மறுபடியும் பத்திரிகை மூலமாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நேரத்திற்கு பத்திரிகையை நிறைவு செய்து அனுப்ப கர்த்தர் துணை செய்தார். இதில் பங்குகொண்டு உழைத்திருக்கின்ற அனைவருக்கும் நன்றி சொல்ல வேண்டும். பலருடைய உழைப்பில் மலர்ந்து வருகின்றது திருமறைத்தீபம். எழுதுகிறவர்கள், எழுத்துப்பிழைகளைத் திருத்துகிறவர்கள், மொழிபெயர்க்கிறவர்கள், இரு நாடுகளில் அச்சிடுகிறவர்கள், இதற்கெல்லாம் பண உதவி செய்கிறவர்கள், இந்தப் பணிக்காக ஊக்கங்கொடுத்து அயராது ஜெபிக்கிறவர்கள் என்று அந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இத்தனை பேரின் உழைப்பில் உருவாகி உங்கள் கரத்தை இப்போது பத்திரிகை அடைந்திருக்கிறது. இதுவரை வந்த இதழ்களைப் போல இதுவும் உங்களுடைய ஆத்மீக வாழ்க்கைக்கு அளப்பரிய ஆசீர்வாதத்தை அளிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஜெபம். அநேகர் கணினியில் பத்திரிகையையும், வேத செய்திகளையும் பயன்படுத்திக் கொள்ளுகிறீர்கள். அதில், இதில் வராத செய்திகளும் அடிக்கடி வந்துகொண்டிருக்கின்றது. அவையும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இந்த இதழில் கர்த்தரின் பத்துக்கட்டளைகளைப்பற்றிய ஆக்கம் ஒன்று வந்திருக்கின்றது. இன்றைக்கு பத்துக்கட்டளைகளைப் பின்பற்றத் தேவையில்லை என்று ஒரு சாரார் சொல்லி வருகின்றார்கள். அந்தவிதமான எண்ணங்கள் எப்படித் தோன்ற ஆரம்பித்தன என்பதை அலசுகிறது அந்த ஆக்கம். அத்தோடு சுவிசேஷத்தை சொல்லுவதற்கு பத்துக்கட்டளைகள் எந்தளவுக்கு அவசியம் என்பதை விளக்கி ‘சொல்ல வேண்டியவிதத்தில் சொல்லுவோம் சுவிசேஷம்’ என்ற ஆக்கம் வந்திருக்கின்றது. சுவிசேஷத்தில் நாம் சொல்ல வேண்டிய முக்கியமான மூன்று அம்சங்களை இதில் விளக்கியிருக்கிறேன்.
வாலிபர்களுக்காக நீங்கள் ஒருபோதும் எழுதியதில்லையே என்று பலர் ஆதங்கத்தோடு கேட்டிருக்கிறார்கள். தனியாக அப்படி எழுத வேண்டிய அவசியம் நம்மினத்தில் இருக்கிறது என்பதை நான் உணர்ந்ததால் நம்மினத்து கிறிஸ்தவர்களுக்கும், வாலிபர்களுக்கும் பயனுள்ள விதத்தில் ஓர் ஆக்கம் இதில் வெளிவந்திருக்கின்றது. அதுவும் உங்களை சிந்தித்து செயல்பட வைக்கட்டும்.
வாசியுங்கள், பயனடையுங்கள், கர்த்தருக்காக வாழுங்கள். எங்களையும் உங்களுடைய ஜெபத்தில் மறக்காமல் நினைவுகூருங்கள்.
நன்றி!
ஆசிரியர்