மனிதன் படைக்கப்பட்டபோது கடவுளின் சாயலுடன் சுதந்திரமாக இயங்கும் சித்தத்தோடு இருந்தான். அவனால் கர்த்தரின் வார்த்தைகளைக் கேட்டு சிந்தித்து தீர்மானங்கள் எடுத்து அதன்படி நடக்க முடிந்தது. சுதந்திரத்தோடு அவனுடைய சித்தம் இயங்கியது. இந்த ஆக்கத்தில் ஆதாமும், ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் எந்த நிலையில் வாழ்ந்தார்கள் என்பதை இன்னும் விபரமாகப் பார்க்கப் போகிறோம். அருமையான ஏதேன் தோட்டத்தில் கர்த்தரோடு இடைவிடாத உறவை வைத்திருந்த நம்முடைய முதல் பெற்றோர்களின் நிலையைப் பற்றி ஆழமாக சிந்தித்துப் பார்ப்பது அவசியமானது. ஏனெனில், அது நமக்கு நம்முடைய நிலையைப் பற்றியும், விசுவாச வாழ்க்கையை நாம் நடத்த வேண்டிய வகையைப் பற்றியும் நடைமுறைப் போதனையைத் தருவதோடு, கிறிஸ்துவின் சுவிசேஷத்தை சரிவரப் புரிந்துகொள்ளவும் பெருந்துணை புரியும். ஆதாமும், ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் பாவமில்லாமல் இருந்த நிலையைப் பற்றி 1689 விசுவாச அறிக்கையின் இரண்டாம் பத்தி பின்வருமாறு விளக்குகிறது.
இரண்டாம் பத்தி: பாவமற்ற நிலையில் மனிதன் சுயாதீனமும் வல்லமையுமுள்ள சித்தத்தையும், நன்மையானதையும் கடவுளுக்கு ஏற்புடையதை செய்யக்கூடிய தன்மையையும் கொண்டிருந்தான். இருந்தபோதும் அவன் மாறும் இயல்புடையவனாக இருந்தபடியால் தனது நேர்மையான நிலையில் இருந்து அவனால் விழ முடிந்தது.
ஏதேன் தோட்டத்தில் நமது முதல் பெற்றோர் பாவமற்ற நிலையில் இருந்ததை விசுவாச அறிக்கை ஆரம்பத்திலேயே உணர்த்துகிறது. நாம் முதல் பத்தியில் பார்த்ததுபோல அந்த நிலையில் ஆதாமும், ஏவாளும் சுயாதீனமும் வல்லமையுமுள்ள சித்தத்தைக் கொண்டிருந்தார்கள். மனித சித்தத்தின் சுயாதீனத்தைப் பற்றி முதல் பத்தியில் தெளிவான விளக்கங் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பத்தி அதை மறுபடியும் நினைப்பூட்டுகிறது. ஏதேன் தோட்டத்தில் நமது முதல் பெற்றோர்கள் சுதந்திரமாக இயங்கக்கூடிய சித்தத்தோடு கடவுளுக்கு பணி செய்து வாழ்ந்தார்கள். அத்தோடு அவர்களுக்கு தாங்கள் சித்தங்கொள்ளும் அனைத்தையும் நிறைவேற்றக்கூடிய வல்லமையும் இருந்ததை இந்தப் பத்தி விளக்குகிறது.
ஏதேன் தோட்டத்து வாழ்க்கையைப் பற்றி கொஞ்சம் விபரமாகப் பார்ப்போம். கர்த்தர் மனிதனைப் படைத்தபோது அவனை ‘செம்மையானவனாக’ உருவாக்கினார் என்று பிரசங்கி 7:29 சொல்லுகிறது. செம்மையானவன் என்றால் குற்றமில்லாதவன், நீதியானவன் என்று பொருள். எந்தவிதப் பாவமும் இல்லாத குணாதிசயங்களோடும், தன்மையோடும் முதல் பெற்றோர் ஏதேன் தோட்டத்தில் வாழ்ந்தார்கள். ஏதேன் தோட்டத்தில் பாவம் இருக்கவில்லை. அங்கே நன்மையான அனைத்தையும் அவர்கள் முழு இருதயத்தோடும் விரும்பி செய்யச் சித்தங்கொண்டு கர்த்தருடைய வார்த்தைக்கு ஏற்றபடி பூரணமாக அவற்றை நி¬வேற்றி முதல் பெற்றோர்கள் வாழ்ந்தார்கள். அவர்களால் கர்த்தருடைய வார்த்தையை குறைவில்லாமல் பூரணமாக நிறைவேற்ற முடிந்தது, அதற்குரிய சுயாதீன சித்தத்தையும், வல்லமையையும் அவர்கள் கொண்டிருந்தார்கள். நீதியானதை மட்டுமே அவர்களுடைய இருதயம் வாஞ்சித்தது. நீதியானதை மட்டுமே அவர்கள் நாடிப் போய் செய்யக்கூடிய வல்லமையை அவர்களுடைய சித்தம் கொண்டிருந்தது. ஆதாம், ஏவாளுக்கு ஏதேனில் நன்மையை மட்டுமே செய்யக்கூடியதாக அவர்களுடைய சித்தத்திற்கிருந்த இந்தப் பூரண சுதந்திரமும், வல்லமையும் வீழ்ச்சிக்குப் பிறகு மாறியது. வீழ்ச்சிக்குப் பிறகு சித்தத்தின் பூரண சுதந்திரத்தை அவர்கள் இழக்காவிட்டாலும் நன்மை செய்கிற வல்லமையை அவர்கள் இழந்தார்கள்.
ஏதேனில் இருந்த நிலையில் கர்த்தருக்கு எது பிடிக்காது என்பது நமது முதல் பெற்றோருக்குத் தெரிந்திருந்தது. புசிக்கக்கூடாத கனி இருக்கும் மரத்தைப்பற்றி அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்திருந்தது. அதிலிருந்து விலகி நின்று நன்மையானதை மட்டும் விரும்பி சித்தங்கொண்டு நிறைவேற்ற அவர்களால் முடிந்தது. அங்கு பாவமோ, பாவத்தின் ஜாடையோ இருக்கவில்லை. நமது முதல் பெற்றோரிடம் குற்றவுணர்வுக்கு இடமிருக்கவில்லை. குற்றமென்றால் என்னவென்று தெரியாமல் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். காலையில் எழுந்து நாள் முழுவதும் நன்மையை மட்டுமே அவர்களால் சிந்திக்கவும், செய்யவும் முடிந்தது. முக்கியமானதொரு உண்மையை நான் மறுபடியும் வலியுறுத்த விரும்புகிறேன். நமது முதல் பெற்றோர் நன்மையானதைச் செய்தபோது அவற்றைப் பூரணமாக செய்யக்கூடிய நிலையில் இருந்தனர். பூரணமான ஒழுக்கத்தோடும், நீதியோடும், கர்த்தரோடு பூரணமான உறவோடும், என்றும் அந்த நிலையில் தொடரக்கூடிய சகல வசதியோடும் நமது முதல் பெற்றோர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்பதை இந்த இரண்டாம் பத்தி விளக்குகிறது. இந்த நிலையை விசுவாச அறிக்கை ‘பாவமற்ற நிலை’ என்று வர்ணிக்கிறது (State of Innocence). இதுவே ஆதாமின் வீழ்ச்சிக்கு முன்பதான நிலை.
ஏதேனில் இருந்தபோது நமது முதல் பெற்றோரின் சித்தம் நல்லதையும், கெட்டதையும் சமமாக செய்யக்கூடிய சுதந்திரத்தையும், வல்லமையையும் கொண்டிருக்கவில்லை என்பது கத்தோலிக்க மதத்தின் போதனை. பெலேஜியனிச, கத்தோலிக்க மதப்போதனையின்படிப் பார்த்தால் நமது முதல் பெற்றோர் செய்த நன்மைக்கு அவர்கள் காரணமாக இருக்க முடியாது. ஆதாம், ஏவாளின் சித்தத்தின் நிலையைப் பற்றி வேதபூர்வமான எண்ணங்களை நாம் கொண்டிருப்பது அவசியம். விசுவாச அறிக்கை, அவர்கள் நன்மையை மட்டுமே முழு சுதந்திரத்தோடும் வாஞ்சித்து அன்றாடம் செய்யக்கூடிய வல்லமையோடு இருந்தார்கள் என்கிறது. இதன் மூலம் அவர்களுடைய சித்தத்தின் பூரண சுதந்திரத்தையும் (Absolute Liberty), வல்லமையையும் (Ability) நாம் அறிந்துகொள்ளுகிறோம். விசுவாச அறிக்கையின் முதல் பத்தி இந்தவிதத்தில் தான் சித்தத்தின் சுதந்திரத்தை விளக்குகிறது.
மாறிவிடக்கூடிய நிலையில் சித்தம்
நன்மை செய்வதற்கான பூரண சுதந்திரத்தையும் வல்லமையையும் நமது முதல் பெற்றோர் கொண்டிருந்து அதை மட்டுமே செய்து வந்தபோதும் அவர்களுடைய சித்தத்தைப் பற்றி விளக்கும் விசுவாச அறிக்கை, ‘இருந்தபோதும் அவன் மாறும் இயல்புடையவனாக இருந்தபடியால் தனது நேர்மையான நிலையில் இருந்து அவனால் விழ முடிந்தது’ என்கிறது. ஏதேனில் மனிதனின் சித்தத்தைப் பற்றி கவனமாக விளக்குகின்ற விசுவாச அறிக்கை நன்மை செய்யக்கூடிய பூரண சுதந்திரத்தையும் வல்லமையையும் கொண்டிருந்த மனித சித்தம் அந்த நிலையில் இருந்து விழுந்துவிடக்கூடிய நிலையில் இருந்தது என்று விளக்குகிறது.
ஏதேனில் இருந்த நமது முதல் பெற்றோர் நன்மையை மட்டுமே நாடிச் செய்கின்ற பூரணமான சித்தத்தையும் வல்லமையையும் கொண்டிருந்தபோதும் அவர்களுடைய அறிவும், வளர்ச்சியும் பூரணமானதாக இருக்கவில்லை என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். அவர்கள் கர்த்தருடைய அறிவில் வளர வேண்டிய தன்மையைக் கொண்டிருந்தார்கள். காலையில் எழுந்து கர்த்தருடைய வார்த்தைகளைச் சிந்தித்துப் பார்த்து அவற்றை எப்படிக் கவனத்தோடு செய்ய வேண்டும் என்று அவர்கள் விருப்பத்தோடு சிந்தித்துப் பார்க்க வேண்டியிருந்தது. எந்தவிதக் குறைபாடும் இல்லாதிருந்தபோதும், அவர்களுடைய அறிவு வளர்ச்சியும், அனுபவமும் பூரணமானதாக இருக்கவில்லை. ஒவ்வொரு நாளும் நமது முதல் பெற்றோர் அறிவிலும் அனுபவத்திலும் வளர்ந்து கர்த்தரின் சாயலைப் பிரதிபலிக்க வேண்டிய நிலையில் இருந்தார்கள். உண்மையென்னவென்றால், இதில் அவர்களுக்கு குறைபாடு இருக்கவில்லை. இதை அவர்கள் பாவமில்லாமல் முழுப்பரிசுத்தத்தோடு செய்ய முடிந்தது.
பாவத்திலிருந்து விடுதலை பெற்று கர்த்தரை விசுவாசிக்கும் ஒருவன் கர்த்தரின் அறிவிலும் அனுபவத்திலும் வளரும்போது அதைப் பாவமுள்ள இருதயத்தோடும், பாவத்தோடு போராடியும் செய்கிறான். ஆனால், நமது முதல் பெற்«றோருக்கு பாவமுள்ள இருதயமோ, பாவத்தோடு போராட வேண்டிய நிலையோ அடியோடு இருக்கவில்லை. அவர்கள் எந்தப் போராட்டமும் இல்லாமல் அதேவேளை அறிவிலும், அனுபவத்திலும் வளர வேண்டியிருந்தது. ஆகவே, நமது முதல் பெற்றோரின் சித்தத்தின் நிலையை ‘மாறும் இயல்புடையதாக’ இருந்தது என்று விசுவாச அறிக்கையில் நாம் வாசிக்கிறபோது அதை விளங்கிக் கொள்ளுவது கஷ்டமாக இருக்காது. அறிவிலும், அனுபவத்திலும் வளர வேண்டிய நிலை நிச்சயம் அந்த விஷயங்களில் பூரணமானதல்ல. தாம் படைக்கப்பட்ட நிலையில் தொடர்ந்திருக்க நமது முதல் பெற்றோர் அறிவிலும், அனுபவத்திலும் வளர வேண்டியிருந்தது. அவர்களுடைய சித்தத்தின் முடிவுகளும், அவற்றின்படியான செயல்முறைகளும் அவர்களில் அன்றாடம் மாற்றத்தை ஏற்படுத்தி கடவுளின் சாயலில் வளரும்படிச் செய்தன. தங்களுடைய படைக்கப்பட்ட தன்மைக்கேற்றபடி நமது முதல் பெற்றோர் இதைச் செய்து வந்தனர்.
இந்த வகையில் அவர்கள் வளரவேண்டிய தன்மையோடு இருந்ததையே மாறும் இயல்பு என்கிறோம் (Unstable, changeable). இதைப் பற்றி விசுவாச அறிக்கையின் நான்காம் அதிகாரம், ‘கடவுள் மற்ற எல்லாப் படைப்புயிர்களையும் படைத்தபின்பு, அறிவுள்ளதும் அழியாததுமான ஆன்மாக்களோடு, ஆணும் பெண்ணுமாக மனித இனத்தை அவருக்காக வாழவேண்டிய வாழ்க்கையைக் கொடுத்துப் படைத்தார். அவர்கள் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டு, அறிவையும் நேர்மையையும், மெய்யான பரிசுத்தத்தையும் கொண்டு, தங்களுடைய இருதயத்திலே எழுதப்பட்டிருக்கும் கடவுளுடைய நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றும் வல்லமையுடையவர்களாய் இருந்தார்கள். அதேவேளை, மாறும் தன்மையுள்ள தங்களுடைய சுயசித்தத்தின் முழுச்சுதந்திரத்தோடு (கட்டுப் பாட்டை மீறும் சுதந்திரம்) பாவம் செய்யக்கூடிய சாத்தியத்துடன் (Possibility to Sin) வாழ்ந்து வந்தார்கள்’ என்று இரண்டாம் பத்தி விளக்குகிறது.
இதை விளக்குவதற்கு ஓர் உதாரணத்தைத் தேடுவோமானால் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை எடுத்துக்கொள்ளலாம். இயேசு பாவமில்லாத பூரணத்துவத்துடன் இருந்தார் என்பதையும், அவர் ஒருபோதும் தன் நிலையில் இருந்து விழுந்துவிடக்கூடிய தன்மையோடு இருக்கவில்லை என்பதையும் மனதில் வைத்துக்கொண்டு அவரை ஆதாம் இருந்த நிலையோடு ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம். இயேசு தேவனாகவும், மனிதனாகவும் இருந்தபோதும் இந்த உலகத்தில் சரீரப் பிரகாரமும், அறிவிலும், அனுபவத்திலும் வளர வேண்டியிருந்தது. அவர் ஞானத்தில் வளர்ந்ததாக லூக்கா 2:40, 52 ஆகிய வசனங்களில் வாசிக்கிறோம். அவர் வேத அறிவில் வளர்ந்து கற்றுக்கொண்டவைகளை வாழ்க்கையில் செயல்படுத்துகிற அனுபவத்திலும் வளர்ந்தார் என்று அறிந்துகொள்ளுகிறோம். விசுவாச வாழ்க்கையில், அனுபவத்தில் அவர் சிறுவயதில் இருந்தே வளர்ந்து வந்தார். தன்னுடைய மானுடத்தில் எப்படி பிதாவின் கட்டளைகளை நிறைவேற்றி வாழ்வது என்பதை அவர் கற்றுக்கொண்டு வளர்ந்து முதிர்ந்தார். எப்போதுமே அவர் பூரண சுதந்திரத்துடன் பிதாவின் சித்தத்தை மட்டும் பூரணமாக நிறைவேற்றி வந்தார். இதில் இயேசு எப்போதும் வெற்றியை மட்டுமே அனுபவித்தார். இயேசு பெற்ற வெற்றியை இந்த விஷயத்தில் ஆதாமால் பெறமுடியவில்லை என்பதுதான் பெரிய வித்தியாசம். இயேசு வென்றார், ஆதாம் வீழ்ந்தான். இதைப் பற்றி விளக்கும் ஆதி. 3:6 சொல்லுகிறது, ‘அப்பொழுது ஸ்திரியானவள், அந்த விருட்ஷம் புசிப்புக்கு நல்லதும் பார்வைக்கு இன்பமும் புத்தியைத் தெளிவிக்கிறதுக்கு இச்சிக்கப்படத்தக்க விருட்ஷமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்.’
பூரணமாக நன்மை செய்யக்கூடிய சுதந்திரமான சித்தத்தையும் வல்லமையையும் கொண்டிருந்த நமது முதல் பெற்றோரால் அந்த நிலையில் இருந்து விழுந்துவிடக்கூடிய ‘மாறும் இயல்பு’ அவர்களுக்கு இருந்தது. அந்த மாறும் இயல்பினால்தான் அவர்கள் பிசாசினுடைய வலையில் விழுந்து பின்னால் பாவத்தை செய்து தங்களுடைய படைக்கப்பட்ட பரிசுத்த நிலையில் இருந்து விழுந்துவிட முடிந்தது. ஏதேனில் பிசாசும், பாவமும் இல்லாத வரையில் அவர்கள் நன்மையை மட்டுமே நாடிச் செய்து வந்தார்கள். பாவ சிந்தனை அவர்களுக்கு இருக்கவில்லை. சுயமாக பாவத்தை இச்சிப்பதற்கு அவர்களுடைய இருதயத்தில் இடமிருக்கவில்லை; சுற்றியும் பாவமிருக்கவில்லை. காலையில் எழுந்த ஆதாமும், ஏவாளும் “இன்றைக்கு நாம் எப்படியும் பாவத்தை செய்துவிடாமல் வாழ்ந்துவிட வேண்டும்” என்று நினைப்பதற்கு வாய்ப்பிருக்கவில்லை; நினைக்கவுமில்லை. நன்மையானதை நினைத்து அவர்கள் நன்மையே செய்து வந்தார்கள். புசிக்கக் கூடாத கனி மரத்தின் பக்கத்தில் போகாமல், அதைப் பற்றி நினைத்தும் பார்க்காமல் கர்த்தரோடு உறவாடி வாழ்ந்திருந்தார்கள். பிசாசு ஏதேனுக்கு வந்து அவர்களோடு பாவத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தபோதுதான் அவர்களுடைய ‘மாறும் இயல்பு’ பாவத்தைப் பற்றி முதல் முறையாக எண்ண ஆரம்பித்தது. நன்மையையே இச்சித்து, செய்து வாழ்ந்து வந்தவர்களுக்கு அவற்றிற்கு எதிரானதில் முதல் முறையாக ஆசை ஏற்பட்டது. அந்த ஆசைக்கு அவர்கள் இடங்கொடுத்து புசிக்கக்கூடாத கனியைப் புசித்தபோதுதான் தாங்கள் இருந்த நிலையில் தொடர முடியாதபடி பாவத்தை செய்து அவர்கள் வீழ்ந்தார்கள்.