கடந்த இதழில் மனித சித்தத்தின் நிலையைப் பற்றி ஆராய ஆரம்பித்து, ஏதேன் தோட்டத்தில் நமது முதல் பெற்றோர் பாவமற்ற நிலையில் இருந்தபோது, மனித சித்தம் எந்த நிலையில் அவர்களில் காணப்பட்டது என்பதைப் பார்த்தோம். அங்கே பாவத்தால் பாதிக்கப்படாத நிலையில், பூரணமாய் இருந்த நிலையில் மனித சித்தம் முழுச் சுதந்திரத்தோடு கடவுளின் ஆணைகளை விரும்பிச் செய்துகொண்டிருந்தது என்பதை அறிந்துகொண்டோம். ஆதாமும், ஏவாளும் அங்கே நன்மையை மட்டுமே செய்து வாழ்ந்து வந்தார்கள். கடவுளோடு இடையராத ஐக்கியத்தை அனுபவித்து வந்தார்கள். அத்தகைய அருமையான வாழ்க்கை எப்படி மாறியது, அவர்கள் தங்களுடைய பூரணமான நிலையில் இருந்து விழுந்தபோது மனித சித்தத்தின் நிலைக்கு என்ன நடந்தது என்பதற்கெல்லாம் நாம் விடை காண வேண்டும். அதைத்தான் இந்த ஆக்கத்தில் நாம் ஆராயப் போகிறோம்.
மனிதன் பாவத்தில் வீழ்ந்தான்
படைக்கப்பட்ட நிலையில் ஆதாம் பூரணமாக இருந்தபோதும் அந்த நிலையில் இருந்து விழுந்துவிடக்கூடியவனாக இருந்தான். அந்த நிலையிலேயே அவன் படைக்கப்பட்டிருந்தான். அவன் கடவுளின் வார்த்தையை மீறி நடந்தால் தன்னுடைய பூரண நிலையை இழந்துவிடக்கூடிய சாத்தியம் இருந்தது. அவன் தன்னுடைய பூரண நிலையில் தொடர்ந்து வாழ்ந்திருந்திருக்க முடியும். அதற்கு எந்தத் தடையும் இருக்கவில்லை. ஆனால், கடவுளுடைய கட்டளையை அவன் மீறாமல் இருக்க வேண்டிய கடமைப் பொறுப்பு அவனுக்கிருந்தது. ஆனால், ஆதாமும், ஏவாளும் சாத்தானின் பேச்சைக் கேட்டு கடவுளின் கட்டளையை மீறினார்கள். எது நடந்திருக்கக்கூடாதோ அது அன்று ஏதேன் தோட்டத்தில் நடந்தது. அருமையானதொரு வாழ்க்கையைத் தொடர முடியாதபடி நமது முதல் பெற்றோர் பாவம் செய்தார்கள்.
இது பற்றி விளக்குகின்ற 1689 விசுவாச அறிக்கை 9ம் அதிகாரம் 3ம் பத்தி ‘மனிதன் பாவத்தில் வீழ்ந்ததால்’ என்று ஆரம்பிக்கின்றது. இங்கே பாவம் நமக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. மனிதனுடைய வீழ்ச்சியைப் பற்றி விசுவாச அறிக்கை 6ம் அதிகாரத்தில் விபரமாக விளக்குகிறது. ‘மனிதனுடைய வீழ்ச்சியும் பாவமும் அதற்குரிய தண்டனையும்’ என்ற அந்த அதிகாரத்தின் முதல் பத்தி எந்த முறையில் மனிதன் பாவத்தில் வீழ்ந்தான் என்பதை விளக்குகிறது. ஆதாமும், ஏவாளும் யாருடைய தூண்டுதல்களுமின்றி, தன்னிச்சையாக கடவுளுடைய கட்டளைகளை மீறி நடந்தார்கள் என்று அதில் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம் ‘எல்லோருக்கும் பாவம் சம்பவித்து எல்லோரும் பாவத்தில் மரித்து, நம்முடைய ஆவி, சரீரம் ஆகியவற்றின் அனைத்துப் பகுதிகளிலும் முழுமையாகக் கறைபடிந்து காணப்படுகிறோம்’ என்று 6ம் அதிகாரம் 2ம் பத்தியில் வாசிக்கிறோம். ஆதாமும், ஏவாளும் பாவத்தில் விழுந்த நிகழ்ச்சியையும், கடவுள் அவர்களுக்குக் கொடுத்த தண்டனையையும் ஆதியாகமம் 3ம் அதிகாரம் நமக்கு விளக்குகின்றது.
1689 விசுவாச அறிக்கை ஆதாம் பாவத்தில் விழுந்ததைப் பற்றியும் அதனால் ஏற்பட்ட பாதிப்புக்களையும் பின்வருமாறு விளக்குகிறது:
9:3 – மனிதன் பாவத்தில் வீழ்ந்ததால் இரட்சிப்போடு கூடிய எந்தவித ஆவிக்குரிய நன்மைகளையும் செய்யக்கூடிய தனது சித்தத்தின் வல்லமையைப் பூரணமாக இழந்தான். இயல்பாகவே மனிதன் ஆவிக்குரிய நன்மைகளை முற்றிலும் எதிர்ப்பவனாகவும் பாவத்தில் மரித்தவனாகவும் உள்ளான்.
ஆதாமும், ஏவாளும் கடவுளுடைய கட்டளையை மீறிப் பாவம் செய்தபோது அவர்கள் அதைச் சுயமாக செய்தார்கள். அவர்களுடைய சித்தம் ஏதேன் தோட்டத்தில் இருந்தபோது நன்மையைப் பூரணமாக செய்யக்கூடிய நிலையில் மட்டும் இருக்கவில்லை, பாவத்தில் விழுந்துவிடக்கூடிய நிலையிலும் இருந்தது என்பதை நாம் ஏற்கனவே கவனித்திருக்கிறோம். அவர்களுடைய சித்தம் பூரண சுயாதீனத்தோடு இயங்கக்கூடியதாக இருந்திருக்கிறது. ஆகவே, யாராலும் வற்புறுத்தப்படாமலும், தங்களுக்குள்ளிருந்த எதனாலும் உந்தப்படாமலும் அவர்கள் பிசாசின் பேச்சைக் கேட்டு அவனுடைய பொய்யான பேச்சில் இச்சை கொண்டு கடவுளுக்கெதிராக அவர் செய்யக்கூடாது என்று கட்டளையிட்டிருந்த செயலைத் துணிந்து செய்தார்கள். கடவுள் புசிக்கக்கூடாது என்று சொன்ன மரத்தின் கனியை (ஆதி 3:3) யாரும் அவர்களுக்கு ஊட்டிவிடவில்லை. சாத்தான் அவர்களைக் கட்டிவைத்து அவர்களுடைய வாயில் அதைத் திணிக்கவில்லை. ஆதாமும், ஏவாளும் அதில் ஆசைகொண்டு சுய சித்தத்தோடு அந்தக் கனியைப் பறித்து விரும்பிச் சாப்பிட்டார்கள். இதிலிருந்து ஆதாமும், ஏவாளும் தங்களுடைய பாவச் செயலுக்கு வேறு எவரையும் குறைகூறவோ அல்லது வேறு எவர் மேலும் அந்தப் பழியைச் சாற்றவோ முடியாது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
பாவம் நம்மால் விளங்கிக்கொள்ள முடியாததொன்று. அது ஏன் ஏற்பட வேண்டும்? அருமையான நிலையில் இருந்த மனித வாழ்க்கையை அது கெடுத்துவிட்டதே? என்று அங்கலாய்த்தாலும் அதை நம்மால் விளங்க வைக்க முடியாது. அது ஏற்பட்டிருக்கக் கூடாதுதான். அதனால் அழிவு மட்டுமே மிஞ்சியது. முழுச் சுதந்திரமும், சுயாதீன சித்தமும் கொண்டிருந்த முதல் பெற்றோர் எப்படி இதில் விழுந்தார்கள் என்பதற்கு வேதம் அவர்கள் தீமையை விரும்பி, இச்சித்து அதில் சுயமாக விழுந்தார்கள் என்ற பதிலை மட்டுந்தான் நமக்குத் தருகிறது. இதுபற்றிக் குறிப்பிடும், ஸ்கொட்லாந்து இறையியல் வல்லுனர் ஜோன் மரே (John Murray), ‘முழுப் பூரணப் பரிசுத்தத்தைக் கொண்டும், நேர்மையானவனாகவும் இருந்த ஒருவர் எப்படிப் பாவத்தில் விழலாம்? அதற்கு நம்மால் பதில்கூற முடியாது. அது விடைகாண முடியாத உளவியல் ஒழுக்கப்பிரச்சனையாக இருக்கின்றது. பாவத்தை நியாயப்படுத்த எந்த ஒரு காரணமும் கிடையாது. பாவம் புரிந்துகொள்ள முடியாதது’ என்று விளக்கியிருக்கிறார். நம்முடைய விசுவாச அறிக்கை பாவத்திற்கான முழுப்பழியையும் ஆதாமின் மேலேயே சுமத்துகிறது. ‘ஆதாமோ, எந்தவிதப் புறத்தூண்டலுமின்றி தன்னிச்சையாக விலக்கி வைக்கப்பட்ட கனியைப் புசித்ததன் மூலம், படைப்பின் சட்டத்தையும், தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளையையும் மீறி நடந்தான்’ என்கிறது (6:1). ஆதாம் சுயமாக அடியோடு கடவுளின் கட்டளையை மீறிப் பாவத்தில் வீழ்ந்தான்.
ஆவிக்குரிய நன்மைகளைச் செய்யக்கூடிய வல்லமையை இழந்தான்
பாவம் மனிதனை எந்தளவுக்குப் பாதித்திருக்கிறது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்காமல் இருக்க முடியாது. அது மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்று வேதம் பல இடங்களில் விளக்குகிறது. மனிதனுடைய அனைத்துப் பாகங்களையும் அது பாதித்திருக்கின்றது என்பதை விசுவாச அறிக்கையின் 6ம் அதிகாரம் விளக்குகிறது. மனிதனுடைய அனைத்துப் பாகங்கள் என்கிறபோது அவனுடைய சரீரம், ஆவி, இருதயம், சித்தம் எல்லாவற்றையுமே பாதித்திருக்கின்றது என்று வேதம் விளக்குகிறது. ஆதியில் சுயாதீனமாக ஆவிக்குரிய நன்மைகளை விரும்பித் தடையேதுமில்லாமல் செய்துவரக்கூடிய நிலையில் இருந்த மனித சித்தம் பாவத்தினால் முழுமையாகப் பாதிக்கப்பட்டது. இன்று வேதம் போதிக்கின்ற இந்த உண்மையைப் புரிந்துகொள்ள மறுக்கின்ற அநேக கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். இதைப் புரிந்துகொள்ள மறுப்பதால் நமக்கு எந்த நன்மையும் இல்லை. இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள மறுத்து அதற்கு முரணான எண்ணங்களைக் கொண்டிருப்பதால் நாம் இறையியல் கோளாறுள்ள நம்பிக்கைகளை மட்டுமே கொண்டிருக்க முடியும். இந்த வகையில் வேதம் போதிக்கும் இந்த உண்மையை மறுத்தவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே இருந்திருக்கிறார்கள்.
பெலேஜியஸ் (Pelagius)
5ம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரிட்டனைச் சேர்ந்த துறவியான பெலேஜியஸ் என்ற மனிதர், மூல பாவத்தைப் பற்றிய தவறான கருத்துக்களை அறிமுகப்படுத்தினார். இவரைப் பற்றி இவ்விதழின் முந்தைய ஆக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். இந்த இடத்தில் அவருடைய கருத்துக்களை ஆராய்ந்து பார்ப்பது நல்லது. பெலேஜியஸின் இறையியல் சிந்தனைகள் இறுதியில் மனிதன் பாவியல்ல என்ற முடிவுக்கு அவரை வரும்படிச் செய்தன. இது எப்படி ஆரம்பித்தது தெரியுமா? பாவம் எந்தளவுக்கு மனிதனைப் பாதித்தது என்ற கேள்விக்கு அவர் விடை காண முயன்று, பாவம் முழுமையாக மனிதனைப் பாதித்திருக்கின்றது என்ற முடிவுக்கு வந்தால் அது மனிதன் செயலிழந்த, ஒன்றுக்கும் உதவாதவன் என்ற முடிவுக்கு வரும்படிச் செய்துவிடுமே என்றெல்லாம் சிந்திக்க ஆரம்பித்து, இதற்கு ஒரே முடிவு மனிதனைப் பாவம் பாதிக்கவில்லை என்பதுதான் என்று பெலேஜியஸ் விளக்கும் நிலை ஏற்பட்டது. மனிதனால் கடைப்பிடிக்க முடியாத கட்டளையொன்றை கடவுள் அவனுக்குக் கொடுத்திருக்க முடியாது என்று நம்பினார் இந்தத் துறவி. இந்த நம்பிக்கையே இவரைப் பாவத்தைப் பற்றிய தப்பான முடிவுகளுக்கு இழுத்துச் சென்றது. பெலேஜியஸைப் பொறுத்தவரையில், மனிதன் பின்பற்றும்படியான கட்டளைகளைக் கடவுள் கொடுத்திருப்பாரானால் நிச்சயம் கிருபையின் துணையில்லாமல் அவற்றைப் பின்பற்றக்கூடிய வல்லமை அவனுக்கு இருந்திருக்கிறது என்று நம்பினார். ஒன்றைச் ‘செய்’ என்று கடவுள் கட்டளையிட்டிருந்தால் அதைச் செய்யக்கூடிய ‘வல்லமை’ அவனுக்கு இயற்கையாகவே இருக்கிறது என்றார் பெலேஜியஸ். தன்னை நம்பும்படிக் கடவுள் மனிதனுக்கு கட்டளையிட்டிருந்தால் நிச்சயம் கடவுளை நம்பக்கூடிய வல்லமை மனிதனுக்கு இருக்கிறது என்று அவர் வாதிட்டார். ஒன்றைச் செய்யும்படிக் கட்டளையிட்டுவிட்டு அதைச் செய்ய இயலாத நிலையில் மனிதன் இருப்பானானால் அவன் அதைச் செய்யும்படிக் கடவுள் எதிர்பார்ப்பது எந்தவிதத்தில் நியாயம் என்று பெலேஜியஸ் கேட்டார்.
மனித சித்தம் தொடர்பான இந்த விஷயத்தில் அன்று பெலேஜியஸின் வாதங்களை மறுத்துக் கருத்துத் தெரிவித்தவர் ஆகஸ்தீன் என்ற திருச்சபைத் தலைவர். மூன்றாம் நூற்றாண்டில் ஏரியனுக்கும் (Arian), அத்தனேசியஸுக்கும் (Athanasius) இடையில் கிறிஸ்துவின் தெய்வீக, மானுடப் பிறப்பு பற்றி நடந்த வாதங்களுக்குப் பிறகு சபை சரித்திரத்தில் மிகமுக்கியமான இறையியல் போராட்டமாக இதுவே இருந்தது. பெலேஜியஸ் ஆரம்பித்து வைத்த இந்த இறையியல் போராட்டம் சபை வரலாற்றில் பாவத்தைப் பற்றியும், மனித சித்தத்தைப் பற்றியும் வேதத்துக்கு முரணானதொரு இறையியல் கோட்பாட்டை உருவாக்கி இன்றும் உலகில் தொடரும்படிச் செய்திருக்கிறது. பெலேஜியஸின் வாதங்களை மேலும் சிந்தித்துப் பார்ப்போம். பெலேஜியஸைப் பொறுத்தவரையில் இயற்கையின் கடமைகளை மனிதன் நிறைவேற்றுவதற்கு கிருபையின் அவசியம் அவனுக்குத் தேவையில்லை. சுயாதீனமான தன்னுடைய சித்தத்தை மனிதன் சரியாகப் பயன்படுத்தினால் எல்லா நன்மைகளையும் அவன் அடைய முடியும் என்றார் பெலேஜியஸ். தன்னுடைய சுய முயற்சியால் ஒழுக்கத்தில் மட்டுமல்லாமல் ஆவிக்குரிய சகல நன்மைகளையும் மனிதன் அடைய முடியும் என்பது பெலேஜியஸின் நம்பிக்கையாக இருந்தது. அதுமட்டுமல்ல, இயற்கை, பூரணமாக நன்மையானதாக படைக்கப்பட்டிருப்பதால் எந்தவிதக் கேடும் அதைக் கெடுத்துவிட முடியாது, மாசுபடுத்திவிட முடியாது என்றார் பெலேஜியஸ். பாவத்திற்கு பெலேஜியஸ் கொடுத்த விளக்கத்தைக் கொஞ்சம் கவனியுங்கள். நீதியானவற்றிற்கு எதிரான காரியங்களைச் செய்வதே பாவம் என்று விளக்கிய பெலேஜியஸ் அதைச் செய்யாமலிருக்கும் சுதந்திரம் மனிதனுக்கு இருக்கிறது என்றார். அத்தோடு, மனிதன் தன்னுடைய சுயாதீனமான சித்தத்தை முறையாகப் பயன்படுத்தினால் நீதியற்ற எந்தத் காரியங்களையும் செய்யாமல் தவிர்த்துவிட முடியும் என்றார். பாவமென்பது நாம் செய்கிற தவறேயல்லாமல் இயற்கையாகக் காணப்படுகிற ஒன்றல்ல என்பது பெலேஜியஸின் முடிவு. பெலேஜியஸின் வாதங்களைக் கவனித்தீர்களா? இந்த மனிதர் இதோடு நிறுத்திக் கொள்ளவில்லை.
பாவத்தைப் பற்றி விளக்கும் பெலேஜியஸ், அது மனிதனில் காணப்படும் தன்மையல்ல அவனுடைய வெறும் செயல் மட்டுமே என்றார். இயற்கையில் மனிதன் பூரணமாகப் படைக்கப்பட்டிருப்பதாலும், அவனால் கேடு செய்யாமல் இருந்துவிடலாம் என்பதாலும், கடவுளின் கட்டளையை மீறியபோது அவன் செய்த செயல் மட்டுமே பாவம் என்றும் அது அவனுடைய மானுடத்தை எந்தவிதத்திலும் பாதித்துவிடவில்லை என்றும் விளக்கினார் பெலேஜியஸ். மனிதனுடைய பாவச்செயல் அவனைப் பாவியாக்கிவிட முடியாது என்று இந்த மனிதர் வாதிட்டார். மேலும், புசிக்கக்கூடாத கனியைப் புசிப்பதற்காக ஆதாமின் இருதயத்தில் ஏற்பட்ட தீவிர இச்சை பாவத்தைச் செய்யத் தூண்டுகிற உணர்வு மட்டுமே, அது பாவமில்லை என்றும் கூறினார். பெலேஜியஸின் கருத்துகளில் பல முரண்பாடுகள் இருந்தன. இந்தக் கருத்துக்களெல்லாம் பெலேஜியஸை எங்கு கொண்டுபோய் விட்டன தெரியுமா? இயற்கையாகவே மனிதன் பாவத் தன்மையைக் கொண்டிராமல் இருப்பதால் அவனால் இந்த உலகத்தில் பூரணமாக இருந்துவிட முடியும் என்ற முடிவுக்கு பெலேஜியஸ் வரவேண்டியிருந்தது. பெலேஜியஸின் கருத்துக்கள் ஆதாமின் வீழ்ச்சியின் காரணமாக மனிதன் பாவக்கறைபடிந்த இருதயத்தைக் கொண்டிருக்கிறான் என்ற போதனையையும், மூல பாவத்தையும் அடியோடு நிராகரித்தன.
ஆதாம் படைப்பில் சுயாதீன சித்தத்தோடு படைக்கப்பட்டிருந்தான் என்பதைப் பெலேஜியஸ் மறுக்கவில்லை. அத்தோடு ஆதாம் ஆவிக்குரிய சில தன்மைகளோடும் இருந்தான் என்கிறார் அவர். சுயாதீனமாகவே பாவத்தை செய்த ஆதாம் அதனால் தன்னுடைய இருதயத்தில் பாதிக்கப்படவில்லை என்கிறார். ஆதாம் அழிவில்லாத வாழ்க்கைக்காகப் படைக்கப்படவில்லை என்றும் அதனால் அவனால் இறக்க முடிந்தது என்றும் பெலேஜியஸ் கூறினார். இதனால் மரணம் பாவத்தால் ஏற்படவில்லை என்பது அவருடைய நம்பிக்கை. இதற்கெல்லாம் மேலாக, ஆதாமின் வழித்தோன்றல்கள் பற்றிய பெலேஜியஸின் கருத்துக்களைப் பார்ப்போம். ஆதாமின் வழித்தோன்றல்கள் ஆதாமில் இருந்து ஆவிக்குரிய மரணத்தையோ அல்லது சரீர மரணத்தையோ பெற்றுக்கொள்ளவில்லை என்கிறார் அவர். அவர்கள் இறப்பதற்குக் காரணம் அவர்களும் அழியும்படி படைக்கப்பட்டிருப்பதால்தான் என்பது பெலேஜியஸின் முடிவு. ஆவிக்குரிய மரணம் ஆதாமில் இருந்து எல்லா மனிதர்களுக்கும் வரவில்லை என்று மூல பாவத்தின் தன்மைகளை பெலேஜியஸ் நிராகரித்தார். பெலேஜியஸின் இந்தப் போதனைகளை நான் விளக்குவதற்குக் காரணம் ஓரளவுக்கு நீங்கள் இதுபற்றி தெரிந்துவைத்திருக்க வேண்டுமென்பதற்காகத்தான். பெலேஜியஸின் போதனைகள் வேத போதனைகளை எந்தளவுக்கு மீறிப் போயிருக்கின்றன என்பதை நீங்கள் உணர்வது அவசியம்.
மூல பாவத்தை நிராகரித்த பெலேஜியஸின் போதனைகள் குறிப்பாக மனித சித்தம் பற்றிச் சொல்வதென்ன என்பதை நாம் பார்க்கத்தானே வேண்டும். ஏனென்றால், அதுதானே இந்த ஆக்கத்தின் கருப்பொருள். பெலேஜியஸ் மூல பாவத்தை நிராகரித்ததால் மனித சித்தம் பாவத்தால் பாதிக்கப்படவில்லை என்றும் அது சுயாதீனமாக இயங்கக்கூடிய முழு வல்லமையோடு எப்போதும் இருக்கிறதென்றும் விளக்கினார். ஆதாமின் பாவமும், குற்றவுணர்வும் மனிதகுலத்துக்கு மாற்றப்படவில்லை என்று கூறும் பெலேஜியஸ், மனிதன் ஆத்மீகக் காரியங்களை செய்யும் சுயாதீன சித்தத்தோடேயே இருக்கிறான் என்று விளக்கியிருக்கிறார். இதிலிருந்து இறையியல் போதனைகளில் ஒரு விஷயத்தில் நாம் தவறான முடிவுக்கு வந்தால் அது நம்மை அந்த விஷயம் தொடர்பான அத்தனைப் போதனைகளிலும் தவறான முடிவை எடுக்கும்படிச் செய்துவிடும் என்பதை நாம் உணர்வது அவசியம். பெலேஜியஸின் தவறான முடிவு தவறான போதனையை உருவாக்கியது. அன்றைய திருச்சபைத் தலைவர்களில் முக்கியமானவரான ஆகஸ்தீன் பெலேஜியஸின் போதனையில் இருந்த தவறை உணர்ந்து அதிலிருந்து சபையைக் காப்பாற்ற நடவடிக்கைகள் எடுத்தார். ஆகஸ்தீனுடைய போதனைகளையே திருச்சபை ஏற்றுக்கொண்டது.
ஆகஸ்தீன் (Augustine)
வட ஆபிரிக்காவின் கார்த்தேஜைச் (Carthage) சேர்ந்த அறிவாளியான ஆகஸ்தீன் கடவுளின் கிருபையைப் பற்றிய அருமையான நூலைத் திருச்சபைக்குத் தந்துள்ளார். கிருபையை நாம் விலைகொடுத்து வாங்க முடியாது. அதை அடையும் தகுதியும் நமக்குக் கிடையாது என்று விளக்கிய ஆகஸ்தீன், கிருபை இல்லாமல் இருக்க முடியாது என்கிறார். கிருபையால் மட்டுமே மனிதன் பாவத்தில் இருந்து விடுதலை அடைய முடியும் எனும் ஆகஸ்தீன் அது நிராகரிக்கப்பட முடியாதது, திட்ப உறுதியானது என்கிறார். அதாவது தெரிந்துகொள்ளப்பட்ட பாவியாகிய மனிதனைக் கர்த்தரிடம் கொண்டுவரக்கூடிய வல்லமையை அது கொண்டிருக்கிறது என்கிறார். கடவுளின் நித்திய திட்டத்தோடு தொடர்புடைய கிருபை அவருடைய முன்குறித்தலாகிய கிரியையோடு பிரிக்க முடியாதபடி இணைந்திருக்கிறது. கடவுளின் கிருபையைப் பற்றி ஆகஸ்தீன் தரும் போதனைகளை நாம் மனிதனின் வீழ்ச்சியின் பின்னணியில் விளங்கிக்கொள்ள வேண்டியது அவசியம். இதன் மூலமே பெலேஜியஸின் போதனைகளின் போலித்தனத்தை நாம் இனங்கண்டுகொள்ள முடிகிறது.
படைப்பில் மனிதன் பூரணமாக இருந்தாலும் பாவத்தை செய்துவிடக்கூடிய நிலையில் இருந்தான் என்கிறார் ஆகஸ்தீன். அவன் தொடர்ந்து நன்மையைச் செய்து வாழ, அவனுடைய பூரண நிலையிலும் கடவுளின் கிருபை அவனுக்கு துணை செய்தது என்றும், இருந்தபோதும் அந்தக் கிருபை அவன் அதில் தொடரும்படி அவனை வற்புறுத்தவில்லை என்றும் ஆகஸ்தீன் கூறினார். ஆதாம் பாவம் செய்யாமலிருக்கும் வல்லமையைக் கொண்டிருந்தபோதும் பாவத்தில் விழாமலிருக்கும் வல்லமையைக் கொண்டிருக்கவில்லை. ஆகஸ்தீனின் இந்த விளக்கங்கள் அவர் படைப்பில் மனிதனின் நிலையைப் பற்றிக் கொண்டிருந்த கருத்துக்களை நாம் விளங்கிக்கொள்ள உதவுகின்றன. கடவுளால் ஒருபோதும் பாவம் செய்ய முடியாது. அவர் பூரண நீதியும், பரிசுத்தமும் உள்ளவர் மட்டுமல்ல, என்றும் மாறாதவராக இருக்கிறார். ஆனால், படைக்கப்பட்ட மனிதன் மாறாத தன்மையோடு படைக்கப்படவில்லை. மனிதன் மாறும் இயல்புள்ளவன். படைப்பில் ஆதாம் பாவத்தில் விழக்கூடிய மாறும் தன்மையோடு இருந்தபோதும் அதைச் செய்ய வேண்டிய அவசியம் அவனுக்கிருக்கவில்லை. அவனால் பாவம் செய்யாமலிருக்கும் வல்லமையிருந்தபோதும் பாவத்தை இலகுவாக செய்துவிடக்கூடியவனாகவும் இருந்தான். ஆதாம் பாவத்தில் வீழ்ந்தபோது அவனோடு முழுமனுக்குலமும் பாவத்தை அனுபவித்தது. இந்த விஷயத்தில் பெலேஜியஸினுடைய போதனையோடு ஆகஸ்தீன் முரண்படுகிறார். ஆதாமின் பாவம் அவனை மட்டும் பாதித்ததாக பெலேஜியஸ் வாதிடுகிறார்.
பாவத்திற்கும் மரணத்திற்கும் இடையில் பெரும் தொடர்பிருப்பதாக ஆகஸ்தீன் விளக்கினார். அதைத்தான் பவுல் அப்போஸ்தலனும் புதிய ஏற்பாட்டில் விளக்கியிருக்கிறார். எல்லா மனிதர்களும் இறப்பார்கள். அதற்குக் காரணம் எல்லா மனிதர்களும் பாவம் செய்திருப்பதுதான். பாவத்திற்குப் பிறகு மரணம் எல்லோருக்கும் ஏற்பட்டது. பாவத்தின் காரணமாக மனிதன் இறப்பதைத் தவிர்த்துக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறான். இதிலிருந்து பெலேஜியஸினுடைய போதனைகளுக்கும் ஆகஸ்தீனுடைய போதனைகளுக்கும் இடையில் இருந்த பெரும் வேறுபாட்டை நம்மால் அறிந்துகொள்ள முடிகின்றது. பெலேஜியஸைப் பொறுத்தவரையில் ஆதாம் தனி மனிதனாக மட்டுமே செயல்பட்டான், அவனுக்கும் மனுக்குலத்துக்கும் தொடர்பிருக்கவில்லை. அவன் மனுக்குலத்தின் பிரதிந¤தியல்ல. ஆனால், ஆகஸ்தீன் பவுலைப் போல, ஆதாமை மனுக்குலத்தின் பிரதிநிதியாகக் கணித்தார். மனிதனைப் பற்றியும் பாவத்தைப் பற்றியும் பெலேஜியஸ் அளித்த போதனைகளைத் தோலுரித்துக் காட்ட கடவுள் எழுப்பிய மனிதன் ஆகஸ்தீன்.
மனித சித்தத்தின் நிலை பற்றிய ஆகஸ்தீனின் விளக்கம்
ஏதேனில் இருந்தபோது | பாவத்தில் விழுந்துவிடவும் விழாமல் இருக்கவும் கூடிய நிலை |
மூல பாவத்திற்குப் பின் | பாவத்தை செய்யாமலிருக்க முடியாத நிலை |
கிருபையை அடைந்தபின் | பாவத்தைச் செய்யாமல் இருக்கக் கூடிய நிலை |
பரலோகத்தில் | பாவத்தை செய்ய முடியாத நிலை |
ஆதாமின் வீழ்ச்சியினால் (மூல பாவத்தினால்) மனிதனுக்கு ஏற்பட்டிருக்கும் எட்டுவகைப் பாதிப்புகளை பிலிப் ஷ்சாப் (Philip Schaff) என்கிறவர் பின்வருமாறு விளக்குகிறார்.
- மனிதன் மாறுந்தன்மையுள்ளவனாகப் படைக்கப்பட்டிருந்தபடியால் அவனால் தன்நிலையிலிருந்து விழ முடிந்தது. அவன் நன்மையானவனாக படைக்கப்பட்டிருந்தபோதும் மாறுந்தன்மையுள்ளவனாக (mutable) இருந்தான்.
- வீழ்ச்சி மனிதன் தன் சுதந்திரத்தை இழக்கச் செய்தது. படைப்பில் அவன் நன்மையை சுதந்திரமாகச் செய்து தீமையைச் செய்யாதிருக்கும் சுதந்திரத்தையும் கொண்டிருந்தான். இப்போது அவன் நன்மை செய்யும் சுதந்திரத்தை இழந்ததோடு தீமைக்கு அடிமையாகவும் மாறிவிட்டான்.
- வீழ்ச்சி மனிதன் தடைகளேதும் இல்லாமல் அறிவைப் பெறவும் அதில் வளரவும் இயலாமல் செய்தது. மனிதனுடைய இருதயம் வீழ்ச்சியால் இருளடைந்து அவனுடைய மனம் சிந்தனைக் கோளாறுள்ளதாக மாறியது.
- வீழ்ச்சியால் மனிதன் கடவுளின் கிருபையை இழந்தான்.
- வீழ்ச்சியால் மனிதன் பரலோகமான ஏதேனை இழந்தான்.
- வீழ்ச்சி தீமையை இச்சிக்கும் மாம்ச இருதயத்தை மனிதனுக்கு ஏற்படுத்தியது.
- வீழ்ச்சி மனிதனுக்கு மரணத்தை ஏற்படுத்தியது.
- வீழ்ச்சி மனிதனுக்கு ஆதாமிலிருந்து பாவத்தின் குற்றவுணர்வை வரச்செய்தது. (பெலேஜியஸ் இதை மறுத்தார். பாவம் வெறும் நடத்தை மட்டுமே என்றார். ஆனால், வேதம் அது நம்முடைய முதல் பெற்றோரிடமிருந்து நமக்கு வந்ததாக விளக்குகிறது.)
பாவம் எந்தளவுக்கு மனித சித்தத்தைப் பாதித்தது?
இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் விசுவாச அறிக்கை, ‘இரட்சிப்போடு கூடிய எந்தவித ஆவிக்குரிய நன்மைகளையும் செய்யக்கூடிய தனது சித்தத்தின் வல்லமையைப் பூரணமாக மனிதன் இழந்தான்’ (9:3) என்கிறது. விசுவாச அறிக்கை இதற்கு அடுத்த 10வது அதிகாரத்தில் இரட்சிப்போடு தொடர்புடைய சத்தியங்களை விளக்கவிருப்பதால் இந்த இடத்தில் அதோடு தொடர்புடைய மனித சித்தத்தின் சுயாதீனத்தைப் பற்றி விளக்குகிறது. ஆதியாகமம் 3:9-12 வரையுள்ள வசனங்களில் கடவுள் ஆதாமோடு நடத்திய சம்பாஷனையைப் பார்க்கிறோம். கர்த்தர் ஆதாமைப் பார்த்து, ‘நீ எங்கே இருக்கிறாய்’ என்று கேட்கிறார். அதற்கு ஆதாம், ‘நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்தில் கேட்டு . . . பயந்து ஒளிந்துகொண்டேன்’ என்கிறான். இங்கே தன்னைப் படைத்த தேவனாகிய கடவுளிடம் இருந்து மனிதன் விலகியோடுவதைப் பார்க்கிறோம். தான் செய்த பாவத்தை அறிக்கையிட்டு மன்னிப்பு கேட்காமல் அத்தியிலைகளால் தன் நிர்வானத்தை (தன் பாவத்தை) மறைத்துக்கொண்டு கடவுளைவிட்டு ஓடப்பார்க்கிறான் ஆதாம். அவனுடைய சித்தத்தைப் பாவம் பாதிக்கத்தானே செய்திருக்கிறது. கடவுளோடு ஐக்கியத்தில் இருப்பதை விரும்பிச் செய்து வந்திருந்த சித்தம் பாவத்தினால் இப்போது கடவுளை விட்டு ஓடப்பார்க்கிறது. ஆதாம் பாவத்தில் விழுந்திருப்பதால் அவனால் கடவுளோடு ஐக்கியத்தில் வர முடியவில்லை. மன்னிப்பு கேட்கிற இருதயமும் அவனுக்கு இல்லை. கடவுளைவிட்டு அவனால் ஓடத்தான் முடிகின்றது. தான் செய்த பாவத்தில் இருந்து தப்புவதற்கு அவன் ஏவாளைக் குற்றஞ்சாட்டுகிறான். ஏன், அவளை உருவாக்கி அவனுக்களித்த கடவுளையே குற்றஞ்சாட்டுகிறான் (தேவரீர் தந்த ஸ்திரீ). இதிலிருந்து என்ன தெரிகிறது? பூரணமாக கடவுளின் வார்த்தைகளைக் கேட்டு நன்மைகளை செய்து வந்திருந்த ஆதாமின் சித்தம் அதற்கு எதிரான அனைத்தையும் செய்ய ஆரம்பித்துவிட்டதை நாம் கவனிக்கவில்லையா? பாவத்தில் விழுந்த ஆதாமால் இனி நன்மைகளை செய்ய முடியவில்லை. நன்மையாக சிந்திக்க முடியவில்லை. ஆவிக்குரிய சிந்தனைகளையும் வழிமுறைகளையும் பின்பற்றிப் போகக்கூடிய வல்லமையை அவனுடைய சித்தம் முற்றாக இழந்துவிட்டது. அவனால் ஆவிக்குரிய காரியங்களுக்கு எதிராகப் போகத்தான் முடிந்தது.
மனிதனைப் பற்றி விளக்கும் வேதம் அவன் கடவுளுக்கு எதிரியாக இருக்கிறான் என்கிறது. அதற்குக் காரணம் அவனுடைய இருதயம் அவனைக் கடவுளிடம் இருந்து விலகியோடும்படிச் செய்கிறது. இயற்கையாக கடவுளை நாடும் இருதயத்தை அவன் கொண்டிருக்கவில்லை. ரோமர் 1:30, மனிதன் கடவுளை வெறுக்கிறான் (தேவபகைஞன்) என்கிறது. அதற்குக் காரணம் என்ன? அத்தகைய இருதயம் அவனுக்கு இருப்பதால்தான். மூல பாவம் அவனைப் பாவியாக்கி கடவுளை வெறுத்து அவரிடம் இருந்து ஆதாமைப்போல ஒதுங்கியோடி ஒளிந்துகொள்ளும்படிச் செய்கிறது. அவனால் கடவுளுடைய கட்டளைகளை நேசிக்க முடியாமல் இருக்கிறது. கடவுளைப் பற்றிய எதையும் விரும்பி நாடும்படியாக அவனுடைய தன்மையில் எதுவுமே இல்லை. பாவம் அவனில், சித்தம் உட்பட அனைத்துப் பாகங்களையும் பாதித்து கடவுள் விரோதியாக மாற்றிவிட்டிருக்கிறது. மனிதனுடைய சித்தத்தைப் பாவம் இந்த வகையில் பாதித்திருப்பதை நாம் ஆதாம், ஏவாளில் இருந்து தெளிவாக அறிந்துகொள்ளுகிறோம்.
மனிதன் பூரணமாகப் பாவத்தில் மரித்திருக்கிறான்
பாவத்தில் வீழ்ந்திருக்கும் மனிதனின் நிலையை விளக்கும் விசுவாச அறிக்கை, ‘இயல்பாகவே மனிதன் ஆவிக்குரிய நன்மைகளை முற்றிலும் எதிர்ப்பவனாகவும் பாவத்தில் மரித்தவனாகவும் உள்ளான்’ என்கிறது (9:3). ‘பாவத்தில் மரித்தவனாக உள்ளான்’ என்கிற வார்த்தை பிரயோகம் அவனைப் பாவம் முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்பதை உணர்த்தப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. செத்த பிணத்தில் உயிரில்லை என்பது நமக்குத் தெரியும். அதனால் அசைய முடியாது. அதேபோல பாவத்தில் மரித்திருக்கிற மனிதன் ஆவிக்குரிய எதையும் செய்யமுடியாதபடி செத்த பிணம்போல இருக்கிறான். ஆவிக்குரிய எதையும் அவனால் அணுவளவும் செய்ய முடியாது. ஆவிக்குரிய விதத்தில் சிந்திக்கவோ, செயல்படவோ அவனால் ஒருக்காலும் முடியாது. இதைத்தான் கல்வினிச ஐங்கோட்பாடுகளில் ஒன்றான, மனிதனின் ‘முழுமையான சீர்குலைவு’ (Total Depravity) என்ற போதனை விளக்குகின்றது. இதோடு தொடர்புடைய இன்னுமொரு போதனைதான் மனிதனின் ‘முழுமையான இயலாமை’ என்பதும் (Total Inability). இவை இரண்டும் பாவம் மனிதனை எந்தளவுக்குப் பாதித்திருக்கின்றது என்ற விஷயத்தை விளக்கப் பயன்படுத்தப்படும் இரு இறையியல் வார்த்தைப் பிரயோகங்கள்.
‘முழுமையான சீர்குலைவு’ என்ற வார்த்தைப் பிரயோகம் பாவம் மனிதனின் அத்தனைப் பாகங்களையும் ஒன்றுவிடாமல் தொட்டுச் சீர்குலைத்திருக்கிறது (கறைபடுத்தியிருக்கிறது) என்பதை விளக்குகிறது. பாவத்தால் கறைபடுத்தப்படாத அல்லது சீர்குலையாத அம்சங்கள் மனிதனில் எதுவும் இல்லை என்பதைக் குறிக்கத்தான் ‘முழுமையான’ என்ற பதம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ‘முழுமையான இயலாமை’ என்ற வார்த்தைப் பிரயோகம் முக்கியமாக மனிதனின் சித்தத்தின் தன்மையை விளக்கப் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, பாவம் மனிதனின் சித்தத்தை அடியோடு பாதித்து அவன் இரட்சிப்புக்குரிய, ஆவிக்குரிய சிந்தனையைக் கொண்டிருந்து எந்தவிதத் தீர்மானங்களையும் எடுக்க முடியாது என்பதை சுட்டிக்காட்டுகின்றது.
சிலர் இந்த வார்த்தைப் பிரயோகங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு சீர்திருத்த கிறிஸ்தவர்கள் மனிதன் ஒன்றுக்கும் ஆகாதவன் என்று போதிக்கிறார்கள் என்று கதைகட்டி விட்டிருக்கிறார்கள். நிச்சயமாக சீர்திருத்த கிறிஸ்தவம் அப்படிப் போதிக்கவேயில்லை. மேலெழுந்தவாரியாக இறையியல் போதனைகளைக் கவனித்து ஒரு முடிவுக்கு வருவது ஆபத்து. சீர்திருத்த கிறிஸ்தவம் பாவத்திற்குப் பிறகு மனிதன் தொடர்ந்து கடவுளின் சாயலில் இருப்பதாக விளக்குகிறது. அதன் காரணமாக அவன் மனிதனாக மனிதனுக்குரிய சிந்தனைத் திறமை, அறிவுத் திறமை, செயல் திறமைகளைக் கொண்டிருப்பதாக நிச்சயம் போதிக்கிறது. கடவுளின் பொதுவான கிருபையின் காரணமாக மனிதன் ஒழுக்கத்தில்கூட சீர்திருத்தத்தைத் தன்னுடைய வாழ்க்கையில் ஓரளவுக்குக் கொண்டுவர முடியும் என்று சீர்திருத்த கிறிஸ்தவம் விளக்குகிறது. அவனால் மற்றவர்கள் மீது கருணை காட்டி உதவிகளைச் செய்ய முடியும் என்று விளக்குகிறது. பாவத்தில் இருந்தபோதும் இதையெல்லாம் மனிதன் தடையில்லாமல் செய்ய முடியும். அதை சீர்திருத்த கிறிஸ்தவம் ஒருபோதும் மறுத்ததில்லை. மனிதனைக் கையாலாகாதவனாக உருவகித்துக் காட்ட சீர்திருத்த கிறிஸ்தவம் ஒருபோதும் முயன்றதில்லை. இப்படியிருக்கும்போது மனிதன் ஒன்றுக்கும் உதவாதவன் என்று சீர்திருத்த கிறிஸ்தவம் போதிப்பதாக எப்படிச் சொல்ல முடியும்?
ஆதாமின் பாவம் மனிதனில் ஆத்மீகக் குறைபாட்டை மட்டும் ஏற்படுத்தாமல் வேறுவிதங்களிலும் அவனைப் பாதித்திருப்பது உண்மைதான். மனிதன் தொடர்ந்தும் அறிவுத் திறனையும், செயல் திறனையும் கொண்டவனாக இருந்தபோதும் ஆதாமைப் போன்ற செயல்திறனைக் கொண்டவனாக இன்று இல்லை என்று நிச்சயம் சொல்ல முடியும். ஏனெனில், ஆதாம் ஏதேனில் இருந்து செய்த எதிலும் குறைபாடு இருக்கவில்லை. ஆதாம் கடவுள் படைத்த அனைத்திற்கும் பெயர் வைத்தபோது அவற்றில் கடவுள் எந்தக் குறையையும் காணவில்லை என்பதை நினைத்துப் பாருங்கள். அந்தளவுக்கு அவன் அறிவுத் திறன் கொண்டவனாக இருந்திருக்கிறான். ஆதாம் நிலத்தைப் பண்படுத்தி பயிர்களை விளைவித்தபோது எல்லாமே எப்போதும் குறையில்லாமல் பலன் கொடுத்து வந்திருந்தன. அவனுடைய செயல்கள் அனைத்திலும் எந்தக் குறையும் இருக்கவில்லை. இன்றைக்கு பாவத்தில் இருக்கும் மனிதன் எத்தனைத் திறமையான காரியங்களை செய்தாலும் அவற்றில் குறைபாடுகள் இருக்கின்றன. இன்று மனிதன் எத்தனை கடுமையாக உழைத்தபோதும் அதற்கான பலனை அவன் நிச்சயமாக அடைய முடியும் என்று சொல்ல முடியாது. மனிதனுடைய அறிவும் இன்று குறைபாட்டோடுதான் இருக்கின்றது. இதெற்கெல்லாம் பாவம்தான் காரணம் என்பதை யாரால் மறுக்க முடியும்?
‘முழுமையான சீர்குலைவு’ எனும் போதனையும், ‘முழுமையான இயலாமை’ எனும் போதனையும் பாவத்தில் இருக்கும் மனிதனின் ஆத்மீக நிலையைப் பற்றி விளக்குகின்ற வார்த்தைப் பிரயோகங்கள். அவற்றை வேறு எதோடும் தொடர்புபடுத்தி விளக்கமளிப்பது தவறான செயலாகும். கடவுளோடு இருக்கக்கூடிய உறவைப் பொறுத்தவரையில் ஆதாமுக்கு இருந்த ஆத்மீக வல்லமையை பாவத்தின் காரணமாக அவன் இழக்க நேர்ந்தது. ஏதேனில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு ஆதாமால் கடவுளோடு தொடர்ந்து உறவு வைத்துக்கொள்ள முடியவில்லை. பாவம் அவனுடைய இருதயத்தைப் பாழாக்கி கடவுளைவிட்டு ஓடச் செய்தது. அவனுடைய சந்ததிகளாகிய நாமும் ஆத்மீகத்தைப் பொறுத்தவரையில் கடவுளைவிட்டு விலகியோடச் செய்ய வைக்கும் இருதயத்தோடுதான் இருக்கிறோம். இதைத்தான் மேலே நாம் பார்த்த வார்த்தைப் பிரயோகங்கள் விளக்குகின்றன. சுயமாக மனிதன் கடவுளை நாடக்கூடிய, அவருடைய கட்டளைகளை நேசிக்கக்கூடிய, அவரை அறிந்துகொள்ளத் துடிக்கும் இருதயத்தை இன்று கொண்டிருக்கவில்லை. அந்தளவுக்கு பாவம் மனிதனைப் பாதித்து ஆத்மீக வல்லமையில்லாதவனாக அவனை மாற்றியிருக்கிறது. இந்த நிலையில் இருக்கும் மனிதனின் சித்தம் மட்டும் வித்தியாசமான நிலையில் இருக்க முடியுமா? கடவுளை நாட இயலாத இருதயமுள்ள மனிதனின் சித்தம் கடவுளை நேசிக்கும் தீர்மானத்தை எடுக்கும் வல்லமையில்லாததாக இருக்கிறது. எத்தனையோ விஷயங்களில் துணிந்து விரும்பி தீர்மானங்களை எடுக்கும் மனிதன் கடவுளைப் பொறுத்தவரையில் அவரைப் புரிந்துகொள்ள முடியாதவனாகவும், அவரை வெறுக்கிறவனாகவும் இருந்து அவருக்கெதிரான தீர்மானங்களை மட்டுமே எடுக்கக் கூடிய சித்தங்கொண்டவனாக இருக்கிறான். இதைத் தான் ‘முழுமையான இயலாமை’ எனும் வார்த்தைப் பிரயோகம் சுட்டிக் காட்டுகிறது.
பெலேஜியஸ், மனித சித்தத்தின் இயலாமையை நம்ப மறுத்து மனிதனை ஆதாமின் பாவம் பாதிக்கவில்லை என்றும், அவனுடைய சித்தம் கடவுளை நாடிப் போகக்கூடிய வல்லமையோடு இருப்பதாகவும் விளக்கினார். வேதம் பெலேஜியஸின் போதனைகளை நிராகரிக்கிறது. ‘அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை’ என்கிறது வேதம் (யோவான் 1:10). ‘அவருக்கு சொந்தமானவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை’ என்கிறது யோவான் 1:11. இதற்குக் காரணம் உலகம் பாவத்தில் இருப்பதுதான். ‘. . . உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை’ (யோவான் 5:40). ‘உங்களில் தேவ அன்பு இல்லையென்று உங்களை அறிந்திருக்கிறேன். நான் பிதாவின் நாமத்தினால் வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை . . . (யோவான் 5:42-43). இவ்வாறெல்லாம் வேதம் சொல்லுவதற்குக் காரணமென்ன? மனிதன் பாவத்தினால் இருதயம் சீர்குலைந்து கடவுளை நாட முடியாத சித்தத்தைக் கொண்டிருப்பதுதான். பாவம் அந்தவகையில் முழு மனுக்குலத்தையும் சீர்குலைத்து கடவுளை விட்டு வெகு தூரத்தில் போகச் செய்திருக்கிறது. கடவுளின் உள்ளார்ந்த (Internal), திட்ப உறுதியான கிருபையின் (Effectual call) மூலம் மறுபிறப்பை (Regeneration) அடைந்து அதன் மூலம் புதுப்பிக்கப்பட்ட சித்தத்தால் மட்டுமே மனிதன் கடவுளை விசுவாசித்து இரட்சிப்பை அடைய முடியும்.