காலத்தால் அழியாத கர்த்தரின் கட்டளைகள் – 21ம் நூற்றாண்டுக்கு இன்றியமையா கட்டளைகள்

ஒரு காலத்தில் மேலை நாடுகளிலும் கீழைத் தேசங்களிலும் கடவுளின் பத்துக்கட்டளைகளுக்கு அதிக மரியாதையும் மதிப்பும் அளிக்கப்பட்டது. பத்துக்கட்டளைகளை மரப்பலகைகளிலோ அல்லது தகடுகளிலோ பெரிதாக எழுதி பொதுவாக சபையின் சுவர்களில் வைத்திருப்பார்கள். பத்துக்கட்டளைகளை ஓய்வு நாள் சிறுவர் பாடசாலைகளில் தவறாது சொல்லிக்கொடுப்பார்கள். சபை ஆராதனைகளிலும் அதை ஒவ்வொரு ஓய்வு நாளிலும் வாசிப்பார்கள். இன்றும் சில சமயப்பிரிவுகளில் அதை வாசிக்கும் வழக்கம் மேலை நாடுகளில் இருந்து வருகிறது. இதற்கெல்லாம் காரணம் அவர்கள் பத்துக்கட்டளைகளை சடங்கைப்போல எண்ணிப் பயன்படுத்தி வந்ததல்ல. பத்துக்கட்டளைகளின் உண்மைத் தன்மையை அவர்கள் அறிந்தும் உணர்ந்தும் வைத்திருந்ததுதான்.

இருந்தாலும் அன்றிருந்ததுபோல் இன்றைக்கு வெளிப்படையாக இந்தளவுக்கு பத்துக்கட்டளைகளில் மேலை நாட்டுக் கிறிஸ்தவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. பத்துக்கட்டளைகள் நல்ல கட்டளைகள்தான், அவை அவசியந்தான், நல்ல போதனைகளையும் அவை தருகின்றன என்றெல்லாம் கிறிஸ்தவர்கள் நிச்சயம் அவற்றைப் பாராட்டிப் பேசினாலும், பத்துக்கட்டளைகளின்படி நிச்சயம் ஒவ்வொரு கிறிஸ்தவரும் வாழ வேண்டும் என்று சொல்லுகிற கூட்டம் வெகுவேகமாக குறைந்து வந்திருக்கின்றது. பத்துக்கட்டளைகளை சாதாரணமாக வெளிப்படையாக விளக்கிப் போதிக்கும் வழிமுறை சபைகளில் மாறி அது ஏன் அவசியம் என்று விளக்கிச் சொல்லி கிறிஸ்தவர்களை நம்ப வைக்கவேண்டிய நிர்ப்பந்தமான நிலைமை தோன்றியிருக்கின்றது. இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் பத்துக்கட்டளைகள் மியூசியத்தில் வைக்கப்படும் பொருளின் அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது. இதற்கெல்லாம் காரணங்கள் இல்லாமலில்லை.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட மாற்றங்கள்

என்னைப் பொறுத்தவரையில் பத்தொன்பதாம் நூற்றாண்டிற்குப் பிறகு கிறிஸ்தவத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் இதற்கு நிச்சயம் காரணமாக இருந்திருக்கின்றன. திருச்சபை வரலாறு இதைத் தெளிவாக விளக்குகிறது. இங்கிலாந்தில் பிறந்து வாழ்ந்த ஜோன் டார்பி (John Darby) உருக்கொடுத்த டிஸ்பென்சேஷனலிசம் (Dispensationalism) இன்றைக்குப் பத்துக்கட்டளைகள் கிறிஸ்தவர்களால் பெரிதாக எடுத்துக்கொள்ளப்படாததற்குரிய காரணங்களில் முக்கியமானதாக இருந்திருக்கிறது. டார்பி தன்னுடைய போதனையை ஸ்கோபீல்ட் என்பவரின் துணையோடு அமெரிக்காவில் பெரிதும் பரப்பினார். அது பின்பு அமெரிக்காவில் இருந்து ஏனைய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்தப் போதனை வேதத்தில் காணப்படாததொன்று. இதற்கு வேதத்தில் எங்கும் ஆதாரம் தேடிக்கண்டுபிடிக்க முடியாது. மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட போதனை இது. இந்தப் போதனையை உருவாக்கிய டார்பி, கடவுள் ஏழுவித காலவரையிலான செயற்பாடுகளின் மூலம் தன்னுடைய நோக்கங்களை மானிடவர்க்கத்தில் இந்த உலகத்தில் நிறைவேற்றுவதோடு அதன்படி எதிர்காலத்தையும் நிர்ணயிக்கிறார் என்று விளக்கம் கொடுத்தார். இந்த ஏழு காலப்பிரிவுகளையும் பொறுத்தவரையில் ஒரு காலப்பகுதியில் நிகழ்வது அடுத்த காலப்பகுதியில் தொடராது என்றும், ஒரு காலப்பகுதியின் நிகழ்வுகள் அடுத்த காலப்பகுதியோடு சம்பந்தமற்றது என்றும் ஜோன் டார்பி விளக்கியதால் அவருடைய செயற்கையான விளக்கங்கள் வேதத்தைக் கூறுபோட்டு பழைய ஏற்பாட்டைப் புதிய ஏற்பாட்டில் இருந்து அடியோடு பிரித்து, பழைய ஏற்பாட்டின் அடிப்படைப் போதனைகள் இஸ்ரவேலருக்கு மட்டும் சொந்தமானவை என்று விளக்கும் நிலைக்கு அவரைத் தள்ளியது. வேதத்தைப் பிரித்துக்கூறுபோடும் இந்த செயற்கை முறையினால் பழைய ஏற்பாட்டில் திருச்சபைக்கான அடையாளம் இல்லை என்றும், பழைய ஏற்பாட்டு உடன்படிக்கை முற்றாக அழிக்கப்பட்டுவிட்ட, புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவர்களுக்கு அவசியமில்லாத உடன்படிக்கை என்றும் அவரை விளக்க வைத்தது. இதெல்லாம் எக்காலத்துக்கும் உரியதாக அதுவரை விளக்கமளிக்கப்பட்டு வந்திருந்த பத்துக்கட்டளைகளை பழைய ஏற்பாட்டுக் காலத்துக்கு மட்டும் உரியதாக விளக்கும் நிலைக்கு டார்பியைத் தள்ளியது. டார்பியின் போதனைகளை ஸ்கோபீல்ட் 1901ல் வெளியிட்டார். இவை 1930க்குள்ளேயே அமெரிக்காவில் நிலைகொள்ள ஆரம்பித்துவிட்டன. இவை முதலில் இங்கிலாந்தில் ‘பிலிமவுத் சகோதரர்களிடமும்’ அதற்குப் பிறகு இங்கிலாந்து அமெரிக்க நாடுகளிலும், அந்நாடுகளுக்கு வெளியில் சகோதரத்துவ, பாப்திஸ்து சபைகளிலும் பரவலாகப் பரவி நிலைகொள்ள ஆரம்பித்தன. இன்றிருக்கும் மிஷனரி நிறுவனங்களில் பெரும்பாலானவை இந்த டிஸ்பென்சேஷனலிசக் கோட்பாட்டையே பின்பற்றி வருகின்றன. இதனால் பாதிக்கப்படாத இறையியல் கல்லூரிகள் மிகக் குறைவு. இந்தளவுக்கு ஜோன் டார்பி-ஸ்கோபீல்ட் கூட்டுமுயற்சியால் பரப்பப்பட்ட டிஸ்பென்சேஷனலிசம் பத்துக்கட்டளைகளின் அவசியத்தைப் பற்றிய நம்பிக்கைகளை கிறிஸ்தவர்களின் இருதயத்திலிருந்தும், சபை மேடைகளிலிருந்தும் பெருமளவுக்கு அகற்றிவிட்டன. இதனால்தான் நம்மினத்தில் நமக்கு இன்று நியாயப்பிரமாணம் தேவையில்லை என்ற உறுதியான எண்ணமும், பத்துக்கட்டளைகளை நாம் பெரியளவுக்கு வலியுறுத்துவது அவசியமில்லை என்ற எண்ணமும் பரவலாக இருந்து அந்த அடிப்படையிலான இறையியல் நம்பிக்கைகளோடு கூடிய சபைகளையும் உருவாக்கி வைத்திருக்கிறது. இது வரலாற்றின் அடிப்படையில் நான் விளக்குகின்ற இறையியல் உண்மை. வரலாற்றை மறுப்பதென்பது முடியாத காரியம்.

இயேசுவும் அவரது அப்போஸ்தலர்களும்

இதுவரை நாம் பார்த்த நிலைமை 19ம் நூற்றாண்டிற்கு முன்பாக இருந்ததில்லை. முதல் நூற்றாண்டு அப்போஸ்தலர்களுடைய காலப்பகுதியை எடுத்துக்கொண்டால் அவர்கள் பத்துக்கட்டளைகளின் அவசியத்தை வெளிப்படையாகப் போதித்திருப்பதைப் புதிய ஏற்பாடு முழுவதும் நம்மால் வாசித்து அறிந்துகொள்ள முடிகிறது. இயேசு கிறிஸ்து தன்னுடைய ஊழியக் காலமெல்லாம் அதை வலியுறுத்தி வந்திருக்கிறார் என்பதற்கு மிகச் சிறந்த அடையாளமாக மலைப்பிரசங்கத்தை எடுத்துக்கொள்ளலாம், மலைப்பிரசங்கம் பத்துக்கட்டளைகளுக்கான விபரமான வியாக்கியானம். எல்லாக் கட்டளைகளுக்கும் இயேசு அதில் விளக்கந்தராவிட்டாலும் அவர் தந்திருக்கும் விளக்கங்கள் அனைத்தும் பத்துக்கட்டளைகளுக்கான விளக்கமே. அதைப் பின்பற்றியே பவுலும், பேதுருவும், யாக்கோபுவும், யோவானும் பத்துக்கட்டளைகளை அடிப்படையாகக் கொண்டு புதிய ஏற்பாட்டுப் போதனைகளைத் தந்திருக்கிறார்கள். (இந்தக் கருத்தை நான் பின்பு விபரமாக விளக்கவிருக்கிறேன்.)

ஆதிசபையில் . . .

அப்போஸ்தலர்களுடைய காலத்துக்குப் பிறகு பத்துக்கட்டளைகளின் அவசியத்தை திருச்சபை தொடர்ந்து போதித்து வந்திருக்கின்றது. ரோமன் கத்தோலிக்க மதம் உருவாகி 7ம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்தவர்கள் உபத்திரவத்தை அனுபவித்த காலத்திலும் பத்துக்கட்டளைகளின் அவசியத்தை கிறிஸ்தவர்கள் உணர்ந்திருந்தார்கள். ஆதிசபையில் 5ம் நூற்றாண்டில் பெரும் கிறிஸ்தவ தலைவராக இருந்த ஆகஸ்தீன் (Augustine), கர்த்தரின் கட்டளைகளைப் பற்றி எழுதும்போது, ‘நியாயப்பிரமாணத்தின் (பத்துக்கட்டளைகள்) மூலம் கர்த்தர் மனிதனின் கண்களைத் திறந்து அவன் தன்னுடைய பரிதாபமான ஆவிக்குரிய நிலையை உணரவைத்து, விசுவாசத்தின் மூலம் கர்த்தரின் கிருபையில் தஞ்சமடைந்து குணப்படச் செய்கிறார். கிருபையை நாம் நாடவேண்டுமென்பதற்காகவே நியாயப்பிரமாணம் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றது; நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றவேண்டுமென்பதற்காகவே கிருபை நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது’ என்று விளக்கியிருக்கிறார்.

16ம் நூற்றாண்டில் . . .

16ம் நூற்றாண்டில் கர்த்தர் மறுபடியும் வேதவழியிலான கிறிஸ்தவத்தை ஏற்படுத்த மார்டின் லூத்தர் போன்றவர்களைப் பயன்படுத்தி திருச்சபை சீர்திருத்தத்தைக் கொண்டுவந்தபோது பத்துக்கட்டளைகள் அலட்சியப்படுத்தப்படவோ, நிராகரிக்கப்படவோ இல்லை. அவற்றை லூத்தர், கல்வின் முதல் அத்தனை சீர்திருத்தவாதிகளும் விளக்கிப் போதித்திருக்கிறார்கள். இதற்கு இன்றும் எழுத்திலிருக்கும் அவர்களுடைய போதனைகளைக் கொண்ட நூல்களே சான்று. ஜோன் கல்வின் கிறிஸ்தவம் பற்றி எழுதி பிரான்சு மன்னனுக்கு அனுப்பிய பெரும் நூலைப் பெற்று வாசித்துப் பாருங்கள். பத்துக்கட்டளைகளின் அவசியத்தை அவர் அதில் உணர்த்தியிருக்கிறார். கர்த்தரின் கட்டளைகள் பற்றி மார்டின் லூத்தர் சொல்லுகிறார், ‘நாம் எந்தளவுக்கு குற்றவுணர்வுள்ளவர்களென்பதைத் தெரிந்துகெள்ளுவதற்கும், எதைநோக்கி நாம் மீண்டும் திரும்பவேண்டுமென்பதற்காகவும் நமக்கு நியாயப்பிரமாணமும், சுவிசேஷமும் தேவை.’ இதைப்பற்றி எழுதும் ஜோன் கல்வினோ, ‘இஸ்ரவேலைப்போலவே நாமும் அதற்குக் கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம். தன்னுடைய நியாயப்பிரமாணத்தைப் பூரணமானதாக இருக்கும்படிச் செய்திருக்கும் கடவுள் அது என்றைக்கும் நிலைத்திருக்கும்படிச் செய்திருக்கிறார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை’ என்கிறார். அந்தளவுக்கு 16ம் நூற்றாண்டு சீர்திருத்தவாதம் பத்துக்கட்டளைகளுக்கு மதிப்புக் கொடுத்து அதன் அவசியத்தை வலியுறுத்தியிருக்கிறது.

17ம் நூற்றாண்டில் . . .

அதற்குப் பிறகு வரும் 17ம் நூற்றாண்டை கிறிஸ்தவத்தின் ஒரு பொற்காலம் என்று சொல்லலாம். இந்த நூற்றாண்டில் பியூரிட்டன் (Puritan) பெரியவர்கள் திருச்சபை சீர்திருத்தத்தை இன்னொரு படிக்கு உயர்த்தினார்கள். இந்தக் காலப்பகுதி கண்டதுபோன்ற பிரசங்கிகளும், இறையியல் வல்லுனர்களும், இறையியல் நூல்களும் இன்றைக்கும் உருவாகவில்லை. ஜோன் பனியன் முதற்கொண்டு ஜோன் ஓவன் வரையுள்ள எத்தனை சிறப்பான கிறிஸ்தவப் பெரியோரைக் கர்த்தர் எழுப்பித் தன்னுடைய சபையை அலங்கரித்திருக்கிறார். இவர்களுடைய போதனைகள், பிரசங்கங்கள், எழுத்துக்கள் அனைத்தும் ஒன்று தவறாமல் பத்துக்கட்டளைகளின் அவசியத்தையும் கிறிஸ்தவர்கள் மத்தியில் அவற்றின் நிரந்தரமான இடத்தையும் வலியுறுத்துகின்றன. தோமஸ் வாட்சனின் (Thomas Watson) ‘பத்துக்கட்டளைகள்’ நூல் இன்றும் ஆங்கிலத்தில் பிரசுரத்தில் இருந்து வருகிறது. இதில் வாட்சன் அருமையாக கர்த்தரின் கட்டளைகளுக்கு முன்னுரையோடு தெளிவாக ஆணித்தரமான விளக்கமளித்திருகிறார். ஒவ்வொரு கட்டளைக்குள்ளும் ஆழமாகப் போய்ப்பார்த்து அவற்றின் பல்வேறு நடைமுறைப் பயன்பாடுகளையும் அக்குவேறு ஆணிவேறாக ஆராய்ந்து கண்டுபிடித்து நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார். வாட்சன் சொல்லுகிறார்,  ‘கர்த்தருடைய நீதிச்சட்டங்கள் கோவிலிலுள்ள திரைச்சீலை கட்டப்பட்டிருக்கும் சங்கிலியைப் போன்றது. அந்தத் திரைசீலை தங்கச்சங்கிலிகளால் இணைக்கப்பட்டு சேர்த்துக் கட்டப்பட்டுள்ளது. மனச்சாட்சியுள்ள எந்த மனிதனும் திரைச்சீலையை இணைக்கும் அந்தச் சங்கிலியில் ஒரு வளையத்தையாவது உடைக்கமாட்டான். கர்த்தரின் நீதிகட்டளையான சங்கிலியில் ஒரு வளையத்தை உடைத்தால் முழுச் சங்கிலியையும் உடைத்ததுபோலாகும்.’ இதேமுறையில் தொமஸ் பொஸ்டன், சாமுவேல் பொஸ்டன், ஜோன் பிளேவல், ஜோன் பனியன், ஜோன் நியூட்டன், எட்வர்ட் பிசர், மெத்தியூ ஹென்றி போன்றோரும் பத்துக்கட்டளைகளுக்கு அதிகமாக விளக்கமளித்து எழுதியிருக்கிறார்கள். இதைப்பற்றி எழுதும் ஜோன் நியூட்டன் (John Newton), நியாயப்பிரமாணத்துக்கும் கிருபைக்கும் இடையில் இருக்கும் ஒற்றுமையை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால் நியாயப்பிரமாணத்தைப் பற்றியும், கிருபையைப்பற்றியும் எந்தவிதமான தவறான எண்ணங்களும் நமக்குள் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்று எழுதியிருக்கிறார். ஜோன் பனியன் (John Bunyan), ‘நியாயப்பிரமாணத்தின் தன்மையைப் பற்றி உணராத ஒருவன் பாவத்தைப் பற்றிய சரியான உணர்வைக் கொண்டிருக்க முடியாது. பாவத்தைப் பற்றிய சரியான அறிவையும், உணர்வையும் கொண்டிராதவன் இரட்சகரைப்பற்றிய சரியான அறிவைக் கொண்டிருக்க முடியாது’ என்று கூறுகிறார். பியூரிட்டன் பெரியவர்களின் காலத்தில் திருச்சபை பத்துக்கட்டளைகளுக்கு பெருமதிப்பளித்து கிறிஸ்தவர்களின் பரிசுத்தமாக்குதலாகிய கிருபையின் கடமைக்கு அவற்றின் இன்றியமையா அவசியத்தைத் துல்லியமாகப் போதித்து வந்திருக்கிறது.

18ம் நூற்றாண்டில் . . .

பதினெட்டாம் நூற்றாண்டைப் பார்க்கின்றபோது நமக்கு நினைவு வருவது அன்றைய காலப்பகுதியின் சிறப்பான எழுப்புதல்கள்தான். முதலாம் எழுப்புதலில் (First Great Awakening) சம்பந்தப்பட்டவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் அமெரிக்காவில் பிரசித்தி பெற்ற ஜொனத்தன் எட்வர்ட்ஸ். எட்வர்ட்ஸ் பத்துக்கட்டளைகள் நிரந்தரமானவை என்று விசுவாசித்தவர். அவருடைய போதனைகள் அதன் அடிப்படையிலேயே அமைந்திருந்தன. அக்காலத்தில் அதில் எவருக்கும் பெரிய சந்தேகம் இருக்கவில்லை. எட்வர்ட்ஸ் எழுதுகிறார், “பக்திவிருத்திக்குரிய கட்டளைகளை வைத்திருந்தும் அவற்றை அறியாமல் இருப்பதால் என்ன பயன்? கர்த்தருடைய மனதை நாம் அறிந்துகொள்ள எந்த அக்கறையும் காட்டாமலிருந்தால் அவர் தன் மனதை நமக்கு ஏன் வெளிப்படுத்த வேண்டும்? இருந்தபோதும் நாம் பாவம் செய்கிறோம் என்பதை தெரிந்துகொள்ளுவதற்காக இருக்கும் ஒரே வழி அவருடைய ஒழுக்க நீதிச்சட்டங்களை நாம் அறிந்துவைத்திருப்பதுதான்; ‘பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறது” (ரோமர் 3:20).

எட்வர்ட்சின் வழியில் இந்த முதலாம் எழுப்புதலில் வேல்ஸிலும், இங்கிலாந்திலும், அமெரிக்காவின் சில பகுதிகளிலும் கர்த்தரால் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டவர் ஜோர்ஜ் விட்பீல்ட். அத்தோடு வேல்ஸைச் சேர்ந்த ஹொவல் ஹெரிஸ், டேனியல் ரோலன்ட்ஸ் போன்றோருக்கும் இதில் பங்கிருந்தது. இவர்கள் பத்துக்கட்டளைகளின் அவசியத்தை உணர்ந்து பிரசங்கித்தவர்கள். இவர்களின் சுவிசேஷத்தில் அது காணப்பட்டது. விட்பீல்டும், எட்வர்ட்ஸும் கல்வினிஸ்டுகளாக இருந்தார்கள். அதற்கு மாறான கருத்தைக் கொண்டிருந்த ஜோன் வெஸ்லிகூட அந்தக் காலத்தில் பத்துக்கட்டளைகளின் நிரந்தரத்தன்மையை வலியுறுத்தியிருக்கிறார். வெஸ்லி, ‘தீர்க்கதரிசிகளாலும் வலியுறுத்தப்பட்ட, பத்துக்கட்டளைகளான ஒழுக்கநீதிச் சட்டங்களை இயேசு கிறிஸ்து அகற்றிவிடவில்லை. அதன் எந்தப் பகுதியையும் அகற்றிவிடும் எண்ணம் கிறிஸ்துவுக்கு அவருடைய முதலாம் வருகையின்போது இருக்கவில்லை. இந்த நியாயப்பிரமாணம் ஒருபோதும் உடைக்கப்படாது . . . எல்லாக்காலங்களிலும் மனிதகுலம் பின்பற்றும்படியாக இது நிரந்தரக் கட்டளைகளாக இருக்கும்’ என்கிறார். ஜொனத்தன் எட்வர்ட்ஸின் சீர்திருத்த போதனைகளின் அடிப்படையிலேயே பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. அதன் போதகர்களும், இறையியல் வல்லுனர்களும் கர்த்தரின் கட்டளைகளுக்கு அதிக மதிப்புக்கொடுத்து அதன் அடிப்படையில் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து வந்தவர்கள். கிறிஸ்தவ வாழ்க்கைக்கு பத்துக்கட்டளைகள் நிரந்தரமாகத் தேவை என்பதை உணர்ந்து போதித்தவர்கள்.

இந்தக் காலத்திலேயே வேறு மாற்றங்களும் ஏற்பட ஆரம்பித்தன. ஜெர்மனியில் பக்தி இயக்கம் எழுந்தது. குவேக்கர்களும் இந்தக் காலப்பகுதியில் உருவானார்கள். பக்தியில் அதிக ஆர்வம்காட்டிய இவர்கள் கிறிஸ்தவம் பாரம்பரியச் சடங்காக இல்லாமல் ஆவிக்குரிய துடிப்போடு இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டு உணர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததால் ஒருவித ‘உள்ளுணர்வு’ (Mysticism – மிஸ்டிஸிசம்) போக்கில் போக ஆரம்பித்தார்கள்.  கர்த்தரின் கட்டளைகளைப் பின்பற்றுவதால் பரிசுத்தமாகுதல் உண்டாகும் என்பதைவிட்டு விலகி சடுதியானதொரு அனுபவத்தினால் வெறும் உணர்ச்சிகளின் எல்லைகளை அடைவதால் அதை அனுபவிக்கலாம் என்ற நிலைமைக்கு கிறிஸ்தவம் போக ஆரம்பித்தது. இந்த இயக்கங்களே பின்னால் பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் பிரிவுகள் ஏற்பட வழியேற்படுத்தின. பரவசக்குழுக்கள் மத்தியில் பத்துக்கட்டளைகளின் நிரந்தரத்தன்மையையும், பரிசுத்தமாக்குதலுக்கான அதன் அவசியத்தையும் போதிப்பவர்கள் மிகக் குறைவு.

19ம் நூற்றாண்டு . . .

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஜோன் டார்பியின் டிஸ்பென்சேஷனலிசம் எவ்வாறு உருவானது என்று ஆரம்பத்திலேயே விளக்கினேன். இந்நூற்றாண்டின் ஆரம்பத்தில் தோன்றிய இன்னொரு மனிதரே சார்ள்ஸ் பினி (Charles Finney). மனிதன் தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ள முடியும் என்று போதித்த பினியின் பரிசுத்தமாக்குதல் பற்றிய போதனைகள் வேதபூர்வமாக இருக்கவில்லை. கர்த்தரின் கட்டளைகளின் அவசியத்தை பினி ஏற்றுக்கொண்டபோதும் இந்த உலகத்தில் கிறிஸ்தவன் நிரந்தர பூரணத்துவத்தை அடைய முடியும் என்றும், பாவம் செய்கிற கிறிஸ்தவன் பாவியாக இருக்கிறவனைப்போலவே கர்த்தரின் நியாயத்தீர்ப்பை சந்திக்கிறான் என்றும் போதித்தார். சார்ள்ஸ் பினியின் போதனைகள் பரிசுத்தமாக்குதலைப் பற்றிய வேதத்துக்கு முரணான கெஸ்சிக் மற்றும் ‘இரண்டாம் ஆசீர்வாதப்’ போதனைகளுக்கு மூலகாரணமாக அமைந்தன. 18ம் நூற்றாண்டுவரை இருந்துவந்த கிறிஸ்தவத்தையே மாற்றி அமைத்ததில் டார்பியோடு சேர்த்து பினிக்கும் பெரும் பங்கிருந்தது.

ஜோன் டார்பியும், ஸ்கோபீல்டும் பத்தொன்பதாம் நூற்றாண்டை அதுவரை இருந்துவந்திருந்த இயேசு மற்றும் அவருடைய அப்போஸ்தலர்களும், சீர்திருத்தவாதிகளும், பியூரிட்டன்களும் போதித்த ஆணித்தரமான பத்துக்கட்டளைகள் பற்றிய போதனைகளில் இருந்து திசைமாற்றினர். வேதம் மற்றும் விசுவாச அறிக்கைகள், வினாவிடைப் போதனைகள் மூலம் பாதுகாக்கப்பட்டு பிரசங்கித்து போதிக்கப்பட்டு வந்திருந்த சீர்திருத்தப் போதனைகளின் அடிப்படையிலான உடன்படிக்கை பற்றிய விளக்கங்களுக்கு மாறான விளக்கங்களை இவர்கள் தந்து கிறிஸ்தவர்களில் பத்துக்கட்டளைகளின் நடைமுறைப் பயன்பாட்டை அலட்சியம் செய்து பரிசுத்தமாகுதலாகிய கிருபையின் கடமையை வேறுவழிகளில் விளக்க ஆரம்பித்தனர். அதனால்தான் பத்தொன்பதாம் நூற்றாண்டு, கிறிஸ்தவத்தை அதுவரை இருந்து வந்திருந்த பாதையில் இருந்து திசைதிருப்பி பத்துக்கட்டளைகளின் நிரந்தரத்தன்மை பற்றிய போதனையில் மண்ணை வாரிப்போட்டு கிறிஸ்தவர்களுக்கு அவற்றால் இன்றைக்குப் பெரிய பயன்களெதுவும் இல்லை என்ற எண்ணம் எல்லோர் மத்தியிலும் ஏற்பட வழியேற்படுத்தியது என்று சொன்னேன்.

இந்த நூற்றாண்டில் இருந்தவர்கள்தான் பெயர் பெற்ற பிரசங்கிகளான ஸ்பர்ஜனும் (Spurgeon), ஜே.சீ. ரைலும் (J. C. Ryle). ஒருவர் பாப்திஸ்து மற்றவர் சுவிசேஷ ஆங்கிலிக்கன் பிரிவைச் சேர்ந்தவர். இருந்தபோதும் இருவருமே சீர்திருத்தவாத போதனைகளைப் பின்பற்றியவர்கள். இவர்கள் பத்துக்கட்டளைகளின் நிரந்தரத்தன்மையைப் பிரசங்கங்களிலும், தங்களுடைய எழுத்துக்களிலும் வலியுறுத்தியிருக்கிறார்கள். ரைல் சொல்லுகிறார், ‘நியாயப்பிரமாணத்தையும், பத்துக்கட்டளைகளையும் அவசியமற்றவை என்று ஒதுக்குகின்ற தவறான மனப்பான்மையைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள். சுவிசேஷம் அவற்றை இல்லாமலாக்கிவிட்டது என்றோ அல்லது அவற்றிற்கும் கிறிஸ்தவத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்ற எண்ணத்திற்கோ இடங்கொடுத்துவிடாதீர்கள். கிறிஸ்துவின் வருகை பத்துக்கட்டளைகளின் அவசியத்தை மயிரளவுக்குக்கூட மாற்றியமைத்துவிடவில்லை. கிறிஸ்துவின் வருகை அதன் அதிகாரத்தை மேலும் உயர்த்தி மகிமைப்படுத்தவே செய்திருக்கிறது’ (ரோமர் 3:31). இதேபோல் ஸ்பர்ஜனும் 1882, மே மாதத்தில் ‘நியாயப்பிரமாணத்தின் நிரந்தரத்தன்மை’ என்ற தலைப்பில் பத்துக்கட்டளைகளின் நிரந்தரத்தன்மையை வலியுறுத்திப் பிரசங்கம் செய்திருக்கிறார். அந்தப் பிரசங்கத்தில் அவருடைய முதலாவது தலைப்பே, ‘கர்த்தரின் நியாயப்பிரமாணம் நிச்சயம் நிரந்தரமானதாகத்தான் இருக்கவேண்டும்’ என்றிருந்தது. ‘நியாயப்பிரமாணம் (பத்துக்கட்டளைகள்) அகற்றப்படவில்லை; எந்த மாற்றங்களுக்கும் உள்ளாகவில்லை. நம்முடைய வீழ்ச்சியடைந்திருக்கும் மானிடத்துக்கேற்றவிதத்தில் அதனை நாம் எந்தவிதத்திலும் மாற்றியமைக்கப் பார்க்கக்கூடாது. கர்த்தரின் ஒவ்வொரு நீதியான கட்டளைகளும் எப்போதைக்கும் நிரந்தரமானவை’ என்கிறார் ஸ்பர்ஜன்.

இதே காலப்பகுதியைச் சேர்ந்த ஆக்டேவியஸ் வின்ஸ்லோ (Octavius Winslow) என்ற அருமைப் போதகரும், ‘தன்னுடைய மக்கள் நியாயப்பிரமாணமற்ற வாழ்க்கை வாழ்வதற்காக கிறிஸ்து நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றவில்லை. நாம் அவற்றை நிராகரிப்பதற்காக அவர் அவற்றை மதிக்கவில்லை. அவற்றை நாம் கீழ்ப்படிவோடு பின்பற்றாமலிருப்பதற்காக அவர் அவற்றிற்குக் கீழ்ப்படியவில்லை. கிறிஸ்து அவற்றை நிறைவேற்றியது பரிசுத்தமாக நாம் வாழ்வதற்காகவே தவிர, அவற்றை நாம் நிறைவேற்றவேண்டிய கடமைப்பொறுப்பிலிருந்து நமக்கு விடுதலை தருவதற்காக அல்ல. நமது விசுவாசம் நியாயப்பிரமாணத்தை இல்லாமலாக்கிவிடவில்லை மாறாக அவற்றின் அவசியத்தை நிலைநாட்டுகின்றது’ என்று விளக்கியிருக்கிறார்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் கிறிஸ்தவத்தில் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தபோதும் ஸ்பர்ஜனும், ரைலும், வின்ஸ்லோ போன்ற பேரறிஞர்களும் தொடர்ந்து பத்துக்கட்டளைகளின் நிரந்தரத்தன்மையை வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். அவற்றைப் பின்பற்றாமல் கிறிஸ்தவர்கள் பரிசுத்தமாகுதலாகிய கிருபையின் கடமைகளைச் செய்ய வழியில்லை என்று ஆணித்தரமாகப் போதித்திருக்கிறார்கள்.

20ம் நூற்றாண்டு . . .   

பத்தொன்பதாம் நூற்றாண்டில் டார்பியிசத்தினால் ஏற்பட்ட மாற்றங்களின் அடிப்படையிலேயே பெருமளவுக்கு கிறிஸ்தவம் 20ம் நூற்றாண்டில் தொடர்ந்தது. இருந்தபோதும் இந்தக் காலப்பகுதியில் பத்துக்கட்டளைகளின் நிரந்தரத் தன்மை சீர்திருத்த கிறிஸ்தவ சபைகளாலும், ஏனையோராலும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இந்தக் காலப்பகுதி சந்தித்த ஒரு புதிய போதனைக்குப் பெயர் ‘புதிய உடன்பாட்டு இறையியல்’ என்பது. இதை விளக்கியவர்களில் முக்கியமானவர் ஜோன் ரைசிங்கர் (John Reisinger) என்ற அமெரிக்க பாப்திஸ்து பிரசங்கி. இந்தப் போதனை பாப்திஸ்துகளின் மத்தியில் குறுகிய காலத்துக்கு மட்டும் வலிமைபெற்று பின்பு அடங்க ஆரம்பித்தது. இதன் போதனையின்படி கிறிஸ்தவர்களுக்கு பத்துக்கட்டளைகள் அவசியமானபோதிலும் அவற்றின் அடிப்படையில் வாழ்ந்தால் மட்டுமே பரிசுத்தமாகுதல் நிகழும் என்பது அர்த்தமற்றது என்பதாகும். இதைப் பின்பற்றியவர்கள் முக்கியமாக பத்துக்கட்டளைகளில் நான்காவது கட்டளையான ஓய்வுநாளை நாம் இன்றைக்கு பின்பற்றத் தேவையில்லை என்று சொல்லுகிறார்கள். பத்துக்கட்டளைகளை இன்றைக்கு பின்பற்ற அவசியமில்லை என்று சொல்லுகிற கூட்டத்துக்கு ஓய்வுநாளைப் பின்பற்றுவதே எப்போதும் பெரும் சங்கடமாக இருந்து வந்திருக்கிறது. இந்த எண்ணம் இன்றைக்கு பாப்திஸ்து, சகோதர சபைகளைச் சேர்ந்தவர்களிடம் அதிகம் காணப்படுகிறது. நாம் வாழும் நூற்றாண்டு பத்துக்கட்டளைக்கும் ஓய்வுநாளுக்கும் என்றும் இல்லாதவகையில் மதிப்புக்கொடுக்காமல் இருக்கும் ஒருகாலம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தக் காலப்பகுதியில் வாழ்ந்த சீர்திருத்த கிறிஸ்தவரும் பாப்திஸ்துமான ஏ.டபிள்யூ. பின்க் (A.W. Pink), ‘புதிய ஏற்பாடு பத்துக்கட்டளைகளுக்கான வேதவியாக்கியானமாக இருக்கிறது; அவை பத்துக்கட்டளைகளைப் பின்பற்றும்படி நம்மை ஊக்குவிப்பதற்கான காரணங்களைத் தந்தும், வாக்குத்தத்தங்களை நமக்கு நினைவூட்டியும், பாவத்தைச் செய்துவிடுவதில் இருந்து நம்மைக் கட்டுப்படுத்தும்விதமாக பயமுறுத்தும் போதனைகளாக இருக்கின்றன. புதிய ஏற்பாட்டை உண்மையில் புரிந்துகொள்ளுவோமானால் அவை பத்துக்கட்டளைகளை மேலும் ஆழமாக விளக்குவதாகவும், அவற்றின் உள்ளர்த்தங்களை வெளிப்படுத்துவதாகவும், அவற்றின் பயன்பாடுகளை அள்ளித்தருகின்றதாகவும் இருப்பதை நாம் கண்டுகொள்ளுவோம்’ என்கிறார். இதேபோல் இந்த நூற்றாண்டின் பெரும் பிரசங்கியாக இருந்த மார்டின் லொயிட் ஜோன்ஸ் தன்னுடைய பிரசங்கத் தொகுப்பான மலைப்பிரசங்கத்தில், ‘நீங்கள் பெற்றுக்கொண்டிருக்கும் கிருபை உங்களை நியாயப்பிரமாணத்திற்குக் (பத்துக்கட்டளைகளுக்கு) கட்டுப்பட்டு வாழும்படிச் செய்யவில்லையானால், நீங்கள் கிருபையை அடையவில்லை என்றுதான் அர்த்தம்’ என்று ஆணித்தரமாக எழுதியிருக்கிறார். பின்க்கையும், லொயிட் ஜோன்ஸையும் பொறுத்தவரையில் பத்துக்கட்டளைகளில் அனைத்துக்கட்டளைகளையும் நாம் பின்பற்ற வேண்டும். அதில் எதையும் அகற்றவோ அல்லது மாற்றவோ நமக்கு உரிமையில்லை.

இத்தனைக்கும் மத்தியில் மேலைத்தேய நாடுகளில் குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் அப்போஸ்தலர் காலத்து கிறிஸ்தவ நம்பிக்கைகள் குறைவடைந்து நியாயப்பிரமாணமற்ற (கீழ்ப்படிவுக்கு அவசியமில்லாத) ஒருவித கிறிஸ்தவத்தை நாடிப்போகும் கிறிஸ்தவர்களே இன்று அதிகமாக வளர்ந்து வருவது துக்கத்துக்குரிய காரியமே. மேலைத்தேய கிறிஸ்தவத்தை அதிகம் பாதித்திருக்கும் அன்டிநோமியனிச ஆவியைப் பற்றி எழுதுகின்ற கிறிஸ்தவ பிரசங்கிகளில் ஒருவரான ஆர்.சி. ஸ்பிரவுல் (R. C. Sproul) ‘நியாயப்பிரமாணத்தின் மூலம் நாம் இரட்சிக்கப்படவில்லை, சுவிசேஷத்தின் மூலமே இரட்சிக்கப்பட்டோம். நம்முடைய நீதியாலல்ல கிருபையால், கிரியைகளினால் அல்ல விசுவாசத்தினால் இரட்சிக்கப்பட்டோம். ஆகவே, விசுவாசிக்கு நியாயப்பிரமாணம் அவசியமில்லை, கீழ்ப்படிவுக்கும் அவசியமில்லை என்று சொல்லுகிற போதனைதான் அன்டிநோமியனிசம்’ என்று விளக்குகிறார். இந்த அன்டிநோமியனிச எண்ணப்போக்குத்தான் இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்கள் பத்துக்கட்டளைகளின் நிரந்தரத் தன்மையை உதாசீனம் செய்யும்படி வைத்திருக்கிறது. இருந்தபோதும் மெய்யான கர்த்தரின் திருச்சபை இன்றைக்கும் பத்துக்கட்டளைகளின் அவசியத்தைத் தொடர்ந்து அங்குமிங்குமாக அதிரடியாகப் பிரசங்கித்தும் போதித்தும் வருவது நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

நம்மினத்துக் கிறிஸ்தவத்தில் . . .

மேலைத்தேய நாடுகளில் கிறிஸ்தவத்தில் எந்தவித மாற்றங்கள் ஏற்பட்டு புதிய ஏற்பாட்டு ஆரம்ப காலத்தில் பத்துக்கட்டளைகளுக்குக் கொடுக்கப்பட்டிருந்த முக்கிய இடம் இல்லாமல் போய், அதைப் பெரிதுபடுத்தத் தேவையில்லை, கிறிஸ்தவ வாழ்வில் அதைக் கட்டாயம் கடைப்பிடித்து வாழ வேண்டியதில்லை என்ற நிலை எப்படி உருவானது என்று ஆராய்ந்திருக்கிறோம். இந்த எண்ணப்போக்கு நம்மினத்துக்குள் எப்படிப் புகுந்தது? 16, 17ம் நூற்றாண்டுக்கால கிறிஸ்தவத்தை நம்மினத்தில் அறிமுகப்படுத்தியவர்கள் என்று பார்த்தால் அதற்கு இருவர் மட்டுமே காரணமானவர்களாக இருந்திருக்கிறார்கள். டேனிஷ் மிஷனரியாக தமிழ்நாட்டின் தரங்கம்பாடிக்கு வந்து பணிபுரிந்த சீகன்பால்கும் (Ziegenbalg), கல்கத்தாவுக்கு வந்த வில்லியம் கேரியுமே (William Carey) அவர்கள். இந்த இருவரும் சீர்திருத்தப் போதனைகளைப் பின்பற்றியவர்கள், பத்துக்கட்டளைகளின் நிரந்தத் தன்மையையும் கிறிஸ்தவ வாழ்க்கைக்கு அவற்றின் இன்றியமையா தன்மையையும் பெரிதும் உணர்ந்து போதித்தவர்கள். இந்த சத்தியங்களை பிள்ளைக்காலப் பருவத்திலேயே வீட்டிலும் சபையிலும் கற்று வளர்ந்து கிறிஸ்துவை அடைந்தபின் வாழ்க்கையில் பின்பற்றி வந்திருந்தவர்கள். நிச்சயம் அவர்கள் இந்த அடிப்படையில்தான் தங்களுடைய போதனைகளை இந்தியாவிலும் தந்திருந்திருப்பார்கள். இவர்கள் இருவருடைய பணிகளின் பலாபலன்களும் நம்மினத்தில் தொடர்ந்து நிலைக்காமல் போய்விட்டன. இன்று அவர்களுடைய பெயர்கள் நமக்குத் தெரிந்திருக்கின்ற அளவுக்கு அவர்களுடைய நம்பிக்கைகளையும், போதனைகளையும் நாம் அறிந்துவைத்திருக்கவில்லை. ஹீரோக்களைப் போல அவர்களை நம்மால் பார்க்கவும் நடத்தவும் மட்டுமே முடிகிறதே தவிர அவர்கள் விசுவாசித்தவற்றை நாம் அறிந்து பின்பற்றுவதுமில்லை, அவர்களைப் போல வாழ்ந்தும் வருவதில்லை.

இவர்களுக்குப் பின்னால் நம்மத்தியில் கிறிஸ்தவப் பணிபுரிய வந்தவர்கள் இவர்களைப்போல சீர்திருத்த கிறிஸ்தவர்களாக இருந்ததில்லை. கிறிஸ்தவத்தின் பல சமயப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் நம்மினத்துக்கு வந்து பணிபுரிந்திருந்தாலும் நூற்றுக்குத் தொன்னூறுவீதமான ஊழியங்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கிறிஸ்தவத்தைப் பிரதிபலிப்பவையாகவே இருந்திருக்கின்றன. முக்கியமாக பத்துக்கட்டளைகள் நமக்கு அவசியமில்லை என்று சொல்லுகின்ற டிஸ்பென்சேஷனலிசப் போதனையைப் பின்பற்றுகின்றவர்களாகவே பெரும்பாலும் இருந்திருக்கின்றனர். ஜோன் டார்பியினுடையதும், சார்ள்ஸ் பினியினுடையதும், மூடியினுடையதும் போதனைகளை அறிந்து வைத்திருக்கின்றளவுக்கு நம்மினத்துக் கிறிஸ்தவர்களுக்கு கர்த்தரின் வேதசத்தியங்கள் தெரியாமலிருக்கின்றது. அந்தளவுக்கு இவர்களுடைய போதனைகளின் ஆளுமையை மட்டுமே நம்மினத்துக் கிறிஸ்தவத்தில் பார்க்கிறோம். அமெரிக்காவைச் சேர்ந்த மூடியின் போதனைகளின் ஆளுமையால் அப்போஸ்தல, சீர்திருத்தவாத, பியூரிட்டன் காலத்தைப் பிரதிபலிக்காத ஒருவகை ஆர்மீனியனிச கிறிஸ்தவம் நம்மினத்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, காலூன்றி இன்றும் நம்மக்களை அந்தவிதமாகவே சிந்திக்க வைத்துக்கொண்டிருக்கிறது. இவற்றால் பாதிக்கப்படாத கிறிஸ்தவ டினோமினேஷனோ, நிறுவனமோ நம்மினத்தில் இல்லை. இயேசு கிறிஸ்து தந்திருக்கும் வேதத்தைவிட இவர்களுடைய ஆளுகைக்குக் கீழேயே நம்மினத்துக் கிறிஸ்தவம் இருந்து வருகிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் அப்போஸ்தல, சீர்திருத்தவாத, பியூரிட்டன் காலக் கிறிஸ்தவத்தைப் பிரதிபலித்த தலைசிறந்த கிறிஸ்தவ தலைவர்களாக இருந்த இங்கிலாந்தின் சார்ள்ஸ் ஸ்பர்ஜன், ஜே.சீ. ரைல் போன்றவர்களையோ, அவர்களுடைய கிறிஸ்தவ நம்பிக்கைகளையோ, போதனைகளையோ நாம் அறிந்து வைத்திருக்கவில்லை. பிரசங்கிகளுக்கெல்லாம் பீரங்கியாக இருந்த, கிறிஸ்தவ போதனைகளை அப்போஸ்தலர்களைப்போல பிரசங்கித்துப் போதித்து அறிமுகப்படுத்திய ஸ்பர்ஜனைப் பற்றிப் பெரிதும் அறிந்து வைத்திருக்காமலும், அவருடைய வேத விசுவாசங்களைக் கொண்டிராமலும் வாழ்ந்து வருகிறது நம்மினத்துக் கிறிஸ்தவம். ஸ்பர்ஜனும், ரைலும் பத்துக்கட்டளைகளின் நிரந்தரத் தன்மையை ஆணித்தரமாக விசுவாசித்துப் போதித்து அதன்படி வாழ்ந்து வந்தவர்கள். கிறிஸ்தவர்களின் வாழ்க்கையில் பத்துக்கட்டளைகள் நிரந்தரமாக இருக்க வேண்டியதைப் பற்றி எத்தனை பிரசங்கங்களையும், போதனைகளையும் ஸ்பர்ஜன் அளித்திருக்கிறார். அது பற்றி ஜே.சீ. ரைல் எத்தனை தடவை எழுதியிருக்கிறார். இதெல்லாம் தெரியாமல் தடுமாறுகின்ற இறையியல் நம்பிக்கைகளை மட்டும் கொண்டு கிறிஸ்துவின் பெயரில் இருந்து வருகிறதே நம்மினம்.

நான் இதுவரை விளக்கிய வரலாற்று இறையியல் அம்சங்களே பத்துக்கட்டளைகளின் அவசியத்தையும், இன்றியமையாத தன்மையையும் அறிந்துகொள்ளாமல் கிறிஸ்தவர்கள் நம்மினத்தில் வாழ்ந்து வருவதற்குக் காரணம். எது நீதி, எது பாவம் என்று நாமறிந்துகொள்ளுவதற்காக நமக்குத் தரப்பட்டிருக்கும் ஒரே கருவியான பத்துக்கட்டளைகளை அலட்சியம் செய்து கிறிஸ்தவ வேடம்போட்டு வாழ்ந்து வருவதாலேயே நம்மினத்தில் புறஜாதிப் பண்பாடுகளும், பாரம்பரியமும் சிலந்தி வலையைப் போல நம்மைச் சுற்றி இன்றும் ஆவிக்குரிய வலிமையில்லாதவர்களாக நம்மை இருந்துவரச் செய்கிறது. இந்துப் பண்பாட்டில் இருந்துவருகின்ற சமூகப் போலித்தனங்களை நாம் இன்றும் தொடர்கிறோமே என்ற உணர்வுகூட இல்லாமல் அவற்றை கிறிஸ்தவ வாழ்க்கையின் ஒரு பகுதியாகக் கருதி நம்மவர்கள் வாழ்ந்து வருவதற்கு என்ன காரணம்? கிறிஸ்தவ வேதத்தைப் பயன்படுத்தி அவற்றைத் தோலுரித்து இனங்கண்டு வெறுத்துத் தூக்கியெறியக்கூடிய இருதயமும் இல்லாமல் இருப்பதற்குக் காரணம் என்ன? இதற்கெல்லாம் வழிகாட்டக்கூடியதாக நமக்குக் கர்த்தர் தந்திருக்கும் பத்துக்கட்டளைகளை நாம் அலட்சியப்படுத்தி வாழ்ந்துவருவதால்தான்.

‘பத்துக்கட்டளைகள் இல்லாவிட்டால் பாவம் என்று ஒன்று இல்லை’ என்று பவுல் ரோமரில் சொல்லியிருப்பதன் அர்த்தம் உங்களுக்குப் புரிகிறதா? எக்காலத்துக்கும் பாவத்தைப் பாவமாகக் காட்டக்கூடியது பத்துக்கட்டளைகள் மட்டுமே. அதற்கு நாம் இடங்கொடுக்காவிட்டால் பாவ உணர்வே இல்லாமல்தான் நாம் வாழ்ந்து வரமுடியும்? பாவத்தைப் பாவமாகப் பார்க்க நமக்கு உதவும் மூக்குக் கண்ணாடி பத்துக்கட்டளைகள். கிறிஸ்தவனுக்கு அது எப்படி அவசியமில்லாமல் போகும்? ஆதாமால் ஏதேன் தோட்டத்தில் பாவமில்லாமல் பத்துக்கட்டளைகளை நிறைவேற்றி வாழமுடிந்தது. அவன் பாவத்தில் விழுந்தபிறகு பாவத்தை அடையாளம் காணவும், அதிலிருந்து விலகிக் கடவுளை இரட்சிப்புக்காக நாடி ஓடவும் அவனுக்கு பத்துக்கட்டளைகள் தேவையாக இருந்தது. கிருபையை அவன் அடைந்தபிறகு மறுபடியும் நீதியோடு (பூரணமில்லாமல்) பாவமற்ற வாழ்க்கையை வாழவும் அவனுக்கு பத்துக்கட்டளைகள் அவசியமாக இருந்தது. பரலோகத்தில் மட்டுந்தான் நமக்குப் பத்துக்கட்டளைகள் அவசியமில்லை. ஏன் தெரியுமா? அங்கே நாம் பாவத்தின் சாயலே இல்லாமல் நிரந்தரமாக எக்காலத்துக்கும் பூரணமாகப் பத்துக்கட்டளைகளை மட்டுமே நம்மில் கொண்டிருந்து வாழப்போவதால்தான்.

இதுவரை பத்துக்கட்டளைகளுக்கு உங்கள் வாழ்க்கையில் அக்கறை காட்டாமல் வாழ்ந்திருக்கின்றீர்களா? அதை இன்றே விட்டுவிடுங்கள். பாவியான மனிதன் இயேசுவிடம் வர அவனுக்கு சொல்ல வேண்டிய சுவிசேஷத்தை பத்துக்கட்டளைகள் இல்லாமல் விளக்க முடியாது. பாவத்தை அதுமட்டுமே விளக்குகின்றது. நீங்கள் பாவத்தை செய்யாமல் நீதியாக வாழ அது இல்லாமல் ஒருபோதும் முடியாது. கிறிஸ்துவை நாம் விசுவாசித்தபோதும் நாம் அவரைப்போல நீதியானவர்களாக மாறிவிடவில்லை. நாம் பரிசுத்தமாகுவதற்காக இரட்சிக்கப்பட்ட பாவிகளே. நாம் பத்துக்கட்டளைகளை வாழ்க்கையில் பின்பற்றினால் மட்டுமே பரிசுத்தமாக முடியும். வெறும் அல்லேலூயாக்களும், ஸ்தோத்திரங்களும் நம்மைப் பரிசுத்தமாக்கிவிடாது. பத்துக்கட்டளைகளை நம்மில் நாம் நிறைவேற்றுகிறபோதே பாவம் போய் பரிசுத்தம் ஏற்படுகின்றது. காலை சுற்றியிருக்கும் பாம்பைப் பார்த்து ‘நீ போ’ என்றால் அது போய்விடுமா? அதைப் போகவைக்க வேண்டியது நம் கடமையில்லையா? அது போவதற்கு நாம் என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்தால் மட்டுமே அது போகும். அதேபோல்தான் நம்மில் இருக்கும், நாம் செய்து வரும் பாவங்களும். அவற்றை ஒவ்வொரு நாளும் நினைவிலும், செயலிலும் இருந்து போக்க நமக்கு பத்துக்கட்டளைகள் தேவையாக இருக்கிறது. பத்துக்கட்டளைகளைக்கொண்டு பாவங்களை அடையாளங்கண்டு கிருபையினதும், ஆவியினுடையதும் துணையால் நாம் பாவங்களை நம் வாழ்க்கையில் இருந்து அகற்றி பத்துக்கட்டளைகள் விளக்கும் நீதியான காரியங்களை நாம் செய்து வரவேண்டும். இப்போதாவது பத்துக்கட்டளைகளின் அவசியத்தை உணர்கிறீர்களா? இன்றே அவற்றை சிந்தனையோடு வாசிக்க ஆரம்பியுங்கள். அதுபற்றி விளக்கி ‘பத்துக்கட்டளைகள்’ என்ற தலைப்பில் நான் தமிழில் வெளியிட்டுள்ள நூலை வாங்கி வாசியுங்கள். பத்துக்கட்டளைகள் பற்றி நான் இனியும் அடுத்த இதழில் தொடர்ந்து எழுதவிருக்கிறேன். அப்போது மறுபடியும் சந்திப்போம்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s