உன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்

கஷ்டங்கள்! துயரங்கள்! பிரச்சனைகள்!

இந்த உலகத்தில் நம் வாழ்க்கை கஷ்டங்கள் நிறைந்ததாகவே இருக்கின்றது. பலவிதமான தொல்லைகள் நமக்கு ஏற்படுகின்றன. குடும்பத்தில் பிரச்சனை, பொருளாதாரப் பிரச்சனை, சரீரப் பிரச்சனைகள், அலுவலகத்தில் பிரச்சனைகள், இப்படியாக நாம் எல்லோருமே ஏதாவதொரு விதத்தில் பிரச்சனைகளை அன்றாடம் சந்திக்கிறோம்.

இந்தப் பிரச்சனைகளையெல்லாம் தீர்த்துக்கொள்ளுவதற்கு பல விதங்களில் முயற்சி செய்கிறோம். குடும்பப்பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள நாம் குடும்ப ஆலோசகரை நாடுகிறோம். நமக்கு பணப்பிரச்சனை இருக்குமானால் வேறு நல்ல வேலை தேடிக்கொள்ள முயற்சிக்கிறோம். சரீரத்தில் ஏற்படுகின்ற நோய்களைக் குணமாக்க வைத்தியரை நாடிப் போகிறோம். நமது நிலையை சரிப்படுத்திக் கொள்ளுவதற்கு நம்மாலான அனைத்தையும் செய்கிறோம்.
இவை எல்லாவற்றிற்கும் மேலான மிகப்பெரிய பிரச்சனை ஒன்று நமக்கு இருக்கிறது. அதைத் தீர்ப்பதற்கு நாம் முயற்சி எடுக்காவிட்டால் நமது நிலைமை மிகவும் மோசமானதாகிவிடும். சுகவீனங்கள், பொருளாதாரக் குறைவு, வேறு எந்தப் பெருங்கஷ்டங்கள் ஏற்படுத்தும் விளைவுகளைக் காட்டிலும் அது மோசமான விளைவை ஏற்படுத்திவிடும். இருந்தாலும் மனித இனம் அதைக் குறித்து எந்த அக்கறையும் காட்டாமல் இருந்துவருகிறது.

இந்த மிகப்பெரிய பிரச்சனைக்கு இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. அவற்றைத்தான் நான் உன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் என்ற தலைப்பில் கொடுத்திருக்கிறேன். எல்லா ஆண்களும், பெண்களும், சிறுவர்களும், சிறுமிகளும் இந்தப் பிரச்சனையை சுமந்துகொண்டிருக்கிறார்கள் என்று கடவுள் வேதத்தில் விளக்கியிருக்கிறார்.

குடும்பப்பிரச்சனைகள், பொருளாதாரம், சுகவீனம் போன்ற பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு நீ எடுக்கின்ற முயற்சிகள் எல்லாம் அவசியமானதுதான். ஆனால், கடவுளின் நியாயஸ்தலத்தில் பதிவு செய்து வைக்கப்பட்டிருக்கின்ற உனது இருதயத்தின் பொல்லாத செயல்கள் பற்றிய பதிவுகளை சரிசெய்து கொள்வதும், உன்னுடைய கெட்டுப்போன இருதயத்தை புதுப்பித்துக் கொள்வதும் அவற்றையெல்லாம் விட முக்கியமானது. உன்னுடைய மொத்தப் பிரச்சனைகளில் இருந்து நீ விடுபடுவதற்கு இது அவசியமாயிருக்கிறது. உன்னுடைய பொல்லாத இருதயத்தையும் அதன் பொல்லாத செயல்கள் பற்றிய பதிவுகளையும் நீ உணராமலும், அதைத் தீர்ப்பதற்கு ஒரு வழியைக் கண்டுபிடிக்காமலும் தொடர்ந்து வாழ்வாயானால், நீ பிறக்காமலிருந்திருந்தாலே நன்றாயிருந்திருக்கும் (மாற்கு 14:21).
உன்னுடைய தற்கால நன்மைகளுக்காகவும், நித்திய நன்மைகளுக்காகவும் நீ இந்தப் பெரிய பிரச்சனை எப்படிப்பட்டது என்பதைக் குறித்து கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான் அதைத் தீர்ப்பதற்கான ஒரு வழியை உன்னால் கண்டுபிடிக்க முடியும்.

உன்னுடைய குற்றங்களின் பதிவேடு

இந்த உலகத்திலுள்ள ஒவ்வொருவரையும் பற்றிய ஒரு குற்ற அறிக்கை பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. கடவுளே அதைக் கருணை காட்டி தள்ளுபடி செய்தாலொழிய அந்த அறிக்கையை யாராலும் அங்கிருந்து அகற்றிவிட முடியாது. “யாவரும் பாவத்திற்குட்பட்டவர்கள்”, “நீதிமான் ஒருவனாகிலும் இல்லை”, “நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை” (ரோமர் 3:9, 10, 12) என்று கடவுள் மனிதகுலத்தைப் பார்த்து சொல்லியிருப்பதை வேதம் சுட்டிக் காட்டுகிறது.

கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறவர்களாகிய நாம் அனைவரும் அவருக்குக் கணக்குக் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். அண்ட சராசரங்களை பராமரித்து வருகின்ற அவருடைய இயற்கையின் விதிகளுக்கு உட்பட்டவர்களாகத்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதுமாத்திரமல்லாமல், அவருடைய நீதியான சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டியவர்களாகவும் நாம் இருக்கிறோம். ஒருவேளை நாம் அவருடைய ஆளுகையை ஏற்கமுடியாது எனப் போர்க்கொடி உயர்த்துகிறவர்களாக இருக்கலாம். ஆனால், அவருக்குக் கணக்குக் கொடுக்க வேண்டிய நமது நிலையை அது ஒன்றும் மாற்றிவிடப் போவதில்லை. அவர் ஆளுகின்ற கடவுள், நாம் அவருடைய படைப்புயிர்கள் என்பதுதான் உண்மையான நிலைமை.

நாம் பிறந்த நாட்டிற்கு பொறுப்புள்ள குடிமகனாக இருப்பது போலவே, கடவுளுக்கும் நாம் பதில் சொல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம். நீ ஒரு நாட்டில் பிறந்தவுடனேயே அந்த நாட்டின் குடிமகனாகக் கருதப்படுகிறாய். அந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டவனாக இருக்கிறாய். அந்த நாட்டிற்கு நீ வரி செலுத்த மறுத்தாலோ, அல்லது யாருடைய பொருட்களையாவது திருடினாலோ, யாரையாவது தாக்கினாலோ உன் குற்றத்திற்கு நீ பதில் சொல்ல வேண்டியவனாகிறாய். உன் மீது காவல்துறையினரால் குற்றம் சுமத்தப்படும். நீதிமன்றத்தில் நீ விசாரிக்கப்படுவாய். உன் குற்றத்திற்குரிய தண்டனை வழங்கப்படும். நான் இந்த சட்டதிட்டங்களை ஒத்துக் கொள்ள மாட்டேன் என்று நீ எதிர்த்து நின்றாலுங்கூட, உன் குற்றத்திலிருந்தும் அதற்குரிய தண்டனையிலிருந்தும் உன்னால் தப்பித்துக் கொள்ள முடியாது. நீ சட்டதிட்டங்களை ஒத்துக் கொள்ளாமலிருப்பதோ, அதைக் குறித்த மாறுபாடான கருத்துக்களைக் கொண்டிருப்பதோ இங்கு முக்கியமல்ல. உன் சொந்தக் கருத்துக்களை எந்த நாடும் ஒரு பொருட்டாக மதிக்கப்போவதில்லை. நீ உன் நடவடிக்கைகளுக்கு கணக்குக் கொடுக்க வேண்டியவனாக இருக்கிறாய் என்பதே எந்த நாட்டின் சட்டத்திற்கும் அடிப்படையாயிருக்கிறது.

கடவுளின் ஆளுகையிலுள்ள நீ இப்போது சில உண்மைகளை சந்தித்துதான் ஆகவேண்டும். நீ கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறாய். ஆகவே அவருக்குக் கணக்குக் கொடுக்க வேண்டியவனாக இருக்கிறாய். அதுமாத்திரமல்ல, நீ கடவுளுக்கு விரோதமாக பாவம் செய்தவனாகக் காணப்படுகிறாய். உன் பாவங்களின் காரணமாக, நித்திய தண்டனை பெறுவதற்குதான் நீ தகுதியுள்ளவனாயிருக்கிறாய் என்று கடவுள் உன்னைக் குறித்து தீர்ப்பு அளித்திருக்கிறார். உன்னுடைய பிரச்சனையில் இது முதலாம் பாகம். அதாவது, உன்னைக் குறித்த ஒரு குற்றப்பத்திரிக்கை கடவுளின் நியாயஸ்தலத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்தக் குற்றங்களுக்காக நீ நியாயத்தீர்ப்பு நாளிலே தண்டனை பெறப்போகிறாய். அதை நீ சட்டபூர்வமாக சரிசெய்து கொள்ளாவிட்டால் உனக்கு தண்டனை நிச்சயம்.
உன்னைப் படைத்தவரும், நீ கணக்குக் கொடுக்க வேண்டியவருமான கடவுளுக்கு உன்னைப் பற்றிய அனைத்தும் நன்றாகத் தெரியும். “அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை. சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது. அவருக்கே நாம் கணக்கொப்புவிக்க வேண்டும்” (எபி 4:13) என்று வேதம் நமக்குப் போதிக்கிறது. இரகசியமாகவோ அல்லது வெளிப்படையாகவோ நீ செய்கிற எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார். “கர்த்தருடைய கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும் தீயோரையும் நோக்கிப் பார்க்கிறது” (நீதி 15:3) என்கிறது வேதம்.

அதுமட்டுமல்ல, அவருடைய நீதிசட்டங்களை மீறி நடக்கின்ற உன்னுடைய ஒவ்வொரு செயலையும் அவர் கவனமாக குற்றப்பதிவேட்டில் பதிவு செய்து கொண்டுவருகிறார். மனதாலும், வார்த்தையாலும், கருத்துக்களாலும், செயல்களினாலும் அவருடைய சட்டத்தை மீறுகின்ற உன்னுடைய குற்றங்கள் ஒவ்வொன்றையும் அவர் அதில் பதிவு செய்கிறார். நியாயத்தீர்ப்பின் நாளிலே, குற்றங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிற அந்தப் புத்தகங்கள் திறக்கப்படும்; அவரவர் தங்கள் செய்கைகளுக்கேற்ற தீர்ப்பைப் பெறுவார்கள் என்று வேத வசனம் சொல்லுகிறது. “பின்பு நான் பெரிய வெள்ளை சிங்காசனத்தையும், அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன். அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்று போயின. அவைகளுக்கு இடங்காணப்படவில்லை. மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக் கண்டேன். அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன. ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது. அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள். சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது. மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள். அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம். ஜீவப்புஸ்தகத்தில் எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்” (வெளிப் 20:11&15). பார், உன்னுடைய பாவங்களையெல்லாம் கடவுள் அறிந்து வைத்திருக்கிறாரே? அதற்காக உன்னை ஒரு நாள் நியாயந்தீர்க்கப் போகிறாரே? இது உன்னை நடுங்க வைக்கவில்லையா?
கடவுளுக்கும், அவருடைய நீதிச்சட்டங்களுக்கும் விரோதமாக, நீ செய்த உன்னுடைய பாவங்களின் ஆழ, அகலங்களை ஆராய்ந்து பார். பத்துக் கட்டளைகளில், நீ அவரை முழு மனதோடு நேசிக்க வேண்டுமென குறிப்பிட்டிருக்கிறார். அவருக்குப் பதிலாக எந்தவொரு கடவுளையும் நீ வணங்கக்கூடாது என்கிறார். மனிதன் தனக்கு மனதில் தோன்றுகிறவிதமாக கடவுளை உருவாக்குவதோ, தன் எண்ணப்படி தேவனைத் தொழுதுகொள்வதோ கூடாது என்கிறார். அவர் வெளிப்படுத்தித் தந்திருக்கின்ற வண்ணமாகவே அவரைத் தொழுது அவருக்கு சேவை செய்ய வேண்டும். அவருடைய நாமத்தையும் அவருடைய வார்த்தையையும் மகிமைப்படுத்த வேண்டும். அவர் குறித்திருக்கின்ற நாளிலே அவரை ஆராதிக்கவும், உன் வேலைகளிலிருந்து ஓய்ந்திருக்கவும் வேண்டும். அவர் நியமித்திருக்கின்ற மேலான அதிகாரங்களுக்கு (தகப்பன், தாய், ஆசிரியர், கணவன், மேலதிகாரிகள்) மரியாதை செலுத்த வேண்டும். கொலை செய்யக்கூடாது. விபச்சாரம் செய்யக்கூடாது. பிறர் பொருளின் மீது ஆசைப்படக் கூடாது. திருடக்கூடாது. பொய் சொல்லக் கூடாது. கடவுள் விலக்கி வைத்திருக்கும் காரியங்களின் மீது மனதாலும் ஆசைப்படக்கூடாது (யாத் 20:1-17) என்றெல்லாம் விவரமாகக் கடவுள் வேதத்தின் மூலமாகக் கட்டளையிட்டிருக்கிறார். இயேசுவிடம் ஒருவன் வந்து கேட்டான், கற்பனைகளிலெல்லாம் மிகவும் முக்கியமான கற்பனை எதுவென்று. அதற்கு இயேசு, “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக. இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கின்ற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவது போலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக” (மத் 22:37-39)
என்று கூறினார்.

வேதவசனங்களின்படிப் பார்த்தால் இவைகளில் எத்தனையோ கட்டளைகளை நீ மீறி கடவுளின் சாபத்துக்குட்பட்டவனாக இருப்பது உனக்குத் தெரியவில்லையா? இந்த உலகத்தில் ஒருவேளை நீ காவல் துறையினரால் குற்றஞ்சாட்டப்படாதவனாக இருக்கலாம். ஆனால் பரலோகத்திலே உன் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறதே!
அந்தக் குற்றங்களை சரிப்படுத்திக் கொள்வதற்கு உன்னால் சுயமாக எதுவும் செய்ய முடியாது என்பது இந்தப் பிரச்சனையை மேலும் பெரிய பிரச்சனையாக்குகிறது. கடவுளால் மாத்திரமே அந்தக் குற்றப்பத்திரிகையை சரிப்படுத்த முடியும். நீ பரலோகத்துக்குள் திருட்டுத்தனமாக நுழைந்து அந்தப் பதிவேடுகளில் இருப்பவற்றை அழித்துவிட முடியாது. கடவுள் ஏதோ தவறாக உன்னை நரகத்தின் பிரஜையாக எண்ணிவிட்டதுபோல் நீ நினைத்துக் கொண்டு, பக்திவேஷமிட்டும், வெளிப்பிரகாரமாக நல்லவன் போல் நடந்தும் கடவுளை ஏமாற்றிவிட உன்னால் முடியாது. பரலோகத்தின் நியாயஸ்தலத்தில் நீ லஞ்சம் கொடுக்க முடியாது. உன்னுடைய பாவங்களுக்குரிய கிரயத்தை கடவுள் முழுவதுமாக உன்னிடம் கேட்பார்: “பாவத்தின் சம்பளம் மரணம்” (ரோமர் 6:23) என்கிறது வேதம். கடவுள் தமது பரிசுத்தமான நீதிச்சட்டத்தின் வழிப்படியே சரியான தீர்ப்பளிப்பார். இல்லையென்றால் அவர் நீதியுள்ள கடவுளாயிருக்க முடியாதே.
இந்தப் பிரச்சனையின் தீவிரத்தை நீ சரியாகப் புரிந்து கொண்டாயானால், வாழ்க்கையின் மற்றப் பிரச்சனைகள் அனைத்தும் உன் கண்களுக்கு அற்பமானவையாகத் தெரியும். அப்போது, நீ கடவுளிடம் அவருடைய இரக்கத்திற்காக கெஞ்சி மன்றாடுவாய். ஆம், கடவுளிடம் இரக்கம் உண்டு என்பதே நல்ல செய்தியாயிருக்கிறது இல்லையா? பாவிகளின் குற்றப்பதிவுகளை கடவுள் மிகுந்த கிருபையோடும் வல்லமையோடும் நீக்கிப் போடுகிறார்; அவர்களுக்கு பதிலாக அந்தக் குற்றங்களை சுமந்த வேறொருவரைத் தண்டிப்பதன் மூலமாக தமது நீதியை அவர் நிறைவேற்றுகிறார்.

உனது பொல்லாத இருதயம்

உனது பிரச்சனைக்கு இந்த நற்செய்தியின் மூலமாகத் தீர்வு காண்பதற்கு முன்பாக அந்தப் பிரச்சனையின் இன்னொரு பக்கத்தையும் நாம் கவனிக்க வேண்டும். பரலோகத்தில் உனக்கு எதிராக ஒரு குற்றப்பதிவேடு இருப்பது மாத்திரமல்லாமல், இங்கே பூலோகத்திலே உனக்குள் ஒரு பொல்லாத இருதயமும் இருக்கிறது.

எல்லா மனிதர்களின் இருதயமும் கெட்டுப் போனதாயிருக்கிறது என்று கடவுள் வேத வசனங்களின் மூலமாகத் தெளிவாக அறிவித்திருக்கிறார். “எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது” என்று எரேமியா 17:9ல் சொல்லுவதைப் பார்க்கிறோம். வேதவாக்கியத்தில் இன்னொரு இடத்தில், “மனுபுத்திரரின் இருதயம் தீமையினால் நிறைந்திருக்கிறது. அவர்கள் உயிரோடிருக்கும் நாளளவும் அவர்கள் இருதயம் பைத்தியங்கொண்டிருக்கிறது” (பிரசங்கி 9:3) என்று வாசிக்கிறோம்.
மேலும் இயேசு கிறிஸ்துவும், தீங்கு யாவும் மனிதனின் இருதயத்திலிருந்துதான் புறப்பட்டு வருகிறது என்று தெளிவாகப் போதித்தார். “மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டு வரும். பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும்” (மாற்கு 7:21-23) என்றார். பாவமானது சூழ்நிலைகளினால் ஏற்படுவதல்ல. அது மனிதனுடைய பொல்லாத இருதயத்திலிருந்தே தோன்றி வருகிறது. உன்னுடைய மிகப்பெரிய பிரச்சனையின் மறுபுறம் இதுதான். சீர்திருத்த முடியாததும், பாவத்தை விரும்புகிறதும், கடவுளை வெறுக்கிறதுமான இருதயமானது கடவுளின் எதிரியாக இருக்கிறது. அது கடவுளின் சட்டதிட்டங்களுக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது (ரோமர் 8:7) என்கிறது வேதம்.

வேதம் சொல்லுவதுபோல நான் ஒன்றும் அவ்வளவு பொல்லாதவன் அல்ல என்று நீ நினைப்பாய். ஏனென்றால் உன் இருதயம் உன்னை ஏமாற்றுகிறது. இருதயம் மற்றவர்களை ஏமாற்றுவது மாத்திரமல்லாமல் உன்னையே ஏமாற்றக்கூடிய அளவிற்கு திறமை வாய்ந்தது. நீ மிகவும் மோசமான நிலையில் இருக்கிறாய் என்று கடவுள் சொல்லுவதைக் கொஞ்சமும் மதிக்காமல், நான் ஒன்றும் அவ்வளவு மோசமானவன் அல்ல என்று உன்னை எண்ண வைக்கிறது. ஒருவேளை நீ இன்னும் கொஞ்சம் ஆழமாக சிந்திக்கிறவனாயிருந்தால், உன் இருதயம் கொஞ்சம் இறங்கி வந்து, “நான் ரொம்ப பரிபூரணமானவனல்ல. ஏதோ கொஞ்சம் பரவாயில்லை” என்று கூறி உன்னை திருப்திப்பட்டுக்கொள்ள வைக்கிறது. இப்படி உன்னை நம்ப வைப்பதிலிருந்தே உன்னுடைய இருதயத்தின் போக்கிரித்தனம் தெளிவாகத் தெரிகிறதல்லவா? கடவுள் வெளிப்படுத்தியிருப்பதை உன் மனசாட்சி ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், அது ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. திரித்துக் கூறுகிறது. பலப் பொய்களை புனைந்து தன்னுடைய மெய்யான நிலையை மறைத்துக்கொள்ளப் பார்க்கிறது. அதுமட்டுமல்ல, கடவுள், விலக்கி வைத்திருக்கிற காரியங்களை செய்வதற்கு மட்டுமே உனக்கு விருப்பமிருக்கிறதல்லவா? கடவுள் கட்டளையாகக் கொடுத்திருக்கிற காரியங்களை வெறுப்பதையும், அவற்றை செய்ய விரும்பாமலும் உன் இருதயம் இருப்பதைப் பார்க்கிறாயல்லவா? இதெல்லாம் கெட்டுப்போன இருதயத்தினால் வரும் விளைவுகள்.

இது ஒரு பிரச்சனையான காரியந்தான். ஏனென்றால் இவ்வளவு பொல்லாத இருதயத்தை வைத்துக் கொண்டு நீ எப்படிப் பரலோகத்தில் வாழ முடியும்? பரலோகமே உனக்கு நரகம் போலாகிவிடுமே? ஏனென்றால், உன்னுடைய பாவ ஆசைகளுக்குத் தீனி போடக்கூடிய காரியம் எதுவும் அங்கு இருக்காது. கடவுளை ஆராதிப்பதும், அவருக்காக வாழ்வதுமே பரலோகத்தின் வாழ்க்கைமுறை. அந்த வாழ்க்கை உனக்கு அலுப்பாக இருக்குமே. கடவுளையும் அவருடைய சித்தத்தையும் எதிர்க்கிற ஒரு இருதயம் உனக்குள் இருக்கும்போது பரலோகம் உனக்கு ஏமாற்றத்தையும், எரிச்சலையும் மட்டுமே தருமல்லவா? மேலும், அவரை எதிர்க்கும் பாவியான உன்னை அவர் ஒருபோதும் பரலோகத்திற்குள் அனுமதிக்கப் போவதில்லை. பாவங்கள் மன்னிக்கப்பட்டு, இருதயம் பரிசுத்தமாக்கப்பட்டவனையே கடவுள் தன்னுடைய இராஜ்ஜியத்திற்குள் அனுமதிக்கப் போகிறார். அவர் ஒருபோதும் கெட்டுப் போன இருதயத்தை உடைய, தம்மை எதிர்க்கும் பாவிகளை பரலோகத்திற்குள் கொண்டுவரப் போவதில்லை.
உன்னுடைய பிரச்சனையின் இந்தப் பகுதியை மேலும் கடினமாக்குகிற விஷயம் என்ன தெரியுமா? உன்னுடைய இருதயத்தை மாற்ற உன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்பதுதான். “எத்தியோப்பியன் தன் தோலையும், சிவிங்கி தன் புள்ளிகளையும் மாற்றக்கூடுமோ? கூடுமானால் தீமை செய்யப் பழகின நீங்களும் நன்மை செய்யக்கூடும்” (எரே 13:23) என்று வேதவாக்கியம் சொல்கிறது. இந்தக் கேள்விக்கான பதில் “மாற்ற முடியாது” என்பதுதானே. ஒரு மனிதனோ அல்லது ஒரு மிருகமோ தன்னுடைய நிறத்தை மாற்றிக் கொள்ள முடியாது. அது இயற்கையாக ஏற்பட்டது. அதேபோல, பொல்லாத இருதயத்தைக் கொண்டிருக்கிற மனிதர்களால் நன்மை செய்ய முடியாது. ஏனென்றால் அது அவர்களுடைய இயல்புக்கு முற்றிலும் மாறானது. முயற்சி செய்வதால் சில நற்குணங்களை ஏற்படுத்திக் கொள்ள உன்னால் முடியும் என்பது உண்மைதான். ஆனால், உனது உள்ளான இருதயத்தின் குணத்தை முற்றிலுமாக மாற்றி அமைக்க உன்னால் ஒருபோதும் முடியாது. ஒரு மனிதன் மனைவிக்கு விரோதமாக துரோகம் செய்யாமல் இருக்கலாம். ஆனால் அவன் தனது இருதயத்துக்குள் காமத்தை வளர்த்துக் கொண்டிருக்கலாம். ஒரு மனிதன் ஆலயத்துக்கு ஒழுங்காகச் சென்று தசமபாகம் செலுத்துகிறவனாகக்கூட இருக்கலாம். ஆனால் அவன் இருதயமோ கடவுளுக்கு வெகு தூரத்தில் இருக்கக்கூடும். ஒரு பெண் தன் வாயினால் புறங்கூறாமலும், பொய் பேசாமலும் இருக்கலாம். ஆனால் அவள் தன் இருதயத்திலோ வெறுப்பை வளர்த்துக் கொண்டிருப்பவளாகக் காணப்படலாம்.
உன்னுடைய பிரச்சனையை மேலும் சிக்கலாக்குவதில் இது இரண்டாவது விஷயமாயிருக்கிறது. பரலோகத்தில் உனக்கு எதிராக இருக்கின்ற குற்றப் பதிவுகளை உன்னால் மாற்ற முடியாதது மாத்திரமல்லாமல், பூலோகத்திலே உனக்குள் இருக்கின்ற பொல்லாத இருதயத்தையும் உன்னால் மாற்ற முடியாது. இது ஒரு நல்ல செய்தியல்ல. இந்தக் கெட்ட செய்தியை நீ விளங்கிக் கொள்ளாவிட்டால், இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தினால் வருகின்ற நல்ல செய்தியை உன்னால் விளங்கிக் கொள்ள முடியாது. பாவிகளாக, தாங்கள் எவ்வளவு பரிதாபகரமான நிலையில் இருக்கிறோம் என்பதை உணர்ந்து கொள்பவர்களுக்கே சுவிசேஷமானது நற்செய்தியாக இருக்கும்.
நீக்கப்படும் குற்றப்பதிவேடும், மாற்றப்படும் இருதயமும்!
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி என்ன தெரியுமா? கடவுள் தமது சர்வவல்லமையுள்ள கிருபையினாலே, தமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக, திரளான பாவிகளின் குற்றப்பதிவேடுகளை நீக்கம் செய்யவும், அவர்களுடைய இருதயத்தை மாற்றவும் சித்தம் கொண்டார் என்பதே.

இயேசு கிறிஸ்து, தான் இறக்கப் போவதற்கு சற்று முன்பாக தமது கடைசிப் பந்தியிலே சீஷர்களோடு அமர்ந்திருக்கையில் கூறியதை சற்று சிந்தித்துப் பாருங்கள். அவர் “இந்தப் பாத்திரம் உங்களுக்காக சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது” (லூக்கா 22:20) என்றார். தன்னுடைய ஊழியத்தின் நோக்கத்தை மிகவும் சுருக்கமாக இரண்டே வார்த்தையில், புதிய உடன்படிக்கை என்று விளக்கினார். அவர் பூலோகத்தில் வந்து செய்த யாவும் இந்தப் புதிய உடன்படிக்கை ஸ்தாபிக்கப்படுவதற்கு காரணமாயிருந்தது. அவர் தம்மைத் தாமே வெறுத்ததும், தமது மகிமையின் சாயலை இழந்து பாவமனிதனுடைய சாயலைத் தரித்துக் கொண்டதும், இவ்வுலகில் தமது பாவமற்ற வாழ்க்கையை நிறைவேற்றியதும், தமது ஜனங்களுக்கு பதிலாக அவர்களின் பாவங்களுக்காகத் தான் மரிக்கப் போவதும், அதற்குப் பிறகு உயிர்த்தெழப் போவதுமாகிய நிகழ்வுகளின் மூலமாக அவர் இந்த புதிய உடன்படிக்கையை ஸ்தாபிப்பதாக அறிவித்தார்.

இந்தப் புதிய உடன்படிக்கையின் மூலமாகக் கடவுள் என்ன வாக்கு கொடுக்கிறார் தெரியுமா? இந்தப் புதிய உடன்படிக்கையில் அடங்கியுள்ளவைகளை வேதம் நமக்கு பின்வருமாறு விளக்குகிறது: “நான் பண்ணப் போகிற உடன்படிக்கையாவது: நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் . . . நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்” (எரே 31:33-34) என்று கர்த்தர் சொல்லுகிறார்.

இந்தப் புதிய உடன்படிக்கையானது இரண்டு ஆசீர்வாதங்களை முக்கியமாகக் கொண்டிருக்கிறது.

முதலாவது, கடவுள் தமது ஜனங்களுடைய பாவங்களையும் அக்கிரமங்களையும் இனிமேல் நினைக்க மாட்டேன் என வாக்குக் கொடுக்கிறார். வேறுவிதமாக சொல்வோமானால், அவர்களுடைய குற்றப்பதிவேடுகளை அவர் நிரந்தரமாக அழித்துவிடுவார். அவர்களுடைய பாவங்களை இனிமேல் அவர்களுக்கு எதிராக வைத்துக் கொண்டிருக்க மாட்டார். அவருடைய நியாயஸ்தலத்திலே அவருடைய ஜனங்களின் குற்றங்கள் முற்றிலுமாக நீக்கப்பட்டுவிடும்.
இரண்டாவதாக, தமது சட்டதிட்டங்களை தம் ஜனங்களுக்குள்ளாகவே பதித்து வைத்துவிடுவதாக வாக்குக் கொடுக்கிறார். அதை அவர்கள் இருதயத்திலே எழுதிவிடுவதாக வாக்களிக்கிறார். புதிய உடன்படிக்கையில் கடவுள் அவர்களுடைய இருதயத்தையே மாற்றுகிறார். ஒரு காலத்தில் அவருடைய கட்டளைகளை வெறுத்து ஒதுக்கித் தள்ளினவர்களே, இருதயம் மாற்றப்பட்டதால் அவர் கட்டளைகளின் மீது ஆவலாகவும் அதற்கு கீழ்ப்படிபவர்களாகவும் மாற்றம் அடைகிறார்கள். கடவுளுக்கு எது பிரியமோ அதன் மீது இவர்களுக்கும் இப்போது பிரியம் ஏற்படுகிறது. கடவுள் வருத்தப்படுகிற விஷயங்களுக்காக இவர்களும் வருந்துகிறார்கள். மேலும், கடவுளுடைய கட்டளைகளை அவர்கள் ஆர்வத்தோடு கடைப்பிடிக்கும் விதமாக அது அவர்களுடைய இருதயத்திலே எழுதப்படுகிறது. அதுமாத்திரமல்ல, அவர்கள் தங்களுடைய பூலோக வாழ்க்கை முடிவுபெறும் வரைக்கும் அதை மேலும் மேலுமாக கடைப்பிடிக்கவும், பரலோகத்தில் பிரவேசிப்பதற்கு தங்களைப் பூரணப்படுத்தும் விதமாக அதைக் கடைப்பிடிப்பதற்கும் தேவன் தமது மிகுந்த வல்லமையினாலே அவர்களுக்கு உதவி செய்கிறார்.

ஆகவே, இந்தப் புதிய உடன்படிக்கையில் கடவுள், தமது ஜனங்களின் நியாயாதிபதியாக இருந்து அவர்களுடைய குற்றப்பதிவுகளைத் தள்ளுபடி செய்கிறார். ஒரு வைத்தியனாக செயல்பட்டு, பாவத்தினால் நோயுற்றிருந்த அவர்களுடைய இருதயத்தைக் குணப்படுத்தி அதை மாற்றுகிறார். நற்செய்தி இதுதான்: கடவுளின் மிகுந்த கிருபையினாலே ஒருவனுடைய குற்றப்பதிவுகள் நீக்கப்படவும், அவன் இருதயமானது முற்றிலும் மாற்றப்படவும் கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஒருவன் செய்ய வேண்டியது, இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து அவர் மூலமாக கடவுளிடம் வரவேண்டியது மட்டுமே. இது ஒன்று மட்டுமே மனிதனுடைய மாபெரும் பிரச்சனையைத் தீர்க்க முடியும்.
பிரச்சனைக்குத் தீர்வு இவற்றையெல்லாம் பார்க்கிறபோது உனக்கு என்ன தோன்றுகிறது? உன்னுடைய குற்றப்பதிவேட்டில் இன்னும் அதிகமான குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுவிடாதபடிக்கு, இன்று முதல் என் வாழ்க்கையை மாற்றிக் கொள்வேன் என்று தீர்மானித்து அதன்படி நடக்க முயற்சிப்பது இதற்கு சரியான தீர்வு அல்ல என்பதை நீ முதலாவதாக ஞாபகத்தில் வைக்க வேண்டும். அப்படிச் செய்வது, சுவிசேஷ செய்தி அல்ல! நீ எத்தனை முயற்சிகள் எடுத்து உன் வாழ்க்கையை சரிப்படுத்திக் கொள்ளப் பார்த்தாலும், பரலோகத்தில் மலை போல் குவிந்து கிடக்கின்ற உனது குற்றங்களோடு ஒரு சிறு கரும்புள்ளியாவது கூடிவிடாதபடி கவனமாக வாழப் பார்த்தாலும், உனது கடந்த கால பாவங்களின் பதிவுகள் அங்கே ஒரு எழுத்தும் மாறாமல் அப்படியேதான் இருக்கும். ஏற்கனவே இருக்கின்ற பாவங்களோடு எதுவும் சேர்ந்துவிடாதபடிக்கு கவனமாக நீ இருந்தாலும், உனது கடந்தகால பாவங்களே உன்னை நரகத்திற்குள் தள்ளிவிட போதுமானதாயிருக்குமல்லவா? “உன்னையே மாற்றிக் கொண்டு இனிமேல் நல்லவனாக வாழ்” என்பது இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷ செய்தியல்ல.

“இயேசுவுக்காக வாழப் போவதாகத் தீர்மானித்துக் கொண்டு, அவரைப் பின்பற்று” என்பதும் சுவிசேஷ செய்தியல்ல. பொல்லாத ஒரு இருதயத்தை வைத்துக் கொண்டு உன்னால் அப்படி வாழமுடியாது. அதுதான் பிரச்சனையே. உன்னுடைய பொல்லாத இருதயமானது உன்னைப் பிரியப்படுத்தத்தான் ஒத்துழைக்குமே தவிர, இயேசு கிறிஸ்துவைப் பிரியப்படுத்த ஒத்துழைக்காது. நீ இருக்கிறபடியே இருந்து கொண்டு இயேசுவைப் பின்பற்ற உன்னால் முடியாது. நீ மாற்றம் அடைய வேண்டும். உனக்குள்ளாகவே நீ மாறவேண்டும். உனக்கு ஒரு புது இருதயம் ஏற்பட வேண்டும்.

மேலும், “இயேசு கிறிஸ்துவைக் குறித்ததான சில காரியங்களை நீ விசுவாசி. அவர் பாவிகளுக்காக மரித்தார் என்பது போன்ற காரியங்களை விசுவாசி. பிறகு ஒரு ஜெபம் பண்ணிவிட்டு, அவர் மேல் நம்பிக்கையாயிரு. அது போதும்” என்பதுவும் சுவிசேஷ செய்தியல்ல. அது சுவிசேஷ அழைப்பே இல்லை!

“இயேசுவிடம் வா!” என்பதே சுவிசேஷ அழைப்பாகும். புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தர் அவர்தான் (எபி 12:2-4). அவரிடம் வருவதன் மூலமாகத்தான் புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். என்னை இரட்சியும் என்று அவரிடம் வேண்டிக் கொள். அவருக்கு எதிராக நடந்து கொண்டதை அவரிடம் அறிக்கையிடு. அவருடைய கட்டளைகளை எத்தனையோ முறை மீறி நடந்ததை அவரிடம் ஒத்துக்கொள். வேதவாக்கியங்கள் சொல்லுகிறபடி நான் மிகவும் பாவிதான். நரகத்திற்கு செல்வதற்கே தகுதியுள்ளவன் என்பதை அறிக்கையிடு. உன்னையே இயேசு கிறிஸ்துவுக்கும், அவருடைய இரக்கங்களுக்கும் ஒப்புவி. அவரை உண்மையாகவே நோக்கிக் கூப்பிடுகிறவர்களுக்கு அவர் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிற புதுஉடன்படிக்கையின் ஆசீர்வாதங்களை வேண்டி, கெஞ்சிக் கேள். உன்னுடைய குற்றப்பதிவுகளை அவர் நீக்கிப் போடவும், உனது இருதயத்தை மாற்றித் தரவும் வேண்டிக்கொள்.

“வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத் 11:28) என்று இயேசு கிறிஸ்து கூறுகிறார். உன்னுடைய குற்றங்களைக் குறித்து நீ மிகுந்த பாரம் உடையவனாயிருக்கிறாயா? உன்னுடைய பொல்லாத இருதயத்தின் நம்பமுடியாத தன்மையை உணர்ந்து தவிக்கிறாயா? உன்னுடைய பிரச்சனை தீர்க்கப்படுவதற்கும், நீ சமாதானத்தைப் பெற்றுக் கொள்வதற்கும் இயேசு கிறிஸ்துவிடம் போ. கிறிஸ்து மாத்திரமே புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களை உனக்கு அளிக்க முடியும். அவரே மத்தியஸ்தர். “இரட்சிக்கப்பட விரும்புகிறவர்கள் முன்னாலே வாருங்கள்” என்பதோ, “விசாரணை அறைக்கு வாருங்கள்” என்பதோ, “ஊழியக்காரரை வந்து பாருங்கள்” என்பதோ சுவிசேஷ செய்தி அல்ல. இவை யாவும் வெளிப்பிரகாரமான காரியங்களே. ஆனால் மெய்யான சுவிசேஷ செய்தி என்பது “விசுவாசிப்பதின் மூலமாக இயேசு கிறிஸ்துவிடம் மட்டும் வாருங்கள்” என்று அழைப்பு விடுப்பதே. இதுவே ஆவிக்குரிய காரியம். உன்னுடைய பாவங்களை மன்னித்து, உனக்கொரு புது இருதயத்தைக் கொடுக்குமாறு கிறிஸ்துவினிடம் வேண்டிக்கொள்.

கடவுள் ஒருவனை இரட்சிக்கும்போது, புதிய உடன்படிக்கையின் இரண்டு ஆசீர்வாதங்களையும் சேர்த்துதான் அவனுக்கு அளிக்கிறார் என்பதை நினைவில் வைக்க வேண்டும். கடவுளுடைய கட்டளைகளில் பிரியப்படாமலும், அதைக் கடைப்பிடிக்க மனதில்லாமலும் இருந்து, உனது குற்றங்கள் மாத்திரம் அவரது பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதாக கற்பனை செய்து கொள்ளாதபடி எச்சரிக்கையாயிரு. அதற்கு இடமேயில்லை. கடவுள், புதிய உடன்படிக்கையின் ஓர் ஆசீர்வாதத்தை மட்டும் தருகிறவரல்ல. பாவியின் இருதயத்தை மாற்றாமல், அவனுடைய குற்றங்களை மட்டும் அவர் நீக்கிவிட மாட்டார். இருதயம் மாற்றப்படாமல் தொடர்ந்து பழைய பாவ வாழ்க்கையையே வாழ்ந்து, கடவுளின் சித்தத்துக்குக் கீழ்ப்படியாமலும், அதை மதிக்காமலும் வாழ்ந்து, நான் இரட்சிக்கப்பட்டுவிட்டேன், மோட்சம் போய்விடுவேன் என எண்ணிக் கொண்டிருப்பது ஆத்துமாவை அழித்துப் போடுகிற பயங்கரமான கள்ளப்போதனையாகும். பாவத்தின் மீது வெறுப்பையும், எல்லா பாவங்களையும் விட்டுவிடுகிற மனப்போக்கையும் கடவுள் உனக்குத் தந்திராவிட்டால், உன்னை நீயே ஏமாற்றிக் கொள்கிறாய் என்பதுதான் அர்த்தம். உன்னுடைய பொல்லாத இருதயம் இன்னும் உனக்குள்ளே மாற்றமடையாமல் இருக்கிறது. துணிகரமான உன்னுடைய இந்த முட்டாள்தனத்தை மன்னித்து, உனக்கொரு புதிய இருதயத்தைத் உடனடியாகத் தரும்படி கடவுளிடம் மன்றாடிக் கேள்.

மத்தியஸ்தராகிய இயேசு கிறிஸ்து மாத்திரந்தான் உனது மகா பெரிய பிரச்சனை தீர்வதற்கு ஒரே வழி. இந்தப் பெரிய பிரச்சனையை கடவுள் உன் வாழ்வில் தீர்த்திருக்கிறாரா? இயேசு கிறிஸ்துவின் பரிகாரப் பலியின் மூலமாக, உன்னுடைய பாவங்கள் யாவும் நீக்கப்பட்டுவிட்டதென்றும், உன்னுடைய இருதயம் மாற்றப்பட்டுவிட்டதென்றும் அவர் உனக்கு உறுதிப்படுத்தியிருக்கிறாரா? கடவுள் உனக்கொரு புதிய இருதயத்தைத் தந்திருப்பது உன் வாழ்க்கையின் மூலமாக வெளிப்படுகிறதா? இல்லையென்றால் இன்றே கிறிஸ்துவைத் தேடு. புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் சென்று கெஞ்சி மன்றாடு. அவருடைய இரக்கத்திற்காக கெஞ்சு. இயேசு கிறிஸ்துவின் பாதத்தில் அடிபணிந்து கேட்பவன் இரக்கம் பெறாமல் ஒரு போதும் அழிந்ததில்லை. உன்னுடைய பாவங்களின் அளவுக்குத்தக்கதான இரக்கம் அவரிடம் உண்டு. ஆனால் அந்த இரக்கம் அவருடைய பாதத்தில் அடிபணிவதில் இருக்கிறதேயொழிய வேறெங்கும் இல்லை என்பதை நினைவில் வையுங்கள்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s