ஆத்தும சிகிச்சையளிக்கும் ஆவிக்குரிய பிரசங்கம்

இந்த இதழில் அல்பர்ட். என். மார்டினினுடைய சுவிசேஷப் பிரசங்கத்தைத் தந்திருக்கிறோம். கடந்த இதழில் இதே போன்று இன்னுமொரு அருமையான சுவிசேஷப் பிரசங்கத்தைத் தந்திருந்தோம். நிச்சயம் நீங்கள் அதை வாசித்திருப்பீர்கள். பயனடைந்தும் இருப்பீர்கள். இந்த சுவிசேஷப் பிரசங்கங்களைப் பற்றிய சில விசேஷ அம்சங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இந்தப் பிரசங்கங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் செய்தி பற்றியதல்ல அந்த விஷயம். செய்திகள் வேதபூர்வமானவை. வேத வசனங்கள் அருமையாக தகுந்த முறையில் விளக்கப்பட்டிருக்கின்றன. சுவிசேஷ செய்திகள் எப்படி இருக்க வேண்டுமோ அந்த முறையில் நேர்த்தியாக அமைந்திருக்கின்றன. சுவிசேஷப் பிரசங்கமளிப்பவர்கள் இவற்றை வாசித்துக் கற்றுக்கொள்ளுவது அவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும். நான் சொல்லப்போவது செய்தி பற்றிய காரியமில்லையென்றால் எதைப் பற்றியது என்று நீங்கள் கேட்பது எனக்குத் தெரிகிறது. நான் சொல்லப்போவது இந்த செய்திகளைப் பிரசங்கித்திருப்பவர் அந்த செய்திகளை நேர்த்தியாகத் தயாரித்து அவற்றை எந்த முறையில் கேட்கின்றவர்களின் இதயத்தைத் தொடும் வகையில் அவர்களோடு அந்த செய்தியின் அவசியத்தை வலியுறுத்தி ஒரு தர்க்கவாதியைப் போல விவாதம் செய்து அவர்களுடைய பொறுப்பை ஆணித்தரமாக உணர்த்துகிறார் என்பது பற்றியே நான் விளக்க விரும்புகிறேன். இவற்றைக் கொடுத்திருக்கின்ற பிரசங்கி இவற்றை எப்படிக் கொடுக்கிறார்? இவற்றின் மூலம் ஆத்துமாக்களின் இருதயங்களோடு எப்படி இடைப்படுகிறார் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும் என்பதுதான் இந்த ஆக்கத்தின் நோக்கம்.

இந்தப் பிரசங்கி இந்தச் செய்திகளின் மூலம் ஆத்துமாக்களோடு ஆவிக்குரிய தர்க்கத்தில் ஈடுபடும் அந்தச் செயல் (a logically powerful spiritual reasoning) இன்றைக்கு பிரசங்கங்களில் பெரும்பாலும் காண முடியாத ஒரு காட்சி. அதுவும், நம்மினத்தில் அத்தகைய காரியங்களை எதிர்பார்க்க முடியாதளவுக்கு சுவிசேஷப் பிரசங்கம் தரம் குறைந்த நிலையில் இருக்கிறது. இதற்கும் தற்கால சுவிசேஷப் பிரசங்கிகளில் நாம் காண்கின்ற, ஆத்துமாக்களின் உணர்ச்சிகளோடு விளையாடி சுவிசேஷ செய்தியின் மூலம் தன்னுடைய இச்சைகளை நிறைவேற்றிக் கொள்ளும் விதத்தில் அவர்களைக் கட்டுப்படுத்துகிற செயலுக்கும் (self centered manipulation of people’s emotions) இடையில் பெரிய வித்தியாசம் இருக்கிறது. இந்த இரண்டும் வடதுருவம், தென்துருவம் போல் நெருங்கி வரமுடியாத தொலைவில் இருக்கின்றன.
முக்கியமாக கடந்த இதழில் வந்த ‘இயேசுவிடம் வர ஏன் சிலருக்கு மனதில்லை’ என்ற பிரசங்கத்தை எடுத்துக்கொள்ளுவோம். அந்த செய்தியில் சிலர் இயேசுவிடம் வராமலிருப்பதற்கு என்ன காரணம் என்று வேத வசனங்கள் பலவற்றின் மூலம் தெளிவாக விளக்கியிருக்கிறார் அல்பர்ட் மார்டின். அது மிகவும் அவசியமானது. ஆனால், அவர் அதோடு நிறுத்திவிடவில்லை. ‘இதுவரை நான் சொன்னவற்றை வாசித்து நீங்களே புரிந்துகொள்ளுங்கள்’ என்று அவர் ஆத்துமாக்களை விட்டுவிடவில்லை. ‘ஆவியானவர் இனி செய்ய வேண்டியதை செய்துகொள்ளட்டும், என் வேலையை நான் செய்துவிட்டேன்’ என்று சத்தியத்தை வசனங்களால் விளக்கிவிட்டுப் போய்விடவில்லை. அந்த வசனங்களில் சொல்லப்பட்டுள்ள உண்மைகளின் அடிப்படையில் அவர் ஆத்துமாக்களுடைய இருதயங்களோடு இடைப்படும் விதத்தில் தான் இந்தப் பிரசங்கத்தில் ஒரு விசேஷ அம்சத்தை, இந்தக்காலப் பிரசங்கங்களில் பார்க்க முடியாமலிருக்கிற அம்சத்தை நான் பார்க்கிறேன்.
அல்பர்ட் மார்டினின் இந்த இரு பிரசங்கங்களிலும் நான் கவனித்த உண்மைகளை படிப்படியாக விளக்க விரும்புகிறேன்.

(1) முதலில், அவருக்கு ஆத்துமாக்களுடைய இருதயத்தின் உண்மை நிலை (பாவ நிலை) இறையியல் அடிப்படையில் புரிந்திருக்கிறது. அதனால்தான் அவருடைய பிரசங்கத் தலைப்பே, ‘இயேசுவிடம் வர ஏன் சிலருக்கு மனதில்லை’ என்றிருக்கிறது. ‘மனதில்லை’ என்ற வார்த்தைக்கு விருப்பமில்லை என்பது அர்த்தமல்ல. ஆங்கிலத்தில் இதற்கு Will Not என்று அர்த்தம். தமிழில் இதை ‘சித்தம் இல்லை’ என்றுக் கூறலாம். விருப்பத்திற்கும், சித்தங் கொள்ளுவதற்கும் இடையில் பெரிய வேறுபாடிருக்கிறது. சித்தங் கொள்ளுவது என்பது உறுதியாக ஒரு காரியத்தை சுதந்திரமாக தீர்மானித்து அதில் ஈடுபடுவது என்று பொருள். இயேசுவிடம் சிலர் வராமல் இருப்பதற்குக் காரணம் அவர்கள் சுயமாக வரமாட்டேன் என்று உறுதியாக தீர்மானம் எடுத்து இருப்பதால்தான் என்று இயேசு விளக்குகிறார். ஆத்துமாக்களின் அந்த நிலையை அல்பர்ட் மார்டின் தெளிவாக உணர்ந்திருக்கிறார். அவர்கள் இயேசுவிடம் வராமலிருப்பதற்கு அது மட்டுமே காரணம் என்பதையும், ஆத்துமாக்களின் ஆவிக்குரிய பலவீன நிலையையும் அவர் பூரணமாக அறிந்துவைத்திருக்கிறார். அந்த அறிவும், உணர்வும் ஆத்துமாக்களோடு எப்படிப் பிரசங்கத்தின் மூலம் இடைப்பட வேண்டும் என்ற ஞானத்தையும், வல்லமையையும் அவருக்குக் கொடுத்திருக்கிறது. ஆத்தமாவின் பாவ நிலை பற்றிய இறையியல் விளக்கங்களில் தெளிவில்லாமல் இருந்தால் பிரசங்கம் இருக்க வேண்டிய முறையில் இருக்க முடியாது. அல்பர்ட் மார்டினின் பிரசங்கம் பிரசங்கமாக இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

(2) அடுத்ததாக, ஆத்துமாக்களின் இருதய இச்சைகளையும், நோக்கங்களையும், வாழ்க்கையின் இலக்குகளையும் அக்குவேறாகப் புரிந்து வைத்திருக்கிறார் இந்தப் பிரசங்கி. அவற்றை அவர் வெளிப்படையாகப் பிரசங்கத்தில கொண்டுவந்து ஆத்துமாக்களின் இருதயத்தோடு சம்பாஷனையில் ஈடுபடுவதைக் காண்கிறோம். இந்தப் பிரசங்கத்தைக் கேட்கும் எந்த ஆத்துமாவும் இது என் சம்பந்தப்பட்டதல்ல என்று சொல்லுவதற்கு வழியே இல்லை.  ஆத்துமாக்களின் இருதயத்தின் ஆத்மீக நிலையை மட்டுமல்லாது அவர்களுடைய இச்சைகள், நடவடிக்கைகள், வாழ்க்கை முறை என்பவற்றைத் தெளிவாக அறிந்துவைத்திருந்து ஆத்துமாக்களுக்கு அந்நியனைப் போலத் தோன்றாத வகையில் அவர்களுக்கு பக்கத்தில் நின்று எல்லாவற்றையும் பார்த்ததுபோல அல்பர்ட் மார்டினால் வெளிப்படையாகப் பேச முடிகிறது. ஆத்துமாக்களைத் தெரிந்து வைத்திராத ஒருவரால் இப்படிச் செய்யவே முடியாது. பிரசங்கங்கள் இன்றைக்கு புரிந்துகொள்ள முடியாதபடி (strange) இருப்பதற்குக் காரணம் பிரசங்கிகள் ஆத்துமாக்களைவிட்டு தொலைதூரத்தில் நிற்பதுதான்.

(3) இந்தப் பிரசங்கங்களில் மிக முக்கியமாக நான் கவனித்தது 17ம் நூற்றாண்டுப் பிரசங்கிகளில் காணப்பட்ட மிக அவசியமான ஒரு விஷயம். அந்தக் காலத்து பியூரிட்டன் பெரியவர்களை ‘ஆத்துமாக்களின் வைத்தியர்கள்’ (Doctors of the souls) என்று அழைப்பார்கள். அதற்குக் காரணம் அவர்கள் ஆத்துமாக்களுடைய ஆத்மீகத் தேவையை அறிந்து அதற்குத் தகுந்தாற்போல் ஆத்மீக ஆலோசனைகளை அள்ளி அளித்ததுதான். ஒரு வைத்தியனுக்கு தன்னிடம் வருகின்ற நோயாளியின் நிலை தெரிய வேண்டும். என்ன நோய் அவனைப் பிடித்திருக்கிறது, அந்த நோயால் பாதிக்கப்பட்டு எந்த நிலையில் அவன் இருக்கிறான், அவனுக்கு எப்படித் தகுந்த முறையில் வைத்தியம் செய்ய வேண்டும் என்பதெல்லாம் நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற வாஞ்சை இருந்தால் மட்டும் போதாது. அதற்குமேல் எப்படி அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்பது நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். அவசியமானால் அறுவை சிகிச்சையும் செய்யத் தெரிந்திருக்க வேண்டும். அதுபோல, பியூரிட்டன் பிரசங்கிகள் ஆத்தும அறுவை சிகிச்சை செய்வதில் கைதேர்ந்தவர்களாக இருந்தார்கள். ஆத்மீகக் காரியங்களைக் குறித்து ஆத்துமாக்களை சிந்திக்க வைப்பதில் மன்னர்களாக இருந்தார்கள். அவர்களுடைய இருதயத்தோடு சத்தியங்களைப் பயன்படுத்திப் போராடுவதில் சிறந்தவர்களாக இருந்தார்கள். ஜோன் பனியன் (John Bunyan), ஜோன் ஓவன் (John Owen), ஜோன் பிளேவல் (John Flavel), ரிச்சட் சிப்ஸ் (Richard Sibbs) போன்ற பிரசங்கிகளை இதற்கு உதாரணமாகக் காட்டலாம். இந்த விதத்தில் அவர்களுக்குப் பின்னால் சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு வந்த ஸ்பர்ஜன் பிரசங்கம் செய்திருக்கிறார். பியூரிட்டன்களைப் போல அல்பர்ட் மார்டின் ஆத்துமாக்களுடைய இருதயத்தை அறிந்திருப்பதோடு இயேசுவை விசுவாசிக்க வேண்டிய அவர்களுடைய கடமையை உணர்த்துவதற்காக அவர்கள் ஏன் இயேசுவிடம் இன்றே வரக்கூடாது என்று கேட்டுக் கேட்டு அவர்களைப் பிழிந்தெடுக்கிறார். ‘இயேசுவிடம் வர ஏன் சிலருக்கு மனதில்லை’ என்ற பிரசங்கத்தில் அவர்கள் இயேசுவிடம் வராமலிருப்பதற்கான உலகக் காரியங்கள் ஒவ்வொன்றையும் அடுத்தடுத்து சாட்டையடிபோல அவர்களுக்கு முன் எடுத்துவைத்து அவர்களை சிந்திக்கும்படி வற்புறுத்துகிறார். கேட்கின்ற ஆத்துமாக்களுக்கு சமாதானம் இல்லாதபடி அவர்களுடைய இருதயம் இந்தப் பிரசங்கத்தில் அப்பட்டமாகத் திறந்து காட்டப்படுகிறது. வக்கீல் நீதிமன்றத்தில் அடுக்கடுக்காக எடுத்து வைக்கும் வாதங்களைப் போல காரணங்கள் ஒவ்வொன்றையும் அள்ளித் தந்து ஆத்துமாவை விரட்டி விரட்டிப் பிடிக்கிறார் இந்தப் பிரசங்கி. தூங்கினால் மட்டுமே ஒருவனால் இந்தப் பிரசங்கத்தில் இருந்து தப்ப முடியும் என்று சொல்ல வைக்கும்படியாக ஆத்தமாவின் இருதயம் இதில் கசக்கிப் பிழியப்படுகிறது. இது மனிதன் ஆத்துமாக்களின் இருதயத்து உணர்ச்சிகளோடு விளையாடும் செயலல்ல. அதற்கும் இதற்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது. இங்கே பிரசங்கி ஆத்துமாக்களோடு வேத அடிப்படையில் அவர்களுடைய இருதயத்தை அறிந்திருந்து பெரும் ஆத்மீக தர்க்கத்தில் ஈடுபடுகிறார். இதைக் கவனமாகக் கேட்கின்ற ஆத்துமாவால் என்ன பதில் சொல்ல முடியும்? இதெல்லாம் உண்மையில்லை என்று சொல்லுவதற்கு ஒருவனால் நிச்சயம் முடியாதபடி ஈட்டிபோல் பாய்கிறது ஒவ்வொரு அம்பும். இதைக் கவனித்துக் கெட்கிற ஒருவன், ‘இப்போதே எனக்கு இந்த இயேசு வேண்டும்’ என்று தன்னுடைய இயலாமையோடு கடவுளுக்கு முன் பிச்சைக்காரனைப்போல நிற்கத்தான் முடியும். அகம்பாவத்தோடு இந்த உண்மைகளையெல்லாம் ஒருவன் மறுத்து நிற்பானானால் அதை அவனுடைய அசிங்கமான இருதய ஆணவத்தினால் மட்டுமே செய்ய முடியுமே தவிர சிந்தித்து உணர்ந்ததாலல்ல.

அல்பர்ட் மார்டின் மனித ஆத்துமாவோடு இந்தப் பிரசங்கங்களில் செய்கின்ற ஆவிக்குரிய தர்க்கம் சுலபமானதல்ல. அவர் இரட்சிப்புக்காக மனிதன் எதை வேண்டுமானாலும் செய்துவிட முடியும் என்று இந்தப் பிரசங்கங்களில் சொல்லவில்லை. இயேசுவுக்காக அவர்கள் தீர்மானம் எடுக்க முடியும் என்றும் சொல்லவில்லை. அப்படிச் சொல்லுவது வேதபூர்வமாகாது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். இரட்சிப்புக்காக ஆத்துமா செய்ய வேண்டிய கடமையை மட்டுமே அவர் வலியுறுத்துகிறார். ‘நீ இரட்சிப்பை அடையாமல் இருப்பதற்கு நீ மட்டுமே, உன்னுடைய செயல்கள் மட்டுமே காரணம்’ என்று ஆணித்தரமாக சொல்லி ஆத்துமாவை சிந்திக்க வைக்கிறார். இயேசுவிடம் இன்றே, இப்போதே மனந்திரும்பி வந்துவிடு என்று அறைகூவலிடுகிறார். இதையே பியூரிட்டன் பெரியவர்கள் தங்களுடைய போதனைகளில் மிகச் சிறப்பாக செய்தார்கள். அத்தகைய ஆவிக்குரிய, ஆவியின் பலத்தினால் ஆத்தும ஆதாயத்துக்காக கொடுக்கப்படும் அருமைப் பிரசங்கங்களை நம்மினம் கேட்கும் ஒரு காலம் வருமா என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது.

One thought on “ஆத்தும சிகிச்சையளிக்கும் ஆவிக்குரிய பிரசங்கம்

  1. For several years I am going through the magazine Bible Lamp. I have gone through many articles in bible lamp, up to me current bible lamp issue is been best of the best, and it real deals with human heart and its shows who is man? What type of Will he has in Spiritual life. It makes us to understand the mercy of god and value of our Salvation.
    And these articles in current issue make us too know the importance of 1689 COF. May Our Lord Jesus Christ Bless the magazine continually

    Like

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s