பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து. அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான். – நீதி 22:6
வேதவசனங்களில் தேர்ந்த கிறிஸ்தவர்கள் எல்லோருமே இந்த வசனத்தை நன்றாக அறிந்திருப்பார்கள் என்று நம்புகிறேன். நமக்குப் பழக்கப்பட்ட ஒரு இனிமையான பாடலைப்போல அது உங்களுடைய காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கும். இந்த வசனத்தை நீங்களே அநேக தடவை கேட்டிருப்பீர்கள், படித்திருப்பீர்கள், இதைக் குறித்துப் பேசியுமிருப்பீர்கள். இதை மேற்கோளாகக்கூட காட்டியிருப்பீர்கள். இல்லையா? ஆனால், இதன் பொருளுக்கு எந்தளவுக்கு மதிப்புக்கொடுத்து பின்பற்றியிருக்கிறீர்கள்? இந்த வசனத்தில் அடங்கியுள்ள ஆழமான வேத போதனையை நன்றாக அறிந்து வைத்திருப்பவர்கள் கொஞ்சப்பேரே. இந்த வசனம் சுட்டிக் காட்டுகின்ற கடமையை நடைமுறையில் செயல்படுத்துகிறவர்கள் எத்தனை பேர் என்று பார்ப்போமானால் அது நமக்கு அதிர்ச்சியைத் தருவதாயிருக்கும். என்ன, வாசகர்களே, நான் கூறுவது உண்மைதானே?
இந்த விஷயம் இதுவரை யாருமே அறிந்திராத புதிய விஷயம் என்று சொல்வதற்கில்லை. உலகம் எவ்வளவு பழமையானதோ அந்தளவுக்கு பழமை வாய்ந்த விஷயம் இது! உலகம் தோன்றி ஏறக்குறைய ஆறாயிரம் ஆண்டுகள் கடந்து போயிருக்கின்றன. அது நமக்குக் கற்றுந்தந்திருக்கும் அனுபவபாடங்கள் ஏராளம்! இப்போது நாம் பலவிஷயங்களைக் கற்றுக்கொள்ளுவதற்கான ஆர்வம் அதிகரித்துள்ள காலப்பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகமெங்கும் புதிய புதிய பள்ளிகளும், கல்வி நிறுவனங்களும் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. படிக்கும் பிள்ளைகள் எல்லோருக்கும் புதிய புதிய கல்வி கற்பிக்கும் முறைகளும், புதுப்புது பாடத்திட்டங்களும் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன. இவ்வளவும் இருந்தபோதும் பிள்ளைகளை நடக்க வேண்டிய வழியிலே நடத்துவதற்கான எந்தத் திட்டமும் உருவானதுபோல் தெரியவில்லை. ஏனென்றால், அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகும்போது யாருமே கடவுளோடு இணைந்து நடக்கிறவர்களாகத் தெரியவில்லையே.
அப்படி இருப்பதற்கு நாம் என்ன காரணத்தைக் காட்ட முடியும்? இந்த வசனத்தில் காணப்படுகிற கடவுளின் கட்டளை, மதித்துப் பின்பற்றப்படவில்லை என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்? ஆகவேதான், இந்த வசனத்தில் காணப்படுகின்ற கடவுளின் வாக்குத்தத்தமும் நிறைவேறாமலேயே இருக்கிறது.
இதை வாசிக்கிறவர்களே! இந்த வசனத்தை வைத்து நீங்கள் உங்கள் இருதயங்களை நன்றாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். பிள்ளைகளை சரியான வழியில் நடத்துவதைக் குறித்து கர்த்தரின் ஊழியன் சொல்லுகிற இந்த புத்திமதியைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். இந்தப் போதனை உங்கள் ஒவ்வொருவருடைய இருதயத்திற்குள்ளும் புகுந்து உங்கள் வீட்டிற்குள்ளும் இது நுழைய வேண்டும். ஒவ்வொருவரும் நல்ல மனசாட்சியோடு, “இவ்விஷயத்தில் நான் செய்ய வேண்டியவைகளை செய்திருக்கிறேனா?” என உங்களுக்குள்ளேயே கேட்டுக்கொள்ளுங்கள்.
இவ்விஷயத்தில் ஏறக்குறைய எல்லோருக்குமே பங்கு இருக்கிறது. இதில் ஏதோவொருவிதத்தில் பங்கேற்காதவர்களே இல்லை என்று சொல்லலாம். பெற்றோர்கள், தாதிகள், ஆசிரியர்கள், ஞானத்தகப்பன்மார், ஞானத்தாய்மார், மாமாக்கள், அத்தைகள், சகோதரர்கள், சகோதரிகள் ஆகிய எல்லோருக்கும் இதில் பங்கிருக்கிறது. இந்தப் பட்டியலில் ஒருசிலரைத் தவிர, ஏறக்குறைய மற்ற எல்லாருமே ஏதாவதொரு வகையில் பிள்ளைகளைப் பெற்றோர்கள் வளர்க்கின்ற விஷயத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பெற்றோருக்கு ஆலோசனை கொடுத்தோ, அல்லது ஒரு சில பிள்ளைகளின் வளர்ப்பு முறையில் உதவி செய்யும் விதத்தில் ஆலோசனை தந்தோ கருத்துத் தெரிவித்தோ இருக்கலாம். ஆகவே, எல்லோருமே பிள்ளைகளைப் பெற்றோர் வளர்க்கும் விஷயத்தில் ஏதாவதொரு விதத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ செல்வாக்கு செலுத்தும் சூழ்நிலை இருப்பதால் நான் சொல்லப்போவதை எல்லோருமே நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்த விரும்புகிறேன்.
இதில் சம்பந்தப்பட்டிருக்கிற அனைவருமே தங்கள் தங்கள் கடமையை முழுமையாக செய்யாமல் போய்விடுகின்ற ஆபத்து இருக்கின்றது. இந்த விஷயத்தில்தான் மனிதர்கள் தாங்கள் விடுகின்ற தவறுகளைவிட பக்கத்து வீட்டுக்காரர்கள் விடுகின்ற தவறுகளைக் கவனமாகப் பார்க்கின்றவர்களாக இருக்கிறார்கள். தங்கள் நண்பர்கள், அவர்களுடைய பிள்ளைகளை சரியாக வளர்க்கவில்லையென்று குற்றஞ்சாட்டுகின்ற இவர்கள் தங்கள் நண்பர்கள் விடுகின்ற அதே தவறைச் செய்தே தங்களுடைய பிள்ளைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். மற்றவர்களின் குடும்பங்களில் காணப்படும் தூசியைக் தெளிவாகப் பார்க்கிற இவர்கள் தங்கள் சொந்தக் குடும்பத்திலுள்ள பெருந்தூண்களைப் போன்ற தவறுகளைக் கவனியாமல் போகிறார்கள். மற்றவர்கள் விடுகின்ற தவறுகளைத் தூரத்தில் இருந்து கழுகுக் கண்களோடு உடனடியாக கவனிக்கிற இவர்கள், தங்கள் குடும்பத்தில் அன்றாடம் செய்து கொண்டிருக்கிற தவறுகளைக் கவனிப்பதில் வவ்வாலைப் போலக் குருடராக இருக்கிறார்கள். தங்கள் சகோதரரின் குடும்பத்துக்கு நல்ல புத்திமதிகளை அளிக்கிற இவர்கள், தங்கள் சொந்த பிள்ளைகளின் விஷயத்தில் முட்டாள்களைப்போல நடந்து கொள்கிறார்கள். நாம் எதையாகிலும் சந்தேகிக்க வேண்டுமானால் நமது சொந்தத் தீர்மானங்களைக் குறித்து சந்தேகிப்பதை மட்டுமே வழக்கமாகக் கொள்ள வேண்டும். இதையும் மனதில் வைத்திருப்பது நலமாயிருக்கும்.
பிள்ளைகளை சரியான விதத்தில் வளர்ப்பதைக் குறித்து நான் சில ஆலோசனைகளை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். அவைகளை பிதாவாகிய தேவனும், குமாரனாகிய கடவுளும், பரிசுத்த ஆவியாகிய கடவுளும் ஆசீர்வதிப்பாராக. ஏற்ற வேளையில் கூறப்பட்ட புத்திமதியாகும்படி அருள்புரிவாராக. அவைகள் எளிமையாகவும், சாதாரணமாகவும் தோன்றுவதால் அவைகளை ஏற்க மறுத்து விடாதீர்கள். அவைகளில் புதிய விஷயம் எதுவும் சொல்லப்படவில்லையென்பதற்காக அவற்றை அலட்சியப்படுத்தி விடாதீர்கள். உங்களுடைய பிள்ளைகளை பரலோகத்துக்குரியவர்களாக வளர்க்க நீங்கள் ஆசைப்படுவீர்களானால், இந்த ஆலோசனைகளை சாதாரணமானதாக எண்ணி ஒதுக்கி விடாதீர்கள்.
1. முதலாவதாக, பிள்ளைகளை சரியானவிதத்தில் நீங்கள் வளர்க்க வேண்டுமானால், அவர்களுடைய விருப்பத்தின்படி அல்லாமல், அவர்கள் நடக்கவேண்டிய வழியில் அவர்களை வளர்க்கவேண்டும்.
பிள்ளைகள் பாவத்தை செய்யக்கூடிய நிலைமையிலேதான் பிறந்திருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள். அவர்களுடைய வழியை அவர்களே தீர்மானித்துக்கொள்ளும்படி நீங்கள் விட்டுவிடுவீர்களானால் அவர்கள் நிச்சயமாக தவறான வழியைத்தான் தெரிந்துகொள்ளுவார்கள்.
ஒரு தாய் தனக்குப் பிறக்கின்ற குழந்தை பெரியவனாகும்போது உயரமாகவா, குட்டையாகவா, ஒல்லியாகவா, குண்டாகவா, புத்திசாலியாகவா, அறிவற்றவனாகவா இருப்பான் என்று கூற முடியாது. இவை எல்லாவற்றையும யாரும் தீர்மானிக்க முடியாது. தோற்றத்தில் அவன் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். ஆனால், அந்தத் தாய் ஒன்றை மட்டும் நிச்சயமாகக் கூறலாம்: அவனுக்குள்ளாக பாவத்தை நாடுகிற ஒரு கெட்டுப்போன இருதயம் இருக்கிறது என்பதே அந்த உண்மை. தவறு செய்வது நமக்கு இயல்பாகவே வரும். “பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்“ (நீதிமொழிகள் 22:15) என்று சாலமோன் சொல்லுகிறார். “தன் இஷ்டத்துக்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்” (நீதிமொழிகள் 29:15). நமது இருதயங்கள் பூமியில் நாம் நடந்துபோகும் நிலத்தைப் போன்றவை. நிலத்தை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டால் அது நிச்சயமாகக் களைகளைத்தான் தோற்றுவிக்கும்.
ஆகவே, நாம் ஞானத்தோடு நடந்துகொள்ள வேண்டும். உங்களுடைய பிள்ளையை அவனுடைய சித்தத்தின்படி போகும்படியாக விடுவது ஞானமான செயல் அல்ல. அவனுக்காக நீங்கள் சிந்திக்க வேண்டும். அந்தப்பிள்ளைக்காக நீங்கள் தீர்மானங்களை எடுக்க வேண்டும், எடுத்த தீர்மானங்களின்படி நடக்க வேண்டும். ஒரு குருடனுக்கோ, பவவீனமானவனுக்கோ உதவி செய்யும்போது எப்படி நடந்துகொள்ளுவீர்களோ அப்படி உங்கள் பிள்ளையின் விஷயத்திலும் நடந்துகொள்ள வேண்டும். அந்தப் பிள்ளை ஆசைப்படுவதையெல்லாம் கொடுத்து அதைக் குட்டிச்சுவராக்கிவிடாதீர்கள். அந்தப் பிள்ளை விருப்பப்படுவதையெல்லாம் நல்ல ஆலோசனையாக ஒருபோதும் எடுத்துக்கொள்ளக்கூடாது. தன்னுடைய சிந்தனைக்கும், சரீரத்திற்கும், ஆவிக்கும் எந்தெந்த விஷயங்கள் நலமானவை என்று அந்தப் பிள்ளையால் தீர்மானிக்க முடியாது. உங்களுடைய பிள்ளை என்ன உணவருந்த வேண்டும், எதைக்குடிக்க வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை நீங்கள் அதன் கையில் விட்டுவிடக்கூடாது. உங்களுடைய பிள்ளையை வளர்க்கும் விஷயத்தில் நீங்கள் எடுக்கின்ற ஒவ்வொரு தீர்மானமும், நடவடிக்கையும் தொடர்ச்சியாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்கின்ற காரியங்கள் பிள்ளை வளர்ப்புக்கு உதவாது. அந்தப் பிள்ளையின் சிந்தனையில் நீங்கள் பதிய வைக்க வேண்டிய விஷயங்களிலும் தொடர்ச்சி இருக்க வேண்டும்.
கிறிஸ்தவ அடிப்படையில் பிள்ளை வளர்ப்பின் இந்த முதல் கொள்கையை உங்களால் கடைப்பிடிக்க முடியாதென்றால் அதற்குமேல் இந்த ஆக்கத்தை வாசிப்பதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை. சுய சித்தத்தின் அடிப்படையிலான பிடிவாதம்தான் குழந்தையின் மனதில் முதலாவதாக தோன்றுகிற விஷயம். அதற்கு எதிர்த்து நிற்பதுதான் உங்களுடைய கடமையின் முதலாவது படியாக இருக்கவேண்டும்.
2. மென்மையோடும், அன்போடும், பொறுமையோடும் பிள்ளைக்குப் பயிற்சி கொடுங்கள்.
உங்கள் பிள்ளைக்கு செல்லம் கொடுத்துக் கெடுக்கும்படியாக நான் சொல்லவில்லை. நீங்கள் உங்கள் பிள்ளையை நேசிக்கிறீர்கள் என்பதை அவன் அறிந்து கொள்ளும்படி செய்யுங்கள்.
நீங்கள் அவனை வழிநடத்துகிற சகல காரியத்திலும் அன்பாகிய நூல் இழையோட வேண்டும். அன்பு, சாந்தம், பொறுமை, விடாமுயற்சி, இரக்கம், குழந்தைத்தனமான அவனுடைய துன்பங்களிலும் சந்தோஷங்களிலும் பங்கெடுத்துக்கொள்ளுதல் ஆகிய குணாதிசயங்களைக் கடைப்பிடித்து பிள்ளைகளுக்குப் பயிற்சி அளித்தால் அந்தப் பிள்ளைகள் உங்களுக்குப் பணிவார்கள். இந்தக் காரியங்கள் மூலமாகவே உங்களுடைய பிள்ளைகளின் இருதயத்திலும் நீங்கள் இடம்பிடிக்க முடியும்.
எதற்கும் பணிந்து நடப்பதைக் காட்டிலும், விலகி ஓடுவதே பெரியவர்களிடத்திலும் பெரும்பாலும் காணப்படுகின்ற குணமாயிருக்கிறது. கட்டாயப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதென்பது நமது மனதோடு படிந்துவிட்டதொன்றாயிருக்கிறது. வலுக்கட்டாயமாக கீழ்ப்படிதலுக்கு உட்படுத்தப்பட்டோமானால், அதற்கு விலகி ஓடுவதும், எதிர்ப்புத் தெரிவிப்பதும் நமக்கு வாடிக்கையாக இருக்கிறது. குதிரைகளை பழக்குவிப்பவர்களின் வசமுள்ள இளங்குதிரையைப் போல நாம் இருக்கிறோம். அந்த இளங்குதிரையை மென்மையாக நடத்தினால் அது மெதுவாக இணங்கி வரும். அப்போது அதன் கழுத்தில் கயிறை மாட்டி அதனை நன்கு பழக்கப்படுத்த முடியும், அதை வலுக்கட்டாயப்படுத்தினால், அதைக் வழிக்குக் கொண்டு வருவதற்கு அதிக நாட்கள் ஆகும்.
நம்முடைய மனதைப் போலத்தான் பிள்ளைகளுடைய மனதும் உருவாக்கப்பட்டுள்ளது. கடுமையாகவும், கொடூரமாகவும் அவர்களிடம் நடந்து கொண்டால் அவர்கள் ஒருபோதும் உங்களிடம் வரவே மாட்டார்கள். அவர்கள் தங்களுடைய இருதயத்தை அடைத்துக் கொள்வார்கள். நீங்கள் பிறகு என்ன செய்தாலும் அவர்கள் இருதயத்தைத் திறக்க வழி தெரியாமல் சோர்ந்து போவீர்கள். நீங்கள் உண்மையாகவே அவர்களை நேசிக்கிறீர்கள் என்றும், அவர்களுக்கு நன்மை செய்யவும் அவர்களை சந்தோஷப்படுத்தவும்தான் விரும்புகிறீர்கள் என்பதையும் அவர்கள் அறியும்படிச் செய்வீர்களானால் அவர்களை உங்கள் வசப்படுத்திக்கொள்ளலாம். நீங்கள் அவர்களுக்கு தண்டனை தருவதுகூட அவர்களுடைய நன்மைக்காகத்தான் என்றும், அவர்களுடைய ஆத்தும நன்மைக்காக நீங்கள் உங்கள் இருதயத்தின் இரத்தத்தையே சிந்துகிறீர்கள் என்றும் அவர்களுக்கு உணர்த்திவிட்டீர்களானால் அவர்கள் மீண்டும் உங்களோடு ஒட்டிக்கொள்வார்கள். அவர்கள் கவனத்தைக் கவர்ந்துகொள்ள வேண்டுமானால், தண்டிப்பதையும் அன்போடும் இரக்கத்தோடும்தான் செய்ய வேண்டும்.
புத்திசாலித்தனமே நமக்கு இந்தப் பாடத்தைக் கற்றுத் தரக்கூடும். பிள்ளைகள் பலவீனமும், மென்மையுமானவர்கள். ஆகவே அவர்களிடம் பொறுமையோடும் கரிசனையோடும் நடந்துகொள்ள வேண்டும். நுட்பமான இயந்திரத்தை மிகவும் கவனமாகக் கையாளாவிட்டால் அது கெட்டுப்போய்விடுவதைப் போல, பிள்ளைகளையும் கடினமாக நடத்தினால் அது அவர்களுக்குத் தீமையையே விளைவிக்கும். புதிதாகத் துளிர்த்த இளஞ்செடிகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாகத்தான் தண்ணீர் ஊற்ற வேண்டும்; ஆனால், அடிக்கடியும் ஊற்ற வேண்டும். பிள்ளைகளும் இளஞ்செடிகளைப் போன்றவர்களே.
எல்லாவற்றையும் நாம் பிள்ளைகளிடத்தில் உடனடியாக எதிர்பார்க்கக் கூடாது. பிள்ளைகளின் நிலை இன்னதென்று நாம் உணர்ந்து, அவர்களால் கற்றுக்கொள்ளக்கூடிய அளவிற்கே நாம் அவர்களுக்கு கற்பிக்க வேண்டும். அவர்களுடைய மனம் உலோகக் கட்டியைப் போன்றது. ஒரே அடியில் அதை உபயோகமுள்ள பாத்திரமாக மாற்றிவிட முடியாது. சிறிது சிறிதாகத்தான் அதை உருவாக்க முடியும். அவர்களுடைய புரிந்துகொள்ளும் தன்மை, குறுகிய வாயை உடைய குடத்தைப் போன்றது. அதில் ஞானமாகிய பானத்தை மெதுவாகத்தான் இறக்க முடியும். ஒரேயடியாக அதில் கொட்ட முனைந்தால், முழுவதும் வெளியில் சிந்தி வீணாகிவிடும். “வார்த்தை வார்த்தையாக, கற்பனையின்மேல் கற்பனையாக, பிரமாணத்தின்மேல் பிரமாணமாக, இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாக” கொடுப்பதே நமது வேலையாக இருக்க வேண்டும். ஆயுதங்களைக் கூர்மையாக்க உபயோகப்படும் சாணைபிடிக்கும் இயந்திரக்கல் ஆரம்பத்தில் மெதுவாகத்தான் தன் வேலையை செய்யும். ஆனால், அடிக்கடி சாணைபிடித்தபின் அந்தக் கல் பதப்பட்டு, வேகமாகத் தன் பணியை செய்யும். பிள்ளைகளை பயிற்சி தந்து வளர்ப்பதில் நமக்குப் பொறுமை தேவை, அதில்லாமல் ஒரு பிரயோஜனமும் இல்லை.
அன்பிற்கும் மென்மைக்கும் ஈடு இணை எதுவுமில்லை. ஒரு போதகர், சத்தியத்தை இயேசு கிறிஸ்துவுக்குள்ளாக தெளிவாகவும், அதிகாரத்தோடும், சாக்குபோக்கு சொல்ல முடியாத விதத்திலும் பேசலாம். ஆனால், அவர் அதை அன்போடு கூறவில்லையென்றால் அவரால் அதிகமான ஆத்தும ஆதாயம் செய்ய முடியாது. அதுபோல நீங்கள் உங்கள் பிள்ளைகளிடம் அவர்களுடைய கடமைகளை விளக்கலாம். கட்டளையிடலாம், பயமுறுத்தலாம், தண்டிக்கலாம், காரணம் காட்டலாம். ஆனால், உங்கள் செயலில் அன்பு இழையோடாமலிருந்தால் உங்களுடைய முயற்சிகள் யாவும் வீணாய்த்தான் போகும்.
வெற்றிகரமான கிறிஸ்தவ பிள்ளை வளர்ப்பின் மாபெரும் இரகசியம் அன்புதான். கோபமும் கடூரமுமாக பிள்ளைகளை நடத்தினால் ஒருவேளை அவர்கள் பயந்து உங்களுக்குக் கீழ்ப்படியலாம். ஆனால் நீங்கள் சரியாகத்தான் நடக்கிறீர்களா என்று அவர்கள் உங்களை சந்தேகிக்கத் தொடங்கிவிடுவார்கள். நீங்கள் அடிக்கடி கோபம் கொண்டீர்களானால், பிள்ளைகளிடமிருந்து மரியாதையை பெற்றுக்கொள்ள முடியாமல் போய்விடும். சவுல், யோனத்தானிடம் பேசியது போல (1 சாமு 20:30) ஒரு தகப்பன் தன் பிள்ளைகளிடம் பேசுவானெனில், அந்தப் பிள்ளைகளின் மனதை அவனால் ஒருபோதும் கவர முடியாது.
பிள்ளைகளின் அன்பை தக்கவைத்துக்கொள்ள எப்போதும் பிரயாசப்படுங்கள். பிள்ளைகள் உங்களைக் கண்டு பயப்படும்படியாக நடந்து கொள்வது ஆபத்தானது. உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நடுவே மனஇறுக்கமோ, இயல்பாக பேச முடியாத நிலையோ ஏற்படுவது சரியல்ல. பயத்தினால் இந்நிலை ஏற்பட்டுவிடும். பயமானது, வெளிப்படையாகப் பழகுவதைத் தடை செய்கிறது. பயம், ஒருவனை ஒளித்துக் கொள்ளச் செய்யும். மாய்மாலத்தை உண்டாக்கும். அநேகம் பொய்களைப் பேசச் செய்யும். அப்போஸ்தலனாகிய பவுல் கொலோசெய சபைக்கு எழுதிய இவ்வசனத்தில் பேருண்மை நிரம்பியிருப்பதை கவனியுங்கள்: “பிதாக்களே, உங்கள் பிள்ளைகள் திடனற்றுப் போகாதபடி (மனம் தளர்ந்து), அவர்களுக்குக் கோபமூட்டாதிருங்கள்” (3:21). பவுல் கூறுகிற இந்த புத்திமதியை அலட்சியமாக எண்ணிவிடாதீர்கள்.
3. பிள்ளையை சரியானபடி வளர்க்கும் பெரும் பொறுப்பு உங்கள் கையில்தான் இருக்கிறது என்கிற எண்ணம் எப்போதும் உங்கள் மனதில் இருக்கட்டும்.
கிருபையே எல்லாவற்றைக் காட்டிலும் சக்தி வாய்ந்தது. ஒரு பாவியின் இருதயத்தை கிருபையானது ஆட்கொள்ளும் போது அது என்னவித மாற்றங்களை ஏற்படுத்துகிறதென்று பாருங்கள். சாத்தானின் கோட்டையை அது தகர்க்கிறது. குன்றுகளையெல்லாம் சமமாக்கி பள்ளங்களை நிரப்புகிறது. கோணலானவைகளை நேராக்குகிறது. மனிதனை புதுசிருஷ்டியாக்குகிறது. சொல்லப்போனால் கிருபையால் செய்ய முடியாதது எதுவுமேயில்லை.
மனிதனின் இயற்கை சுபாவமும்கூட மிகவும் உறுதியானதுதான். அது கடவுளுடைய ராஜ்யத்திற்கு விரோதமாக எந்தளவுக்குப் போராடுகிறது என்று பாருங்கள். பரிசுத்தமாக நடக்க எடுக்கும் முயற்சிகளுக்கு எப்படி எதிர்த்து நிற்கிறது என்பதைக் கவனியுங்கள். மரணமடையும் அந்த கடைசி நொடிவரைக்கும் நமக்குள்ளேயே இருந்து கொண்டு இடைவிடாமல் போரிட்டுக் கொண்டேயிருக்கிறது. ஆம், இயற்கை சுபாவமும் உறுதியானதுதான்.
ஆனால் இயற்கை சுபாவத்துக்கும், கிருபைக்கும் அடுத்தபடியாக பலமுள்ளதாய் இருப்பது கல்விதான். நமக்கு ஆரம்பகாலத்தில் கடவுளின் வழியில் கற்பிக்கப்பட்டிருக்கிற நற்பழக்கவழக்கங்கள் நம்மில் நிலைத்திருக்கின்றன. நாம் எவ்விதமாக வளர்க்கப்பட்டிருக்கிறோமோ அந்தவிதமாகத்தான் நாம் இருப்போம். ஆரம்ப வயதில் நமக்கு கற்பிக்கப்பட்ட பழக்கவழக்கங்களின்படியாகவே நம்முடைய குணங்கள் உருவாகின்றன.
நம்மை வளர்த்தவர்களைப் பொறுத்து பெரும்பாலும் நமது குணநலன்கள் தோன்றுகின்றன. நமது இரசனைகள், விருப்பு வெறுப்புகள், குறிக்கோள்கள் இவை யாவற்றையும் அவர்களிடமிருந்தே பெற்றிருக்கிறோம். ஏறக்குறைய நமது வாழ்நாள் முழுவதும் அவை நம்மோடு ஒட்டிக்கொண்டே இருக்கின்றன. தாயோ அல்லது தாதிகளோ எப்படிப் பேசுகிறார்களோ அந்தவிதமாகவே பேசக்கற்றுக்கொண்டு நாமும் கொஞ்சமும் யோசிக்காமல் பேசிவருகிறோம். அதேபோல் அவர்களுடைய பழக்கவழக்கங்களும், வழிமுறைகளும், விருப்பங்களும் நம்மைத் தொத்திக்கொள்ளுகின்றன என்பதில் சந்தேகமேயில்லை. நாம் எந்தளவுக்கு நம்மை வளர்த்தவர்களால் பாதிக்கப்பட்டு, என்னென்ன காரியங்கள் அவர்களுடைய செல்வாக்கால் நம்மில் பதிந்து காணப்படுகின்றன என்பதைக் காலம் மட்டுமே நமக்கு சொல்ல முடியும். கல்விமானாகிய லொக்கி (Locke) என்பவர் சொல்லியிருக்கிறார், ‘நாம் சந்திக்கின்ற அத்தனை மனிதர்களிலும் காணப்படும் நல்லதோ கெட்டதோ, பயனுள்ளதோ பயனில்லாததோ அனைத்திலும் பத்தில் ஒன்பது அவர்கள் பெற்றுக்கொண்ட கல்வியிலும், வளர்ப்பு முறையிலும் இருந்தே வந்திருக்கின்றது.’
இது, கடவுள் ஏற்படுத்தியிருக்கும் தயவுள்ள ஆசீர்வாதங்களில் ஒன்று. உங்களுடைய குழந்தைக்கு தான் கற்கின்றவற்றை பதியவைத்துக்கொள்ளக்கூடிய ஈரப்பதமுள்ள களிமண் போன்ற மனநிலையை அவர் அருளியிருக்கிறார். நீங்கள் சொல்லுவதையெல்லாம் நம்பக்கூடியதான மனநிலையை அப்பிள்ளையின் ஆரம்ப வளர்ச்சிக் கால நாட்களில் கொடுத்திருக்கிறார். நீங்கள் கூறுகிற புத்திமதியையெல்லாம் அப்பிள்ளை அப்போது ஏற்றுக்கொள்ளும். முன்பின் அறியாதவர்கள் கூறுவதை நம்புவதைக் காட்டிலும் பெற்றோர் கூறுவதையே பிள்ளைகள் நம்பும் ஆரம்பப் பருவம் அது. உங்களுடைய குழந்தைகளுக்கு நன்மை ஏற்படும்படியாக அக்காலங்களை உபயோகித்துக் கொள்ளும் பொன்னான வாய்ப்பை அவர் உங்களுக்குத் தந்திருக்கிறார். அந்த வாய்ப்பை நழுவ விட்டுவிடாதீர்கள், அலட்சியப்படுத்திவிடாதீர்கள். அதைக் கைநழுவ விட்டுவிட்டீர்களானால் திரும்பவும் பெறவே முடியாது.
சில பெற்றோர்கள் மனதில் கொண்டிருப்பதுபோன்ற மோசமான கற்பனைக்கு நீங்கள் ஆளாகாதிருங்கள். அதாவது, பிள்ளைகளின் வளர்ச்சி குறித்து பெற்றோர் ஒன்றுமே செய்ய முடியாதென்றும், அந்தப் பிள்ளைகளை தாமே வளரும்படி அப்படியே விட்டுவிடவேண்டுமென்றும், கடவுளின் கிருபையைப் பெறும்படியாக மட்டும் காத்திருக்க வேண்டுமென்றும், வெறெதையும் செய்யாமல் சும்மாயிருக்க வேண்டும் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். இப்படிப்பட்ட பெற்றோர் பிலேயாமின் மனநிலையைக் கொண்டிருந்து, தங்களுடைய பிள்ளைகள் நீதியுள்ளவர்களாக வாழ்ந்து மரிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆனால், அப்படி அவர்கள் வாழ அவர்கள் ஒன்றையுமே செய்யப்போவதில்லை. அவர்கள் அதிகமாக ஆசைப்படுகிறார்கள், ஆனால், ஒன்றையுமே அடைவதில்லை. பிசாசு இந்தமாதிரியான எண்ணங்கள் உங்களுக்கு இருப்பதைப் பார்த்து சந்தோஷப்படுவான். சோம்பேறித்தனங்களையும், கிருபையின் சாதனங்களை அலட்சியப்படுத்துவதையும் பார்க்கும்போது அவன் சந்தோஷமடைவான்.
உங்கள் பிள்ளைக்கு நீங்கள் ஆத்மீக மனமாற்றத்தைக் கொடுக்க முடியாது என்பதை நான் அறிவேன். மறுபடியும் பிறக்கிறவர்கள் மனிதனுடைய விருப்பத்தினால் அல்ல, கடவுளின் சித்தத்தினாலேயே பிறக்கிறார்கள் என்பதை நான் நன்றாக அறிவேன். அதே சமயத்தில், “பிள்ளையை நடக்க வேண்டிய வழியிலே நடத்து” என்று வெளிப்படையாகக் கட்டளையிட்டிருப்பதையும் நான் அறிவேன். கர்த்தருடைய கிருபையைக் கொண்டு செய்ய முடியாத எந்தக் கட்டளையையும் கடவுள் மனிதனுக்குக் கொடுப்பதில்லை. எனக்குத் தெரியும் நமது கடமை கர்த்தருடைய கட்டளைகளை விவாதித்து தர்க்கம் செய்வதல்ல; அதற்குக் கீழ்ப்படிந்து நடப்பது மட்டுமே. அவற்றை நிறைவேற்றி முன்னோக்கிப் போகின்றபோதுதான் கடவுள் நம்மை சந்திக்கிறார். நாம் அவருக்குக் கீழ்ப்படியும்போதே அவர் நம்மை ஆசீர்வதிக்கிறார். கானாவூர் கலியாணத்திலே வேலையாட்கள் நடந்து கொண்டதைப் போலத்தான் நாமும் நடக்க வேண்டும். கர்த்தர், கற்ஜாடிகளைத் தண்ணீரினால் நிரப்பச் சொன்னார். நிரப்புவதுதான் நமது வேலை. அதைத் திராட்சை ரசமாக்கும் பணியை கர்த்தரிடம் விட்டுவிடுவது நல்லது. (இனியும் வரும்)