75வது இதழ் வாசகர்கள் சொன்னவை!

Prabudossதிருமறைத்தீபம் பத்திரிக்கை 75 வது இதழாக வெளிவந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இத்தனை ஆண்டுகள் தடையில்லாமல் வெளிவர உதவிசெய்து இப்பிரதிகள் எனக்கும் கிடைக்க உதவிய ஆண்டவருக்கு இருதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி ஏறெடுக்கிறேன்! இவ்வூழியம் என் வாழ்க்கையில் கொண்டு வந்த நன்மைகளை வார்த்தைகளால் விவரித்துவிட முடியாது!

எத்தனை எத்தனை சத்தியங்கள், எவ்வளவு பெரிய வெளிப்பாடுகள்! கற்றுக்கொண்ட காரியங்கள் எத்தனையோ!! அவைகள் அத்தனையையும் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. பல ஆண்டுகளாய் வேதாகம கல்லூரியில் பயின்ற மாணவனை போன்ற ஓர் உணர்வு எனக்கு உண்டு என்றால் அது மிகையாகாது.

‘திருமறைத்தீபம்’ வருகைக்காக வழிமேல் விழிவைத்துக் காத்துக்கொண்டிருந்த நாட்கள் அந்நாட்கள். பத்திரிக்கை கையில் கிடைத்த நிமிடத்திலிருந்து, அதை வாசித்து முடித்துவிட்ட பிறகே மற்ற வேலையைப் பார்க்கும் அளவிற்கு ஒவ்வொரு பிரதியும் உள்ளத்தில் அனல்மூட்டிக்கொண்டிருந்தது. பாடப் புத்தகத்தோடு சேர்த்து திருமறைத்தீபத்தையும் எடுத்துச் சென்று பள்ளி நாட்களை கழித்திருக்கிறேன். கல்லூரி நாட்களில் ரயில் பயணத்தில் படிப்பதற்கு ஒவ்வொரு பிரதிகளையும் கொண்டுசெல்வது என் வழக்கமாகவே இருந்திருக்கிறது. அது என் சக தோழர்களுக்கும் இந்த பழக்கத்தை உண்டாக்கியது. இப்படியாக இன்றுவரைக்கும் என் ஆத்மீகப் பசிக்கு உணவளிக்கும் வல்லமையுள்ளதாய் இருந்து கொண்டு தான் இருக்கின்றது இத்தீபம்!

 

இன்றும் என் அன்றாட வேதவாசிப்பின் போதெழும் சந்தேகத்திற்கெல்லாம், பத்திரிக்கையின் உதவியை நான் நாடிக்கொண்டிருக்கிறேன். மாதத்தில் இரண்டொரு முறையாவது பழைய ஆக்கங்களை புரட்டிப்பார்க்க வேண்டிய அவசியம் வந்துள்ளது. அது எந்த ஆக்கத்தில் எந்த தலைப்பின் கீழ் வந்தது என்பதனை தேடித் தேடி அலுத்துப்போய், தற்போது எந்த ஆக்கம் எந்த ஆண்டு வந்தது என்பதற்கான அட்டவணையை தயாரித்து வைத்து சுலபமாக புரட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அந்தளவுக்கு அநேக சத்தியங்களை நான் விளங்கிக்கொள்ள திருமறைத்தீபம் ஒரு முக்கிய பங்காற்றியுள்ளது.

ஆரம்ப நாட்களில் காலாண்டுக்கு ஒருமுறைதான் வெளிவருகிறது என்பதை மறந்து, நான் அடிக்கடி தபால் நிலையம் முன் நின்ற அனுபவங்களும் உண்டு. இப்பத்திரிக்கையின் வாயிலாகவே எனது தகப்பனாருக்கும், தபால்காரருக்கும் நட்பு ஏற்பட்டு அவரது மகனும் நானும் இன்று நண்பர்களாக பழகுமளவிற்கு வளர்ந்து, அவர் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகும்கூட அந்த உறவு தொடர்ந்திருப்பது நினைத்துப்பார்க்க கூடிய ஆச்சரியமான ஒன்று!

எவ்வளவு ஆக்கங்கள்! எத்தனை விதமான தலைப்புகள்!! அதே நேரத்தில் பள்ளி பருவங்களில் இருக்கும்போது பத்திரிக்கையில் வந்த சில ஆக்கங்களும், வாசகங்களும் புரிந்து கொள்ள முடியாததாயிருந்தாலும் (பின்நவினத்துவம், கல்வினிசம், பெலேஜியனிசம், ஆர்மீனியனிசம்) அவைகள் பின்னாளில் நான் கல்லூரியில் தத்துவம் பயிலும்போது அவைகள் விளங்கிக்கொள்ள கர்த்தர் உதவிசெய்ததை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

முதன் முதலில் என் வாழ்க்கையில் ஜோடனையில்லாத நடைமுறைப் போதனைகளை அறிமுகப்படுத்தி வைத்ததே இப்பத்திரிக்கை தான். பல ஆக்கங்களை படிக்கும்போதே கண்களில் கண்ணீர் துளிகளை வரவைக்கும் பல வாசகங்களும் இடம்பெற்றிருந்தன. இன்றும் என் காதில் ஓயாமல் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கிற வாசகங்களும், தலைப்புகளும் எத்தனையோ எத்தனை!! சில செய்திகளை மறந்ததுபோல் தோன்ற, மறந்துவிட கூடாது என்பதற்காக, நடுஇரவில் எழுந்து அந்த ஆக்கங்களை வாசித்து ஜெபம் செய்யும் அளவிற்கு திருமறைத்தீபம் சத்தியங்களை சுமந்து வந்துள்ளது.

ஜோன் நியூட்டன், வில்லியம் கேரி போன்றவர்களின் வாழ்க்கை சரிதங்கள், வில்லியம் பிளமரின் “ஆத்மீக பின்வாங்குதல்”, ஆல்பர்ட் மார்டினின் “நீ ஏன் மனம்திரும்ப மறுக்கிறாய்’’ மற்றும் “பிரியாவிடைப் பிரசங்கம்” தங்களுடைய “குடும்ப ஆராதனை” போன்றவைகள், அதிக தாக்கத்தை ஏற்படுத்தி அசைபோட வைப்பவையாகும். அதில் முக்கியமாக பழைய ஏற்பாட்டின் முக்கியத்துவம், அதில் பத்துக்கட்டளைகளின் அவசியம், முக்கியமாக ஓய்வு நாளின் முக்கியத்துவம் போன்ற ‘என்றுமே கைவிட்டுவிடக் கூடாத வேதத்தின் இன்றியமையாத அடிப்படை சத்தியங்களை’ (Non Negotiable Essential Doctrines of the Bible) குறிப்பிட்டே ஆக வேண்டும்.

இந்தியாவிற்கு வந்து சேவைசெய்த ஒருசிலரைப் பற்றி மட்டுமே அறிந்திருந்த எனக்கு அநேக பரிசுத்தவான்களின் அறிமுகங்கள் அவர்களின் வாழ்க்கை வரலாறுகள் என்னை அதிகம் சிந்திக்க வைத்தன. சார்லஸ் பினி, ஜான் வெஸ்லி, மூடி, பால் யொங்கி சோ போன்ற பிரபலமானவர்களின் தவறான போதனைகளை சுட்டிக்காட்டி அவர்களை போல இன்று தவறான போதனைகளை தரக்கூடிய மனிதர்களை விட்டு விலகும் அளவிற்கு வேத அறிவில் வளர இப்பத்திரிக்கை எனக்கு துணை நின்றிருக்கிறது. தன்னை பற்றியும் தன் குடும்பத்தைப்பற்றியும் அறியாத ஒரு குழந்தைக்கு அதனை அறிமுகப்படுத்தி வைத்தால் எவ்வளவு சந்தோஷப்படுவார்களே அவ்வளவு மகிழ்ச்சியடைந்திருக்கிறேன். திருச்சபை வரலாற்றைப் பற்றிய ஆக்கங்கள் வந்தப்போது!
இன்னும் எத்தனையோ பாடங்கள்: சபை, ஆராதனை, ஜெபம், பிரசங்கம், பிரசங்கி, அவர்களின் மனைவி பிள்ளைகள், ஊழியம், காணிக்கை, வேலை, திருமணம், குடும்பம், தவறான போதனைகள் என ஒரு கிறிஸ்தவனுக்கு தேவையான அடிப்படை சத்தியங்களை அறியத் தந்திருக்கிறது இத்திருமறைத்தீபம். எந்த புத்தகத்தை வாங்க வேண்டும், எப்படி வாசிக்க வேண்டும் என்பது பற்றிய வாசிப்பு அறிவுரைகளுக்கு முக்கியத்துவம் அளித்த புத்தகத்தை நான் இதுவரை பார்த்ததேயில்லை. எத்தனை ஆவிக்குரிய நூல்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது இத்தீபம். இன்னும் எத்தனையோ நினைவுகளை அசைபோட்டுக்கொண்டே போகலாம்!!!

அதில் என்றுமே மறக்கமுடியாத நன்றியுடன் நினைவுகூர வேண்டிய ஒன்று, எப்படி பிரசங்கம் செய்ய வேண்டும்? என்பது பற்றியும், தவறான போதனைகளையும், அதனை செய்கிறவர்களையும், இனம்கண்டுக்கொள்ளவும், சரியான தரமுள்ள சத்தியங்களை கொண்ட புத்தகங்களை வாங்கவும் நான் கற்றுக்கொண்டது தான். இதில் முக்கியமாக “ஊழிய அழைப்பு, கர்த்தர் கட்டியெழுப்பும் திருச்சபை, போதகா உன் கடமை, போதகர்களின் ஒழுக்ககேட்டை அசட்டை செய்யலாமா?” போன்ற ஆக்கங்கள் ‘ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்கு சமானம்’ என்பதாய் என் ஊழிய பாதையில் சரியான கர்த்தருடைய ஆலோசனையாயிருந்து, ஊழியம் செய்வதற்கான தைரியத்தையும் பெலனையும் கொடுத்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

இப்படியாக, ஒரு வளரும் ஊழியனுக்கு முதிர்ந்த அனுபமுள்ள ஓர் ஊழியர் பக்கத்திலிருந்து கற்றுக்கொடுப்பது போல கடந்த 19 ஆண்டுகளாக இடையறாமல் வெளிவந்து எங்களை சரியான வழியில் நடத்தியதை நினைத்து கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன். இப்பயணத்தில் உங்களோடு நானும் பயணித்திருக்கிறேன் ஒரு வாசகனாய் என்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். தொடர்ந்து உங்களுடைய எழுத்துக்களால் நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டு வருகிறோம். நீங்கள் எங்களுக்கு கற்றுக்கொடுத்த வேத வெளிச்சங்கள் நாங்கள் சரியான வழியில் செல்ல உதவியாயிருக்கிறது. தொடர்ந்து உங்களுடைய எழுத்துப்பணி எங்களுக்கும், எங்களது சபைகளுக்கும், நமது நாட்டிற்கும் தேவை. உங்களுடைய எழுத்துப் பணிக்காகவும், உடல் சுகத்திற்காகவும், மற்றும் குடும்பம் சபைக்காகவும்; நாங்கள் தேவனுக்கு நன்றி செலுத்தி ஜெபித்துக்கொண்டிருக்கிறோம்.
இப்பத்திரிக்கைக்கு பணம், உழைப்பு, நேரம் என அனைத்தையும் செய்கிற ஒவ்வொரு உள்ளங்களுக்காகவும் ஜெபித்து தேவனை துதிக்கிறேன். இன்னும் பற்பல சுடர்களாய் எரிந்து அநேகர் வாழ்க்கையில் ஒளிவீச வேண்டுமென்று வாழ்த்துகிறேன். இந்த ஊழியத்தை உற்சாகத்தோடு செய்ய உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும் கர்த்தர் தம்முடைய அளப்பரிய கிருபையும், பெலனையும் தரவேண்டுமென்று ஜெபித்து வேண்டுகிறேன்.

‘திருமறைத்தீபம் ஒரு மரித்த தேகத்தை உயிரோடு எழுப்பினதில்லை. ஆனால் இதனுடைய செய்தியோ காலம் காலமாக ஆவிக்குரிய ரீதியில் மரித்துப்போயிருந்தவர்களை உயிர்ப்பித்துக்கொண்டிருக்கிறது.’

அன்புடன்,
ஆர்வமுள்ள வாசகனாய்,
எம். பிரபுதாஸ்,
ரபூனி நம்மோடு சபை, தமிழ்நாடு

_____________________________________________________________________________

Pastor Paul Singhதிருமறைத்தீபத்தின் எழுபத்தைந்தாவது இதழ் கையில் கிடைத்தபோது, கடந்த பதினேழு வருட காலமாக இந்தப் பத்திரிகை என் வாழ்வில் எனக்களித்துள்ள ஊக்கத்திற்காகவும், ஆசீர்வாதங்களுக்காகவும் கர்த்தருக்கு அநேக ஸ்தோத்திரங்களை ஏறெடுத்தேன். நான் 1996ம் ஆண்டில் திருமறைத்தீபத்தை வாசிக்க ஆரம்பித்தேன். அப்போதே இந்தப் பத்திரிகை ஏனைய பத்திரிகைகள் எல்லாவற்றையும்விட பெரிதும் வித்தியாசமானது என்பதை நான் உணர்ந்தேன். அந்தக் காலங்களில் நான் ஒரு மிஷனரி நிறுவனத்தின் ஊழியனாக குஜராத்தில் சபை நிறுவும் பணிகளில் ஈடுபட்டிருந்தேன். சீர்திருத்தப் போதனைகளைப் பற்றி நான் அந்தக் காலத்தில் ஒன்றும் அறிந்திருக்கவில்லை. பத்திரிகையில் அதைப்பற்றி வாசித்ததும் அதுபற்றி மேலும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற பேரார்வம் எனக்குள் ஏற்பட்டது. இறையாண்மையுள்ள கர்த்தர் சரியான நேரத்தில் திருமறைத்தீபத்தை என் வாழ்க்கையில் அறிமுகப்படுத்தினார். ஒவ்வொரு இதழும் வேதபோதனைகளுக்கு நல்ல விளக்கங்களை அளித்துவர அதன் மூலம் கர்த்தர் தன்னுடைய ஆவியினால் என் இருதயத்தில் சிறிது சிறிதாக மாற்றங்களைக் கொண்டுவர ஆரம்பித்தார்.

பத்திரிகையை அட்டையில் இருந்து கடைசிப் பக்கம்வரை ஒன்று தவறாமல் வாசித்து வர ஆரம்பித்தேன். சில வேளைகளில் ஒரே ஆக்கத்தைப் பலதடவைகள், அதில் தெளிவு அடைய வேண்டுமென்பதற்காக வாசிப்பதை வழக்கமாக வைத்திருந்தேன். பத்திரிகையில் வெளிவந்த ஆக்கங்களில் அநேகமானவை எனக்கு வேதத்தில் தெளிவை அளித்தன – சுவிசேஷ ஊழியம் பற்றிய வேதபோதனைகள், உள்ளூர் சபையின் முக்கியத்துவம், உள்ளூர் சபையின் ஆட்சியமைப்பு ஆகியவை என் ஆவிக்குரிய வாழ்வில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தின.

ஜூன் மாதம் 2006ம் ஆண்டில் என் வாழ்க்கையில் முக்கிய திருப்பம் ஏற்பட்டது. அந்த ஆண்டில் திருமறைத்தீப ஆசிரியர் எழுதிய ‘திருச்சபை சீர்திருத்தம்’ என்ற நூல் பத்திரிகையோடு என் கையில் கிடைத்தது. அந்த நூலையும், பத்திரிகையையும் வாசித்த பிறகு நானும் என் மனைவியும் நான் பணி செய்துவந்த மிஷனரி நிறுவனத்தில் இருந்து விலகத் தீர்மானித்தோம். அதுமட்டுமல்லாது திருமறைத்தீபத்தில் இருந்து நாங்கள் பத்துவருடங்களாக (1996-2006) கற்று வந்திருந்த வேத போதனைகளின் அடிப்படையில் குஜராத்தில் உள்ளூர் சபையொன்றை நிறுவவும் தீர்மானித்தோம். இன்று கர்த்தரின் பெருங் கிருபையால் கிருபை சீர்திருத்த பாப்திஸ்து சபை 1689 விசுவாச அறிக்கையின் அடிப்படையில் வேதபோதனைகளைப் பின்பற்றி நடக்கும் திருச்சபையாக குஜராத்தில் அமைக்கப்பட்டு வளர்ந்து வருகின்றது. நாங்கள் தனிப்பட்ட விதத்திலும், சபையாகவும் திருமறைத்தீப ஆசிரியர் போதகர் பாலாவிற்கு அவருடைய எழுத்துப்பணிகளுக்காக பெரும் கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம்.

கர்த்தரின் கிருபையினால் மட்டும்,
போதகர் பால் ஜெயசிங்
குஜராத்

_____________________________________________________________________________

muraliநான் வளர்ந்த முறையின் காரணமாக எனக்கு தமிழில் வாசிப்பது கொஞ்சம் சிரமமான காரியம். ஆனால் திருமறைத்தீபம் பத்திரிகையின் காரணமாக நான் தமிழில் வாசிக்க பெருமுயற்சி செய்து வருவதோடு எனது மனைவியின் துணையோடு அதில் வருகின்ற ஆக்கங்களின் விளக்கங்களையும் பெற்றுக்கொள்ளுகிறேன். கடந்த மூன்று வருடங்களாகத்தான் பத்திரிகையை நான் வாசித்து வருகிறேன். ஆசிரியரிடம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நான் இறையியல் கற்று வருவதற்கு இடையில் பத்திரிகை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வந்து சத்திய உணவளித்து வருகிறது. அதில் வரும் ஆக்கங்களில் அருமையானதும், ஆழமானதுமான சத்தியங்களை வாசித்தறிந்து நான் மகிழ்ந்திருக்கிறேன். என்னுடைய ஊழியப் பணியில் நான் சந்தித்து வருகின்ற ஆத்மீக விஷயங்களுக்கு பத்திரிகை தகுந்த விளக்கமளித்து எனக்குத் துணை செய்கிறது. சத்தியத்தில் என்னை வளர்ச்சியடையச் செய்து, போலிப்போதனைகளில் இருந்து என்னைப் பாதுகாத்துக் கொள்ள பத்திரிகை உதவிசெய்கிறது. என்னுடைய குடும்ப வாழ்க்கையிலும், சபை வாழ்க்கையிலும் பல விஷயங்களைத் திருத்தி அமைத்துக்கொள்ள பத்திரிகை பேருதவி செய்திருக்கிறது. பெங்களூரில் உள்ள எங்கள் சபை மக்களில் பலரும் ஆர்வத்தோடும், தாகத்தோடும் பத்திரிகையை வாசித்து வருகிறார்கள். தங்களுடைய குடும்ப ஜெபவேளைகளிலும் அவர்கள் பத்திரிகையைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

பத்திரிகையில் வந்த ‘பத்து மில்லி கிறிஸ்தவம்’ எனும் ஆக்கம் நகைச்சுவையோடு ஆரம்பித்த போதும் நம்மினத்தில் பரவலாகக் காணப்படும் கிறிஸ்தவத்தைப் படம்பிடித்துக் காட்டியதோடு நம்முடைய செய்கைகளையும் ஆராய்ந்து பார்க்கும்படித் தூண்டியது. ‘சுவிசேஷத்தை எப்படிப் பிரசங்கிப்பது’ என்ற ஆக்கம் சுவிசேஷப் பிரசங்கத்தை சரிவர செய்ய என்னை ஊக்கப்படுத்தியது. ‘சபை ஆராதனை’ பற்றிய ஆக்கங்கள் மனித இச்சைகளின்படி ஆராதனை நடத்தாமல் கர்த்தரின் வார்த்தையின் வழிப்படி ஆராதனை நடத்த எனக்கு பயனளித்தது. சுயாதீன சித்தத்தைப் பற்றி நான் பெரிதாக எண்ணியிருக்கவில்லை. சுவிசேஷத்தை சரிவரப் புரிந்துகொள்ள சுயாதீன சித்தம் பற்றிய போதனைகள் எந்தளவுக்கு அவசியமென்பதையும், சுயாதீன சித்தம் பற்றிய கருத்துக்களே சீர்திருத்தவாத காலத்தில் பெரும் தர்க்கங்களை உருவாக்கின என்பதையும் அதுபற்றிய ஆக்கங்கள் எனக்கு தெளிவுபடுத்தின. ‘உன்னால் முடியும் தம்பி’ என்ற தலைப்பே என்னுடைய சபை மக்கள் அனைவரும் சுயாதீன சித்தம் பற்றிய ஆக்கத்தை வாசிக்கப் பெரும் ஆர்வத்தை அவர்கள் மத்தியில் ஏற்படுத்தியதோடு, அதுபற்றிய சரியான போதனைகளையும் பெற்றுக்கொள்ள உதவியது. அல்பர்ட் என். மார்டின் அவர்களின் பிரசங்கங்கள் எப்போதுமே ஆழமான சத்தியங்களைக் கொண்டவையாகவும் இருதயத்தைத் தொடுகின்றவையாகவும் இருக்கின்றன. அவை என்னுடைய பிரசங்க ஊழியத்துக்கும் பேருதவி புரிகின்றன. பத்துக் கட்டளைகளைப் பற்றி இப்போது நான் சபையில் பிரசங்கம் செய்து கொண்டிருக்கிறேன். திருமறைத்தீபத்தில் அதுபற்றி வந்துள்ள ஆக்கங்கள் அதிகாரத்தோடும் புரிந்துகொள்ளுதலோடும் கர்த்தரின் கட்டளைகளைப் பிரசங்கிக்க உதவின.

என்னுடைய பிரசங்கப் பணியில் மாற்றங்களைக் கொண்டுவர பத்திரிகை பேருதவி செய்திருக்கிறது. சுவிசேஷத்தைப் பிரசங்கித்து பாவிகளைக் கிறிஸ்துவிடம் அழைக்கும் முறையில் நான் இப்போது மாற்றங்களை செய்திருக்கிறேன். அதற்குக் காரணம் ‘சுயாதீன சித்தம்’ பற்றிய பத்திரிகையில் வந்துள்ள ஆக்கங்கள்தான். எத்தனையோ விஷயங்களை நாம் சாதாரணமானதாக எடுத்துக்கொண்டு அலட்சியப்படுத்தி விடுகிறோம். ஆனால் பத்திரிகை தற்காலத்தில் நிகழும் அவசியமான பல விஷயங்களைப் பற்றியும் ஆராய்ந்து நம்முடைய சிந்தனைகளையும் வாழ்க்கையையும் மாற்றி அமைத்து சபை சீர்திருத்தத்தில் உத்வேகத்தோடு ஈடும்படி வழிகாட்டுகிறது.

எங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் வளரப் பேருதவி புரிந்து இந்தக் காலாண்டுப் பத்திரிகையை வெளியிட்டு வரும் பத்திரிகை ஆசிரியரையும், அவரோடு இணைந்து உழைப்பவர்களையும், பத்திரிகை தொடர்ந்து வெளிவரத் துணை செய்கிறவர்களையும் இந்த நேரத்தில் என்னால் வாழ்த்தி நன்றி கூறாமல் இருக்க முடியாது. கர்த்தர் தொடர்ந்து இதனைத் தன் மகிமைக்காகப் பயன்படுத்தட்டும். மூன்று வருடங்களுக்கு முன்னால் இந்தப் பத்திரிகை என் கைக்குக் கிடைக்காமல் போனது மட்டுமே என்னுடைய வருத்தம்.

போதகர் முரளி
பெங்களூர்

_____________________________________________________________________________

jeroldமுதலில் எனது நன்றிகளும், வாழ்த்துக்களும். பத்திரிகைக்கு இது இருபதாம் ஆண்டு. கர்த்தருடைய கிருபையால் இது பத்திரிகையின் பெரும் சாதனை. எத்தனையோ பத்திரிகைகள் வந்த வேகத்தில் காணாமல் போக, இருப்பவையும் இறை சிந்தனை அளிப்பதற்கு பதில் இறை நிந்தனை செய்துகொண்டிருக்க, இவைகளின் மத்தியில் சத்தியத்தை அறியும் ஆர்வமுள்ளோருக்கு கலங்கரைத்தீபமாக ஒளிர்கிறது ‘திருமறைத்தீபம்’. ஆயிரக்கணக்கானோர் இதன் வெளிச்சத்தால் கண் திறக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவனாக இதை நான் எழுதுகிறேன்.

நான் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து பாரம்பரிய சபையொன்றிற்கு போய்க்கொண்டிருந்தேன். அங்கே அடைந்தது ஒன்றுமில்லை. கிறிஸ்துவை அறியாமல் நான் அந்தச் சபைக்குத் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தேன். கர்த்தர் தன் கிருபையால் என்னை ஒரு நாள் இரட்சித்தார். ஆவியின் கண்கள் திறக்கப்பட்டு சத்தியத்தை அறியும் ஆவலில் அதைத் தேடித்திரிந்தேன். எத்தனையோ சபைகளுக்குப் போய்ப் பார்த்தேன். அங்கெல்லாம் சத்தியம் போதிக்கப்படவில்லை. இதற்காக கர்த்தரிடம் அழுது மன்றாடியிருக்கிறேன். 2001ம் ஆண்டில் ஒரு சபைக்குப் போனபோது அங்கிருந்து திருமறைத்தீபம் பத்திரிகை எனக்குக் கிடைத்தது. அதை வாசித்தபோது ஏனைய பத்திரிகைகளில் இல்லாத சத்திய ஈர்ப்பை அதில் உணர்ந்தேன். இன்றுவரை தொடர்ந்து அதை வாசித்து வருகிறேன்.

பத்திரிகையின் எழுத்து நடையும், கருத்து வளமும் என்னைப் பெரிதும் கவர்ந்தன. அதன் வடிவமைப்பு அருமையானது. பத்திரிகையில் வந்துள்ள பல ஆக்கங்கள் எனக்கு சத்திய விடுதலை அளித்திருக்கின்றன. ‘கர்த்தர் கட்டியெழுப்பும் சபை’, ‘குடும்ப ஆராதனை’, ‘இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கு’, ‘1689 விசுவாச அறிக்கை விளக்கம்’, ‘வினா விடை மூலம் வரும் கிறிஸ்தவ கோட்பாடுகள்’, ‘சான்றோரின் சரித்திரம்’, ‘திருச்சபை வரலாறு’ போன்ற ஆக்கங்கள் மூலம் நான் இரட்சிப்பு குறித்த தெளிவான விளக்கங்களையும், சபை பற்றியும், குடும்ப அமைப்பு பற்றியும் அதிகம் அறிந்துகொண்டேன்.

திருமறைத்தீபத்தின் எழுபத்தைந்தாவது இதழை வாசித்தேன். எத்தனை அருமையான பணி இது. உங்களுடைய கடுமையான உழைப்பை என்னால் அதில் பார்க்க முடிந்தது. ‘உடையும் இந்தியா’ நூலை விமர்சித்து நீங்கள் எழுதியிருக்கும் முறை என்னை ஆச்சரியப்பட வைத்தது. என்னோடு பணிபுரியும் சக ஆசிரியரோடு அநேக காரியங்களை பகிர்ந்து வருகிறேன். என்னுடைய எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் வார்த்தைகளால் என்னால் சொல்ல முடியாமல் இருக்கிறது. ஒன்றை மட்டும் என்னால் சொல்ல முடியும். இந்த ஆக்கத்தை வாசித்து என்னைப் பற்றி நினைத்து என்னால் வெட்கப்படத்தான் முடிந்தது. என்னைச் சுற்றி என் நாட்டில் நடக்கும் விஷயங்களைப் பற்றியே தெரியாமல் இருந்திருக்கிறேனே. ‘உடையும் இந்தியாவுக்கு’ நீங்கள் கொடுத்திருக்கும் பதில் அருமையானது. உங்களுக்கு எங்கிருந்து இத்தனை ஞானத்தைக் கடவுள் கொடுத்திருக்கிறார்? அந்த ஆக்கத்தில் உங்களுடைய ஆதங்கத்தையும், ஆர்வத்தையும் பார்க்க முடிகிறது. ஆக்கத்தில் சில வசனங்கள் அருமையாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

சபை வரலாறு நூல்களை மறுபடியும் வாசித்து வருகிறேன். வரலாற்று சம்பவங்களை பிரசங்கத்திலும் பயன்படுத்தி வருகிறேன். சபை மக்களை வாசிக்கும்படி தூண்டி வருகிறேன். உங்களுடைய எழுத்து நடை உங்களோடு நேரில் பேசிக்கொண்டிருப்பது போன்ற அனுபவத்தைத் தருகிறது. மிகவும் எளிதான, இலகுவாகப் புரிந்துகொள்ளக்கூடிய நடையாக இருக்கிறது. நூலில் காணப்படும் படங்கள் வரலாற்று சம்பவங்களை மனக்கண்ணில் கற்பனை செய்து எப்படி இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பார்க்க உதவுகின்றன. இந்த நூல்கள் சுவிசேஷத்தைப் பாரத்தோடு பிரசங்கிக்கவும், சத்தியத்திற்காக நிற்கவும் துணை செய்கின்றன.

கிறிஸ்தவ தமிழினத்துக்கு நீங்கள் ஆசீர்வாதமாக இருந்து வருகிறீர்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது. இதற்காக நான் கர்த்தருக்கு நன்றி கூறி தொடர்ந்தும் அவர் உங்களை அருமையாகப் பயன்படுத்த வேண்டும் என்று ஜெபிக்கிறேன்.

போதகர் ஜெரால்ட்,
மதுரை, தமிழ்நாடு

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s