Evangelism and the Sovereignty of God, J I Packer, Inter-varsity Press. Pgs 126
என்னுடைய படிப்பறை நூலகத்தில் இருக்கும் இந்நூலின் பின்பக்கத்தில் 1986ம் ஆண்டு நான் பின்வரும் குறிப்பை எழுதியிருக்கிறேன், ‘Worth the money spent. This book helped me when I was teaching a group of young men during the 1980’s. It helped resolve many questions the students had in their mind as well as mine. Thank you to Packer for writing this book.’ இந்தக் குறிப்பு பல தடவைகள் நூலை வாசித்த பிறகு எழுதப்பட்டதாக இருக்க வேண்டும். 1986ம் ஆண்டுதான் நான் நியூசிலாந்து நாட்டில் வந்திறங்கினேன். இந்த நூலை நான் அதற்கு சில வருடங்களுக்கு முன் வாங்கியிருந்திருக்க வேண்டும். என் கையிலிருக்கும் நூல் 1979ல் வெளிவந்தது. நூல் முதலில் 1961ல் வெளிவந்தது. அதற்குப் பிறகு ஒன்பது தடவைகள் மறுபதிப்பு செய்யப்பட்டிருப்பதில் இருந்தே நூலின் விஷேசத்தை அறிந்துகொள்ள முடிகிறது.
கிறிஸ்தவர்களில் அநேகர் கர்த்தரின் இறையாண்மைக்கும் சுவிசேஷம் சொல்லுவதற்கும் இடையில் உள்ள தொடர்பைக் குறித்து இன்றும் வினாக்களை எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலானோர் கர்த்தரின் இறையாண்மை சுவிசேஷம் சொல்லுவதற்கு தடையாக இருந்துவிடுகிறது என்று தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அத்தகைய எண்ணமே பொதுவாக நம்மினத்துக் கிறிஸ்தவர்கள் மத்தியில் இருக்கின்றது. இந்த எண்ணத்தை சுக்கு நூறாக உடைத்து கர்த்தரின் இறையாண்மைக்கும் சுவிசேஷம் சொல்லுவதற்கும் இடையில் இருக்கும் உறவை அருமையாக விளக்குகிறார் ஜிம் பெக்கர். அநேக வருடங்களுக்கு முன் இதை முதல் முதலாக வாசித்தபோது என்னுடைய வேத சிந்தனைகள் வலுப்பெற இந்நூல் பெரிதும் உதவியது.
‘கர்த்தர் அனைத்திற்கும் பொறுப்பானவராக இருப்பதால் நாம் கையைக் கட்டிக்கொண்டு சுவிசேஷம் சொல்லாமல் இருந்துவிடலாமே. இறையாண்மையுள்ள கர்த்தர் எப்படியாவது தன் ஆடுகளை இரட்சித்துக் கொள்ளுவார்’ என்ற தவறான கருத்து இன்றும் ஒரு கூட்டத்தாரிடம் இருந்து வருகிறது. அத்தோடு, ‘நாம் அதிக ஊக்கமாக சுவிசேஷத்தை முன்னெடுத்துச் சென்றால் கர்த்தர் இறையாண்மை இல்லாதவர் என்றாகிவிடுகிறது’ என்று நினைப்பவர்களும் உண்டு. இந்த இரண்டு கருத்துக்களும் தவறானவை என்பதை சுட்டிக்காட்டி அவற்றிற்கு தர்க்கரீதியான பதிலை வேத ஆதாரத்தோடு தருகிறது இந்நூல்.
முதல் தடவை இதை வாசித்தபோது ஆசிரியரின் பாண்டித்தியத்தை உணர்ந்து மகிழ்ந்தேன். நூலைப் பல முறை வாசித்தேன். இன்றைக்கும் அதை அவசியமானபோது திறந்து வாசிக்காமல் இருப்பதில்லை. சுவிசேஷத்தை சொல்லுகிற காலம் முடிவடைகிறவரை அச்சில் இருக்க வேண்டிய நூலிது.
நூலில் நான்கு அதிகாரங்கள் இருக்கின்றன. முதல் அதிகாரம் கர்த்தரின் இறையாண்மையை விளக்குகிறது. இரட்சிப்பைப் பொறுத்தவரையில் கர்த்தர் இறையாண்மையுள்ளவராக இருக்கிறார் என்பதை இந்த சிறு அதிகாரத்தில் பெக்கர் விளக்குகிறார். இதில் சார்ள்ஸ் சிமியன் என்ற பிரசங்கிக்கும் ஜோன் வெஸ்லிக்கும் இடையில் இந்த விஷயம் சம்பந்தமாக நடந்த சம்பாஷனையைத் தந்திருக்கிறார் பெக்கர். பெக்கரைப் பொறுத்தவரையில், ‘All Christians believe in divine sovereignty, but some are not aware that they do, and mistakenly imagine and insist that they reject it.’ அதற்குத் தவறான ஊகங்களும், இரகசியமானவைகள் பூரண ஞானமுள்ள கடவுளுக்கு மட்டுமே தெரிந்தவை என்பதை ஏற்றுக்கொள்ளாமல் மட்டுப்படுத்தப்பட்ட மனித சிந்தனையை அந்த விஷயங்களில் பயன்படுத்தப் பார்ப்பதுந்தான் காரணம் என்று பெக்கர் விளக்குகிறார்.
நூலின் இரண்டாம் அதிகாரம் மிகவும் சிறப்பானது. இதில் கர்த்தரின் இறையாண்மையையும், மனிதனின் பொறுப்பையும் (Human reponsibility) தெளிவாக Antinomy, Paradox ஆகிய இரண்டிற்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை விளக்கி 19 பக்கங்களில் விளக்கந் தந்திருக்கிறார். இந்த நூலை வாசித்தே இந்த உதாரணம் இந்த சத்தியங்களை விளக்க எத்தனை அருமையானது என்பதை முதன் முதலாக நான் உணர்ந்தேன். இதை இன்றும் நான் பயன்படுத்தத் தவறுவதில்லை. Antinomy என்பது, ‘நம் கண்களுக்கு முரண்பாடானதாகத் தோன்றுவது’ என்று அர்த்தம். இந்த உதாரணத்தை இறையியலில் பயன்படுத்தி கர்த்தரின் இறையாண்மை, மனிதனின் பொறுப்பு ஆகிய உண்மைகள் Antinomyயைப்போல நம் கண்களுக்குத்தான் முரண்பாடாகத் தோன்றும் இரு உண்மைகளாக இருக்கின்றனவே தவிர உண்மையில் அவற்றிற்கிடையில் முரண்பாடுகள் இல்லை என்று விளக்குகிறார் பெக்கர். இவை இரண்டும் இரயில் தண்டவாளங்களைப் போல சரிசமமாக வேதத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இரண்டு முரண்பாடில்லாத முற்றிலும் உண்மையான சத்தியங்கள் என்று விளக்குகிறார் பெக்கர். இங்கே தான் ஜீம் பெக்கரின் பாண்டித்தியத்தைப் பார்க்கிறோம். ‘Seemingly irreconcilable, yet both undeniable. There are cognant reasons for believing each of them; each rests on clear and solid evidence; but it is a mystery to you how they can be squared with each other’ என்கிறார் பெக்கர். ‘தெய்வீக இறையாண்மையும், மனிதனின் பொறுப்பும் ஒன்றுக்கொன்று எதிரிகளல்ல. ஒருவருக்கொருவர் முகத்தைச் சுளித்துக்கொள்ளும் பக்கத்துவீட்டுக்காரர்களல்ல; அவர்கள் நண்பர்கள்’ என்று முடிக்கிறார் பெக்கர். இவற்றில் ஒன்றில்லாமல் மற்றதில்லை. ஒன்றை மட்டும் வலியுறுத்தி மற்றதைக் குறைவுபடுத்தக்கூடாது. இரண்டும் உண்மை; இரண்டும் இணைபிரியாமல் வேதத்தில் காணப்படும் உண்மைகள்.
இதற்கடுத்த அதிகாரம் சுவிசேஷம் என்றால் என்ன என்று விளக்கும் அதிகாரம். சுவிசேஷத்தைப் பற்றிய தெளிவான எண்ணங்களைக் கொண்டிருக்க இந்த அதிகாரத்தை வாசிப்பது நல்லது. முதலில் சுவிசேஷத்திற்கான அடிப்படை விளக்கத்தைக் கொடுத்து அதன்பிறகு அந்த சுவிசேஷத்தை சொல்ல வேண்டிய விதத்தை விளக்குகிறார் பெக்கர். சுவிசேஷத்தை சொல்லும்போது அதில் என்னென்ன உண்மைகள் தவறாது இருக்க வேண்டும் என்பதை ஆதாரங்களோடு விளக்குகிறார். சுவிசேஷத்தை சொல்ல வேண்டிய வேதபூர்வமான முறையையும் அவர் விளக்காமலில்லை. சுவிசேஷ ஊழியங்கள் இன்றைக்கு தலைகீழாக மாறிப் போய் அதைப்பொறுத்தவரையில் வேதத்தைப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை என்றிருக்கிறபோது 54 பக்கங்களில் பெக்கர் தந்திருக்கும் விளக்கங்கள் நாவில் தேன் சுரந்ததுபோல் இருக்கிறது; நெஞ்சுக்கு நிம்மதியும் தருகிறது. இது நூலில் இருக்கும் இன்னொரு அருமையான அதிகாரம்.
நூலின் கடைசி அதிகாரம் ‘தெய்வீக இறையாண்மையும் சுவிசேஷமும்’ என்ற தலைப்பைக் கொண்டிருக்கிறது. இதில் இதுவரை சொன்னவற்றையெல்லாம் சுருக்கமாக மறுபடியும் ஒருமுறை பார்ப்பதோடு தெரிந்துகொள்ளுதல், தெரிந்துகொள்ளப்படாதவர்கள், வரையறுக்கப்பட்ட கிருபாதாரபலி ஆகியவை பற்றி வாசகர்களுக்கிருக்கும் சந்தேகங்களையெல்லாம் களைந்து இறுதியில் சுவிசேஷம் நமக்கு எத்தகைய நம்பிக்கையை அளிக்கிறது என்று விளக்கி நூலை ஒரு முடிவுக்கு கொண்டு வருகிறார் பெக்கர்.
எத்தனையோ நூல்கள் இந்த விஷயங்களைப் பற்றி விளக்கி இன்றைக்கு ஆங்கிலத்தில் வெளிவந்திருந்தபோதும் 52 வருடங்களுக்கு முன் ஜிம் பெக்கர் எழுதிய இந்த நூல் நேற்று எழுதியதுபோல் இன்றைய பிரச்சனைகளுக்கும் முகங்கொடுத்து சுவிசேஷம் அறிவிக்கும் பேரூழியத்தின் அவசியத்தையும் அதோடு தொடர்புடைய விஷயங்களையும் மனநிறைவு தரும்வகையில் வேதபூர்வமாக விளக்குகிறது. நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை – இதை வாசிக்காதவர்களுக்குத்தான் தாங்கள் இழப்பது என்னவென்று தெரியாமலிருக்கிறது என்பேன்.
Hi, great reading your post
LikeLike
இந்த புத்தகம் தமிழில் கிடைக்குமா?
LikeLike
நூல் விமர்சனம் பணியை இடையிலே விட்டு விடாது தொடர்ந்து செய்யுமாறு தங்களை அன்புடன் வேண்டுகிறேன். நூல்களை வாசிப்பதில் அதிக நேரம் செலவிடும் மற்றும் நூலகப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் என் போன்றவர்களுக்கு இது மிக உபயோகமாக இருக்கும்.
LikeLike