விசுவாச அறிக்கையின் சிறப்பையும், அதைப்படிக்க வேண்டிய அவசியத்தையும் பற்றிப் பலதடவைகள் நான் எழுதியிருக்கிறேன். இந்த ஆக்கத்தில் அதை எப்படிப் படிக்க வேண்டும் என்பதற்கான விளக்கங்களைத் தர விரும்புகிறேன். அதற்கு முன்பாக விசுவாச அறிக்கை பற்றிய ஒருசில உண்மைகளை விளக்க வேண்டியது அவசியமாகிறது.
1689 விசுவாச அறிக்கையின் முக்கியத்துவம்
1689 விசுவாச அறிக்கை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு பத்து வருடங்களாகிறது. விசுவாச அறிக்கையொன்றை அடிப்படையாகக் கொண்டு, தாம் விசுவாசிக்கும் சத்தியங்களை வெளிப்படையாக வெட்கமோ, பயமோ, தயக்கமோ இல்லாமல் அறிவித்து, திருச்சபை நடத்த விரும்புகிறவர்கள் இதனைத் தங்களுடைய சபையின் விசுவாச அறிக்கையாக ஏற்று, அறிவித்து ஊழியத்தில் ஈடுபடுவார்கள். இப்படிச் செய்வது இன்று நேற்று என்றில்லாமல் ஆதி சபைக்காலத்தில் இருந்தே நடந்து வந்திருக்கின்றது. அப்போஸ்தலர்களின் காலத்துக்குப் பிறகு முதல் மூன்று நூற்றாண்டுகளுக்குள்ளேயே சபையைப் போலிப்போதனைகள் கடுமையாகத் தாக்க ஆரம்பித்ததால், சபைகள் தாம் விசுவாசிப்பவற்றைத் தெளிவாக அறிக்கைகள் மூலம் விளக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மூன்றாம் நூற்றாண்டில் ஏரியன் என்பவன் கிறிஸ்துவின் தெய்வீக, மானுடத் தன்மைகள் பற்றி குழப்பமான போதனைகளைத் தந்து ஆத்துமாக்களைத் திசை திருப்ப ஆரம்பித்தான். சபையைக் காப்பாற்றுவதற்காக அன்று சபையில் உதவிக்காரராக இருந்த அத்தனேஸியஸ் ஏரியனுடைய போலிப்போதனையை தோலுரித்துக் காட்டியது மட்டுமல்லாமல் கிறிஸ்துவின் தெய்வீக, மானுடத் தன்மைகள் பற்றி வேதம் போதிக்கும் உண்மைகள் யாவை என்பதை ஓர் அறிக்கை மூலமாக சுருக்கமாக வெளியிட்டு சபையைக் காப்பாற்றினார். அதற்குப் பிறகு காலத்துக்குக் காலம் இத்தகைய அறிக்கைகளை சபைகள் வெளியிட்டு வந்திருக்கின்றன. இவையெல்லாம் பிசாசின் தாக்குதலில் இருந்து தப்பி, சபை இந்த உலகத்தில் வெற்றி நடைபோட்டு வர அவசியமாக இருந்தன. பிசாசின் இடைவிடாத தாக்குதல்களும், கால மாறுதல்களும் இத்தகைய விசுவாச அறிக்கைகளை அவசியமானதாக்கியிருக்கின்றன. ரோமன் கத்தோலிக்க மதத்தின் அடக்குமுறையும், சத்தியத்திற்கெதிரான விரோதப் போக்கும் உலகறிந்தவை. அம்மதத்தின் அதிகாரம் பதினாறாம் நூற்றாண்டில் முறியடிக்கப்பட்ட பிறகு சபை மறுபடியும் அத்தகைய ஆபத்துக்குள் போய்விடாதபடி இருப்பதற்காக விசுவாச அறிக்கைகளும், வினாவிடைப் போதனைகளும் சபைப் பாதுகாப்புக்காகவும், ஆத்துமாக்களின் வேத அறிவு வளர்ச்சிக்காகவும் சீர்திருத்தவாதிகளால் வெளியிடப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் 1689 விசுவாச அறிக்கை. இன்று ரோமன் கத்தோலிக்க மதம் மட்டுமல்லாமல் புதிது புதிதாக எழும்பியிருக்கும் பல்வேறு குழப்பப் போதனைகளையும் சபை சந்திக்க வேண்டியிருக்கிறது. இவற்றின் வசியத்துக்கு சபை ஆளாகி விடாதபடி இருக்க விசுவாச அறிக்கையின் அடிப்படையில் அமைந்த சபை அமைப்பு அவசியமாகிறது. சபை மக்களுக்கு தாம் எதை விசுவாசிக்கிறோம் என்பது தெரியாமலிருப்பதைப் போன்ற ஆபத்து வேறில்லை. அத்தோடு, சபையை வழிநடத்துகிறவர்களும் எதேச்சாதிகாரப் போக்கில் போய்விடாமல் இருக்கவும், தங்களைக் குழப்பப் போதனைகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ளவும் விசுவாச அறிக்கை உதவும். வேதத்திற்கும், தாம் ஏற்றுக்கொண்டிருக்கும் விசுவாச அறிக்கைக்கும் கட்டுப்பட்டு சத்தியத்தின் வழியில் சபை நடத்த இது உதவும்.
இந்த விசுவாச அறிக்கை எப்படி உருவானது? இதில் அப்படி என்ன விளக்கம் தரப்பட்டிருக்கிறது? என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். இது ஒரு தனி மனிதன் தன் வீட்டறையில் இருந்து சாதாரணமாக எழுதி வெளியிட்ட அறிக்கை அல்ல. பதினேழாம் நூற்றாண்டில் சீர்திருத்த பாப்திஸ்து போதகர்கள் கூடி தங்கள் காலத்து அரசியல், மத சூழ்நிலைகளை ஆராய்ந்து திருச்சபையின் பாதுகாப்புக்காக ஒன்றிணைந்து மாதங்கள் பலவற்றை செலவிட்டு வரைந்து தந்துள்ள அறிக்கை இது. வேத சத்தியங்கள் அனைத்தையும் ஒழுங்கு முறையோடு தொகுத்து, அவற்றை வேத ஆதாரங்களோடு சுருக்கமாகவும் அதேநேரம் அனைத்துப் போதனைகளையும் உள்ளடக்கியதாகவும் விளக்கி எழுதுவது என்பது சாதாரணமான காரியமல்ல. கல்விமான்களான, ஆவிக்குரிய போதகர்கள் ஒன்றுகூடி உழைத்துத் தொகுத்து சரிபார்த்து நமக்குத் தந்துள்ள அருமையான இறை போதனை அளிக்கும் சாதனம் 1689 விசுவாச அறிக்கை. இதைத் தயாரித்தபோது அதே காலப்பகுதியைச் சேர்ந்த இன்னும் இரண்டு விசுவாச அறிக்கைகளையும் இதை எழுதப் பயன்படுத்திக் கொண்டார்கள் பாப்திஸ்து போதகர்கள். வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கை, சவோய் விசுவாச அறிக்கை இரண்டையும் இம்முறையில் அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். இதன் மூலம் சீர்திருத்தவாதப் போதனைகளில் ஒருமைப்பாட்டை மூன்று விசுவாச அறிக்கைகளிலும் காணலாம். 1689 விசுவாச அறிக்கையின் தனிச்சிறப்பு அதன் திருச்சபைக் கோட்பாடு சம்பந்தமானது. அதுபற்றி விளக்கும் அதிகாரம் நீளமானது. திருச்சபை பற்றிய தெளிவான பாப்திஸ்து விசுவாசத்தின் அடிப்படையில் இந்த அதிகாரம் எழுதப்பட்டிருக்கிறது. கர்த்தரின் வார்த்தையின்படி கிறிஸ்துவுக்குக் கீழ் மூப்பர்களால் ஆளப்படும் சபையாக உள்ளூர் சபையை இது இனங்காட்டுகிறது. இது இதன் பல தனிச் சிறப்புக்களில் ஒன்று.
விசுவாச அறிக்கையைப் படிக்க வேண்டிய முறை
இந்த விசுவாச அறிக்கையின் போதனைகளைத் தெளிவாக விளங்கிக் கொள்ள பின்வரும் விஷயங்கள் உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்:
1. விசுவாச அறிக்கையின் அதிகாரத் தொகுப்பு பற்றிய விளக்கம் அவசியம்.
ஆரம்பத்திலேயே நாம் படிக்கப்போவது வேதம் போதிக்கும் சத்தியங்களைத் தொகுத்துத் தரும் இறையியல் அறிக்கை என்ற அறிவும் உணர்வும் நமக்குத் தேவை. இதை நான் சொல்லுவதற்குக் காரணம் இருக்கிறது. விசுவாச அறிக்கையை நமக்குத் தந்திருப்பவர்கள் அவசியமான அடிப்படை வேத சத்தியங்களை முறையாகத் தொகுத்து அவற்றை சுருக்கமாகவும் அதேநேரம் விளக்கமாகவும் வேத ஆதாரங்களோடு தந்திருக்கிறார்கள். இந்த அறிக்கையை முறைப்படுத்தப்பட்ட இறையியல் அறிக்கை (Systematic theological statement) என்று கூறலாம். இந்த அறிக்கையில் காணப்படும் ஒவ்வொரு அதிகாரமும் அவசியமான காரணங்களின் அடிப்படையில் ஒன்றுக்குப் பின் ஒன்றாக தொகுத்துத் தரப்பட்டிருக்கின்றது. அந்தக் காரணங்கள் நமக்குத் தெரிந்திருப்பது இந்த அறிக்கையைத் தெளிவாக விளங்கிக் கொள்ள உதவும்.
இந்த அறிக்கை முதலில் வேதம் என்றால் என்ன என்பதை விளக்குவதோடு ஆரம்பிக்கிறது. அது முதலில் வருவதைக் குறித்து நாம் ஆச்சரியமடைய வேண்டியதில்லை. வேதம் மட்டுமே நமக்கு கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ள கடவுளால் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரே வெளிப்பாடு. அந்த அதிகாரத்துக்குப் பிறகே கடவுளைப் பற்றியதும் அவருடைய செயல்களைப் பற்றியதுமான போதனைகளைத் தரும் அதிகாரங்கள் வருகின்றன. அவற்றை 2ம், 3ம் அதிகாரங்களில் பார்க்கிறோம். அதற்குப் பிறகு 4ம் அதிகாரம் கடவுளின் செயலான அவருடைய படைப்பை விளக்குகிறது. 5ம் அதிகாரம் தான் படைத்த அனைத்தையும் கடவுள் எப்படிப் பராமரிக்கிறார் என்பதை விளக்குகிறது. 6ம் அதிகாரம் மனிதனின் வீழ்ச்சியைப் பற்றியும், பாவத்தைப் பற்றியும் விளக்குகிறது. இவற்றிற்குப் பிறகு வருகின்ற 7ம் அதிகாரம் முக்கியமானது. அது கடவுள் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் உடன்படிக்கைப் பற்றியது. அந்த உடன்படிக்கையின் அடிப்படையிலேயே கடவுள் தான் தீர்மானித்து ஏற்படுத்தியிருக்கும் தன்னுடைய மக்களுடைய மீட்பை நிறைவேற்றுகிறவராக இருக்கிறார். அந்த உடன்படிக்கையின் அடிப்படையிலேயே மீட்கப்பட்ட மக்களின் ஆண்டவராக அவர்களை அவர் ஆளப்போகிறார். அவருடைய மக்களும் அந்த உடன்படிக்கையின் அடிப்படையிலேயே உடன்படிக்கையின் மக்களாக அவருக்குக் கீழ்ப்படிந்து வாழப்போகிறார்கள். இந்தவிதத்தில் பார்க்கிறபோது கடவுளின் உடன்படிக்கைப் பற்றிய 7ம் அதிகாரம் மிக முக்கியமானதொரு அதிகாரமாக இருப்பதோடு முறையாக விசுவாச அறிக்கையில் இந்த இடத்தில் அமைந்திருக்கிறது.
அடுத்தாக வருகின்ற 8ம் அதிகாரத்தில் கடவுள் ஏற்படுத்திய உடன்படிக்கையின் மீட்பராகிய இயேசு கிறிஸ்து அறிமுகப்படுத்தப்படுகிறார். 7ம் அதிகாரம் விளக்குகின்ற உடன்படிக்கைப் பற்றிய போதனையின்படி திரித்துவ அங்கத்தவர்களாகிய பிதாவும், குமாரரும் நித்தியத்தில் பிதாவால் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கின்ற மக்களை மீட்கும்படியாக ஓர் உடன்படிக்கையை தங்களுக்கிடையில் ஏற்படுத்தி, அந்த உடன்படிக்கையை நிறைவேற்ற சகல தகுதிகளும் கொண்ட மீட்பராக இயேசு கிறிஸ்துவை இந்த உலகத்துக்கு அனுப்பி வைக்கிற தீர்மானத்தை எடுத்தனர். பிதாவின் கட்டளைக்கு இணங்க குமாரரான கிறிஸ்து மீட்புப் பணியை நிறைவேற்ற மனித ரூபமெடுத்தார். 8ம் அதிகாரம் உடன்படிக்கையின் நாயகரான இயேசு கிறிஸ்துவின் மீட்பருக்குரிய தகுதிகளை விவரித்துக் கூறி, அந்த மீட்புக்காக அவரெடுக்க வேண்டியிருந்த தெய்வீக, மானுடத் தன்மைகள் இணைந்த மானிடப் பிறப்பை விளக்கி, அந்த மீட்புப் பணியில் அவர் நிறைவேற்ற வேண்டியிருந்த மூன்று பதவிகளையும் சுட்டிக் காட்டி, மீட்புக்காக அவர் நிறைவேற்ற வேண்டியிருந்த மீட்பின் கிரியைகளையும் விளக்கிக் கூறுகிறது. இந்த அதிகாரம் கிறிஸ்துவின் ஆள்தத்துவம் பற்றியும், அவருடைய கிரியைகளைப் பற்றியும் விபரிக்கும் அருமையானதொரு நீண்ட அதிகாரம்.
இதனை அடுத்து வருகின்ற 9ம் அதிகாரம் இந்த விசுவாச அறிக்கையின் இன்னுமொரு முக்கியமான அதிகாரம். அது முறையாக இந்த இடத்தில் வருகின்றது. மீட்பராகிய கிறிஸ்துவையும், மீட்புக்காக அவர் நிறைவேற்றிய மீட்பின் கிரியைகளையும் 8ம் அதிகாரத்தில் விளக்கிய விசுவாச அறிக்கை, தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் மட்டுமே அனுபவிக்கின்ற அந்த மீட்பின் பலன்களை 10ம் அதிகாரத்தில் இருந்து 18ம் அதிகாரங்கள் வரையுள்ள பகுதிகளில் விளக்குவதற்கு முன்பாக முக்கியமானதொரு இறையியல் விளக்கத்தை 9ம் அதிகாரத்தில் அளிக்கிறது. அது மனிதனுடைய சுயாதீன சித்தம் பற்றிய போதனையாகும். இந்தப் போதனையை நாம் தெளிவாக விளங்கிக் கொண்டால் மட்டுமே 10ம் அதிகாரத்தில் இருந்து கொடுக்கப்படுகின்ற இரட்சிப்பின் பலன்கள் பற்றிய போதனைகளைப் புரிந்துகொள்ள முடியும். அதனால்தான், விசுவாச அறிக்கையில் 9ம் அதிகாரம் மனித சித்தம் பற்றிய முக்கியமான போதனையை அளிக்கின்றது.
அதை அடுத்து வருகின்ற, 10ல் இருந்து 18 வரையுள்ள அதிகாரங்களில் இரட்சிப்பின் பலன்களை விசுவாச அறிக்கை விளக்குகின்றது. கிறிஸ்துவின் சுவிசேஷத்தையும், அதன் பலன்களின் மேன்மையையும் விளங்கிக்கொள்ள உதவும் போதனைகளே இரட்சிப்பின் பலன்கள். அந்தப் பலன்களை இறையியல் அறிஞர்கள் படிமுறையாக விளக்கியிருக்கிறார்கள். அவற்றை ‘இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கு’ என்று அழைப்பார்கள். இந்த ஒழுங்குக்கான வேத ஆதாரத்தை நாம் ரோமர் 8:30ல் காண்கிறோம். இந்தப் பலன்களின் படிமுறை அழைப்பு, நீதிமானாக்குதல், மகிமைப்படுத்தல் என்று வரிசைக்கிரமமாக தரப்பட்டிருக்கிறது. இந்தப்படிமுறை ஒழுங்கில் காணப்படும் அனைத்துக் கிருபைகளையும் ரோமர் 8:30 விளக்காவிட்டாலும் அவற்றிற்கான ஆதாரத்தைத் தருகின்றது. அந்த ஒழுங்கிலுள்ள கிருபைகளை விசுவாச அறிக்கை இரண்டு தலைப்புகளில் வரிசைப்படுத்தித் தருகின்றது.
கடவுள் மனிதனுக்கு அளிக்கும் கிருபைகள் – திட்ப உறுதியான அழைப்பு, நீதிமானாக்குதல், மகவேட்பு, பரிசுத்தமாக்குதல்.
மனிதன் பங்கேற்கும் கிருபைகள் – இரட்சிக்கும் விசுவாசம், மனந்திரும்புதலும், இரட்சிப்பும், நற்கிரியைககள், பரிசுத்தவான்களின் விடாமுயற்சி, இரட்சிப்பின் நிச்சயம்.
இவையே அந்த இரண்டு பிரிவுகளாகும். இறையியல் வல்லுனர்கள் இவற்றை வெவ்வேறுவிதமாக வரிசைப்படுத்தியிருப்பார்கள். உதாரணமாக அழைப்பில் ஆரம்பித்து மறுபிறப்பு, மனந்திரும்புதல், விசுவாசம், நீதிமானாக்குதல், மகவேட்பு, பரிசுத்தமாக்குதல் . . . என்று அவர்களுடைய பட்டியல் அமைந்திருக்கும். இருந்தபோதும் விசுவாச அறிக்கையின் வரிசைப்படுத்தலில் தவறில்லை. அதன் வித்தியாசமான வரிசைப்படுத்தலுக்கான காரணத்தைத் தெரிந்துகொண்டால் போதும்.
1689 விசுவாச அறிக்கை ‘திட்ப உறுதியான அழைப்பு’ என்ற தலைப்பில் மனிதனுடைய இரட்சிப்பிற்காக கடவுள் செய்கின்ற கிருபையின் ஆரம்பக் கிரியைகளையும் உள்ளடக்கி விளக்குகின்றது. இதில் ‘அழைப்பு’, ‘மறுபிறப்பு’, மனந்திரும்புதல் மற்றும் விசுவாசத்தையும் கூட உள்ளடக்கி பதினேழாம் நூற்றாண்டு இறையியலறிஞர்கள் விளக்கியிருக்கிறார்கள். இதன்காரணமாகத்தான் ‘மறுபிறப்பு’ என்ற போதனை தனியாக ஒரு அதிகாரத்தில் தரப்படவில்லை. ஜோன் மரே உட்பட தற்கால இறையியல் அறிஞர்கள் தெளிவான இறையியல் விளக்கமளிக்கும் பொருட்டாக ‘திட்ப உறுதியான அழைப்பை’, ‘மறுபிறப்பில்’ இருந்து பிரித்து விளக்குகிறார்கள். இரண்டும் பிரிக்கமுடியாதபடி இணைந்து காணப்பட்டபோதும் வேதம் மறுபிறப்பைப் பற்றித் தனியாகவும் விளக்கியிருப்பதைப் பல இடங்களில் காண்கிறோம்(உதாரணம்: யோவான் 3). ஆகவே, தற்கால இறையியல் அறிஞர்கள் இவற்றைப் பிரித்துக் காட்டியிருப்பதில் எந்தத் தவறுமில்லை. உண்மையில் இப்படிப் பிரித்து விளக்கியிருப்பது நமக்கு இந்தப் போதனைகள் பற்றிய அதிக விளக்கத்தைப் பெற்றுக்கொள்ள உதவுகின்றன.
இவற்றிற்குப் பின் வருகின்ற அதிகாரங்கள் (19-32) கடவுளின் நியாயப்பிரமாணத்தில் ஆரம்பித்து, இறுதி நியாயத்தீர்ப்பு வரையிலுள்ள போதனைகளை அளிக்கின்றன. இவற்றிற்குள் சுவிசேஷத்தைப் பற்றியும், தனி மனித சுதந்திரத்தைப் பற்றியும், ஆராதனை மற்றும் ஆராதனையின் நாள் பற்றியும், திருச்சபை சம்பந்தமான முக்கியமான போதனைகளையும், இறுதிக் காலம் பற்றிய போதனைகளையும் காண்கிறோம். இந்தவிதமான அவசியமான ஓர் ஒழுங்குமுறைப்படி விசுவாச அறிக்கை நாம் விசுவாசிக்க வேண்டிய அடிப்படை வேதபோதனைகளை முறைப்படுத்தி நமக்கு வழங்கியிருக்கின்றது.
இந்த முறையில் விசுவாச அறிக்கையைப் படிக்க வேண்டும் என்று நான் சொல்லுவதைக் குறித்து நீங்கள் ஆச்சரியப்படத் தேவையில்லை. ஏனென்றால், வேதத்தையும் இந்த முறையில்தான் படிக்க வேண்டியிருக்கிறது. உதாரணத்திற்கு முதல் நான்கு சுவிசேஷ நூல்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். அந்த நூல்கள் ஒரு காரணத்தோடுதானே அடுத்தடுத்து வருகின்றன. அத்தோடு அவை நான்குமே ஒரே விஷயத்தை, அதாவது இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையைப் பற்றி விளக்குகின்றன. அப்படி விளக்க வேண்டிய அவசியமென்ன? அதற்குக் காரணங்கள் இல்லாமலில்லை. இதெல்லாம் தெரியாமல் அந்த நான்கு நூல்களையும் அவற்றின் போதனைகளையும் நம்மால் விளங்கிக்கொள்ள முடியுமா என்ன? அந்த நூல்கள் ஏன் ஒரு ஒழுங்கோடு, எந்தக் காரணங்களுக்காக ஒரே விஷயத்தைச் சொல்லுகின்றன? எதற்காக நான்குவிதமாகச் சொல்லுகின்றன என்ற கேள்விகளையெல்லாம் கேட்டுப் பார்த்து விஷயங்களை அறிந்துகொள்ளுகிறபோதே அந்த சுவிசேஷ நூல்களின் போதனைகளின் பொருளை அறிந்து நாம் பயனடைய முடிகின்றது. அந்தவிதத்தில்தான் விசுவாச அறிக்கையின் ஒவ்வொரு அதிகாரத்தையும் அவை அமைந்திருக்கும் ஒழுங்கின்படி அவற்றின் பின்னணியை அறிந்து நாம் படிப்பது அவசியம்.
2. கிறிஸ்தவ வரலாற்று அறிவு விசுவாச அறிக்கையின் முழுப்பலன்களையும் பெற்றுக்கொள்ள உதவும்.
1689 விசுவாச அறிக்கை பதினேழாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. அந்தக் காலப்பகுதியில் கிறிஸ்தவ சபைகள் சந்தித்துள்ள அரசியல் மற்றும் திருச்சபைப் பிரச்சனைகளே விசுவாச அறிக்கை எழுதப்படுவதற்கு காரணமாக இருந்திருக்கின்றன. ஒவ்வொரு அதிகாரமும் வேத சத்தியங்களை விளக்கினாலும் கிறிஸ்தவ வரலாற்றின் தாக்கத்தை அவற்றில் கவனிக்காமல் இருக்க முடியாது. ஓரளவுக்கு கிறிஸ்தவ வரலாற்று அறிவு இருப்பது விசுவாச அறிக்கையின் முழுப்பலனையும் பெற்றுக்கொள்ள உதவும். விசுவாச அறிக்கை வரலாற்றோடு பின்னிப் பிணைந்ததாக அதன் அடிப்படையில் எழுதப்பட்டதாக இருக்கிறது. உதாரணத்திற்கு இதை எழுதியவர்கள் எல்லோர் மனதிலும் ரோமன் கத்தோலிக்க மதத்தைப் பற்றிய நினைவுகள் இல்லாமல் இருக்கவில்லை. ஒரு நூற்றாண்டுக்கு முன்பாகத்தான் (16ம் நூற்றாண்டு) அந்த மதம் கிறிஸ்தவர்களை இருந்த இடம் தெரியாமல் செய்து, சின்னாப் பின்னமாக்கி வைத்திருந்த நிலை மாறி திருச்சபை சீர்திருத்தம் உருவானது. அந்த மதத்தின் அடக்கு முறைக்கு மறுபடியும் இடங்கொடுத்துவிடக்கூடாது என்ற எண்ணம் விசுவாச அறிக்கையை எழுதியவர்கள் மனதில் நிச்சயம் இருந்திருக்கிறது. அத்தோடு பதினேழாம் நூற்றாண்டில் இங்கிலாந்தின் ஆங்கிலேயத் திருச்சபையில் ரோமன் கத்தோலித்த மத வாடை அடிப்பது போல் சடங்குமுறையில் ஆராதனை நடத்துவதும், திருச்சபையில் வேதத்திற்கு மதிப்புக்கொடுக்காமல் மனித சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் செயல்களும் அதிகரிக்க ஆரம்பித்தன. இதிலிருந்து சபையைப் பாதுகாக்கவும் தெளிவான ஒரு விசுவாச அறிக்கை தேவைப்பட்டது. வேதத்தைப் பற்றி தெளிவாக விளக்கும் முதலாவது அதிகாரமும், திருச்சபை வழிபாட்டையும், ஓய்வு நாளைப் பற்றியும் விளக்கும் அதிகாரமும் இவற்றை மனதில் வைத்தே எழுதப்பட்டன. கத்தோலிக்க மதத்தின் போலி ஆராதனை முறைக்கு மறுபடியும் திரும்பிவிடக்கூடாது என்பதை மனதில் கொண்டே ஆராதனை பற்றிய ‘வரையறுக்கப்பட்ட ஆராதனைத் தத்துவங்கள்’ 22ம் அதிகாரத்தில் விளக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் காலப்பகுதியில் இங்கிலாந்தில் ஆங்கிலத் திருச்சபையில் நிகழந்த நிகழ்ச்சிகளே இந்தப் போதனைக்கு உருக்கொடுத்தன. கத்தோலிக்க மதப் போப்பை அந்தக் காலத்தில் பெரிய எதிரியாகக் கணித்திருந்தார்கள். அதனால்தான் விசுவாச அறிக்கை போப்பை அந்திக்கிறிஸ்துவாக அடையாளங் காட்டுகிறது (26:4). திருவிருந்தை யாருக்கும் மறுக்கக்கூடாது என்றும், திராட்சை இரசக்கோப்பையை உயர்த்தி மரியாதை செய்யக்கூடாதென்றும் திருவிருந்து பற்றிய அதிகாரத்தில் விளக்கியிருப்பதற்குக் காரணம் ரோமன் கத்தோலிக்க மதம் வேதத்திற்கு முரணாக அந்தக் காரியங்களைச் செய்ததாலேயே. கிறிஸ்தவனின் சுதந்திரத்தைப் பற்றிய ஓர் அதிகாரம் இதில் இருக்கிறது. கடவுளைத் தவிர வேறு எவருக்கும், போப் போன்ற மனிதர்களுக்கும் கூட கட்டுப்படக்கூடாது என்பதை சுட்டிக்காட்டும் வகையில் கிறிஸ்தவனின் மனச்சாட்சி கர்த்தருக்கு மட்டுமே கட்டுப்பட்டது என்று விசுவாச அறிக்கை போதிப்பதற்கும் அன்றைய அரசியல், சபை நிகழ்வுகள் தான் காரணம். இதெல்லாம் விசுவாச அறிக்கையின் போதனைகளை நல்ல முறையில் விளங்கிக்கொள்ள எந்தளவுக்கு கிறிஸ்தவ வரலாற்று அறிவு அவசியம் என்பதை உணர வைக்கின்றது.
இவை மட்டுமல்லாமல் இன்னொரு பெரிய வரலாற்று ஆசீர்வாதத்தையும் நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும். அதாவது, பதினேழாம் நூற்றாண்டே ‘பியூரிட்டன்களின்’ காலமாக இருந்தது. அதாவது, இந்தப் பெயரால் அழைக்கப்பட்ட சீர்திருத்தப் போதகர்களும், கிறிஸ்தவர்களுமே இந்தக் காலப்பகுதியில் மார்டின் லூத்தரும், கல்வினும் ஆரம்பித்து வைத்த சபை சீர்திருத்தத்தைத் தங்களுடைய காலத்தில் தொடர்ந்தனர். இந்தக் காலப்பகுதியில் கிறிஸ்தவர்கள் அரசாலும், அன்றைய அரச அங்கீகாரம் பெற்றிருந்த சபையாலும் பெருந்துன்புறுத்தலுக்கு ஆளாகியிருந்தாலும் கிறிஸ்தவம் அநேக விதங்களில் பெருஞ்சிறப்புடையதாக இந்தக் காலத்தில் காணப்பட்டது. இந்தக் காலத்திலேயே ஜோன் ஓவன், ஜோன் பனியன், வில்லியம் பேர்கின்ஸ், தொமஸ் குட்வின், ரிச்சட் சிப்ஸ், ஜோன் பிளேவல், தொமஸ் வொட்சன், ஜொனத்தன் எட்வர்ட்ஸ் போன்ற பெருஞ்சிறப்புமிக்க கிறிஸ்தவ தலைவர்கள் வாழ்ந்திருந்தனர். இவர்களுடைய ஆசீர்வாதமுள்ள கிறிஸ்தவ இலக்கியங்கள் இன்றைக்கும் ஆங்கிலத்தில் கிறிஸ்தவர்கள் பயன்படுத்தக்கூடிய விதத்தில் காணப்படுகின்றன. இந்தப் பியூரிட்டன்களுடைய சிந்தனையின், அறிவின், வேத ஞானத்தின் தாக்கத்தை நாம் விசுவாச அறிக்கையில் கவனிக்காமல் இருக்க முடியாது. விசுவாச அறிக்கையின் அநேக அதிகாரங்களில் பியூரிட்டன்களின் ஞானத்தின் கைவண்ணத்தை நம்மால் பார்க்க முடியும். வரையறுக்கப்பட்ட ஆராதனைத் தத்துவங்களைத் தரும் 22ம் அதிகாரம், மனச்சாட்சியின் சுதந்திரத்தை விளக்கும் 21ம் அதிகாரம், திருச்சபையைப் பற்றிப் போதிக்கும் 27ம் அதிகாரம் இவற்றில் சிறப்பானவை. ஆரம்பத்தில் 1-0 முதல் 19 அதிகாரங்கள் வரை கொடுக்கப்பட்டிருக்கும் போதனைகளிலும் அவர்களுடைய கைவண்ணத்தைக் காணலாம். இந்த வகையில் நம்முடைய விசுவாச அறிக்கை 16ம் நூற்றாண்டு சீர்திருத்தவாதிகளினதும், 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிறப்புவாய்ந்த பியூரிட்டன்களுடையதுமான சிந்தனை, ஞானம் ஆகியவற்றின் அடிப்படையில் தரப்பட்டிருக்கும் அருமையான வேத போதனைகளாக இருக்கின்றன.
வரலாற்றோடு தொடர்புடைய, அதன் அடிப்படையில் விசுவாச அறிக்கை எழுதப்பட்டிருந்தாலும் அதன் அவசியத்தை இன்று குறைத்து மதிப்பிட்டுவிடக்கூடாது. ரோமன் கத்தோலிக்க மதம் 16ம் நூற்றாண்டில் இருந்தளவுக்கு பலத்தோடு இன்று இல்லாவிட்டாலும் அதன் போதனைகள் இன்றும் தொடர்கின்றன; திருச்சபையைப் பாதிக்கின்றன. இந்திய நாட்டில் ரோமன் கத்தோலிக்கப் போதனைகள் என்று தெரியாமல் அநேகக் கிறிஸ்தவர்கள் அந்த மதப்போதனைகளைப் பின்பற்றி வருகின்றனர். கிறிஸ்தவ தலைவர்கள்கூட அவற்றைப் பின்பற்றி வருகின்றனர். அந்தளவுக்கு அதற்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையில் இருக்கும் வேறுபாடு பலருக்குத் தெரியவில்லை. பாப்திஸ்து சபை ஊழியர்கள் சிலுவைக் குறியிடுவதை நான் கண்ணால் கண்டிருக்கிறேன். கிறிஸ்தவ வரலாற்று அறிவு நமக்கு மிகவும் அவசியம். விசுவாச அறிக்கையைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுவதற்கு மட்டுமல்லாமல் இன்றைக்கு நாம் சந்தித்துவரும் வரலாற்றோடு சம்பந்தப்பட்ட அநேக போலித்தனங்களை இனங்கண்டு எதிர்த்து நிற்கவும் விசுவாச அறிக்கையின் வரலாற்றுப் பின்னணி நமக்குப் பேருதவி செய்யும்.
3. வரலாற்று இறையியல் (Historical Theology) அறிவும் விசுவாச அறிக்கையின் போதனைகளை நாம் தெளிவாக விளங்கிக்கொள்ள உதவும்.
வரலாற்று இறையியல் என்பது இறையியல் போதனைகள் வரலாற்றில் எந்தவிதமான எதிர்ப்புகளுக்கு மத்தியில் வளர்ந்து வந்துள்ளன என்பதை விளக்கும் இறையியல் போதனையாக இருக்கிறது. உதாரணத்திற்கு 8ம் அதிகாரத்தில் காணப்படும் கிறிஸ்துவின் தெய்வீக மற்றும் மானுடம் இரண்டும் இணைந்த பிறப்பைப் பற்றிப் பார்ப்போம். அந்த அதிகாரத்தில் இது தெளிவாக விளக்கப்பட்டிருப்பதோடு அதன் பல பத்திகளில் இதுபற்றிய விளக்கத்தைப் பார்க்கிறோம். திருச்சபை உருவான முதல் மூன்று நூற்றாண்டுகளுக்குள்ளாகவே இந்தப் போதனைக்கெதிரான பலவிதமான போலிப்போதனைகள் திருச்சபையைத் தாக்கியிருந்தன. அப்பொலினேரியனிசம், நெஸ்டோரியனிசம், ஏரியனிசம் போன்ற போலிப்போதனைகளை திருச்சபை சந்தித்து எதிர்க்க வேண்டியிருந்தது. இந்த வகையில் ஆதி சபையைத் தாக்கியிருந்த போலிப்போதனைகளை அறிந்திருந்து, சபை அவற்றை எவ்வாறு எதிர்கொண்டு சத்தியத்தை நிலைநாட்டியது என்பதை அறிந்துகொள்ளுகிறபோதும் அந்த உண்மைகளின் அடிப்படையில் விசுவாச அறிக்கையை ஆராய்ந்து படிக்கிறபோதும் அதன் போதனைகளின் வலிமையையும் நடைமுறைப் பயன்பாட்டையும் நாம் உணர முடியும்.
ஆதிசபையைத் தாக்கியிருந்த போலிப்போதனைகள் பல ரூபங்களிலும் இன்றும் திருச்சபையைத் தாக்கி வருவதை யாரால் மறுக்க முடியும். தாராளவாத கொள்கைகளைப் பின்பற்றும் பாரம்பரிய சபைகள் இன்றும் இயேசு கிறிஸ்துவின் தெய்வீக, மானுட தன்மைகள் பற்றிய வேத போதனைகளை நிராகரித்துப் பேசியே வருகின்றன. இறையியல் அறிஞரான வில்லியம் பார்க்கிளே இயேசு கிறிஸ்துவின் கன்னிப் பிறப்பை சந்தேகக் கண்ணோடு பார்த்து அவருடைய தெய்வீகத்தை மறுத்தார். யேகோவாவின் சாட்சிகள் (Jehovah’s Witnesses) இந்தப் போதனையை எதிர்த்து கிறிஸ்துவைக் கடவுளாகப் பார்க்க மறுக்கின்றனர். கிறிஸ்துவுக்கெதிரான அனைத்துப் போலிப்போதனைகளுமே அவருடைய தெய்வீகம் மற்றும் மானுடத் தன்மைக்கெதிரான போதனைகளையே கொண்டிருக்கின்றன. வரலாற்று இறையியல் பாடம் நமக்கு இந்த உண்மைகளை உணர்த்துவது மட்டுமல்லாமல் விசுவாச அறிக்கையின் போதனைகளின் அவசியத்தை நமக்கு உணரவைத்து அந்தப் போதனைகளில் அதிக தெளிவையும் அளிக்கின்றன.
இதேபோலத்தான் 5ம் நூற்றாண்டில் பெலேஜியஸ் என்பவன் மனிதன் பாவத்தால் பாதிக்கப்படவில்லை என்ற முடிவுக்கு வந்து அதைப் போதிக்க ஆரம்பித்தபோது ஆகஸ்தீன் என்ற பெரும் அறிஞர் பெலேஜியஸின் போதனைகளின் விஷத்தை சுட்டிக்காட்டி சத்தியத்தை நிலைநாட்டி சபையைக் காக்க வேண்டியிருந்தது. 16ம் நூற்றாண்டில் சீர்திருத்தப் போதனைகள் ஆரம்பித்து வளர்ந்து திருச்சபைகள் அதன் அடிப்படையில் அமைந்து வருகிறபோது அவற்றிற்கெதிரான ஆர்மீனியனிசப் போதனைகள் தலைதூக்க ஆரம்பித்தன. பெலேஜியனிசப் போதனையில் மாற்றத்தை ஏற்படுத்தி உருவானதே ஆர்மீனியனிசம் (இதை செமி-பெலேஜியனிசம் என்பார்கள்). ஆர்மீனியனிசம் வேதம் போதிக்கும் கடவுளின் முன்னறிவு, தெரிந்துகொள்ளுதல் ஆகிய போதனைகளுக்கு வேதத்திற்கு முற்றிலும் மாறான விளக்கத்தை அளிக்கிறது. மனிதனைப் பாவம் பாதித்திருந்தாலும், அவன் தனக்குத் தானே ஆத்மீக விருத்தியை உண்டாக்கிக் கொள்ளும் அளவுக்கு பாவம் அவனைப் பாதிக்கவில்லை என்று ஆர்மீனியனிசம் போதிக்கிறது. இந்தப் போதனை முற்றிலும் தவறு. மனிதன் எந்தவித ஆத்மீக விருத்தியையும் சுயமாக ஏற்படுத்திக் கொள்ள முடியாதபடி பாவம் அவனைப் பாதித்திருக்கிறது என்பதே வேத போதனை. கடவுள் அவன் இருதயத்தை அடியோடு மாற்றி தன் பக்கம் திருப்புகிறவரை அவனால் அவரை விசுவாசிக்க முடியாது என்கிறது வேதம். அதையே சீர்திருத்தவாதமும், விசுவாச அறிக்கையும் போதிக்கின்றன. இந்த அடிப்படையில் அமைந்த போதனைகளை விசுவாச அறிக்கையின் பல அதிகாரங்களில் பார்க்கிறோம். முக்கியமாக மனிதனின் வீழ்ச்சியையும் பாவத்தையும் பற்றிய 6ம் அதிகாரமும், மனித சித்தம் பற்றிய 9ம் அதிகாரமும் இந்த விஷயத்தில் நமக்கு நல்ல தெளிவை அளிக்கின்றன. மனிதனால் தனக்குத் தானே ஆத்மீக விடுதலை தரமுடியாதபடியால்தான் மீட்பராகிய இயேசு நமக்காக அனுப்பப்பட்டார் என்பதை 7ம், 8ம் அதிகாரங்கள் நமக்கு விளக்குகின்றன. மீட்பராகிய இயேசு தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்காக மட்டும் மரித்தார் என்பதையும் 8ம் அதிகாரம் விளக்குகிறது. இந்தவிதமாக வரலாற்று இறையியல் மூலம் நமக்கு பெலேஜியனிச, ரோமன் கத்தோலிக்க, ஆர்மீனியனிசப் போதனைகள் எந்தெந்த காரணங்களுக்காக, எந்த வகையில் வேத போதனைகளை எதிர்த்திருந்தன என்பதை அறிந்து அவற்றோடு தொடர்புபடுத்தி விசுவாச அறிக்கையைப் படிக்கின்றபோது நமக்கு விசுவாச அறிக்கையின் போதனைகளின் நடைமுறைப் பயன்பாட்டின் அருமை தெரிய வரும். இன்றைக்கும் பெலேஜியனிச, ஆர்மீனியனிசப் போதனைகள் நம்மைச் சுற்றிலும் தலைவிரித்தாடிக் கொண்டிருப்பதை யாரால் மறுக்க முடியும்?
1689 விசுவாச அறிக்கையைத் தமிழில் போதிக்கிறவர்களும், அதைப் படிக்கிறவர்களும் இதுவரை நான் விளக்கிய அம்சங்களை மனதில் வைத்து ஆராய்ந்து படிப்பீர்களானால் இந்த அருமையான அறிக்கையின் மூலம் உங்கள் விசுவாசத்தில் உறுதியை அடைய முடியும். வெறுமனே கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன் என்று சொல்லி நம் விசுவாசம் எத்தனைப் பெரியது என்று தெரியாமல் வாழ்வதால் பலனில்லை. அது எத்தனைப் பெரியது, மகத்தானது என்பதை நாம் அறிந்து கடவுளை மகிமைப்படுத்த விசுவாச அறிக்கை உதவுகிறது. இந்த இடத்தில் இன்னுமொரு உண்மையையும் உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். விசுவாச அறிக்கையை எழுதிய மெய்க் கிறிஸ்தவர்கள் அனைவரும் சத்தியத்தில் ஒன்றுபட்டு கர்த்தரை மகிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அதை எழுதித் தந்திருக்கிறார்கள். மெய்க் கிறிஸ்தவர்கள், அடிப்படை சத்தியங்களை நிராகரித்துவிட்டு கிறிஸ்துவில் ஒன்றுகூட வழியில்லை. வேத சத்தியங்கள் பற்றிய குளறுபடியான நம்பிக்கைகளை வைத்துக்கொண்டு கிறிஸ்துவை நாம் ஆராதிக்க முடியாது. நம்முடைய அறியாமையால் சத்தியத்தில் நமக்கு பேரறிவு இல்லாமல் இருந்துவிடலாம்; வசதிக்குறைவால் சத்தியத்தில் நல்லறிவு குறைவாக இருந்துவிடலாம். அதெல்லாம் சத்தியத்தில் இருந்து நம்மை விலகியோடிவிடச் செய்துவிடாது. ஆனால், சத்தியத்துக்கு முரணான, எதிரான நம்பிக்கைகளை வைத்துக்கொண்டு நம்மைக் கிறிஸ்தவர்களாக இனங்காட்டிக்கொள்ளுவது ஆபத்து. போலிப் போதனைகளும், சத்தியமும் சேர்ந்து வாழமுடியாது. சாப்பாட்டில் விஷம் இருந்தால் அதைத் தூக்கியெறிந்துவிடுவோம். விஷம் சேர்ந்த சாப்பாட்டைச் சாப்பிட்டு உயிர்வாழத் துடிக்கின்றவர்களை உலகம் கண்டதில்லை. அதேபோல, சத்தியத்தோடு அசத்தியத்தைக் கலந்து ஒரேகூட்டமாக கிறிஸ்தவர்கள் என்ற பெயரில் வாழ நாம் முயற்சிக்கக்கூடாது. சத்தியத்தை மட்டும் பின்பற்றி கிறிஸ்துவைக் கிறிஸ்தவர்கள் மகிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தரப்பட்டிருக்கும் விசுவாச அறிக்கையைப் படித்து அதில் தெளிவு பெற முயற்சி செய்யுங்கள்.
Vesuvasa arekiyai tamilil vele edalame
Sent from Samsung Mobile
“திருமறைத்தீபம் (Bib
LikeLike