மனித சித்தம்: வரலாற்று, இறையியல் பின்னணி

விசுவாச அறிக்கை: சுயாதீனமான சித்தம்

1689 விசுவாச அறிக்கையில் மனிதனின் சித்தத்தைப் பற்றி விளக்கங்கொடுக்கும் ‘சுயாதீனமான சித்தம்’ (9ம் அதிகாரம்) என்ற தலைப்பைக் கொண்ட அருமையானதொரு அதிகாரம் இருக்கிறது. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு விளக்க நூல் எழுத வேண்டும் என்று பல வருடங்களுக்கு முன் எனக்கு வாஞ்சை இருந்தது. அதை செய்யும் வாய்ப்பு இதுவரை இருக்கவில்லை. சமீபத்தில் என்னுடைய சபையில் இந்த அதிகாரத்தை நான் ஞாயிறு காலை வேளைகளில் விளக்கிப் போதிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த விளக்கப்போதனைகளை நீங்களும் பெற்றுப் பயனடைய வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் இதை நான் எழுத முனைந்திருக்கிறேன்.

வரலாற்று, இறையியல் பின்னணி

1689 விசுவாச அறிக்கையை அதன் வரலாற்று, இறையியல் பின்னணியின் அடிப்படையில் படித்துப் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் அடிக்கடி கூறுவேன். ஏன் தெரியுமா? இந்த விசுவாச அறிக்கை எழுதப்பட்டதற்கு வரலாற்று, இறையியல் காரணங்கள் இருப்பதால்தான். அந்தக் காரணங்களைத் தெரிந்து கொள்ளாமலும், அதன் அடிப்படையில் விசுவாச அறிக்கையைப் படிக்காமலும் விட்டால் சாம்பார், சட்னி இல்லாமல் இட்டிலி சாப்பிட்டது போலாகிவிடும். விசுவாச அறிக்கையின் சுவையை மட்டும் நாம் தெரிந்துகொள்ளாமல் போகப்போவதில்லை, அதன் அழுத்தமான, ஆழமான போதனைகளையும் விளங்கிக் கொள்ள முடியாமல் போய்விடும். அப்படியானால், விசுவாச அறிக்கையின் வரலாற்று, இறையியல் பின்னணி என்ன என்று உடனடியாக நீங்கள் கேட்கப் போகிறீர்கள். அதை விளக்காமல் இருக்க முடியாது.

நாம் இப்போது மனிதனின் சித்தத்தைப் பற்றிய விசுவாச அறிக்கையின் போதனையை ஆராய்வதால் முக்கியமாக மனித சித்தம் பற்றிய இந்த ஒன்பதாம் அதிகாரத்தின் வரலாற்று, இறையியல் முக்கியத்துவத்தை நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

(1) மனித சித்தம் பற்றிய இந்த ஒன்பதாம் அதிகாரம் விசுவாச அறிக்கையில் இந்த இடத்தில் அமைந்திருப்பது விசேஷம். 1689 விசுவாச அறிக்கையில் மனிதனுடைய சித்தத்தின் தன்மையை விளக்கும் அதிகாரத்திற்கு ‘சுயாதீனமான சித்தம்’ என்பது தலைப்பு (Free Will). மனிதனுடைய சித்தம் எந்தெந்த நிலைகளில் எப்படிச் செயல்படுகிறது என்பதை இந்த அதிகாரம் விளக்குகின்றது. இந்த அதிகாரம் விசுவாச அறிக்கையில் வேதத்தைப் பற்றியும், கடவுளைப் பற்றியும், அவருடைய ஆணையைப் பற்றியும், படைப்பு, பராமரிப்பு, மனிதனின் வீழ்ச்சி, பாவம் ஆகியவை பற்றியும் விளக்கி அதற்குப் பிறகு கடவுளின் உடன்படிக்கையையும், கிறிஸ்துவைப் பற்றியும் எட்டு அதிகாரங்களில் விளக்கிய பிறகு வருகிறது. இந்த அதிகாரத்துக்குப் பிறகு இரட்சிப்பைப் பற்றிய விளக்கங்களை விசுவாச அறிக்கை தர ஆரம்பிக்கிறது. இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கு பற்றிய விளக்கங்களைத் தருவதற்கு முன் மனிதனுடைய சித்தத்தைப் பற்றி இந்த இடத்தில் ஒன்பதாம் அதிகாரத்தில் விசுவாச அறிக்கை விளக்கங்கொடுப்பதை நாம் தற்செயலானதொன்றாக எடுத்துக்கொள்ளக்கூடாது. விசுவாச அறிக்கையில் முப்பத்தி இரண்டு அதிகாரங்களும் ஓர் ஒழுங்குமுறையோடு அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒன்றிற்குப் பிறகு அடுத்த அதிகாரம் ஏன் வருகிறது என்பதற்கு அவசியமான இறையியல் காரணங்கள் இருக்கின்றன. இந்த 9ம் அதிகாரம் இந்த இடத்தில் விசுவாச அறிக்கையில் இருப்பதற்குக் காரணம் இதற்கும் இரட்சிப்புப் பற்றிய போதனைகளுக்கும் பிரிக்க முடியாத பெருந்தொடர்பு இருப்பதால்தான். மனித சித்தத்தின் சுயாதீனம் பற்றிய போதனை சுவிசேஷத்திற்கு அடித்தளமாக இருக்கிறது. இந்தப் போதனையை சரியாகப் புரிந்துகொண்டால் மட்டுமே கிறிஸ்துவின் சுவிசேஷத்தையும், அவர் இலவசமாக அளிக்கும் இரட்சிப்பையும் வேதபூர்வமாக நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

(2) 16ம் நூற்றாண்டில் திருச்சபை சீர்திருத்தம் ஆரம்பித்தபோது கத்தோலிக்க மதத்திற்கும், சீர்திருத்தவாதிகளுக்கும் இடையில் இருந்த தலையாய இறையியல் கருத்து வேறுபாடு மனிதனுடைய சித்தம் சம்பந்தமானதாக இருந்தது. 16ம் நூற்றாண்டு சீர்திருத்தவாதத்தைப் பற்றி அறிந்திருக்கிறவர்கள் சீர்திருத்தவாதிகளுக்கும், கத்தோலிக்க மதத்திற்கும் இடையிலான அந்தப் போராட்டத்தின் அடிப்படை அம்சம் விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதல் என்று சொல்லுவார்கள். அதில் தவறே இல்லை. இருந்தபோதும் சீர்திருத்தவாதம் ஆரம்பித்தபோது அந்தப் பிரச்சனையோடு ஆரம்பிக்கவில்லை. அதன் ஆரம்பமே மனிதசித்தத்தின் சுயாதீனத்தைப் பற்றிய தர்க்கத்தோடேயே தொடங்கியது. ‘திருச்சபை வரலாற்றை கவனமாக ஆராய்ந்து பார்த்தால் இதுவே லூத்தருக்கும், கத்தோலிக்கத்துக்கும் இடையினான தலையாய இறையியல் பிரச்சனையாக இருந்தது’ என்பதை அறிந்துகொள்ளாம் என்று ஏர்னஸ்ட் ரைசிங்கர் எழுதியிருக்கிறார். ரோமன் கத்தோலிக்க மதம் மனிதன் ஒரே நேரத்தில் நல்லதையும், கெட்டதையும் செய்துவிடக்கூடிய நிலையில் சுயாதீனமான சித்தத்தோடு இருக்கிறான் என்று போதித்தது. அதாவது, ஒன்றுக்கொன்று முரணான காரியங்களை சுயமாகத் தீர்மானித்து செய்யக்கூடிய வல்லமையுடைய சித்தத்தை (Power of contrary choice) மனிதன் கொண்டிருந்ததாகப் போதித்தது. இதன் மூலம் மனிதனுடைய சித்தம் நடுநிலையில் (Neutral) இருப்பதாக அவர்கள் போதித்தார்கள். ஆனால், மார்டின் லூத்தர் அதை எதிர்த்து மனித சித்தம் சுயாதீனத்தோடு இயங்கவில்லை, அது பாவத்தினால் பாதிக்கப்பட்டு அதற்குக் கட்டுப்பட்டிருப்பதாக விளக்கினார். லூத்தர் மனித சித்தம் பாவத்தால் பாதிக்கப்பட்டு அதனால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை விளக்கி ‘சித்தத்தின் அடிமைத்தனம்’ (Bondage of the Will) என்ற நூலை எழுதி வெளியிட்டார். சர்வசாதாரணமாக மனிதன் நன்மையையும், தீமையையும் செய்யக்கூடிய சித்தத்தைக் கொண்டிருக்கிறான் என்று கத்தோலிக்க மதம் வலியுறுத்தியது. லூத்தரைப் பொறுத்தவரையில் இது மிகப் பெரிய தவறு. மனித சித்தம் இயல்பிலேயே நல்லதையும், கெட்டதையும் சர்வசாதாரணமாக செய்யக்கூடிய நிலையிருக்கிறது என்று கூறுவது சுவிசேஷத்தையும், இரட்சிப்பைப் பற்றிய போதனையையும் அடியோடு பாதிக்கின்றது என்று லூத்தர் சொன்னார்.
லூத்தருடைய நண்பனாகவும் அதேநேரம் மனிதநலவாதியும், கல்வியில் சிறந்தவருமாக இருந்த இராஸ்மஸ் இந்த விஷயத்தில் லூத்தரோடு அதிகளவு பொது இடங்களிலும், தனிப்பட்ட முறையிலும் தர்க்கங்களில் ஈடுபட்டார். இராஸ்மஸைப் பொறுத்தளவில் மனித சித்தம் பற்றிய பேச்சே அவசியமற்றதாக இருந்தது. ‘மனிதனுக்கு சுயாதீனமான சித்தம் இருக்கிறதா, இல்லையா என்ற பேச்சே அவசியமில்லாதது, பாவம் மனிதனுடைய சித்தத்தைக் கட்டுப்படுத்துகின்றது என்று லூத்தர் எழுதியிருக்கக்கூடாது’ என்று ஆணித்தரமாக சொன்னார் இராஸ்மஸ். லூத்தரைப் பொறுத்தளவில் இது வெறும் சாதாரணமான விஷயமல்ல. கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் அத்திவாரத்தையே தகர்த்துவிடக்கூடிய விஷயமாக இதை லூத்தர் கருதினார். இராஸ்மஸுக்கு இதுபற்றி கடிதம் எழுதிய லூத்தர் அதில் இந்தத் தர்க்கத்தை ஆரம்பித்து வைத்ததற்காக இராஸ்மஸுக்கு நன்றி கூறினார். ‘இந்த விஷயத்தைப் பற்றிய விவாதத்தை நீ ஆரம்பித்து வைத்திருப்பதால் மற்ற எல்லோரையும்விட சிறந்த மனிதனாக உன்னை நான் காண்கிறேன். இந்த விஷயமே என்னுடைய போராட்டத்தின் பாதையை வழிவகுக்கப்போகிறது. போப்பின் பதவி, உத்தரிக்கும் ஸ்தலம், பாவ மன்னிப்புப் பத்திரங்கள் ஆகிய அம்சங்கள் பற்றிய அநாவசியமான சில்லறை விஷயங்களை வாதத்துக்கு எடுத்துக்கொள்ளாமல் சக்கரத்தை சுழற்றுவதற்கு அச்சானியாக இருப்பது போன்ற இந்தப் பெரிய விஷயத்தின் அவசியத்தை நீ சரியாக அடையாளம் கண்டு அதைத் தாக்குவதற்கு முன்வந்திருப்பதால் என்னுடைய இதயங்கனிந்த பெரு நன்றியை உனக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்’ என்று லூத்தர் எழுதினார்.

லூத்தரின் நூலைப் பற்றிக் குறிப்பிடும் ஜே. ஐ. பெக்கர் பின்வருமாறு எழுதியிருக்கிறார், “லூத்தரின் பேனா முனையில் இருந்து வந்த தலைசிறந்த நூல் ‘சித்தத்தின் அடிமைத்தனம்’ என்ற நூல்.” தன்னுடைய எழுத்துக்களையெல்லாம் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த கெப்பிட்டோ என்பவருக்கு 1537ல் கடிதம் எழுதிய லூத்தர் தன்னுடைய எழுத்துக்கள் அனைத்திலும் சிறுவர்களுக்கான வினாவிடைப் போதனை (Catechism for the Children), சித்தத்தின் அடிமைத்தனம் (The Bondage of the Will) ஆகிய நூல்களே தம்மைப் பொறுத்தளவில் சிறந்தவை என்றும் அவை எப்போதுமே பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் எழுதியிருந்தார். பாவத்தின் அடிமைத்தனம் என்ற நூலைப்பற்றி இன்னொரு இறையியலறிஞரான பென்ஜமின் வார்பீல்ட், ‘தர்க்கத்தில் தலைசிறந்த நூல்’ என்று குறிப்பிட்டார். ஜே. ஐ. பெக்கரும், ஓ. ஆர். ஜொன்ஸ்டன் என்பவரும் லூத்தரின் நூலை ஜெர்மன் மொழியிலிருந்து, இலத்தீன் மொழியிலும், ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தனர்.  அவர்கள் எழுதிய நூலொன்றில் லூத்தரின் நூலின் முக்கியத்துவத்தை பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்கள். “லூத்தரும், இராஸ்மஸும் மனித சித்தத்தைப் பற்றி எதிரெதிரான கருத்துக்களோடு ஏன் அத்தனை பெரிய தர்க்கத்தில் ஈடுபட்டனர்? இதற்கான பதிலைத் தேடி நாம் வெகுதூரத்துக்குப் போகத்தேவையில்லை. அவர்கள் இருவருடைய நிலைப்பாட்டிற்கும் காரணம், அவர்கள் இருவரும் கிறிஸ்தவத்தைப் பற்றிய வெவ்வேறான எண்ணப்பாடுகளைக் கொண்டிருந்ததுதான். இராஸ்மஸைப் பொறுத்தவரையில், கிறிஸ்தவ போதனைகளில் எல்லாவற்றுக்குமே சமமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும், அதனால் மனிதனுடைய சித்தம் சுயாதீனமானதா அல்லது சுயாதீனமற்றதா என்ற ஆராய்ச்சியும் ஏனைய போதனைகளோடு ஒப்பிடும்போது மிகவும் அவசியமற்றது என்றும் நம்பினார். லூத்தரோ, இறையியல் போதனைகள் (சத்தியங்கள்) கிறிஸ்தவத்தில் அடிப்படையானவை என்றும் அவையே கிறிஸ்தவத்தை கிறிஸ்தவமாக்குகின்றன என்றும், அதிலும் பாவத்தால் மனித சித்தம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது என்ற சத்தியம் கிறிஸ்தவ சுவிசேஷத்தின் மூலைக்கல்லாகவும் விசுவாசத்தின் அடித்தளமாகவும் இருக்கிறது என்றும் நம்பினார்.”

மனித சித்தத்தின் தன்மை பற்றிய லூத்தருடைய காலத்துக்கு முன்பும் தர்க்கங்கள் நிகழ்ந்திருக்கின்றன. 5ம் நூற்றாண்டளவில் வாழ்ந்த மனிதனாகிய பெலேஜியஸ் (Pelagius) மனிதனுக்கு தன்னை இரட்சித்துக்கொள்ளும் வல்லமை இருக்கிறது என்று நம்பியதால் இறுதியில் மனிதன் பாவியல்ல என்ற முடிவுக்கு வர நேர்ந்தது. பெலேஜியஸுடன் ஆகஸ்தீன் (Augustine) அந்தக் காலத்தில் தர்க்கம் செய்து பெலேஜியனின் போதனை தவறானது என்று சுட்டிக் காட்டினார். பன்னிரெண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு மார்டின் லூத்தர் கத்தோலிக்க மதப் போதனைகளுக்கு எதிராக மனிதனின் சித்தம் பாவத்தால் பாதிக்கப்பட்டு அதற்குக் கட்டுப்பட்டிருக்கிறது என்று விளக்கினார். மனிதனுடைய சித்தம் நல்லதையும் கெட்டதையும் மாறி மாறி சர்வசாதாரணமாக செய்துவிடும் நிலையிலிருக்கிறது என்ற போதனை கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அடியோடு பாதிக்கும் தவறான போதனையாகும்.

பதினெட்டாம் நூற்றாண்டில் மறுபடியும் மனித சித்தம் பற்றிய தவறான போதனைகள் எழாமலில்லை. இந்தக் காலப்பகுதியில் சார்ள்ஸ் பினி (Charles Finney) என்ற மனிதன் மனித சித்தம் பற்றிய தவறான முடிவுகளைக் கொண்டிருந்து சுவிசேஷத்தைக் கறைபடுத்தியிருந்தான். சார்ள்ஸ் பினிக்கு முன்பு வாழ்ந்திருந்த பெரும் பிரசங்கியும், வேத அறிஞருமான ஜொனத்தன் எட்வர்ட்ஸ் (Jonathan Edwards) மனித சித்தம் பற்றிய முக்கியமானதொரு நூலை வெளியிட்டார். ‘கிறிஸ்தவர்கள் அவசியம் கவனித்து சிந்திக்க வேண்டிய விஷயம் இது’ என்று அதில் எட்வர்ட்ஸ் எழுதியிருந்தார்.

மனித சித்தம் பற்றிய தர்க்கங்கள் இன்றைக்கும் தொடர்கின்றன. மனிதனின் சித்தம் பாவத்தால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்ற லூத்தரின் விளக்கத்தை அநேகர் இன்று தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். ஏதோ வேதத்திற்கு எதிரான முடிவெடுக்கும் லூத்தரும் அவரைச் சார்ந்த சீர்திருத்தவாதிகளும் மனித சித்தத்தை அடிமைத்தனத்துக்குள்ளானதாக பாவித்து எழுதியதாக நினைக்கிறவர்கள் அநேகர். உண்மையில் வேதமோ அல்லது 1689 விசுவாச அறிக்கையோ மனித சித்தம் சுயாதீனம் கொண்டதல்ல என்று விளக்கவில்லை. சீர்திருத்தவாதிகள் மனித சித்தம் சுயாதீனமில்லாதது என்ற நம்பிக்கை கொண்டிருப்பதாக நினைப்பவர்கள் மனித சித்தம் பற்றிய சீர்திருத்தவாதப் போதனையை சரியாக விளங்கிக் கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். வேதமும், சீர்திருத்தவாதமும் மனித சித்தம் சுயாதீனமாக இயங்குகிறது என்றுதான் விளக்கின்றன. அதனால்தான் விசுவாச அறிக்கையின் 9ம் அதிகாரம்கூட ‘சுயாதீனமான மனித சித்தம்’ என்ற தலைப்பைக் கொண்டிருக்கிறது. மனிதன் சுயமாக சிந்தித்து தீர்மானமெடுத்து தனக்குப் பிடித்ததை செய்கிறான் என்பதை நாம் நிச்சயம் நம்ப வேண்டும். அதே நேரத்தில் மனிதன் எந்தவிதமான ஆத்மீக நிலையில் இருக்கிறானோ அந்த நிலைக்கேற்ற வகையிலேயே சுதந்திரத்துடன் இயங்குகிறான் என்பதை விளங்கிக் கொள்வதும் அவசியம்.

சுயாதீனமான சித்தம், 1689:9

இனி இந்த அதிகாரத்தின் உள்ளடக்கத்தை சுருக்கமாகக் கவனிப்போம். இந்த அதிகாரத்தில் ஐந்து பத்திகள் காணப்படுகின்றன. இந்த ஐந்து பத்திகளில் மனிதனுடைய சித்தத்தின் நிலை பற்றிய வேதமளிக்கும் போதனைகள் தெளிவாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பத்தியிலும் விளக்கப்பட்டிருக்கும் சத்தியங்களை நிரூபணமாக்கும் வேத வசனங்கள் அதற்குக் கீழ் தரப்பட்டிருக்கின்றன. மேலும் அநேக வேத வசனங்களை ஒவ்வொரு பகுதிக்கும் ஆதாரமாகக் காட்ட முடிந்தபோதிலும் விசுவாச அறிக்கையை எழுதியவர்கள் அவசியமான வசனங்களை மட்டும் கொடுத்து அவற்றின் அடிப்படையில் மேலும் வசனங்களை நாம் இணைத்துப் படிக்கும்படி எதிர்பார்க்கிறார்கள். ஏற்கனவே சொன்னதுபோல இந்த அதிகாரத்துக்கு அவர்கள் ‘சுயாதீனமான சித்தம்’ என்று தலைப்புக் கொடுத்திருப்பதன் மூலம் அவர்கள் மனித சித்தம் சுயாதீனமாக இயங்குகிறது என்பதை அழுத்தமாக நமக்கு உணர்த்துவதைக் கவனிக்கிறோம்.

முதலாம் பத்தி: கடவுள் இயற்கையிலேயே மனித சித்தத்தை அது தான் எடுக்கும் தீர்மானத்தின்படி நடக்கக்கூடிய வல்லமையையும் சுதந்திரத்தையும் கொண்டுள்ளதாகப் படைத்திருந்தார். இச்சுயாதீனமான சித்தம் நன்மையையோ, தீமையையோ செய்வதற்கு புற நிர்ப்பந்தங்களினால் பாதிப்புறாமலும் இயற்கையாக அதன் உள்ளியல்பினால் வற்புறுத்தப்படாமலும் உள்ளது.

இந்த அதிகாரத்தின் முதலாவது பத்தி மனிதனின் சுயாதீனமான சித்தத்தின் தன்மையை ஆரம்பத்திலேயே விளக்குகிறது. அதன் மூலம் சுயாதீன சித்தம் என்பது நாம் தனிப்பட்ட முறையில் எந்த விஷயத்தைப் பற்றியும் சுதந்திரமாக எடுக்கும் தெரிவுகளும், தீர்மானங்களும் என்பதை சந்தேகமில்லாதவகையில் விளக்குகிறது. விசுவாச அறிக்கையும், சீர்திருக்க போதனைகளைப் பின்பற்றுகிறவர்களும் மனித சித்தம் சுயாதீனமானது என்பதை மறுக்கிறார்கள் என்ற வாதத்துக்கு இது முற்றுப்புள்ளி வைக்கிறது.

அடுத்து வரும் நான்கு பத்திகளிலும் மனிதனின் சுயாதீனமான சித்தம் அவனுடைய நான்கு ஆவிக்குரிய நிலைகளில் என்னவிதமாக செயல்படுகின்றது என்பதை விளக்குகின்றன. மனிதன் ஏன் சில காரியங்களை தன் வாழ்க்கையில் செய்யச் சித்தங்கொள்ளுகிறான் என்பதை விளங்கிக் கொள்ள அவனிருக்கும் ஆவிக்குரிய நிலை மட்டுமே நமக்கு உதவுகிறது. மனிதனிருக்கும் ஆவிக்குரிய நிலையே அவனுடைய சித்தம் எந்தவிதமான ஒழுக்கத்துக்குரிய தீர்மானங்களை எடுக்க முடியும் என்பதை நிர்ணயிக்கிறது. தானிருக்கும் ஆவிக்குரிய நிலையின் வழிநடத்தலின்படியே எந்த மனிதனும் எதையும் செய்ய சித்தங்கொள்ளுவான்.

இரண்டாம் பத்தி: பாவமற்ற நிலையில் மனிதன் சுயாதீனமும் வல்லமையுமுள்ள சித்தத்தையும், நன்மையானதையும் கடவுளுக்கு ஏற்புடையதை செய்யக்கூடிய தன்மையையும் கெண்டிருந்தான். இருந்தபோதும் அவன் மாறும் இயல்புடையவனாக இருந்தபடியால் தனது நேர்மையான நிலையில் இருந்து அவனால் விழ முடிந்தது.

இரண்டாம் பத்தியில் நாம் மனிதன் பாவமற்ற நிலையில், குற்றமில்லாத நிலையில் இருப்பதைக் கவனிக்கிறோம். இந்த நிலையில் மனிதன் கர்த்தருக்கு மகிமை தரும் காரியங்களைச் செய்யச் சிந்தங் கொண்டான். அதேவேளை அவனுடைய சித்தம் விழுந்துவிடக்கூடிய நிலையில் (பாவத்தை செய்துவிடக்கூடிய) இருந்தது.

மூன்றாம் பத்தி: மனிதன் பாவத்தில் விழுந்ததால் இரட்சிப்புக்குரிய எந்தவித ஆவிக்குரிய நன்மைகளையும் செய்யக்கூடிய தனது சித்தத்தின் வல்லமையைப் பூரணமாக இழந்தான். இயல்பாகவே மனிதன் ஆவிக்குரிய நன்மைகளை முற்றிலும் எதிர்ப்பவனாகவும் பாவத்தில் மரித்தவனாகவும் உள்ளான்.

இந்த மூன்றாம் பத்தியில் பாவநிலையில் இருக்கும் மனிதனை நாம் பார்க்கிறோம். மனிதன் பாவத்திற்கும் மரணத்திற்கும் உள்ளாகி நிற்கிறான். அவனுடைய சித்தம் பாவத்தால் பாதிக்கப்பட்டு அதற்குட்பட்டு செயல்படக்கூடிய நிலையில் மட்டும் இருக்கிறது. மனிதன் சுயாதீனமாக கர்த்தருக்கெதிரானவைகளை மட்டுமே நாடிச்செய்யக்கூடிய நிலையில் இருக்கிறான்.

நான்காம் பத்தி: கடவுள் பாவிக்கு மனமாற்றத்தை ஏற்படுத்தி அவனைக் கிருபையின் நிலைக்குக் கொண்டு வரும்போது, இயற்கையாகவே அவனை அடிமைப்படுத்தியிருக்கும் பாவத்திலிருந்து அவனுக்கு விடுதலை தந்து கிருபையின் மூலமாக மட்டுமே சுயாதீனமான சித்தத்துடன் ஆவிக்குரிய நன்மைகளைச் செய்யும்படிச் செய்கிறார். ஆனால், அவனுள் தெடர்ந்திருக்கும் பாவசுபாவத்தினால் நன்மைகளை மட்டுமன்றி அவன் கேடானவைகளையும் செய்யச் சித்தங்கொள்கிறான். (மனமாற்றமடைந்த மனிதனின் சித்தம் இன்னும் பூரணமடையாவிட்டாலும் அது புதுப்பிக்கப்பட்டுள்ளது. மனமாற்றத்திற்கு முன்பு மனித சித்தம் ஆவிக்குரிய நன்மைகளைச் செய்யக்கூடிய விருப்பத்தையோ வல்லமையையோ கொண்டிருக்கவில்லை).

மேல் வரும் நான்காம் பத்தியில் மனிதனை நாம் கிருபையில் நிலையில் காண்கிறோம். இந்நிலையில் மனிதன் மறுபிறப்படைந்து மனமாற்றத்தைப் பெற்றுக்கொண்டிருக்கிறான். அவனுடைய சித்தம் புதுப்பிக்கப்பட்ட நிலையில் இப்போது நல்லதைச் செய்யக்கூடியதாகவும் பக்திவிருத்திக்குரிய செயல்களை நாடிச் செய்யக்கூடியதாகவும் இருக்கின்றது. கிருபையின் நிலையில் இருக்கும் கிறிஸ்தவன் கர்த்தரை மகிமைப்படுத்தும் காரியங்களில் ஆர்வம் காட்டி அவற்றைச் செய்யக்கூடிய சித்தத்தைக் கொண்டிருக்கிறான். இருந்தபோதும் அவன் இந்நிலையில் பாவத்தோடு தொடர்ந்து போராட வேண்டியிருப்பதால் சில வேளைகளில் கர்த்தருக்கெதிராக சித்தங்கொண்டு அவருக்கு கீழ்ப்படியாமல் இருந்துவிடுகிறான்.

ஐந்தாம் பத்தி: உன்னத நிலையிலேயே மனித சித்தம் பூரணமாகவும், மாற்றமெதுவுமின்றி சுயாதீனமாக நன்மையானதை மட்டுமே செய்யக் கூடியதாக அமையும்.

ஐந்தாம் பத்தி கிறிஸ்தவனுடைய மகிமையின் நிலையை விளக்குகிறது. இந்நிலையில் கர்த்தரை மகிமைப்படுத்தும் அனைத்தையும் செய்யும் சித்தத்தை கிறிஸ்தவன் கொண்டிருக்கிறான். இந்நிலையில் அவனுடைய சுயாதீனமான சித்தம் கர்த்தருடைய பூரணமான சித்தத்திற்கு சமமான நிலையில் காணப்படுகின்றது.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s