வாலிப நாட்களை அலட்சியம் செய்யாதீர்கள்!

அடிக்கடி வாலிபர்களுக்காக எதையும் தனிப்பட்ட முறையில் எழுத மாட்டீர்களா என்று அநேகர் கேட்டிருக்கிறார்கள். சிறுவர்களுக்கு, பெரியவர்களுக்கு, வாலிபர்களுக்கு என்றெல்லாம் தனித்தனியாக நான் பிரித்து எழுதுவதில்லை. வேதபோதனைகள் எல்லாமே எல்லோருக்கும் உரியவை. அந்தப் போதனைகளை அந்தந்த வயதைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்றமுறையில் விளக்கிப் போதிப்பதே போதகனின் கடமை. இருந்தாலும் நம்மினத்துப் பண்பாட்டைப் பொறுத்தவரையில் அது மேலை நாட்டுப் பண்பாட்டைப்போலல்லாமல் வேறுபட்டு மேலை நாட்டவர்கள் புரிந்துகொள்ள முடியாத நிலையில் பலவிதமான புறஜாதிப் பாரம்பரியங்களாலும், சடங்குகளாலும் பாதிக்கப்பட்டு, சில வேளைகளில் எது சரி, எது தவறானது என்று பிரித்துப் பார்க்கவும் கஷ்டமான நிலையில் இருப்பதால், அதில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருகின்ற நம்மினத்து வாலிபர்களுக்கு தனியாக அந்த விஷயங்களைப் பற்றி எழுதி உணர வைக்க வேண்டிய அவசியத்தை நான் உணர்கிறேன்.

நானும் தமிழனாகப் பிறந்து, வளர்ந்திருப்பதாலும் நம்மினத்து இந்துப் பாரம்பரிய, சடங்குகள், பண்பாட்டுச் சீரழிவுகளை அக்குவேறு ஆணிவேறாக அறிந்தும் உணர்ந்துமிருப்பதாலும், அதற்கெதிராகவெல்லாம் கிறிஸ்துவுக்குள்ளாக கிருபையை அடைந்த நாளிலிருந்தே எதிர்த்து நின்று வேத சட்டம் மட்டுமே கிறிஸ்தவனுக்கு சட்டமாக இருக்க வேண்டும் என்ற உறுதியோடு எல்லா சந்தர்ப்பங்களையும் சந்தித்து வந்திருப்பதாலும், நம்மினத்து வாலிபர்களுக்கு அவர்கள் வாழ வேண்டிய முறையைப் பற்றியும், வாழ்க்கையில் சந்திக்க வேண்டிய அனுபவங்களைப் பற்றியும் விளக்குவது எனக்கு கடினமான காரியமல்ல.

வாலிபர்களுக்காக இப்படி எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, நான் சமீபத்தில் பேசிய ஒரு குடும்ப மாநாடு எனக்கு இந்த எண்ணத்தைத் தந்தது. இரண்டு, ஒரு சபை உதவிக்காரர் தன்னுடைய சபை வாலிபர்களுக்காக இது பற்றி எழுதி உதவுமாறு கேட்டுக்கொண்டது. நம்மினத்து வாலிபர்கள் கிறிஸ்துவை விசுவாசித்து வாழுவது என்பது லேசான காரியமல்ல. மேலை நாடுகளில் பிறந்து வளர்ந்து வருகின்ற வாலிபர்களைவிட பெரிய இக்கட்டுகளை இவர்கள் சந்திக்கிறார்கள். இந்த இக்கட்டுக்களையெல்லாம் எதிர்நோக்கி கிறிஸ்துவை வாழ்க்கையில் மகிமைப்படுத்துவதென்பது இமயமலை ஏறுவதுபோல்தான். வாலிபர்கள் இதை வாசித்து மனந்தளர்ந்து போக வேண்டும் என்பதற்காக இதை நான் சொல்லவில்லை; அவர்கள் சிந்தனைபூர்வமாக தங்களுக்கிருக்கும் பிரச்சனைகளை அனுகவேண்டும் என்பதற்காகத்தான்.

முதலில் வாலிபர்களுக்கு நம்மினத்தில் இருக்கும் பிரச்சனைகளை விளக்கிவிட்டு அவற்றிற்கு என்ன பரிகாரம் என்று சொல்லுகிறேன்.

வளர்ப்பு முறை

சமீபத்தில் குடும்ப மகாநாடொன்றில் பேசியபோது உண்மையிலேயே எனக்கு ஒரு நிமிடம் தடுமாற்றம் ஏற்பட்டது. நான் பேச வேண்டியிருந்த செய்தி பிள்ளைகள் பெற்றோர்களுக்கு கீழ்ப்படிவது பற்றி. நம்மினத்து கிறிஸ்தவர்கள் மத்தியில் அதை எப்படி விளக்குவது என்பது எனக்கு முதலில் பெரிய பிரச்சனையாகவே இருந்தது. அதையும் நான் மறைக்காமல் அவர்களிடம் கூட்டத்திலேயே சொல்லிவிட்டேன். ஏன், என்று கேட்கிறீர்களா? கிறிஸ்தவ பிள்ளை வளர்ப்பு முறைகளே நம்மினத்தில் சபையிலும், வீட்டிலும் தெளிவாக வேதபூர்வமாக போதிக்கப்படுவதில்லையே. எந்த சபையில் சமீபத்தில் இதைப்பற்றிய செய்திகளைக் கேட்டிருக்கிறீர்கள்? யாத்திராகமம் 20; உபாகமம் 5; சங்கீதம், நீதிமொழிகள், உன்னதப்பாட்டு மற்றும் புதிய ஏற்பாட்டில் எபேசியர் 6; கொலோசெயர் 3 என்று வேதம் பூராவும் ஒரு இடத்தில் என்றில்லாமல் பிள்ளை வளர்ப்பு முறைகளை ஆரம்பத்தில் இருந்தே தெளிவாக விளக்கியிருக்கும்போது அவற்றைக் கருத்தோடு போதித்து சபை மக்களை ஊக்குவித்து குடும்பங்களில் பிள்ளை வளர்ப்பு முறை சரியாக இருக்கும் அளவுக்கு குடும்ப வாழ்க்கை அமைந்திருக்க வேண்டுமென்பதை விளக்கிப் போதித்து ஊழியம் செய்கிற போதகன் நம்மினத்தில் யார்?

இதுவரை நான் விளக்கியவிதத்தில் குடும்பங்கள் அமைந்து குடும்பத் தலைவர்கள் உதாரணபுருஷர்களாக வாழ்ந்து பிள்ளைகளைத் தொட்டிலில் இருந்தே வேதஅடிப்படையில் வளர்த்து வருவதைப் பார்த்திருக்கிறீர்களா? வீட்டில் அனுபவித்திருக்கிறீர்களா? வேதம் ஒன்று சொல்ல நாம் ஒருவிதத்தில் குடும்ப வாழ்க்கை நடத்தி பிள்ளை வளர்ப்பென்றாலே என்னவென்று தெரியாமல்தானே வாழ்ந்தும், பிள்ளைகளை வளர்த்தும் வருகிறோம். இந்த நிலைமையில் நான் எப்படி இந்தப் பெற்றோர்களுக்கு முன் ‘பிள்ளைகளே உங்கள் பெற்றோர்களுக்கு (கர்த்தருக்குள்) கீழ்ப்படியுங்கள் என்று சொல்லுவது?’ பிள்ளை வளர்ப்பு வேதபூர்வமாக இருப்பதற்கு அவசியமானவிதத்தில் குடும்ப வாழ்க்கை அமைந்திருக்காவிட்டால் வேதபூர்வமான பிள்ளை வளர்ப்புக்கு ஒரு குடும்பத்தில் இடமிருக்க வழியேயில்லை. ‘பிள்ளைகளே பெற்றோருக்கு (கர்த்தருக்குள்) கீழ்ப்படியுங்கள்’ என்று கர்த்தர் கட்டளையிடுகிறபோது, அந்தக் கட்டளையைப் பிள்ளைகள் நிறைவேற்ற உதவும் விதத்தில் வீட்டில் பெற்றோர்கள் வேதபூர்வமான குடும்பவாழ்க்கையை அமைத்துக்கொண்டிருக்க வேண்டும் என்ற உண்மை அந்த வார்த்தைகளில் அடங்கியிருக்கின்றது. குடும்ப வாழ்க்கை ஒழுங்காக இல்லாத கிறிஸ்தவ பெற்றோர்கள் பிள்ளைகளின் வளர்ச்சிக்கும், அவர்கள் கர்த்தரில் வளரவும் பெரும் தடையாக இருப்பார்கள். இதை நம்மினம் உணர்வதில்லை. அல்லேலூயா பாடி ஆராதிப்பது மட்டுந்தான் கிறிஸ்தவம் என்ற நினைப்பில் கர்த்தரின் வார்த்தையையும், கட்டளைகளையும் அன்றாடம் மீறி குடும்ப வாழ்க்கை, பிள்ளை வளர்ப்பு என்பது பற்றியெல்லாம் ஒரு சிந்தனையுமில்லாது வாழ்ந்து வருகிறது தமிழ் கிறிஸ்தவம்.

இதையெல்லாம் நான் விளக்குவதற்குக் காரணம் நம்மினத்து வாலிபர்கள் வீட்டில் ஒழுங்கான வளர்ப்பு முறையும் பயிற்சியும் இல்லாமலேயே இன்றும் வளர்ந்து வருவதுதான். இரண்டுவித நிலைமைகளை வாலிபர்கள் நம்மினத்தில் சந்திக்கிறார்கள்.

புறஜாதிக் குடும்பங்களில் இருந்து வளர்கிறவர்கள் இயேசுவை விசுவாசித்து புறஜாதிப் பெற்றொருக்குக் கீழ் வாழ்ந்து வருகிறார்கள். இந்தப் பெற்றோர்களின் எதிர்ப்பின் மத்தியில் அவர்கள் கிறிஸ்துவில் வளர வேண்டியிருக்கிறது. இங்கே அவர்களுக்கு பத்துக்கட்டளைகள் போதிக்கும் ஒழுக்கங்களையும், வாழ்க்கை முறைகளையும் அந்தப் பெற்றோர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடிவதில்லை. ஆகவே, கிறிஸ்தவ வாலிபர்களாக அவர்கள் இருந்தபோதும் வாழ்க்கையில் ஒழுங்கைக் கடைப்பிடிக்கத் தெரியாமலும், வயதுக்கேற்ற வேத அறிவு, உலக அறிவு, அனுபவம், முதிர்ச்சி இல்லாமலும் வளர்ந்துவிடுகிறார்கள். வயது போயிருந்தும் கிறிஸ்தவ ஆணுக்கும், பெண்ணுக்கும் இருக்க வேண்டிய கிறிஸ்தவ ஞானமும், முதிர்ச்சியும் அவர்களில் காணப்படுவதில்லை.

கிறிஸ்தவ குடும்பங்களில் பிறந்தவர்கள் வளர்ந்து வருகிறபோது கிறிஸ்துவை விசுவாசிக்கிறார்கள். ஆனால், பெரும்பாலான கிறிஸ்தவ குடும்பங்கள் வேதபூர்வமான குடும்ப வாழ்க்கை பற்றியும், பிள்ளை வளர்ப்புபற்றியும் அறியாமல் இருப்பதால் வாலிபர்கள் வருங்காலத்தில் ஆவிக்குரிய மனிதர்களாக வருவதற்கேற்றவிதத்தில் வீட்டில் வளருவதற்கான சந்தர்ப்பம் இல்லாமல் இருக்கிறது. பிள்ளைகளுக்கு இதைக்கொடுக்க வேண்டிய பெற்றோர்கள் அந்த முறையில் வளர்க்கப்படாததாலும், திருச்சபையில் போதனைகளைக் கேட்டு வளராததாலும், புறமதங்களை விட்டுவிட்டாலும் அம்மதங்களோடொட்டிய பண்பாட்டைத் தொடருவதாலும் அவர்களால் பிள்ளைகளை வேதபூர்வமாக எல்லா விஷயங்களிலும் வளர்க்க முடியாமலிருக்கிறது.

இந்த இரண்டு சூழ்நிலைகளிலும் இருந்து வளருகின்ற கிறிஸ்தவ வாலிபர்களையே இன்று நாம் தமிழ் சபைகளில் பெரும்பாலும் எங்கும் சந்திக்கிறோம். இவர்கள் சமுதாயத்திலும் வீட்டிலும் சந்திக்கின்ற பிரச்சனைகளுக்கு எல்லையில்லை. உதாரணத்துக்கு உண்மையில் நடக்கிற ஒரு விஷயத்தை கற்பனையாக, கதையாக உதாரணத்துக்கு சொல்கிறேன். ஒரு பெற்றோர் தங்களுடைய மகனுக்கு எப்படியாவது திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று துடியாய் இருக்கிறார்கள். மகனோ உண்மைக் கிறிஸ்தவன். அவனுடைய ஆசா பாசங்களிலும் கிறிஸ்தவ நம்பிக்கைகளிலும் அவர்கள் அக்கறை காட்டாமல் தங்களுடைய எண்ணப்படி திருமணம் செய்துவைக்க முயல்கிறார்கள். அந்தப் பெற்றோர்கள் பெயரளவிலான கிறிஸ்தவர்கள் (மனந்திரும்பாதவர்கள்) மட்டுமே. வளர்ந்திருக்கும், கிறிஸ்தவனாக இருக்கும் மகனை அவர்கள் துணிவுள்ளவனாக, கிறிஸ்துவை மட்டுமே எல்லாக் காரியங்களிலும் மகிமைப்படுத்தும் விதத்தில் அவர்கள் வளர அனுமதிப்பதில்லை. தங்கள் பேச்சைக் கேட்டு எதையும் செய்பவனாக இருக்க வேண்டும் என்பதில் மட்டுமே அவர்கள் கருத்தாக இருக்கிறார்கள். இப்படி வளர்ந்த வாலிபன் கிறிஸ்து தன் சபையை நேசிப்பதுபோல் தன் மனைவிக்கு தலைவனாக இருந்து குடும்ப வாழ்க்கை நடத்துவான் என்று நம்புகிறீர்களா? அவன் ஒரு பெண்ணின் கழுத்தில் கட்டும் தாலி மட்டும் அவனை தன்னம்பிக்கையுள்ள வேதபூர்வமாக வாழ்க்கை நடத்தும் கணவனாக மாற்றிவிடும் என்கிறீர்களா? ஒருக்காலும் நடக்காது. இதுவே புறஜாதிக் குடும்பத்தில் வளரும் கிறிஸ்தவனுக்கு நிகழும்போது அவன் இதையும்விடப் பேரிடையூறுகளைத் தன் வாழ்வில் சந்திக்க நேரிடுகிறது.

நம்மினத்து வாலிப ஆண்களும் பெண்களும் வீட்டில் சந்திக்கும் பிரச்சனைகளைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். கிறிஸ்தவ குடும்பங்களிலும்கூட பெற்றோர் பிள்ளைகளை தன்னம்பிக்கையோடு சிந்தித்து செயலாற்றும்படி வளர்ப்பதில்லை. வாழ்க்கையில் ஒழுங்கைக் கற்றுக்கொடுப்பதில்லை. நேரத்துக்கு படுக்கைக்குப் போவதும், எழுந்திருப்பது பற்றிய அக்கறையே ஒருவருக்கும் இருப்பதில்லை. உண்மையை மட்டுமே பேச வேண்டும் அதன்படியே நடக்க வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே கற்றுக்கொடுப்பதில்லை. தவறு செய்தால் மட்டும் உடனடியாக அடித்தோ, திட்டியோ விடுகிறோம். எதையும் சிந்தித்து முடிவு எடுக்க விடுவதில்லை. பெற்றோர் வைத்ததுதான் சட்டம் என்ற உணர்வை மட்டும் ஊட்டி வளர்க்கிறோம். பெற்றோர் முடிவுக்கு எதிரானது எல்லாமே தவறு என்ற எண்ணத்தோடு அவர்களை வளர்க்கிறோம். எது சரி, எது தவறு என்ற உணர்வோடு அவர்கள் வளரும்படி அன்றாடம் வேதத்தை சொல்லிக்கொடுத்து வளர்ப்பதில்லை. எப்படியாவது வளர்ந்துவிடுவான் என்று அவனுடைய அறிவுக்கும், அனுபவத்துக்கும் பாடசாலைகளும், கல்லூரிகளுமே தஞ்சம் என்று அவற்றில் மட்டுமே தங்கியிருக்கிறோம். பொருளாதார உயர்வு அடைய வேண்டும் என்ற எண்ணத்தை மட்டுமே பாலாக வார்த்து, வார்த்து வளர்க்கிறோம். அவர்களுடைய கல்வியும், தொழிலையும் பணத்தையும் மட்டுமே நோக்கமாகக் கொண்டிருப்பதால் உலக அறிவுக்கும், வாழ்க்கை அனுபவத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்காத கல்வியாக அது அமைந்துவிடுகிறது. தொழிலையும், பணத்தையும் அவர்கள் அடைய எதையும், ஏன் சபையையும், கிறிஸ்தவ நம்பிக்கைகளையுமே பலிக்கடாக்களாக்க நாம் தயாராக இருக்கிறோம். நாம் தொலைத்துவிடாத, வாழ்க்கையில் தொடர்ந்து ஒட்டிக்கொண்டிருக்கும் புறஜாதிப் பண்பாடுகளையும் அவர்களுக்கு ஊட்டி வளர்க்கிறோம். பிள்ளைகளுக்கு பெற்றோரே வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்வது, குலம் கோத்திரம் பார்த்து அதைச் செய்வது (கிறிஸ்தவர்களிலும் இது தொடர்ந்திருக்கிறது), கூட்டுக்குடும்பம் நடத்துவது, வீட்டுக்கு மாப்பிள்ளையாய் ஆண் இருக்கும்படி எதிர்பார்ப்பது, பத்துக்கட்டளைகளில் போதிக்கப்பட்டிருக்கும் தனிக்குடித்தன எண்ணமே வராமல் பார்த்துக்கொள்ளுவது ஆகியனவும் அதுபோல் இன்னும் ஆயிரமாயிரம் போலிப் பண்பாட்டு வழக்கங்களையும் தொடரும்படி பிள்ளைகளை வளர்ப்பதே அநேகர் தொடர்ந்து செய்துவருகிற காரியம்.

பிள்ளை வளர்ப்பென்பது பாரமான செயல், அதைப் பற்றி வேதம் மட்டுமே விளக்குகிறது என்ற உணர்வோடு வேதத்தை ஆராய்ந்து பார்த்து படித்து அதன்படி பிள்ளைகளை அவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து வளர்க்கின்ற பெற்றோர்களை நம்மினத்தில் விரல்விட்டு எண்ணிவிடலாம்.

இத்தகைய சமுதாய சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்ற நம்மினத்து ஆணும் பெண்ணுமாகிய வாலிபர்கள் இவற்றிற்கு முகங்கொடுத்து, எதிர்ப்புகளைக் கிறிஸ்துவின் துணையோடு எதிர்கொண்டு அவரை எல்லாக்காரியங்களிலும் மகிமைப்படுத்துவதெப்படி? நம்மினத்து வாலிபர்களுக்கு இருக்கின்ற பிரச்சனைகளைப் பார்த்தீர்களா? தன்னம்பிக்கையில்லாமல், வெளியில் போய் ஒரு காரியத்தை செய்யத் தைரியமில்லாமல், வாய் திறந்து சரளமாக ஒரு விஷயத்தை விவாதிக்கும் சமூகப் பழக்கம் இல்லாமல், வயதாகியும் வீட்டுக்கு வெளியில் தனியாக வாழ தைரியமில்லாமல், தொழிலையும், பணம் சம்பாதிப்பதையும் தவிர வாழ்க்கையில் வேறு எதையும் சிந்திக்க முடியாமல், முக்கியமாக எதிர்காலத்தில் குடும்பத்தலைவனாக இருக்க வேண்டிய நிலை ஏற்படுமே அதற்குத் தயாராக இருக்க வேண்டுமே என்ற எண்ணமே இல்லாமல், வயதாகியும் வளர்ச்சியில்லாத நிலையில் இருக்கும் கிறிஸ்தவ வாலிபர்கள் எத்தனை ஆயிரம் பேர். தொழில் நுட்பத்திலும், வாழ்க்கைத் தரத்திலும் வளர்ச்சியடைந்த பெரிய நகரங்களில் வாழுகின்ற வாலிபர்கள் வேண்டுமானால் ஒரு விதிவிலக்காக இருக்கலாம். ஆனால், பெரும்பாலான கிறிஸ்தவ வாலிபர்கள் இப்படி வளர்ந்திருக்கவில்லை என்று யாராவது வாதாட முடியுமா? இந்த நிலைமையில் இருக்கும் வாலிபர்கள் கிறிஸ்துவை எப்படி தங்களுடைய வாழ்க்கையில் மகிமைப்படுத்த முடியும்?

தானியேலைப்போல, யோசேப்பைப்போல, தாவீதைப்போல, சாலமோனைப்போல, தீமோத்தேயுவைப்போல, வேதத்தில் நாம் வாசிக்கும் இன்னும் எத்தனையோ வாலிபர்களைப்போல தன்னம்பிக்கையோடும், கிறிஸ்தவ வைராக்கியத்தோடும், ஞானத்தோடும் சமூக வாழ்க்கைக்குத் தங்களைத் தயார்படுத்திக்கொண்டு அதை எதிர்நோக்கும் வாலிபர்கள் நம்மினத்தில் எத்தனைபேர்? வாலிபர்கள் என்றாலே அவர்களுக்கு வயது வரவில்லை, எதையும் தப்பாகத்தான் பேசுவார்கள், தப்பாகத்தான் செய்வார்கள், தப்பாக நடக்க மட்டுமே அவர்களால் முடியும் என்ற எண்ணத்தில் அவர்களோடு சேர்ந்து பழகாமலும், அடிக்கடி பேசி வழிநடத்தாமலும் ஒதுக்கிவைத்தே இன்றைக்கும் வளர அனுமதிக்கிறது நம் சமுதாயம், ஏன் கிறிஸ்தவ சமுதாயமும்கூட என்பதை எவரால் தைரியமாக நெஞ்சில் கைவைத்து மறுக்க முடியும்? இருபத்தேழு வயதான வாலிபனைக்கூட திருமணமாவதற்குமுன், அவனுக்கு இன்னும் வளர்ச்சியில்லை என்பதுபோலவே பேசி நடத்துகிற கொடுமை நம்மினத்தில் இல்லை என்று எவராவது சொல்லமுடியுமா? நான் என்ன நடக்காததொன்றையா இத்தனை நேரம் எழுதிக்கொண்டிருக்கிறேன்? நடந்துவந்திருப்பதை, நடப்பதை, காதால் கேட்டு, கண்களால் சமுதாயத்தில் பார்த்ததையல்லவா எழுதிக்கொண்டிருக்கிறேன்.

இந்த நிலைமையில் இருக்கும் வாலிபர்கள் எப்படி கர்த்தருக்கு மகிமையளிக்கும்படி வளர்வது, அதற்கு வேத பார்வையோடு நம் பெற்றோர்களும், சபையும் செய்து தர வேண்டிய வசதிகள் என்ன என்பதை நாம் ஆராயாமல் இருக்க முடியுமா?

கிறிஸ்தவ பெற்றோர்களின் கடமை

நான் கிறிஸ்தவ பெற்றோர்களுக்கு மட்டுமே இங்கே அறிவுரை சொல்ல முடியும். கிறிஸ்தவர்களாக அல்லாத பெற்றோர்களுக்கும், பெயரளவில் கிறிஸ்தவர்கள் போலிருப்பவர்களுக்கும் அவர்கள் சபைக்குப் போய்வந்தாலும் என்னால் இங்கே அறிவுரை சொல்ல முடியாது. வேதபோதனைகளை உணரக்கூடியவர்களாக கிறிஸ்தவர்கள் மட்டுமே இருப்பதால் அவர்களுக்கு மட்டுமே, அவர்கள் கேட்பார்கள், சிந்திப்பார்கள் என்ற எண்ணத்தில் என்னால் அறிவுரை சொல்ல முடியும்.

கிறிஸ்தவ பெற்றோர்கள் தாங்கள் கிறிஸ்தவர்கள் என்பதை மனதில் வைத்து, குடும்பத்தின் ஆவிக்குரிய எதிர்காலத்திற்கும், பிள்ளைகளின் ஆவிக்குரிய எதிர்காலத்திற்கும் வழி செய்யும் வகையில் நல்ல சபையொன்றிற்கு வாழ்க்கையில் இடம்கொடுக்க வேண்டும். நம்மில் பெரும்பாலானோர் மற்ற மதத்தவர்கள் கோயிலுக்கு போய் வருவதுபோலவே சபைக்குப் போய் வருகிறோம். சபை வாழ்க்கை பற்றி சிந்தித்துப் பார்ப்பதேயில்லை. அங்கு நடக்கின்ற ஆராதனை, போதிக்கப்படும் போதனைகள் வேதபூர்வமானதாக இருக்கின்றதா என்றே எண்ணிப் பார்ப்பதில்லை. சபைக்குப் போய் காணிக்கை கொடுத்துவிட்டால் கடமை முடிந்துவிட்டது என்று வாழ்ந்து வருகிறோம். அதற்காகவல்ல கிறிஸ்து தன் சபையை நிறுவியிருப்பது. கிறிஸ்தவர்கள் சமூக வாழ்க்கையை சபையில் இருந்து தன்னுடைய மகிமைக்காக வாழவேண்டும் என்பதற்காகவே கிறிஸ்து சபையை உருவாக்கியிருக்கிறார். பிள்ளைகள் வேத சத்தியங்களை வீட்டிலும், சபையிலும் இருந்து கேட்டு வளரவேண்டுமென்பதற்காக சபையை உருவாக்கியிருக்கிறார். புறஜாதி பழக்க வழக்கங்கள், பண்பாட்டுப் பாவங்களையெல்லாம் சிந்தனையிலிருந்தும், செயலிலிருந்தும் கருத்தோடு அகற்றி கர்த்தரின் வேத ஒழுக்கவிதிகளை மட்டும் பின்பற்றி கிறிஸ்தவ குடும்பங்களாக அவர்கள் வாழ சபையை அமைத்திருக்கிறார். அதற்கு உதவும் வகையில் வேதபோதனைகளை மட்டுமே தருவது சபையின் கடமையாக இருக்கிறது. போதகர்களும் இந்த விஷயத்தில் சபையிலுள்ள குடும்பங்களுக்கு வேதபோதனைகளைத் தந்து பெற்றோரும், பிள்ளைகளும் புறஜாதிப்பண்பாட்டை ஒழித்துக்கட்டி, வேதப்பண்பாட்டின்படி வாழத் துணை செய்ய வேண்டியவர்களாக இருக்கிறார்கள். இதையெல்லாம் செய்கின்ற சபைகள் நம்மத்தியில் எண்ணிக்கையில் குறைவு என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். இத்தகைய சபைகள் இல்லாமலிருப்பதும் கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவர்களாக குடும்பத்தோடு கர்த்தரை மகிமைப்படுத்தாமலிருப்பதற்கு ஒரு காரணம் என்பதை யாரால் மறுக்கமுடியும்? கிறிஸ்தவ வாலிபர்கள் தலைநிமிர்ந்து தைரியத்தோடு தானியேலைப்போல இல்லாமலிருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்பதை யாரால் மறுக்க முடியும்?

பிள்ளைகளை பெற்றெடுப்பதோடும், ஒரு தொழிலைத் தேடி பணம் சேர்ப்பதற்கான படிப்பைக் கொடுத்துதவுவதோடும், அதற்குப் பிறகு திருமணத்தை செய்துவைத்துவிடுவதோடும் கடமை முடிந்துவிடுவதாக கிறிஸ்தவ பெற்றோர் எண்ணி வாழமுடியாது. அதுவல்ல வேதம் போதிக்கும் பிள்ளை வளர்ப்பு. பிள்ளைகள் கிறிஸ்துவை விசுவாசிக்க துணைசெய்யும் வகையில் ஆரம்ப வேதக் கல்வியை அவர்களுக்கு கொடுத்து, வேதப் பண்பாட்டை அவர்களுக்கு உதாரணமாக இருந்து வழிகாட்டி சொல்லித்தந்து சபை வாழ்க்கைக்கும், சமூக வாழ்க்கைக்கும், குடும்ப வாழ்க்கைக்கும் தன்னம்பிக்கையுள்ளவர்களாக தங்களைத் தயார்செய்து கொள்ளும்படி வளர்ப்பதே பெற்றோர்களின் தவிர்க்க முடியாத வேதப்பணி. பிள்ளைகள் வளர்ந்து, தொழில் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். அவர்கள் தங்களுடைய வாழ்க்கைக்குக் தேவையான பணத்தை சம்பாதிப்பதும் அவசியம். அதையெல்லாம் தானியேலைப் போல விசுவாசமும், ஆண்மையும் உள்ள வாலிபனாக வளர்ந்து செய்வது மிகவும் அவசியம். பெண்ணாக இருந்தால் நீதிமொழிகள் 31ல் நாம் வாசிக்கும் பெண்ணைப் போல வளர்வது எல்லாவற்றிற்கும் மேலாக அவசியம். இதை மனதில் வைத்து பிள்ளைகளை வளர்க்காத கிறிஸ்தவ பெற்றோர்கள் தங்களுடைய கிறிஸ்தவ கடமைகளில் இருந்து தவறியவர்களாகிறார்கள். பெற்றோர் இந்த முறையில் பிள்ளைகளை வளர்க்காமல் இருப்பதால்தான் ஆவியில் முடமாகவும், சமுக வாழ்க்கை வாழ்வதில் திறனும், பொறுப்புமில்லாதவர்களாகவும் இன்றைய வாலிபர்கள் இருந்து வருகிறார்கள். வளர்ந்த பிறகும் ஆவிக்குரியதொரு துணையை ஜெபத்தோடு தேடிக்கொள்ளுவதில் எந்தப் பங்கும் வகிக்காமல் தலையாட்டி பொம்மையாக யார் பேச்சோ கேட்டு திருமணம் செய்யும் வாலிபர்களாக இருந்து வரும் கிறிஸ்தவ வாலிபர்கள் எங்கே, தானியேலும், தாவீதும், யோசேப்பும் எங்கே? பெற்றோர்கள் செய்யும் பெருந்தவறுகள் எதிர்காலத்தில் கிறிஸ்துவை மகிமைப்படுத்தும் விதத்தில் வாலிபர்கள் வளரவும், உயரவும் முடியாதபடி செய்துவிடுகின்றன. அது மாறுமா?

நம்மினத்துப் பாரம்பரியமும், போலிப்பண்பாடும் வாலிபர்களை உதவாக்கறைகளாகத்தான் நம்மைப் பார்க்க வைக்கிறது. அவர்கள் தன்னம்பிக்கையில்லாமலும், வயதுக்கேற்ற அறிவும், ஆவிக்குரிய முதிர்ச்சியும், திறமையுமில்லாதவர்களாக இருப்பதற்கு பெற்றோர்கள்தான் காரணம் என்பதை நீங்கள் உணராமல் இருக்கிறீர்கள். வயதான பெரியவர்கள் என்பதாலேயே நீங்கள் முதிர்ச்சியுள்ளவர்கள் என்று தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். பண்பாட்டின் காரணமாக எல்லோரும் பெரியவர்களான உங்களை மதிப்பதால் உங்களுக்கு அறிவும், முதிர்ச்சியும் இல்லை என்ற உண்மை மாறிவிடுமா என்ன? இதை வாசித்து ஆத்திரப்படாதீர்கள். சிந்தித்துப் பாருங்கள். உங்கள் தவறுகளை உணருங்கள். மகனும், மகளும் நீங்கள் இல்லாமல் சரியான முடிவெடுக்க முடியாதென்று எண்ணி வாழ்ந்துகொண்டிருக்கும் உங்களுக்கு எல்லாத் தவறான முடிவுகளையும் கிறிஸ்துவுக்கெதிராக எடுப்பது நீங்கள்தான் என்பது ஏன் தெரியாமல் இருக்கிறது? வயதானவர்கள் என்பதற்கு உண்மையில் என்ன அர்த்தம் தெரியுமா? தாழ்மையுள்ளவர்கள் என்பதுதான். தாழ்மையுள்ளவர்கள் மட்டுமே தவறை உடனடியாக உணர்ந்து தங்களைத் திருத்திக்கொள்ளுவார்கள். இனியாவது உங்கள் தவறுகளை உணர்ந்து மகனையும், மகளையும் பொறுப்போடும், மரியாதையோடும் நடத்தி அவர்கள் உங்களை உண்மையிலேயே மதிக்கும்படி நடந்துகொள்ளுங்கள். போலித்தனமாக உங்களுக்கு மரியாதையை மட்டும் கொடுத்துவிட்டு உள்ளுக்குள் நீங்கள் அவர்களுக்குப் பெற்றோர்களாக இருப்பதற்காக அவர்கள் வருந்தும்படி செய்துவிடாதீர்கள். வாலிபர்களை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் தவறு செய்துவிடுவதில் ஆச்சரியமில்லை. அவர்கள் திருந்தவும், திருத்தமாக வாழவும் நாம்தான் கர்த்தரின் வழிகளை அவர்களுக்கு கற்றுத் தரவேண்டும். போலிப்பண்பாட்டை அல்ல, தேவனின் கட்டளைகளை அவர்களுக்கு சொல்லி வளர்க்க வேண்டும்.

சபையின் பொறுப்பு

நம்மினத்து வாலிபர்களுக்கு உதவுவதில் சபைக்குப் பெரிய பங்குண்டு. ஆனால், ஒரு சபை வேத அடிப்படையில் அமைந்திருந்து நல்ல போதகர்களைக் கொண்டிருந்தால் மட்டுமே அது நடக்க முடியும். எல்லாச் சபைகளிலுமே இன்றைக்கு வாலிபர்கள் கூட்டம் உண்டு. அது இல்லாத சபை இருக்க முடியாது. இது எதற்காக இருக்கிறது என்பதுதான் அநேகம் பேருக்குத் தெரிவதில்லை. தொடர்ந்து வாலிபர்களை ஈர்த்து சபைக்கு வரும்படி செய்ய வேண்டும் என்பதற்காக அவர்களுடைய இச்சைக்கேற்றதைக் கொடுக்கும் ஒரு தளமாகத்தான் இது இன்றைக்கு பொதுவாக அநேக சபைகளில் இருந்து வருகிறது. இந்தக் கூட்டங்களில் அவர்கள் நல்ல முறையில் வளர்ந்து ஆவிக்குரிய எதிர்காலக் குடும்பத்தலைவர்களாகவும், தலைவிகளாகவும் வளர்வதற்கு உதவும் கருவியாக இது இருப்பதில்லை. போதனைகளைத் தருவதைவிட, அவர்களை சிந்திக்க வைக்கும் ஆவிக்குரிய காரியங்களைச் செய்வதைவிட இசையும், பாட்டும் வேறெதெல்லாமோ கொடிகட்டிப் பறக்கும் ஒரு தளமாக இது பெரும்பாலான இடங்களில் இருந்து வருகிறது. என்னைப் பொறுத்தவரையில் இது வாலிபர்களைக் கொச்சைப்படுத்துகின்ற தளம்தான். இந்தளவுக்கு மோசமான இச்சைகொண்டவர்களா வாலிபர்கள்? இதற்கு மேல் போகமுடியாதவர்களா வாலிபர்கள்? தாவீது உயிரோடிருந்தாலோ, சாலமோன் உயிரோடிருந்தாலோ இந்தக்கூட்டங்களில் சந்தோஷத்தோடு கலந்துகொள்ளுவார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா? நிச்சயமாக இல்லை!

வாலிபர்கள் நல்ல குடும்பத் தலைவர்களாக, தலைவிகளாக வர சபை என்ன செய்ய வேண்டும்? அவர்கள் மீது அக்கறைகாட்டி நல்ல போதனைகளை அவர்கள் பெற்றுக்கொள்ள வழி செய்ய வேண்டும். அவர்களை உதாசீனப்படுத்தக்கூடாது. சின்னப் பையன்கள், சின்னப் பையன்கள் என்று சொல்லி சொல்லியே அநேக வாலிபர்களை சபைகள் கிறிஸ்தவ வாழ்க்கையில் வளர முடியாமல் செய்திருக்கின்றன. வாலிபர்கள் நிச்சயம் நம்மினத்தில் அடிக்கடி தவறு செய்வார்கள்; ஒரு வேலையை பொறுப்போடு செய்யாமல் போவார்கள். ஏன்? அந்தப்படி அவர்கள் வளர்க்கப்படவில்லை. அதுதான் காரணம். பெற்றோர்கள் பொறுப்போடு நடந்து அவர்களுக்கு வழிகாட்டி அந்த முறையைக் கற்றுக்கொடுக்கவில்லை. அதுதான் காரணம். அது நமக்குத் தெரிந்திருந்தால் வாலிபர்கள் தவறு செய்யும்போது அவர்களைத் திட்டுவதாலோ அல்லது திறமையாய் ஒரு காரியத்தை செய்யவில்லை என்பதற்காக எதையும் செய்யவிடாமல் இருப்பதாலோ அவர்களை நல்லமுறையில் வளர்க்க முடியுமா? அநாவசியத்துக்கு அவர்களை ஒதுக்கி வைப்பதுபோல் பேசி நடந்துகொள்ளும்போது வாலிபர்களை நாம் பவுல் சொல்லுவதுபோல் ‘கோபப்படுத்துகிறோம்’ (எபேசி. 6:4). வாலிப வயதில்தான் ரௌத்திரம் அதிகமாக இருக்கும். அதை அவர்களில் வளர்ப்பதுபோல் நாம் நடந்துகொள்ளலாமா? அவர்கள் திடனற்றுப் போகும்படி அவர்களைக் கோபப்படுத்துவதா நமது வேலை? இதைத்தான் நம் சமுதாயத்தில் நாம் தொடர்ந்து செய்துவருகிறோம். திருமணமான பிறகுகூட அவர்கள் எதையும் சரியாக செய்ய மாட்டார்கள் என்று முடிவெடுத்து தொடர்ந்து ஆலோசனை கொடுக்க துடிக்கிறோம் இல்லையா? இதெல்லாம் நம்முடைய போலிப்பண்பாடு நமக்குக் கற்றுக்கொடுத்திருக்கும் காரியங்கள். அதை நாம் இன்னும் ஒதுக்கிவைத்து வாழக் கற்றுக்கொள்ளவில்லை. சபை சபையாக இன்று நடந்துவரும் காரியத்தைத்தான் நான் சொல்லிக்கொண்டு வருகிறேன்.

வாலிபர்களை பெரியவர்கள் சபையில் ஒதுக்கி வைக்கக்கூடாது. வாலிபர்களோடு அதிகம் உறவு வைத்துக்கொள்ளக்கூடாது; அவர்களை அதிகம் பேசவிடக்கூடாது, இடங்கொடுத்துவிட்டால் அவர்கள் நம் தலை மேல் ஏறி உட்கார்ந்து நம்மை மதிக்காமல் போய்விடுவார்கள் என்று நாம் தொடர்ந்து நினைத்து வருகிறோம். அவர்களுக்கு பொறுப்புக் கொடுக்கத் தயங்குகிறோம். அவர்களை ஒதுக்கி வைத்து வளரமுடியாமல் செய்து விடுகிறோம். அநேக வாலிபர்கள் இதனால் ஒன்றுக்கும் உதவாமலேயே போய்விடுகிறார்கள். பெற்றோர்களும் அவர்களைப் பொறுப்போடு வளர்ப்பதில்லை. அவர்கள் கிறிஸ்தவர்களாக வந்த பிறகும் சபைகள் அவர்களை நடத்த வேண்டிய விதத்தில் நடத்துவதில்லை. எங்கே போகமுடியும் இந்த வாலிபர்களால்?

போதகர்களே, பெரியவர்களே! உங்கள் சபை வாலிபர்களோடு நேரம் கொடுத்து பழக ஆரம்பியுங்கள். உங்கள் குடியரசுத்தலைவராக இருந்த அப்துல் கலாம் வாலிபர்களோடு பழகுவதில்லையா? சோனியா காந்தி ராகுலை மட்டம் தட்டிக்கொண்டேயா இருக்கிறார்? பிரியங்காவைத்தான் அடுப்படியில் இருக்கும்படி செய்கிறாரா? அவிசுவாசிகளான இவர்களுக்கே வாலிபர்களை எப்படி நடத்தவேண்டும் என்று தெரிந்திருக்கும்போது கர்த்தரை விசுவாசிக்கும் நமக்கு இது தெரியாமல் போயிருப்பது எப்படி? நம்முடைய அசட்டுக் கௌரவம்தான் நம்மை இப்படி நடந்துகொள்ளும்படி வைக்கிறது. தாவீது சாலமோனைத் திட்டித் திட்டியே வளர்த்திருந்தால் சாலமோன் எதிர்காலத்தில் நாட்டை ஆளும் நிலைக்கு வந்திருப்பானா? பவுல் தீமோத்தேயுவுக்கு நேரம் கொடுத்துப் பழகாமலும், வழிநடத்தாமலும் இருந்திருந்தால் தீமோத்தேயு நல்ல போதகனாக வளர்ந்திருக்க முடியுமா? இவர்கள் எல்லோருமே போலிப்பண்பாட்டின்படி வாலிபர்களை வளர்க்கவில்லையே. வாலிபர்களைப் பற்றி தமிழக் கவிஞன் பாரதி எத்தனை பெரிதாக எண்ணியிருந்தார் தெரியுமா? அவருக்குத் தெரிந்திருந்தது வாலிபர்களின் அருமையும், பெருமையும். நம்முடைய போலிப்பண்பாட்டை அவர் எப்படியெல்லாம் சாடியிருக்கிறார் தெரியுமா? ‘நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்’ என்று பாடியிருக்கிறார் பாரதி. வாலிபர்களை பாரதி ஒளிபடைத்த கண்களுடையவர்களாக, உறுதிகொண்ட நெஞ்சுடையவர்களாகப் பார்க்கிறார். கடவுளை அறிந்திராத பாரதி கண்ட கனவும், சமுதாயமும் உருவாகவில்லை. கடவுளை அறிந்துகொண்ட நம்மால் மட்டுமே அத்தகைய சமுதாயத்தை உருவாக்க முடியும்; அதை வாலிபர்களைக் கொண்டுதான் உருவாக்கவும் முடியும். இதற்காகத்தான் கிறிஸ்துவில் இரட்சிப்பை நாம் அடைந்திருக்கிறோம். ஆனால் அந்த வாலிபர்களைத்தான் நாம் வளரவிடாமல் செய்துவருகிறோமே. இனியாவது வாலிபர்களை நல்லவிதத்தில் நடத்தப் பாருங்கள். அவர்களோடு பேசிப் பழகுங்கள். அவர்களை மதித்து நடந்துகொள்ளுங்கள். அவர்களுக்கு நல்வழி காட்டுங்கள். எப்போதும் குறைகூறாதீர்கள். அவர்கள் வாழ, உயர நல்வழி காட்டுங்கள். இதை சபை செய்யாமல் யார் செய்வது?

கிறிஸ்தவ வாலிபர்களின் கடமை

கடைசியாக கிறிஸ்தவ வாலிபர்களுடைய கடமையை விளக்க விரும்புகிறேன். நீங்கள் வளர்ந்த முறை, வாழும் முறை எல்லாமே உங்களை நல்ல முறையில் அதாவது வேத அடிப்படையில் வாழ முடியாதபடி செய்திருக்கிறது. இருந்தாலும் அதையே சாக்குப்போக்காக வைத்து நீங்கள் வேதம் எதிர்பார்க்கும் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளாமல் இருக்க முடியாது. கிறிஸ்து உங்களுக்கு விடுதலை தந்திருக்கிறார். அதுவே பெரிய ஆசீர்வாதம். அடைந்திருக்கும் அந்த ஆசீர்வாதத்திற்கு ஏற்றமுறையில் நீங்கள் வாழவேண்டியது உங்களுடைய கடமை. ஒழுங்கோடு கூடிய வாழ்க்கையை நீங்கள் வாழாமலிருந்துவிட்டு கிறிஸ்துவிடம் சாக்குப்போக்குச் சொல்ல வழியில்லை. அவர் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார். உண்மையிலேயே கிறிஸ்துவை ஒருவர் விசுவாசித்திருந்தால் கிறிஸ்து எதிர்பார்க்கும்படி வாழ்வதற்கு அவசியமான புதிய இருதயத்தையும், ஆவிக்குரிய பெலத்தையும் நிச்சயம் கிறிஸ்து அவருக்கு தந்திருக்கிறார் என்றுதான் அர்த்தம். அந்த அர்த்தத்தில்தான் பவுல் கொலோசெயர் 3ல், ‘நீங்கள் கிறிஸ்துவுடனேகூட எழுந்ததுண்டானால் . . . மேலானவைகளைத் தேடுங்கள் . . . மேலானவைகளை நாடுங்கள்’ என்று எழுதுகிறார். கிறிஸ்து உயிர்ப்பித்திருக்கும் ஒருவரால்தான் மேலானவைகளைத் தேட முடியும்; நாட முடியும். கிறிஸ்துவை விசுவாசிக்கும் வாலிபன் அப்படி என்னால் முடியவில்லை என்று சொல்ல முடியாது. கிறிஸ்துவைத் தன் வாழ்வில் கொண்டிராத ஒருவனால்தான் அப்படி வாழ முடியாது.

நீங்கள் வாழ வேண்டிய மேலான வாழ்க்கை என்ன என்பதை பவுல் தொடர்ந்து கொலோசெயர் 3ல் விளக்குகிறார்.

(1) உங்களுடைய வாழ்க்கையில் மாம்சத்துக்குரிய அனைத்தையும் அழித்துப் போடவேண்டும். கிறிஸ்துக்கு உடன்பாடில்லாத போலி வாழ்க்கை அழிய வேண்டும். பாவங்கள் ஒழிய வேண்டும். கிறிஸ்து இருக்கும் இடத்தில் அதற்கு இடமிருக்க முடியாது. பாவங்களை வாழ்க்கையில் செய்யாமலிருந்து, பரிசுத்தமாக வாழ்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். அதற்கான ஆவியையும், புதிய இருதயத்தையும் கிறிஸ்து உங்களுக்குத் தந்திருக்கிறார். அதை மறந்துவிடாதீர்கள். பாவத்தை உணர்ந்து அதிலிருந்து விலகி வாழவேண்டியது உங்கள் கடமை. அதை சொந்த ஜெபத்தாலோ, முழுநேர ஜெபத்தாலோ போக்க முடியாது. நீங்கள் அக்கறையோடும், வைராக்கியத்தோடும் அதை உங்களில் இருந்து அழிக்க வேண்டும். வேதம் ‘அழிக்க’ என்ற வார்த்தையையே பயன்படுத்துகிறது. பவுல், ‘விட்டுவிடுங்கள்’ (3:8), ‘களைந்து போடுங்கள்’ (3:9), என்கிறார். இதெல்லாம் ஆவியானவருக்கு சொல்லப்பட்ட வார்த்தைகளல்ல. உங்களுக்கு, நமக்கு சொல்லப்பட்ட வார்த்தைகள். அதை அசட்டை செய்து, ‘என்னால் முடியவில்லை’ என்ற பாட்டைப் பாடிக்கொண்டிருக்க முடியாது. கிறிஸ்தவன் போல் நீங்கள் சிந்திக்கவும், பேசவும், நடந்துகொள்ளவும் வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது.

கிறிஸ்தவன்போல், பேசுகிறீர்களா, சிந்திக்கிறீர்களா? வாலிபர்கள் என்றாலே எல்லோருக்கும் விளையாட்டுப் பசங்க என்ற எண்ணம் இருப்பதற்குக் காரணம் என்ன? உங்களுடைய பேச்சும் நடத்தையும்தான் அதற்குக் காரணம். கேளிப்பேச்சு கிறிஸ்தவனுக்கு இருக்கலாமா? வாலிபர்களாக இருப்பதற்காக உலகத்து வாலிபனைப்போல கிறிஸ்தவ வாலிபன் பேசலாமா, நடந்துகொள்ளலாமா? பேச்சு மொழி, பேச்சு முறை, வயது கூடியவர்கள் இருக்குமிடத்தில் பேசும் முறை, வாலிபப் பெண்கள் இருக்கும் இடத்தில் பேசும்முறை என்றெல்லாம் சிந்தித்துப் பார்க்காமல் கல்லூரி பையன்களோடு பேசும் பேச்சைத் தொடர்கின்ற கிறிஸ்தவ வாலிபன் சபையில் பெரியவர்களிடமும், பெற்றோர்களிடமும் நம் சமுதாயத்தில் மதிப்பைப் பெற முடியுமா? உங்கள் பேச்சு எப்படி இருக்கிறது என்பதை முதலில் நீங்கள் சிந்தித்து ஆராய்ந்து பார்த்து கிறிஸ்துவுக்கு ஏற்றமுறையில் மாற்றிக்கொள்வதற்கு பெயர்தான் ரோமர் 8ல் பவுல் விளக்கும் ‘மாம்சத்தை அழிப்பது’ என்பதற்கு அர்த்தம்.

(2) வேதத்தை அன்றாடம் தவறாமல் வாசித்து, ஜெபித்து, சபை வாழ்க்கைக்கு இடம் கொடுத்து வைராக்கியத்தோடு கிறிஸ்துவுக்காக வாழ வேண்டும் (3:16). பவுல் 3:16ல் சொல்லுவது சபை ஆராதனை மட்டுமல்ல சபை வாழ்க்கை சம்பந்தமானது. உங்களுடைய சொந்த வாழ்கையை, குடும்ப வாழ்க்கையை இந்த உலகத்தில் நீங்கள் கிறிஸ்துவின் சபையில் இருந்தே வாழ வேண்டும். சபையில்லாமல் வாழுகிறவன் கிறிஸ்துவின் சபையை உதாசினம் செய்கிறான். சபைக்கு ஒப்புக்கொடுத்து வாலிபர்கள் விசுவாசத்தோடு வாழ்க்கை நடத்தவேண்டும். சபையில் இருந்து வேத அறிவில் வளர வேண்டும். வாலிப வயதில் வேத அறிவை வளர்த்துக்கொள்ளாவிட்டால் நீங்கள் எப்படி பின்னால் குடும்பம் நடத்தி மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் வேதம் சொல்லிக்கொடுக்கப் போகிறீர்கள். வேதமே தெரியாமல் கணவனாகவோ, மனைவியாகவோ இருந்து என்ன பிரயோஜனம்? குடும்பத் தலைவனுக்கும், குடும்பப் பெண்ணுக்கும் இருக்கவேண்டிய வேதஅறிவை நடைமுறைக்குப் பயன்படுகிற அளவுக்கு வாலிப காலங்களில் வளர்த்துக்கொள்ளாவிட்டால் உங்கள் எதிர்கால வாழ்க்கை கிறிஸ்துவை எந்தவிதத்திலும் மகிமைப்படுத்த முடியாது.

அத்தோடு, வாலிபர்களாகிய நீங்கள் சபையில் பெரியவர்கள், சிறியவர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து மற்றவர்கள் மதிக்கும்படி நடந்துகொள்ள வேண்டும். சபை வேலைகளில் ஈடுபாடு காட்டவேண்டும். சபைக்காரியங்களில் ஊக்கத்தோடு பங்குபெற்று முன்னின்று நடத்தவேண்டும். அவற்றை அசட்டையாக செய்துவிட்டு செய்யாமல் போனதற்கோ அல்லது அரைகுறையாக செய்ததற்கோ சாக்குப்போக்குச் சொல்லிக்கொண்டிருக்கக் கூடாது. நொண்டிச் சாக்கு சொல்லுவது புறஜாதிப் பண்பாடு. அது கிறிஸ்தவனுக்கு அழகல்ல.

(3) திருமணமானவராக இருந்தால் திருமண வாழ்க்கை, பிள்ளை வளர்ப்பு வேதபூர்வமாக இருக்கும்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும். (எபேசி 3:18-21). உங்கள் பெற்றோருக்குத்தான் உங்களை வளர்க்கத் தெரியவில்லை. அவர்கள் அவிசுவாசிகளாக இருக்கலாம். பெயர் கிறிஸ்தவர்களாக இருக்கலாம் அல்லது கிறிஸ்தவர்களாக இருந்தும் போலிப்பண்பாட்டைத் தொடர்ந்தவர்களாக இருக்கலாம். எது எப்படி இருந்தாலும் இதிலிருந்தெல்லாம் உங்களுக்கு கிறிஸ்து விடுதலை தந்திருந்தால் உங்கள் பெற்றோர் வாழ்ந்த வளர்ந்த முறையில் நீங்கள் தொடராது உங்களுடைய குடும்பத்தை வேத அடிப்படையில் உண்மையோடு நடத்தவேண்டிய பெருங்கடமை உங்களைச் சார்ந்திருக்கிறது. அன்பான கணவனாகவும், கீழ்ப்படிவுள்ள மனைவியாகவும் இருந்து பிள்ளைகளுக்கு வேதத்தைப் போதித்து வளர்க்க வேண்டிய பெருங்கடமை உங்களுக்கு இருக்கிறது.

திருமணமாகாத வாலிபராக இருந்தால் யாரோ தகுந்த காலத்தில் திருமணம் செய்துவைப்பார்கள் என்று அதில் எந்த அக்கறையும் காட்டாமல் இருந்து வளர்வது கிறிஸ்தவ இளைஞனுக்கு அடையாளமல்ல. எனக்குத் தெரியும், பண்பாடு அப்படித்தான் உங்களை சிந்திக்க வைக்கிறது என்று. வாலிப வயதை அடைந்து தொழில் செய்ய ஆரம்பித்துவிட்டாலே திருமணம் என்ற பேச்சு நம்மினத்தில் உடனடியாக எழும். அந்த விஷயத்தில் நீங்கள் அசட்டையாக இருந்துவிடுவதை இயேசு கிறிஸ்து விரும்பவில்லை. அதை வேதபோதனைகளின்படி அணுகி அதில் ஈடுபட வேண்டும் என்றுதான் இயேசு எதிர்பார்க்கிறார். ஆதியாகமம் 1-3 வரையுள்ள பகுதிகள், எபேசியர் 5-6 அதிகாரங்கள், கொலோசெயர் 3, 1 பேதுரு 3:1-7 வரையுள்ள வேதப்பகுதிகளைக் கவனமாக ஆராய்ந்து பார்த்து கிறிஸ்தவ திருமண வாழ்க்கையிலும், குடும்ப வாழ்க்கையிலும் எப்படி ஈடுபட வேண்டுமென்று சிந்தித்துப் பார்த்து அதற்குரிய தகுதிகளை வளர்த்துக்கொண்டு ஈடுபட வேண்டும் என்று கர்த்தரின் வேதம் எதிர்பார்க்கிறது. தொழிலும், உங்கள் வயதும் மட்டும் திருமணத்திற்கான தகுதிகளல்ல. அது இரண்டும் எல்லோருக்கும் இருக்கலாம், ஆனால், கிறிஸ்தவ திருமண வாழ்க்கைக்கு அவை மட்டும் போதாது. ஒருத்திக்கு வாழ்க்கை கொடுக்கும் அளவுக்கு மனவளர்ச்சி, அறிவு வளர்ச்சி, சரீர வளர்ச்சி, ஆவிக்குரிய வளர்ச்சி அனைத்தையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும் என்று கிறிஸ்து எதிர்பார்க்கிறார். இந்தவகையில் உங்களை வளர்த்துக்கொள்ளவே வாலிப நாட்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதனால்தான் வாலிப நாட்களை வீணாக்கிக்கொள்ளக்கூடாது. இதேமுறையில்தான் ஒரு கிறிஸ்தவ பெண்ணும் தன்னுடைய வாலிப நாட்களை திருமணத்திற்காகத் தயார் செய்துகொள்ள வேண்டும். பெற்றோர் காட்டுகிற யாருக்காவது கழுத்தை நீட்டுகிற கிறிஸ்தவ பெண்ணாக நீங்கள் இருந்துவிடக்கூடாது. முக்கியமாக கிறிஸ்தவரல்லாத எவரையும், பெயர் கிறிஸ்தவர்களாக இருப்பவர்களையும் நிச்சயம் திருமணம் செய்துகொள்ளக் கூடாது. அப்படி செய்வது உங்கள் வாழ்க்கையை அழித்துக் கொள்வதற்கு மட்டுமே உதவும். நிலைமை அப்படி இருக்கிறது என்ற காரணத்தைக் காட்டி அவிசுவாசிகளை திருமணம் செய்துவிட்டு ஜெபம் பண்ணுவதில் பிரயோஜனம் இல்லை. அவிசுவாசிகளை திருமணம் செய்வது கர்த்தருடைய கட்டளையை மீறுவது என்பதை நாம் முதலில் உணரவேண்டும்.

(4) வேலை நமக்கு அவசியந்தான், பணமும் அவசியந்தான். அதையெல்லாம்கூட கிறிஸ்துவின் மகிமைக்காகவே அடைய வேண்டும். கிறிஸ்துவை மகிமைப்படுத்தாத கல்வி, வேலை, பணம், குடும்பம் அனைத்தும் வீணே. பவுல் கொலோசெயர் 3:22ல் அதைத்தான் விளக்குகிறார். நீங்கள் கிறிஸ்தவராக இருந்தால் எங்கே வேலை செய்கிறீர்களோ அந்த இடத்தில் கிறிஸ்தவ சாட்சியோடு மேலதிகாரிகளுக்கு கீழ்ப்படிந்து வேலை செய்யவேண்டும். உங்களுக்கு மேலிருக்கிறவர் அவிசுவாசியாக இருந்தாலும் அவர்களுக்கு மதிப்புக்கொடுத்து உங்களுடைய கடமையை விசுவாசத்தோடு செய்ய வேண்டும். தானியேலை நினைத்துக்கொள்ளுங்கள். அவிசுவாச அரசன், அதிகாரிகளுக்கு அவன் விசுவாசமாக கர்த்தருக்குள்ளிருந்து பணிசெய்தான். அவிசுவாசிகளிடம் பணி செய்தாலும் தேவனுக்கு பயந்து கபடமில்லாத இருதயத்தோடு அவருக்குப் பணிசெய்ய வேண்டும். அவிசுவாசிகள் ஓய்வுநாளில் வேலை செய்யும்படியாக கட்டாயப்படுத்துவார்கள். கர்த்தரை நம்பி அந்தக் காரியத்தில் ஈடுபடக்கூடாது. அதை ஏன் நீங்கள் செய்ய முடியாதென்பதை தேவபயத்தோடு அவிசுவாசிகளுக்கு விளக்க வேண்டும். எந்த நிலையிலும் உங்கள் சாட்சியை அவர்களுக்கு முன் இழந்துவிடக்கூடாது. கிறிஸ்து மகிமையடையும்படியாக வேலை செய்ய வேண்டும். விசுவாசத்தோடு, சோம்பேறித்தனமில்லாமல், அவிசுவாசியைவிடத் திறமையாக கிறிஸ்தவனாக வேலை செய்தால் ஏன் அவிசுவாசி நம்மை வெறுக்கப்போகிறான்? தானியேல் அப்படி வேலை செய்யவில்லையா?

கிறிஸ்தவராக இருக்கும் நீங்கள் ஏன் உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ளக்கூடாது? சராசரியாக வாழவும், சராசரியாக வேலை செய்யவும், சராசரி மனிதனாக சிந்திக்கவும், சராசரி மனிதனாக செயல்படவுமா கிறிஸ்து உங்களுக்கு இரட்சிப்பை அளித்திருக்கிறார். சராசரி மனிதனாக இருப்பதற்கு நாம் வெட்கப்பட வேண்டும். படிப்பில் அக்கறை காட்டாது 40% மார்க் கிடைத்தால் போதுமென்றிருப்பதற்காக வெட்கப்பட வேண்டும். சராசரிப் படிப்புள்ளவனாக தீமோத்தேயு இருக்கவில்லை. பவுல் பெரிய கல்விமான், கமாலியேலிடம் கற்றுத் தேரிய கல்விமான். பேதுரு மீன் தொழில் செய்தவனாக இருந்தபோதும் அறிவில்லாதவன் என்று வேதம் சொல்லவில்லை. அவருடைய அறிவை அவருடைய நிருபங்களில் பார்க்கிறோம். இது வானத்தில் இருந்து அவர் மேல் அற்புதமாக விழுந்த அறிவல்ல. பேதுரு நிச்சயம் அக்கறைகாட்டி கஷ்டப்பட்டு படித்திருக்கிறார். வாலிபர்கள் இன்றைக்கு பட்டத்துக்காக மட்டும் படிக்கிறார்கள். பணத்தைக் கொண்டுவரும் ஒரு தொழிலுக்காக மட்டும் ஏனோதானோவென்று படிக்கிறார்கள். அது கர்த்தருக்குப் பிடித்தமில்லாதது. அறிவை வளர்த்துக்கொள்ள படிக்க வேண்டும். கிறிஸ்தவ சிந்தனையாளனாக வர படிக்க வேண்டும். ஆவிக்குரிய சிந்தனைகள் வளர கல்வி நிச்சயம் அவசியம். எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். வாசிப்பவற்றை ஆராய்ந்து சிந்திக்கப் படிப்பு அவசியம். தொழிலுக்காக மட்டும் படிப்பதை நிறுத்துங்கள்.

சராசரி மனிதனாக இருப்பதில் என்ன தவறு என்று கேட்கிறீர்களா? சராசரி மனிதனாக இருப்பது கிறிஸ்துவுக்கு மதிப்பை அளிக்காது. கிறிஸ்தவன் திறமைசாலியாக, ‘வெட்டிக்கொண்டு வா’ என்றால் ‘கட்டிக்கொண்டு’ வருகிறவனாக இருக்க வேண்டும். அதற்கான வல்லமையை கிறிஸ்து மீட்பின் மூலம் நமக்குத் தந்திருக்கிறார். கிறிஸ்தவன் மட்டுமே உழைப்பில் உண்மையுள்ளவனாக, சிறந்தவனாக இருக்க முடியும். ஏன் தெரியுமா? உழைப்பதற்காகவே மனிதன் உருவாக்கப்பட்டிருந்தாலும், கிறிஸ்தவன் மட்டுமே உழைப்பை நீதியாக கர்த்தருக்கு செய்யக்கூடியவனாகவும் இருப்பதால்தான். கிறிஸ்து அவனை உயர்த்தியிருக்கிறார். இத்தனையை ஆண்டவர் நமக்கு செய்து தந்திருந்தும் எந்த முயற்சியும் செய்யாமலும், உழைக்காமலும், திறமைகளை வளர்த்துக்கொள்ளாமலும் இருப்பது கிறிஸ்தவனுக்கு அழகல்ல. அவிசுவாசி வெட்கப்படுமளவுக்கு சிந்தனையிலும், செயலிலும் கிறிஸ்தவன் உயர்ந்தவனாக இருக்க வேண்டும். அந்த முறையில் வேலை செய்கிறீர்களா? கிறிஸ்துவை வேலை மூலம் உயர்த்துகிறீர்களா? அல்லது வெறும் பணத்துக்காக மட்டும் வாழ்கிறீர்களா? எந்தவிதமான வாலிபர் நீங்கள்? நீங்களே மேலதிகாரியாக இருந்தால் உங்களுக்குக் கீழிருப்பவர்களை நீங்கள் மரியாதையோடு நடத்த வேண்டும். அவர்களை அநீதியாக நடத்தக்கூடாது (4:1).

வாலிபர்களே! நீங்களே எதிர்காலத்து சந்ததிகள். கிறிஸ்துவுக்குள் நீங்கள் வளரும்விதத்தில்தான் இருக்கிறது உங்களுடைய எதிர்காலம். வாலிப காலங்களை அசட்டை செய்துவிடாதீர்கள். வருங்காலத்தை மனதில் வைத்து அக்காலத்தில் நீங்கள் ஏற்று நடத்த வேண்டிய பொறுப்புக்களுக்காக இப்போதே உங்களைத் தயார்செய்துகொள்ளுங்கள். கடந்து போய்க்கொண்டிருக்கின்ற வாலிப காலங்கள் மீண்டும் திரும்ப வராது. இழந்தது இழந்ததுதான். இந்தக் காலங்களை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளத் தவறினால் அது உங்களைத்தான் பாதிக்கும். கிறிஸ்து கொடுத்திருக்கும் அருமையான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் கிறிஸ்துவை எல்லாக் காரியங்களிலும் மகிமைப்படுத்த இப்போதே உங்களைத் தயார்செய்துகொள்ளுங்கள்.

“வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களில் உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவை எல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி . . . நீ உன் இருதயத்தில் இருந்து சஞ்சலத்தையும், உன் மாம்சத்திலிருந்து தீங்கையும் நீக்கிப்போடு;” (பிரசங்கி 11:9,10). “நீ உன் வாலிபப் பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை . . .” (பிரசங்கி 12:1), “தேவனுக்குப் பயந்து அவர் கற்பனைகளைக் கைக்கொள்.” (பிரசங்கி 12:13).

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s