நீயும் நானுமா?

இதென்ன இப்படியொரு தலைப்பு என்று நீங்கள் மலைக்கலாம். இந்தத் தலைப்பை நான் கொடுத்ததற்கு காரணமிருக்கிறது. இந்த வார்த்தைகளை, கிறிஸ்தவ இறையியல் கோட்பாட்டைப் பொறுத்தவரையில் பொதுவாகப் அநேகரிடம் இன்று இருந்து வருகின்ற எண்ணங்களை விளக்குவதற்காக நான் பயன்படுத்தியிருக்கிறேன். இதற்கு முந்தைய ஆக்கத்தில் பாவம் எந்தளவுக்கு மனிதனைப் பாதித்து அவனுடைய சித்தத்தைக் கட்டுப்படுத்துகிறது என்பதை ஆராய்ந்திருக்கிறோம். பெலேஜியஸ், மூல பாவம் (Original Sin) எனும் கோட்பாட்டை மறுத்து மனிதன் கடவுளுடைய கட்டளையை ஏதேனில் மீறியபோது அந்தச் செயல் வெறும் தவறான நடத்தை மட்டுமே என்றும், அந்த நடத்தை அவனை ஆவிக்குரிய விதத்தில் சீர்குலைக்கவில்லை என்றும் போதித்தார் என்பதைக் கண்டோம். பெலேஜியஸின் போதனைகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தி புதிய போதனைகள் அவருக்குப் பின்னால் வரலாற்றில் உருவாகின. அந்தப் போதனைகள் இன்று கிறிஸ்தவர்கள் மத்தியில் பொதுவாகவே எல்லா நாடுகளிலும் தொடர்ந்து இருந்துவருகின்றன. இந்தப் போதனைகளின் அடிப்படை அம்சம், மனிதன் இரட்சிப்பை அடைவதில் கடவுளும் மனிதனும் சமமாக இணைந்தே செயல்படுகிறார்கள் என்பதுதான். அதனால் தான் கடவுள் மனிதனைப் பார்த்து ‘நீயும் நானுமா!’ என்று கேட்பதுபோல் தலைப்பைக் கொடுத்திருக்கிறேன்.

மொனர்ஜிசமும் (Monergism), சினர்ஜிசமும் (Synergism)

மேலே நான் குறிப்பிட்ட புதிய போதனைகளின் அடிப்படையான தவறை விளக்கவும், வேத சத்தியங்களைத் தெளிவாக சுட்டிக் காட்டவும் இறையியல் வல்லுனர்கள் தகுந்த வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அப்படியாக இறையியல் போதனைகளை விளக்கக் குறிப்பிட்ட பதங்களைப் பயன்படுத்தும் வழக்கம் எப்போதும் இருந்து வந்திருக்கின்றது. அதில் எந்தத் தவறுமேயில்லை. குறிப்பாக கடவுளில் மூன்று ஆள் தத்துவங்கள் காணப்படுகின்றன என்பதை விளக்குவதற்கு ‘திரித்துவம்’ என்ற பதத்தை கிறிஸ்தவர்கள் பயன்படுத்தி வரவில்லையா? இந்தப் பதம் வேதத்தில் காணப்படாதபோதும் இது மிகவும் அவசியமான வார்த்தைப் பிரயோகம். இதேபோல்தான் பெலேஜியஸின் தவறான போதனைகளைத் தழுவி உருவான போதனைகளை வெளிப்படுத்தவும், அவற்றிற்கு மாறான வேதபோதனைகளை சுட்டிக்காட்டவும் வார்த்தைப் பிரயோகங்களை இறையியல் வல்லுனர்கள் பயன்படுத்தியிருக்கின்றனர். இந்த வார்த்தைப் பிரயோகங்கள்தான் மொனர்ஜிசம் (Monergism), சினர்ஜிசம் (Synergism) என்பவை.

இந்த இரண்டு ஆங்கில வார்த்தைகளுமே கிரேக்கத்தைத் தழுவியவை. மொனர்ஜிசத்தில் ‘மொனோ’ என்ற கிரேக்க வார்த்தைக்கு ‘ஒன்று’ என்றும் அதன் அடுத்த பகுதியான ‘எர்கொன்’ என்பதற்கு ‘கிரியை’ என்றும் பொருள். இந்த வார்த்தையின் பொருள் ‘ஒருவரின் கிரியை’ என்பதாகும். சினர்ஜிசத்தில், காணப்படும் ‘சின்’ என்ற கிரேக்க வார்த்தைக்கு ‘இரண்டு’ என்பது பொருள். ஆகவே இந்த வார்த்தைக்கு ‘இருவரின் கிரியை’ என்பது பொருள். இந்த வார்த்தைகளின் மூலம் எந்த இறையியல் கருத்தை இறையியல் அறிஞர்கள் விளக்கப் பார்க்கிறார்கள் என்பதுதான் அடுத்த கேள்வி.

பாவம் மனிதனை அடியோடு பாதித்து சீர்குலைத்து அவனை ஆவிக்குரிய எதையும் செய்ய முடியாத நிலையில் வைத்திருக்கிறது என்று வட ஆபிரிக்காவின் கார்த்தேஜில் பணிபுரிந்த இறையியல் அறிஞரான ஆகஸ்தீன் விளக்கினார் என்று பார்த்தோம். பெலேஜியஸின் போதனையான மனிதனைப் பாவம் பாதிக்கவில்லை என்ற விளக்கத்தை நிராகரித்து ஆகஸ்தீன் இவ்வாறு போதித்திருந்தார். ஆகஸ்தீனுடைய போதனையையே 16ம் நூற்றாண்டில் லூத்தரும், கல்வினும் தொடர்ந்து போதித்தார்கள். இவர்கள் எல்லோருமே பாவம் மனிதனை ஆவிக்குரிய எதையும் செய்ய முடியாத நிலையில் வைத்திருப்பதால் கடவுள் அவனுடைய இருதயத்தை மாற்றினால் தவிர அவனால் ஆவிக்குரியவற்றை செய்ய முடியாது என்று விளக்கியிருந்தார்கள். இவ்வாறாக ஆவிக்குரிய விஷயத்தில் கடவுள் மட்டுமே மனிதனின் இரட்சிப்புக்குரியவற்றை செய்கிறார் என்பதையே ‘மொனர்ஜிசம்’ விளக்குகிறது. மொனர்ஜிசக் கருத்தைக் கொண்டிருப்பவர்கள் பாவம் மனிதனைக் கட்டுப்படுத்தி ஆளுவதால் அவனுடைய சித்தமும் அதற்குக் கட்டுப்பட்டு கடவுளுக்கு எதிரானதை மட்டுமே நாடும் என்றும் நம்பினார்கள்.

இதற்கு மாறாக ‘சினர்ஜிசம்’ இரட்சிப்பு மனிதனில் நிறைவேற கடவுளும் மனிதனும் சேர்ந்து செயல்பட வேண்டும் என்று விளக்குகிறது. அதாவது, கடவுள் இரட்சிப்புக்குரியவற்றை கிறிஸ்து மூலம் நிறைவேற்றியிருந்த போதிலும் மனிதன் இரட்சிப்படைய வேண்டும் என்று தன் சித்தத்தில் தீர்மானித்து கடவுளோடு ஒத்துழைப்பதால் மட்டுமே இரட்சிப்பை அடைய முடியும் என்கிறது. இரட்சிப்பை மனிதன் அடைகிற விஷயத்தில் கடவுள் பாதிப் பங்கையும், மனிதன் பாதிப் பங்கையும் கொண்டிருப்பதாக விளக்குவதுதான் ‘சினர்ஜிசம்’. இதனால்தான் ‘நீயும் நானுமா?’ என்ற தலைப்பைக் கொடுத்திருக்கிறேன். இரட்சிப்பில் கடவுளுக்குப் பாதிப் பங்கிருக்கிறது, மனிதனுக்குப் பாதிப் பங்கிருக்கிறது என்ற போதனை எப்படி உருவாகியது என்பதை அறிந்துகொள்ள வேண்டுமல்லவா? அதை இனிக் கவனிப்போம்.

செமி-பெலேஜியனிசம் (Semi-Pelagianism)

பெலேஜியஸினுடைய போதனைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி புதிய போதனையான செமி-பெலேஜியனிசத்தை உருவாக்கியவருக்குப் பெயர் கேசியன் (Cassian). செமி-பெலேஜியனிசத்தைக் ‘கேசியனிசம்’ என்றும் அழைக்கலாம். கேசியன் மார்சீலியாவைச் சேர்ந்தவர். அவர் ரோமன் கத்தோலிக்க மதத் துறவி. ஆகஸ்தீனைப் போல கேசியன் மூல பாவத்தை நம்பினார். இந்த விஷயத்தில் அவர் பெலேஜியஸினுடைய போதனையைப் பின்பற்றவில்லை. ஆகவே செமி-பெலேஜியனிசம் ஆதாமிலிருந்து தொடர்கின்ற மூல பாவத்தை மறுதலிக்கவில்லை. கேசியன் கடவுளுடைய கிருபை எல்லோருக்கும் பொதுவானது என்றும், வீழ்ச்சியுற்ற மனிதன் முழுப் பொறுப்புணர்வையும் கொண்டவன் என்றும் நம்பினார். இந்த இரண்டையும் சம நிலையில் நியாயப்படுத்தும் கேசியனுடைய முயற்சிதான் செமி-பெலேஜியனிசம் உருவாகக் காரணமானது. மேலெழுந்த வாரியாகப் பார்க்கும்போது, ‘இதில் என்ன பிரச்சனை இருக்கிறது, இதைத்தானே ஆகஸ்தீனும் விசுவாசித்தார்’ என்று சொல்லத் தோன்றும். ஆகஸ்தீனும் கடவுளுடைய கிருபை¬யும், இறையாண்மையையும் வலியுறுத்துவதில் உறுதியாக இருந்தார்.

பெலேஜியஸின் போதனைகளை நிராகரித்த கேசியன் ஆதாமின் பாவம் முழு மனிதகுலத்தையும் பாதித்து அவர்களில் தொடர்வதாக விளக்கினார். அதேநேரம் அவர் ஆகஸ்தீனுடைய போதனைகளையும் குறைகூறத் தவறவில்லை. முன்குறித்தலாகிய போதனையும், குறிப்பிடப்பட்டவர்களுக்கான கிருபையும் பாரம்பரியமாக சபைப் போதனைகளாக என்றுமே இருக்கவில்லை என்று கேசியன் வாதம் செய்தார். பாவத்தினால் ஆதாமினுடைய சித்தத்தின் சுயாதீனம் பாதிக்கப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ளுகிற கேசியன் அது மனிதர்களில் பலவீனமானதாக இருப்பதாகவும் ஒத்துக்கொள்ளுகிறார். பாவத்தின் காரணமாக மனிதனில் சித்தம் முற்றாக அழிந்துவிடவில்லை என்றும், அதேநேரம் அது ஒழுக்கரீதியாக பூரண பலவீன நிலையிலும் இல்லை என்கிறார் கேசியன். இந்த இடத்தில்தான் கேசியன் ஆகஸ்தீனோடு (வேதத்தோடும்) முரண்படுகிறார். ஆகஸ்தீன் பாவத்தினால் மனித சித்தம் கடவுளை நாடிப்போகக்கூடிய ஒழுக்கரீதியான வல்லமையை இழந்துவிட்டது என்று விளக்கினார். இதை கேசியன் நிராகரித்தார்.

நீதிமானாக இருப்பதற்கு கிருபை அவசியம் என்று பெலேஜியஸுக்கு எதிராக அறைகூவலிட்ட கேசியன், அந்தக் கிருபை நிராகரிக்கக்கூடியதாக இருக்கிறது என்று ஆகஸ்தீனுடைய போதனைக்கு எதிரான விளக்கத்தை அளித்தார். கிருபை திட்ப உறுதியானதாக (effectual) இருக்க வேண்டுமானால், அதாவது மனிதனை இரட்சிக்கக் கூடியதாக இருக்க வேண்டுமானால் மனிதனுடைய ஒத்துழைப்பு கடவுளுக்குத் தேவை என்று கேசியன் சொன்னார். இந்த இடத்தில் கேசியனுடைய மனப்போக்கைப் புரிந்துகொள்ளுவது அவசியம். கடவுளுடைய கிருபை இல்லாமல் எந்த ஆவிக்குரிய நன்மையையும் நாம் செய்யமுடியாது என்று கூறுகிற கேசியன் நம்முடைய சுயாதீனமான சித்தமும் அந்த விஷயத்தில் பங்குகொள்ளாமல் இருக்க முடியாது என்று விளக்குகிறார்.

ஆகஸ்தீனுக்கும் கேசியனுக்கும் இடையில் உள்ள முக்கியமான வேறுபாடு அவர்கள் இருவரும் கிருபையைப் பற்றித் தந்த போதனையில் இருந்தது. ஆகஸ்தீன் கிருபை நிராகரிக்க முடியாதது என்றார். பாவத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் மனித சித்தம் இப்போதும்கூட எத்தனையோ விஷயங்களில் சுயமாக தீர்மானங்களை எடுக்கக்கூடிய நிலையில் இருந்தபோதும் ஆத்மீக ரீதியில் அது கர்த்தரை நோக்கித் திரும்பக்கூடிய வல்லமையோடு இல்லை என்றார் ஆகஸ்தீன். மனித சித்தம் பலவீனமான நிலையில் அல்ல, ஆவியில் மரித்திருக்கிறது என்றார் ஆகஸ்தீன். திட்ப உறுதியான கடவுளின் கிருபையால் மட்டுமே மனித சித்தத்தைப் புதுப்பித்து அவரை விசுவாசிக்கும்படி செய்ய முடியும் என்பது ஆகஸ்தீனின் விளக்கம்.

ஆகஸ்தீனுடைய போதனைக்கும் கேசியனுடைய போதனைக்கும் இடையில் இருந்த வேறுபாடு தெரிகிறதா? இரட்சிப்பின் ஆரம்பப் படிநிலையைக் குறித்து மொனர்ஜிசத்துக்கும் சினர்ஜிசத்துக்கும் இடையில் இருந்த வேறுபாடே அது. பாவியாகிய மனிதன் கிறிஸ்துவை விசுவாசிப்பதற்கு அவசியமான ஆரம்பப் படிநிலை குறித்த விஷயத்தில் கேசியன் அழுத்தமாக சினர்ஜிசப் போக்கைக் கொண்டிருந்தார். அவரைப் பொறுத்தவரையில், கடவுள் மனிதனுக்கு கிருபையை அளிக்கிறார், இருந்தபோதும் பாவி தன்னுடைய பலவீனமான சித்தத்தைப் பயன்படுத்தி கடவுளோடு ஒத்துழைத்தால் மட்டுமே அவனுக்கு மறுபிறப்பு கிடைக்கிறது. ஆகவே, கேசியனைப் பொறுத்தவரையில் இரட்சிப்பின் படிமுறையில் மறுபிறப்புக்கு முன்பு விசுவாசம் வருகிறது. ஆனால், ஆகஸ்தீனைப் பொறுத்தவரையில் மறுபிறப்பாகிய கிருபை மொனர்ஜிசத்தைச் சார்ந்தது. எனவே, விசுவாசம் ஏற்படுவதற்கு முன் ஒருவனில் மறுபிறப்பாகிய கிருபை முதலில் நிகழ வேண்டியது அவசியம் என்கிறார் ஆகஸ்தீன். ஆகஸ்தீன், கிருபை நிராகரிக்க முடியாதது (irresistible) என்கிறார். ஆகவே, அது திட்ப உறுதியானது (effectual). அதாவது, அது இரட்சிக்கும் வல்லமை கொண்டது. கடவுள் தான் அநாதி காலத்தில் தீர்மானித்து ஏற்படுத்திய திட்டத்தை சுயமாக எவருடைய துணையுமின்றி நிறைவேற்றுகிறார் (Monergistic) என்கிறார் ஆகஸ்தீன். அவ்வாறு செய்கிறபோது அவர் பாவியை அவனுடைய சித்தத்துக்கு எதிராக வலுக்கட்டாயமாக இழுத்து அவன் செய்ய விரும்பாததை செய்ய வைக்கவில்லை. கடவுளின் மறுபிறப்பாகிய கிருபை மனிதனுடைய இருதயத்தை மாற்றியமைத்து அவனை ஆவிக்குரிய மரணத்தில் இருந்து விடுவித்து ஜீவனை அளிக்கிறபோது அவனால் கடவுளை சுயாதீனமாக விசுவாசிக்க முடிகிறது. அவ்விசுவாசத்தைக் கொண்டிருக்கின்ற மனிதனைக் கடவுளிடம் வரும்படிச் செய்கின்ற இரட்சிப்பாகிய கிருபையின் இந்த ஆரம்ப நிலையில் கடவுள் தன்னிச்சையாக எவருடைய துணையுமின்றி செயல்படுகிறார் (Monergistic).

செமி-பெலேஜியனிச ரோமன் கத்தோலிக்க மதம்

கேசியன் ஒரு கத்தோலிக்க மதத்துறவி. கேசியனைப் போலவே ரோமன் கத்தோலிக்க மதமும் மூல பாவத்தை ஏற்றுக்கொள்ளுகிறது. இந்த விஷயத்தில் இரு பகுதியாரும் பெலேஜியஸின் போதனைகளை எதிர்த்தார்கள். ஆனால், கேசியனின் செமி-பெலேஜியனிசப் போதனைகளை ரோமன் கத்தோலிக்க மதம் எதிர்த்தது. விசுவாசத்தின் ஆரம்பப் படி நிலையில் மனித சித்தமே முழு வல்லமையோடு செயல்பட்டு மனிதன் இரட்சிக்கப்படுவதற்கு காரணமாக இருக்கிறது என்பதை அது ஏற்றுக்கொள்ள மறுத்தது. மனிதன் நன்மையானதைச் செய்யக்கூடிய நிலைக்கு வருவதற்கு மறுபிறப்பாகிய கிருபை அவனுக்கு அவசியம் என்றது ரோமன் கத்தோலிக்க மதம். ஆனால், கத்தோலிக்க மதத்தோடு நமக்கிருக்கும் பிரச்சனை அது இந்தக் கிருபை ஞானஸ்நானத்தின் மூலமாக மனிதனுக்கு கிடைக்கிறது என்று போதிப்பதுதான். ஞானஸ்நானத்தின் மூலம் மறுபிறப்பு (Baptismal regeneration) என்ற வேதத்துக்கு முரணான போதனையை கத்தோலிக்க மதம் வலியுறுத்துகிறது. இதை சீர்திருத்த கிறிஸ்தவம் அடியோடு எதிர்க்கிறது.

சுருக்கமாகச் சொல்லப்போனால் ரோமன் கத்தோலிக்க மதம் தொடர்ந்து மூல பாவமென்றொன்றில்லை என்கிற பெலேஜியனிசப் போதனைகளை எதிர்க்கிறது. அது கேசியனுடைய செமி-பெலேஜியனிசப் போதனையையும் எதிர்த்து ஆகஸ்தீனுடைய போதனையின் பக்கம் தலை சாய்த்த போதும் ஆகஸ்தீனுடைய போதனைகளையும் முழுமையாக ஏற்றுக்கொள்ள மறுத்தது. ஆகவே, செமி-ஆகஸ்தீனியனிசம் (Semi-Augustinianism) என்று சிலர் அழைக்கிறவிதமாக ரோமன் கத்தோலிக்க மதப் போதனைகள் இருக்கின்றன. கேசியனின் போதனைகளை ரோமன் கத்தோலிக்க மதம் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அதை செமி-பெலேஜியனிசத்தோடு சம்பந்தப்பட்டதாகத்தான் கணிக்க வேண்டியிருக்கிறது. மனித சித்தத்தைப் பற்றிய ரோமன் கத்தோலிக்க மத நம்பிக்கையைக் கொஞ்சம் கூர்ந்து கவனிப்போம். மனிதனுடைய இரட்சிப்புக்கு தெய்வீக கிருபையின் உதவி தேவையானதாக இருக்கிறது என்கிறது ரோமன் கத்தோலிக்க மதம். இந்த விஷயத்தில் இது பெலேஜியனிசத்தோடு ஒத்துப் போகவில்லை. ஆனால், பாவத்தில் வீழ்ந்திருக்கும் மனிதன் தன்னுடைய இரட்சிப்பிற்காக கடவுளோடு பங்குகொண்டு அவருக்கு சமமாக ஒத்துழைக்கும் வல்லமையைக் கொண்டிருக்கிறான் என்று ரோமன் கத்தோலிக்க மதம் விளக்குகிறது. அவனுடைய சித்தம் மூல பாவத்தால் பலவீனமடைந்திருந்த போதும் இந்த ஆவிக்குரிய வல்லமை அவனில் தொடர்ந்தும் இருப்பதாக அது விளக்குகிறது. ஆகவே, மனித சித்தம் நன்மையையும் தீமையையும் மாறி மாறிச் செய்துவிடக்கூடிய நடுநிலையில் இருப்பதாக கத்தோலிக்க மதத்தின் போதனை அமைந்திருக்கிறது. இந்த இடத்தில் ரோமன் கத்தோலிக்கப் போதனையில் நாம் ஆகஸ்தீனியனிசத்தைவிட செமி-பெலேஜியனிசத்தின் செல்வாக்கைத்தான் அதிகமாகப் பார்க்கிறோம்.

லூத்தரும், கல்வினும்

சென்ற இதழில் வந்த ஆக்கங்களில் 16ம் நூற்றாண்டில் எவ்வாறு மார்டின் லூத்தர் இராஸ்மஸோடு மனித சித்தத்தின் நிலை பற்றிய தர்க்கங்களில் ஈடுபட நேரிட்டது என்று விளக்கியிருக்கிறேன். 16ம் நூற்றாண்டு திருச்சபை சீர்திருத்தப் போராட்டத்தின் அடிப்படை அம்சமாக மனித சித்தம் பற்றிய விவாதம் இருந்திருக்கிறது என்றும் விளக்கியிருக்கிறேன். மார்டின் லூத்தருடைய அருமையான நூலான ‘சித்தத்தின் அடிமைத்தனம்’ உருவாகவும் மனித சித்தம் பற்றிய ரோமன் கத்தோலிக்க மதத்தின் போதனையே காரணமாகவும் இருந்திருக்கிறது. இருபதாம் நூற்றாண்டு இறையியல் அறிஞரான பென்ஜமின் வோர்பீல்ட், ‘புரட்டஸ்தாந்து சீர்திருத்தத்தின் பகிரங்க அறிக்கை’ என்று இந்த நூலைப் பாராட்டி எழுதியிருக்கிறார். 5ம் நூற்றாண்டில் ஆகஸ்தீனுக்கும் பெலேஜியஸுக்கும் இடையில் எந்த விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதோ அதே விஷயத்தில்தான் 16ம் நூற்றாண்டில் லூத்தருக்கும் இராஸ்மஸுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரட்சிப்பின் ஆரம்பப் படிநிலையில் கடவுள் சுயமாக இயங்கிச் செயல்படுகிறாரா? அல்லது மனிதன் அந்த விஷயத்தில் ஆரம்ப நடவடிக்கை எடுக்கிறானா என்பது பற்றிய மொனர்ஜிசத்துக்கும் சினர்ஜிசத்துக்கும் இடையிலான கருத்து வேறுபாடு இது. ‘கிருபை மட்டுமே’ என்ற சீர்திருத்தவாதத்தின் போதனையில் காணப்படும் கிருபை பற்றிய விஷயத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடாக இது இருந்தது. விசுவாசத்தினால் நீதிமானாக்குதல் என்ற கத்தோலிக்க மதத்திற்கு எதிரான போதனையிலும் இதே கிருபைப் பற்றிய விஷயத்தில்தான் சீர்திருத்தவாதிகள் அவர்களோடு முரண்பட்டனர்.

இராஸ்மஸ் திருச்சபை சீர்திருத்தப் போராட்டத்தில் மார்டின் லூத்தரோடு ஒத்துப் போகவில்லை. மனித சித்தத்தின் வல்லமையை நிரூபிக்க லூத்தரோடு பல தர்க்கங்களில் இராஸ்மஸ் ஈடுபட்டிருந்தார். இராஸ்மஸைப் பொறுத்தவரையில் ‘கிருபையின் துணையில்லாமல் இயங்க முடியாத மனித சித்தம் உண்மையில் சுயாதீனமான சித்தமே இல்லை’ என்பதுதான். இதற்கு பதிலளிக்கும் லூத்தர், ‘கடவுளுடைய கிருபையின் துணையோடு இயங்காவிட்டால் மனித சித்தம் ஒருபோதும் சுயாதீனமானதாக இருக்க முடியாது என்றும், அந்த நிலையில் அது நன்மையை நோக்கித் திரும்பமுடியாமல் நிரந்தரமாக பாவத்துக்குக் கட்டுப்பட்டதாகத்தான் இருக்கும்’ என்றும் கூறினார். ‘சுயாதீனமான சித்தம்’ என்ற பதங்கள் அநேகருக்குக் குழப்பமூட்டுவதாக இருப்பதாக லூத்தர் கருதினார். ‘எந்தத் திசையை நோக்கியும், அதாவது நன்மையையோ அல்லது தீமையையோ சுதந்திரமாக நாடிச் செய்யக்கூடிய மனித வல்லமையே சுயாதீனமான சித்தம்’ என்பதே சுயாதீன சித்தத்தின் பொதுவான விளக்கமாக இருந்தது. இதுவே இராஸ்மஸுடையதும், கத்தோலிக்க மதத்தினுடையதும் நம்பிக்கையாக இருந்தது. சுயாதீன சித்தம் பற்றிய இந்தத் தவறான கருத்தை இரட்சிப்பின் பெரும் எதிரியாகவும், அநேக குழப்பங்களை உருவாக்கும் ஆபத்தாகவும் லூத்தர் கருதினார். இந்த முறையில் கிருபையின் துணையில்லாமல் எந்தப் பக்கமும் திரும்பக்கூடிய சித்தம் நிச்சயமாக சுயாதீனமான சித்தமாக இருக்க முடியாது என்றார் லூத்தர். இராஸ்மஸுடைய வாதங்களை லூத்தர் தவிடுபொடியாக்கினார்.

சீர்திருத்தவாதியான ஜோன் கல்வினுடைய கருத்துக்கள் ஆகஸ்தீனுடைய போதனைகளோடு ஒத்துப் போகிறவையாக இருந்தன. கல்வின் இதுபற்றிப் பல இடங்களில் தன்னுடைய எழுத்துக்களில் எழுதியிருந்தார். ஆகஸ்தீன், மார்டின் லூத்தர், கல்வின் எல்லோருமே மனித சித்தம் பாவத்தினால் பாதிக்கப்பட்டு ஆவிக்குரிய நன்மைகளை செய்யக்கூடிய ஒழுக்க வல்லமையை இழந்து காணப்படுகிறது என்பதை உறுதியாக விளக்கியிருக்கிறார்கள். மனித சித்தம் பாவத்திற்கு கட்டுப்பட்டிருப்பதால் அதன் தன்மைக்கேற்ற விதத்தில்தான் அதால் இயங்க முடியும் என்பது இவர்கள் எல்லோருடையதும் போதனையாக இருந்தது. மனித சித்தம் ஆவிக்குரிய நன்மையைச் செய்வதற்கு மறுபிறப்பாகிய கிருபையை மனிதன் அடைவது அவசியம் என்று இவர்கள் விளக்கினார்கள். இந்த விஷயத்தில் இவர்கள் பெலேஜியஸினுடையதும், கேசியனுடையதும், ரோமன் கத்தோலிக்க மதத்தினுடையதும் போதனைகளை அடியோடு எதிர்த்தார்கள்.

ஆர்மீனியஸும் (Arminius), மனித சித்தமும்

இதுவரை பாவத்தில் இருக்கும் மனிதனுடைய சித்தத்தைப் பற்றி பெலேஜியஸ் முதற்கொண்டு செமி-பெலேஜியனிசம் வரையிலான கோட்பாடுகள் எத்தகைய கருத்துக்களைக் கொண்டிருந்தன என்றும் அந்தக் கருத்துக்களின் போலித்தன்மையை சீர்திருத்தவாதிகளான ஆகஸ்தீனும், மார்டின் லூத்தரும், கல்வினும் எந்தவிதத்தில் இனங்காட்டி மனித சித்தம் பற்றிய சரியான வேதவிளக்கங்களைக் கொடுத்தார்கள் என்றும் பார்த்து வந்திருக்கிறோம். 1689 விசுவாச அறிக்கையும் சீர்திருத்தவாதிகளின் போதனைகளையே 9ம் அதிகாரத்தில் விளக்குகிறது என்பதையும் முந்தைய ஆக்கத்தில் பார்த்திருக்கிறோம். இனி செமி-பெலேஜியனிசத்துக்குப் பிறகு எழுந்த ஆர்மீனியனிசம் (Arminianism) என்ற போதனை மனித சித்தத்தைப் பற்றி என்ன சொல்லுகிறது என்பதையும் பார்ப்பது நல்லது. இன்றைக்கு ஆர்மீனியனிசம் தமிழ் பேசும் நாடுகளிலெல்லாம் எல்லா சபைப்பிரிவுகளிலும் தலைவிரித்தாடிக்கொண்டிருக்கும் ஒரு கோட்பாடு. கடவுளின் கிருபை, இரட்சிப்பு, மனித சித்தம் பற்றிய அதன் போதனைதான் என்ன என்பதை இப்போது கவனிக்கலாம்.

ஜேம்ஸ் ஆர்மீனியஸின் பெயரைக் கொண்டுதான் ‘ஆர்மீனியனிசக்’ கோட்பாடுகள் தொடர்ந்தும் இருந்து வருகின்றன. மனித சித்தத்தைக் குறித்து ஆர்மீனியஸ் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்,

‘மறுப்பிறப்படையாத அனைத்து மனிதர்களும் சுயாதீன சித்தத்தோடேயே இருக்கிறார்கள். அதனால் அவர்களால் பரிசுத்த ஆவியின் கிரியையை தடுத்து நிறுத்தி கடவுளுடைய கிருபையை நிராகரிக்க முடிகிறது. இருதயக் கதவைத் தட்டுகிறவருக்கு கதவைத் திறக்காமல் இருக்க முடிகிறது. இதையெல்லாம் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாலும், நியாயத்தீர்ப்புக்கு ஒதுக்கப்பட்டவர்களாலும் வேறுபாடில்லாமல் உண்மையிலேயே செய்ய முடிகிறது.’

இந்த முடிவுக்கு ஆர்மீனியஸ் வந்ததெப்படி? உண்மையில் ஆர்மீனியஸ் ‘கிருபையின் துணையில்லாமல் மனித சித்தத்திற்கு எந்த நன்மையைச் செய்யும் வல்லமை இல்லை’ என்று தன்னுடைய எழுத்துக்களில் குறிப்பிட்டிருக்கிறார். அப்படியானால் ஆர்மீனியனிசத்திற்கும் சீர்திருக்க கிறிஸ்தவத்திற்கும் எந்த விஷயத்தில் முரண்பாடு என்ற கேள்வி நிச்சயம் எழும். மறுபிறப்பைப் பற்றிய போதனையில்தான் ஆர்மீனியஸின் விளக்கம் சீர்திருத்தப் போதனைகளோடு முரண்படுகிறது. கடவுளின் கிருபை இரட்சிப்பிற்கு அவசியமாயிருந்த போதும், போதுமானதாக இல்லை என்பது ஆர்மீனியஸின் போதனை. கிருபையை ஆர்மீனியஸ் இரண்டுவிதமாக, போதுமான கிருபை (Sufficient grace), செயல்திறனுடைய கிருபை (Efficient grace) என்ற பெயரில் பிரித்துக் காட்டுகிறார். ஒருவர் இரட்சிப்படைய போதுமான கிருபை (Sufficient grace) அவசியம், இருந்தபோதும் அது யாருக்கு கொடுக்கப்படுகிறதோ அவர் அதை ஏற்றுப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் அது பலனற்றுப் போய்விடும் என்கிறார் ஆர்மீனியஸ். அதை மனிதன் ஏற்றுக்கொள்ளாமல் போகிறபடியால்தான் கடவுளால் அவனை நீதியாகத் தண்டிக்க முடிகிறது என்றும், இல்லாவிட்டால் கடவுளின் நியாயத்தீர்ப்புக்கு வழியில்லை என்றும் விளக்குகிறார்.

இந்த இடத்தில் ஆர்மீனியஸின் போதனையை சிந்தித்துப் புரிந்துகொள்ள வேண்டும். மனிதன் இரட்சிப்படைய அவனுக்கு கிருபை தேவைப்படுகிறது என்கிறார் ஆர்மீனியஸ் (Prevenient grace – மனந்திரும்புதலுக்கு முன் கிடைக்கும் கிருபை). ஆனால், இந்தக் கிருபை சுவிசேஷத்தின் மூலம் எல்லோருக்கும் (Universal) சமமாகக் கொடுக்கப்படுகிறது என்றும், இது இரட்சிப்பிற்காக மனிதன் சுயாதீனமாக சித்தங்கொள்ளுவதற்கான ஆரம்ப உதவியைச் செய்கிறது என்பதும் ஆர்மீனியஸின் போதனை. இந்த இடத்தில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆர்மீனியஸைப் பொறுத்தவரையில் இந்தக் கிருபையை மனிதனால் நிராகரித்துவிட முடியும். இதற்குக் காரணம் மனிதனுக்கு சுயாதீனமான சித்தம் இருப்பதுதான். ஆர்மீனியஸைப் பொறுத்தவரையில் சித்தம் சுயாதீனமாக இருக்கவேண்டுமானால் கிருபையால் புதுப்பிக்கப்பட்ட நிலையிலும் அதற்கு கிருபையை ஏற்றுக்கொள்ளவும் நிராகரிக்கவும் சம வல்லமை இருக்க வேண்டும். மனிதனுடைய சுயாதீன சித்தத்தின் துணையில்லாமல் கிருபை இரட்சிக்கும் கிருபையாக இருக்க முடியாது. அதேவேளை கிருபையின் துணையில்லாமல் மனிதன் இரட்சிப்புக்குரிய தன் பங்கைச் செலுத்த முடியாது என்பதும் ஆர்மீனியஸின் போதனை. இரட்சிப்பு ஒருவரில் ஏற்பட இரண்டும் அவசியம்.

மறுபிறப்பைப் பற்றி ஆர்மீனியஸ் கொடுக்கும் விளக்கங்கள் மனதைக் குழப்பக்கூடியவை. ஆர்மீனியஸின் போதனையில் சினர்ஜிசத்தை நாம் சந்திக்கிறோம். மொத்தத்தில் மனிதன் இரட்சிக்கப்பட கடவுளும் மனிதனும் அதில் சம பங்கு கொண்டு ஒத்துழைத்தால் மட்டுமே மனிதனுக்கு இரட்சிப்பு உண்டு என்பது ஆர்மீனியஸின் போதனை. இது நிச்சயம் ஆகஸ்தீன், மார்டின் லூத்தர், கல்வின் ஆகியோரது போதனைகளுக்கும், சீர்திருத்த விசுவாச அறிக்கைகள், வினாவிடைப்போதனைகள் அனைத்திற்கும் முரணானது. இரட்சிப்புத் தொடர்பான சீர்திருத்தவாதிகளின் மொனர்ஜிசப் போதனைகளுக்கும் ஆர்மீனியஸின் சினர்ஜிசப் போதனைகளுக்கும் இடையில் பெரும் இடைவெளி காணப்படுகின்றது. உண்மையில் பார்க்கப்போனால் இதுவும் கேசியனின் செமி-பெலேஜியனிசத்தைப் போன்றதுதான். ஒரே விஷயத்தை இருவரும் சில விஷயங்களில் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்தி விளக்குகிறார்கள்.

(இனியும் வரும்)

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s