அன்று நடந்ததுதான் என்ன? (அப்போஸ்தலருடைய நடபடிகள் 2)

[இந்த ஆக்கத்தை வாசிக்கும்போது ஓரிரு தடவைகள் அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தை வாசித்தபின்போ அல்லது அதைத் திறந்துவைத்துக்கொண்டு இந்த ஆக்கத்தை ஒப்பிட்டுப் பார்த்து வாசிப்பது பிரயோஜனமாக இருக்கும். – ஆசிரியர்]

அப்போஸ்தலருடைய நடபடிகள் இரண்டாம் அதிகாரத்தை வாசித்துப் பார்க்கின்றபோது நமக்கு என்ன தோன்றுகிறது? இதுவரை இருந்திராத வகையில் அப்போஸ்தலனான பேதுரு பெருந்தைரியத்தோடு சகல அப்போஸ்தலர்களும் சூழ்ந்திருக்க முன்னால் வந்து அங்கிருந்த திரளான யூதக்கூட்டத்தைப் பார்த்து கிறிஸ்துவின் சுவிசேஷத்தை ஆணித்தரமாக விளக்கினார். அந்த சுவிசேஷ செய்தியில் கிறிஸ்துவின் மீட்பின் செயலை பழைய ஏற்பாட்டின் அடிப்படையில் அருமையாக விளக்கியது மட்டுமல்ல, ஆவிக்குரிய தைரியத்தோடு பேதுரு பிரசங்கித்திருப்பது நாம் ஒரு தடவை வாசிப்பதை நிறுத்திக் கவனிக்க வேண்டிய பெருநிகழ்ச்சி. அத்தோடு, அந்தப் பிரசங்கத்தின் முடிவில், இருதயத்தில் குத்தப்பட்டவர்களாக அநேகர் நாம் என்ன செய்ய வேண்டும் என்று பெருங்குரலெடுத்துக் கேட்டதையும் கவனிக்கிறோம். அன்றைய தினத்தில் உடனடியாக மூவாயிரம் பேர் விசுவாசிகளாகி ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார்கள் என்பதையும் கவனிக்கிறோம். இந்த இடத்தில் நாம் சில முக்கியமான உண்மைகளைக் கவனித்துப் பார்க்காமல் இருக்க முடியாது.

 

1. அப்போஸ்தலருடைய நடபடிகளில் அன்று (முதல் நூற்றாண்டு) நடந்த நிகழ்ச்சியை நாம் அன்றாட வாழ்க்கையில், நம்முடைய சாதாரண சுவிசேஷப் பணிகளில் பார்க்க முடியுமா? அதாவது, இந்த நிகழ்ச்சியை இன்று பொதுவாகவே எவருடைய ஊழியப்பணி மூலமாகவும் நிகழக்கூடியதாக எடுத்துக்கொள்ள முடியுமா? அந்தவகையில் வேதத்தைப் படிக்கின்ற அநேகர் இருக்கிறார்கள். அன்று நடந்திருக்கிறது, ஆகவே, இன்றும் சாதாரணமாக அப்படி நடக்கமுடியும்; நடக்க வேண்டும் என்று எண்ணி அதை வாசிப்பவர்கள் இருக்கிறார்கள். இந்த இடத்தில் அவர்கள் தவறு விடுகிறார்கள் என்பது என்னுடைய கருத்து. அதை நான் சொல்லக் காரணம், அவர்கள் அப்போஸ்தலருடைய நடபடிகளை வாசிக்க வேண்டிய விதத்தில் வாசிக்கவில்லை என்பதால்தான். அப்போஸ்தல நடபடிகள் இரண்டாம் அதிகாரம், ஏன், அந்த வரலாற்று நூல் முழுவதுமே நமக்கு திருச்சபை பற்றிய நல்ல போதனைகளை, நடைமுறைப்படுத்த வேண்டிய போதனைகளைத் தருகின்றனவே தவிர அதிலுள்ள அனைத்தையும் ‘லிட்டரலாக’ உள்ளது உள்ளபடியே எடுத்து எந்தவித மாறுதலும் இல்லாமல் இன்றும் அவை நிகழ வேண்டும் என்றவிதத்தில் புரிந்துகொள்ளுவதற்காக எழுதப்படவில்லை. அந்தவிதத்தில் வேதத்தை வாசிப்பது முழுத்தவறு. சாதாரண நூல்களை வாசிக்கும்போதும், உலக நிகழ்ச்சிகளைப் பார்த்தும் நாம் அந்தவிதத்தில் பொருள்கொள்வதில்லை. சிலர், வேதத்தை அப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டுமென்பார்கள். அது தவறு. ஏனைய நூல்களையும், நிகழ்ச்சிகளையும் புரிந்துகொள்ள நாம் பயன்படுத்துகிற சாதாரண விதிமுறைகளை வேதம் படிப்பதிலும் நாம் பயன்படுத்த வேண்டும். ஒன்று மட்டும் வித்தியாசமானது; சாதாரண விதிகளைப் பயன்படுத்தி நாம் வேதத்தைப் படிக்க வேண்டிய அவசியமிருந்தபோதும் வேதத்திலிருந்து நாம் ஆவிக்குரிய போதனைகளைப் பெற்றுக்கொள்ளுகிறோம். அதை வேறெதிலும் இருந்து பெறமுடியாது.

2. அப்போஸ்தலர் 2ம் அதிகார முடிவில் மூவாயிரம் பேர் பிரசங்கம் கேட்டு உடனடியாக மனந்திரும்பி ஞானஸ்நானம் பெற்றார்கள். அவர்களில் ஒருவராவது போலியாக இல்லை. அத்தனை பேரும் மெய்க்கிறிஸ்தவர்களாக கர்த்தரால் மாற்றப்பட்டார்கள். இது எப்படி முடிந்தது? எந்த நாட்டில், எந்த ஊரில், இன்றோ அல்லது வரலாற்றிலோ இப்படிப்பட்ட மெய்யான மனமாற்றமும் விசுவாசமும் ஒரேயொரு பிரசங்கத்திற்குப் பிறகு நிகழ்ந்திருக்கிறது; அப்படி நிகழ்ந்ததாக வரலாறே இல்லையே. எப்போதுமே யாருக்காவது மனமாற்றம் நிகழ்கிறபோது அதை ஓரளவுக்கு மனித அளவில் சோதித்துப் பார்த்தே ஞானஸ்நானம் கொடுப்பது இன்றைய நல்ல சபைகளில் வழக்கம். இதைப் பின்பற்றாத நல்ல சபைகளே இல்லையெனலாம். அப்படியானால் சபைகள் தவறு செய்கின்றனவா? அப்போஸ்தல நடபடிகள் 2ல் உள்ளபடி உடனடியாக சடுதியாக எவருக்கும் ஞானஸ்நானம் கொடுப்பதா? என்ற கேள்விகளுக்கு பதில் காண்பது அவசியம். அத்தோடு அந்த மூவாயிரம் பேரும் மெய்யான விசுவாசிகளானார்கள் என்பதை அப்போஸ்தலர்கள் பன்னிரெண்டு பேரும் எப்படி உறுதியாக அறிந்துகொண்டார்கள்? அவர்கள் மெய்யான விசுவாசிகள் என்பதையும் அவர்களில் எவருமே போலிகளல்ல என்பதையும் அந்தப் பகுதி உறுதி செய்கிறது. இதையெல்லாம் எப்படி விளங்கிக்கொள்ளுவது?

வரலாற்று நூல் – முதலில், அப்போஸ்தல நடபடிகள் வரலாற்று நூல் என்பதை மனதில் வைத்து அதை வாசிக்க வேண்டும். வரலாறு நடந்து முடிந்த நிகழ்வுகளைக் கூறுகிறது. அப்போஸ்தல நடபடிகள் முதல் நூற்றாண்டில் கர்த்தர் தன் சபையை எப்படி நிறுவினார் என்பதை விளக்குகிறது. இதற்காக அதில் போதனைகள் இல்லை என்று நான் சொல்ல வரவில்லை. அந்தப் போதனைகளை நாம் பார்ப்பதற்கு முன் நூலின் தன்மையைப் பற்றி விளங்கிக்கொள்ள வேண்டும். இது வரலாற்று நூல் என்பதால் முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது, அதை உள்ளது உள்ளபடி ‘லிட்டரலாக’ எடுத்து அன்று நடந்ததுபோல் இன்றும் நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது முற்றிலும் தவறு என்பதைத்தான். பெந்தகொஸ்தே தினம் திரும்பிவரப்போவதில்லை. அப்போஸ்தலர்கள் இன்று இல்லை. பிலிப்பை ஆவியானவர் எங்கோயிருந்து தூக்கி எத்தியோப்பிய மந்திரி முன் நிறுத்தியதுபோல் இன்று செய்வதில்லை. பரிசுத்த ஆவியானவர் வந்திறங்கினார் என்று நான்கு இடங்களில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. அது வரலாற்றின் அடிப்படையில் அவருடைய முதலாவது நூற்றாண்டு வருகை எருசலேமில் ஆரம்பித்து யூதேயா, சமாரியா மற்றும் உலகமெங்கும் பரவியது என்பதை சுட்டிக்காட்டத்தான் (1:8). அதேபோல் இன்றும் அவர் வந்திறங்கவேண்டுமென்று எதிர்பார்ப்பது, நூலை எப்படிப்படிக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளாததால் ஏற்படுகின்ற விளைவு. அன்றைக்கு சபை ஆரம்பித்தது 2ம் அதிகாரத்தில். அது ஆரம்பமே தவிர எத்தனையோ காரியங்கள் அதில் உடனடியாக ஏற்படுத்தப்படவில்லை. போதகர்களும், உதவிக்காரர்களும் பின்னால்தான் ஏற்படுத்தப்பட்டார்கள். ஆகவே, இந்நூலிலுள்ள அத்தனை நிகழ்ச்சிகளையும் நாம் காலவரையறை அடிப்படையில் தொடர்நிகழ்ச்சிகளாகப் பார்த்தும் விளக்கங்கொடுப்பதும், லிட்டரலாக எல்லாம் இன்றும் நிகழ வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் நூலின் தன்மைக்கும், கர்த்தர் அதைக் கொடுத்திருக்கும் நோக்கத்திற்கும் முற்றிலும் விரோதமானது. இந்தத் தவறைத்தான் பெந்தகொஸ்தே இயக்கத்தினர் செய்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் அப்போஸ்தல நடபடிகள் முடிந்துபோன வரலாற்று நிகழ்ச்சிகளாக இருக்கவில்லை. முடிந்துபோன வரலாற்று நிகழ்ச்சிகளை நாம் இன்று தொடரும்படி எதிர்பார்ப்பது முழுத்தவறு. இந்தியாவுக்கு சுதந்திரம் வந்து 60 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. நாம் மறுபடியும் சுதந்திரத்துக்கு முன்னிருந்த நிலைக்கு திரும்பிப் போகமுடியுமா? முன்னிருந்த நிலையிலிருந்து பாடங்களைத்தான் கற்றுக்கொள்ள முடியும். அதேபோல் நாம் முதல் நூற்றாண்டுக்கு திரும்பிப்போக முடியாது. அப்போஸ்தல நடபடிகளில் இருந்து இன்றைக்கு அவசியமான, இருக்க வேண்டிய போதனைகளைத்தான் பெற்றுக்கொள்ள வேண்டும்.

எழுப்புதல் (Revival) – அடுத்ததாக, அப்போஸ்தல நடபடிகள் வரலாற்று நூல் மட்டுமல்ல, அதில் நாம் சிறப்பான இன்னொரு அம்சத்தையும் காண்கிறோம். இதுவே அந்த நூலை நாம் விளங்கிக்கொள்ள பெரிதும் துணைசெய்கிறது. பெந்தகொஸ்தே தினத்தில் நிகழ்ந்த அதியற்புத நிகழ்ச்சிகளுக்கு முக்கியகாரணம் அது ஓர் எழுப்புதலாக இருந்தபடியால்தான். நம்மினத்தவர்களுக்கு எழுப்புதல் பற்றி அதிகம் தெரியாதென்பது என்னுடைய கருத்து. எழுப்புதல் பற்றி நாம் எதையோ நினைத்துக்கொண்டிருக்கக்கூடாது. எழுப்புதலென்பது கர்த்தர் தனக்கு சித்தமான காலத்தில் பரிசுத்த ஆவியானவரைக்கொண்டு நிகழ்த்தும் அதியற்புத செயல். எழுப்புதல் காலத்தில் நிகழும் முக்கியமான இரு செயல்கள் – பிரசங்கம் ஓர் உன்னத சிகரத்தை அடைவது; அதையடுத்து குறுகிய காலத்தில் பெருந்தொகையானோர் அந்தப் பிரசங்கப்பணியின் காரணமாக மெய்யான மனந்திரும்புதலையும் விசுவாசத்தையும் அடைந்து தேவஇராஜ்ஜியத்துக்குள் இணைவது. இவை இரண்டும் சாதாரண காலப்பகுதிகளில் நிகழ்வதில்லை. அதுமட்டுமல்லாமல், எழுப்புதல் காலத்தில் பாவத்தைக்குறித்த உணர்வு மனந்திரும்புபவர்களில் என்றுமில்லாதவகையில் ஆழமாகவும், தீவிரமாகவும் இருக்கும். பலர் வாரக்கணக்கில் பாவத்தின் கோரத்தை உணர்ந்து அதற்காக வருந்தி அதன்பிறகு இரட்சிப்பை அடைந்திருக்கிறார்கள். உண்மையில் சொல்லப்போனால் அக்காலங்களில் இரட்சிப்பு அடைகிற ஒருவரில் அதற்கான அடையாளங்கள் அதிரடியாக, வெளிப்படையாக, ஒளிவுமறைவில்லாமல் இருக்கும். இந்தளவுக்கு பெருந்தொகையானோரின் வெளிப்படையான ஆழமான பாவ உணர்தலோடுகூடிய ஆவிக்குரிய இரட்சிப்பை நாம் சாதாரண காலங்களில் பார்க்க முடியாது. ‘எல்லோருக்கும் பயமுண்டாயிற்று’ (2:43) என்று லூக்கா சொல்லுகிறவிதத்தில் கர்த்தரின் செயல்கள் எழுப்புதல் காலத்தில் இருக்கும். இந்த வகையில்தான் வேதம் முழுவதுமே நாம் எழுப்புதல் காலங்களை அடையாளங்கண்டுகொள்ள முடியும். இந்தவகையிலேயே வரலாற்றின் சில காலப்பகுதிகளிலும் எழுப்புதல்கள் நிகழ்ந்துள்ளன. உதாரணத்திற்கு அமெரிக்காவில் நிகழ்ந்த ஆவிக்குரிய விழிப்புணர்வு (Great Awakening), 1859ல் வேல்ஸ் தேசத்திலும் பிரிட்டனிலும் நிகழ்ந்த எழுப்புதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். டேனியல் ரோலன்ட்ஸ், ஹொவல் ஹெரிஸ், ஜோர்ஸ் விட்பீல்ட், ஜொனத்தன் எட்வர்ட்ஸ் போன்றோர் இந்த எழுப்புதல்கள் காலத்தில் கர்த்தரால் பயன்படுத்தப்பட்ட பிரசித்தமான பிரசங்கிகள். எழுப்புதலுக்கு இன்னொரு உதாரணம் பிலிப்பை பரிசுத்த ஆவியானவர் எங்கோயிருந்து தூக்கி எத்தியோப்பிய மந்திரி முன் நிறுத்தி சுவிசேஷம் சொல்ல வைத்தது. அத்தோடு, பவுலின் மிஷனரிப் பணியின்போது அவர் போக நினைத்த இடத்துக்கு போகத்தடைபோட்டு மக்கெதோனியாவுக்கு பரிசுத்த ஆவியானவர் அவரை அனுப்பியது. இப்படி அநேக உதாரணங்கள் அப்போஸ்தல நடபடிகளில் இருக்கின்றன. இதெல்லாம் எழுப்புதல் காலங்களில் ஆவியானவர் செய்யும் அசாதாரண செயல்கள். அதனால்தான் இந்நூலை ‘ஆவியானவரின் நடபடிகள்’ என்றுகூட சொல்லக்கூடியளவுக்கு அவரது செயல்களை இதில் பார்க்கிறோம். பெந்தகொஸ்தே நாள் அந்தவகையில் எழுப்புதல் நாளாக இருக்கிறது.

பேதுருவை எடுத்துக்கொள்ளுங்கள். சாதாரண மனிதனாக இருந்த பேதுரு, பெந்தகொஸ்தே தினத்தில் இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதியின்படி பரிசுத்த ஆவியானவரின் உலகளாவிய நிரந்தர வருகை நிகழ்ந்தபோது புதிய மனிதனாக மாறியிருப்பதைப் பார்க்கிறோம். பெந்தகொஸ்தே தினம் எழுப்புதலாகவும் இருந்தபடியால் அப்போஸ்தலனான பேதுரு தன்னுடைய பிரசங்கப் பணியில் ஆவியின் அனுக்கிரகத்தால் பெரிதும் பயன்படுத்தப்பட்டதைப் பார்க்கிறோம். அதாவது, அவரால் தயாரித்துப் பிரசங்கிக்கப்பட்ட அன்றைய பிரசங்கம் ஆவியின் பலத்தோடு கொடுக்கப்பட்டதாக இருந்தது. பேதுரு ஆவியின் வல்லமையையும், ஆவியின் தைரியத்தையும் அன்று பிரசங்கம் செய்தபோது உணர முடிந்தது. இந்த ஆவியின் தைரியம் என்பது மானுட தைரியமல்ல. இது மனித பயமற்ற பரிசுத்த தைரியமாகும். அன்று பேதுரு பிரசங்கித்தபோது, சாதாரண மனிதனாக இருந்து பிரசங்கித்தபோதும் இதுவரையில்லாததொரு உயர்வான அனுபவத்தையும், ஆவியின் கிரியையும் பிரசங்கப்பணியில் பார்க்க முடிந்தது. வார்த்தைகள் தெளிவாக நீர்வீழ்ச்சி போல் மடமடவென்று வாயிலிருந்து கொட்டின. இருதயத்தில் ஆத்தும பாரமும், ஆத்துமாக்களில் அளவற்ற அன்பும் சுரந்தது. தட்டுத் தடங்கலின்றி கர்த்தரின் வேதம் வாயிலிருந்து புறப்பட்டது. பேதுருவுக்கு இருந்த வரங்கள், மனித ஆற்றல், ஞானம் போன்றவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்ட வல்லமையும், தைரியமும் பிரசங்கத்திலும், பிரசங்கித்தவரிலும் அன்று காணப்பட்டது. இது எழுப்புதல் காலங்களில் பிரசங்கிகளை ஆவியானவர் பயன்படுத்துகின்ற விதத்திற்கு அடையாளம். பிரசங்கப் பணியில் இத்தகைய ஆவியின் கிரியையை நாம் செயற்கையாக உண்டாக்க முடியாது. எழுப்புதல் கர்த்தரின் சித்தப்படி நிகழுவது; அதை நாம் உண்டாக்க முடியாது. இதற்காக நாம் ஜெபிக்க மட்டுமே முடியும்.

எழுப்புதலில் நிகழும் இன்னுமொரு அருங்காரியம், பெருந்தொகையானவர்கள் மெய்க்கிறிஸ்தவர்களாக தேவ இராஜ்ஜியத்தை அடைவது. அதையும் நாம் உண்டாக்க முடியாது. ஆவியானவர் பிரசங்கப் பணியின் மூலமே இதைச் செய்தாலும் சாதாரண காலப்பகுதிகளில் இத்தகைய ஆவிக்குரிய அறுவடையை நாம் காண்பதில்லை; வரலாறு கண்டதுமில்லை. பெந்தகொஸ்தே நாளில் அவிசுவாசிகளான மூவாயிரம் பேர் உறுதியான விசுவாசத்தை அடைந்ததற்கு இதுவே காரணம். நூற்றியிருபது பேர் மூவாயிரமாகவும், பின்பு ஐயாயிரமாகவும், பதினைந்தாயிரமாகவும், இருபதாயிரமாகவும் முதல் எட்டு அதிகாரங்களை நாம் வாசித்து முடிப்பதற்குள் அறுவடை செய்யப்பட்டது ஆவியினால் மட்டுமல்லாமல் வேறு எந்தவிதத்திலும் ஏற்பட முடியாது. இன்று நடத்தப்படும் சுவிசேஷ கூட்டங்களுக்கும், அவற்றில் நடத்தப்படும் மனித செயற்பாடுகளுக்கும் பெந்தகொஸ்தே தினத்தில் அறவே இடமிருக்கவில்லை. வெறும் பிரசங்கத்தால், இசைகூட இல்லாமல் கர்த்தர் பெருந்தொகையினரை இரட்சித்தார் என்றால் அதற்கு எழுப்புதலைத் தவிர வேறு எதுவும் காரணமல்ல. அக்காலம் எழுப்புதல் காலமாக இருந்தபடியால்தான் அனனியாவும், சப்பிராளும் பொய் சொன்னபோது உடனடியாக கர்த்தரால் கொல்லப்பட்டனர். அவிசுவாசிகள் விசுவாசிகளுடன் இணைவதற்கு பயப்படுகிற அளவுக்கு தேவபயத்தை பிரசங்கப் பணியும், ஆவியின் கிரியைகளும் ஏற்படுத்தியிருந்தன.

பெந்தகொஸ்தே தினம் உலகலாவிய ஆவியின் வருகையின் வரலாற்று நிகழ்வு என்பதோடு, அந்நாள் திருச்சபை ஆரம்பித்த வரலாற்று நிகழ்வு என்பதையும், இவற்றிற்கு மத்தியில் அது எழுப்புதல் காலமாகவும் இருந்தது என்பதை மனதில் வைத்து அந்நாளின் நிகழ்வுகளை வாசிக்கின்றபோது அப்போஸ்தல நடபடிகளின் இரண்டாம் அதிகாரம் நமக்குத் தரும் போதனைகளை நம்மால் உணர முடியும். இந்தவகையில் பார்க்கிறபோது இரண்டாம் அதிகாரம் தரும் போதனைகள் என்ன?

1. ஆவிக்குரிய பிரசங்கம்

ஆவிக்குரிய பிரசங்கம் எப்படி இருக்கும் என்பதை அது விளக்குகிறது. பிரசங்கியினுடைய திறமைக்கும், ஆற்றலுக்கும், தயார் நிலைக்கும் மேலாக அவனை உயர்த்தி பரிசுத்த ஆவியின் வல்லமையோடும், தைரியத்தோடும் கர்த்தர் எப்படிப் பயன்படுத்துகிறார் என்பதை எடுத்துக்காட்டுகிறது. அப்போஸ்தலர் 1:8; 1 தெசலோனிக்கேயர் 1:5 அப்போஸ்தலர் 4:31 ஆகிய வசனங்கள் விளக்குவதை நிதர்சனமாக அப்போஸ்தலர் 2ல் பேதுருவில் காண்கிறோம். இத்தகைய பிரசங்க அனுபவத்தை ஓரளவுக்கு சாதாரண பிரசங்க ஊழியத்தில் எந்தப் பிரசங்கியும் அனுபவிக்க முடியும். அதற்காக ஊக்கத்தோடு ஜெபித்து, அதை எதிர்பார்த்தே பிரசங்கி பிரசங்க மேடைக்குப் போகவேண்டும். வெறும் உண்மைகளை மட்டும் ஆத்துமாக்களுக்கு முன் உரித்துவைக்க பிரசங்கி அவசியமில்லை. அதை எல்லோருமே செய்துவிடலாம். பிரசங்கி அருமையாக உழைத்து வேதப் பிரசங்கத்தை ஜெபத்தோடு தயாரித்து வைத்திருந்தாலும் அதை ஆத்துமாக்களுக்கு கொடுக்கும் காரியத்தில் அவனுக்கு ஆவியின் துணை அவசியம். பிரசங்கத் தயாரிப்பில் துணைபுரிந்த ஆவியானவர் பிரசங்க மேடையிலும் தொடர்ந்து துணை செய்கிறார். அதைத்தான் பேதுருவின் பிரசங்கத்தில் பார்க்கிறோம். அது ஆவியின் மூலமாக கொடுக்கப்பட்ட பிரசங்கம்; ஆத்துமாக்களை அசைத்த பிரசங்கம்; சாதாரண மனித ஆற்றலுக்கெல்லாம் அப்பாற்பட்ட பிரசங்கம். ஆவியின் அசைவாட்டத்தைப் பிரசங்கியிலும், பிரசங்கத்திலும் அன்று மக்கள் பார்த்தார்கள். அந்த அசைவாட்டத்தை ஆத்துமாக்களாலும், பிரசங்கியாலும் அன்று உணர முடிந்தது. அத்தகைய பிரசங்கத்தை இன்று பார்க்க முடிகிறதா? ஆவியின் அசைவாட்டமுள்ள பிரசங்கிகள் எத்தனை பேரை இன்று பார்க்கிறோம்? ஆவியானவரைப் பற்றி இல்லாததையும், பொல்லாததையும் சொல்லிக்கொண்டிருக்கிறவர்கள் இருக்கிறார்களே தவிர, ஆவிக்குரிய பிரசங்கிகளையும், பிரசங்கத்தையும் நம்மினத்தில் இன்று பார்க்க முடிவதில்லை.

பேதுருவின் பிரசங்க அனுபவத்தை சாதாரண பிரசங்க ஊழியத்தில் மெய்யான பிரசங்கி அனுபவிக்க முடியும் என்பதை பெந்தகொஸ்தே தினமும் ஏனைய வேதவசனங்களும் தெளிவாக சுட்டிக்காட்டியபோதும், அதை விசேஷமாக எழுப்புதல் காலத்தில் காணமுடியும். அந்தவகையில் பெந்தகொஸ்தே பிரசங்கம் விசேஷமானது. அன்று பேதுரு ஆவியின் பேரறுவடையை அந்தப் பிரசங்கத்தின் மூலம் பார்க்க முடிந்தது. அது ஒரு பிரசங்கியின் சாதாரண பிரசங்க ஊழியத்தில் அந்தளவுக்கு நிகழ்வதில்லை. ஆத்தும அறுவடை எப்போதுமே ஆண்டவரால் செய்யப்படுகின்ற காரியம். அவர் யாரை இழுத்துக்கொள்ளுகிறாரோ அவர்கள் மட்டுமே அவரிடம் வரமுடியும். அதை அவர் பிரசங்கத்தின் மூலமே செய்கிறார். எழுப்புதல் காலத்தில் கர்த்தர் பிரசங்கத்தை உன்னத நிலைக்குக் கொண்டுபோய் அதைப் பயன்படுத்தி பெரும் ஆத்தும அறுவடையைச் செய்கிறார். அதைப் பெந்தகொஸ்தே நாள் நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

2. ஆவிக்குரிய இரட்சிப்பு

இரட்சிப்பு கர்த்தருடையது என்கிறார் யோனா. அது பேருண்மை. மெய்யான இரட்சிப்புக்கும் போலியான ஆத்தும அனுபவத்துக்குமிடையில் பெரிய வித்தியாசமுண்டு. மாயவித்தைக்காரனான சீமோன் போலியானவன். பெந்தகொஸ்தே தினத்தில் இரட்சிக்கப்பட்டவர்கள் மெய்யான இரட்சிப்பின் அனுபவத்தை அடைந்தவர்கள். அதை அந்தப்பகுதியே விளக்குகிறது. ஆவிக்குரிய இரட்சிப்பு பற்றிய விளக்கமில்லாத தன்மையை அநேகரிடம் இன்று பொதுவாகவே காண்கிறோம். போதகர்கள்கூட ஒருவனின் ஆவிக்குரிய அனுபவத்தை எப்படி அறிந்துகொள்ளுவது என்று என்னிடம் அடிக்கடி கேட்டிருக்கிறார்கள். ஒருவன் விசுவாசிக்கிறேன் என்று சொன்ன உடனேயே அவன் சொல்லுவதை அப்படியே ஏற்றுக்கொண்டு எந்தக்கேள்வியும் கேட்காமல் உடனடியாக ஞானஸ்நானம் கொடுத்துவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருப்பவர்கள் அநேகர். இதற்கு அவர்கள் ரோமர் 10ஐயும் உதாரணங்காட்டுவார்கள். இந்தளவுக்கு சாதாரணமான ஓர் அனுபவமா இரட்சிப்பு? என்று கேட்காமல் இருக்க முடியாது. மெய்யான இரட்சிப்பைப் போலியில் இருந்து எப்படி வேறுபடுத்திப் புரிந்துகொள்ளுவது?

பெந்தகொஸ்தே தின அனுபவம் இதில் நமக்கு உதவுகிறதா? நிச்சயம் உதவுகிறது. அதாவது, மெய்யான இரட்சிப்பு என்று ஒன்றிருக்கிறது என்பதை அதில் அறிந்துகொள்ளுகிறோம். அன்றைய தினத்தில் இரட்சிக்கப்பட்டவர்கள் எப்படி இரட்சிக்கப்பட்டார்கள் என்பதையும் அறிந்துகொள்ளுகிறோம். அவர்களிடம் இருந்த அடையாளங்களை அறிந்துகொள்ளுகிறோம். அவர்கள் போலிகள் இல்லை என்பதற்கான அறிகுறிகள் யாவை என்பதையும் அறிந்துகொள்ளுகிறோம். என்னென்ன விஷயங்களை மெய்யான விசுவாசத்தை அடைந்தவர்களிடம் பார்க்க முடியும், பார்க்க வேண்டும் என்பதையும் அறிந்துகொள்ளுகிறோம். இதற்கெல்லாம் அப்போஸ்தலர் 2 நமக்கு உதவுகிறது. அன்று இரட்சிக்கப்பட்டவர்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது. அதைக் கேட்டவர்கள் மனத்தில் குத்தப்பட்டு தங்களுடைய பாவத்தை உணர்ந்தார்கள். அவர்கள் கிறிஸ்து மட்டுமே ஆண்டவர் என்பதை விசுவாசித்து அந்த விசுவாசத்தை வெளிப்படையாக அறிக்கையிடும்படியாக ஞானஸ்நானத்திற்கு தங்களை ஒப்புக்கொடுத்தார்கள். அவர்களுடைய விசுவாசத்தைக் குறித்து அப்போஸ்தலர்களுக்கு எந்தவித சந்தேகமும் இருக்கவில்லை. மூவாயிரம் பேரும் மெய்யான விசுவாசிகள். இதையெல்லாம் ஐந்து பத்து நிமிஷங்களில் எவரும் சாதாரணமாகக் கண்டுபிடித்துவிட முடியாது. ஆவிக்குரிய செயல் மனிதனின் உள்வாழ்க்கையில் நிகழ்ந்து அவனில் இருந்து வெளிப்படுகின்ற, வெளிப்பட வேண்டிய ஓர் அனுபவம். அது வெளிப்படும் விதமும், காலமும் மனிதனுக்கு மனிதன் வித்தியாசப்படும். ஒருவன் தன்னுடைய விசுவாசத்தை அதிரடியாக வெளிப்படுத்தி அதன் அடையாளங்கள் தெரியும்படியாக தைரியத்துடன் பேசுவான்; நடப்பான். இன்னொருவன் தயக்க குணமுள்ளவனாக தன் அனுபவத்தை வெளிப்படுத்துவதை சிறிது காலதாமதத்துடன் செய்வான். இரண்டு பேரிலும் மெய் அனுபவம் இருந்தபோதும், இருவருடைய குணாதிசயத்துக்கு ஏற்ப அது வெளிப்படும். இருவரிலும் ஒரேவிதத்தில் மாறுபாடில்லாத வகையில் இரட்சிப்பின் அனுபவம் வெளிப்பட வேண்டும் என்று நினைக்க முடியாது. அவர்கள் இயந்திரங்களல்ல; மனிதர்கள்.

பெந்தகொஸ்தே நாளின் விசேஷம் என்னவென்றால் அன்றைக்கு எழுப்புதல் (Revival) நிகழ்ந்தபடியால் ஆவியானவர் வெளிப்படையாக செயல்பட்டதை அறிந்துகொள்ளுகிறோம். சாதாரண காலங்களில் நிகழ்வது போலல்லாமல் அன்றைக்கு அவர் அதிரடியாக செயல்பட்டார். பிரசங்கியை வழமைக்குமாறான விதத்தில் உயர்த்திப் பயன்படுத்தினார். பிரசங்கத்தை இன்னொரு படிக்கு உயர்த்தி வைத்தார். ஆத்துமாக்களை அதிரடியாக அசைத்தார். ஆயிரக்கணக்கானவர்கள் அதைக் கேட்டு மனந்திரும்ப வைத்தார். அன்றைக்கு ஆவியானவரின் செயற்பாடு சாதாரண காலங்களுக்கு அப்பாற்பட்ட விதத்தில் இருந்தது மட்டுமல்ல, ஆத்துமாக்களின் இரட்சிப்பும் அசாதாரணமான விதத்தில் இருந்தது. அன்றைக்கு பன்னிரெண்டு அப்போஸ்தலர்கள் ஆயிரக்கணக்கானவர்களின் ஆத்தும அறுவடையை சரியாக உணர்ந்துகொள்ளும் அளவுக்கு ஆவியானவர் அனைவரையும் பயன்படுத்தினார். அன்று நிகழ்ந்த ஆத்தும அறுவடையும், இரட்சிப்பும் மெய்யானது என்பதை அப்போஸ்தலர் 2 காட்டி, அந்தவிதத்தில் எவருடைய இரட்சிப்பும் இருக்க வேண்டும் என்று போதனையளிக்கிறதே தவிர, அன்று நடந்ததுபோல் ஒவ்வொரு நாளும் நிகழ வேண்டும்; விசுவாசிக்கிறேன் என்று சொல்லுகிறவர்களுக்கு உடனடியாக கண்ணசையும் நேரத்தில் காலதாமதமில்லாமல் ஞானஸ்நானம் கொடுத்துவிட வேண்டும் என்று போதிக்கவில்லை. அந்தவிதத்தில் அந்த அதிகாரத்தைப் புரிந்துகொள்ள முனைவது அது எழுப்புதல் காலம் என்பதையும், ஆவியானவரின் உலகளாவிய வருகையின் வரலாற்று நிகழ்வு என்பதையும், அந்தப் பகுதிக்குரிய விசேஷ அம்சங்களைப் புறக்கணித்துவிட்டு வாசிப்பதற்கு ஒப்பானதாகும். வேதத்தை அந்தவிதத்தில் சாதாரண வேதவாசிப்பு விதிமுறைக்கு அப்பாற்பட்ட முறையில் அசாதாரணவிதத்தில் வாசித்துப் பொருள்கொள்ளக் கூடாது. அப்போஸ்தலர் 2 மெய்யான மனந்திரும்புதலும், கிறிஸ்துவில் மெய்யான விசுவாசமும் அவசியம் என்பதை உணர்த்துகிறது; அன்று அத்தகைய மெய்யான இரட்சிப்பைப் பெருந்தொகையானவர்கள் அடைந்தார்கள் என்பதைக் காட்டுகிறது.

3. திருச்சபை அமைப்பு

அப்போஸ்தலர் 2 ஒரு வரலாற்று நிகழ்ச்சி. அன்றைக்கு ஆவியானவர் இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதியின்படி திருச்சபையை இந்த உலகத்தில் நிறுவுவதற்காக அனுப்பப்பட்டார் என்பதை மறந்துவிடக்கூடாது (லூக்கா 24:49; யோவான் 14:16; 16:7-11; அப்போஸ்தலர் 1:8). அன்றுதான் ஆவியானவர் தன்னுடைய உலகளாவிய, அதாவது யூதர்களிடம் மட்டுமல்லாமல், புறஜாதியார்கள் மத்தியிலும் கிரியை செய்து எந்தவித வேறுபாடுமில்லாமல் அனைவரும் சுவிசேஷம் கேட்க வைப்பதற்காகவும், விசுவாசிக்கிற அனைவருக்கும் இரட்சிப்பு அளிப்பதற்காகவும், திருச்சபையை நிறுவுவதற்காகவும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தார். இதைத்தான் மத்தேயு 28:18-20ம் விளக்குகிறது. இதற்காகவே அப்போஸ்தலர்களும் நியமிக்கப்பட்டு அனுப்பப்பட்டிருந்தனர். இந்த நாளில் திருச்சபை ஒரு நிறுவனமாக இந்த உலகத்தில் இதுவரை இருந்திராத வகையில் ஆரம்பமானது என்பதைப் புரிந்துகொள்ளுவது அவசியம்.

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் விசுவாசிகள் இருந்தார்கள். அவர்கள் இஸ்ரவேலர் மத்தியில் இருந்தார்கள். பழைய ஏற்பாட்டில் சபையை ஒரு படமாக இஸ்ரவேலின் மத்தியில் பார்க்கிறோம். பழைய ஏற்பாட்டில் சபை இல்லை என்று ஒரு சாரார் கருதுகிறார்கள். அது முழுத்தவறு. சபை அன்று இல்லை என்று கூறினால் அன்று விசுவாசிகளும் இல்லை என்ற அர்த்தத்தில் போய் முடிந்துவிடும். விசுவாசிகளின் கூட்டமே சபை. அந்தவிதத்தில் பழைய ஏற்பாட்டில் சபை இருந்தது. புதிய ஏற்பாட்டுக் காலத்தில் சபை ஒரு நிறுவனமாக முழு அமைப்போடு நிறுவப்பட்டது (The Church was planted not only as an organism but also as an organization.) யூத விசுவாசிகளையும், புறஜாதி விசுவாசிகளையும் கொண்டு ஜாதி, இன வேறுபாடில்லாமல் கிறிஸ்துவின் தலைமையின் கீழ் நிறுவப்பட்டது. இதுதான் பழைய ஏற்பாட்டிற்கும், புதிய ஏற்பாட்டிற்குமிடையில் சபைபற்றிய வித்தியாசம்.

அப்போஸ்தலர் 2 நமக்கு சபை அமைப்பை விளக்குகிறது. இன்று திருச்சபை அமைப்பைப் பற்றிய போதனைகளைப் பெற்றுக்கொள்ள நாம் அப்போஸ்தலர் நடபடிகளையும், ஏனைய புதிய ஏற்பாட்டு நூல்களையும் பயன்படுத்த வேண்டும். அந்தப்படிப் பார்க்கிறபோது அப்போஸ்தலர் 2ல் சபை பற்றிய தெளிவான ஆரம்பப் படத்தினைப் பார்க்க முடிகிறது. இன்று அமைக்கப்பட வேண்டிய சபைக்கான அருமையான விளக்கத்தை அங்கே நாம் காண்கிறோம். முதலில், பிரசங்கம் கொடுக்கப்பட்டு பாவிகள் விசுவாசத்தை அடைய வேண்டும். மெய்யாக விசுவாசத்தை அடைந்தவர்கள் ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு அடுத்தபடியாக அவர்கள் சபை வாழ்க்கைக்குரிய இலக்கணங்களைக் கொண்டிருந்து விசுவாசத்தோடு வாழவேண்டும். இந்த மூன்றையும் நாம் தெளிவாக அப்போஸ்தலர் 2:40-47 வரையுள்ள வசனங்களில் பார்க்கிறோம். மெய்யான விசுவாசிகள் மட்டுமே ஞானஸ்நானம் பெற்று சபையில் இணைந்து சபை வாழ்க்கையில் ஒருமனத்தோடு ஈடுபட்டிருந்தார்கள் என்ற உண்மை அங்கு வெளிப்படுகின்றது. இந்த இடத்தில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய உண்மையொன்றிருக்கிறது. அதாவது, திருச்சபை அமைப்பில் காணப்பட வேண்டிய ஒரு தெளிவான படிமுறையை இந்தப் பகுதி காட்டுகிறதே தவிர இவற்றிற்கான கால இடைவெளி பற்றி இந்தப் பகுதி பேசவில்லை. படிமுறை இந்தப் பகுதி போதிக்கும் விதத்தில் ஒன்றையடுத்து மற்றது வரவேண்டும். கிறிஸ்துவில் விசுவாசம் முதலில் இருக்க வேண்டும்; அதற்கு அடுத்தபடியாக ஞானஸ்நானம். விசுவாசித்து ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் சபை வாழ்க்கைக்கு தங்களை ஒப்புக்கொடுத்து விசுவாசமாக வாழவேண்டும். இதைத்தான் இந்தப்பகுதி போதிக்கிறது. இந்தப்படிமுறை எந்த நாட்டில், எந்த ஊரில் சபை அமைக்கப்பட்டாலும் பின்பற்றப்பட வேண்டிய படிமுறை ஒழுங்கு.

ஒரு விஷயத்தை இங்கே நாம் மறந்துவிடக்கூடாது. அப்போஸ்தலர் 2 சபையின் ஆரம்பத்தை விளக்குகிறது. அப்போஸ்தலர் 2ல் சபை இன்னும் தனக்கிருக்க வேண்டிய அனைத்தையும் கொண்டு முழுமையாக அமைக்கப்படவில்லை. ஆரம்ப, அடித்தள காரியங்கள் சரியாக அமைக்கப்பட்டு படிப்படியாக ஏனையவும் நிறைவு செய்யப்படுவதை அப்போஸ்தல நடபடிகளின் ஏனைய அதிகாரங்கள் காட்டுகின்றன. அதனால்தான் சபை பற்றிய போதனைகள் காலவரை அடிப்படையில் இந்நூலில் தரப்படிருப்பதாக நினைத்து அதை நாம் வாசிக்கக்கூடாது. சபையின் ஆரம்பம் பற்றியும் அது படிப்படியாக அமைக்கப்பட்ட விதத்தையுமே இந்நூல் விளக்குகிறது. போதகர்களுக்கான இலக்கணத்தை நாம் அப்போஸ்தலர் நடபடிகளில் வாசிப்பதில்லை. அதற்கு 1 தீமோ, தீத்து ஆகிய நூல்களை நோக்கி நாம் போகிறோம். திருவிருந்து பற்றி அப்போஸ்தல நடபடிகள் சொன்னாலும் அதற்கான முழு விளக்கத்துக்கு நாம் 1 கொரிந்தியருக்கு போகிறோம். ஆகவே, சபை பற்றிய முழு விளக்கத்தையும் பெற நமக்கு புதிய ஏற்பாடு முழுவதும் அவசியம்.

அப்போஸ்தலர் 2ல் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம், சபைக்கிருக்க வேண்டிய இலக்கணங்களைத்தான். இங்கே சபை பற்றிய ஒரு ‘பெட்டர்னை’ அல்லது மாதிரியை நாம் காணக்கூடியதாக இருக்கிறது. அந்த மாதிரியில் ஒரு தெளிவான ஒழுங்குமுறை இருக்கிறது. அந்த ஒழுங்குமுறை மாறக்கூடாது; மாறமுடியாது. அது என்ன? முதலில் விசுவாசம். அதாவது, மெய்யான இரட்சிப்பு. அதற்கு அடுத்து வருவதுதான் ஞானஸ்நானம். ஞானஸ்நானம் முதலில் வரமுடியாது. அது விசுவாசித்தவருக்கு கொடுக்கப்படுவது. ஆகவே, அது விசுவாசத்திற்குப் பிறகுதான் வரவேண்டும். அதற்கு அடுத்தகட்டமாக சபை வருகிறது. ஒருவருக்கு ஞானஸ்நானத்தைக் கொடுக்கின்ற பணி சபையினுடையது. அது சபையின் திருநியமம். ஞானஸ்நானத்தைப் பெற்று விசுவாசிக்கிறவர்கள் எல்லோருமே சபைக்குள் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும். இதுதான் மாற்ற முடியாத ஒழுங்குமுறை. இதற்கு மேல் வேறெதையும் இந்த வசனங்களில் பார்க்கவோ திணிக்கவோ கூடாது. இதை இன்றைய சூழ்நிலையில் எப்படி நடைமுறைப்படுத்துவது என்று கேட்டால், சுவிசேஷத்தைக் கேட்டு இயேசுவை விசுவாசிக்கின்ற எவரும் மெய்யான விசுவாசிகளா என்பதை சபைத்தலைவர்கள் முதலில் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அது உண்மையாக இருக்குமானால் அப்படி விசுவாசித்தவருக்கு ஓரளவுக்கு ஞானஸ்நானத்தைப் பற்றியும், சபையைப் பற்றியும், சபை நடைமுறைகளையும், சபை வாழ்க்கையையும் பற்றிப் போதித்து ஞானஸ்நானம் எடுப்பதற்கு சபையாக அவரைத் தயார் செய்ய வேண்டும். இந்த விஷயங்களில் இன்றைக்கு தெளிவான போதனைகள் இல்லாததாலும், போலிப்போதனைகள் மலிந்து காணப்படுவதாலும், சபைக்குள் இணைகிற ஒருவரை முறையாக வழிநடத்த வேண்டிய அவசியம் திருச்சபைக்கு மதிப்புக்கொடுத்து நடக்கின்ற சபைகளுக்கிருக்கிறது. இதை நான் எழுதிக்கொண்டிருக்கிறபோது சமீபத்தில் கேள்விப்பட்ட ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. நான் இருக்கும் ஊரில் பக்கத்தில் இருக்கும் ஒரு சபையில் சுவிசேஷ கூட்டம் முடிந்த உடனேயே இருபத்தைந்து பேருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்களாம். அது கேட்பதற்கு காதுக்கு சுவையாக இருந்தபோதும் புத்தியான செயலாக எனக்குப்படவில்லை. நாம் முதலாம் நூற்றாண்டிலோ அல்லது எழுப்புதல் காலத்திலோ வாழவில்லை. இப்படிக் கூட்ட முடிவில் உடனடியாக ஞானஸ்நானம் கொடுப்பது முழுத்தவறு. அப்படிக் கொடுப்பதற்கு ஆதாரமாக அப்போஸ்தலர் 2ஐப் பயன்படுத்துகிறவர்கள் என்னைப் பொறுத்தவரையில் அந்த நூலைப் புரிந்துகொள்ளுகிற விதத்தில் பெரிய தவறைச் செய்கிறார்கள்.

4. அடிப்படைத் திருச்சபை வாழ்வியல்

அப்போஸ்தலர் 2, திருச்சபை வாழ்க்கையையும் விளக்குகிறது. அதை 42-47 வரையுள்ள வசனங்களில் வாசிக்கிறோம். விசுவாசித்து சபையில் ஞானஸ்நானம் எடுக்கிறவர்கள் சபை வாழ்க்கைக்கு தங்களை ஒப்புக்கொடுத்ததாக வாசிக்கிறோம். இங்கே விசுவாசித்து ஞானஸ்நானம் எடுக்கிறவர்களுக்கே திருவிருந்தில் கலந்துகொள்ளும் ஆசீர்வாதம் இருப்பதையும் பார்க்கிறோம். விசுவாசித்து சபையில் ஞானஸ்நானம் எடுக்காதவர்கள் திருவிருந்து எடுப்பது சரியல்ல. அப்போஸ்தலர் நடபடிகள் விளக்கும் ஒழுங்குமுறையை மறுபடியும் கவனியுங்கள்.

Acts

இந்த ஒழுங்குமுறையை வேதம் தெளிவாக அப்போஸ்தலர் 2ல் சுட்டிக்காட்டுகிறது. இதுவே இன்றும் பொதுவாகப் பின்பற்றப்பட வேண்டும். கிறிஸ்து உயரெடுத்துக்கொள்ளப்பட்டு இரண்டாயிரம் ஆண்டுகள் போய் நாம் வாழ்கின்ற இந்த காலத்தில் சபை வரலாற்றில் எத்தனையோ காரியங்கள் நிகழ்ந்து பலவிதமான டினோமிநேஷன்கள் அதிகரித்திருக்கும் சூழ்நிலையில் என்ன செய்வது என்ற திகைப்பு சிலருக்கு இருக்கும். எது எப்படியிருந்தாலும் வேதம் போதிக்கும் பொதுவான ஒழுங்கையே எல்லா சபைகளும் பின்பற்றுவது அவசியம். இந்த ஒழுங்கை நம் வசதிக்கேற்ற முறையில் மாற்றி அமைத்துக்கொண்டால் நமக்கு வேதம் தேவைப்படாது. வேதத்தில் இந்த ஒழுங்கை ஏற்படுத்தித் தந்திருப்பவரே கர்த்தர்தான்.

கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள் அவருக்கு கீழ்ப்படியாமல் ஞானஸ்நானத்தை தவிர்த்துவிடுவது தவறான செயல். -ஞானஸ்நானத்தை நாடுகிற ஒருவர் கிறிஸ்துவுக்கும் அவருடைய சபைக்கும் கீழ்ப்படியத் தயாராக இருக்கிறார் என்பதையே அறிவிக்கிறார். -ஞானஸ்நானம் எடுக்கத் தயங்குகிறவருக்கு அதுபற்றிய உண்மைகள் சரியாகத் தெரியவில்லை என்றுதான் அர்த்தம். ஞானஸ்நானத்தைக் காரணமில்லாமல் கர்த்தர் தன் சபையில் நியமித்திருக்கவில்லை. அதை நாம் அலட்சியப்படுத்தக்கூடாது. அடுத்ததாக, சபைகளில் சபை அங்கத்துவம் இருக்க வேண்டும். சபை அங்கத்தவர்கள் யார்? யாரில்லை? என்பது தெளிவாகத் தெரியும்விதமாக சபை அங்கத்தவர்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அந்தவிதமாகத்தான் ஆதி சபை இருந்தது. ஆரம்பத்தில் 120 ஆகவும் பின்னால் 3000மாகவும் வளர்ந்தது. அவர்களைத் தவிர வேறு எவரும் அங்கத்தவர்களாக இருக்கவில்லை. அந்த அங்கத்தவ தொகை பின்னால் அதிகரித்தது. இன்றைக்கு நம்மினத்தில் சபைகள் தங்களுக்கு இருக்க வேண்டிய அடையாளமே இல்லாமல் இருக்கின்றன. வெறுமனே கூடிவருகிறதைத் தவிர இருக்க வேண்டிய தகுதிகளையும், அடையாளங்களையும் கொண்டிராமல் இருக்கின்றன. இந்த முறையில் சபைகூடிவருவதைக் கர்த்தர் அனுமதிக்கவில்லை. உலகத்துக்கே ஒழுங்கை ஏற்படுத்தி அரசாங்கங்களையும், ஆட்சிமுறையையும், எல்லைகளையும் வகுத்திருக்கும் கர்த்தர் தன்னுடைய சபை இந்த உலகத்தில் ஏனோதானோவென்று தெளிவான அமைப்பும் ஒழுங்கும் இல்லாமல் இருக்க அனுமதிப்பாரா? சபைக்குரிய அத்தனை ஒழுங்கையும் அவர் தெளிவாக புதிய ஏற்பாட்டில் விளக்கியிருக்கிறார். அதை நாம் உதாசீனப்படுத்துவது அவரை இகழ்வது போலாகும். நம்முடைய சுயநலத்துக்காகவும், வசதிக்காகவும் கர்த்தருடைய வேதத்தை மாற்றி அமைத்துக்கொள்ளக்கூடாது.

சபை ஆவிக்குரியது ஆகவே அதில் உலக முறைகளுக்கு இடமில்லை என்று அறியாமல் பேசுகிறவர்கள் இருக்கிறார்கள். உலகத்தை உருவாக்கியவர் நம் கர்த்தர். அவர் தன்னுடைய ஆவிக்குரிய சபையும் இந்த உலகத்தில் ஒழுங்கோடு இருக்க வேண்டுமென்றுதான் புதிய ஏற்பாட்டைத் தந்திருக்கிறார். தன்னுடைய சபை பரிசுத்தத்தோடு உலகத்தில் இருப்பதை அவர் விரும்புவதால்தான் அதற்கான அத்தனை ஒழுங்குமுறையையும் தந்திருக்கிறார். ஆவிக்குரிய வாழ்க்கைக்கு ஒழுங்கு அவசியமில்லை என்பது ‘இந்துத் துறவி’ பேசுவது போல் அமைந்துவிடும். அவனில்தான் ஒழுங்குக்கு இடமில்லை. ஒருபுறம் ஆத்திக விளக்கம் கொடுப்பதோடு இன்னொரு புறம் கஞ்சாவையும் புகைப்பான். ஆவிக்குரிய வாழ்க்கையில் ஒழுங்கிருக்க வேண்டும், தன் சம்பந்தப்பட்ட சபை உட்பட அனைத்திலும் ஒழுங்கிருக்க வேண்டுமென்பதால்தான் கர்த்தர் பத்துக்கட்டளைகளையே தந்திருக்கிறார். அது கர்த்தர் வகுத்திருக்கும் ஒழுங்கை வலியுறுத்துகிறது. அந்த அடிப்படையில்தான் திருச்சபை அமைப்பும், ஒழுங்கும் கர்த்தரால் புதிய ஏற்பாட்டில் விளக்கப்பட்டிருக்கிறது.

5. ஆவிக்குரிய எழுப்புதலின் தன்மை

அப்போஸ்தலர் 2 இதுவரை நான் விளக்கிய சபைக்குரிய போதனைகளைத் தருவதோடு கர்த்தர் மட்டுமே ஏற்படுத்தக்கூடிய எழுப்புதலையும் விளக்குகிறது. தம்முடைய சித்தப்படி, தன்னுடைய மகிமைக்காக இருந்திருந்து வரலாற்றில் கர்த்தர் ஏற்படுத்தும் எழுப்புதல் அன்றாடம் நிகழும் நிகழ்ச்சியல்ல. அப்படியானால் எழுப்புதலைப்பற்றி நாம் இந்த அதிகாரத்தில் எதைக் கற்றுக்கொள்ள வேண்டும்? என்ற கேள்வி எழும். நிச்சயம் எழுப்புதலுக்காக நாம் ஜெபிக்கலாம். நம்முடைய இனத்தைப் பிடித்திருக்கும் சாபக்கேடு போன்ற கிறிஸ்தவத்தில் காணப்படும் ஒழுங்கற்ற தன்மையும், போலித்தனங்களும் நீங்கி சத்தியம் சத்தியமாகப் பிரசங்கிப்படும் சூழ்நிலையைக் கர்த்தர் ஏற்படுத்த ஜெபிக்கலாம். பேதுரு போன்ற வரலாறு கண்டிருக்கும் மெய்ப்பிரசங்கிகளும், மெய்ப்போதகர்களும் வெறும் அனுபவத்தையும், உணர்ச்சியையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டிராத சத்தியமான வேதப்பிரசங்கத்தை அளிக்கும்படி எழுப்பித்தர வேண்டுமென்று ஜெபிக்கலாம். வேத சத்தியங்களை நம் மக்கள் இனங்கண்டுகொள்ளும் வகையில் ஆவிக்குரிய ஆத்மீக பலத்தோடு இருக்க, வேதம் தெரிந்தவர்களாக இருக்கும் சூழ்நிலை உருவாகும் எழுப்புலுக்காக ஜெபிக்கலாம். நம்மால் அதற்காக ஜெபிக்கத்தான் முடியுமே தவிர சார்ள்ஸ் பினி தவறாக நம்பி ஏமாந்ததுபோல் மெய்யான எழுப்புதலை ஒருபோதும் உருவாக்க முடியாது. எழுப்புதலைத் தருவது கர்த்தரின் பணி; நம் பணி அதற்காக ஜெபிப்பதும், அதற்குத் தகுதியுள்ளவர்களாக வாழுவதுமே. இருந்தபோதும், நாம் கடமைப்பொறுப்போடு கிறிஸ்தவ சீர்திருத்தத்திற்காகவும், சபை சீர்திருத்தத்திற்காகவும் அன்றாடம் இடைவிடாது ஜெபத்தோடு உழைக்கும் பணியில் தளரக்கூடாது.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s