நடுநிலையாளனும் கரகாட்டக்காரனும்

நான் பணிபுரியும் சபையில் ஓய்வு நாளில் காலை வேளைகளில் 1689 விசுவாச அறிக்கைக்கான விளக்கத்தைக் கொடுத்துக்கொண்டு வருகிறேன். அதில் சமீபத்தில் ஒரு முக்கிய விஷயத்தை ஆராய நேர்ந்தது. பரிசுத்தவான்களின் விடாமுயற்சியைப் பற்றிப் போதிக்கும் விசுவாச அறிக்கை அந்தக் கிருபை ஐந்து தூண்களில் தங்கியிருப்பதாக விளக்குகிறது. அந்தப் பெருந்தூண்களில் ஒன்று கிறிஸ்துவின் மரணத்தின் மதிப்பு (Efficacious merit). இன்னொருவிதமாக விளக்குவதானால், பரிசுத்தவான்களாகிய விசுவாசிகள் தங்களுடைய விசுவாசத்தைக் காத்து அதில் வளர்வதற்குரிய பணிகளை விடாமுயற்சியுடன் செய்வதற்குக் காரணமாக இருக்கும் தூண்களில் ஒன்று கிறிஸ்துவின் மரணத்தினால் சம்பாதிக்கப்பட்ட பலன்களாகும். இது வேதம் போதிக்கின்ற உண்மை. கிறிஸ்துவின் மரணத்தினால் சம்பாதிக்கப்பட்ட பலன்களே விசுவாசி விசுவாசியாக இந்த உலகத்தில் தொடர்ந்து வாழ, வளர உதவுகிறது; அவர்கள் பரலோகத்தை நோக்கி வெற்றிகரமாக நடைபோட துணை செய்கிறது.

கிறிஸ்துவின் மரணத்தின் பலன்கள் யாருக்குரியது என்பது பற்றிய பல கருத்துவேறுபாடுகள் சுவிசேஷக் கிறிஸ்தவர்கள் மத்தியில் இருந்துவருகிறது. உண்மையில் இந்த விஷயத்தில் கருத்துவேறுபாடுகள் இருக்கக் கூடாது. வேதத்தின் மிக முக்கியமான போதனைகளில் நம்மத்தியில் கருத்து வேறுபாடுகள் இருப்பது சரியல்ல. நாம் பலவீனர்களாக இருப்பதாலும், நமது அறிவு பூரணமானதாக இல்லாமலிருப்பதாலும் நாம் வேதத்தைப் பூரணமாக புரிந்துகொள்ள முடியாமல் கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருக்கும் நிலை ஏற்படுகிறது.

நடுநிலையாளர்

may 2013 ropeஇந்தக் கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்ற காரணத்தினால் சிலர், நாம் எப்போதும் இரண்டு பக்கமும் சாயாமல் நடுநிலையான கருத்தைக் கொண்டிருக்க வேண்டுமென்பார்கள். இத்தகைய நடுநிலைக் கருத்துக் கொண்டிருக்கும் மன்னர்கள் நம்மத்தியில் அதிகம். முக்கியமாக அநேக வேதாகமக் கல்லூரிகள் இத்தகைய நிலையை எடுத்து இயங்கி வருகின்றன. வேதத்தில் எந்தப் பகுதியை எடுத்தாலும் அந்தப் பகுதி இதைத்தான் விளக்குகிறது என்று உறுதியாக சொல்லாமல் இதற்கு வேறு ஒரு கருத்து இருக்கிறதென்று ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துக்களை சொல்லித் தருவதோடு இதில் நடுநிலை அவசியம் என்று விளக்குவார்கள். எனக்கு நண்பரான ஒரு போதகர் ஒரு முறை சரியாகவே சொன்னார், ‘எனக்குத் தெரிந்த நடுநிலை எல்லாம் நட்ட நடுவீதியில் இறந்து கிடக்கின்ற நாய் மட்டுந்தான்’ என்று.

Madurai-1858 மிக உயரமாக கட்டப்பட்டிருக்கும் கயிற்றில் ஒரு பக்கமிருந்து மறுபக்கம்வரை ஒரு நீளமான கம்பைக் கையில் சுமந்துகொண்டு நடப்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? கயிற்றில் நடந்து வருகிறவர் கையிலிருக்கும் கம்பை விழுந்துவிடாமல் சுமந்து நடந்து வரவேண்டும். அந்தக் கம்பு அவர் இருபக்கமும் சாய்ந்துவிடாமல் நடுமத்தியில் நின்று நடக்க உதவுகிறது. இப்படியாக ஒரு பக்கம் சாய்ந்துவிடாமல் நடுநிலையில் நடந்து வருவது கயிற்றில் நடக்கும் வித்தைக்கு அவசியம். இதே மாதிரிதான் கரகாட்டமாடுகிறவனும் செய்வான். தலையில் இருக்கும் கரகத்தை நடுநிலையில் இருத்தி அதை விழுந்துவிடாமல் இருக்க வைத்து ஆடுவதே கரகாட்டக்காரனின் தொழில். இந்தக் கரகாட்ட வித்தையைக் கர்த்தரின் வேதம் போதிக்கும் சத்தியத்தில் பயன்படுத்துவது என்னைப் பொறுத்தவரையில் அகோரமானது. நடுநிலை வித்தை காட்டுவதற்காக கர்த்தர் நமக்கு வேதத்தைத் தரவில்லை. அவருடைய வேதம் ஒரே சத்தியத்தை எப்போதும் உள்ளது உள்ளபடி போதிக்கிறது. கஷ்டப்பட்டு வாசித்து அதை விளங்கிக்கொண்டு விசுவாசத்தோடு பின்பற்றி வருவது மட்டுந்தான் நம்முடைய கடமை. அதில் நடுநிலை வித்தை காட்டும் நாசவேலையில் நாம் ஈடுபடக் கூடாது.

கிறிஸ்துவின் மரணத்தின் பலன்கள் யாருக்கு சொந்தமானது என்ற கேள்விக்கு பின்வருமாறு பதில் தரப்படுகிறது – “கிறிஸ்துவின் மரணத்தின் பலன்கள் எல்லோருக்கும் போதுமானது, ஆனால் சிலருக்கு மட்டுமே பயனளிக்கும்” (Sufficient for all; efficient only for some). இதன் கருத்து என்ன தெரியுமா? கிறிஸ்துவின் மரணம் எல்லோரையும் இரட்சிக்கும் வல்லமை கொண்டது. ஆனால், சிலர் மட்டுமே அதனால் நிச்சயம் இரட்சிப்படைவார்கள் என்பதே. இந்த சிலர், தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் என்று இந்தக் கருத்தைக் கொண்டிருப்பவர்கள் விளக்குவார்கள். இந்தக் கருத்து இன்று நேற்றில்லாமல் பல காலமாக இருந்து வந்திருக்கிறது. கிருபையின் போதனைகளைப் பின்பற்றுகிற அநேகரிடம் இந்தக் கருத்து இருந்து வருகிறது.

இந்தக் கருத்து எப்படி உருவானது, ஏன் உருவானது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டாமா? திருச்சபையைப் போலிப்போதனைகளின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் நோக்கத்தில் நெதர்லாந்தில் 1618-1619ல் பல்வேறு திருச்சபைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய இறையியலறிஞர்கள் ஜெக்கபஸ் ஆர்மீனியஸின் சீடர்களுடைய போதனைகள் (ஐந்து போதனைகள்) வேதபோதனைகளைப் பிரதிபலிக்கவில்லை என்று ஆராய்ந்து தீர்மானித்து அந்தத் தவறான போதனைகளுக்கு எதிராக வேத போதனைகளின் அடிப்படையில் ஐந்து கருத்துக்களை வெளியிட்டனர் (கல்வினிச ஐம்போதனைகள்). அந்தப் போதனைகளை ஜோன் கல்வின் உருவாக்கவில்லை. ஆனால், அவருடைய பெயரில் அது அழைக்கப்பட்டு வருகின்றது. அந்தக் கருத்துக்களில் ஒன்றுதான் “வரையறுக்கப்பட்ட பரிகாரபலி” (Limited Atonement) என்பது. இது கிறிஸ்துவின் மரணத்தின் பலன்கள் யாரைச் சேரும் என்பதை விளக்கும் கருத்தின் தலைப்பு. அதாவது, கிறிஸ்து யாருக்காக சிலுவையில் மரித்தார் என்பதை இது விளக்குகிறது. இதற்கு வேறு பெயர்களும் உண்டு – “குறிப்பிட்டவர்களுக்கான மீட்பு” (Particular Redemption), “தீர்க்கமான மீட்பு” (Definite Atonement) என்ற பெயர்களும் உண்டு. இந்தக் கருத்தின்படி அன்று கூடிய இறையியலறிஞர்கள் பிதாவினால் அனுப்பப்பட்ட கிறிஸ்து அவரால் முன்குறிக்கப்பட்டவர்களுக்காக மட்டுமே சிலுவையில் மரித்தார் (யோவான் 6:37-40, 44; 10:27-29; 17:6-10; எபே 1:4-6) என்று வேதம் தெளிவாகப் போதிப்பதாக விளக்கினார்கள். அதையே நெதர்லாந்தில் மட்டுமல்லாமல் உலகின் ஏனைய பகுதிகளில் இருந்த சபைகளும் வேத போதனையாக ஏற்று நடக்கத் தீர்மானித்தார்கள்.

இந்த ‘வரையறுக்கப்பட்ட பரிகாரபலி’ என்ற கருத்து கிறிஸ்துவின் மரணத்தின் பலன்களின் மதிப்பை (Infinite Value) மட்டுப்படுத்துகிறது என்று சிலர் குற்றஞ்சாட்டினார்கள். அவர்கள், அது விளக்கும் போதனை என்ன என்பதை சிந்தித்துப் பார்க்காமல் வெறும் தலைப்பை மட்டுமே வைத்து அந்தத் தீர்மானத்துக்கு வந்தார்கள். வேறு சிலர், இந்தக் கருத்து பிதாவின் நீதியையும், கருணையையும், அன்பையும் மாசுபடுத்துகிறது, அவர் நிச்சயம் சிலரை இரட்சிப்பதற்காக மட்டும் தன் குமாரனைப் பலியாக்கியிருக்க மாட்டார் என்று குறை கூறினார்கள். இப்படிப்பட்டவர்களே கிறிஸ்துவின் மரணத்தின் பலாபலன்களை வேறுவிதமாக விளக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் கண்டுபிடித்த கருத்தே, “கிறிஸ்துவின் மரணத்தின் பலன்கள் எல்லோருக்கும் போதுமானது, ஆனால் சிலருக்கு மட்டுமே பயனளிக்கும்” என்பது. இந்தக் கருத்தில் என்ன தவறிருக்கிறது என்பதை நாம் ஆராயாமல் இருக்க முடியாது.

1. முதலில் இந்தக் கருத்து ‘வரையறுக்கப்பட்ட பரிகாரபலி’ என்ற கருத்தை சரிவரப் புரிந்துகொள்ளவில்லை. வரையறுக்கப்பட்ட பரிகாரபலி என்ற உண்மை கிறிஸ்துவின் மரணத்தின் பலன்களின் மதிப்பை எந்தவிதத்திலும் மட்டுப்படுத்துகின்ற வார்த்தைப் பிரயோகமல்ல. அதன் நோக்கம் கிறிஸ்துவின் மரணம் எத்தகைய பெலன் கொண்டது என்பதை விளக்குவதல்ல; கிறிஸ்துவின் மரணத்தின் பலாபலன்கள் யாருக்குரியது என்பதை விளக்குவதே. கிறிஸ்துவின் மரணத்தின் பலாபலன்களை அடைய வேண்டியவர்களின் எண்ணிக்கை கடவுளால் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பதை அது விளக்குகிறது. “இந்த வார்த்தைப் பிரயோகம் சரியானதா இல்லையா என்பதைவிட அது எதை விளக்குகிறது என்பதுதான் முக்கியமானது” என்று பேராசிரியர் ஜோன் மரே சொல்லியிருக்கிறார் (Pg 64, Redemption Accomplished and Applied). தப்பான எண்ணத்தை சிலர் மனதில் அது தோற்றுவிக்கிறது என்பதால்தான் அந்தக் கருத்தை வேறு பெயர்களிலும் அழைப்பார்கள். அதாவது, ‘குறிப்பிட்டவர்களுக்கான பரிகாரபலி அல்லது மீட்பு’ என்ற வார்த்தைப் பிரயோகம் யாருக்காக கிறிஸ்து சிலுவையில் மரித்தார் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. குறிப்பிட்டவர்களுக்காகவே அதாவது, அநாதி காலத்தில் எவரைக் கடவுள் இரட்சிக்கப்போகிறேன் என்று நிர்ணயித்தாரோ அவர்களுக்காகவே அவர் மரித்தார் (எபே 1:4-6) என்பதே அது தரும் விளக்கம்.

2. இந்தக் கருத்தின் இரண்டாவது தவறு, இது கிறிஸ்து எல்லோருக்குமாக மரித்தார் என்று தவறாக அனுமானம் செய்கிறது. அதாவது, எல்லோரையும் இரட்சிக்கக்கூடிய வகையில் மரிப்பதற்காக கிறிஸ்து அனுப்பப்பட்டு அத்தகைய வல்லமையுள்ள பரிகாரபலியை அவர் நிறைவேற்றினார் என்கிறது இந்தக் கருத்து. அது தவறான அனுமானம். வேதம் அப்படிச் சொல்லவில்லை. வேதம் தெளிவாக கிறிஸ்து தன்னுடைய ஆடுகளுக்காக, தன்னுடைய மக்களுக்காக, தன் கரத்தில் பிதாவினால் ஒப்புக்கொடுக்கப்பட்டவர்களுக்காக, எவருக்காக தான் இந்த உலகத்திற்கு வந்தாரோ அவர்களுக்காக, தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்காக, பிதாவினால் உலகத்தோற்றத்திற்கு முன்பாக முன்குறிக்கப்பட்டவர்களுக்காக மரித்தார் என்றே பல இடங்களிலும் ஆணித்தரமாக விளக்குகிறது. அதைவிட்டுவிட்டு கிறிஸ்து எல்லோருக்குமாக, அதாவது, முழு மனிதகுலத்துக்குமாக, ஒருவர் தவறவிடாமல் அனைவருக்குமாக மரித்தார் என்று சொல்லுவது வேதத்தில் முற்றிலும் காணப்படாத போதனை.

3. இந்தக் கருத்தின் மூன்றாவது தவறு, இது கிறிஸ்துவின் மரணத்தை மாசுபடுத்துகிறது. கிறிஸ்து சிலுவையில் தன்னைப் பரிகாரபலியாக ஒப்புக்கொடுத்தபோது தான் இரட்சிக்கப்போகிறவர்களை நிச்சயம் இரட்சிக்கக்கூடிய அனைத்தையும் அதன் மூலம் செய்து முடித்தார். ஆகவே, அந்தப் பரிகாரபலி அவர்களுடைய முக்காலத்துப் பாவங்களையும் அடியோடு அகற்றக்கூடிய வல்லமையைக் கொண்டிருந்தது. இரட்சிக்கப்படப் போகிறவர்களுக்கு அது எந்தவித சந்தேகமுமில்லாமல் பாவநிவாரணம் தரக்கூடிய பலியாக இருந்தது. அப்படியிருக்கும்போது அது முழு மனிதகுலத்தையும் இரட்சிக்கக்கூடியது என்று தீர்மானித்தால் முழு மனித குலமும் நிச்சயமாக இரட்சிக்கப்பட வேண்டும். ஆனால், அப்படிக் கூறுவது வேதம் போதிக்காத போலிப்போதனையில் (Universalism) போய் முடிந்துவிடும். ஏனென்றால், முழு மனிதகுலத்துக்கும் அறிவிக்கப்படும்படியாக சுவிசேஷம் கொடுக்கப்பட்டிருக்கிறதே தவிர முழு மனிதகுலத்தையும் இரட்சிக்கும்படியாக கிறிஸ்து கொடுக்கப்படவில்லை. யோவான் 3:16ல், “அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்” என்ற வார்த்தைகளை வைத்து இயேசு முழு உலகத்தையும் இரட்சிப்பார் என்று கூறுவது பெருந்தவறு. ‘உலகம்’ என்ற வார்த்தை வேதத்தில் ‘உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும்’ என்ற அர்த்தத்தில் அது காணப்படும் இடங்களிலெல்லாம் பயன்படுத்தப்படவில்லை. யோவான் 3:16ல் அது உலகத்தில் உள்ள நாடுகளையும், வெவ்வேறு இனங்களையும் குறிக்கும் ‘ஆகுபெயராகவே’ பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ‘உலகம்’ என்ற பதம் வரும் இடங்களில் உள்ள பகுதியை அதன் சந்தர்ப்பத்தின் அடிப்படையில் ஆராய்ந்தே பொருள் கொடுக்க வேண்டும். ஜோன் ஓவனின் “கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தின் மரணம்” என்ற நூல் இதைத் தெளிவாக விளக்கும் அருமையான நூல். (ஓவனின் இந்த நூல் சுருக்கமாக தமிழில் வெளியிடப்பட்டிருக்கிறது, ELS வெளியீடு.)

இதுவரை “கிறிஸ்துவின் மரணத்தின் பலன்கள் எல்லோருக்கும் போதுமானது, ஆனால் சிலருக்கு மட்டுமே பயனளிக்கும்” என்ற வாசகங்களில் உள்ள மூன்று தவறுகளை சுட்டிக் காட்டியிருக்கிறேன். இந்த வாசகங்கள் வேத உண்மைகளுக்குப் புறம்பானவை. கிறிஸ்துவின் மரணம் பற்றிய வேத சத்தியங்களை திரித்துக் காட்டுபவை. இனி கிறிஸ்துவின் மரணத்தின் பலாபலன்கள் பற்றிய உண்மையை சுருக்கமாக விளக்கிவிடுகிறேன்.

கிறிஸ்துவின் மரணத்தின் பலாபலன்கள்

கிறிஸ்து சிலுவையில் தன்னுடைய பரிகாரபலியின் (Atonement) மூலம் சம்பாதித்த பலாபலன்கள் வரையறுக்க முடியாத, எல்லையற்ற மதிப்புக் கொண்டது. அது உலகத் தோற்றத்துக்கு முன்பே முன்குறிக்கப்பட்ட அத்தனை பேருடைய சகல பாவங்களையும் அகற்றி அவர்களுக்கு இரட்சிப்பு வழங்கக்கூடிய எல்லையில்லாத மதிப்பும் வலிமையும் கொண்டது (Infinite in value). இதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. ஆகவே, கிறிஸ்துவின் பரிகாரபலியின் எல்லையற்ற மதிப்பை எவரும் கட்டுப்படுத்த முடியாது.

இப்படியாக கிறிஸ்து தன் பரிகாரபலியின் மூலமாக சம்பாதித்த பலன்கள் பிதாவினால் முன்குறிக்கப்பட்டவர்களின் பாவங்களை அகற்றி அவர்களுக்கு கிறிஸ்துவில் இரட்சிப்பு வழங்கப் போதுமானது (Sufficient). இதிலும் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. கிறிஸ்துவால் ஒரே தடவை நிறைவேற்றப்பட்ட பரிகாரபலியைத் தவிர வேறு எதுவும் பாவிகளின் இரட்சிப்புக்கு அவசியமில்லை. அந்தளவுக்கு கிறிஸ்துவின் பரிகாரபலி தெரிந்துகொள்ளப்பட்ட அனைவருடைய பாவங்களையும் கழுவிச் சுத்தப்படுத்தும் நிலையில் பூரணமாக போதுமான தன்மையுடன் இருக்கிறது.

இதை 1689 விசுவாச அறிக்கை பின்வருமாறு விளக்குகிறது:

வி. அ. 8:1 – “நித்தியத்திலிருந்தே கடவுள் தனது குமாரனுக்கு சந்ததியாகப் போகிறவர்களை அவரிடம் தந்திருந்தார். குமாரன் அவர்களை குறிப்பிட்ட காலத்தில் மீட்டு, அழைத்து, நீதிமான்களாக்கி, பரிசுத்தப்படுத்தி மகிமைப்படுத்தும் செயலில் ஈடுபட்டார்.”

வி. அ 8:5 – “. . . பிதாவினால் தமக்குக் கொடுக்கப்பட்ட எல்லோருக்காகவும் பரலோக ராஜ்ஜியத்தில் ஒரு நித்திய சுதந்திரத்தைக் கிரயம் செலுத்தி வாங்கினார்.”

இதுவரை பார்த்த விசுவாச அறிக்கையின் வாசகங்கள் மிகத் தெளிவாக கிறிஸ்து செலுத்திய பரிகாரபலியையும், அதை யாருக்காக செலுத்தினார் என்பதையும் விளக்குகின்றன.

கிறிஸ்துவின் பரிகாரபலி மனிதகுலம் அனைத்தையும் இரட்சிப்பதற்காக செலுத்தப்பட்டதா? என்றால் இல்லை என்றுதான் உறுதியாக பதிலளிக்க முடியும். அப்படி சொல்லுவது கிறிஸ்துவின் பரிகாரபலியின் மதிப்பையும் போதுமான தன்மையையும் குறைவுபடுத்துவதாகாது. உண்மையில் எல்லையற்ற மதிப்புள்ள அந்தப் பரிகாரபலி யாருக்கு செலுத்தப்பட்டது அல்லது யாருக்கு பலன்கொடுப்பதாக இருக்கிறது என்பதுதான் கேள்வி. அந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் 1689 விசுவாச அறிக்கை பின்வருமாறு விளக்குகிறது. “கிறிஸ்து தான் யாருக்காகவெல்லாம் நித்திய மீட்பை பெற்றுக்கொண்டாரோ அவர்கள் அனைவருக்கும் அதை நிச்சயமாகவும், திட்ப உறுதியாகவும் அளித்துப் பலிதமாக்குகிறார் . . . ‘தெரிந்துகொள்ளப்பட்டவர்களில் காணப்படக்கூடிய எந்த நன்மையையும் முன்னறிந்ததன் விளைவாக அல்லாமல் நிபந்தனையற்ற முறையில் இவை செய்யப்படுகின்றன.’ ” விசுவாச அறிக்கையின் இந்த வாசகங்கள் கிறிஸ்து பிதாவினால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு மட்டுமே அவருடைய பரிகாரபலியின் பலன்கள் உரித்தானவை என்பதைத் தெளிவாகத் தெரிவிக்கின்றன.

ஒரு பேச்சுக்கு சொல்லப்போனால், உண்மையில் கிறிஸ்துவின் மரணத்தில் பலாபலன்கள் மனுக்குலமனைத்தின் பாவத்தையும் போக்கக் கூடிய வல்லமையுடையது. அந்தளவுக்கு அது எல்லையற்ற மதிப்பும் வல்லமையும் கொண்டது. எந்தவிதத்திலும் குறைவற்றதாக அனைத்துப் பாவங்களையும் கழுவக்கூடிய போதுமான தன்மை கொண்டது. அதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. ஆனால், இந்த இடத்தில்தான் பிரச்சனையும் இருக்கிறது. உண்மையில் அந்த நோக்கத்துடன்தான் பிதாவும், குமாரனும் மீட்பின் உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டார்களா? அந்த நோக்கத்துடன்தான் பிதா குமாரனை இந்த உலகத்துக்கு அனுப்பினாரா? என்று கேட்டால், நிச்சயமாக இல்லை என்றுதான் பதிலளிக்க வேண்டியிருக்கிறது. அதுதான் வேதம் போதிக்கும் உண்மையும்கூட.

இப்படிக் குறைவற்ற எல்லையில்லா மதிப்புடைய கிறிஸ்துவின் பரிகாரபலியின் பலாபலன்களை சிந்தித்துப் பார்க்காமல் மனுக்குலம் அனைத்துக்கும் உரிமையானதாகக் காட்டும்போதுதான் சிலர் தவறிழைக்கிறார்கள். அப்படிச் செய்வதற்கு அவர்களுக்கு எந்த உரிமையையும் வேதம் கொடுக்கவில்லை. தன்னுடைய ஆடுகளுக்காக மட்டுமே இந்த உலகத்துக்கு வந்ததாக இயேசு தெளிவாகப் போதித்திருக்கிறார். அந்த ஆடுகளுக்கு கிறிஸ்துவின் பரிகாரபலியின் பலன்கள் போய்ச் சேர வேண்டும் என்பதே பிதாவினுடையதும், குமாரனுடையதும் திட்டமாக இருக்கிறது. எவருக்காக பரிகாரபலி (Atonement) செலுத்தப்பட்டதோ அவர்களே கிறிஸ்துவால் மீட்கப்படுகிறார்கள் (Redemption). எவரெவர் முன்குறிக்கப்பட்டு கிறிஸ்துவில் இரட்சிப்புக்காக தெரிந்துகொள்ளப்பட்டார்களோ அவர்களுக்காகவே கிறிஸ்து நீதியை சம்பாதித்து ஒப்புரவாக்குதலையும் (Reconciliation) உண்டுபண்ணினார். கிறிஸ்துவின் பரிகாரபலி விலைமதிப்பற்றது. அவருடைய மீட்பு முன்குறிக்கப்பட்டவர்களுக்குரியது. உலகத்தோற்றத்தின் முன் பிதாவும், குமாரனும் உருவாக்கிய உடன்படிக்கை அவர்களால் தெரிந்துகொள்ளப்பட்ட ஆடுகளை மீட்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. அந்த ஆடுகளுக்காகவே கிறிஸ்து இந்த உலகத்துக்கு வந்தார். அந்த ஆடுகள் பாவிகளாக மனுக்குலத்திலே நிறைந்திருக்கிறார்கள். அந்த ஆடுகளில் ஒன்று தவறாமல் கிறிஸ்து தன்னிடம் அழைத்துக்கொள்ளுவார். இதுவே வேதம் போதிக்கும் உண்மை.

வேதத்தில் உலகத்துக்காக கிறிஸ்து மரித்தது போன்ற எண்ணத்தைக் கொடுக்கும் சில பகுதிகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு யோவான் 1:28 (உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கின்ற தேவ ஆட்டுக்குட்டி); யோவான் 3:16 (தேவன், தம்முடைய . . . குமாரனை . . . தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்). வேதம் போதிக்கும் உண்மை இப்படியிருக்க, “கிறிஸ்துவின் மரணத்தின் பலன்கள் எல்லோருக்கும் போதுமானது, ஆனால் சிலருக்கு மட்டுமே பயனளிக்கும்” என்று கூறுவது உண்மைக்கு மாறானதாகும். கிறிஸ்துவின் பரிகாரபலி எல்லோருக்கும் போதுமானதாக இருந்தால் எல்லோரும் இரட்சிக்கப்பட வேண்டும். அவ்வாறு எல்லோரும் இரட்சிக்கப்படாமல் சிலர் மட்டும் இரட்சிக்கப்படுவார்களானால் கிறிஸ்துவின் பரிகாரபலியின் மதிப்பு குறைந்துவிடும்.

கர்த்தரின் திட்டமும் நோக்கமும் தன்னுடைய மக்களைக் கிறிஸ்துவின் மூலம் இரட்சிப்பதுதான். “கிறிஸ்துவின் மரணத்தின் பலன்கள் எவருக்காகப் போதுமானதாக நிறைவேற்றப்பட்டதோ அவர்களுக்கு மட்டுமே பலனளிக்கும்” என்பதுதான் சரியான விளக்கமாகும். வேத சத்தியங்களைப் பொறுத்தவரையில் சிலருக்கு அவை பிடிக்கவில்லை என்பதற்காக நடுநிலையை உருவாக்கப் பார்ப்பது சத்தியப் புரட்டலில் கொண்டுபோய் விட்டுவிடும். இதில் கரகாட்டத்துக்கு இடமில்லை.

பொதுவான கிருபை

கிறிஸ்துவின் மரணத்தின் பலாபலன்கள் எவரை அடைவதற்காக நிர்ணயம் செய்யப்பட்டன என்பதை ஆராய்ந்து வருகிற நாம் அதற்கும் “பொதுவான கிருபைக்கும்” தொடர்பு இருக்கின்றதா என்பதையும் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. இதற்கு முதலில் பொதுவான கிருபை என்பது எதைக் குறிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.

கிருபை என்ற வார்த்தை வேதத்தில் இரட்சிக்கும் கிருபை என்ற அர்த்தத்தில் மட்டும் பயன்படுத்தப்படவில்லை. எல்லோருக்கும் கடவுள் தாராள மனப்பான்மையுடன் அளிக்கும் பொதுவான நன்மைகளையும், திறமைகளையும், வசதிகளையும் குறிப்பதாக “பொதுவான கிருபையைக்” குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. கடவுளை அறியாத மனிதர்களிடம் நாம் தைரியத்தையும், நம்பகத்தன்மையையும், நீதியையும், வேறு நல்ல குணாதிசயங்களையும் காண்கிறோம். இயற்கையான மனித வாழ்க்கையோடு தொடர்புடைய இதையெல்லாம் கடவுளின் சாயலைக் கொண்டுள்ள மனிதனில் காணமுடியும். இதெல்லாம் கடவுள் தெரிந்துகொள்ளப்படாத மனிதர்களுக்கும் அளிக்கின்ற ஆசீர்வாதங்களாக இருக்கின்றன. கடவுளின் சாயலில் படைக்கப்பட்டிருக்கிற மனிதன் பாவத்தால் முழுமையாகக் கறைபடிந்தவனாக இருந்தபோதிலும் அவன் தேவசாயலை இழந்துவிடவில்லை. அவன் ஆவியுள்ளவனாக மனிதனாகவே தொடர்ந்தும் இருக்கிறான்.

“தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் மட்டுமே ஆவியினால் பரிசுத்தப்படுத்தப்படுகிறார்கள்; அவர்கள் மட்டுமே பாவநோயில் இருந்து விடுதலை அடைகிறார்கள்; அவர்கள் மட்டுமே புதிய மனிதர்களாக சிருஷ்டிக்கப்படுகிறார்கள். இருந்தபோதும் கடவுளினால் படைக்கப்பட்ட அனைவருமே அதே ஆவியினால் படைப்பின் சட்டப்படி தங்களுடைய தன்மைக்கேற்றவிதத்தில் இயக்கப்படுகிறார்கள்” என்று எழுதியிருக்கிறார் ஜோன் கல்வின். கல்வினின் இந்த வார்த்தைகள் பொருள் பொதிந்தவை. நாம் சாதாரணமாகவே பரிசுத்த ஆவியானவரை கிறிஸ்தவர்களோடு மட்டுமே தொடர்புபடுத்திப் பார்த்து வருகிறோம். அது தவறு. திரித்துவத்தின் மூன்றாம் அங்கத்தவரான பரிசுத்த ஆவியானவர் கடவுள் படைத்த உலகையும், படைப்புகளையும் பராமரித்து வருகிறார். உலகத்தைக் கடவுள் படைத்தபோது திரித்துவ அங்கத்தவர்கள் மூவருமே அதில் பங்கேற்றார்கள் (ஆதி 1). அதேபோல் உலகையும், படைப்புயிர்களையும் பராமரிப்பதிலும், கொண்டு நடத்துவதிலும் அவர்கள் மூவரும் பங்கேற்கிறார்கள். அதில் ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லை. இதன் காரணமாகவே தெரிந்துகொள்ளப்படாத மனிதர்களிலும் நாம் ஆவிக்குரியதாக இல்லாத பல்வேறு நன்மைகளையும், சிந்தனா சக்தியையும், ஒழுக்கத்தையும் காண முடிகின்றது.

பொதுவான கிருபையைப் பற்றி விளக்குகிற பிரின்ஸ்டன் பேராசிரியரான A. A.  ஹொட்ஜ், “சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படும் சத்தியத்தின் மூலமாகவோ அல்லது மனிதனின் உள் மனச்சாட்சியும், இயற்கையின் விதிகளும் வெளிப்படுத்துகின்ற உண்மைகளின் அடிப்படையிலோ பரிசுத்த ஆவியானவர் மனிதனின் இருதயத்தைப் பாதித்து அவனுடைய சிந்தனைகளையும், செயல்களையும் கட்டுப்படுத்தியும், அவனில் செல்வாக்கு செலுத்தும் கிரியையே பொதுவான கிருபை என்ற பெயரில் அழைக்கிறோம்” என்று விளக்கியிருக்கிறார். இது மிகவும் பிரயோஜனமான விளக்கம். இந்த விளக்கத்தின்படி பரிசுத்த ஆவியானவர் தெரிந்துகொள்ளப்படாத மனிதனில் இரட்சிப்புக்குரிய கிருபையைத் தவிர ஏனைய செயல்களைச் செய்கிறார் என்பதை அறிந்துகொள்ளுகிறோம். இதை நாம் மறுக்க முடியாது. ஏனெனில், தெரிந்துகொள்ளப்படாத மனிதர்களின் அத்தனை நடவடிக்கைகளும், வல்லமைகளும் அவர்களுக்குள் இயற்கையாக காணப்படும் தன்மையின் காரணமாக நிகழ்கின்றது என்றும் கடவுளோடு தொடர்பில்லாதது என்று சொல்லுவது வேதத்துக்கு முரணானது மட்டுமல்ல மனிதன் கடவுளில்லாமல் தானே சுயமாக இயங்குகிறான் என்று கூறுவதில் போய் முடிந்துவிடும். அது உண்மையல்ல. அனைத்தையும் இயக்கி வருகிறவர் கடவுள் மட்டுமே. ஆகவே “பொதுவான கிருபையின்” மூலம் கடவுள் இரட்சிப்பிற்குரிய கிரியையைத் தவிர ஏனைய செயல்களைத் தெரிந்துகொள்ளாதவர்களில் செய்வதோடு அவர்களுக்கு ஆவிக்குரியதாக இல்லாத ஏனைய நன்மைகளையும், வல்லமைகளையும் தந்து தன்னுடைய மகிமைக்காக அவர்களைக் கொண்டு நடத்துகிறார் என்று அறிந்துகொள்ளுகிறோம். இதையே “கடவுளின் பொதுவான பராமரிப்பு எல்லாப் படைப்புயிர்களையும் அடைகின்றது” என்ற வாசகங்களின் மூலம் 1689 விசுவாச அறிக்கை 5:7ல் விளக்குகிறது. அதுமட்டுமல்லாமல் 1689 வி. அ. 10 ஆம் அதிகாரத்தில் 4வது பத்தியில், “ஆவியின் பொதுவான சில செயல்களின் கீழ் வரவும் வாய்ப்புப் பெற்றவர்கள்” என்று தெரிந்துகொள்ளப்படாதவர்களுக்கு ஆவியானவர் நற்செய்தியின் மூலம் செய்கின்ற பொதுவான பலன்களைக் குறிப்பிடுகின்றது.

இந்த ஆக்கத்தில் பொதுவான கிருபை பற்றி நாம் ஆராய்ந்ததற்குக் காரணம் அதற்கும் கிறிஸ்துவின் பரிகாரபலியின் பலாபலன்களுக்கும் தொடர்பிருக்கின்றதா என்பதை ஆராய்வதற்காகத்தான். அத்தகைய தொடர்பு அடியோடு இல்லை என்று சொல்ல முடியாது. இதுவரை நாம் பார்த்திருப்பவற்றைவிட பரிசுத்த ஆவியானவர் சுவிசேஷத்தின் மூலமாகவும் இரட்சிப்பைத் தவிர்த்த நன்மைகளை தெரிந்துகொள்ளப்படாதவர்கள் அடையும்படிச் செய்கிறார். அதை விளக்குகின்ற சில வேதப்பகுதிகள் இருக்கின்றன. மத்தேயு 13ல் நாம் வாசிக்கின்ற விதைக்கிறவனின் உவமையில் விதைகள் எல்லா நிலங்களிலும் விழுவதாக விளக்கப்பட்டிருப்பதை வாசிக்கிறோம். அவை நல்ல நிலத்தில் விழும்போதுதான் பலனளித்தபோதும், ஏனைய நிலங்களிலும் விழுந்து சில காலம் மட்டும் பலனளித்திருப்பதைப் பார்க்கிறோம். இதில் பண்படுத்தப்பட்ட நிலம் மட்டுமே கிறிஸ்தவர்களை அடையாளம் காட்டுகின்றது. ஏனைய நிலங்கள் தெரிந்துகொள்ளப்படாத, சுவிசேஷத்தை விசுவாசிக்காத மனிதர்களைக் குறிக்கும். அவர்கள் கேட்ட விதையான சுவிசேஷம் வெளிப்புறமாக அவர்களில் சிறிது காலம் மட்டுமே பலன் தந்திருக்கிறது. நிலையான நித்திய ஜீவனை ஒருபோதும் அளிக்கவில்லை.

அதேபோல் எபிரெயர் 6:4-8; 10:26-29 ஆகிய வசனங்களும் பரிசுத்த ஆவியின் கிரியையினால் தெரிந்துகொள்ளப்படாதவர்கள் வெளிப்புறமாக குறுகிய காலத்துக்கு அடையும் பலன்களை விளக்குகின்றன. சிலர் இந்தப் பகுதிகள் இரட்சிப்பு அடைந்த பிறகு பின்வாங்கிப் போகிறவர்களையோ அல்லது விழுந்துபோகிறவர்களையோ குறிப்பதாக விளக்குவார்கள். அது முழுத்தவறு. உண்மையில் இரட்சிப்பு அடைகிறவர்கள் ஒருபோதும் விழுந்துபோகப் போவதில்லை என்பதை இயேசுவே விளக்கியிருக்கிறார் (யோவான் 10:28). எபிரெயர் வேதப்பகுதிகள் விளக்கும் சில நன்மைகளை பரிசுத்த ஆவியானவர் சகல மனிதர்களிலும் செய்யும் கிரியையின் மூலமாக சிலர் பெற்றிருந்தபோதும் அவர்கள் இரட்சிக்கும் விசுவாசத்தைப் பெற்றுக்கொண்டிராதபடியால் தங்களுடைய பாவத்திலேயே தொடர்ந்திருந்துவிடுகிறார்கள். இதையே இந்தப்பகுதிகள் விளக்குகின்றன. இதே உண்மையைத்தான் 2 பேதுரு 2:20-22 வரையுள்ள வசனங்களும் விளக்குகின்றன.

பொதுவான கிருபையைப் பற்றிய இரண்டு தவறான போதனைகளை நான் விளக்காமல் இருக்க முடியாது. ஆர்மீனியன் கோட்பாடுகளைப் பின்பற்றுகிறவர்கள் பொதுவான கிருபை மூலம் கர்த்தர் அவிசுவாசிக்கு ஆவிக்குரிய வல்லமையை அளித்து கிறிஸ்துவை விசுவாசிக்கக்கூடிய தீர்மானத்தை எடுக்கும் தகுதியைக் கொடுக்கிறார் என்று கூறுகிறார்கள். அது முழுத்தவறு. பொதுவான கிருபை எந்தவிதத்திலும் மனிதனுக்கு ஆவிக்குரிய கிரியைகளைச் செய்யும் வல்லமையையும், தகுதியையும் அளிப்பதில்லை. பொதுவான கிருபை மூலம் இஸ்ரவேலுக்கு அரசனாக இருந்த சவுல் ஆவிக்குரிய செயல்களைச் செய்யும் தகுதியைக் கொண்டிருக்கவில்லை. அவன் கடைசிவரை அவிசுவாசியாகவே இருந்தான். யெகூ பொதுவான கிருபையின் மூலம் ‘நன்மை செய்தான்’ என்று கர்த்தரே சொல்லும்படி நன்மையைச் செய்திருந்தபோதும் விசுவாசியாக இருக்கவில்லை. இவர்களில் ஆவிக்குரிய கிரியையை பரிசுத்த ஆவியானவர் செய்யவில்லை.

இரண்டாவதாக, ஹைப்பர்-கல்வினிசப் போதனைகளைப் பின்பற்றுகிறவர்கள் பொதுவான கிருபையை நிராகரிக்கிறார்கள். கடவுள் எந்தவிதத்திலும் தெரிந்துகொள்ளப்படாதவர்களுக்கு நன்மை செய்வதோ கருணை காட்டுவதோ இல்லை என்கிறார்கள். இது முழுத் தவறான போதனை. வேதம் தெளிவாக பொதுவான கிருபையிருப்பதை விளக்குகிறது (சங் 145:9). கல்வினுக்கு முன் ஆகஸ்தீனும் இதை நம்பினார். எப்படி கடவுளின் திட்ப உறுதியான அழைப்பும், பொதுவான அழைப்பும் இருக்கிறதோ அதேபோலத்தான் இரட்சிக்கும் கிருபையும், பொதுவான கிருபையும்.

கிறிஸ்துவின் பரிகாரபலியின் பொதுவான நன்மைகள்

கிறிஸ்துவின் எல்லையற்ற மதிப்புள்ள (Infinite Value), பாவங்களைப் போக்கி இரட்சிக்கும் வல்லமையுள்ள பரிகாரபலி பிதாவினால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை மட்டுமே இரட்சிக்கக்கூடியது என்றும் அதை அந்த நோக்கத்துக்காக மட்டுமே பிதாவும் குமாரனும் ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பதையும் இதுவரை தெளிவாகக் கண்டிருக்கிறோம். இருந்தபோதும் கிறிஸ்துவின் பரிகாரபலி தெரிந்துகொள்ளப்பட்டவர்களைத் தவிர ஏனையோருக்கும் பலனளிக்கக் கூடிய சில பொதுவான நன்மைகளைக் கொண்டிருக்கிறதென்று சிலர் விளக்கியிருக்கிறார்கள். இந்தப் பொதுவான நன்மைகள் எந்தவிதத்திலும் எவரையும் இரட்சிக்கக்கூடிய வல்லமையைக் கொண்டிருக்கவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இவற்றால் எவரிலும் நிரந்தரமான எந்தவித ஆவிக்குரிய மாற்றத்தையும் கொண்டு வரவும் முடியாது. இருந்தபோதும் கடவுளின் நித்திய ஆலோசனையின்படி ஏற்படுத்தப்பட்ட கிறிஸ்துவின் பரிகாரபலியின் மூலம் முழு உலகத்துக்கும் சில பொதுவான நன்மைகள் கிட்டுகின்றன.

இதைப்பற்றி விளக்கமளிக்கின்ற சார்ள்ஸ் ஸ்பர்ஜன், “தரிசுவைச் சேர்ந்த பவுலுக்காக மரித்ததுபோல் இயேசு கிறிஸ்து யூதாஸுக்காகவும் மரித்தார் என்று கூறமுடியாது” என்கிறார். இதன் மூலம் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்காகவே கிறிஸ்து மரித்தார் என்பதை ஸ்பர்ஜன் உணர்த்துகிறார். அதேநேரம் கிறிஸ்துவின் பரிகாரபலியின் மூலம் வேறு சில பொதுவான நன்மைகளும் கிடைப்பதாக ஸ்பர்ஜன் சொல்லுகிறார். இந்த நன்மைகளில் பல பாவத்தில் இருக்கும் முழு உலகத்துக்கும் சொந்தமானது என்று தெரிவிக்கிறார். அவற்றிலொன்றாக, “அது பாவிகளின் மேல் கடவுளுக்கு இருக்கும் பொதுவான கருணையையும், அவர்களுக்கு அவரளிக்கும் பொதுவான நன்மையையும் காட்டுகிறது” என்கிறார். அதுமட்டுமல்லாமல், “பாவம் செய்ததனால் உடனடியாக அழிக்கப்பட்டிருக்க வேண்டிய மனித குலம் அதை உடனடியாக அனுபவிக்காமல் கிறிஸ்துவின் பரிகாரபலியின் காரணமாக தள்ளிப்போடப்பட்டிருப்பதோடு, மனிதர்களுடைய பாவ நடவடிக்கைகளைக் கடவுள் இவ்விடைக்காலத்தில் மட்டுப்படுத்துகிறார் என்றும், அத்தோடு தற்காலிகமாக இந்த உலகத்தில் பல நன்மைகளை அனுபவிக்கவும், சுவிசேஷத்தைக் கேட்கும் ஆசீர்வாதத்தையும் தந்திருக்கிறார்” என்றும் விளக்கியிருக்கிறார். ஸ்பர்ஜனுடைய இந்த விளக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். இதை எசே. 18:32; 1 தீமோ 2:4 ஆகிய வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. இதுபோல் பல வசனங்கள் வேதத்தில் காணப்படுகின்றன.  கிறிஸ்துவின் மரணம் நிகழ்ந்திராவிட்டால் சுவிசேஷத்திற்கு வழியிருந்திருக்காது.

கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் கிடைக்கும் பொதுவான நன்மைகளை விளக்கும் இன்னொரு வேத வல்லுனர் ஆர். பி. கைப்பர் (R. Kuiper). “யாருக்காக கிறிஸ்து மரித்தார்” என்ற ஆங்கில நூலில் கைப்பர் இதை விளக்குகிறார். “பொதுவான கிருபையின் ஆசீர்வாதங்கள், நேரடியாக (direct) அல்லாமல் மறைமுகமாக (indirect), கிறிஸ்துவின் பரிகாரபலியின் மூலமாகக் கிடைக்கும்படியாகவே கடவுள் கிறிஸ்துவின் பரிகாரபலியை ஏற்படுத்தியிருக்கிறார்” என்று கைப்பர் விளக்குகிறார். கிறிஸ்துவின் பரிகாரபலி தெரிந்துகொள்ளப்பட்டவர்களை மட்டுமே இரட்சிக்கக்கூடியது என்பதைக் கைப்பர் ஆணித்தரமாக விசுவாசிக்கிறார். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. இருந்தபோதும் அவர், “கிறிஸ்துவின் பரிகாரபலியின் எல்லையற்ற மதிப்பிலும் (Infinite value), போதுமான தன்மையிலுமே (Sufficient) முழு உலகத்துக்கும் இலவசமாக அறிவிக்க வேண்டிய சுவிசேஷம் (Free offer of the gospel) தங்கியிருக்கின்றது” என்கிறார். இங்கே கைப்பர், சுவிசேஷம் இலவசமாக பாரபட்சமின்றி அனைவருக்கும் அறிவிக்கப்பட வேண்டிய வசதி கிறிஸ்துவின் பரிகாரபலியின் மூலமாகவே மறைமுகமாக ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது என்று விளக்குவதைக் காண்கிறோம். பொதுவான கிருபையின் ஆசீர்வாதங்கள் இந்த முறையில் நேரடியாக அல்லாமல் மறைமுகமாக கிறிஸ்துவின் பரிகாரபலியின் மூலம் அனைவரையும் அடைவதாக கைப்பர் விளக்குகிறார். கைப்பரின் இந்த விளக்கங்களை ஏற்று அவற்றோடு ஒத்துப்போகும் விதத்திலேயே பேராசிரியர் ஜோன் மரேயின் விளக்கங்களும் அமைந்திருக்கின்றன (Common Grace, Collected Writings of John Murray, Vol. 2). இன்னொரு இறையியல் அறிஞரான லூயிஸ் பேர்கொவ் (Louis Berkhof), “சாபத்தையும், மரணத்தையும் தவிர, கடவுளை அறியாத மனிதன் அடையும் ஏனைய சகல நன்மைகளும் கிறிஸ்துவின் மீட்பின் கிரியையிலும், அதன் பலாபலன்களின் மூலமே நேரடியாக அல்லாமல் மறைமுகமாகக் கிடைக்கின்றன” என்கிறார். அத்தோடு “அதைக் கடவுளே திட்டமிட்டிருக்கிறார்” என்கிறார். இந்த விளக்கங்களுக்கு ஆர். பி. கைப்பர் கொலே 3:11; ஏசா 55:1; மத் 11:28 ஆகிய வசனங்களை உதாரணங் காட்டுகிறார்.

சீர்திருத்த இறையியல் அறிஞர்களான ஸ்பர்ஜன், கைப்பர், ஜோன் மரே மற்றும் பேர்கொவ் ஆகியவர்களின் கருத்துக்களை நாம் சரியாகப் புரிந்துகொள்வது அவசியம். இலவசமாக அனைவருக்கும் அறிவிக்கப்பட வேண்டிய சுவிசேஷத்திற்கு கிறிஸ்துவின் பரிகாரபலி மறைமுகமாக (Indirect) வழிகோளியிருக்கிறது என்றும், அந்த முறையிலேயே கடவுள் கிறிஸ்துவின் மீட்பின் பரிகாரபலியைத் திட்டமிட்டு நிறைவேற்றியிருக்கிறார் எனும் இவர்களுடைய விளக்கம் ஹைப்பர்&கல்வினிச ஆபத்தை முற்றிலும் தவிர்க்க முயல்வதை நாம் உணர வேண்டியது அவசியம். இவர்கள் சுவிசேஷத்தை இலவசமாக எவருக்கும் கட்டுப்பாடின்றி அறிவிப்பதற்கு கிறிஸ்துவின் பரிகாரபலி வழியேற்படுத்தியிருக்கிறது என்கிறார்களே தவிர அது முழு உலகத்தின் பாவத்தையும் போக்கக்கூடிய வல்லமையுடையதாக இருக்கிறது என்றோ அல்லது ஆர்மீனியக் கோட்பாட்டாளர் விளக்குவதுபோல அது ஆவிக்குரிய வல்லமையைத் தெரிந்துகொள்ளப்படாதவர்களுக்குக் கொடுக்கிறது என்றோ நிச்சயமாகக் கூறவில்லை. தற்காலிகமான பொதுவான சில நன்மைகளை மட்டுமே கிறிஸ்துவின் பரிகாரபலி தெரிந்துகொள்ளப்படாத மனிதர்களுக்கு அளிக்கிறது என்கிறார்கள் இவர்கள்.

இலவசமாக வழங்கப்படும் சுவிசேஷச் செய்தி கிறிஸ்துவின் சிலுவைப் பரிகாரபலி கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை மட்டுமே இரட்சிக்கும் நோக்கத்தோடு நிறைவேற்றப்பட்டிருந்தபோதும், கிறிஸ்துவின் சுவிசேஷச் செய்தி மனிதகுலமனைத்திற்கும் போய்ச் சேருவதற்காக கொடுக்கப்பட்டிருக்கிறது. இதை இயேசுவே மத்தேயு 28:18-20 வரையுள்ள வசனங்களில் அப்போஸ்தலருக்கு தான் கொடுத்த கட்டளையில் விளக்குகிறார். எந்தவித பாரபட்சமில்லாமலும், இன, மத, நிற, மொழிப்பாகுபாடு காட்டாமலும் அனைத்து மக்களுக்கும் சுவிசேஷத்தை அறிவிக்கும்படியாக இயேசு கட்டளையிட்டிருக்கிறார். தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் மட்டுமே இரட்சிக்கப்படுவார்கள் என்பதால் சுவிசேஷத்தை தெரிந்துகொள்ளப்பட்டாதவர்களுக்கு அறிவிக்கக்கூடாது என்பார்கள் சிலர். அந்த வாதம் தவறானது. மனிதர்கள் மத்தியில் தெரிந்துகொள்ளப்பட்டவர் யார், தெரிந்துகொள்ளப்படாதவர் யார் என்பதை அறிந்தவர் கடவுள் மட்டுமே. அதனால் சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்கள் எல்லோருக்கும் சுவிசேஷத்தை அறிவிப்பது அவர்களுடைய கடமை. பாவிகள் அனைவருக்கும் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி வேதம் சொல்லுகிறதே தவிர தெரிந்துகொள்ளப்பட்டவர்களைத் தேடி அறிவிக்கும்படிச் சொல்லவில்லை. “நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகங்களின் பாவங்களையும் நிவர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்” (1 யோவான் 2:2). இந்த வார்த்தைகளில் ‘உலகம்’ என்ற வார்த்தை உலகத்தில் இருக்கும் ஒவ்வொருவரையும் குறிப்பது அல்ல. அந்தவிதத்தில் அது இங்கே பயன்படுத்தப்படவில்லை. இந்த வார்த்தை பாவத்தில் இருக்கும் உலகத்தை, கர்த்தரைவிட்டு விலகியிருக்கும் உலகத்தை ஒழுக்க ரீதியில் அடையாளப்படுத்திக் காட்டுகிறது. இந்த வசனங்கள் கிறிஸ்துவின் பரிகாரபலியை உள்ளடக்கிய சுவிசேஷம் முழு உலகத்துக்கும் அறிவிக்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றன.

தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் மட்டுமே மறுபிறப்பின் மூலமாக இரட்சிக்கப்படப்போவதால் சுவிசேஷத்தை அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என்கிறது ஹைப்பர்-கல்வினிசம். தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் தாங்கள் இரட்சிக்கப்பட்டிருந்தால் அதை உணர்ந்து நமக்குத் தெரிவிக்க வேண்டும் என்கிறது இந்தப்போதனை. பாவிகள் மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டிய பொறுப்பைக் கொண்டவர்கள் அல்ல என்று வாதிடுகிற ஹைப்பர்-கல்வினிசம் சுவிசேஷத்தை அறிவிப்பது நம்முடைய கடமையல்ல என்கிறது. இது வேதத்தில் காணப்படாத பெருந்தவறான போதனை. இது மத்தேயு 28:18-20லும் அப்போஸ் 1:8லும் காணப்படும் இயேசுவின் கட்டளைகளுக்கெல்லாம் முரணானது. அத்தோடு பொதுவான கிருபை என்று ஒன்றில்லை என்றும் ஹைப்பர்-கல்வினிசம் கூறுகிறது. நரகத்திற்குப் போகப்போகிறவர்கள் மீது கடவுள் எந்தக் கருணையையும் காட்டுவதில்லை என்றும், அவர்களிடம் எந்தவிதமான நன்மையையும் காணமுடியாது என்றும் ஹைப்பர்-கல்வினிசம் விளக்குகிறது. இதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத வேதத்தோடு ஒத்துப் போகாத முழுத்தவறான வாதங்கள்.

1689 விசுவாச அறிக்கையின் “நற்செய்தியும் அதன் செல்வாக்கும்” என்ற 20ம் அதிகாரம் சுவிசேஷத்தை உலகமெங்கும் அறிவிக்க வேண்டிய கடமையை வற்புறுத்துகிறது. நான் “துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியை விட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் என்று என் ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்” என்று கடவுள் சொல்லியிருக்கிறார் (எசே 33:11). “எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராக இருக்கிறார்” என்று கடவுளைப் பற்றி பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதுகிறார். இந்த வார்த்தைகள் கடவுளின் தெரிந்துகொள்ளுதலாகிய போதனைக்கு முரணானதல்ல. இந்த வார்த்தைகள் கடவுள் எத்தனை பெரிய இருதயங்கொண்டவராக இருக்கிறார் என்பதைக் காட்டுகின்றன. அத்தோடு கடவுளின் இருதய பாரத்தோடு நாம் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை இலவசமாக எல்லோருக்கும் அறிவிக்க வேண்டும் என்பதை உணர்த்துகின்றன. சிலர் கடவுளுக்கு இத்தகைய விருப்பமில்லை என்று வாதிடுவார்கள். தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் மட்டுமே இரட்சிக்கப்படப் போவதானாலும், பாவத்தில் இருக்கும் முழு மனிதகுலமும் அழிந்துபோவது கர்த்தருக்கு விருப்பமில்லை. தெரிந்துகொள்ளப்படாதவர்கள் அழிந்துபோவதற்கு காரணம் அவர்கள் தெரிந்துகொள்ளப்படாதது அல்ல; அவர்களுடைய அவிசுவாசமே; அவர்களுடைய பாவமே. மனந்திரும்ப மறுக்கிறதனால்தான் அவிசுவாசிகள் அழிந்துபோகிறார்கள் என்று வேதம் சொல்லுகிறது. இயேசு சொன்னார், “நீங்கள் என்னைக் கண்டிருந்தும் விசுவாசியாமல் இருக்கிறீர்கள்” என்று (யோவான் 6:36). அவரை நோக்கி முறுமுறுத்தும், கல்லெறியத் துணிந்தும் இருந்த யூதர்களைப் பார்த்து அவர் தொடர்ந்தும் நித்திய ஜீவனைப் பற்றி சொல்லவில்லையா?  (யோவான் 10:23-31).

சுவிசேஷத்தை எப்படிச் சொல்லுவது?

இத்தனையையும் விளக்கிய பிறகும் வேறு சிலருக்கு முக்கியமான ஒரு கேள்வி எழலாம். அப்படியானால் நாம் சுவிசேஷத்தை எப்படிச் சொல்லுவது? என்பதுதான் அது. அந்தக் கேள்விக்கு நிச்சயம் பதிலளிப்பது அவசியம். சுவிசேஷத்தை நாம் எல்லோருக்கும் பாரபட்சமெதுவுமின்றி அறிவிக்க வேண்டும். சுவிசேஷத்தைக் கேட்டு மனந்திரும்ப அவசியமில்லாத பாவி ஒருவர்கூட இந்த உலகத்தில் இல்லை. படைக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் சுவிசேஷம் தேவை.

சுவிசேஷத்தை அறிவிக்கும்போது நாம் எவரையும் பார்த்து ‘கிறிஸ்து உனக்காக மரித்தார்’ என்று சொல்ல முடியாது. அது முழுப் பொய்; பெருந்தவறு. அப்படி அறிவிக்க வேதம் அனுமதிக்கவில்லை. எந்த மனிதனுக்காக கிறிஸ்து மரித்தார் என்பதை அறிந்த மனிதர்கள் எவருமில்லை. அது பிதாவுக்கும், குமாரனுக்கும் மட்டுமே தெரிந்த உண்மை. அது தெரிந்தவர்கள்போல் நாம் எவரையும் பார்த்து ‘கிறிஸ்து உனக்காக மரித்தார், இன்றே கிறிஸ்துவிடம் வந்துவிடு’ என்று சொல்லுவது தவறு. மனிதர்கள் தங்களைத் தாங்களே இரட்சித்துக்கொள்ளுவதற்கு வழியேற்படும் விதத்தில் கிறிஸ்து சிலுவையில் மரிக்கவில்லை. தெரிந்துகொள்ளப்பட்டவர்களை நிச்சயமாக இரட்சிக்கும்படியாக அவர் சிலுவையில் மரித்தார். ஆகவே, யாரைப் பார்த்தும் “உனக்காக இயேசு மரித்தார்” என்று சொல்லுவது தவறு; அது அப்பட்டமான பொய்.

சுவிசேஷம் சொல்லும்போது தெரிந்துகொள்ளுதலை பாவிகளுக்கு விளக்கும்படியாக வேதம் போதிக்கவில்லை. தெரிந்துகொள்ளுதலல்ல பாவிகளுக்கு இரட்சிப்பைக் கொடுப்பது; கிறிஸ்து இயேசுவே அவர்களை இரட்சிக்கிறவராக இருக்கிறார். ‘நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறீர்களா என்று ஆராய்ந்து பாருங்கள்’ என்று பாவிகளாகிய மனிதரைப் பார்த்துக் கேட்பது ஹைப்பர்-கல்வினிசம். ‘பாவிகளாகிய நீங்கள் ஏன் இன்னும் இரட்சகராகிய கிறிஸ்துவிடம் வராமலிருக்கிறீர்கள்?’ என்று கேட்பது வேத சுவிசேஷம்.

அத்தோடு சுவிசேஷம் சொல்லும்போது, நாம் சுவிசேஷத்தில் அதைக் கேட்பவர்களுக்கு பரிகாரபலியைக் கொடுக்கக்கூடாது. அதுவும் தவறு. பரிகாரபலியல்ல பாவியை இரட்சிப்பது; அதை நிறைவேற்றிய கிறிஸ்துவே பாவிக்கு இரட்சிப்பைக் கொடுக்கிறார். சுவிசேஷத்தில் கிறிஸ்துவையே நாம் பாவிகளுக்கு அளிக்க வேண்டும். பாவங்களை நீக்கக்கூடிய கிறிஸ்துவிடம் வரும்படியாக அவர்களை அழைக்க வேண்டும். கிறிஸ்துதான் பாவத்தை நீக்கி இரட்சிப்பு அளிக்கக்கூடியவராக இருக்கிறார்; பரிகாரபலியல்ல. கிறிஸ்துவின் பரிகாரபலியையும் சுவிசேஷத்தையும் போட்டு மனதைக் குழப்பிக்கொள்ளக் கூடாது. சுவிசேஷம் இரட்சகரிடம் வரும்படி பாவியை அழைக்கிறதே தவிர பரிகாரபலியிடம் வரும்படி அல்ல. சுவிசேஷத்தைக் கேட்கிற பாவியாகிய மனிதன் கிறிஸ்துவின் பரிகாரபலி தனக்குரியதா என்று ஆராய்ந்து கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அவன் கவலைப்பட வேண்டியதெல்லாம், ‘நான் பாவியா’ என்று சிந்தித்துப் பார்ப்பதுதான்; தன்னைக் கிறிஸ்து இரட்சிப்பாரா என்று கேட்டுப்பார்ப்பதுதான்; அப்படி இரட்சகராக அவர் இருந்தால் அவர் அழைப்புக்கு நான் ஏன் இன்னும் செவிசாய்க்காமல் இருக்கிறேன் என்று கேட்டுப் பார்ப்பதுதான்.

ஒருவனின் இருதயத்தில் சுவிசேஷம் பாதிப்பை ஏற்படுத்தியிருக்குமானால், அவன் தான் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறேனா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவனுடைய கடமையல்ல. தனக்காக கிறிஸ்து மரித்திருக்கிறாரா என்று கேட்டுப் பார்ப்பதும் தவறு. தன்னுடைய பாவ வியாதிக்கு மருந்திட்டு தன்னை விடுதலை செய்ய யாரிருக்கிறார்? என்று கேட்பதே அவனுடைய கடமை. கிறிஸ்துவை நோக்கிப் பார்!

பாவ நிவாரணத்துக்காக கிறிஸ்துவிடம் ஓடு! என்கிறது கிறிஸ்துவின் சுவிசேஷம். இயேசு சொல்லுகிறார், “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.” (மத் 11:28). மனிதனுக்கு தேவை கிறிஸ்துவே. அவன் தன் இரட்சிப்பிற்காக அவரிடம் மட்டுமே போக வேண்டும் (1 தீமோ 2:5-6).

ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள் – பிதாவின் தெரிந்துகொள்ளுதலும், திட்ப உறுதியான அழைப்பும், கிறிஸ்துவின் முன்குறிக்கப்பட்டவர்களுக்கான பரிகாரபலியும், அனைத்துப் பாவிகளுக்குமான சுவிசேஷமும் ஒன்றுக்கொன்று முரணான சத்தியங்களல்ல. இவையெல்லாமே ஒன்றோடொன்று கர்த்தரின் மகா ஞானத்தின்படி பொருந்திப்போகின்ற வேத உண்மைகள். பிதாவின் தெரிந்துகொள்ளுதலில் கிறிஸ்துவின் பரிகாரபலி தங்கியிருக்கிறது. கிறிஸ்துவின் பூரணமான ஒரேதடவை நிறைவேற்றப்பட்ட பரிகாரபலி இல்லாமல் சுவிசேஷ செய்தி உருவாகியிருக்க முடியாது. பாவிகளின் பாவங்களையெல்லாம் கழுவியெடுக்கக்கூடிய கிறிஸ்துவின் பரிகாரபலியே சுவிசேஷத்தைத் தாங்கி நின்று அதற்கு வலிமையூட்டுகின்றது. நம்முடைய கண்களுக்கு இவை ஒத்துப்போகாததுபோல் முரண்பட்டுத் தெரிகிறது என்பதற்காக இவற்றை தத்துவரீதியாக சமநிலைப்படுத்தும் கரகாட்டத்தில் நாம் ஒருபோதும் ஈடுபடக்கூடாது. பூரணர்களாக இல்லாமலிருக்கும் நம் கண்களில்தான் முரண்பாடே தவிர வேதத்தில் அல்ல. வேதம் தெளிவானது; சத்தியமானது. இணைத்துப் பார்க்கக் கூடாதவைகளை இணைத்துப் பார்க்க முயற்சிக்காமலும், இரகசியமாக தேவன் வைத்திருப்பவற்றை அறிந்துகொள்ளப் பெரும்பாடுபடாமலும், பிரிக்கக் கூடாதவைகளை பிரித்துப் பார்க்காமலும் சத்தியங்களை சத்தியமாக உள்ளதை உள்ளவாறு விசுவாசத்தோடு ஏற்று வேதத்தைப் பின்பற்றுவதே மெய்க் கிறிஸ்தவனின் பணி. அதற்காகவே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s