் படிமுறை அம்சங்களில் காணப்படும் ஏனைய கிருபை களோடு பிரிக்கமுடியாத தொடர்புடையதாக மகவேட்பு இருந்தபோதும் இது ஒரு தனிப்பட்ட கிருபையாக இருப்பதை நாம் உணர்வது அவசியம். இன்னொருவிதத்தில் சொல்லப்போனால் நீதிமானாக்குதல் மகவேட்பாகாது. மறுபிறப்பும் மகவேட்பாகாது. சிலர் மறுபிறப்பினால் நமக்குக் கிடைத்துள்ள நீதிமானாக்குதலின் மறுபெயர் மகவேட்பு என்ற தவறான எண்ணத்தைக் கொண்டிருக்கிறார்கள். மறுபிறப்பையும், நீதிமானாக்குதலையும்விட வேறுபட்ட தனிதன்மைளைக் கொண்டு இந்தக் கிருபை விளங்குகிறது.

பரிசுத்த ஆவியானவர் நம்முடைய குருட்டுக் கண்களைத் திறந்துவைத்து கிறிஸ்துவுக்குள்ளான ஆத்மீக ஜீவனை நமக்குள் விதைப்பதையே மறுபிறப்பு என்று அழைக்கிறோம். நீத்திய ஜீவனுக்குரியவர்களாக நம்மை அறிவித்து

நீதிமான்களாக அடையாளம் கண்டு நம்மைக் கர்த்தர் ஏற்றுக் கொள்வதையே நீதிமானாக்குதலாக கிருபை விளக்குகிறது. இந்த இரண்டு கிருபைகளுமே நமக்குக் கிடைத்துள்ள ஆசீர்வாதங்களாக இருந்தபோதும் மகவேட்பின் மூலம் நாமடைந்திருக்கின்ற ஆசீர்வாதங்களை இவை விளக்குவதாயில்லை. மகவேட்பின் மூலம் கிறிஸ்துவால் மீட்கப்பட்டிருக்கிறவர்கள் கர்த்தருடைய பிள்ளைகளாக மாறிவிடுகின்றனர்; கர்த்தருடைய குடும்ப அங்கத்தினர்களாகிவிடுகின்றனர். அவருடைய குடும்பத்தாருக்குரிய சிறப்புரிமைகளை அவர்கள் இனி அநுபவிக்கமுடியும். மறுபிறப்பும், நீதிமானாக்குதலும் இந்த உண்மையை விளக்கும் கிருபைகளல்ல. யோவான் 1:12 மகவேட்பை விளக்குகின்ற ஒரு வசனம்: “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமாய் அவரை ஏற்றுக்கொள்கிறவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.”

மகவேட்பின் சிறப்பம்சங்களை இறையியலறிஞர் ஜோண் மரே பின்வரு மாறு விளக்குகிறார்:

(1) மகவேட்பு தனித்தன்மையைக் கொண்ட கிருபையாக இருந்தபோதும் மறுபிறப்போடும், நீதிமானாக்குதலோடும் பிரிக்கமுடியாத தொடர்புள்ளதாக இருக்கின்றது. நீதிமானாக்கப்படுகிறவர்களே கர்த்தரின் சுவீகாரப் புத்திரர்களாக மாறும் தகுதியுடையவர்களாக இருக்கின்றனர்.

(2) மகவேட்பு நீதிமானாக்குதலைப் போன்ற கர்த்தருடைய நியாயஸ்தலத்தில் நிகழ்ந்த தீர்ப்பின் விளைவு. அதாவது, நீதிமானாக்குதலின் மூலம் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஒரு சிறப்புரிமை. இன்னொருவிதத்தில் சொல்லப்போனால் நிலத்தை வாங்குகிறவர்களுக்கு கொடுக்கப்படுகின்ற பத்திரம் போன்றது. நிலம் அவர்களுக்கு சொந்தமானது என்பதை நிலப்பத்திரம் அறிவிப்பது போல மகவேட்பு நாம் கர்த்தருடைய பிள்ளைகள் என்பதை அறிவிக்கிறது. இதிலிருந்து மகவேட்பு என்பது மறுபிறப்பைப் போல நமக்குள் நிகழ்ந்த ஆவியின் கிரியையாக எண்ணக்கூடாது. மகவேட்பு நமக்குள் நிகழ்ந்து நம்மை எந்த விதத்திலும் மாற்றுகிற கிருபையல்ல. அது கர்த்தரோடு நமக்கு ஏற்பட்டுள்ள புதிய உறவை அறிவிப்பதாக மட்டுமே இருக்கிறது.

(3) கர்த்தருடைய குடும்பத்துக்குள் அங்கத்தவர்களாக இணைக்கப்பட் டிருப்பவர்கள் மகவேட்பின் ஆவியைப் பெற்றிருக்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் கர்த்தரோடு தங்களுக்கிருக்கும் தகப்பன், பிள்ளை உறவை உணர்ந்து அதற்குரிய சிறப்புரிமைகளை அநுபவிக்கக்கூடியவர்களாக இருக்கின்றனர். இதனாலேயே அவர்களால் கர்த்தரை “அப்பா, பிதா” என்று அழைக்க முடிகின்றது (கலா. 4:6; ரோமர் 8:15, 16). மகவேட்புக்குரியவர்களாக நாம் அறிவிக்கப்பட்டதனாலேயே நமக்கு மகவேட்பின் ஆவி கிடைத்திருக்கிறது.

(4) கடைசியாக மறுபிறப்பிற்கும், மகவேட்பிற்கும் இடையில் நெருங்கிய தொடர்பிருக்கிறது. இந்தத் தொடர்பு அத்தனை நெருக்கமானதாக இருப்பதால் சிலர் நாம் கர்த்தரின் குடும்ப அங்கத்தவருக்குரிய தன்மையைக் கொண்டிருப்பதோடு, அங்கீகாரப் பத்திரத்தின் மூலம் சுவீகரிக்கப்பட்டும் இருக்கிறோம் என்கிறார்கள். இதற்கு வேத ஆதாரம் இருக்கின்றது. இரண்டு வழிகளில் நாம் ஒரு குடும்பத்தின் அங்கத்தவராக மாறலாம். ஒன்று அதில் நாம் பிறந்திருக்க வேண்டும். அடுத்ததாக தத்தெடுக்கப் பட்டிருக்க வேண்டும். முதலாவது இயற்கையாக பிறப்பதால் ஏற்படுகின்றது. இரண்டாவது சட்டரீதியிலான ஒரு நடவடிக்கை. ஒருவிதத்தில் இதை நாம் கர்த்தரோடிருக்கும் நமது உறவில் காணலாம். கர்த்தர் நம்மை வெறுமனே தத்தெடுத்திருக்காமல் தன்னுடைய குடும்பத்தில் அங்கத்தினராக இருக்கும் தகுதிக்குரியவிதத்தில் நமது தன்மையையும் மாற்றி அமைத்திருக்கிறார். இதை அவர் மறுபிறப்பின் மூலம் செய்திருக்கிறார். தன்னுடைய அறிவிலும், நீதியிலும், பரிசுத்தத்திலும் பங்குகொண்டு அதற்கேற்ற ஆத்மீக வாழ்க்கையை வாழும்விதமாக நம்மை ஆவியின் மூலமாக மாற்றியிருக்கிறார். தன்னுடைய குடும்பத்தின் தன்மைக்கேற்ற இலக்கணங்களை வாழ்க்கையில் கொண்டிருக்காதவர்களைக் கர்த்தர் ஒருபோதும் தன்னுடைய குடும்ப அங்கத்தவர்களாக ஏற்றுக்கொள்வதில்லை. ஆகவே, கர்த்தரின் மகவேட்பை அநுபவிப்பதற்கு மறுபிறப்பு அவசியமான நிபந்தனையாக இருக்கிறது. நம்மை மறுரூபமாக்குகிற அதே பரிசுத்த ஆவியே புத்திரராக சுவீகரிக்கப்பட்டிருக்கிறவர்களின் இருதயத்தில் வாசம் செய்து அவர்கள் கர்த்தரை “அப்பா, பிதா” என்று அழைக்கும்படி செய்கிறார். ஆனால், மகவேட்பு மறுபிறப்பல்ல. அதுவே மகவேட்பின் ஆவியுமல்ல. மகவேட்பை அடைவதற்கு அவசியமானது மறுபிறப்பு; மறுபிறப்பின் விளைவு மகவேட்பு என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மகவேட்பு கர்த்தர் மனிதர்களின் தகப்பனாக இருக்கும் உறவைப் பற்றியதாகும். கர்த்தரைத் தகப்பனாகக் கருதும்போது அதுபற்றிய சில உண்மைகளை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். முதலாவதாக, திரித்துவப் போதனையின்படி கர்த்தர் பிதாவாக இருக்கிறார். திரித்துவத்தில் அவர் இரண்டாம் அங்கத்தவரான தன்னுடைய ஒரே குமாரனுக்கும், மூன்றாம் அங்கத்தவரான ஆவியானவருக்கும் பிதாவாக இருக்கிறார். இவ்வாறு கர்த்தர் ஏனைய திரித்துவ அங்கத்தவர்களுக்குப் பிதாவாக இருப்பது திரித்துவத் துக்கு மட்டுமே நித்தியத்துக்கும் உரிதானது. இது தனித்துவமானதும், திரித்துவத்துக்குள் மட்டுமே உள்ள விஷேச உறவாகும். இதில் கர்த்தரின் குமாரனைத் தவிர வேறு எவரும் அந்த உறவைக் கொண்டிருக்க முடியாது. ஆவியானவருக்கும் அது உரித்தானதல்ல. தேவதூதர்களும், மனிதர்களும் கூட குமாரனுக்கு மட்டுமே உரிய இந்த விஷேச உறவை அநுபவிக்க முடியாது.

திரித்துவத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து எனக்கு கடிதம் எழுதிய ஒருவர் இயேசுவே பிதா என்றும், அவரே குமாரனும், ஆவியும் என்று எழுதி பிதாவினதும், ஆவியினதும் அங்கத்துவத்தை நிராகரித்திருந்தார். அது முழுத்தவறு. திரித்துவ அங்கத்தவர்களுக்கிடையில் வெவ்வேறான தனித்துவமான உறவு முறை இருக்கின்றது. குமாரனும், பிதாவும் ஒன்றாக இருந்தாலும், பிதா, குமாரன் என்ற உறவு திரித்துவத்தில் நித்தியத்துக்கும் இருக்கிறது. அத்தோடு சிலர் கர்த்தர் பிதாவாக இருந்து தம்முடைய பிள்ளைகளை சுவீகரித்துக்கொள்ளுவதால், விசுவாசிகள் அந்தப் புதிய குடும்ப உறவின்படி திரித்துவத்தில் காணப்படுகின்ற தெய்வீக உறவில் பங்கேற்பதாக சொல்லுகிறார்கள். இது முழுத்தவறு. பிதா தன்னுடைய ஒரே குமாரனுக்கு பிதாவாக இருப்பதுபோல் வேறு எவருக்கும் பிதாவாக இருப்பதில்லை. குமாரன் பிதாவுக்கு மட்டுமே குமாரனாக இருக்கிறார். நமக்கும் கர்த்தருக்கும் இடையில் இருக்கும் உறவுக்கும் பிதாவுக்கும், குமாரனுக்கும் இடையில் காணப்படும் உறவுக்கும் வேறுபாடு இருக்கிறது. திரித்துவத்துக்கு வெளியில் இந்த உறவில் வேறு எவரும் பங்கேற்க முடியாது.

அதேவேளை, கர்த்தர் பொதுவானவிதத்தில் சகல மனிதர்களுக்கும் பிதாவாக இருக்கிறார். சிருஷ்டிகர் என்ற முறையிலும், தான் படைத்த அனைத்தையும் தன்னுடைய நன்மைக்காகப் பரமரித்து வருகிறவர் என்ற முறையிலும் அவர் மனிதர்களுக்கு பிதாவாக இருக்கிறார் எனலாம். இதை அப்போஸ்தலர் 17:25-29; எபிரேயர் 12:9; யாக்கோபு 1:18 போன்ற வசனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இருந்தபோதும் கர்த்தர் தன்னால் தெரிந்து கொள்ளப்பட்ட மக்களோடு மட்டுமே தகப்பனாக விஷேடமான உறவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். திரித்துவத்தில் கர்த்தர் பிதாவாக இருப்பதும், கிறிஸ்து குமாரனாக இருப்பதுமான விசேஷ உறவு கர்த்தருடைய மக்களின் மீட்போடு தொடர்புடையது. கர்த்தர் தம்முடைய மக்களுக்குப் பிதாவாக இருக்கும் விஷேட உறவை, அவரை அறியாத மக்கள் ஒருபோதும் அநுப விக்க முடியாது. கர்த்தருடைய மக்கள் அநுபவிக்கும் இந்த விஷேட உறவை பவுல் ரோமர் 8:15 பின்வருமாறு விளக்குகிறார்: “திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவீகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.” கிறிஸ்து தன்னுடைய சீடர்களுக்கு ஜெபம் செய்வது பற்றிப் போதித்து எப்படி ஜெபம் செய்வது என்று விளக்கியபோது “பரலோகத்திலிருக்கும் எங்கள் பிதாவே” என்றழைத்து ஜெபம் செய்யும்படிப் போதித்தார். இந்தவிதமாக கர்த்தரைப் பிதாவாக அழைத்து ஜெபம் பண்ணும் விஷேட ஆசீர்வாதம் கர்த்தருடைய மக்களுக்கு மட்டுமே உண்டு. இந்த உறவை சகல மக்களுக்கும் உரிய உறவாக மாற்றப்பார்ப்பது கிறிஸ்துவினுடைய மீட்புப்பணியை மாசுபடுத்தி சுவிசேஷத்தையே குழப்புவதில் போய்முடியும். அதுமட்டுமல்லாமல் கர்த்தரை அறியாத மக்கள் மகவேட்பின் ஆசீர்வாதங்களில் தங்களுக்கும் பங்குண்டு என்று எண்ணிவிடக்கூடிய ஆபத்தும் உண்டு. மகவேட்பின் மூலம் கர்த்தரைப் பிதாவாகக் கொண்டிருக்கும் ஆசிர்வாதம் கிறிஸ்துவை விசுவாக்கின்ற மக்கள் மட்டுமே அநுபவிக்க முடியும். வேறு எவருக்கும் அதில் எந்தப் பங்குமில்லை. “நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை.” என்று யோவான் தெளிவாக கர்த்தருக்கும் நமக்கும் உள்ள உறவை விளக்கியிருக்கிறார்.

திரித்துவ தேவனின் முதல் அங்கத்தவரான பிதாவை மகவேட்பாகிய இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கின் கிருபையின் மூலம் தங்களுடைய பிதாவாக உறவுகொண்டு வாழும் உரிமை விசுவாசிகளுக்கு மட்டுமே உண்டு என்று பார்த்தோம். இதை வலியுறுத்தும்விதமாக வேதம் கர்த்தரைப் “பிதா”வாக எந்த சந்தர்ப்பத்தில் விளக்குகிறது என்பதை ஆராய்வது இந்தப் போதனைக்கு வலிமையூட்டும்.

(1) “பிதா” என்ற பதம் திரித்துவத்தின் முதல் அங்கத்தவருக்கு மட்டுமே உரித்தானது. திரித்துவ அங்கத்தவர்களுக்கு மத்தியில் இருக்கும் உறவில் முதல் அங்கத்தவர் மட்டுமே பிதாவாக இருக்கிறார். அத்தோடு இரண்டாம் அங்கத்தவர் மட்டுமே குமாரனாகவும், மூன்றாம் அங்கத்தவர் பரிசுத்த ஆவியாகவும் இருக்கிறார்கள். இயேசு கிறிஸ்து “பிதா” என்று அழைத்த போது திரித்துவத்தின் முதலாவது அங்கத்தவரை மட்டுமே அவ்வாறு அழைத்தார். அவர் மட்டுமே குமாரனுக்கு பிதாவாக இருந்தார்.

(2) இயேசு பலதடவைகள் தான் இன்னும் பிதாவிடம் போக வேண்டிய நேரம் வரவில்லை என்று சொல்லியிருக்கிறார் (யோவான் 20:17). இதன் மூலம் அவர் தன்னுடைய பிதாவாகிய திரித்துவத்தின் முதலாம் அங்கத்த வரையே குறிப்பிட்டார். அதேவேளை, யாரை இயேசு “பிதா” என்று அழைத்தாரோ அவரே தன்னுடைய சீடர்களுக்கும் பிதா என்றும் சொல்லி யிருக்கிறார். தனக்கு பிதாவுடன் இருந்த தனித்துவமான உறவை அவர் எப்போதும் வலியுறுத்திய அதேவேளை தன் பிதா சீடர்களுக்கும் தகப்பனாக இருக்கிறார் என்பதையும் அவர் குறிப்பிடாமலில்லை. பிதாவுக்கும் குமாரனுக்கு இருக்கும் விஷேடமான உறவை வேறு எவரும் அநுபவிக்க முடியாது. அதேவேளை, பிதா மகவேட்பின் மூலம் இன்னொருவிதத்தில் சீடர்களுக்கும் பிதாவாக  இருக்கிறார்.

(3) புதிய ஏற்பாட்டில் இயேசு திரித்துவத்தின் முதல் அங்கத்தவரைத் தன்னுடைய பிதா என்றும், சீடர்களைப் பார்த்து உங்களுடைய பிதாவிடம் ஜெபியுங்கள் என்று சொன்னபோது தன்னுடைய பிதாவையே குறிப்பிட்டிருப்பதையும் பார்க்கிறோம். அத்தோடு பவுலும் ஏனைய புதிய ஏற்பாட்டு ஆசிரியர்களும் “பிதாவாகிய கர்த்தர்” என்று பல இடங்களில் குறிப்பிட் டிருக்கிறார்கள் (கலா. 1:1; எபேசி. 6:23; பிலி. 2:11). இந்தப் பதத்தின் மூலம் அவர்கள் திரித்துவத்தின் முதலாம் அங்கத்தவரையே ஒருமையில் குறிப்பிட் டிருக்கிறார்கள். இந்தப் பதம் வேறு எவரையும் குறித்துப் பயன்படுத்தப்படவில்லை. அத்தோடு, “நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய கர்த்தர்” என்றும் அவரைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்கள் (ரோமர் 15:6; 2 கொரி. 1:3; 11:33). இவற்றின் மூலம் வேதத்தில் “பிதாவாகிய கர்த்தர்” என்ற பதமும், நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய கர்த்தர்” என்ற பதமும் ஒருவரையே குறிப்பிடுவதோடு அப்பதங்கள் இயேசு கிறிஸ்துவைக் குறிப்பிடும் பதங்களல்ல என்றும் அவருடைய பிதாவையே குறிப்பவை என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

இதுவரை நாம் பார்த்தவற்றின் மூலம் மகவேட்பின் மூலம் நமக்குத் தகப்பனாக இருக்கிறவர் “பரலோகத்தின் இருக்கும் நமது பிதா”வாகிய திரித்துவத்தின் முதலாம் அங்கத்தவர் என்பதை நாம் உணர்வது அவசியம். இப்பதங்கள் குமாரனையோ, பரிசுத்த ஆவியையோ குறிக்காமல் பிதாவை மட்டுமே குறிக்கின்றன. மகவேட்பின் மூலம் நாம் பிதாவுக்கு பிள்ளைகளாக தத்தெடுக்கப்பட்டிருக்கிறோம். அந்த உறவு கிறிஸ்துவின் மேல் நாம் வைத்த விசுவாசத்தின் மூலம் நமக்குக் கிடைத்திருக்கிறது. கிறிஸ்துவின் மரணபலி அந்த உறவை மீட்பின் மூலம் நமக்குப் பெற்றுத் தந்திருக்கிறது. அதேவேளை குமாரனுக்கும் பிதாவுக்கும் இடையில் நித்தியத்தில் இருந்து இருக்கும் தகப்பன், மகன் உறவை நாம் பிதாவோடு கொண்டிருக்கும் உறவோடு தொடர்புபடுத்தக்கூடாது. அதுவும் மகவேட்பும் ஒன்றல்ல. இயேசு சீடர் களுக்கு ஜெபிக்கும்படி சொன்னபோது “எங்களுடைய பிதாவே” என்று ஜெபியுங்கள் என்று அவர்களுடைய தகப்பனை (பிதாவை) நோக்கி   ஜெபிக்கும்படிச் சொன்னார். அதேவேளை அந்த ஜெபத்தை அவர் செய்ய வில்லை. நமது பிதாவை நோக்கி ஜெபியுங்கள் என்று அவர் சொல்லாமல் உங்கள பிதாவை நோக்கி ஜெபியுங்கள் என்றார். இதிலிருந்து அவருக்கு தனிப்பட்ட விதமாக பிதாவோடு நித்தியத்தில் இருந்து இருக்கும் உறவுக்கும் நமக்கு பிதாவோடு மகவேட்பு மூலம் இருக்கும் உறவுக்கும் இருக்கும் வேறுபாட்டை விளங்கிக் கொள்ள வேண்டும்.

மகவேட்பின் மூலம் விசுவாசிகள் அடையும் விஷேட பலன்கள் யாவை?

(1) சுவீகாரப் புத்திரர்களாக விசுவாசிகள் திரித்துவத்தின் முதலாம் அங்கத்தவரை பிதா என்று அழைக்க முடிகின்றது. அவருடைய பிள்ளை கள் என்ற பெயரை அவர்கள் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவரை விசுவாசிக்காதவர்களுக்கு அந்த உரிமை இல்லை.

(2) விசுவாசிகள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். மகவேட்பின் ஆவி அவர்களுக்கு முத்திரையாகக் கிடைத்திருக்கிறது. பரிசுத்த ஆவியின் மூலம் அவர்கள் முத்திரை குத்தப்பட்டிருக்கிறார்கள்.

(3) பிதாவின் கவனிப்பும், சிட்சையும் அவர்களுக்கு ஆவிக்குரிய ஆசீர்வாதமாக கிடைத்திருக்கிறது. இது கர்த்தரை அறியாதவர்களுக்கு கிடையாது.

(4) பிதாவின் சுவீகாரப் புத்திரர்களாக அவர்களுக்கு பிதாவின் சகல விதமான ஆவிக்குரிய சுதந்திரங்களும், ஆசீர்வாதங்களும், வசதிகளும் கிடைத்திருக்கின்றன.

(5) கர்த்தரின் சகல வாக்குறுதிகளுக்கும் உரித்தானவர்களாக இருக்கிறார்கள்.

(6) மகிமையில் கிறிஸ்துவோடு சகல சுதந்திரங்களையும் அநுபவிக்கும்படி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

பின்வரும் வசனங்களை வாசித்துப்பாருங்கள்: 1 யோவான் 3:1; எபேசியர் 1:5; கலாத்தியர் 4:4-5; யோவான் 1:12; 2 கொரிந்தியர் 6:8; வெளிப்படுத்தல் 3:12; கலாத்தியர் 4:6; சங்கீதம் 103:13; நீதிமொழிகள் 14:26; மத்தேயு 6:32; எபிரேயர் 6:12; ரோமர் 8:17.

மகவேட்பு பற்றி போதகர் அலபர்ட் என். மார்டின் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “நீதிமானாக்குதலின் மூலம் கர்த்தர் விசுவாசிகளை நீதிமான்கள் என்று மட்டும் தம்முடைய நியாயஸ்தலத்தில் அறிவிக்காது, அவர்கள் விசுவாசத்தின் மூலம் கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டிருக் கிறார்கள் என்றும், கிறிஸ்துவின் பூரணமான மீட்புப் பலி மூலம் பெறப்பட்ட நீதியினினால் அவர்களுடைய பாவங்களுக்குரிய விலை முழுமையாகக் கொடுக்கப்பட்டுவிட்டதாகவும் அறிவிக்கிறார். அவ்வாறு கிறிஸ்துவின் மீட்புப் பணியின் மூலம் விசுவாசிகளுக்கு கர்த்தர் இதைச் செய்தபோது அவர்களுக்கு தன்னுடைய நியாயஸ்தலத்தில் ஒரு புதிய ஸ்தானத்தை அளிப்பது மட்டுமல்லாமல், பரலோக வாசஸ்தலத்திலும் ஒரு ஸ்தானத்தை அளிக்கிறார். அப்போது நியாயாதிபதியாகிய கர்த்தர் பிதாவின் ஸ்தானத்தில் இருந்து விசுவாசிகளைப் பார்த்துப் பின்வருமாறு சொல்லுகிறார்: “வாருங்கள், நீங்கள் இப்போது என்னுடைய குமாரர்களாகவும், குமாரத்திகளாகவும் இருக்கிறீர்கள்.” இதுவே மகவேட்பு.

2 thoughts on “இரட்சிப்பின் படிமுறை ஓழுங்கு

மறுமொழி தருக