(புதிய நூலான ‘கிறிஸ்தவ வினா விடைப் போதனைகள்’ வெளிவந்திருக்கின்றது. அதன் அவசியத்தையும் பயன்பாட்டையும் இந்த ஆக்கத்தில் வலியுறுத்தி விளக்கியிருக்கிறோம். இது நூலில் அறிமுகவுரையாக வந்திருக்கின்றது. – ஆசிரியர்.)
வினா விடைப் போதனை தமிழ் கிறிஸ்தவ உலகிற்கு பெரும்பாலும் புதியது. ஆரம்ப கால மிஷனரிகளான வில்லியம் கேரி, சீகன்பால்கு போன்றோர் கீழைத்தேய நாடுகளில் அதை அறிமுகப்படுத்தியிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இருந்தபோதும் திருச்சபைகளில் அவை நிலைகொள்ளவில்லை. இன்றைக்கு வாக்குத்தத்த வசனங்களும், தியானச் செய்திகளும் மட்டுமே திருச்சபைகளை அலங்கரித்து சத்தான போதனைகள் ஆத்துமாக்களை அடைய முடியாதபடி மறைக்கப்பட்டு வருகின்றன. இது திருச்சபையின் ஆத்தும வளர்ச்சிக்கு அறிகுறியாகாது. பல வருடங்களுக்கு முன்பாக சிறுவர்களுக்கான சிறிய வினா விடைப் போதனையை வெளியிட்டிருந்தோம். அதற்கு நல்ல வரவேற்பிருந்தது. பல சபைகள் அதை ஞாயிறு பாடசாலைகளிலும், கிறிஸ்தவர்கள் குடும்ப ஆராதனையிலும் பயன்படுத்திப் பலனடைந்தார்கள். அது தொடர்ந்தும் அச்சில் இருந்து வருகின்றது.
வினா விடைப் போதனை முறையை கர்த்தரின் திருச்சபை வரலாற்றில் அதிகம் பயன்படுத்தி வந்துள்ளது. சீர்திருத்தவாதியான மார்டின் லூத்தர் தன்னுடைய படைப்புக்கள் அனைத்திலும் தான் சிறுவர்களுக்காக எழுதிய வினா விடைப் போதனையையே மிகவும் முக்கியமானதாகக் கருதியுள்ளார். தான் எழுதிய அனைத்து நூல்களும் அழிந்துபோனாலும் வினா விடைப் போதனை பாதுகாக்கப்பட வேண்டுமென்று அவர் கருதினார். வினா விடைப் போதனை என்றவுடனேயே அது சிறுவர்களுக்கானது என்று எண்ணிவிடக்கூடாது. அந்த எண்ணமே நம்மில் பெரும்பாலானோருக்கு இருக்கிறது. சிறுவர்களுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்காகவும் வினா விடைப் போதனைகள் இருக்கின்றன. பெரியவர்களுக்கான அருமையான வினா விடைப் போதனை நூல்களை வரலாறு நமக்குத் தந்திருக்கிறது.
பதினேழாம் நூற்றாண்டில் வெஸ்ட்மின்ஸ்டர் அசெம்பிளி கூடி திருச்சபையின் பாதுகாப்பிற்காக விசுவாச அறிக்கையைப் படைத்தனர். இதேபோன்று பாப்திஸ்துகளும் 1689 விசுவாச அறிக்கையை வெளியிட்டனர். வெஸ்ட்மின்ஸ்டர் குறுகிய வினா விடைப் போதனை, விரிவான வினா விடைப் போதனை ஆகியவற்றை வெஸ்ட்மின்ஸ்டர் அசெம்பிளி படைத்தது. விசுவாச அறிக்கை வேத சத்தியங்களை பல்வேறு தலைப்புகளில் தொகுத்து விளக்கமாக அளிக்க, அதே வேத சத்தியங்களை வினா விடை முறையில் தொகுத்து சுருக்கமாக அளித்தது வினா விடைப் போதனை. இந்த வெஸ்ட்மின்ஸ்டர் வினா விடைப் போதனையைப் பின்பற்றி ஒரு சில அவசியமான மாற்றங்களுடன் பாப்திஸ்துகள் சில வினா விடைப் போதனைகளை வெளியிட்டிருந்தனர். அவற்றில் முக்கியமானது பென்ஜமின் கீச் வெளியிட்ட (1693) வினா விடைப் போதனை. விசுவாச அறிக்கை மற்றும் வினா விடைப் போதனைகளின் அவசியத்தை வரலாற்றில் சீர்திருத்தவாத காலமும், பியூரிட்டன் காலப்பகுதியும் அதிகம் உணர்ந்திருந்தது. அதற்குப் பின்னைய காலப்பகுதியில் ஜொனத்தன் எட்வர்ட்ஸ், ஸ்பர்ஜன் போன்றோரும் அவற்றைத் திருச்சபைகளில் பயன்படுத்தியுள்ளனர். ரிச்சட் பெக்ஸ்டர் என்ற போதகர் தான் பணிபுரிந்த ஊரான கிடர்மின்ஸ்டரின் மக்கள் அனைவருக்கும் வினா விடைப் போதனையளித்து கர்த்தரை அறிந்துகொள்ளும்படிச் செய்துள்ளார். இது வரலாறு கூறும் உண்மை.
வெஸ்ட்மின்ஸ்டர் வினா விடைப் போதனையைப் பின்பற்றி காலத்துக்கு அவசியமான ஒரு சில மேலதிக வினா விடைகளுடனும், பாப்திஸ்து இறையியலைப் பிரதிபலிக்கும் முறையிலும் இந்த வினா விடைப் போதனையை திருச்சபைகளுக்கு உதவுமுகமாக சிம்ப்சன் வெளியீட்டாளர்கள் வெளியிட்டனர். வெஸ்ட்மின்ஸ்டர் சுருக்க வினா விடைப் போதனையை மட்டுமல்லாது விரிவான வினா விடைப் போதனையையும் பின்பற்றி மிகக் கவனத்துடன் இது தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது. தற்கால இறையியல் குழப்பங்களுக்கு தகுந்த பதிலளிக்கு முகமாக மேலதிகமாக சேர்க்கப்பட்டுள்ள வினா விடைகள் அமைகின்றன.
இறையியல் அறிஞர்களான தற்கால சீர்திருத்த பாப்திஸ்து போதகர்களான கிரெக் நிக்கல்ஸ், சாமுவேல் வோல்டிரன் போன்றோர் இதைத் தயாரிப்பதற்கு நல்லாலோசனைகளைத் தந்துள்ளனர். இதன் அட்டவணையை போதகர் கிரெக் நிக்கல்ஸ் தயாரித்துள்ளார். வினா விடைகளுக்கான வேத வசனங்கள் அனைத்தும் பெரும்பாலும் வெஸ்ட்மின்ஸ்டர் வினா விடைப் போதனைகளைப் பின்பற்றியே இதிலும் காணப்படுகின்றன. காலத்தின் அவசியம் கருதி ஒருசில புதிய வசனங்களும் இணைக்கப்பட்டுள்ளன. சிம்ப்சன் வெளியீட்டின் வினா விடைப் போதனையில் எந்தவித மாற்றமும் செய்யாமல் அவர்களுடைய அனுமதியுடன் அப்படியே இதை நாம் தமிழில் வெளியிட்டிருக்கிறோம். இதை வெளியிட அனுமதி தந்த அவர்களுக்கு எங்களுடைய நன்றிகள் உரித்தானவை.
திருச்சபை சத்தியத்துக்கு தூணாகவும், ஆதாரமாகவும் இருக்க வேண்டும் என்று பவுல் அப்போஸ்தலன் தீமோத்தேயுவுக்கு எழுதி நினைவுறுத்தினார். கிறிஸ்தவம் சத்தியத்தை அடிப்படையாகக் கொண்டது. சத்தியத்தின் அடிப்படையிலேயே நம்முடைய கிறிஸ்தவ அனுபவங்களும் அமைய வேண்டும். அதுவே கிறிஸ்துவை மகிமைப்படுத்தும் கிறிஸ்தவமாக இருக்க முடியும். அந்த அடிப்படையில் கிறிஸ்தவ சபைகளும், கிறிஸ்தவர்களும் சத்தியத்தில் மேலான அறிவைப் பெற்று தங்களுடைய கிறிஸ்தவ வாழ்க்கையில் கிறிஸ்துவின் சந்தோஷத்தை சகலத்திலும் அனுபவிக்க வேண்டும். அதற்கு விசுவாச அறிக்கையைப் போல வினா விடைப் போதனையும் நிச்சயம் உதவும். இந்த வினா விடைப் போதனையை சபைகள் வேதப் பிரசங்கங்களிலும், வேத பாட வகுப்புகளிலும், ஞாயிறு பாடசாலைகளிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். போதகர்களுக்கும், வேத பாட, ஞாயிறு பாடசாலை ஆசிரியர்களுக்கும் வேத சத்தியங்களில் நல்லறிவு பெற்றுக்கொள்ள இது அவசியம் துணைபோகும்.
சபைகளில் சிறுவர்களுக்கும், வாலிபர்களுக்கும் வினா விடைப் போதனைகளைக் கற்றுக்கொடுப்பதைப் போல மேலானது ஒன்றுமில்லை. அவர்களை சத்தியத்தில் வளர்க்க அதைவிட மேலான வழி எனக்குத் தெரியவில்லை. அதனால்தான் வரலாற்றில் திருச்சபை வினா விடைப் போதனைகளுக்கு அத்தனை முக்கியத்துவம் அளித்திருக்கிறது. இளம் வயதில் சத்தியத்தை வினா விடைப் போதனை மூலம் கற்று வளர்கிறவர்கள் திருச்சபைகளை அலங்கரிக்கும்போது அச்சபைகள் உயர்வதற்கே வாய்ப்பிருக்கின்றது. வினா விடைப் போதனை வேத சத்தியங்களை அள்ளி அள்ளி வழங்கி நம்மை வேதத்தால் நிரப்புவதையே நோக்கமாகக் கொண்டிருப்பதை இதை வாசிக்கும்போதே உணர்வீர்கள்.
இந்த வினா விடைக்கான அட்டவணையைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் சொல்ல வேண்டியது அவசியம். இதிலுள்ள 115 வினா விடைகளையும் இந்த அட்டவணை வரையறுக்கப்பட்ட இறையியல் போதனைகளின் அடிப்படையில் மூன்று அலகுகளாகப் பிரித்து எந்தெந்த சத்தியங்களின் கீழ் படிமுறையாக அவை வருகின்றன என்பதை முறையாகத் தொகுத்து வழங்குகிறது. முதலாவது வினா விடை மனிதனின் தோற்றத்திற்கும், வாழ்க்கைக்குமான குறிக்கோளை விளக்குகிறது. இந்த வினா விடை, கர்த்தரின் மகிமைக்காகவே மனிதன் உருவாக்கப்பட்டிருப்பதை விளக்கி கர்த்தரின் இறையாண்மையின் அடிப்படையில் முழு வேதபோதனைகளையும் ஏனைய வினா விடைகளின் மூலம் அணுகுவதைக் கவனிக்கிறோம். இதுவே சீர்திருத்த கிறிஸ்தவத்தின் விசேஷ தன்மை.
ஏனைய 114 வினா விடைகளும் மூன்று அலகுகளுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. முதலாவது அலகு கர்த்தருடைய வார்த்தையின் தன்மையைப் பற்றியது. ஆவியினால் அருளப்பட்டிருக்கும் வேதாகமமே கிறிஸ்தவ விசுவாசத்திற்கும் நடைமுறைக்கும் அத்திவாரமாக இருக்கின்றது. அது பற்றிய மூன்று முக்கிய அம்சங்களை – அதன் போதுமான தன்மை, நம்பகத் தன்மை, உள்ளடக்கம் ஆகியவற்றை 2ல் இருந்து 4வரையிலான வினா விடைகள் இந்த முதலாம் அலகில் விளக்குகின்றன. இரண்டாம் அலகு, கடவுளைப் பற்றியது. அவருடைய நித்திய மகிமையையும் அற்புத செயல்களையும் அது விளக்குகிறது. 5ல் இருந்து 41வரையுள்ள வினா விடைகள் கடவுளைப் பற்றிய இந்த அரும்பெரும் உண்மைகளை விளக்குகின்றன. இந்த அலகில் மூன்று பிரிவுகள் இருக்கின்றன – கடவுளைப் பற்றிய போதனை, கடவுளின் படைப்பைப் பற்றிய போதனை, பாவத்தில் இருந்து மீட்பு ஆகிய போதனையே அவை. இந்த அலகில் காணப்படும் இரண்டாம், மூன்றாம் பிரிவுகளில் ஒவ்வொன்றிற்கும் கீழ் மேலும் மூன்று பிரிவுகள் உள்ளன. அந்தளவுக்கு கடவுளின் செயல்கள் பற்றிய தெளிவான விளக்கங்கள் இப்பகுதியில் வினா விடைகள் மூலம் தரப்பட்டுள்ளன.
இந்த அட்டவணையில் இதுவரை நாம் கவனித்துள்ள இரண்டு அலகுகளிலும் முக்கியமான உண்மையொன்றை நாம் சந்திக்கிறோம். விசுவாச அறிக்கையைப் போலவே இந்த வினா விடையும் முதலில் கடவுளின் வேதத்தோடு ஆரம்பிக்கிறது. ஏனெனில், வேதமே (அது மட்டுமே) நமக்கு கடவுளைப் பற்றிப் போதிக்கும் ஒரே வெளிப்பாடாக இருக்கின்றது. அதை விளக்கிய பிறகு கடவுளைப் பற்றி வேதம் தருகின்ற உண்மைகளை வினா விடை விளக்குகிறது.
வினா விடையின் மூன்றாம் அலகு மனிதன் அறிந்து, பின்பற்றும்படியாக கடவுள் வெளிப்படுத்தியுள்ள அவருடைய சித்தத்தை விளக்குகிறது. அவருடைய சித்தத்தின் சுருக்கமான மொத்த வடிவமாக பத்துக்கட்டளைகள் அமைந்திருக்கின்றன. அவருடைய சித்தத்தை நிறைவேற்றுவதே கிறிஸ்தவனுடைய தலையாய கடமையாக இருக்கின்றது. இந்த அலகு 42ல் இருந்து 115 வரையுள்ள வினா விடைகளை உள்ளடக்கி அவற்றை விளக்குகின்றன. இந்த அலகில் இரண்டு பெரும் பிரிவுகள் உள்ளன. முதலாவது, கடவுளின் ஒழுக்க நியதிச் சட்டங்களான பத்துக்கட்டளைகள்; இரண்டாவது, கடவுளின் சுவிசேஷம். இவற்றின் மூலம் கிறிஸ்தவனின் கடமைகள் அனைத்தும் வலியுறுத்தி விளக்கப்படுகின்றன. வினா விடைக்கான இந்த அட்டவணை ம¤கவும் அவசியமானதாக, வினா விடைக்கான தெளிவான வழிகாட்டியாக இருந்து உதவுகின்றது.
இந்த வினா விடைப் போதனை நூலின் சிறப்பம்சங்களை விளக்காமலிருக்க முடியாது.
இது வரையறுக்கப்பட்ட இறையியல் போதனையளிக்கும் ஒரு சுருக்கக் கையேடாக இருக்கிறது. வேதத்தின் அத்தனை முக்கிய சத்தியங்களையும் வினா விடை முறையில் இது தொகுத்துத் தருகிறது. வேதம் போதிக்கும் எந்த சத்தியத்தைப் பற்றியும் உடனடியாக அறிந்துகொள்ள வேண்டுமானால் இதைப் புரட்டி அது சம்பந்தமான வினா விடை மூலம் தெளிவான, சுருக்க விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளலாம். அந்த முறையில் அநாதி காலத்தில் கர்த்தர் ஏற்படுத்திய உடன்படிக்கையில் இருந்து இறுதிக் காலத்தில் கிறிஸ்துவினதும் சபையினதும் மகிமைத்துவம் வரையிலும் உள்ள அத்தனைப் போதனைகளையும் இது சுருக்கமாக அளிக்கின்றது. ஒரு போதகனோ, வேத பாடமெடுக்கும் அல்லது ஞாயிறு பாடசாலை ஆசிரியரொருவரோ தான் போதிக்கும் விஷயங்கள் வேதத்தின்படி அமையுமாறு பார்த்துக்கொள்ள இந்த வினா விடை நிச்சயம் உதவும். இதிலுள்ள விஷயங்கள் பற்றி மேலும் அறிந்துகொள்ள 1689 விசுவாச அறிக்கை இருக்கவே இருக்கிறது.
- இன்னொரு முக்கிய அம்சமாக இந்த வினா விடைப் போதனை முழுவதும் அந்தப் போதனைகளுக்கான வேத ஆதாரங்கள் பெருமளவில் தரப்பட்டிருக்கின்றன. வேத வசனங்கள் நிரம்பி வழியும் வினா விடை நூலாக இது இருக்கிறது.
- இது வெஸ்ட்மின்ஸ்டர் சுருக்க வினா விடை மட்டுமல்லாது விரிவான வினா விடையையும் பின்பற்றி வரையப்பட்டிருப்பதால் இந்த ஒரே வினா விடை நூலின் மூலம் அதிக பயன்களை நாம் பெற்றுக்கொள்ள முடிகின்றது.
இந்த வினா விடைப் போதனையைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நலன்கள்:
சிறுவர்கள், வாலிபர்கள் மற்றும் பெரியவர்கள் வரை கர்த்தரில் இருந்து ஆரம்பித்து இறுதிக்கால நிகழ்ச்சிவரையுள்ள அத்தனை அதிமுக்கியமான வேத சத்தியங்களையும் இதன் மூலம் சுருக்கமாக, படிமுறையாக, தெளிவாகக் கற்றுக்கொள்ள முடியும். குழப்பமான சூழ்நிலையில் இருக்கும் நம்மினத்துக் கிறிஸ்தவத்தின் குருட்டுக் கண்களை இது நிச்சயம் திறந்து வைக்கும்.
இவற்றைக் கற்று வளரும் சிறுவர்களும், வாலிபர்களும், பெரியவர்களும் திருச்சபையில் சத்தியமறிந்த ஆத்மீக வளர்ச்சியை நிச்சயம் அடையும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
திருச்சபையின் வளர்ச்சிக்கும், சத்திய விரோதப் போக்கை எதிர்த்து நிற்கப் பாதுகாப்புக் கேடயமாகவும் இந்த வினா விடைப் போதனை உதவும். அந்த வகையில் இது விசுவாச அறிக்கையைப் போன்றது.
இந்தளவுக்கு வினா விடைப் போதனையின் அவசியத்தை நான் விளக்கியிருந்தபோதும் அது இல்லாமல் கிறிஸ்தவம் இருக்க முடியாது என்ற ஆணவப் போக்கோடு அதைச் செய்யவில்லை. வினா விடைப் போதனைகள் இருப்பதையே அறியாமல் திருச்சபைகள் நம்மினத்தில் இருந்து வந்திருக்கின்றன. கர்த்தரின் கிருபையால் வேதத்தைப் பயன்படுத்தி தங்களைத் தவறான வழிகளில் இருந்து சில சபைகள் எப்படியோ பாதுகாத்துக்கொள்ளவும் செய்திருக்கின்றன. இருந்தபோதும் தந்திரமாக பிசாசு திருச்சபையை அழிப்பதற்கு நவீன முயற்சிகளையெல்லாம் செய்து வரும் இக்காலத்தில் எந்தத் திருச்சபையும், கிறிஸ்தவனும் அசட்டையாக இருந்து கர்த்தரை மகிமைப்படுத்த வழியில்லை. சபைகளும், கிறிஸ்தவர்களும் சத்தியத்தில் நல்லறிவு பெறவும், தங்களைத் தொடர்ந்து பாதுகாத்துக்கொண்டு நல்வளர்ச்சி அடையவும் இந்த வினா விடைப் போதனை நிச்சயம் தமிழ் திருச்சபைகளுக்கு பெருந்துணை போகும் என்பதில் எனக்கு சந்தேகமேயில்லை.
வரலாற்றில் பதினாறாம், பதினேழாம் நூற்றாண்டுகளில் பெருங்காரியங்களைத் திருச்சபையில் செய்த நம் தேவன் நமக்கு வழங்கியிருக்கும் அருஞ்சாதனம் இந்த வினா விடை நூல். தமிழில் இது வெளிவருகின்ற பெருவாய்ப்பு நமக்குக் கிடைக்கும்படி கர்த்தர் கிருபை பாராட்டியிருக்கிறார். இனி திருச்சபைகளையும், கிறிஸ்தவர்களின் வாழ்க்கையையும் இது அலங்கரித்து கிறிஸ்துவுக்கு மகிமை சேர்க்குமானால் அதுவே எங்கள் பணிக்குக் கிடைத்த ஆசீர்வாதமாக இருக்க முடியும்.