மிகவும் குறுகிய காலத்துக்குள் இந்த இதழை முடித்து அச்சுக்கு அனுப்ப வேண்டிய நிலை இருந்தது. அந்தளவுக்கு பல வேலைகளுக்கும் மத்தியில் இதழைத் தயார் செய்ய கர்த்தர் துணை செய்தார். இதழில் வந்திருக்கின்ற அனைத்து ஆக்கங்களையும் நானே எழுத வேண்டிய சூழ்நிலையும் கூட. இருந்தபோதும் திரும்பிப் பார்க்கின்றபோது கர்த்தரின் கரம் இதழைத் தயாரிக்க உழைத்த எல்லோரோடும் இருந்திருப்பதைக் காண்கிறேன்.
இந்த இதழில் தொடர்ந்து மனித சித்தத்தைப் பற்றிய இரண்டு ஆக்கங்கள் வந்திருக்கின்றன. இறையியல் கோணத்தில் இவை அமைந்திருப்பதால் சிந்தித்து வாசித்துப் புரிந்துகொள்வது அவசியம். நிச்சயம் இவை வேத ஞானத்தில் நீங்கள் வளரத் துணை செய்யும். பாவத்தினால் மனித சித்தம் எத்தகைய பாதிப்பை அடைந்திருக்கின்றது என்பதில் கிறிஸ்தவர்கள் தொடர்ந்தும் சரியான, நிலையான நம்பிக்கைகளைக் கொண்டிராமல் தர்க்கத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். வாதங்கள் அவசியந்தான். ஆனால், இந்த விஷயத்தில் ஒரு பக்கம் மட்டுந்தான் சரியானதாக இருக்க முடியும். வேதம் மனித சித்தத்தைப் பற்றி விளக்குகின்ற உண்மை சுவிசேஷத்தை சரியாக விளங்கிக்கொள்ளவும், சுவிசேஷப் பணியை சரியாகச் செய்யவும் அவசியம். இது பற்றிய ஆக்கங்கள் தொடர்ந்தும் இதழில் வரவிருக்கின்றன.
தமிழ் வேதத்திற்கு சரியான மொழிபெயர்ப்பு தேவை. அது பலகாலமாக என் நினைவிலிருந்தபோதும் இப்போதுதான் என் கருத்தை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இதை மிகவும் சிந்தித்துப் பார்த்து எழுதியிருக்கிறேன். மொழிபெயர்ப்பு மூல மொழியை முறையாகத் தழுவியதாகவும், மொழி நடை சமகாலத்தைப் பிரதிபலிப்பதாகவும் இருப்பது அவசியம். புதிதாக வந்திருக்கின்ற மொழிபெயர்ப்புகள் இந்த இரண்டையும் நிறைவேற்றத் தவறியிருக்கின்றன. இந்தக் குறை நீங்க கர்த்தர் வழிகாட்ட வேண்டும்.
தமிழில் பிரசங்கிப்பவர்கள் பிரசங்க மொழி நடையில் அக்கறை காட்டுவது அவசியம். மக்களுடைய இருதயத்தை சத்தியம் தொட வேண்டுமானால் அந்த சத்தியம் கொடுக்கப்படுகின்ற மொழிநடையில் கவனம் செலுத்தாமல் இருக்க முடியுமா? பிரசங்கத்தில் அக்கறை காட்டுவதுபோல் பிரசங்க நடையிலும் அக்கறைகாட்ட வேண்டும் என்ற ஆலோசனையை அடுத்த ஆக்கம் தருகிறது. அத்தோடு 1689 விசுவாச அறிக்கையைப் படித்துப் புரிந்துகொள்ளப் பயன்படுத்த வேண்டிய விதிமுறை பற்றியும் விளக்கியிருக்கிறேன். இதுவரை வந்திருக்கும் இதழ்களைப் போலவே இதையும் கர்த்தர் தன் திருச்சபையின் நலனுக்காகப் பயன்படுத்திக் கொண்டால் அதுவே எங்கள் பணிக்குக் கிடைக்கும் ஆசீர்வாதம்.
– ஆசிரியர்