பல வேலைகளுக்கு மத்தியில் இந்த இதழை நேரத்தோடு முடித்து உங்கள் முன் வைக்க கர்த்தர் கிருபை செய்தார். தொடர்ந்து திருமறைத்தீபம் உங்களுக்கு பெரும் பயனளித்து வருவதை கேள்விப்பட்டும், கடிதங்களை வாசித்தும், பலரிடம் நேரில் கேட்டறிந்தும் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கும், என் சபைக்கும், என்னோடிணைந்து இந்த ஊழியத்தில் பணிபுரிந்து வருகிறவர்களுக்கும் இது நிச்சயம் ஊக்கத்தை அளிக்கிறது. தொடர்ந்து எங்களுக்காகவும், இந்தப் பணிக்காகவும் ஜெபியுங்கள்.
இந்த இதழில் பெரியவர் ரைலின் ஆராதனை பற்றிய ஆக்கம் நிறைவு பெறுகிறது. அந்த ஆக்கத்தின் நடைமுறைப் பலனை விளக்கி சுருக்கமாக எழுதியிருக்கிறேன். ரைலின் ஆக்கம் உங்கள் கண்களைத் திறந்து வைத்து கர்த்தரை உங்கள் சபையில் அவருடைய வேதபோதனையின்படி ஆராதிக்க வைக்குமானால் அதைவிட பெரிய ஆத்மீக எழப்புதல் இருக்க முடியாது. அது நடக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய இருதயத்தின் தாகம். கடந்த இதழில் வந்த பாகம் பலருக்கு ஆசீர்வாதமாக இருப்பதை அறிந்து கர்த்தருக்கு நான் நன்றி செலுத்துகிறேன். இந்த இதழில் வந்திருப்பது உங்களை மேலும் சிந்திக்கவும், செயல்படவும் வைக்கட்டும்.
அல்பர்ட் மார்டினின் ‘இயேசுவிடம் வர ஏன் சிலருக்கு மனதில்லை?’ என்ற சுவிசேஷ ஆக்கம் இந்த இதழில் வந்திருக்கின்றது. இது அருமையான சுவிசேஷப் பிரசங்கம். வாசித்து ஆத்மீகப் பலனைப் பெற்றுக்கொள்ளுங்கள். தொடர்ந்தும் இத்தகைய ஆக்கங்களை வெளியிட விரும்புகிறோம். சுவிசேஷ செய்தி என்ற பெயரில் சுவிசேஷம் கலங்கப்படுத்தப்பட்டு வருகின்ற காலப்பகுதியில் நாம் வாழுகிறோம். சுவிசேஷம் என்றால் என்ன என்பதை இந்த ஆக்கம் நிச்சயம் உங்களுக்கு தெளிவாக விளக்கும். கிறிஸ்தவர்கள் சுவிசேஷத்தைக் கேட்பதும், சுவிசேஷப் பிரசங்கங்களை வாசிப்பதும் என்னைப் பொறுத்தவரையில் மிகவும் அவசியம். கேடான நம்மிருதயத்துக்கு சுவிசேஷம் ஆத்மீக வைட்டமின் போல உதவி செய்யும். கர்த்தர் எத்தனை பெரியவர் என்பதையும், அவர் கொடுத்திருக்கும் இரட்சிப்பு எத்தனை ஆசீர்வாதமானது என்பதையும் உணர்ந்து தொடர்ந்து கர்த்தரைத் துதித்து பரிசுத்தமாக வாழ சுவிசேஷம் உதவுகிறது.
பாவத்தை அழித்தல் பற்றிய என்னுடைய ஆக்கத்தின் மூன்றாவது பகுதியும் இந்த இதழில் வந்திருக்கிறது. இந்த இதழை நல்லமுறையில் தயாரித்து வெளியிடவும், விநியோகிக்கவும் தமிழகத்திலும், ஸ்ரீ லங்காவிலும் பிரதிபலன் பாராமல் உழைத்து உதவியிருக்கும் நல்ல இதயங்களுக்கு என் நன்றி.- ஆசிரியர்