அவசியம் சிந்திக்க வேண்டிய ஓர் ஆத்மீகப் பிரச்சனை!

சமீபத்தில் போதகர்களுக்கும், ஊழியத்திலிருப்பவர்களுக்கும் நடந்த கூட்டத்தில் நான் ஒரு காரியத்தை செய்தேன். ஒரு மனிதன் கிறிஸ்துவுக்குள் வந்திருக்கிறானா என்பதை நாம் எப்படித் தீர்மானிப்பது என்ற கேள்வியை அவர்கள் முன் வைத்து அதுபற்றி ஒவ்வொருவருடைய கருத்துக்களையும் சொல்லும்படிக் கேட்டுக் கொண்டேன். ஒரு மணி நேரம் இந்தக் காரியம் பற்றி சிந்தித்து, வேதத்தைப் பயன்படுத்தி ஆராய்ந்து பார்த்தது நடைமுறைக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்தது. கலந்து கொண்டவர்கள் இதனால் பெரிதும் பயனடைந்ததாக சொன்னார்கள்.  இன்றைக்கு ஒரு மனிதன் கிறிஸ்துவிடம் வந்திருக்கிறானா? என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்பது அவசியமில்லை என்றளவுக்கு சுவிசேஷ ஊழியம் தரங்கெட்டு நிற்கிறதை, சிந்திக்க ஆரம்பித்திருக்கும் கிறிஸ்தவர்கள் புரிந்துகொள்வார்கள். அந்தளவுக்கு இந்த விஷயத்தில் அக்கறை காட்டாத நிலையை தமிழினத்து சுவிசேஷ ஊழியங்களில் பார்க்க முடிகிறது. அவசர அவசரமாக ஞானஸ்நானம் கொடுத்து ஒரு கூட்டத்தை சேர்த்துவிடுவதில் பெரும் அக்கறை காட்டி வருவதால் ஒரு மனிதனின் ஆத்துமாவில் உண்மையான ஆவிக்குரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா என்று அறிந்துகொள்ளுவதில் அக்கறை இல்லாத நிலை உருவாகிவிட்டது. ‘அரிசிக் கிறிஸ்தவர்கள்’ (Rice Christians), பெயர்க் கிறிஸ்தவர்கள் என்ற பெயர்கள் ஏற்படுவதற்குக் காரணமான நிலையை சத்தான சுவிசேஷப் பிரசங்கமில்லாத ஊழியம் உருவாக்கியிருக்கிறது. ஞானஸ்நானம் பாவத்தைப் போக்கி இரட்சிப்பை அளிக்கிறது என்ற தவறான எண்ணங்களும் மனந்திரும்பாது பாவிகளாக தொடர்ந்திருக்கும் போலிக் கிறிஸ்தவர்களை உருவாக்கிவிட்டிருக்கிறது. மனந்திரும்புதலும், விசுவாசமும் இல்லாமல் ஞானஸ்நானம் எடுத்து வாழ்ந்து வருகிற ஒரு பெருங்கூட்டம் நம்மினத்தில் இருந்து வருவதை யாரால் மறுக்க முடியும். எப்படியாவது ஓர் ஊழியத்தை செய்து அதைப் பலர் முன் நியாயப்படுத்திவிட வேண்டும் என்ற துடிப்பு இப்படியான போலிக்கிறிஸ்தவர்கள் கூட்டம் உருவாவதற்கு காரணமாகி விடுகிறது. நம்மினத்தில் சுவிசேஷக் கிறிஸ்தவம் மெய்யான ஆவிக்குரிய கிரியைகளைக் காண முடியாதபடி ஆவிக்குரிய வீரியமில்லாதிருப்பதற்கு இதுதான் பெருங்காரணம்.

ஒரு மனிதன் கிறிஸ்தவனா, இல்லையா? என்பதைத் தெரிந்துகொள்ளுவது அவசியமில்லை என்று நினைப்போமானால் நமக்கு கிறிஸ்தவத்தைப் பற்றி சரியாகத் தெரியவில்லை என்றுதான் அர்த்தம். நான் ஏன் என்னைக் கிறிஸ்தவன் என்று அறிவித்துக்கொள்ளுகிறேன் என்று என்னால் தெளிவாக பதில் சொல்ல முடியாவிட்டால் நான் கிறிஸ்தவனாக இருப்பதிலேயே அர்த்தமில்லை. என்னுடைய மனந்திரும்புதலையும், விசுவாசத்தையும் பற்றித் தெளிவாக சொல்ல வேண்டியது என்னுடைய ஆத்மீகக் கடமை. பதினாறாம் நூற்றாண்டு சீர்திருத்தவாத காலத்தில் இதுபற்றித்தான் கொஞ்சம் பேர் சிந்திக்க ஆரம்பித்தார்கள். ஏனென்றால், அந்தக் கேள்விக்கு அன்று தெளிவான பதிலிருக்கவில்லை. கத்தோலிக்க சபையைச் சேர்ந்தவனாக நீ இருந்தால் நிச்சயம் கிறிஸ்தவன் தான் என்ற எண்ணமே அன்றைக்கு தலைதூக்கி நின்றது. கத்தோலிக்க மதத்தை சேர்ந்தவனாக இருப்பாயானால், நீ கிறிஸ்தவனா இல்லையா என்ற கேள்வியே எழுப்பக்கூடாது என்ற நிலை அன்று இருந்தது. அது தவறு என்று உணர்ந்து வேதத்தைப் புரட்டிப் பார்த்து அந்தக் கேள்விக்கு விடை காணத் துணிந்தார்கள் சிலர். அவர்களில் ஒருவர் மார்டின் லூதர். கிறிஸ்தவன் என்று நம்பி வாழ்ந்துகொண்டிருந்த லூதருக்கு தான் உண்மையில் கிறிஸ்தவன் இல்லை என்பது ஆவியினால் உணர்த்தப்பட்டது. தன் பாவத்தை உணர்ந்த லூதர் வேதத்தை வாசித்து கிறிஸ்தவனாவது எப்படி? என்று தேட ஆரம்பித்தார். கிறிஸ்துவை மனந்திரும்பி விசுவாசித்தால் மட்டுமே கிறிஸ்தவனாக முடியும் என்பதைத் தெரிந்துகொண்ட லூதர் கிறிஸ்துவை மனந்திரும்பி விசுவாசித்தார். அப்படி அன்று தோன்றியதே சீர்திருத்தவாதம். அது அடிப்படையிலேயே, ஒரு மனிதன் கிறிஸ்தவனாவது எப்படி? என்ற கேள்வியை எழுப்பி உருவானது. லூதர் மட்டுமல்லாமல் வேறு பலரும் இந்தக் கேள்வியை எழுப்பியதால் பல நாடுகளிலும் மெய்க் கிறிஸ்தவர்கள் கர்த்தரின் கிருபையினால் உருவாக ஆரம்பித்தார்கள். அப்போஸ். 2:37ல் நாம் வாசிப்பதுபோல் ஆவியினால் ‘இருதயத்தில் குத்தப்பட்டவர்கள்’ இரட்சிப்புக்கு வழிதேடி கிறிஸ்துவை நாட ஆரம்பித்தார்கள். இரட்சிப்புக்கு வழி என்ன? என்ற ஆணித்தரமான கேள்வி எழுந்ததால்தான் சீர்திருத்தவாதம் உருவானது. இது உங்களுக்குப் புரிகிறதா? இந்தக் கேள்வி கிறிஸ்தவத்தின் அடிப்படைக் கேள்வி. இந்தக் கேள்விக்கு விடை கொடுக்க நாம் தயங்க முடியாது. இந்தக் கேள்வியைத் தவிர்ப்பவர்கள் கிறிஸ்தவர்களாக இருக்க முடியாது. இந்தக் கேள்வியை அடிக்கடிக் கேட்டு வேதம் தரும் தெளிவான பதிலால் நம்மை சோதித்துப் பார்த்துக் கொண்டால் மட்டுமே நமக்கு பரலோக நிச்சயம் இருக்க முடியும். என்றைக்கு இந்தக் கேள்வியை நாம் அசட்டை செய்கிறோமோ அன்றே நமக்கு ஆவிக்குரிய பேராபத்து உருவாகிறது. அந்தக் கேள்வியை நம்மினத்துக் கிறிஸ்தவம் இன்று அசட்டை செய்கிறது என்பதே என்னுடைய தீர்க்கமான வாதம். அந்த நிலை நம்மினத்தில் இன்று இருப்பதை மறுப்பவர்களோடு நான் எந்த இடத்திலும் ஆவிக்குரிய விதத்தில் நட்பு ரீதியான வாதத்தில் ஈடுபடத் தயாராக இருக்கிறேன். இதுவரை நான் இப்படிச் சொன்னதில்லை. நம்மினத்து கிறிஸ்தவம் இருக்கும் அவல நிலை என்னை இப்படி ஆதங்கத்தோடு பேச வைக்கிறது என்பதைத் தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள்.

‘மனந்திரும்பாதவர்களுக்கு ஓர் எச்சரிக்கை’ என்ற தலைப்பில் ஜோசப் எலேயின் (Joseph Alleine) என்ற பதினேழாம் நூற்றாண்டு பியூரிட்டன் பிரசங்கி ஒரு நூலை எழுதினார் (1671). இதற்கு ‘பரலோகத்துக்கான உறுதியான வழிகாட்டி’ என்ற தலைப்பும் உண்டு. இந்த நூல் அருமையான கிறிஸ்தவ இலக்கியங்களில் ஒன்று. கிறிஸ்தவம் இந்த உலகில் சிறப்பாக இருந்த காலப்பகுதியான பதினேழாம் நூற்றாண்டில் இவர் அருமையான பிரசங்கியாக இருந்து கிறிஸ்தவ ஊழியம் செய்திருக்கிறார். ஜோன் ஓவன், தொமஸ் குட்வின் ஆகியோர் வாழ்ந்த காலத்தில் இவர் வாழ்ந்திருப்பது மட்டுமல்லாமல் அவர்களிடம் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் பாடமும் கற்றிருக்கிறார். கிறிஸ்தவ சுவிசேஷத்தை இந்த நூல் தெளிவாகவும், ஆணித்தரமாகவும், எளிமையாகவும் விளக்குகிறது.

இந்த நூலை நான் குறிப்பிடுவதற்குக் காரணம், ஒரு மனிதன் கிறிஸ்துவிடம் வருவதற்கு என்ன தேவை என்பதை இந்த நூல் தெளிவாக விளக்குவதால்தான். மெய்யான மனந்திரும்புதல் எது என்பதை இந்நூல் இனங்காட்டுவதோடு, எவை மெய்யான மனந்திரும்புதலுக்கான அடையாளங்கள் இல்லை என்பதையும் ஒவ்வொன்றாக ஆணித்தரமாக விளக்குகிறது. ஒருவன் கிறிஸ்தவனா, இல்லையா என்று தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லாவிட்டால் இந்த நூல் வெளிவந்திருக்கவே முடியாது. மெய்யான மனந்திரும்புதல் இருந்தால் மட்டுமே ஒருவன் சபை அங்கத்தவனாக இருக்க வேண்டும் என்று வேதம் போதிப்பதால்தான் வேதத்தில் இருந்து அத்தனை துல்லியமாக மனந்திரும்புதலைப் பற்றிய சத்தியங்களை ஜோசப் எலேயின் அள்ளி வழங்கியிருக்கிறார். ஒரு வேதாகமக் கல்லூரியின் அதிபராக மட்டும் நான் இருப்பேனேயாகில் என்னுடைய மாணவர்கள் அனைவரையும் முதலில் இதை வாசிக்க வைத்து ஓர் அத்தியாவசியமான பாடமாக இதை நிச்சயம் வைக்காமலிருக்க மாட்டேன். நம்மினத்தில் ஞானஸ்நானம் பெற்ற பெயர்க் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து உருவாகி வராமல் இருக்க வேண்டுமானால் சுவிசேஷம் இந்த நூலில் விளக்கப்பட்டிருப்பதுபோல் பிரசங்க மேடைகள் தோறும்

தெளிவாகப் பிரசங்கிக்கப்பட வேண்டும். ஆத்துமாக்கள் மனந்திரும்புதலைப் பற்றி அறிந்துகொள்ளும் வசதியைத் தெளிவான பிரசங்கங்கள் மூலம் நாம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இந்த நூலைப் போலவே ரிச்சட் பெக்ஸ்டரின் ‘மனந்திரும்பாதவர்களுக்கான அழைப்பு’ (Call to the Unconverted by Richard Baxter), ஜோன் கொல்கூனின் ‘சுவிசேஷ மனந்திரும்புதல்’ (Evangelical Repentance by John Colquhoun) ஆகிய இரு நூல்களும் இதை விளக்கும் அருமையான நூல்களாக ஆங்கிலத்தில் இருக்கின்றன.

மெய்க் கிறிஸ்தவன் யார்? என்பதற்கான தெளிவான பதில் தரமுடியாமல் கண்கெட்டு கிடக்கும் நம்மினத்துக் கிறிஸ்தவத்தில் அதற்கான விளக்கத்தை ஆணித்தரமாகத் தருகின்ற சத்தான நூல்களும், அந்த சத்தியங்களை அழுத்தமாகவும், எளிமையாகவும், ஆவியின் வல்லமையோடு பிரசங்கிக்கிற பிரசங்கிகளும், மெய்க்கிறிஸ்தவர்களை தெளிவாக அடையாளங்கண்டு அவர்களுக்கு மட்டுமே ஞானஸ்நானம் அளித்து அங்கத்தவர்களாகக் கொண்டு இயங்குகின்ற சபைகளும் இல்லாதவரை கிறிஸ்தவம் என்ற பெயரில் ஒரு நொன்டிக் குதிரை மட்டுமே நம்மினத்தில் எப்போதும் நடமாடிக் கொண்டிருக்கப் போகிறது.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s