கிருபாதாரபலியா, கோபநிவாரணபலியா?

வார்த்தைகள் முக்கியமானவை. நம்முடைய எண்ணங்களை வெளியிட வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம். எண்ணங்களைத் தெளிவாக விளக்குவதற்கு தகுந்த வார்த்தைகள் அவசியம். வார்த்தைகள் சரியானதாக இல்லாவிட்டால் நாம் வெளிப்படுத்தும் எண்ணங்கள் தவறான கருத்தைக் கொடுத்துவிடும் ஆபத்து இருக்கிறது. தகுந்த வார்த்தைகளை, நாம் வெளிப்படுத்த விரும்பும் எண்ணங்களுக்கேற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தும் அவசியத்தை பொதுவாக எல்லோரும் அறிந்திருப்பார்கள். நடைமுறை வாழ்க்கையில் இந்தளவுக்கு மொழியைப் பொறுத்தவரையில் நாம் வார்த்தைகளில் கவனம் செலுத்துகிறபோது, நாமறிந்துகொள்ளும்படி தம்முடைய சித்தத்தை வெளிப்படுத்தியிருக்கும் தன்னுடைய வேதத்தில் கர்த்தர் எந்தளவுக்கு முக்கியம் கொடுத்து வார்த்தைகளை வெளிப்படுத்தியிருப்பார்? தம்முடைய சித்தம் தெளிவாக, நாம் புரிந்துகொள்ளும்படி இருக்கவேண்டுமென்பதற்காக நிச்சயம் கவனத்தோடு தெரிந்தெடுத்து வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பார். அதுவும் வேதம் பரிசுத்த ஆவியினால் விசேஷமான முறையில் ஊதி அருளப்பட்டதாக இருக்கிறது. வேதத்தை எழுதி முடிக்க தேவ மனிதர்களை பரிசுத்த ஆவியானவர் பயன்படுத்தியிருந்தபோதும், தவறு அறவேயில்லாமல் அவர்கள் வேதத்தை எழுதும்படிச் செய்தார். பரிசுத்த ஆவியானவர் பூரணபரிசுத்தராக இருப்பதால் அவருடைய எழுத்துக்களும் பூரணபரிசுத்தம் வாய்ந்ததாகவே இருக்கும். வேதத்தில் அது போதிக்கும் சத்தியங்கள் மட்டுமல்லாமல் அவற்றை வெளிப்படுத்தும் மொழியும், வார்த்தைகளும்கூட பூரணமானவையாகக் காணப்படுகின்றன. அதாவது. வேதம் எபிரெய, கிரேக்க மொழிகளில் எழுதித் தரப்பட்டு காணப்படும் மூலச் சுருள்களில் அந்தவகையில் கர்த்தரின் வேதம் பூரணமானதாகக் காணப்படுகின்றது. இந்த மூலச் சுருள்களில் இருந்தே வேதம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நம்மை வந்தடைந்திருக்கிறது.

இத்தனைப் பீடிகையோடு இதையெல்லாம் ஏன் எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று கேட்கிறீர்களா? அதற்குக் காரணம் முக்கியமான ஒரு வேத போதனையை நான் இப்போது உங்களுக்கு விளக்க முன்வந்திருப்பதால்தான். அந்தப் போதனை கிறிஸ்துவின் சுவிசேஷத்துக்கு அடித்தளமாக இருக்கும் ஒன்று. அந்தப் போதனையை விளக்குவதற்கு கர்த்தர் தன்னுடைய வேதத்தில் ஒரு முக்கியமான வார்த்தையைத் தெரிந்து பயன்படுத்தியிருக்கிறார். அந்த வார்த்தை மூல மொழியான கிரேக்கத்தில் இருந்து தமிழ் வேதத்தில் ‘கிருபாதாரபலி’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் அது Propitiation என்று அழைக்கப்படுகிறது. இந்த வார்த்தைக்குள் கிறிஸ்துவின் மீட்புப் பலி பற்றிய ஆழமானதும், அவசியமானதுமான சத்தியங்கள் பொதிந்து காணப்படுகின்றன. அதன் காரணமாகத்தான் இந்த வார்த்தை முக்கியமானது என்று சொன்னேன்.

இந்த வார்த்தையை முதலாம் யோவான் 4:10ல் காண்கிறோம். ‘நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.’ கிறிஸ்து நமக்காக கிருபாதாரபலியானார் என்று இந்த வசனம் சொல்லுகிறது.

கிறிஸ்துவின் மீட்பாகிய பணியில் அடங்கியுள்ள உண்மைகளை விளக்கும் பலவகையான வார்த்தைகள் வேதத்தில் காணப்படுகின்றன. உதாரணத்திற்கு ‘மீட்பு’ (Redemption) என்ற வார்த்தை பல தடவைகள் பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. பாவிகளுக்கு விடுதலை கொடுப்பதற்காக கிறிஸ்து ஏற்றிருக்கும் பெரும் பணியையும் அந்தப் பணியில் அடங்கியிருக்கும் அருஞ்செயல்களையும் இந்தப் பதம் விளக்குகிறது. இதேபோல் ‘பாவநிவாரணபலி’ (Atonement) என்ற வார்த்தையையும் பழைய ஏற்பாட்டில் பெரும்பாலும் காண்கிறோம். பழைய ஏற்பாட்டு பலிகளை நினைவுபடுத்துமுகமாக கிறிஸ்து தன்னையே பலியாகக் கொடுத்ததை இந்தப் பதம் விளக்குகிறது.

கிறிஸ்து நமக்காக செய்திருக்கும் சிலுவைத் தியாகத்தை விளக்கும் இன்னொரு வார்த்தை ‘ஒப்புரவாக்குதல்’ (Reconciliation). இவையும் இவைபோன்ற ஏனைய பதங்களும் கிறிஸ்துவின் மீட்புப்பணியின் அருஞ்செயல்களை விளக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த வார்த்தைகளை நாம் நம்முடைய அன்றாட உரையாடலில் பயன்படுத்துவதில்லை. ஞாயிறு பாடசாலைகளில் சிறுவர்களுக்கு நிச்சயம் விளக்குவதில்லை.

இந்த வார்த்தைகள் முக்கியமானவை. கர்த்தரே தெரிந்தெடுத்து இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறார். கிறிஸ்துவின் மீட்பைப் பற்றி விளக்கும் இந்தப் பதங்கள் ஒரே விஷயத்தை விளக்குவதில்லை. அதாவது ஒரே விஷயத்தை விளக்கும் பல வார்த்தைகளாக இவற்றைக் கருத்தில் கொள்ளக் கூடாது. அப்படித்தான் அநேகர் இவற்றைப் பயன்படுத்தி வருகிறார்கள். மாபெரும் மீட்பாகிய அருஞ்செயலில் அடங்கியுள்ள வெவ்வேறு சிறப்பான அம்சங்களை ஒவ்வொரு பதமும் விளக்குகின்றது. உதாரணத்திற்கு ‘மீட்பு’ என்ற பதம் பாவிகளுக்கு கிறிஸ்து ஏற்படுத்தித் தந்திருக்கும் பெரும் ஆத்மீக விடுதலையை விளக்குவதாக இருக்கிறது. இன்னொரு பதமான ‘பாவநிவாரண பலி’ மீட்பின் ஓர் அங்கமான கிறிஸ்துவின் சிலுவைப் பலியை சிறப்பாக விளக்குகிறது. இன்னொரு பதமான ‘ஒப்புரவாக்குதல்’ மீட்பாகிய பெருஞ்செயலின் இன்னொரு அங்கமான கிறிஸ்துவின் மூலம் பாவி விடுதலை அடைந்து கர்த்தரோடு சமாதானத்தை அடைதலை சிறப்பாக விளக்குகிறது.

இந்தவகையில் ‘கிருபாதாரபலி’ என்ற பதம் விசேஷமானது. உண்மையில் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை முறையாக விளங்கிக்கொள்ள இந்தப் பதம் அவசியமாக இருக்கிறது. இந்தப் பதத்தை நாம் விளங்கிக்கொள்ளுகிற விதத்திலேயே சுவிசேஷத்தைப் பற்றிய நம்முடைய நம்பிக்கைகள் காணப்படும். இந்தப் பதத்தை சரியாக விளங்கிக்கொள்ளாவிட்டால் திரித்துவ தேவனைப் பற்றிய நம்முடைய நம்பிக்கைகளிலும் மாற்றமேற்பட்டு விடும். அதுமட்டுமல்லாமல் இந்தப் பதம் போதிக்கும் ஆழ்ந்த உண்மைகளை அறியாமலிருப்பது நம்முடைய வேத நம்பிக்கைகளையும், கிறிஸ்தவ விசுவாசத்தையும் பலவீனப்படுத்திவிடும்.

1 யோவான் 4:10 ஐ இப்போது ஆராய்வோம். ‘நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.’

இந்தப் பகுதியில் யோவான் முக்கியமாக கடவுளுக்கு நம்மீதிருக்கும் அன்பையும் அந்த அன்பின் அடிப்படையில் நாம் ஒருவருக்கொருவர் காட்ட வேண்டிய அன்பையும் விளக்குகிறார். இந்தப் பகுதி அமைந்து காணப்படும் சந்தர்ப்பம் அதைத் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. யோவான், ‘இங்கே பாருங்கள், இதுதான் அன்பு – இயேசு கிறிஸ்து நமது கிருபாதாரபலி’ என்கிறார். அன்பு என்ன என்று நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமா? அதை இயேசு கிறிஸ்து நமது கிருபாதாரபலியானதில் காண்கிறோம் என்கிறார் யோவான்.

இங்கே பேராச்சரியம் தருகின்ற விஷயம் என்ன தெரியுமா? அன்புக்கும், கிருபாதாரபலிக்குமிடையில் யோவான் ஏற்படுத்துகின்ற தொடர்புதான். இந்த இரண்டையும் யோவான் இணைக்கிறார். கடவுளுக்கு தன் மக்கள் மீதிருக்கும் அன்பை, அவர் கிறிஸ்துவை அவர்களுக்கு கிருபாதாரபலியாக்கியதன் மூலம் பூரணமாக வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதே யோவானின் போதனை. இது எனக்கு பேராச்சரியமளிப்பதற்கு காரணம் என்ன தெரியுமா? இப்போதெல்லாம் இந்த இரண்டும் ஒன்று சேர முடியாதென்பதையே நாம் தொடர்ந்தும் கேட்டுவருவதால்தான். இறையியல் அறிஞர்களும், பிரசங்கிகளும் இப்படித்தான் விளக்கி வருகிறார்கள். அன்பும், கிருபாதாரபலியும் இணைவதற்கு வழியே இல்லை என்று சொல்லி வருகிறவர்கள், அவற்றை இணைப்பதற்காக கிருபாதாரபலி என்ற வார்த்தையைக் கொஞ்சம் மாற்றி அமைத்திருக்கிறார்கள். (இதை நான் பின்னால் விபரமாக விளக்கவிருக்கிறேன்.) ஆனால் யோவானுக்கோ, கடவுளுக்கு தன் மக்கள் மீதிருக்கும் அளப்பரிய அன்பை அவர்களுக்காக கிறிஸ்து கிருபாதாரபலியானதிலேயே தெளிவாகப் பார்க்க முடிந்திருக்கிறது. யோவானைப் பொறுத்தவரையில் கிருபாதாரபலி, அதில் அடங்கியிருக்கும் அத்தனை அம்சங்களோடும் மாறாமல் இருந்தால் மட்டுமே அதில் கடவுளின் மெய்யான அன்பைப் பார்க்க முடியும்.

1. கிருபாதாரபலி எனும் வார்த்தைக்கான அர்த்தமும் அது பயன்படுத்தப்பட்டிருக்கும் முறையும்.

இந்த வார்த்தையை நாம் 1 யோவான் 4:10ல் மட்டும் காண்பதில்லை. புதிய ஏற்பாட்டில் வேறு சில இடங்களிலும் இதைக் காண்கிறோம். இந்த இடங்களில் இது பெயர்ச்சொல்லாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அத்தகைய மூன்று வேதப் பகுதிகளைக் கவனிப்போம்.

1 யோவான் 2:2, ‘நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்.’

ரோமர் 3:26, ‘கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதாரபலியாக அவரையே ஏற்படுத்தினார்.’ (இந்த வசனத்தில் கிருபாதாரபலி என்ற தமிழ் வார்த்தைக்கான கிரேக்க வடிவமான ‘ஹிலாஸ்மொஸ்’ என்ற வார்த்தையின் குடும்பத்திலிருந்து வரும் ‘ஹிலாஸ்டேரியன்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழில் அது கிருபாதாரபலி என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

எபிரெயர் 2:17, ‘அன்றியும், அவர் ஜனத்தின் பாவங்களை நிவர்த்தி செய்வதற்கு ஏதுவாக, தேவகாரியங்களைக்குறித்து இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியராயிருக்கும்படிக்கு எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாக வேண்டியிருந்தது.’

இந்த வசனத்தில் கிருபாதாரபலி என்ற வார்த்தை தமிழ் வேதத்தில் பயன்படுத்தப்படவில்லை. ஆங்கில வேதநூல்களில் NKJV, NASB, ESV மொழிபெயர்ப்புகளில் அதுவே பயன்படுத்தப்பட்டுள்ளது. கிருபாதாரபலி என்ற வார்த்தை ‘ஹிலாஸ்மொஸ்’ என்ற கிரேக்க வார்த்தையின் தமிழ் வடிவம். எபிரெ 2:17ல் ‘ஹிலாஸ்மொஸ்’ என்ற வார்த்தைக் குடும்பத்திலிருந்து வரும் ‘ஹிலாஸ்கொமாய்’ என்ற கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதை KJV, ‘Reconciliation’ என்று மொழிபெயர்த்திருக்கிறது. ஆனால், NKJV, NASB, ESV எல்லாமே Propitiation (கிருபாதாரபலி) என்று மொழிபெயர்த்திருக்கின்றன. எது சரி? Propitiation அல்லது கிருபாதாரபலி என்று மொழிபெயர்ப்பதே சரியானது. தமிழ்வேதம் அந்த வார்த்தையைப் பயன்படுத்தாது ‘பாவங்களை நிவர்த்தி செய்வதற்கேதுவாக’ என்று மட்டும் மொழிபெயர்த்திருக்கிறது. இந்த இடத்தில் கிருபாதாரபலி என்ற வார்த்தை தமிழில் இருந்திருக்க வேண்டும்.

இனி கிருபாதாரபலி (Propitiation) என்ற வார்த்தைக்கான பொருளை நாம் ஆராய்வது அவசியம். வேதத்திற்கு புறத்தில், அதாவது, கிறிஸ்தவர்களல்லாதவர்கள் மத்தியில் இந்த வார்த்தைக்கான பொதுவான அர்த்தத்தை முதலில் கவனிப்போம். ஒருவருடைய ‘சினத்தைத் தணிப்பது’ என்ற அர்த்தத்திலேயே இதன் வினைச்சொல் (Propitiate) அவர்களால் பயன்படுத்தப்படுகிறது. இப்போது இருக்கும் ‘க்ரியா’ சொற்பொருளகராதியில் இந்த அர்த்தத்தைக் காணலாம். கிறிஸ்தவர்களல்லாதவர்கள்கூட இந்த வார்த்தைக்குள், பிரச்சனையோடிருக்கும் இருவரில் ஒருவர் கோபத்தோடிருக்கிறார் என்ற அர்த்தமிருப்பதைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். அதுவே இந்த வார்த்தையின் அடிப்படை அர்த்தமாகும்.

நாம் இதற்கு மேல் ஒருபடி போய் வேதத்தில் இது எந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை ஆராய வேண்டும். இறையியல் வல்லுனரான ஜோன் ஓவன் கிருபாதாரபலியில் நான்கு முக்கிய விஷயங்கள் அடங்கியிருப்பதாக எழுதியிருக்கிறார்.

  1. செய்யப்பட்ட ஒரு குற்றம் நீக்கப்பட வேண்டும்.
  2. குற்றத்துக்கு ஆளானவர் சமாதானப்படுத்தப்பட வேண்டும்.
  3. குற்றத்தைச் செய்தவர் குற்றவாளியாக நிற்கிறார்.
  4. செய்யப்பட்ட குற்றத்திற்காக பலிகொடுக்கப்பட வேண்டும்.

ஜோன் ஓவனின் இந்த விளக்கம் மிகவும் முக்கியமானது. இவையெல்லாம் கிருபாதாரபலி (Propitiation) எனும் வார்த்தை விளக்கும் உண்மைக்குள் அடங்கியிருக்கின்றன. இந்த விஷயங்கள் யாரைப்பற்றிப் பேசுகின்றன, நடந்த குற்றந்தான் என்ன? குற்றத்தால் ஏற்பட்ட பாதிப்பென்ன? குற்றம் செய்தவரின் கதி என்ன? என்பதையெல்லாம் நாம் ஆராய்வது அவசியம். இந்தக் கேள்விகளுக்கான பதில்களை நாம் தேடுகின்றபோது குற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறவர் கர்த்தர் என்ற உண்மையை வேதத்தில் இருந்து அறிந்துகொள்ளுகிறோம். அதுமட்டுமல்லாமல் அந்தக் குற்றத்தால் அவர் பரிசுத்தமான கடுங்கோபத்தில் இருக்கிறார் என்பதையும் வேதம் விளக்குகிறது. கர்த்தர் பாதிக்கப்பட்டவராக பரிசுத்தமான கோபத்தோடு இருக்கிறார் என்பது கிருபாதாரபலி என்ற பதத்தின் அடிப்படை விளக்கமாக இருக்கிறது என்பதை மறுக்கமுடியாது. அதுமட்டுமல்லாமல் அந்தக் கோபத்தை நிவர்த்தி செய்யும் பலியாகவே கிறிஸ்து சிலுவையில் பலிகொடுக்கப்பட்டிருக்கிறார் என்பதை கிருபாதாரபலி விளக்குகிறது. கர்த்தர் கோபத்தோடிருக்கிறார் என்பதையும் அதற்குக் காரணமான மனிதன் அவருடைய கோபத்துக்கு ஆளாகியவனாக இருக்கிறான் என்ற அடிப்படை உண்மையை கிருபாதாரபலியில் இருந்து எந்தவிதத்திலும் ஒதுக்குவதற்கு வழியே இல்லை. இந்த உண்மையை ஒதுக்கிவைக்கப் பார்த்தால் கிறிஸ்துவின் சிலுவைப்பலியின் அடிப்படைத் தன்மையை அழித்துவிடுவது போலாகிவிடும்; அவரது சிலுவைப்பலி அதன் பிறகு பரிகாரபலியாக இருக்காது.

உண்மை இப்படி இருந்தபோதும் நான் இதுவரை விளக்கியதை சிலர் நிராகரிக்கிறார்கள். பாவிகளாகிய மனிதர்கள் மேல் கர்த்தர் பரிசுத்தமான கோபத்துடன் இருக்கிறார் என்பதை நிராகரிப்பதற்காக அவர்கள் கிருபாதாரபலி என்ற வார்த்தையை சில ஆங்கில வேத மொழிபெயர்ப்புகளில் மாற்றி வேறு வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அவர்கள் Propitiation க்குப் பதிலாக Expiation என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இவர்களில் சி. எச். டொட் (C.H. Dodd) முக்கியமானவர். டொட்டுக்கு கர்த்தர் பெருங்கோபத்துடன் இருக்கிறார் என்ற உண்மை பிடிக்கவில்லை. அதை அவர் ‘பழங்காலக் கருத்து’ என்றும், ‘பழங்காக எண்ணங்களுக்கு ஒத்துப்போவதாக இருக்கிறது’ என்றும் எழுதியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் டொட், ‘இயேசு கிறிஸ்துவின் போதனைகளில் அந்தப்போதனை காணப்படவில்லை’ என்றும் தைரியமாக எழுதியிருக்கிறார்.

Expiation என்ற பதத்தின் பொருளென்ன? Propitiation க்குப் பதிலாக இந்த Expiation ஐ ஏன் பயன்படுத்தக்கூடாது?

Propitiation என்ற வார்த்தை விளக்குகின்ற கருத்துக்களில் பாதியையும் Expiation என்ற வார்த்தை விளக்குவதில்லை.

Expiation என்ற வார்த்தைக்கு ‘கழுவுதல்’ என்பது அடிப்படைப் பொருள். அதாவது, பாவத்தின் காரணமாக உண்டாயிருக்கும் குற்றவுணர்வைக் கழுவுதல் என்பதை இது விளக்குகிறது. பாவ மனிதனில் இருக்கும் குற்றவுணர்வைக் கழுவி அவனைச் சுத்தப்படுத்துவது என்பது மட்டுமே இந்த வார்த்தையளிக்கின்ற அர்த்தம். பாவம் இதன் மூலம் அழிக்கப்பட்டு கர்த்தருக்கும் மனிதனுக்கும் இடையில் நட்புறவு ஏற்படுத்தப்படுவதாக இது விளக்குகிறது. கிருபாதாரபலியில் (Propitiationi) காணப்படும் அடிப்படை அம்சமான, கோபத்தோடு இருக்கும் கர்த்தரின் கோபத்தை சிலுவை மரணத்தால் ஒருவர் நீக்கிவிடுகிறார் என்ற உண்மை இந்த வார்த்தையில் அடியோடு இல்லை. அதனால் Propitiation என்ற வார்த்தைக்குப் பதிலாக Expiation என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது முழுத்தவறு.

கர்த்தர் கோபத்துடன் இருக்கிறார் என்ற உண்மையை மறுதலிப்பதற்காக மட்டுமே இந்த வார்த்தையை எவரும் பயன்படுத்த முடியும். இந்திய வேதாகம சங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள பொதுமொழிபெயர்ப்பு வேதநூலில் ‘கழுவாயாக’ என்ற பதமே கழுவுதல் என்ற அர்த்தத்தில் 1 யோவான் 4:10ல் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த மொழிபெயர்ப்பில் 1 யோவான் 2:2லும் ‘கழுவாய்’ என்ற வார்த்தையே Propitiation க்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

கிருபாதாரபலி (Propitiation) பற்றி பேராசிரியர் ஜோன் மரே இவ்வாறு விளக்குகிறார், ‘கிருபாதாரபலி என்பது இதுதான் – கர்த்தர் தன்னுடைய கோபத்தின் கீழ் வந்திருப்பவர்கள் மீது அளப்பரிய அன்புகாட்டியதால் தன்னுடைய ஒரே குமாரனுடைய இரத்தப்பலியின் மூலம் அவர்கள் மீது இருக்கும் தன்னுடைய கோபம் அகலுவதற்கு வழியேற்படுத்தியிருக்கிறார். தன்னுடைய கோபத்தை நீக்குவது இந்தளவுக்கு கிறிஸ்துவின் பணியாக இருக்கிறது; அதன்மூலம், தான் ‘அன்பு காட்டுகிறவர்கள்’ தன்னுடைய கோபத்துக்கு இலக்கானவர்களாக இல்லாமல்போவதோடு, ‘கோபாக்கினையின் பிள்ளைகள்’ கர்த்தரின் அன்புக்குப் பாத்திரமான பிள்ளைகளாக மாற்றப்படும் இலக்கையும் அன்பு நிறைவேற்றும்.’ (John Murray, The Atonement, pg 15.)

பேராசிரியர் ஜோன் மரேயின் வார்த்தைகளை மறுபடியும் ஒருமுறை நன்றாகக் கவனியுங்கள். கர்த்தரின் அன்பைக் கிருபாதாரபலியோடு ஒத்துப்போகவைப்பதற்காக ஜோன் மரே கர்த்தரின் கோபத்தைக் கிருபாதாரபலியில் இருந்து அகற்றிவிட முயலவில்லை. கர்த்தரின் பெருங்கோபத்துக்காளாகியிருக்கும் பாவிகளை அதிலிருந்து விடுவிப்பதற்காகத்தான் அவர் தன்னுடைய அளப்பரிய அன்பின் காரணமாக தன்னுடைய ஒரே குமாரனை அவர்களை இரட்சிப்பதற்காக அனுப்பிவைத்தார். அவருடைய அன்பே பாவிகள்மீது தனக்கிருக்கும் கோபத்தை நீதியாக நீக்கிக்கொள்ளும் வழிமுறையை இயேசு மூலம் ஏற்படுத்த வழிகோலியது. அவருக்கு அந்த அன்பில்லாமலிருந்திருந்தால் பாவிகள் மீதான அவருடைய கோபம் தொடர்ந்திருந்திருக்கும். இங்கே தேவ அன்புக்கும் தேவகோபத்துக்கும் இடையே இருக்கும் தொடர்பைப் புரிந்துகொள்ளுவது அவசியம்; ஒன்றில்லாமல் இன்னொன்று இருக்க முடியாது. பாவிகளின் மீது கர்த்தருக்கு இருக்கும் தேவகோபம் அவருக்கு தன்னுடைய மக்கள் மீதிருக்கும் அன்புக்கு முரண்பாடானதாக இருக்கவில்லை. அன்பே உருவாக இருக்கும் கர்த்தரில் கோபமிருக்க முடியாது என்று நினைக்கிறவர்களுக்கு வேத சத்தியம் புரியவில்லை. Propitiation (கிருபாதாரபலி) என்ற வார்த்தையில் காணப்படும் அடிப்படை அம்சமான பாவிகள் மீதிருக்கும் கர்த்தரின் கோபத்தை நீக்க வழியில்லை.

2. தமிழ் மொழிபெயர்ப்பான ‘கிருபாதாரபலி’

Propitiation என்ற ஆங்கிலப் பதத்திற்கு தமிழில் ‘கிருபாதாரபலி’ என்ற வார்த்தை நாம் இன்று பொதுவாகப் பயன்படுத்தி வருகின்ற தமிழ்வேத நூலில் காணப்படுகின்றது. இதைப்பற்றி நான் கொஞ்சக்காலமாகவே சிந்தித்து வந்திருக்கிறேன். எந்த அடிப்படையில் இந்த வார்த்தை பொருத்தமானது என்று தெரிந்து தமிழ் மொழிபெயர்ப்பில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதற்கான குறிப்புகளை என்னால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. கிருபாதாரபலி என்ற வார்த்தையைப் பிரித்துப் பார்த்தால், ‘கிருபையை ஆதாரமாகக் கொண்ட பலி’ என்ற கருத்து வரும். அதாவது, கிறிஸ்துவின் சிலுவைப்பலி கிருபையை ஆதாரமாகக் கொண்டதாக அமைந்திருக்கிறது என்பதே இதன் கருத்து. வேறு கருத்து வரும்விதத்தில் இதைப் பதம் பிரித்துப் பார்க்க வழியில்லை. இதுதான் இந்த வார்த்தைக்குப் பொருளாக இருந்தால் இந்த மொழிபெயர்ப்பு Propitiation (Hilasmos) என்ற வார்த்தையில் காணப்படும் அடிப்படை உண்மைகளை விளக்குவதாக இல்லை. என்னைப் பொறுத்தவரையில் இதுவரை நாம் பயன்படுத்தி வந்திருக்கின்ற கிருபாதாரபலி என்ற பதம் Propitiation னுக்கான சரியான மொழிபெயர்ப்பாக இல்லை.

வேத மொழிபெயர்ப்பில் எந்த வார்த்தைகளும் வேதம் எழுதப்பட்டுள்ள மூலமொழியில் பொதிந்து காணப்படும் அடிப்படை அர்த்தத்தை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு ஒரு வார்த்தையை மொழிமாற்றம் செய்கிறபோது அது இலகுவான ஒரு காரியம் அல்ல. இருந்தபோதும் கர்த்தரின் தூய வேதத்தை மொழிபெயர்க்கின்றபோது அதிலுள்ள வார்த்தைகளின் இறையியல் அர்த்தங்கள் காணாமல் போய்விடுகிற மாதிரி மொழிமாற்றம் செய்யப்படும் வார்த்தைகள் அமைந்துவிடக்கூடாது. வேதத்தில் Propitiation மிக முக்கியமான அவசியமான வார்த்தை. இயேசு கிறிஸ்துவின் சிலுவைத் தியாகத்தின் அரும்பெரும் இறையியல் உண்மைகளை வெளிப்படுத்துகின்ற பல வேதவார்த்தைகளில் (பரிகாரபலி, ஒப்புரவாக்குதல் போன்றவை) இதுவும் ஒன்று. ஒவ்வொரு வார்த்தையும் சிலுவைப்பலியின் விசேஷ அம்சங்களை விளக்குகின்றன. ஒவ்வொன்றும் அந்த அம்சங்களின் ஏதாவது ஒன்றை சிறப்பாக வலியுறுத்தும். உதாரணத்திற்கு ‘பரிகாரபலி’ (Atonement) கிறிஸ்துவின் சிலுவைத் தியாகத்திற்கு முக்கியத்துவம் தருகிறது; பாவத்திற்காக பலிகொடுக்கப்பட்டதை வலியுறுத்துகிறது. இன்னொரு பதமான ‘ஒப்புரவாக்குதல்’ பாவிகளிடம் இருந்து கர்த்தர் பிரிந்திருக்கிறார் என்பதை முக்கியமாக உணர்த்தி அதற்கான நிவாரணத்தைச் சுட்டிக்காட்டுகிறது. அதேபோல் Propitiation கர்த்தர் பாவிகள் மேல் கோபத்தோடு இருக்கிறார் என்பதை வலியுறுத்தி அதற்கான நிவாரணத்தைச் சுட்டுகிறது. அந்த அவசியத்தின் அடிப்படையிலேயே Propitiation என்று ஆங்கிலத்தில் அது கவனத்தோடு பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. அது எந்த அர்த்தத்தில் மூலமொழியில் அமைந்திருந்ததோ அதே அர்த்தத்தைக் கொண்டதாக தமிழில் நிச்சயம் அமைய வேண்டும்.

Propitiation என்ற வார்த்தையில் அடங்கியிருக்கும், அந்த வார்த்தையின் அடித்தளமான இறையியல் அம்சம், பாவிகள் மீது கர்த்தருக்கு இருக்கும் கோபமாகும். ஏனெனில், அந்தக் கோபத்தை நிவர்த்தி செய்வதற்கான பலியைப் பற்றியே அந்த வார்த்தை விளக்குகிறது. ஆகவே, கர்த்தரின் கோபத்தை வெளிப்படுத்துகிறவிதத்தில் அதன் தமிழ்மொழிபெயர்ப்பு அமைய வேண்டியது அவசியம். இதற்கான வார்த்தைகளை நான் சிந்தித்துப் பார்த்தபோது ‘கோபநிவாரணபலி’ என்ற வார்த்தை, Propitiation என்ற வார்த்தையில் காணப்படும் அடிப்படை உண்மைகளை வெளிப்படுத்துவதாக கருதுகிறேன். இதை இங்கு விளக்குவது அவசியமாகிறது.

கோபநிவாரணபலி என்ற வார்த்தையை எடுத்துக்கொண்டால் அதில் மூன்று முக்கிய அம்சங்களைக் காணலாம்:

  1. அடிப்படை அம்சமான கர்த்தரின் கோபம் அதில் வெளிப்படையாக சொல்லப்படுகிறது (கோபம்).
  2. அந்தக் கோபம் நிவர்த்தி செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை அது சுட்டிக்காட்டுகிறது (நிவாரணம்).
  3. அந்த நிவர்த்திக்காகப் பலிகொடுக்கப்பட வேண்டியதையும் அந்த வார்த்தை சுட்டுகிறது (பலி).

இந்த மூன்று அம்சங்களும் Propitiation என்ற வார்த்தையின் முக்கிய அம்சங்கள். இவற்றை வெளிப்படுத்துவதாக ‘கோபநிவாரணபலி’ என்ற வார்த்தை இருப்பதாக நான் காண்கிறேன். இந்த அம்சங்கள் கிருபாதாரபலி என்ற வார்த்தையில் காணப்படவில்லை. அந்த வார்த்தையை உருவாக்கியவர்கள் அதை அமைத்தபோது எந்த சிந்தையோடு அதை அமைத்தார்கள் என்பது தெரியவில்லை. வெறும் வார்த்தை என்ற அடிப்படையில் அது நல்ல வார்த்தையாகவும் கிருபையின் மேன்மையை சுட்டிக்காட்டுவதாகவும் இருந்தபோதும் Propitiation என்ற வார்த்தைக்கு பொருத்தமான மொழிபெயர்ப்பாக இல்லாததுதான் அதன் குறை.

இதையெல்லாம் வாசிக்கின்ற சிலர், என்னடா வேதத்தில் இந்தளவுக்கு குறை இருக்கின்றதா? என்று கேட்கலாம். ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆரம்பத்தில் கர்த்தர் எபிரெய, கிரேக்க மொழிகளில் நமக்குக் கொடுத்த வேதத்தின் மூலத்தில் எந்தத் தவறுக்கும் தப்புக்கும் இடமில்லை. ஆனால், அதனுடைய மொழிபெயர்ப்புகளில் எப்போதுமே பூரணத்துவத்தைக் காணமுடியாது. அதனால்தான் பல மொழிபெயர்ப்புகள் உள்ள ஆங்கிலத்திலும்கூட நல்ல மொழிபெயர்ப்புகளை நாம் நாடிப் போகிறோம். தமிழில் நமக்கு உதவும்படித் தொகையான மொழிபெயர்ப்புகள் இல்லை. எல்லோரும் பொதுவாக விரும்பிப் பயன்படுத்துகிற ஒரே மொழிபெயர்ப்பு மட்டுமே பயன்படுத்தக்கூடியதாக இருக்கின்றது. அதில் குறைகள் இல்லாமலில்லை. அதைத் தவிர்த்த ஒருசில மொழிபெயர்ப்புகளிருந்தாலும் அவை நம்பக்கூடியவிதத்தில் மொழிபெயர்க்கப்பட்டதாக இருக்கவில்லை. போதகப்பணியிலும், பிரசங்க ஊழியத்திலும் ஈடுபடுகிறவர்கள் ஏனைய மொழிகளில் வேதத்தை ஆராய்ந்து படித்து தமிழில் ஆத்துமாக்கள் பயனடையும் விதத்தில் மெய்ப்போதனைகளை வழங்க வேண்டிய கடமையைக் கொண்டிருக்கிறார்கள்.

3. வேதம் போதிக்கின்ற தேவகோபம்

மனிதனுடைய கீழ்ப்படியாமையாலும், அதனால் விளைந்த பாவத்தாலும் பரிசுத்தமான கர்த்தர் மனிதன்மேல் கோபத்தோடிருக்கிறார் என்ற உண்மை நிராகரிக்க முடியாதபடி கோபநிவாரணபலியாகிய (Propitiation) பதத்தில் உள்ளடங்கியிருக்கிறது என்று பார்த்தோம். தேவன் மனிதன் மேல் கோபத்தோடிருக்கிறார் என்று வேதம் போதிக்கிறதா என்பதை இனி நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

பழைய ஏற்பாட்டு நூலில் தேவகோபத்தை சுட்டிக்காட்டும்படியாக இருபதுக்கும் மேலான பதங்கள் காணப்படுகின்றன என்று இறையியலறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த வார்த்தைகள் 580 தடவைகளுக்கு மேலாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. தேவகோபத்தை நிரூபிப்பதற்கு இது மட்டுமே போதும். இருந்தபோதும் புதிய ஏற்பாட்டிலும் இந்தப் போதனை வெளிப்படையாகக் காணப்படுவதை நாம் கவனிக்க வேண்டும். புதிய ஏற்பாட்டில் சில பகுதிகளை இதற்கு உதாரணங்காட்ட விரும்புகிறேன்.

யோவான் 3:36 – குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்.

மாற்கு 9:43-44 – 43உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்துப் போடு; நீ இரண்டு கையுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே போவதைப்பார்க்கிலும், ஊனனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். 44அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும்.

மத்தேயு 25:30 – பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றான்.

மத்தேயு 25:41 – அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்.

மத்தேயு 25:46 – அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்.

அப்போஸ்தலர் 17:31 – மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான்.

அதுமட்டுமல்லாமல் பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தில் தேவகோபத்தைப் பற்றி பத்துத்தடவைகள் பவுல் குறிப்பிட்டிருக்கிறார்.

ரோமர் 1:18 – சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கி வைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

வேதத்தில் கடைசி நூலான வெளிப்படுத்தின விசேஷத்தில் ஆரம்பம் முதல் கடைசிவரை ‘ஆட்டுக்குட்டியின் கோபம்’ பற்றி திரும்பத் திரும்ப விளக்கப்பட்டிருப்பதைக் காணலாம். திறந்த மனத்தோடு வேதத்தை ஆரம்ப முதல் கடைசி வரை ஆராய்ந்து வாசித்துப் பார்த்தால் பரிசுத்தமுள்ள கர்த்தர் பாவத்திற்கு எதிரானவராக மனிதர்கள் மேல் கோபத்துடன் இருக்கிறார் என்பதையும், தேவகோபம் மனிதர்கள் மேல் இருக்கிறது என்பதையும் எத்தனையோ பகுதிகளில் விளக்கப்பட்டிருப்பதைக் காணமுடியும்.

தேவகோபம் என்றால் என்ன?

எல்லாப் பாவங்களுக்கும், கேடுகளுக்கும் எதிரானதாக பரிசுத்தமான கர்த்தரில் காணப்படும் நிரந்தரமான குணாதிசயமே தேவகோபமாகும். கர்த்தர் ஒளியானவராக இருந்து அவரில் எந்தவிதமான இருளும் காணப்படாமலிருப்பதால் சகலவிதமான பாவங்களுக்கும், கேடுகளுக்கும் அவர் எதிரானவராக இருக்கிறார். அவரது பரிசுத்த தன்மை சகலவித பாவங்களையும் வெறுக்கிறது. அவருடைய பரிசுத்தமே இந்தவகையில் கேட்டை வெறுத்து அதற்கு எதிரானதாக இருக்கின்றது.

 

Propitiationi

இந்த இடத்தில் நாம் இன்னுமொரு உண்மையைப் புரிந்துகொள்ளுவது அவசியம். இது பாவத்தைக் குறித்த உண்மை. பாவத்தை நாம் ஏதோவொரு பொருளைப்போல எண்ணிவிடக்கூடாது. பாவம் ஒரு பொருளல்ல. பாவம் மனிதர்களில் பிரிக்க முடியாதபடி காணப்படுகின்ற தன்மை. பாவம் தனியாக நிற்கும் பொருளல்ல. அது மனிதர்களில், மனிதர்களுக்குள் காணப்படுக்கின்ற தன்மை. கர்த்தருக்கும் மனிதனுக்கும் இடையில் இருந்த உறவு அறுந்துபோயிருப்பதற்குக் காரணம் அந்தப் பாவமே. பாவத்தினால் மனிதன் இன்று பாவியாக இருக்கிறான்; பாவத்தைச் செய்கிறான். மனிதனுடைய இருதயம் பாவத்தில் இருக்கிறது; முழுமையாக பாவத்தால் பாதிக்கப்பட்டு நீதியற்று இருக்கின்றது. எந்த மனிதனிலும் இருந்து நாம் பாவத்தைப் பிரிக்க முடியாது. அதனால் கர்த்தர் மனிதனைப் பார்க்கின்றபோது பாவியாகத்தான் பார்க்கிறார். பாவியாகத்தான் அவனை அவர் நடத்த வேண்டும்; நடத்துகிறார். பாவத்தில் இருக்கின்ற மனிதனை அவரால் வேறுவிதத்தில் பார்க்க முடியாது. இதன் காரணமாக வேதமெங்கும் நாம் கர்த்தர் பாவத்தை விரோதிக்கிறார் என்றும், பாவியையும் விரோதிக்கிறார் என்றும் வாசிக்கிறோம். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் – நரகத்தில் துன்பப்படுவது பாவமல்ல; மனந்திரும்ப மறுத்து அங்கு போயிருக்கும் பாவியாகிய மனிதனே. பாவத்தில் தொடர்ந்திருக்கும் மனிதர்களே நரகத்தில் துன்பப்படுகிறார்கள். பாவத்திற்கும் மனிதனுக்கும் இடையில் இருக்கும் இந்தப் பிரிக்கமுடியாத ஆழமான தொடர்பை நாம் புரிந்துகொள்ளுவது அவசியம்.

கோபநிவாரணபலி (Propitiation) என்ற வார்த்தையை அகற்றிவிட்டு ‘கழுவுதல்’ (Expiation) என்ற வார்த்தையைப் பயன்படுத்த ஆரம்பித்தவர்கள், பாவத்தைக் கழுவுதலாகிய காரியத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தார்களே தவிர பாவத்தின் காரணமாக பாவிகளின் மீதிருக்கும் தேவகோபத்தைத் தவிர்த்துவிட்டார்கள். கர்த்தருக்கும் பாவியாகிய மனிதனுக்கும் இடையில் ஒப்புரவு ஏற்பட வேண்டுமானால் மனிதர்மேல் கோபத்துடன் இருக்கும் கர்த்தரின் கோபம் தீரும்படியான தீர்வு நிறைவேற்றப்பட வேண்டும்.

கோபநிவாரணபலி கர்த்தர் மனிதனின் பாவத்தின் காரணமாக கோபமடைந்திருக்கிறார் என்பதை விளக்குகிறது. அதுமட்டுமல்லாமல் அந்தக் கர்த்தரே மனிதனின் மீதிருக்கும் தனது கோபத்தை விலக்கிக்கொள்ளவும், மனிதனின் பாவத்துக்கும் பரிகாரம் ஏற்படவும் வழிசெய்திருக்கிறார் என்றும் விளக்குகிறது. பாவத்திற்கும், பாவிகளுக்கும் எதிரான அவருடைய கோபம் நீதியான பலியினால் தீர்க்கப்பட்டு மனிதன் அவரோடு ஒப்புரவாக அவரே ஒரு தீர்வை ஏற்படுத்தியிருக்கிறார். சர்வவல்லவரான கர்த்தர் மட்டுமே அத்தகைய தீர்வை ஏற்படுத்த முடியும். இது கோபநிவாரணபலியில் மட்டுமல்ல, ஒப்புரவாகுதலிலும் பொதிந்து காணப்படும் அடிப்படை உண்மை. கர்த்தரின் கோபத்தால் மனிதன் அவரைவிட்டுப் பிரிந்திருப்பது உண்மைதான். ஆனால், கர்த்தர் மனிதனின் பாவத்தால் கோபப்பட்டு அவனை விட்டுப் பிரிந்திருப்பதாலேயே மனிதன் அவரைவிட்டு தூரத்தில் இருக்கிறான் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். ஆகையால், கர்த்தரே ஒரு தீர்வை ஏற்படுத்தினாலொழிய இந்தப் பிரிவு நீங்கி ஒப்புரவாகுதல் ஏற்பட வழியில்லை. கர்த்தர் தன்னுடைய மக்கள் மீதிருக்கும் அளப்பரிய அன்பின் காரணமாக, அவர்களுடைய பாவத்தைப் போக்குவதற்காகத் தானே முன்வந்து தன்னுடைய ஒரே குமாரனைப் பலியாகத் தன்னுடைய கோபத்தைத் தாங்கி சிலுவையில் மரிக்கும்படிச் செய்தார்.

ரோமர் 5:8-9 – 8நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப் பண்ணுகிறார். 9இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.

ரோமர் 3:23-26 – 23எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, 24இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்; 25தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக் கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிக்கும் பொருட்டாகவும், 26கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதாரபலியாக அவரையே ஏற்படுத்தினார்.

இதுவரை கோபநிவாரணபலி (Propitiation) பற்றிப் பார்த்துவந்திருக்கிறோம். இனி வரப்போகிற இதழில் இதன் விளக்கத்தைத் தொடர்ந்துப் பார்ப்போம்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s