“நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை” என்ற வரிகளை ஒரு காலத்தில் தமிழகத்தின் ஆஸ்தான கவிஞராக இருந்த கண்ணதாசன் எழுதியிருந்தார். கடவுளை அறியாத மனிதனாக இருந்தபோதும் அவரெழுதிய இந்த வாசகம் உண்மையானதுதான். நாம் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் நாமல்லவா தெய்வம் என்றாகிவிடும். என்ன நோக்கத்தில் கண்ணதாசன் இதை எழுதினாரோ எனக்குத் தெரியாது. கடவுளின் பொதுவான கிருபையின் காரணமாக அவரை முற்றிலும் அறியாத கண்ணதாசன் போன்ற மனிதர்கள்கூட ஞானமான சில விஷயங்களை சொல்லிவிடுகிறார்கள். அதற்காக அவர்கள் கடவுளை அறிந்திருக்கிறார்கள் என்றோ, அவரை நெருங்கி விட்டார்களென்றோ சொல்ல முடியாது. ஆவியில்லாத மனிதர்களில் சொட்டும் ஆவிக்குரிய சிந்தனையோ, நடவடிக்கையோ இருக்க வழியில்லை.
கண்ணதாசனின் இந்த வார்த்தைகள் என் மனதுக்கு வந்ததற்குக் காரணம் உலகத்தில் சமீபத்தில் நடந்திருக்கும் சில காரியங்கள்தான். முதலில் அக்கிரமம் நாளுக்கு நாள் உலகில் அநியாயத்துக்கு அதிகரித்து வருகிறது. கிறிஸ்தவர்களில் சிலர் இந்த உலகம் ஆண்டவருடைய வருகைக்கு முன் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்கு என்றைக்குமே இல்லாதவகையில் சமாதானத்தையும், பெரும் சுவிசேஷ ஆசீர்வாதத்தையும், எழுப்புதல்களையும், திருச்சபை எழுச்சியையும் அனுபவிக்கும் என்கிறார்கள். அவர்களுடைய இந்த கிறிஸ்துவின் வருகையை மையமாகக் கொண்ட கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தங்களைச் சுற்றிப் பார்க்கின்ற எவருமே இந்த உலகம் இன்னும் கெட்டுப் போய்க்கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுவார்கள். அதற்கான அறிகுறிகள் தெளிவாக இருக்கின்றன. இந்த உலகம் அழிவை நோக்கிப் போய்க்கொண்டிருப்பதாக வேதம் சொல்லுகிறது. இயேசு மீண்டும் வருகிறபோது இந்த உலகத்தை முற்றிலும் உருமாற்றம் செய்யப்போகிறார் என்கிறது வேதம். அந்த மீட்புக்காகவே இந்த உலகமும் பரிதவிப்போடு காத்திருப்பதாக ரோமர் 8லும் வாசிக்கிறோம்.
மனிதன் நினைப்பதெல்லாம் நடந்துவிடுவதில்லை. எது நடக்கக்கூடாது என்று பலரும் எதிர்பார்த்தார்களோ அது என் நாட்டில் நடந்திருக்கிறது. என் நாட்டுப் பாராளுமன்றம் ஓரினத் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரத்தை ஏப்ரல் மாதம் வழங்கியிருக்கிறது. ‘திருமணம்’ என்ற சொல்லின் கருத்தை ஒரே நாளில் அடியோடு மாற்றிவிட்டார்கள் கடவுளின் ஒழுக்க நீதிச் சட்டத்தையும், அவருடைய சர்வ அதிகாரத்தையும் எதிர்க்கிறவர்கள். இது பிரான்சு நாட்டிலும் நிகழ்ந்திருக்கிறது. ஏற்கனவே வேறுசில நாடுகளில் இது நடந்துவிட்டது. தொடர்ந்து மற்ற நாடுகளிலும் வேகமாகப் பரவும். இது சிலருக்கு சாதாரண விஷயமாக இருக்கலாம். சிந்திக்கின்ற ஆவிக்குரிய கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரையில் இது நியாயத்தீர்ப்பு நாள் வெகு வேகமாக சமீபிக்கிறது என்பதையும், உலகத்தில் கேடு கண்மூடித்தனமான வேகத்தில் காட்டாற்றைப் போல பெருகி ஓடிக்கொண்டிருக்கிறது என்பதற்கும் அடையாளம் மட்டுமே. இதெல்லாம் உலகில் வரப்போகிற சமாதானத்துக்கும், ஆவிக்குரிய எழுப்புதலுக்கும் அடையாளம் என்று எந்த எண்ணத்தில் சொல்ல முடியும்?
முப்பது வருடங்களுக்கு அசைக்க முடியாத வலிமையோடு ஸ்ரீ லங்காவில் வட பகுதியை ஆண்டுகொண்டிருந்த புலிகள் இயக்கம் இன்று இல்லாமல் போய்விட்டது. தமிழீழக் கனவு மண்ணாகிவிட்டது. ஈழத் தமிழர்களுடையதும், அவர்கள் வாழும் பிரதேசங்களினதும் நிலை மிகவும் மோசமாகிவிட்டது. இருந்த கொஞ்ச நஞ்ச வசதிகளும், அதிகாரமும், வீடும், நிலமும், மரியாதையும் இல்லாமல் போய் சொந்த நாட்டிலேயே அந்நியரைப் போல வாழுகின்ற நிலை ஏற்படும் என்று அவர்கள் நினைத்துப் பார்த்திருப்பார்களா? அநேக ஈழத் தமிழர்கள் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று. மலேசிய நாட்டைப் பாருங்கள். இந்த வருடம் நடந்த பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஆட்சியை எப்படியாவது பிடித்துவிடும் என்று நம்பியவர்களே அதிகம். அந்தப் பயம் ஐம்பது வருடங்களுக்கு நாட்டை ஆண்ட ஆளும் கட்சியை ஒவ்வொரு நாளும் வாட்டியிருந்தது. சிறுபான்மையினருக்கு இந்தத் தேர்தலின் மூலம் நாட்டில் நன்மை கிடைத்துவிடும் என்று பலர் நம்பினார்கள். தேர்தல் முடிந்து ஆளும் கட்சி சாதாரண பெருமான்மையுடன் எப்படியோ மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டது. பலரும் நினைத்துப் பார்க்காத ஒன்று நடந்துவிட்டது. சீனர்களுக்கும், இந்தியர்களுக்கும், ஏன் அநேக மலாய் வர்க்கத்தினருக்கும் இது அதிர்ச்சியளித்திருக்கலாம். இருந்தபோதும் நினைத்தது நடக்கவில்லை.
இந்தியாவில் டெல்லியில் நடந்த கற்பழிப்புகளும், வட கொரிய நாட்டின் கிம் ஜொங்கின் அணுகுண்டுத் தாக்குதல் பயமுறுத்தல்களும், அமெரிக்காவில் பொஸ்டன் நகரில் நடந்த குண்டுவெடிப்பும், கிளீவ்லென்டில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று பெண் கடத்தல், கற்பழிப்பு நடவடிக்கைகளும், இதுபோல் இன்னும் எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகள், நினைத்துப் பார்க்காததெல்லாம் தொடர்ந்தும் நடந்துகொண்டிருக்கின்றன. அவற்றை தொலைக்காட்சியில் பார்க்கிறபோதும், பத்திரிகையில் வாசிக்கின்ற போதும் இப்படியும் நடக்குமா? மனிதன் இப்படியும் நடந்துகொள்வானா? என்ற ஆதங்கம் அநேகருக்கு ஏற்படுகின்றது. மனித நேயத்தில் இருக்கும் நம்பிக்கையும் ஆட்டம் காணுகின்றது. மானுடத்தில் நமக்கு இருக்கும் நம்பிக்கையிலும் அது மண்ணை வாரி இறைத்துவிடுகிறது.
நாம் நினைப்பது நடக்காமல் போவதற்கும், நினைக்காதவை நடந்துவிடுவதற்கும் நிச்சயம் இவற்றிற்குப் பின்னால் இருக்கும் சர்வ வல்லமையுள்ள கடவுளே உண்மையான காரணம். அதாவது, இந்தப் பாவகரமான காரியங்களுக்கு அவர் மூலகாரணமல்ல; இவை நிகழ்வதற்கு அவர் நேரடியான காரணமுமல்ல. இவற்றிற்கெல்லாம் காரணம் மனிதனை ஆக்ரோஷத்தோடு பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கும் பாவம் மட்டுமே. தன்னில் நிலைகொண்டிருக்கும் பாவ இருதயத்தின் வழிநடத்துதலால் மனிதன் இத்தனைக் கொடுமையையும் செய்து வருகிறான். இருந்தபோதும் இதற்குமேல் போய் அவன் எல்லோரையும் உண்டு இல்லை என்றாக்கி விடாதபடி தடுத்து வைத்துக்கொண்டிருப்பது நம்மையெல்லாம் ஆண்டுகொண்டிருக்கும் சர்வ வல்லவரான ஆண்டவர் மட்டுமே. அதனால்தான் இதற்கெல்லாம் பின்னால் இருப்பவர் நம்மை ஆளும் ஆண்டவர் என்று சொன்னேன். நம்மேலும், இந்த உலகத்தின் மேலும் இருக்கும் அவருடைய கரம் மட்டும் கொஞ்சம் அகலுமானால், விநாடிப் பொழுதில் நாம் கோரமானவர்களாகி இந்த உலகத்தையே, அது நினைத்தும் பார்த்திராதவிதத்தில் இரத்தக்காடாக்கி விடுவோம்; மானுடத்தின் கோரமெல்லாம் மனுக்குலம் அனுபவிக்கும்படியாகிவிடும். அந்தளவுக்கு மானுடத் தன்மையையே களங்கப்படுத்திக் கோரத்தை செய்துவிடுகின்ற வல்லமையுள்ளதாக ஒவ்வொரு மனிதனிலும் உறங்கிக் கொண்டிருக்கிறது மூலபாவம். நம்மை ஆளும் கடவுள் மட்டும் நம்மை அடக்கி ஆளாவிட்டால் நாம் காதில் கேட்டு, கண்கள் மூலம் பார்ப்பவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்ட அழிவுகளையும், அசிங்கங்களையும் செய்துவிடுகின்ற கொடியவர்களாக மனிதர்கள் பாவ இருதயத்தோடு இருக்கிறார்கள். இந்த உண்மையை கடவுளின் வேதம் உறுதியாக சொல்லுகிறது.
எனக்கு சிரிப்பேற்படுத்துகிற ஒரு காரியம் என்ன தெரியுமா? இன்றைக்கு அநேகர் மனிதநேயத்தைப் பற்றி அடிக்கடி பேசி வருவதும், அதில் எல்லையில்லா நம்பிக்கை வைத்திருப்பதுந்தான். டெல்லிக் கற்பழிப்பு சம்பவத்தின் பின் ஒரு மதகுரு பேசியிருப்பது சிரிப்பூட்டுகிறது. அந்த அசிங்கத்தைச் செய்தவர்களிடம் “அண்ணா இப்படி நடந்துகொள்வது உங்களுக்குச் சரியாகப்படுகிறதா? உங்கள் தங்கையாக நினைத்து விட்டுவிடுங்கள்” என்று சொல்லி அவனுடைய மனிதநேயத்தைத் தொட்டிருந்தால் இப்படி நடந்திருக்காது என்றும் அப்படி சொல்லி அழாமல் போனதுதான் அவன் அந்தக் கோரத்தை செய்ததற்குக் காரணம் என்றும் அந்த மதகுரு சொல்லியிருக்கிறார். இதை வாசித்தபோது இப்படியும் ஒருவர் சொல்வாரா, எப்படி இந்த மனிதனால் இப்படி நினைக்க முடிகிறது என்று கேட்டுப்பார்க்காமல் இருக்க முடியவில்லை. இது எந்தளவுக்கு மனிதன் தன்னுடைய இருதயத்தின் கோரமான நிலையை அறியாமல் இருந்துவருகிறான் என்பதையும் வெறும் மனித நேயத்தில் அவனுக்கிருக்கும் தவறான அதீதமான நம்பிக்கையையும் சுட்டிக் காட்டுகின்றது. மனிதனைப் பிடித்திருக்கும் மூலபாவமே அவன் தன் நிலையை உணராமல் இருப்பதற்குக் காரணம் என்பதை அவன் அறியவில்லை. மனிதனுக்கு கடவுளைவிட மனித நேயத்தில் அதீத நம்பிக்கை வைத்திருப்பதற்கும் அந்தப் பாவம்தான் காரணம் என்பதை அவன் உணரவில்லை.
கடவுளின் பொதுவான கிருபை மட்டுமே மனிதன், கொஞ்சம் மனிதநேயமுள்ளவனாக நடந்துகொள்வதற்குக் காரணம். மனிதநேயம் நிலையானது அல்ல. மனிதநேயம் மனிதனின் பாவ இருதயத்தை மேற்கொள்ளும் வலிமைகொண்டதல்ல. பாவம் அவனுடைய மனிதநேயத்தை வென்றுவிடும் வல்லமையுடையது. மனிதநேயமும்கூட பாவக்கறைகொண்டதுதான். சுயநலம் கலக்காத மனிதநேயம் என்றொன்றில்லை. ஸ்ரீ லங்காவின் முள்ளிவாய்க்கால் பகுதியில் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடந்த கோரமான, அட்டூழியங்களை செய்தவர்கள் மனிதர்களே. அவர்களுக்கு மனைவி, பிள்ளைகள் இருந்திருக்கிறார்கள். சாதாரண குடும்பவாசிகளாக இருந்து, அகிம்சையைப் போதித்த கௌதம புத்தரின் வழிமுறைகளை பின்பற்றுகிற அவர்களை அந்த சிலநாட்கள் மிருகங்களாக்கியது எது? மனிதநேயமுள்ளவர்களாக இருந்த அவர்களை வென்று கோரமான இச்சையையும், இரத்தப்பசியையும் கொண்டவர்களாக்கியது எது? மனிதனை ஆண்டுவருகிற மூலபாவந்தான். அதிலிருந்து விடுதலை கிடைக்காதவரை மனிதநேயம் மாயமானைப் போல மனிதனை மனிதன் ஏமாற்ற மட்டுமே உதவும்.
மனிதன் தெய்வமாகலாம் என்பது சிலரின் நம்பிக்கை; அதெல்லாம் வெறும் கற்பனை. நாம் படைக்கப்பட்ட இரத்தமும் சதையும் கொண்ட வெறும் மனிதர்கள் மட்டுமே. அடுத்த நிமிடத்தில் எது நடக்கும், நடக்காது என்பதைத் தீர்மானிக்கும் வலிமையில்லாதவர்கள் நாம். நம்முடைய எதிர்காலத்தை நம்மால் தீர்மானிக்க முடியாது. நம்முடைய செய்கைகள் எப்போதும் பூரணத்தோடு நேர்மையானவைகளாக இருந்துவிடுவதற்கே நமக்கு வல்லமையில்லாமல் இருக்கிறது. இதற்கெல்லாம் மேலாக நம்மைப் படைத்த கடவுளை நாம் அறியாமல், அவருக்கு கொடுக்க வேண்டிய நீதியான வழிபாட்டைக் கொடுக்க முடியாமல், சுயநல இருதயத்தோடு அனைத்தையும் செய்து வருகிறவர்களாக நாம் இருந்து வருகிறோம். கடவுள் வழிபாட்டையும் நம்முடைய சுயநலத்துக்காக செய்து வருகிறது நம்முடைய இருதயம். நம்மில் இருக்கும் பாவமே நாம் இப்படி நடந்துகொள்ளவதற்கு காரணம்.
மனிதன் தன்னைப் பற்றி அறிந்துகொள்ள பெரும்பாடுபட்டு வருகிறான். ஆனால், அதில் பிரச்சனை என்ன தெரியுமா? பாவமுள்ள இருதயத்தைக் கொண்டிருக்கும் மனிதனால் தன்னைத் தானே சுயமுயற்சியால் அறிந்துகொள்ளும் முயற்சி பலனளிக்காது. அவனுடைய பாவம் அவனுடைய சிந்தனைகளையும், செயல்களையும் பாவமுள்ளவையாக்கியிருக்கிறது. இந்த ந¤லையில் அவன் எப்படித் தன்னைத் தானே அறிந்துகொள்ள முடியும்? அப்படியானால் மனிதன் எப்படி தன்னை அறிந்துகொள்ளுவது? இந்தப் பாவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுதலை அடைவது எப்படி? பாவ இருதயத்தை சுத்தமானதாக்கிக் கொள்வது எப்படி என்று கேட்கிறீர்களா? அதற்கு வழியிருக்கிறது. நம்மை ஆளுகின்ற கடவுளே அதற்கு ஒரு வழியை ஏற்படுத்தியிருக்கிறார். ஆற்றில் மூழ்கிக் கொண்டிருக்கிறவனைப் போன்றதுதான் நம் வாழ்க்கை. அதிலிருந்து நம்மால் சுயமாக வெளிவர முடியாது. நம்மை ஒருவர் கரைசேர்க்க வேண்டும். அது கடவுளால் மட்டுமே முடியும். அவர் நம் விடுதலைக்கு என்ன செய்திருக்கிறார் தெரியுமா? தன்னுடைய உன்னதமான மகிமையையும், பரிசுத்தத்தையும், நீதியையும், வல்லமையையும் பெரிதாக எண்ணாமல் பாவிகளாக இருக்கிற நம்மேல் இரக்கம் காட்டி நம்மை விடுதலை செய்வதற்காக மானுட உருவமெடுத்து இயேசு கிறிஸ்துவாக இந்த உலகத்தில் பிறந்து, நம் பாவங்களைத் தம்மேல் சுமந்து தன்னையே சிலுவை மரத்தில் இரத்தப்பலியாகக் கொடுத்திருக்கிறார். இத்தனை பெரிய மகிமையான செயலை அவர் செய்தற்கு என்ன காரணம் தெரியுமா? நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள வழியில்லாதவர்களாக, கடவுளை அறியாதவர்களாக நாம் வாழ்ந்துகொண்டிருப்பதில் இருந்து நமக்கு விடுதலை தரத்தான். அந்தளவுக்கு பாவிகளாகிய நம்மேல் இரக்கம் காட்டியிருக்கிறார் நம்மைப் படைத்த கடவுள். நம் பாவம் போக, இருதயம் சுத்தப்படுத்தப்பட, கடவுளை அறிந்து அவருக்குரிய வழிபாட்டைக் கொடுக்க, ஒருவர் மேல் ஒருவர் உண்மையாக அன்புகாட்ட நாம் அவரனுப்பிய இயேசு கிறிஸ்துவை நம்முடைய பாவ விடுதலைக்காக நம்முடைய ஆண்டவராக விசுவாசிக்க வேண்டும். அது மட்டுமே நமக்கு நிரந்தர விடுதலையைத் தரும். நினைப்பது, நடப்பது எல்லாவற்றிற்கும் அர்த்தம் தெரிவதற்கு இயேசு இருக்க வேண்டும் உங்கள் இருதயத்தில்.