இயேசுவிடம் வர ஏன் சிலருக்கு மனதில்லை? – அல்பர்ட் என். மார்டின் –

யூதர்களின் பண்டிகை நாளொன்றில் எருசலேம் மிகவும் கலகலப்பாக இருந்தது. பெதஸ்தா குளத்தின் பக்கத்தில் கலிலேயாவிலிருந்து வந்த அந்த இளம் ரபி, 38 வருஷமாக திமிர்வாதம் பிடித்திருந்த ஒரு மனிதனை நொடிப்பொழுதில் குணமாக்கியிருந்தார். அதைப் பார்த்து சுற்றியிருந்த கூட்டத்தார் பிரமிப்படைந்திருந்தனர். அதைக் குறித்து சந்தோஷப்படுவதற்கு பதிலாக, யூதமதத் தலைவர்கள், அந்த திமிர்வாதக்காரனை நோக்கி, ஓய்வுநாளிலே நீ ஏன் படுக்கையை எடுத்துக் கொண்டு நடக்கிறாய் என்று குற்றம் சுமத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பொறுத்தமட்டில் அது வேலையாக இருந்தது. ஓய்வுநாளில் அவன் வேலை செய்யக்கூடாது என்பது அவர்களுடைய கொள்கை. அத்தோடு அவர்கள் இயேசு கிறிஸ்து மீதும் குற்றஞ்சாட்டினார்கள். திமிர்வாதக்காரனை சுகப்படுத்திய “வேலையை” அவரும் ஓய்வுநாளில் செய்தார் என்பதே அந்தக் குற்றச்சாட்டு. அதற்கு இயேசு, “என் பிதா இதுவரைக்கும் கிரியை செய்து வருகிறார். நானும் கிரியை செய்து வருகிறேன்” என்று பதில் கூறினார். இதைக் கேட்ட அவர்களுக்கு, “அவர் தம்மை தேவனுக்கு சமமாக்கிவிட்டார்” என்ற கோபம் வந்ததே தவிர வேறொன்றும் தோன்றவில்லை (யோவான் 5:18).

பொறாமை பிடித்த அந்த யூதமதத் தலைவர்கள், இயேசு தன்னை தேவனுக்கு சமமாக்கி பேசி விட்டார் என்பதால், அவரைக் கொலை செய்துவிட வேண்டும் என்கிற வெறியோடு அலைந்தார்கள். இருந்தாலும், இயேசு கிறிஸ்து, தன்னுடைய இருதயத்தின் உன்னதமான வாஞ்சையை 34ஆம் வசனத்தில் வெளிப்படுத்துகிறார், “நீங்கள் இரட்சிக்கப்படுவதற்காகவே இவைகளைச் சொல்லுகிறேன்” என்றார். தேவனே அவர்கள் மத்தியில் மனிதவடிவில் வந்திருக்கிறார் என்பதையும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவராகிய மேசியா அவரே என்பதையும் அவர்கள் விசுவாசிக்காவிட்டால், அவர்கள் இரட்சிப்படைய முடியாது என்பதால் அவர் தம்முடைய தெய்வீகத் தன்மையை மூன்று விதங்களில் அவர்கள் நடுவே நிரூபணமாக்குகிறார். இதை அவர்களும் நன்றாக அறிந்திருக்கிறார்கள்: யோவான் ஸ்நானகனின் சாட்சியின் மூலமாகவும், தாம் செய்த பலவிதமான அற்புதங்களின் மூலமாகவும், வேதவாக்கியங்களின் மூலமாகவும் அவர் தம்மை மேசியாவாக அறிவிக்கிறார். இவ்வளவு சாட்சிகள் இருந்தும், அவர்கள் தங்களுடைய அவிசுவாசத்திலே பிடிவாதமாக நிலைகொண்டிருந்ததால் இயேசு கிறிஸ்துவின் வாயிலிருந்து வெளிவந்த அவர்களைக் குறித்து சொல்லப்பட்ட, வருத்தப்பட வேண்டிய வார்த்தையானது 40ஆம் வசனத்தில் காணப்படுகிறது: “உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை”.

எத்தனை துக்ககரமான வார்த்தைகள்! தம்மிடம்தான் ஜீவன் இருக்கிறதென்றும், அதை அடைவதற்கு தன்னிடம் வந்தால் போதுமானது என்றும் இயேசு கிறிஸ்து தெளிவாக தெரிவிக்கிறார். அவர் சரீரப்பிரகாரமான ஜீவனையோ, சரீரத்தின்படி அவருக்குப் பக்கத்தில் வருவதையோ குறித்துப் பேசவில்லை. ஏனென்றால் அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கிறவர்கள் அவருக்குப் பக்கத்தில்தான் இருந்தார்கள். சரீரத்தின்படி அவர்கள் உயிரோடும் இருக்கிறார்கள். ஆனால், அவர் ஆவிக்குரிய நித்தியமான ஜீவனைக் குறித்துப் பேசுகிறார். விசுவாசத்தினால் தங்களை அவரோடு இணைத்துக்கொள்வதின் மூலமாக அடையப் போகும் அழிவில்லாத ஜீவனைக் குறித்தே அவர் விளக்குகிறார். நித்தியஜீவனை அடைவதற்குத் தேவையான ஒன்றை அவர்கள் செய்ய மறுக்கிறார்கள். அதாவது அவரை நம்ப மறுக்கிறார்கள். அவர்கள்தான் கணக்கு ஒப்புவிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் என்பதை இயேசு கிறிஸ்துவின் நிதானமான பதில் சுட்டிக்காட்டுகிறது. இயேசு கிறிஸ்துவிடம் வராமல் பிடிவாதமாக இருக்கின்ற ஒவ்வொருவரும் அவர்களைப் போலவே கணக்கு ஒப்புவிக்க வேண்டிய நிலைமையில் இருக்கிறார்கள்.

வெளிப்பிரகாரமாக பக்திமான்கள் போலத் தோன்றுகிற இந்த மக்கள் இயேசுவிடம் வருவதற்கு எது தடையாக இருக்கிறது? இன்னும் விசுவாசத்தை அடையாத என் நண்பனே, இன்றைக்கு இயேசுவிடம் வராதபடி உன்னைத் தடை செய்வது எது? இதை எண்ணிப் பார்த்திருக்கிறாயா? ஏன் சிலபேர் இயேசுவிடம் வருவதில்லை என்பதற்கு நான் நான்கு முக்கிய காரணங்களை விளக்கப்போகிறேன். ஆனால் இந்தக் காரணங்களில் எதுவுமே ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என்பதையும் நான் நிருபிக்கப் போகிறேன். இந்தக் காரணங்களை ஒருபுறம் தள்ளி வைத்துவிட்டு, இயேசு கிறிஸ்துவிடம் வரும்படியாக நான் உன்னை அழைக்கப் போகிறேன்.

1. அறியாமையுடன் வாழுதல்.

இயேசு கிறிஸ்து உனக்கு எத்தனை அவசியம் என்பதை நீ அறியாமலிருக்கிறாய். சிலபேர் இயேசு கிறிஸ்துவிடம் வராமலேயே இருப்பார்கள். பாவிகளாகிய தங்களுக்கு என்ன தேவை என்பதை அவர்கள் உணராமல் இருப்பார்கள். இயேசு கிறிஸ்துவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர்கள் இந்தவிதமான அறியாமைக்கு நல்ல உதாரணம். “தங்களையே நீதிமான்களென்று நம்பிக்” கொண்டிருந்த இந்த மாய்மாலக்காரர்களை நோக்கி இயேசு கிறிஸ்து, மிகவும் தைரியமாக, இரண்டு மனுஷர் ஜெபம் பண்ண ஆலயத்துக்குச் சென்ற உவமையைக் கூறினார் (லூக் 18:9). ஆயக்காரரோடும், பாவிகளோடும் இயேசு கிறிஸ்து பந்தி இருந்து, போஜனம் பண்ணுவதைக் குறித்து பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுக்கிறதை இயேசு கிறிஸ்து கவனித்தார். “பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்” என்று அவர்களுக்கு பதில் கூறினார் (லூக் 5:31-32).

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த பரிசேயர் எப்படி இருந்தார்களோ அப்படித்தான் இன்றும் அநேகர் இருக்கிறார்கள். தாங்கள் வியாதியாய் இருப்பதுகூட அவர்களுக்குத் தெரியவில்லை. தங்களுக்கு ஆவிக்குரிய நோய் இருக்கிறது என்பதே அவர்களுக்குத் தெரியாமலிருக்கிறது. தங்களுடைய ஆத்துமாவை சுகப்படுத்தக்கூடியவரான அந்த மிகப்பெரிய மருத்துவரிடம் போவதைக் குறித்து அவர்கள் அக்கறைகொள்வதில்லை. ஏனென்றால், தங்களிடத்தில் எந்தக் குறையும் இருப்பதாக அவர்கள் நினைப்பதேயில்லை.

உன் ஆத்துமாவின் உண்மையான நிலையைக் குறித்து நீ அலட்சியமாக இருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. ஏனென்றால் உன்னிடம் இருக்கின்ற வேதமும், உன்னுடைய மனசாட்சியுமே அதற்கு தெளிவான சாட்சியளிக்கும்.

வேதத்தில் எந்தப் புத்தகத்தை வேண்டுமானாலும் திறந்துபார். மனிதனின் பாவநிலையைக் குறித்தும், அவன் பாவத்தில் விழுந்துபோன நிலையைக் குறித்தும் அதில் வாசிக்கலாம். ஆதாம்-ஏவாள், கடவுளின் கட்டளைக்குக் கீழ்ப்படியாமற்போன காலந்தொடங்கி, மனித வரலாற்றில் நாம் குற்றவாளிகளாகவும், அசுத்தம் நிறைந்தவர்களாகவும்தான் காணப்படுகிறோம் என்பதை வேதவசனம் தெளிவாகக் காண்பிக்கிறது. நான் மட்டும் அப்படியில்லை என்று நீ நினைப்பாயானால், அப்போஸ்தலனாகிய பவுல், தவறே இழைக்கமுடியாத பரிசுத்த ஆவியின் உதவியினாலே, இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதியாக இருந்து எழுதிய பல சுருக்கமான குறிப்புகளைப் படித்துப்பார்: “ஆதாமுக்குள் எல்லோரும் மரிக்கிறதுபோல” (1 கொரி 15:22), “ஒரே மனுஷனாலே பாவமும், பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது போலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லோருக்கும் வந்தது போலவும் இதுவுமாயிற்று” (ரோமர் 5:12).

இந்தப் பாரம்பரியத்தில் நாமும் வந்திருக்கிறபடியினாலே நாம் அனைவருமே பாவிகள்தான். “சுபாவத்தின்படி கோபாக்கினையின் பிள்ளைகள்” (எபே 2:3) என்று பவுல் அப்போஸ்தலன் நம்மைக் குறித்து விவரிக்கிறார். கடவுளின் இருதயத்துக்கேற்றவன் எனப் பெயர் பெற்ற அவருடைய தாசனாகிய தாவீது தன்னைக் குறித்து சொல்வதைப் பார்: “இதோ நான் துர்க்குணத்தில் உருவானேன். என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்”. நாம் ஒவ்வொருவரும் பாவசுபாவத்தை நம்மில் இயற்கையாகவே கொண்டிருக்கிறோம். நம் ஒவ்வொருவருக்கும் பாவம் செய்வது தானாகவே வருகிறது. கடவுளின் வேதாகமத்திலும், நமது இருதயங்களிலும் எழுதப்பட்டிருக்கிற அவருடைய நியாயங்களை நாம் மீறுகிறவர்களாக இருக்கிறபடியால் குற்றவாளிகளாகக் காணப்படுகிறோம். “நாமெல்லாரும் ஆடுகளைப் போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்” என்று ஏசாயா (ஏசாயா 53:6) தீர்க்கதரிசி அறிவிக்கிறார். பவுல் இன்னும் ஆணித்தரமாக “நீதிமான் இல்லை, ஒருவனாகிலும் இல்லை” என்கிறார். இங்கே மறுபேச்சுக்கே இடமில்லை.

வேதாகமம் கூறுகின்ற சாட்சியையும்விட, உனக்குள் இருக்கிற உன்னுடைய சொந்த மனசாட்சியே உனக்கு விரோதமாக சாட்சியளிக்கிறதே. ஒவ்வொரு மனிதனிலும் மனசாட்சியானது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அது, ஒன்று அவனுடைய கெட்ட நடத்தையைக் குற்றப்படுத்துகிறது, அல்லது அவனுடைய நல்ல நடத்தையைப் புகழுகிறது (ரோமர் 2:15). பாவத்தினால் வருகின்ற சந்தோஷங்களை மனசாட்சி உறுத்திக் காட்டுகிறது. ஆனால், மனசாட்சியை பேசவிடாமல் செய்வதற்கு உன்னால் ஆன எல்லா முயற்சிகளையும் நீ எடுக்கிறாய். மனசாட்சியின் சத்தம் மட்டும் வெளியே கேட்குமானால், அது எல்லோரும் அறியும்படியாக, சத்தமாக, உன்னுடைய இருதயம் எவ்வளவு பொல்லாதது என்பதை பகிரங்கமாக அறிவிக்கும். உன் இருதயத்திலுள்ள இழிவான நோக்கங்களையும் ஆசைகளையும் அது வெளிப்படுத்திவிடும். உன்னுடைய மனசாட்சியின் சத்தத்துக்கு நீ கொஞ்சம் செவிகொடுப்பாயானால், இயேசு கிறிஸ்துவின் உதவி உனக்கு எவ்வளவு தேவை என்பதை நீ உணராமல் இருக்க முடியாது. உன்னுடைய பாவங்களின் காரணமாக நீ தேவனுடைய தண்டனைக்குரிய தீர்ப்புக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறாய் என்பதை அறிவாய். அந்தப் பாவத்தின் காரணமாக உனக்கு கிடைக்க வேண்டிய முழு தண்டனையும் கிடைத்தே தீரும் என்பதை நீ தெரிந்துகொள்வாய். அதைத் தவிர்க்க உன்னால் ஒன்றுமே செய்ய முடியாது என்பதையும் உணர்ந்துகொள்வாய்.

பாவங்களைக் குறித்து வேதாகமம் குற்றஞ் சுமத்துவதையும், மனசாட்சியும் கூடவே சாட்சியிடுவதையும் அலட்சியப்படுத்துகிறவர்கள் எத்தனை பேர் தெரியுமா! இயேசு கிறிஸ்து தம்முடைய மிகுந்த இரக்கத்தினால் உனக்கு அழைப்புக் கொடுத்தும், கொஞ்சமும் அசையாமல் இருக்கின்ற உன் நிலையைக் குறித்து உன்னை நீ பாராட்டிக்கொள்ளாதே. உன்னுடைய ஆத்துமாவின் தேவையை உணர்ந்துகொள்ளக்கூடிய தெளிந்த கண்களைக் கொடுக்கும்படியாக அவரை நோக்கி வேண்டிக்கொள். உன்னுடைய அசுத்தநிலையையும், பாவத்தின் அகோரத்தையும் உணரத்தக்க நிலையை தேவன் தரும்படி ஜெபம் செய். லூக்கா 18 ஆம் அதிகாரத்தில் அந்தப் பரிசேயன் தன்னுடைய நற்குணங்களை கடவுளிடம் எடுத்துக்கூறி வெட்கமில்லாமல் ஜெபித்தது போல இல்லாமல், தாழ்மையுள்ள அந்த ஆயக்காரனைப் போல “தேவனே, பாவியாகிய என் மேல் கிருபையாயிரும்” என்று கெஞ்சி மன்றாடு.

2. கடினமான மனதோடிருத்தல்

இயேசு கிறிஸ்துவின் ஊடுருவுகின்ற வேண்டுகோளுக்கு இணங்காத கடின மனசு மோசமானது! ஒருவேளை உன்னுடைய பாவங்களைக் குறித்து நீ அறிந்தவனாயிருக்கலாம். ஓயாமல் குற்றப்படுத்திக் கொண்டிருக்கும் மனசாட்சியிலிருந்து தப்பித்துக்கொள்ள விரும்புகிறவனாயிருக்கலாம். ஆனாலும், நீ இயேசு கிறிஸ்துவிடம் வராமலிருப்பதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. உன் மனசாட்சியை ஊடுருவி அழைக்கின்றதான அவருடைய அழைப்புக்கு நீ இடந்தராமல் இருதயத்தைக் கடினப்படுத்துகிறவனாய் இருக்கலாம்.

தம்மிடம் வரும்படி கிறிஸ்து அழைக்கின்ற அழைப்பில் ஒரு கட்டளையும் இருக்கிறது. அது, உன்னுடைய பாவங்களை விட்டுவிட்டு நீ அவரிடம் வரவேண்டும் என்பதே. “அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” (மத் 1:21) என்று தேவ தூதன் யோசேப்பிடம் கூறினான். அவர் தமது மக்களை அவர்கள் இருக்கிற வண்ணமாகவே, பாவநிலையிலேயே ஏற்றுக்கொள்ளமாட்டார். ஆனால், அவர்களுடைய பாவங்களை நீக்கி அவர்களுக்கு விடுதலை கொடுப்பார். “பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்” என்று இயேசு கிறிஸ்து லூக்கா 5:32ல் கூறுகிறார். நீ கிறிஸ்துவின் மணவாட்டியாக அவரோடு இணைக்கப்பட வேண்டுமானால், உன் பாவங்களிலிருந்து முழுவதுமாக விவாகரத்து பெற்றிருக்க வேண்டும் என்பதுதான் நிபந்தனை. மனந்திரும்புதலையும், விசுவாசத்தையும், பாவமன்னிப்பையும் பிரிக்கவே முடியாது. “தேவனிடத்திற்கு மனந்திரும்புவதைக் குறித்தும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதைக் குறித்தும்” அறிவிப்பதே சரியான விதத்தில் சுவிசேஷம் சொல்லுவதாகும் என்பதை பவுல் அப் 20:21ல் உறுதிப்படுத்துகிறார். “இஸ்ரவேலருக்கு இரட்சிப்பையும், மனந்திரும்புதலையும் அருளுகிறதற்காக” தேவன் இயேசு கிறிஸ்துவை அதிபதி யாகவும் இரட்சகராகவும் உயர்த்தினார் என்று பேதுரு அப் 5:31ல் கூறுகிறார்.

பாவத்தில் இருப்பதை அறியாமல் இருப்பதல்ல உன் பிரச்சனை. உன் பாவம் மன்னிக்கப்படவும், சமாதானத்தைப் பெற்றுக்கொள்ளவும் வேண்டும் என்கிற உன் தேவையை நீ நன்றாகவே உணர்ந்திருக்கிறாய். ஆனால் கிறிஸ்துவின் நிபந்தனையின் காரணமாக, உன் பாவங்களை விட்டுவிட்டு அவரிடம் வருவதற்கு நீ தயாராக இல்லை. அதுதான் உன் பிரச்சனை. அதிக ஆஸ்திகளுக்கு அதிபதியாகிய (மத்தேயு 19) அந்த இளம் வாலிபனின் பிரச்சனை இதுதான். அவன் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று உண்மையாகவே ஆவலாயிருந்தான். அதை அடைவதற்காக அவன் இயேசு கிறிஸ்துவிடமும் வந்தான். ஆனால், தம்முடைய சர்வஞானத்தினால், மனிதர் இருதயத்தில் இருப்பதை அறியக்கூடியவராகிய கிறிஸ்துவோ இந்த வாலிபனின் குறை என்ன என்பதை கண்டுகொண்டார். பணத்தின் மீதும், சொத்துக்களின் மீதும் அவனுக்கு விருப்பம் இருப்பதை அறிந்தார். சொத்துக்களைவிட இயேசு கிறிஸ்துவே ஒருவனுடைய எஜமானாக இருந்து அவனுடைய இருதயத்தை ஆளவேண்டும். ஆகவே இயேசு அவனைப் பார்த்து: “போய் உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு. அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும். பின்பு என்னைப் பின்பற்றி வா” என்றார். இயேசு கிறிஸ்துவின் இந்த இருதயத்தை ஊடுருவுகின்ற வேண்டுகோளுக்கு இணங்க அவனுக்கு விருப்பமில்லை. “அவன் துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான்” என்று அந்த உவமை முடிகிறது.

சொத்துக்கள் மட்டுந்தான் குறையாக இருக்கிறது என்று நீ நினைக்க வேண்டாம். சொத்துக்களை விட்டுவிட்டு வரவேண்டும் என்று இயேசு கிறிஸ்து எல்லோருக்கும் சொல்லுவதாகவும் நினைக்க வேண்டாம். செல்வந்தர்களாக இருந்த மத்தேயு, சகேயு போன்ற சிலருக்கும் அவர் சுவிசேஷ அழைப்புக்கொடுத்தார். ஆனால் அவர்களிடம் சொத்துக்களை விட்டுவிட்டு வரவேண்டும் என்கிற நிபந்தனையை அவர் விதிக்கவில்லை. அவர் பாவிகளை அழைக்கும்போது, அவர்களுடைய இருதயத்துக்கு எது மிகவும் அருமையானதாக தெரிகிறதோ அதையே விட்டுவிட்டு வரும்படி அழைக்கிறார். யோவான் 4ல் காணப்படும் சமாரிய ஸ்தீரியிடம் என்ன குறை இருந்தது என்பதை அவர் கண்டுகொண்டு அதிலிருந்து விலகி வரும்படி அழைக்கிறார். இயேசுவிடம் மாத்திரம் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டு அவருக்கு முதலிடம் கொடுப்பவன் மாத்திரமே நித்தியஜீவனை அடையமுடியும் என்பதை இயேசு கிறிஸ்து ஒவ்வொருவருக்கும் கூறுகிறார். “இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது” (மத் 6:24). “ஒருவன் என் பின்னே வரவிரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்” (மாற்கு 8:34).

உன் இருதயத்தை ஊடுருவி அறிந்திருக்கிறவரான இயேசு கிறிஸ்துவின் அழைப்புக்கு எதிராக உன் மனதை நீ கடினப்படுத்திக்கொள்ளுவது சரியா? பரிசுத்தத்தில் பரிபூரணரான மகிமையின் கர்த்தர், உனக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கும்படியாக, உன் பாவங்களை விட்டுவிட்டு வரும்படி அழைக்கிறார். நீயோ அவற்றை விட்டு விலக மறுக்கிறாய். உன் பாவங்களை விட்டுவிலகாமல் அதோடு ஒட்டிக் கொண்டிருக்கிறாயே! முடிவில் அவை உனக்கு என்ன தரும்? “பாவத்தின் சம்பளம் மரணம்” என்று அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர் 6:23ல் கூறுகிறார். இயேசு கிறிஸ்துவின் மூலமாக வருகிற இரட்சிப்பு உனக்கு எதைத் தருகிறது தெரியுமா? தண்டனையிலிருந்தும், பாவத்தின் பிடியிலிருந்தும், அதன் பழக்கவழக்கங்களிலிருந்தும் விடுதலையைத் தருகிறது. ஒரு நாளில் அது முற்றிலுமாக பாவத்தின் பிரசன்னத்திலிருந்தே விடுதலையை அளிக்கப் போகிறது. ஆண்டவருக்கு நன்றி! உன்னை நரகத்திற்கு இழுத்துச் செல்கிறதான அந்தப் பாவத்தை நீ விடாமல் ஏன் பற்றிக் கொண்டிருக்கிறாய்?

எதையும் விட்டு விலகுவது எவ்வளவு கடினமானது என்பதை இயேசு அறிவார். வலது கண்ணும், வலது கையும் ஒருவனுக்கு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முதன்மையைப் பெற்றிருக்கிற பாவங்களைக் குறித்து அவர் பேசுகிறார். உண்மையான மனந்திரும்புதலும், அறிக்கையிடுதலும், பாவத்தைவிட்டுவிடுதலும் ஒருவனுக்கு பலவிதமான நஷ்டங்களைக் கொண்டுவரும் என்பதை அவர் அறிவார். அது, சிலருக்கு அவமானத்தையும், மனவிரோதத்தையும், பொருளாதாரத்தில் நஷ்டத்தையும், நெருங்கிய உறவினரை விட்டுவிலகுவதால் ஏற்படும் மனக்கஷ்டத்தையும் கொண்டுவரும். “நீங்கள் என்னிடத்தில் வரமாட்டீர்கள்” என்று இயேசு கிறிஸ்து அந்த யூதரைப் பார்த்து சொன்னபோது, அவர்கள் ஒருவராலொருவருக்கு வருகின்ற மரியாதையை விரும்புகிறவர்கள் என்பதை அறிந்தே அப்படிச் சொன்னார் (யோவான் 5:44). அநேகர் கேவலமாக பேசுகிற இந்தப் போதகரைப் பின்பற்றுவது தங்களுடைய பெருமைக்கு இழுக்கு என அவர்கள் நினைக்கிறார்கள். அவர்களுடைய மனப்போராட்டத்தை அவர் அறிவார். இருந்தாலும் அவர்களை இப்படிப்பட்ட தர்மசங்கடமான சூழ்நிலைக்குள் ஆழ்த்துவதை அவர் தவிர்க்கவேயில்லை.

இப்படி இருதயம் கடினப்பட்டுப்போய் இருப்பது மன்னிக்க முடியாத குற்றம் மாத்திரமல்லாமல், முட்டாள்தனமாகவும் இருப்பதை கவனிக்கிறாயா? பாவத்திற்கு ஒப்புக்கொடுத்துவிட்ட வாழ்க்கையானது எப்படியிருக்கும் என்று பார். வாலிப வயதிலே, தேவனுடைய அழைப்புக்கு எதிர்த்து நின்றவர்களின் வாழ்க்கையானது எவ்வளவு தடம்புரண்டதாக இருந்திருக்கிறதென்று கவனித்துப்பார். ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாக தேவன் உரைத்த வார்த்தைகள் அவர்களுடைய வாழ்க்கையில் நிறைவேறியிருக்கிறது: “துன்மார்க்கரோ கொந்தளிக்கும் கடலைப் போலிருக்கிறார்கள். அது அமர்ந்திருக்கக்கூடாமல், அதின் ஜலங்கள் சேற்றையும் அழுக்கையும் கரையில் ஒதுக்குகிறது. துன்மார்க்கருக்கு சமாதானம் இல்லையென்று என் தேவன் சொல்லுகிறார்” (ஏசா 57:20-21). “துரோகிகளுடைய வழியோ கரடுமுரடானது” (நீதி 13:15). தங்களுடைய பாவங்களிலேயே நிலைத்திருந்தவர்களின் மரணப்படுக்கையானது எவ்வளவு சஞ்சலம் நிறைந்தாயிருந்திருக்கிறது என்பதைக் கவனித்துப் பார். பூமியின் ராஜாக்களும், பெரியோரும், மலைகளையும் குகைகளையும் பார்த்து எங்களை மறைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் “ஆட்டுக்குட்டியானவரின் கோபாக்கினையின் மகாநாள் வந்துவிட்டதே” (வெளிப் 6:15-17) என்று கதறி நிற்கப் போகிற நியாயத்தீர்ப்பின் நாட்களை எண்ணிப் பார். நரகத்திற்குள்கூட சற்று எட்டிப் பார். மனந்திரும்பாத பாவிகள் நரக அக்கினியிலே போடப்படுகிறார்கள்: “அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்” (மத் 13:42). “அவர்களுடைய வாதையின் புகை சதாகாலங்களிலும் எழும்பும்” (வெளி 14:11).

கடைசியாக, சிலுவையை நோக்கி உன் பார்வையைத் திருப்பு. மகிமையின் தேவன், பாவமே இல்லாமல் இவ்வுலகில் வாழ்ந்த ஒரே மனிதன், சிலுவையின் மீது தமது மக்களின் பாவங்களின் காரணமாக பாவமானார். நீ விரும்புகின்ற பாவத்துக்காக இயேசு கிறிஸ்து செய்திருக்கும் தியாகத்தைக் கவனித்துப் பார். பொல்லாதவர்களின் கரங்களின் கீழாக அவர் பட்ட பாடுகளை நினைத்துப் பார். மனிதர்களின் பாவங்களுக்காக பிதாவின் கோபத்தை தாம் சந்திக்க நேர்ந்ததைக் குறித்து அவர் அடைந்த அளவிடமுடியாத வேதனையை குறித்து சிந்தித்துப் பார். ஜான் நியூட்டன் என்கிற கவிஞர் சொன்னபடி உன்னாலும் சொல்ல முடியுமா என்பதை சிந்தித்துப் பார்:

“இரத்தம் வடிகிற இரட்சகரை நான் நோக்கிப் பார்த்ததுமுதல், என் பாவங்களை நான் வெறுக்கிறேன்”

இத்தனையையும் சிந்தித்துப் பார்த்தும், நீ நேசத்தோடு வாழ்கிற உன் பாவ வாழ்க்கையை விட்டு உன்னால் விலக முடியவில்லையென்றால், நியாயத்தீர்ப்பின் நாளிலே கடவுள் உன்னைப் பார்த்து, “சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு அகன்று போங்கள்” (மத் 25:41) என்று கூறுவதில் தவறென்ன? “எப்பிராயீம் விக்கிரகங்களோடு இணைந்திருக்கிறான். அவனைப் போகவிடு” (ஓசி 4:17). உன் பாவங்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டு நரகத்தின் அக்கினியிலே அமிழ்ந்து போகாதிரு. கிறிஸ்துவின் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு அவரிடம் வா, நித்தியஜீவனை நிச்சயம் அடைவாய்.

3. இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிதிகளின் மீது நம்பிக்கையில்லாமல் இருப்பது

ஒருவேளை நீ மிகவும் பயங்கரமான பாவங்களில் சிக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கலாம். நீயாகவே உன் சொந்த முயற்சியினால் அநேக பாவங்களைத் தவிர்த்து வாழ்பவனாக இருக்கலாம். உன்னுடைய சொந்த நன்மைகளுக்காகவும், மற்றவர்களின் மரியாதையைப் பெறுவதற்காகவும் பாவம் செய்யாமல் நீ வாழ்ந்து கொண்டிருக்கலாம். இருந்தாலும் உன்னிடத்தில் பாவத்தின் கிரியை இருப்பதை நீ உணராமல் இருக்கிறாய். அது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயமல்ல என நீ நினைத்துக்கொண்டிருக்கலாம். உன் பாவத்தை அவமானகரமான பாவமாக நீ கருதாமல் இருக்கலாம். ஆனால், அது எப்படிப்பட்டது தெரியுமா? இயேசு கிறிஸ்து கொடுத்திருக்கும் வாக்குறுதிகளின் மீது நம்பிக்கையில்லாதவனாக இருப்பதே அந்தப் பெரிய பாவம்.

“என்ன இப்படிச் சொல்லுகிறீர்கள்? நம்பிக்கையில்லாமல் இருப்பது பெரிய பாவமா? நான் ஒருசில காரியங்களை நம்பவில்லை என்பதற்காக கடவுள் எப்படி என்னைக் கணக்குக் கேட்கமுடியும்?” என்று நீ ஒருவேளை கேட்கலாம். நண்பனே, நீ கிறிஸ்துவிடம் வருவதற்கு, நம்பிக்கையில்லாத உன் இருதயம் பெருந்தடையாக இருக்கிறது என்பதையும், நீ மோட்சத்திற்குள் பிரவேசிக்க முடியாமற் போவதற்கு அதுவே காரணமாக இருக்கிறது என்பதையும் ஒரு நிமிஷம் சிந்தித்துப் பார்.

இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகள் எவ்வளவு தெளிவாகவும், உறுதியாகவும், எல்லாருக்கும் உரியதாகவும் இருக்கிறது என்பதில் உனக்கு சந்தேகமுண்டா? அவர் வாக்குறுதிகளில் சிலவற்றைப் படித்துப் பார். நீயே உன்னுடைய வேதப் புத்தகத்தை எடுத்து அவற்றை வாசித்துப் பார். அவைகள் நிபந்தனைகளை விதிக்காமலும், உன்னிடம் எந்தத் தகுதியையும் எதிர்பார்க்காமலும் இருக்கிறதென்பதை கூர்ந்து கவனி.

வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் (மத்தேயு 11:28).

தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரிய சம்பன்னராயிருக்கிறார் (ரோமர் 10:12).

கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான் (ரோமர் 10:13).

என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு. அவன் ஆக்கினைத் தீர்ப்புக்கு உட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்கு உட்பட்டிருக்கிறான் (யோவான் 5:24).

என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுகிறதில்லை (யோவான் 6:37). (எப்படிப்பட்டவனாயிருந்தாலும், எந்த சூழ்நிலையிலும் அவனை நான் புறம்பே தள்ளமாட்டேன் என்கிறார்).

தேவன் தமது இரட்சிப்பின் செயலை ஒரு திருமணவிருந்துக்கு ஒப்பிட்டுப் பேசுகிறார். “எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது. கலியாணத்திற்கு வாருங்கள்” (மத் 22:4) என்று அழைக்கிறார். தேவன் எல்லாவற்றையும் தயார் செய்து முடித்து வைத்திருக்கிறார். செய்ய வேண்டியவைகளையெல்லாம் குறைகளில்லாமல் அவர் செய்து முடித்துவிட்டார். நாம் எதையுமே கொண்டுவர வேண்டியதில்லை. அவரிடம் வரவேண்டியது ஒன்றுதான் நாம் செய்ய வேண்டியது.

நிபந்தனையில்லாத மன்னிப்பை அருளி உன்னை ஏற்றுக்கொள்ளுவதாக அவர் அற்புதமான வாக்குக்கொடுக்கிறார். அதை நீ நம்ப மறுப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதா? சுவிசேஷ விருந்து தயாராகிவிட்டது. அவர் தமது ஊழியர்களை அனுப்பி விருந்தினரை அழைத்துவரச் சொல்லுகிறார்: “எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது. வாருங்கள்” (லூக் 14:17) என அழைப்பு விடுக்கிறார். ஆனால் நீயோ திருமண மண்டபத்துக்கு வெளியே தயங்கி நின்று கொண்டிருக்கிறாய். அவருடைய இரக்கமுள்ள வாக்குறுதிகளை நம்பாதவனாக இருப்பதால் அதைப் பெறாதவனாகவும், சாபத்துக்குட்பட்ட நிலையிலும் காணப்படுகிறாய். உன்னுடைய பாவத்தைக் குறித்த அறியாமை உன்னில் காணப்படாமல் இருக்கலாம். அல்லது பாவத்தைக் குறித்த கடினமனதைக் கொண்டிராதவனாகக்கூட நீ இருக்கலாம். ஆனால், தேவன் தம்முடைய குமாரனைக் குறித்துக் கூறிய சாட்சியை நம்பாதவனாயும் அதை ஏற்றுக்கொள்ள முடியாதவனாயும் இருக்கிறாயே. எந்த மனிதனுடைய பாவத்தையும் நீக்கி, அவனை மீட்பதற்குத் தமது குமாரன் போதுமானவராய் இருக்கிறார் என்று அவர் குமாரனைக் குறித்து சாட்சி கொடுத்திருக்கிறார். “இவர் என்னுடைய நேசகுமாரன். இவருக்கு செவிகொடுங்கள்” (மாற்கு 9:7) என்று வானத்திலிருந்து எல்லோரும் கேட்கும்படியாக சத்தமாக அவர் கூறியிருக்கிறார்.

பரலோகத்திலே நாம் பலவிதமான பாவிகளைக் கண்டு ஆச்சரியப்படப் போகிறோம். லூக்கா 7 ஆம் அதிகாரத்தில் நாம் காண்கிற, யாவருக்கும் தெரிந்திருந்த பாவியாகிய அந்த ஸ்திரீயைப் போன்றவர்களையும் காண்போம். அவளுடைய பாவநிலையை அவ்வூரிலிருந்த அனைவரும் நன்கு அறிந்திருந்தார்கள். தனது குற்றங்களின் நிமித்தமாக சிலுவைக்குச் சென்ற கள்ளன் போன்றோரையும் சந்திப்போம். தர்சு பட்டணத்தின் சவுலைப் போல அநேகரை கொலை செய்தவர்களும், தேவதூஷணம் சொல்லியவர்களையும் அங்கே காண்போம். தேவனுடைய ஒரே பேறான குமாரனின் கொலையில் பங்குபெற்ற சிலரைக்கூட நாம் பரலோகத்தில் பார்க்க நேரிடும் (அப் 2:23). இப்பேர்பட்ட பலதரப்பட்ட பாவிகளின் மத்தியில் ஒரு குறிப்பிட்டவிதமான பாவிகளை மாத்திரம் நாம் அங்கு சந்திக்கவே மாட்டோம். அவர்கள்தான் இயேசு கிறிஸ்துவை நம்பாதவர்களாகிய பாவிகள். இந்த உலகத்திலே, இயேசு கிறிஸ்துவோடு விசுவாசத்தினாலே இணைக்கப்படாத எவரும் பரலோகத்தில் இருக்கப்போவதில்லை.

கடவுளின் கடைசி நியாயத்தீர்ப்பைக் குறித்து வெளிப்படுத்தின சுவிசேஷம் அநேக காரியங்களை நம் முன் வைக்கிறது. அவைகளில் பல காரியங்கள் நமக்குப் புதிராகவும், மறைபொருளாகவும் இருக்கிறது. ஆனால் அவைகளில் ஒரு வசனம், பரலோகத்தின் வாசலுக்குப் புறம்பாகத் தள்ளப்பட்டவர்களின் தன்மையைத் தெளிவாக விளக்குவதாயிருக்கிறது: “பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரக ஆராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள்” (வெளி 21:8). உலகத்தில் மரியாதைக்குரியவர்களாகவும் நல்லவர்களாகவும் வாழ்ந்த அநேகர்கூட, தங்களுடைய அவிசுவாசமாகிய மிகப் பெரும் பாவத்தினால் நரக அக்கினியில் பங்கடைவார்கள். கொலை, பொய், விபசாரம் போன்ற பலவித பாவங்களில் வாழ்ந்த பாவிகளோடு சேர்ந்து இவர்களும் தங்களுக்கு நியமிக்கப்பட்டதான நித்திய அழிவை அடைவார்கள்.

அவிசுவாசத்தை நாம் சாதாரண குற்றமாகத்தான் நினைக்கிறோம். அதை “வைட்டமின் குறைபாடு” போலவும், அதன் காரணமாக நாம் ஆவிக்குரிய வாழ்வில் கொஞ்சம் தளர்ச்சி மாத்திரம்தான் அடைவோம், அதைத் தவிர அது ஒன்றும் அவ்வளவு மோசமானதல்ல என்று எண்ணிக்கொள்ளுகிறோம். ஆனால் கடவுள், அவிசுவாசத்தை அதன் உண்மையான நிலைமையில் பார்க்கிறார். பரிசுத்த ஆவியானவர் இவ்வுலகத்தில் வந்ததன் நோக்கம் பாவத்தைக் குறித்து கண்டித்து உணர்த்துவதற்கே. அதில் மிகவும் முக்கியமான பாவம் எதுவென்று இயேசு கிறிஸ்து யோவான் 16:9ல் சுட்டிக் காண்பிக்கிறார்: “அவர்கள் என்னை விசுவாசியாதபடியினாலே பாவத்தைக் குறித்தும் . . . கண்டித்து உணர்த்துவார்”.

இதுவரைக்கும் நீ அவிசுவாசியாக (ஆத்தும விடுதலைக்கு இயேசுவில் முழு நம்பிக்கையில்லாதவனாக) இருந்திருப்பாயானால், இப்போதாவது அந்தப் பாவத்திலிருந்து விலகி, விசுவாசமுடையவனாக இயேசு கிறிஸ்துவைப் பற்றிக்கொள்வாயா? இரட்சிப்பு, பாவமன்னிப்பு, இளைப்பாறுதல் ஆகியவைகளைக் குறித்து அவர் அளித்திருக்கின்ற ஏராளமான வாக்குறுதிகளை நம்புவாயா?

4. இயேசுவிடமிருந்து இன்னும் அதிகமான வெளிப்பாடுகளை எதிர்பார்த்தல்

ஒருவேளை இதுவரைக்கும் இயேசுவிடம் வருவதற்கு நீ தயங்குவதற்கான உண்மையான காரணத்தை உன்னால் அடையாளம் காணமுடியாமல் இருந்திருக்கலாம். ஒருவேளை உன்னுடைய தேவையை நீ அறிந்தவனாகவும், உன்னுடைய பாவங்களை விட்டுவிட்டு வரவும்கூட நீ தயாராக இருக்கலாம். இயேசு கிறிஸ்துவின் மீது உன் நம்பிக்கையை வைப்பதற்கு நீ சரியான வேளையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவனாகக்கூட இருக்கலாம். ஆனால், அவரை நீ விசுவாசிப்பதற்கு அவரிடம் இருந்து விசேஷமான விதத்தில் ஒரு செய்தி வரவேண்டுமென்று நீ எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறாய்.

தனிப்பட்ட வேதவாசிப்புகளின் மூலமாகவோ, குடும்பத்தில் நல்ல வளர்ப்பு முறையின் காரணமாகவோ, ஒழுங்காக சபைக்கு வந்துகொண்டிருந்ததினாலோ வேதாகமம் உனக்கு சத்தியத்தின் அவசியத்தை உணர வைத்திருக்கிறது. கடவுளால் நீ விசேஷமாகத் தெரிந்துகொள்ளப்பட்டிருந்தாலொழிய உன்னால் கிறிஸ்துவிடம் வரமுடியாது என்பதை நீ அறிந்து வைத்திருக்கிறாய். தனது தேவையை அறிந்துகொள்ளும்படியாக தேவன் தாமே ஒரு பாவியை தட்டி எழுப்ப வேண்டும், கடவுள் அவனைத் தம்மிடமாக இழுத்துக்கொள்ள வேண்டும், விசுவாசமாகிய வரத்தை தேவனே அவனுக்கு அருள வேண்டும் என்கிற சத்தியமெல்லாம் உனக்குத் தெரிந்திருக்கிறது. இதையெல்லாம் நீ எண்ணிப் பார்த்து உனக்குள்ளேயே, “நான் கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறேன் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளாமல், நானாக அவரிடமாக வருவது துணிகரமான செயலாயிருக்கும்” என்று சொல்லிக்கொள்ளுகிறாய்.

இந்த எண்ணம் உனக்குள் உறுதியாக இருப்பதால், இயேசு கிறிஸ்துவிடமிருந்து ஏதாவது கூடுதலான நிச்சயம் உனக்கு ஏற்பட்டாலொழிய உன்னால் விசுவாசத்திற்குரிய எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது எனத் தீர்மானித்துக்கொள்ளுகிறாய். ஒருவேளை நீ ஒரு விசேஷ தரிசனத்தையோ அல்லது நடு இராத்திரியில் ஒரு மெல்லிய சத்தத்தையோ எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறவனாக இல்லாமல் இருக்கலாம். இருந்தபோதும், உன் மனதைத் தொடுகின்றதான ஒரு வசனத்தையோ, அல்லது கடவுள் உன்னோடு பேசுகிற ஒரு அனுபவத்தையோ, அல்லது உன் வாழ்வில் நீ புதுப்பிக்கப்பட்டிருப்பதற்கான ஓர் அடையாளத்தையோ நீ எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறவனாக இருக்கலாம். கடவுளிடமிருந்து இத்தகைய விசேஷ செய்தியை நீ எதிர்பார்த்துக் கொண்டிருப்பதால் கிறிஸ்துவிடம் நீ வராமல் இருக்கிறாய்.

விசேஷமானதொரு வெளிப்பாட்டை எதிர்பார்த்துக் காத்துகொண்டிருப்பது கொஞ்சமும் சரியல்ல என்று ஏன் நான் சொல்லுகிறேன் தெரியுமா? அதற்கு யோவான் 5ஆம் அதிகாரம் அழகாக விடை தருகிறது. தான் மேசியா என்பதற்கு பழைய ஏற்பாட்டின் வசனங்களே போதுமான அத்தாட்சி அளிக்கின்றது என்று இயேசு, யூதர்களிடம் உறுதியாக கூறுகிறார். “வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள். அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக் குறித்து சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே” (யோவான் 5:39). மேலும் அவர் கூறுகிறார்: “நீங்கள் மோசேயை விசுவாசித்தீர்களானால் என்னையும் விசுவாசிப்பீர்கள். அவன் என்னைக் குறித்து எழுதியிருக்கிறானே” (யோவான் 5:46). வேறுவிதமாக சொல்வோமானால், “மோசே எழுதிய முதலாவது புத்தகம் தொடங்கி, கடைசி தீர்க்கதரிசி எழுதிய புத்தகம் வரைக்கும் உள்ள வார்த்தைகள் என்னைக் குறித்து என்ன சொல்லுகிறதோ, அவையே ஒருவன் என்னிடம் வருவதற்கு தேவையான சகல ஆதாரங்களையும் கொண்டிருக்கின்றன. இவற்றைத் தவிர வேறு எதுவும் தேவையென்று நீங்கள் காத்துக் கொண்டிருக்கத் தேவையில்லை. இந்த வார்த்தைகளே போதுமானதாயிருக்கிறது” என இயேசு சொல்லியிருக்கிறார்.

நரகத்தில் ஐசுவரியவானோடு நிகழ்ந்த சம்பாஷணையானது, வேதாகமத்தின் சாட்சி மாத்திரமே போதுமானதும் முடிவானதும் என்பதை நிருபிக்கின்றதாயிருக்கிறது. நரகத்தின் வேதனைகளைக் குறித்து தன் சகோதரருக்கு யாராவது எச்சரிக்க வேண்டும் என ஐசுவரியவான் வேண்டிக் கொண்டபோது, ஆபிரகாம் அதற்கு பதில் கூறுகிறார்: “அவர்களுக்கு மோசேயும், தீர்க்கதரிசிகளும் உண்டு. அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும்” (லூக் 16:29). ஐசுவரியவானுக்கு இன்னும் சிறந்த வழியொன்று தோன்றுகிறது: “அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள்” (லூக் 16:30) என்றான். ஆபிரகாம் சொல்லும் கடைசி பதிலில் நாம் இயேசு கிறிஸ்துவின் சத்தத்தைக் கேட்கிறோம்: “அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்து போனாலும் நம்பமாட்டார்கள்”.

நீ இயேசு கிறிஸ்துவிடம் வருவதற்கு முன்பாக ஏதாவதொரு விசேஷ வெளிப்பாடு உனக்குக் கிடைக்க வேண்டுமென காத்துக் கொண்டிருக்கிறாயா? உன் வேதாகமத்தில் காணப்படுகின்ற “மோசே, தீர்க்கதரிசிகளின்” செய்திகளை நீ அலட்சியப்படுத்துகிறாயா? அவரை விசுவாசிக்க எதற்காகவாவது இப்படிக் காத்துக் கொண்டிருப்பது ஏற்கமுடியாதது என்பதை நீ உணருகிறாயா? இத்தகைய மனநிலையைக் கொண்டிருப்பதால், கடவுளுக்கு முன்பாக உன்னைத் நீ தாழ்த்திக்கொள்வதாக தவறாக எண்ணாதே. அவரை விசுவாசிக்க நீ இந்த முறையில் தயங்கிக் கொண்டிருப்பது, உண்மையிலேயே, கடவுள் எந்தவிதத்தில் நடந்துகொள்ள வேண்டும் என்று நீ அவருக்கு கட்டளையிடுகின்ற உன்னுடைய அகங்காரத்தைக் காண்பிக்கிறது. நீயும் அந்த ஐசுவரியவானைப் போல, வேறு சிறந்த வழிவகைகள் இருப்பதாக கடவுளிடம் விளக்கிக் கொண்டிருக்கிறாய்: “தேவனே, இரட்சிப்பைக் குறித்து நீர் வைத்திருக்கின்ற சாதாரணமான வழிவகையைக் காட்டிலும் என்னிடம் மிகச் சிறந்த திட்டம் இருக்கின்றது. நீர் என்னை உம்மிடமாக அழைப்பதற்கு நான் சில விசேஷ வழிகளை யோசித்து வைத்திருக்கிறேன். அந்தவிதமான வெளிப்பாடுகளால் நீர் என்னை அழைப்பதற்கு நான் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று அவரிடம் யோசனை கூறிக் கொண்டிருக்கிறவனாக இருக்கிறாய். உண்மையில், கடவுளின் இரட்சிப்பின் திட்டமானது மிகவும் தெளிவாகவும் எளிமையாகவும் வேதாகமத்தின் மூலமாக உனக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. சுவிசேஷமாகிய திருமணவிருந்து தயாராகிவிட்டது. கடவுள் நித்தியஜீவனைப் பெற்றுக்கொள்ளும்படியாக உன்னை அழைக்கிறார். நீ செய்ய வேண்டியதெல்லாம் அந்த அழைப்புக்கு இணங்கி வரவேண்டியது மட்டுமே.

இயேசு கிறிஸ்து உன்னை அழைக்கிறாரா? உன்னை நீ ஒரு விசேஷ பாவியாகப் பார்க்காமல், நரகத்திற்கு மட்டுமே தகுதியான, காணாமற்போன, ஏழைப் பாவியாக உணருகிறாயா? அப்படியானால் அவரிடம் மனந்திரும்புதலோடும் விசுவாசத்தோடும் வா! “பாவிகளின் நண்பரான” இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார். தெய்வீக திட்டத்தை முற்றிலுமாக நிறைவேற்றிய அவருடைய பரிபூரணமான நீதியுள்ள வாழ்க்கையைப் பார். உனக்காக மரித்த அவருடைய மரணமானது, உன்னுடைய பாவங்களுக்கான தெய்வீக நீதிச்சட்டத்தை பரிபூரணமாக நிறைவேற்றி முடித்திருப்பதை கவனி. கடவுள் மிகவும் எளிமையாக உருவாக்கியிருப்பதை நீ கடினமாக்காமல் பார்த்துக்கொள். வா, இயேசுவிடம் இன்றே, இப்போதே வா.

கடவுள் கிருபையாக வழிகாட்டுகிறபடியால் இயேசு கிறிஸ்துவிடம் வா: “நாம் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின்மேல் விசுவாசமா யிருந்து . . . என்பதே அவருடைய கற்பனையாயிருக்கிறது” (1 யோவான் 3:23). கடவுள் கிருபையாக வாக்குறுதி அளிக்கிறபடியால் அவரிடம் வா: “தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு . . .” (யோவான் 3:16). இந்த வாக்குறுதிகளில் நம்பிக்கை வைத்து உன்னைத் தடுத்துநிறுத்துகிற காரணம் எதுவாக இருந்தாலும் அதை விலக்கித் தள்ளிவிட்டு, நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளும்படி இயேசு கிறிஸ்துவிடம் வா!

நான் இருக்கிறவண்ணமாகவே, வாதம் செய்யாமல்,
உமது இரத்தம் எனக்காக சிந்தப்பட்டதால்.
உம்மிடம் வருமாறு நீர் என்னை அழைத்ததால்
ஆட்டுக்குட்டியானவரே, வருகிறேன்!

நான் இருக்கிறவண்ணமாகவே, தாமதிக்காமல்
முற்றிலும் அழுக்கான என் ஆத்துமாவை
உமது இரத்தம் கறையின்றி கழுவப் போவதால்
ஆட்டுக்குட்டியானவரே வருகிறேன்!

நான் இருக்கிறவண்ணமாகவே, நீர் ஏற்றுக்கொள்வீர்
வரவேற்று, மன்னித்து, கறைநீக்கி, சுகமளிப்பீர்
ஏனெனில் உமது வாக்கை நான் விசுவாசிக்கிறேன்
ஆட்டுக்குட்டியானவரே, வருகிறேன்!

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s