1689 விசுவாச அறிக்கை மனிதனுடைய சித்தம் பற்றித் தருகின்ற விளக்கத்தை நாம் விபரமாகக் கவனிக்கப்போகிறோம். இந்த அதிகாரத்தின் முதலாவது பத்தி மனித சித்தத்தின சுதந்திரம் எத்தகையது என்பதைத் தெளிவாக விளக்குகிறது. இந்தப் பகுதி தருகின்ற விளக்கம் ஏனைய பகுதிகளில் கொடுக்கப்பட்டிருக்கும் போதனைகளை விளங்கிக் கொள்ள அவசியமானது.
1689 வி. அ & 9:1 “கடவுள் இயற்கையிலேயே மனித சித்தத்தை அது தான் எடுக்கும் தீர்மானத்தின்படி நடக்கக்கூடிய வல்லமையையும் சுதந்திரத்தையும் கெண்டுள்ளதாகப் படைத்திருந்தார். இச்சுயாதீனமான சித்தம் நன்மையையோ, தீமையையோ செய்வதற்கு புற நிர்ப்பந்தங்களினால் பாதிப்புறாமலும் இயற்கையாக அதன் உள்ளியல்பினால் வற்புறுத்தப்படாமலும் உள்ளது.”
படைப்பில் மனிதனின் சித்தம்
முதலில் மனித சித்தம் அது சிருஷ்டிக்கப்பட்ட நிலையில் (இயற்கையில்) எப்படி இருந்தது என்பதை விசுவாச அறிக்கை விளக்குகிறது. படைப்பில் கர்த்தர் ஆதாமைத் தன்னுடைய சாயலின்படிப் படைத்தார். அதாவது, தன்னுடைய குணாதிசயங்களைப் பிரதிபலிக்கும்படிப் படைத்தார் (ஆதி. 1:26-27). இதன் மூலம் மனிதன் கடவுளாகிவிடவில்லை. கடவுளைப் போன்ற தன்மைகளைக் கொண்டிருக்கவில்லை. ஆனால், கடவுளோடு உறவாடக்கூடிய ஆவியையும், கடவுளைப் போல சிந்தித்து செயல்படக்கூடிய இருதயத்தையும் கொண்டிருந்தான். கடவுள் இறையாண்மையுள்ளவர், அவரை ஒருவரும் படைக்கவில்லை. அவருடைய குணாதிசயங்களைப் பிரதிபலிக்கக் கூடிய நிலையில் படைக்கப்பட்ட மனிதன் இறையாண்மையுடையவனல்ல. கடவுளின் சித்தம் தெய்வீகத்துடன் சுதந்திரமாக செயல்பட்டது. படைக்கப்பட்ட மனிதனின் சித்தமும் சுதந்திரமாக செயல்பட்டபோதும் அது மனித சித்தம் மட்டுமே. கடவுள் இறையாண்மையுள்ளவரானபடியால் அவருடைய சித்தத்தைப் பிரதிபலிக்கும் வகையில் சுதந்திரத்தோடு இயங்கக்கூடிய நிலையில் மனித சித்தம் இருந்தது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இதற்காக படைக்கப்பட்ட மனிதன் எந்தவிதத்திலும் படைத்தவராகிவிடவில்லை. படைத்தவரின் சாயலில் இருப்பதால் படைக்கப்பட்டவன் அவருடையதைப் போன்று சுதந்திரமாக இயங்கும் சித்தத்தைக் கொண்டிருந்தான்.
படைக்கப்பட்ட மனிதனின் சித்தம் அவன் எந்தத் தீர்மானத்தையும் சுயமாக எடுக்கக்கூடிய வல்லமையைக் கொண்டிருந்தாக விசுவாச அறிக்கை விளக்குகிறது. இதையே மனித சித்தத்தின் சுதந்திரம் (Freedom of the Will) என்று சொல்லுகிறோம். இங்கே ஆதாம் படைக்கப்பட்டபோது எத்தகைய சித்தத்தோடு படைக்கப்பட்டிருந்தான் என்பதை விசுவாச அறிக்கை நினைவுறுத்துகிறது. ஆதாம் கர்த்தருடைய சித்தத்தை அறிந்துகொள்ளக்கூடியவனாக படைக்கப்பட்டிருந்தான். அவன் கர்த்தரோடு பூரண ஐக்கியத்தைக் கொண்டிருந்தான். கர்த்தருடைய வார்த்தைகளைக் குறைவில்லாமல் அறிந்துகொள்ளக்கூடிய நிலையில் இருந்தான். அவர் வெளிப்படுத்திய சத்தியங்களைத் தன்னுடைய வாழ்க்கையில் பூரணமாக நிறைவேற்றி பூரண நீதியுடன் வாழ்ந்து வரக்கூடிய வல்லமையைக் கொண்டிருந்தான். கடவுளுடைய கட்டளைகளை சுயமாக சிந்தித்துப் பார்த்து தெளிவாகப் புரிந்துகொண்டு அவற்றை முழு விருப்பத்துடன் நீதியாகச் செய்து முடிக்கக்கூடிய சித்தத்தோடு ஆதாம் வாழ்ந்து வந்தான்.
மனித சித்தத்தின் சுதந்திரம்
இந்த முதலாவது பத்தி ஆதாமின் சுதந்திரமான சித்தத்தைப் பற்றி மேலும் சில அவசியமான விளக்கங்களைத் தருகிறது. ‘இச்சுயாதீனமான சித்தம் நன்மையையோ, தீமையையோ செய்வதற்கு புற நிர்ப்பந்தங்களினால் பாதிப்புறாமலும் இயற்கையாக அதன் உள்ளியல்பினால் வற்புறுத்தப்படாமலும் உள்ளது’ என்கிறது விசுவாச அறிக்கை. இதில் முதலாவதாக, மனித சித்தம் நன்மையையோ தீமையையோ செய்வதற்கு புற நிர்ப்பந்தங்களினால் பாதிப்புறாமல் இருப்பதாக பார்க்கிறோம். இந்த உண்மையை நாம் விளங்கிக் கொள்ளுவது அவசியம். புற நிர்ப்பந்தங்களால் பாதிக்கப்படுமானால் மனித சித்தம் சுதந்திரமாக இயங்குகிறது என்று சொல்ல முடியாது. மனிதன் எந்தக் காரியத்தையும் செய்யவேண்டும் என்று தீர்மானித்து செய்கிறபோது அவன் புற நிர்ப்பந்தங்கள் எதனாலும் உந்தப்படாமல் அதைச் செய்கிறான் என்கிறது வேதம். ஆதாம் கர்த்தருடைய வார்த்தைகளைப் பூரணமாகப் பின்பற்றியபோது எதனாலும் உந்தப்படாமல் சுயமாக விருப்பத்துடனும், வைராக்கியத்துடனும் அவற்றை செய்து முடித்தான். கடவுள் தன்னுடைய சித்தத்தை செய்யும்படியாக மனிதனை புறத்திலிருந்து தூண்டிவிடுகிறார் என்றும், அவனுடைய சித்தத்திற்கு எதிராக செயல்படும்படிச் செய்கிறார் என்றும் சிலர் சொல்லுகிறார்கள். அது தவறு என்கிறது விசுவாச அறிக்கை. அவன் எதனாலும் புறத்திலிருந்து தூண்டப்படாமல் சுயமாகத் தான் செய்ய விரும்பியதைச் செய்கிறான் என்பது தான் முழு உண்மை. மனிதன் ஒரு Free Agent ஆக இயங்குகிறான்.
அத்தோடு, மனித சித்தம் ‘இயற்கையாக அதன் உள்ளியல்பினால் வற்புறுத்தப்படாமலும் உள்ளது’ என்கிறது விசுவாச அறிக்கை. இதன் மூலம் வெளிப்புறத்தில் இருந்து வரும் எதனாலும் உந்தப்படாமல் செயல்படுவதோடு, தனக்குள்ளிருந்து எழுகின்ற எதனாலும் வற்புறுத்தப்படாமலும் மனித சித்தம் இயங்குகிறது என்கிறது விசுவாச அறிக்கை. கடவுள் மனிதனை ‘ரோபோட்’ போல சாவி கொடுத்து இயங்கும் கருவியாகப் படைத்திருக்கிறார் என்று சிலர் சொல்லுகிறார்கள். அதாவது அவனுடைய ஒழுக்க நடவடிக்கைகளை அவரே, இப்படித்தான் அவன் செயல்பட வேண்டும் என்று தீர்மானித்து அவனுக்குள் நியமித்திருக்கிறார் என்கிறார்கள் சிலர். அத்தகைய தவறான முடிவுகளை விசுவாச அறிக்கை மறுக்கிறது. சுதந்திரத்தோடு மனித சித்தம் இயங்குகிறது என்பதை மேலே நாம் கவனித்த இரண்டு உண்மைகளும் தெளிவாக்குகின்றன. இவற்றின் மூலம் தான் செய்கின்ற எந்த செயலுக்கும் சுற்றுச் சூழலையோ, அல்லது சக மனிதர்களையோ மனிதன் காரணம் காட்ட முடியாது. தான் செய்யும் செயலுக்கு சரீர பலவீனங்களையோ, மனநிலையின் தன்மையையோகூட காரணம் காட்ட முடியாது. எதனாலும் உந்தப்படாமலும், வற்புறுத்தப்படாமலும் சுயமாக விருப்பத்தோடு சிந்தித்து இயங்குகிறதாக மனித சித்தம் இருக்கிறது என்பதை விசுவாச அறிக்கை ஆணித்தரமாக உறுதி செய்கிறது.
மனித சித்தம் பற்றி நாம் இதுவரை பார்த்துள்ள உண்மைகளை விளக்கும் வேதப்பகுதிகளை நாம் ஆராய்ந்து பார்ப்பது அவசியம். உபாகமம் 30:19ல் கர்த்தர், தன்னுடைய வாக்குத்தத்தங்களைக் கொடுத்துவிட்டு ஜனங்களைப் பார்த்து சொல்லுகிறார், ‘ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படி நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு . . . அவரைப் பற்றிக் கொள்ளுவாயாக’ என்கிறார். இந்த வசனங்களில் கர்த்தர் மனிதனைப் பார்த்து ஜீவனையாவது, மரணத்தையாவது தெரிந்துகொள்ளுவது மனிதனின் பொறுப்பு என்பதை வெளிப்படுத்துகிறார். அவற்றைத் தீர்மானிக்கும் பொறுப்பு மனிதனிடமே விடப்பட்டிருக்கிறது. இல்லாவிட்டால் கர்த்தர் அதை அவனிடம் விட்டிருக்க மாட்டார்.
மத். 17:12ல் இயேசு எலியாவைப் பற்றியும் தன்னைப் பற்றியும் விளக்குகிறார். இங்கே, இயேசு, எலியா வந்தபோது அவன் யாரென்று உணராமல் மனிதர்கள் ‘தங்களுடைய இஷ்டப்படி அவனுக்கு செய்தார்கள் (கொடுமைப்படுத்தினார்கள்)’ என்கிறார். அதாவது, சுயமாக சிந்தித்து எதைச் செய்ய விரும்பினார்களோ அதை எவராலும் நிர்ப்பந்தப்படுத்தப்படாமல் செய்தார்கள் என்பது இதற்குப் பொருள். இதையே இயேசுவுக்கும் அவர்கள் செய்யப்போகிறார்கள் என்பதை இயேசு இதே வசனத்தில் சொல்லுகிறார்.
யாக். 1:14ல், ‘அவனவன் தன் தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு சோதிக்கப்படுகிறான்’ என்றிருப்பதை வாசிக்கிறோம். மனிதன் பாவம் செய்கிறபோது தன்னுடைய இருதயத்தில் எழுகின்ற இச்சை களினாலே, அவற்றை விரும்பி எந்தெந்த முறையில் அவற்றை செய்ய வேண்டுமென்பதைத் தீர்மானித்து யாராலும், எதாலும், உள்ளேயும் புறத்தில் இருந்தும் நிர்ப்பந்தப்படுத்தப்படாமல் தானே முழுப்பொறுப்போடும் செய்கிறான் என்பதை இந்த வசனம் தெளிவாக விளக்குகிறது.
இதுவரை பார்த்த உண்மையையே மத். 12:33&34 வசனங்களில் இயேசு மேலும் விளக்குகிறார். ‘மரம் நல்லதென்றால் அதன் கனியும் நல்லதென்றும் சொல்லுவார்கள். மரம் கெட்டதென்றால், அதன் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள்; மரமானது அதன் கனியினால் அறியப்படும். விரியன் பாம்புக்குட்டிகளே! நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படிப் பேசுவீர்கள். இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்’ என்றார். தொடர்ந்து இதை மேலும் விளக்குகின்ற இயேசு (35&37) இறுதியில் ‘உன் வார்த்தைகளினாலே குற்றவாளியென்று தீர்க்கப்படுவாய்’ என்கிறார். இயேசுவின் இந்த வார்த்தைகள் மனிதனின் செயல்களுக்கு அவனையே பொறுப்பாளியாகக் காட்டுகின்றன. மனிதன் செய்கின்ற நல்ல அல்லது தீய காரியங்களை அவன் சுயமாக சிந்தித்து செய்கிறான் என்பதை மறுபடியும் இந்த வசனங்களின் மூலம் இயேசு உணர்த்துகிறார். மனிதனுடைய சித்தம் இந்த விஷயங்களில் சுதந்திரத்தோடு இயங்குகிறது. யாரும் எதையும் செய்ய வைத்து செய்யாமல் மனிதன் தன்னுடைய இருதயத்தின் வழிப்படி நடந்துகொள்கிறான்.
இதையே மறுபடியும் யோவான் 5:40ல் இயேசு விளக்கி, ‘அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை’ என்று சொல்லுகிறார். இயேசுவிடம் வருவதற்கு மறுக்கின்ற மனிதர்கள் அப்படி வருவதற்கு சித்தமில்லாமல் இருக்கிறார்கள் என்கிறார் இயேசு. அவர்களுடைய இருதயம் அதற்கு இடங்கொடுக்காமல் இருக்கிறது என்பது மட்டுமே இங்கே காரணமாகக் காட்டப்படுகின்றது. இதன் மூலம் இயேசு அவர்கள் தன்னிடம் வருவதற்கு அவர்களுடைய சித்தத்தைத் தவிர வேறு எதுவும் காரணமாக இருக்கவில்லை என்பதை உணர்த்துவது உங்களுக்குப் புரிகிறதா? அவன் விரும்பினால் அவரிடம் நிச்சயம் வர முடியும். ஆனால், அவரிடம் வருவதற்கு அவனுக்கு சித்தமில்லை என்பதே உண்மை.
இதுவரை நாம் பார்த்தவற்றிலிருந்து நாம் சில உண்மைகளை மனதில் வைத்திருப்பது அவசியமாகிறது.
மனிதனுடைய சித்தத்தைப் பற்றி நாம் கொண்டிருக்கும் தவறான எண்ணங்களை நீக்கிக் கொள்ள வேண்டும். மனித சித்தம் பூரணமான சுதந்திரத்தோடு எதையும் சித்தங்கொண்டு செய்கிறது என்ற விசுவாச அறிக்கையின் விளக்கம் வேதபூர்வமானது. இந்த சத்தியத்தை நிராகரிப்போமானால் மனிதனைப் பற்றியும், கர்த்தரைப் பற்றியும், இரட்சிப்புப் பற்றியும் வேதம் போதிக்கும் ஏனைய சத்தியங்களை நாம் குழப்பிவிட்டுவிடுகின்ற ஆபத்து இருக்கின்றது.
மனித சித்தம் பூரண சுதந்திரத்தோடு இயங்கவில்லை என்று சொல்லுவது அவனை எதற்கும் பொறுப்பில்லாதவனாக ஆக்கிவிடும். இப்படிச் சொல்வதால் அவன் செய்கின்ற எந்தக் காரியத்துக்கும் அவனைப் பொறுப்பாளியாக்க முடியாமல் போய்விடும். தான் செய்கின்ற அனைத்துக் காரியங்களுக்கும், கிறிஸ்துவை விசுவாசிக்காமல் இருப்பதற்கும், அவனுடைய பாவங்களுக்கும், நியாயத்தீர்ப்பை சந்திக்க வேண்டிய நிலைக்கும் அவன் மட்டுமே காரணகர்த்தாவாக இருக்கிறான் என்கிறது வேதம்.
மனிதன் தான் செய்கின்ற எதற்கும் எதையும், எவரையும் காரணங்காட்ட முடியாது. அவனுடைய குற்றங்களுக்கு யாரையும் காரணம் காட்டிப் பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது. நாம் எடுக்கும் எல்லாத் தீர்மானங்களுக்கும் நாமே பொறுப்பு. யாரும் நம்மை வற்புறுத்தி நாம் எதையும் செய்வதில்லை. எதையும் பூரண விருப்பத்தோடேயே நாம் செய்கிறோம்.
சீர்திருத்த கிறிஸ்தவர்களும், சுயாதீனமான சித்தமும்
இதையெல்லாம் வாசிக்கின்ற உங்களுக்கு பெரிய ஆச்சரியமாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும். சீர்திருத்த கிறிஸ்தவத்தைப் பின்பற்றுகிறவர்களெல்லாம் மனித சித்தம் சுதந்திரமாக இயங்குவதில்லை என்று சொல்லித்தான் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்படி அதிரடியாக கட்சி மாறி, மனித சித்தம் பூரண சுதந்திரத்துடன் எதையும் செய்கிறது என்று சொல்கிறீர்களே என்று ஆச்சரியப்படுவீர்கள். அது எனக்குப் புரிகிறது. சீர்திருத்த கிறிஸ்தவ போதனைகளைப் பற்றி பலர் தவறான எண்ணங்களைக் கொண்டிருப்பதற்குக் காரணம் அவர்களுடைய தவறான முடிவுகள் தான். உண்மையில் சீர்திருத்தப் போதனைகளைக் கவனமாகப் படித்து சிந்தித்துப் பார்த்தீர்களானால் வேதபோதனைகளுக்கு அது எத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுவீர்கள். மனித சித்தம் முழு சுதந்திரத்துடன் பூரணமாக இயங்குகிறது என்பதில் எந்த சீர்திருத்த கிறிஸ்தவனுக்கும் சந்தேகம் இருந்ததில்லை. அதைத் தெளிவாக சுயாதீனமான சித்தம் என்ற தலைப்பில் விசுவாச அறிக்கையின் ஒன்பதாம் அதிகாரம் முதல் பத்தி விளக்குகிறது. அதற்குப் பிறகே அது மனிதனின் நான்கு ஆத்மீக நிலைகளில் அவனுடைய சித்தம் செயல்படும் விதத்தை விளக்க ஆரம்பிக்கிறது. மனித சித்தம் பூரண சுதந்திரத்தோடு இயங்குகிறது என்பதை மனிதனின் நான்குவித ஆத்மீக நிலைகளும் மறுக்கவில்லை.
அப்படியானால், சீர்திருத்த கிறிஸ்தவர்கள் மனித சித்தம் சுதந்திரமாக இயங்கவில்லை என்று நம்புகிறார்கள் என்ற தவறான எண்ணம் ஏற்படக் காரணம் என்ன என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு பதிலளிக்க வேண்டியது அவசியம். முதலில், சீர்திருத்த கிறிஸ்தவத்திற்கு எதிரானவர்கள் மனித சித்தத்தின் செயல்முறை பற்றிய தவறான முடிவுக்கு வந்திருப்பதால், அதாவது மனிதன் எந்த நிலையிலும் நன்மை, தீமைகளை சமநிலையில் செய்துவிடக்கூடிய வல்லமையைக் கொண்டிருக்கிறான் என்ற முடிவுக்கு வந்திருப்பதால், சீர்திருத்தப் போதனையைப் பற்றிய தவறான எண்ணத்தைக் கிளப்பிவிட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மனித சித்தத்தின் சுதந்திரத்துக்கும் (Freedom of Will), மனிதனின் செயல்திறனுக்கும் (Ability of Will) இடையில் உள்ள வேறுபாடு தெரியவில்லை. சீர்திருத்த கிறிஸ்தவம் மனித சித்தம் முழு சுதந்திரத்துடன் இயங்குகிறது என்பதை நிராகரிக்கவில்லை, ஆனால் அது எதையும் செய்துவிடக்கூடிய வல்லமையைக் கொண்டிருக்கிறது என்பதைத்தான் மறுக்கிறது. இரண்டும் ஒன்றல்ல. சுதந்திரத்தையும் (Freedom), செயல்திறனையும் (Ability) ஒன்றாக சிலர் தவறாகக் கருதிவிடுகிறார்கள். ஒன்றைச் செய்யச் சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக அதைச் செய்யும் வல்லமை இருக்கிறது என்று சொல்லிவிட முடியுமா? எனக்கு இசை பிடிக்கும். அதிலும் வயலின் வாசிப்பது மிகவும் பிடிக்கும். வயலின் வாசிக்க ஆசைப்பட்டு அதைச் செய்ய எனக்கு முழுச்சுதந்திரம் இருக்கிறது. ஆனால், அதைச் செய்வதற்கான செயல்திறமை என்னிடம் துப்பரவாக இல்லை. நான் ஒருபோதும் வயலின் வாசிக்கக் கற்றுக்கொள்ளாததால் அதை என்னால் வாசிக்க முடியாது. அதைச் செய்ய முழுச் சுதந்திரம் இருந்தபோதும், அதை செய்யும் வல்லமை என்னிடம் இல்லை. இதைத்தான் சீர்திருத்தக் கிறிஸ்தவம் திரும்பத் திரும்ப சொல்லி வருகிறது. வேதமும், சீர்திருத்தக் கிறிஸ்தவமும் மனிதனுடைய சித்தத்திற்கு இருக்கும் பூரண சுதந்திரத்தை என்றுமே மறுக்கவில்லை, அதற்கு எல்லாவற்றையும் எல்லா நிலைகளிலும் செய்துவிடக்கூடிய வல்லமை இல்லை என்பதைத் தான் வலியுறுத்துகிறது.
அதுமட்டுமல்லாமல் நம்மத்தியில் இருக்கும் சீர்திருத்தக் கிறிஸ்தவர்களும் ஒரு தவறைச் செய்துவிடுகிறார்கள். மனித சித்தத்தின் இயலாமையை அழுத்தமாக ஆணித்தரமாக சொல்லி வரும் அவர்கள் மனித சித்தத்தின் பூரண சுயாதீனத்தை அந்தளவுக்கு விளக்குவதில்லை. அநேக சீர்திருத்த கிறிஸ்தவர்கள் இதை சரிவரப் புரிந்துகொண்டிருக்கிறார்களா என்பது எனக்கு சந்தேகமாக இருக்கிறது. மனித சித்தம் பற்றிய சத்தியத்தின் ஒருபுறத்தை (Inability of Man) விளங்கிக் கொண்டிருக்கிற அளவுக்கு அதன் மறுபுறத்தை (Freedom of Will) அவர்கள் விளங்கிக் கொள்ளவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன. சீர்திருத்த கிறிஸ்தவர்கள் இந்தத் தவறைத் திருத்திக் கொள்ள வேண்டியது அவசியம். சத்தியத்தை சத்தியமாக விளங்கிக் கொள்ள வேண்டும். அதில் கொஞ்சத்தையும் தவறவிட்டுவிடக்கூடாது. அமெரிக்காவில் இருக்கும் பாப்திஸ்துகள் மத்தியில் Free Will Baptist என்ற ஒரு பிரிவு இருக்கிறது. இந்தப் பெயரை அவர்கள் வேண்டுமென்றுதான் வைத்திருக்கிறார்கள். ஏன், தெரியுமா? அவர்கள் மனிதனுடைய சித்தம் பூரணமான சுதந்திரத்தோடு இயங்குகிறது என்று நம்புவதால்தான். அதில் ஒரு தவறுமில்லை. ஆனால், அந்த சுதந்திரத்தோடு அவனுக்கு முழு செயல்திறனும் இருக்கிறது என்றும் அவர்கள் நம்புவதைத் தான் வேதம் மறுக்கிறது. இந்த பாப்திஸ்து பிரிவினரின் நம்பிக்கையில் முதலாவதை சீர்திருத்த கிறிஸ்தவர்களாகிய நாமும் நம்புகிறோம். சொல்லப்போனால் ஒருவிதத்தில் நாமும் Free Will Baptist தான். அதாவது முதலாவது கருத்தைப் பொறுத்தளவில். ஆனால் மனிதனுடைய செயல்திறனைப் பொறுத்தளவில் நாம் மார்டின் லூத்தரோடு இணைந்து மனிதனுடைய செயல்திறன் அவனுடைய பாவத்திற்கு அடிமைப்பட்டிருக்கிறது என்பதையும் நம்புகிறோம். அதையே வேதமும் தெளிவாக விளக்குகிறது.