திருமறைத்தீபம் பத்திரிகையின் எழுபத்தைந்தாவது இதழாக இந்த இதழ் உங்கள் கைகளை வந்தடைந்திருக்கிறது. முதலாவது இதழை ஆரம்பித்தது நேற்று போல் இருக்கிறது. அந்தளவுக்கு காலம் வெகுவேகமாகக் கடந்து போயிருக்கிறது. ஆரம்பத்தில் A4 வடிவமைப்பில் வெளிவந்த பத்திரிகை அநேகருடைய வேண்டுகோளுக்கிணங்க கையடக்கமான வடிவமைப்பில் வெளிவர ஆரம்பித்தது. இன்றுவரை அதுவே தொடர்கின்றது. எழுபத்தைந்தாவது இதழ்வரை பத்திரிகை நகருமா என்றெல்லாம் நான் நினைத்துப் பார்த்ததில்லை. வாசித்து சத்தியத்தை அறிந்து வளர வேண்டும் என்ற வாஞ்சை கொண்ட இதயங்கள் இருக்கின்றவரை கர்த்தர் இது தொடர்ந்து அச்சில் இருக்கும்படிப் பார்த்துக்கொள்ளுவார் என்பதில் எங்களுக்கு சந்தேகம் இருக்கவில்லை. அதை அனுபவத்தில் கண்டு வருகிறோம். இதுவரை பத்திரிகையைத் தொடர அனுமதித்த, அருமையான சத்தியங்களை வெளியிட அனுமதித்த, எதிலும் நடுநிலை நோக்கில்லாமலும், சத்தியத்திற்கு பல முகங்கள் இருப்பது போன்ற தோற்றத்தை அளிக்க முயலாமலும் வேதம் போதிப்பவற்றை அப்படியே எழுத அனுமதித்த கர்த்தருக்கு முதற்கண் நன்றி செலுத்துகிறேன்.
இதற்குப் பின்னாலிருந்து பல்வேறு விதங்களில் பணியாற்றும், என் சபையுட்பட அநேகருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். ஒரு காலத்தில் தனியொருவனாக அநேக பணிகளை நானே செய்திருந்தபோதும் அதற்கு அவசியமில்லாமல் இந்தியாவிலும், ஸ்ரீ லங்காவிலும் பல நண்பர்களை பத்திரிகைக்காக உழைக்க கர்த்தர் வழியேற்படுத்தித் தந்திருக்கிறார். தொடர்ந்து பத்திரிகையை லாப நோக்கங்களில்லாமல் இலவசமாக அனுப்பவும் அவர் கிருபை பாராட்டியிருக்கிறார். இப்படியொரு பத்திரிகை இருக்கிறதென்று அறிந்து ஆவலோடு கேட்டு எழுதுபவர்களுக்கு தொடர்ந்தும் இதை அனுப்பி வருகிறோம். அதை இன்னும் நெடுங்காலம் தொடர அவருடைய கிருபையும், தயவும் எங்களுக்குத் தேவை. இணையத்திலும், இணைய வசதியுள்ளவர்கள் பத்திரிகையை வாசித்துப் பயன்பெற வசதி செய்து தரப்பட்டிருக்கிறது.
திருமறைத்தீபத்தைப் பற்றி நினைக்கின்றபோது என்னால் ஆர்தர் பிங்க் என்ற அருமைப் போதகரைப் பற்றி நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அவர் கொஞ்சம் வித்தியாசமான போதகர். ஆனால், சத்திய வாஞ்சையுள்ள, விசுவாசமுள்ள போதகர். ஆஸ்திரேலியாவிலும், அதற்குப் பிறகு பிரிட்டனிலும் பணியாற்றி இறுதியில் ஸ்கொட்லாந்து பகுதியில் ஓய்வு பெற்று இறுதியில் கர்த்தரை அடைந்தவர். பிங்க் ஒரு பத்திரிகையை தன் ஊழியக்காலம் முழுவதும் நடத்தி வந்தார். அதில் அதிக துன்பங்களை வாழ்க்கையில் சந்தித்தார். யாருக்குப் பிடிக்கிறதோ இல்லையோ சத்தியத்தை மட்டுமே எழுதுவேன் என்று தீர்மானித்து அதைக் கடைசிவரை எழுதி வந்தார். Studies in Scripture என்ற அந்தப் பத்திரிகையைத் தொடர்ந்து வெளியிட பல வேளைகளில் பணத்துக்காக அவர் கஷ்டப்பட வேண்டியிருந்தது. வாசகர்கள் அனுப்பும் பணத்தை வைத்து அதை நடத்தி வந்தார். எந்தவிதத்திலும் பத்திரிகை பிரபலமாக வேண்டும் என்று சத்தியத்தை மாற்றிக்கொள்ள அவர் நினைத்ததேயில்லை. அத்தகைய ஆலோசனைகளை நிச்சயமாக அவருக்கு பலர் தந்திருந்திருப்பார்கள். வேத வசனங்களை ஆராய்ந்து, ஆராய்ந்து அதிலுள்ள மாணிக்கங்களையெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து வாசிக்கிறவர்கள் கண்கள் திறக்க வேண்டும் என்ற பாரத்துடன் அவர்கள் முன் பத்திரிகை வாயிலாக வழங்கி வந்தார் பிங்க். அவருடைய வாழ்நாளில் அது பல்லாயிரக்கணக்கான வாசகர்களைக் கொண்டிருந்திராவிட்டாலும் இன்று அவை தொடர்ந்து அச்சிலிருந்து உலகின் பல பாகங்களில் கிறிஸ்தவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதை எதற்குச் சொல்லுகிறேன் என்றால் அருமைப் போதகர் பிங்கைப் போல சத்தியத்தை சத்தியமாக விளக்குவதற்காக மட்டுமே திருமறைத்தீபமும் இருந்து வருகின்றது. அதனால்தான் அதை வழமையாக வரும் பத்திரிகைகள் போல் விளம்பரங்கள் இல்லாமல், பணத்தேவை பற்றி எழுதாமல், படங்களைப் போட்டு நிரப்பாமல் தற்காலத்துக்கு தேவையானதும், அவசியமானதுமான ஆத்மீகப் போதனைகள் எவை என்பதை ஜெபத்தோடு சிந்தித்துத் தீர்மானித்து எழுதி வெளியிட்டு வருகின்றோம்.
1995ம் ஆண்டு ஆரம்பமான பத்திரிகையில் பெரிய விஷயம் என்னவென்றால், கடந்த பத்தொன்பது வருட காலப்பகுதியில் அநேகரை அது எனக்கு அறிமுகப்படுத்தி வைத்திருக்கின்றது. இத்தனை வருடப் பத்திரிகை ஊழியப் பயணத்தில் கடிதத் தொடர்பு மூலம் அறிமுகமானவர்கள், நான் நேரில் சந்தித்தவர்கள், என்னை சிந்திக்க வைத்தவர்கள், பத்திரிகையினால் பயனடைந்து வளர்ந்து வருகின்றவர்கள், அதனால் ஆத்மீகப் புத்துயிரடைந்தவர்கள், காலத்துக்கும் மறக்க முடியாத நல்ல நண்பர்கள் என்று பலதரப்பட்டவர்களை பத்திரிகை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்திருக்கின்றது. இதற்காக நான் தனிப்பட்ட விதத்தில் கர்த்தருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
முக்கியமாக, பத்திரிகை அறிமுகப்படுத்தி வைத்திருக்கும் சில நல்ல நண்பர்களை வேறுவகையில் நான் தெரிந்துகொண்டிருக்க வழியில்லை. திருமறைத்தீபம் எங்களை இணைத்திருக்கிறது. அதில் வெளிவரும் சத்தியங்கள் எங்களை இனங்கண்டுகொள்ளவும், ஐக்கியத்தை அனுபவிக்கவும் வழியேற்படுத்தித் தந்திருக்கிறது. அந்த நண்பர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களை சங்கடப்படுத்த நான் விரும்பவில்லை. அவர்களில் நன்றாகப் படித்தவர்களும், நல்ல போதகர்களும், நல்ல உழைப்பாளிகளும், கிராமத்து விவசாயிகளும், குடும்பஸ்தர்களும், வளர்ந்து வரும் வாலிப உள்ளங்களும், தமிழார்வம் கொண்டவர்களும் இருக்கிறார்கள். பயணங்களின்போது இவர்களோடு பேசவும், பழகவும், ஆத்மார்த்தமான நட்பை அனுபவிக்கவும் பத்திரிகை வழியேற்படுத்தித் தந்திருக்கிறது. இந்த அனுபவத்தை நான் வேறு எதையும்விட வாழ்க்கையில் பெரிதாகக் கருதுகிறேன். இவர்களுக்கெல்லாம் வெகுதூரத்தில் இருப்பது மட்டுமே எனக்குப் பெருங்குறையாகத் தெரிகிறது. ஒருவரோடொருவர் நட்போடிருப்பதற்கு புணர்ச்சியும், பழகுதலும் அவசியம் இல்லை, ஒத்த உணர்ச்சிதான் முக்கியம் என்பதை ‘புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும்’ என்ற குறள் விளக்குகிறது. இந்த நண்பர்களோடு எனக்கிருக்கும் இந்த ஒத்த உணர்ச்சி எனக்குப் பெரிது. இதற்கெல்லாம் நான் அருகதையுடையவனா என்பது எனக்குத் தெரியவில்லை.
இந்தப் பத்திரிகை ஊழியம் தனிப்பட்ட விதத்தில் எனக்குப் பல உண்மைகளில் தெளிவேற்படுத்தியிருக்கிறது. நம்மினத்துக் கிறிஸ்தவத்தின் நிலை பற்றித் தெளிவானதொரு கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க உதவியிருக்கிறது. அது பாரத்தோடு அவசியமான, ஆவிக்குரிய விஷயங்களை எழுதவும், மொழிபெயர்த்து வெளியிடவும் துணை செய்கிறது.
மொழியின் அருமையையும், அவசியத்தையும் இது எனக்குக் கற்றுத் தந்திருக்கிறது. நம் மொழிதானே என்று அக்கறையில்லாது எதையும் எழுதிவிடாமல் மொழிக்கு மதிப்புத் தந்து சிந்தித்து எழுதவும், அதில் என்னை வளர்த்துக்கொள்ளவும் பத்திரிகை பெரிதும் உதவி வருகிறது. இதை நான் பெரிய ஆசீர்வாதமாகக் கருதுகிறேன். இதை எழுதுகிற வேளையில் ஒரு நூலுக்கு எதிர்வினையும் எழுதிக் கொண்டிருக்கிறேன். அந்த எதிர்வினைக்காக அந்த நூலைத்தவிர நான் வாசிக்க வேண்டிய வேறு சில விஷயங்களும் இருந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்து பணிபுரிந்த ஜி.யு. போப், கால்டுவெல் போன்றவர்களைப் பற்றி வாசிக்க நேர்ந்தது. அவர்கள் வெளிநாட்டவர்கள், நம்மொழி அறியாதவர்கள். இருவருமே தமிழைக் கற்று தமிழுக்கு அர்ப்பணிப்போடு பணியாற்றியிருக்கிறார்கள். அவர்களுடைய தமிழார்வமும், தமிழ் வளர்ச்சிக்கு செய்திருக்கும் பணிகளும் என்னை மலைக்க வைத்தன. சொந்த மொழியல்லாத இன்னொரு மொழியில் அதுவும் உலகத்திலேயே மிகவும் கஷ்டமான மொழிகளில் இரண்டாவது என்று சொல்லக்கூடிய இடத்தைப் பெற்றிருக்கும் தமிழைக் கற்று அதில் பாண்டித்தியம் அடைந்தது மட்டுமல்லாமல், அதை விருத்தி செய்வதிலும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த இவர்களுடைய பணி என்னை பிரமிக்க வைத்தது. தமிழோடு பிறந்திருக்கின்ற நாம் அதை அசட்டை செய்து வாழக்கூடாது என்பதை இவர்கள் கற்றுத் தருகிறார்கள்.
வாசிப்பது எனக்கு எப்போதுமே வழக்கமாக இருந்திருக்கிறது. வாசிப்பை நான் வலியுறுத்தாத நாட்களே இல்லை. நண்பர்களிடம் பேசும்போதெல்லாம், சபையாருக்கு போதனை அளிக்கும்போதெல்லாம் வாசிப்பின் அவசியத்தை அடிக்கடி விளக்கியிருக்கிறேன். திருமறைத்தீபம் என்னை அதிகம் வாசிக்க வைத்திருக்கிறது என்று சொல்லுவது மிகைப்படுத்தலல்ல. இருந்தபோதும் அதுகூட குறைவானது என்றுதான் நான் நினைக்கிறேன். இன்னும் அதிகம் வாசிக்க வேண்டும் என்ற வாஞ்சை இருக்கிறது.
தமிழ் கிறிஸ்தவர்கள் வாசிப்பில் அக்கறை செலுத்துவதில்லை என்பது என்னைத் தொடர்ந்து வருந்த வைக்கின்றது. நான் சந்திக்கின்ற, என்னோடு பேசுகின்ற அநேகர் தாங்களாகவே முன்வந்து அதைத் தாழ்மையோடு ஒத்துக்கொள்கிறார்கள். அறிவுப்பூர்வமாக எதையும் அலசி ஆராய்ந்து நுணுக்கத்தோடு பேசுமளவுக்கு நம்மவர்கள் தங்களை வளர்த்துக்கொள்ளாமல் இருப்பதற்குக் காரணம் வாசிப்பின்மையே. வாசிப்பை ஊக்கப்படுத்தி சபையாரை வாசிக்க வைக்கின்ற திருச்சபைகளையும் விரல்விட்டு எண்ணிவிடலாம். எதற்கெல்லாமோ பணத்தை விரயம் செய்கிறவர்கள் பணம்கொடுத்து ஒரு நல்ல நூலை வாங்கி நேரத்தைக் கொடுத்து வாசிக்கத் தயக்கம் காட்டுகிறார்கள். வயிற்றுக்கு குறைவைக்காமல் இருக்கத் தெரிகின்ற நமக்கு அறிவுக்கு
வஞ்சனை செய்கிறோம் என்ற உணர்வில்லாமல் இருக்கின்றது. வயிறாவது வலித்து தன் தேவையைத் தெரிவிக்கும்; அறிவு என்ன செய்யும் பாவம்!
என்னை ஆச்சரியப்பட வைத்த ஒரு சம்பவத்தை இங்கே சொல்லாமல் இருக்க முடியாது. நாம் வெளியிட்டுள்ள நூல்களில் நூறு நூல்களை வாங்கி எதிர்காலத்தில் அந்த நூல்கள் மறுபதிப்பாக வெளிவராமல் போனால் தேவைப்படுமே என்று தனியே அவற்றை விற்பனைக்கில்லை என்று ஒதுக்கி சேமித்து வைத்திருப்பதாக ஒரு சபைப் போதகர் என்னிடம் சொன்னார். இந்தளவுக்கு நல்ல நூல்களில் அக்கறை காட்டுகிறவர்களை நான் கண்டதுமில்லை; கேள்விப்பட்டதுமில்லை. இது விடியல்வேளை சூரியக் கதிர்களைப்போல நம்மவர்களின் எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையை எனக்குள் அதிகரிக்கச் செய்கின்றது.
தன்னைப்பற்றி அதிகமாக நாம் அறிந்துகொள்ளவும், அறிந்துகொண்ட உண்மைகளின் அடிப்படையில் தன்னோடு உறவுவைத்துக் கொள்ளவும் வாசிப்பு இன்றியமையாதது என்பதால்தான் நம் ஆண்டவர் நமக்கு வேதத்தை எழுத்தில் தந்து அதன் மூலமாக மட்டும் பேசி வருகிறார். அதில் நாம் அக்கறைகாட்டாமல் இருக்க முடியுமா? அதை ஆர்வத்தோடும், ஆழமாகவும், ஆராய்ந்தும், சிந்தித்தும் வாசிக்காவிட்டால் அவரோடு நமக்கிருக்கும் உறவும் வளர முடியாதே? திருமறைத்தீபத்தை ஆழமாக வாசித்துப் பயனடைகிறவர்கள் இருக்கிறார்கள் என்பது எனது மனக்குறையின் வலிக்கு மருந்தாக இருக்கின்றது. வாசியுங்கள் வாசகர்களே, வாசிப்பை நேசியுங்கள்! நல்ல நூல்கள் உங்களுக்கு நல்ல நண்பர்களாகட்டும். வாசிப்பு உங்களை வளர்க்கும், அதோடு உங்கள் வாசிப்பும் வளரும்.
திருமறைத்தீபம் வெளிவந்த நாளில் இருந்து பல நூல்களை வெளியிடவும் வகைசெய்து தந்திருக்கிறது. இன்றைக்கு திருச்சபை வரலாறு இரண்டு பாகங்களாக வர முடிந்திருக்கிறதென்றால் அதற்கு திருமறைத்தீபம் முக்கிய காரணம். இன்னும் இரண்டு பாகங்கள் வரவிருக்கின்றன. பத்திரிகையில் வெளிவந்திருக்கும் பல ஆக்கங்களை நூல்வடிவில் கொண்டு வரும் திட்டம் இருக்கின்றது.
எழுபத்தைந்தாவது இதழ் இது, என்று என் உடனூழியர் எனக்கு நினைவுபடுத்தியபோதுதான் இத்தனைத் தொலைவு கடந்து வந்திருக்கிறோம் என்பதை நான் உணர்ந்தேன். முன்னோக்கிப் போவதற்கு வழி ஒரு முறை பின்னோக்கியும் பார்ப்பதுதான். அதைத்தான் இதில் செய்திருக்கிறேன். பத்திரிகை ஊழியத்தின் இத்தனை காலப்பகுதியில் எத்தனையோ காரியங்கள் நடந்திருக்கின்றன. தந்தை தன் ஊழிய காலத்தில் வாசித்து அவர் மறைந்தபின் மகன் அதில் ஆர்வம் காட்டித் தொடர்ந்து வாசித்து ஊழியப்பணி செய்யுமளவுக்கு இரண்டு தலைமுறைக்கு அதை வாசித்து வருகிறவர்கள் இருக்கிறார்கள். திருமறைத்தீபத்தை வாசிக்கக்கூடாது என்று சொன்னவர்கள் உண்டு; ஆர்வத்தோடும், வாஞ்சையோடும் தொடர்ந்து வாசிப்பவர்கள் அநேகர்; புதிது புதிதாக பத்திரிகையை எழுதிக் கேட்கின்ற வாசகர்களையும் கண்டு வருகிறேன்.
வெறும் சரீர உணர்ச்சிக்கும், காட்சிக்கும், வாழ்க்கையில் செழிப்புக்கும் மட்டும் முக்கியத்துவம் கொடுத்து சிந்தனைக்குப் பூட்டுப்போட்டு வைத்திருக்கும், பரவலாக இன்று எங்கும் காணப்படும் ஒருவகை மாயக் ‘கிறிஸ்தவத்திற்கு’ வாழ்க்கையில் இடங்கொடுக்காது, வேத சத்தியங்களை ஆராய்ந்து கற்று கர்த்தரின் வழிகளை மட்டும் பின்பற்றி வாழவேண்டும் என்ற உணர்வுள்ளவர்கள் சிறு கூட்டமாக இங்கும் அங்குமாகப் பெருகி வர, அவர்கள் மத்தியில் இருந்து அவர்களுக்கு திருமறைத்தீபம் துணை போய்க்கொண்டிருக்கிறது என்பதறிந்து கர்த்தருக்கு நானும் என்னைச் சேர்ந்தவர்களும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். எங்களை ஜெபத்தில் நினைவுகூர மறவாதீர்கள். நன்றி!
75 இதழ்களை வெளியிட்டிருப்பதே பெரிய சாதனைதான். நல்ல தரமான கிறிஸ்தவ கட்டுரைகளை குறிப்பிட்ட சில கிறிஸ்தவ சஞ்சிகைகளே வெளியிடுகின்றன. பல இதழ்கள் தொடங்கி சில மாதங்களிலேயே நின்றுவிடுகின்றன. நான் மிக விரும்பி படிக்கும் கிறிஸ்தவ இதழ்களில் திருமறை தீபமும் ஒன்று.
கிறிஸ்தவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் கட்டுரைகளை வெளியிடுவதிலும் சிறந்து விளங்குகின்றீர்கள்.
வெளிவந்திருக்கும் கட்டுரைகளை தொகுத்து நூல்களாக வெளியிட ஆவண செய்யலாமே.
மற்றும் இத்தளத்தில் ஆங்கில புத்தகங்களில் வெளிவருவதுபோல Index என்னும் சுட்டியலாக்கத்தையும் சேர்த்துக் கொண்டால் மிக நலம். அப்போது கட்டுரையின் வகைப்பாட்டிற்கேற்ப இலகுவாக அணுகக் கூடியதாக இருக்கும்
தேவனேக்கே மகிமை!. உங்கள் பணி சிறக்க இறைவனை பிரார்த்திக்கின்றேன்இ
LikeLike