போதக ஊழியத்தில் தொடர்ந்திருந்து இதழாசிரியராகப் பணிபுரிவதுதென்பது இலகுவானதல்ல என்பதை நான் அறிந்திருந்தபோதும் கர்த்தரின் பெரும் கிருபையால் ஒவ்வொரு இதழையும் நேரத்துக்கு முடித்து அச்சுக்கு அனுப்ப முடிகிறது. அநேகருடைய ஜெபங்கள் இதற்கு முக்கிய காரணம் என்பதை நான் எப்போதும் நினைவில் வைத்திருக்கிறேன். அச்சுப்பிழை பார்த்து துணை செய்கிறவர்களுக்கும் என் நன்றிகள். எங்களுடைய உழைப்பையும் கவனத்தையும் மீறி வந்திருக்கும் குறைகளை நீங்கள் நிச்சயம் பெரிதுபடுத்தமாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
இந்த இதழில் நான் இணைய தளத்தில் வெளியிட்ட இரு ஆக்கங்களைத் தந்திருக்கிறேன். எல்லோருக்கும் இவற்றை இணையத்தில் பயன்படுத்திக்கொள்ளும் வசதி இருந்திருக்காது என்பதால் இதில் தந்திருக்கிறேன். அதில் ஒன்றான “நடுநிலையாளனும் கரகாட்டக்காரனும்” என்ற ஆக்கத்தை இன்னும் விரிவுபடுத்தி இதில் எழுதியிருக்கிறேன். இது என்னைப் பொறுத்தவரையில் முக்கியமான ஓர் இறையியல் ஆக்கம். உங்களை இது சிந்திக்க வைக்கும் என்று நம்புகிறேன்.
இவற்றோடு தொடர்ந்து ஜெ. சி. ரைலின் “பெற்றோர் களுக்கான கடமை” என்ற ஆக்கத்தின் இரண்டாம் பகுதி இதில் வந்திருக்கிறது. இந்த இதழ் உங்கள் கையில் கிடைக்கும்போது இது நூல் வடிவில் வெளிவந்திருக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. நிச்சயம் அது பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
பத்துக்கட்டளைகள் பற்றிய எனது இரண்டாவது ஆக்கமும் இதில் வந்திருக்கிறது. பழைய, புதிய ஏற்பாடுகளில் பத்துக்கட்டளைகளுக்கு எத்தகைய இடம் இருந்திருக்கிறது என்பதை இது ஆராய்கிறது. பல வருடங்களுக்கு முன் நாம் வெளியிட்ட பத்துக்கட்டளைகள் நூல் இப்போது அச்சில் இல்லை. அதை மேலும் விரிவுபடுத்தி அதிக விளக்கங்களோடு வெளியிடும் எண்ணம் இருக்கிறது. கூடிய விரைவிலேயே அதைச் செய்ய எண்ணியிருக்கிறோம். அதற்காகவும் ஜெபித்துக்கொள்ளுங்கள்.
தமிழகத்திலும், ஸ்ரீ லங்காவிலும் பத்திரிகையை ஆர்வத்தோடு விநியோகித்து துணை புரிகிற சகோதர்களுக்கு என்னுடைய நன்றிகள். இந்த சத்தியங்கள் பலரையும் சென்றடைய வேண்டும் என்ற ஆர்வத்தோடு இதைச் செய்கிறீர்கள். இதுவரை வந்துள்ள இதழ்களைப்போல இதையும் கர்த்தர் தன்னுடைய மகிமைக்காகப் பயன்படுத்துவாராக.
– ஆசிரியர்