இந்த வருடம் ஜனவரி மாதத்தில் மூன்று சிறு நூல்களை நாம் தமிழில் வெளியிட்டோம். இவை ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்ட பிரசங்கங்களின் தமிழ் மொழிபெயர்ப்பு. இந்த மூன்றைப் பற்றியும் நான் எழுதுவதற்குக் காரணம் இவை சுவிசேஷ பிரசங்கங்கள் என்பதால்தான். சுவிசேஷ பிரசங்கங்கள் விசேஷமானவை. எந்தளவுக்கு விசேஷமானவை என்பதை நம்மினத்தில் பெரும்பாலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். என்னைப் பொறுத்தவரையில் ஏனைய பிரசங்கங்களைவிட சுவிசேஷ பிரசங்கங்கள் கவனத்தோடு தயாரிக்கப்பட வேண்டியவை. அதற்குக் காரணம் கொடுக்கப்பட்ட குறிப்பிட்ட கால அளவில் கேட்டுக்கொண்டிருப்பவர்களின் கவனத்தை ஈர்த்து, அவர்களை சிந்திக்க வைத்து, அவர்களுடைய இதயத்தைத் தொட்டு இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டிய அவசியத்தை அவர்கள் உணரும்படிச் செய்யவேண்டிய கடமை பிரசங்கிக்கிறவருக்கு இருக்கிறது. இத்தனையையும் அந்தக் குறுகிய கால அளவில் செய்யவேண்டுமானால் பிரசங்கத்தைத் தயாரிப்பதில் பெருங்கவனம் எடுக்க வேண்டியது அவசியம்.
பிரசங்கத்தைத் தெளிவாகத் தயாரிப்பதில் மட்டுமல்லாமல், கேட்டுக்கொண்டிருப்பவர்களின் எண்ணப்போக்கு, மனநிலை, அவர்களுடைய வாழ்க்கை நிலை, தேவைகள், படித்தவர்களா, படிக்காதவர்களா என்பது போன்ற அத்தனையையும் மனத்தில் வைத்துப் பிரசங்கத்தைத் தயாரிக்க வேண்டும். பின்பு தயாரித்த பிரசங்கத்தைக் கேட்பவர்கள் இலகுவாக புரிந்துகொள்ள வேண்டிய மொழியில், சிற்றோடை துள்ளித் தவன்று தடையின்றி ஒடுவதுபோல் பிரசங்கிக்க வேண்டிய கடமையும் இருக்கிறது. பிரசங்கத்தின் முடிவில், ‘இவர் சொல்லுவது உண்மைதான், இயேசு அவசியம் தேவைதான்’ என்றளவுக்கு கேட்பவர்களை சிந்திக்க வைக்கின்ற விதத்தில் பிரசங்கம் இருக்க வேண்டும். அவர்கள் இயேசுவிடம் வருவதும் வராததும் கர்த்தரின் கையில் தங்கியிருக்கிறது. அது நம்முடைய வேலையல்ல. இருந்தாலும் கேட்பவர்களின் இருதயத்தைத் துளைத்து பாவத்தைப் பற்றியும், அதிலிருந்து இயேசுவின் மூலமாக விடுதலை அடைய வேண்டிய அவசியத்தைப் பற்றியும் மனித அளவில் அவர்களை சிந்திக்க வைத்து ஒருமுடிவுக்கு வரும்படிச் செய்ய வைக்கும் வகையில் சுவிசேஷ பிரசங்கம் அமைந்திருக்க வேண்டும். அந்தப் பணி பிரசங்கியினுடையது. அதனால் தான் சுவிசேஷப் பிரசங்கத்தைத் தயாரிப்பதில் பிரசங்கி விசேஷ கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.
மேலே நான் விளக்கிய விதத்தில் நம்மினத்தில் பெரும்பாலும் பிரசங்கங்கள் பொதுவாகவே இருப்பதில்லை. நம்முன்னால் உட்கார்ந்து பிரசங்கம் கேட்கிறவர்கள் ஆண்டவரை அறிந்தவர்களா, அறியாதவர்களா? என்பதைக்கூட எண்ணிப் பார்க்காமல் வாக்குத்தத்த வசனங்களை அள்ளித்தெளித்து, ‘கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்’, அதைச் செய்வார் இதைச் செய்வார் என்றெல்லாம் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லுவதே பெரும்பாலும் நடந்துவருகிற காரியம். தமிழ் டி.வி செனல்களில் இத்தகைய பேச்சுக்களைத்தான் சுவிசேஷ பிரசங்கங்கள் என்ற பெயரில் கேட்க வேண்டியிருக்கிறது. அதுவும் சுவிசேஷ செய்தி, பிரசங்கம் என்ற பதங்களைக்கூடப் பயன்படுத்தாமல் ‘ஆசீர்வாத செய்தி’ என்ற பதத்தையே பொதுவாக எல்லோரும் பயன்படுத்தி வருகிறார்கள். செழிப்பு உபதேசம் (Prosperity Gospel) இந்தளவுக்கு மெய் சுவிசேஷத்தை இன்று இருட்டடிப்பு செய்து வைத்திருக்கிறது.
இத்தகைய நடைமுறை சூழ்நிலைதான் இந்த மூன்று நூல்களையும் தமிழில் வெளியிட வைத்தது. இவை மூன்றும் முழுக்க முழுக்க சுவிசேஷ பிரசங்கங்கள். இந்த மூன்றையும் பிரசங்கித்தவர் அல்பர்ட் என். மார்டின் என்ற அருமையான பிரசங்கியார்; முக்கியமாக சுவிசேஷ பிரசங்கம் செய்வதில் கைதேர்ந்தவர், கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர். பலருடைய உள்ளத்தை அசைத்திருக்கும் இந்த மூன்று பிரசங்கங்களும் உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கவேண்டுமென்பதால்தான் இதை வெளியிட்டிருக்கிறோம்.
இந்த மூன்று நூல்களின் தலைப்பு:
‘உன்னைப் பற்றிய குற்றப்பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும்’,
‘மதில் மேல் பூனை’,
‘இயேசுவிடம் வர ஏன் சிலருக்கு மனதில்லை’
இவை ஒவ்வொன்றும் இருபது பக்கங்கள் கொண்டவை; கையடக்கமானவை. கண்ணைக் கவரும் முக அட்டைகளைக் கொண்டு அருமையாக அச்சிடப்பட்டிருக்கின்றன. வாசிப்பதற்கு இலகுவான முறையில் எழுத்துக்கள் அமைந்திருக்கின்றன. இயேசுவை இன்னும் அறியாதவர்களுக்கு கொடுப்பதற்கு வசதியான முறையில் தயாரிக்கப்பட்டு குறைவான விலையில் வெளிவந்திருக்கின்றன. தனிப்பட்டவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும், சபைகள் இவைகளை அதிகமாக வாங்கி சுவிசேஷ ஊழியங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளவும் உதவும் வகையில் அமைந்துள்ளன.
சுவிசேஷ செய்தியை அருமையாக விளக்கி கைப்பிரதிகள் வெளியிட மாட்டீர்களா? என்று என்னிடம் எத்தனையோ பேர் கேட்டிருக்கிறார்கள். அந்தக்குறையை இந்த நூல்கள் நிச்சயம் நீக்கியிருக்கின்றன. இத்தகைய தரமான சுவிசேஷ சிறு நூல்கள் நம்மொழியில் இல்லை என்பது இவற்றை வாசிக்கப் போகின்ற உங்களுக்கே தெரிந்திருக்கும். இவற்றை வாங்கிப் பயன்படுத்திக்கொள்ளுவது உங்கள் கையில்தான் இருக்கிறது.
இந்நூல்களின் சிறப்பம்சங்கள்:
1. சுத்தமாக வேதத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. எந்தப் பிரசங்கமாக இருந்தாலும் அது வேதத்தை விளக்குவதாக, வேத வசனங்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும்; வேதத்தில் இருந்தே புறப்படுவதாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அது வேதப் பிரசங்கமாக இருக்க முடியாது. சுவிசேஷ பிரசங்கத்திற்கும் அதே நிலைதான். இன்றைக்கு சுவிசேஷ செய்தி என்பது தனிப்பட்ட நபர்களின் வாழ்க்கை அனுபவ விளக்கமாக மட்டுமே இருக்கின்றது. சொந்த அனுபவங்களை விளக்க வசதியாக அங்கும் இங்குமாக ஒரிரு வசனங்களை மட்டும் செய்தி கொடுக்கிறவர் பயன்படுத்திக் கொள்ளுவார். இயேசுவை ஏன் ஒருவர் விசுவாசிக்க வேண்டும் என்பதை வலியுறுத்த தனி மனித அனுபவம் மட்டுமே தமிழினத்தில் சுவிசேஷமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உண்மையில் சுவிசேஷ செய்தி என்றால் என்ன? என்பது தெரியாமலேயே பெரும்பாலானோர் இருந்து வருகிறார்கள். இதற்கெல்லாம் மாறாக வேதத்தை அடிப்படையாகக் கொண்டு சுவிசேஷத்தை விளக்குவதற்காக அதற்கேற்றவகையில் அமைந்துள்ள தெரிந்தெடுக்கப்பட்ட வசனப்பகுதிகளை அவை அமைந்திருக்கும் வேத சந்தர்ப்பத்திற்கேற்ற முறையில் விளக்கி கிறிஸ்துவின் சுவிசேஷத்தை இந்த நூல்கள் தெளிவாக விளக்குகின்றன. எல்லாவிதங்களிலும் வேதத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருப்பது இவற்றின் விசேஷ தன்மை. பிரசங்கியின் சொந்த அனுபவங்களை இதில் காணவழியில்லை. இயேசு யார்? அவரை விசுவாசிப்பது ஏன் அத்தனை அவசியமானது என்பதை மட்டுமே பிரசங்கிப்பவர் விளக்கியிருக்கிறார்.
2. சொல்ல வேண்டிய முறையில் சுவிசேஷத்தின் அடிப்படை அம்சங்களைத் தெளிவாக விளக்குகின்றன. சுவிசேஷம் சொல்லும் முறையை நாமெல்லாம் சுவிசேஷத்தின் நாயகனான இயேசுவிடம் இருந்து மட்டுமே கற்றுக்கொள்ள முடியும். அத்தோடு அப்போஸ்தலர்களும் இதில் நமக்கு உதவுகிறார்கள். அவர்களுடைய சுவிசேஷ செய்தி வேத அடிப்படையில் அமைந்திருப்பது மட்டுமல்லாமல் சுவிசேஷத்தின் அடிப்படைத் தன்மைகளைத் தெளிவாக விளக்குவனவாகவும் இருக்கின்றன. சுவிசேஷத்தின் அடிப்படை அம்சங்கள் சுவிசேஷ செய்திகளில் காணப்பட வேண்டும். கடவுள் யார், பாவம் என்றால் என்ன, மனிதனின் உண்மையான நிலை என்ன, பாவத்துக்கு நிவாரணம் எது, பாவம் யாரால் போக்கப்பட முடியும், பாவிகளும், பாவவிடுதலை பெற்றவர்களும் போகின்ற நித்திய இடங்கள் யாவை, மனிதன் பாவத்தில் இருந்து விடுதலை அடைய வேண்டிய அவசியம் என்ன? போன்ற கேள்விகளுக்கெல்லாம் எந்த சுவிசேஷ செய்தியும் பதிலளிக்காவிட்டால் அவை சுவிசேஷ செய்தியாக இருக்க முடியாது. இந்தக் கேள்விகளுக்கான பதில்களை வேதத்தில் இருந்து தெளிவாக, சுருக்கமாக, ஆணித்தரமாக, அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துப் பதிலளிக்கின்றன இந்நூல்கள். ஒவ்வொரு செய்தியும் இவற்றில் எதையும் விட்டுவைக்காமல் சுவிசேஷத்தை உள்ளது உள்ளபடி தெளிவாக விளக்கியிருப்பது அவற்றின் சிறப்பம்சம்.
3. மனித இருதயத்தைப் புரிந்துகொண்டு சுவிசேஷ அழைப்பை பிரசங்கி கொடுத்திருக்கும் முறை அருமை. இயேசுவிடம் வா! இயேசுவிடம் வா! என்று திரும்பத் திரும்பக் கூறுவது அல்ல சுவிசேஷ அழைப்பு. மனிதனுடைய இருதயத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டு, அவன் வாழ்கின்ற சூழ்நிலை, அவனுடைய ஆத்மீகத் தேவைகளை அறிந்து வைத்திருந்து, இயேசுவிடம் அவன் ஏன் வரவேண்டுமென்பதை விளக்கி உடனடியாக அவன் மனந்திரும்பி இயேசுவை விசுவாசிக்க வேண்டும் என்று ஆணித்தரமாக சுவிசேஷ செய்தியில் சொல்லவேண்டும். அது மட்டுமல்லாமல் சுவிசேஷ பாரத்தோடு, அவ்வாறு அவன் மனந்திரும்பாவிட்டால் அவனுக்கு அழிவைத்தவிர வேறு வழியில்லை என்பதை எடுத்துக்காட்டி அவனுடைய இருதயத்தோடு போராடி இயேசுவிடம் அவன் வரவேண்டிய அவசியத்தை அவன் பார்க்கும்படிச் செய்ய வேண்டும். இந்த மூன்று நூல்களிலும் அல்பர்ட் என். மார்டின் அதைச் செய்திருக்கும் முறை அருமையானது. இந்தவிதத்தில் நம்மினத்தில் சுவிசேஷம் சொல்லப்படுவதில்லை என்பது நூலை வாசிப்பவர்களுக்கு நிச்சயம் புரியும். சுவிசேஷ அழைப்பைக் கொடுத்து ஆத்துமாக்களின் இருதயத்தோடு அவர் போராடுகின்ற முறை எனக்கு ‘ஆத்துமாக்களின் வைத்தியர்கள்’ என்று அழைக்கப்படுகின்ற பியூரிட்டன்களைத்தான் நினைவுபடுத்துகின்றது. இதையே நாம் இயேசுவிலும், அவருடைய அப்போஸ்தலர்களிலும் காண்கிறோம். பேதுருவின் பெந்தகொஸ்தே தின பிரசங்கம் இதேபோல்தான் இருந்தது.
இந்நூல்கள் சுவிசேஷத்தை அறிவிப்பதற்காகப் பயன்படுத்தப்பட வேண்டியவை. இருந்தபோதும் இன்றைய பிரசங்கிகளும், கிறிஸ்தவர்களும் அவசியம் வாசிக்க வேண்டியவையாகவும் இருக்கின்றன. சுவிசேஷம் உண்மையில் எப்படி அறிவிக்கப்பட வேண்டும் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டாமா? ஏனோதானோவென்று என்னென்னவோ சுவிசேஷம் என்ற பெயரில் சொல்லப்பட்டு வருகின்றவைகளைக் கேட்டுக் காதுகள் புளித்துப்போயிருக்கின்றவர்களுக்கு இந்நூல்கள் ஆவிக்குரிய மருந்தாக நிச்சயம் இருக்கும். ஏன், கிறிஸ்தவர்களுக்கு மெய்சுவிசேஷத்தின் அருமையை இவை புரியவைக்கும். கிறிஸ்து பாவிகளுக்கு செய்திருக்கும் சிலுவைப்பலியின் மகோன்னத உண்மைகளை வாசித்து இருதயம் மகிழச் செய்யும். நம்முடைய இரட்சிப்பு எத்தனை மேலானது, மகிமையானது என்பதை உணர்ந்து கர்த்தருக்கு நன்றிகூற வைக்கும். இந்த சுவிசேஷ செய்திகள் உங்களுடைய இரட்சிப்பு உண்மையானதா என்பதை நீங்களே ஆராய்ந்து பார்க்கச் செய்யும். அப்படி அது உண்மையானதாக இருந்தால் உங்களுடைய இரட்சிப்பின் நிச்சயத்தை இவை அதிகரிக்கச் செய்யும். சுவிசேஷம் பாவிகளுக்கு மட்டுமல்ல, விசுவாசிகளுக்கும் அவசியமானது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். விசுவாசத்தோடு கிறிஸ்துவில் வளர்ந்து வருகின்ற எவரும் சுவிசேஷத்தைத் தொடர்ந்து கேட்க ஆவலோடிருப்பார்கள். ஏன் தெரியுமா? தங்களுக்கு வாழ்வளித்துள்ள இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பலியை அவர்கள் தாழ்மையோடு மறுபடியும், மறுபடியும் எண்ணிப் பார்த்து கிறிஸ்தவ வாழ்க்கையில் வளர்ச்சிக்கு தங்களில் மட்டும் தங்கி நிற்காது கர்த்தரின் துணையை நன்றியோடு நாடி நிற்பதற்காதத்தான். மெய்கிறிஸ்தவனுக்கு சுவிசேஷ செய்தி தேன் குடிப்பது போலிருக்கும்.
இந்நூல்கள் இப்போதைக்கு இந்தியாவிலேயே வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்த வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் சென்னை முகவரியோடு தொடர்புகொண்டு நூல்களைப் பெற்றுக்கொள்ளலாம். மெய்சுவிசேஷ செய்தி எப்படி அமைய வேண்டும் என்பதை இந்நூல்களை வாசித்து நீங்கள் புரிந்துகொள்ளுவதோடு, சுவிசேஷ பாரத்தோடு இயேசுவை அறியாதவர்களுக்கு இவற்றைக் கொடுத்து அவர்களுடைய ஆத்மீக தேவைகள் நிறைவேற பணிசெய்யுங்கள்.
_____________________________________________________________________________
போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 25 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.