பிரசங்கத்தில் கிறிஸ்தவத் தமிழ்!

தமிழில் பிரசங்கிக்கிறவர்கள் அநேகர் இருக்கிறார்கள். அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. இறையியல் போதனைகளைத் தெளிவாகக் கொடுக்கிற தமிழ் பிரசங்கிகளின் தொகை மிகக் குறைவு என்பது நமக்குத் தெரியும். அந்தக் குறை நிவர்த்தியாக வேண்டும் என்பது என்னுடைய நீண்ட கால விருப்பம் என்பதை திருமறைத்தீபம் வாயிலாகப் பல தடவைகள் தெரிவித்திருக்கிறேன். இந்த ஆக்கத்தில் அதைப் பற்றி மறுபடியும் கருத்துத் தெரிவிக்க நான் விரும்பவில்லை. இதில் தமிழில் பேசிப் பிரசங்கிப்பதைப் பற்றி மட்டும் விளக்க விரும்புகிறேன். அதுவும் இலகு தமிழில் மக்கள் கேட்டுப் புரிந்துகொள்ளும் வகையில் பேசிப் பிரசங்கிப்பதைப் பற்றியே வலியுறுத்த விரும்புகிறேன்.

ஒரு சிறப்பு வைபவத்தில் கலந்துகொள்ள எனக்கு அழைப்புக் கிடைத்தது. அந்த வைபவத்தில் ஒரு செய்தி கொடுக்கப்பட்டது. பேசியவர் அரைமணி நேரம் செய்தி கொடுத்தார். கூட்டத்தில் ஒருவனாக இருந்து அந்த செய்தியை நானும் கேட்டேன். பொதுவாகவே இன்றைய கூட்டங்களில் தரமான கிறிஸ்தவ செய்திகளைக் கேட்க வழியில்லை, ஆனால், அன்று அவருடைய செய்தியில் வேதசத்தியங்கள் நல்ல முறையில் விளக்கப்பட்டன. கூட்டத்திற்கு வந்திருந்த கிறிஸ்தவர்களுக்கும் அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருந்த சத்தியங்களை நினைவுபடுத்திக்கொள்ள அந்தச் செய்தி நிச்சயம் துணை செய்திருக்கும். அன்று அநேக இந்துக்களும் அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தார்கள். ஆனால், கூட்டத்தில் ஒருவனாக இருந்த என்னை ஏதோ உறுத்தியது. என்னால் இருக்கையில் அமைதியாக இருக்க முடியாதளவுக்கு அந்த உறுத்துதல் இருந்தது. என்னவென்று யோசித்துப் பார்த்ததில் அது செய்தி சம்பந்தமானது என்பதை என்னால் உணர முடிந்தது. செய்தியில் எந்தவிதமான தவறுமே இல்லை. அது கிறிஸ்தவ செய்திதான். கிறிஸ்தவர்களுக்கு பயனுள்ளதுதான். ஆனால், என் உறுத்துதல் செய்தி கொடுக்கப்பட்ட மொழிநடை சம்பந்தமானது.

அன்று அந்தக் கூட்டம் ஒரு பொது மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு இருநூறுக்கு மேற்பட்டவர்கள் வந்திருந்தார்கள். அவர்களில் எண்பது வீதத்துக்கு மேல் சபை வாசலைக் கால் வைத்தும் பார்த்திராத இந்துக்கள். கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் அழைப்புக்கொடுத்ததால் அநேகர் வந்திருந்தார்கள். என்ன நோக்கத்தோடு வந்தார்களோ தெரியாது. இவர்கள் எல்லோருமே கிறிஸ்தவம் என்று ஒரு மதமிருக்கிறது என்பதை மட்டுமே தெரிந்துவைத்திருக்கிறவர்கள். அவர்கள் இதுவரை கிறிஸ்தவ சுவிசேஷத்தையோ, கிறிஸ்தவ செய்தியையோ கேட்டிருந்திருப்பார்கள் என்பது சந்தேகந்தான். அவர்களுக்கு சபையைப் பற்றியோ, வேதத்தைப் பற்றியோ, சுவிசேஷத்தைப் பற்றியோ, இரட்சிப்பைப் பற்றியோ, கிறிஸ்தவர்கள் அன்றாடம் யோசிக்க அவசியமில்லாமல் பயன்படுத்தி வருகின்ற எத்தனையோ கிறிஸ்தவ வார்த்தைப் பிரயோகங்களைப் பற்றியோ ஏன், ஜெபத்தைப் பற்றியோ கூட ஒன்றுமே தெரிந்திருக்காது. ஏதோ, கிறிஸ்தவ கூட்டம் நடக்கிறது, நம்மையும் கூட்டத்திற்கு அழைத்திருக்கிறார்கள், முடிகிற போது நிச்சயம் ஏதாவது சாப்பிட இருக்கும், சாப்பிட்ட கையோடேயே போய் விடலாம் என்ற எண்ணத்தோடு அவர்கள் வந்திருப்பார்கள். அவர்களில் ஒருசிலராவது, சரி கிறிஸ்தவ செய்தியையுந்தான் கேட்டுப் பார்ப்போமே என்ற எண்ணத்தில் வந்திருப்பார்கள். இந்துக்களான இவர்கள் அன்றாடம் பேசுகின்ற தமிழும் மாவட்டத்துத் தமிழாக, பேச்சுவழக்கு தமிழாகத்தான் இருக்கும். அவர்கள் அன்றாடம் காதால் கேட்கின்ற தமிழும், அவர்களைப் போன்றவர்கள் பேசுகிற தமிழும், டி.வியில் கேட்கக்கூடிய தமிழாகத்தான் இருக்கும். அவர்கள் வாசிக்கின்ற தமிழ் தினகரன், தினமணி, தினத்தந்தி போன்ற பத்திரிகைகளிலும் நக்கீரன், இந்தியா டுடே போன்ற வார, மாத இதழ்களில் வருகின்ற தமிழ்தான். இவர்களுக்கு கிறிஸ்தவர்களுடைய பேச்சும், பாஷையும் அந்நியர்களுடைய பாஷையாகத்தான் தென்படும். தமிழ் வேதாகமத்தின் தமிழும் இவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் தமிழைவிட மிகவும் வித்தியாசமானதொரு தமிழ். இவர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் அவர்கள் பேசுகின்ற சிந்திக்கப் பயன்படுத்துகின்ற மொழியைப் பொறுத்தவரையில் நீண்ட இடைவெளி இருக்கின்றது.

இந்தக் கூட்டம் அன்றைக்கு கேட்ட பிரசங்கத்தைப் பற்றி என்ன நினைத்திருக்கும் என்று எண்ணிப் பார்க்கிறேன். சாதாரணமாக அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் கூட்டம் நடந்துகொண்டிருந்தாலும் பக்கத்தில் இருப்பவரோடு இரண்டு வார்த்தை பேசுவதும், சந்தர்ப்பம் கிடைத்தால் கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போதே ஒரு எட்டு வெளியில் போய் புகையிலை போட்டுவிட்டோ, சிகரெட் பிடித்துவிட்டோ வருவதுதான். இங்கே ஒரு மணி நேரம் உட்கார வைத்து ஒருவரையும் பேச அனுமதிக்காமல் ஒரே மனிதர் அரை மணி நேரம் பேசியிருக்கிறார். அந்தப் பேச்சைப் பற்றி அவர்களுடைய மனதில் எத்தகைய எண்ணங்கள் ஓடியிருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன். அவர்கள் என்ன நினைத்திருப்பார்கள்? பிரசங்கம் ஆரம்பித்து ஐந்து நிமிடமானவுடனேயே பிரசங்க மொழி அவர்களுக்கு அந்நியமாகப்பட்டிருக்கும். கிறிஸ்தவ மயமான தமிழை அவர்கள் கேட்டுப் பழக்கப்பட்டிராததால் சொல்லப்படுகிற செய்தி கூட்டத்திலிருக்கிற கிறிஸ்தவர்களுக்குத்தான் என்ற தீர்மானத்துக்கு உடனடியாக வந்திருப்பார்கள். தங்களுடைய வேலை, மரியாதைக்காக அமைதியாக இருந்துவிட்டு போவதுதான் என்று நினைத்து, எப்போது செய்தி முடியும் என்றிருந்திருப்பார்கள். அதனால் அவர்களுடைய கவனமும் பிரசங்கத்தின்போது எங்கோ இருந்திருக்கும். பிரசங்கத்தின் ஆரம்பத்திலேயே பாரம்பரிய இந்துக்களான அவர்களை பிரசங்கியார் இழந்துவிட்டார். பிரசங்கிப்பவருக்கும் அவர்களுக்கும் இடையில் ஒரு பெரிய இடைவெளி உருவாகிவிட்டது. எத்தனை அருமையான செய்தி அந்தப் பிரசங்கத்தில் கொடுக்கப்பட்டிருந்தாலும் அது தங்களுக்கில்லை, கிறிஸ்தவர்களுக்குத்தான் என்று அவர்கள் முடிவெடுத்துவிட்டதால் அது அவர்களுக்குப் பயனில்லாமல் போய்விடுகிறது. சாதாரணமாக சபையைவிட்டு ஒதுங்கி நிற்கும், சபை வாசலையும் மிதித்தும் பார்த்திராத அந்த இருநூறுக்கு மேற்பட்ட இந்துக்களுக்கு கிறிஸ்தவர்களாகிய நாம் நல்லது செய்திருக்கக்கூடிய அருமையான சந்தர்ப்பம் (Golden opportunity) கைநழுவிப் போய்விட்டிருக்கிறது.

கிறிஸ்தவர்களுக்கு மட்டும் பிரசங்கிப்பதும், ஆராதனையில் ஈடுபடுவதும் மட்டும் சபையின் பணி அல்ல. சபை சமுதாயத்து மக்களுக்கு கிறிஸ்துவை அறிமுகப்படுத்தி, அவர்கள் கிறிஸ்துவை விசுவாசிக்கும்படி சுவிசேஷத்தை சொல்ல வேண்டிய பணிக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இன்று தமிழ் சபைகள் இந்தப் பணியை மறந்துவிட்டனவோ என்று நினைக்கத் தோன்றுகிறது. நிச்சயமாக தமிழ் சபைகளில் கிறிஸ்தவர்களுக்கான ஆராதனை நடக்கின்றது. அதிக ஜெபக்கூட்டங்கள் நடக்கின்றன. சுவிசேஷக் கைப்பிரதிகளைக்கூட விநியோகம் செய்கிறார்கள். இதெல்லாம் பாராட்ட வேண்டிய அம்சங்கள்தான். இவை பற்றியதல்ல என்னுடைய பிரச்சனை. நாம் வாழுகின்ற, நம்மைச் சுற்றியிருக்கின்ற தொடர்ந்து சிலை வணக்கத்தில் ஈடுபட்டு வரும், நம்மைவிட வித்தியாசமான சிந்தனைகளைக் கொண்டிருந்து, நாம் பேசுகின்ற கிறிஸ்தவ தமிழைவிட வித்தியாசமான தமிழைக் கையாண்டு வரும் நம்மினத்தைச் சார்ந்த மக்களுக்கும் நமக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி இருப்பதுதான் என்னைப் பெரிதும் உறுத்துகிறது. இந்த இடைவெளி நம்முடைய நம்பிக்கைகளில் இருக்கத்தான் செய்யும். நாம் விசுவாசிப்பது மெய்யான கர்த்தரை அல்லவா! ஆனால், இந்த இடைவெளி சாதாரணமாக நாம் சமுதாயத்து மக்களோடு பழகுகிற விதத்திலும், பேசுகிற முறையிலும், நம் மொழியே அவர்களுக்குப் புரியாதவிதத்திலும் இருப்பதுதான் என்னுடைய பிரச்சனை. இது நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சுவிசேஷப் பணியைச் செய்வதில் நாம் பெருங் குறைபாட்டோடு அந்த உணர்வே இல்லாமல் இருக்கிறோமோ என்று என்னைத் பரிதவிக்கச் செய்கிறது.

நாம் பயன்படுத்துகிற கிறிஸ்தவ பதங்களைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். கர்த்தர், தேவன், விசுவாசம், அவிசுவாசம், இரட்சிப்பு, பாவம், அபிஷேகம், சுவிசேஷம், வாக்குத்தத்தம், ஜெபம், பரிசுத்தம், பிரசன்னம், நித்திய ஜீவன், ஆக்கினைத் தீர்ப்பு, நியாயப் பிரமாணம், நியாயத் தீர்ப்பு, கிருபை, கிரியை, சடங்காச்சாரியம், ஈவு, பொல்லாங்கன், மனுஷகுமாரன், தேவ குமாரன், மறுபிறப்பு என்று இன்னும் இவை போன்ற எத்தனையோ வார்த்தைகளை சரளமாக, சிந்தித்துப் பார்க்க அவசியமில்லாமல் பேச்சிலும், பிரசங்கங்களிலும், ஜெபத்திலும் கொட்டித் தீர்த்துவிடுகிறோம். கல்லை வணங்கி, நெற்றியில் விபூதி துலங்க சாதாரணப் பேச்சுத் தமிழும், வேட்டி சட்டையுமாக நம்மைச் சுற்றி அன்றாடம் வலம் வந்துகொண்டிருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு இவை கொஞ்சமும் புரியுமா? இல்லாவிட்டால் சர்ட், பேன்ட்டோடு டூவீலரில் ஏறி ஆபிசுக்குப் போகும் வழியில் இருக்கின்ற பிள்ளையார் கோயிலைப் பார்த்து, டூவீலரில் இருந்தபடியே கன்னத்தில் போட்டுக் கொள்ளும் ஆங்கிலம் சிறிதும் தமிழ் சிறிதும் கலந்த தங்கிலீஷ் பேசும் கோடிக்கணக்கான சென்னைவாசிகளுக்கு இவை புரியுமா? கண்கூட சரியாகக் தெரியாத வயதான இந்து மூதாட்டியொருவர் என்னைப் பார்த்து, ‘ஐயா, ஓஞ் சாமிக்கிட்ட எனக்காக கொஞ்சம் வேண்டிக்கப்பா!’ என்று எதையோ நினைத்து தனக்கு ஆறுதல் வேண்டுமென்று கேட்கும்போது அந்த மூதாட்டியிடம் இந்த வார்த்தைகளை நான் எப்படிப் பயன்படுத்தி எதைப் புரியவைக்கப் போகிறேன். ‘சட்டுனு ஏறிக்க, எங்க போகனும்’ என்று மரியாதையில்லாமல் (நமக்கு அப்படித் தோன்றும்) பேசுகின்ற அன்றாடம் காய்ச்சிகளான பல்லாயிரக்கணக்கான ஆட்டோவாசிகளிடம் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்த முடியுமா? இதேபோல்தான் ஸ்ரீ லங்காவில், கொழும்பிலும் திருகோணமலையிலும் மட்டக்களப்பிலும் வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் இருக்கிற இந்துக்கள் வித்தியாசமான பேச்சையும், பழக்க வழக்கங்களையும் கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லி இயேசுவிடம் வரும்படி எப்படி நம்ப வைக்கப் போகிறோம்? நான் என்ன சொல்லிக்கொண்டு வருகிறேன் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

நம்மில் பலருக்கு இது பிரச்சனையாகவே தெரியவில்லை. ‘சுவிசேஷத்தையும் கிறிஸ்துவையும் மக்களை நம்ப வைப்பது பரிசுத்த ஆவியானவருடைய வேலை. அதனால், நாம் எதைப் பற்றியும் கவலைப்படாமல், மக்களுக்கு வார்த்தைகளின் அர்த்தம் தெரிகின்றதோ இல்லையோ அவற்றைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பது மட்டுந்தான் நம் வேலை’ என்று எந்தக் கவலையும் இல்லாமல் தாம் செய்வது சரிதான் என்ற நம்பிக்கையில் அநேகர் ஊழியம் செய்து வருகிறார்கள். அவர்களுக்கு இந்தப் பிரச்சனை பற்றிய உணர்வே இல்லை. இது எத்தனை பரிதாபம்! இந்த உலகத்தில் வாழ்ந்தபோது இயேசு என்ன செய்தார் தெரியுமா? சாதாரண மக்களுடைய பாஷையில் அவர்களுக்குப் புரிகிற விதமாகப் பேசி ஊழியம் செய்தார். மலைப் பிரசங்கத்தில் மத்தேயு 6:19-34 வரையுள்ள வசனங்களை வாசித்துப் பாருங்கள். தமிழ் வேதாகமத்தில் இந்த வசனங்கள் வடமொழி (சமஸ்கிருத) வாடையோடு இருக்கின்றன. கொஞ்சம் அவற்றில் இருக்கும் வடமொழி வார்த்தைகளை சாதாரணத் தமிழ் வார்த்தைகளாக்கி வாசித்துப் பாருங்கள். அப்போது நான் சொல்லுவது உங்களுக்குப் புரியும். இயேசு இந்தப் பகுதியில் கொடுத்திருக்கும் போதனையை அன்று புரிந்துகொள்ளாதவர்கள் இருந்திருக்க முடியாது. ஏன், தெரியுமா? அத்தனை எளிமையான, படிப்பறியாதவனுக்கும் புரிகின்ற உதாரணங்களோடு அந்தந்த நாளின் தேவைக்காக கவலைப்படுவதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்று மக்களின் பாஷையில் பேசியிருக்கிறார். அங்கே அவருக்கும் செய்தியைக் கேட்டவர்களுக்கும் இடையில் சொட்டு இடைவெளிகூட இருந்திருக்க வழியில்லை. பரிசுத்த ஆவியானவர் மட்டுமே எந்த செய்தியையும் ஆண்டவரை அறியாதவர்கள் விசுவாசிக்கும்படிச் செய்ய முடிந்தாலும், அந்தச் செய்தியைக் கொடுக்க வேண்டிய பெருங்கடமையைக் கொண்டிருக்கிற நாம் இயேசுவின் உதாரணத்தைப் பின்பற்றி எளிமையான இலகு தமிழில் நமக்கு முன்னால் அமர்ந்து நாம் கொடுக்கும் கிறிஸ்தவ விளக்கங்களையும், சுவிசேஷத்தையும் கேட்டுக் கொண்டிருக்கிற மக்கள் புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் பேச வேண்டியது அவசியம். நம்முடைய கடமையை நாம் கருத்தோடு சிந்தித்து செய்யும்போது பரிசுத்த ஆவியானவர் நிச்சயம் தான் செய்ய வேண்டிய பணியைச் செய்வார். நம்மை மீறிச் செயல்பட அவரால் முடிந்தபோதும், சாதாரணமாக அவர் நாம் கொடுக்கும் செய்தி மூலமாகவே எப்போதும் செயல்படுகிறார். சுவிசேஷத்தை ஆவியானவர் பிரசங்கிப்பதில்லை. அந்தப் பணி நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய பேச்சும், செய்தியும் மக்களுக்குப் போய்ச் சேராமல் இருப்பதற்கு நாமே அநேக தடவைகள் முக்கிய காரணமாக இருந்துவிடுகிறோம் என்ற உணர்வு நமக்கு ஏற்படாதவரையில் சுவிசேஷத்தின் தாக்கம் தமிழர்கள் மத்தியில் அதிகம் இருந்துவிட வழியில்லை.

ஒரு கிராமத்தில் சுவிசேஷத்தை சொல்ல அழைப்புக் கிடைத்தது. அந்தக் கிராமத்து மக்கள் மத்தியில் இதுவரை சுவிசேஷம் பரவலாகப் போய்ச் சேரவில்லை. ஒரேயொரு சபை மட்டுமே அங்கிருந்தது. கூட்டத்தை நடத்திய சபை பாரத்தோடு அதிகமாக உழைத்ததால் அநேகர் சுவிசேஷம் கேட்க வந்திருந்தார்கள். அதில் பேசுவது எனக்கு ஒரு தவிப்பாகவே இருந்தது. அந்தத் தவிப்பு பிரசங்கம் செய்ய வேண்டுமே என்பதால் ஏற்பட்டதல்ல. இந்த சாதாரண கிராம மக்களுக்கு அவர்களுக்குப் புரியும்படி எப்படி சுவிசேஷத்தை சொல்லுவது என்பதால் ஏற்பட்ட தவிப்பு. (என்னால் முடியும் என்ற அகங்காரம் இருப்பதைவிட இத்தகைய தவிப்பு இருப்பது மேலானது.) கூட்டம் நடப்பதற்கு முதல் நாள் பூராவும் நான் கொடுக்கப் போகும் பிரசங்கத்தைப் பற்றி சிந்தித்தேன். படுக்கையில் இருந்து முழுப் பிரசங்கத்தையும் மனதில் சொல்லிப் பார்த்துக் கொண்டேன். முக்கியமாக கர்த்தர், இரட்சிப்பு, பாவம், மனந்திரும்புதல், நித்திய ஜீவன் போன்ற வார்த்தைகளை அடிக்கடி கிளிபோல் சொல்லிப் பயன்படுத்தாமல் அவற்றை கிராமத்து மக்களுக்கு எப்படிப் புரிய வைப்பது என்பதை சிந்தித்துப் பார்த்தேன். கிறிஸ்தவத் தமிழ் வாடை எதுவும் வந்துவிடாதபடி கிராமத்து தமிழில் இவற்றை எப்படி விளக்கிச் சொல்லுவது என்பதை திரும்பத் திரும்ப வாய்க்குள்ளேயே சொல்லிப் பார்த்துக் கொண்டேன். முதல் ஐந்து நிமிடத்திலேயே அவர்களுடைய கவனத்தை நாம் சொல்லுகிற விஷயத்தில் பதிய வைக்கும் விதத்தில் சொல்லப் போகிற விஷயம் சம்பந்தமாக எந்த உதாரணத்தை கிராமத்து சூழ்நிலையில் இருந்து எடுத்துப் பயன்படுத்தலாம் என்று ஆராய்ந்து பார்த்தேன். கிராமத்து மக்கள் சகஜமாகப் பயன்படுத்துகிற வார்த்தைகளை சிந்தித்துப் பார்த்தேன். இத்தனையையும் சிந்தித்து ஆராய்ந்து முழுப் பிரசங்கத்தையும் இரண்டு முறை மனதுக்குள் சொல்லிப் பார்த்து அது நிச்சயம் கிராம மக்களுக்குப் புரியும் என்ற நம்பிக்கை ஏற்பட்ட பிறகே அதை அடுத்த நாள் பிரசங்கம் செய்தேன். முன்னூறு பேர் அன்று அந்த செய்தியைக் கேட்க கூடியிருந்தார்கள். இதுவரை சபை வாசலை அவர்களில் எவருமே மிதித்ததில்லை. எந்தப் போலி வாக்குறுதியும் கொடுத்ததால் அவர்கள் அன்று கூடியிருக்கவில்லை. அவர்களுக்கு அன்றைக்கு சுவிசேஷ செய்தி மட்டுமே கொடுக்கப்பட்டது. அத்தனை பேரும் அசையாமல், நடுவில் குறுக்கிடாமல், அமைதியாக இருந்து ஆண்டவரின் சுவிசேஷத்தை ஆனந்தத்தோடு கேட்டார்கள். பலருடைய தலையும் செய்திக்கேற்றவாறு அசைந்து ஆமோதிப்பதைப் பார்த்தேன். ஆவியானவர் நிச்சயம் அன்று நம் மத்தியில் இருந்தார். சொல்லப்போகிற செய்தியை எந்தவிதத்தில் அந்த மக்களுக்குக் புரியும்படி சொல்ல வேண்டும் என்பதில் நான் கவனத்தை செலுத்தியிருக்காவிட்டால் அந்த மக்கள் அன்றைக்கு அக்கறையோடு செய்தியைக் கேட்டிருக்க மாட்டார்கள். அந்தச் செய்தி அவர்களுக்கு அன்று அந்நியமாகப் படவில்லை. அது தங்களோடு சம்பந்தப்பட்டது என்பதை அவர்களால் இனங்கண்டுகொள்ள முடிந்தது. ஒன்று தெரியுமா? கிராமத்து மக்கள் வெளிப்படையாகப் பேசுகிறவர்கள். ஏதாவது பிடிக்கவில்லை என்றால் ஒளித்து மறைத்து அவர்கள் பேசமாட்டார்கள், பிடிக்கவில்லை என்று நேரடியாகவே சொல்லி விடுவார்கள். நகரத்து மரியாதையெல்லாம் அவர்களுடைய அகராதியில் இல்லை. அன்றைக்கு செய்தி கேட்டு சந்தோஷத்தோடு அந்த மக்கள் வீடு திரும்பினார்கள். அந்த செய்தி அவர்கள் பாஷையில் கொடுக்கப்பட்டதுதான் அதற்கு முக்கியமான காரணம். கர்த்தருக்கே எல்லா மகிமையும்.

இது சம்பந்தமாக கொலோசெயர் 4:4ல் பவுல் அருமையான ஒரு காரியத்தை சொல்லியிருக்கிறார், “கிறிஸ்துவினுடைய இரகசியத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற நான் அந்த இரகசியத்தைக் குறித்துப் பேசவேண்டிய பிரகாரமாய் பேசி, அதை வெளிப்படுத்துவதற்கு . . . எங்களுக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்” என்கிறார். இதில் “பேச வேண்டிய பிரகாரமாய்ப் பேசி அதை வெளிப்படுத்த” என்ற வார்த்தைகளை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மூல மொழியான கிரேக்கத்தில் இருப்பதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் அது பின்வரும் வகையில் இருக்கும். “that I may make it clear, which is the way I must speak”. இதை, “that I may make it clear, which is how I must speak” என்றும் மொழிபெயர்க்கலாம். இதை விளக்கமாகத் தமிழில் மொழிபெயர்த்தால் அது, “(சுவிசேஷத்தை) நான் தெளிவாக விளக்க வேண்டும், அதுவே நான் பேச வேண்டிய அவசியமான (கட்டாயமான) முறை” என்று அமையும். இந்த வசனத்தில் பவுல் எந்தக் காரியத்திற்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார் தெரிகிறதா? “தெளிவாக விளக்கும்” பணிக்கே அழுத்தம் கொடுத்திருக்கிறார். அது அந்த வசனத்தின் இறுதியில் வருகிற “அதுவே நான் பேச வேண்டிய முறை” என்பதன் மூலம் சுட்டிக்காட்டப்படுகிறது. அங்கே பவுல் I must என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி, தெளிவாக விளக்க வேண்டியது தனக்குக் கட்டாயமான, தவிர்க்க முடியாத கடமையாக இருப்பதை உணர்த்துகிறார். இதன் மூலம் சுவிசேஷத்தை விளக்கவேண்டியதன் அவசியத்தை மட்டுமல்லாமல் அதை விளக்கப் பயன்படுத்த வேண்டிய மொழிநடை, அதோடு தொடர்புடைய பேச்சுத் தொனி என்று பேச்சு சம்பந்தமான சகலத்துக்கும் பவுல் முக்கியத்துவம் கொடுத்திருப்பதை இந்த வசனம் விளக்குகிறது. நாம் பேசுகிற பேச்சு சம காலத்துக்குரியதாகவும், கேட்போருக்கு புரியும்படியாகவும், கேட்பதற்கு சோர்வு தராததாகவும், உற்சாகப்படுத்துவதாகவும் இல்லாவிட்டால் சுவிசேஷத்தில் எந்த இந்து, எந்த முஸ்லீம், எந்த ஆதிவாசி அக்கறை காட்டிக் கேட்கப் போகிறான். இதை எழுதியிருக்கும் பவுல் நிச்சயம் தான் பேசிய மொழிநடையில் அதிக அக்கறை காட்டியிருந்திருப்பார். அப்படி இருந்திருந்தால் மட்டுமே ஒரு மனிதனால் இப்படி எழுதி அந்த விஷயத்துக்காக ஜெபிக்குமாறு கேட்டிருக்க முடியும். பவுலுக்கிருந்த இந்த உணர்வும், பாரமும் உங்களுக்கு இருக்கிறதா?

இதுவரை நான் சொல்லிக் கொண்டு வந்ததை நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அடுத்த முறை பிரசங்கம் தயாரிக்கிறபோதும், வேதபாடம் நடத்தப் போகிறபோதும், புறமதத்தை சார்ந்தவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லப் போகும்போதும் உங்களுடைய பேச்சு நடையைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். நீங்கள் பயன்படுத்தப் போகும் சொற் பிரயோகங்களை சிந்தித்துப் பயன்படுத்துங்கள். கொச்சையாகவும், அசிங்கமாகவும் பேசுவதுதான் தவறு. தற்கால மக்களுடைய மொழியில் அவர்களுக்குப் புரிகின்ற வகையில் தெளிவாகப் பேசுவதே நம்முடைய கடமை. இதைச் செய்ய வேண்டுமானால் முதலில் நீங்கள் வாசிக்கின்ற வேதத்தின் தமிழைப் பரிசுத்தமான தமிழாகக் கருதிப் பயன்படுத்துவதை இன்றோடு நிறுத்திக்கொள்ளப் பாருங்கள். வடமொழி (பிராமண) வாடை கொண்ட, தற்காலத்தில் பயன்படுத்தப்படாத வார்த்தைகளையும், வார்த்தைப் பிரயோகங்களையும் கொண்ட கிறிஸ்தவத் தமிழாக இல்லாமல் மக்களுக்குப் புரிகின்ற மொழியில் இலகுவான தமிழில் பேசப் பாருங்கள். நான் இத்தனையையும் பிரசங்கம் செய்கிறவர்களுக்காக மட்டும் எழுதவில்லை. தனிப்பட்ட முறையில் வேற்று மதத்தாருக்கு சுவிசேஷத்தை சொல்லுகிறவர்களும் இதையே செய்ய வேண்டும்.

எத்தனை அருமையான சத்தியத்தை நாம் தயாரித்து வைத்திருந்தபோதும் அது மக்களைப் போய்ச்சேர வேண்டிய ஊடகமான நாம் பேசுகிற மொழிநடை அந்த சத்தியம் அடைய வேண்டிய இலக்கான ஆத்துமாக்களின் இருதயத்துக்குப் போய்ச்சேரத் தடையாக இருந்துவிடுவது எத்தனைப் பாவம் தெரியுமா? ‘போனவாரம் நம் கடையில் சோப்பு வாங்க வந்தபோது நல்லாப் பேசிக்கொண்டிருந்த மனிதர் இந்தக் கூட்டத்தில் மட்டும் ஏன் எனக்குப் புரியாத பாஷையில் பேசுகிறார்’ என்று பெட்டிக் கடைக்காரன் கேட்கின்ற மாதிரி நாம் நடந்துகொள்வது அவசியமா? நீங்கள் பேசும் மொழி உங்கள் ஊழியத்துக்கு தடையாக இருந்துவிடாதபடி பேச்சு நடையைத் திருத்திக் கொள்ளுங்கள். பாரதியும், பாரதிதாசனும், அண்ணாத்துரையும் கிறிஸ்தவர்கள் அல்ல. அவர்களுடைய செய்திகளும் ஆத்மீக விடுதலையை மக்களுக்குக் கொடுக்கவில்லை. இருந்தாலும், மக்களுடைய மொழியில் பேசி அவர்கள் இருதயத்தை அசைய வைக்கும் திறனை அவர்கள் கொண்டிருந்தார்கள். இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் இருந்தபோது அதைத்தான் செய்தார். அவருடைய செய்தி மட்டுமல்ல, அந்தச் செய்தியை அவர் விளக்கிப் போதித்த மொழிநடை மக்களுடைய இருதயத்தை அசைத்து, ‘இதுபோல் யாரும் பேசி நாம் இதுவரை கேட்டதில்லையே’ என்று அவர்களை சொல்ல வைத்தது. சுவிசேஷம் அதைக் கேட்க வேண்டிய மக்கள் மொழியில் அவர்களைப் போய்ச் சேரும் பணியில் அதிக கவனத்தை செலுத்துங்கள்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s