1. ஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது?
முதல் மனிதனாகிய ஆதாம் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டான் என்கிறது வேதம். அதாவது, ஆவியும், சரீரமும் கொண்டிருந்து கடவுளோடு நெருக்கமான தொடர்பு வைத்திருக்கவும், கடவுளைப் பிரதிபலிக்கும் வகையிலான தன்மையைக் கொண்டும் ஆதாம் படைக்கப்பட்டிருந்தான் (ஆதி. 1:26-27). அதுவே அவனில் இருந்த கடவுளின் சாயல். அவன் பாவத்தில் விழுந்தபோது அதற்கு என்ன நடந்தது என்பதே கேள்வி. இதுபற்றி எழுதியிருக்கும் ஜோன் கல்வின், ‘தான் படைக்கப்பட்டிருந்த நிலையில் இருந்து ஆதாம் வீழ்ந்தபோது கடவுளை நெருங்க முடியாதபடி பிரிக்கப்பட்டான். அவனில் இருந்த கடவுளின் சாயல் முற்றாக மறைக்கப்படாமலோ அல்லது முற்றாக அழிக்கப்படாமலோ போனாலும் அது முழுமையாக கறைபடிந்து போய் அவனுள் இருந்த அனைத்தும் பயப்பட வேண்டியளவுக்கு அங்கவீனமுற்றுப் போயின’ என்கிறார்.
பாவியாக இருக்கும் மனிதன் தொடர்ந்தும் கடவுளின் சாயலிலேயே இருக்கிறான் என்கிறது வேதம். கடவுளின் சாயலே மனிதனை ஏனைய படைப்புகளில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றது. கடவுளின் சாயலில் அவன் தொடர்ந்திருப்பதனால்தான் அவன் பாவத்தினால் கடவுளை அறியாமல் இருந்தபோதும், ஏதோ ஒன்றை ஆராதிக்க முயற்சிக்கிறான். கடவுளின் சாயலில் இருக்கும் மனிதனை எவரும் நிந்தித்துப் பேசக்கூடாதென்று வேதம் விளக்குகிறது (யாக். 3:9). இவற்றில் இருந்து பாவம் கடவுளின் சாயலை மனிதனில் இருந்து அகற்றிவிடவில்லை என்பதை அறிந்துகொள்ளுகிறோம். இருந்தபோதும் அந்த சாயல் வீழ்ச்சிக்குப் பிறகு மனிதனில் எந்த வகையில் கறைபடிந்து காணப்படுகின்றது என்பதை அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம். கிறிஸ்துவின் சுவிசேஷத்தை சரியாக விளங்கிக் கொள்ளுவதற்கும், பிரசங்கிப்பதற்கும் இந்த அறிவு முக்கியம். ஜோன் கல்வின் சொல்லுவதுபோல் பாவத்தில் இருக்கும் மனிதனின் அத்தனைப் பாகங்களும் பயப்பட வேண்டிய அளவுக்கு சீரழிந்து காணப்படுகின்றன. அவனுடைய இருதயம் பாவத்தால் பாழடைந்து காணப்படுகின்றது. அவனுடைய சித்தமும் (Will) பாவத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கின்றது என்றார்.
‘கடவுளை மனிதன் விசுவாசிக்க வேண்டும் என்று கடவுள் கட்டளையிட்டிருப்பதால், அவனால் கடவுளை விசுவாசிக்க முடியும்’ என்ற நம்பிக்கை சிலருக்கு இருக்கின்றது. அப்படி அவனால் கடவுளை விசுவாசிக்க முடியாதிருந்தால் தன்னை விசுவாசிக்கும்படி கடவுள் கட்டளையிடுவது நியாயமான செயலல்ல என்று அவர்கள் எண்ணுகிறார்கள். இந்த எண்ணம் முதலில் பெலேஜியஸ் என்ற 5ம் நூற்றாண்டைச் சேர்ந்த மனிதனின் மனதில் ஏற்பட்டது. பெலேஜியஸின் இந்தவகையிலான சிந்தனைக்குக் காரணம் ஏதேன் வீழ்ச்சிக்குப் பிறகு மனிதனின் நிலையைப் பற்றி அவன் கொண்டிருந்த நம்பிக்கையே. வீழ்ச்சிக்குப் பிறகு மனிதனுடைய சித்தத்தைப் பாவம் எந்தவகையிலும் பாதிக்கவில்லை என்று பெலேஜியஸ் நம்பினான். அந்தக் காலத்தில் இருந்த இன்னொரு இறையியலறிஞரான ஆகஸ்தீன் பெலேஜியஸின் இந்தப் போதனையை மறுத்து பாவம் மனிதனின் சித்தத்தை முழுமையாகப் பாதித்து கடவுளை அவன் விசுவாசிக்க முடியாத நிலையில் வைத்திருப்பதாக விளக்கினார்.
கடவுளின் சாயலைத் தொடர்ந்து தன்னில் கொண்டிருக்கும் பாவியாகிய மனிதன் தற்போதைய நிலையில் பாவத்தால் பாதிக்கப்பட்ட சித்தத்தைக் கொண்டிருக்கிறான். அவனுடைய சித்தம் வீழ்ச்சிக்கு முன்பு ஆதாம் தன்னில் கொண்டிருந்த சித்தத்தைப் போலல்லாமல் பாவத்தால் கறைபடிந்த, கட்டுப்படுத்தப்பட்ட சித்தமாக இருக்கிறது. பாவ நிலையில் இருக்கும் மனிதன் பாவத்தை மட்டுமே சுதந்திரமாக செய்யக்கூடிய சித்தத்தைத் தன்னில் கொண்டிருக்கிறான். இந்த நிலையில் மனிதனின் சித்தம் சுதந்திரமாக இயங்கவில்லை என்று தவறாக எண்ணிவிடக்கூடாது. அது சுதந்திரமாக இயங்கியபோதும் பாவத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதால் பாவத்தை மட்டுமே சுதந்திரமாக செய்யக்கூடிய நிலையில் இருக்கிறது. அதனால் ஆவிக்குரிய நீதியான காரியங்களை செய்யமுடியாது. இந்த உண்மையைப் பெலேஜியஸினால் புரிந்துகொள்ள முடியவில்லை. மனிதன் தன்னை விசுவாசிக்க வேண்டும் என்று கடவுள் கட்டளையிட்டிருந்தபோதும் மனிதனால் அவரை விசுவாசிக்க முடியாதபடி அவனுடைய பாவசித்தம் தடைசெய்கிறது என்பதை பெலேஜியஸினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இன்னுமொரு உண்மையையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். கடவுளின் சாயல் மனிதனில் கறைபடிந்து காணப்பட்டபோதும் மனிதன் தொடர்ந்து மனிதனாகத்தான் இருக்கிறான். அவன் தன்னுடைய மானுடத்தை இழந்து நிற்கவில்லை. மனிதனை கடவுள் ஆரம்பத்தில் பொறுப்புள்ளவனாகப் (responsible) படைத்தார். தன்னுடைய வார்த்தைக்குக் கட்டுப்பட்டு தனக்கு பதிலளிக்க வேண்டியவனாகப் (accountable) படைத்தார். ஆதாம் அந்தப்படியே கடவுளின் சித்தத்தைப் பூரணமாகச் செய்து அவருக்குக் கட்டுப்பட்டு இருந்தான். அவனுடைய பாவம் அவனை முழுமையாகப் பாதித்தபோது, கடவுளுக்குப் பொறுப்புள்ளவனாக அவன் இருக்க வேண்டிய நிலைமையை அது இல்லாமலாக்கிவிடவில்லை. பாவ நிலையில் அவன் தொடர்ந்தும் கடவுளுக்கு கட்டுப்பட வேண்டியவனாகவும், கடவுளுக்கு பதிலளிக்க வேண்டியவனாகவும் இருக்கிறான். பாவத்தால் பாதிக்கப்பட்டு அவன் இழந்தது கடவுளின் வார்த்தைக்குக் கீழ்ப்படியக்கூடிய ஆத்மீக வல்லமையையே (moral ability) கடவுளை விசுவாசிக்க வேண்டிய பொறுப்பை அல்ல (responsibility). கடவுளுக்கு அவன் கீழ்ப்படிய வேண்டிய கடமை தொடர்ந்து இருந்தபோதும் அந்தக் கடமையை நிறைவேற்றக்கூடிய வல்லமையை அவன் இழந்து நின்றான். இரட்சிப்புக்குரிய ஆவிக்குரிய காரியங்களை செய்யும் வல்லமை அவனுக்கு இல்லாமலிருக்கிறது என்று 1689 விசுவாச அறிக்கை விளக்குகிறது (அதி. 9, சுயாதீன சித்தம்). இதைப் பெலேஜியஸ் புரிந்துகொள்ளவில்லை. பெலேஜியஸைப் போலவே அநேகர் இன்றும் இதில் விளக்கமில்லாமல் இருக்கிறார்கள்.
மனிதன் மனந்திரும்ப வேண்டும் என்று கர்த்தர் கட்டளையிடுகிறார் (அப்போ. 2:38). ஆனால், அந்தக் கட்டளையை நிறைவேற்றும் வல்லமை அவனுக்கு இல்லை (2 தீமோ. 2:25&26). கிறிஸ்துவை அவன் விசுவாசிக்க வேண்டும் என்று கர்த்தர் கட்டளையிடுகிறார் (அப்போ. 16:31). அதைச் செய்ய வேண்டிய பொறுப்பு மனிதனுக்கு இருந்தபோதும் அதைச் செய்வதற்கான வல்லமை அவனுக்கு இல்லாமலிருக்கிறது (யோவான் 6:37, 40, 44). இந்த ஆவிக்குரிய வல்லமையையே கடவுளின் சாயலில் இருக்கும் மனிதன் இழந்து நிற்கிறான். மனிதன் தன்னுடைய இந்த நிலைக்காக கடவுளைக் குறைகூற முடியாது. உதாரணத்திற்கு குடித்துவிட்டு கார் ஓட்டுகிற ஒருவனை எடுத்துக்கொள்ளுவோம். டிராபிக் போலீஸ் அவனைப் பிடித்து வீதி விதிகளை மீறியதற்காக அவனுக்கு தண்டனை சீட்டு கொடுத்தால் போலீஸை அவன் குறைகூற முடியுமா? ‘நான் குடித்திருப்பது உனக்குத் தெரியவில்லையா? அந்த நிலையில் நான் செய்த காரியத்துக்கு நான் பொறுப்பில்லை. எனக்கு நீ சீட்டு கொடுக்க முடியாது’ என்று அவன் குறைகூற முடியுமா? முடியவே முடியாது. ஏனெனில், குடியில் நிலை தடுமாறி நிற்பதற்கு அவன்தான் பொறுப்பு. அத்தோடு, குடித்திருக்கும் நிலையில் வீதி விதிகளை மீறியதற்கும் அவன்தான் பொறுப்பு. இந்த இரண்டு மீறுதல்களுக்கும் அவனே பொறுப்பு. இதேவகையில்தான், பாவத்தில் விழுந்ததற்கும் மனிதனே பொறுப்பு, பாவ நிலையில் அவன் செய்து வருகின்ற பாவங்களுக்கும் அவனே பொறுப்பு. கடவுள் சகல அதிகாரத்தோடு மனந்திரும்பு என்று மனிதனைப் பார்த்து சுவிசேஷத்தின் மூலம் அழைக்கிறபோது அதைக் கேட்டு, சிந்தித்து பொறுப்போடு நடந்து மனந்திரும்ப வேண்டிய கடமை மனிதனுக்கு இருக்கிறது. அவன் மனந்திரும்ப மறுப்பானானால், அதை அவன் சிந்தித்துப் பார்த்து தன்னுடைய பாவ நிலையில் சுயாதீனமாக நடந்து கர்த்தரின் கட்டளையை நிராகரிக்கிறான். அந்த செயலுக்கு அவனே முழுப் பொறுப்பு. தன்னுடைய செயலுக்கு அவன் கடவுளை குறைகூற முடியாது.
2. பாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா?
இரட்சிப்போடு தொடர்புள்ள சத்தியங்களைத் தொகுத்துத் தருகின்ற ‘கிருபையின் போதனைகள்’ மனிதனுடைய பாவத்தின் தன்மையை விளக்குகின்றபோது பாவம் அவனை முழுமையாக, அவனில் ஓரிடம் விடாமல் பாதித்து கர்த்தர் முன் பாவியாக நிறுத்தியிருக்கிறது என்கிறது. இதனை ஆங்கிலத்தில் Total Depravity or Total Inability என்று விளக்குவார்கள். Total Depravity என்றால் முழுமையாகக் கறைபடிந்தவன் என்று பொருள். Total Inability என்றால் முழுமையாக செயல் திறனற்றவன் என்று பொருள். இவை இரண்டும் பாவம் மனிதனை எந்தளவுக்கு பாதித்திருக்கின்றது என்பதை விளக்குவதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற பதங்கள். எந்த ஓர் உண்மையையும் விளக்குவதற்கு நாம் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம். அது அவசியம். ஆனால், அந்த வார்த்தைகளும், பதங்களும் என்ன காரியத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றனவோ அதை மீறி அவற்றைப் புரிந்துகொள்ளுவது தான் தவறு. இந்தப் பதங்கள் எதை விளக்க முயல்கின்றன என்பதைக் கவனத்தில் வைத்து அவற்றை விளங்கிக் கொள்ள வேண்டும்.
‘மனிதன் முழுமையாகக் கறைபடிந்தவன்’ என்பது சுத்தமான உண்மை. அதற்கு அர்த்தம் அவன் நன்மைகளே செய்ய முடியாத மகா கேடு கெட்டவன் என்பதல்ல. இந்த உண்மையைத் தவறாகப் புரிந்துகொள்ளுகிறவர்கள் அப்படித் தவறாக எண்ணிவிடுகிறார்கள். பாவம் மனிதனை முழுமையாகப் பாதித்து ஆவிக்குரிய நன்மைகள் எதையுமே அவன் செய்ய முடியாத நிலையில் வைத்திருக்கின்றது என்பதை மட்டுமே இந்த உண்மை விளக்க முனைகிறது. அதேபோலத்தான், ‘மனிதன் முழுமையாக செயல் திறனற்றவன்’ என்ற வரிகளும் ஆவிக்குரிய செயல்கள் எதையும் செய்ய முடியாத நிலையில் மனிதன் இருக்கிறான் என்பதை விளக்குவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
பாவ நிலையில் மனிதன் பாவத்தை செய்ய முடியாத வல்லமையைக் கொண்டிருக்கவில்லை (not able not to sin) என்று ஆகஸ்தீன் சொல்லியிருக்கிறார். அவனால் பாவத்தை மட்டுமே செய்ய முடியும். அதை அவன் முழுச் சுதந்திரத்தோடு செய்கிறவனாக இருக்கிறான். அதைச் செய்யக் கூடாதென்று அவனுடைய இருதயம் அவனோடு போராடுவதில்லை. அவனுடைய இருதயமும் பாவ இருதயமாக மாறியிருப்பதால் அது பாவத்தை மட்டுமே தன்னுடைய பாவ இயல்புக்கு ஏற்றபடி நாடுகிறது.
பாவத்தை மட்டுமே செய்யும் இயல்புள்ள மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுகெட்டவனா? என்ற சிலரின் கேள்விக்கு நாம் பதிலளிப்பது அவசியம். அதற்கு பதில் உண்மையில் அப்படியில்லை என்பதுதான். முதலில் பாவ நிலையில் இருக்கும் மனிதனால் எதைச் செய்ய முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அவனால் இரட்சிப்புக்குரிய, ஆவிக்குரிய நன்மைகள் எதையும் செய்ய முடியாது. அதில் ஒரு துரும்பளவுக்குக் கூட அவனால் எதுவும் செய்ய முடியாது. இது வேதம் போதிக்கும் தெளிவான உண்மை. ஆவிக்குரிய எந்தக் காரியத்தை அவன் செய்ய முனைந்தாலும் அவை பாவத்தால் கறைபடிந்து கடவுளிடம் நெருங்க முடியாத நிலையில் அவன் இருக்கிறான்.
பாவநிலையில் இருக்கும் மனிதன் தொடர்ந்தும் கடவுளின் சாயலில் இருப்பதால் அவனுக்குள் இந்த உலகத்துக்கேற்ற நன்மைகளை செய்ய முடிகின்றது. ஒழுக்கத்துக்கேற்ற சில காரியங்களைக் கர்த்தர் அவனைக் கொண்டு செய்ய வைக்கிறார். அவனால் மற்றவர்கள் மீது கருணை காட்ட முடிகின்றது. பெற்றொர்களில்லாத பிள்ளைகளை வளர்க்க விடுதிகளைக் கட்ட முடிகின்றது. கருணையோடு வைத்தியசாலைகளைக் கட்டி வியாதியுள்ளவர்களைப் பராமரிக்க முடிகின்றது. பல விதங்களில் பணத்தைக் கொடுத்து எத்தனையோ டிரஸ்டுகள் மூலம் கான்சர் போன்ற வியாதிகளுக்கு மருந்து கண்டுபிடிக்க உதவ முடிகின்றது. கடவுளின் சாயலில் இருக்கும் பாவ மனிதன் இதையெல்லாம் செய்யும்படி கர்த்தர் செய்கிறார். இதையெல்லாம் நாம் மறுக்க முடியாது. ஆனால், இத்தனை நல்ல காரியங்களையும் பயன்படுத்தி அவனால் ஆவிக்குரிய எந்த நன்மையையும் அனுபவிக்க முடியாது. ‘இத்தனை நல்ல காரியங்களைச் செய்கிறேனே, நிச்சயம் என்னை நீர் பரலோகத்துக்கு உரியவனாக்க வேண்டும்’ என்று பாவ மனிதன் கர்த்தரைப் பார்த்து சொல்ல வழியில்லை. பாவ மனிதன் எந்த நன்மையைச் செய்தாலும் தனக்குத் தானே ஆத்மீக விடுதலையைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் ஆவிக்குரிய நன்மைகள் அற்றவனாக இருக்கிறான். ஏசாயா 64:6 சொல்லுகிறது, ‘நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம், எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக் கொண்டு போகிறது.’ பாவ மனிதன் செய்கின்ற அத்தனை நன்மைகளும் கர்த்தருக்கு முன்பு அழுக்கான கந்தைகளாகத் தெரிகின்றன. அவனால் செய்யக்கூடிய இந்தச் சில நன்மைகளையும் அவன் கடவுளின் சாயலில் இருப்பதனாலேயே செய்ய முடிகின்றது. கடவுளின் உதவியால் அவன் செய்கின்ற நன்மைகளை அவர் முன் காட்டி அவனால் ஆத்மீக விடுதலையைப் பெற்றுக்கொள்ள முடியாது. இயல்பில் அவன் ஆத்மீக நன்மைகள் எதுவுமற்றனாக இருக்கிறான். அத்தோடு கடவுள் தன்னுடைய பொதுவான கிருபையின் அடிப்படையில் அவன் கொடூரமான பாவங்களைச் செய்துவிடுவதில் இருந்து அவனைத் தடுக்கிறார். இதற்காக நாம் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். பாவ மனிதனை அவனுடைய நிலையில் துப்பரவாக விட்டுவிட்டால் இந்த உலகத்தை நொடியில் அவன் அழித்துவிடுவான். அந்தளவுக்கு பாவம் கொடிதானது.
பாவ நிலையில் உள்ள மனிதன் ஏனைய மனிதர்கள் மீது கருணை காட்டவும், அவர்களுக்கு நன்மைகள் செய்ய முடிந்த நிலையில் இருந்தபோதும் அதேபோல் அவனால் ஆத்மீகக் காரியங்களைச் செய்யவோ, ஆத்மீக விடுதலையை அடையவோ முடியாது. இரட்சிப்புக்குரிய கர்த்தரின் கிருபையில்லாமல் அவனால் கர்த்தரிடம் வருவதற்கு சித்தங்கொள்ள முடியாது. அவனுடைய பாவ சித்தம் கடவுளுடைய துணையில்லாமல் அவரை நேசிக்கும் நிலைக்கு வராது.
3. ‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா?
மனிதனுடைய சுயாதீனமான சித்தத்தைப் பற்றிய போதனையை சரியாகப் புரிந்துகொள்ளாதவர்கள் இப்படி நினைப்பதுண்டு. அவர்கள் பாவியாகிய மனிதன் இரட்சிப்படைய வேண்டும் என்று மெய்யாகவே விரும்பினாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது என்று நம்புகிறார்கள். ஒருவன் இரட்சிப்பை அடைய விரும்பியும் அவனால் அதை அடைய முடியாமலிருப்பது அவர்களுக்கு அநியாயமானதாகக் தெரிகிறது. இதன் காரணமாக அவர்கள், கடவுள்தான் ஏதோ ஒரு விதத்தில் இரட்சிப்படைய விரும்புகிறவர்களை அவர்கள் அதை அடைய முடியாதபடி தடுத்து வைத்திருக்கிறார் என்று தவறாக நினைக்கிறார்கள். இப்படி நினைப்பவர்கள் கர்த்தருடைய இறையாண்மை பற்றிய போதனையும், தெரிந்துகொள்ளுதல் பற்றிய போதனையும் தான் இந்த நியாயமில்லாத காரியத்துக்குக் காரணம் என்று அவற்றைப் புறக்கணிக்கிறார்கள். இதனால் இந்த சத்தியங்களை விளக்கும் விசுவாச அறிக்கையையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அத்தோடு, இவர்களால் மனிதன் முழுமையான பாவியாக, எந்தவித ஆத்மீக செயல்களைச் செய்யும் வலலமையில்லாதவனாக இருக்கிறான் என்ற போதனையையும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இதெல்லாம் இவர்களுக்கு நியாயமற்றவையாகத் தெரிகின்றது. இவர்கள் நினைப்பில் ஏதும் உண்மையிருக்கிறா என்று பார்ப்போம்.
முதலில், ஒருவன் இரட்சிப்படையாமல் இருப்பதற்கு கர்த்தருடைய இறையாண்மையும், தெரிந்துகொள்ளுதலுந்தான் காரணமென்று வேதம் எந்தப் பகுதியிலும் விளக்குவதில்லை. இந்த இரு சத்தியங்களும் நிராகரிக்க முடியாதபடி வேதத்தில் விளக்கப்பட்டிருந்தாலும் மனிதன் சுயமாக கர்த்தரை விசுவாசிக்காமல் போவதற்கு இவை காரணங்களாக வேதத்தில் எங்குமே விளக்கப்படவில்லை. இந்த இரண்டு போதனைகளும் மகா ஞானியும், வல்லவரும், நீதிமானுமாகிய கர்த்தரின் தெய்வீக வல்லமையையும், தெய்வீக சித்தத்தையும் விளக்குகின்றன. அவற்றை குறைந்த அறிவுள்ளவர்களாகிய நாம் சத்தியங்களாக ஏற்று விசுவாசிக்க வேண்டுமே தவிர தத்துவரீதியாக சிந்தித்துப் பார்த்து கர்த்தர் குறைபாடு கொண்ட குணாதிசயங்களைக் கொண்டவராக எண்ணுவதோ அல்லது மனித எண்ணங்களுக்கு ஒத்துப்போவது போல் இவற்றிற்கு விளக்கங்கொடுக்க முனைவதோ ஆபத்தானதும், கர்த்தரின் மகிமையைக் குறைப்பதுமான செயல்கள். அதேபோல் மனிதனின் பாவநிலையைப் பற்றிய விளக்கமான, அவன் பாவத்தால் முழுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறான் என்ற வேத போதனையும் முற்றிலும் சரியானதே. இரட்சிப்பை ஒருவன் அடைய முடியாமல் போவதற்கு இது காரணமல்ல. இது மனிதனின் மெய்யான நிலையை விளக்குகிறது. இதை மறுப்போமானால் சுவிசேஷ செய்தியே தரமிழந்து போய்விடும். மனிதனைப் பற்றிய இந்த உண்மையே சுவிசேஷ செய்தியை மிகவும் வலிமையுள்ளதாக்குகிறது, அவசியமானதாக்குகிறது. மனிதன் பாவத்தால் முழுமையாகப் பாதிக்கப்படாமலிருந்தால் அவனுடைய இரட்சிப்புக்கு சுவிசேஷம் அவசியமில்லை.
ஒருவன் இரட்சிப்புக்காக கிறிஸ்துவை விசுவாசிக்க சித்தங் கொள்கிறான் என்று வைத்துக்கொள்ளுவோம். அவனால் இரட்சிப்பை அடைய முடியுமா, முடியாதா? நிச்சயம் இரட்சிப்பு அடைய முடியும் என்றுதான் வேதம் போதிக்கிறது. இப்படிச் சொல்லுவது வேதபோதனைகளுக்கு முரணானதல்ல. இதை எப்படி விளங்கிக் கொள்ளுவது? ஒருவன் இரட்சிப்படைய வேண்டும் என்ற எண்ணத்தில் கிறிஸ்துவை விசுவாசிக்க சித்தங்கொள்ளுகிறபோது, அதை அவன் சுதந்திரமாக சிந்தித்து சித்தங்கொண்டாலும், கர்த்தருடைய துணையில்லாமல் சித்தங்கொள்ளுவதில்லை. பாவ நிலையில் இருக்கும் மனிதனுடைய சித்தம் இயல்பாக கிறிஸ்துவை ஒருபோதும் நேசிக்காது. அந்த இருதயம் கிறிஸ்துவை மெய்யாக நேசிக்க ஆரம்பிக்குமானால் அதற்குக் காரணமே அந்த இருதயத்தில் பரிசுத்த ஆவியானவர் செயல்பட ஆரம்பித்துவிட்டார் என்றுதான் அர்த்தம். கிறிஸ்து வேண்டும் என்கிற, இருதயத்தில் ஏற்படுகின்ற விருப்பத்தை பரிசுத்த ஆவியானவர் மட்டுமே ஒருவனுக்கு கொடுக்க முடியும். பரிசுத்த ஆவியால் தொடப்படாத இருதயத்தில் அந்த எண்ணம் ஏற்படுவதற்கு வழியேயில்லை. பாவி எப்போதும் தன்னுடைய இயல்புக்கேற்ப கர்த்தரைவிட்டு விலகியோடத்தான் பார்ப்பான். பரிசுத்த ஆவியானவரின் செயலைப் பற்றித்தான் இயேசு நிக்கொதேமுவுக்கு யோவான் 3ம் அதிகாரத்தில் காற்றை உதாரணமாகப் பயன்படுத்தி விளக்கினார். ஆவியானவரின் கண்களுக்குப் புலப்படாத செயலே மனித இருதயத்தில் விசுவாசத்துக்குரிய ஜீவனை விதைப்பது என்று இயேசு அங்கே விளக்குகிறார். ஆவியினால் நித்திய ஜீவனுக்குரிய வித்து விதைக்கப்பட்டதற்கான அறிகுறியே ஒரு மனிதன் கிறிஸ்துவை நாடி பாவ மன்னிப்புக்காக ஓடி வருவது என்று வேதம் விளக்குகிறது. கெட்டகுமாரன் கெட்டுச் சீரழிந்து கடைசியில் ஒன்றுக்குமே உதவாத நிலைக்கு வந்தபிறகு அவனுக்கு புத்தி தெளிந்தது (லூக்கா 15:17). அதற்குப் பிறகு அவன் மனந்திரும்பியவனாகத் தன்னுடைய தகப்பனிடம் போனான். இதற்கு என்ன அர்த்தம்? அங்கே ‘புத்தி தெளிந்தது’ என்ற வார்த்தைகள் அவனில் ஆத்மீக விழிப்பு ஏற்பட்டதை உணர்த்துகின்றன. தன்னுடைய பாவங்களை அவன் உணர்ந்து கர்த்தரை நேசிக்க ஆரம்பித்ததை சுட்டிக் காட்டுகின்றன. அதை அவனுக்குக் கொடுத்தது யார்? இயல்பில் பாவியாக இருந்த அவனுக்கு அந்த எண்ணங்கள் சுயமாக ஏற்பட்டிருக்க வழியில்லை. அப்படியானால் அவன் எப்படி மனந்திரும்பினான்? வரிக்குதிரைக்கு தன்னுடைய உடம்பில் இருக்கும் வரிகளை அழித்துவிட முடியாததுபோல் அவனாலும் தன்னைத் திருத்திக் கொள்ள முடியாது. அவனுக்கு ஆத்மீக விழிப்பைக் கொடுத்தது பரிசுத்த ஆவியானவரே. கர்த்தரை நாட வேண்டும் என்ற துடிப்பு அவனுக்குள் ஆவியானவரால் விதைக்கப்பட்டது. கர்த்தரை வெறுத்து ஓடிக்கொண்டிருந்த அவன் இப்போது கர்த்தரை நாடி ஓடிவர ஆரம்பித்துவிட்டான். இரட்சிப்பையும் அடைந்தான். எனவே, ஒருவன் கிறிஸ்துவை அடைய சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது என்று கூறுவது முழுத்தவறானது.
4. மனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றைத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா?
பாவியாகிய மனிதன் ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளும் வல்லமையற்றவனாக இருக்கிறான் (Total Inability) என்ற போதனையை சரிவரப் புரிந்துகொள்ள முடியாத சிலர் பாவிகளுக்கு சுவிசேஷம் சொல்லுவதில் பயனில்லை என்ற தவறான முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். மனிதன் மோசமான பாவியாக, இயலாதவனாக இருக்கிறான், அதனால் அவனுக்கு சுவிசேஷம் சொல்லுவதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை என்று இவர்கள் நினைத்து விடுகிறார்கள். இந்த மாதிரியான தவறான எண்ணம் கிறிஸ்துவின் சீடர்களுக்கும் வந்துவிடுகிற நிலை இருந்தது. மாற்கு 10:24&27 வரையுள்ள வசனங்களைக் கவனியுங்கள். ‘சீடர்கள் அவருடைய வார்த்தைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள். இயேசு பின்னும் அவர்களை நோக்கி: பிள்ளைகளே, ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கையாயிருக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது! ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார். அவர்கள் பின்னும் அதிகமாய் ஆச்சரியப்பட்டு: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்று தங்களுக்குள் சொல்லிக் கொண்டார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாதுதான்; தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாமே கூடும் என்றார்.’
யாருமே இரட்சிக்கப்படுவது ஆகாத காரியம் என்ற வழியில் சீடர்களுடைய சிந்தனை போவதைக் கவனித்த இயேசு அவர்களைத் திருத்துவதை மேலே நாம் பார்த்த வசனங்களில் கவனிக்கிறோம். எவருடைய இரட்சிப்புக்கும் நாம் மனிதனின் வல்லமையில் தங்கியிருந்தால் எவரும் இரட்சிப்படைவதற்கு வழியே இல்லை. ஆனால், கர்த்தரால் எதையும் செய்ய முடியும் என்று இயேசு அவர்களுக்கு விளக்குகிறார்.
மனிதன் இரட்சிப்புக்கு தன்னில் எந்த நம்பிக்கையையும் வைக்கக்கூடாது. 1689 விசுவாச அறிக்கை 9ம் அதிகாரம் (சுயாதீனமான சித்தம்) மூன்றாம் பத்தியில், ‘மனிதன் பாவத்தில் வீழ்ந்ததால் இரட்சிப்புக்குரிய எந்தவித ஆவிக்குரிய நன்மைகளையும் செய்யக்கூடிய தனது சித்தத்தின் வல்லமையைப் பூரணமாக இழந்தான்’ என்று விளக்குகிறது. அத்தோடு. ‘இயல்பாகவே மனிதன் ஆவிக்குரிய நன்மைகளை முற்றிலும் எதிர்ப்பவனாகவும், பாவத்தில் மரித்தவனாகவும் உள்ளான்’ என்று அது தொடர்ந்து விளக்குகிறது. தனக்குத் தானே ஆத்மீக விடுதலையைத் தேடிக்கொள்ள முடியாது என்பதையும், கர்த்தர் ஒருவரால் மட்டுமே மனிதனுக்கு இரட்சிப்பை அளிக்க முடியும் என்பதையும் மனிதர்கள் புரிந்துகொள்ள வேண்டும். என்னை நானே இரட்சித்துக்கொள்ள முடியாது என்ற எண்ணம் உதயமாகிறபோதே ஒரு மனிதனுக்கு இரட்சிப்பை அடைவதற்கான வழி திறக்கப்படுகிறது. பாவியாகிய மனிதன் சுவிசேஷத்தைக் கேட்கிறபோது, அவன் மனந்திரும்பி தன்னை விசுவாசிக்க வேண்டும் என்ற கர்த்தரின் சித்தத்தையும் அவருடைய வாக்குறுதிகளையும் காதால் கேட்கிறான். அதைக் கேட்டு அந்தப் பாவியாகிய மனிதன் சுவிசேஷ அழைப்புக்கு உடன்பட வேண்டும் என்று சித்தங்கொள்ளுவானால் அவனால் அதைச் செய்ய முடியும். அவனுடைய இருதயத்தில் ஏற்படுகின்ற இரட்சிப்புக்குரிய அந்த விருப்பத்தை அவனில் ஆவியானவர் விதைப்பதாலேயே அவனால் சுவிசேஷ அழைப்புக்கு உட்பட சித்தங்கொள்ள முடிகிறது. இறையாண்மையுள்ள கர்த்தரே சுவிசேஷத்தை அந்த மனிதனில் திட்ப உறுதியாக செயல்பட வைக்கிறார். பரிசுத்த ஆவியானவர் அவனுடைய கண்களைத் திறந்து, செவி மடல்கள் சுவிசேஷத்தைக் கேட்க வைத்து, செத்துப் போயிருந்த இருதயத்தை இரட்சிப்புக்குரியதாக உயிர்ப்பிக்க வைத்து, பாவத்தினால் பாதிக்கப்பட்டிருந்த அவனுடைய சித்தத்திற்கு விடுதலை கொடுத்து கிறிஸ்துவை விசுவாசிக்க சித்தங்கொள்ள வைக்கிறார். பாவியாகிய மனிதன் இரட்சிப்படைய வேண்டுமென்று விரும்புவானானால், சுவிசேஷத்தின் மூலம் அவனை திட்ப உறுதியாக அழைக்கும் கர்த்தரை விசுவாசிக்க அவனால் சித்தங்கொள்ள முடியும். அவ்வாறு அவன் சித்தங்கொள்ளும்போது இறையாண்மையுள்ள கர்த்தரின் தெரிந்துகொள்ளுதலுக்கும், திட்ப உறுதியான அழைப்புக்குமே (Effectual Call) அவன் உடன்படுகிறான். இதன் மூலம் கர்த்தரே சகல மகிமையையும் அடைகிறார். இதில் மனிதன் தன்னைப் பாராட்டிக் கொள்ளுவதற்கு ஒன்றுமேயில்லை. மனிதனால் தன்னை இரட்சித்துக் கொள்ள முடியாது. மனிதன் மனந்திரும்பி தன்னை விசுவாசிக்கும்படிச் செய்து கர்த்தரே அவனை இரட்சிக்கிறார். இதெல்லாம் சுவிசேஷ அழைப்பைக் கொடுக்காமல் நடக்க முடியாது (ரோமர் 10). சுவிசேஷ அழைப்பின் மூலமே கர்த்தர் பாவிகளைத் தன்னிடத்தில் வரும்படியாக அழைக்கிறார். எனவே, சுவிசேஷத்தை தீவிரத்தோடு சகல மனிதர்களுக்கும் சொல்லுவதில் நாம் எந்தக் குறைபாடும் கொண்டிருக்கக் கூடாது.