பெற்றோரின் கடமைகள் – ஜெ. சி. ரைல்

பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து. அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான். – நீதி 22:6

8. உங்களுடைய வார்த்தைகளில் நம்பிக்கை வைக்கும்படி பிள்ளைகளுக்கு பயிற்சி கொடுங்கள்

உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் சொல்லுவதை அவர்கள் நம்பும்படியாகக் கற்றுக்கொடுங்கள். தங்களுடைய சொந்தக் கருத்துக்களையும், ஆராய்ந்தறியும் திறனையும் காட்டிலும் பெற்றோராகிய உங்களுடைய கருத்துக்களும் அறிவும்தான் மேலானது என்கிற நம்பிக்கை அவர்களுக்கு உருவாகும்படியாக செய்ய வேண்டும். நீங்கள், அவர்களுக்கு நல்லதல்ல என்று குறிப்பிடும் காரியங்கள் நல்லதல்ல என்றும், நீங்கள் சரியென்று சொல்வது சரியாகத்தான் இருக்குமென்றும் அவர்கள் நம்பும்படியாக அவர்களைப் பழக்கப்படுத்த வேண்டும். சுருக்கமாகக் கூறினால், உங்களுடைய அறிவு அவர்களுடையதை விட மேலானதென்றும், நீங்கள் எதையாவது கூறினால் அதற்கு அவர்கள் உடனடியாகக் கீழ்ப்படிய வேண்டுமென்றும் அவர்களுக்குப் பயிற்சி அளியுங்கள். நீங்கள் அவர்களிடம் எதிர்பார்க்கிறவைகள் இப்போது அவர்களுக்கு சரியாக விளங்காவிட்டாலும் எதிர்காலத்தில் அவர்கள் விளங்கிக்கொள்வார்களென்றும், இப்போதைக்கு நீங்கள் சொல்கிறபடி கேட்டு நடந்தால் போதுமானது என்றும் அவர்கள் உணர்ந்துகொள்ளும்படியாகச் செய்யுங்கள்.

உண்மையாக நம்பிக்கை வைப்பதில் எவ்வளவு ஆசீர்வாதம் அடங்கியுள்ளது என்பதை யாரால் விவரிக்க முடியும்? நம்பிக்கை வைக்காமல் போனதால் உலகத்திற்கு எவ்வளவு கேடு ஏற்பட்டது என்று தெரியுமா? நம்பிக்கையின்மைதான் ஏவாளை அந்த விலக்கப்பட்ட கனியைப் புசிக்க வைத்தது. “சாகவே சாவீர்கள்” என்று தேவன் கூறிய வார்த்தையிலுள்ள உண்மையை சந்தேகப்பட்டதால் ஏற்பட்ட விளைவு அது! நோவாவின் வார்த்தைகளில் இருந்த எச்சரிப்பை நம்ப மறுத்ததால் பழைய உலகம் பாவத்தில் அழிந்தது. அவநம்பிக்கைதான் இஸ்ரவேலரை வனாந்தரத்தில் அலைய வைத்தது. வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்தில் அவர்களை நுழைய விடாமல் தடுத்தது அவர்களுடைய நம்பிக்கையின்மையே. நம்பிக்கை வைக்காததால் யூதர்கள் மகிமையின் கர்த்தரை சிலுவையில் அறைந்தனர். அவர்கள் மோசேயின் ஆகமங்களையும் தீர்க்கதரிசனங்களையும் நாள்தோறும் படித்து வந்தாலும் அவைகளை நம்பவில்லை. மனிதனின் இருதயத்தை இந்த நொடி வரையிலும் ஆண்டு கொண்டிருக்கிற பாவம் நம்பிக்கையற்ற தன்மைதான். மனிதன் கடவுளின் வாக்குத்தத்தங்களை நம்புவதில்லை. கடவுளின் எச்சரிப்புகளை நம்புவதில்லை. நம்முடைய சொந்த பாவநிலையை நம்புவதில்லை. நாமிருக்கும் ஆபத்தான நிலையை நம்புவதில்லை. பெருமையும், உலகப்பிரகாரமான எண்ணங்களும் கொண்ட நமது பொல்லாத இருதயத்தில் நம்பிக்கையின்மையும் இணைந்து இருக்கிறது. பெற்றோர்களின் வார்த்தைகளில் நம்பிக்கை வைப்பதிலும், அவர்கள் சொல்லுவது சரியாகத்தான் இருக்கும் என்று நம்புவதிலும், நீங்கள் உங்கள் பிள்ளைகளைப் பழக்கவில்லையென்றால், நீங்கள் கற்றுத் தருகிற மற்ற நற்காரியங்களால் அதிக பலன் இருக்காது.

பிள்ளைகளால் விளங்கிக்கொள்ள முடியாத காரியங்களை அவர்கள் செய்யும்படியாக பெற்றோர் எதிர்பார்க்கக் கூடாது என்று சிலர் சொல்லுவதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் செய்யும்படியாக நீங்கள் எதிர்பார்க்கிற ஒவ்வொரு காரியத்தையும் நீங்கள் அவர்களுக்கு விளக்கி, காரணம் காட்டிய பிறகே அதை அவர்களை செய்ய வைக்க வேண்டும் என்கிறார்கள் இவர்கள். இந்தவிதமான கருத்துக்களைக் குறித்து நான் உங்களை எச்சரிக்கிறேன். இது ஆரோக்கியமில்லாத, மிகவும் மோசமான கொள்கை. அதற்காக நீங்கள் செய்வதெல்லாவற்றையும் மர்மமாக வைத்துக்கொள்ள வேண்டுமென்று நான் கூறவில்லை. அது அசட்டுத்தனமானது. நீங்கள் பிள்ளைகளிடம் எதிர்பார்ப்பவைகளில் பலவற்றை அவர்களுக்கு விளக்கிக் கூற முடியும். நீங்கள் கூறுவது எவ்வளவு சரியானது, சிறந்தது என்பதை அவர்களும் உணர்ந்துகொள்ளக்கூடும். ஆனால், நீங்கள் செய்யச் சொல்லுகிற காரியம் ஒவ்வொன்றிலும் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டால்தான் அதை அவர்கள் செய்யலாம் என்கிற சலுகையை அளித்தீர்களானால் அது ஆபத்தானது. பெற்றோர் கூறுவதற்கு கீழ்ப்படிய வெறும் நம்பிக்கை மாத்திரம் போதுமானது என்கிற எண்ணத்தை அவர்கள் இழந்து விடுவார்கள். தங்களுடைய பலவீனமான, குறைந்த அறிவை வைத்துக் கொண்டு, நீங்கள் கூறுகிற ஒவ்வொரு காரியத்துக்கும் “ஏன்” “எதற்கு” என்கிற கேள்வி கேட்க அனுமதித்தீர்களானால் நீங்கள் மிகப் பெரும் தவறு செய்கிறவர்களாவீர்கள். அது அவர்களுடைய மூளையில் தீங்கான விளைவுகளை உருவாக்கிவிடும்.

நீங்கள் விரும்பினால் சில வேளைகளில் அவர்களுக்கு காரணங்களை விளக்கிக் காட்டலாம். ஆனால் நீங்கள் உண்மையிலேயே உங்கள் பிள்ளைகளை நேசிப்பவராக இருந்தால், என்ன இருந்தாலும் அவன் ஒரு சிறுபிள்ளைதான் என்பதை மனதிலே வைத்துக்கொள்ள ஒருபோதும் மறவாதீர்கள். அவன் சிறுபிள்ளையைப் போலத்தான் யோசிப்பான். சிறுபிள்ளைக்கேற்ற விதத்தில்தான் புரிந்துகொள்வான். ஆகவே எல்லாவற்றிற்கும் உரிய காரணங்களை அவன் உடனடியாக விளங்கிக்கொள்வான் என்று எதிர்பார்க்காதீர்கள்.

ஈசாக்கின் உதாரணத்தை அவனுக்கு முன்பாக வையுங்கள். ஈசாக்கை பலியிடுவதற்கு ஆபிரகாம் ஈசாக்கை மோரியா மலைக்குக் கூட்டிச் சென்றார் (ஆதி 22). ஈசாக்கு தன் தகப்பனிடம் கேட்டது ஒரே ஒரு கேள்விதான்: “தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே?” அதற்கு ஆபிரகாம், “தேவன் தமக்கு தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக்கொள்வார்” என்பதைத் தவிர வேறொன்றையும் பதிலாக சொல்லவில்லை. எப்படி, எங்கே, எப்பொழுது, எந்தவிதமாக, யார் மூலமாக என்றெல்லாம் ஆபிரகாம் ஈசாக்குக்கு விளக்கவில்லை. ஆபிரகாம் கூறிய அந்த பதிலே ஈசாக்குக்குப் போதுமானதாக இருந்தது. தகப்பன் கூறினால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று ஈசாக்குக்கு நம்பிக்கை இருந்தது. அதில் திருப்தியாயிருக்க முடிந்தது.

ஆரம்ப நாட்களில் நாம் எல்லோரும் கற்றுக்கொள்கிறவர்களாகத்தான் இருக்கிறோம் என்பதை உங்கள் பிள்ளைகளுக்குக் கூறுங்கள். எந்தவிதமான படிப்பைப் பெற வேண்டுமானாலும் அதற்கு ஆரம்பமாக எழுத்துக்களைக் கற்பதில் தேர்ச்சி பெற வேண்டியிருக்கிறது. உலகத்திலேயே மிகச் சிறந்த குதிரையாக இருந்தாலும் அதன் ஆரம்ப நாட்களில் அதற்குப் பயிற்சி கொடுக்க வேண்டியதாக இருக்கிறது. ஆகவே இப்போது பெற்றோராகிய நாங்கள் உனக்கு அளிக்கும் பயிற்சியிலுள்ள சிறப்பை நீ பெரியவனாகும் போதுதான் காண்பாய் என்பதை அவனுக்கு உணர்த்துங்கள். அதுவரைக்கும் நீங்கள் ஒரு விஷயத்தை நல்லதென்று கூறினால் அதுவே அவர்களுக்குப் போதுமானது. அதை அப்படியே நம்பி, திருப்தியோடு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்.

பெற்றோரே! பிள்ளைகளை வழிநடத்துவதில் இது மிகவும் முக்கியமான விஷயம். அவர்கள் மீது நீங்கள் வைத்திருக்கிற அன்பின் காரணமாக நான் கூறுகிறேன்: அவர்கள் நம்பிக்கை வைப்பதற்கு பயிற்சியளிக்கும்படி எல்லா சந்தர்ப்பங்களையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

9. கீழ்ப்படியும் வழக்கத்தைக் கொண்டவர்களாக இருக்கும்படி பிள்ளைகளுக்கு பயிற்சி கொடுங்கள்.

இது நிறைவேறுவதற்கு எவ்வளவு உழைத்தாலும் தகும். கீழ்ப்படிதலைப் போல நமது வாழ்க்கையில் மிகுந்த பலன் தரக்கூடிய நற்பழக்கம் வேறெதுவும் இருக்குமா என்பது சந்தேகம்தான். பெற்றோரே! உங்களுக்கு எவ்வளவு சிரமமாக இருந்தாலும், பிள்ளைகளை உங்களுக்குக் கீழ்ப்படியச் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாய் இருங்கள். அதன் காரணமாக அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் கண்ணீர் சிந்தலாம். அதனால் பரவாயில்லை. கேள்வி கேட்பதோ, காரணம் காட்டுவதோ, வாக்குவாதம் செய்வதோ, தாமதிப்பதோ, எதிர்த்துப் பேசுவதோ அந்தப் பயிற்சிக்கு இடையூறாக வராதபடிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஒரு கட்டளையைக் கொடுத்தால் அதை மறு பேச்சின்றி நிறைவேற்றினாலொழிய விடமாட்டீர்கள் என்பதை அவர்கள் உணரும்படியாகச் செய்யுங்கள்.

கீழ்ப்படிதல் மாத்திரமே உண்மையானது. கீழ்ப்படிதலில் விசுவாசம் தெளிவாகத் தெரிகிறது; விசுவாசம் செயல்படுகிறது; விசுவாசம் உருவாகிறது. அது கர்த்தருடைய ஜனங்கள் யாரென்பதை வெளிப்படச் செய்கிற பரீட்சையாயிருக்கிறது. “நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால் என் சிநேகிதராயிருப்பீர்கள்” (யோவான் 15:14) என்றார் இயேசு. நன்றாக பயிற்றுவிக்கப்பட்ட பிள்ளைக்கு கீழ்ப்படிதலே அடையாளமாக இருக்கிறது. அவர்கள் தங்கள் பெற்றோர் கட்டளையிடுகிற யாவற்றையும் செய்வார்கள். பெற்றோருக்கு சந்தோஷத்தோடும், முழுமனதோடும், உடனடியாகவும் கீழ்ப்படியாவிட்டால், பத்துக் கட்டளைகளில் ஐந்தாம் கட்டளையான தாய் தகப்பனுக்குரிய கனத்தை அவர்கள் எவ்வாறு காண்பிக்க முடியும்?

ஆரம்பகாலத்திலேயே பிள்ளைகள் கீழ்ப்படிதலோடு வளர வேண்டுமென்பதை வேதம் எல்லா இடங்களிலும் வலியுறுத்துகிறது. அதை ஆபிரகாமின் புகழ்ச்சியில் காணலாம். ஆபிரகாம் தனது குடும்பத்தாரை நன்றாக பயிற்றுவித்தது மட்டுமல்லாமல், “தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின் வரும் தன் வீட்டாருக்கும் . . . கட்டளையிடுவான்” (ஆதி 18:19) என்று கர்த்தர் குறிப்பிடுகிறார். இளம் பாலகனாயிருந்த இயேசு கிறிஸ்துவைக் குறித்தும்கூட இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது: “அவர் அவர்களுக்கு (மரியாள்-யோசேப்பு) கீழ்ப்படிந்திருந்தார்” (லூக் 2:51). இளம்பிராயத்திலிருந்த யோசேப்பும் தன் தகப்பனாகிய யாக்கோபின் வார்த்தைகளுக்கு உடனடியாகக் கீழ்ப்படிந்ததை ஆதி 37:13ல் கவனியுங்கள். “வாலிபன் முதிர்வயதுள்ளவனுக்கு இடும்பு (அகங்காரத்தோடு நடப்பான்) செய்வான்” (ஏசாயா 3:5) என்று ஏசாயா கீழ்ப்படியாமையை ஒரு தீமையான காரியமாக முன்னுரைத்திருப்பதைப் பாருங்கள். பிள்ளைகள் பெற்றோருக்கு அடங்காமல் கீழ்ப்படியாமல் போவதை கடைசி நாட்களில் வரும் கொடிய தீங்காக அப்போஸ்தலனாகிய பவுல் அடையாளங் காட்டுவதைப் பாருங்கள் (2 தீமோ 3:2). ஒரு கிறிஸ்தவ ஊழியனிடம் காணப்பட வேண்டிய குணங்களில் ஒன்றாக, பிள்ளைகளைக் கீழ்ப்படியச் செய்வதை பவுல் வலியுறுத்துவதைப் பாருங்கள்: “கண்காணியானவன் . . . தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும், தன் பிள்ளைகளை சகல நல்லொழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாய் இருக்க வேண்டும்” (1 தீமோ 3:4). “மேலும் உதவிக்காரரானவர்கள் . . . தங்கள் பிள்ளைகளையும் சொந்தக் குடும்பங்களையும் நன்றாய் நடத்துகிறவர்களுமாய் இருக்க வேண்டும்” (1 தீமோ 3:12). “துன்மார்க்கரென்றும் அடங்காதவர்களென்றும் பேரெடுக்காத விசுவாசமுள்ள பிள்ளைகளை உடையவனாயிருந்தால்” (தீத்து 1:6) அவனையே மூப்பராக ஏற்படுத்தும்படி பவுல் அறிவுறுத்துகிறார்.

பெற்றோரே, உங்கள் பிள்ளைகள் மகிழ்ச்சியாக வாழ்வதைப் பார்க்க விரும்புகிறீர்களா? அப்படியானால், நீங்கள் சொன்ன சொல்லுக்குக் கீழ்ப்படிவதற்கும், உங்கள் கட்டளைகளின்படி செய்வதற்கும் அவர்களைப் பழக்கப்படுத்துங்கள். நம்மில் யாருமே முழுச் சுதந்திரத்தோடு இருக்கும்படியாக படைக்கப்படவில்லை. இதை நம்புங்கள். அப்படி இருப்பதற்கு நாம் தகுதியானவர்கள் அல்ல. கிறிஸ்துவில் சுதந்தரவாளியாக இருப்பவனுங்கூட ஒரு நுகத்தின் கீழாகத்தான் இருந்து, “கர்த்தராகிய இயேசுவை சேவிக்கிறான்” (கொலோ 3:24). நமது நலனை விரும்புகிறவர்களுக்கு நாம் கீழ்ப்படிந்து நடக்கப் பழகாவிட்டால் நாம் சிறந்த நிலையை அடைய முடியாது என்பதை நம் பிள்ளைகள் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கற்றுக்கொள்வார்கள். அவர்கள் சிறுவயதினராய் இருக்கும்போதே கீழ்ப்படிதலை அவர்களுக்கேற்றளவுக்குக் கற்றுக் கொடுத்துவிடுங்கள். இல்லையென்றால் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் கர்த்தருக்கு விரோதமாகவே செயல்பட்டுக் கொண்டிருப்பார்கள். தேவனுடைய ஆளுகைக்கு அடங்காமல் சுதந்திரமாக வாழ்வதாக வீணான எண்ணம் கொண்டு தங்களைத் தாங்களே அழித்துக்கொள்வார்கள்.

இந்தக் காலத்தில் அநேக பெற்றோர், தங்கள் பிள்ளைகள் சரியான வயதை அடைவதற்கு முன்னால், தாங்களாக எதையும் தெரிவு செய்துகொள்ளுகிற சுதந்திரத்தை அவர்களுக்குக் கொடுத்து விடுகிறார்கள். பிள்ளைகள் கீழ்ப்படியாமல் இருப்பதைக் குற்றமாக பார்க்கக் கூடாது என்கிற எண்ணத்தில் பெற்றோரே அவர்களுடைய தவறுகளுக்கு சாக்குப்போக்குச் சொல்லிவிடுகிறார்கள். எப்போதுமே பிள்ளைகளுக்கு விட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கிற பெற்றோரைத்தான் நான் அடிக்கடி பார்க்கிறேன். பிள்ளைகள் தங்களுடைய இஷ்டத்தின்படி இந்தக் காலத்தில் நடந்துகொள்ளுகிறார்கள். என்ன மோசமான துக்கமளிக்கின்ற செயல்! ஏன் அது துக்கத்தைத் தருகிறது தெரியுமா? பெற்றோர்களின் இந்தத் தவறால் அந்தப் பிள்ளை சுயநலம், பெருமை, தன்னையே ஏமாற்றிக்கொள்ளுதல் ஆகிய கேடான குணங்களைக் கொண்ட மனிதனாக மாறிவிடுகிறது. பிள்ளைகள் சிறுவர்களாக இருக்கும்போது தங்கள் தகப்பனுக்குக் கீழ்ப்படியாமல் வளருவதை நீங்கள் அனுமதித்தால், அவர்கள் பெரியவர்களாகும்போது பரலோகத்தின் தகப்பனுக்குக் கீழ்ப்படியாமல் போவதைக் குறித்து நீங்கள் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

பெற்றோரே, நீங்கள் உங்கள் பிள்ளைகள் மீது அன்பு காட்டுவீர்களானால், அவர்களைக் கீழ்ப்படியச் செய்வதை உங்கள் குறிக்கோளாகக் கொண்டு பிள்ளை வளர்ப்பில் ஈடுபடுங்கள்.

10. எப்போதும் உண்மையே பேச வேண்டுமென்கிற பழக்கத்தைக் கொண்டிருப்பவர்களாக இருக்கும்படி அவர்களுக்கு பயிற்சியளியுங்கள்.

உண்மை பேசுதல் என்பது நாம் நினைப்பதைவிட இந்த உலகில் மிகவும் குறைவாகவே இருக்கிறது. பேசுவதெல்லாம் உண்மையே, உண்மையைத் தவிர வேறில்லை என்கிற பொன்னான விதியை நினைவில் வைத்திருப்பவர்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும். பொய் சொல்லுவதும், மழுப்பலாகப் பேசுவதும் மிகவும் பழமையான பாவங்கள். பொய்க்கு பிதாவாக இருப்பவன் சாத்தான். ஏவாளிடம் ஒரு துணிச்சலான பொய்யைக் கூறி ஏவாளை ஏமாற்றினவன். பாவத்தில் மனிதகுலம் விழுந்து போனது முதற்கொண்டு, ஏவாளின் பிள்ளைகள் யாவரும் இந்தப் பாவத்திலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.

உலகத்தில் எவ்வளவு பொய்யும் புரட்டும் நிரம்பி இருக்கிறதென்பதை நினைத்துப் பாருங்கள்! மிகைப்படுத்திப் பேசுவது என்பது எந்தளவுக்கு சமுதாயத்தில் பெருகிக் காணப்படுகிறது! ஒரு சாதாரண விஷயத்தைச் சொல்ல அதற்கு எத்தனை ஜோடனைகள் செய்கிறார்கள்! ஒரு விஷயத்தை சொல்கிறவருக்கு அதை அப்படியே இருப்பதுபோல் சொல்ல விருப்பமில்லையென்றால் அதிலுள்ள எத்தனை காரியங்களை ஒதுக்கிவிட்டு சொல்லுகிறார்கள்! இந்த மனிதருடைய வார்த்தைகள் முழுவதையும் நாம் நம்பலாம் என்று சொல்லக்கூடிய நபர்களை நாம் இன்றைக்கு விரல்விட்டு எண்ணிவிடலாம். உண்மை பேசுவதை பிள்ளைப் பிராயத்திலிருந்து அக்கறையோடு சொல்லி வளர்க்க வேண்டியிருக்கிறது என்றால் பாவத்தில் மனிதனுடைய நிலையைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்!

பழைய ஏற்பாட்டில் கடவுளைப் பற்றி சொல்லும்போது எத்தனை இடங்களிலே அவர் உண்மையுள்ளவராய் இருப்பதாய் குறிப்பிடப்பட்டிருக்கிறது தெரியுமா? மனிதனோடு அவர் உடன்படிக்கை செய்கிறபோதெல்லாம், உண்மையுள்ளவராகவே அவருடைய குணாதிசயம் நமக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. அவர் தமது உண்மை நிலையிலிருந்து ஒருபோதும் வழிவிலகுவதில்லை. பொய்கூறுதலையும், மாய்மாலத்தையும் அவர் வெறுக்கிறார். இதை எப்போதும் உங்கள் பிள்ளைகளுடைய மனதில் பதியும்படியாக தொடர்ந்து சொல்லிக் கொண்டே வாருங்கள். உண்மையை சற்றுக் குறைத்து கூறினாலும் அது பொய்தான் என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள். தட்டிக்கழிப்பது, எதற்கும் காரணம் கொடுப்பது, மிகைப்படுத்துவது, மழுப்புவது எல்லாமே பொய்யோடு சேர்ந்தவை என்பதை அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். அவைகளை விட்டு விலக வேண்டுமென்பதை அவர்களுக்கு வலியுறுத்துங்கள். என்ன ஆனாலும், எந்த சந்தர்ப்பத்திலும் உண்மையையே பேச வேண்டும் என்று அவர்களை உற்சாகப்படுத்துங்கள்.

நான் இந்த விஷயத்தை உங்களுக்கு வலியுறுத்துவது, பிள்ளைகள் நற்குணங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல, இது உங்களுக்கும் ஆறுதலைக் கொண்டுவருவதோடு அவர்களை எப்படி நடத்த வேண்டுமென்பதில் உங்களுக்கும் உதவியாக இருக்கும். உங்கள் பிள்ளைகளின் வார்த்தைகளில் நம்பிக்கை வைப்பதற்கு இந்த பயிற்சி உங்களுக்குப் பேருதவியாக இருக்கும். பிள்ளைகளிடம் சில சமயங்களில் காணப்படுகின்ற ஒளிவுமறைவுகளைத் தடுப்பதற்கும் இது உதவியாக இருக்கும். சிறுவயதில் இந்த விஷயத்தில் நீங்கள் அவர்களை எப்படி நடத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்துத்தான் அவர்கள் உங்களிடம் வெளிப்படையாகவும் உண்மையோடும் நடந்துகொள்ளுவார்கள்.

11. எப்போதும் நேரத்தை மீதப்படுத்துகிறவர்களாக இருக்கும்படி அவர்களைப் பழக்கப்படுத்துங்கள்.

இந்த வார்த்தைகள் வேதத்தில் காணப்படுகிறவை. இதற்கு அர்த்தம் பெரியது. நேரத்தை மீதப்படுத்திக்கொள்ளுகிறபோதுதான் அதை வீணாக்காமல் நம்மால் நல்லபடியாக பயன்படுத்திக்கொள்ள முடிகிறது. சோம்பேறித்தனம் எப்போதுமே சாத்தானுக்கு நல்ல நண்பன். நமக்கு தீங்கு செய்வதற்கேற்ற சந்தர்ப்பங்களை சாத்தானுக்குத் தருகிற நிச்சயமான வழியாக சோம்பேரித்தனம் இருக்கிறது. சோம்பலுள்ள மனம் திறந்த வீட்டைப்போல இருக்கிறது. சாத்தான் அதன் வழியாக உள்ளே நுழையாவிட்டாலுங்கூட, நமது ஆத்துமாவுக்கு கேடு விளைவிக்கக் கூடிய தீமையான எதையாவது நமக்குள்ளே திணிக்கப் பார்ப்பது நிச்சயம்.

சிருஷ்டிக்கப்பட்டிருக்கிற எந்தப் படைப்பும் சோம்பலாக இருக்கும்படியாக படைக்கப்படவில்லை. ஊழியம் செய்வதும், வேலையில் ஈடுபடுவதும் ஒவ்வொரு படைப்புயிருக்கும் கடவுளால் நியமிக்கப்பட்டிருக்கும் ஒழுக்கமாயிருக்கிறது. பரலோகத்தில் இருக்கின்ற தூதர்களுக்கும் அன்றாடம் வேலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. கடவுளின் சித்தத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிற ஊழியர்கள் அவர்கள். ஏதேன் தோட்டத்தில் ஆதாம் வேலை செய்யவேண்டியிருந்தது. நிலத்தைப் பண்படுத்தும்படியாக ஆதாம் நியமிக்கப்பட்டிருந்தார். மீட்கப்பட்ட பரிசுத்தவான்களுக்கும் பரலோகத்தில் வேலை இருக்கிறது. தங்களை மீட்டுக் கொண்டவரை துதித்து அவர்கள் இரவும் பகலும் ஓயாமல் பாடுவார்கள். பாவநிலையில் பலவீனத்தோடு இந்த உலகத்திலுள்ள ஒவ்வொரு மனிதனும் அன்றாடம் செய்வதற்கு ஏதாவதொரு வேலை இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவனுடைய ஆத்துமா ஆரோக்கியமில்லாததாகப் போய்விடும். நமது கைகளுக்கும் மனதுக்கும் எப்போதும் ஏதாவதொரு வேலையைக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சோம்பேரித்தனத்தில் நாம் எதையாவது கற்பனை செய்து ஆபத்தில் மாட்டிக்கொள்வோம்.

நமக்கு நியமிக்கப்பட்டிருக்கும் இந்த ஒழுக்கநிலை நமது பிள்ளைகளுக்கும் பொருந்தும். ஒன்றையும் செய்யாமல் சும்மா இருக்கும் மனிதனின் நிலை பரிதாபகரமானது! சோம்பேறித்தனத்தை யூதர்கள் எப்போதுமே பாவமாகக் கருதினார்கள். ஒவ்வொரு யூதனும் தன்னுடைய மகனை ஏதாவதொரு தொழில் செய்யப் பழக்க வேண்டும் என்பதை யூத இனம் சட்டமாகக் கொண்டிருந்தது. அதுதான் சரியானது. நம்மைவிட அவர்கள் மனிதனுடைய இருதயத்தை நன்றாக அறிந்து வைத்திருந்தார்கள்.

சோம்பேறித்தனம்தான் சோதோமை அதன் பாவநிலைக்குக் கொண்டு வந்தது. “இதோ கர்வமும், ஆகாரத் திரட்சியும், நிர்விசாரமான சாங்கோபாங்கமுமாகிய இவைகளே உன் சகோதரியாகிய சோதோமின் அக்கிரமம்” (எசேக் 16:49) என்கிறது வேதம். (இந்த வசனத்தில் “நிர்விசாரமான சாங்கோபாங்கம்” என்பது அளவற்ற சோம்பேரித்தனத்தைக் குறிக்கும் வடமொழி தழுவிய வார்த்தைப் பிரயோகம்). உரியாவின் மனைவியினிடத்தில் தாவீது செய்த பயங்கரமான பாவத்திற்கும் அவனுடைய சோம்பேறித்தனத்தையே காரணமாகப் பார்க்கிறோம் (2 சாமு 11). யோவாப், அம்மோன் புத்திரரோடு போரிட யுத்தகளம் சென்றிருக்கிறான். ஆனால் “தாவீதோ எருசலேமில் இருந்துவிட்டான்”. அது எத்தனை பெரிய சோம்பேறித்தனம் தெரியுமா? அந்தவேளையில்தான் தாவீது பத்சேபாளைத் தவறான கண்ணோட்டத்தோடு பார்க்கிறான். அதற்குப் பின் தாவீது அடைந்த பெரும் வீழ்ச்சியை நாம் தொடர்ந்து அங்கே வேதத்தில் வாசிக்கிறோம்.

வேறு எதையும்விட அநேக பாவங்களைச் செய்ய வைக்கும் வழக்கமாக மனிதனின் சோம்பேறித்தனம் இருக்கிறது என்பதை நான் உறுதியாக சொல்லுவேன். மாம்சத்தின் கிரியைகளுக்கெல்லாம் அதுதான் தாயாக இருக்கிறது. விபச்சாரம், அசுத்தம், குடி, இருளின் செயல்பாடுகள் போன்ற இன்னும் அநேக பாவங்களுக்கெல்லாம் அது தாயாக இருக்கிறது. அவைகளைப் பட்டியல்போட்டுக் காட்ட எனக்கு இங்கு நேரமில்லை. நான் சொல்லுவது உண்மையா இல்லையா என்பதை உங்கள் மனசாட்சியே தீர்மானிக்கட்டும். நீங்கள் எதுவும் செய்யாமல் சும்மா இருக்கும்போது, உடனடியாக சாத்தான் உங்கள் மனக்கதவைத் தட்டி உள்ளே நுழைந்துவிடுவான்.

நம்மை சுற்றிலும் இருக்கிற காரியங்களும் நமக்கு இந்த பாடத்தைப் போதிக்கிறது என்று நான் நம்புகிறேன். தேங்கி நிற்கிற தண்ணீர்தான் எப்போதும் மாசு படிந்து அசுத்தமாகும். ஓடிக்கொண்டிருக்கிற தண்ணீர் எப்போதும் சுத்தமாக இருக்கும். உங்களிடம் ஏதாவது மின்சாரக் கருவி இருக்குமானால் அதை நீங்கள் அடிக்கடி பயன்படுத்த வேண்டும். அதை வெறுமனே சும்மா வைத்திருந்தால் அது சீக்கிரமாகவே பயன்படுத்த முடியாததாகப் போய்விடும். உங்களுக்கு ஒரு குதிரை இருந்தால் அதற்கு நீங்கள் உடற்பயிற்சி கொடுக்க வேண்டும். அந்தக் குதிரை சுறுசுறுப்பாக இருக்கும்போதுதான் ஆரோக்கியமாக இருக்கும். உங்களுடைய உடல் ஆரோக்கியமாக இருக்கவேண்டுமானால் நீங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். எப்போதும் அசையாமல் ஓரிடத்தில் நீங்கள் உட்கார்ந்து கொண்டேயிருப்பீர்களானால் வெகுவிரைவிலேயே உங்கள் சரீரம் ஒத்துழைக்க மறுக்கும். அதைப் போலத்தான் நம்முடைய ஆத்துமாவும். சுறுசுறுப்போடு இயங்கி ஆத்மீக வாழ்க்கையில் முன்னேறிப் போய்க்கொண்டேயிருக்கிற ஆத்துமாவைத் தாக்குவது சாத்தானுக்கு எளிதல்ல. எப்பொழுதும் ஏதாவது உபயோகமான ஆத்மீகக் காரியங்களை செய்து கொண்டிருங்கள். அதனால் உங்கள் விரோதியான சாத்தானுக்கு உங்களுடைய இருதயத்தில் பாவக்களைகளை விதைப்பதற்கு முடியாமற் போகும்.

பெற்றோரே, இந்த காரியங்களை உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். நேரத்தின் அருமையை அவர்களுக்கு விளக்குங்கள். அதை எப்படிப் பயனுள்ளவிதத்தில் பயன்படுத்துவது என்பதைக் கற்றுக் கொடுங்கள். பிள்ளைகள் சோம்பலாக இருப்பதைப் பார்த்தால் எனக்கு வருத்தமாயிருக்கும். அவர்கள் சுறுசுறுப்போடிருக்கவும், எதைச் செய்தாலும் தங்கள் முழு மனதையும் அதில் செலுத்தி அதைச் செய்கிறவர்களாகவும் இருப்பதைப் பார்ப்பதே என் விருப்பம். படித்தாலும் முழுமனதோடு படிப்பதும், விளையாடினாலும் முழுமனதோடு விளையாடுவதும் எப்போதும் சிறந்தது.

நீங்கள் உங்கள் பிள்ளைகள் மீது அதிக அன்புகாட்டுவீர்களானால், உங்கள் குடும்பத்தில் இருக்கும் சோம்பேறித்தனத்தை முதலில் பாவமாகக் கருத ஆரம்பியுங்கள்.

12. அதிக செல்லம் கொடுத்துவிடக் கூடாதென்ற பயத்தோடு பிள்ளைகளுக்கு பயிற்சி அளியுங்கள்.

இந்த விஷயத்தில்தான் நீங்கள் வேறு எந்த விஷயத்திலும் இல்லாதளவுக்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நமது சொந்தப் பிள்ளைகளின் மீது நாம் கனிவும், பாசம் வைத்திருப்பதும் இயற்கைதான். ஆனால் அது அளவுக்கதிகமாகப் போய்விடாதபடிக்கு நீங்கள் கவனத்தோடிருக்க வேண்டும். உங்களுடைய பிள்ளைப் பாசம், உங்கள் பிள்ளைகளின் குற்றங்களை நீங்கள் கவனிக்க முடியாதபடி செய்துவிடாமலிருக்க எச்சரிக்கையாயிருங்கள். அது அவர்களைக் குறித்து மற்றவர்கள் கொடுக்கின்ற புத்திமதிகளை நீங்கள் கேட்கமுடியாதபடி செய்துவிடாமலிருக்க கவனமாயிருங்கள். பாசத்தின் காரணமாக ஆரம்பத்திலேயே அவர்களுடைய தவறான நடத்தையை நீங்கள் திருத்தாமல் போனீர்களானால், பின்னால் மனக்கஷ்டத்தோடு அவர்களைத் தண்டித்து திருத்தவேண்டிய நிலை உங்களுக்கு ஏற்படும். தண்டனை கொடுப்பதும் திருத்துவதும் யாருக்குமே மனதுக்கு சந்தோஷம் தராத ஒரு காரியம் என்பதை நான் அறிவேன். நாம் மிகவும் நேசிக்கிற ஒருவருக்கு துயரத்தைக் கொடுத்து அவர் கண்களில் கண்ணீர் வடிவதைப் பார்ப்பதைக் காட்டிலும் அதிக துக்கமான விஷயம் வேறொன்றில்லை. ஆனால் மனித இருதயம் பாவத்தோடு இருக்கிறவரையில், அதை சுமந்துகொண்டிருக்கிற பிள்ளைகளைத் திருத்தாமலேயே வளர்த்துவிடலாம் என்று கனவு காண்பது வீணான காரியம்.

கெடுத்துவிடுதல் என்ற வார்த்தை பொருளாழம் கொண்ட வருத்தந்தரும் வார்த்தை. பிள்ளைகளைக் கெடுத்துவிடுவதற்கான சுலபமான குறுக்குவழி அவர்கள் விரும்பும் வழியில் அவர்களை வளரவிடுவதுதான். அவர்களைத் தவறு செய்ய அனுமதித்து அந்தத் தவறுகளைத் தண்டித்துத் திருத்தாமல் விட்டுவிடுவது அவர்களைப் கெடுப்பதற்கான சுலபமான வழி. என் வார்த்தைகளை நம்புங்கள்! இந்தத் தவறான காரியத்தை நீங்கள் ஒருபோதும் செய்யக்கூடாது. உங்கள் பிள்ளைகளுடைய ஆத்துமாவைக் கெடுப்பது உங்கள் நோக்கமாக இருந்தாலொழிய எந்தத் துன்பம் உங்களுக்கு ஏற்பட்டாலும் உங்கள் பிள்ளைகளை அவர்கள் போக்கில் வளர விட்டுவிடாதீர்கள்.

இந்த விஷயத்தைக் குறித்து வேதாகமம் வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை என்று உங்களால் கூறவே முடியாது. பின்வரும் வசனங்களைக் கவனியுங்கள். “பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான். அவன்மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான்” (நீதி 13:24). “நம்பிக்கை இருக்குமட்டும் உன் மகனை சிட்சை செய். ஆனாலும் அவனைக் கொல்ல உன் ஆத்துமாவை எழும்பவொட்டாதே” (நீதி 19:18). “பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும். அதைத் தண்டனையின் பிரம்பு அவனைவிட்டு அகற்றும்” (நீதி 22:15). “பிள்ளையை தண்டியாமல் விடாதே. அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான். நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்துக்கு அவன் ஆத்துமாவைத் தப்புவிப்பாயே” (நீதி 23:13, 14). “பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும். தன் இஷ்டத்துக்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டு பண்ணுகிறான்.” “உன் மகனை சிட்சை செய். அவன் உனக்கு ஆறுதல் செய்வான். உன் ஆத்துமாவுக்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான்.” (நீதி 29:15, 17).

எவ்வளவு ஆணித்தரமானதும் வல்லமையானதுமான வார்த்தைகள் இவைகள்! அநேக கிறிஸ்தவ குடும்பங்கள் இந்த வசனங்கள் இருப்பதையே அறியாமல் இருப்பது எவ்வளவு வருத்தந்தரும் காரியம்! பிள்ளைகள் கடிந்துகொள்ளப்பட வேண்டியவர்களாய் இருக்கிறார்கள். ஆனால், அதை செய்பவர்களின் தொகை மிகக் குறைவு. பிள்ளைகள் திருத்தப்பட வேண்டியவர்களாய் இருக்கிறார்கள். ஆனால், அதை அநேகர் ஒருபோதும் செய்வதேயில்லை. பழைய ஏற்பாட்டில் இருக்கும் நீதிமொழிகள் நூல் கிறிஸ்தவர்களுக்கு பொறுத்தமற்றதோ, உபயோகமில்லாததோ அல்ல. அது பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டு நமக்கு நன்மையளிப்பதற்காக எழுதப்பட்ட நூல். பவுல் எழுதிய ரோமர், எபேசியர் போன்ற நிருபங்களைப் போலவே, நாம் கற்றுக்கொள்வதற்காக கொடுக்கப்பட்டிருக்கும் நூல் நீதிமொழிகள். இந¢நூல் சொல்லுகிற அறிவுரையின்படி தன்னுடைய பிள்ளைகளை வளர்த்து வராத விசுவாசி, அதில் சொல்லப்பட்டிருப்பவற்றைவிடத் தனக்கு அதிகம் தெரியும் என்று நினைத்து மாபெரும் தவறு செய்கிறான்.

தகப்பன்மார்களே, தாய்மார்களே, நான் உங்களுக்கு வெளிப்படையாகவே சொல்லுகிறேன். உங்கள் பிள்ளைகள் தவறு செய்யும்போது அவர்களை நீங்கள் ஒருபோதும் தண்டிக்கவில்லையென்றால், நீங்கள் அவர்களுக்கு பெரும் தீங்கு செய்கிறவர்களாயிருக்கிறீர்கள். உங்களை எச்சரிக்கிறேன்! ஒவ்வொரு தலைமுறையிலும் விசுவாசிகளில் பலர் இந்த விஷயத்தில்தான் அதிக தடவைகள் தவறு செய்து தங்கள் குடும்பக் கப்பலைக் கவிழ்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த எச்சரிப்பை விளங்கிக்கொண்டு தகுந்த நேரத்தில் புத்திசாலிகளாக நடந்து இந்த ஆபத்தை வரவழைத்துக்கொள்ளாதீர்கள் என்று உங்களுக்கு அறிவுரை சொல்லுகிறேன். ஏலி இந்தத் தவற்றைச் செய்ததை வேதத்தில் வாசிக்கிறோமல்லவா. ஏலியின் குமாரர்களாகிய ஓப்னியும் பினெகாசும் “தங்கள் மேல் சாபத்தை வரப்பண்ணுகிறதை அவன் அறிந்திருந்தும், அவர்களை அடக்காமற்போன பாவத்தினிமித்தம்” கடவுள் அக்குடும்பத்தை தண்டிக்கிறார். தன் பிள்ளைகள் செய்கிற பாவங்களுக்காக அவர்களைக் கடினமாகக் கடிந்துகொள்ளுவதை விட்டுவிட்டு, ஏலி அவர்களை மிகவும் மென்மையாகக் கண்டிக்கிறார். ஒரே வார்த்தையில் சொல்லுவதானால், ஏலி கடவுளைக் காட்டிலும் தன் குமாரர்களை அதிகமாக மதிக்கிறார். அதன் முடிவு என்ன? யுத்தத்தில் தன் இரண்டு குமாரர்களும் இறந்து போனதை அவர் கேட்கும்படியான நிலை ஏற்பட்டது. அவரது நரை மயிரானது துக்கத்தோடே பாதாளத்தில் இறங்கும்படியான நிலைமை ஏற்பட்டது (1 சாமு 2:22-29, 3:13) என்கிறது வேதம்.

தாவீதின் குடும்பத்திலும் இது நிகழ்ந்ததைப் பார்க்கிறோம். தாவீதின் பிள்ளைகளையும், அவர்களுடைய பாவங்களையும் வாசிக்கும்போது யாரால் வருத்தப்படாமல் இருக்க முடியும்? அம்னோனின் தகாத இச்சை, அப்சலோமின் கொலைகாரத்தனமும் கலகக் குணமும், அதோனியாவின் சதித் திட்டம் ஆகியவைகளைக் குறித்து மனவேதனைப்படாமல் இருக்க முடியுமா? கர்த்தருடைய இருதயத்துக்கேற்றவனாகிய தாவீது, தன் குடும்பத்தாரின் மூலமாக அடைந்த மனவேதனைகள் இவை. ஆனால் தாவீதின் மீது தவறே இல்லையா? தவறு இருக்கிறதென்றுதான் நான் நினைக்கிறேன். இதற்கான பதிலை அதோனியா பற்றிய சம்பவத்தில் என்னால் பார்க்க முடிகிறது. “அவனுடைய தகப்பன்: நீ இப்படி செய்வானேன் என்று ஒருக்காலும் அவனைக் கடிந்துகொள்ளவில்லை” (1 இராஜா 1:6) என்று சொல்லப்பட்டிருப்பதை அங்கே வாசிக்கிறோம். எல்லா துயரங்களுக்கும் ஒரு மூலகாரணம் இருக்கிறது. தாவீது அளவுக்கதிகமான பாசமுள்ள ஒரு தகப்பன். தன் பிள்ளைகளை அவர்களுடைய இஷ்டத்தின்படியே நடக்கவிட்ட தகப்பன். அதனால்தான் தான் விதைத்ததையே அறுக்கும்படியான நிலைமை அவனுக்கு ஏற்பட்டது.

பெற்றோரே, உங்கள் பிள்ளைகளுடைய நன்மைக்காக சொல்லுகிறேன், அவர்களிடம் அளவுக்கதிகமாக செல்லம் கொடுத்து அன்பு காட்டுவதைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். அவர்களுக்கு உண்மையில் எது நன்மையானதோ அதைத் தேடுவதே உங்களுடைய தலையாய கடமையாக இருக்கிறது என்பதை நினைவில் வையுங்கள். அதைவிட்டுவிட்டு அவர்களுடைய மனப்போக்கின்படியும், விருப்பங்களுக்கேற்றபடியும் அவர்களை வளர விடாதீர்கள். அவர்களுக்கு பயிற்சி கொடுங்கள், வேடிக்கைப் பொருளாக்காதீர்கள். அவர்களை வெறும் சந்தோஷத்திற்காக அல்ல, அவர்கள் நல்வாழ்க்கை வாழ்வதற்காக வளருங்கள்.

நீங்கள் எவ்வளவுதான் உங்களுடைய பிள்ளைகள் மேல் அன்பு காட்டினாலும், அவர்களுடைய சலன புத்திக்கும், மாறுகின்ற விருப்பங்களுக்கும் ஏற்றவிதத்தில் அவர்களுக்கு விட்டுக்கொடுத்துக் கொண்டேயிருக்கக் கூடாது. அவன் நினைத்தது நடந்துவிடும் என்பது போலவும், அவன் ஒன்றை விரும்பிவிட்டால் அது அவனுக்கு அடுத்த நொடியிலேயே கிடைத்துவிடும் என்பது போலவும் அவனை எண்ண விடாதீர்கள். உங்கள் பிள்ளைகளை சிலைகளைப் போலப் பயன்படுத்தி ஆராதிக்காதபடி எச்சரிக்கையாயிருங்கள். அப்படி அவர்களை உங்களுக்கு விக்கிரகங்களாக நடந்த ஆரம்பித்தீர்களானால், அவற்றை உடைத்து, அவர்களை உங்கள் கைகளிலிருந்து பறித்துக் கொண்டு, உங்கள் முட்டாள்தனத்தை தேவன் உங்களுக்கு வெளிப்படுத்தாமல் விடமாட்டார்.

“இல்லை” என்கிற வார்த்தையை பிள்ளைகளிடம் சொல்லுவதற்குக் கற்றுக்கொள்ளுங்கள். அவர்களுக்கு எது சரியானதில்லையோ அதை மறுப்பதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறதென்பதை அவர்களுக்குக் சுட்டிக் காட்டுங்கள். கீழ்ப்படியாவிட்டால் அவர்களைத் தண்டிப்பதற்கும் தயாராக இருப்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள். அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்ற நிலை ஏற்படுகிறபோது, அது வெறும் மிரட்டலல்ல, அதை நிச்சயம் செய்வீர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள். அநாவசியத்துக்கு மிரட்டிக்கொண்டே இருக்காதீர்கள். வெறும் மிரட்டல்கள் குற்றங்களையும் குற்றவாளிகளையும் இல்லாமலாக்காது; அதிகரிக்கவே செய்யும். கொடுக்க வேண்டிய வேளையில் மட்டும் தண்டனையைக் கொடுங்கள். ஆனால், அதை உண்மையோடும் உறுதியோடும் செய்யுங்கள். அநாவசியத்துக்கு எடுத்ததற்கெல்லாம் தண்டிப்பதும், இல்லாவிட்டால் கொடுக்கும் தண்டனை வெறும் தடவலாக இருப்பதும் மோசமான பிள்ளை வளர்ப்பு முறையாகும்.

சில பெற்றோரும், பிள்ளைகளைக் கவனிப்பவர்களும் சின்ன விஷயத்துக்கெல்லாம் பிள்ளைகளை ஒரு காரணமும் இல்லாமல் “குழப்படிக்காரர்கள்” என்று சொல்லுவதை வழக்கத்தில் வைத்திருக்கிறார்கள். அது முட்டாள்தனமான செயல். காரணங்களில்லாமல் எவரைப் பார்த்தும் குற்றப்படுத்துகின்ற வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது.

பிள்ளைகளைத் தண்டிக்கும் விஷயத்தில் பொதுவான ஒரு திட்டத்தை என்னால் தர முடியாது. பிள்ளைகளின் குணாதிசயங்கள் ஒருவருக்கொருவர் மாறுபட்டுக் காணப்படுவதால் ஒரு பிள்ளைக்குக் கொடுக்கப்படும் கடுந்தண்டனை இன்னொரு பிள்ளைக்கு தண்டனையாகவே படாது. பிள்ளைகளை ஒருபோதும் பிரம்பைப் பயன்படுத்தி சரீரத்தில் அடிக்கக்கூடாது என்ற இந்தக்காலத்து எண்ணத்தை நான் அடியோடு எதிர்க்கிறேன். சில பெற்றோர்கள் பிரம்பைத் தேவைக்கு மேல் அதிகமாகவும், கடுமையாகவும் பயன்படுத்தி விடுகிறார்கள் என்பதை நான் அறிவேன். அது முழுத் தவறுதான். ஆனால், ஏனையோர் அதைப் பயன்படுத்த வேண்டிய அளவுக்கு பயன்படுத்துவதே இல்லை.

உங்களுடைய பிள்ளைகள் செய்யும் சிறிய சிறிய தவறுகளை “சின்ன விஷயம்தானே” என்று ஒதுக்கிவிடாதீர்கள். பிள்ளை வளர்ப்பில் அவர்களுக்கு கொடுக்கும் பயிற்சியில் சின்ன விஷயங்கள் என்று ஒன்றுமேயில்லை; எல்லா விஷயங்களும் முக்கியமானவை. எல்லாக் களைகளைப் போலவே சின்னச் சின்னக் களைகளையும் வயலில் பிடுங்கியாக வேண்டும். சின்னக் களைகளை அப்படியே விட்டுவிடுகிறபோதுதான் அவை பெரிதாகி பிரச்சனையை ஏற்படுத்தும்.

நீங்கள் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய விஷயங்களில் இது மிக மிக முக்கியமானது என்பதை நீங்கள் உணர வேண்டும். இந்த விஷயந்தான் உங்களுக்கு கஷ்டமானதாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும். சின்ன வயதிலேயே உங்கள் பிள்ளைகளின் வளர்ப்பு முறையில் நீங்கள் கஷ்டப்பட்டு அக்கறை காட்டாவிட்டால் வளர்ந்த பிறகு அவர்கள் உங்களுக்கு பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். இதில் எது உங்களுக்குப் பிடித்தது என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

13. கடவுள் தம்முடைய பிள்ளைகளுக்கு எப்படி பயிற்சியளிக்கிறார் என்பதைத் தொடர்ந்து நினைத்துப் பார்த்து உங்களுடைய பிள்ளைகளுக்கு பயிற்சி கொடுங்கள்.

கடவுள் தனக்கென மனித குலத்தில் ஒரு பகுதியைத் தெரிந்துகொண்டிருக்கிறார் என்கிறது கர்த்தரின் வேதம். அவர்கள் இந¢த உலகத்தில் வாழ்கின்ற கடவுளின் குடும்பமாக இருக்கிறார்கள். தங்களுடைய பாவத்தை உணர்ந்து இயேசு கிறிஸ்துவிடம் சமாதானத்துக்காக ஓடுகின்ற பாவிகள் அனைவரும் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இரட்சிப்புக்காக இயேசு கிறிஸ்துவை மெய்யாகவே விசுவாசிக்கின்ற நாமெல்லோருமே அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறோம்.

பரலோகத்தில் தம்மோடு இணைந்து நித்தியத்துக்கும் வாழ்வதற்காக தன்னுடைய குடும்பத்திற்கு அவர் விடாமல் பயிற்சியளித்து வருகிறார். அவர்கள் அதிகம் கனிகொடுக்கும்படியாக அவர்களைத் தொடர்ந்து திருத்தியமைக்கும் திராட்சைத் தோட்டக்காரனாக அவர் செயல்பட்டு வருகிறார். அவருடைய குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருடைய குணாதிசயங்களையும் அவர் அறிந்து வைத்திருக்கிறார். நம்முடைய மோசமான பாவங்கள், பலவீனங்கள், குறிப்பிட்ட சரீர அல்லது மனநிலை சம்பந்தமான பலவீனங்கள், நம்முடைய விசேஷ தேவைகள் எல்லாமே அவருக்குத் தெரியும். அவருக்கு நம்முடைய வேலைகள், நாம் வாழுமிடம், நம் வாழ்க்கையில் நமக்குத் துணையாக இருப்பவர்கள், நம்முடைய துன்பங்கள், நம்மைத் தாக்கும் சோதனைகள், நம்முடைய ஆசீர்வாதங்கள் அனைத்துமே தெரியும். இவற்றையெல்லாம் அவர் அறிந்திருந்து இவையெல்லாவற்றையுமே நம்முடைய நன்மைக்காக அவர் பயன்படுத்தி வருகிறார். தம்முடைய பராமரிப்பாகிய கிரியையின்படி நாம் ஒவ்வொருவரும் கனிகொடுப்பதற்கு அவசியமானவற்றை நம்முடைய தேவைகளின்படி அவர் நமக்காக நியமித்திருக்கிறார். எந்தளவுக்கு சூரிய கிரகணங்களைத் தாங்கி மழையை நம்மால் சமாளிக்க முடியுமோ, எந்தளவுக்கு கசப்பையும் இனிப்பையும் நம்மால் அநுபவிக்க முடியுமோ அந்தளவுக்கு நம் தேவைகளை அறிந்து நமக்குத் தேவையானவற்றைத் தந்து அவர் நம்மைப் பராமரிக்கிறார். இதை வாசிக்கும் பெற்றோர்களே! உங்களுடைய பிள்ளைகளை ஞானத்தோடு நீங்கள் வளர்க்க வேண்டுமானால் கடவுள் நமக்கு எப்படிப் பயிற்சியளித்துப் பராமரித்து வருகிறார் என்பதைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள். அவர் சகலத்தையும் நன்றாக செய்து முடிக்கிறார். ஏன் தெரியுமா? அனைத்தையும் செய்வதற்கு அவர் ஏற்றுக்கொண்டிருக்கும் திட்டம் சரியாக இருப்பதால்தான்.

கடவுள் தன்னுடைய மக்களுக்குத் தராமல் விட்டுவைத்திருக்கின்ற காரியங்கள் எத்தனை என்பதை எண்ணிப் பாருங்கள். சில விஷயங்களை சிலர் அடைய ஆசைப்பட்டும் அவற்றைக் கடைசிவரை அவர்களுக்கு கொடுக்க கடவுள் சித்தம¤ல்லாதவராக இருக்கிறார். சிலருக்கு ஏதோ ஒன்றை வாழ்க்கையில் அடையவேண்டுமென்ற ஆசையிருந்தும், அதை அடைய முடியாதபடி எப்போதும் ஏதோவொரு தடையிருந்துகொண்டே இருக்கும். கடவுளே அதைக் கைக்கெட்டாத தூரத்தில் வைத்துவிட்டு, “இது உனக்கு நல்லதல்ல; இதை நீ அடையக்கூடாது” என்று சொல்வது போலிருக்கும். மோசே யோர்தானைக் கடந்து சென்று கர்த்தர் வாக்குத்தத்தம் செய்திருந்த அந்த செழிப்பான தேசத்தைப் பார்க்க ஆவலாயிருந்தார். ஆனால் அவருடைய விருப்பம் பூர்த்தி செய்யப்படவேயில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.

நம்முடைய கண்களுக்கு இருண்டதாகவும், புதிராகவும் தென்படுகின்ற பாதைகளின் வழியாக கடவுள் தன்னுடைய பிள்ளைகளை எத்தனை தடவை வழிநடத்திச் சென்றிருக்கிறார் என்பதை நினைத்துப் பாருங்கள். நம்மை அவர் வழிநடத்திச் செல்லும் முறைகளின் அர்த்தத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியாமலிருக்கும். வாழ்க்கையில் நாம் நடந்து போகின்ற வழிகளின் தன்மையை நாம் விளங்கிக்கொள்ளாமல் இருப்போம். சில வேளைகளில் எத்தனையோ துன்பங்கள் நம்மைத் தாக்கியிருக்கின்றன; எத்தனையோ கஷ்டங்கள் நம்மைச் சுற்றி வளைத்திருக்கின்றன. அவையெல்லாம் நம் வாழ்க்கையில் ஏன் நடக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை நம்மால் அறிந்துகொள்ள முடியாமல் போயிருக்கின்றது. நம் பிதா நம் கைகளைப் பிடித்து இருண்ட ஓரிடத்திற்கு அழைத்துப்போய், “கேள்விகள் எதுவும் கேட்காமல் என்னைப் பின்தொடரு” என்று சொல்லுவது போலிருக்கிறது. எகிப்திலிருந்து கானானுக்குச் செல்ல சுலபமான பாதை இருந்திருக்கிறது. ஆனால் இஸ்ரவேலரோ அந்த வழியிலே அழைத்துச் செல்லப்படவில்லை. வனாந்திரம் வழியாக சுற்றிக்கொண்டு போகவேண்டியிருந்தது. பல சமயங்களில் இது நமக்கு மிகவும் கடினமானதாக இருக்கிறது. “வழியினிமித்தம் ஜனங்கள் மனமடிவடைந்தார்கள்” (யாத் 13:17, எண் 21:4) என்று வேதம் சொல்லுவதை நாம் வாசிக்கிறோம்.

துன்பங்களின் மூலமாகவும், துயரங்களின் மூலமாகவும் கடவுள் தம்முடைய ஜனங்களை எப்படியாக சிட்சிக்கிறார் என்பதைப் பாருங்கள். அவர்கள் சுமக்கும்படியாக வாழ்க்கையில் சிலுவைகளையும், ஏமாற்றங்களையும் அனுப்புகிறார். நோய்களின் மூலமாக அவர்களைத் தாழ்த்துகிறார். அவர்களுடைய சொத்துக்களையும், நண்பர்களையும் இல்லாமல் செய்கிறார். அவர்களை ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைமைக்கு மாற்றுகிறார். சரீரத்தில் தாங்க முடியாத அனுபவங்களை அவர்கள் அனுபவிக்கும்படிச் செய்கிறார். நமக்கு ஏற்படும் அப்படியான அனுபவங்களைத் தாங்க முடியாமல் நம்மில் சிலர் மயக்கமடையும் நிலைக்குக் கூட வந்துவிடுகிறோம். நம் வல்லமைகளுக்கெல்லாம் மேலான அத்தகைய துன்பங்களைத் தாங்க முடியாமல் இவற்றை அனுமதித்து நம்மைச் சிட்சை செய்யும் கரத்தை நோக்கி நாம் முறுமுறுக்க ஆரம்பித்து விடுகிறோம். அப்போஸ்தலனாகிய பவுலுக்கு வாழ்க்கையில் ஒரு முள் கொடுக்கப்பட்டிருந்தது. அது மிகவும் கசப்பான ஏதோவொரு சரீர கஷ்டம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது என்னவென்பது உண்மையில் நமக்குத் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் நமக்குத் தெரியும். அது தன்னைவிட்டு நீங்கும்படியாக, பவுல் மூன்று முறை கடவுளிடம் வேண்டிக் கொண்டார். ஆனாலும் அது நீக்கப்படவேயில்லை (2 கொரி 12:8, 9).

இதை வாசிக்கின்ற பெற்றோர்களே, இவை எல்லாம் இப்படியாக இருந்தபோதும், தேவனுடைய பிள்ளைகளில் யாராவது, தங்களுடைய பிதா தங்களை ஞானமாக நடத்தவில்லை என்று நினைத்ததுண்டா? இல்லவேயில்லை. நீங்களும்கூட அப்படி நினைக்க மாட்டீர்கள் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். தங்களுடைய விருப்பத்தைக் கடவுள் நிறைவேற்றாமல் போனது மிகவும் நல்லதாகப் போயிற்று என்றும், தங்களுக்கு தாங்களாகவே செய்துகொள்ளுகிற நன்மைகளைவிடக் கடவுள் மிகப் பெரியளவுக்கு ஆசீர்வாதங்களை அளித்திருக்கிறார் என்றும் கடவுளின் பிள்ளைகள் நிச்சயமாகச் சொல்லுவார்கள். கடவுளின் வழிநடத்தலால் பெற்றுக்கொண்டிருக்கும் சந்தோஷமே, தங்களுடைய இஷ்டத்தின்படியாக வரக்கூடிய சந்தோஷங்களைவிட அதி மேன்மையானது என்பதையும் அவர்கள் தெரிவிப்பார்கள். சில சமயங்களில் அவருடைய வழிநடத்தல் விளங்கிக்கொள்ள முடியாதபடி இருந்தாலும், அவருடைய வழிகளே சந்தோஷமானவையும், சமாதானப் பாதையாகவும் இருக்கின்றது என்பார்கள்.

கடவுள் தம்முடைய பிள்ளைகளை நடத்துகின்ற விதத்தின் மூலம் உங்களுக்கு கற்றுக் கொடுக்கின்ற பாடத்தை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். உங்களுடைய பிள்ளைகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்று நீங்கள் கருதுகின்ற எதையும் உங்கள் பிள்ளைகள் அடையாதபடி நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகள் அதைப்பற்றி என்ன நினைத்தாலும் நீங்கள் இதைச் செய்யத்தான் வேண்டும். அதுவே கர்த்தருடைய திட்டம்.

உங்களுடைய கட்டளைகளில் இருக்கின்ற ஞானத்தை விளங்கிக்கொள்வதற்குத் தேவையான அறிவு உங்களுடைய பிள்ளைக்கு இப்போது இல்லையென்றாலும் கட்டளையிடத் தயங்காதீர்கள். நீங்கள் காட்டுகின்ற வழிமுறைதான் சரியானதென்று இப்போது அவனுடைய மனது ஏற்க மறுத்தாலும், உங்கள் வழிமுறைகளைக் கைவிடாதீர்கள். இதுவே கடவுளின் திட்டம்.

பிள்ளையின் ஆத்மீக நலனுக்குத் தேவையான சிட்சைகளையும், திருத்துதல்களையும் தேவையான வேளைகளில் செய்வதற்கு ஒருபோதும் தயங்காதீர்கள். அது எவ்வளவுதான் உங்களுக்கு மனக்கஷ்டத்தைக் கொடுத்தாலும் அதைச் செய்யாமல் விட்டுவிடாதீர்கள். ஆத்மீக நலனுக்குத் தேவையான மருந்துகளை, அவை எவ்வளவுதான் கசப்பானதாக இருந்தாலும் பிள்ளைகளுக்குக் கொடுக்காமல் விட்டுவிடக்கூடாது என்பதை நினைவில் வைத்திருங்கள். இது கடவுளின் திட்டம்.

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தவிதமான பயிற்சியைக் கொடுப்பது உங்களுடைய பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தாது என்பதை நினைத்துப் பயப்படாதீர்கள். இந்த மாயையான எண்ணத்தைப் பற்றி நான் உங்களை எச்சரிக்க விரும்புகிறேன். நமது சொந்த விருப்பப்படி நடப்பதே நமக்கு அதிக துக்கத்தை உண்டுபண்ணும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. நம்முடைய விருப்பங்கள் சோதிக்கப்பட்டு அவை அனுமதிக்கப்படாவிட்டால் அதுவே நமக்கு ஆசீர்வாதமானது. இது நடக்கும்போதுதான் உண்மையான சந்தோஷத்தை நாம் மதிக்கக் கற்றுக்கொள்வோம். தொடர்ந்து சுய இச்சைப்படி நடப்பது சுயநலத்துக்கு அடையாளம். சுயநலவாதிகளும், திருத்தத்தோடு வளர்க்கப்படாத பிள்ளைகளும் மகிழ்ச்சியாக இருந்ததேயில்லை.

இதை வாசிக்கிறவர்களே, கடவுளைவிட நீங்கள் புத்திசாலிகள் என்று எண்ணாமலிருங்கள். அவர் தம்முடைய பிள்ளைகளுக்கு பயிற்சி கொடுப்பது போல நீங்களும் உங்கள் பிள்ளைகளுக்குப் பயிற்சி அளியுங்கள்.

14. உங்களுடைய இடைவிடாத முன்மாதிரியான நடத்தை உங்களுடைய பிள்ளைகளில் ஏற்படுத்தக்கூடிய செல்வாக்கை மனதில் வைத்திருந்து பிள்ளைகளுக்குப் பயிற்சி அளியுங்கள்.

உங்களுடைய வாழ்க்கையின் மூலம் மற்றவர்களுக்கு நீங்கள் முன்மாதிரியாய் இருக்காவிட்டால் எந்தப் போதனையாலும், புத்தி சொல்லுதலாலும், கட்டளையாலும் எவருக்கும் பயனிருக்க முடியாது. உங்களுடைய வாழ்க்கை நடவடிக்கைகள் நீங்கள் கொடுக்கும் ஆலோசனைகளுக்கு எதிர்மறையாக இருக்குமானால் நீங்கள் கொடுக்கும் கட்டளைகளுக்கு கீழ்ப்படிய வேண்டுமென்று நீங்கள் உண்மையிலேயே விரும்புகிறீர்கள் என்று உங்கள் பிள்ளைகள் நம்ப மாட்டார்கள். டிலொட்சன் (Tillotson) என்கிற ஆர்ச் பிஷப் ஓர் அருமையான கருத்தைச் சொல்லியிருக்கிறார்: “பிள்ளைகளுக்கு நல்ல அறிவுரைகளை வழங்கிவிட்டு அவர்களுக்கு மோசமான முன்மாதிரியாக நடப்பது எப்படி இருக்கிறது தெரியுமா? தலையை உயர்த்தி அவர்களுக்கு மோட்சத்தின் பாதையைக் காண்பித்துவிட்டு, கைகளால் அவர்களைப் பிடித்துக் கொண்டு நரகத்தின் பாதையில் அழைத்துச் செல்வதற்கு ஒப்பாக இருக்கிறது.”

முன்மாதிரிக்குள்ள சக்தியையும் வலிமையையும் பற்றி நமக்கு அதிகம் தெரியாது. இந்த உலகில் யாருமே தனக்குத் தானே வாழ முடியாது. ஏதாவதொரு வகையில் நாம் நம்மைச் சுற்றி இருப்பவர்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறோம். அந்தப் பாதிப்பு நல்லதாகவோ அல்லது கேடானதாகவோ, கடவுளுக்காகவோ அல்லது பாவத்திலோ போய் முடியும். நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நமது வழிகளைப் பார்க்கிறார்கள், நமது குணத்தை கவனிக்கிறார்கள். நமது நடத்தையைக் காண்கிறார்கள். நாம் பின்பற்றுகிற வழிமுறைகளைப் பார்த்து, நாம் ஒருவிதத்தில் சரியானபடிதான் சிந்திக்கிறோம் என்று தீர்மானிக்கிறார்கள். முன்மாதிரியின் வலிமையை நான் வேறெதிலும் இல்லாத விதத்தில் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக இருக்கும் விஷயத்தில் காண்கிறேன்.

தாய், தகப்பன்மாரே, பிள்ளைகள் தங்கள் காதுகளால் கேட்டுக் கற்றுக்கொள்வதைக் காட்டிலும் கண்களால் பார்த்துக் கற்றுக்கொள்வதே அதிகம். வீடு பிள்ளைகளின் குணத்தில் ஆழமாகப் பதிக்கும் முத்திரையைப்போல பள்ளிக்கூடம் பதிப்பதில்லை. அடுப்படியில் இருந்து பிள்ளைகள் உங்களிடம் கற்று மனதில் பதிய வைத்துக்கொள்கிறவைகளை மிகச் சிறந்த பாடசாலை ஆசிரியர்களாலும் அவர்களுக்குக் கொடுக்க முடியாது. மனனம் செய்து கற்பதை விட ஒருவருடைய நடத்தையைப் பார்த்துக் கற்றுக்கொள்வது பிள்ளைகள் விஷயத்தில் நல்ல கொள்கையாகும். பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்து செய்ய வைப்பதைவிட, நாம் செய்து காண்பிப்பது அதிக பலனைத் தரும்.

நீங்கள் பிள்ளைகளுக்கு முன் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். “பிள்ளைக்கு முன்பாக பாவம் செய்கிறவன் இரு மடங்கான பாவம் செய்கிறான்” என்பது உண்மையான பழமொழி. உங்கள் குடும்பத்தார் எளிதாக உங்களைப் படித்து விளங்கிக்கொள்ளக்கூடிய கிறிஸ்துவின் நிருபமாக வாழுவதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். கடவுளின் வார்த்தைக்கு மதிப்புக்கொடுப்பதில் உதாரணமாக இருங்கள். ஜெபத்தில் முன்னுதாரணமாக இருங்கள். கிருபையின் சாதனங்களை மதித்துப் பயன்படுத்துவதில் எடுத்துக்காட்டாக இருங்கள். கர்த்தருடைய நாளுக்கு மதிப்புக்கொடுத்து அதை அநுசரிப்பதில் நற்சாட்சியாக இருங்கள். வார்த்தையிலும், பொறுமையிலும், சுறுசுறுப்பிலும், தன்னடக்கத்திலும், விசுவாசத்திலும், கருணையிலும், அன்பிலும், தாழ்மையிலும் நல்ல எடுத்துக்காட்டாக இருங்கள். நீங்கள் செய்து காண்பிக்காத எந்த காரியத்தையும் உங்கள் பிள்ளைகள் செய்வார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள். நீங்கள்தான் அவர்களுடைய மாதிரிப் படிவம். உங்களைப் பார்த்துத்தான் அவர்களும் நடப்பார்கள். நீங்கள் கொடுக்கும் காரணங்கள், உங்களுடைய உபதேசங்கள், உங்களுடைய ஞானமுள்ள கட்டளைகள், இவை எல்லாவற்றையும் அவர்கள் விளங்கிக்கொள்ளாவிட்டாலும், உங்களுடைய வாழ்க்கையைப் பார்த்து அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.

பிள்ளைகள் மிக சீக்கிரமாக எதையும் கவனித்து உணர்ந்துகொள்ளக் கூடியவர்கள். ஏதாவது மாய்மாலம் தென்பட்டால் உடனே அறிந்துகொள்வார்கள். உங்கள் சிந்தனைகளையும், உணர்ச்சிகளையும் விரைவில் கண்டுபிடித்து விடுவார்கள். உங்களுடைய வழிகளையும், கருத்துக்களையும் வெகு சீக்கிரமாக ஏற்று நடக்கக்கூடியவர்கள். தகப்பன் எப்படியோ மகனும் அப்படித்தான் என்பதை அடிக்கடி கவனிப்பீர்கள்.

போரின்போது மாவீரன் சீஸர் தனது போர்வீரர்களிடம் எப்போதும் சொல்கிற வார்த்தையை மனதில்கொள்ளுங்கள். அவர்களிடம் “நீங்கள் முன்னால் போங்கள்” என்று சொல்லாமல் “வாருங்கள்” என்றுதான் சீஸர் எப்போதும் சொல்வாராம். உங்கள் பிள்ளைகளை வளர்க்கும் பயிற்சியிலும் நீங்கள் இதைத்தான் கடைப்பிடிக்க வேண்டும். நீங்கள் வெறுக்கின்ற பழக்கவழக்கங்களை அவர்கள் சிறிதும் கற்றுக்கொள்ள மாட்டார்கள். நீங்கள் செல்லாத பாதையிலே அவர்கள் செல்ல மாட்டார்கள். தான் பின்பற்றாத பழக்கவழக்கங்களை தனது பிள்ளைகளுக்கு போதிக்கிறவன், முன்னோக்கிப் போகாத ஒரு வேலையை செய்கிறவனைப் போல இருப்பான். தாம் நல்ல முன்மாதிரியாக இருக்காமல், பிள்ளை வளர்ப்பில் ஈடுபடுகிற பெற்றோர் எதற்கு ஒப்பாயிருக்கிறார்களென்றால் ஒரு கையால் ஒரு கட்டிடத்தைத் கட்டி, மறு கையால் அதை இடித்துத் தள்ளுகிறவனுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.

15. பாவத்தின் வல்லமையை எப்போதும் உணர்ந்தவர்களாக பிள்ளைகளுக்குப் பயிற்சி கொடுங்கள்.

வேத போதனைகளை மீறிய எதிர்பார்ப்புகள் எதுவும் உங்களில் இருந்துவிடாதபடி இதை சுருக்கமாக விளக்கப் போகிறேன்.

உங்களுடைய பிள்ளைகளின் மனது சுத்தமான வெள்ளைக் காகிதமாக இருப்பதாகவும், சரியான சாதனங்களை மட்டும் உபயோகித்தால் எந்த பிரச்சனையும் ஏற்பட வழி இல்லை என்ற கற்பனையோடு வாழாதீர்கள். அது வெறும் கற்பனையென்று வெளிப்படையாகவே உங்களை நான் எச்சரிக்க விரும்புகிறேன். இளம் பிள்ளையின் இருதயத்தில் எவ்வளவு களங்கமும், தீங்கும் இருக்கிறதென்பதையும், அது எத்தனை வேகமாக தன்னுடைய கனிகளைக் கொடுக்க ஆரம்பிக்கிறது என்பதையும் நாம் வெளிப்படையாகவே பார்க்க முடியும். முரட்டுத்தனமான கோபங்கள், பிடிவாதம், பெருமை, பொறாமை, பேச மறுத்தல், இச்சை, சோம்பல், சுயநலம், ஏமாற்றுதல், தந்திரம், நேர்மையின்மை, மாய்மாலம், தீயவைகளைக் கற்றுக்கொள்ள மிகுந்த சுறுசுறுப்பு காட்டுதல், நல்லவைகளைக் கற்றுக்கொள்ள மிதமிஞ்சிய தாமதம் காட்டுதல், தங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள எதை வேண்டுமானாலும் செய்கிற தன்மை, இவைகளில் ஒரு சிலவற்றையோ அல்லது அனைத்தையுமோ உங்களுடைய சரீரமும், இரத்தமுமாயிருக்கின்ற உங்களுடைய பிள்ளைகளிடம் காண்பதற்கு தயாராக இருங்கள். மிகச் சிறு வயதிலேயே இவைகள் அவர்களில் வெளிப்படுவதைக் காண்பீர்கள். எத்தனை இயல்பாக இவைகள் அவர்களில் துளிர்விட்டு எழுகின்றன என்பதைக் காண அதிர்ச்சியாயிருக்கிறது. பாவத்தைக் கற்றுக்கொள்வதற்கு பிள்ளைகளுக்கு ஒரு பள்ளிக்கூடம் அவசியம் இல்லை.

ஆனால், நீங்கள் உங்கள் பிள்ளைகளில் பார்ப்பவற்றைக் குறித்து சோர்வடைந்தோ மனம் முறிந்தோ போகக்கூடாது. அந்த சின்னஞ்சிறு இருதயம் பாவத்தினால் நிரம்பி இருப்பதைப் பார்த்து அதை இருக்கக் கூடாததொன்றாகவோ அல்லது இயற்கைக்குப் புறம்பான அதிசயமான காரியமாகவோ எண்ணக்கூடாது. நமது ஆதிப்பிதாவாகிய ஆதாம் நமக்கு அளித்திருக்கும் ஒரே பங்கு அதுதான். அந்த பாவ இயல்போடுதான் நாம் இந்த உலகில் பிறந்திருக்கிறோம். நம் எல்லோருக்கும் சொந்தமான சொத்து அது. இந்த உண்மை கடவுளின் ஆசீர்வாதத்தோடு இன்னும் அதிகமாக கிருபையின் சாதனங்களை நீங்கள் உபயோகித்து பாவத்தோடு போராட உங்களைத் தூண்டட்டும். உங்கள் பிள்ளைகள் சோதனைகளில் விழுந்துவிடாதபடிக்குத் தடுப்பதற்கு நீங்கள் மேலும் மேலும் அதிக கவனமுள்ளவர்களாக இருக்க இந்த உண்மை உதவட்டும்.

உங்கள் பிள்ளைகள் நல்லவர்களென்றும், அவர்கள் நன்றாக வளர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்றும், அவர்கள் நம்பத் தகுந்தவர்களென்றும் உங்களிடம் எவராவது சொன்னால் அதை நம்பாதீர்கள். அதற்கு மாறாக, உங்கள் பிள்ளைகளின் இருதயம் எளிதில் தீப்பற்றிவிடக் கூடிய கந்தகம் போலிருக்கிறது என்பதை நினைவில் வைத்திருங்கள். அவர்களுடைய கபடம் வெடித்துச் சிதற ஒரு தீப்பொறி மட்டுமே தேவை என்பதை உணருங்கள். இக்காலங்களில் பெற்றோர்கள் மிகவும் எச்சரிக்கையாயிருப்பதைக் காண்பது அரிதாயிருக்கிறது. பிள்ளைகள் சுபாவத்திலேயே வழிவிலகினவர்களாக இருக்கிறார்கள் என்பதை மறவாது எச்சரிக்கையாயிருங்கள்.

16. வேத வாக்குத்தத்தங்களை எப்போதும் நினைவில் வைத்தவர்களாக பிள்ளைகளுக்கு பயிற்சியளியுங்கள்.

நீங்கள் உற்சாகமிழந்து விடாதபடிக்கு இதையும் சுருக்கமாகக் கூறுகிறேன். உங்களுக்கு எளிமையான வாக்குத்தத்தமொன்று கொடுக்கப்பட்டிருக்கின்றது: “பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து. அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்” (நீதி 22:6). இம்மாதிரியான உறுதிமொழிகளை நீங்கள் பெற்றிருப்பது பற்றி சிந்தித்துப் பாருங்கள். வேதாகமம் எழுதப்படுவதற்கு முன்பாக, இம்மாதிரியான வாக்குத்தத்தங்களே நமது ஆதிப்பிதாக்களின் இருதயத்திற்கு நம்பிக்கையைக் கொடுக்கும் வெளிச்சமாக இருந்திருக்கிறது. ஏனோக்கு, நோவா, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு போன்றவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு சில வாக்குத்தத்தங்களை நம்பி வாழ்ந்தே ஆவியில் ஆசீர்வாதமுடையவர்களாக இருந்தனர். வாக்குத்தத்தங்கள்தான் ஒவ்வொரு சந்ததியிலுமுள்ள விசுவாசிகளுக்கு ஆதரவையும் பெலனையும் அளிக்கும் பானமாக இருந்திருக்கிறது. இம்மாதிரியான எளிமையான வசனங்கள் ஒருவனுக்கு இருக்கும்போது அவன் சோர்வடைய வேண்டியதில்லை. பெற்றோர்களே, உங்களுடைய இருதயம் சோர்வுற்று, இனியும் முடியாது என்று நீங்கள் எண்ணும்போது இந்த வார்த்தைகளை வாசித்துப் பார்த்து ஆறுதல் அடையுங்கள்.

இந்த வாக்குத்தத்தத்தை தந்திருக்கிறவர் யாரென்று சிந்தித்துப் பாருங்கள். பொய் சொல்லவும், மனம் மாறவும் கூடிய மனிதனுடைய வார்த்தைகளல்ல இவை. என்றென்றும் மாறாதவராயிருக்கிற ராஜாதி ராஜாவினுடைய வார்த்தைகள் இவை. அவரொன்றைச் சொல்லி அதைச் செய்யாமலிருந்திருக்கிறாரா அல்லது அவரொன்றைப் பேசி அதை நல்லவிதமாக நிறைவேறாமல் செய்திருக்கிறாரா? அவரால் நிறைவேற்ற முடியாதது எதுவுமேயில்லை. மனிதனால் முடியாத அனைத்தையும் கடவுள் நிறைவேற்றுவார். வாசகர்களே! நாம் வாசிக்கின்ற வாக்குத்தத்தங்களின் பலனை நாம் அடையாமல் இருந்தால் தவறு கடவுளில் இல்லை; நம்மில்தான் இருக்கிறது.

வாக்குத்தத்தங்களின் மூலம் ஆறுதலடைவதை விட்டுவிடுவதற்கு முன் அவற்றில் என்ன சொல்லியிருக்கிறது என்று ஒரு தடவை சிந்தித்துப் பாருங்கள். பிள்ளைகளுக்கு கொடுக்கப்படும் நல்ல பயிற்சியின் காரணமாக பலன் கிடைக்கும் ஒரு குறிப்பிட்ட காலத்தை அது விளக்குகிறது. “அவன் முதிர் வயதிலும்” என்றிருப்பதை சிந்தியுங்கள். இந்த வார்த்தைகளில் நிச்சயம் ஆறுதல் இருக்கிறது. கவனத்தோடு பிள்ளைகளை வளர்க்கும்போது அதன் பலனை நீங்கள் கண்கூடாக உடனடியாகப் பார்க்க முடியாமல் போகலாம். ஆனால், நீங்கள் மடிந்துபோன பிறகு அத்தகைய வளர்ப்பு முறை என்னவிதமான ஆசீர்வாதமான கனிகளைத் தரும் என்பது உங்களுக்குத் தெரியாது. எதையும் உடனடியாகக் கொடுத்துவிடுவது கடவுளின் வழக்கம் அல்ல. “பிற்பாடு” தான் அவர் எதையும் செய்யத் தீர்மானிக்கிறவராக இருக்கிறார். இயற்கையைப் பொறுத்தவரையிலும், கிருபையைப் பொறுத்தவரையிலும் இந்தவிதத்தில்தான் கடவுள் செயல்படுகிறார். சிட்சையானது “பிற்காலத்தில்தான்” நீதியாகிய சமாதான பலனைத் தரும் (எபி 12:11) என்கிறது வேதம். தகப்பனுடைய திராட்சைத் தோட்டத்திலே வேலை செய்ய மறுத்த மகன், “பின்பு” தான் மனந்திருந்தி தகப்பனிடம் போனான் (மத் 21:29). உடனடியாக பலனைக் காணாவிட்டாலும் “பிற்பாடு” அதை அடைய முடியும் என்று பெற்றோர் எதிர்பார்ப்போடு காத்திருக்க வேண்டும். நீங்கள் நம்பிக்கையோடு விதைக்க வேண்டும். நம்பிக்கையோடு நடக்க வேண்டும்.

“உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு. அநேக நாட்களுக்குப் பின்பு அதன் பலனைக் காண்பாய்” (பிரசங்கி 11:1) என்று ஆவியானவர் சொல்லுகிறார். பெற்றோர் உயிரோடிருந்த காலத்தில் நல்ல பிள்ளை வளர்ப்பின் அடையாளங்களை வாழ்க்கையில் காட்டாத அநேக பிள்ளைகள் நியாயத்தீர்ப்பு நாளில் எழும்பி, தங்களுக்கு நல்ல பயிற்சி அளித்த பெற்றோருக்கு நன்றி தெரிவிப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஆகவே நம்பிக்கையோடு அவர்களுக்கு பயிற்சி அளியுங்கள். நீங்கள் செய்கின்ற எதுவும் பலனில்லாமல் போகாது. அந்த விதவையின் பிள்ளையின் மீது எலியா மூன்று முறை குப்புறப்படுத்து எழுந்த பின்புதான் அந்தப் பிள்ளைக்கு உயிர் வந்தது. இதை உதாரணமாக வைத்து விடாமுயற்சி செய்யுங்கள்.

17. இறுதியாக, நீங்கள் எடுக்கின்ற அத்தனை முயற்சிகளும் ஆசீர்வதிக்கப்படும்படி தொடர்ந்து ஜெபத்தோடு பிள்ளைகளுக்கு பயிற்சி அளியுங்கள்.

கடவுளின் ஆசீர்வாதம் இல்லாமல் நீங்கள் எவ்வளவுதான் நல்ல முயற்சி எடுத்தாலும் பிரயோஜனமில்லை. எல்லா மனுஷருடைய இருதயமும் அவருடைய கைகளில் இருக்கிறது. தமது பரிசுத்த ஆவியினால் அவர் உங்கள் பிள்ளைகளுடைய இருதயத்தைத் தொடாவிட்டால், உங்கள் முயற்சி பலனற்று நீங்கள் சோர்ந்து போவீர்கள். நீங்கள் விதைத்த விதை வளரும்படியாக இடைவிடாமல் அவர்களுடைய இருதயத்தில் ஜெபம் என்கிற தண்ணீரை ஊற்றுங்கள். நாம் ஜெபிப்பதைக் காட்டிலும் அதிகமாக செய்வதற்கு கடவுள் விரும்புகிறார். நாம் கேட்பதற்கும் மேலாக ஆசீர்வாதங்களை அள்ளிக் கொடுப்பதற்கு அவர் தயாராக இருக்கிறார். இருந்தாலும் நாம் நமது பிள்ளைகளுக்காக ஜெபிப்பதைக் கேட்பதற்கு அவர் விரும்புகிறார். ஜெபமாகிய இந்த விஷயத்தை நீங்கள் செய்கிற எல்லா காரியத்துக்கும் தலையானதாகவும், முத்திரையாகவும் வைக்கும்படி புத்தி சொல்லுகிறேன். அதிகமான ஜெபத்தோடு வளர்க்கப்பட்ட பிள்ளை கைவிடப்படுவது மிகவும் அரிது என்பது என் கருத்து.

யாக்கோபு தன்னுடைய பிள்ளைகளை பார்த்த விதமாகவே நீங்களும் உங்கள் பிள்ளைகளைப் பாருங்கள். யாக்கோபு ஏசாவிடம் சொல்லுகிறார்: “தேவன் உமது அடியானுக்கு அருளின பிள்ளைகள்” (ஆதி 33:5) என்று. யோசேப்பு தன் பிள்ளைகளைப் பார்த்தது போல உங்கள் பிள்ளைகளைப் பாருங்கள். அவர் தன் தகப்பனிடம் சொல்லுகிறார், “இவர்கள் இவ்விடத்திலே தேவன் எனக்கு அருளின குமாரர்” (ஆதி 48:9) என்று. சங்கீதக்காரன் சொல்லுவது போல “பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம். கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்” (சங் 127:3) என்று எண்ணுங்கள். அதன் பின் கர்த்தரிடம், பரிசுத்த தைரியத்துடனே, அவர் அருளின இந்த வெகுமதிகளிடம் கிருபையும் இரக்கமும் காட்டுமாறு வேண்டிக்கொள்ளுங்கள். ஆபிரகாம் இஸ்மவேலை நேசித்தபடியினால் அவனுக்காக எப்படி வேண்டிக்கொள்கிறாரென்று பாருங்கள். “இஸ்மவேல் உமக்கு முன்பாகப் பிழைப்பானாக” (ஆதி 17:18) என்று ஆபிரகாம் கேட்கிறார். சிம்சோனைக் குறித்து மனோவா தூதனிடம் என்ன கேட்கிறாரென்று கவனியுங்கள். “அந்தப் பிள்ளையை எப்படி வளர்க்க வேண்டும்? அதை எப்படி நடத்த வேண்டும்?” (நியா 13:12) என்று கேட்பதைப் பார்க்கிறோம். தனது பிள்ளைகளின் ஆத்துமாக்களைக் குறித்து யோபு எவ்வளவு அக்கறையாக இருக்கிறார் என்று பாருங்கள். “ஒருவேளை என் குமாரர் பாவம் செய்து, தேவனைத் தங்கள் இருதயத்திலே தூஷித்திருப்பார்கள் என்று சொல்லி, அவர்களை அழைத்தனுப்பி, பரிசுத்தப்படுத்தி, அதிகாலமே எழுந்து, அவர்கள் எல்லாருடைய இலக்கத்தின்படியேயும் சர்வாங்க

தகனபலிகளை செலுத்துவான். இந்தப் பிரகாரமாக யோபு அந்த நாட்களிலெல்லாம் செய்து வருவான்” (யோபு 1:5) என்கிறது வேதம். பெற்றோரே, நீங்கள் உங்கள் பிள்ளைகள் மேல் அன்பு காட்டுவீர்களானால் இவர்களைப் போலவே ஜெபியுங்கள். உங்கள் பிள்ளைகளுக்காக கடவுளுக்கு முன்பாக நீங்கள் ஜெபிக்க வேண்டிய ஜெபங்களுக்கு எல்லையேயில்லை.

முடிவுரை

வாசகர்களே, கடைசியாக உங்கள் பிள்ளைகளை பரலோகத்துக்குரிய வாழ்க்கைக்கு பயிற்சி கொடுத்து வளர்க்க வேண்டுமானால், உங்கள் அதிகாரத்துக்குட்பட்டிருக்கிற சகலவிதமான கிருபையின் சாதனங்களையும் நீங்கள் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.

கடவுள் சர்வ வல்லமையுடையவர் என்பதையும், தன் சித்தத்தின் ஆலோசனையின்படி சகலத்தையும் செய்கிறவர் என்பதையும் நான் அறிவேன். ரெகொபெயாம் சாலமோனின் குமாரன் என்பதையும், மனாசே எசேக்கியாவின் குமாரன் என்பதையும் தேவபக்தியுள்ள பெற்றோருக்கு எப்போதும் தேவபக்தியுள்ள பிள்ளைகள் பிறப்பார்கள் என்பது நிச்சயமல்ல என்பதையும் நான் அறிவேன். அதேநேரம் கடவுள் சில கருவிகளைக் கொண்டு தன்னுடைய காரியங்களை நிறைவேற்றிக்கொள்ளுகிறவர் என்பதும் எனக்குத் தெரியும். நான் இதுவரை விளக்கிய கிருபையின் கருவிகளை நீங்கள் அலட்சியப்படுத்துவீர்களானால் உங்கள் பிள்ளைகள் நல்லபடியாக வளர்ந்து வருவதற்கு வாய்ப்பில்லை.

பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகள் ஞானஸ்நானம் பெற்று திருச்சபையில் அங்கத்தவராகுவதற்கு நீங்கள் அவர்களை அழைத்துச் செல்லலாம். அவர்களுக்காக பரிந்துரைக்கிற தேவபக்தியுள்ளவர்களை நியமிக்கலாம்; உங்களுக்காக ஜெபிக்கிறவர்களின் உதவியை நாடலாம். பிள்ளைகளை நல்ல பாடசாலைக்கு அனுப்பலாம். அவர்களுக்கு வேதாகமத்தையும், ஜெபப் புத்தகங்களையும் அளித்து வெறும் அறிவை மட்டும் வழங்குபவர்களாக இருக்கலாம். இவை யாவும் இருந்தாலும், வீட்டில் இடைவிடாமல் அவர்களுக்கு பயிற்சி கொடுக்காமல் இருப்பீர்களேயானால், முடிவில் அவர்கள் ஆத்துமாக்களுக்கு கேடுதான் ஏற்படும் என்று நான் வெளிப்படையாகவே உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். வீட்டில்தான் நல்ல பழக்கவழக்கங்கள் உருவாகின்றன. வீட்டில்தான் குணாதிசயங்களுக்கு அத்திவாரம் போடப்படுகிறது. விருப்பங்கள், கருத்துக்கள் எல்லாவற்றுக்கும் வீடுதான் ஆதாரமாக இருக்கிறது. ஆகவே வீட்டில் அவர்களுக்கு கவனத்தோடு நல்ல வளர்ப்புப் பயிற்சி அளிக்க சகல முயற்சிகளையும் செய்யுங்கள் என்று நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். போல்டன் (Bolton) என்கிற ஒரு மனிதன் தனது மரணப்படுக்கையிலே தனது பிள்ளைகளிடம் சொன்னதைப் போல சொல்லக் கூடிய மனிதன் மகிழ்ச்சி நிறைந்தவனாயிருப்பான். அவர் என்ன சொன்னார் தெரியுமா? “கிறிஸ்துவின் நியாயஸ்தலத்திலே, உங்களில் ஒருவராவது மறுபடியும் பிறக்காதவர்களாக என்னை சந்திக்கத் துணிய மாட்டீர்கள் என்று நம்புகிறேன்” என்றார் அவர்.தாய், தகப்பன்மாரே, நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு முன்பாகவும், கடவுளுக்கு முன்பாகவும் நான் உங்களுக்கு சொல்லுகிறேன் – உங்கள் பிள்ளைகளை அவர்கள் நடக்க வேண்டிய வழியிலே நடத்துவதற்கு தேவையான எல்லா முயற்சிகளையும் எடுத்து பயிற்சி கொடுங்கள். இதை நீங்கள் அவர்களுடைய ஆத்துமாக்களுக்காக மாத்திரமல்ல, எதிர்காலத்தில் உங்களுடைய ஆறுதலுக்கும் சமாதானத்திற்காகவும் செய்ய வேண்டும். அதிலேயே உங்களுடைய உண்மையான சந்தோஷம் தங்கியிருக்கிறது. வில்லிலிருந்து புறப்படும் அம்பு மனிதனுடைய இதயத்தைத் தாக்கிக் காயப்படுத்துவது போல பிள்ளைகள் அநேக பெற்றோரின் இதயங்களைக் காயப்படுத்திக் கொண்டிருப்பதை எங்கும் காண்கிறோம். பிள்ளைகளால் உண்டாகும் கசப்பான பானத்தை அநேகர் அருந்த வேண்டியதாக இருக்கிறது.

பிள்ளைகளே அநேக மனிதர்களுடைய கண்ணீருக்குக் காரணமாக இருந்துவிடுகிறார்கள். இதை ஆதாமில் நாம் பார்க்கிறோம். யாக்கோபுவில் பார்க்கிறோம். தாவீதின் வாழ்க்கையிலும் பார்க்கிறோம். பிள்ளைகளால் பெற்றோருக்கு ஏற்படுகிற துயரத்தைக் காட்டிலும் அதிகமான துயரம் இந்த உலகத்தில் வேறில்லை. நீங்கள் கவனமாக இருங்கள்! இவற்றை அலட்சியப்படுத்தினால் உங்களுடைய வயோதிப காலத்தில் இத்தகைய கஷ்டங்களை நீங்களும் அனுபவிக்க நேரிடும். இதுவரை நான் விளக்கிய உண்மைகளை சிந்தியுங்கள். இல்லாவிட்டால் வயோதிபத்தில் நீங்கள் உங்கள் பெலனை இழந்து, கண் பார்வை மங்கும் காலத்தில், நன்றிகெட்ட உங்கள் பிள்ளைகளால் இழிவாக நடத்தப்பட்டு, கண்ணீர் வடிக்க நேரிடும்.

உங்கள் பிள்ளைகள் உங்களுடைய வயோதிப காலத்தில் உங்களுக்கு பக்கபலமாக இருந்து உங்களை போஷிக்க வேண்டுமென்று விரும்புகிறீர்களா? அவர்கள் சாபத்தை அடையாமல் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமானால், துயரத்தை அனுபவிக்காமல் சந்தோஷத்தை அடைய வேண்டுமானால், ரூபனாக இல்லாமல் யூதாவாக வாழ வேண்டுமானால், ஓர்பாளாக இல்லாமல் ரூத்தாக இருக்க வேண்டுமானால், நோவாவைப் போல பிள்ளைகளின் செயல்களைக் கண்டு அவமானம் அடையாமலிருக்க வேண்டுமானால், வாழ்க்கையே வெறுத்துப் போன ரெபெக்காளைப் போன்ற நிலையை அடையாமலிருக்க வேண்டுமானால், நான் தந்திருக்கும் புத்திமதிகளை கருத்தோடு சிந்தித்துப் பாருங்கள். பிள்ளைகளை சிறுவயதிலிருந்தே சரியான வழியில் நடக்க பயிற்சி அளியுங்கள்.

இந்த ஆக்கத்தை வாசிக்கிற ஒவ்வொருவரும், உங்களுடைய ஆத்துமாவின் மதிப்பை உணர்ந்துகொள்ளும்படியாக கடவுள் உங்களுடன் தன் வார்த்தை மூலமாகப் பேச வேண்டும் என்று ஜெபித்து இதை முடிக்க நான் விரும்புகிறேன். இதை சரியாக உணராதபடியால்தான் ஞானஸ்நானம் என்பது பல நேரங்களில் வெறும் சடங்காகி விடுகிறது. கிறிஸ்தவ பயிற்சி முறைகள் யாவும் அலட்சியப்படுத்தப்பட்டு மதிப்பில்லாமல் போய்விடுகின்றன. அநேக சமயங்களில் பெற்றோர்கள் தங்களுடைய சொந்த ஆத்துமாவைக் குறித்த உணர்வே இல்லாமலிருக்கிறபடியால்தான் அவர்களுடைய பிள்ளைகளின் ஆத்துமாக்களைக் குறித்து அவர்கள் உணர்வற்றவர்களாயிருக்கிறார்கள். மனிதனுடைய இயல்பான சுபாவ நிலைக்கும், கிருபையின் நிலைக்கும் இடையிலுள்ள மாபெரும் வித்தியாசத்தை பெற்றோர் உணராமலிருக்கின்றபடியால்தான் தங்களுடைய பிள்ளைகளை அவர்கள் போகிற வழியில் விட்டுவிட்டு சும்மாயிருக்கிறார்கள்.

பாவத்தை கடவுள் அறவே வெறுக்கிறார் என்பதை அவரே உங்கள் அனைவருக்கும் கற்றுக் கொடுக்கட்டும். அப்போதுதான் நீங்கள் உங்களுடைய பிள்ளைகளின் பாவங்களைக் குறித்து துக்கத்தோடு அழுது, நெருப்பில் கிடக்கும் கொள்ளிக்கட்டையைப் போல இருக்கும் அவர்களை வெளியே இழுத்து காப்பாற்ற முயற்சிப்பீர்கள்.

கிறிஸ்து எவ்வளவு விலையேறப்பெற்றவர் என்பதையும், நமது இரட்சிப்பிற்காக அவர் எவ்வளவு பெரிய பூரணமான, மகத்தான காரியத்தை செய்து முடித்திருக்கிறார் என்பதையும் கர்த்தர் உங்கள் அனைவருக்கும் கற்றுக் கொடுக்கட்டும். அப்போதுதான், நீங்கள் கிருபையின் சாதனங்கள் எல்லாவற்றையும் பயன்படுத்தி பிள்ளைகளை இயேசு கிறிஸ்துவிடம், அவர்கள் கிறிஸ்து மூலமாக பிழைக்கும்படி கொண்டு வருவீர்கள்.

உங்கள் ஆத்துமாக்களைப் புதுப்பிக்கவும், பரிசுத்தப்படுத்தவும், தூண்டிவிடவும் பரிசுத்த ஆவியானவரின் உதவி எத்தனை அவசியம் என்பதை கர்த்தர் உங்கள் அனைவருக்கும் கற்றுக்கொடுக்கட்டும். அப்போதுதான் பரிசுத்த ஆவிக்காக இடைவிடாமல் ஜெபிக்குமாறு உங்கள் பிள்ளைகளை நீங்கள் ஊக்கப்படுத்துவீர்கள். பரிசுத்த ஆவியானவர் அவர்கள் இதயத்திலே வல்லமையோடு வந்து, அவர்களை புது சிருஷ்டியாக்கும் வரைக்கும் ஓய்வின்றி ஜெபிக்கக் கற்றுக் கொடுப்பீர்கள் என்று நான் நம்பமுடியும்.

தேவன் இவற்றையெல்லாம் உங்களுக்குத் தரும்போதுதான், நீங்கள் உங்கள் பிள்ளைகளை கவனத்தோடு பயிற்றுவிப்பீர்கள் என்ற நம்பிக்கையை நான் அடைவேன். இந்த உலகத்தில் வாழ்வதற்கு மட்டுமல்ல, வரப்போகின்ற உலகில் வாழ்வதற்கும் அவர்களுக்கு நல்ல பயிற்சியளியுங்கள். இந்த உலகத்தில் வாழவும், பரலோகத்திற்குமாக நல்ல பயிற்சி அளியுங்கள். கடவுளுக்காகவும், கிறிஸ்துவுக்காகவும், நித்திய வாழ்க்கைக்காகவும் பயிற்சி கொடுங்கள்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s