நீயும் நானுமா! (பாகம் 2)

இதற்கு முன்பு வந்திருந்த ஓரிதழில் இதே தலைப்பில் மனிதனுடைய சித்தத்தின் தன்மையை (The Will of Man) ஆராயும் ஆக்கங்களின் ஒருபகுதியை வெளியிட்டிருந்தோம். அதன் இரண்டாம் பகுதியாக இந்த ஆக்கம் வெளிவருகிறது. இதுவரை, மூல பாவத்தைப் பற்றிய பெலேஜியனின் கோட்பாடுகளில் இருந்து ஜெக்கபஸ் ஆர்மீனியஸின் கோட்பாடுகள்வரை பார்த்திருக்கிறோம். இந்த இதழில் தொடர்ந்து 18ம் நூற்றாண்டுகளிலும் அதற்குப் பின்வரும் நூற்றாண்டுகளிலும் இது பற்றிக் காணப்பட்ட கோட்பாடுகளை ஆராய்வது அவசியமாகிறது.

ஜொனத்தன் எட்வர்ட்ஸும் (Jonathan Edwards) மனித சித்தமும்

jonathan_edwardsபதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த முக்கிய பிரசங்கியும், இறையியல் வல்லுனரும், சிந்தனையாளருமாக இருந்தவர் ஜொனத்தன் எட்வர்ட்ஸ். அமெரிக்காவில் வாழ்ந்த எட்வர்ட்ஸுக்கு அக்காலத்தில் ஏற்பட்ட ஆத்மீக எழுப்புதலோடு தொடர்பிருந்தது. எட்வர்ட்ஸின் பல நூல்கள் பிரபலமானவை. அவருடைய ‘கோபத்தோடிருக்கும் கடவுளின் பார்வையில் பாவிகள்’ என்ற பிரசங்கம் மிக முக்கியமானதும் பிரபலமானதுமாகும். பக்திரீதியான உணர்வுகள் (1746), சித்தத்தின் சுயாதீனம் (1754) ஆகிய முக்கிய நூல்களையும் அவர் எழுதியுள்ளார். எட்வர்ட்ஸ் மூல பாவத்தைப் பற்றி ஓர் ஆக்கத்தில் விளக்கியுள்ளார். இந்த முக்கியமான ஆக்கம் பெருமளவுக்கு அநேகர் அறிந்திராத ஒன்று.

இந்நூலில் எட்வர்ட்ஸ் ஆகஸ்தீன், மார்டின் லூதர் ஆகியோருடைய கோட்பாடுகளை ஒத்தே மூலபாவத்திற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். பிறப்பிலேயே மனிதன் பாவத்தில் மரித்திருக்கிறான் என்ற சத்தியமே எட்வர்ட்ஸின் விளக்கங்களுக்கும் ஆதாரமாக இருந்திருக்கிறது. மனிதன் பாவமில்லாமல் பிறந்து சமுதாயத்தினால் கெட்டுப் போனதாக எட்வர்ட்ஸ் கருதவில்லை. பாவம் செய்வது மனிதனுக்கு இயற்கையானது என்று அவர் விளக்கியிருக்கிறார். இந்த விஷயத்தில் தன்னைக் கல்வினித்துவவாதியாகக் கருதுவதை அவர் மறுக்கவில்லை.

எட்வர்ட்ஸைப் பொறுத்தவரையில் பாவத்தில் இருக்கும் மனிதனின் சித்தம் அதன் தன்மைக்கேற்பவே செயல்படும். மனிதனின் இச்சைகளுக்கும் சித்தத்திற்கும் இடையில் அவர் எந்த வேறுபாட்டையும் பார்க்கவில்லை. அவனுடைய இச்சை ஒருவிதமாகவும், சித்தம் ஒருவிதமாகவும் இருப்பதாக அவர் கருதவில்லை. அவனுடைய சித்தத்திற்கேற்றபடியே இச்சையும் அமைந்திருக்கும் என்று அவர் விளக்கினார். ஒருபோதும் மனிதன் தன்னுடைய சித்தத்திற்கு மாறான விதத்தில் இச்சைகொள்ள மாட்டான் என்று எட்வர்ட்ஸ் கருதினார். எட்வர்ட்ஸின் இந்தக் கருத்துக்கும் பவுல் ரோமர் 7ல் விளக்கியிருப்பதற்கும் வேறுபாடில்லை. பவுல் தன்னுடைய இருதய போராட்டத்தை ரோமர் 7ல் விளக்குகிறார். நீதியை செய்யும்படியான இருதயத்தைப் பவுல் கொண்டிருந்த போதும் அவருக்குள் பாவ இருதயத்தின் காரணமாக போராட்டம் நிகழ்கிறது. சில வேளைகளில் நீதியை விரும்பினாலும் அதற்கு மாறானதை செய்துவிடுகிறபோது அவ்வேளையில் அவருடைய சித்தமும் செய்கையும் ஒன்றாகத்தானிருக்கிறது. இதற்காக எப்போதுமே பவுலின் சித்தம் நீதிக்கெதிரானதாக இருந்துவிடுவதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. நீதியை செய்யும்படியாக புதுப்பிக்கப்பட்டிருக்கும் அவருடைய இருதயம் நீதியையே எப்போதும் நாடினாலும் உள்ளிருக்கும் பாவத்தால் சில வேளைகளில் எதிரானதை செய்துவிடும்.

மனிதனின் இயற்கையான செயற்திறனுக்கும் ஆத்மீக செயற்திறனுக்கும் இடையில் வேறுபாட்டைக் காண்கிறார் எட்வர்ட்ஸ். இந்த வேறுபாடே மனிதனின் ஆத்மீக செயற்திறனற்ற தன்மைக்குக் காரணமாக இருப்பதாக அவர் விளக்குகிறார். ஆத்மீக செயற்திறனற்றவனாக மனிதன் இருப்பதாலேயே மனிதனுடைய சித்தம் சுயாதீனமற்றதாக இருப்பதாக அவர் விளக்குகிறார். ஒருவன் தன்னுடைய இருதயத்தில் எதன் மீது ஆசைவைத்து அதைச் செய்வதற்கு உக்கிரத்தோடு நாடுகிறானோ அவனே சுயாதீனமாக இருக்கிறான். இதுவே உண்மையில் சுயாதீனம். ‘ஒருவன் அத்தகைய சுயாதீன சித்தத்தைக் கொண்டிருக்கவில்லை என்று நான் சொல்லுகிறபோது, மனிதனுடைய சித்தம் அது உக்கிரத்தோடு ஆசைப்பட்டு நாடுகிற ஒன்றிற்கு எதிராக இயற்கையாக செயற்பட முடியாதென்றே கூறுகிறேன்’ என்கிறார் எட்வர்ட்ஸ்.

மனித சித்தம் நடுநிலையில் இருக்கிறதென்பது (neutral) முட்டாள்தனம் என்கிறார் எட்வர்ட்ஸ். மனித சித்தம் நடுநிலையில் இருந்து எதையும் நாடாமலும், எதைப்பற்றியும் கருத்தில்லாமலும் இருக்குமானால் மனிதன் செய்யத் தீர்மானிக்கின்ற எதுவும் எப்படி ஒழுக்கத்தோடு தொடர்புடையதாக இருக்க முடியும்? என்று கேட்கிறார் எட்வர்ட்ஸ். அவனுக்கும் தாவரங்களுக்கும், மிருகங்களுக்கும் வித்தியாசமில்லாமல் போய்விடுமே என்கிறார். அத்தோடு மனித சித்தம் நடுநிலையில் இருந்தால் மனிதன் எப்படி எதையும் செய்யும்படி ஒரு தீர்மானத்துக்கு வர முடியும்? என்று கேட்கிறார். சித்தம் நடுநிலையில் இருக்குமானால் தீர்மானம் எடுப்பதற்கு இடமேயிருக்காது என்றும் எதையும் தீர்மானிப்பதற்கு அது காரணமாகவும் இருக்க முடியாது என்றும் எட்வர்ட்ஸ் விளக்குகிறார்.

மூலபாவத்தைப் பற்றிய எட்வர்ட்ஸின் கருத்துக்களை சுருக்கமாகப் பார்ப்போம். கடவுளுக்குரிய எதையும் விரும்பிச் செய்யத் தீர்மானிக்கும் ஒழுக்கச் செயற்திறனற்றவனாக மனிதன் இருக்கிறான் என்கிறார் எட்வர்ட்ஸ். கடவுள் அவனுடைய இருதயத்தை மாற்றாத வரையில் அவனால் ஒழுக்கச் செயற்திறனுடையவனாக இருக்க முடியாது என்றும், கடவுளுக்குரிய எதையும் நாட முடியாத இருதயத்தோடிருப்பதே அவனை ஒழுக்கச் செயற்திறனற்றவனாக வைத்திருக்கிறது என்றும் விளக்குகிறார். அவர் தொடர்ந்து சொல்கிறார் – அவனை அப்படியே விட்டுவிட்டால் அவன் ஒருபோதும் இயேசுவை நாடி வரமாட்டான். தன்னுடைய பாவவீழ்ச்சியின் தன்மை காரணமாக இயேசுவை நாடி வரக்கூடிய இருதயத்தை அவன் கொண்டிருக்கவில்லை. பாவத்தின் காரணமாக தன்னுடைய இருதயத்தில் காணப்படும் ஆழமான இச்சைகளினால் அவன் ஒருபோதும் இயேசுவை நாட மாட்டான். இயேசு அவனுடைய இருதயத்தை மறுபிறப்பின் மூலமாக மாற்றித் தன்பக்கத்தில் இழுக்காதவரை அவனால் தன் நிலையில் இருந்து மாற முடியாது; தன் நிலைக்கெதிராக நடக்க முடியாது. அவனுடைய கேடான இருதய இச்சைகளின் அடிமைத்தனத்தில் இருந்து அவனை விடுதலை செய்ய கடவுளால் மட்டுமே முடியும். இதெல்லாம் மூலபாவத்தைப் பற்றிய ஜொனத்தன் எட்வர்ட்ஸின் கருத்துக்கள். ஆத்துமா கர்த்தரை நாடுகின்ற விஷயத்தில் நீயும், நானும் என்ற எண்ணத்துக்கே இடமில்லாத வகையில் எட்வர்ட்ஸின் போதனைகள் அமைந்திருக்கின்றன. இரட்சிப்பு கர்த்தருடையது என்ற யோனாவின் வார்த்தைகளுக்கேற்ப எட்வர்ட்ஸின் விளக்கங்கள் இருக்கின்றன.

சார்ள்ஸ் கிரென்டிசன் பினி (Charles Grandison Finney)

charles finneyசார்ள்ஸ் பினி (1792-1875) என்று பொதுவாக அழைக்கப்படும் பினி பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த முக்கியமான மனிதர். அமெரிக்காவின் மாபெரும் எழுப்புதல் மன்னன் என்று பலரால் கருதப்படுபவர். அது சரியான கூற்றா என்பதை ஆராயத்தான் வேண்டும். அவரெழுதிய ‘எழுப்புதல் பற்றிய விரிவுரைகள்’ (Lectures on Revival) எனும் நூல் மேலைத்தேய நாடுகளில் மட்டுமல்லாது கீழைத்தேய நாடுகளிலும் பிரசித்தி அடைந்தது. அநேக வேதாகமக் கல்லூரிகளில் இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இன்று பொதுவாகவே எங்கும் காணப்படும் சுவிசேஷ அழைப்பு முறைகளுக்கு காரணமாக சார்ள்ஸ் பினியே கருதப்படுகிறார். ஆத்துமாக்கள் கடவுளை விசுவாசிப்பதற்கு அநேக முறைகளை பினி உருவாக்கினார் என்று அவரைப் பற்றி எழுதியிருப்பவர்கள் தெரிவிக்கிறார்கள். அவருடைய பிரசங்க முறை வித்தியாசமாக இருந்தது. சுவிசேஷப் பிரசங்கம் மற்றும் ஊழியம் பற்றி அதுவரை இருந்த எண்ணங்களுக்கெல்லாம் வித்தியாசமான முறையில் பினியின் போதனைகளும், சுவிசேஷ முறைகளும் அமைந்திருந்தன. அவருக்குப் பின்னால் வந்த டீ. எல். மூடி, பில்லி சன்டே, பில்லி கிரேகாம் போன்றவர்களுடைய சுவிசேஷ அழைப்பு முறைகளுக்கும் உத்திகளுக்கும் காரணமாக சார்ள்ஸ் பினியின் சுவிசேஷ உத்திகளே இருந்தன. அந்த வகையில் பத்தொன்பதாம் நூற்றாண்டு சுவிசேஷ ஊழியத்தில் பெருமாற்றத்தை ஏற்படுத்தி இன்றைய சுவிசேஷ ஊழியத்தில் தொடர்ந்தும் தாக்கத்தை ஏற்படுத்தித் கொண்டிருக்கும் மனிதராக பினியை நிச்சயம் கருதலாம்.

hodge4பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரபலமான மனிதராக பினி இருந்தபோதும் அவருடைய குறைபாடுகளை சுட்டிக்காட்டாதவர்கள் இருக்காமலில்லை. பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முக்கிய இறையியல் வல்லுனராக இருந்த சார்ள்ஸ் ஹொட்ஜ் (Charles Hodge) பினியை விமர்சித்தவர்களில் முக்கியமானவர். அக்காலத்தில் அமெரிக்காவில் கொனடிக்கெட்டில் போதகராகவும், இறையியல் வல்லுனராகவும், முக்கியமான சுவிசேஷ ஊழியராகவும் இருந்த அசேல் நெட்டில்டன் (Asahe Nettleton) பினியில் சுவிசேஷ ஊழிய உத்திகளைப் பெரிதும் விமர்சித்து மக்களை எச்சரித்திருக்கிறார்.

Asahel Nettletonஇன்றைக்கு பினியின் நூல்கள் மேலை நாடுகளிலும், கீழைத்தேய நாடுகளிலும் தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. பினியின் போதனைகளை சிந்தித்து ஆராய்ந்து பார்க்காமலேயே அவற்றைப் பின்பற்றி வருகிறவர்கள் அநேகர். பினியைப் பற்றி எழுதுகின்ற ரொபட் கொட்பிரி என்ற தற்கால இறையியல் வல்லுனர், ‘வரலாற்றில் பினியைப்போல பெலேஜியனாக இருந்த ஒரு இறையியல் வல்லுனர் இருக்கவில்லை’ என்று குறிப்பிட்டிருக்கிறார். மிகத் தெளிவாக பினி தன்னுடைய போதனைகளைத் தன் நூல்களில் விளக்குகிறார். தன்னுடைய ‘எழுப்புதல்கள் பற்றிய விரிவுரை’ என்ற நூலின் ஆரம்பத்திலேயே பினி ‘மனமாற்றம் மனிதன் தன்னுடைய சுயாதீன சித்தத்தைப் பயன்படுத்துவதனாலேயே ஏற்படுகின்றது’ என்று தெளிவாகவே எழுதியிருக்கிறார். பினியை விமர்சிக்கும் இன்னுமொரு பெரும் இறையியல் வல்லுனர் பென்ஜமின் வார்பீல்ட். வரலாற்றறிஞரான அவர், சபை வரலாற்றில் ‘பினியைப் போல பெலேஜியனாக இருந்த இறையியல் வல்லுனர்கள் வேறெவருமிருக்கவில்லை’ என்கிறார். 

பினியைப் பற்றிய இவர்களுடைய கருத்துக்கள் கடினமானதாக சிலருக்குத் தோன்றலாம். ஏனெனில் அந்தளவுக்கு சுவிசேஷ இயக்கத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவராக பினி கருதப்பட்டு வருகிறார். சுவிசேஷ இயக்கப் போதனைகளில் பினிக்கு விசுவாசமிருந்ததா? என்று கேட்பது அவசியம். சுவிசேஷ இயக்கப் போதனைகள் (Evangelicalism) என்பதற்கு இன்று கொடுக்கப்படும் விளக்கம் முன்பிருந்த விளக்கத்தைவிடப் பெருமளவுக்கு மாறியிருக்கிறது. ஆரம்பத்தில் சுவிசேஷ இயக்கக் கோட்பாடுகள் என்பதற்கும் புரொட்டஸ்தாந்து, சீர்திருத்தவாதப் போதனைகள் என்பற்கும் வேறுபாடில்லாமல் இருந்தது. ஏனெனில் சுவிசேஷ இயக்கப் போதனைகள் என்பது சீர்திருத்தவாதப் போதனைகளுக்கு இன்னுமொரு பெயர். இன்றைக்கு அந்த முறையில் ‘சுவிசேஷ இயக்கப் போதனை’ என்ற பதங்களுக்கு அர்த்தம் இருக்கவில்லை. உண்மையில் மனிதர்கள் பாவத்திலிருந்து மனந்திரும்பி இயேசுவை விசுவாசிக்க வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருக்கிற அனைவரும் சுவிசேஷ இயக்கக் கோட்பாட்டைப் பின்பற்றுபவர்களாக இன்று கருதப்படுகிறார்கள். இந்தவகையில் ரோமன் கத்தோலிக்க மதமும்கூட ‘கத்தோலிக்க சுவிசேஷ இயக்கம்’ (Catholic Evangelical) என்ற பெயரைத் தனக்குரியதாக பயன்படுத்திக் கொள்ளுகிறது. அந்தளவுக்கு இந்தப் பெயரின் அடிப்படைக் கருத்து தெளிவற்றவிதத்தில் மாற்றிப் பயன்படுத்தப்படுகிறது. இந்தப் புதிய கருத்தின் அடிப்படையில் மட்டுமே சார்ள்ஸ் பினியை சுவிசேஷ இயக்க நம்பிக்கை கொண்டவராக பார்க்க முடியும். ஆரம்ப காலத்தில் இருந்த சுவிசேஷ இயக்கப் போதனைகளின் அடிப்படை அம்சங்களை பினி நிராகரித்திருந்தார் என்பதை அவருடைய நூல்களை சிந்தித்து ஆராய்ந்து வாசிப்பவர்கள் அறிந்துகொள்ள முடியும். என்னைப் பொறுத்தளவில் பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்த சுவிசேஷ இயக்க நம்பிக்கைகளைத் தகர்த்தவர்களில் முக்கிய மனிதராக சார்ள்ஸ் பினி இருந்திருக்கிறார். பினியின் நூல்களை வாசிப்பவர்களும், அவருடைய பெயரைப் பயன்படுத்துகிறவர்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள்.

இனி சார்ள்ஸ் பினியின் போதனைகளையும், கிறிஸ்தவ நம்பிக்கைகளையும் சிறிது ஆராய்ந்து பார்ப்போம். முக்கியமாக மூல பாவத்தையும் அதன் விளைவுகளையும் பற்றிய அவருடைய போதனைகளே நமக்கு அவசியமாக இருக்கின்றன. மனித சித்தத்தின் தன்மையை நாம் ஆராய்ந்து வருவதால் அதோடு தொடர்புடைய விஷயங்களில் பினியின் கருத்துக்களே நமக்கு முக்கியமானவையாக இருக்கின்றன.

நீதிமானாக்குதல்

சார்ள்ஸ் பினி சீர்திருத்த கிறிஸ்தவம் விளக்கும் நீதிமானாக்குதல் போதனையை நிராகரித்தார். அவருடைய எழுத்துக்களை ஆராயும்போது அவருக்கு கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்ட ஒருவர் கடவுளின் நியாயஸ்தலத்தில் நியாயப்பிரமாணத்தின் அடிப்படையில் சட்டபூர்வமாக கடவுளால் நீதிமான் என்று அறிக்கை செய்யப்படுவது ஏற்புடையதல்ல என்பது தெளிவாகிறது. கடவுளின் இந்த சட்டபூர்வமான அறிவிப்பை ஆங்கிலத்தில் Forensic justification என்று அழைப்பார்கள். இதில் இருபகுதிகள் அடங்கியுள்ளன. ஒன்று, கிறிஸ்து தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்காக சிலுவையில் தன்னைப் பலியாகக்கொடுத்து அவர்களுடைய இரட்சிப்பை விலைகொடுத்து வாங்கியிருப்பது. இதற்காக கிறிஸ்து நியாயப்பிரமாணத்திற்கு முழுமையாகக் கீழ்ப்படிந்து அதைப் பூரணமாக நிறைவேற்ற வேண்டியிருந்தது. இரண்டாவது, கிறிஸ்துவின் பலியின் அடிப்படையில் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை கடவுள் ‘கிறிஸ்துவுக்குள்’ பார்த்து அவர்களை நீதிமான்கள் என்று அறிவிப்பது. இந்த சட்டரீதியிலான (judicial) நீதிமானாக்குதலை பினி முற்றாக நிராகரித்தார். இதை அவர் முட்டாள்தனமான வாதம் என்று குறிப்பிட்டிருக்கிறார். பினியைப் பொறுத்தவரையில் கிறிஸ்து நியாயப்பிரமாணத்திற்கு கட்டுப்பட்டு நடந்து அதை நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை. இயேசு வேறு எவருக்காகவும் அவர்களுடைய நீதியை சம்பாதிப்பதற்காக ஒன்றும் செய்திருக்க முடியாது என்பது பினியின் வாதம். இதிலிருந்தே சுவிசேஷக் கிறிஸ்தவக் கோட்பாட்டின் அடித்தளப் போதனைகளில் பினிக்கு உடன்பாடில்லாமல் இருந்திருப்பது புரிகிறது.

கிறிஸ்துவின் கீழ்ப்படிதல் பற்றிய சத்தியத்தில் இரண்டு அம்சங்கள் காணப்படுகின்றன. ஒன்று, அவர் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படிந்து பூரணமாக அதை நிறைவேற்றுவது. அதை active obedience என்று அழைப்பார்கள். இன்னொன்று, அவர் சகல துன்பங்களுக்கும், சிலுவைப்பலி உட்பட தன்னை ஒப்புக்கொடுத்து நிறைவேற்றுவது. இதை passive obedience என்று அழைப்பார்கள். கிறிஸ்துவின் கீழ்ப்படிதலில் இவை இரண்டுமே அடங்கியிருக்கின்றன. நீதிமானாக்குதலுக்கு இவை இரண்டும் அவசியம். அதேபோல நீதிமானாக்குதலில் இரண்டு அம்சங்கள் காணப்படுகின்றன (Imputation or Imputed righteousness). ஒன்று, தெரிந்துகொள்ளப்பட்டவர்களுடைய பாவங்கள் கிறிஸ்துவின் மேல் சிலுவையில் சுமத்தப்பட வேண்டும். இன்னொன்று, சிலுவை மரணத்தின் மூலம் கிறிஸ்து சம்பாதித்த நீதி தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் மேல் சுமத்தப்பட வேண்டும். நீதிமானாக்குதலில் இவை பிரிக்க முடியாதபடி அடங்கியிருக்கின்றன. இவையில்லாத நீதிமானாக்குதல் மெய்யான வேதம் போதிக்கும் நீதிமானாக்குதலாக இருக்க வழியில்லை. ரோமர் 4ம் அதிகாரத்தில் ஆபிரகாமின் விசுவாசத்தைப் பற்றி விளக்கும்போது இந்த நீதிமானாக்குதலையே பவுல் ‘எண்ணப்படுகிறது’, ‘எண்ணப்பட்டது’ என்ற பதங்களைப் பயன்படுத்தி விளக்குகிறார். ஆனால், சார்ள்ஸ் பினி இந்த விளக்கத்தை அடியோடு நிராகரித்தார்.

கிறிஸ்துவின் கிருபாதாரபலி

கிறிஸ்துவின் கிருபாதாரபலி பற்றிய போதனையிலும் பினிக்கு பிரச்சனை இருந்தது. அந்த விஷயத்தில் சுவிசேஷக் கிறிஸ்தவக் கோட்பாடுகளை விட்டு பினி வெகுதூரம் விலகிப் போயிருந்தார். இதை அநேகர் உணர்வதில்லை. கடவுளுடைய உக்கிரமான தண்டிக்கும் கோபத்தை ஒருவரும் சமாதானப்படுத்த முடியாது என்பது பினியின் கருத்தாக இருந்தது. அதுவும் கிறிஸ்துவாலும்கூட அந்தக் கோபத்தை சமாதானப்படுத்த முடியாது என்று பினி குறிப்பிட்டார். கிறிஸ்துவின் பரிகாரப்பலியின் முக்கிய அம்சங்களில் ஒன்று தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் இடத்தில் கிறிஸ்து இருந்து தேவகோபத்தைத் தன்மேல் தாங்குவது. அதை நிராகரிக்கும் பினி கிருபாதாரபலி பற்றிய போதனையையே தன்னிஷ்டத்துக்கு மாற்றி அமைத்தார்.

கிறிஸ்துவின் கிருபாதாரபலியை விளக்கும் பினி எந்தவொரு தெரிந்துகொள்ளப்பட்டவரின் பாவத்துக்காகவும் கிறிஸ்து மரிக்கவில்லை என்றார். அதேநேரம் கிறிஸ்துவின் கிருபாதாரபலி முழு உலகத்துக்காகவும் செலுத்தப்பட்டதாகவும், எல்லோருக்காகவும் நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் விளக்கினார். இதன் மூலம் நீதியைப் பாதுகாப்பதில் கடவுளுக்கு இருக்கும் கடமைப்பாட்டையும், அவருடைய நீதியான ஒழுக்கத்தைப் பற்றியுமே நாம் அறிந்துகொள்ளுகிறோம் என்கிறார் பினி. பினியின் கருத்துக்கள் கிருபாதாரபலி பற்றிய போதனைகளை குழப்பிவிடுகிறது. இதற்குக் காரணமில்லாமலில்லை. பினியைப் பொறுத்தவரையில் மனிதனுடைய இரட்சிப்பு கிறிஸ்துவின் கிருபாதாரப் பலியில் இல்லாமல் அவனுடைய இருதயத்தின் செய்கையிலேயே தங்கியிருந்தது.

கிறிஸ்து பாவிகளுக்காக தன்னைப் பலிகொடுத்து மரிப்பது நீதிமானாக்குதலுக்கு அவசியமான நிபந்தனையாயிருந்தது. அதேபோல் நீதிமானாக்குதலுக்கு மனந்திரும்புதலும், விசுவாசமும் அவசியமான நிபந்தனையாயிருந்தது. நீதிமானாக்குதலுக்கு விசுவாசம் நிபந்தனையாக இருப்பதை பினி விரும்பவில்லை. விசுவாசத்தைப் பற்றிய பினியின் விளக்கங்கள் சீர்திருத்தப் போதனைகளைப் பின்பற்றியதாக இருக்கவில்லை.

பரிசுத்தமாக்குதல்

நீதிமானாக்குதல், கிருபாதாரபலி என்று மட்டுமல்லாமல் பரிசுத்தமாக்குதல் போதனையிலும் பினி மாற்றுக்கருத்துகளைக் கொண்டிருந்தார். பினி தன்னுடைய கருத்துக்களை தெளிவாக விளக்குவதால் அவர் எங்கு தவறிழைக்கிறார் என்பதை நம்மால் சுலபமாக விளங்கிக்கொள்ள முடிகிறது. பினியைப் பொறுத்தவரையில் பரிசுத்தமாக்குதல் நீதிமானாக்குதலுக்கு இன்னுமொரு நிபந்தனையாக இருக்கிறது. அதாவது நீதிமானாவதற்கு முதலில் ஒருவர் பரிசுத்தமாகுதலை அடைந்திருக்க வேண்டும் என்பது பினியின் விளக்கம். இது சீர்திருத்தப் போதனைக்கு மாறான தலைகீழான விளக்கம். பினி இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கையே தலைகீழாக திருப்பி விடுகிறார். உண்மையில் நீதிமானாக்குதலை அடைந்த ஒருவரே (கிறிஸ்துவால் அறிவிக்கப்பட்ட ஒருவரே) பரிசுத்தமாக்குதலுக்கான தகுதியை அடைகிறார். இதை சார்ள்ஸ் பினி மறுத்தார். ‘இந்த உலகத்தில் முழுமையான பரிசுத்தத்தை கடவுளுக்காகவும் அவருடைய சேவைக்காகவும் அடைந்த இருதயத்தை ஒருவர் கொண்டிருப்பது அவருடைய பாவங்கள் இந்த உலகத்தில் மன்னிக்கப்பட்டு கடவுளால் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு அவசியமான மாற்றப்படமுடியாத நிபந்தனையாக இருக்கிறது’ (Finney’s Systematic Theology) என்று பினி விளக்கியிருக்கிறார். இது இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தையே சிதைக்கும் போதனையாக இருக்கிறது.

‘நம்முடைய நீதிமானாக்குதல் முழுமையான பரிசுத்தமாக்குதலில் தங்கியிருக்குமானால் நம்மைவிட பரிதாபமானவர்கள் எவரும் இருக்க முடியாது’ என்று ஆர். சீ. ஸ்பிரவுல் என்ற இறையியலாளர் குறிப்பிடுகின்றார். முழுமையான பரிசுத்தமாகுதல் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு அவசியமானால் யாருடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டிய அவசியமிருக்கிறது? என்று கேட்க வேண்டியதாயிருக்கிறது. கடவுளின் நியாயஸ்தலத்தில் பிதாவுக்கும் அவருடைய குமாரனுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் நிகழ்ந்த சட்டரீதியிலான நீதிமானாக்குதலையும், அதைப் பெற்றுக்கொள்ளுவதற்கு அவசியமான விசுவாசத்தையும் நிராகரித்து மாற்று விளக்கங்களை பினி கொடுக்க ஆரம்பித்ததால் பரிசுத்தமாக்குதல் பற்றிய போதனையையும் அவர் குழப்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை நம்மால் விளங்கிக்கொள்ள முடிகிறது. பினியின் இந்த விளக்கங்கள் நிச்சயம் வேத சுவிசேஷ சத்தியத்துக்கு எதிரானதாக இருக்கின்றது. ஆகவே, பினி ‘இவெஞ்சலிக்கள்’ சுவிசேஷக் கோட்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை. பினியின் சுவிசேஷம் வேத சுவிசேஷமல்ல.

மனிதனின் பாவம்

சார்ள்ஸ் பினியின் இரட்சிப்பு பற்றிய இறையியல் போதனைகளில் காணப்படும் கோளாறுகளுக்கெல்லாம் மனிதனின் பாவம் பற்றிய அவருடைய தவறான விளக்கங்களே காரணம். இதில் அவர் வேதத்துக்கு முற்றிலும் புறம்பான கருத்துக்களைக் கொண்டிருந்ததாலேயே ஏனைய இறையியல் போதனைகளையும் அவர் குழப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. ‘முதல் கோணலென்றால் முற்றும் கோணல்’ என்று சொல்வார்களே அதுபோலத்தான். பாவத்தைப் பற்றிய பினியின் கருத்துக்களை அவர் ‘ஒழுக்கப் பாதிப்பு’ என்ற தலைப்பில் எழுதியிருக்கும் பகுதிகளில் இருந்து அறிந்துகொள்ளுகிறோம். மனிதனின் ஒழுக்கப்பாதிப்பை மனிதனுடைய பாவ இயல்பாக பினி கருதவில்லை. மனிதன் சரீரபூர்வமாக பாவத்தால் பாதிக்கப்பட்ட தன்மையைக் கொண்டிருக்கிறான் என்பதை ஒத்துக்கொள்ளும் பினி அதை பாவத்தன்மையாக ஏற்றுக்கொள்ளவில்லை. மனிதனுடைய ஒழுக்கக்கோளாறுகளுக்கும், சரீரப் பாதிப்புகளுக்கும் அவன் பாவத்தில் வீழ்ந்திருப்பதே காரணம் என்று வேதமும், சீர்திருத்தவாதமும் விளக்குகிறது. இதையே மூலபாவம் என்று சொல்லுகிறோம். இதை பினி முற்றிலும் நிராகரிக்கிறார். மூலபாவத்தை நிராகரிக்கும் பினி மனிதனுடைய சித்தத்திற்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறார்.

பினியின் இறையியல் விளக்கங்களுக்கெல்லாம் அத்திவாரமாக இருப்பது மனிதனுடைய சித்தம் சுயாதீனமாக இயங்குகிறது என்று அவர் நம்புவதுதான். அதாவது பாவத்தால் பாதிக்கப்படாத சித்தத்தை மனிதன் கொண்டிருப்பதாக பினி கருதுகிறார். மனிதனால் ஒழுக்கரீதியில் சரியான தீர்மானங்களை எடுக்க முடியும் என்பது பினியின் வாதம். ஜொனத்தன் எட்வர்ட்ஸினதும், ஆகஸ்தீனுடையதுமான கருத்துக்களை இந்த விஷயத்தில் நிராகரிக்கும் பினி மனிதனால் அவனுக்குரிய அனைத்துக் கடமைகளையும் சரியாகச் செய்ய முடியும் என்று விளக்குகிறார். கடவுள் கட்டளையிடும் எதையும் செய்யக்கூடிய சுயாதீனமான சித்தத்தை மனிதன் கொண்டிருக்கிறான் என்கிறார் பினி. இதையெல்லாம் அவருடைய ‘வரையறுக்கப்பட்ட இறையியல்’ நூலில் பினி விளக்கியிருக்கிறார்.

பினி மூலபாவத்தை பெலேஜியனைப் போல அடியோடு நிராகரிப்பதால் மனிதன் பாவத்திற்கு அடிமையாக இருக்கவில்லை என்று அவரால் விளக்க முடிகின்றது. கடவுள் மனிதன் எதையாவது செய்யும்படி எதிர்பார்த்தால் அதை அவன் செய்யக்கூடிய நிலையில் இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அவனுக்கு சுயாதீன சித்தம் இருக்க வழியில்லை. அவனுக்கு சுயாதீன சித்தம் இல்லாவிட்டால் அவனால் எப்படி கடவுள் எதிர்பார்ப்பதை செய்ய முடியும் என்று பினி வாதிடுகிறார். ஒழுக்கத்தோடு வாழவேண்டிய கடமை மனிதனுக்கு இருக்குமானால் அப்படி வாழ்வதற்கான வல்லமையும் அவனுக்கு இருக்க வேண்டும் என்பது பினியின் வாதம். இதிலிருந்து பினி எந்தளவுக்கு பெலேஜியனோடு ஒத்துப்போகிறார் என்பதை உணர முடிகின்றது.

மறுபிறப்பு

மறுபிறப்பாகிய வேத போதனையைப் பற்றிய பினியின் விளக்கங்கள் வேதபோதனைகள் அனைத்திற்கும் முரணானவை. மனந்திரும்புதலையும் மறுபிறப்பையும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாததாக விளக்குகிறார் பினி. உண்மையில் மறுபிறப்பு முழுவதும் கடவுளுடைய செயலாகவும் அந்த செயலின் காரணமாக, அதன் இன்னொரு பக்கமாக நிகழும் மனந்திரும்புதல் நம்முடைய செயலாகவும் வேதம் விளக்குகிறது. ஆனால், பினியோ இவை இரண்டையும் பிரித்து மனந்திரும்புதல் முழுவதுமாக நம்முடைய செயலாகவும் மறுபிறப்போடு தொடர்பில்லாததுமாக விளக்குகிறார்.

மறுபிறப்பைப் பற்றி விளக்கும் பினி, ‘பரிசுத்த ஆவியே மனிதனுக்கு சத்தியத்தை உணர்த்துகிறபோதும் அந்த உணர்த்துதலுக்கும் மறுபிறப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ என்கிறார். ஆனால், ‘மறுபிறப்பு நிகழுகிறபோது இந்த உணர்த்துதலும் நிகழ்கிறது’ என்கிறார். ‘இந்த சத்தியத்தை அறிகிற உணர்த்துதலே மறுபிறப்பை நம்மில் நிகழ வைக்கிறது’ என்கிறார். ‘சத்தியத்தைப் பெற்றுக்கொள்கிறவேளை மனிதன் அதை வெறுமனே பெற்றுக்கொள்கிறவனாக மட்டுமே இருக்கிறான்’ என்றும், மறுபிறப்பின்போது அவன் இரட்சிப்பிற்கான கிரியை நிகழ்வதில் தானும் ஒத்துழைக்கிறவனாக இருக்கிறான்’ என்றும் பினி விளக்குகிறார். மனிதனுடைய ஒத்துழைப்பில்லாமல் கடவுள் அவனுக்கு ஒருபோதும் இரட்சிப்பளிக்க முடியாது என்பது பினியின் வாதம். ‘மனிதன் மனம்மாற சித்தம் கொள்ளாவிட்டால் கடவுள் மட்டுமன்றி வேறெவருமே அவனை மாற்ற முடியாது’ என்கிறார் பினி.

மனிதனுடைய ‘தீர்மானத்தில்தான்’ மறுபிறப்பு தங்கியிருப்பதாக விளக்கும் பினியே சுவிசேஷக் கூட்டங்களில் இந்தத் ‘தீர்மானம்’ எடுக்கும் முறைக்குக் காரணமாக இருந்தார். பினியால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த முறை பெரும்பாலான நவீன சுவிசேஷகர்களால் தொடர்ந்தும் பின்பற்றப்பட்டு வருகிறது. மறுபிறப்பு ஒருவரில் நிகழ்வதற்கு முன்பு அவர் கர்த்தருக்காக இந்தத் ‘தீர்மானத்தை’ எடுக்க வேண்டும் என்றும் மறுபிறப்புக்கு இந்தத் தீர்மானம் எடுத்தல் தவிர்க்க முடியாத ஒரு நிபந்தனையாக இருக்கிறது என்றும் இவர்கள் நம்புகிறார்கள். இதன் மூலம் இவர்களுடைய இறையியல் போதனைகள் ஒருவரில் மறுபிறப்பு நிகழ்வதற்கு முன்பு அவர் விசுவாசத்தை அடைய வேண்டும் என்றிருக்கின்றது. அத்தோடு அந்த விசுவாசமே மறுபிறப்புக்கோ, மனந்திரும்புதலுக்கோ அவசியமான நிபந்தனையாகவும் இருக்கிறது. இந்த இடத்தில்தான் கிருபையின் போதனைகளில் இருந்து அடியோடு முரண்பட்டு நிற்கின்றது பினியைப் போன்றோரின் போதனைகள். எந்தளவுக்கு பெலேஜியனின் போதனை இவெஞ்சலிக்கள் கிறிஸ்தவர்களை ஆக்கிரமித்து ஆட்சி செய்கிறது என்பதை இதிலிருந்து நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

லூயிஸ் ஸ்பெரி சேஃபர் (Lewis Sperry Chafer)

chaferஇந்தப் பெயர் உங்களில் பலருக்கு புதிதாக இருக்கலாம். அமெரிக்க கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரையில் இவெஞ்சலிக்கள் கிறிஸ்தவர்கள் மத்தியில் இது அநேகர் அறிந்து வைத்திருக்கும் பெயர். இன்றைக்கு டிஸ்பென்சேஷனலிசம் பெரும்பாலான திருச்சபைப் பிரிவுகளைப் பாதித்து அநேகருடைய இறையியல் நம்பிக்கைகளின் முக்கிய அம்சமாக இருந்து வருகிறது. டிஸ்பென்சேஷனலிசப் போதனை ஜோன் டார்பி, ஸ்கோஃபீல்ட் ஆகியோரால் பிரபலப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்ததைவிட இன்றைக்கு பெரிதும் வளர்ந்து உருமாறியிருக்கின்றது. ஆரம்ப காலத்தில் டிஸ்பென்சேஷனலிசத்தை கடைசிக்காலப் போதனைகளோடு தொடர்புடையதாக மட்டுமே பெரும்பாலும் கருதி வந்திருக்கிறார்கள். இன்றைக்கு அது குடைவிரித்து இறையியலின் பல்வேறு போதனைகளை, இரட்சிப்பு உட்படப் பாதித்து வித்தியாசமான கோணத்தில் இருக்கிறது.
அடிப்படையிலேயே டிஸ்பென்சேஷனலிசம் ஒரு செயற்கைப் போதனை. அது செயற்கையாக, வேதத்தில் இருந்து புறப்படாமல் உருவாக்கப்பட்ட ஒன்று. இருந்தபோதும் ஆரம்பகாலத்தில் பழைய ஏற்பாட்டைப் புதிய ஏற்பாட்டில் இருந்து அடியோடு பிரித்துப் பார்த்து அதன் காரணமாக பழைய ஏற்பாட்டில் திருச்சபைக்கு இடமில்லை, புதிய ஏற்பாட்டிலேயே அதை அடையாளம் காணமுடியும் என்று அது விளக்கியது. இது இரட்சிப்புப் பற்றிய போதனையிலும் கைவைக்காமலில்லை. இருந்தபோதும் ஆரம்பத்தில் இருந்த டிஸ்பென்சேஷனலிசம் இன்று உருமாறியிருக்கிறது. டிஸ்பென்சேஷனலிசத்தில் ஏற்பட்ட ஆபத்தான உருமாற்றங்களே டிஸ்பென்சேஷலிஸ்டாக இருந்த ஜோன் மெக்கார்த்தரையும் அதற்கு எதிராகப் பிரசங்கிக்கவும், எழுதவும் வைத்தது. ஒரு விசுவாசியில் கிறிஸ்து இரட்சகராக இருந்து அவனுடைய ஆண்டவராக இல்லாமல் இருந்துவிட முடியும் என்ற ‘லோர்ட்சிப் முரண்பாடு’ (Lordship controversy) டிஸ்பென்சேஷனலிசத்தால் உருவான ஒரு போதனை. இது அமெரிக்க இவெஞ்சலிக்கள் கிறிஸ்தவத்தை அதிகம் பாதித்து கிறிஸ்தவம் காணப்படும் நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. ‘டிஸ்பென்சேஷனலிசத்தில் இன்று ஏற்பட்டு வருகின்ற உருமாற்றங்களால், முக்கியமாக இரட்சிப்பைப் பற்றிய விஷயத்தில் அதைப் பல கோணங்களில்லாத ஒற்றைப் போதனையாகக் கருதுவது மிகவும் ஆபத்தானது’ என்று அமெரிக்க இறையியல் அறிஞரான ஆச். ஸி. ஸ்பிரவுல் எச்சரிக்கிறார்.

லூயிஸ் ஸ்பெரி சேஃபர் அமெரிக்க டிஸ்பென்சேஷனலிசத்தின் முக்கிய தலைவர். அவர் டல்லஸ் இறையியல் கல்லூரியில் போதிக்கின்றவர். இவருடைய டிஸ்பென்சேஷனலிசப் போதனை அமெரிக்காவிலும் அதற்கு வெளியிலுமுள்ள இவெஞ்சலிக்கள் கிறிஸ்தவத்திலும் செல்வாக்கு செலுத்தி பெரும் மாறுதல்களை ஏற்படுத்தியது.
டிஸ்பென்சேஷனலிசத்தை ஆராயும் ஆர். ஸி. ஸ்பிரவுல், அது பெரும்பாலும் கல்வினிசப் போதனைகளை பலவிதங்களில் பின்பற்றுகிறது என்றும் அவர்களை ‘நான்கு பாயின்ட் கல்வினிஸ்டுகள்’ என்று அழைக்கலாம் என்று குறிப்பிடுகிறார். அதாவது டிஸ¢பென்சேஷனலிஸ்டுகளுக்கு இருக்கும் பிரச்சனையே ‘வரையறுக்கப்பட்ட கிருபாதாரப் பலி’ சம்பந்தப்பட்டதுதான். அதைத்தான் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கிருபையின் போதனைகளின் ஏனைய நான்கு சத்தியங்களோடும் அவர்களுக்குப் பிரச்சனை இல்லை. டிஸ்பென்சேஷனலிஸ்டுகள் பொதுவாகவே கிருபையின் போதனையின் பல அம்சங்களை ஏற்றுக்கொண்டாலும் அவர்கள் அதை முறையாக விளங்கிக்கொள்ளவில்லை. கிருபையின் போதனைகளில் ஒன்றை விலக்கி வைத்துவிட்டு ஏனையவற்றை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒன்று மற்றதில் இருந்து பிரிக்கமுடியாதபடி இணைந்திருக்கிறது என்பதை இவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லை. இவற்றை ஒன்றோடொன்று தொடர்பில்லாத, தனித்தனியாகக் காணப்படும் ஐந்து அம்சங்களாகக் கருத வழியில்லை.

லூயிஸ் சேஃபர் பலவிதங்களில் ஆகஸ்தீனுடையதும், கல்வினுடையதும் போதனைகளைச் சார்ந்தே தன்னுடைய போதனைகளை விளக்கியிருப்பதாக ஆர். ஸி. ஸ்பிரவுல் குறிப்பிடுகிறார். பெலேஜியனிசம், ஆர்மீனியனிசம் ஆகியவற்றில் இருந்து தன்னை விலக்கிக் காண்பிக்க சேஃபர் அதிகம் பிரயாசைப்படுகிறார். லூயிஸ் சேஃபரின் வரையறுக்கப்பட்ட இறையியல் நூல் அவருடைய போதனைகளை அறிந்துகொள்ள உதவுகிறது.

பாவம் ஆதாமைப் பாதித்து அவனை மாற்றியிருக்கிறது என்பதை லூயிஸ் சேஃபர் ஏற்றுக்கொள்ளுகிறார். மனிதர்கள் பாவத்தின் காரணமாக பிறப்பிலேயே ஆத்மீக ரீதியில் மரித்தவர்களாக இருப்பதாகவும், அதன் காரணமாக அவர்கள் ஆவிக்குரிய எந்த நன்மையையும் செய்ய முடியாதவர்களாக இருப்பதாகவும் சேஃபர் விளக்குகிறார். அத்தோடு மனிதனுடைய சித்தம் சுயாதீனமாக இயங்குகிறது என்றும் விளக்குகிறார். இந்தவகையில் சேஃபர் ஆகஸ்தீனியன் போதனைகளை ஒத்துக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

மறுபிறப்பு பற்றிய சேஃபரின் கருத்துக்களை ஆராயும்போதுதான் அவர் எந்தளவுக்கு கிருபையின் போதனைகளின் அடிப்படைக் கருத்துக்களில் இருந்து மாறுபட்ட கோட்பாடுகளைக் கொண்டிருக்கிறார் என்பது தெளிவாகப் புலப்படுகிறது.
இந்த இடத்தில் முதலில் சீர்திருத்தப் போதனைகள் மறுபிறப்பை விளக்கும் விதத்தைப் பார்ப்பது அவசியம். சீர்திருத்தப் போதனைகளைப் பொறுத்தவரையில் மறுபிறப்புக்குப் பிறகே ஒருவருக்கு விசுவாசம் கிடைக்கிறது. அதாவது, மறுபிறப்பு நிகழ்ந்தவுடன் அவரால் கிறிஸ்துவை விசுவாசிக்க முடிகிறது. இந்த இடத்தில் மறுபிறப்பையும், விசுவாசத்தையும் கால அடிப்படையில் இடைவெளி கொடுத்து நாம் விளங்கிக்கொள்ளக்கூடாது. இதில் கால இடைவெளிக்கு இடமேயில்லை. இங்கே தத்துவரீதியில் எது முன்னால் வரவேண்டும் (in the order of logical priority) என்பதுதான் முக்கியம். இந்த இரண்டும் ஒரே நேரத்தில் நிகழ்கின்றன. அதேநேரம் இந்தப்படிமுறை வரிசையில் மறுபிறப்பே முதலில் வரவேண்டும். அதற்குப் பிறகு விசுவாசமேற்படுவதாக விளங்கிக்கொள்வது அவசியம். பேராசிரியர் ஜோன் மரே இதை அருமையாக தன்னுடைய நூலான Redemption: Accomplished and Appliedல் விளக்கியிருக்கிறார்.

சீர்திருத்தக் கோட்பாடுகளின் இரட்சிப்பின் படிமுறைகள் பற்றிய விளக்கத்தின்படி தத்துவரீதியில் விசுவாசம் மறுபிறப்பிலேயே தங்கியிருக்கிறது; மறுபிறப்பு விசுவாசத்தில் தங்கியிருக்கவில்லை. மறுபிறப்புக்கு இங்கு அளிக்கப்படும் முதன்மைத்துவம் தத்துவரீதியானதே தவிர கால அடிப்படையில் விளக்கப்படவில்லை. சீர்திருத்தப் போதனைகளின்படி விசுவாசத்திற்கு மறுபிறப்பு அவசியமான நிபந்தனையாக இருக்கிறது; மறுபிறப்புக்கு விசுவாசம் அடிப்படையானதாக இருக்கவில்லை, அப்படியிருக்கவும் வழியில்லை.

மறுபிறப்பு விசுவாசத்திற்கு முதலில் வருவதற்கான அடிப்படைக் காரணத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு மனிதனுடைய பாவநிலையே காரணம். அதாவது மூலபாவத்தின் காரணமாக அவனுடைய சகல பகுதிகளும் பாவத்தால் பாதிக்கப்பட்டு அவன் ஆத்மீக நன்மைகள் எதையும் செய்ய முடியாத நிலையில் இருப்பதே காரணம். அந்த நிலையில் இருக்கும் மனிதன் எவ்வாறு கடவுளை ஆத்மீக ரீதியில் விசுவாசிக்க முடியும்? கடவுளை நாடும்படியாக அவனில் எந்த ஆத்மீக செயலுக்கும் இடமில்லை. ஆவிக்குரிய நன்மைகள் எதையும் செய்ய முடியாதபடி பாவம் அவனைப் பாதித்திருக்கிறது. மறுபிறப்புக்கு முன்பு விசுவாசம் வருகிறது என்று வாதத்துக்கு எடுத்துக்கொண்டால், பாவத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்டு ஆத்மீக ரீதியில் எதையும் செய்ய முடியாத நிலையில் இருக்கும் மனிதன் கிறிஸ்துவை விசுவாசிக்க முடிகிறது என்று சொல்வதில் போய் முடிந்துவிடும். அந்தப்படி பாவியாகிய மனிதன் கடவுளை விசுவாசிக்கக் கூடியவனாக இருப்பானெனில் அவன் ஏதோவொரு விதத்தில் மூல பாவத்தினால் முழுமையாக பாதிக்கப்படாதவனாக இருக்கிறான் என்பதில் போய் முடியும். இதைத்தான் ஆர்மீனியனிசமும், செமி-பெலேஜியன் போதனையும் சொல்லுகின்றன; அவை மனிதன் பாவத்தால் முழுமையாகப் பாதிக்கப்படவில்லை என்கின்றன. ஆகஸ்தீனிய, கல்வினிசப் போதனைகள் இதற்கு மாறானவை.

இந்தவகையில் பார்க்கிறபோது லூயிஸ் சேஃபர் உண்மையிலேயே ஆகஸ்தீனிய, கல்வினிசப் போதனைகளைத்தான் பின்பற்றினாரா? என்ற கேள்வி எழுகின்றது. இதற்கு சேஃபரின் மறுபிறப்பு பற்றிய போதனை ‘இல்லை’ என்ற பதிலைத்தான் தரும்படிச் செய்கிறது. மறுபிறப்புக்கு விசுவாசம் அவசியம் என்று சேஃபர் விளக்கியிருக்கிறார். இதை சேஃபர் ‘நிபந்தனையின் அடிப்படையிலான மறுபிறப்பு’ என்று விளக்கியிருக்கிறார். அதாவது மறுபிறப்பு நிகழுவதற்கு விசுவாசம் ஒரு கட்டாய நிபந்தனையாக இருக்கிறது என்பது இதற்குப் பொருள். விசுவாசம் மறுபிறப்புக்கு அவசியமான நிபந்தனையாக இருந்தால் அது நிச்சயம் மறுபிறப்புக்கு முன்னால்தான் வரமுடியும். அதைத்தான் சேஃபர் நம்புகிறார்.

சீர்திருத்த போதனைகள் மறுபிறப்பை பரிசுத்த ஆவியானவர் எவருடைய துணையுமில்லாமல் தானே நிறைவேற்றுவதாகப் போதிக்கிறது. அதை லூயிஸ் சேஃபர் நிச்சயம் ஒத்துக்கொள்ளுகிறார். மறுபிறப்பில் எவருடைய தலையீடும் இல்லாமல் பரிசுத்த ஆவி அதை நிகழ்த்துவதாக அவர் கூறுகிறார். இது சீர்திருத்தப் போதனையைப் போலத் தெரிகிறதல்லவா? ஆனால் பிரச்சனை மறுபிறப்பை யார் நிகழ்த்துவது என்பதல்ல; மறுபிறப்பு யாரில் நிகழ்கின்றது என்பதுதான். இங்குதான் சேஃபரின் போதனையின் தவறைத் தெரிந்துகொள்ள முடிகிறது. ஏற்கனவே சேஃபர் மறுபிறப்புக்கு முன் விசுவாசம் வர வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். இதன்படிப் பார்க்கிறபோது ஏற்கனவே கடவுளை விசுவாசிக்கிற ஒரு இருதயத்தில்தான் மறுபிறப்பு நிகழ்கிறது. அதைத்தான் சேஃபர் சொல்லுகிறார். இது சீர்திருத்தப் போதனைகளை ஒத்த போதனையல்ல. அதற்கு முற்றிலும் மாறான ஒரு கருத்து. சீர்திருத்த போதனை அவிசுவாசியாக இருக்கின்ற ஒருவனின் இருதயத்தில் எவருடைய தலையீடும் இல்லாமல் மறுபிறப்பு நிகழ்கிறதாகப் போதிக்கிறது. சீர்திருத்தப் போதனைகளைப் பொறுத்தவரையில் மறுபிறப்பு Monergistic. மரித்துப் போயிருக்கிற ஒருவனில் ஜீவனை விதைப்பவர் ஆவியானவர். பாவத்தில் மரித்திருக்கிறவனுக்கு ஆவிக்குரிய உயிரளிப்பதுதான் மறுபிறப்பு. அதில் அவரோடு எவரும் ஒத்துழைப்பதில்லை.

டிஸ்பென்சேஷனலிஸ்டான சேஃபரின் மறுபிறப்பு பற்றிய போதனைகள் சீர்திருத்த கிறிஸ்தவப் போதனைகளைவிட மிகவும் மாறுபாடுடையதாக இருப்பதைக் காண்கிறோம். சேஃபரின் விளக்கங்களில் நாம் கவனிக்கப் போகிற இன்னொரு விஷயம் என்னைப் பொறுத்தவரையில் ஆபத்தானது. மறுபிறப்பை பரிசுத்த ஆவி மனிதனில் நிகழ்த்துகிறபோது அவன் தெய்வீகத் தன்மையை அடைகிறான் என்று சேஃபர் கூறுகிறார். மறுபிறப்பு ஒருவரில் அடிப்படை மாற்றத்தைக் கொண்டுவருகிறது என்று கூறுவது வேறு; அது தெய்வீகத் தன்மையைக் கொடுக்கிறது (Divine nature) என்று கூறுவது வேறு. மனிதன் நித்திய ஜீவனை மட்டுமல்ல, தெய்வீகத் தன்மையையும் அடைகிறான் என்கிறார் சேஃபர்.

சீர்திருத்த கிறிஸ்தவம் இதைப்பற்றி விளக்குகிறபோது, கிறிஸ்துவை விசுவாசிக்கும் மனிதன் அடிப்படையில் பெரிய மாற்றத்தையும் புது வாழ்க்கையையும் அடைகிறான் என்று விளக்குகிறது. அவன் தன்னில் புதிய தன்மையை (New nature) அடைகிறான் என்பதும் உண்மை. அது மறுரூபமாக்கப்பட்ட புதிய மானுடத் தன்மை; தெய்வீகத் தன்மையல்ல. கர்த்தரின் குணாதிசயங்களை வாழ்க்கை நடத்தைகளில் பிரதிபலிக்கும் அளவுக்கு புதிய சிருஷ்டியாக, புதிய மனிதனாக மனிதன் மாற்றப் பட்டிருக்கிறான் என்பதுதான் உண்மை. இதை ‘தேவனுடைய சாயல்’ என்று எபேசியர் 4:24 விளக்குகிறது. அதே வசனம் அதைப் ‘புதிய மனிதனாக’ விளக்குகிறது. பேதுரு இதை ‘திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்கள்’ என்ற பதங்களின் மூலம் விளக்குகிறார் (2 பேதுரு 1:4). அதாவது ‘திவ்விய சுபாவம்’ என்று பேதுரு குறிப்பிடுவது திவ்விய சுபாவத்தின் குணநலன்களான அன்பு, கருணை, நீதி, பத்துக்கட்டளைகளுக்கேற்ற ஒழுக்கம், கர்த்தரோடு உறவாடும் தன்மை, அவருடைய பேச்சை வசனத்தின் மூலம் அறிந்து உணரக்கூடிய தன்மை போன்றவற்றைக் குறிக்கும். விசுவாசத்தை அடைவதன் மூலம் எவரும் தெய்வீகத்தை அடைவதில்லை. இதை எபிரெயர் நிருபத்தை எழுதியவர் எபிரெயர் 12:10ல், ‘அவருடைய பரிசுத்தத்தில் பங்கு கொள்கிறோம்’ என்று விளக்கியிருக்கிறார். அதாவது கர்த்தரைப் போல பரிசுத்தமாக வாழக்கூடியவர்களாக (பூரணப் பரிசுத்தத்தோடு அல்ல) நாம் மாற்றப்பட்டிருக்கிறோம் என்பது இதற்குப் பொருள். மனிதன் தெய்வீக நிலையை ஒருபோதும் அடைய முடியாது. பரலோகத்தை அடைகிறபோதுகூட அவன் தெய்வீகத்தை அடையப் போவதில்லை; முழுப் பரிசுத்தத்தைத்தான் அடையப் போகிறான்.

பரிசுத்த ஆவியானவர் பாவத்தில் இருக்கும் மனிதனுக்கு மறுபிறப்பை அளிக்கிறார். அப்படி அவர் மறுபிறப்பை அளிக்கிறபோது அதைப் பெறுகின்ற மனிதன் தன்னில் பரிசுத்த ஆவியானவர் தங்கியிருக்கும் ஆசீர்வாதத்தையும், அதோடிணைந்து வருகின்ற பலன்களையும் அடைகிறான். இந்த இடத்தில் நாம் மறுபிறப்பு பரிசுத்த ஆவியை ஒருவருக்கு கொடுப்பதாக நினைத்துவிடக் கூடாது. மறுபிறப்பை அளிக்கும் பரிசுத்த ஆவியானவர் அதை அடைந்த மனிதனுக்குள் தானே வந்திருந்து வாசம் செய்ய ஆரம்பிக்கிறார். அதுவே உண்மை.

John Gersterமறுபிறப்பைப் பற்றி ஜோன் கேர்ஸ்ட்னர் (John Gerstner) தன்னுடைய நூலில் (Wrongly Dividing the Word of Truth) விளக்கியிருக்கிறார். “மறுபிறப்பு பற்றிய இத்தகைய விளக்கங்களே இப்போது நம்மத்தியில் உலாவி வரும் ‘மாம்சக் கிறிஸ்தவன்’ என்ற போதனைக்கு அடிப்படையாக இருந்து வருகிறது.” கிறிஸ்தவனாக ஒருவர் இருந்து நீதிமானாக கிறிஸ்துவின் முன் இருந்தபோதும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படாமல் இருக்க முடியும் என்கிறது இந்தப் போதனை. இந்த ‘மாம்சக் கிறிஸ்தவன்’ (Carnal Christian) போதனையை பிரபல்யப்படுத்தி வருகிறவர்கள் கெம்பஸ் குருசேட் (Campus Crusade) நிறுவனத்தார். அதாவது ஒருவர் கிறிஸ்தவராக இருந்தும் அவரில் கிறிஸ்து ஆண்டவராக இல்லாமல் வெறும் இரட்சகராக மட்டுமே இருக்க முடியும் என்றும், அவ்வாறு இருக்கும் கிறிஸ்தவன் ‘மாம்சக் கிறிஸ்தவன்’ என்றும் அவர்கள் விளக்குகிறார்கள். கிறிஸ்து அவரில் ஆண்டவராக வரும்போதே அவர் முழுமையான கிறிஸ்தவ வாழ்க்கையை ஆவிக்குரிய விதத்தில் வாழ முடியும் என்பது அவர்களுடைய போதனை. அவ்வாறு மாறுவதற்கு அவர் பரிசுத்த ஆவியோடு ஒத்துழைக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

இந்தப் போதனையில் பல தவறுகள் காணப்படுகின்றன. 

முதலில், மறுபிறப்பை ஒருவர் அடைந்திருந்தும் அவரில் அது எந்தவிதமான அடிப்படை மாற்றத்தையும் உண்டாக்கவில்லை என்கிறது இந்தப் போதனை. இதன்படி ஒருவர் மறுபிறப்பை அடைந்திருந்தபோதும் தொடர்ந்தும் மாம்சம் அவரை பழையபடி ஆளுகிறது. அவர் புதிய மனிதனாக மாறி பரிசுத்த ஆவியும் அவரில் ஜீவிக்கிறார். இருந்தபோதும் பரிசுத்த ஆவியின் ஆளுகைக்குள் வரும்படி அந்த மனிதன் ஆவியானவரோடு ஒத்துழைக்கவில்லை. பழைய மனிதன் பரிசுத்த ஆவியானவரோடு ஒத்துழைக்கின்றபோதுதான் ஆவியில் நிரம்பிய வாழ்க்கையை அவரால் வாழ முடிகின்றது என்கிறது இந்தப் போதனை.

இரண்டாவதாக, மறுபிறப்பை ஒருவர் அடைந்திருக்கும் நிலையில் அவர் நீதிக்குரிய காரியங்களைச் செய்கிறபோது அதை அவர் தன்னுடைய மானுடத் தன்மையில் தானே செய்யாமல் அவரில் இருக்கும் பரிசுத்த ஆவியே அவற்றைச் செய்கிறார். இது அடுத்த தவறு.

இதைப்பற்றி விளக்கும் கேர்ஸ்ட்னர் சொல்லுகிறார், ‘மனந்திரும்பிய மனிதனில் இவர்களுடைய போதனைகளின்படி இரண்டு தன்மைகள் (Two natures) இருக்கின்றன – பழைய மனிதன், புதிய மனிதன். பழைய தன்மை முற்றிலும் கேடானதாக இந்த உலகத்துக்குரியதை மட்டுமே செய்கிறது. புதிய தன்மை தெய்வீகத் தன்மையாய் இருப்பதால் விலை மதிப்பில்லாத காரியங்களைச் செய்வதாய் இருக்கிறது. இன்னொருவிதத்தில் சொல்லப்போனால், மானுடத் தன்மை எரிந்துபோகக்கூடிய அழிவுக்குரியதை செய்கிறது. அதேநேரம் கடவுள் அவனில் இருந்து அவரால் ஏற்றுக்கொள்ளக்கூடிய காரியங்களைச் செய்கிறார்.’ மறுபிறப்படைந்த கிறிஸ்தவனில் இரண்டு தன்மைகள், கேடானதும், நல்லதும் தனித்தனியாக சம தன்மையோடு இருந்து கேட்டையும், நல்லதையும் செய்வதாகவும் சில வேளைகளில் ஒன்று மேலோங்கி மற்றது அடங்கியும் காணப்படும் என்பது இவர்களுடைய போதனை. இதெல்லாம் பாவத்தைப் பற்றியும், மறுபிறப்பைப் பற்றியும் சரியான போதனைகளைக் கொண்டிராததால் ஏற்பட்ட முரண்பாடான போதனைகளாக இருக்கின்றன.

வேதம் கிறிஸ்தவனில் இரண்டு தன்மைகள் இருப்பதாக விளக்கவில்லை. பழைய மனிதனே ஆவியானவரால் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டு, இப்போது கிறிஸ்தவன் புதிய மனிதனாக இருக்கிறான். இந்தப் புதிய மனிதன் மறுரூபமாக்கப்பட்டவனாக இருந்தபோதும் அவனில் பாவம் தொடர்ந்திருக்கிறது. இதையே பவுல் ரோமர் 7ல் விளக்குகிறார். புதிய மனிதனில் தொடர்ந்திருக்கும் பாவம் பரலோகம் போகிறபோதுதான் முற்றிலும் இல்லாமல் போகும். அதுவரை கிறிஸ்தவன் நற்கிரியைகளைச் செய்து பாவத்தை அழித்து வாழ வேண்டியவனாக இருக்கிறான். புதிய மனிதன், பழைய மனிதன் என்ற வார்த்தைப் பிரயோகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும் விதத்தையும் அவற்றின் நோக்கத்தையும் ஆராய்ந்து பார்க்காது கிறிஸ்தவனுக்குள் இரண்டு நபர்கள் இருந்து இயங்குவது போல் விளக்குவது வேதத்தில் காணப்படாத போதனை.

சேஃபர் கடவுளின் கிருபை திட்ப உறுதியானது (Effectual Call), மனிதனில் தெய்வீக செயலை நிகழ்த்தக்கூடியது, ஒருவருமே அதை இறுதியில் நிராகரிக்க முடியாது என்பதை ஏற்றுக்கொண்டபோதும் அந்தக் கிருபையை மனிதன் தன் சித்தத்தைப் பயன்படுத்தி சுயாதீனமாக ஏற்றுக்கொள்ளாமல் போனால் அது செயல்பட முடியாது என்று விளக்கினார். ஆவியின் துணையில்லாமல் மனிதன் திட்ப உறுதியான அழைப்பை ஏற்றுக்கொள்ளவோ நிராகரிக்கவோ கூடியவனாக இருக்கிறான் என்பதே இறுதியில் இவருடைய போதனையாக இருக்கிறது.

சீர்திருத்த கிறிஸ்தவம் கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டிய மனிதனுடைய கடமையை (Responsibility of man) பெரிதும் வலியுறுத்துகிறது. அந்தக் கடமையைச் செய்யக்கூடிய விதத்தில் மறுபிறப்பு அவனுக்கு ஆத்மீக ஜீவனைக் கொடுப்பதனாலேயே அவனால் அந்தக் கடமையை ஆவியின் நிலையில் இருந்து சுயாதீனமாக நிறைவேற்ற முடிகிறது என்பது சீர்திருத்தப் போதனையின் விளக்கம். சேஃபரின் விளக்கம் இதற்கு முற்றிலும் முரணானது.

BillyGrahamஇவெஞ்சலிக்கள் கிறிஸ்தவத்தின் பிரசித்தி பெற்ற டிஸ்பென்சேஷனலிஸ்டான பில்லி கிரேகம் (Billy Graham) இதைப் பற்றி தன்னுடைய நூலில் விளக்குகிறார். இந்த விஷயத்தில் பில்லி கிரெகம் ஓர் ஆர்மீனியன், அவர் பெலேஜியனல்ல. மனிதனின் இரட்சிப்புக்கு கடவுளின் துணையும் தேவை, மனிதனின் தீர்மானமும் அவசியம் என்பது அவரைப் போல எல்லா ஆர்மீனியன்களும் நம்பும் போதனை. பரிசுத்த ஆவி என்னதான் செய்து ஒருவரைக் கடவுளின் பக்கம் இழுக்கப் பார்த்தபோதும் மனிதனின் தனிப்பட்ட தீர்மானமே அவனுடைய மறுபிறப்புக்கு அவசியமாகிறது என்கிறார் பில்லி கிரெகம். இது கேட்பதற்கு பிரச்சனையில்லாததுபோல் தோன்றும். ஆனால் இதில் இருக்கிற பிரச்சனை என்ன தெரியுமா? கிரேகமின் போதனையின்படி, கிறிஸ்துவை விசுவாசிக்க மனிதனெடுக்கின்ற தீர்மானம் பரிசுத்த ஆவியினால் ஏற்படும் மறுபிறப்பால் வருவதல்ல. அதை அவன் பிறப்பில் இருந்தே கொண்டிருக்கிறான். கிரெகமைப் பொறுத்தவரையில் இந்தக் காரணத்தால்தான் அவனால் விசுவாசிக்க முடிகின்றது; விசுவாசத்தின் பின் மறுபிறப்பு அவனுக்குக் கிடைக்கிறது. இந்த விஷயத்தில் கிரேகம் சேஃபரின் வழிகளையே பின்பற்றுகிறவராக இருக்கிறார்.

இவரைப்போலவே ஹெரி அயன்சைட் (Harry Ironside), சார்ள்ஸ் ரைரி (Charles C. Ryrie), நோர்மன் கீஸ்லர் (Norman Geisler) போன்ற ஆர்மீனியனிசத்தைப் பின்பற்றுகிறவர்களும் மறுபிறப்பைப் பற்றிய விஷயங்களில் கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்கள். சேஃபர் முதல் இவர்கள் எல்லோருக்குமே சீர்திருத்தக் கோட்பாடு விளக்கும் மறுபிறப்புத் தத்துவத்திலும், திட்ப உறுதியான அழைப்பிலும் நம்பிக்கையில்லை. அவை மனிதனின் சுயாதீன சித்தத்தைப் பாதிக்கிறதாக, அவனை சுயமாக செயல்பட இடங்கொடுக்காமல் இருப்பதாக அவர்கள் தவறான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கிறார்கள். அதன் காரணமாகவே இவர்கள் எல்லோரும் இரட்சிப்பின் படிமுறையின் படிகளையெல்லாம் மனிதனுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவனுக்கேற்றவிதத்தில் விளக்கியிருக்கிறார்கள்.

pastor_ironside                       CharlesRyrie                       geisler

சீர்திருத்த போதனைகள் மனிதனுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இல்லை. அவன் சுயாதீனமாகவே எல்லா நிலைகளிலும் இயங்குவதாக அது தெளிவாகப் போதிக்கிறது. பாவத்தில் விழுமுன் அவன் சுயாதீனமாக இயங்கினான். பாவத்தில் விழுந்த பின்னும் தன்பாவநிலைக்கேற்றபடி முழு சுயாதீனத்துடன்தான் பாவத்தை அவன் செய்கிறான். மறுபிறப்பு ஏற்பட்டவுடன் அவன் ஆவிக்குரிய விஷயங்களை சுயாதீனத்துடன்தான் செய்கிறான். சீர்திருத்த போதனைகள் மனிதன் சுயாதீனமாக இயங்கத் தடையாக இருக்கிறது என்பது அந்தப் போதனைகளை ஆராய்ந்து பார்க்காமல் அவிழ்த்துவிடப்பட்டிருக்கும் கட்டுக்கதை.

ஆர்மீனியனிசம் மனிதனின் சுயாதீன சித்ததுக்கு முக்கியத்துவமும், மதிப்பும் கொடுத்து நடப்பதுபோல் வெளியில் காட்டிக்கொண்டாலும் அதன் போதனைகள் மனிதனுக்கு ஆவிக்குரிய வெளிச்சத்தைக் கொடுப்பதில்லை; வேதத்தையும் பிரதிபலிக்கவில்லை. கர்த்தரின் இறையாண்மையையும் அது களங்கப்படுத்துகிறது.

இதுவரை நாம் மூல பாவத்தைப் பற்றிய தவறான போதனைகள் எந்தெந்த விதங்களில் வரலாற்றில் பெலேஜியனின் காலத்தில் இருந்து இன்று வரையும் வளர்ந்து வந்திருக்கின்றன என்பதையும் எத்தனைத் தவறான முரண்பாடான போதனைகளை உருவாக்கியுள்ளன என்பதையும் ஆராய்ந்திருக்கிறோம். மூல பாவத்தில் கைவைத்து மனிதனில் அதன் விளைவுகளைக் கொச்சைப்படுத்த ஆரம்பித்தபோதுதான் இறையியல் வல்லுனர்கள் அதோடு தொடர்புடைய இரட்சிப்பின் படிமுறைகளில் அடங்கியிருக்கும் கிருபைகளுக்கெல்லாம் தங்களுடைய எண்ணப்படி விளக்கங்கொடுக்க ஆரம்பித்து கர்த்தர் இறையாண்மையுடன் தருகின்ற இரட்சிப்புக்கும் செல்லாக் காசைப்போல விளக்கங் கொடுக்க ஆரம்பித்தார்கள். எவரும் விரும்பினால் பெற்றுக்கொள்ளலாம், விரும்பாவிட்டால் தூக்கியெறிந்துவிடலாம் என்ற நிலைக்கு இரட்சிப்பை மனிதர் மனதில் நிலை நிறுத்தச் செய்தார்கள். மனிதனுடைய சித்தத்தைப் பற்றிய தவறான போதனைகள் எந்தளவுக்கு வேதபோதனைகளைக் கறைபடுத்திவிடலாம் என்பதையும் வரலாற்றில் நாம் பார்த்திருக்கும் உண்மைகள் விளக்குகின்றன.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s