அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்

Breaking india 3d engசமீபத்தில் நான் Breaking India என்ற நூலை ஆங்கிலத்தில் வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன். அது தமிழிலும் ‘உடையும் இந்தியா?’ என்ற தலைப்பில் கிழக்குப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழ் நூலை நான் முதலில் வாங்கியபோதும் அது ஆங்கில மொழிபெயர்ப்பு வாடை அடிக்க ஆரம்பித்ததால் ஆங்கில நூலை ஐபேட்டில் இறக்கி வாசித்தேன். இதை எழுதியிருப்பவர்கள் ராஜீவ் மல்கோத்திராவும், அரவிந்தன் நீலகண்டனும். ராஜீவ் மல்கோத்திரா ஓர் இந்திய அமெரிக்கர். அமெரிக்காவில் பென்சில்வேனியா மாநிலத்தில் பிரின்ஸ்டன் என்ற நகரில் அழகான வீட்டில் வசதியோடு வாழ்ந்து வருகிறார். அவர் பெரும் பணக்காரர். ‘இன்பினிடி’ என்ற பெயரில் ஒரு பவுன்டேஷனை அமைத்து அதன் மூலம் இந்திய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆய்வுகள் செய்து நூல்களை வெளியிட்டு வருகிறார்.

Breaking india 3dஇந்த நூலைப் பற்றி முதலில் கருத்துத் தெரிவிக்கலாமா, கூடாதா என்ற சிந்தனை எனக்கிருந்தது. கருத்துத் தெரிவிப்பதால் என்ன பயன் கிட்டும் என்று நான் சிந்திக்காமலில்லை. இதைப் பற்றி ஒன்றுமே சொல்லாமல் விட்டிருக்க முடியும். கிறிஸ்தவர்கள் என்ற முறையில் நாம் உலகம் தெரியாமல் இருந்துவிடக் கூடாது. இது நம்மைப் பற்றி எழுதப்பட்டிருக்கின்ற நூல், அதுவும் இந்துத்துவ கண்ணோட்டத்தில் ஒருவித காழ்ப்புணர்ச்சியோடு எழுதப்பட்டிருக்கின்ற நூல். அந்த வெறுப்புக்கும், கோபத்துக்கும், கிறிஸ்தவம் இவர்களுக்குப் பிடிக்காமல் போவதற்கும் என்ன காரணம் என்பதை நாம் தெரிந்துகொள்ளாமல் இருப்பது தவறு. நம்மில் தவறு இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளுவதும், நம்மைத் திருத்திக் கொள்ளுவதுந்தான் கிறிஸ்தவர்களுக்கு அழகு. அதனால்தான் உங்களுக்கும் பயன்படட்டும் என்று இதை எழுதவும், வெளியிடவும் தீர்மானித்தேன்.

நூலின் கண்டுபிடிப்பே நூலுக்குத் தலைப்பாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர்களுடைய கண்ணோட்டத்தில் இந்தியாவை உடைக்கும் முயற்சியில் சில சக்திகள் ஈடுபட்டிருக்கின்றனவாம். அப்படியான மூன்று சக்திகளை அவர்கள் நூலில் அடையாளப்படுத்துகிறார்கள். (1) பாகிஸ்தானை

அடிப்படையாகக் கொண்ட இஸ்லாமிய அடிப்படைவாதம், (2) சீன மாவோயிஸ்டுகள் நக்ஸலைட்டுகளாக இந்தியாவில் செய்து வருகின்ற யுத்தம், (3) மனித உரிமைக்குரல், கிறிஸ்தவ மதமாற்றம் என்ற போர்வையில் அமெரிக்காவும் அதைப்போன்றோரும் இந்தியாவில் முக்கியமாக தென்பகுதியில் ஆரிய, திராவிட இனப்பிரிவினை மூலம் செய்து வரும் செயல்கள். இதில் மூன்றாவதற்கே முக்கிய இடத்தைக் கொடுத்து நூல் ஆராய்கிறது.

இந்த நூலில் பத்தொன்பது அதிகாரங்களும், எழுபது பக்கங்களில் ஆய்வுக்குத் துணை செய்த ஆதாரக்குறிப்புகளும் உள்ளன. நூல் 760 பக்கங்களைக் கொண்டது. நூலாசிரியர்கள் ஐந்து வருடங்கள் ஆய்வு செய்து தங்களுடைய கண்டுபிடிப்புகளை நூலாக வெளியிட்டுள்ளனர். 2011ல் நூல் வெளியிடப்பட்டு இதுவரை மூன்று பதிப்புகள் போயிருக்கின்றனவாம். இது சாதாரண வாசகனுக்காக எழுதப்பட்ட நூலல்ல. இதை முக்கியமாக படித்தவர்கள், புத்திஜீவிகள், சிந்தனாவாதிகள், தொழிலதிபர்கள், மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதை நூலாசிரியர்கள் நோக்கமாகக் கொண்டிருப்பதை நூல் வெளியீட்டு விழாக்களிலேயே அறிவித்திருக்கிறார்கள்.

நூலாசிரியர்கள் முன்வைக்கின்ற கருத்தான, அமெரிக்கா இந்தியாவை உடைக்கும் முயற்சியில் மறைமுகமாக ஈடுபட்டு வருகின்றது என்பதை எத்தனையோ காரணங்களை வைத்து இவர்கள் நிலைநிறுத்தப் பார்த்தாலும் அதை நிரூபிக்கும் வகையில் ஆதாரங்கள் இல்லை. ஒரு ஊகத்தில் ஆரம்பித்து ஒன்றுக்கொன்று தொடர்புள்ளதுபோல் தோற்றமளிக்கும் சில விஷயங்களை ஒன்றிணைத்து அந்த ஊகத்தை நிலைநிறுத்தப் பார்க்கும்போது அது சரியானது போல கண்களுக்குத் தெரிவதில் ஆச்சரியமில்லை. அதை நம்புவதற்காகவும் அத்தகைய பார்வைகொண்ட அநேகர் இருப்பார்கள். அத்தகையவர்களுக்கு நூல் மகிழ்வைத் தரலாம். இதுவரையில் நூலுக்கு சார்பானவர்களும் எதிரானவர்களும் இருந்து வருகிறார்கள். கிறிஸ்தவர்களல்லாத எல்லோருமே நூலாசிரியர்களின் கருத்தைக் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளவில்லை. அதுவரை சிந்திக்கிறவர்கள் இருப்பது நல்ல செய்தி. நிச்சயம் நூல் பல விஷயங்களைப் பற்றிச் சிந்திக்கத் தூண்டுகிறது.

முக்கியமாக இந்நூல் இந்துத்துவாக்களுக்கு களிப்பூட்டும். அவர்களுடைய கொள்கைகளுக்கு ஒத்துப்போகும் விஷயங்களே நூலில் இருக்கின்றன. இந்த நூல் வெளியீட்டு விழாக்களில் அவர்களும், சுப்பிரமணிய சாமி, சோ போன்றோரும் தான் முக்கிய இடம்பெற்று உரை நிகழ்த்தி வருகிறார்கள். ஆரிய இனம், திராவிட இனமென்ற பிரிவுகள் இருப்பதான கருத்து இன்று நேற்றில்லாமல் இருந்துவருகிறது. இதை நூல் உடைக்கப்பார்க்கிறது. இந்தப் பிரிவினைகளை ஏற்படுத்தியவர்கள் கால்டுவெல், மாக்ஸ்முல்லர் போன்ற மேல் நாட்டவர் என்றும் திராவிட இனம் என்று ஒன்று இருக்கவில்லை என்றும் ஆசிரியர்கள் வாதிடுகிறார்கள்.

‘ஆரிய’ என்று இந்தியாவில் வித்தியாசமான கருத்தோடு பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு பதத்தை அதன் பொருளை மாற்றி ஒரினத்துக்குரியதாக அரசியல் நோக்கங்களுடன் மேற்கத்தியர்கள் மாற்றினார்களாம். அதுவும் இந்த மேற்கத்தியர்கள் அனைவரையும் கிறிஸ்தவர்களாக சித்தரித்து இவர்கள் இந்தியாவை கிறிஸ்துமயமாக்கப் பார்க்கிறார்கள் என்ற நூலாசிரியர்களின் முடிவுதான் பெருஞ்சிரிப்பூட்டுவதாகவும் அதேநேரம் இந்நூலுக்கு எதிர்வினையளிப்பதையும் தவிர்க்க முடியாததாக ஆக்குகிறது.

இந்த நூல் திராவிட இயக்கத்துக்கு கொஞ்சமும் பிடிக்காமல் போகும். இதை இந்துப் பிராமண ஆதிக்க வர்க்கத்தின் எண்ணப் பிரதிபலிப்பாகத்தான் அவர்கள் நிச்சயம் கருதுவார்கள். தென்னாட்டில் பிராமண ஆதிக்கத்தை மறுபடியும் உருவாக்க முயற்சிக்கும் சிலருடைய செயல்களில் ஒன்றாகவே இது கருதப்படும். அவர்கள் அப்படி நினைப்பதற்கு ஏதுவான அநேக விஷயங்கள் நூலில் இருக்கின்றன.

இந்நூலில் எழுப்பப்பட்டுள்ள இஸ்லாமிய தீவிரவாதம், மற்றும் மவோயிஸ்டு தாக்குதல்கள் பற்றியெல்லாம் கருத்துச் சொல்லி அரசியலில் நுழைய நான் விரும்பவில்லை. அதைவிட்டுவிட்டு கிறிஸ்தவம் சம்பந்தமான விஷயங்களுக்கு மட்டுமே எதிர்வினையளிக்க விரும்புகிறேன். ஒன்றை மட்டும் ஆரம்பத்திலேயே சொல்லிவிட வேண்டும். மெய்கிறிஸ்தவம் அரசியலிலெல்லாம் அநாவசிய அக்கறை காட்டாது. கிறிஸ்தவத்தோடு அரசியலை நுழைத்துக் கருத்துத் தெரிவித்திருப்பதே இந்நூலின் பெருந் தவறு. கிறிஸ்தவம் இந்தியாவை உடைக்க அமெரிக்காவை நாடி நிற்கிறது, மற்ற அமைப்புகளோடு சேர்ந்து இதற்காகப் பாடுபடுகிறது என்ற கண்மூடித்தனமான கருத்துக்களெல்லாம் கிறிஸ்தவத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகள். அவற்றிற்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணாக்கவும் நான் விரும்பவில்லை.

உண்மையில் இதுவரை கிறிஸ்தவத்தைப் பற்றிய இந்துக்களின் பார்வை எப்படிப்பட்டது என்று விளக்குகிற நூல்களை நான் வாசித்தது கிடையாது. அந்த வகையில் இது முதல் நூல். மல்கோத்திரா, நீலகண்டன் போன்றோரின் பார்வையில் எப்படி கிறிஸ்தவம் தெரிகிறது என்பதையும் அவர்கள் முன்வைக்கும் கருத்துக்களையும் அறிந்துகொள்ள நூல் உதவியது. அந்தக் கருத்துக்களில் அடிப்படையிலேயே உண்மையில்லாமலிருப்பதே நூலை நான் விமர்சித்து எழுதக் காரணம்.

‘அரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்பார்கள். நூலாசிரியர்கள் என்னதான் எழுதி தங்கள் கருத்துக்களை மற்றவர்களை நம்பவைக்க முயற்சி செய்தாலும் அப்படித்தான் எனக்குப் படுகிறது. சந்தர்ப்ப சூழ்நிலைகளை வைத்து உருவான ஊகத்தின் அடிப்படையில் நூலின் கண்டுபிடிப்புகள் இருக்கின்றன. இல்லாத ஒன்றை இருப்பதாக நம்பவைக்க இந்த நூல் முயற்சி செய்கிறது. இது கிறிஸ்தவர்களுக்கு அதிர்ச்சி தருகின்ற நூல். அது என் கருத்து. மற்றவர்களுக்கு அப்படி இல்லாமல் இருக்கலாம். கிறிஸ்தவன் என்ற அடிப்படையில் இதை வாசித்தபோது என்னுடைய மனதில் பலவிதமான உணர்வுகள் ஏற்பட்டன. அதிர்ச்சி, வருத்தம், கவலை, கோபம் என்று பலவித உணர்ச்சிகள் மாறி மாறி வராமலில்லை. அவற்றிற்கான காரணத்தை விளக்கத்தானே போகிறேன்.

எது கிறிஸ்தவம்?

நூலாசிரியர்களுக்கு முதலில் எது கிறிஸ்தவம் என்பது தெரியவில்லை. அது ஒரு பெரும் குறைபாடு என்றாலும் இந்துக்களான அவர்களுக்கு அது தெரிந்திருக்க வழியில்லை. கிறிஸ்தவத்தோடு தொடர்பில்லாத கத்தோலிக்க மதத்தையும், வேத அதிகாரத்துக்கு முழுக்குப் போட்டுவிட்டு தாராளவாதக் கோட்பாடுகளைப் (Liberalism) பின்பற்றும் பாரம்பரிய சபை அமைப்புகளான சி.எஸ்.ஐ, மெத்தடிஸ்டு, லூதரன் போன்றவற்றையும், அறவே கிறிஸ்தவ நம்பிக்கை இல்லாத திராவிட இயக்கத்தைச் சேர்ந்த தெய்வநாயகம், தேவகலா போன்றோரையும், பணத்தை மட்டும் குறியாகக்கொண்டு மதமாற்றத்தில் ஈடுபட்டு கிறிஸ்தவப் போர்வையில் இயங்கிவரும் நிறுவனங்களையும் ஒட்டுமொத்தமாக கிறிஸ்தவமாக அடையாளப்படுத்திக் கருத்துக்களைத் தெரிவித்திருப்பது வருத்தமளிக்கிறது. அது நூலின் ஆய்வைத் திசை திருப்பி ஆசிரியர்களின் கண்டுபிடிப்புகளைத் தவறான வெறும் ஊகங்களாக்கி விடுகிறது.

உதாரணத்திற்கு ஆசிரியர்கள் உலகின் இரண்டு மிக முக்கிய வரலாற்றுப்புகழ் பெற்ற கிறிஸ்தவ மிஷனரிகளை, அவர்களுடைய வாழ்க்கை, அர்ப்பணிப்போடு கூடிய அவர்களுடைய பணி ஆகியன பற்றி எதுவும் தெரியாமல் ‘இந்தியா கண்ட அருவருக்கத்தக்க (nastiest) மிஷனரிகளில் ஒருவர்’ என்று வில்லியம் கேரியையும், ‘வன்முறை மிஷனரி’ என்று தரங்கம்பாடி வந்த சீகன்பால்கையும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதன் தமிழ் மொழிபெயர்ப்பில் அரவிந்தன், கேரியை ‘மோசமான’ மிஷனரிகளில் ஒருவர் என்று மொழிபெயர்த்திருக்கிறார். Nastiest என்ற ஆங்கிலப் பதம் ‘மோசமான’ என்ற வார்த்தையைவிட ஆழமான கருத்துக்கொண்டது. ஏதாவது உணவுப் பதார்த்தத்தை சாப்பிட நினைத்து வாயில் போட்டு நினைத்ததுபோலில்லாமல் இருக்கும்போது உடனே துப்பிவிடத் தோன்றுமே அந்தக் கருத்துக்கொண்டது இந்த வார்த்தை. இந்த இரண்டு கடவுளின் ஊழியர்களையும் இந்தவிதத்தில் இழிவுபடுத்தி எழுதியிருக்கும் எந்த எழுத்தையும் இதுவரை நான் வாசித்ததில்லை. இதிலிருந்தே இந்துத்துவ நோக்க அடிப்படையில் கிறிஸ்தவ விரோதப்போக்கில் கிறிஸ்தவத்தைப் பற்றி சரியாக ஒன்றும் தெரியாமல் நூல் எழுதப்பட்டிருப்பது தெரிகிறது.

கருணையும், அன்பும், நேர்மையும், அர்ப்பணிப்பும், தியாகமும் கொண்ட வாழ்க்கை வாழ்ந்து, மனைவி, பிள்ளைகளை இழந்து பிராமணர்கள் முதல் அடிமட்ட இந்தியர்கள்வரை அவர்கள் நல்வாழ்வு வாழவேண்டும் என்ற எண்ணத்தோடு உழைத்தவர் கேரி. அந்தக்காலத்து பிராமணர்களுக்கு கேரி மீது பெரும் வெறுப்பு இருந்தது உண்மைதான். ஏன் தெரியுமா? இந்தியாவில் இன்றைக்கு தடைசெய்யப்பட்டுள்ள ‘உடன்கட்டை’ ஏறும் வழக்கத்தையும், சாதிவேறுபாட்டையும், சமுதாயக் கேடுகளையும் கேரி வைராக்கியத்தோடு எதிர்த்ததுதான். கேரி அவற்றை மனிதாபிமானத்துடன்தான் எதிர்த்தார். அவருக்கு பிராமணர்கள் மீது துவேஷம் இருக்கவில்லை. பிராமணரான, பின்பு கிறிஸ்துவை விசுவாசித்த கிருஷ்ணபால் கேரியின் நல்ல நண்பர். அநேக பிராமணர்கள் கேரிக்கு மொழிபெயர்ப்பு வேலையில் துணை செய்திருக்கிறார்கள். இதயமுள்ள, சிந்திக்கிற எந்த இந்தியன் இன்றைய நூற்றாண்டில் ‘உடன்கட்டை’ ஏறும் வழக்கத்துக்காக வக்காலத்து வாங்குவான்? மொழி இலக்கணமே இல்லாதிருந்த ஆறு இந்திய மொழிகளில் இலக்கண நூல்களை முதன் முதலாக எழுதி இந்திய மொழிகளுக்கு அரும்பணி ஆற்றிய கேரியை மதவிரோதப் போக்கோடும், அரசியல் கண்ணோட்டத்தோடும் பார்த்து அசிங்கப்படுத்தி எழுதியிருப்பது தகாது.

சீகன்பால்கு கேரிக்கு முன்பு இந்தியா வந்தவர். சாதாரண குடிசை வாழ் மக்கள் பேசும் தமிழைக்கற்று, அவர்கள் மத்தியில் வாழ்ந்து, உண்டு, உறங்கி அவர்களுடைய பேச்சு மொழியிலேயே வேதத்தை மொழிபெயர்த்து அவர்களுக்காக உழைத்தவர். சாதி வேறுபாடு காட்டியவராகவும், வன்முறையாளராகவும் அவரை வர்ணித்திருப்பது உண்மைக்கு மாறானது. அவருடைய சபையில் அன்று ஒருசிலர் பெஞ்சில் உட்கார்ந்திருப்பதையும், சிலர் நிலத்தில் உட்கார்ந்திருப்பதையும் கவனித்து சாதிவேறுபாடு கொண்டவராக சீகன்பால்கைக் காட்டியிருப்பது முழுத்தவறு. பெஞ்சில் உட்கார்ந்து பழக்கமில்லாத குடிசை வாழ் மக்கள் நிலத்தில் முழங்கால்களை மடக்கி உட்கார்ந்தால்தான் எங்களுக்கு உட்கார்ந்ததுபோல் இருக்கும் என்றால் அவர்களைக் கட்டித் தூக்கியா பெஞ்சில் உட்கார வைக்க முடியும்? சீகன்பால்க் இந்தவிஷயத்தில் நடைமுறைக்குத் தகுந்தவாறு நடந்திருக்கக் கூடும். நிச்சயமாக அவர் சாதிவேறுபாடு காட்டியவரல்ல.

ஜி.யு. போப்பும் சாதிவேறுபாடு காட்டியவரல்ல. அவர் தரங்கம்பாடியிலிருந்த லூத்தரன் மிஷனரிகளுக்கு எழுதிய நீண்ட ஆங்கிலக் கடிதத்தை இணையத்தில் வாசிக்கலாம். அதில் அவர் சாதிவேறுபாடு காட்டுவதை எந்தளவுக்கு வெறுத்தார் என்பதையும், அப்படி சாதிவேறுபாடு காட்டுபவர்களுக்கு சபையில் திருவிருந்து தருவதையும் நிறுத்திவிடுவதோடு, சபைக் கட்டுப்பாடும் கொண்டுவரும் விதத்தில் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருந்தவர் என்பதையும் அறிந்துகொள்ளுகிறோம். அதன் காரணமாக அவருக்கு எதிர்ப்பு ஏற்பட்டது உண்மைதான். தன் சபையில் மெய்க்கிறிஸ்தவர்கள் மட்டும் இருக்கும்படியாகப் பார்த்துக் கொள்ளுவதற்கு அவர் எடுத்த நடவடிக்கை சரிதான். உண்மைக் கிறிஸ்தவர்கள் சாதிவேறுபாடு காட்டமாட்டார்கள். சாதியத்தை நம்புகிறவன் கிறிஸ்தவனாகவே இருக்க முடியாது. அந்த வியாதியில் இருந்துதான் இயேசு நமக்கு பூரண விடுதலை தந்துவிட்டாரே. ஜி.யு. போப்பை உண்மைக்கு மாறாக மோசமானவராக நூலாசிரியர்கள் சித்தரித்திருப்பது தவறு.

அத்தோடு பதினாறாம் நூற்றாண்டின் தலைசிறந்த சீர்திருத்தவாதியான மார்டின் லூத்தரையும் நூலாசிரியர்கள் விட்டுவைக்கவில்லை. அவர் யூதர்களை அடியோடு வெறுத்தார் என்று யாரோ சொன்னதை வைத்து இனத்துவேஷம் கொண்டவர் போல் அவரைக் குறைகூறி எழுதியிருக்கின்றனர். ஒரு பெரும் கிறிஸ்தவ தலைவரை இனவேறுபாடு காட்டியவர் என்று அவதூறாக எழுதுவது நியாயமானதல்ல. லூத்தரைப் பற்றி இந்த நூலாசிரியர்களுக்கு என்ன தெரியும்?

இந்துக்கள் பார்வையில் கிறிஸ்தவம் என்ற பெயர் கொண்டதெல்லாம் கிறிஸ்தவமாகத்தான் படும். அது எனக்குப் புரிகிறது. இருந்தாலும் நூலாசிரியர்கள் கிறிஸ்தவம் அதுவல்ல என்பதைத் தெரிந்துகொள்வது நல்லது. இதை நமக்காகவுந்தான் சொல்லுகிறேன். கத்தோலிக்க மதத்துக்கும் கிறிஸ்தவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்தியாவில் கத்தோலிக்கர்கள் தங்களைக் கிறிஸ்தவர்களாக அழைத்துக்கொள்கிறார்கள். ஆனால் அது முழுத் தவறு. கிறிஸ்தவ வேதத்தை அவர்கள் நம்பிப் பின்பற்றுவதில்லை. பிராமணர்களைப்போல உடைதரித்து, பூணூல் அணிந்து வாழ்ந்து மதுரையில் மதமாற்றத்தில் ஈடுபட்ட டீ நொபிளி ஒரு முழுக் கத்தோலிக்கர். அவருக்கும் கிறிஸ்தவத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை. கத்தோலிக்க மதம் கிறிஸ்தவ வேதத்தையும் அதன் போதனைகளையும் நிராகரிக்கும் ஒரு மதம் மட்டுமே. அது வழிபட்டு வரும் மேரியைக் கிறிஸ்தவம் தெய்வீகம் கொண்ட கடவுளாகப் பார்க்கவில்லை. கத்தோலிக்க மதத்திற்கும் கிறிஸ்தவத்திற்கும் அடிப்படையிலேயே இணைய முடியாத வேறுபாடு இருக்கிறது.

ஒரு மெய்க்கிறிஸ்தவ மிஷனரி டீ நொபிளி செய்ததைத் தன் வாழ்நாளில் செய்யமாட்டார். கிறிஸ்தவர்களான கேரியும் அவருக்கு முன்பு வந்த சீகன்பால்குவும், கேரிக்குப் பின்வந்தவருமான ஹென்றி மார்டினும் டீ நொபிளியின் மதமாற்ற முறைகளை ஒருபோதும் பின்பற்றவில்லை. கிறிஸ்தவத்திற்கு இந்தப் போலிச்செய்கைகளிலெல்லாம் நம்பிக்கையில்லை. அது கிறிஸ்துவின் அன்பையும் அவர் மட்டுமே தரக்கூடிய இலவசமான நித்திய வாழ்க்கையையும் கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு அறிவிப்பதை மட்டுமே கடமையாகக் கொண்டிருக்கிறது. இந்நூலில் கத்தோலிக்கர்கள் செய்துவரும் கண்கூடான மதமாற்ற முயற்சிகள், அவர்களுடைய அநாதை இல்லங்களில் நடைபெற்று வருகின்ற தற்கொலைகள், பிஷப்புக்களின் கேவலமான செயல்களுக்கெல்லாம் நான் விளக்கமளிக்க வேண்டிய அவசியமில்லை. கத்தோலிக்க மதத்திற்கும் கிறிஸ்தவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லாதபோது நூலாசிரியர்கள் அதைக் கிறிஸ்தவமாகக் கருதி எழுதி கிறிஸ்தவத்தைக் குறைகூறியிருப்பது முழுத் தவறு.

தாராளவாத கோட்பாடுகளைப் பின்பற்றும் World Council of Churches, அரசரடி இறையியல் கல்லூரி, லூதரன் குருக்குல் அமைப்பு போன்றவை கிறிஸ்தவ வேதத்தின் அதிகாரத்தை எப்போதோ நிராகரித்து லிபரலிசம், ஹியூமனிசம், புளூரலிசம் போன்ற கோட்பாடுகளை நம்ப ஆரம்பித்து அவற்றின் வழியில் போய்க்கொண்டிருப்பதால் அத்தகைய அமைப்புகளையும் மெய்க்கிறிஸ்தவ அமைப்புகளாகக் கருத முடியாது. இயற்கையைத் தாயாக வணங்கி மரத்தையும், செடியையும் கட்டி அழுதுகொண்டிருப்பது மெய்க்கிறிஸ்தவமல்ல. அத்தோடு ‘தலித் கிறிஸ்தவம்’ என்று பிரித்து அவர்களுக்கென ஒரு கிறிஸ்தவத்தை உருவாக்குவதும் கிறிஸ்தவ வேதபோதனைகளுக்கு அடிப்படையிலேயே முரணானது. இன அடிப்படையில் கிறிஸ்தவர்களைப் பிரித்து எந்த இனத்துக்கும் சலுகை காட்டுவதை கிறிஸ்தவ வேதம் அனுமதிக்கவில்லை. கிறிஸ்தவம் இனங்களை ஒன்று சேர்ப்பது; எல்லா இனத்தையும் ஓரினமாகப் பார்ப்பது. கிறிஸ்தவப் போர்வையில் இருக்கும் ஓநாய்களான சில கிறிஸ்தவப் பிரிவுகளும், அமைப்புகளும் சாதி அடிப்படையில் தமிழகத்தில் சபை அமைத்து வந்திருக்கின்றன. அது நமக்குத் தெரியும். அவைகளுக்கும் கிறிஸ்தவத்திற்கும் எந்த உறவும் இல்லை என்பதை அவர்களுடைய செயல்களே காட்டுகின்றன என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. குருக்குல் லூதரன் அமைப்பு தலித் அரசியல் தலைவரான திருமாவளவனுக்கு இறையியல் முனைவர் (டாக்டர்) கௌரவப்பட்டம் கொடுத்திருப்பதில் இருந்தே அவர்களுடைய ‘கிறிஸ்தவம்’ எத்தகைய கிறிஸ்தவம் என்பதை இனங்காட்டி விடுகிறார்கள். இதையெல்லாம் அறிந்திராத நூலாசிரியர்கள் கிறிஸ்தவம் என்ற பெயரில் இருக்கும் அத்தனை அமைப்புகளையும் இணைத்துக் கிறிஸ்தவமாகப் பார்த்துக் கருத்துத் தெரிவிப்பது என்னைப் போன்ற வேத நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு உடன்பாடில்லாதது மட்டுமல்ல; வருத்தத்தையும் தருகிறது. இந்துக்களான இவர்கள் இப்படி நினைப்பதற்கு கிறிஸ்தவ போலிவேடதாரிகள் இடமேற்படுத்தி விடுகிறார்கள்.

திராவிட கிறிஸ்தவம்

தெய்வநாயகத்துக்கும், அவரது மகள் தேவகலாவுக்கும் நூலில் அதிகமாக இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் இருவரும் தமிழகத்து பாரம்பரிய சி.எஸ்.ஐ திருச்சபையை ஆரம்பத்தில் சேர்ந்திருந்தவர்கள். அந்தத் திருச்சபை வேத நம்பிக்கைகளைத் துறந்துவிட்டு தாராளவாத கோட்பாடுகளைப் பின்பற்றுகிற அமைப்பாக என்றோ மாறிவிட்டது. தெய்வநாயகத்துக்கு கிறிஸ்தவத்தில் பெரிய ஈடுபாடு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. சீ.எஸ்.ஐயோடு தன்னை தொடர்புபடுத்தி அவர் எந்தக் கிறிஸ்தவ பணியிலும் ஈடுபட்டிருக்கவில்லை. நூலில் தெய்வநாயகம் ‘தீவிர கிறிஸ்தவராக’ சித்தரிக்கப்பட்டிருப்பதே சிரிப்புக்கிடமானது. அவர் கிறிஸ்தவ வேத விளக்கங்கொடுத்தோ, கிறிஸ்துவை மகிமைப்படுத்தியோ எதையும் எழுதவில்லை. அவரை நூலாசிரியர்கள் ஓர் இவெஞ்சலிஸ்டாக வர்ணித்திருப்பதில் இருந்தே நூலாசிரியர்களுக்கு அவரைப்பற்றியோ இவெஞ்சலிக்கள் கிறிஸ்தவத்தைப் பற்றியோ எதுவும் தெரியவில்லை என்றுதான் அர்த்தம். இருந்தபோதும் நூலாசிரியர்கள் வெளிப்படுத்தியிருப்பதுபோல் தெய்வநாயகமும் அவருடைய மகளும் சமூக, அரசியல் காரணங்களுக்காக இந்து மதத்தை வெறுத்து அதிலிருந்து திராவிட இனத்தைப் பிரித்து, திராவிட மக்கள் ஆரிய இந்துக் கலப்பில்லாத தமிழ் மதமொன்றை பின்பற்றித் தென்னிந்தியாவில் வாழ்ந்திருந்தார்கள் என்ற கருத்தை முன்வைக்கிறார்கள். இதை அவர்கள் முதன் முதலாக கண்டுபிடிக்கவில்லை. இதுபோல் வேறுபலரும் இவர்களுக்கு முன்பே கருத்துத் தெரிவித்திருந்தாலும் தெய்வநாயகமும், அவருடைய மகளுமே இதை அமெரிக்காவரை கொண்டுபோய் பிரபலப்படுத்தினார்கள். இந்த ‘திராவிட தமிழ் சமயக்’ கட்டுக்கதையில் கிறிஸ்தவத்தை நுழைத்ததுதான் தெய்வநாயகத்தின் பெருந்தவறு. தன்னுடைய திராவிடத் தமிழ் சமயப் பிரச்சாரத்தைத் தூக்கி நிறுத்த இவர் கிறிஸ்தவத்தைத் தூணாகப் பயன்படுத்திக்கொள்கிறார் என்பதுதான் உண்மை.

இந்தத் திராவிட தமிழ் சமயக் கோட்பாட்டிற்கு தெய்வநாயகத்துக்கு துணைபோகிற ஒரே விஷயம் அப்போஸ்தலன் தோமா மேற்கிந்திய கரையோரத்திற்கு வந்திருந்தார் என்ற வெறும் ஐதீகம் மட்டுமே. இந்த வரலாற்றால் நிரூபிக்கப்படாத, நம்பக்கூடிய எந்த ஆதாரமும் இல்லாத, வாய்வழிவந்த ‘கர்ணபரம்பரைக்’ கட்டுக்கதையை வைத்தே திராவிட தமிழ் சமயம், திராவிட கிறிஸ்தவம் என்பதெல்லாம் உருவாக்கப்பட்டது. இந்தக் கதையை ஆரம்பித்து வைத்தவர்கள் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்களே. இந்தியாவில் மேற்குக் கீழ்க்கரைப் பகுதியில் ஆரம்பித்த ‘சீரியக் கிறிஸ்தவம்’ கத்தோலிக்க மதக் கோட்பாட்டையும், சிலை வணக்கத்தையும் பின்பற்றிய ஒரு மதம். அவர்களை அடிப்படையாக வைத்தே தோமா கட்டுக்கதை ஆரம்பித்தது. இதுபற்றி எழுதும் வரலாற்றாசிரியரான ஸ்டீபன் நீல், ‘பதினெட்டாம் நூற்றாண்டில் எழுந்த இந்த தோமா கதை இருண்ட, குழப்பமான, அநேக விஷயங்களில் அறிவுக்குப் புறம்பானதுமான ஒன்று’ என்று குறிப்பிட்டிருக்கிறார். ஸ்டீபன் நீல் பிஷப் பிரவுனின் கருத்தையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. ‘ஜெக்கொபைட் சபையிடம் எந்த ஆதாரக்குறிப்பும் காணப்படாததால் ஒன்றுக்கொன்று முரணான தோமா கதைகளை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவதும் இலகுவானதல்ல’ என்று பிரவுன் குறிப்பிட்டிருக்கிறார்.

கர்ணபரம்பரைக் கதைகளை & விக்கிரமாதித்தன் கதைகளைப்போல ஆராயாமல் அப்படியே நம்பிவிடுவது நம்மினத்தில் காலாகாலமாக இருந்துவரும் வழக்கமாதலால் தோமா கதையும் நிலைத்து நின்றுவிட்டது. இது தெய்வநாயகத்துக்கு உள்ளுக்குள் தெரியாமலிருந்திருக்காது. மேலை நாட்டவர்கள் எந்தளவுக்கு கீழைத்தேய மாயவலைகளுக்குள் சிந்தனையின்றி விழுந்துவிடுகிறார்கள் என்பதையே வேர்ல்ட் மெகசின் ஆசிரியர் மேர்வின் ஒலாஸ்கி தெய்வநாயகத்தின் கோட்பாட்டிற்கு ஆதரவளித்து அதை பத்திரிகையில் வெளியிட்டது சுட்டிக்காட்டுகிறது. தெய்வநாயகத்தின் ‘திராவிட கிறிஸ்தவம்’ கிறிஸ்தவத்தை இந்தியாவில் வளர்க்கவோ, மக்களை மதம் மாற்றவோ உருவாக்கப்படவில்லை. அதன் அடிப்படை நோக்கமே வேறு. பார்ப்பனியத்தையும், ஆரிய இந்து செல்வாக்கையும் தமிழகத்தில் கால் பதியாமல் இருக்கச் செய்வதற்காக திராவிட இயக்கங்களுக்கு உதவும் ஒரு பிரசார ஆயுதம் மட்டுமே அது. திராவிட இயக்கத்தைச் சேர்ந்த தெய்வநாயகம் இதைச் செய்ததில் ஆச்சரியமில்லை. கிறிஸ்துவின் எந்த அப்போஸ்தலனும் வேதத்தைத் திரித்து ஒரு நாட்டுக்கும், இனத்துக்கும், கலாச்சாரத்துக்கும் ஏற்றவகையில் அந்தந்த பிரதேசத்திற்கேற்ற கிறிஸ்தவத்தை (தமிழ் சமயம்) உருவாக்க மாட்டான். இப்படிச் செய்தவராக தோமாவை சித்தரிப்பது அவரை இழிவுபடுத்தும் செயல்.

கிறிஸ்தவ வேதத்திலும், அதன் அதிகாரத்திலும் நம்பிக்கை வைத்திருக்கும் எவரும் தெய்வநாயகத்தின் வலைக்குள் விழுந்துவிட மாட்டார்கள். இதெல்லாம் தெரியாமல் ராஜிவ் மல்கோத்திராவும், அரவிந்தன் நீலகண்டனும் அமெரிக்காவும், கிறிஸ்தவர்களும் இணைந்து இந்தியாவைப் பிரிப்பதற்காக செய்யும் சதியே இது என்று எழுதியிருப்பது முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சுப் போடுகிற செயலாகும். மெய்க்கிறிஸ்தவ சபைகள் எதுவுமே இந்தத் தோமா கட்டுக்கதையையும், திராவிட கிறிஸ்தவத்தையும் ஏற்றுக்கொள்ளாது.

இதைப்போலத்தான் இந்துமதக் கலப்புள்ள ‘சதிர்’ என்ற பெயருடன் தேவதாசிகளிடம் இருந்து ஆரம்பித்த தென்னிந்திய பரத நாட்டியம் போன்ற கலைகளைக் கிறிஸ்தவ மயப்படுத்தி கிறிஸ்தவ விளக்கங்கொடுக்கின்ற அநியாயங்களும். நூலில் அடையாளங் காட்டப்பட்டுள்ள பரத நாட்டியத்தைக் கிறிஸ்தவ மயமாக்கும் பாதிரியார் பர்போஸா கத்தோலிக்கர். பிரபல நர்த்தகரான சாஜு ஜார்ஜும் கத்தோலிக்கர். இவர் பாதிரியாராக இருக்கும் இயேசு சபை ஒரு கத்தோலிக்க மதப்பிரிவு. அது நடத்துவதுதான் கலைக்காவேரி கலைக்கல்லூரி. கிறிஸ்துவை அறியாத, இந்துவான கண்ணதாசன் எழுதிய ‘இயேசு காவியத்தை’ கலைக்கல்லூரி பதிப்பகம் எல்லோரும் வாசிக்கும்படி வெளியிட்டிருக்கிறது. மெய்க்கிறிஸ்தவர்கள் கிட்டேயும் போகமாட்டார்கள் கண்ணதாசனின் இயேசு காவியத்திடம். அவர்களுக்குத் தெரியும் கண்ணதாசன் உண்மையில் யாரென்று. கிறிஸ்தவ வேதத்தைத் தெளிவாகப் படித்து ஆராய்ந்து பார்க்கிறவர்களுக்கு இந்தப் பாவகரமான செயல்களையெல்லாம் வேதம் அருவருப்போடு வெறுக்கிறது என்பது தெரியவரும். இந்தப் போக்கெல்லாம் கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரையில் பிசாசின் சித்துவேலைகளில் ஒன்று மட்டுமே. இவர்களுக்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையில் இருக்கும் வித்தியாசங்களையே ஆராய்ந்தறியாமல் சகட்டுமேனிக்கு ஆட்களையும், நிறுவனங்களையும் பெயர் குறிப்பிட்டு கிறிஸ்தவத்திற்கு இழுக்கு ஏற்படுத்துகிறது இந்நூல்.

இதேபோல சாது செல்லப்பாவும் அவருடைய ‘அக்னி மினிஸ்டிரிஸும்’, ‘பிரஜாபதி பிராமணர்கள்’ என்ற குழுவினரும் தமிழகத்தில் இயங்கி வருகிறார்கள். ‘பிரஜாபதி பிராமணர்கள்’ என்ற பெயரே இது மெய்க்கிறிஸ்தவத்தோடு தொடர்பில்லாதது என்பதை அப்பட்டமாகத் தெரிவிக்கிறது. இவர்களுடைய போதனையும் நோக்கமும் தெய்வநாயகத்தைவிட வேறுபட்டவை. தெய்வநாயகம் சமூக, அரசியல் காரணங்களுக்காக திராவிட இனப் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டு அந்த இனத்தை மற்ற இனங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டி அதை நிலைநாட்ட கிறிஸ்தவத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்த, இவர்கள் இந்து வேதங்களில் காணப்படும் ‘பிரஜாபதி’ இயேசுதான் என்று கூறி இயேசுவை இந்துக்கள் கிறிஸ்தவ வேதத்தை படிக்கவேண்டிய அவசியமில்லாமல் இந்துவேதங்களில் இருந்தும், பகவத்கீதையைப் படித்தும் கண்டுகொள்ளலாம் என்று விளக்கி தீவிர மதமாற்றத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதுவும் மெய்க்கிறிஸ்தவத்தை அடிப்படையிலேயே அவமதிக்கும் வேதவிரோதப் போக்கே. இந்திய வேதங்களில் இயேசுவைக் கண்டுகொள்ளலாம் என்பது சத்திய வேதத்தை நிராகரிப்பதற்கு சமமானது. அவற்றின் மூலம் இயேசுவைக் கண்டுகொள்ளலாம் என்றால் சத்திய வேதமும் அவையும் சம அதிகாரமுள்ளவை என்றாகிவிடும். சுயலாப நோக்கங்களுக்காக தீவிர மதமாற்ற முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு சத்தியத்திலெல்லாம் அக்கறை இருக்காது.

இந்து சாமியார்களைப்போல உடைதரிப்பதும், பூணூல் அணிவது போன்றவையெல்லாம் ஏற்கனவே கத்தோலிக்கரான டீ நொபிளி செய்திருந்ததுதான். அம்மதமாற்ற முறைகளுக்கு மறுபடியும் உயிர்கொடுத்து கிறிஸ்தவ வேதத்தையும் அதன் அடிப்படைப் போதனைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டுவிட்டு இந்து வேதங்களிலும், சைவ சிந்தாந்த நூல்கள், திருக்குறள் போன்றவற்றில் இருந்தெல்லாம் தேடித்தேடி கிறிஸ்தவ விளக்கத்தை இவர்கள் கொடுத்து வருகிறார்கள் சாது செல்லப்பா போன்றவர்கள். அதையெல்லாம் தவறு என்று எதிர்வினை செய்ய அவற்றை எழுதிய நாயன்மார்களும், வள்ளுவரும் இன்று உயிரோடில்லை. இதெல்லாம் அடிப்படைக் கிறிஸ்தவ நம்பிக்கைகளுக்கும், போதனைகளுக்கும் எதிரானவை என்ற கவலையே இவர்களுக்கு இல்லை. இந்துக்களுக்கு இவர்கள் காட்டிவரும் ‘இயேசு’ கிறிஸ்தவ வேதம் அறியாத, கிறிஸ்தவ வேதத்தில் பார்க்க முடியாத ஓர் இயேசு. இந்தப் பிரச்சாரங்களும் நடவடிக்கைகளும்கூட பிசாசின் சித்துவேலைகளில் ஒன்றுதான். கர்ஜிக்கும் சிங்கம் போல் உலவிவருகின்ற பிசாசு கிறிஸ்தவத்தை மாசுபடுத்தி, இயேசுவின் பெயருக்கு களங்கத்தை உண்டாக்க எந்த நடவடிக்கையையும் எடுக்கத் தயங்க மாட்டான் என்பதை இவர்களுடைய செயல்கள் உணர்த்துகின்றன. ராஜீவ் மல்கோத்திரா, அரவிந்தன் நீலகண்டன் போன்றவர்களை கிறிஸ்தவத்தின் பெயரில் இந்த மனிதர்கள் செய்து வருவது கொதிப்படையச் செய்வதில் ஆச்சரியமில்லை. அந்தக் கொதிப்பின் விளைவாகவே இந்த நூலை அவர்கள் எழுதியிருக்கிறார்கள் என்பதும் எனக்குப் புரிகின்றது.

சாதியம்

நாசுக்காக சுற்றிவளைத்து சாதியை நூலாசிரியர்கள் நியாயப்படுத்துவதை நூல் முழுவதிலும் காணாமல் இருக்க முடியாது. இந்தியன் என்றால் இந்து, இந்து என்றால் அதோடிணைந்துள்ளதெல்லாம் சேர்ந்தே இருக்கும் என்பது அவர்களுடைய விளக்கம். இந்தியாவில் ஒருவர் கிறிஸ்தவராக இருந்தால் இந்தியனாக இருப்பதற்கு இவர்களைப் பொறுத்தவரையில் எதெல்லாம் அவசியமோ அதெல்லாம் இருக்க வேண்டுமாம். இதை சுப்பிரமணிய சுவாமியே இந்த நூல் வெளியீட்டில் சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்து சமுதாயத்தைச் சேர்ந்த உடன்கட்டை ஏறுதல், சாதியம், வரதட்சணைக் கொடுமை, அக்கிரகாரத்துக்குள் தீண்டத்தகாதவன் நுழைந்தால் அது தீட்டு, அவனுடைய நிழல் பட்டாலே தீட்டு என்பதெல்லாம் இவர்களைப் பொறுத்தவரையில் அருமையான இந்தியப் ‘பண்பாடு’. இவற்றை சுட்டிக்காட்டித் தவறு என்று மேல்நாட்டவர்கள் சொன்னால் இந்தியப் ‘பண்பாட்டை’ அவர்கள் இழிவுபடுத்துகிறார்களாம். யாருக்கு இவர்கள் காதுகுத்துகிறார்கள் என்று தெரியவில்லை.

‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்றும்,
‘ஜாதி மதங்களைப் பாரோம் – உயர்
ஜன்மம் இத்தேசத்தில் எய்தின ராயின்
வேதியராயினும் ஒன்றே – அன்றி
வேறுகுலத்தினராயினும் ஒன்றே’
‘ஈனப் பறையர்களெனும் – அவர்
எம்முடன் வாழ்ந்திங்கிருப்பவர் அன்றோ?’ என்றும்,
‘பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே’ என்றும்,
‘சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே
தமிழ் மகள் சொல்லிய சொல் அமிழ்தமென்போம்;’ என்றும்

சாதியை இகழ்ந்து வெறுத்து அதற்கெதிராக அதிகமாகப் பாடியது மேல்நாட்டானா, இந்தியாவில் பிறந்து வாழ்ந்த தமிழ் பார்ப்பனரான பாரதியா? மேல்நாட்டான் நம்மைப் பண்பாடில்லாதவர்கள் என்று சொல்லுகிறான் என்று கூப்பாடு போடும் நூலாசிரியர்கள் நம் பண்பாட்டை இழிவுபடுத்தி நம்மைத் தலைகுனியவைக்கும் வகையில் பாரதி பாடியிருப்பதை வாசித்துப் பார்க்க வேண்டும்

‘சாத்திரங்கள் ஒன்றும் காணார் – பொய்ச்
சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே
கோத்திரம் ஒன்றாயிருந்தாலும் – ஒரு
கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத் திகழ்வார்;
தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் – தமைச்
சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவார்
ஆத்திரங் கொண்டே இவன் சைவன் – இவன்
அரிபக்தன் என்று பெருஞ் சண்டையிடுவார்
நெஞ்சு பொறுக்கு திலையே – இந்த
நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்’

என்று பாடினார் பாரதி. நம் நாட்டான் நம்மை இகழந்தால் பரவாயில்லை, நம் பக்கம் தவறிருந்தாலும் அதை மேல்நாட்டான் சுட்டிக்காட்டக்கூடாது என்று மேல்நாட்டு பிரின்ஸ்டன் நகரில் சொகுசாக வாழ்ந்துகொண்டு மல்கோத்திரா எழுதுகிறார்.

‘மண்ணில் தாழ்ந்தவர் என்றொரு சாதியுரைப்பவன் தீயன்’ என்கிறார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். வள்ளலார் ராமலிங்க அடிகளும் வருணங்களும், சாதிகளும் இல்லாத சமுதாயத்தையே கனவாகக் கொண்டிருந்தார். வள்ளுவரின் திருக்குறள், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதன் மூலம் எல்லோரும் பிறப்பில் சமமான நிலையிலேயே பிறந்திருக்கிறார்கள் என்கிறது. உண்மையில் நாயன்மார்கள்கூட சாதி வேற்றுமை பார்ப்பதை இகழ்ந்திருக்கிறார்கள். ‘சாத்திரம் பல பேசும் சழுக்கர்காள், கோத்திரமும் குலமும் கொண்டென் செய்வீர்’ என்று கேட்கிறார் திருநாவுக்கரசர். மாணிக்கவாசகருடைய திருவாசகமும் சாதியைச் சாடுகிறது. சாதியத்தால் உருவாகும் கொடுமைகளை இவர்கள் தங்கள் காலத்திலேயே கண்டு வெறுத்திருக்கிறார்கள். இதையே மேல்நாட்டார் சொன்னால் அவர்கள் நம் பண்பாட்டை ‘ஹீதனிசம்’ என்று அழைத்து அசிங்கப்படுத்துகிறார்களாம்; நம்மவர்கள் சொன்னால் அது சமுதாய சீர்திருத்தமோ? கௌதம புத்தர் இந்து மதத்தைவிட்டு விலகி புத்த தர்மத்தை உருவாக்க காரணமென்ன? இந்துசமுதாய மதப் பண்பாடுகளை அவர் வெறுத்துதான். அவை சாதியையும், வறுமையையும் இல்லாமலாக்கவில்லை என்றுதான் அவர் விலகியோடினார். சீக்கிய மதம் உருவாக என்ன காரணம்? இந்து சமுதாய சாதி அமைப்புத்தானே! அம்பேத்கார்கூட சாதிமுறையை ஏற்றுக்கொள்ளவில்லை.

சாதியை இந்தியனின் சுய அடையாளமாக, சமுதாய அடையாளமாக இருக்கவைக்க முயல்கிறது இந்துத்துவப் பார்வை. சாதியை அவசியமானதொன்றாகப் பார்க்கிறவரை இந்துப் பண்பாட்டு அவலங்களில் இருந்து ஓர் இந்தியனால் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முடியாது. சாதி இருக்கும்வரை சாதி வேறுபாட்டின் அடிப்படையில் இந்திய சமூகம் நடைபோடுவதும், சாதிச் சண்டைகள் பெருகுவதும், இனங்கள் தாழ்த்தப்படுவதும் தொடரும். திராவிட அமைப்பால் சாதியை இல்லாமல் ஆக்க முடியவில்லை. தாழ்ந்த சாதியை அரசியலாலும், பொருளாதாரத்தாலும் உயர்த்த மட்டுமே அவர்களால் முடிந்தது. இந்து மதம் சாதியை அடிப்படை சமூக அடையாளமாகப் பார்க்கிறது. சாதி இல்லாத இந்திய சமூகம் தேவை. இது மேல்நாட்டுத் தத்துவமல்ல. நம்மிலக்கியங்களை எழுதியிருப்பவர்கள் கண்ட கனவு. சாதி அடையாளம் இல்லாத இந்தியன் உருவாகிறபோதுதான் உண்மையான மத சுதந்திரத்துக்கும், தனிமனித உரிமைக்கும் வழியேற்படுகிறது. இந்தியப் பண்பாடு என்ற பெயரில் வருணாச்சிரம மனுநீதி தர்மத்திற்கு

வக்காலத்து வாங்குகிறார்கள் நூலாசிரியர்கள். இந்த 21ம் நூற்றாண்டில் வாழ்கின்ற மானமுள்ள எந்த இந்தியனும் எதிர்வினையில்லாமல் இவர்களுடைய கருத்தை ஏற்றுக்கொள்ளுவான் என்று நினைப்பது நிச்சயம் தவறு.

தலித்தியம்

தலித் என்ற பிரிவு இருப்பதே தவறு என்கிறார்கள் நூலாசிரியர்கள். இதற்காக அது இருக்கவேண்டும் என்று நான் சொல்லவரவில்லை. தலித்துக்கள் தங்களுடைய உரிமைகளுக்காகக் குரல்கொடுப்பது இவர்களுக்குப் பிடிக்கவில்லை. ‘மைனாரிட்டீஸ்’ என்று எவரையும் பிரிப்பதும் அவர்களுக்கு சலுகைகள் அளிப்பதும் தவறு என்கிறார் நூலாசிரியர்களுக்கு ஒத்து ஊதும் மல்கோத்திராவின் நண்பரான சுப்பிரமணிய சுவாமி. தலித்துக்களை உருவாக்கிவிட்டது யார்? கீழ்சாதியைச் சேர்ந்தவன் நிழல் பட்டாலே பிராமணனுக்கு தீட்டுப் பட்டுவிடும் என்றும், அக்கிரஹாரத்து தெருவில் கீழ்ச்சாதியினர் நடக்கக்கூடாதென்றும், அவர்கள் பானம் அருந்தும் குவளையைத் தொட்டாலே தீட்டாகிவிடும் என்றும் சொல்லி அவர்களுக்கு ‘தீண்டத்தகாதவர்கள்’ என்று பெயர்கொடுத்தது மேல்நாட்டு வெள்ளையனா? தீண்டத்தகாதவர்கள் கோவிலுக்குள் நுழையக்கூடாது, கடவுளுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை என்றெல்லாம் அவர்களை சமுதாயத்தில் இழிவானவர்களாகப் பார்த்து விலக்கி வைத்தது மேல்நாட்டானா?

இன்றைக்கும் என் கண்முன்னால் நிற்கிறது ஒரு சிறுவயது சம்பவம். கோவில் பூசாரியான பிராமணன் வீட்டுக்கு வெளியில் என் தந்தையோடு சிறுவனாக நான் நின்றுகொண்டிருக்கிறேன். உயர் சாதியினரான என் தந்தையை எங்கள் குலக்கோயிலிலேயே இருக்கும் வீட்டுக்குள் அனுமதிக்காமல் வெளியில் நிற்க வைத்துப் பேசி குவளைத் தண்ணீரைக் கையில் படாமலேயே சுவற்றில் வைத்து அவருக்குக் குடிக்கக் கொடுத்த அந்த நிகழ்ச்சி இன்றும் கண்முன் நிற்கிறது. அந்தப் பிராமணனுக்கு படியளந்ததே என் தந்தையும் என் குலத்தாருந்தான். இதெல்லாம் நியாயமாகப் படுகிறதா? இதுவா வேண்டும் ‘ஒளிரும் இந்தியாவுக்கு’?

தேவதாசி வழக்கத்தை இந்து சமுதாயத்தில் உருவாக்கிவிட்டது மேல்நாட்டானா? பெண்வர்க்கத்தையே இழிவுபடுத்தும் அந்த அவலட்சனமான, அசிங்கமான முறைக்கு ஆன்மீக விளக்கங் கொடுப்பதைப் போன்ற அக்கிரமம் இருக்க முடியுமா? இன்றைக்கும் வட நாட்டில் சில பகுதிகளில் கீழ்சாதி சமூகத்தில் ஒரு பெண் திருமணம் செய்தவுடன் நிலக்கிழாருடன் முதலிரவைக் கழித்தபிறகுதான் கணவனோடு வாழ முடியும் என்ற வழக்கம் சமூக வழக்கமாகத் தொடர்கிறதே. அது தெரியாதா? தீண்டத்தகாதவர்கள் என்று இவர்களைத் தள்ளிவைத்ததனால்தானே ஆரம்பத்தில் காந்தி அவர்களுக்கு மரியாதையான பெயரைக் கொடுப்போம் என்று ‘ஹரிஜன்’ என்று பெயரிட்டு அதுவும் சரிவரவில்லை என்று இன்று ‘தலித்’ வரை வந்து நிற்கிறது. இதெல்லாம் ‘பண்பாடாக’ இருந்தால் அந்தப் பண்பாடு இந்தியாவில் ஒழிய எத்தனை எதிர்ப்புக்குரல் எங்கிருந்து எழுந்தாலும் தப்பில்லை. இளவரசனுக்கும், திவ்யாவுக்கும் தர்மபுரியில் நிகழ்ந்தது இந்தப் பண்பாட்டு அவலத்தால்தான் என்பது நூலாசிரியர்களுக்கு புரியுமா? மேல்நாட்டாரும், கிறிஸ்தவர்களும் இந்தியாவை உடைக்கிறார்கள் என்று விபரம் புரியாமல் சொல்லுகிறவர்கள் இந்தியாவை இன்றைக்கு உடைத்துக்கொண்டிருப்பது இந்த இந்து சமூகப் பண்பாட்டு அவலந்தான் என்பதை இன்னும் உணராமல் இருக்கிறார்கள்.

சோற்றில் கல்லிருக்கத்தான் செய்யும்

நூலாசிரியர்கள் அதிகமாகவே வேலை செய்து கிறிஸ்தவ நிறுவனங்களின் பட்டியல்களைச் சேகரித்து அவர்கள் செய்து வரும் பணிகளை ஆராய்ந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய பட்டியலில் இருப்பவை எல்லாமே இவெஞ்சலிக்கள் கிறிஸ்தவ நிறுவனங்கள் என்று சொல்ல முடியாது. அநேக சமூக சேவையில் ஈடுபட்டிருக்கும் செக்யூலர் லிபரல் நிறுவனங்களும், வேர்ல்ட் விஷன் போன்ற சமூக சேவை செய்யும் நிறுவனங்களும் அவர்களுடைய பட்டியலில் அடங்குகின்றன. அடிக்கடி ‘இவெஞ்சலிக்கள்’ என்ற பதத்தை நூலில் பயன்படுத்தும் ஆசிரியர்களுக்கு அதன் அர்த்தம் புரிந்ததோ தெரியவில்லை. இவெஞ்சலிக்கள் என்ற பதம் மெய்க்கிறிஸ்தவ வேத போதனைகளை விசுவாசித்துப் பின்பற்றுகிறவர்களை மட்டும் குறிக்கும் பதம். இன்றைக்கு அது கத்தோலிக்க மதத்தைத் தவிர்த்து கிறிஸ்தவமாக கண்ணுக்குத் தெரிகின்ற எல்லா அமைப்புகளுக்கும் உரித்தானதாக தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கிறிஸ்தவ நிறுவனங்கள் என்ற பெயரைச் சூட்டிக்கொண்டு மதமாற்றத்தில் ஈடுபட்டு வருகின்ற நிறுவனங்கள் நிச்சயம் உண்டு. இந்தியாவில் இயங்கும் அத்தகைய நிறுவனங்கள் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். சுலபமாக பணத்தைச் சேர்த்துக்கொள்ளும் சுயலாபத்துக்காக நிறுவனங்களை ஆரம்பித்து மேல்நாட்டாரிடம் பணம் கேட்டு வருகிறவர்கள் நிச்சயம் இருக்கிறார்கள். எந்தத் தகுதியும், ஆத்மீக பாரமும், வசதிகளும் இல்லாமல் அநாதைப்பிள்ளைகளுக்கு இல்லங்கள் நடத்தப் பணம் கேட்டு எனக்குக் கடிதம் அனுப்புகிறவர்கள் இருக்கிறார்கள். இதையெல்லாம் அடியோடு மறுத்துவிட முடியாது. இப்படிப்பட்ட செயல்கள் இந்துமத அமைப்புகளில் நடக்காமலா இருக்கிறது? அன்றாடம் டி.வியிலும், பேப்பரிலும் அவை பற்றிக் கேள்விப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். அரிசியில் கல்லிருந்துவிடுவதுபோல் கிறிஸ்தவப் போர்வை போர்த்துக்கொண்டிருக்கும் ஓநாய்கள் இருந்துவிடுவதை நாம் ஒருபோதும் இல்லாமலாக்கிவிட முடியாது. அதையெல்லாம் உடனுக்குடன் இல்லாமலாக்கிவிட நாமென்ன கடவுளா? இதற்காக கிறிஸ்தவத்தையும், கிறிஸ்தவர்கள் எல்லோரையும் தவறான கண்ணோட்டத்தோடு பார்த்து அவர்கள் எல்லோருமே இப்படித்தான் என்று நினைப்பது அறிவீனம். சோற்றில் கல்லிருக்கிறது என்பதற்காக முழுச் சோற்றையுமா தூக்கி எறிந்துவிடுகிறோம்; கல்லைத்தானே எறிந்துவிடுகிறோம்.

அநாதைக் குழந்தைகளுக்காக கல்லூரிகளையும், நிலையங்களையும் நடத்துகிற எல்லோருமே தவறு செய்கிறார்கள் என்றில்லை. பெண்குழந்தைகளை ஈவு இரக்கமில்லாமல் இந்திய சமுதாயம் தெருவில் எறிந்த கொடுமையைப் பார்க்க சகிக்காமலேயே ஏமி கார்மைக்கல் என்ற அயர்லாந்து நாட்டுக் கிறிஸ்தவப் பெண்மணி டோனாவூரில் அநாதைக் குழந்தைகளை வளர்க்க ஆசிரமத்தை அமைத்தார். வாழ்க்கையில் பல்வேறு தியாகங்களைச் செய்து அவர் வளர்த்த, வாழ்வளித்த குழந்தைகள்தான் எத்தனை. எல்லோருக்கும் அந்த தியாக மனப்பான்மை இருந்துவிடாதுதான். கிறிஸ்தவர்கள் இப்படி உயிரைக்கொடுத்து உழைத்து நம்மவர்களுக்காக செய்திருக்கும் பணிகள் எல்லாவற்றையும் சிலபேருடைய தவறுகளுக்காக கொச்சைப்படுத்திப் பேசுவதும், எழுதுவதும் தகாது. தவறு செய்கிறவர்கள் இருக்கிறார்கள்தான். சுயநலத்துக்காக பெனிஹின் போன்ற மனிதர்களை வைத்து பெருங்கூட்டங்களை நடத்தி பணத்தை சுரண்டுகிறவர்கள் கிறிஸ்தவர்களாக நிச்சயம் இருக்க முடியாது. அந்தமாதிரியான செயல்களை கிறிஸ்தவ ஊழியமாக கிறிஸ்துவோ அவருடைய வேதமோ கருதவில்லை.

கோவில்களை உடைப்பதும், இந்துக்களின் மனம் நோகுமாறு நடந்துகொள்வதும், கன்னியாகுமாரியை ‘கன்னிமேரி’ என்று பெயர் மாற்றம் செய்ய முயல்வதும் கிறிஸ்தவ அன்பைப் பகிர்ந்துகொள்வதற்கு எதிரானது. அத்தகைய செயல்களில் ஈடுபடுகிறவர்களின் கிறிஸ்தவ விசுவாசம் கேள்விக்குரியது. உண்மையில் அவர்கள் கிறிஸ்தவர்களாக இருக்க முடியாது. மெய்க்கிறிஸ்தவர்கள் அத்தகைய செயல்களில் ஈடுபட மாட்டார்கள். நூலாசிரியர்கள், சிலர் செய்யும் தவறுக்காக எல்லோரையும் தவறாகப் பார்த்து தங்களுடைய அரசியல், சமூக மத நோக்கங்களுக்கு ஒத்துப்போகும் விதமாக கிறிஸ்தவத்தைப் பற்றிக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். அவர்களுடைய உள் நோக்கங்களுக்கு இது துணைபோகலாம். அதற்காக அவர்கள் உண்மையை எழுதுகிறார்கள் என்று அர்த்தமில்லை.

மெய்க்கிறிஸ்தவம் வன்முறை அறியாதது

ஆசிரியர்கள் கிறிஸ்தவர்களை அநாவசியத்துக்கு நக்ஸலைட்டுகளோடும், ஏனைய வன்முறை அமைப்புகளோடும் தொடர்புபடுத்தி அவர்களை வன்முறையை ஆதரிக்கிறவர்களாக சித்திரிக்கிறார்கள். கிறிஸ்தவம் வன்முறையை அடியோடு எதிர்க்கிறது. ஒரு கன்னத்தில் அறைபவனுக்கு மறுகன்னத்தைக் காட்டும்படி இயேசு கிறிஸ்து அறிவுரை சொல்லியிருக்கிறார். கிறிஸ்தவம் கத்தி, தோட்டாவைக் கையிலெடுக்காது. அமெரிக்கா ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் போரிட்டதையெல்லாம் வைத்து கிறிஸ்தவமும் அப்படிச் செய்யும் என்று ஆசிரியர்கள் கணக்கிடுகிறார்கள். அமெரிக்காவையும், மேற்கத்திய நாடுகளையும் கிறிஸ்தவ நாடுகளாகப் பார்ப்பதனாலேயே இந்தத் தவறு நேர்கிறது.

அமெரிக்கா அடிப்படையில் ஒரு கிறிஸ்தவ நாடல்ல. அங்கு ஒரு காலத்தில் கிறிஸ்தவ செல்வாக்கு அதிகம் இருந்தது உண்மைதான். அந்தச் செல்வாக்கால் அந்த நாட்டுக்குப் பல நன்மைகள் ஏற்பட்டதும் உண்மைதான். அதுவல்ல இன்றைய நிலைமை. கிளின்டன், ஒபாமா போன்றவர்களெல்லாம் தங்களை ஒருபோதும் கிறிஸ்தவர்களாக இனங்காட்டிக் கொண்டதில்லை. ஓரினச் சேர்க்கைக்கு திருமண அந்தஸ்து வழங்கிய முதல் அமெரிக்க அதிபர் ஒபாமா. ஆசிரியர்களின் அடிப்படைத் தவறே அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளையும், ஐரோப்பாவையும் கிறிஸ்தவ நாடுகளாகக் கருதுவதுதான். அமெரிக்காவிலாவது ஓரளவுக்கு கிறிஸ்தவம் இன்னும் முற்றும் அழியாமல் இருக்கின்றபோதும், கனடாவும் ஐரோப்பாவும் முழு லிபரல் நாடுகளாக இருக்கின்றன. அங்கே கிறிஸ்தவத்திற்கு எந்த மதிப்புமில்லை. இதை கிறிஸ்தவ வரலாற்றை வாசித்தாலே அறிந்துகொள்ள முடியும். 15, 16ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் கத்தோலிக்க மதம் கிறிஸ்தவர்களைத் தேடித் தேடி வெட்டிச் சாய்த்திருக்கிறது. கிறிஸ்தவர்கள் அதை எதிர்த்துப் போராடவில்லை. மேலைநாட்டில் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள் என்பது மட்டுமே உண்மை; அந்நாடுகளில் எதுவும் கிறிஸ்தவ வேதத்தின் அடிப்படையில் இயங்கும் நாடுகளல்ல. அவை கிறிஸ்தவத்தை வளர்த்துக்கொண்டிருக்கும் நாடுகளுமல்ல. அவற்றை கிறிஸ்தவ நாடுகளாகப் பார்ப்பது தவறான கணிப்பின் விளைவு.

மதசுதந்திரமும், தனி மனித உரிமையும்

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேற்கத்திய நாடுகளில் எல்லா மதத்தவர்களும் சுமுகமாக வாழ்வதற்குக் காரணம் அங்கு மத சுதந்திரமும், தனி மனித உரிமையும் பாதுகாக்கப்படுவதால்தான். இவற்றிற்கு அந்நாடுகள் முக்கியத்துவம் கொடுக்கின்றன. யாரும் எந்த மதத்தைப் பின்பற்றவும், எல்லா மதங்களும் மதவேறுபாடின்றி தங்களுடைய நோக்கங்களை எவருக்கும் பாதகம் ஏற்படுத்தாமல் நிறைவேற்றிக்கொள்ளவும் அங்கே வசதிகள் இருக்கின்றன. தனிமனித சுதந்திரத்தில் மதம் தலையிடுவதில்லை. அந்நாடுகளில் இருக்கும் சட்டங்கள் மதங்களுக்கும், தனி மனித உரிமைகளுக்கும் பாதுகாப்பளிக்கின்றன. இது மல்கோத்திராவுக்கு நிச்சயம் தெரிந்ததே. இதற்கு என்ன அடிப்படைக் காரணம்? கிறிஸ்தவ சுவிசேஷம் தான். சுவிசேஷம் அந்த நாடுகளில் ஏற்படுத்திய தாக்கம் தனி மனித உரிமைகளைப் பாதுகாக்கும் அரசியலமைப்பை உருவாக்கியிருக்கிறது. அதெல்லாம் வருமுன் அவர்களும் ‘பண்பாடில்லாத’ செயல்களைத்தான் செய்து வந்திருக்கிறார்கள். நான் வாழ்ந்து வருகின்ற மேற்கத்திய நாடுகளில் ஒன்றான நியூசிலாந்திலும் அதேநிலைமைதான். என் நாடு முழு செக்கியூலர் நாடு. இங்கு கிறிஸ்தவத்திற்கு எந்த தனிப்பட்ட மதிப்பும் இல்லை. இருந்தாலும் மத சுதந்திரமும், தனிமனித உரிமைகளும் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் இன்றைக்கு தொடர்ந்தும் மதசுதந்திரம் அரசியல் சாசனத்தில் இருக்கிறது; அப்படி இருப்பதுதான் இந்தியாவுக்கும் நன்மையளிக்கும். இந்தியா எப்போதுமே இந்துக்களை மட்டும் கொண்டிருந்த நாடல்ல. அங்கே ஏனைய மதத்தவர்களும், இனத்தவர்களும் எப்போதும் இருந்திருக்கிறார்கள். மத சுதந்திரமும், தனி மனித உரிமையும் மட்டுமே இனங்களை அமைதியாக வாழ வழிவகுக்கும். இந்தியா என்பதும், இந்து என்பதும் ஒன்று என்று கருதுவதும் அதை நிலைநாட்ட முயல்வதும்தான் இனவேறுபாட்டை ஏற்படுத்தும். அதைத்தான் நூலாசிரியர்கள் எதிர்பார்க்கிறார்கள். அது இந்துத்துவக் கோட்பாடு. இந்தியாவுக்கு அது அமைதி தராது. இந்துக்களும், முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் ஏனைய மதத்தவர்களும் இனத்தவர்களும் இணைந்து வாழ வழிகளைத் தேடுவதே மேலானது.

உண்மையான மத சுதந்திரம் இருக்குமானால் மனிதன் அவனுடைய மனச்சாட்சியின்படி நடக்கக்கூடிய தனி மனித உரிமையும், எதையும் ஆராய்ந்து பின்பற்றும் வசதியும் இருக்க வேண்டும். தன்னுடைய மத நம்பிக்கைகளையும், குல வழக்கங்களையும் ஆராய்ந்து பார்க்கவும், விரும்பினால் விட்டுவிடவும் அவனுக்கு உரிமையும் வசதியும் இருக்க வேண்டும். இப்படியெல்லாம் விட்டால் சமூகம் பாதிக்கப்படும் என்பார்கள். சமூகத்துக்காக தனிமனிதன் தன்னுரிமைகளை இழந்து வாழ வேண்டியிருக்கிறது இந்திய சமுதாயத்தில். தனி மனிதன் சமூகத்திற்கு ஆபத்தில்லாமல், பொதுவான நாட்டுச் சட்டத்திலுள்ள விதிகளை மீறாமல் வாழ்வது அவசியம். எல்லோருக்கும் பொதுவான விதிகளை அந்தச் சட்டங்கள் பாதுகாக்கின்றன. அவை அனைத்து சமூகங்களுக்கும் பாதுகாப்பாக இருக்கின்றன. அதற்கு அப்பால் போய் எழுத்திலில்லாத சம்பிரதாயங்களையும், கட்டுப்பாடுகளையும் தனி மனிதன் பின்பற்றி வாழ வேண்டும் என்று எதிர்பார்ப்பது அவனை சமூகத்துக்கும், பத்தாம் பசலிப் பண்பாட்டுக்கும் பலிகடா ஆக்கும் செயல். மார்க்ஸீயம் இதைத்தான் செய்தது. கம்யூனுக்காக வாழ வேண்டுமே தவிர தனிமனிதன் தனக்காக வாழமுடியாதபடி அது செய்தது. பொது உடமை என்பதே இதனால் வந்ததுதான். இதெல்லாம் இன்றைக்கு செல்லாக்காசாக மாறி வருவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

மனிதன் தன் உரிமைகளில் எவரும் தலையிடுவதை இன்று விரும்பவில்லை. சாதியம், புத்திக்கெட்டாத சம்பிரதாயம், சடங்குகளையெல்லாம் இன்றைக்கு பெருநகரப்புறத்தைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்கவில்லையா? தொழில் நுட்ப வளர்ச்சியும், வாழ்க்கைத் தர உயர்வும், கல்வியறிவும், எதையும் ஆராய்ந்து சிந்தித்து முடிவெடுக்கும் கம்பியூட்டர், இணைய யுக சிந்தனைப் போக்கும் இன்றைக்கு பெருநகர்ப்புற இந்தியனை மாற்றிக்கொண்டிருக்கின்றன. இதை நிச்சயமாக ‘பண்பாட்டுச் சீரழிவாக’ ஒரு கூட்டம் பார்க்கத்தான் செய்கிறது. அதற்காக அவர்கள் சரியென்று ஆகிவிடுமா? சமுதாய வளர்ச்சியின் ஒரு அங்கத்தைத்தான் இன்றைக்கு பெருநகர்ப்புறங்களில் கண்டுவருகிறோம். பெண்கள் வேலைக்குப் போவதும், குடும்பத்தோடு வாழாமல் தனியாக அப்பார்ட்மென்டில் வாழுவதும், பலரோடு எங்கும் பொதுவாக நட்பாகப் பழகுவதும் இத்தகைய மாற்றங்களில் ஒன்று. இதிலெல்லாம் அத்துமீறுதல் இல்லாமலிருக்காது. ஒரு சிலருடைய அத்துமீறுதலுக்காக பெண்கள் அனைவரையும் வாயைக் கட்டி வீட்டில் போட்டு எத்தனை காலத்துக்குப் பூட்டி வைக்கப்போகிறீர்கள்? எத்தனையோ பாரம்பரிய இந்து சமூகக் கட்டுப்பாடுகளை வைத்திருந்தும் பலதார மணமும், ‘சின்ன வீடு’ வைப்பதும், பரவலாக ஊரெல்லாம் இன்றும் தொடர்கிறதே. இது ‘பண்பாட்டுச் சீரழிவு’ இல்லையா?

இந்தியனை இந்துவாகவும், வருணாச்சிரம மனுநீதிக் கோட்பாடுகளை மட்டும் பின்பற்றுபவனாக இருக்க வைக்கப் பார்ப்பது மதசுதந்திரத்துக்கும் தனி மனித உரிமைக்கும் எதிரானது. இது இருபத்தியோராம் நூற்றாண்டிலும் அவனைப் பழைய பஞ்சாங்கமாக இருக்க வைக்கும் முயற்சி. இதைத்தான் தலிபான் ஆப்கானிஸ்தானில் செய்யப் பார்த்தது. அடிப்படைவாத இஸ்லாமும் இன்று இதையே செய்யப் பார்க்கிறது. இந்துத்துவாக்களுக்கும், நூலாசிரியர்களுக்கும் இதுதான் வேண்டும் போலிருக்கிறது. இது இந்தியாவுக்குத் தேவையில்லை.

முடிவாக . . .

Breaking India கிறிஸ்தவர்களை சிந்திக்க வைக்க வேண்டும். கிறிஸ்துவின் அன்பைக் கொச்சைப்படுத்தாமல் அர்ப்பணிப்போடு நாம் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தொடர்ந்தும் வெளிப்படுத்த நமக்கு உதவவேண்டும். கிறிஸ்தவத்தை இந்தளவுக்கு வெறுப்போடு பார்த்து எழுதுகிறவர்களையும் இயேசு மன்னிக்கிறார். ‘அவர்கள் அறியாமல் செய்கிறார்கள், அவர்களை மன்னித்து விடுங்கள்’ என்று பிதாவைப்பார்த்து இயேசு கேட்கவில்லையா? அதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நம்முடைய இருதயத்தையும், செயல்களையும் ஆராய்ந்து பார்த்து மனச்சாட்சியை சுத்தமாக வைத்திருந்து கிறிஸ்தவ சுவிசேஷ ஊழியத்தை எந்தவிதத்திலும் கொச்சைப்படுத்தாமல் கிறிஸ்துவின் மகிமைக்காக இந்திய நாட்டில் தொடர வேண்டும்.

பாரதி தேடிய மெய்யான விடுதலை இந்தியாவுக்கு இயேசு மூலம் மட்டுமே வரமுடியும், ஏன் எந்த நாட்டுக்கும் அது மட்டுமே வழி. அந்த விடுதலை மக்களுக்கு கிடைக்க சுவிசேஷத்தில் நம்பிக்கை வைத்து அதை மட்டுமே சுத்தமாக பிரசங்கிக்க வேண்டியதே நம் கடமை. ‘கிறிஸ்து மனிதனாக வந்த இறைகுமாரன் என்ற நம்பிக்கை இவர்களுக்கு இருக்கும் பட்சத்தில் அந்த ஒரே வரியைச் சொல்லியே இவர்கள் மதத்தைப் பரப்பலாமே? . . . தியாகத்தின் சிலுவையுடன் கிறிஸ்து வரட்டும் . . .’

என்று எழுத்தாளர் ஜெயமோகன் போன்றோர் கேட்குமளவுக்கு இன்றைக்கு கிறிஸ்தவத்தை சிலர் கொச்சைப்படுத்தி இயேசுவின் பெயருக்கு களங்கம் கற்பிக்கிறார்கள். இவர்களால் இந்துக்களுக்கு நம்மீது தவறான எண்ணம் ஏற்படுகிறது. தியாகத்தோடும் பாரத்தோடும் அர்ப்பணிப்போடும் கிறிஸ்தவப் பணி செய்ய வேண்டிய பெருங்கடமை இன்று மலைபோல் நம்முன் நிற்கிறது. அத்தகைய பணி மட்டுமே Breaking India போன்ற நூல்களுக்கு நல்ல பதிலாக அமைய முடியும்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s