கிறிஸ்தவனே! பாவத்தை அழி, அது உன்னை அழிக்குமுன் (பாவத்தை அழித்தல் – 3)

பவுல் கொலோசெயர் 3:5ல் ‘உங்கள் அவயவங்களை அழித்துப் போடுங்கள்’ என்று கட்டளையாக அறிவிக்கிறார். கடந்த இதழ்களில் பாவத்தை அழித்தல் பற்றிய போதனை சம்பந்தமான இறையியல் குழப்பங்களை ஆராய்ந்து வந்திருக்கிறோம். முதலாவதாக, நம்முடைய சரீரங்களில் பாவத்தை அழிப்பதற்கு சடுதியாக நிகழும் எந்தக் குறுக்கு வழி ஆத்மீக அனுபவத்தையும் வேதத்தில் கர்த்தர் காட்டவில்லை. இரண்டாவதாக, கர்த்தரின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து கடமையுணர்வோடும், பரிசுத்தமாகுதல் பற்றிய தாகத்தோடும் நம்மில் இருக்கும் பாவத்தை நாம் ஆவியின் துணையோடு அழிக்காவிட்டால் பாவத்தை அழிப்பதற்கு வேறு வழிகளில்லை. பாவத்தை அழித்தல் பற்றிய போதனையை விளங்கிக்கொள்ளுவதற்கு நான் மேலே விளக்கிய இரண்டு காரியங்களையும் நாம் கருத்தோடு சிந்திப்பது மிகவும் அவசியம். இனி நாம் கொலோ 3:5ல் பவுல் சொல்லுகின்ற காரியத்தை சிந்தித்துப் பார்ப்போம்.

‘உங்கள் அவயவங்களை அழித்துப் போடுங்கள்’ என்று பவுல் அப்போஸ்தலன் கூறியிருக்கும் வார்த்தைகள் சுருக்கமானவைகளாக இருந்தாலும் அவற்றில் பேருண்மைகள் பொதிந்து காணப்படுகின்றன. பியூரிட்டன் பெரியவரான ஜோன் ஓவன் இந்த வார்த்தைகளுக்கு 648 பக்கங்கள் மூலம் விளக்கமளித்திருக்கிறார். அதனால், வேதத்தில் சுருக்கமாகக் காணப்படும் வசனங்களை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அவற்றில் ஆழமான சத்தியங்கள் உள்ளடங்கிக் காணப்படுகின்றன. அவசரப்பட்டு வசனங்களைக் கவனித்துப் படிக்காமல் விளக்கிக்கொள்ளக் கூடிய ஆபத்து இருக்கிறது. பெரிய வசனப்பகுதிகளையும், நூல்களையும் சுருக்கமாகப் படிப்பதும் அவசியம். அதேநேரம் ஒவ்வொரு வசனங்களையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் பொதிந்து காணப்படும் சத்தியங்களைப் புரிந்துகொள்ளுவதும் மிகவும் அவசியமானது.

இந்த வசனத்தைப் பற்றிய மூன்று காரியங்களை நான் விளக்க விரும்புகிறேன்:

1. இந்த வசனங்களுக்கான இலக்கணபூர்வமான அர்த்தம்

2. இந்த வசனங்களின் மூலம் விளக்கப்படும் இறையியல் போதனை

3. சரீரத்தில் பாவத்தை அழித்தலின் அவசியத்தை உணர்த்தும் வேதபூர்வமான இறையியல் காரணங்கள்.

1. இந்த வசனங்களுக்கான இலக்கணபூர்வமான அர்த்தம்

இந்த வசனங்களிலிருந்து இரண்டு விஷயங்களை நான் குறிப்பிட வேண்டும்.

அ. ‘அழித்துப் போடுங்கள்’ என்ற பதங்கள்.

இந்த வார்த்தைகள் சரியாகவே மூல மொழியான கிரேக்கத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. ஒன்றை அழித்துவிடுவது என்பதே இதற்குப் பொருள். இதைப் பற்றி விளக்கும் ஜோன் ஓவன், ‘ஒன்றின் வலிமையையும் உயிர்நாடியையும் முற்றாக செயலிழக்கச் செய்து அது தொடர்ந்து செயற்பட முடியாமல் செய்வதே அழித்துவிடுவது என்பதற்குப் பொருள்’ என்று விளக்கியிருக்கிறார். இந்தப் பதங்களில் காணப்படும் வினைச் சொல் இலக்கணப்படி நாம் செய்ய வேண்டிய செயலை உணர்த்துகிறது. அத்தோடு, அதில் தெளிவான கட்டளைத் தொனியும் காணப்படுகிறது. இந்த வசனத்தைப் போன்ற இன்னொரு வசனத்தை ரோமர் 8:13ல் காண்கிறோம். ‘மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினால் சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.’ இங்கே ரோமர் 8:13ல் ‘அழித்தால்’ என்பதற்கு கொலோசெயர் 3ல் பயன்படுத்தியதைவிட வேறொரு கிரேக்க வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார். இருந்தாலும் இரண்டு வசனங்களும் ஒரே காரியத்தை விளக்குகின்றன. கொலோ. 3:5ல் காணப்படும் ‘அழித்துப் போடுங்கள்’ என்ற பதங்கள் நாம் எடுக்க வேண்டிய கடமைபூர்வமான நடவடிக்கையை உணர்த்தும் பதங்களாக இருக்கின்றன.

ஆ. அடுத்து கவனிக்க வேண்டிய பதங்கள் ‘பூமியில் உண்டு பண்ணுகிற உங்கள் அவயவங்களை’ என்பதாகும்.

ஆங்கில வேதத்தில் இந்தப் பதங்கள் ‘பூமியில் உள்ள உங்கள் அவயவங்கள்’ என்றிருக்கிறது. இந்தப் பதங்களை எவ்வாறு புரிந்துகொள்ளுவது? இவற்றை நாம் எழுத்துபூர்வமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஏனெனில், இவை இன்னொரு விஷயத்தைக் குறிக்கும் அடையாள மொழியாகக் காணப்படுகின்றன. நம்முடைய சரீரத்தைப் பயன்படுத்தி நாம் செய்யும் காரியங்களைக் குறிப்பதற்காக இத்தகைய மொழி நடையை பவுல் பயன்படுத்தியிருக்கிறார். இது பற்றி விளக்குகின்ற ஜோன் கல்வின், “நம்மோடு மிகவும் நெருக்கமாக இருந்து நம்மில் வெளிப்படுகிறவையாக பவுல் குறிப்பிடுகின்ற பாவச் செயல்கள் இருப்பதால் அவற்றை ‘அவயவங்கள்’ என்று குறிப்பிடுகிறார்” என்கிறார். நம்முடைய அவயவங்களைப் பயன்படுத்தி நாம் பாவச்செயல்களைச் செய்வதால் தமிழ் வேதத்தில் ‘பூமியில் உண்டுபண்ணுகிற அவயவங்கள்’ என்று மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. இது பற்றி வேத விளக்கவுரையாளரான வில்லியம் ஹென்றிக்சன் விளக்கமாக பின்வருமாறு எழுதியிருக்கிறார், ‘நம்மோடு மிகவும் நெருக்கமாக இருக்கிற, நம்முடைய சரீரத்தின் மூலம் நாம் செய்கின்ற விபச்சாரம் போன்ற செயல்களை அழித்துப் போடுங்கள்.’ இன்னொரு வேத விளக்கவுரையாளர், “நம்முடைய சரீரத்தினால் நாம் செய்கின்ற பாவச்செயல்களையே இங்கே அவயவங்கள் என்று பவுல் குறிப்பிடுகிறார் என்றும், இதையே ரோமர் 8:13ல் ‘சரீரத்தின் செயல்கள்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்” என்று விளக்கியிருக்கிறார்.

இதுவரை இந்த வசனத்தின் தெளிவான இலக்கணபூர்வமான விளக்கத்தைப் பார்த்திருக்கிறோம்.

2. இந்த வசனங்களின் மூலம் விளக்கப்படும் இறையியல் போதனை.

இந்த வசனங்கள் உண்மையில் எதைப் போதிக்கின்றன? நம்முடைய ஆக்கத்தின் தலைப்பு ‘பாவத்தை அழித்தல்’ என்பதாகும். இதுவரை நாம் பார்த்தவற்றில் இருந்து இந்த வசனத்தில் பவுல், கிறிஸ்தவர்கள் தங்களுடைய சரீரத்தின் மூலம் செய்கின்ற பாவங்களை அழிக்க வேண்டும் என்று கட்டளையாக அறிவிக்கின்றார் என்பதைத் தெரிந்துகொண்டிருக்கிறோம். அதுவே இந்த வசனம் போதிக்கும் சத்தியம். உடனேயே இது ஒரு முக்கியமான இறையியல் கேள்வியை எழுப்பிவிடுகிறது. ஏற்கனவே இந்தப் பகுதியின் 3ம் வசனத்தில் ‘நீங்கள் மரித்தீர்கள்’ என்றிருப்பதைப் பார்த்திருக்கிறோம். 2ம் அதிகாரம் 20ம் வசனத்தில்; ‘நீங்கள் கிறிஸ்துவுடனேகூட உலகத்தின் வழிபாடுகளுக்கு மரித்ததுண்டானால்’ என்றிருப்பதை வாசிக்கிறோம். இந்த வசனங்கள் கிறிஸ்தவர்கள் ஏற்கனவே பாவத்துக்கு மரித்திருக்கிறார்கள் என்பதைத் தெளிவாக விளக்குகின்றன. கொலோ. 2:11-13 வரையிலுமுள்ள வசனங்களில், ‘நீங்கள் . . மாம்சத்துக்குரிய பாவசரீரத்தைக் களைந்துவிட்டதானால்’ (11) என்றும், ‘உங்கள் பாவங்களினாலேயும் . . . மரித்தவர்களாயிருந்த உங்களை’ (13) என்றும் பவுல் கிறிஸ்தவர்கள் ஏற்கனவே தங்களுடைய பாவத்துக்கு கிறிஸ்துவில் மரித்திருப்பதை உணர்த்துவதைக் காண்கிறோம். இந்த வசனங்கள் கிறிஸ்தவர்களுடைய பழைய மனிதன் கிறிஸ்துவுக்குள் மரித்து அடக்கம் செய்யப்பட்டிருக்கிறான் என்பதைத் தெளிவாக விளக்குகின்றன. அத்தோடு கொலோ 3:9, கிறிஸ்தவர்கள் பழைய மனிதனை ஏற்கனவே கிறிஸ்துவுக்குள் களைந்து போட்டிருக்கிறார்கள் என்பதை விளக்குகின்றது.

இவை இப்படி இருக்கும்போது, ஏற்கனவே கிறிஸ்தவர்களில் பழைய மனிதன் கிறிஸ்துவுக்குள் பாவத்துக்கு மரித்து அடக்கம் செய்யப்பட்டிருந்தால் இப்போது பவுல் கொலோ 3:5ல் அவர்கள் பாவத்தை அழிக்க வேண்டும் என்று கட்டளையாக எப்படிச் சொல்ல முடியும்? என்பதுதான் அந்த இறையியல் கேள்வி. ஏற்கனவே பவுல் நாம் பாவத்துக்கு மரித்துவிட்டோம் என்று சொல்லியிருக்கிறாரே. மரித்துவிட்டோம் என்றால் முற்றாக இறந்துவிட்டோம், இனி உயிர் இல்லை என்றுதானே அர்த்தம். அப்படியானால், கிறிஸ்தவர்கள் பாவத்தை அழிக்க வேண்டும் என்று மறுபடியும் பவுல் சொல்லக் காரணம் என்ன? இந்தக் கேள்வி அவசியமானதுதான். இதற்கு பதிலளிப்பதும் அவசியந்தான். இதற்கு பதில்தான் என்ன? இந்த வசனம் ஏற்கனவே மரித்துப் போயிருக்கின்ற ஒன்றை நாம் மீண்டும் அழிக்க வேண்டும் என்று சொல்லுவது உண்மைதான், அதை மறுக்கவே முடியாது. ஆனால், நமது கண்களுக்கு மேலெழுந்தவாரியாக இந்த வசனத்தில் தென்படுவது முழுமையான உண்மையல்ல. பாவத்தைப் பற்றியும், பாவத்தைத் தொடர்ந்து அழிக்க வேண்டிய நம்முடைய கடமையைப் பற்றியுமான முழு விளக்கத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் நாம் இவை பற்றிய வேதத்தின் ஏனைய பகுதிகள் போதிக்கும் சத்தியங்களையும் ஒத்து ஆராய்ந்து பார்ப்பது அவசியமாகிறது.

இங்கே எழுப்பப்பட்டிருக்கும் கேள்விக்கான பதிலை நான் முதலில் வேதத்தில் இருந்து விளக்கிவிடுகிறேன். கேள்விக்கான பதில் இதுதான் – இந்தக் கேள்விக்கான பதில் கிறிஸ்துவின் பார்வையில் கிறிஸ்தவர்களின் நிலைக்கும், கிறிஸ்துவுக்குள் அவர்களுடைய நிலைக்கும் இடையில் உள்ள தொடர்பில் தங்கியிருக்கிறது. கிறிஸ்துவின் பார்வையில் கிறிஸ்தவர்கள் காணப்படும் நிலை, கிறிஸ்துவுக்குள் அவர்களுடைய தற்போதிருக்கும் நிலையோடு பூரணமாக சம நிலையில் காணப்படவில்லை. இதை நீங்கள் கவனமாக சிந்தித்துப் பார்த்து விளங்கிக்கொள்வது அவசியம். கிறிஸ்துவின் பார்வையில் கிறிஸ்தவர்களின் நிலையைப் பற்றி விளக்குவதானால் அவர்கள் பாவமற்ற பூரணநிலையில் நீதிமான்களாக கிறிஸ்துவின் கண்களுக்குத் தென்படுகிறார்கள். அவர்களுடைய பழைய மனிதன் முற்றாக மரித்து அடக்கம் செய்யப்பட்டுவிட்டான். கிறிஸ்து சிலுவையில் நிறைவேற்றிய பூரணமான பரிகாரப்பலி அவர்களுக்கு பூரணமான இரட்சிப்பைப் பெற்றுத் தந்திருக்கிறது. அவர்கள் பாவமில்லாதபடி பூரணமாக கிறிஸ்துவுக்குள் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறார்கள். கிறிஸ்தவர்களைப் பார்த்து கர்த்தர் சொல்லுகிறார், “என்னுடைய சந்நிதானத்தில் உங்களை நான் எந்தவித குற்றங்குறையுமில்லாத முழுமையான நீதிமான்களாகப் பார்க்கிறேன். என்னுடைய குமாரனுடைய திருஇரத்தத்தினால் நீங்கள் பூரணமாகக் கழுவப்பட்டிருக்கிறீர்கள். உங்களில் நான் எந்தவிதமான குறைபாட்டையும் பார்க்கவில்லை. கிறிஸ்து தன் திருஇரத்தத்தைக் கிரயமாக செலுத்தி உங்களைப் பெற்றுக்கொண்டிருப்பதால் நீங்கள் அழைக்கப்பட்டும், மன்னிக்கப்பட்டும், நீதிமான்களாக்கப்பட்டும், பரிசுத்தமாக்கப்பட்டும், கிறிஸ்துவுக்குள் மகிமைப்படுத்தப்பட்டும் காணப்படுகிறீர்கள்.” இந்த வகையிலேயே ஒவ்வொரு கிறிஸ்தவனும் கர்த்தரின் பார்வையில் தென்படுகிறான். இது உண்மையில்லாவிட்டால் நீதிமானாக்குதல் என்கிற சத்தியம் உண்மையில்லை என்றாகிவிடும். விசுவாசியைக் குறித்து அவன் நீதிமான் என்று கர்த்தர் அறிக்கையிடுகிறார் என்கிற சத்தியம் நாம் மேலே விளக்கிய உண்மைகளை ஆணித்தரமாக வலியுறுத்துகிறது.

நாம் இதுவரை கர்த்தரின் பார்வையில் விசுவாசி எப்படித் தென்படுகிறான் என்பதைப் பார்த்திருக்கிறோம். அது ஒரு காசின் ஒரு பக்கத்தைப் போன்ற உண்மை. அதன் மறுபக்கத்தையும் நாம் கவனிக்க வேண்டும். இதுவரை நாம் பார்த்திருப்பது சத்தியத்தின் ஒரு புறத்தை மட்டுமே. அதன் மறுபக்கம் கிறிஸ்தவனின் தற்போதைய நிலை பற்றியது. “கர்த்தரின் பார்வையில் கிறிஸ்தவனின் நிலை” (Believer’s standing before God in Christ) என்பதையும் “கிறிஸ்தனின் தற்போதைய நிலை” (Believer’s condition in Christ) என்பதையும் நான் பிரித்துப் பார்ப்பதை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? கர்த்தரின் பார்வையில் கிறிஸ்தவன் பூரணமாக நீதிமானாக்கப்பட்டும், பரிசுத்தமாக்கப்பட்டும் தென்படுகிறான் என்பது நிராகரிக்க முடியாத உண்மை. ஆனால், கிறிஸ்துவில் அவனுடைய தற்போதைய நிலையைப் பொறுத்தவரையில் அவன் அத்தகைய நிலைக்கான முழு உரிமையையும், தகுதியையும் அடைந்திருந்த போதும் அனுபவத்தில் இன்னும் பூரணத்துவத்தை அடையவில்லை.

இந்த உண்மையை இன்னொருவிதமாக புரிந்துகொள்ளப் பார்ப்போம். கடந்த இதழில் வந்த ஆக்கத்தில் கிறிஸ்தவனின் பரிசுத்தமாக்குதல் பற்றி விளக்கியிருந்தேன். அதில் கிறிஸ்தவனின் பரிசுத்தமாக்குதலைப் பொறுத்தளவில் அதில் இரண்டு பக்கங்கள் இருப்பதாக சொல்லியிருந்தேன். ஒன்று மறுபடியும் பிறக்கும்போது ஒருவன் அடைகின்ற பரிசுத்தமாக்குதலுக்கான உரிமையும் தகுதியும். இன்னொன்று படிமுறையில் வளரும் பரிசுத்தமாக்குதல். இரட்சிப்படையும்போது பெறுகின்ற பரிசுத்தமாக்குதலைப் பொறுத்தவரையில் கிறிஸ்தவன் பாவங்களில் இருந்து பூரணமாக விடுபட்டு பூரண நீதிமானாக கிறிஸ்துவின் முன்னால் காணப்படுகிறான். கர்த்தரின் முன்னால் அதுவே கிறிஸ்துவுக்குள் அவனுடைய நிலை. ஆனால், படிமுறையில் வளரும் பரிசுத்தமாக்குதலைப் பொறுத்தவரையில், பாவகரமான இந்த உலகத்தில் அவன் வாழ்வதாலும், எஞ்சிய பாவம் அவனுக்குள் தொடர்ந்து காணப்படுவதாலும் கிறிஸ்துவுக்குள் அவன் மரிக்கும்வரை பாவத்தோடு தொடர்ந்து போராடி அவற்றை சரீரத்தில் அழித்து வெற்றி கண்டு வாழ வேண்டும். இதைப் பற்றி விளக்கும் ஜோன் ஓவன், ‘பாவத்தின் குற்றச்சாட்டிலிருந்து முழு விடுதலை அடைந்திருக்கும் மெய்யான கிறிஸ்தவன் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் தன்னில் எஞ்சியிருக்கும் வல்லமையான பாவத்தை அழிப்பதைத் தன்னுடைய தலையாய கடமையாகக் கொண்டு வாழ வேண்டும்’ என்கிறார்.

கர்த்தரின் பார்வையில் கிறிஸ்தவன் காணப்படுகின்ற நிலைக்கும் (his state in Christ) அவனுடைய தற்போதைய நிலைக்கும் (his standing in Christ) இடையில் எந்தவிதமான முரண்பாடும் கிடையாது. அவனைக் குற்றப்படுத்தி கண்டனைக்குள்ளாக்கும் வலிமையான பாவத்தில் இருந்து அவனுக்கு கிறிஸ்துவில் முழு விடுதலை கிடைத்திருக்கிறது. இருந்தபோதும் அவன் போராட வேண்டிய எஞ்சிய பாவத்தில் இருந்து அவனுக்கு இன்னும் முழுவிடுதலை கிடைக்கவில்லை. நிலையான பரிசுத்தமாக்குதலும், படிமுறையாகத் தொடரும் பரிசுத்தமாக்குதலும் ஒரே சத்தியத்தின் இரு புறங்களாக எந்தவிதத்திலும் மறுக்கமுடியாதபடி வேதத்தில் விளக்கப்பட்டிருக்கின்றன.

இந்தக் காரணங்களினாலேயே பவுல் கொலோ. 3:5ல் சரீரத்தில் பாவத்தை அழிக்கும்படி கிறிஸ்தவர்களைப் பார்த்து சொல்லுகிறார். ஏற்கனவே கிறிஸ்துவுக்குள் எழுப்பப்பட்டு மறுபிறப்பாகிய அனுபவத்தைப் பெற்றுக்கொண்டுள்ள கொலோசெயக் கிறிஸ்தவர்களுக்கே பவுல் இந்தக் கட்டளையைக் கொடுக்கிறார். அவர்கள் ஏற்கனவே கிறிஸ்துவுக்குள் மரித்து பாவத்துக்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தக் கிறிஸ்தவர்களே இப்போது தற்போதைய நிலையில் இந¢த உலகத்தில் பாவத்தோடு போராடி சரீரத்தில் அதை அழிக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். இதுவரை நான் விளக்கியிருக்கும் உண்மைகள் இனி நான் விளக்கப்போகின்ற சத்தியங்களின் மூலம் உங்களுக்கு மேலும் தெளிவாகப் புலப்படும்.

3. சரீரத்தில் பாவத்தை அழித்தலின் அவசியத்தை உணர்த்தும் வேதபூர்வமான இறையியல் காரணங்கள்.

பியூரிட்டன் பெரியவரான ஜோன் ஓவன் இது பற்றி அருமையாக எழுதியிருக்கிறார். அறுநூறு பக்கங்களுக்கு மேல் எழுதி இதை அவர் விளக்கியிருப்பதன் காரணம் இது அத்தனை அவசியமான போதனை என்பதால்தான். இது ஆங்கிலத்தில் சுருக்கமாக ‘சோதனையும் பாவமும்’ என்ற தலைப்பில் நூலாக இருக்கிறது. ஜோன் ஓவன் தன் நூலில் விளக்கியிருக்கும் அத்தனை உண்மைகளையும் சுருக்கமாக தொகுத்து இந்த ஆக்கத்தில் தருவது என்னால் முடியாத காரியம். தென் வேல்ஸில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் பாவத்தைப் பற்றி விளக்குகின்ற ஜோன் ஓவனின் 6வது வால்யூம் எனக்குக் கிடைத்தது. இன்றைக்கு மேலைத்தேய நாடுகளில்கூட பாவத்தை அழித்தலைப் பற்றிய ஜோன் ஓவனுடைய போதனைகளை எல்லோரும் விளங்கிக் கொண்டிருக்கவில்லை. இதுபற்றி பிரசங்க மேடைகளில் தெளிவான போதனையில்லாததே அதற்குக் காரணம். இந்தப் போதனைகள் தமிழுலகை இன்னும் பெரிதும் எட்டாமலிருப்பது நம் குறையாக இருக்கிறது.

பாவத்தை நாம் ஏன் சரீரத்தில் அழிக்க வேண்டும்?

நாம் உயிரோடிருக்கும் காலம்வரை எஞ்சியிருக்கும் பாவம் நம்மில் தொடர்ந்து இருக்கும் என்பதால்.

பாவத்தை நம் சரீரத்தில் நாம் ஏன் அழிக்க வேண்டியதாக இருக்கிறது என்பதற்கு இதுவே முதலாவது இறையியல்பூர்வமான நடைமுறைக் காரணமாக இருக்கின்றது. இதைக் கேட்ட உடனேயே யாராவது ஒரு கேள்வி எழுப்பக்கூடும். ‘இப்போது நான் கிறிஸ்தவனாக இருக்கிறேன். பாவத்திற்கு முற்றாக கிறிஸ்துவுக்குள் மரித்து உயிர்த்தெழுந்திருக்கிறேன். பழைய மனிதனோ அழிந்து விட்டான். அப்படியிருக்க பாவம் தொடர்ந்து என்னில் இருக்கிறது என்று நீங்கள் எப்படி சொல்ல முடியும்?’ இந்தக் கேள்வியை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இத்தகைய கேள்வி எழுந்ததால்தான் திருச்சபை வரலாற்றில் Higher Life, Victorious Life or Deeper Life, Sinless Perfection போன்ற போதனைகள் உருவாக நேர்ந்தது. இந்தப் போதனைகள் எல்லாமே இந்த விஷயத்தில் வேத போதனைகளை நியாயப்படுத்தவில்லை. வேத போதனைகளின் அடிப்படையில் அமையவில்லை. அப்படியானால் இந்தக் கேள்விக்கு பதிலென்ன?

இதற்கு பதிலளிக்க வேண்டுமானால் நமக்குள் இருக்கும் பாவத்தை விளக்கப் பயன்படுத்தப்படுகிற இரண்டு வார்த்தைகளை முதலில் ஆராய வேண்டும். அவை எஞ்சியிருக்கும் பாவம் (Remaining sin) அல்லது நமக்குள்ளிருக்கும் பாவம் (Indwelling sin) என்பதாகும். இந்த இரண்டு பதங்களுமே நமக்குள் பாவம் இருக்கிறது என்பதை உணர்த்துகின்றன. அதுவே இந்தப் பதங்கள் தரும் தெளிவான அர்த்தம். இந்தப் பதங்கள் பாவத்தைப் பற்றிய இறையியல் மற்றும் நடைமுறை உண்மையை வெளிப்படுத்துகின்றன. இந்தப் பதங்களில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், அவற்றை நாம் விளங்கிக்கொள்ளுவது அவசியம்.

கிறிஸ்தவர்களுக்குள் பாவம் இருக்கிறது என்பது உண்மையா? இந்தக் கேள்விக்கு பதிலளிக்கு முன் ஒரு மனிதன் கிறிஸ்துவை விசுவாசிக்கின்ற போது அவனுக்கு நடப்பதென்ன என்பதை சிந்தித்துப் பார்ப்பது அவசியம். சில வேத வசனங்களை முதலில் தந்துவிட்டு அவற்றை நான் பின்பு விளக்க விரும்புகிறேன்.

நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ் செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும் பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடே கூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம். (ரோமர் 6:6).

இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புது சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின. (2 கொரி. 5:17).

ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்து போட்டு . . .

புதிய மனுஷனைத் தரித்துக் கொண்டிருக்கிறீர்களே. (கொலோ. 3:9-10).

இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன் செய்த பாவங்களறத் தான் சுத்திகரிக்கப்பட்டதை மறந்து கண்சொருகிப்போன குருடனாயிருக்கிறான். (2 பேதுரு 3:9).

இந்த வசனங்கள் நமக்கு எதை விளக்குகின்றன? கிறிஸ்தவன் தன்னுடைய பாவங்களுக்கு மரித்து இப்போது புதிய இருதயத்தைப் பெற்றுக்கொண்டிருக்கிறான். பழைய மனிதன் சிலுவையில் அறையப்பட்டு பழையவை களைந்து எறியப்பட்டிருக்கின்றன. அவன் இப்போது பாவத்தின் ஆளுகைக்கு அடிமைப்பட்டவனல்ல. அவன் பாவத்திற்கு மரித்திருப்பதால் இப்போது பாவத்தோடு போராடி அவை வெற்றிகொள்ளக்கூடியவனாக இருக்கிறான். அதுவே கிறிஸ்துவுக்குள் அவனுடைய இப்போதைய நிலை. இதுவே இப்போது அவனுக்கு கிறிஸ்துவோடும் பாவத்தோடும் இருக்கும் உறவுமுறை. இந்தப் புதிய உறவுமுறையில் பாவம் அவனை ஆள வழியில்லை. அதைத்தான் இந்த வேதப்பகுதிகள் தெளிவாக விளக்குகின்றன.

இதுவரை நாம் பார்த்தது ஒரு புறம் மட்டுமே. இன்னொரு உண்மையையும் நாம் கவனிக்க வேண்டும். கிறிஸ்தவன் பாவத்திற்கு மரித்திருந்தபோதும் பாவம் அவனில் மரித்துவிடவில்லை. இது என்ன வார்த்தை ஜாலமாக இருக்கிறதே என்று நினைக்காதீர்கள். கிறிஸ்தவனுக்கு பாவத்தோடு இருக்கிற உறவைத்தான் நான் மேலே விளக்கியிருக்கிறேன். இனிப் பாவத்தைப் பற்றி ஆராய்ந்து பார்க்கிறபோது, கிறிஸ்தவனைப் பாவம் முன்பிருந்ததுபோல் ஆண்டு வழிநடத்த முடியாதபோதும் அது அவனில் இருக்கிறது என்பதை வேதம் தெளிவாக விளக்குகிறது. பாவம் அவனைச் சுற்றி இருக்கிறது. மறுபிறப்பின் மூலம் அவன் புதிய இருதயத்தையும், தன்மையையும் அடைந்திருந்தபோதும் அவனால் தொடர்ந்து பாவத்தை செய்துவிடமுடியும். அவனில் இப்போது இருப்பது புதிய இருதயம், அந்தப் புதிய இருதயம் பத்துக்கட்டளைகளை நேசிக்கின்ற இருதயம், அது இயேசுவில் அன்பு காட்டுகின்ற இருதயம். இருந்தபோதும் அந்த இருதயம் சோதனையில் விழுந்து பாவத்தைச் செய்துவிடக்கூடிய நிலையிலேயே இருக்கிறது. அதைத்தான் யாக்கோபு தன் நிருபத்தில் சுட்டிக் காட்டுகிறார். ‘அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும். என் பிரியமான சகோதரரே, மோசம் போகாதிருங்கள்.’ (யாக்கோபு 1:14-16).

யாக்கோபு சொல்லுவதைக் கவனித்தீர்களா? யாக்கோபு கிறிஸ்தவன் பாவத்தில் வீழ்கிறபோது அவனையே குறை காண்கிறார். அவனுடைய இருதயத்தை அவர் குறைகாணவில்லை. கிறிஸ்தவன் சோதனைக்கு இடம் கொடுத்து பாவத்தை செய்யத் துணிகிறபோதே அவன் புதிய இருதயத்தோடு அந்தப் பாவத்தை செய்து விடுகிறான். தன்னுடைய இருதயம் பாவத்தை செய்துவிடாதபடி காத்துக்கொள்ளுகிற வல்லமை கிறிஸ்தவனுக்கு இருக்கிறது. பரிசுத்த ஆவியின் மூலம் அவன் பாவத்துக்கு விலகி வாழத் தேவையான அனைத்து வல்லமையையும், வசதிகளையும் கொண்டிருக்கிறான். அவன் அனுமதித்தாலொழிய பாவம் அவனுக்கு தொல்லை கொடுக்க முடியாது. நான் சொல்லுவது உங்களுக்குப் புரிகிறதா?

கிறிஸ்தவனில் பாவம் எஞ்சியிருக்கிறது என்ற போதனை அவன் பாவத்துக்கு மரித்திருக்கிறான் என்ற போதனையைப் போலவே தெளிவான மறுக்கமுடியாத வேத போதனையாக இருக்கிறது. இதுபற்றி 1689 விசுவாச அறிக்கை பின்வருமாறு விளக்குகிறது, ‘இவ்வுலக வாழ்க்கையில் பாவத்தினால் கறைபடிந்த மனித இயல்பு (கிறிஸ்துவுக்குள்) மறுபடியும் பிறந்தவர்களில் நிலைத்திருக்கின்றது. (மனிதனின்) இக்கறை படிந்த இயல்பு (கிறிஸ்துவுக்குள்) மன்னிக்கப்பட்டும், பெலனற்ற நிலைக்கு கொண்டுவரப்பட்டும் இருந்தபோதும், அதனுடைய அனைத்து இயங்கும் ஆற்றல்களும் மெய்யாகவும், முழுமையாகவும் பாவத்தன்மையுடையவை.’ (அதிகாரம் 6:5).

விசுவாச அறிக்கை மேலும் கூறுவதைக் கவனியுங்கள், ‘கடவுள் பாவிக்கு . . . பாவத்திலிருந்து . . . விடுதலை தந்து . . . ஆவிக்குரிய நன்மைகளைச் செய்யும்படிச் செய்கிறார். ஆனால், அவனுள் தொடர்ந்திருக்கும் பாவசுபாவத்தினால் நன்மைகளை மட்டுமன்றி அவன் கேடானவைகளையும் செய்யச் சித்தங்கொள்ளுகிறான்.’ (அதிகாரம் 9:4).

இன்னொரு அதிகாரத்தில் 1689 விசுவாச அறிக்கை பின்வருமாறு விளக்குகிறது, ‘ஆவிக்கும் மாம்சத்திற்கும் இடையிலான போராட்டத்தில் பாவத்தின் மாசுள்ள எஞ்சிய பகுதிகள் சில சந்தர்ப்பங்களில் மேலோங்கப் பார்த்தாலும் . . . மனிதன் ஒரு புதுப்பிறவியாக வெற்றி அடைய முடிகிறது.’ (அதிகாரம் 13:3).

இதுவரை நாம் பார்த்திருக்கும் பாவத்தைப் பற்றிய இந்த உண்மையை விளக்குவதற்கு 1689 விசுவாச அறிக்கை அடிக்கடி ஒரு வசனப்பகுதியை நமக்கு சுட்டிக்காட்டுகிறது. அது ரோமர் 7ம் அதிகாரமே. கிறிஸ்தவனில் இருக்கும் பாவத்தைப் பற்றிய அருமையான போதனையளிக்கும் ஒரு வேதப்பகுதி இது. இதில் 7:14-25 வரையுள்ள வசனங்கள் முக்கியமானவை. இந்தப் பகுதி கிறிஸ்தவனின் கிறிஸ்தவ வாழ்க்கையில் ஏற்படும் அனுபவம் என்பதை ஒரு சிலரால் அடையாளம் காண முடியவில்லை. இருந்தாலும் இந்தப் பகுதி கிறிஸ்தவனின் அனுபவத்தைத்தான் விளக்குகிறதென்பதை மறுக்க முடியாது. அந்த வகையில்தான் வேதவிளக்கவுரையாளர்களான ஜோன் மரே, ஹெல்டேன், பின்க் ஆகியோர் விளக்கம் தந்திருக்கிறார்கள்.

ரோமர் 7:14-25 வசனங்கள் கிறிஸ்தவ அனுபவத்தை விளக்குகிறது. எல்லாக் கிறிஸ்தவர்களும், அனுபவசாலிகளாயிருந்தாலும், புதுக் கிறிஸ்தவர்களாக இருந்தாலும், சாகும்வரை இந்த அனுபவத்தை வாழ்க்கையில் சந்திப்பார்கள். சில சமயங்களில் இந்தப் பகுதி விளக்கும் போராட்டம் நம்மில் நெருக்கமானதாகவும் வேறு சமயங்களில் குறைவாகவும் காணப்படும். ஆனால், மெய்க் கிறிஸ்தவர்கள் இதை வாழ்க்கையில் சந்திக்காமல் இருக்க முடியாது. இந்தப் பகுதியில் பவுல் கிறிஸ்தவனுக்கு கர்த்தரின் நியாயப்பிரமாணத்தோடு இருக்கும் தொடர்பை விளக்குகிறார். 13-25 வரையுள்ள பகுதி கிறிஸ்தவனில் இருக்கும் பாவத்தைப் பற்றியும் அதோடு அவனுக்கேற்படும் போராட்டத்தைப் பற்றியும் விளக்குகிறது. 17ம், 20ம் வசனங்களில் பவுல், ‘பாவம் எனக்குள் வாசமாக இருக்கிறது’ என்கிறார். 21ம் வசனத்தில், ‘என்னில் தீமையுண்டு’ என்கிறார். 23ம் வசனத்தில், ‘என் அவயவத்தில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணம்’ என்று சுட்டிக்காட்டுகிறார். இந்தப் பகுதியில் எட்டு வசனங்களில் நான்கு தடவைகள் கிறிஸ்தவனாகிய தன்னில் பாவமாகிய பிரமாணம் தொடர்ந்திருப்பதை சுட்டிக் காட்டுகிறார்.

இந்தப் பகுதியில் பவுல் தன்னில் பாவத்திற்கும் புதிய மனிதனுக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தை விளக்குகிறார். கவனியுங்கள், நான் பவுலில் பழைய மனிதன், புதிய மனிதன் என்று இரண்டு பேர் இருப்பதாகக் கூறவில்லை. புதிய மனிதனுக்கும் பாவத்துக்கும் இடையிலான போராட்டம் என்றுதான் குறிப்பிட்டேன். மறுபிறப்படைந்த மனிதனில் ஒரே தன்மை (one nature) மட்டுமே காணப்படுகிறது. அந்தப் புதிய மனிதனே எஞ்சியிருக்கும் பாவத்தோடு போராடுகிறான். பத்துக் கட்டளைகளே கிறிஸ்தவனுக்கு எது பாவம், எது பாவமில்லை என்பதைத் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது. அவனுள் இருக்கும் எஞ்சிய பாவம் சில வேளைகளில் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவனுக்கு தொல்லை கொடுக்கிறது. ரோமர் 7ல் நாம் பார்க்கின்ற கிறிஸ்தவன் தன் உள்ளார்ந்த மனிதனில் கர்த்தரின் நியாயப்பிரமாணத்தில் நேசம் வைத்திருக்கிறான். அதேவேளை தனக்குள் பாவம் எஞ்சியிருக்கிறதென்பதையும், பத்துக்கட்டளைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்க தான் பாவத்தோடு போராடி வெற்றிகாண வேண்டுமென்பதையும் அவன் உணர்ந்தவனாயிருக்கிறான். புதிய மனிதனுக்கும் எஞ்சியிருக்கும் பாவத்திற்கும் இடையில் நடக்கும் போராட்ட வேளையில் சில சமயங்களில் பவுல் ‘நிர்பந்தமான மனிதன்’ நான் என்று சொல்லி தன்னுடைய முழு விடுதலைக்காக ஏங்குவதையும் காண்கிறோம். அத்தகைய விடுதலை பரலோகத்தில் மட்டுமே கிடைக்கும் என்பதும் பவுலுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அத்தகைய விடுதலை கிடைக்கும் வரையும் இந்த உலகத்தில் தன்னில் எஞ்சியிருக்கும் பாவத்தோடு தொடர்ந்து போராடி வெற்றி கண்டு கர்த்தருக்கு பணி செய்ய வேண்டும் என்பதைப் பவுல் நன்றாகவே உணர்ந்தவராயிருந்தார்.

நமக்குள் எஞ்சியிருக்கும் பாவம் இருக்கிறதென்பதை ரோமர் 7 மட்டும் விளக்கவில்லை. அத்தகைய வேறு பகுதிகளும் வேதத்தில் காணப்படுகின்றன.

ஒரு பாவமும் செய்யாமல் நன்மையே செய்யத்தக்க நீதிமான் உலகத்திலில்லை (பிரசங்கி 7:20).

மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள் (ரோமர் 8:13).

மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோத மாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்ய வேண்டுமென்றிருக் கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது (கலா. 5:17).

நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம¢, சத்தியம் நமக்குள் இராதே (1 யோவான் 1:8).

ஆகையால் நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக. நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள். நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது (ரோமர் 6:12-14).

இதுவரை கிறிஸ்தவனில் எஞ்சியிருக்கும் பாவம் தொடர்ந்திருப்பதால் அவன் பாவத்தோடு போராடி அதை அழித்து வெற்றிகொள்ள வேண்டுமென்பதைத் தெளிவாக விளக்கியிருக்கிறேன். பியூரிட்டன் பெரியவர்களில் ஒருவரான ஜோன் ஓவனுடைய மொழியில் சொல்வதானால் கிறிஸ்தவர்களாகிய நாம் பாவத்தை அன்றாடம் கொல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம். அதை நாம் நம்முடைய உள்ளார்ந்த புதிய மனிதன் மூலமாக செய்கிறோம். பாவத்தை நம்மில் அழிப்பதே நம்மைக் கட்டுப்படுத்துகிற நம்முடைய கடமையாக இருக்கிறது. இதிலிருந்து எந்தக் கிறிஸ்தவனும் இந்த உலக வாழ்க்கையில் தப்ப முடியாது. நீங்கள் மெய்யான கிறிஸ்தவராக இருந்தால் இந்தப் போராட்டத்தில் கிறிஸ்துவுக்குள் ஆனந்தத்தோடு ஈடுபடுவீர்கள். சில வேளைகளில் இரத்தம் சிந்திப் போராட நேரிட்டாலும் அதில் மகிழ்ச்சியோடே ஈடுபடுவீர்கள். பரலோகத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கும் கிறிஸ்தவன் இந்தப் போராட்டதில் கிறிஸ்து மூலமாக ஒவ்வொரு முறையும் நிச்சயம் வெற்றி அடைவான்.

கிறிஸ்தவன் தன்னுடைய பாவங்களுக்கு மரித்து இப்போது புதிய இருதயத்தைப் பெற்றுக்கொண்டிருக்கிறான். பழைய மனிதன் சிலுவையில் அறையப்பட்டு பழையவை களைந்து எறியப்பட்டிருக்கின்றன. அவன் இப்போது பாவத்தின் ஆளுகைக்கு அடிமைப்பட்டவனல்ல. அவன் பாவத்திற்கு மரித்திருப்பதால் இப்போது பாவத்தோடு போராடி அவற்றை வெற்றிகொள்ளக்கூடியவனாக இருக்கிறான். அதுவே கிறிஸ்துவுக்குள் அவனுடைய இப்போதைய நிலை. இதுவே அவனுக்கு கிறிஸ்துவோடும் பாவத்தோடும் இப்போது இருக்கும் உறவுமுறை. இந்தப் புதிய உறவுமுறையில் பாவம் அவனை ஆள வழியில்லை. – ஆசிரியர் –

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s