உடையும் இந்தியா?

உடையும் இந்தியா? (தமிழில்), கிழக்குப் பதிப்பகம்

Breaking India, by Rajiv Malhotra and Aravindan Neelakandan, Pgs 763, Kizhakku Pathippagam

சமீபத்தில் ஆங்கிலத்திலும், தமிழிலும் நான் வாசித்த ஒரு நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ‘இந்தியா உடைகிறது.’ 763 பக்கங்களைக் கொண்ட இந்த நூலுக்கான என்னுடைய முழு எதிர்வினையை (reaction) இனி வரப்போகிற திருமறைத்தீபம் இதழில் ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்ற தலைப்பில் வாசகர்கள் வாசிக்கலாம். நூலை எழுதியிருப்பவர்கள் இந்திய அமெரிக்கரான, அமெரிக்காவில் வாழும் ராஜீவ் மல்கோத்திராவும், அரவிந்தன் நீலகண்டனும்.

இந்த நூலுக்கான எதிர்வினையை நான் எழுதக் காரணம் இது கிறிஸ்தவத்தை தவறான கண்ணோட்டத்தோடு பார்த்து தவறான முடிவுகளுக்கு வந்திருப்பதால்தான். இதை எழுதியவர்கள் கிறிஸ்தவர்களல்லாதபடியால் அவர்களுக்கு மெய்க் கிறிஸ்தவத்தைப் பற்றிய தெளிவு இல்லாமலிருப்பதில் ஆச்சரியமிருக்க முடியாது. ஆனால், கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் மத்தியில், முக்கியமாக இந்துக்களுக்கு கிறிஸ்தவத்தைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தைத் தந்து அவர்களை நம்ப வைக்கும் ஆசிரியர்களின் முயற்சி தவறானது, ஆபத்தானது என்பதால் என்னால் ஓர் எதிர்வினையைத் தராமல் இருக்க முடியவில்லை.

நூலின் கருப்பொருள், இஸ்லாமிய தீவிரவாதம் ஒரு புறமும், மாவோயிஸ்டு நக்சலைட் இயக்கம் இன்னொரு புறமும், அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் இந்திய கிறிஸ்தவர்களோடு இணைந்து தென்னிந்தியாவில் வேறொரு புறமும் இந்தியாவை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது. இவற்றில் மூன்றாவதற்கே நூல் முக்கிய இடத்தைத் தந்து விளக்கி அதை நம்பவைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது. கிறிஸ்தவத்தை இதில் நுழைத்து கிறிஸ்தவர்களைப் பற்றிய தவறான கண்ணோட்டதை நூல் உருவாக்குவதால் அதை உதாசினப்படுத்தி அமைதியாக இருந்துவிட முடியாது.

நூலாசிரியர்கள் சராசரி இந்தியர்களாக இருந்து அவர்களுடைய பார்வையில் இந்நூலை எழுதவில்லை. அவர்கள் தீவிர இந்துத்துவப் பார்வையோடு நூலை எழுதியிருக்கிறார்கள். இந்தியன் என்றால் அவன் இந்து. இந்து என்றால் அந்த மதப்பண்பாடான வருணாச்சிரம மனுநீதி தர்மம் அதோடு இணைந்தே இருக்கும் என்ற இந்துத்துவப் போக்கில் நூல் எழுதப்பட்டிருக்கிறது. இந்த பார்வையோடு, இந்திய இந்துப் பண்பாட்டை மேற்கத்தியர்கள் சிதைத்து ஆரிய, திராவிடப் பிரிவினையை கால்டுவெல், மாக்ஸ்முல்லர் போன்றவர்கள் உருவாக்கி இந்தியாவை அதன் அடிப்படைப் பண்பாட்டில் இருந்து உருமாற்றியிருக்கிறார்கள் என்று ஆசிரியர்கள் வாதிடுகிறார்கள்.

இந்த வாதத்தை நிரூபிக்க அவர்கள் தெய்வநாயகமும், தெய்வகலாவும் இணைந்து நிறுவ முயற்சிக்கும் ‘திராவிட கிறிஸ்தவத்தை’ ஆராய்ந்து அது எத்தகைய கற்பனாவாதம் என்று விளக்குகிறார்கள். கிறிஸ்தவத்தோடு தொடர்பில்லாத வெறும் திராவிட இயக்கத்தைச் சேர்ந்த பிராமண எதிர்ப்பாளரான தெய்வநாயகத்தை கிறிஸ்தவராக ஆசிரியர்கள் கருதுவதால் அநாவசியத்துக்கு கிறிஸ்தவம் இதில் நுழைக்கப்பட்டு இந்துக்களின் கண்களுக்கு ஒரு ‘பிரிவினைவாத மதமாகத்’ தவறாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்தவர்கள் என்ற போர்வையில் இந்திய வேதங்களில் இருந்தே இயேசுவைக் கண்டுகொள்ளலாம் என்று பிரச்சாரம் செய்யும் சாது செல்லப்பா போன்றவர்களையும் இந்நூல் விமர்சிக்கிறது. கிறிஸ்தவத்தின் பெயரில் சுவிசேஷ ஊழியத்தைக் கொச்சைப்படுத்தி அதைத் தீவிர மதமாற்ற முயற்சியாக கிறிஸ்தவரல்லாதவர்களின் கண்களுக்குத் தென்படும் வகையில் செயலாற்றி வருகிறவர்களின் புத்தியற்ற செய்கைகள் கிறிஸ்தவத்தை இழிவுபடுத்தி விடுவதோடு கிறிஸ்தவரல்லாதவர்களின் எதிர்ப்பையும் தேடித் தந்துவிடுகின்றன என்பதை நூல் சுட்டிக்காட்டாமில்லை.

நூலாசிரியர்கள் பலவித ஆய்வுகளில் ஐந்துவருடங்களாக ஈடுபட்டு பெரும்பாலான கிறிஸ்தவ பிரிவுகள், நிறுவனங்களையெல்லாம் ஆராய்ந்து அவர்களுடைய செயல்களைத் தீவிர மதமாற்ற முயற்சிகளாக வர்ணித்து அம்முயற்சிகள் இந்தியாவை உடைக்கும் நோக்கத்துடன் நடந்து வருகின்றன என்று விளக்குகிறார்கள். இந்த நிறுவனங்கள் எல்லாமே மெய்கிறிஸ்தவ நிறுவனங்களல்ல. அவற்றில் வெறும் சமூக சேவை செய்யும் நிறுவனங்களும், கத்தோலிக்க அமைப்புகளும், கிறிஸ்தவ விசுவாசமற்ற லிபரல் கோட்பாடுகளைத் தழுவி இயங்கும் நிறுவனங்களும், அமைப்புகளும் அடங்கும். ஆசிரியர்களுடைய கண்களுக்கு கிறிஸ்தவமாகத் தெரியும் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக ‘கிறிஸ்தவமாகப்’ பார்த்து அவற்றின் பணிகளை விமர்சித்து கிறிஸ்தவம் இந்தியப் பண்பாட்டை சிதைக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கின்றது என்று காட்டுவது இவர்களுடைய இந்துத்துவ நோக்கங்களுக்கு துணைபோகலாம். ஆனால், அவை ஒன்றுசேர முடியாதவைகளை இணைத்து ஒட்டுப் போடப்பட்ட உண்மைக்குப் புறம்பான முடிவுகள்.

இந்துத்துவப் பார்வைகொண்டவர்களின் எண்ணப்போக்கைப் புரிந்துகொள்ள இந்த நூல் எனக்கு உதவியது. இந்துத்துவம் எந்தளவுக்கு இந்திய தேசத்துக்கும், இந்தியனுக்கும் ஆபத்தானது என்பதையும் உணர உதவியது. மதசுதந்திரத்திற்கும், தனி மனித உரிமைக்கும் ‘பண்பாட்டின்’ பெயரில் தடைபோட எண்ணும் இந்துத்துவம் இந்தியாவைத் தொடர்ந்தும் சாதிய வர்ணாச்சிரம மனுநீதி தர்மத்திற்கே அடிமையாக வைத்திருக்க முயற்சிக்கிறது என்பதை நூல் உறுதிப்படுத்துகிறது. தீவிர மதவாத அடிப்படையில் இயங்கும் எதுவுமே சமுதாயத்துக்கும், தனிமனித உரிமைகளுக்கும் ஆபத்தானது. சபை வரலாற்றில் பல நூற்றாண்டுகளுக்கு தேசங்களைத் தன் கைப்பிடியில் வைத்திருந்த கத்தோலிக்க மதம் அதை நமக்கு வெளிப்படையாக உணர்த்துகிறது. அதையே தலிபான்களும், அடிப்படைவாத இஸ்லாமியர்களும் உணர்த்துகிறார்கள். நூலாசிரியர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ளுகிறேன். மெய்க்கிறிஸ்தவம் அதை ஒருபோதும் செய்ய முயற்சிக்காது; செய்யாது. நெருப்பில்லாமல் புகையாது என்று சொல்லுவார்கள். ஆனால், நெருப்பே இல்லாமல் புகையை உண்டாக்கப் பார்க்கிறார்கள் நூலாசிரியர்கள்.

One thought on “உடையும் இந்தியா?

  1. \\இனி வரப்போகிற திருமறைத்தீபம் இதழில் ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்ற தலைப்பில் வாசகர்கள் வாசிக்கலாம். \\

    சீக்கிரம் செய்யுங்கள். ஆனால் ஒரு சின்ன திருத்தம் தங்கள் சஞ்சிகை காலாண்டு சஞ்சிகையாக இருப்பதால் அடுத்த இதழ் மட்டும் பொறுக்க இயலாது. இணையத்தில் பதித்து சஞ்சிகைகளிலும் தொடர்ந்து பதிக்கலாமே.

    Like

Leave a Reply to colvin Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s