பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து. அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான். – நீதி 22:6
4. பிள்ளையின் ஆத்துமாவின் நலனைக் குறிக்கோளாகக் கொண்டே எப்போதும் பிள்ளை வளர்ப்பில் ஈடுபடுங்கள்.
உங்களுடைய கண்களுக்கு உங்கள் பிள்ளைகள் விலையேறப் பெற்றவர்கள்தான் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால், நீங்கள் உண்மையாகவே அந்தப் பிள்ளைகள்மேல் அன்பு காட்டுவீர்களானால், அவர்களுடைய ஆத்துமாவின் நலனைக் குறித்து அடிக்கடி நினைத்துப் பாருங்கள். அவர்களுடைய நித்தியஜீவனைவிட நீங்கள் அக்கறை செலுத்த வேண்டிய பெரிய விஷயம் எதுவும் இல்லை. அவர்களிடம் இருக்கின்ற அந்த அழியாத ஆத்துமாவைவிட வேறு எந்த அங்கமும் உங்களுக்கு மேலானதாகத் தெரியக்கூடாது. இந்த உலகமும் அதன் எல்லா மகிமையும் ஒரு நாள் அழிந்து போகும். மலைகள் எல்லாம் உருகிவிடும். வானங்கள் புத்தகச்சுருளைப் போல சுருட்டப்பட்டுவிடும். சூரியன் வெளிச்சத்தைக் கொடுக்காமல் போகும் காலம் வரும். எல்லாமே ஒரு நாள் அழிந்து போகப்போகின்றன. ஆனால், நீங்கள் மிகவும் அன்புகாட்டுகிற உங்கள் பிள்ளைகளுடைய ஆத்துமா இவைகள் அனைத்தையும் கடந்து என்றென்றும் வாழப் போகின்றது. அதனால் அவர்களுடைய சந்தோஷமும், துக்கமும் உங்கள் கையிலேயே இருக்கிறது.
இந்த எண்ணமே உங்களுடைய மனதில் முக்கிய இடத்தைப் பிடித்து ஆக்கிரமித்திருக்க வேண்டும். இந்த எண்ணத்தைக் கொண்டவர்களாகத்தான் நீங்கள் பிள்ளைகளுக்கு எந்தக் காரியத்தையும் செய்ய வேண்டும். நீங்கள் அவர்களுக்காக செய்கிற காரியம் எதுவாக இருந்தாலும், என்ன திட்டம் வகுத்தாலும் “இந்தக் காரியம் என் பிள்ளையினுடைய ஆத்துமாவைப் பாதிக்குமா?” என்ற கேள்வியைக் கேட்க மறக்காதீர்கள்.
ஆத்துமா மீது அன்புகாட்டுவதே சகலவிதமான அன்புக்கும் உயிர்நாடியாயிருக்கிறது. இந்த உலகில் மட்டுமே சந்தோஷம் அனுபவிக்க முடியும் என்பது போலவும், இந்த உலக வாழ்க்கையை ஆனந்தமாக வாழ்வதே முக்கியமானது என்பது போலவும் பிள்ளைகளுக்கு காண்பித்து, அவர்களுக்கு அதிக செல்லம் கொடுத்து, கொஞ்சி, சகல இன்பங்களையும் அனுபவிக்கச் செய்வது உண்மையான அன்பு அல்ல. அது மகாக் கொடூரமானது. அது அந்தப் பிள்ளையை மிருகத்தைப் போல நடத்துவதற்கு சமமானது. ஏனென்றால் மிருகம்தான் இவ்வுலக வாழ்வோடு அழிந்துவிடப் போகிறது. அது மறு உலகத்தைக் குறித்த எண்ணம் இல்லாமல் வாழ்ந்து மடிகிறது. உங்கள் பிள்ளையை அப்படி வாழவிடுவது, மிகப் பெரிய உண்மையை அதனிடமிருந்து மறைத்து வைப்பதற்கு சமமாகிறது. அதாவது, தனக்கொரு ஆத்துமா இருக்கிறது என்பதையும், அது இரட்சிக்கப்பட வேண்டும் என்பதையும் தனது வாழ்நாளின் குறிக்கோளாக சிறு வயதில் இருந்து அந்தப் பிள்ளை கற்றுக்கொள்ள வேண்டியதை நாம் அதனிடம் இருந்து மறைத்து வைப்பதற்கு சமமாகிறது.
உண்மையான கிறிஸ்தவன் உலக நாகரீகத்திற்கு அடிமையாகி வாழக்கூடாது. பரலோக வாழ்க்கைக்கு தன்னுடைய பிள்ளைகளை அவன் தயார் செய்ய வேண்டுமானால் உலகம் போகிற போக்கைப் பற்றி அவன் கவனமாயிருக்க வேண்டும். உலகத்தார் வாழ்கின்ற விதமாகவே தானும் வாழ வேண்டும் என்கிற எண்ணத்தோடு அவன் இருக்கக் கூடாது. நண்பர்களும், அக்கம்பக்கத்தில் இருப்பவர்களும் தங்களுடைய பிள்ளைகளை வளர்க்கின்ற விதமாகவே தாங்களும் வளர்க்க வேண்டும் என்கிற எண்ணம் உடையவர்களாக இருக்கக் கூடாது. மற்றவர்களின் பிள்ளைகள் வாசிக்கின்றார்களே என்பதற்காக சரியில்லாத புத்தகங்களை தங்கள் பிள்ளைகளும் வாசிப்பதற்கு கிறிஸ்தவ பெற்றோர் அனுமதிக்கக் கூடாது. சந்தேகத்துக்கிடமான பழக்கவழக்கங்களை மற்றவர்களைப் பார்த்துப் பழகிக்கொள்ளுவதற்கு அனுமதிக்கக் கூடாது. உலகத்தில் எல்லாரும் இப்படித்தான் நடந்துகொள்ளுகிறார்கள் என்பதற்காக கிறிஸ்தவப் பெற்றோரும் உலகத்தோடு ஒத்துப் போய்விடக்கூடாது. பிள்ளைகளை வளர்க்கும்போது உங்களுடைய கண் பிள்ளையின் ஆத்துமாவை நோக்கியதாக இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் பிள்ளைகளை வளர்க்கிற விதத்தைப் பார்த்து யாராவது, ‘ஏன் நீங்கள் மாத்திரம் உங்கள் பிள்ளைகளை வித்தியாசமாக வளர்க்கிறீர்கள்’ என்று கேலியாகப் பேசினால், அதைக் குறித்து வெட்கப்படாதீர்கள். அப்படி வளர்ப்பதால் என்ன தவறு நேர்ந்துவிடப் போகிறது? காலம் மிகவும் குறுகியது. உலகத்தின் நாகரீகங்களும் பழக்கவழக்கங்களும் விரைவில் மாறிப் போய்விடும். உலகத்துக்காக இல்லாமல் பரலோகத்துக்காக தன் பிள்ளைகளை வளர்ப்பவன் முடிவில் புத்திசாலியாக மதிக்கப்படுவான். மனிதர்களுக்காக இல்லாமல் கடவுளுக்காக தன் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர் ஒருபோதும் வெட்கப்படப் போவதில்லை.
5. வேத அறிவைப் பெற்றுக்கொள்ளும்படியாக உங்கள் பிள்ளைகளை வளருங்கள்.
பிள்ளைகள் வேதத்தை மிகவும் விரும்பி நேசிக்கும்படியாக செய்ய உங்களால் முடியாது என்பதை நான் ஒத்துக்கொள்ளுகிறேன். பரிசுத்த ஆவியானவரைத் தவிர வேறு எவராலும் ஒருவனுக்கு வேதத்தில் வாஞ்சை ஏற்படும்படியாக செய்ய முடியாது. ஆனால், வேதத்திலுள்ள காரியங்களையும் சம்பவங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் பிள்ளைகள் அறிந்துகொள்ளும்படி நீங்கள் அவர்களைப் பழக்கப் படுத்தலாம். வேதத்தை சீக்கிரமாகவோ அல்லது மிகவும் நன்றாகவோ அவர்களால் அறிந்துகொள்ள முடியாது என்பதையும் நீங்கள் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
வேதத்திலிருந்து நாம் பெற்றுக்கொள்ளுகின்ற நல்ல அறிவே கிறிஸ்தவத்தைப் பற்றிய முழுமையான விளக்கங்களைப் பெற்றுக்கொள்ள அத்திவாரமாக அமையும். அதில் நல்ல தேர்ச்சி அடைந்திருக்கும் ஒருவன் காற்றில் இங்குமங்குமாக அலைந்து திரியும் இலைகளைப் போன்ற போதனைகளைப் பின்பற்றி தடுமாறுகிறவனாக இருக்க மாட்டான். வேத அறிவைப் பெற்றுக்கொள்ளுவதற்கு பிரதான இடத்தை அளிக்காத எந்தவிதமான பிள்ளை வளர்ப்பு முறையாலும் பிள்ளைகளுக்கு நன்மையில்லை என்பது மட்டுமல்ல அவை ஆபத்தானவையும்கூட.
வேத அறிவை பிள்ளைகளுக்குக் கொடுக்கின்ற இந்த விஷயத்தில் நீங்கள் மிகுந்த ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். ஏனென்றால் சாத்தான் இன்றைக்கு நுழையாத இடமில்லை அத்தோடு தவறான போதனைகளும் அதிகரித்திருக்கின்றன. கிறிஸ்துவுக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை சபைக்குக் கொடுக்கின்றவர்கள் நம்மத்தியில் இருக்கிறார்கள். நம்மைப் பரலோகத்துக்கு அனுப்பும் பயணச்சீட்டாக திருநியமங்களைக் கருதுகிறவர்களும் நம்மத்தியில் இருக்கிறார்கள். அதேபோல் வினாவிடைப் புத்தகங்களுக்கு வேதாகமத்திற்கு மேல் மதிப்புக் கொடுக்கிறவர்களும், தங்களுடைய குழந்தைகளின் மனதை சத்திய வசனத்தால் நிரப்பாமல் விதவிதமான சிறு கதைகளால் நிரப்பிக்கொண்டிருக்கிறவர்களும் நம்மத்தியில் இருக்கிறார்கள். நீங்கள் உங்களுடைய பிள்ளைகள் மேல் அன்புகாட்டுவீர்களானால் அவர்களுடைய ஆத்துமாவுக்கு வேதத்தைக் கொண்டு பயிற்சியளியுங்கள். வேறு நூல்களனைத்தும் வேதத்துக்கு அடுத்த இடத்தைப் பிடிக்கட்டும்.
வேத வினா-விடை புத்தகத்தைப் படித்து அதில் அவர்கள் பாண்டித்தியம் அடையாவிட்டாலும் வேதத்தைப் படித்து அதில் அதிக பாண்டித்தியம் பெறும்படிப் பார்த்துக்கொள்ளுங்கள். இந்தவிதமான பயிற்சியையே தேவன் சிறந்ததாகக் கருதுவார். “உமது சகல பிரஸ்தாபத்தைப் பார்க்கிலும் உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர்” (சங் 138:2) என்று சங்கீதக்காரன் சொல்லுகிறார். மனிதர்களின் மத்தியிலே அவருடைய வார்த்தையை மகிமைப்படுத்துகிற எல்லாரையும் தேவன் சிறப்பான விதத்தில் ஆசீர்வதிப்பார் என நான் நம்புகிறேன்.
(இந்த இடத்தில் ஜெ. சி. ரைல், சபையையோ, திருநியமங்களையோ, வினாவிடை நூல்களையோ ஒதுக்கி வைத்துவிட்டு வேதத்தை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரை செய்வதாக நாம் தவறாக எண்ணிவிடக்கூடாது. ரைல் வாழ்ந்த காலத்தில் அவர் பணிபுரிந்த ஆங்கிலிக்கன் சபைப்பிரிவு ஆவிக்குரியதாக இல்லாமல் வெறும் சடங்குகளுக்கு மதிப்புக்கொடுப்பதாக இருந்தது. ரைல் அந்த சபைப்பிரிவில் இருந்தபோதும் அதைத் தன்னுடைய பிரசங்கங்களால் சாடியிருக்கிறார். சடங்கைப்போல சபையையும், திருநியமங்களையும், வினாவிடைப்போதனைகளையும் பயன்படுத்துவதையே அவர் இங்கே தவிர்க்கும்படிச் சொல்லுகிறார். கர்த்தர் உருவாக்கியிருக்கும் அவருடைய சபையும் அவசியம், அவரே ஏற்படுத்தியிருக்கும் திருநியமங்களும் அவசியம். அதேபோல் வினாவிடை நூல்களும் வேத போதனைகளைத் தருவதற்கு பெரும் பயனளிப்பவை. ஆனால், இவையெல்லாமே ஒருபோதும் உயிரற்ற சடங்குகளாக மாறிவிடக்கூடாது. அதுவும் வேதத்துக்கு முதலிடத்தைக் கொடுத்து இவையனைத்தையும் ஆவிக்குரியவிதத்தில் நாம் பயன்படுத்திக்கொள்ளுவது மிகவும் அவசியம். – ஆசிரியர்)
உங்கள் பிள்ளைகள் வேதாகமத்தை மரியாதையோடு படிக்கும்படியாக அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். வேதாகமம் மனிதனுடைய வார்த்தையல்ல, அது தேவனே அருளிய வார்த்தைகள் என்பதை அவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள். பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலினால் எழுதப்பட்ட அந்த வார்த்தைகளைக் கொண்டு தேவன் நாம் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கச் செய்கிறார் என்பதை அவர்களுக்கு விளக்குங்கள். அவை நமக்கு மிகுந்த பிரயோஜனமுள்ளதென்றும், அது நம்மை அறிவுள்ளவர்களாக்கும் என்றும், அந்த வார்த்தைதான் நம்மை இரட்சிப்பை நோக்கி வழிநடத்தும் என்பதையும் அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்.
அவர்கள் வேதாகமத்தைத் தினமும் படிக்க அவர்களை ஊக்கப்படுத்துங்கள். அதுவே அவர்களுடைய ஆத்துமாவுக்கு வேண்டிய அன்றாட ஆகாரம் என்பதை அவர்கள் அறியும்படி செய்யுங்கள். ஆத்துமா ஆரோக்கியமாக இருப்பதற்கு இந்த ஆகாரம் அவர்களுக்கு தினமும் தேவை என்பதை உணரச் செய்யுங்கள். இது அவர்களுடைய அனுதின கடமையாக இருக்குமென்றாலும், இந்தக் கடமை எத்தனை பாவங்களைத் தடுத்து நிறுத்தக்கூடியது என்பதை நம்மால் அளவிட்டுக் கூற முடியாது.
வேதம் முழுவதையும் அவர்கள் படிக்கும்படி உற்சாகப்படுத்துங்கள். எந்த வேதசத்தியங்களையும் அவர்களுக்கு ஏற்றதல்ல என்று ஒதுக்கிவிட வேண்டாம். வேதத்திலுள்ள ஆழ்ந்த, முக்கியமான சத்தியங்களை அவர்களால் விளங்கிக்கொள்ள முடியாது என்று நீங்களாக கற்பனை பண்ணிக்கொள்ளாதீர்கள். நாம் நினைப்பதையும் எதிர்பார்ப்பதையும்விட அதிகமாக அவர்களால் விளங்கிக்கொள்ள முடியும்.
பாவத்தைக் குறித்து அவர்களிடம் பேசுங்கள். அது ஏற்படுத்தும் குற்ற உணர்வைக் குறித்தும், அதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளைக் குறித்தும், அதனுடைய சக்தியைக் குறித்தும், அதனுடைய பொல்லாத தன்மையைக் குறித்தும் அவர்களிடம் பேசுவதற்குத் தயங்காதீர்கள். அவைகளில் சிலவற்றையாவது அவர்கள் புரிந்துகொள்வதை நீங்கள் பின்னால் உணருவீர்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்து அவர்களிடம் பேசுங்கள். நம்மைக் காப்பதற்காக அவர் என்ன செய்திருக்கிறார் என்பதையும் விவரித்து சொல்லுங்கள். அவருடைய பரிகாரபலி, சிலுவை மரணம், அவருடைய திரு இரத்தம், அவரது தியாகம், நமக்காக அவர் ஜெபித்துக் கொண்டிருப்பது ஆகிய காரியங்களைக் குறித்து அவர்களிடம் பேசுங்கள். இவைகளில் எதுவும் அவர்களுடைய புத்திக்கு எட்டாமலிருக்காது என்பதை நீங்கள் உணருவீர்கள்.
அவர்களோடு மனிதனுடைய இருதயத்தில் பரிசுத்த ஆவியானவர் செய்கிற காரியங்களைக் குறித்துப் பேசுங்கள். ஒருவனை அவர் எப்படி மாற்றுகிறார் என்பதையும், அவனைப் புதுப்பிப்பதையும், பரிசுத்தப்படுத்தி தூய்மைப்படுத்துவதையும் விளக்கிக் கூறுங்கள். நீங்கள் சொல்பவைகளை ஓரளவிற்கு அவர்களும் விளங்கிக்கொள்வதைப் பார்ப்பீர்கள். சுருக்கமாகக் கூறினால், மகத்துவமான சுவிசேஷத்தின் நீள அகலங்களை பிள்ளைகள் எந்தளவுக்கு உணருகிறார்கள் தெரியுமா? அவர்களுடைய புரிந்துகொள்ளும் தன்மையைக் குறித்து நாம்தான் கொஞ்சமும் அறிந்துவைத்திருக்கவில்லை என்று நான் சந்தேகப்படுகிறேன். நாம் நினைப்பதைக் காட்டிலும் அதிகமாகவே அவர்கள் புரிந்துகொள்ளும் தன்மையுடையவர்களாக இருக்கிறார்கள்.
அவர்களுடைய இருதயத்தை வேத வசனங்களால் நிரப்புங்கள். வசனம் அவர்கள் இருதயங்களில் பரிபூரணமாக வாசம் செய்யட்டும். அவர்களுக்கென சொந்தமாக ஒரு வேதப் புத்தகத்தை வாங்கிக் கொடுங்கள். முழுவேதாகமத்தையும் அவர்களுக்குக் கொடுங்கள். அதுவும் அவர்கள் சிறுவயதினராய் இருக்கும்போதே கொடுங்கள்.
6. ஜெபிப்பதற்கு அவர்களைப் பழக்கப்படுத்துங்கள்.
உண்மையான தேவபக்திக்கு ஜெபம்தான் உயிர்மூச்சு. ஒருவன் உண்மையாகவே மறுபடியும் பிறந்திருக்கிறான் என்பதற்கு முதலாவது அடையாளம் ஜெபம்தான். கர்த்தர் அனனியாவை சவுலிடம் அனுப்பும்போது, “அவன் இப்பொழுது ஜெபம் பண்ணுகிறான்” (அப் 9:11) என்று அடையாளம் சொல்லி அனுப்புகிறார். சவுல் ஜெபம் பண்ணத் தொடங்கிவிட்டார் என்பதே அவருடைய மறுபிறப்பை நிருபிப்பதற்குப் போதுமானதாக இருக்கிறது.
உலகத்தார் ஜெபிப்பதில்லை. ஆனால், கடவுளுடைய மக்களோ ஜெபிக்கிறவர்களாக காணப்படுகிறார்கள். உலகத்தாரையும் கடவுளுடைய மக்களையும் வேறுபடுத்திக் காண்பிப்பது ஜெபமாகத்தான் இருக்கிறது. “அப்பொழுது மனுஷர் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள்” (ஆதி 4:26) என்கிறது வேதம்.
மெய்யான கிறிஸ்தவர்களின் விசேஷமான குணமாக ஜெபம் இன்றைக்கும் இருக்கிறது. ஜெபத்தின் மூலமாக அவர்கள் கடவுளிடம் பேசுகிறார்கள். தங்களுடைய விருப்பங்களையும், உணர்வுகளையும், ஆசைகளையும், பயங்களையும் அவர்கள் உண்மையாக அவரிடம் வெளிப்படுத்துகிறார்கள். பெயர்க் கிறிஸ்தவர்கள், ஜெபங்களை திரும்பத் திரும்ப உதட்டளவில் செய்வார்கள். அதை அவர்கள் நன்றாகக்கூட பேச்சளவில் செய்யலாம். ஆனால் அதற்கு மேல் அவர்களால் முன்னேறிப் போக முடியாது.
ஜெபமானது மனிதனுடைய ஆத்துமாவைத் திருப்புவதாக இருக்கிறது. எங்கள் ஊழியமும் உழைப்பும் உங்களை முழங்காலில் நின்று ஜெபிக்கச் செய்யாவிட்டால், அது வீணானதுதான். நீங்கள் ஜெபிக்கத் தொடங்கும் வரைக்கும் உங்களைக் குறித்து எங்களுக்கு நம்பிக்கை இருக்காது.
ஆவிக்குரிய ஐசுவரியத்தைப் பெற்றுக்கொள்ளும் இரகசியம் ஜெபத்தில் இருக்கிறது. கடவுளோடு நீங்கள் அடிக்கடி தனிப்பட்ட விதத்தில் தொடர்புகொள்கிறவர்களாக இருந்தீர்களானால் உங்கள் ஆத்துமா மழை பெய்த பிறகு காணப்படும் புல்லைப்போல செழிப்பாக இருக்கும். ஜெபம் குறைந்து போனால் அது காய்ந்து போன நிலையில் காணப்படும். ஜெபமில்லாவிட்டால் உங்கள் ஆத்துமாவை உயிரோடு வைப்பதும்கூட சிரமமாக இருக்கும். கர்த்தரோடு அடிக்கடி ஜெபத்தில் பேசுகிறவன், வளருகின்ற கிறிஸ்தவனாகவும், முன்னேறிச் செல்கிற கிறிஸ்தவனாகவும், உறுதியான கிறிஸ்தவனாகவும், செழிப்பான கிறிஸ்தவனாகவும் இருப்பான். அவன் கடவுளிடம் அதிகமாகக் கேட்கிறான், அவரிடமிருந்து அதிகமாகப் பெற்றுக்கொள்ளுகிறான். தன்னுடைய சகல காரியங்களையும் அவன் இயேசு கிறிஸ்துவிடம் தெரிவிக்கிறான். ஆகவே எந்த சூழ்நிலையிலும் எப்படி செயல்பட வேண்டும் என்பது எப்போதும் அவனுக்குத் தெரிந்திருக்கிறது.
நமது கரங்களில் கடவுள் கொடுத்திருக்கும் மகத்தான கருவி ஜெபமாகும். எந்த கஷ்டத்திலும் உபயோகிக்கக்கூடிய கருவியாக அது இருக்கிறது. துன்பத்தைப் போக்கும் மருந்தாகவும் இருக்கிறது. கடவுளின் வாக்குத்தத்தங்கள் அடங்கிய பொக்கிஷ அறையைத் திறக்கும் சாவியாக இருக்கிறது. கிருபையைப் பெற்றுத் தரும் கரமாக அது இருக்கிறது. ஆபத்தில் உதவும் நண்பனாக ஜெபம் செயல்படுகிறது. நமது தேவையின்போது பயன்படுத்தும்படியாக தேவன் நமது கரங்களில் தந்திருக்கும் எக்காளமாக இருக்கிறது. தாயானவள் தன் குழந்தையின் அழுகுரலைக் கேட்டு அதை கவனிப்பது போல, ஜெபத்தின் மூலமாக நாம் எழுப்பும் அழுகுரலைக் கடவுள் கேட்டு நமக்கு உதவி செய்கிறார்.
கடவுளிடம் வருவதற்கு மனிதன் உபயோகிக்கக்கூடிய எளிமையான சாதனம் ஜெபம். தேவனிடத்தில் நெருங்கி வருவதற்கு, எல்லாருமே உபயோகித்துக்கொள்ளக்கூடிய அருமையான சாதனம் ஜெபம். வியாதியஸ்தரும், வயதானவர்களும், பலவீனரும், நடமாட முடியாதவர்களும், குருடரும், ஏழைகளும், படிக்காதவர்களுங்கூட கடவுளிடம் ஜெபத்தின் மூலமாக நெருங்க முடியும். ஜெபிப்பதற்கு பெரிய திறமைகள் தேவையில்லை, படிப்பு தேவையில்லை, புத்தகங்கள் தேவையில்லை. ஞானியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. உங்களுடைய ஆவிக்குரிய நிலைமையைப் பற்றி கடவுளிடம் கூறுவதற்கு உங்களுக்கு ஒரு நாவு இருந்தால் போதும். அதைக் கொண்டு நீங்கள் ஜெபிக்கலாம்; ஜெபிக்க வேண்டும். ஜெபிக்காதவர்களைக் குறித்து, “நீங்கள் விண்ணப்பம் பண்ணாமல் இருக்கிறதினால் உங்களுக்கு சித்திக்கிறதில்லை” (யாக் 4:2) என்று சொல்லப்படுகிற பயங்கரமான ஆக்கினைத் தீர்ப்பை நியாயத்தீர்ப்பின் நாளிலே அநேகர் கேட்பார்கள்.
பெற்றோரே, உங்கள் பிள்ளைகளிடம் ஜெபிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த முழு முயற்சி செய்யுங்கள். எப்படி ஜெபிக்க ஆரம்பிப்பது என அவர்களுக்குக் காண்பியுங்கள். ஜெபத்தில் என்ன சொல்ல வேண்டும் என்பதை அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள். விடாமல் ஜெபம் செய்யும்படி அவர்களை உற்சாகப்படுத்துங்கள். அலட்சியமாகவோ, கவனக்குறைவாகவோ அவர்கள் இருந்தார்களானால் அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள். அவர்கள் கடவுளிடம் ஜெபிக்காதவர்களாக இருந்தார்களானால் அது ஒருபோதும் உங்களுடைய குற்றமாக இராதபடி நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்.
சிறுபிள்ளை தனது பக்திவழியில் எடுத்து வைக்கக் கூடிய முதலாவது அடி ஜெபிப்பது என்பதை நினைவில் வைத்திருங்கள். அக்குழந்தை வாசிக்க ஆரம்பிப்பதற்கு முன்பாகவே நீங்கள் குழந்தையை அதன் தாயின் அருகில் முழங்கால்படியிட வைத்து, தேவனைக் குறித்து புகழக்கூடிய சிறு வார்த்தைகளையும், சிறு விண்ணப்பங்களையும் அதன் மழலை மொழியில் சொல்ல வைக்க உங்களால் முடியும். எந்தக் காரியத்தை செய்வதாக இருந்தாலும் அதன் ஆரம்பம் மிகவும் முக்கியமானதாகும். அதுபோலத்தான் பிள்ளைகளின் ஜெபவாழ்க்கையில் ஆரம்ப ஜெபமும் முக்கியமானது. குழந்தையின் ஜெபத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். இது எவ்வளவு அவசியமானது என்பதை ஒரு சிலரே அறிந்து வைத்திருக்கிறார்கள். குழந்தைப் பிராயத்தில் குழந்தையை சரியாக பழக்கப்படுத்தாவிட்டால், அவர்கள் அலட்சியமாகவும், கவலையற்றும், தகுந்த மரியாதை செலுத்தாமலும் ஜெபிக்கக் கற்றுக்கொண்டுவிடுவார்கள். பிள்ளைகளுக்கு ஜெபிக்கக் கற்றுத் தருவதை வேலையாட்களிடமோ அல்லது மற்றவர்களிடமோ விட்டுவிடாதீர்கள். அவர்கள் தாங்களாகவே ஜெபிக்கப் பழகிக்கொள்ளட்டும் என்ற வீணான எண்ணத்தைக் கொண்டிராதீர்கள். தனது பிள்ளையின் தினசரி வாழ்வின் முக்கியமான இந்த பகுதியில் அக்கறை காட்டாத தாய்மார்களைக் குறித்து நான் குறைவாகத்தான் மதிப்பிட முடியும். குழந்தைக்கு ஜெபிக்கக் கற்றுக் கொடுக்கின்ற நல்ல பழக்கம் உங்களுடைய சொந்த முயற்சியினால் ஏற்பட வேண்டும். உங்கள் பிள்ளைகள் ஜெபிப்பதைக் கேட்காத பெற்றோராக நீங்கள் இருப்பீர்களானால், தவறு உங்களுடையதுதான். யோபுவில் சொல்லப்பட்டுள்ள பறவையைப் போலத்தான் நீங்கள் இருப்பீர்கள்: “அது தன் முட்டைகளைத் தரையிலே இட்டு, அவைகள் மணலிலே அனலுறைக்க வைத்துவிட்டுப் போய், காலால் மிதிபட்டு உடைந்துபோம் என்பதையும், காட்டுமிருகங்கள் அவைகளை மிதித்துவிடும் என்பதையும் நினைக்கிறதில்லை. அது தன் குஞ்சுகள் தன்னுடையதல்லாதது போல அவைகளைக் காக்காத கடினகுணமுள்ளதாயிருக்கும்; அவைகளுக்காக அதற்குக் கவலையில்லாதபடியினால் அது பட்ட வருத்தம் விருதாவாம்.” (யோபு 39:14-16).
ஜெபிக்கும் பழக்கம் மட்டுமே வெகுகாலத்துக்கு தொடர்ந்து நிலைத்திருக்கும். முதியவர்கள் எல்லோரும் தாங்கள் சிறுவயதில் எப்படித் தங்கள் தாயாரிடமிருந்து ஜெபிக்கக் கற்றுக் கொண்டார்கள் என்பதை சொல்லக்கூடியவர்களாக இருப்பார்கள். மற்ற எல்லா விஷயங்களும் அவர்களுடைய நினைவில் இருந்து அகன்று போயிருக்கலாம். ஆராதனைக்கு அவர்கள் பெற்றோர் கூட்டிச் சென்ற சபை, அங்கு பிரசங்கித்த பிரசங்கியார், தங்களுடைய சிறுவயது விளையாட்டுத் தோழர்கள் ஆகிய எல்லா விஷயங்களையும் அவர்கள் மறந்து போயிருக்கலாம். அதன் தடயம்கூட ஞாபகத்தில் கொஞ்சமும் இல்லாமல் அழிந்து போயிருக்கலாம். ஆனால், தங்களுடைய சிறு வயது ஜெபத்தை மட்டும் அவர்கள் நன்றாக ஞாபகத்தில் வைத்திருப்பார்கள். அவர்கள் எந்த இடத்திலே முழங்கால்படியிட்டார்கள், என்ன வார்த்தைகளை சொல்லும்படி தாயார் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள் என்பதெல்லாம் அவர்கள் நினைவில் தெளிவாக இருக்கும். தாங்கள் ஜெபிக்கும்போது, தாயாரின் கண்கள் அன்போடு நோக்கிக் கொண்டிருந்ததைக்கூட நினைவில் வைத்திருப்பார்கள். நேற்றுதான் நிகழ்ந்த விஷயம் போல அது மிகவும் பசுமையாக அவர்கள் மனக்கண்களில் தோன்றும்.
பெற்றோரே, நீங்கள் உங்கள் பிள்ளைகளை நேசிப்பவர்களாக இருந்தால், ஜெபிக்கும் பழக்கமாகிய விதையை அந்தப் பருவத்திலேயே விதைக்க மறவாதீர்கள். சரியானபடி ஜெபிப்பதற்கு இளம் வயதிலிருந்தே கற்றுக் கொடுங்கள். நீங்கள் அவர்களுக்கு எதைக் கற்றுக் கொடுக்காமல் போனாலும், ஜெபிக்கும் பழக்கத்தைக் கற்றுக் கொடுக்காமல் விட்டுவிடாதீர்கள்.
7. பொதுவான கிருபையின் சாதனங்களை (Means of Grace) பிள்ளைகள் ஊக்கத்தோடும் தவறாமலும் கடைப்பிடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்.
தேவனுடைய வீட்டிற்குச் (சபைக்கு) சென்று, அங்குள்ளோரோடு ஜெபத்தில் (ஆராதனையில்) கலந்துகொள்வது எவ்வளவு நன்மையானது என்றும், அது நமது கடமையென்றும் அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். எங்கெல்லாம் கர்த்தருடைய ஜனங்கள் கூடிவருகிறார்களோ அங்கெல்லாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பிரசன்னம் விசேஷித்தவிதத்தில் இருக்கிறதென்று அவர்களுக்குக் கூறுங்கள். அதில் கலந்துகொள்ளத் தவறுகிறவர்கள், அப்போஸ்தலனாகிய தோமா தவறவிட்டதைப் போல ஓர் ஆசீர்வாதத்தை இழக்கிறார்கள் என்பதையும் தெரிவியுங்கள். தேவனுடைய வீட்டிலே பிரசங்கிக்கப்படுகிற கர்த்தருடைய வார்த்தையின் முக்கியத்துவத்தை எடுத்துரையுங்கள். கடவுளின் வார்த்தைகள் மனமாறுதலுக்கும், பரிசுத்தப்படுத்துதலுக்கும், மனிதனுடைய ஆத்துமாவை வலுப்படுத்துகிறதற்கும் மிகவும் அத்தியாவசியமானது என்று தெரியப்படுத்துங்கள். அப்போஸ்தலனாகிய பவுல், “சபை கூடிவருதலை சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமலிருக்கும்படியாக” (எபி 10:25) கட்டளையிட்டிருப்பதை அவர்களுக்கு சொல்லுங்கள். நாளானது சமீபித்து வருகிறதை எந்தளவுக்கு பார்க்கிறீர்களோ அந்தளவுக்கு புத்தி சொல்லுங்கள்.
கர்த்தருடைய பந்தியில் கலந்துகொள்வதற்கு சபைகளிலுள்ள வயதானவர்கள் மட்டுமே வருவதைக் காண்பது எனக்கு வருத்தமாய் இருக்கிறது. இளம் வாலிபரும் பெண்களும் அதில் பங்கெடுக்காமல் திரும்பிப் போய்விடுகிறார்கள். அதைவிட வருத்தமான விஷயம் என்னவென்றால் ஞாயிறுபாட சாலைக்கு வரும் சிறுபிள்ளைகளைத் தவிர்த்து, வேறு பிள்ளைகள் எவரும் சபைகூடுதலுக்கு வருவதில்லை என்பதே. இந்தக் குற்றம் உங்கள் குடும்பத்தின் மேல் இராமலிருக்கட்டும். சிறுபையன்களும் சிறுபெண்களும் பள்ளிகளுக்கு ஒழுங்காகப் போய் வருகிறார்கள். அதுபோல் அவர்களின் பெற்றோராகிய நீங்களும், அவர்களுடைய நண்பர்களும் அப்பிள்ளைகளை உங்களோடு சபைக்கு அழைத்து வரவேண்டும்.
சபைக்கு வராமலிருப்பதற்கு வீணான காரணங்களைக் காண்பிக்கின்ற பழக்கத்தை பெற்றோராகிய நீங்கள் அனுமதிக்கக் கூடாது. அவர்கள் உங்களுக்குக் கீழாக உங்கள் குடும்பத்தில் இருக்கிறவரையும், உடல்நலக் குறைவு ஏற்படும் நாட்களைத் தவிர, ஏனைய கர்த்தருடைய நாட்களில் கர்த்தருடைய வீட்டிற்கு வரவேண்டியது உங்கள் வீட்டின் சட்டம் என்பதை அவர்களுக்கு அறிவியுங்கள். ஓய்வு நாளை ஆசரிக்காதவன் தனது ஆத்துமாவையே கொலை செய்துகொள்வதற்கு ஒப்பானவன் என நீங்கள் நம்புவதாக தெரிவியுங்கள்.
சபை ஆராதனை வேளையில் உங்கள் பிள்ளைகள் உங்களோடேயே வந்து உங்கள் அருகாமையில் அமரும்படிச் செய்யுங்கள். சபைக்கு போவது அவசியமானது, அப்படிப்போகிறபோது சபையில் ஒழுங்கோடு நடந்துகொள்வதும் அவசியம். உங்கள் கண்பார்வையில் உங்கள் பிள்ளைகள் இருக்கும்படி உங்கள் பக்கத்திலேயே சபையில் அவர்களை அமரச் செய்வதுதான் அவர்களுடைய நல்லொழுக்கத்திற்குப் பாதுகாப்பு என நான் நம்புகிறேன்.
இளம் பிள்ளைகளின் மனம் சுலபமாக வேறு விஷயங்களுக்குத் தாவிவிடும். அவர்களுடைய கவனம் சிதறும். இதை எதிர்ப்பதற்குரிய சகல வழிமுறைகளையும் நீங்கள் கையாள வேண்டும். அவர்கள் தனியாக சபைக்குப் போவதை நான் விரும்பவில்லை. போகிற வழியில் அவர்கள் தகாதவர்களோடு சேர்ந்துகொண்டு, மற்ற நாட்களைக் காட்டிலும் கர்த்தருடைய நாளில் அதிக தீமையான காரியங்களைச் செய்யக் கற்றுக்கொள்ள அது துணை போய்விடும். சபையில் “இளம் வயதினர் அமரும் இடம்” என்று ஒன்றை ஏற்படுத்தி அவர்களை அங்கே இருக்க வைப்பதையும் நான் விரும்புவதில்லை. அங்கேதான் அவர்களுடைய கவனம் சிதறிப்போக வழியேற்படுகிறது. சபையில் அவர்கள் மரியாதைக் குறைவாக நடந்துகொள்ளவும் அது வழிவகுத்துவிடும். அந்தத் தீங்கான காரியத்தை அவர்கள் கற்றுக்கொண்டு விட்டார்களானால் அவர்களிடமிருந்து அந்தப் பழக்கத்தை அகற்றுவதற்கு அதிக காலம் ஆகும். சபையில் முழுக்குடும்பமாக, வயதானவர்களும் வாலிபப் பிராயத்தினரும் அருகருகே அமர்ந்திருப்பதையே நான் பார்க்க விரும்புகிறேன். ஆண்களும், பெண்களும், பிள்ளைகளுமாக அவரவருடைய குடும்பத்திற்கேற்ப கடவுளைத் தொழுது ஆராதிப்பதை நான் காண விரும்புகிறேன்.
ஆனால், சிலபேர் இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பார்கள். பிள்ளைகளுக்கு கிருபையின் சாதனங்களை விளங்கிக்கொள்ள முடியாது என்றும் அதனால் இப்படி சபைக்கு அவர்களை அழைத்து வருவது பிரயோஜனமற்றது என்று சொல்லுவார்கள். இந்தவிதமான காரணங்களுக்கு நான் ஒருபோதும் செவிசாய்க்க மாட்டேன். இந்தவிதமான சிந்தனைகள் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இருந்ததாக நான் வாசிக்கவில்லை. மோசே பார்வோனின் முன்பாகச் சென்றபோது: “எங்கள் இளைஞரோடும், எங்கள் முதியோரோடும், எங்கள் குமாரரோடும், எங்கள் குமாரத்திகளோடும் . . . போவோம். நாங்கள் கர்த்தருக்குப் பண்டிகை கொண்டாட வேண்டும்” (யாத் 10:9) என்று கூறியதை நான் காண்கிறேன். மேலும் யோசுவா நியாயப்பிரமாண புத்தகத்தில் எழுதியிருக்கிற வார்த்தைகளை வாசித்தபோது, “. . . இஸ்ரவேலின் முழுச்சபைக்கும், ஸ்திரீகளுக்கும், பிள்ளைகளுக்கும், அவர்களுக்குள் நடமாடி சஞ்சரித்த அந்நியர்களுக்கும் முன்பாக, ஒரு வார்த்தையும் விடாமல் வாசித்தான்” (யோசு 8:35). “வருஷத்தில் மூன்று தரம் உங்கள் ஆண் மக்கள் எல்லோரும் இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய ஆண்டவரின் சந்நிதியில் வரக்கடவர்கள்” என்று யாத் 34:23ல் எழுதியிருப்பதைப் பார்க்கிறேன். புதிய ஏற்பாட்டிலும் பிள்ளைகள் பழைய ஏற்பாட்டுக் காலத்தைப் போலவே சபை சம்பந்தமான பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைக் காண்கிறேன். பவுல் தீருபட்டணத்திலுள்ள சீஷர்களைவிட்டு புறப்பட்டபோது, “அவர்களெல்லோரும் மனைவிகளோடும் பிள்ளைகளோடுங்கூட பட்டணத்துக்குப் புறம்பே எங்களை வழிவிட்டனுப்பும்படி வந்தார்கள். அப்பொழுது கடற்கரையிலே நாங்கள் முழங்காற்படியிட்டு ஜெபம் பண்ணினோம்” என்று (அப் 21:5) எழுதியிருப்பதைப் பார்க்கிறேன்.
சாமுவேல் சிறு பிள்ளையாக இருந்தபோது, கடவுளை அவர் அறிந்துகொள்வதற்கு முன்பாகவே சிலகாலம் கடவுளுக்கு ஊழியம் செய்து கொண்டிருந்ததைக் காணலாம். “சாமுவேல் கர்த்தரை இன்னும் அறியாதிருந்தான். கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு இன்னும் வெளிப்படவில்லை” (1 சாமு 3:7). அது மாத்திரமல்ல, அப்போஸ்தலர்கள்கூட கர்த்தர் கூறிய வார்த்தைகள் எல்லாவற்றையும் அவை சொல்லப்பட்ட நேரத்தில் முழுமையாக விளங்கிக் கொண்டிருக்கவில்லை: “இவைகளை அவருடைய சீஷர்கள் துவக்கத்திலே அறிந்திருக்கவில்லை. இயேசு மகிமையடைந்தபின்பு, இப்படி அவரைக் குறித்து எழுதியிருக்கிறதை . . . நினைவுகூர்ந்தார்கள்” (யோவான் 12:16).
பெற்றோர்களே, இந்த உதாரணங்களைப் பார்த்து ஆறுதலடையுங்கள். கிருபையின் சாதனங்களின் மதிப்பை உங்கள் பிள்ளைகள் இப்போது உணராமல் இருக்கிறார்களே என வேதனை அடையாதீர்கள். அவர்கள் ஒழுங்காக சபைக்கு வரும்படியான பழக்கத்தை மாத்திரம் இப்போது ஏற்படுத்திவிடுங்கள். அப்படி வருவதே பரிசுத்தமும், உயர்ந்ததும், உன்னதமானதுமான கடமையாயிருக்கிறது என்கிற சிந்தனையை அவர்கள் உள்ளத்தில் பதித்துவிடுங்கள். இதற்காக அவர்கள் உங்களை நன்றியோடு வாழ்த்துகின்ற நாள் விரைவில் வரும். (தொடரும்)
nice to meet you in internet when
i was searching parental counseling
LikeLike