திருமறைத்தீபம் 20வது வருடத்தை இந்த இதழோடு ஆரம்பிக்கிறது. இம்மட்டுமாக கர்த்தர் பத்திரிகை மூலம் சத்தியத்தை சத்தியமாக விளக்கி வாசகர்களுக்கு அளிக்க துணைபுரிந்திருக்கிறார். இந்தப் பணி தொடர தொடர்ந்து ஜெபியுங்கள். சத்தியம் பலரின் கண்களைத் திறக்கட்டும். வேத வசனங்களில் தெளிவும், நம்பிக்கையும் இல்லாவிட்டால் கிறிஸ்தவம் கிறிஸ்தவமாக இருக்க முடியாது என்பதை நம்மினத்துக் கிறிஸ்தவம் உணர வேண்டும் என்ற ஆதங்கத்தோடுதான் இந்தப் பத்திரிகை ஆரம்பமானது. அது வீண்போகவில்லை என்பதை நாம் நிதர்சனமாக உணர்கிறோம். இன்னும் அநேகர் சத்தியத்தெளிவடைந்து வேதநம்பிக்கைகளை மட்டும் சுமந்து கிறிஸ்துவைப் பின்பற்றி வாழ பத்திரிகையைக் கர்த்தர் பயன்படுத்தட்டும்.
மனித சித்தத்தைப் பற்றிய தொடரில் இன்னொரு பகுதியை (நீயும் நானுமா – 2) இந்த இதழில் தந்திருக்கிறோம். அது நிறைவடைந்தபின் நூலாக வெளிவரும். இறையனுபவத்தை ஒவ்வொருவரும் அடைய வேண்டும் என்பதைத்தான் சுவிசேஷம் சொல்லுவதன் மூலம் எதிர்பார்க்கிறோம். அந்த அனுபவத்தை அடையவும் அதில் வளரவும் தெளிவான இறைபோதனைகள் அவசியம். இறைபோதனைகள் இல்லாமல் இறையனுபவத்தில் வளரவோ, உயரவோ முடியாது. அதை விளக்கும் ஆக்கமே ‘வண்டியும் சக்கரங்களும்’.
ஒரு சில வாசகர்கள் 75வது இதழை வாசித்தபின் பத்திரிகை மூலம் தங்களுடைய வாழ்க்கையில் கர்த்தர் செய்த பெருங்காரியங்களை எழுதி அனுப்பியிருக்கிறார்கள். அந்தளவுக்கு கர்த்தர் அவர்களுக்கு ஆத்மீக வழிகாட்டுதலை பத்திரிகை மூலம் கொடுத்திருக்கிறார் என்பது தெரிந்து மிகத் தாழ்மையோடு கர்த்தருக்கு சகல நன்றிகளையும் தெரிவிக்கிறோம். இதை இறையாண்மையுள்ள நம் தேவன் மட்டுமே செய்ய முடியும். அந்தக் கடிதங்களை நீங்களும் வாசித்து கர்த்தருக்கு நன்றி தெரிவிக்குமுகமாக சிலவற்றை இந்த இதழில் தந்திருக்கிறோம்.
கிறிஸ்தவ வினா விடைப் போதனைத் தொகுப்பு நூலாக வெளிவந்திருக்கிறது. அதன் அறிமுகத்தை இதில் வெளியிட்டிருக்கிறோம். இந்த நூல் சத்திய வெளிச்சத்தை அநேகருக்கு அளிக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய வாஞ்சை. பத்திரிகைப் பணியிலும், நூல் வெளியீட்டுப் பணியிலும் எங்களோடு இணைந்து உழைத்து வருகிறவர்களை உங்கள் ஜெபங்களில் தவறாது நினைவுகூருங்கள்.
– ஆசிரியர்.