II- பழைய, புதிய ஏற்பாட்டு நூல்களில் பத்துக்கட்டளைகள்
கடந்த இதழில் திருச்சபை வரலாற்றில் பத்துக்கட்டளைகள் சபைகளால் மதிக்கப்பட்டு நடைமுறையில் பின்பற்றப்பட்டு வந்தது பற்றியும், பத்துக்கட்டளைகளைப் பின்பற்ற அவசியமில்லை என்ற தவறான எண்ணங்கொண்டிருந்த பிரிவுகள் பற்றியும் ஆராய்ந்திருக்கிறோம். பத்துக்கட்டளைகளின் அவசியத்தை வேதத்தில் இருந்து நேரடியாக நிரூபிப்பதற்கு முன் இப்படியாக வரலாற்றில் திருச்சபையில் அதற்குக் கொடுக்கப்பட்டிருந்த இடத்தை ஆராய்ந்தது நம் நன்மைக்கே. திருச்சபை வரலாற்றில் 19ம் நூற்றாண்டில் ஏற்பட்ட பெருமாற்றங்களே பத்துக்கட்டளைகளை இன்று திருச்சபைகளும், கிறிஸ்தவர்களும் மதித்துப் பின்பற்றாமல் இருப்பதற்குக் காரணம் என்பதையும் பார்த்தோம். இந்த இதழில் நாம் நேரடியாக வேதத்தில் பத்துக்கட்டளைகளின் அவசியம் எந்த முறையில் விளக்கப்பட்டிருக்கிறது என்பதை ஆராய்ந்து பார்ப்போம்.
மோசேக்கு முன்பு பத்துக்கட்டளைகள்
பத்துக்கட்டளைகளை கடவுள் மோசேக்கு சீனாய் மலையில் தந்தார் என்று யாத்திராகமம் 20 விளக்குகின்றது. அத்தோடு அவர் நியாயப்பிரமாணத்தின் ஏனைய கட்டளைகளையும் இஸ்ரவேலர் பின்பற்றும்படிக் கொடுத்தார் என்று அந்நூல் விளக்குகின்றது. பத்துக்கட்டளைகளே கடவுள் யார்? என்பதையும் அவரை எவ்வாறு ஆராதித்து பரிசுத்தத்தோடு அவருடைய கட்டளைகளைப் பின்பற்றி வாழ வேண்டுமென்பதையும் விளக்குகின்றது. அப்படியானால் இதுபற்றிய ஒரு முக்கியமான கேள்விக்கு நாம் விடை காண்பது அவசியம். அதாவது, பத்துக்கட்டளைகளைக் கடவுள் மோசேக்கு கொடுப்பதற்கு முன்பு எந்தக் கட்டளைகளின் மூலம் மனிதன் கடவுளை அறிந்துகொண்டான்? அவன் பரிசுத்தத்தோடு வாழ எந்தக் கட்டளைகள் உதவின என்பதே அந்தக் கேள்வி.
ஆதாம், ஏதேன் தோட்டத்தில் ஏவாளோடு வாழ்ந்து கடவுளின் சித்தத்தைத் தன் வாழ்க்கையில் பின்பற்றி வந்தான் என்று ஆதியாகமம் நமக்கு விளக்குகிறது. ஆதாமுக்கும் ஏவாளுக்கும் கடவுள் தன்னை வெளிப்படுத்தியிருந்தார். தன்னுடைய சித்தம் என்ன என்பதையும் வெளிப்படுத்தியிருந்தார். அதை அவர்கள் அறிந்திருந்தபடியால்தான் அவர்களால் கடவுளின் சித்தப்படி வாழ முடிந்தது. அவருடைய சித்தத்தை (கட்டளைகளை) மீறினால் அவர்கள் இருவரும் தாங்கள் இருக்கும் பூரண நிலையை (ஆவிக்குரிய ஜீவனை) இழந்து போவார்கள் என்று கடவுள் அவர்களுக்கு வெளிப்படுத்தியிருந்தார். இதைத்தான் ஆதி 2:16&17 வசனங்கள் விளக்குகின்றன. “நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க வேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்” என்றிருக்கிறது. இந்த வார்த்தைகளின் உள்ளர்த்தத்தை நாம் விளங்கிக் கொள்ளுவது அவசியம். இவற்றை வெறும் மரமும், பழமும் சம்பந்தப்பட்ட வார்த்தைகளாக சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இவை மிகவும் பொருள்பொதிந்த வார்த்தைகள். இந்த வார்த்தைகளின் மூலம் நாம் எதைத் தெரிந்துகொள்கிறோம் தெரியுமா? ஆதாமும், ஏவாளும் எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்று ஆண்டவர் அவர்களுக்கு ஏதேனில் கட்டளையிட்டிருக்கிறார் என்பதை நாம் அறிந்துகொள்கிறோம். கடவுள் சொல்லியிருப்பவற்றைச் செய்கிறவரை அவர்களுக்கு வாழ்வுண்டு. அவர் தடைசெய்திருப்பவற்றைச் செய்யும்போது அவர்கள் ஆவிக்குரிய ஜீவனை இழந்து பாவத்தில் விழக்கூடிய வாய்ப்பிருந்தது. இங்கே ஆதாமுக்கும், ஏவாளுக்கும் செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை என்று கடவுள் விதித்திருந்த கட்டளைகள் வெளிப்படையாக நமக்கு சொல்லப்படாவிட்டாலும் அவற்றையே பத்துக்கட்டளைகளாக பின்பு கடவுள் மோசேக்கு தன் கரத்தால் கற்பலகைகளில் எழுதிக் கொடுத்தார். இதுவே உண்மை. இதை நாம் சிந்தித்துப் பார்ப்பது நல்லது.
பாவம் என்பது கடவுளின் கட்டளைகளை மீறுவது என்று வேதம் சொல்லுகிறது (1 யோவான் 3:4). அந்தக் கட்டளைகள் என்ன என்பது தெரிந்தால் மட்டுமே ஒருவர் அவற்றை மீற முடியும். பத்துக்கட்டளைகளை மீறி வாழ்வதனால்தான் முழு மனுக்குலமும் இன்று பாவத்தில் இருக்கிறது. அந்தப் பத்துக்கட்டளைகளைத் தெரிந்திராமல் நமது முதல் பெற்றோர் பாவத்தில் விழுந்திருக்க வழியில்லை. பத்துக்கட்டளைகளே எவற்றை நாம் செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்று விளக்குகின்றன. அவை தெரிந்திருந்தபடியால்தான் நமது முதல் பெற்றோர் கடவுளுடைய வழியில் வாழ முடிந்தது. சாத்தானின் பேச்சைக்கேட்டு அவற்றை மீறியதால்தான் (புசிக்கக்கூடாத மரத்தின் கனியைப் புசித்தது) அவர்களுக்கு பாவம் நிகழ்ந்தது. இதன் மூலம் அவர்களுக்கு ஆண்டவர் விதித்திருந்த கட்டளைகள் பத்துக்கட்டளைகளைத் தவிர வேறில்லை என்பதை அறிந்துகொள்கிறோம். ஒரு பேச்சுக்காக அவை பத்துக்கட்டளைகளாக இருக்க முடியாது என்று நாம் வாதிட்டால், அதாவது வேறு ஏதாவது இருக்கலாம் என்று நினைத்தால் அந்த வாதம் உண்மையாகாது. ஏன் தெரியுமா? பத்துக்கட்டளைகள் மட்டுமே பாவத்தை உணர்த்துகிற ஒரே கட்டளைகளாக வேதத்தில் இருக்கின்றன (1 யோவான் 3:4; ரோமர் 7:7). நமது முதல் பெற்றோருக்கு தெரிந்திருந்ததும், அவர்கள் முழு உணர்வோடு மீறியதும் பத்துக்கட்டளைகளைத் தவிர வேறு எதுவாகவும் இருப்பதற்கு வழியில்லை.
இன்னோரு விதத்திலும் இதை நாம் விளங்கிக்கொள்ளலாம். இன்றைக்கு நாம் பாவத்துக்கு விளக்கம் காண வேண்டுமானால் பத்துக்கட்டளைகளையே பார்க்க வேண்டியிருக்கிறது. அதையே வேதம் உணர்த்துகிறது என்று ஏற்கனவே பார்த்தோம் (1 யோவான் 3:4). கடவுள் நிச்சயமாக பாவத்தைப் பற்றி அறிந்துகொள்ள நமது முதல் பெற்றோருக்கு ஒரு கட்டளையையும் நமக்கு ஒரு கட்டளையையும் தந்திருக்க முடியாது. இன்றைக்கு பாவம் என்றால் என்ன என்பதை எது உணர்த்துகிறதோ அது மட்டுமே ஆதாமுக்கும் பாவத்தை உணர்த்தியிருக்க முடியும். இதில் ஒரு வித்தியாசத்தை மட்டுமே பார்க்கிறோம். ஆதாமுக்கு பத்துக்கட்டளைகள் எழுத்தில் கொடுக்கப்படாமல் அவனுடைய இருதயத்தில் எழுதி வைக்கப்பட்டிருந்தன (ரோமர் 1:19; 21 & “தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார் . . . அவர்கள் தேவனை அறிந்திருந்தும் . . .”) கடவுளுடைய வார்த்தைகளின் பொருளை அதை வைத்தே அவனால் உணர முடிந்தது. இன்றைக்கு அதே கட்டளைகள் ஆரம்பத்தில் இஸ்ரவேலருக்கும் நமக்கும் எழுத்தில் தரப்பட்டிருக்கின்றன. அது மட்டுமே வித்தியாசம்.
பத்துக்கட்டளைகள் மோசேக்கு மட்டுமே கொடுக்கப்பட்டன என்றும் அதற்கு முன் அவை இருக்கவில்லை என்கிற வாதம் தப்பானது. பத்துக்கட்டளைகள் எழுத்தில் கொடுக்கப்பட்டிராதபோதும் ஆதியில் இருந்தே இருந்திருக்கின்றன. பாவத்தைப் பற்றிய அறிவும், கடவுளின் சித்தத்தைப் பற்றிய அறிவும் படைப்பில் இருந்தே மனிதனுக்கு இருந்திருக்கிறது.
சீனாய் மலையில் கொடுக்கப்பட்ட கட்டளைகள்
யாத்திராகமம் 20 ஆம் அதிகாரம் கடவுள் பத்துக்கட்டளைகளை சீனாய் மலையில் மோசேயை அழைத்துக் கொடுத்தார் என்பதை விளக்குகிறது. இஸ்ரவேலர் கானான் தேசத்தை அடைவதற்கு முன்பாக கடவுள் இதைச் செய்தார். அவர்கள் தேவனுடைய மக்களாக அவருக்குக் கீழிருந்து இந்தக் கட்டளைகளையும் நியாயப்பிரமாணத்தின் ஏனைய கட்டளைகளையும் பின்பற்றி வாழ வேண்டுமென்று கடவுள் விதித்திருந்தார். இவ்வாறாக கடவுள் கட்டளைகளை மோசேக்கு அளித்தபோது அதில் ஒரு விசேஷத்தை நாம் பார்க்கிறோம். நியாயப்பிரமாணம் என்பது பத்துக்கட்டளைகளையும் அது தவிர்த்த ஏனைய சடங்காச்சாரியம், நீதி தொடர்பான கட்டளைகள் அனைத்தையும் உள்ளடக்கியது. இவை எல்லாவற்றையும் மொத்தமாக கடவுள் சீனாய் மலையில் மோசேக்கு அளித்தார். இவையனைத்தையும் பின்பற்றி இஸ்ரவேலர் வாழ வேண்டும் என்றும் கடவுள் கட்டளையிட்டார். இருந்தபோதும் இந்தக் கட்டளைகளைக் கொடுத்த விதத்தில் நாம் ஒரு முக்கியமான வேறுபாடு இருப்பதைக் கவனிக்கிறோம்.
கடவுள் மோசேயை மலைக்கு மேல் வரும்படி அழைத்து (யாத் 19:3) அவனோடு பேசினார். அதில் அவர் நியாயப்பிரமாணத்தைக் கொடுப்பதற்கு முன்பு இஸ்ரவேலர் தங்களைத் தயார்செய்துகொள்வதற்கான சில விதிமுறைகளை விதித்தார். அந்த விதிமுறைகளின்படி அவர்கள் தங்களை மூன்று நாட்கள் பரிசுத்தப்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. அந்த மூன்று நாளும் அவர்கள் தங்கள் மனைவிகளோடும் சேரக்கூடாது என்று எச்சரித்திருந்தார். மூன்றாம் நாளிலேயே கடவுள் சீனாய் மலையில் வந்திறங்குவதாகச் சொன்னார். மூன்றாவது நாளில் ஜனங்களுக்கு ஒரு எல்லையை ஆண்டவர் விதித்திருந்தார். அவர்கள் அந்த எல்லையைவிட்டு மீறாமலும், மலையில் ஏறிவராமலும், மலை அடிவாரத்தைத் தொடாமலும் இருக்கும்படி எச்சரித்தார். அதை மீறுகிறவர்கள் கொல்லப்படுவார்கள் என்றார். மூன்றாம் நாள் விடியற் காலையில் இடிமுழக்கங்களும், மின்னலும், கார்மேகமும் பலத்த எக்காளச் சத்தமும் ஏற்பட்டது. ஜனங்கள் எல்லோருக்கும் அது நடுக்கத்தை ஏற்படுத்தியது. அப்போது மோசே அவர்களை மலை அடிவாரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த எல்லைக்கோட்டிற்கு புறம்பே நிற்கும்படிச் செய்தான். கடவுள் சீனாய் மலை மீது அக்கினியில் இறங்க அது புகை மண்டலமாகியது. மலை முழுவதும் அதிர்ந்தது. எக்காள சத்தம் வர வர அதிகரித்தது. மோசே கடவுளோடு பேச அவரும் பதிலளித்தார். அவன் மலைமேல் ஏறிப் போனான். இத்தனையையும் மக்கள் கேட்டும் பார்த்தபடியும் நின்றார்கள். இதெல்லாம் ஏன் நடந்தது தெரியுமா? கடவுள் எத்தனை பெரியவர் என்பதை அவர்களுக்கு உணர்த்தவும், அவர் கொடுக்கப்போகின்ற கட்டளைகள் சாதாரணமானவையல்ல என்பதை அவர்கள் அறிந்துகொள்ளவும் கடவுள் இப்படிச் செய்தார்.
அதுமட்டுமல்லாது கடவுள் மோசேக்கு நியாயப்பிரமாணத்தின் ஓர் அங்கமான பத்துக்கட்டளைகளை முதலில் கொடுத்தார். அதைக் கொடுத்த விதத்தில் சிறப்பான பல அம்சங்களைக் காணலாம். அவை பத்துக்கட்டளைகள் எந்தவிதத்தில் ஏனைய நியாயப்பிரமாண சட்டங்களில் இருந்து வேறுபட்டவை என்பதையும், ஏனைய நியாயப்பிரமாண சட்டங்களை விட நிரந்தரமானவை என்பதையும் உணர்த்துகின்றன. கடவுள் மோசேயுடன் மலையின் உயரத்தில் இருந்து பேசி முதலில் பத்துக்கட்டளைகளைக் கொடுத்தார் என்பதை யாத். 20 அதிகாரம் விளக்குகிறது. அதைக் கொடுத்து முடித்த உடனேயே இடி முழக்கங்களும், மின்னல்களும் தோன்றியதோடு எக்காளச் சத்தமும் காதைத் துளைத்தது. அத்தோடு மலையும் புகைந்தது. இத்தனையையும் கடவுள் செய்ததற்குக் காரணம் பத்துக்கட்டளைகள் எந்தளவுக்கு சிறப்பானவை என்றும் அவை காலத்துக்கும் மனிதர்கள் பின்பற்ற வேண்டிய நிரந்தரக் கட்டளைகள் என்பதை உணர்த்தவும்தான். அது மட்டுமல்லாது, இந்தக் கட்டளைகளைக் கடவுள் தன்னுடைய சொந்தக்கரங்களினால் இரண்டு கற்பலகைகளில் எழுதி மோசேக்கு கொடுத்தார்.
இதற்குப் பிறகுதான் கடவுள் நியாயப்பிரமாணத்தின் ஏனைய கட்டளைகளை அளித்தார். அவற்றைக் கொடுத்தபோது கடவுள் சொல்லச் சொல்ல மோசே தன்னுடைய எழுத்தில் அவற்றை எழுதிக்கொள்ள வேண்டியிருந்தது. இவற்றைக் கடவுள் எழுதிக் கொடுக்கவில்லை. இதிலிருந்து பத்துக்கட்டளைகளுக்கும் ஏனைய நியாயப்பிரமாணத்து விதிகளுக்கும் இடையில் இருந்த வேறுபாட்டை உணர்வது அவசியம். பத்துக்கட்டளைகள் நிரந்தரமானவை. ஏனைய நியாயப்பிரமாணத்து விதிகள் இஸ்ரவேலருக்கு மட்டும் சொந்தமானவை. இஸ்ரவேலரை ஒரு நாடாக அமைத்து தன் கீழ் ஆள்வதற்காக ஏனைய நியாயப்பிரமாணங்களைக் கடவுள் அவர்கள் பின்பற்றும்படியாகக் கட்டளையிட்டார். அதேவேளை பத்துக்கட்டளைகளை முழு உலகமும் பின்பற்ற வேண்டிய நிரந்தரமான கட்டளைகளாகக் கடவுள் தந்தார்.
அதுமட்டுமல்லாத வேறொரு உண்மையையும் கவனிப்பது அவசியம். நியாயப்பிரமாணத்தின் ஏனைய கட்டளைகள் பலி மற்றும் இஸ்ரவேலரின் ஆராதனைக்குரிய சடங்குகள் சம்பந்தமானவை. அவற்றில் நாட்டுப் பரிபாலனத்துக்குரிய நீதிச் சட்டங்களும் அடங்கும். இவையெல்லாம் இஸ்ரவேல் நாட்டுக்குக் கொடுக்கப்பட்டவை; அவர்களுக்கு மட்டுமே சொந்தமானவை. பத்துக்கட்டளைகள் அப்படிப்பட்டவையல்ல; அவை ஒழுக்கச் சட்டங்களாக இருக்கின்றன. கடவுளின் குணாதிசயங்களைப் பிரதிபலிப்பதாக சகல மனிதர்களும் எக்காலத்துக்கும் பின்பற்ற வேண்டியவைகளாக இருக்கின்றன. பவுல் இவற்றை ‘நீதிச் சட்டங்கள்’ என்று அழைக்கிறார்.
இஸ்ரவேல் மக்கள் மோசே மலையில் இருந்து வரும்வரையும் காத்திருக்கப் பொறுமையில்லாமல் ஆரோனை வற்புறுத்தி தாங்கள் ஆராதனை செய்ய சிலைவழிபாட்டை ஏற்படுத்தியபோது கர்த்தர் கோபங்கொண்டார். மோசேயும் கடவுள் தந்த பத்துக்கட்டளைகள் அடங்கிய இரண்டு கற்பலகைகளையும் போட்டு உடைத்தான். (யாத். 32:14-16). மக்களின் மனந்திரும்புதலைப் பார்த்து மனமிறங்கிய கடவுள் மறுபடியும் இரண்டு கற்பலகைகளில் தன்னுடைய சொந்தக் கரங்களில் பத்துக்கட்டளைகளை இரண்டாவது தடவையாக எழுதி மோசேக்கு அளித்தார். இதை அவர் ஏனைய நியாயப்பிரமாணச் சட்டங்களைக் குறித்து செய்யவில்லை. இதிலிருந்து நாம் பத்துக்கட்டளைகளின் விசேஷ தன்மையையும், அவற்றின் நிரந்தரத் தன்மையையும் அறிந்துகொள்ளுகிறோம். (உபா. 5:1-22; 10:1-2).
இஸ்ரவேலர் மத்தியில் பத்துக்கட்டளைகள் கடவுள் பத்துக்கட்டளைகள் உட்பட அனைத்து சட்டங்களும் அடங்கிய நியாயப்பிரமாணத்தை இஸ்ரவேலருக்கு அளித்தார் என்று பார்த்தோம். இவற்றில் பத்துக்கட்டளைகள் விசேஷமானவை; நிரந்தரமானவை என்பது இஸ்ரவேலருக்குத் தெரிந்திருந்ததா? என்ற கேள்விக்கு பதில் காண்பது அவசியம். இன்று புதிய ஏற்பாட்டுக்காலத்தில் சிலர் பத்துக்கட்டளைகள் இஸ்ரவேலருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டவை என்பதுபோல் நடந்துகொள்கிறார்கள். ஆனால், பழைய ஏற்பாட்டுக்காலத்தில் பத்துக்கட்டளைகள் ஏனைய சட்டங்களைவிட விசேஷமானவை என்பது இஸ்ரவேலருக்கு தெரிந்திருந்தது. அதை யூதர்கள் எப்போதுமே உணர்ந்திருந்தார்கள். நியாயப்பிரமாணத்தை (பத்துக்கட்டளைகள் உட்பட) முழுமையாக பின்பற்றுவது இஸ்ரவேலரின் கடமையாக இருந்தது. படைக்கப்பட்ட மனிதர்கள் என்ற முறையில் அவர்கள் பத்துக்கட்டளைகளைப் பின்பற்றி ஒரே தேவனை வணங்கி ஒழுக்கத்தோடு வாழ வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. அத்தோடு நியாயப்பிரமாணத்தின் பலிகளையும், சடங்குகளையும், நீதிச்சட்டங்களையும் பின்பற்றி கடவுளின் நாடாக அவருக்குக் கீழ்ப்படிந்து அவரை மட்டும், அவர் காட்டியிருக்கும் வழியில் அவருடைய ஆலயத்தில் வழிபாடு செய்து நீதியோடு நடந்துகொள்ள வேண்டிய கடமையும் இருந்தது.
பத்துக்கட்டளைகள் ஏனைய நியாயப்பிரமாண கட்டளைகளைவிட விசேஷமானவை, நிரந்தரமானவை என்பதை கடவுள் யாத் 19-20ல் இஸ்ரவேல் மக்களுக்கு முன் செய்த வல்லமையான செயல்களின் மூலம் விளக்கியிருக்கிறார். அதுமட்டுமல்லாது உபாகமம் 10:1&5 வரையிலுள்ள வசனங்களில் இந்தப் பத்துக்கட்டளைகள் எழுதப்பட்ட பலகைகளே கர்த்தர் செய்யச் சொன்ன பெட்டியில் வைக்கப்பட்டதாக வாசிக்கிறோம். உடன்படிக்கைப் பெட்டி எனும் அது பத்துக்கட்டளைகளை ஏனைய நியாயப்பிரமாண கட்டளைகளில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. பத்துக் கட்டளைகள் கடவுளின் குணாதிசயங்களை வெளிப்படுத்துவதாலும், மனித குலத்துக்கான நிரந்தரமான ஒழுக்க நீதிச் சட்டங்களாக இருப்பதாலுமே அவை மட்டும் உடன்படிக்கைப் பெட்டியில் வைக்கப்பட்டன.
வனாந்தரத்தில் இஸ்ரவேலருடைய கூடாரத்தில் உடன்படிக்கைப் பெட்டி இருந்தது. அங்கேயே கடவுளின் பிரசன்னம் இருந்தது. இந்த உடன்படிக்கைப் பெட்டி பின்னால் எருசலேமில் கட்டப்பட்ட ஆலயத்தில் இருந்தது. ஆலயத்திலேயே கடவுளின் பிரசன்னம் இருந்தது. தாவீதின் காலத்தில் இந்த உடன்படிக்கைப் பெட்டியை எருசலேமுக்கு தூக்கி செல்லும்படி கடவுள் கட்டளையிட்டார். வழியில் அது ஆடியதால் ஊசா அதைத் தொட்டுத்தாங்கப்போக ஆண்டவர் அவனை அந்த இடத்திலேயே கொன்று போட்டார். அதற்குக் காரணம் என்ன? கர்த்தரின் பிரசன்னம் அங்கு உடன்படிக்கைப் பெட்டியோடு இருந்ததால், அதை அசட்டை செய்து ஊசா நடந்துகொண்டபோது கர்த்தர் அப்படிச் செய்தார். இந்த உதாரணங்களில் இருந்து பத்துக்கட்டளைகளின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்துகொள்கிறோம். கடவுளின் குணாதிசயங்களைப் பிரதிபலித்த அந்தக் கட்டளைகள் இருந்த இடத்தில் ஆண்டவர் இருந்திருக்கிறார். இதெல்லாம் இஸ்ரேலருக்கு தெரியாமல் இருந்திருக்க வழியில்லை. நிச்சயம் அவர்கள் பத்துக்கட்டளைகளுக்கும் ஏனைய பலி, சடங்குபோன்ற சட்டங்களுக்கும் இடையில் இருந்த வேறுபாட்டை உணர்ந்திருந்தார்கள். பத்துக்கட்டளைகள் நிரந்தரமானது என்பது பழைய ஏற்பாட்டு விசுவாசிகளுக்கு நிச்சயம் தெரிந்திருந்தது.
இதற்கு இன்னுமொரு உதாரணம் பழைய ஏற்பாட்டு விசுவாசியான தாவீதின் 119வது சங்கீதம். இந்த சங்கீதத்தில் தாவீது பத்து வார்த்தைகளை கர்த்தரின் கட்டளைகளைக் குறிக்கப் பயன்படுத்தியிருக்கிறார். அந்தப் பத்து வார்த்தைகளும் கர்த்தர் நம்மிடம் எதை எதிர்பார்க்கிறார் என்பதையும், நாம் அவரிடம் எதை எதிர்பார்க்க வேண்டும் என்பதையும் குறிப்பனவாக இருக்கின்றன. இந்த சங்கீதம் நிச்சயமாக கர்த்தரின் நிரந்தரமான, எக்காலத்துக்கும் உரிய கட்டளைகளைக் குறிப்பனவாக இருக்கின்றன. அத்தகைய நிரந்தரமான கட்டளைகள் பத்துக்கட்டளைகளாக மட்டுமே இருக்க முடியும். ஒரு பேச்சுக்கு இவை கர்த்தரின் பொதுவான சகல ஒழுக்கக் கட்டளைகளையும் குறிப்பதாக எடுத்துக்கொண்டால், அத்தகைய நீதிக்கட்டளைகளுக்கு பத்துக்கட்டளைகள் மட்டுமே ஆதாரமாக இருக்கின்றன; இருக்க முடியும். இஸ்ரவேல் நாட்டுக்கு தற்காலிகமாக தரப்பட்ட பலி சம்பந்தமான கட்டளைகளாக அவை இருக்க முடியாது. தாவீது இந்த சங்கீதத்தில் நிரந்தரமான கட்டளைகளைப் பற்றி விளக்குவதை நாம் மனதில் வைக்க வேண்டும்.
இதன்படி பழைய ஏற்பாட்டு மக்களுக்கு நிச்சயம் நியாயப்பிரமாணத்தில் பத்துக்கட்டளைகளுக்கும் ஏனைய கட்டளைகளுக்கும் இடையில் இருந்த அவசியமான வேறுபாடு தெரிந்திருந்ததை நாம் அறிந்துகொள்ளுகிறோம். பத்துக்கட்டளைகளே கர்த்தரின் குணாதிசயத்தை உணர்த்துவனவாகவும், பாவத்துக்கு விளக்கம் கொடுப்பனவாகவும், பாவ விடுதலைக்கு கர்த்தரை நோக்கி ஓட பழைய ஏற்பாட்டு மக்களுக்கு வழிகாட்டுவனாகவும் இருந்திருக்கின்றன.
சுவிஷேச நூல்களில் பத்துக்கட்டளைகள்
புதிய ஏற்பாட்டு சுவிசேஷ நூல்களில் பத்துக்கட்டளைகள் பற்றி அதிக இடங்களில் விளக்கப்பட்டிருக்கிறது. பத்துக்கட்டளைகளுக்கும் நியாயப்பிரமாணத்தின் ஏனைய சட்டங்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை இயேசு மத்தேயு 22:35&40ல் விளக்கியிருக்கிறார். நியாயசாஸ்திரி ஒருவன் அவரை சோதிக்கும்படி, “நியாயப்பிரமாணத்தில் எந்தக் கற்பனை பிரதானமானது” என்று கேட்டான். அதற்கு இயேசு, “உன்தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால் உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறரிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே” என்றார். இந்த வாசகங்கள் மூலம் இயேசு பத்துக்கட்டளையை இரண்டுபிரிவாகப் பிரித்து முதல் நான்கு கட்டளைகளும் தேவனிடத்தில் எப்படி அன்புகூருவது என்பது பற்றியும் ஏனைய ஆறு கட்டளைகளும் பிறரிடத்தில் எப்படி அன்புகூருவது என்பது பற்றியும் விளக்குவதாக பதிலளித்துள்ளார். “இந்த இரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்” என்று அந்தப் பகுதி விளக்குகிறது. இயேசு ‘நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும்’ என்று சொன்னதற்குக் காரணம் பழைய ஏற்பாடு முழுதும் இந்த உண்மையைப் போதிக்கின்றன என்று காட்டுவதற்காகத்தான். இந்தப் பதங்கள் பழைய ஏற்பாட்டைக் குறிப்பதற்காக வேதத்தில் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
லூக்கா 10 ஆம் அதிகாரத்தில் நியாயசாஸ்திரி ஒருவன் இதே கேள்வியை இயேசுவைப் பார்த்து, நித்திய ஜீவனை சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டபோது இயேசு அதற்கு பதிலளிக்காமல் அவனையே பதிலளிக்கும்படிக் கேட்டார். அதற்கு இங்கே இயேசு தந்த அதே பதிலை அவனும் சொன்னான் (10:25&28). இதிலிருந்து அன்றைக்கு யூதர்கள் மத்தியில் பத்துக்கட்டளைகள் விசேஷமானவை என்பதும், அவை ஒழுக்க நீதிக் கட்டளைகள், அவற்றைப் பின்பற்றுவதற்கும் நித்திய ஜீவனை சுதந்தரித்துக்கொள்ளுவதற்கும் தொடர்பு இருக்கிறது என்பதும் அவர்களுக்குக் தெரிந்திருந்தது என்பதை அறிந்துகொள்ளுகிறோம். இதையே நியாயசாஸ்திரியின் பதில் புலப்படுத்துகிறது.
நம்மெல்லோருக்கும் தெரிந்த இயேசுவின் மலைப்பிரசங்கத்தை எடுத்துக்கொள்ளுங்கள். மத்தேயு 5&7 வரையுள்ள் மலைப்பிரசங்கத்தில் இயேசு பத்துக்கட்டளைகளுக்கான உண்மையான அர்த்தத்தை விளக்குகிறார். அவர் பத்துக்கட்டளைகளை ஒவ்வொன்றாக அடுத்தடுத்து விளக்காமல் அவற்றில் சிலவற்றை எடுத்து விளக்குவதைக் காண்கிறோம். இதன் மூலம் இயேசு பரிசேயர்கள் செய்த தவறுகளை வெளிப்படுத்துகிறார். அவர்கள் பத்துக்கட்டளைகளின் மெய்யான போதனையை மறைத்ததோடு அவற்றோடு தங்களுடைய சொந்தக் கட்டளைகளையும் இணைத்து யூதர்கள் அவற்றைப் பின்பற்றும்படி வற்புறுத்தினார்கள். இயேசு அவர்களைக் கடுமையாக மலைப்பிரசங்கத்தில் சாடுகிறார். மலைப்பிரசங்கம் மெய்யான ஆவிக்குரிய விசுவாச வாழ்க்கை என்ன என்பதை விளக்கி யூதர்கள் மத்தியில் இருந்த பரிசேயத்தனமான போலிச் சமயத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது.
மலைப்பிரசங்கத்தில் இயேசு பத்துக்கட்டளைகளுக்குக் கொடுக்கும் விளக்கங்களில் இருந்து அவற்றின் மெய்த் தன்மையை மட்டுமல்லாமல் எக்காலத்துக்குமுரிய அவற்றின் நிரந்தரத்தன்மையையும் நாம் அறிந்துகொள்ளுகிறோம்.
“இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோக ராஜ்ஜியத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்ஜியத்தில் பெரியவன் என்னப்படுவான்” என்று இயேசு இந்தக் கட்டளைகளைக் குறித்து சொல்லியிருக்கிறார் (மத் 5:19). பத்துக்கட்டளைகளில் ஒன்றான ‘கொலை செய்யாதே’ என்ற கட்டளைக்கு அவர் கொடுக்கின்ற விளக்கம் புதிய ஏற்பாட்டுக் கிறிஸ்தவர்களுக்கு இன்று அவசியமில்லாதது என்று சொல்லுவது எத்தனை முட்டாள்தனம் என்பதை அதற்கு அவர் 5:22ல் கொடுக்கும் விளக்கம் காட்டுகிறது. இதேபோலத்தான் அவர் ஏனைய கட்டளைகளுக்கும் விளக்கந்தந்து புதிய உடன்படிக்கை காலத்தில் அவற்றின் பயனையும் அவசியத்தையும் வலியுறுத்துகிறார்.
புதிய ஏற்பாட்டு நிருபங்களில் பத்துக் கட்டளைகள்
புதிய ஏற்பாட்டு நிருபங்களில் பல இடங்களில் பத்துக்கட்டளைகளின் பயன்பாட்டையும் கிறிஸ்தவர்களில் அதன் நிலையான இடத்தையும் விளக்கும் வேதப்பகுதிகள் காணப்படுகின்றன. உதாரணத்திற்கு யோவான் 5:14லும் 8:11லும் இயேசு “பாவம் செய்யாதீர்கள்” என்று சொல்லியிருக்கிறார். பாவம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு 1 யோவான் 3:4 தரும் விளக்கமென்ன? “நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்” என்கிறது அந்த வசனம். இது தற்காலிகமாக இஸ்ரவேலருக்கு கர்த்தர் கொடுத்த பலி, சடங்கு சம்பந்தமான விதிகளை நிச்சயமாகக் குறித்ததாக இருக்காது. பத்துக்கட்டளைகளை மீறுவதே பாவமாகும். புதிய உடன்படிக்கையில் பாவத்துக்கு விளக்கம் கொடுக்கும் ஒரே சாதனம் பத்துக்கட்டளைகள் மட்டுமே. ந¤யாயப்பிரமாணமாகிய பத்துக்கட்டளைகளை மீறுவோமானால் நமக்கு கடவுளைப் பற்றியே தெரியாது என்று அழுத்தமாகக் கூறியிருக்கிறார் யோவான் (1 யோவான் 2:3-6).
இதைப் பற்றி பவுல் விளக்கும்போது, “அது பரிசுத்தமுள்ளதுதான், கற்பனையும் பரிசுத்தமாயும் நீதியாயும் நன்மையுமாயும் இருக்கிறது” என்று கூறுகிறார் (ரோமர் 7:12). “நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள்” என்கிறார் பவுல் (ரோமர் 2:13). விசுவாசிகள் வெளிப்படுத்தல் நூலில் எவ்வாறு அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள் & “தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசுகிறிஸ்துவைக்குறித்து சாட்சியுடையவர்களும்” என்று வெளி 12:17 அவர்களைப்பற்றி விளக்குகிறது. “. . . அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்” என்கிறது வெளி 22:14.
பத்துக்கட்டளைகளில் ஒவ்வொன்றுமே புதிய ஏற்பாட்டு நிருபங்களில் பவுலாலும், பேதுருவாலும், யோவானாலும், யாக்கோபாலும் சுட்டிக்காட்டப்பட்டு அவற்றின் பயன்பாடு வலியுறுத்தப்பட்டிருக்கிறது. கிறிஸ்துவை விசுவாசித்து வாழ வேண்டிய புதிய உடன்படிக்கை வாழ்க்கையே பத்துக்கட்டளைகளை அடிப்படையாகக் கொண்டது. “பத்துக்கட்டளைகளுக்கான ஆழமான, விரிவான விளக்கவுரையே புதிய ஏற்பாடு” என்று ஆர்தர் பின்க் அருமையாக சொல்லியிருக்கிறார். பத்துக்கட்டளைகள் கிறிஸ்தவர்களால் பரலோகம் போகும்வரை இயேசு கிறிஸ்துவை நேசித்து பின்பற்ற வேண்டிய கற்பனைகள் என்பதை புதிய ஏற்பாடு ஆணித்தரமாக விளக்குகிறது.
கிறிஸ்துவின் புதிய உடன்படிக்கையில் பத்துக்கட்டளைகளுக்கு இடமில்லை என்று அறியாமையால் வாதிடுபவர்கள் வேதத்தைக் கருத்தோடு ஆராய்ந்து பார்க்க வேண்டும். நியாயப்பிரமாணத்தை அழிப்பதற்காக அல்ல அவற்றை நிறைவேற்றவே வந்தேன் என்று இயேசு சொல்லியிருக்கிறார். அவர் ஏற்படுத்திய புதிய உடன்படிக்கையில் பத்துக்கட்டளைக்கு நிலையான இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கட்டளைகளை தொடர்ந்து பாவத்தை உணர்த்துவதாகவும், கர்த்தரின் குணாதிசயங்களை எடுத்துக்காட்டுவதாகவும், பரிசுத்த வாழ்க்கையை இந்த உலகத்தில் வாழ்வதற்கு அடிப்படையாகவும் இருந்து வருகின்றன. பத்துக்கட்டளைகள் இல்லாமல் பாவம் இருக்க முடியாது; இரட்சிப்புக்கும், இரட்சிப்புக்குரிய வாழ்க்கைக்கும் வழியிருக்க முடியாது.