பொது ஆராதனை – ஜே. சி. ரைல் –

ஜே. சி. ரைல் ஆங்கிலேய திருச்சபையின் (Church of England) போதகராக இங்கிலாந்தில் இருந்தார். இந்த ஆக்கம் ஜே. சி. ரைலினுடைய “Knots United” என்கிற ஆக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது. இதை அவர் எழுதிய காலப்பகுதியில், உயர் வர்க்க ஆங்கிலேய ஆண்களும், பெண்களும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆலயத்துக்குச் செல்வதை நாகரீகமானதாக கருதி வந்தார்கள். ஆனால் அதற்குப் பிறகு வந்த 130 ஆண்டுகளில் இந்த எண்ணம் முற்றிலும் மாறிவிட்டாலும், ஆராதனையைக் குறித்து ரைல் எழுதியிருக்கின்ற வேதபூர்வமான கருத்துக்கள் உலகமெங்கும் வாழுகின்ற எல்லா கிறிஸ்தவர்களுக்கும் எல்லா காலத்துக்கும் பொருந்தும்விதத்தில் அமைந்திருக்கின்றது.

3. பொது ஆராதனையில் இருக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்

கடவுளைக் குறித்து அதிகமாக சிந்திக்காமலும், மதசம்பந்தமான எந்த விஷயத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்காமலும், இதுவரை எந்த ஆராதனைக்கும் சென்றிராதவனுமாகிய ஒரு மனிதனை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். திடீரென எப்படியோ அவனுக்கு தன்னுடைய ஆத்துமாவைக் குறித்த அக்கறை ஏற்பட்டு, விழிப்படைந்தவனாகி, மதசம்பந்தமான காரியங்களில் பங்குபெற ஆர்வமுள்ளவனாகிறான் என வைத்துக்கொள்வோம். அவன் சபைகளுக்குப் போய் பார்க்கும்போது எல்லா கிறிஸ்தவர்களும் ஒரே விதமாக கடவுளை வழிபடுவதில்லை என்பதைக் கண்டு குழப்பம் அடைகிறான். தனது பக்கத்து வீட்டுக் கிறிஸ்தவர் ஒருவிதமாகவும், தனது அலுவலக கிறிஸ்தவ நண்பர் வேறுவிதமாகவும் கடவுளைத் தொழுதுகொள்ளுகிறதைக் காண்கிறான். அவர்களில் ஒருவர் சொல்லுகிறார், தனது சபையின் மூலமாகத்தான் ஒருவன் மோட்சத்தை சென்று அடையமுடியும் என்று. இன்னொரு நண்பரோ, தான் இருக்கின்ற சபைக்கு வராத யாவரும் நரகத்திற்குத்தான் போய் சேருவார்கள் என்கிறார். இந்த வார்த்தைகளைக் கேட்டு அந்த மனிதன் என்ன நினைப்பான்? கிறிஸ்தவ வழிபாட்டில் அவசியமாக இருக்க வேண்டிய காரியங்கள் என்று எதுவுமே இல்லையா? என்று கேட்பான். நிச்சயமாக அப்படியான காரியங்கள் இருக்கின்றன. இப்போது நான் அவைகளை ஒவ்வொன்றாக உங்களுக்கு விளக்கப் போகிறேன்.

புதிய ஏற்பாட்டில் ஆராதனை முறையைக் குறித்து குறைந்தளவுதான் சொல்லப்பட்டிருக்கிறது என நான் ஏற்கனவே கூறினேன். பழைய ஏற்பாட்டில் ஆராதனையைக் குறித்து மோசேயின் நியாயப்பிரமாணத்தில் சொல்லப்பட்டிருப்பவைகளோடு ஒப்பிடும்போது புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவர்களுக்கு சொல்லப்பட்டிருப்பது மிகவும் கொஞ்சமே. யூத மார்க்கத்து வழிபாட்டு முறையானது மிகவும் கறாரானது. ஒவ்வொரு காரியமும் அதில் அதிக விவரமாக விளக்கப்பட்டிருக்கும். கிறிஸ்தவ மார்க்கத்திலோ அவ்வளவு விளக்கங்கள் இல்லை. ஆராதிப்பதைக் குறித்து எளிமையாகவும், பொதுவாகவுந்தான் புதிய ஏற்பாட்டில் விவரிக்கப்பட்டிருக்கிறது. யூதமார்க்கத்தில் கடவுள் வழிபாட்டில், மாதிரிகளும், அடையாளச் சின்னங்களும், வெளிப்படையான பொருட்களும் அதிகமாக காணப்பட்டன. கிறிஸ்தவத்தில் இரண்டே இரண்டு காரியங்களைத்தான் அடையாளமாகக் காண்கிறோம். அதாவது, ஞானஸ்நானமும், கர்த்தருடைய பந்தியும். யூதவழிபாட்டாளர்கள் கண்களால் காணக்கூடியதைக் கொண்டு கடவுளைத் தொழுதனர். புதிய ஏற்பாட்டின் கிறிஸ்தவ வழிபாட்டில் இருதயமும், மனச்சாட்சியும் சம்பந்தப்படுகிறது. யூதமதமானது ஒரு குறிப்பிட்ட ஜாதியாருக்கு மாத்திரம் ஏற்பட்டது. கிறிஸ்தவம் உலகத்திலுள்ள அனைவருக்கும் உரியது. ஆராதனையின் ஒவ்வொரு காரியத்தையும் குறித்து தெரிந்துகொள்ள யூதர்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தைப் படித்துப் பார்த்து அதிலிருந்து கற்றுக்கொள்ள முடியும். கிறிஸ்தவர்களோ புதிய ஏற்பாட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கொடுக்கப்பட்டிருக்கிற சில வசனபகுதிகளைப் பார்த்து, அந்தந்த சபைகளில் சூழ்நிலைக்கு ஏற்றபடி உபயோகித்துக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறார்கள். யாத்திராகமம், லேவியராகமம் ஆகியவற்றின் மூலமாக இஸ்ரவேலருக்குப் போதிக்கப்பட்டிருக்கிற அளவுக்கு புதிய ஏற்பாட்டில் கிறிஸ்தவர்களுக்கு ஆராதனை குறித்த போதனை இல்லை. ஆனால், வேதத்தை கவனமாகப் படித்து விளங்கிக் கொண்டிருக்கிற எந்த கிறிஸ்தவனும், கிறிஸ்தவ வழிபாட்டில் இருக்க வேண்டிய அத்தியாவசியமான ஆராதனைக்குரிய அம்சங்களை உணராமல் இருக்க முடியாது. இந்த அத்தியாவசியமான காரியங்கள் காணப்படுகிற ஆராதனையே மெய்யான கிறிஸ்தவ ஆராதனையாகும். இவை காணப்படாத ஆராதனை குறைவுள்ளவை, பூரணமில்லாதவை, அரைகுறையானவை என்றுதான் கூறமுடியும். அந்த அத்தியாவசியமான ஆராதனை அம்சங்கள் யாவை என இனிப் பார்ப்போம்.

1. முறையான பொது ஆராதனையில், ஓய்வுநாள் எப்போதும் மரியாதையோடு அனுசரிக்கப்பட வேண்டும்.

இதற்காகவே அந்த நாள் மனிதனுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்ற மனிதர்களோடு கூடி கடவுளின் ஆராதனையில் ஈடுபடுவதற்காக அந்த நாள் நியமிக்கப்பட்டிருக்கிறது. மோட்சத்திலுங்கூட மனிதருக்கு ஓய்வுநாள் கொடுக்கப்பட்டிருக்கிறது. பத்துக் கற்பனைகளில் ஒன்றாக ஓய்வுநாளைக் கடைப்பிடிப்பதை வேதம் வலியுறுத்துகிறது. நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுங்கூட ஓய்வுநாளிலே தேவனைத் தொழுது, அதைக் கடைப்பிடிக்கிறவராக காணப்பட்டார். வாரத்தில் ஒரு நாள் அனைவருமாகக் கூடிவருகின்ற பழக்கம் ஆதிக் கிறிஸ்தவர்களிடத்தில் காணப்பட்டது. அவர்கள் வாரத்தின் கடைசிநாளுக்கு பதிலாக வாரத்தின் முதலாம் நாளிலே கூடி வந்தததை அறிந்துகொள்ளுகிறோம் (அப் 20:7; 1 கொரி 16:2).

கிறிஸ்தவ ஓய்வு நாளாகிய ஞாயிற்றுக் கிழமைகளில் விசுவாசிகள் கர்த்தருடைய ஆலயத்திலே கூடிவருகின்ற பழக்கம் ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கர்த்தருடைய பரிசுத்தவான்கள், ஓய்வுநாளிலே சபையாகக் கூடிவருதலால் ஏற்படும் நன்மைகளையும் அதன் சிறப்புத் தன்மைகளையும் குறித்து எப்போதும் மற்றவர்களுக்கு வலியுறுத்திக் கூறிக்கொண்டு வந்திருக்கிறார்கள். அதனால் தாங்கள் எவ்வளவு நன்மையை அடைந்திருக்கிறார்கள் என்பதற்கு அவர்களே நல்ல சாட்சிகளாக விளங்கியிருக்கிறார்கள். ஒரு கிறிஸ்தவனுக்கு எல்லா நாளுமே பரிசுத்தமான ஓய்வுநாள்தான். அதிலே எந்த நாளையும் மற்ற நாட்களைக் காட்டிலும் விசேஷித்துப் பார்க்கக் கூடாது என்று கூறிக்கொள்வது கேட்பதற்கு நன்றாகவும், ஆவிக்குரியவிதமாகவும் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், வெறும் வாய்ப்பேச்சுக்களைவிட நடைமுறையில் அது எப்படி செயல்படுகிறது என்பதே முக்கியமானது. சில குறிப்பிட்ட மணி நேரங்கள், குறிப்பிட்ட காலங்கள், குறிப்பிட்ட நாட்கள் ஒதுக்கப்பட்டு, அந்த வேளைகளை கடவுளுடைய காரியங்களில் செலவிடுவது மனிதனுடைய ஆத்துமாவுக்கு எவ்வளவு உதவியாக இருந்திருக்கிறது என்பதை அனுபவித்தவர்கள் சொல்லுகிறார்கள். கடவுள் அமைத்துக் கொடுத்த ஒழுங்கு விதியை நாம் பயன்படுத்தாவிட்டால், பொது ஆராதனை பயனுள்ளதாக இருக்காது. “ஓய்வுநாள் மனிதனுக்காக ஏற்படுத்தப்பட்டது” என்ற ஒழுங்குவிதியை, மனிதனை ஆதியில் உருவாக்கியவரே சொல்லுகிறார். மாமிசமும் இரத்தமும் எப்படி செயல்படுமென்று மனிதனை உருவாக்கியவரான அவருக்குத் தெரியும். ஓய்வுநாள் சரியான விதத்தில் அனுசரிக்கப்படாத இடத்தில் பொது ஆராதனையைப் பார்க்க முடியாது என்பதை உறுதியாகச் சொல்லலாம்.

2. முறையான பொது ஆராதனையை நடத்த அதைத் தலைமை தாங்குகிற அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் (போதகர்) இருக்க வேண்டும்.

கிறிஸ்தவர்கள் தேவனைத் தொழுதுகொள்ளக் கூடிவருகின்ற சமயத்திலே அவர்களை ஒழுங்கோடும் சரியான வழியிலும் தலைமை தாங்கி நடத்திச்செல்வதற்கு சரியான ஊழியர்கள் பொது ஆராதனையை நடத்த வேண்டும் என்பதையே நான் வலியுறுத்துகிறேன். அப்போஸ்தல நடபடிகளையும், கொரிந்து, எபேசிய சபைகளுக்கு எழுதப்பட்ட நிருபங்களையும், தீமோத்தேயு, தீத்துவுக்கு எழுதப்பட்ட நிருபங்களையும் வாசிப்பவர்கள், சபையை நடத்துவதற்கு ஊழியர்கள் தேவையில்லை என்று எப்படிச் சொல்லமுடியும்? குவேக்கர்கள் மீதும், பிலிமத் சகோதரர்கள் மீதும் (Quakers and Plymouth Brethren) நான் மரியாதை வைத்திருக்கிறேன். இருந்தாலும், ஊழியக்காரர்களை நியமிக்காமல் சபையாக செயல்படலாம் என்கிற இவர்களுடைய கருத்துக்கள் எனக்கு கொஞ்சமும் விளங்கவில்லை. யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் செயல்படலாம் என்றிருக்கிற உலக காரியங்கள்கூட நாளடைவில் சீர்கெட்டு அழிந்துவிடுவதைப் பார்க்கிறோமல்லவா? பரலோகத்திலேயே ஒழுங்குதான் முதலாவது விதியாக இருக்கிறது. ஜனங்கள் ஓய்வுநாளை அனுசரிக்காமலும், ஊழியர்கள் என யாரையும் நியமிக்காமலும் போனால், வெகு சீக்கிரத்தில் பொது ஆராதனையும், பக்தியும், கடவுள் பயமும் இல்லாமல் ஒழிந்து போகும் என்பதில் எனக்கு சந்தேகமேயில்லை.

3. முறையான பொது ஆராதனையில் கர்த்தருடைய வார்த்தை தெளிவாக பிரசங்கிக்கப்பட வேண்டும்.

கடவுளுடைய வார்த்தை பிரசங்கிக்கப்படாத எந்தவொரு சபையையும் நாம் புதிய ஏற்பாட்டிலே காண்பதில்லை. சபை கூடிவரும்போது கர்த்தருடைய வசனம் பிரசங்கிக்கப்படுவது முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கிறது. அதன் மூலமாக பரிசுத்த ஆவியானவர் பாவிகளுக்கு உணர்த்தி அவர்களை விழிப்படையச் செய்வது மாத்திரமல்லாமல், பரிசுத்தவான்களை நடத்தி, அவர்களையும் நிலை நிறுத்துகிறார். இளைஞனாகிய தீமோத்தேயுவுக்கு பவுல் எழுதுகிறபொழுது “திருவசனத்தைப் பிரசங்கம் பண்ணு” என்று குறிப்பிட்டுச் சொல்லுகிறார். பிரசங்கத்திற்கு மிகவும் குறைவான நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிற ஆராதனையோ அல்லது பிரசங்கத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் அளிக்காமல் அதை ஒரு மூலையில் தள்ளிவிடுகின்ற ஆராதனையோ வேதபூர்வமான ஆராதனை என்பதை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். அப்படிப்பட்ட ஆராதனைக்கு கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்காது. ஜெபம், வேத வாசிப்பு, பாடல்கள் பாடுதல், திருவிருந்தைப் பெற்றுக்கொள்ளுதல் ஆகிய இவைகள் மட்டும் அடங்கிய ஆராதனையை நான் ஆராதனையாகவே நினைக்க மாட்டேன். அவைகள் சடங்காச்சாரங்களை அதிகப்படுத்தி, வசனபோதனையை ஒழிந்து போகப் பண்ணுகிற சாத்தானின் திட்டமேயல்லாமல் வேறல்ல என்று பிஷப் லெட்டிமர் (Latimer) கூறியதை நான் அங்கீகரிக்கிறேன். “தீர்க்கதரிசனங்களை அற்பமாய் எண்ணாதிருங்கள்” (1 தெச 5:20) என்கிற வார்த்தை மிகுந்த பொருள் உடையது. பிரசங்கங்களை அவமதிப்பது ஆவிக்குரிய வீழ்ச்சிக்கு அடையாளமாயிருக்கிறது.

4. முறையான பொது ஆராதனையில் எல்லோரும் ஒன்று கூடி ஏறெடுக்கிற பொதுவான ஜெபம் இருக்க வேண்டும்.

ஜெபங்களும் வேண்டுதல்களும் ஏறெடுக்கப்படாத சபை கூடுதலை நாம் புதிய ஏற்பாட்டில் காண்பதில்லை. “நான் பிரதானமாய் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்” (1 தீமோ 2:1) என்று பவுல் தீமோத்தேயுவுக்கு கட்டளையிடுகிறதை நாம் பார்க்கிறோம். பொது ஆராதனையில் ஏறெடுக்கப்படுகிற ஜெபம் தெளிவானதாகவும் ஞானமுள்ளதாகவும் இருக்க வேண்டும். எதைக் குறித்து ஜெபிக்கிறார்கள் என்பது ஆராதிப்பவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஜெபிப்பவரோடு அவர்களும் ஒருமனப்பட்டிருக்க வேண்டும். கூடுமானவரையில் ஜெபம் சபையார் அனைவரின் ஒன்றுபட்ட விண்ணப்பமாயிருக்க வேண்டும். அது ஒரு தனிப்பட்ட மனிதனின் மனதை பிரதிபலிப்பதாக இருக்கக்கூடாது. ஒரு சிறந்த பிரசங்கத்தைக் கேட்பதற்காக மட்டும் கூடி வந்துவிட்டு, ஜெபங்களில் அக்கறை செலுத்தாத சபையார் புதிய ஏற்பாட்டு ஆராதனைக்கு ஏற்றவர்கள் அல்ல. வெறும் பிரசங்கத்தை மாத்திரம் கேட்பது பொது ஆராதனை அல்ல.

5. முறையாக நடக்கும் பொது ஆராதனையில் பரிசுத்த வேதாகமப் பகுதிகளை பகிரங்கமாக வாசிக்க வேண்டும்.

யூதர்களின் ஜெப ஆலயங்களில் ஆராதனையின் ஒரு பகுதியாக வேதவாசிப்பும் இடம் பெற்றிருந்தது என்பதை நாம் நாசரேத்து, பிசீதியாவிலுள்ள அந்தியோகியா (லூக் 4:16; அப் 13:15) ஆகிய இடங்களில் நிகழ்ந்த சம்பவங்களைக் கொண்டு அறிந்துகொள்கிறோம். யூதர்கள் வேதாகமத்திற்கு மரியாதை கொடுத்தது போலவே ஆதிக்கிறிஸ்தவ சபைகளும் வேதாகமத்தை மதித்தன என்பதைக் குறித்து சந்தேகமேயில்லை. பவுல் தீமோத்தேயுவுக்கு கூறும் அறிவுரையிலும் இந்தக் கருத்து தொனிப்பதை நான் காண்கிறேன் – “நான் வருமளவும் வாசிக்கிறதிலும் . . . ஜாக்கிரதையாயிரு” (1 தீமோ 4:13). தனிப்பட்ட வேதவாசிப்பைக் குறித்து இவ்விடத்தில் பவுல் கூறுவதாக நான் நினைக்கவில்லை. வேதாகமத்தை பகிரங்கமாக வாசிக்கும் பழக்கத்தினால் ஏற்படக்கூடிய உபயோகத்தை நாம் அனுபவத்தினாலும் பொது அறிவினாலும் உணர்ந்துகொள்ள முடியும், சபையிலே பலவிதமான மக்கள் இருப்பார்கள். சிலபேர் எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக இருக்கலாம். சிலருக்கு நேரமில்லாமையினாலோ அல்லது மனதில்லாமையினாலோ வீட்டிலே வேதத்தைப் படிக்காதவர்களாக இருக்கலாம். இப்படிப்பட்டவர்களும் சபையின் பகிரங்க வேதவாசிப்பின் மூலமாக வேதபோதனையைப் பெற்றுக்கொள்ளும்படியாக, கடவுள் என்னவொரு அருமையான திட்டத்தை வகுத்து வைத்திருக்கிறார்! வேதவசனங்களை மிகவும் குறைந்த அளவிலே கேட்கின்ற சபையானது, சபைப் போதகரையே முற்றிலுமாக சார்ந்து நிற்க வேண்டிய அபாயத்தில் இருக்கிறது. கடவுள் சபையோடும் தனிமனிதனோடும் பேச வேண்டும்.

இங்கிலாந்து சபையிலே நான் பெரிதும் மதித்துப் பாராட்டுகிறதான ஒரு காரியம் என்னவென்றால் சபையில் வாசிக்கப்படுகின்ற அதிகமான வேதவசனங்களாகும். சபை அங்கத்தினர் அனைவரும் கேட்கும்படியாக சத்தமாக வாசிக்கப்படுகின்ற வேதபகுதிகள் இங்கு ஏராளம். ஞாயிறு தினங்களிலே காலையிலும் மாலையிலும் ஆராதனையில் கலந்துகொள்கின்ற ஒவ்வொருவரும் பழைய ஏற்பாட்டில் 2 அதிகாரங்களும், புதிய ஏற்பாட்டில் 2 அதிகாரங்களும் வாசிக்கக் கேட்பார்கள். அதையும் தவிர்த்து, சங்கீதங்களிலிருந்தும், நிருபங்களிலிருந்தும், சுவிசேஷங்களிலிருந்தும் வசனங்கள் வாசிக்கப்பட அதையும் கேட்பார்கள். வேறு எந்தக் கிறிஸ்தவ சபையிலும் இந்த அளவுக்கு வேத வசனங்கள் சபையிலே பகிரங்கமாக வாசிக்கப்படுகிறதா என்பது சந்தேகந்தான்.

6. முறையான பொது ஆராதனை நடக்குமிடத்தில் அனைவரும் பகிரங்கமாக தேவனைப் புகழ்ந்து பாட வேண்டும்.

எபேசியருக்கும் கொலோசெயருக்கும் பவுல் எழுதின நிருபங்களில், “சங்கீதங்களினாலும், கீர்த்தனைகளினாலும், ஞானப்பாட்டுகளினாலும்” ஏற்படக்கூடிய உபயோகத்தைக் குறித்து கட்டளையிட்டு எழுதியிருப்பதை நாம் காண்கிறோம் (எபே 5:19; கொலோ 3:16). ஆரம்ப கிறிஸ்தவர்களிடம் அந்தப் பழக்கம் காணப்பட்டது. கிறிஸ்தவர்களிடம் காணப்பட்ட அந்த பழக்கமானது வரலாற்றிலே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பிளினி (Pliny) என்பவர் கிறிஸ்தவர்களைக் குறித்து, “இவர்கள் கிறிஸ்துவை கடவுளாக கருதி அவருக்கு பாடல்கள் பாடுகிறார்கள்” என்று எழுதி வைத்திருக்கிறார். பழைய ஏற்பாட்டை வாசிப்பவர்கள், அதில், தேவாலயத்திலே கடவுளைப் புகழ்ந்து துதிக்கின்ற வசனபகுதிகள் ஏராளமாக இடம் பெற்றிருப்பதை கவனிக்காமல் இருக்க முடியாது. புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவர்களும் அப்படியாக பாடல்களின் மூலமாக கடவுளைப் புகழுவதை பெரிதும் மதித்தார்கள் என்பதில் யாருக்காவது சந்தேகம் இருக்க முடியுமா? கடவுளைப் புகழ்ந்து துதிப்பதே, உண்மையான பக்தியின் பிரதிபலிப்பாக இருக்கிறது. ஆராதனையின் இந்தப் பகுதியானது ஒரு போதும் அழிந்து போகாது. பிரசங்கத்திற்கும், ஜெபத்திற்கும், வேதவாசிப்பிற்கும் ஒரு காலத்தில் தேவை ஏற்படாமல் இருக்கலாம். ஆனால் தேவனைப் புகழுதலோ

நித்திய காலத்துக்கும் தொடர்ந்து வரும். தேவனைப் புகழுதலில் பங்கெடுக் காத சபை சரியான சபையல்ல. தேவனைப் புகழுதலை பாடகர் குழு வொன்றிடம் ஒப்படைத்துவிட்டு, அதில் கலந்துகொள்ளாமலிருக்கிற சபை யானது சரியான நிலையில் இல்லை என்றுதான் தீர்மானிக்க வேண்டும்.

7. கிறிஸ்து தமது சபைக்கென்று நியமித்திருக்கின்ற இரண்டு புனித திருநியமங்களை (Sacraments) சபையானது தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

புதிய அங்கத்தவர்கள் ஞானஸ்நானத்தின் மூலமாக மற்ற அங்கத்தினரோடு சேர்த்துக்கொள்ளப்பட்டு, கிறிஸ்தவர்கள் என்கிற பட்டியலிலே சேர்த்துக்கொள்ளப்படுதல் தொடர்ந்து நடைபெற வேண்டும். கர்த்தருடைய பந்தியின் மூலமாக இயேசு கிறிஸ்துவை தனது ஆண்டவராக அறிக்கையிடுகின்ற சந்தர்ப்பத்தை ஒவ்வொரு விசுவாசிக்கும் அளிக்க வேண்டும். விசுவாசியானவன் தொடர்ந்து பலப்படவும், புதுப்பிக்கப்படவும், அவரது சிலுவைப் பலியை நினைவுகூரவும் கர்த்தருடைய பந்தியின் மூலமாக அவனுக்கு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும். இந்த இரண்டு புனிதசட்டங்களையும் அலட்சியப்படுத்துகிற எவரையும் பவுலோ, பேதுருவோ, யாக்கோபோ, யோவானோ கிறிஸ்தவனென்றே கருதமாட்டார்கள் என குவேக்கர்களும், பிலிமத் பிரதரன் குழுக்களும் நினைப்பது போலவே நானும் இந்த விஷயத்தில் நினைக்கிறேன். எல்லா நல்ல காரியங்களையும் தவறாக பயன்படுத்துவது போலவே இதையும் தவறாக பயன்படுத்துகிறவர்களும் இல்லாமல் இல்லை. சிலர் இதை அலட்சியமாகக் கருதலாம். வேறு சிலரோ இதை மூடபக்தியோடு ஒரு விக்கிரகம் போல மனதில் வைத்துக் கொண்டிருக்கலாம். யார் எப்படி நினைத்துக் கொண்டாலும், ஞானஸ்நானமும், கர்த்தருடைய பந்தியும் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினாலே கிருபையின் சாதனங்களாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்கிற உண்மையை மறுப்பதற்கில்லை. அவைகளை மிகுந்த பக்தியோடும் கனத்தோடும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக அவர்தாமே அவைகளை ஏற்படுத்தியுள்ளார் என்பதில் சந்தேகமேயில்லை. கர்த்தருடைய பந்தியில் பங்கு பெறாமல் வெகு காலங்களாக ஒருவன் ஆராதனையில் மாத்திரம் கலந்து கொண்டு வந்திருக்கிறானென்றால் அவனுடைய ஆவிக்குரிய நிலைமையைக் குறித்த சந்தேகம் அப்போஸ்தலர் காலத்திலேயே எழுந்திருக்கும்.

நான் மேற்கூறின ஏழு காரியங்களையும் நீங்கள் கவனத்தோடு சிந்தித்து ஆராய்ந்து பார்க்க வேண்டும். இவைகளில் சிலவற்றை குறித்து சில கிறிஸ்தவர்களே ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதை நான் அறிவேன். நான் அவர்களுடைய நியாயாதிபதி அல்ல. அவர்கள் நின்றாலும் விழுந்தாலும் தங்கள் எஜமானனுக்கு முன்பாக அவர்கள்தான் கணக்கொப்புவிக்க வேண்டும். கர்த்தருக்கு உண்மையான ஊழியனாக, வேதாகமம் கூறுகிற காரியங்களாக நான் நினைப்பவற்றை உங்களுக்கு விளக்கியிருக்கிறேன். ஒவ்வொரு மனிதனும் நான் பார்க்கிற விதமாகவேதான் பொதுவான ஆராதனையைக் குறித்துப் பார்க்க வேண்டுமென்றும், அப்படிப் பார்க்காவிட்டால் அவன் இரட்சிப்படைய மாட்டான் என்றும் நான் சொல்லவில்லை. பொது ஆராதனையில் பரிசுத்த ஓய்வுநாளும், போதகர்களும், பிரசங்கமும், ஜெபமும், வேதவாசிப்பும், துதித்தலும், திருமியமங்களும் காணப்படாவிட்டால் அது முழுமையான ஆராதனையல்ல என்றுதான் நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இந்த ஏழு காரியங்களையும் அலட்சியப்படுத்துகிற ஒரு கூட்டத்தாரோடு கூடி நாம் தேவனை ஆராதிப்போமானால் நமது ஆத்துமாவுக்கு நஷ்டமும், சீர்குலைவும் ஏற்படும். நாம் நன்றாக இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் நாம் சரியானபடி ஆராதிக்க வேண்டும். புதிய ஏற்பாட்டில் இந்த ஏழு காரியங்களும் தெளிவாகக் காணப்படுவதாக நான் கருதுகிறேன். அதையே உங்களுக்கும் தெளிவாக விளக்கியிருக்கிறேன்.

4. பொது ஆராதனையில் தவிர்க்கப்பட வேண்டியவைகள்

இவ்வுலகில் எதுவுமே பூரணமானதல்ல என்பதை நான் அறிந்திருக்கிறேன். உலகிலுள்ள எல்லா சபைகளின் ஆராதனைகளிலும் ஏதாவதொரு குறையும், சில தவறுகளும் இருக்கும் என்பது நிச்சயம். உலகிலேயே மிகச் சிறந்த சபையின், மிகவும் சிறந்த ஆராதனைகூட, பரலோகத்தின் மகிமையடைந்த சபையோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது மிகவும் தாழ்ந்த நிலையிலேயே காணப்படும். கடவுளுடைய ஜனங்களின் விசுவாசமும், நம்பிக்கையும், வாழ்க்கையும், அவர்கள் செய்கின்ற ஆராதனையும் மிகவும் குறைபாடுள்ளதாகவே காணப்படுகிறது என்பதை நான் துக்கத்தோடும், அவமானத்தோடும் ஒத்துக்கொள்ளுகிறேன். சபைகளின் நிர்வாகத்திலே குற்றம் காணப்படுகிறது என்கிற காரணத்துக்காக ஒருவன் சபையைவிட்டு பிரிந்து விலகிப் போய்க் கொண்டேயிருக்கிறானென்றால் அவன் விவேகமானவன் அல்ல. கோதுமையையும் களைகளையும் குறித்த உவமையை மறந்து வாழ்வதற்கு அது சமமாகும்.

ஆனால், இவை எல்லாவற்றிற்கு மத்தியிலும் நாம் ஆராதனையைக் குறித்த விஷயத்தில் ஆபத்து நிறைந்த காலகட்டத்தில் வசித்துக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கு நமது தேசத்திலே ஆங்கிலேய சபைகளிலும் ஆலயங்களிலும் நிறைய விஷயங்கள் ஏற்க முடியாதவையாகக் காணப்படுகிறது. அவைகளைக் குறித்து நான் எச்சரிக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. அவைகளை விவரமாக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய கடமை ஒவ்வொரு ஊழியருக்கும் ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது. ஆபத்து நெருங்குகிற வேளையிலே நகரத்தின் காவற்காரன் பேசாமல் மௌனமாயிருந்தானென்றால், அந்தப் பட்டணத்தார் எப்படி எச்சரிப்படைவார்கள்? “எக்காளமும் விளங்காத சத்தமிட்டால் எவன் யுத்தத்திற்கு ஆயத்தம் பண்ணுவான்?” (1 கொரி 14:8).

இன்றைய காலகட்டத்தில் மூன்று வகையான பெருந்தீமைகள் பொது ஆராதனையில் வளர்ந்து கொண்டிருக்கின்றன. அவைகளைக் குறித்து விசேஷமாக எச்சரிக்க வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. இதைப்பற்றி உங்களை சிந்திக்கவைப்பது எங்கள் கடமையாக இருக்கிறது. இந்த தீமைகளைக் குறித்து நாம் தகுந்த எச்சரிக்கை அடைந்து, அவைகளால் நமது ஆத்துமாவிற்கு பாதிப்பு ஏற்பட்டுவிடாதபடி காத்துக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.

1. ஆராதனையில் திருநியமங்களில் ஒன்றுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்தல்.

கர்த்தர் நியமித்திருக்கும் திருநியமங்களில் ஏதாவதொன்றில் அதிக கவனம் செலுத்திவிட்டு, மற்றதை நாம் அலட்சியப்படுத்துகிறவர்களாக இராதபடி எச்சரிக்கையாயிருப்பது அவசியம். இங்கு சில சபைகள் இருக்கின்றன. அவைகளில் ஞானஸ்நானமும், கர்த்தருடைய பந்தியும் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. அவைகள் ஆரோனின் கோலைப் போல ஆராதனையின் மற்ற காரியங்களை விழுங்கிப் போட்டு விடுகின்றன. பக்திவிருத்திக்குரிய மற்ற காரியங்களுக்கு ஆராதனையில் அவ்வளவாக முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. இதை நீங்கள் அநேகமாக எல்லா இடங்களிலும் பார்க்கலாம். ஞானஸ்நானமும், கர்த்தருடைய பந்தியும் சபைகளில் பிரதானமான இடத்தை வகிக்கின்றன. அவற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஆராதனைக்குரிய மற்ற அனைத்தும் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடுகின்றன. இவைகளுக்குக் கொடுக்கப்படும் அதிமுக்கியத்துவம் மற்றவைகளை மறைத்துவிடுகிறது. மற்ற காரியங்களுக்கு ஆராதனையில் இடம் இல்லாமல் அவைகள் நெருக்கப்படுகின்றன. மற்ற காரியங்கள் ஓர் மூலையில் தூக்கிப் போடப்பட்டுவிடுகின்றன. இந்த விதமான ஆராதனைகளால் மனித ஆத்துமா எந்தவித பயனையும் அடையப் போவதில்லை என்பதை நான் தயக்கமின்றி கூறுகிறேன். ஒரு மருத்துவர் அளிக்கின்ற மருந்துகளை அவர் சொல்கிறபடிதான் சாப்பிட வேண்டும். அவைகளின் அளவை நீங்கள் உங்கள் இஷ்டத்திற்குக் கூட்டிக் குறைத்தீர்களானால் அது விஷமாகிப் போகும். கிறிஸ்தவமே ஞானஸ்நானமும், கர்த்தருடைய பந்தியும்தான் என நினைத்து மற்றவைகளைப் புதைத்துப் போட்டீர்களானால், கிறிஸ்தவ ஆராதனைக்குரிய அர்த்தமே சிதைந்து விடும்.

2. ஆராதனையில் அளவுக்கு மீறிய ஆடம்பரம் இருத்தல்

ஆராதனைகளில் அளவுக்கு மீறிய அலங்காரங்களும், ஆபரணங்களும் காணப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். இன்றைக்கு பல சபைகளில் நடைபெறும் ஆராதனைகளைப் பார்த்தீர்களானால், ஆராதனை நடத்துபவர்களின் பகட்டான உடைகளும், மெழுகுவர்த்தி அலங்காரங்களும், நாடகமேடைக்கேற்ற சடங்குகளும் ஆராதிப்பவர்களின் கவனத்தை திசை திருப்பி, ஆராதனையின் நோக்கத்தையே மாற்றி விடுபவவையாக இருக்கிறது. புதிய ஏற்பாட்டின் ஆராதனை எளிமையைக் கொண்டிருக்க வேண்டும். புதிய ஏற்பாட்டு ஆராதனைக்கு அலங்காரங்கள் தேவையில்லை. சுவிசேஷ நூல்களிலும், நிருபங்களிலும் நாம் காண்கின்ற சபை ஆராதனைகளில் எந்தவிதமான ஆடம்பர அலங்கார சடங்குகள் நடைபெற்றதாக சிறிதும் அடையாளமில்லை. எந்தவிதமான அடையாளங்களும், மாதிரிகளும் அங்கு வைக்கப்பட்டிருக்கவில்லை. தண்ணீரும், அப்பமும், திராட்சை ரசமும் மாத்திரம்தான் புதிய ஏற்பாட்டு ஆராதனைகளில் இடம்பெற்ற காரியங்களாயிருக்கின்றன. நமது பொல்லாத இருதயமானது, ஆவிக்குரிய காரியங்களைவிட, கண்களால் காணப்படும் காரியங்களை ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இருக்கிறது. இருதயத்தில் மறைந்திருக்கிற ஆவிக்குரிய நற்குணங்களைக் காட்டிலும் வெளியே பகட்டாக காண்பிக்கிற வேஷங்களால் எந்த பிரயோஜனமும் இல்லை என்பது ஆத்துமாக்களுக்கு போதிக்கப்பட வேண்டும்.

இதைப் பற்றி ஸ்டீவன் சார்நோக் பின்வருமாறு சொல்லுகிறார், “பகட்டான சடங்கு சம்பிரதாயங்களால் மனித ஆத்துமாக்களைக் கவருகின்ற வஞ்சனையை சாத்தான் நடத்திக் கொண்டிருக்கின்றான். எளிமையான ஆராதனை செய்வது கடவுளுக்குப் பிரியமில்லாதது போலவும் அவருடைய மகிமைக்கும் மகா மேன்மைக்கும் அது தகாதது என்பது போலவும் மனிதனை நினைக்கத் தூண்டி ஏமாற்றிக் கொண்டிருக்கிறான் (2 கொரி 11:3). இயேசுவின் காலத்து யூதர்களால், சாலமோன் கட்டின முந்திய ஆலயத்தில் இருந்த மகிமை அப்போது இல்லை என்பதைத்தான் உணர முடிந்ததேயொழிய, தேவாலயத்திலும் பெரியவரான மேசியாவின் பிரசன்னத்தின் மகிமை அங்கிருந்ததை அந்த யூதர்களால் உணர முடியாமல் இருந்தது.

ஆதிகாலந் தொடங்கி, மனிதர்கள் தேவனுடைய உண்மையான மகிமைக்குப் புறம்பாக, தங்களுடைய மனதுக்குத் தோன்றுகிறவிதத்தில் அவருக்கு மரியாதை செலுத்திக் கொண்டிருந்திருக்கிறார்கள். கடவுளுடைய ஸ்தாபனத்தில் அவருக்கு அளிக்கப்படுகின்ற மரியாதையில் ஏதோ குறைவு இருப்பது போலவும், அதைப் பெற்றுக்கொள்வதற்கு அவருடைய சிருஷ்டிப்புகளின் உதவி அவருக்குத் தேவையாயிருப்பது போலவும் எண்ணி மனிதர்கள் நடந்துகொள்ளுகிறார்கள். இந்த எண்ணமானது உலகத்தில் எப்போதும் இருந்து வந்திருக்கின்றது. பழங்காலங்களில் மனிதர்கள் தங்கள் கற்பனைக்கேற்ற விதமாக அவருக்கு மரியாதை அளித்துப் பார்த்தார்கள். இப்போதுங்கூட விதவிதமான செயல்களால் கடவுளை கௌரவப்படுத்தப் பார்க்கிறார்கள். இஸ்ரவேலர், கடவுளின் அற்புதங்களையும் அடையாளங்களையும் கண்கூடாக கண்டவர்களாகவும், எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து அவர் தங்களை மீட்ட மாபெரும் செயலை அனுபவித்தவர்களாகவும் வாழ்ந்து கொண்டிருந்த காலத்திலேயே அவர்கள் என்ன செய்தார்கள்? ஒரு பொன் கன்றுக்குட்டியில் அவரது மகிமையை அடக்கப் பார்த்தார்கள். மோசேயின் நியாயாசனத்தில் அமர்ந்திருந்த பரிசேயர்கள், கடவுளுடைய நியாயப்பிரமாணம் போதாது என்பதுபோல, புதிது புதிதான பாரம்பரியங்களை உருவாக்கி, அவற்றை அதற்குள் திணித்தார்கள். போப்புகளும், அஞ்ஞானிகளை திருப்திப்படுத்துவதற்காக அவர்களுடைய பழக்கவழக்கங்களையும் கிறிஸ்தவத்துக்குள் கலந்து, மனிதர்களின் மாமிசப்பிரகாரமான ஆசைகளுக்கு இடங்கொடுக்கிறார்கள்.

புராதன சபைகளின் முன்னோர்களின் பழக்கவழக்கங்களுக்கும், அவர்களின் உணர்வுகளுக்கும் முன்னுரிமை கொடுத்து, ஆராதனைகளில் கடவுள் வேதத்தின் பிரகாரமாக கட்டளையிட்டிருப்பவைகளைக்கூட தள்ளி வைத்துவிடத் துணிகிறோம் அல்லவா? கடவுளை ஆராதிக்க வேண்டும் என்பது மனிதனுடைய இயல்பிலேயே இருக்கிறது. ஆனால் கெட்டுப்போன தன்மையுடைய அவனுக்கு அதை தேவன் விரும்புகிறவண்ணமாக செய்யாமல், தனது மனதுக்குத் தோன்றுகிற மனித வழிகளிலே செய்வதே இயல்பாக வருகிறது. இது கடவுளுக்கே சவால் விடுகிறதாக இல்லையா? அவரைக் காட்டிலும் நம்மை அதிமேதாவிகளாகக் காட்டிக்கொள்ளத் துணிகிறோமல்லவா? தன்னைக் குறித்தும், தமது மகிமையைக் குறித்தும் அவருக்கு அவ்வளவாகத் தெரியவில்லை என்பது போலவும், நமக்கு இருக்கின்ற கொஞ்ச மூளையை வைத்துக் கொண்டு, அவரது திட்டத்தைக் காட்டிலும் சிறப்பானதொரு வழியில் அவரை ஆராதிக்கவும் கனப்படுத்தவும் கூடிய வழிவகைகளை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்” (Stephen Charnock, Vol. 1, P. 222).

3. போதகர்கள் பலி செலுத்தும் ஆசாரியர்களைப் போல நடந்துகொள்ளுதல்.

இவை எல்லாவற்றைக் காட்டிலும் இன்னொரு காரியத்தைக் குறித்தும் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். எந்த ஆராதனையிலும், சபையின் போதகர்கள் பலிசெலுத்தும் ஆசாரியர்களைப் போன்ற உடைகளை அணிந்துகொள்வதோ, அல்லது பலிசெலுத்தும் ஆசாரியர்களைப் போல நடந்துகொள்வதோ கூடாது. இன்றைக்கு இங்கிலாந்து தேசத்திலே நூற்றுக்கணக்கான சபைகளிலே கர்த்தருடைய பந்தியானது புனித கட்டளையாக அனுசரிக்கப்படாமல், ஒரு பலியைப் போல நடத்தப்படுகிறது. அதை நடத்துகின்ற குருவானவர், கடவுளுக்கும் மனிதருக்கும் இடையில் செயல்படுகின்ற மத்தியஸ்தர் போல நடந்துகொள்ளுகிறார். அப்பம் இயேசு கிறிஸ்துவின் மாமிசமாகவே மாறிவிட்டதென்றும், திராட்சரசம் அவருடைய இரத்தமாகவே மாறிவிட்டதென்றும் சபை மக்களுக்குப் போதிக்கிறார்கள். கர்த்தருடைய பந்தியின் மேஜையை பலிபீடமென்றும் கூறுகிறார்கள். ஆசீர்வதிக்கப்பட்ட அப்பத்திற்கும் திராட்சரசத்திற்கும் விக்கிரகத்துக்கொப்பான மரியாதை கொடுக்கிறார்கள். கடவுளே அப்பம் வடிவிலும் திராட்சரச வடிவிலும் அதற்குள்ளாக வந்துவிட்டது போல கருதுகிறார்கள். மேலும் குருவானவரிடம் சபை மக்கள் வந்து தனிப்பட்ட விதத்தில் பாவ அறிக்கை செய்துகொள்ளும்படியாகத் தூண்டப்படுகிறார்கள். இந்தவிதமான ஆராதனைகள் கடவுளுக்கு விரோதமானவையாகத்தான் இருக்கும் என நான் நிச்சயமாக நம்புகிறேன். அவர் எரிச்சலுள்ள தேவன். அவர் தமது மகிமையை வேறொருவருக்கும் கொடுக்க மாட்டார். இயேசு கிறிஸ்து சிலுவை மரத்திலே ஒரே தரம் பலியானார். மீண்டும் மீண்டுமாக ஆராதனைகளில் அவரை பலியிடுகிறோமென்பதில் எந்தவிதமான அர்த்தமும் இல்லை. அப்படி செய்யவே கூடாது. இயேசு கிறிஸ்துவே மத்தியஸ்தராகவும், ஆசாரியராகவும் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறபடியால் அந்த பணியை வேறு எந்த மனிதனிடமும் ஒப்படைக்கக் கூடாது. அப்போஸ்தலர்கள் இந்த மாதிரியாக பலிசெலுத்தும் ஆசாரியர்களைப் போல நடந்து கொண்டதாக நாம் அப்போஸ்தல நடபடிகளிலோ நிருபங்களிலோ எங்கும் காண்பதில்லை. அவர்கள், பாவஅறிக்கைகளை கேட்டதாகவோ, கர்த்தருடைய பந்தியை விக்கிரக வழிபாடு போல நடத்தியதாகவோ, தங்களை நியாயாதிபதிகள் போல காண்பித்ததாகவோ நாம் வேதத்தில் வாசிப்பதில்லை. வெகு சாதாரணமான இந்த உண்மைகள் மனிதரை சிந்திக்கத் தூண்ட வேண்டும். பலி, மாஸ் (Mass), பூசை முறைகள், பாவ அறிக்கை இவைகளைக் குறித்து எச்சரிக்கையாயிருந்து அத்தகைய அவலங்களுக்கு சபையில் இடங்கொடுக்கக்கூடாது.

நான் மேலே குறிப்பிட்ட இந்த மூன்று தீமையான காரியங்களைக் குறித்து உங்களை எச்சரிக்க விரும்புகிறேன். அந்தவிதமான ஆராதனைகள் கடவுளின் பார்வையிலே ஏற்றுக்கொள்ளத் தகாதவைகள். மேலோட்டமாகப் பார்க்கும்போது அவை நமக்கு திருப்தியைத் தருவதாக இருக்கலாம். அது நமது கண்களையும், காதுகளையும், உணர்ச்சிகளையும் கவரக்கூடியதாக இருக்கலாம். ஆனால் அவற்றில் ஒரு பெரிய தவறு இருக்கிறது. அவைகளுக்கு வேத ஆதாரங்களைக் காண்பிக்க முடியாது. திருநியம சடங்குகள் (Sacramentalism), சம்பிரதாய சடங்குகள் (Ceremonialism), பலி முறைமை (Sacrificialism) ஆகியவைகளை புதிய ஏற்பாட்டில் பார்க்க முடியாது. வேதாகமத்தை ஒழுங்காக தியானித்து, வியாக்கியானம் செய்தால் இவைகளுக்கு சபையில் இடமிருக்கப் போவதில்லை.

இவைகளையெல்லாம் விளக்கியும் நமது கண்கள் உண்மையைக் காண மறுக்குமானால், நாம் ஆங்கிலேய தேசத்தின் வரலாற்றை சற்று எண்ணிப் பார்க்க வேண்டும். சடங்குகளும், சம்பிரதாயங்களும், பாரம்பரியங்களும், பூசை முறைகளும் ஆராதனையின் பெரும் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த சபைகள் இங்கிலாந்து தேசத்தில் ஏராளமாகக் காணப்பட்டன. நமது முன்னோர்களின் காலத்திலே, புராட்டஸ்தாந்து சீர்திருத்தமானது சபைகளில் உருவாகிய காலத்துக்கு முன்னே இந்தவிதமான ஆராதனைகளைத்தான் ரோம சபை (Roman Catholic Church) நடத்திக் கொண்டிருந்தது. ஆனால், அது தோல்வியையே சந்தித்தது. அது இந்த தேசம் முழுவதையும் மூடநம்பிக்கைகளினாலும், அறியாமையினாலும், வெறும் சடங்குகளினாலும், துன்மார்க்கத்தினாலும் நிரப்பிக் கொண்டிருந்தது. அவ்வகையான ஆராதனைகள் யாருக்கும் ஆறுதலை அளிக்கவில்லை. யாரையும் பரிசுத்தப்படுத்தவில்லை. யாரையும் உயர்த்தவில்லை. பரலோகத்திற்கு செல்வதற்கு யாருக்கும் உதவவில்லை. அது குருமார்களை கொடுங்கோலாட்சி செய்கிறவர்களாகவும், சபை மக்களை கெஞ்சுகிற அடிமைகளாகவும் ஆக்கியது. அந்த நிலைமைக்கே நாம் திரும்பவும் போகவேண்டுமா? கடவுள் காப்பாராக! ஞானஸ்நானங்களும், கர்த்தருடைய பந்தியும், ஆசாரியர்களின் அதிகாரங்களும், திருவிருந்தின் அப்பம் ரசத்தில் இயேசுவின் பிரசன்னம் இருப்பதாக சொல்லப்படும் உபதேசங்களும், அலங்காரங்களும், பவனிகளும், கொடிகளும், உருவங்களும், பீடத்து விளக்குகளும் நிரம்பி வழிகின்ற ஆராதனையில் திருப்திப்பட்டுக் கொண்டு, அவைகள் நம் மனதை ஆளும்படியான நிலைமைக்குத் திரும்பச் செல்ல வேண்டுமா? கடவுள்தாம் நம்மைக் காக்க வேண்டுமென்று மீண்டும் கூறுகிறேன். தனது ஆத்துமாவைக் காப்பாற்றிக்கொள்ள விரும்புகிற எவரும் அந்தவிதமான ஆராதனையை விட்டு விலகி வெளியே வரவேண்டும். அதை அவன் தவிர்க்க வேண்டும். அதை ஒரு விஷத்தைப் போலக் கருதி அதிலிருந்து விலகி ஓடிவிட வேண்டும்.

5. பொது ஆராதனையில் சோதித்துப் பார்க்க வேண்டியவைகள்

இந்தக் காரியம் மிகவும் முக்கியமானது. இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதாகக் கூறும் ஒவ்வொரு கிறிஸ்தவனும் இவைகளை கவனித்துப் பார்க்க வேண்டியது மிக அவசியம். நாம் தியானித்துக் கொண்டிருக்கிற தலைப்பின் கடினமான விஷயங்களை அவரவர் தங்கள் சொந்த வசதிக்கேற்ப விட்டுவிட முயற்சிப்பார்கள். தாங்கள் பெரிய வேத பண்டிதர் அல்லவென்றும், ஒரு சபைப்பிரிவினரின் விசுவாசக்கொள்கைகளுக்கும் மற்றொரு சபையின் விசுவாசக்கொள்கைகளுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்கத் தெரியாது என்றும் கூறிக்கொள்வார்கள். ஆனால் தாங்கள் பங்குபெறுகிற ஆராதனையானது தங்களுக்கு நன்றாக இருக்கிறதென்றும், அதைக் குறித்து எந்த சந்தேகமும் இல்லையென்றும் கூறுவார்கள். இப்படி சொல்லிக்கொள்கிற யாரும் அவ்வளவு சுலபமாக என்னிடமிருந்து தப்பித்துவிட முடியாது. பக்தி உணர்வுகளெல்லாம் நம்மை வஞ்சிக்கக் கூடியவை என்பதை நான் மறந்துவிட மாட்டேன். பக்திப் பாடல்களைக் கேட்பதின் மூலமாகவும், பக்தி ததும்பும் காட்சிகளைக் காண்பதினாலும் ஒருவிதமான பக்திப் பரவச நிலை ஏற்படுகிறது. ஆனால், அது உண்மையான பக்தியல்ல. அந்தப் பரவசநிலை ஏற்படும் நேரங்களிலே அது மிகவும் வல்லமையாகவும், பிறரையும் பற்றிக்கொள்ளும் விதத்திலும் இருக்கும். ஆனால் அது யாருடைய உள்ளத்தின் ஆழத்திலும் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாமல், வந்த வேகத்திலேயே திரும்பப் போய்விடும். அது தற்காலிகமாக, சரீரப்பிரகாரமான ஒரு பாதிப்பை மாத்திரமே தோற்றுவிக்கும். ரோம சமயத்தவருக்குக் கூட பண்டிகைக் காலங்களில் மாத்திரம் ஒரு தற்காலிக பக்தி உணர்ச்சி ஏற்படும். அதன் பிற்பாடு அவர்கள் வேதகொள்கைகளிலும், பழக்கவழக்கங்களிலும் தொடர்ந்து ரோமசமயத்தவராகவே காணப்படுவார்கள்.

1. உண்மையான ஆராதனையானது மனிதனின் இருதயத்தையும் மனசாட்சியையும் பாதிக்கும். பாவத்தின் அகோரத் தன்மையை அது அவனுக்கு தெளிவாக உணர்த்தும். அவனுடைய சொந்த பாவங்களை படம் பிடித்துக் காண்பிக்கும். அவனுடைய தாழ்மையை அதிகரிக்கச் செய்யும். தனது உள்மனதைக் குறித்து மிகவும் கவனத்தோடு இருக்கும்படியாக அவனை எச்சரிக்கும். ஆனால், தவறான விதத்தில் செய்யப்படும் ஆராதனையோ போதை மருந்து சாப்பிடுவதைப் போன்றது. அது ஆரம்பத்தில் மனிதனில் ஏற்படுத்திய பாதிப்புகளின் வீரியம் இழந்து போய் நாட்கள் செல்லச் செல்ல மரத்துப் போன நிலைமைக்குக் கொண்டு செல்லும். உண்மையான ஆராதனையானது சத்துள்ள ஆகாரம் சாப்பிடுவதைப் போன்றது. அதை சரியாக பயன்படுத்திக்கொள்பவனை அது பலப்படுத்துகிறது. வருஷந்தோறும் அவன் உள்ளான மனிதனில் ஆரோக்கியமாக வளர்ந்து கொண்டே போவான்.

2. உண்மையான ஆராதனையானது மனிதனை இயேசு கிறிஸ்துவிடம் நெருங்கிச் சேர செய்யும். சபைகளுக்கும், மதசட்டங்களுக்கும், ஊழியர்களுக்கும் அப்பாற்பட்டு இயேசு கிறிஸ்துவோடு மாத்திரம் உள்ள உறவை அவனில் வலுப்படுத்தும். தனது ராஜாவைக் காணும்படியான பசி தாகத்தை அவனுக்குள் ஏற்படுத்தும். அவரைக் குறித்து அவன் அதிகமதிகமாக கேட்டு அறிவதாலும், அவரது வசனத்தைப் படிப்பதாலும், ஜெபிப்பதாலும், அவரைப் புகழுவதாலும் தன்னுடைய ஆத்துமாவுக்கு தேவையான ஜீவனை அளிப்பது இயேசு கிறிஸ்து மாத்திரமே என்பதை உணர வைக்கும். அவரோடு தனக்கு இருக்கும் ஐக்கியமே “புசிப்பும் குடிப்பும்” என்பதை அவன் அதிகமதிகமாக உணருவான். தேவனை உண்மையாகத் தொழுதுகொள்ளாதவன், கஷ்டகாலங்களில் மற்றவர்களின் உதவியை நாடி ஓடுவான். குருமார்களிடம் யோசனை கேட்கச் செல்லுவான். சடங்குகளையும் சம்பிரதாயங்களையும், புனித நியமங்களையும் கடைப்பிடித்தால் தன் கஷ்டம் நீங்குமா என முயற்சித்துக் கொண்டிருப்பான். ஆனால் தேவனை உண்மையாகத் தொழுகிறவனோ, தனக்கு கஷ்டங்கள் நேரிடும் சமயங்களில் விசுவாசமுள்ளவனாக தன்னிச்சையாக இயேசு கிறிஸ்துவை நோக்கியே திரும்புவான். காந்த முள்ளானது எவ்விடத்தில் இருந்தாலும் துருவங்களை நோக்கியே திரும்பிக் கொண்டிருப்பது போல அவனும் விசுவாசத்தினால் இயேசுவையே நோக்கிக் கொண்டிருப்பான்.

3. உண்மையான ஆராதனையானது, மனிதனின் ஆவிக்குரிய ஞானத்தை தொடர்ந்து அதிகப்படுத்திக் கொண்டே போகும். அவனுடைய பக்தியானது எலும்பும், சதையுமாக உருப்பெற்று மிகுந்த பலமுடையதாக ஆண்டுதோறும் வளர்ந்து கொண்டேயிருக்கும். தேவனை உண்மையாக ஆராதிப்பவன், தன்னைக் குறித்தும், கடவுளைக் குறித்தும் அறிந்துகொள்வதில் ஆண்டுதோறும் வளர்ச்சி பெறுவான். மேலும் தனது கடமைகள், மதகொள்கைகள், பழக்கவழக்கங்கள், அனுபவங்கள் ஆகியவைகளிலும் முன்னேறிச் செல்லுவான். அவனுடைய பக்தியானது உயிருள்ளது. ஆகவே அது வளருகின்றதான சுபாவத்தைக் கொண்டிருக்கும். தேவனை சரியாக ஆராதிக்காதவனுடைய பக்தியானது மாமிசப்பிரகாரமான காரியங்களில் கட்டப்பட்டிருப்பதால் அது வெளிவேஷமான பக்தி நிலையைக் கடந்து சற்றும் முன்னேறாது. அது செக்கு மாட்டைப் போல ஆண்டுதோறும் ஒரே இடத்தை சுற்றி சுற்றி வரும். எவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும் அந்தப் பாதையை விட்டு சற்றும் முன்னேறிப் போகாது. அவனுடைய பக்தியானது செத்த நிலையிலுள்ளது. ஆகவே அது வளரவோ அதிகரிக்கவோ செய்யாது.

4. உண்மையான ஆராதனையானது, மனிதனின் பரிசுத்த நிலையை அதிகரிக்கச் செய்வதில் இடைவிடாமல் செயல்படும். ஆண்டுகள் செல்லச்செல்ல அவன் தன் நாவைக் கட்டுப்படுத்துவதில் அதிகமதிகமாக வெற்றி காண்பான். தனது கோபத்தைக் குறித்தும், நேரத்தை செலவிடுவதிலும், தனது குணங்களைக் குறித்ததுமான தனது வாழ்வின் சகல காரியங்களிலும் மிகுந்த கவனத்தைக் கடைப்பிடிப்பான். ஆண்டுதோறும் அவனுடைய மனசாட்சியானது மென்மையாகிக் கொண்டே போகும், பொய்யான ஆராதனை செய்பவர்களின் மனசாட்சி அதிகமதிகமாக சூடுண்டு, கடினப்பட்டுக் கொண்டே போகும்.

“அவர்களுடைய கனிகளால் அவர்களை அறிவீர்கள்” என்ற நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தையினாலே சோதிக்கப்பட்டு வெற்றிபெற்ற ஆராதனையை எனக்குக் காண்பியுங்கள். மனிதர்களின் வாழ்க்கையைப் பரிசுத்தப்படுத்துகின்ற ஆராதனை, கர்த்தருடைய வேதத்தில் பிரியமாக இருந்து அவரோடு நடக்கின்ற மனிதர்களை உருவாக்குகிற ஆராதனை, உலகத்திற்கு பயப்படாமலும், உலகத்தை சிநேகிக்காமலும் இருக்கும்படியாக மனிதர்களை பயிற்றுவிக்கிற ஆராதனை, சகமனிதர்களின் முன்னிலையிலே தேவசாயல் தன்னில் இருப்பதை பிரதிபலிக்கும்படியாக வாழ்கிற மனிதர்களை உருவாக்கும் ஆராதனை, மனிதனை நீதியுள்ளவனாகவும் அன்புள்ளவனாகவும் பரிசுத்தமுள்ளவனாகவும், சாந்த குணமுள்ளவனாகவும், முன்கோபமில்லாதவனாகவும், பொறுமையுள்ளவனாகவும், தாழ்மையுள்ளவனாகவும், சுயநலமில்லாதவனாகவும், நிதானமுள்ளவனாகவும் மாற்றக் கூடியதான ஆராதனை. இவைகளே உண்மையான ஆராதனைக்குரிய அடையாளங்கள். அவ்விதமான ஆராதனையை அடையாளங் கண்டுபிடியுங்கள். இவ்விதமான ஆராதனையே பரலோகத்திலிருந்து வருவதாக இருக்கிறது. அது கடவுளுடைய முத்திரையையும் அங்கீகரிப்பையும் பெற்றதாக இருக்கிறது.

ஆராதனையைக் குறித்து மனிதர்கள் என்ன வேண்டுமானாலும் கருத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அது ஆராதிப்பவர்களின் நடைமுறை வாழ்க்கையிலே என்னவிதமான மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பதே உண்மையான ஆராதனையை பரீட்சித்துப் பார்க்கும் வழியாகும். சடங்காச்சாரங்களைக் கடைப்பிடித்து செய்கின்ற ஆராதனையே இந்நாட்களில் மிகவும் சிறப்பான ஆராதனை முறை என சிலர் சொல்லுவார்கள். சுவிசேஷக் குழுக்கள் எளிமையாக, சடங்காச்சாரங்கள் இல்லாமல் செய்கின்ற ஆராதனையைக் குறித்து அவர்கள் இழிவாகப் பேசலாம். ஆலயத்தில் காணப்படுகின்ற பகட்டான அணிகலன்களும், அலங்காரங்களும் கொண்ட ஆராதனைதான் பரலோகத்தின் தேவனுக்கு உகந்ததான ஆராதனையென அவர்கள் வானமளாவப் புகழ் பாடலாம். ஆனால், நான் அவர்களுக்கு என்ன சொல்வேனென்றால், ஓர் ஆராதனையினால் விளைகின்ற நன்மைகளை ஒருமுறை பார்த்துவிட்டு எது சரியான ஆராதனையெனத் தீர்மானிக்கலாம் என்பேன். சடங்காச்சாரமாக ஆராதனையை நடத்துகிறவர்கள் இதுவரைக்கும் மென்மையான பாடல்களை காதைக் கிழிக்கும் இரைச்சலான இசைகளாகத்தான் மாற்றியிருக்கிறார்கள். ஆராதனைகளில் பாவ அறிக்கைகள் ஒருபுறமும், நடனமாடுதல் மறுபுறமுமாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இவ்விதமான ஆராதனைகளைக் குறித்து நாம் குறைவாக மதிப்பிடுவதைக் குறித்து ஆச்சரியமொன்றுமில்லையே.

இதையெல்லாம் வைத்து இப்போது நாம் பொதுவான ஒரு முடிவுக்கு வருவது அவசியம். ஒருவனின் தனிப்பட்ட சொந்த வாழ்வில் எத்தகைய ஆவிக்குரிய மாற்றத்தை ஓர் ஆராதனை ஏற்படுத்தியிருக்கிறதோ அதுவே சிறந்த ஆராதனையாகும் என்பதுதான் அந்த முடிவு. சபை அங்கத்தினர்கள் தங்களுடைய வீட்டிலும், சொந்த வாழ்க்கையிலும் எவ்வளவு பரிசுத்தமாக நடந்துகொள்கிறார்கள் என்பதை வைத்தே அந்த ஆராதனை சிறப்பானதா இல்லையா என்பதைக் கூற முடியும். நாம் பங்குபெறுகின்ற பொது ஆராதனை நம்மில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள கீழ்வரும் கேள்விகளைக் கேட்டுப் பார்க்க வேண்டும். அது நமது மனசாட்சியை உயிர்ப்பித்திருக்கிறதா? அது நம்மைக் கிறிஸ்துவிடம் செல்ல வைத்திருக்கிறதா? அது நமக்கு மேலும் ஞானத்தைக் கொடுப்பதாயிருக்கிறதா? நமது வாழ்க்கையைப் பரிசுத்தப்படுத்தியிருக்கிறதா? அப்படி செய்திருக்குமானால் நாம் அந்த ஆராதனையைக் குறித்து நாம் நம்பிக்கையோடிருக்கலாம். அவ்வித ஆராதனையைக் குறித்து நாம் வெட்கப்படத் தேவையில்லை.

ஒரு காலம் வரப்போகிறது. அப்போது சபையார் பிரிந்து போவதில்லை. பரிசுத்த ஓய்வு நாள் நித்தியமாக நீடித்திருக்கப் போகிறது. துதிப்பாடலானது தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருக்கும். அந்தக் கூட்டத்தார் ஒருபோதும் சிதறிப் போகமாட்டார்கள். அந்தக் கூட்டத்திலே, பூலோகத்திலே தேவனை “ஆவியோடு தொழுது கொண்டவர்கள்” மாத்திரம் இருப்பார்கள். நாம் இங்கு அப்படி இருப்போமானால் பரலோகத்திலுள்ள அந்தக் கூட்டத்தாரோடு காணப்படுவோம். இங்கு நாம் பல சமயங்களில் கடவுளை பலவீனமுள்ளவர்களாகவும், நேர்மையற்றவர்களாகவும், உற்சாகமிழந்தவர்களாகவும் தொழுதுகொள்ளுகிறோம். ஆனால் பரலோகத்திலோ மகிமையடைந்த சரீரத்தைப் பெற்றுக் கொண்டவர்களாக இருப்பதால், சோர்வில்லாமலும், கவனம் சிதறாமல் ஒரே நோக்குடையவர்களாகவும் அவரைத் தொழுவோம்.

இங்கே நாம் எவ்வளவு முயற்சித்தாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நிழலாகப் பார்க்கிறவர்களாகத்தான் காணப்படுகிறோம். அவரை பூரணமாக அறிந்துகொள்ளாதவர்களாகவும், அவர்மேல் இன்னும் அதிகமான அன்பு காண்பிக்க இயலாதவர்களாகவும் நாம் இங்கு இருப்பதைக் குறித்து அதிக விசனமடைகிறோம். அங்கேயோ நம்மிலுள்ள பாவமானது முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிடுகிறபடியால், கர்த்தராகிய இயேசுவை முகமுகமாகத் தரிசிப்போம். அவரை அவர் இருக்கிறவண்ணமாகவே அறிந்துகொள்வோம். நாமும் இருக்கிறவண்ணமாகவே அறியப்பட்டிருப்போம். விசுவாசமானது இனிமையும், சமாதானமுமாக இருக்குமானால், நமது பார்வையும் சரியானதாக இருக்கும்.

உலகத்தின் கவலைகளாலும் பாரங்களாலும் நாம் இங்கே நெருக்கப்படுவதால், நாம் ஏறெடுக்கின்ற ஆராதனையானது பல சமயங்களில் மகிழ்ச்சிகரமாக இருப்பதில்லை. நமக்கு அருமையானவர்கள் மரித்துப் போன கல்லறையண்டையில் கண்களில் கண்ணீரோடு நிற்கும் வேளையிலே துதிப்பாடல்களைப் பாட முடிவதில்லை. நமது எதிர்பார்ப்புகள் நசுக்கப்படும்போதும், குடும்பத்தில் துயரங்களை சந்திக்கும்போதும் சந்தோஷகீதங்களைப் பாட முடிவதில்லை. பரலோகத்திலோ நமது கண்ணீர் யாவும் துடைக்கப்படும். கிறிஸ்துவுக்குள்ளாக மரித்த பரிசுத்தவான்கள் அனைவரையும் மீண்டுமாக அங்கே நாம் சந்திப்போம். பூலோகத்தில் நாம் பட்ட கஷ்டங்கள் யாவும் அங்கே மறைந்து போய் நமது பாதை தெளிவும் இலேசுமாகும். பல நேரங்களிலே நாம் இங்கே பூலோகத்திலே தனிமையாக இருப்பதாக உணருகிறோம். கர்த்தருடைய சபையிலேகூட உண்மையாக அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் வெகு சிலரே இருப்பதாக அறிகிறோம். ஆனால் பரலோகத்திலோ மனிதரால் எண்ண முடியாத அளவுக்கு சகோதரர்களும் சகோதரிகளும் இருப்பதைக் கண்டு பேரானந்தம் அடையப் போகிறோம். அவர்கள் எல்லோரும் ஒரே மனதையும் ஒரே இருதயத்தையும் கொண்டவர்களாக இருப்பார்கள். எல்லோருமே குற்றங்களிலிருந்தும், பலவீனங்களிலிருந்தும், சோர்வுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். ஒரே இரட்சகரில் அனைவரும் களிகூர்ந்திருப்பார்கள். அவரைத் துதிப்பதிலேயே நித்திய காலத்தையும் கழிக்கும்படியான ஆயத்தத்தோடே இருப்பார்கள். நம்மோடு சேர்ந்து கடவுளை உண்மையாகத் தொழக் கூடியவர்கள் பரலோகத்திலே நமக்கு ஏராளமாக இருப்பார்கள்.

இவ்விதமான நம்பிக்கையைத் தரித்துக் கொண்டவர்களாக நமது இருதயத்தை உயர்த்தி, முன்னேறிச் செல்லுவோம். கர்த்தர் வருவதற்கு கொஞ்சக் காலம்தான் இருக்கிறது. இரவு கடந்து போகிறது. பகல் நெருங்கிவிட்டது. கடவுளைத் தொழுவோம், ஜெபிப்போம், துதிப்போம், வேதத்தை வாசிப்போம். பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புவிக்கப்பட்ட விசுவாசத்தைப் பற்றிக் கொண்டவர்களாக, வேதபூர்வமான ஆராதனைக்கு விரோதமான எந்த செய்கைக்கும் தைரியத்தோடு எதிர்த்து நிற்போம், சுவிசேஷ ஆராதனையாகிய சுடரை நமது பிள்ளைகளுக்கும், பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் அளிப்பதில் விடாமல் முயற்சி செய்வோம். இன்னும் கொஞ்சக் காலம்தான். வரவேண்டியவர் வரப்போகிறார். தாமதிக்கமாட்டார். “ஆவியோடும் உண்மையோடும் தேவனை ஆராதிக்கிறவர்களாக” காணப்படுகின்ற உண்மையான விசுவாசிகளே அந்நாளில் மிகவும் பாக்கியவான்களாக கருதப்படுவார்கள்!

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s