திருச்சபையில் பொது ஆராதனை ஜே. சி. ரைலின் ஆக்கத்தின் நடைமுறைப் பலன்கள்

பொது ஆராதனை பற்றிய ஜே. சி. ரைலின் ஆக்கம் இந்த இதழில் நிறைவுபெற்றிருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் கர்த்தரின் பணியில் ஈடுபட்டிருந்த ரைல் தன் காலத்தில் தான் ஊழியப்பணி செய்து வந்த இங்கிலாந்து திருச்சபை அமைப்பின் குறைபாடுகளை சுட்டிக்காட்டி பொது ஆராதனையில் இருக்க வேண்டிய அம்சங்களை அருமையாக விளக்கிக் காட்டியிருக்கிறார். ரைலின் விளக்கங்கள் அவருடைய சொந்தக் கருத்துக்களல்ல. வேதத்தின் அதிகாரத்தை உணர்ந்திருந்த ரைல் வேதம் ஆராதனை பற்றி தெளிவாக விளக்கும் சத்தியங்களையே விளக்கியிருக்கிறார். அவருடைய காலப்பகுதியில் இன்றைக்கு நாம் சபை வாழ்க்கையில் எதிர்நோக்குகின்ற பல பிரச்சனைகள் அதே ரூபத்தில் இருக்கவில்லை.

ஆராதனையில் ஆடம்பரம் இருக்கக் கூடாது என்று வலியுறுத்துகிற ரைல் அதற்கு உதாரணம் காட்டும்போது ரோமன் கத்தோலிக்க மதப் போதனையின் அடிப்படையில் திருவிருந்து சுவிசேஷ சபைகளில் இருக்கக் கூடாது என்று தெளிவாக சுட்டிக்காட்டியிருக்கிறார். அத்தகைய தவறுகள் அன்றைக்கு இங்கிலாந்து சபையில் இருந்து வந்திருந்ததால்தான் ரைல் அப்படி எழுத நேர்ந்தது. இன்றைக்கும் அந்தத் தவறுகள் இல்லாமலில்லை. மறுபடியும் கத்தொலிக்க மதத்தின் ஆபத்தான வழிகளில் திருச்சபை போய்விடக்கூடாது என்ற ஆதங்கத்தால்தான் ரைல் அந்த ஆபத்தை சுட்டிக்காட்டியிருக்கிறார். இன்றைய காலப்பகுதியில் மேலும் உதாரணங்களை சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. முக்கியமாக பொது ஆராதனையில் இசைக்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்து, ஆடம்பரமான இசைக்கருவிகளை அநேகர் பயன்படுத்தி வருகின்றனர். கர்த்தரைப் புகழ்ந்து பாட வேண்டிய சபையாரின் குரலைக் கேட்க முடியாதபடி இசைக் கருவிகளின் சத்தம் சபைகளில் காதைக் கிழித்து ஆராதனையை அசிங்கப்படுத்தி வருகின்றது. இசைக் கருவி வாசிப்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அவர்கள் முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள். ஆராதனையில் பாடல்கள் மற்றும் சங்கீதப்பாடல்களின் இடம் எது என்றே திருச்சபை இன்று கேட்டுப்பார்ப்பதில்லை. இதைப்பற்றி கர்த்தர் வேதத்தில் என்ன சொல்லியிருக்கிறார் என்று அறிந்துகொள்ளுகிற தாழ்மையையும், மனப்பக்குவத்தையும் பார்க்க முடியாமலிருக்கிறது.

இன்றைக்கு பொது ஆராதனையில் தனிப்பாடல்கள் பாடுகிறவர்கள் அதிகரித்திருக்கிறார்கள். தனிப்பட்டவர்களின் பாடல் எழுதுகின்ற திறமையைப் பலரும் அறிந்துகொள்ளுவதற்காகவா பொது ஆராதனை நடத்தப்படுகின்றது என்று கேட்கும் மனப்பக்குவம் நம்மவர்களிடம் இல்லை. நல்ல குரல் வளம் உள்ள மூன்று நான்கு பேர் ஆராதனையின்போது சபை முன்னால் நின்று மைக்கைக் கையில் பிடித்துக்கொண்டு பாடுவதால் சபையார் பாடல்களைப் பாடுகிற சத்தம் கேட்பதற்கே வழியில்லாமல் இருக்கிறது. இப்போது நான்கு, ஐந்து வாலிபப் பெண்கள் ஆராதனையின்போது மேடையில் ஏறி ஆடிப்பாடுவது தமிழினத்து திருச்சபைகளிலும், சுவிசேஷக் கூட்டங்களிலும் அதிகமாகத் தலைதூக்க ஆரம்பித்துவிட்டன. கிறிஸ்தவ டி.வி. செனல்களில் இதை அன்றாடம் பார்க்கலாம். இயேசு பேரைச் சொல்லித்தானே பாடுகிறோம், ஆடுகிறோம் என்ற பெயரில் இதைச் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். இயேசு பெயரைச் சொல்லி ஆராதனையின்போது எதுவும் செய்யலாம் என்ற போக்கில் மனித மனம் போய்க்கொண்டிருக்கிறது. இந்தளவுக்கு ரைலின் காலத்தில் ஆராதனை மோசமாக இருக்கவில்லை. ஆனால், இத்தகைய தனிமனித இச்சைகளை முதன்மைப்படுத்துகின்ற, பொது ஆராதனையில் இருக்கக்கூடாத உலக இச்சையைச் சார்ந்த ஆடம்பரங்கள் ஆராதனையில் இருக்கக்கூடாது என்று ரைல் சுட்டிக் காட்டுகிறார். அன்னிய அக்கினியை என் முன் கொண்டுவராதே என்று கர்த்தர் சொல்லியிருப்பது எத்தனை பேர் காதில் விழுகின்றது.

போதகர்கள் பழைய ஏற்பாட்டு ஆலயத்து ஆசாரியர்களைப் போலப் பகட்டான உடை உடுப்பதையும், பலிகொடுப்பது போல் திருவிருந்து நடத்துவதையும் ரைல் கண்டிக்கிறார். இது ரோமன் கத்தோலிக்க மதத்தில் நாம் பார்க்கின்ற நடைமுறை. இது ரைலின் காலத்தில் இங்கிலாந்து திருச்சபைக்குள் நுழைந்து பெருகுகின்ற ஆபத்து இருந்ததை ரைல் உணர்ந்ததால்தான் அதைக் கண்டித்து எழுத வேண்டியிருந்தது. இந்த ஆபத்து இன்றைக்கு வேறுவிதத்தில் இருக்கிறது. நம்மினத்தில் கொலுத்தும் வெய்யிலில் கோட்டு சூட்டோடு பிரசங்க மேடையில் லெப் டாப்பை வைத்துக்கொண்டு பிரசங்கம் செய்யும் பிரசங்கிகள் அதிகரித்து வருகிறார்கள். மேலைத்தேய நாடுகளில் இதற்கு எதிர்மாறான வழியில் போய் குடுமியோடும், கிழிந்த ஜீன்ஸோடும், டிரவுசருக்கு வெளியில் தொங்கும் சேர்ட்டோடும் பிரசங்கிக்கிறவர்கள் இன்று அநேகம். கலாச்சாரத்தை உதாரணம் காட்டி இவர்கள் செய்து வருகிற அலங்கோலச் செயல்களுக்கு எல்லையில்லை. பொது ஆராதனையின்போது அதை நடத்தும் போதகர்களும், ஊழியக்காரர்களும் தேவபயத்தோடு கர்த்தரின் பிரசன்னம் இருக்கும் திருச்சபையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று ரைல் அன்று சொன்னது இன்றைக்கு நன்றாகப் பொருந்துகிறது.

பொது ஆராதனையில் என்னென்ன அம்சங்கள் இருக்க வேண்டும் என்று ரைல் விளக்கியிருக்கிறார். ஓய்வு நாள், போதக ஊழியம், பிரசங்கம், வேத வாசிப்பு, ஜெபம், பாடல்களின் மூலம் துதித்தல், இரண்டு திருநியமங்கள் ஆகியவற்றிற்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்கிறார் ரைல். இதையெல்லாம் கர்த்தர் ஆராதனையின் இன்றியமையாத அம்சங்களாக ஏற்படுத்தியிருப்பதால்தான் ரைல் அவற்றை சுட்டிக்காட்டியிருக்கிறார். ரைல் தன் ஆக்கத்தில் வெளிப்படையாக பயன்படுத்தியிராத வார்த்தைகள் ‘வரையறுக்கப்பட்ட ஆராதனைத் தத்துவங்கள்’ என்பது. இதை ஆங்கிலத்தில் Regulative Principles of Worship என்று அழைப்பார்கள். வேதம் ஆராதனையைப் பற்றிப் போதிக்கின்ற போதனைகளுக்குத்தான் இந்தப் பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதைத்தான் ரைல் தன்னுடைய ஆக்கத்தில் அந்தப் பெயரைப் பயன்படுத்தாமலேயே விளக்கியிருக்கிறார். ஆராதனையை கர்த்தரே ஏற்படுத்தியிருப்பதால், அவருடைய ஆராதனையை வேதத்தில் தெளிவாக அவரே விளக்கியிருக்கிற முறைகளின்படி, அவற்றில் இருந்து எதையும் குறைக்காமலும், அவற்றோடு எதையும் சேர்க்காமலும் அவர் ஏற்றுக்கொள்ளுகிற விதத்தில் நடத்த வேண்டும் என்பதே இந்த ஆராதனைத் தத்துவம். நம்மினத்தில் இந்தப் பொது ஆராதனை சம்பந்தமான போதனைகள் திருச்சபைகளில் கொடுக்கப்படாததால்தான் வேதத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, இனத்தையும், கலாச்சாரத்தையும் சார்ந்த வழிகளில் தனி மனித இச்சைகளின் வழிப்படி இன்று பொது ஆராதனை நடத்தப்பட்டு வருகின்றது. வேதம் போதிக்கும் ஆராதனைத் தத்துவங்கள் மேல் நாட்டு கிறிஸ்தவத்தோடு சம்பந்தப்பட்டதல்ல. அப்படி நினைப்பது நம்முடைய அறியாமையைத் தான் காட்டுகிறது. அவை கர்த்தரால் வேதத்தில் தெளிவாக பழைய, புதிய ஏற்பாடுகளில் விளக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைத்தான் நம் முன்னோர்களான சீர்திருத்த கிறிஸ்தவர்களும், பியூரிட்டன் பெரியவர்களும் அதற்குப்பின் ஸ்பர்ஜன், ரைல் போன்றவர்களும் போதித்து பின்பற்றி வந்திருக்கிறார்கள். இந்த ஆராதனைத் தத்துவங்களை 1689 விசுவாச அறிக்கை ‘ஆராதனையும் ஆண்டவரின் நாளும்’ என்ற தலைப்பில் 22ம் அதிகாரத்தில் விளக்குகிறது. விசுவாச அறிக்கையை எழுதியவர்கள் இந்தப் போதனை வேதத்தில் தெளிவாகக் கொடுக்கப்பட்டிருப்பதால்தான் அதைக் கவனமாக விளக்கியிருக்கிறார்கள்.

பொது ஆராதனை பற்றிய ஜே. சி. ரைலின் ஆக்கம் அருமையானது. நம்மை சிந்திக்க வைக்க இன்றைய காலப்பகுதியில் மிகவும் அவசியமானது. இன்றைக்கு திருச்சபையில் நாம் எத்தனையோ போராட்டங்களைச் சந்தித்து வந்தாலும் ஆராதனை பற்றிய போராட்டமே விஸ்வரூபம் எடுத்து திருச்சபையை நாசப்படுத்திக் கொண்டிருப்பதை நான் கண்கூடாகக் காண்கிறேன். ஜே. சி. ரைலின் அறிவுரைகளை நாம் ஜெபத்தோடும், தாழ்மையோடும், திறந்த வேதப்புத்தகத்தோடு சிந்தித்து ஆராய்ந்து பார்த்தால் கர்த்தரின் கோபத்துக்கு ஆளாகின்ற பேராபத்தை தவிர்த்துக்கொள்ளுவதோடு, அவரால் ஏற்றுக்கொள்ளக்கூடிய அவருக்குகந¢த ஆராதனையை நாம் கொடுக்க முடியும்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s