சொல்ல வேண்டியவிதத்தில் சொல்லுவோம் சுவிசேஷம்

நீங்கள் யாரோடாவது கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ளவோ அல்லது பிரசங்கம் செய்யவோ முயற்சிப்பீர்களாயின் அந்தச் செய்தியை நியாயப்பிரமாணத்தின் அடிப்படையில் விளக்காவிட்டால் அது மெய்யான சுவிசேஷ செய்தியாக இருக்கமுடியாது. இன்னொரு வகையில் சொல்லப்போனால் நியாயப்பிரமாணம் இல்லாமல் நீங்கள் சுவிசேஷ செய்தியை சொல்லமுடியாது. சுவிசேஷத்தின் அடித்தளம் நியாயப்பிரமாணம் அல்ல; கிறிஸ்து மட்டுமே. இருந்தபோதும் ஒரு தனி மனிதன் கிறிஸ்துவிடம் நிச்சயம் வரவேண்டும் என்று அவனைப் பார்த்து நீங்கள் சொல்லுவதற்கு நியாயப்பிரமாணம் நிச்சயம் அவசியம். இதை நான் தெளிவாக விளக்குவது அவசியம்.

பிரசங்க இளவரசன் என்று அழைக்கப்பட்ட ஸ்பர்ஜன் இதுபற்றி சொல்லியிருப்பதைக் கவனியுங்கள், ‘எந்த மனிதனும் நியாயப்பிரமாணத்தைப் பிரசங்கம் செய்யாமல் சுவிசேஷம் சொல்ல முடியும் என்று நான் நம்பவில்லை. நியாயப்பிரமாணம் தான் ஊசி; ஒரு மனிதனுடைய இருதயத்தில் சுவிசேஷமாகிய பட்டுநூலைத் தைக்கவேண்டுமானால் நியாயப்பிரமாணமாகிய ஊசியை முதலில் அவனுடைய இருதயத்துக்குள் நுழைக்காமல் அதைச் செய்ய முடியாது. நியாயப்பிரமாணத்தை ஒரு மனிதன் புரிந்துகொள்ளவில்லையென்றால் அவன் தான் பாவியென்பதை உணரமாட்டான். அவர்கள் மனப்பூர்வமாக இருதயத்தில் பாவிகளாக உணராவிட்டால் பாவங்களுக்காக செலுத்தப்பட்ட பலியின் மகத்துவத்தை உணர மாட்டார்கள். நியாயப்பிரமாணத்தால் முதலில் காயப்படாதவனுக்கு குணமாவதற்கு வழியில்லை. நியாயப்பிரமாணம் அவனைக் கொல்லாவிட்டால் அவன் உயிர்ப்பிக்கப்படுவதற்கு இடமில்லை.’ ஸ்பர்ஜனின் வார்த்தைகள் பொன்னானவை.

அதேபோல் 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரசங்கியும், வேதத்திற்கு வியாக்கியானம் எழுதியவருமான மத்தியூ ஹென்றி, ‘கடவுளால் தெரிவு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டிருக்கும் சாதனத்தைத் தவிர (நியாயப்பிரமாணம்) வேறு எந்த சாதனமும் மனிதனுடைய பாவத்தை அவனுக்கு உணர்த்தும் என்று நினைக்கிறவன் வெறும் முட்டாள்’ என்று எழுதியிருக்கிறார். ‘நியாயப்பிரமாணத்தின் (பத்துக்கட்டளைகள்) தன்மையை அறியாதவன் பாவத்தின் தன்மையை அறியமாட்டான். பாவத்தின் தன்மையை அறியாதவன் இரட்சகரை அறிய வழியில்லை’ என்று சொல்லியிருக்கிறார் மோட்ச பிராயாணத்தை எழுதிய ஜோன் பனியன். அமெரிக்க இந்தியர்களுக்கு சுவிசேஷம் சொல்லச் சென்ற ஜோன் எலியட் என்ற பியூரிட்டன் மிஷனரி யோவான் 3:16ஐ அவர்களுக்கு முதலில் மொழிபெயர்த்து சொல்லாமல் பத்துக்கட்டளைகளையே மொழிபெயர்த்தார். ஏன் தெரியுமா? எல்லா மனிதர்களுக்குமான நீதிச் சட்டத்தைத் தந்திருக்கும் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதை அவர்கள் முதலில் உணர்ந்தாலேயே யோவான் 3:16ன் பொருளை அவர்களால் புரிந்துகொள்ள முடியும் என்பதால்தான். அதேமாதிரிதான் நியூஹெப்பிரிதீஸ் என்ற பகுதியில் வாழ்ந்த, மனிதர்களை சாப்பிடும் மக்கள் மத்தியில் சுவிசேஷப் பணி செய்யச்சென்ற ஜோன் பேட்டனும் பத்துக்கட்டளைகளையே அவர்களுக்கு முதலில் போதித்தார். ஏன் தெரியுமா? இயேசு கிறிஸ்துவோடு ஒரு மனிதன் உறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமானால் முதலில் அவன் கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் இருக்கும் உறவில் ஏற்பட்டிருக்கும் பெரும் பிரிவை உணர வேண்டும் என்பதற்காகத்தான்.

சுவிசேஷம் சொல்லுவதற்கு அவசியமான ஒரு அற்புத வழி இருக்கிறதா? என்று நீங்கள் என்னைப் பார்த்துக்கேட்டால் அப்படியொரு வழியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை என்றுதான் நான் பதிலளிப்பேன். உண்மையில் அத்தகைய வழி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. சுவிசேஷத்தை அறிவிக்கின்ற காரியத்தைப் பற்றி நாம் அலசிப் பேச ஆரம்பிக்கின்றபோது நாம் அதற்கான வழிமுறைகளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கக்கூடாது. அதை செய்வதற்கான வழிமுறைகளைவிட அந்த செய்தியின் உள்ளடக்கத்தைப் பற்றி முதலில் முக்கியமாக சிந்திக்க வேண்டும்.

கடவுளை அறியாமல் இருக்கும் தனிமனிதனொருவனுக்கு நாம் எத்தகைய செய்தியை அறிவிக்க வேண்டும்? இயேசு கிறிஸ்துவைப் பற்றிய செய்தியாக அது இருக்க வேண்டும் என்று நீங்கள் நிச்சயம் சொல்லுவீர்கள். ஆனால், இயேசு கிறிஸ்துவை அவனுக்கு நாம் எப்படி அறிமுகப்படுத்துவது? அவனுக்கு கிறிஸ்துவைப் பற்றி நாம் என்ன விஷயங்களை சொல்ல வேண்டும். எப்படி, எங்கே நாம் ஆரம்பிப்பது? சமீபத்தில் நமது பத்திரிகையை நீண்ட காலமாக வாசிக்கும் கேரளத்து வாசகர் ஒருவர் இந்தக் கேள்வியைக் கேட்யிருந்தார்.

கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் சகல அம்சங்களைப் பற்றி விபரமாக எழுதுவதல்ல என்னுடைய நோக்கம். என்னுடைய நோக்கமெல்லாம் சுவிசேஷம் சுவிசேஷமாகத் தனிமனிதனொருவனுக்கோ அல்லது மனித குலத்துக்கோ பயன்பட வேண்டுமானால் நியாயப்பிரமாணமில்லாமல் அதைப் பிரசங்கிக்கவோ அறிவிக்கவோ முடியாது என்பதை சுட்டிக்காட்டுவதுதான். ஆகவே, நாம் அறிவிக்கின்ற கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் காணப்பட வேண்டிய மூன்று முக்கிய அம்சங்களை இந்த ஆக்கத்தில் நான் உங்களுக்கு விளக்கிக்காட்ட விரும்புகிறேன்.

அந்த மூன்று அம்சங்களையும் விளக்குவதற்கு முன்பாக நியாயப்பிரமாணம் என்றால் என்ன என்பதை நான் விளக்காமல் இருக்க முடியாது. இதை வாசிக்கின்ற எல்லோருமே அது என்ன என்பதை அறிந்து உணர்ந்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. வேதத்தில் நான்கு விதத்தில் நியாயப்பிரமாணம் (Law) என்ற பதம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

  1. அது முழு பழைய ஏற்பாட்டு நூல்களையும் குறிக்கும் பதமாக விளக்கப்படுகிறது.
  2. சில சமயங்களில் முழு வேதத்தையும் குறிக்கும் விதத்தில் இது பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
  3. மோசேக்கு கர்த்தர் தந்த கட்டளைகள் அனைத்தையும் குறிக்கும் பதமாக விளக்கப்பட்டிருக்கின்றது.
  4. பத்துக்கட்டளைகளை மட்டும் குறிக்கும் பதமாக விளக்கப் பட்டிருக்கின்றது.

நியாயப்பிரமாணம் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கும் வேதப்பகுதியை அதன் சந்தர்ப்ப சூழ்நிலையின் அடிப்படையில் படிக்கின்றபோது அந்த வார்த்தை எந்த அர்த்தத்தில் அந்தப் பகுதியில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

நியாயப்பிரமாணம் வேதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்ற நான்கு விதங்களில் நான்காவது அர்த்தத்தில் மட்டுமே நான் நியாயப்பிரமாணம் என்ற பதத்தை இந்த ஆக்கம் முழுவதிலும் விளக்கப் போகிறேன். அதாவது, சுவிசேஷத்தில் காணப்பட வேண்டிய முக்கிய அம்சமான கர்த்தரின் நீதிச் சட்டங்களான, ஒழுக்க நியதிகளான பத்துக்கட்டளைகளையே இங்கே நியாயப்பிரமாணம் என்ற பதத்தின் மூலம் நான் குறிப்பிடுகிறேன். பத்துக்கட்டளைகளின் அடிப்படையில் சுவிசேஷத்தில் காணப்பட வேண்டிய மூன்று அம்சங்கள் யாவை?

1. கடவுள்

சுவிசேஷம் சொல்லும்போது கடவுளைப் பற்றி விளக்க வேண்டும். இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? இருக்கக்கூடாது. கடவுளின் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவைப் பற்றி நீங்கள் சுவிசேஷத்தில் விளக்குவதாக இருந்தால் அதைக் கேட்கிறவர்களுக்கு கடவுளைப் பற்றி எப்படி விளக்காமல் இருக்கமுடியும்? வேதம் போதிக்கும் சுவிசேஷம் (கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி) கடவுளைப் பற்றியது. அந்தச் சுவிசேஷம் கடவுள் யார் என்பதையும், அவருடைய குணாதிசயங்கள் யாவை என்பதையும், அவருடைய படைப்புயிர்களான நமக்காக அவர் ஏற்படுத்தியிருக்கும் வாழ்க்கை முறை எது என்பதையும், நம்மிடம் அவர் எதை எதிர்பார்க்கிறார் என்பதையும் விளக்குகின்றது. சகல வல்லவரான, உலகைப் படைத்தவரான, சகலத்தையும் ஆளுகின்றவரான கடவுளைப் பற்றிப் பேசாத சுவிசேஷம் கிறிஸ்துவின் சுவிசேஷமாக இருக்க முடியாது.

நாம் வாழ்வதற்கே கடவுள்தான் காரணம் என்பதை சுவிசேஷம் விளக்குகிறது. நாம் அனுபவிக்கும் அனைத்தும் அவருக்கே சொந்தம் என்பதை அது சுட்டிக்காட்டுகிறது. நம்மை அவர் படைத்தார் என்பதையும், அவரை ஆராதித்து அவருடைய மகிமைக்காக வாழ்வதற்காகவே அவர் நம்மைப் படைத்தார் என்பதையும் சுவிசேஷம் சொல்லுகிறது. அப்போஸ் 13:16ஐ வாசித்துப் பாருங்கள். அங்கே பவுல் அந்தியோகியா ஜெப ஆலயத்தில் செய்தி கொடுக்கிறார். அங்கே யூத மக்களுக்கு முன்பாக அவர் செய்தி கொடுப்பதைப் பார்க்கிறோம். இந்த யூதர்களுக்கு பழைய ஏற்பாடு நன்றாகத் தெரிந்திருந்தது. அவர்களுக்கு கடவுளைப் பற்றியும் நியாயப்பிரமாணத்தைப் பற்றியும் தெரிந்திருந்தது. ஆகவே, பவுல் அவர்களுக்கு கடவுளைப் பற்றி அதிகம் விளக்க வேண்டிய அவசியமிருக்கவில்லை. இருந்தாலும் அவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்கின்ற பவுல் அவர்கள் அறிந்திருந்த கடவுளை அவர்களுக்கு நினைப்பூட்டியே அந்த சுவிசேஷத்தை விளக்கினார். அவர்கள் நம்பிய கடவுளின் அடிப்படையிலேயே அங்கு சுவிசேஷம் அன்று அறிவிக்கப்பட்டது. பவுல் தன் செய்தியை ஆரம்பித்த விதத்தைக் கவனியுங்கள், ‘இஸ்ரவேலரே, தேவனுக்கு பயந்து நடக்கிற சகல ஜனங்களே கேளுங்கள்’ என்றார் பவுல். அதற்குப் பிறகு 17-22ம் வசனங்கள்வரை அவர்களுக்கு கடவுள் அவர்கள் மத்தியில் செய்திருக்கின்ற செயல்களை விளக்குகிறார். பவுல் தான் இதுவரை விளக்கிய கடவுளின் செயல்களின் அடிப்படையில் 23ம் வசனத்தில் இயேசு கிறிஸ்துவை பின்வருமாறு அறிமுகப்படுத்துகிறார், ‘தேவன் தமது வாக்குத்தத்தத்தின்படியே இஸ்ரவேலருக்கு இரட்சகராக இயேசுவை எழும்பப்பண்ணினார்’. கடவுளை, யேகோவா தேவனை நம்பிய யூதர்களுக்கு மத்தியில் சுவிசேஷத்தை அறிவிக்கச் சென்ற பவுல், அவர்களுக்கு கடவுளைப் பற்றி நன்றாகத் தெரிந்திருக்கிறதுதானே என்ற அலட்சிய நோக்கில் அவரைப்பற்றி அறிவிப்பதை நிறுத்திக்கொள்ளவில்லை. எந்தக் கடவுளை அவர்கள் அறிந்திருந்தார்களோ, எந்தக் கடவுளை அவர்கள் நம்பினார்களோ அந்தக்கடவுளைப் பற்றி அவர்களுக்கு சொல்லி இயேசுவை அறிமுகப்படுத்தினார்.

அதேவேளை பவுல் புறஜாதியாருக்கு சுவிசேஷத்தை அறிவிக்கும்போது  (அப்போஸ்தலர் 17) கடவுளைப் பற்றி சொல்லாமல் அதை அறிவிக்கவில்லை. யூதர்கள் மத்தியில் அவர்கள் அறிந்திருந்த கடவுளைப்பற்றி அறிவித்து பவுல் சுவிசேஷத்தை ஆரம்பித்தார். புறஜாதியார் மத்தியில் அவர்கள் அறிந்திராத கடவுளைப்பற்றி விளக்கி பவுல் சுவிசேஷத்தை ஆரம்பிக்கிறார். புறஜாதியார் மத்தியில் பவுல் சுவிசேஷத்தை ஆரம்பிக்கும் விதத்தைக் கவனியுங்கள், ‘எந்த விஷயத்திலும் நீங்கள் மிகுந்த தேவபக்தியுள்ளவர்கள் என்று காண்கிறேன்’ என்று ஆரம்பித்தார் பவுல். அப்படி அவர் சொன்னதற்குக் காரணமென்ன? சிலை வணக்கத்தில் ஈடுபட்டிருந்த அந்த அத்தேனே பட்டண மக்கள் வாழ்ந்த நகரத்தில் ‘அறியப்படாத தேவனுக்கு’ என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தை அவர் கண்டதுதான் அதற்குக் காரணம். அது பவுலை சிந்திக்க வைத்தது. சிலைகளைக் கடவுள் என்று நம்பி இந்த மக்கள் வாழ்ந்தபோதும் அந்த சிலைகளையும் மீறிக் கடவுள் இருந்துவிட முடியும் என்ற சந்தேகத்தில் அவர்கள் ‘அறிந்திராத’ அந்தக் கடவுளுக்காகவும் ஒரு பலிபீடத்தை அவர்கள் வைத்திருந்தார்கள். நம் நம்பிக்கைகளை மீறியும் ஒரு கடவுள் இருந்துவிட்டால் அவருடைய துணையும் நமக்குத் தேவை என்ற எண்ணத்தில் அவர்கள் அதைச் செய்திருந்தார்கள். அதைப் பயன்படுத்திக்கொண்ட பவுல் அவர்களுக்கு ‘அவர்கள் அறியாமல் ஆராதிக்கின்ற’ அந்தக் கடவுளைப்பற்றி அவர் அறிவித்தார். பவுல் அத்தேனேயருக்கு சுவிசேஷத்தை சொல்லும்போது கடவுளைப்பற்றித் தெளிவாக விளக்கியே ஆரம்பித்திருப்பதைக் காண்கிறோம். அதற்குப் பிறகுதான் அவர்கள் அறியாமலிருக்கின்ற அந்தக் கடவுளே ஒரு நாளைக் குறித்து அந்த நாளிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக் கொண்டு (இயேசு கிறிஸ்து) பூலோகத்தை நியாயந்தீர்ப்பார் என்றும் அதனால் அவர்கள் உடனடியாக மனந்திரும்ப வேண்டும் என்றும் அறிவித்தார்.

பவுல் யூத ஜெபஆலயத்திலும், அத்தேனே மக்களுக்கு முன்னும் பிரசங்கித்த சுவிசேஷத்தில் கடவுளின் நீதிச் சட்டமான பத்துக்கட்டளைகள் இருப்பதை உங்களால் பார்க்க முடிகிறதா? பத்துக்கட்டளைகள் இல்லாமல் பவுலால் சுவிசேஷத்தைப் பிரசங்கித்திருக்க முடியாது தெரியுமா? பத்துக்கட்டளைகளான நியாயப்பிரமாணமே கடவுளைப் பற்றித் தெளிவாக விளக்கும் கடவுளின் வெளிப்படுத்தலாக இருக்கிறது. இந்தக் கட்டளைகளைக் கடவுள் மோசேக்கு சீனாய் மலையில் கற்பலகைகளில் தன் கையாலேயே எழுதி எழுத்தில் கொடுத்தார். அது மோசேயின் கையில் கொடுக்கப்படுவதற்கு முன் ஆதாமின் இருதயத்தில் எழுதப்பட்டிருந்தது. இந்தக் கட்டளைகள் இல்லாமல் கடவுளை அறிந்துகொள்ள வழியில்லை. இந்தக் கட்டளைகளே கடவுளைப் பற்றி நமக்குத் தெளிவாக வெளிப்படுத்தும் கடவுளின் ஒரே வெளிப்படுத்தலாக இருக்கின்றன. கடவுளைப் பற்றி அறிந்துகொள்ள நமக்கு வேறு சாதனங்கள் இல்லை. பத்துக்கட்டளைகள் கடவுளைப்பற்றி எப்படி விளக்குகின்றன என்பதைக் கவனியுங்கள்.

முதலாம் கட்டளை கடவுள் இருக்கிறார் என்பதை விவாதிக்காமல் அவர் இருக்கிறார் என்று ஆணித்தரமாக அறிவிக்கின்றன. தான் ‘இருக்கிறவராக’ இருக்கிறேன் என்கிறார் கடவுள். கடவுள் இருக்கிறாரா, இல்லையா? என்ற மனிதனின் ஆணவ விவாதங்களுக்கு இந்தக் கட்டளை முடிவுகட்டுகிறது. அதை விவாதிக்கின்ற எந்த உரிமையும் படைக்கப்பட்டவனான மனிதனுக்கு இல்லை. படைக்கப்பட்டவன் படைத்தவருடைய ‘இருக்கும் தன்மையை’ விவாதிப்பது எத்தனை முட்டாள்தனம். கடவுள் காலங்களுக்கு அப்பாற்பட்டவர் காலம் அவரைக் கட்டுப்படுத்த முடியாது. காலங்களை உருவாக்கியவர் கடவுளே. நாம் சுவாசிப்பதும், புசிப்பதும், வாழ்வதும் அவராலேயே. மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாதபடி கடவுள் இருக்கிறார். அப்படி ‘இருக்கிறவரான’ கடவுள் தம்மை மனிதர்களுக்கு வரலாற்றில் வெளிப்படுத்தினார். இங்கேதான் பத்துக்கட்டளைகளின் (நியாயப்பிரமாணம்) அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் காண்கிறோம். பத்துக்கட்டளைகள் நமக்கு கடவுள் யார் என்பதைத் தெரிவிக்கின்றன. அவை கடவுள் நம்மிடம் எதை எதிர்பார்க்கிறார் என்று தெரிவிக்கின்றன. பத்துக்கட்டளைகளே கடவுளுடைய குணாதிசயங்களையும் அவருடைய ஒழுக்க நீதியையும் நமக்கு விளக்குகின்றன. அதனால்தான் பத்துக்கட்டளைகள் மனிதனுக்கு அவன் வாழ்க்கையில் தவறாது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நீதியை விளக்கும் ஒரே சாதனமாக இருக்கிறது. இது முழு மனித குலத்துக்கும் கொடுக்கப்பட்டது; சொந்தமானது. ஒழுக்க நீதிச் சட்டங்களான பத்துக்கட்டளைகள் விளக்கும் ஒழுக்க நீதிகள் கடவுளின் நீதியான குணாதிசயங்களின் அடிப்படையில் அமைந்தவை. கடவுளை அவருடைய நீதிச்சட்டங்களிலிருந்து பிரிக்க முடியாது. அவருடைய நீதிச்சட்டங்கள் இல்லாமல் அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியாது. அவருடைய நீதிச்சட்டங்களான பத்துக்கட்டளைகளை நிராகரிப்பது அவரையே நிராகரிப்பதற்கு சமமானதாகும். பத்துக்கட்டளைகள் இல்லாமல் எப்படி அவரை நாம் அறிந்துகொள்ள முடியும். அது இல்லாமல் சுவிசேஷத்தை எப்படிச் சொல்ல முடியும்?

இரண்டாம் கட்டளையைக் கவனியுங்கள். அது சகலவிதமான சிலை வழிபாட்டையும் நிராகரிக்கின்றது. வானத்துக்கு கீழேயும், பூமியிலேயும், பூமிக்கு கீழேயும், தண்ணீரிலும், தண்ணீருக்குக் கீழேயும் இருக்கும் எதைக்கொண்டும் கடவுளை உருவமாகப் பார்த்து வழிபடுவதை இந்தக் கட்டளை தடைசெய்கிறது. சிலை வழிபாட்டை அது எந்த ரூபத்திலிருந்தாலும் கடவுள் வெறுக்கிறார்; நிராகரிக்கிறார். கடவுளை ஒரு பொருளின் மூலம் பார்ப்பதை அவர் விரும்பவில்லை. அவர் படைத்த பொருட்களை வைத்து அதற்குள் அவரை அடக்கப்பார்ப்பது (சிலுவை, படம் முதற்கொண்டு) அவரது நீதியான குணாதிசயங்களுக்கெல்லாம் எதிரானது. அவருடைய குணாதிசயங்களையும், வல்லமையையும், நீதியையும் கல்லிலோ, மரத்திலோ, படத்திலோ அடக்க முடியுமா? எங்கும் இருக்கும், காலங்களையெல்லாம் மீறியவரான, ஜீவனும், ஆவியானவருமான கடவுளை நாம் எப்படி உயிரற்ற பொருட்களில் அடக்கி வைக்கமுடியும். உருவ வழிபாடு கடவுளுக்கெதிரானது.

இந்த இரண்டாம் கட்டளை கடவுளை நாம் எப்படி வழிபடக்கூடாது என்பதைத் தீர்க்கமாக அறிவிக்கிறதைப் பார்க்கிறீர்கள் அல்லவா? இதேபோல்தான் மனிதநேயத்தை கடவுளைபோல வழிபடுவதும். இன்றைக்கு மனிதநேயம் (Humanism) அநேகருக்கு கடவுளாகிவிட்டது. மனிதநேயத்துக்குக் காரணமே கடவுள் மனிதனை மனிதனாகப் படைத்ததுதான் என்பது மனிதனுக்குப் புரியவில்லை. படைத்தவரை விட்டுவிட்டு படைத்தவர் ஏற்படுத்திய குணாதிசயத்தைக் கடவுளாகப் பார்க்கலாமா? அன்பு அநேகருக்கு கடவுளாகிவிட்டது. அதான் அன்பே சிவம் என்கிறான் மனிதன். இதிலிருந்து என்ன தெரிகிறது? கடவுளைத்தவிர மனிதன் வேறு எதையும் வழிபடத் தயாராக இருக்கிறான்; தன்னையேகூட. கடவுளுடைய பேச்சைக் கேட்டு அவர் வழியில் அவரை வழிபடுவது அவனுக்குப் பிடிக்காததாக இருக்கிறது. இந்த சமுதாயம் அநேக விஷயங்களை வழிபட்டு வருகிறது; கடவுளைத் தவிர. இரண்டாம் கட்டளை அதைத் தடைசெய்கிறது. கடவுளை அவரது கட்டளையைப் பின்பற்றி மட்டுமே வழிபட வேண்டும் என்று அது ஆணித்தரமாக சொல்லுகிறது.

மனிதனுக்கு கடவுளைப் பற்றித் தெரியவில்லை. தெரியாதவனாக இருந்தும் கேடான இருதயத்தை அவன் கொண்டிருப்பதால் அவர் இருப்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறான். அவரை அவனுடைய இருதயம் எதிர்க்கிறது. அவருடைய இடத்தில் அவன் வேறெதையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறான்; அவரைத் தவிர. பார்த்தீர்களா! பத்துக்கட்டளைகள் இல்லாமல் கடவுளைப்பற்றி மனிதனுக்கு எதை வைத்து சொல்வீர்கள்? நீங்கள் அவனுக்கு காட்டப்போகும் இயேசு கிறிஸ்துவை எப்படி பத்துக்கட்டளைகள் இல்லாமல் அவனுக்கு அறிமுகப்படுத்த முடியும்? கடவுளைப்பற்றி பவுலைப்போல விளக்கிய பிறகுதான் அவருடைய ஒரே மகனான, அவர் அனுப்பிய கிறிஸ்துவைப்பற்றிச் சொல்ல முடியும். பத்துக்கட்டளைகள் இல்லாவிட்டால் நமக்கு சுவிசேஷம் சொல்லுவதற்கு வழியில்லை தெரியுமா? பத்துக்கட்டளைகளே கடவுளைப்பற்றித் தெளிவாக விளக்குகின்ற ஒரே சாதனம். பத்துக்கட்டளைகள் இல்லாத சுவிசேஷம் கிறிஸ்துவின் சுவிசேஷம் இல்லை. இதற்காக நான் பத்துக்கட்டளைகளை சுவிசேஷத்தில் ஒவ்வொரு முறையும் விளக்குங்கள் என்று சொல்ல வரவில்லை. சுவிசேஷத்தில் அதைக் கொண்டுவராமல் கடவுளைப்பற்றி விளக்குவதற்கு வழியே இல்லை என்பதை நீங்கள் உணரவேண்டும் என்றுதான் அழுத்தமாக சொல்ல விரும்புகிறேன். சுவிசேஷத்தில் கடவுளைப்பற்றி நாம் சொல்ல முனைகிறபோது பத்துக்கட்டளைகளைத்தான் நாம் நாடி ஓடவேண்டியிருக்கிறது. கடவுளில்லாத சுவிசேஷம் சுவிசேஷமல்ல; பத்துக்கட்டளைகளை விளக்காமல் கடவுளைப்பற்றி விளக்க வழியில்லை; கடவுளைப் பற்றி விளக்காமல் கிறிஸ்துவை அறிமுகப்படுத்த வழியில்லை. நீங்கள் சொல்லுகின்ற சுவிசேஷத்தில் கடவுளைப்பற்றி பத்துக்கட்டளைகளைப் பயன்படுத்தி விளக்குகிறீர்களா? இதுவரையும் இல்லாவிட்டால் இனியாவது ஆரம்பியுங்கள். உங்கள் முன்னால் நிற்கும் கடவுளை அறியாத மனிதனுக்கு கடவுள் தேவையாயிருக்கிறார். அவனுக்கு அவரைப்பற்றி முதலில் சொல்லி கிறிஸ்துவிடம் அழைத்துப் போங்கள்.

2. பாவம்

உங்கள் முன்னால் நிற்கின்ற கடவுளை அறியாத மனிதனுக்கு கடவுளைப்பற்றி சொல்லி விட்டீர்கள். இனி நாம் எங்கே போகவேண்டும்? கடவுளைப்பற்றி விளக்கிவிடுவதோடு சுவிசேஷம் நின்றுவிடுவதில்லை. அடுத்து நான் விளக்கப்போகிற காரியம் மனதுக்கு இதமாக இருக்காது. உங்கள் முன்னால் நிற்கிறவன் உங்கள் நண்பனாக இருக்கலாம், உறவினராக இருக்கலாம். அவனை இப்போது சுவிசேஷம் கேட்கிற நிலைக்கு கொண்டுவர நீங்கள் பலகாலம் ஜெபித்திருக்கலாம். கடவுளைப் பற்றி அவனுக்கு விளக்கிவிட்டீர்கள். இனிக் கடவுளின் ஒரே குமாரனான இயேசுவைப்பற்றியும் அவர் மட்டுமே கொடுக்கக்கூடிய நித்திய வாழ்வைப்பற்றியும் சொல்ல வேண்டும் இல்லையா? உங்கள் முன்னால் நிற்கிறவன் உங்களோடு நட்புரீதியில் தொடர்ந்து பழக வேண்டும் என்பது உங்கள் விருப்பம். அவன் சந்தோஷத்தோடு சுவிசேஷத்தைக் கேட்க வேண்டும் என்பது உங்கள் விருப்பம். அவனுடைய பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு, தேவைகள் சந்திக்கப்பட்டு கிறிஸ்துவிடம் அவன் வரவேண்டும் என்பதும் உங்களுடைய விருப்பம். இப்படியெல்லாம் நீங்கள் யோசிப்பது இயற்கையானதுதான். இதிலெல்லாம் தப்பில்லை.

ஆனால், சுவிசேஷத்தில் அடுத்ததாக அவனுக்கு நீங்கள் சொல்ல வேண்டிய விஷயத்தை யோசித்துப் பார்க்கும்போது அந்த விஷயம் அவனுக்கு சந்தோஷத்தைத் தராது என்பதை உணருகிறீர்கள். அந்த விஷயம் இருதயத்தைத் தாக்குகின்ற விஷயம். அந்த விஷயம் நிச்சயம் உங்கள் முன்னால் நிற்பவனுடைய தேவையைக் கர்த்தரைப் பொறுத்தவரையில் சந்திக்கும். ஆனால், அதுதான் தன்னுடைய தேவையைத் தீர்க்கும் என்பதை அவன் ஒத்துக்கொள்ள மாட்டான். கடவுளை அறியாத எவனுமே மாம்சத்தில் அதை ஒத்துக்கொள்ள மாட்டான். நீங்கள் சொல்லப்போவதைக் கேட்டு அவன் பனிபோல் உறைந்துபோகக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதற்குமேல் அவன் உங்களோடு பேசாமலும், உங்களைவிட்டு விலகியோடவும் கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஆனால், உங்களுடைய இருதயத்தில் உங்களுக்கு நிச்சயம் தெரிகிறது அந்த விஷயத்தை சுவிசேஷத்தில் சொல்லாமல் இருக்க முடியாது. அந்தப் பெரிய விஷயம் என்ன என்பதை உணர்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் முன்னால் நிற்பவரைப் பார்த்து, ‘நண்பா! நீ கடவுள் யார், எப்படிப்பட்டவர் என்று தெரிந்திருப்பது அவசியம், ஆனால் அந்தக் கடவுளை நீ அறியாமல் இருப்பதற்குக் காரணமான உன் பாவங்களில் இருந்து நீ மனந்திரும்ப வேண்டும்’ என்று நீங்கள் சொல்லாமலிருக்க முடியாது. உங்களுடைய மனநிலை எப்படியிருந்தபோதும் இந்த விஷயத்தை, அந்த மனிதன் தான் பாவி என்பதை உணர்ந்து அதிலிருந்து விலகியோட வேண்டும் என்பதை நீங்கள் சொல்லியே தீர வேண்டும். இதை நீங்கள் சொல்லாமல் போனால் அந்த மனிதனுக்கு நீங்கள் சொல்லவேண்டிய சுவிசேஷம் உங்களிடம் இல்லை என்றுதான் அர்த்தம். நீங்கள் அந்த மனிதன் தன் பாவத்தை உணர்ந்து அதிலிருந்து விலகியோடாவிட்டால் அந்த மனிதனோடு நீங்கள் பகிர்ந்துகொள்ள நினைத்திருக்கும் கிறிஸ்து அவனை இரட்சிக்கப்போவதில்லை. பாவத்தில் இருந்து மனந்திரும்புதல் இல்லாவிட்டால் இரட்சிப்புக்கு வழியில்லை. பாவத்தை உணராமலும் அதிலிருந்து மனந்திரும்பாமலும் இருக்கிறவனை கிறிஸ்து இரட்சித்ததாக வரலாறில்லை.

பாவத்தைப்பற்றி வேதத்தில் எது நமக்கு விளக்கந்தருகிறது? பத்துக்கட்டளைகள்தான். அந்த நீதிச் சட்டங்களே முழு மனுக்குலத்துக்கும் நீதிச் சட்டங்களாக இருக்கின்றன. எது நீதியானது, எது பாவம்? என்பதை நமக்கு உணர்த்துகின்ற கர்த்தருடைய ஒரே நியாயப்பிரமாணமாக இருக்கின்றது. இந்த நீதிச் சட்டங்களைத்தான் ஆதாமும், ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் மீறினார்கள். அந்தச் சட்டங்கள் அவர்களுடைய இருதயங்களில் எழுதப்பட்டிருந்தன. அவர்களுக்கு கர்த்தருக்கு முன் எது நீதியானது, எது பாவமானது? என்பது தெரிந்திருந்தது. அவர்கள் நீதியைச் செய்யாமல் பாவத்தைச் செய்தார்கள். இந்தப் பத்துக்கட்டளைகளைத்தான் நாம் ஆதாமோடிருந்து மீறினோம். இந்தக் கட்டளைகளைத்தான் இன்றைக்கு சிறுவர்கள் பெரியவர்கள் என்ற பேதமில்லாமல் உலக மக்கள் அனைவரும் தங்களுடைய வாழ்க்கையில் அன்றாடம் மீறி வருகிறார்கள். இந்தப் பத்துக்கட்டளைகள் ஒவ்வொரு மனிதனையும் கர்த்தருக்கு முன்பாக ‘நீ, பாவி’ என்று குற்றம் சுமத்துகிறது. அதனால்தான் மனிதர்கள் எல்லோருமே கர்த்தருக்கு முன்னால் நியாயப்பிரமாணத்தை மீறுகின்ற குற்றவாளிகளாக நிற்கிறார்கள். இந்த நியாயப்பிரமாணத்தை நாம் மீறுவதனாலேயே பவுல் ரோமர் 3:23ல், ‘எல்லோரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி’ நிற்கிறோம் என்கிறார்.

பாவம் என்றால் என்ன? நியாயப்பிரமாணத்தை மீறுவதே பாவம் என்கிறது வினாவிடை முறையில் தரப்பட்டிருக்கும் இறையியல் நூல். பத்துக்கட்டளையாகிய நியாயப்பிரமாணத்தை மீறுவதே பாவம். அந்தவகையில் தான் பாவத்தை கர்த்தர் விளக்குகிறார். நாம் நினைப்பதெல்லாம் பாவமாகிவிடாது. பாவத்திற்கான விளக்கத்தைக் கர்த்தரே தந்திருக்கிறார். அவரைப் பொறுத்தவரையில் அவருடைய கட்டளைகளை மீறுவதே பாவம். ரோமர் 7:7ல் பவுல், ‘பாவம் இன்னதென்று நியாயப்பிரமாணத்தினால் நான் அறிந்தேனேயன்றி மற்றப்படி அறியவில்லை’ என்கிறார். ரோமர் 3:20ல் பவுல், ‘பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறது’ என்கிறார்.

நமக்கு முன்னால் நிற்கும் மனிதரிடம் எப்படி இதைச் சொல்லுவது என்று உங்கள் மனம் சஞ்சலப்பட்டாலும் அந்த மனிதர் கடவுளுக்கு வெகுதூரத்தில் இருப்பதற்கு ஒரே காரணம் அவருடைய பாவந்தான் என்பதை நீங்கள் சொல்லாமலிருக்க முடியாது. அந்த மனிதன் கர்த்தரின் பத்துக்கட்டளைகளை அறியாதவனாயிருந்தபோதும் ஒவ்வொரு நாளும் அதைத்தான் மீறிக்கொண்டிருக்கிறான். வேறு எதையும்விட கர்த்தரின் கட்டளைகளை அவன் மீறிக்கொண்டிருப்பதே அவனை நியாயப்பிரமாணத்தை மீறுகிறவனாகவும், நியாயத்தீர்ப்பை சந்திக்கவேண்டியவனாகவும் கர்த்தர் முன் நிறுத்திவைக்கிறது. கடவுளுக்கு முன் அந்த மனிதன் நீதியற்றவராக, குற்றவாளியாக, கண்டனத்துக்குரியவனாக, நியாயத்தீர்ப்பை சந்திக்க வேண்டியவனாக நிற்கிறார். இந்த இடத்தில் இன்னொரு முக்கிய விஷயத்தையும் சொல்லியாக வேண்டும். ரோமர் 3:20ல் இருப்பதைப் போல அந்த மனிதன் எல்லா மனிதர்களையும் போல பாவம் செய்து தேவ மகிமையை இழந்தவனாக நிற்கிறான் என்று அறியும்படிச் செய்வது அவசியம். அதைக் கேட்கிற அந்த மனிதன் ஒருவேளை அது உண்மைதான் என்று கூறி உங்களை ஆச்சரியத்துக்குள்ளாக்கலாம். ஏன், எல்லோருந்தான் பாவஞ் செய்திருக்கிறார்கள். நான் மட்டும் இல்லையே என்று சமாதானம் சொல்லி பெரிய கூட்டத்தின் நடுவில் தன்னை மறைத்துக்கொள்ளப் பார்க்கலாம். பாவத்தைப்பற்றி நீங்கள் சொன்ன உண்மை அவன் இருதயத்தைத் தாக்காது, நீ மட்டுமல்ல, எல்லோருக்கும் உன்நிலைதான் என்று அவனை சமாதானப்படுத்துவதாக இருந்துவிடலாம். அதனால்தான் ரோமர் 3:23ல் சொல்லப்பட்டிருக்கும் உண்மை மட்டும் அந்த மனிதனுடைய பாவத்தை உணர்த்தப் போதாது. அதற்கும் மேலாக நீங்கள் போகவேண்டியிருக்கிறது. ரோமர் 3:23 மூலம் அந்த மனிதருடைய மேற்தோலை நீங்கள் உரசியிருக்கலாம். ஆனால், தோலுக்கு கீழ் ஆழமாக நீங்கள் குத்த வேண்டியிருக்கிறது.

இந்த சந்தர்ப்பத்தில்தான் அநேக கிறிஸ்தவர்கள் சங்கடப்பட்டு சொல்ல வேண்டிய உண்மைகளை சொல்லாமலிருந்து விடுகிறார்கள். சுவிசேஷம் சொல்லுவதில் நாம் விசுவாசத்தோடு நடந்துகொள்ளுவதாயிருந்தால் அதன் முக்கிய அம்சங்களை நாம் மனிதர்களுக்கு, அவர்கள் உறவினராக, நண்பர்களாக இருந்தாலும் நம்மால் சொல்லாமலிருந்துவிட முடியாது. உங்கள் முன்னால் நிற்கும் அந்த மனிதனுக்கு நீங்கள் சொல்ல வேண்டியதென்ன? ‘நீ, (எல்லோரும் மட்டுமல்ல), நீ கடவுளுக்கெதிராக பாவஞ்செய்து அவர் முன் குற்றவாளியாக நிற்கிறாய்’ என்று நீங்கள் சொல்லியே ஆக வேண்டும். அவன் கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்து, தொடர்ந்து அதைச் செய்து கொண்டிருக்கிறான். பிறந்ததில் இருந்தே அவன் பாவி மட்டுமல்ல, பிறந்த பின்பு ந¤னைவு தெரிந்த நாளில் இருந்தே கர்த்தரின் கட்டளைகளை மீறிக்கொண்டிருக்கிறான். அவன் கடவுளுக்கு முன் தனிப்பட்ட முறையில் பாவியாக நிற்கிறான். கடவுளுடைய பார்வையில் அவன் அவருக்கு நீதியுள்ளவனாகத் தென்படவில்லை. குற்றம் சுமத்தப்பட்டவனாக, நியாயத்தீர்ப்பை சந்திக்கவேண்டியவனாக நிற்கிறான். அவன் தான் குற்றவாளி என்பதை ஒத்துக்கொள்ளாதவரையில் அவனுக்கு விடுதலை கிடைக்காது. அவன் வேறு எவர் மேலும் பழிபோட முடியாது. அவனுடைய பிறப்பும், வளர்ப்புமல்ல அவனைப் பாவியாக்கியது. அவன் தானே பாவத்தை சுயநினைவோடு செய்து கர்த்தரின் முன் பாவியாக நிற்கிறான். அவனுடைய பாவங்கள் கடவுளின் சந்நிதானத்தில் சத்தமாய்க் கேட்டுக்கொண்டிருக்கின்றன. அவன் இரட்சிப்பை அடைய வேண்டுமானால் தன்னுடைய பாவங்களை அவன் உணர்ந்து அவற்றிற்காக கடவுளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தன்னுடைய பாவங்களைக் கடவுள் முன் அறிக்கையிட வேண்டும். மூல பாவத்திற்காக மட்டும் அவன் மன்னிப்புக் கேட்பதால் எந்தப்பயனுமில்லை. ‘நான் பிறந்ததிலிருந்தே பாவிதான்’ என்று சொல்லி மனதைத் தேற்றிக்கொள்ள முடியாது. அது உண்மைதான். ஆனால் அதற்கும் ஒருபடி மேலேபோய் ‘நான் சிந்தனையாலும், செயலாலும் அன்றாடம் பாவத்தைத்தான் செய்திருக்கிறேன், செய்துவருகிறேன்’ என்று சொல்லி அத்தனை பாவங்களையும் கடவுள் முன் அறிக்கை செய்து அந்தப் பாவங்களுக்காக வருந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். பவுல் ரோமர் 10:9ல், ‘கர்த்தராகிய இயேசுவை உன் வாயினாலே அறிக்கையிட வேண்டுமென்கிறார்’. பாவங்களுக்காக வருந்தி அவற்றிற்கு புறமுதுகு காட்டி அவற்றை அறிக்கைசெய்வதே கிறிஸ்துவை அறிக்கை செய்வதற்கான முதற்படி.

லூக்கா 18ல் நாம் வாசிக்கின்ற ஆயக்காரன் ஆலயத்தில் என்ன செய்தான்? ‘தேவனே பாவியான என்மேல் கிருபையாயிரும்’ என்றான். உண்மையிலேயே அவன் தன்னுடைய சுய பாவங்களுக்காக வருந்தினான் என்பதற்கு அடையாளமாகத்தான் அவன் தன் மார்பில் அடித்துக்கொள்வதையும், கர்த்தரை நோக்கித் தலையை உயர்த்திப் பார்ப்பதற்கு கூசுவதையும் பார்க்கிறோம். இதுதான் மெய்யான மனந்திரும்புதலுக்கான அடையாளம். இது இருதயத்தில் ஏற்பட்டிருக்கும் ஆவிக்குரிய மாற்றத்திற்கு அடையாளம். அவனைப் பார்த்து அன்று இயேசு சொன்னார், ‘இவனே நீதிமானாக்கப்பட்டவனாய் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன், ஏனெனில் தன்னை உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்’ என்றார்.

உங்களுக்கு கெட்டகுமாரனின் உவமை தெரியுமல்லவா? கெட்டகுமாரன் என்ன செய்தான்? லூக்கா 15:17-20, ‘அவனுக்குப் புத்திதெளிந்தபோது அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்கு பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன். நான் எழுந்து என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ் செய்தேன். இனிமேல் உமது குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி; எழுந்து புறப்பட்டு தன் தகப்பனிடத்தில் வந்தான்.’ இதில் எதைப் பார்க்கிறோம். மெய்யான மனந்திரும்புதலுக்கான அடையாளங்களைப் பார்க்கிறோம். மனந்திரும்பிய அந்தக் கெட்டகுமாரன் தான் பாவி என்பதை ஒத்துக்கொள்ளுகிறான். மூல பாவத்தை மட்டுமல்ல, தான் செய்த பாவங்களை, தான் செய்து வருகின்ற பாவங்களை ஒத்துக்கொள்ளுகிறான். அவற்றை வெளிப்படையாக அறிக்கை செய்கிறான். அவனில் அதற்கான மெய்யான வருந்துதலைப் பார்க்கிறோம். அவனுடைய பாவங்கள் அவனைக் கூச்சமடைய வைக்கின்றன. தன் தகப்பனுடைய அன்புக்கான எந்தத் தகுதியும் இல்லாதவனாகத் தான் இருப்பதை அவன் காண்கிறான். கிருபையை அடையத் தகுதியில்லாதவனாகத் தன்னைக் காண்கிறான். கடவுளின் அன்பு மட்டுமே தன்னைக் கரை சேர்க்கமுடியும் என்பதை உணர்கிறான். இதுதான் பாவத்திற்காக வருந்தி மனந்திரும்புதல் என்பது.

உங்களுடைய பாவங்களுக்காக நீங்கள் வருந்தியிருக்கிறீர்களா? அவை உங்களைக் கூச்சமடைய வைத்து கடவுளுக்கு முன் வருந்தியிருக்கிறீர்களா? அந்தப் பாவங்களின் பாரம் உங்களை கர்த்தருக்கு முன் கதற வைத்திருக்கிறதா? அவற்றைக் கர்த்தரிடத்தில் சொல்லி வருந்தி அவருடைய உதவியை நாடியிருக்கிறீர்களா? ஏதோவொருவிதத்தில் உங்களுடைய பாவங்களை உணர்ந்து, வருந்தி அவற்றின் பாரத்தால் பாதிக்கப்பட்டு கிறித்துவிடம் நீங்கள் திரும்பியிருக்காவிட்டால் உங்கள் இரட்சிப்பு எப்படி மெய்யானதாக இருக்க முடியும்? மெய்யான விசுவாசத்தின் இன்னொரு பகுதியான மனந்திரும்புதலைப் பற்றித்தான் இத்தனை நேரமும் நாம் பார்த்து வந்திருக்கிறோம். மனந்திரும்புதலும், விசுவாசமும் பிரிக்க முடியாதபடி சேர்ந்து வருகின்றன. மெய்யான மனந்திரும்புதல் இல்லாத இடத்தில் விசுவாசம் இருக்க முடியாது. இயேசுவைக் காட்டிக்கொடுத்ததற்காக யூதாசு மனவருத்தப்பட்டான்; உயிரை மாய்த்துக்கொண்டான். அவன் மனந்திரும்பவில்லை; இயேசுவை விசுவாசிக்கவில்லை.

3. இயேசு கிறிஸ்து

பாவத்தைப் பற்றிப் பேசுவதோடு சுவிசேஷம் நின்றுவிடுவதில்லை. கடவுளைப்பற்றியும், பாவத்தைப்பற்றியும் விளக்கியாகி விட்டது. அடுத்து செய்ய வேண்டியது என்ன? உங்கள் முன்னால் நிற்பவருக்கு கிறிஸ்துவைப்பற்றி விளக்குவதுதான். அவனுடைய பாவத்தில் இருந்து அவனுக்கு விடுதலை கொடுக்கக்கூடியவர் கிறிஸ்து மட்டுமே. கிறிஸ்து யார் என்பதையும், அந்தக் கிறிஸ்து மனிதருடைய பாவங்கள் போவதற்காக சிலுவையில் செய்திருக்கின்ற பரிகாரப்பலியையும் அந்த மனிதருக்கு விளக்க வேண்டியது அவசியம். நீதியில்லாத மனிதனுக்காக பாவமேயில்லாத நீதிபரரான இயேசு கிறிஸ்து பாவியாகி சிலுவையில் மரித்தார் என்பதை அந்த மனிதர் உணரவேண்டும். பாவிகளுக்காக கிறிஸ்து தன்னையே பலியாகக் கொடுத்து நீதியை சம்பாதித்தார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பாவங்களுக்காக வருந்தி அவற்றை அறிக்கை செய்த மனிதன் தன்னுடைய பாவ நிவாரணத்துக்காக சகலத்தையும் செய்திருக்கின்ற கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டும். இதனால்தான் வேதம், மனந்திரும்பி விசுவாசி என்று பாவிகளைப் பார்த்து அழைக்கின்றது. பாவத்துக்காக வருந்துவதோடு இருந்துவிடாமல் கிறிஸ்து மட்டுமே இரட்சகர், ஒரே கடவுள், தேவன் என்பதை அந்த மனிதர் தன் வாழ்க்கையில் விசுவாசிக்க வேண்டும். தனக்காக, தன்னுடைய பாவத்தைப் போக்குவதற்காக கிறிஸ்து, வாழ்ந்து, மரித்து, உயிர்த்தெழுந்திருக்கிறார் என்பதை விசுவாசிக்க வேண்டும். கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் கிறிஸ்து மட்டுமே மத்தியஸ்தராக இருக்கிறார் என்பதையும் அவராலேயன்றி இரட்சிப்பு வேறு எவர் மூலமும் கிடைக்காதென்பதையும் முழுமனத்தோடும் விசுவாசிக்க வேண்டும் (1 தீமோத்தேயு 2:5).

கடைசியாக . . .

(1) சுவிசேஷத்தின் வல்லமையை உணர பத்துக்கட்டளைகளை அடிக்கடி வாசியுங்கள். அதனை ஆழமாகப் படியுங்கள். இயேசு மலைப்பிரசங்கத்தில் எத்தனை ஆழமாக அதற்கான விளக்கங்களைத் தருகிறார் இல்லையா? அந்தளவுக்கு ஆழமாகப் போய்ப் படியுங்கள். மேலெழுந்தவாரியாகப் படிக்காதீர்கள். அடிக்கடி வீட்டிலும் வெளியிலும் அதுபற்றிப் பேசுங்கள். சபைகளில் அது அடிக்கடி பிரசங்கிக்கப்பட வேண்டும், போதிக்கப்பட வேண்டும். ஏன் தெரியுமா? அப்போதுதான் கர்த்தர் எத்தனை நீதியானவர் என்றும், நீதி எத்தனைப் பெரியது என்றும், பாவம் எத்தனை பொல்லாதது என்றும் தெரியவரும். பத்துக்கட்டளைகளில் நீங்கள் இன்றைக்கு அக்கறை காட்டாததினால்தான் பாவம் சபை, சபையாக மலிந்து நிற்கிறது. கிறிஸ்தவர்கள் பாவத்தை வெகுசாதாரணமாக எடுத்துக்கொண்டு விடுகிறார்கள். பிரசங்கத்திலும், போதனைகளிலும் அதைக் காணமுடியவில்லை. பத்துக்கட்டளைகள் மறுபடியும் நம் வாழ்க்கையிலும் சபையிலும் ஆள ஆரம்பிக்க வேண்டும். பத்துக்கட்டளைகள் இல்லாமல் எது சரி, எது தவறு என்றே நம்மால் தீர்மானிக்க முடியாது. கர்த்தரின் வழியில் நிலைத்திருக்க முடியாது. பத்துக்கட்டளைகளை நாம் சரளமாகப் படித்துப் பேசி, சிந்தித்து, ஆராய்ந்து பின்பற்றுகிறபோது உண்மையான தேவ பயம் நம்மத்தியில் நிச்சயம் இருக்கும்.

(2) சுவிசேஷத்தில் பத்துக்கட்டளைகள் இருக்கும்படிப் பார்த்துக்கொள்ளுங்கள். அதாவது கடவுளைப் பற்றியும், பாவத்தைப் பற்றியும் அதைப் பயன்படுத்தி விளக்குங்கள். பாவியான மனிதனின் காயம் எத்தனை பெரியது என்று அவன் உணர வேண்டும். அதை உணராமல் அவன் மருந்தை நாடமாட்டான். பத்துக்கட்டளைகளால் மட்டுமே அவனுடைய காயத்தின் தன்மையை நாம் அவனுக்கு உணர்த்த முடியும். காயத்தை அவன் உணர்ந்து இதயத்தில் காயப்பட்ட பிறகே அதற்கு மருந்தாக இயேசு கிறிஸ்துவின் கிருபையை அவனுக்குத் தடவவேண்டும். அவனுடைய பாவக்காயத்துக்கு கிறிஸ்து மட்டுமே மருந்து. நீங்கள் சொல்லும், பிரசங்கிக்கும் சுவிசேஷத்தில் இதெல்லாம் இருக்கும்படிப் பார்த்துக்கொண்டால் நிச்சயம் பாவிகள் கர்த்தரின் சத்தத்தை ஆவிக்குள்ளாக கேட்கின்ற நிலைமை நம்மினத்திலும் ஏற்படும்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s