காட்டாற்றில் எதிர்நீச்சல்

பத்துக் கட்டளைகளில் மூன்றாம் கட்டளையான ‘கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக‘ கர்த்தம் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடமாட்டார்’ என்பதற்கான விளக்கத்தை என் சபையில் பிரசங்கம் செய்துகொண்டு வருகிறேன். நாம் சாதாரணமாக நினைப்பதற்கெல்லாம் மேலான உண்மைகள் இந்தக் கட்டளையில் அடங்கியிருக்கின்றன. கர்த்தரின் பெயரைப் பயன்படுத்தி தவறாக, அசிங்கமாகப் பேசக்கூடாது, ஒருவரை சபிக்கக்கூடாது என்று இந்தக் கட்டளை விளக்குவதாக மட்டுந்தான் பொதுவில் பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு. இந்தக் கட்டளை பேச்சு சம்பந்தமானது மட்டுமல்ல. நம்முடைய எண்ணங்களிலும், பேச்சிலும், எழுத்திலும், செயலிலும் கர்த்தருடைய பெயருக்கு எந்தவகையிலும் களங்கம் ஏற்படுத்தக்கூடாது என்றுதான் இந்தக் கட்டளை விளக்குகிறது.

இந்தக் கட்டளையை சரியாகப் புரிந்துகொள்ளுவதற்கு முதலில் கர்த்தரின் ‘நாமம்’ என்பது என்ன என்று நமக்குத் தெரிய வேண்டும். நாம் ‘யேகோவா’ அல்லது ‘இயேசு’ என்ற பெயர்களைத்தான் கர்த்தரின் நாமமாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். இந்தக் கட்டளையில் ‘நாமம்’ என்பதை எழுத்துப்பூர்வமாக மட்டும் எடுத்துக்கொள்ளக்கூடாது. கர்த்தரின் பெயர்களை மட்டும் குறிப்பதல்ல நாமம் என்ற வார்த்தை. ‘நாமம்’ என்பது என்னென்னவற்றின் மூலமாகவெல்லாம் கர்த்தர் தம்மை நமக்கு வெளிப்படுத்துகிறாரோ அதெல்லாவற்றோடும் தொடர்புடையது அவருடைய நாமம். ‘தம்முடைய பெயர்கள், குணாதிசயங்கள், கிரியைகள், திருநியமங்கள், ஜெபம், வாக்குறுதிகள், உறுதிகள் மற்றும் வேறெவற்றின் மூலமாகவெல்லாம் அவர் தம்மை வெளிப்படுத்துகிறாறோ அவையெல்லாம்’ அவருடைய நாமத்தோடு சம்பந்தப்பட்டவையாக பெரிய வினாவிடை நூல் (Larger Catechism) விளக்கமளிக்கிறது. இந்த விளக்கத்தின்படி கர்த்தரோடு சம்பந்தப்பட்ட அனைத்திற்கும் நாம் மதிப்பளித்து அவருடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாதபடி நடந்துகொள்ள வேண்டும்.

கர்த்தர் தம்முடைய வார்த்தையின் மூலமாக தம்மை வெளிப்படுத்துகிறார் என்பது பொதுவாகவே கிறிஸ்தவர்கள் அறிந்துவைத்திருப்பதுதான். அந்த வார்த்தையைத் தவறாகப் பயன்படுத்துவதும், அது சொல்லுவதை மறைத்து வேறேதோ விளக்கத்தை அது தருவதுபோல் அதற்கு விளக்கமளிப்பதும், அந்த வார்த்தைக்கு முரணான நம்பிக்கைகளை நாம் இருதயத்தில் கொண்டிருப்பதும், அதை நிராகரிப்பதும், அதோடு எதையும் கூட்டுவதோ, குறைப்பதோவெல்லாம் கர்த்தருடைய நாமத்திற்கு களங்கத்தை உண்டாக்குகிறது (வீணில் வழங்குவது) என்பதை நீங்கள் நிச்சயம் உணர்ந்திருக்க மாட்டீர்கள். இதையெல்லாம் நீங்கள் ஒத்துக்கொண்டாலும் பத்துக்கட்டளைகளின் மூன்றாம் கட்டளை இந்தக் காரியங்களைச் செய்வது கர்த்தருடைய பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்துகிறது என்றும், அத்தகைய பாவத்தைச் செய்பவனை அவர் சும்மா விடமாட்டார் என்று மூன்றாம் கட்டளையின் மூலம் கர்த்தர் ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார் என்பதையும் நீங்கள் நினைத்துப் பார்த்திருக்க மாட்டீர்கள் இல்லையா? இப்போது தெரிந்துகொள்ளுங்கள், இந்த உண்மை மூன்றாம் கட்டளையில் அடங்கியிருக்கிறது. இதற்குமேல் இன்னும் அநேக விதங்களில் நாம் அவருடைய நாமத்துக்குக் களங்கத்தை ஏற்படுத்துகிறோம் என்றும் இந்தக் கட்டளை விளக்குகிறது. இருந்தபோதும் அவருடைய வார்த்தையைத் தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் அவருக்குக் களங்கத்தை ஏற்படுத்துவதைப் பற்றிய முக்கியமான உண்மை ஒன்றை உங்களுக்கு விளக்குவதுதான் இந்த ஆக்கத்தினுடைய நோக்கமாக இருக்கிறது.

கர்த்தர் தம்மை வெளிப்படுத்துகிற அவருடைய வார்த்தை அவரைப் பற்றி விளக்குகின்ற சத்தியங்களில் நமக்கு எப்போதுமே தெளிவு இருக்க வேண்டும். ஆண்டவரை அறிந்துகொண்ட ஆரம்பத்தில் நமக்கு சத்தியங்களில் இருக்க வேண்டிய அறிவு பெரிதாக இருந்திருக்காது. போகப்போக வேதத்தை நன்றாகப் படித்து தெரிந்துகொள்ள வேண்டிய சத்தியங்களில் நல்லறிவு பெற்று கர்த்தரை ஆராதித்து வாழ வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அதையே கர்த்தரும் எதிர்பார்க்கிறார். சில சமயங்களில் நாம் வேதத்தையும், கர்த்தரையும் பற்றிய தவறான கருத்துக்களைக் கொண்டிருந்துவிடலாம். எதையோ வாசித்தும், யார் பேச்சையோ கேட்டும் தவறான எண்ணங்களை வளர்த்துக்கொண்டிருந்துவிடலாம். கர்த்தருக்கு பயப்படும் இருதயத்தைக் கொண்டிருந்து ஜெபத்தோடு கர்த்தரில் தங்கியிருந்து வேதத்தையும் அது பற்றிய நல்ல நூல்களையும் ஆராய்ந்து படிக்கிறபோது இத்தகைய தவறான எண்ணங்களில் இருந்து நாள் போகப்போக விடுபட்டு சத்தியத்தில் தெளிவை அடைய முடியும். அதைத்தான் கர்த்தரும் நம்மில் எதிர்பார்க்கிறார். உண்மையில் சத்தியம் சத்தியமாக பிரசங்கிக்கப்படாத தவறான இடங்களில் இருந்து வாழ்கிறபோதுதான் கிறிஸ்தவர்கள் தவறான போதனைகளை வளர்த்துக்கொண்டு விசுவாசம் இருக்கிறதா, இல்லையா என்று தெரியாத நிலையில் இருக்க நேரிடுகிறது. முக்கியமாக, கண்டதையும் வாசிக்கிறவர்களாகவும், கேட்டு நம்பிவிடுகிறவர்களாகவும் நாம் ஒருபோதும் இருந்துவிடக் கூடாது. வேதத்தை வைத்து ஆராய்ந்து சிந்தித்துப் பார்த்து, அன்னப் பறவை போல பாலையும் தண்ணீரையும் பிரித்து, சத்தியத்தை மட்டும் நம்பி வாழ்கிறவர்களாக நாம் இருக்க வேண்டும்.

கிறிஸ்தவ வரலாற்றில் கிறிஸ்தவத்தின் அடிப்படைப் போதனைகளில் குளருபடியான நம்பிக்கைகளை வைத்திருந்து, அந்தக் குளருபடியான நம்பிக்கைகளை எழுத்தில் வடித்து, பிரசங்கத்தில் தந்து பெருமளவு மக்களை சத்தியத்தைவிட்டுத் திசை திருப்பி இன்றும் தொடர்ந்து திசை திருப்பிக்கொண்டிக்கும் இரண்டு மனிதர்களை இந்த இடத்தில் என்னால் குறிப்பிடாமல் இருக்க முடியாது. இதை நான் குறிப்பிடுவதற்குக் காரணம் எந்தளவுக்கு கர்த்தரின் மூன்றாம் கட்டளைக்கெதிராக இவர்கள் நடந்து கர்த்தரின் மகிமைகொண்ட பெயருக்கு பெருங்களங்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டத்தான். இவர்களுடைய போதனைகளை இன்றைக்கு நம்பி வருகிறவர்களும் அவர்களைப் போலவே கர்த்தரின் மூன்றாம் கட்டளைக்கெதிராக நடந்து அவருடைய பெயருக்குக் களங்கத்தை உண்டாக்கி கர்த்தருக்கு எரிச்சலூட்டி வருகிறார்கள் என்பதை உணர வேண்டும்.

barclayவில்லியம் பார்க்கிளே (William Barclay) 20ம் நூற்றாண்டின் முக்கியமான ஒரு மனிதர். அநேக வேத நூல்களுக்கு வியாக்கியானம் எழுதி வெளியிட்டிருக்கிறார். வேதாகமக் கல்லூரிகளில் அநேகமானவை அவற்றை இன்றும் பயன்படுத்தி வருகின்றன. நம்மினத்தில் போதகர்களில் பலர் அவருடைய நூல்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். பார்க்கிளே தன்னை ‘லிபரல் இவெஞ்சலிக்கள்’ (Liberal evangelical) என்று அழைத்துக் கொண்டார். உண்மையில் இந்த வார்த்தைப் பிரயோகம் தவறானது. இந்த இரண்டும் ஒருபோதும் இணைய முடியாது. ஒரு மனிதன் இவற்றில் ஒன்றை மட்டுமே கொண்டிருக்க முடியும். ஒன்றில் அவன் ‘லிபரல்’ அல்லது ‘இவெஞ்சலிக்கள்’. வில்லியம் பார்க்கிளேயின் வார்த்தைகளில் இருந்தே அவருடைய சிந்தனையைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதாவது, ‘என்னைப் பொறுத்தவரையில் நான் கிறிஸ்தவன். ஆனால், வேதம் சொல்லுகிற அனைத்தையும் அது சொல்லுகிறதுபோல் நான் ஒருபோதும் நம்பி ஏற்று நடக்க மாட்டேன்’ என்கிறார் பார்க்கிளே. அதுவே உண்மையில் அவருடைய நம்பிக்கையாக இறுதிவரை இருந்தது.

வில்லியம் பார்க்கிளே வேதத்தில் எதையெதையெல்லாம் நம்பவில்லை தெரியுமா? இயேசு கிறிஸ்துவின் கன்னிப் பிறப்பை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மையை அவர் நிராகரித்தார். இயேசு கிறிஸ்துவின் அற்புதங்களையெல்லாம் அவர் மறுதலித்தார். வேத சத்தியங்களை உருவகப்படுத்தி விளக்கங் கொடுத்தார். எல்லா மனிதர்களும் எப்படியோ, ஏதோவொருவகையில் பரலோகம் போய்விடுவார்கள் (Universalism) என்று நம்பினார். எதெல்லாம் கிறிஸ்தவத்தின் அடிப்படை சத்தியங்களோ அவற்றையெல்லாம் பார்க்கிளே நிர்த்தாட்சண்யமில்லாமல் அடியோடு நிராகரித்தார். வேதத்தின் அதிகாரத்தையும், போதுமான தன்மையையும் பார்க்கிளே ஏற்றுக்கொள்ளவில்லை. கிறிஸ்தவத்தைப் பற்றிய இத்தனைத் தவறான, கோரமான எண்ணங்களைக் கொண்டிருந்தும் பார்க்கிளே ‘இறையியல் வல்லுனர்’ என்ற பெயரையும், வேதாகமக் கல்லூரிகளில் வாசிக்கப்படுமளவுக்கு அவருடைய நூல்கள் தொடர்ந்தும் இருப்பதெப்படி என்று நீங்கள் கேட்கலாம். அந்தளவுக்கு கிறிஸ்தவம் தாழ்ந்த நிலையில் நம்மத்தியில் இருப்பது இதற்கு ஒரு முக்கிய காரணம். அடுத்ததாக, நம்மினத்தார் வேத அடிப்படையில் சிந்திக்கும் மக்களாக இன்னும் உயரவில்லை என்பதும் இதற்கு ஒரு முக்கிய காரணம். எனக்குத் தெரிந்த நம்மினத்து வேதாமகக் கல்லூரி ஒன்றில் வில்லியம் பார்க்கிளேயின் நூல்கள் பயன்படுத்தப்படுவதோடு, விரிவுரையாளர்கள் அவருடைய எழுத்துகளைப் பயன்படுத்தி வேதவிளங்களைக் கொடுத்து எழுதியும் வருகிறார்கள். பார்க்கிளேயைப் போல அவர்களும் தங்களைத் தவறாக ‘லிபரல் இவெஞ்சலிக்கள்களாக’ எண்ணிக் கொண்டிருந்தால் மட்டுமே இப்படிச் செய்ய முடியும். ஆனால் உண்மையில் அவர்களும் பார்க்கிளேயைப் போல ‘லிபரல்கள்’ மட்டுமே. வேத சத்தியங்களை விளக்கி கர்த்தரை மகிமைப்படுத்த முயலும் நூல்களில் வில்லியம் பார்க்கிளேயின் பெயரோ, போதனைக் குறிப்புகளோ வருவதற்கு வாய்ப்பேயில்லை.

young-finneyசார்ள்ஸ் கிரென்டிசன் ஃபினி (Charles Grandison Finney) 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த இன்னொரு முக்கியமான மனிதர். ‘இவெஞ்சலிக்களிசம் சந்தித்த மிக முக்கியமான எழுப்புதல் மனிதர்’ என்றும், வரலாற்றில் இரண்டாம் எழுப்புதல் காலத்தில் பிரசித்தி பெற்ற மனிதர்’ என்றும் சார்ள்ஸ் ஃபினியைப் பற்றி இவெஞ்சலிக்கள் கிறிஸ்தவர்களில் பலர் தொடர்ந்தும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.  நம்மினத்து வேதாகமக் கல்லூரிகளில் ஃபினியின் நூல்கள் இல்லாமலிருக்காது, முக்கியமாக ஃபினியின் ‘எழுப்புதல் பற்றிய விரிவுரைகள்’. ஆரம்பத்தில் பிரெஸ்பிடீரியன் இறையியல் கல்லூரியொன்றில் போதகராக வருவதற்கு ஃபினி பயிற்சி பெற்றார். விசுவாச அறிக்கையிலுள்ள சத்தியங்களை அவர் ஏற்று கற்றுத் தேர்ந்தார். காலம் போகப்போக ஃபினியின் கிறிஸ்தவ நம்பிக்கைகளில் மாற்றங்கள் ஏற்பபட்டது. அவர் மூலபாவத்தை அடியோடு நிராகரித்தார். மனிதன் பாவத்தோடு பிறக்கவில்லை என்ற பெலேஜியனிச போதனையை அவர் முழுதாக நம்பினார். இதன் அடிப்படையில் வேதத்தின் ஏனைய போதனைகளிலும் அவருடைய நம்பிக்கைகள் மாற ஆரம்பித்தன. தேவகோபத்தை கடவுள் தன்மீது ஏற்றுக்கொள்வதென்பது நடவாத காரியம் என்று விளக்கிய ஃபினி வேதம் போதிக்கும் ‘நீதிமானாக்குதல்’ போதனையை (Forensic Justification) நிராகரித்தார். இதன் காரணமாக கிறிஸ்துவின் சிலுவைப் பலி பற்றிய போதனையையும் அவர் கொச்சைப்படுத்தி விளக்க நேர்ந்தது. மறுபிறப்பு பரிசுத்த ஆவியின் கிரியை மட்டுமல்ல அதில் மனிதனுடைய ஒத்துழைப்பு இருக்கிறது என்ற பினி ‘மனிதன் தன்னை மாற்றிக்கொள்ள தன் சித்தத்தில் முடிவு செய்யாவிட்டால் கடவுளென்ன, உலகத்தில் எந்தவொரு மனிதனாலும் அவனில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது’ என்றார் ஃபினி. மனிதனுடைய வல்லமையில் அதீத நம்பிக்கை வைத்திருந்த ஃபினி கடவுளுடைய துணையில்லாமல் நம்முடைய திட்டங்களை சரியாக செயல்படுத்துவதன் மூலம் எழுப்புதலை உருவாக்க முடியும் என்று நம்பிப் போதித்தார். ஃபினி தான் நம்பியவற்றை மறைக்காமல் அப்படியே தன்னுடைய ‘எழுப்புதல் பற்றிய விரிவுரைகள்’ (Lectures on Revival) என்ற நூலிலும், தன்னுடைய ‘வரையறுக்கப்பட்ட இறையியல்’ (Systematic Theology) நூலிலும் அப்பட்டமாக விளக்கியிருக்கிறார். சார்ள்ஸ் ஃபினிக்கு இவெஞ்சலிக்கள் கிறிஸ்தவ நம்பிக்கைகள் அறவே இருக்கவில்லை.

வரலாற்றில் இருந்து இந்த உதாரணங்களை நான் ஏன் தந்திருக்கிறேன் தெரியுமா? நமக்கு இவையெல்லாம் நல்ல எச்சரிக்கைகளாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். என்னைப் பொறுத்தவரையில் இந்த இரண்டு மனிதர்களும் மூன்றாம் கட்டளை விளக்குகிறபடி கர்த்தரின் நாமத்துக்கு களங்கத்தை உண்டாக்கியிருக்கிறார்கள். அவரை வெளிப்படுத்துகிற அவருடைய வார்த்தையைக் கொச்சைப்படுத்தி கர்த்தரின் பெயருக்கு பெரும் இழுக்கை ஏற்படுத்தியிருக்கிறார்கள். கர்த்தரையும் அவருடைய கிரியைகளையும் வேதத்துக்கு எதிரான முறையில் விளக்கி மனிதர்களுடைய பார்வையில் கர்த்தரின் மகிமையைக் குறைவுபடுத்தியிருக்கிறார்கள். இது மூன்றாம் கட்டளைக்கெதிரான அப்பட்டமான பாவம். அப்படிச் செய்கிறவனை நான் தண்டியாமல் விடமாட்டேன் என்று மூன்றாம் கட்டளையில் கர்த்தர் சொல்லியிருக்கிறார்.

இன்று நம்முடைய கிறிஸ்தவ பணி காட்டாற்றில் எதிர்நீச்சல் போடுகிற நிலையில் இருக்கிறது. பார்க்கிளே, ஃபினி போன்ற மனிதர்களையும், போலித்தனமான, மலிந்து காணப்படும் எண்ணற்ற வேதவிசுவாசமற்ற முரண்பாடான போதனைகளையும் கண்மூடித்தனமாகப் பின்பற்றி சிந்திக்காமல் இருந்துவருகிற இனத்தில் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து சபை நடத்துகின்ற பணி நிச்சயம் காட்டாற்றில் எதிர்நீச்சல் போடும் பணிதான். வேதசத்தியங்களை மட்டுமே நம்பி இருதயத்தை சுத்தமாக வைத்திருந்து நாம் பணி செய்யும் ஆத்துமாக்களை வேதத்துக்கு எதிராகவும், கர்த்தருக்கு எதிராகவும் திசைதிருப்பி விடாமல் ஊழியம் செய்வது இலேசான காரியமல்ல. அதற்கு ஆவியின் துணை நமக்குப் பெரிதும் தேவை. கிறிஸ்தவர்களே! கர்த்தரின் பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுவிடாதபடி சத்தியத்தை மட்டுமே உங்களுடைய காதுகள் கேட்கும்படியும், கண்கள் காணும்படியும், இருதயம் நம்பும்படியும், கால்கள் பின்பற்றும்படியும் இருக்குமாறு பார்த்து மூன்றாம் கட்டளைக்கு மதிப்புக் கொடுத்து நடந்துகொள்ளுங்கள். தன்னுடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவர்களை கர்த்தர் தண்டியாமல் விடமாட்டார்.

வெற்றிகரமாக எதிர்நீச்சல் போடாமல் எவரும் எந்தக் காட்டாற்றையும் கடந்ததாக வரலாறில்லை. ஆற்றைக் கடக்க வைப்பது ஆண்டவரின் வேலை; விசுவாசத்தோடு எதிர்நீச்சல் போடுவதே நம் வேலை.

___________________________________________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 25 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s