அநேக வருடங்களுக்கு முன் நான் வைத்திருந்த முதல் காரை எண்ணிப் பார்க்கிறேன். பழைய காராக இருந்தபோதும் என் தேவையை அப்போதைக்கு அது நிறைவேற்றியது. எல்லாப் பழங்கார்களுமே இருந்திருந்து பிரச்சனை தரும். ஒரு முறை என் கார் எஞ்சினில் பிரச்சனை ஏற்பட அதைக் கவனித்த நண்பனொருவன் தானே அதை சரி செய்ய முன்வந்தான். நானும் நம்பிக் காரை அவன் கையில் ஒப்படைத்தேன். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு கார் எந்த நிலையில் இருக்கிறது என்று பார்ப்பதற்காக வெளியில் வந்தபோது நான் அதிர்ந்து போனேன். முழு எஞ்சினுமே அக்குவேறு ஆணிவேறாகக் கழட்டி நிலத்தில் பரப்பி வைக்கப்பட்டிருந்தது. என்னடா இது, என்று கேட்டால் சீக்கிரம் முடிந்துவிடும் என்று பதிலளித்தான் நண்பன். அதற்குப் பிறகு நடந்ததைப் பற்றி என்ன சொல்ல. எஞ்சினைப் பீஸ் பீஸாகக் கழட்டத் தெரிந்திருந்த நண்பனுக்கு அதை மறுபடியும் இணைக்கத் தெரியவில்லை. கடைசியில் காரை ஒரு வண்டியில் ஏற்றி சர்வீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைத்தேன்.
இதை எதற்குச் சொல்லுகிறேன் என்றால் ஒரு காரியத்தைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்தால் மட்டுந்தான் அந்தக் காரியம் பற்றிய சகல விஷயங்களையும் நாம் புரிந்துகொள்ளுதலோடு அணுக முடியும்; பிரச்சனை ஏற்பட்டாலும் சரி செய்ய முடியும். அதைப் பற்றிய குறைந்தளவு ஞானம் போதாது. அது பிரச்சனை ஏற்படும்போது சரி செய்ய உதவாது. எந்தவொரு காரியத்தைப் பற்றியும் தேவையான அளவுக்கு ஞானம் இருப்பது அவசியம். பொது அறிவுகூட அதைத்தான் சொல்லும். தெரியாத விஷயத்தில் ஒருவர் தலையிட்டால் அவர் அதை பிரச்சனையுள்ளதாக்கி விடுவார். தெரியாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பதே நல்லது.
எந்தவொரு விஷயத்தையும் பற்றி ஆழமாக அறிந்துகொள்ள வேண்டும். அது தவிர்க்க முடியாத உண்மை. அது மட்டுமே நமக்கு அந்த விஷயத்தில் ஈடுபட கைகொடுக்கும். இன்றைக்கு பெரிய நகரங்களுக்கு வெளியில் இருக்கும் கல்லூரிகளில் எ-ஞ்சினியரிங்கோ, அல்லது கம்பியூட்டர் படிப்போ படித்து சராசரி மார்க்குகளைப் பெற்று வேலை தேடி அலைந்து வேலை கிடைக்காமல் பலரிருப்பதற்குக் காரணமென்ன? அந்தப் படிப்பு பற்றிய ஆழமான அறிவையும், நடைமுறைக்குத் தகுந்த பயிற்சியையும், அதிக மார்க்கையும் பெற்றிராததால்தான். சராசரி அறிவு எதையும் சராசரியாக முடிக்க மட்டுமே உதவும். முழுமையாக ஒரு காரியத்தை முடித்து வைக்க உதவாது. சராசரி அறிவுக்கும், வேலைக்கும் ஊதியம் கொடுக்க எந்தக் கம்பேனி முன்வரும்?
இதையெல்லாம் எதற்குச் சொல்லுகிறேன் என்றால், முழுமையான வேத இறையியலறிவைப் பெற்றுக்கொள்ளுவதின் அவசியத்தை வலியுறுத்தத்தான். அதாவது, வேதம் தரும் போதனைகளை முழுமையாகப் புரிந்துகொள்ள அவசியமான நடைமுறைப் பயிற்சியைப் பயன்படுத்தி வேத சத்தியங்கள் பற்றிய சரியான முடிவுக்கு வந்து அந்த அடிப்படையில் ஒவ்வொரு வேதப்பகுதிக்கும் சரியான விளக்கமளிப்பதையும், போதிப்பதையும் பற்றித்தான் இங்கே சொல்லிக் கொண்டிருக்கிறேன். இது வேதத்தைப் போதிக்கின்ற பணியைக் கொண்டிருக்கின்ற போதகர்களுக்கு மிகவும் அவசியமானது. கர்த்தரின் வேதம் அவருடைய தெளிவான சித்தத்தை அதிகாரத்தோடு விளக்குகின்றது. அதில் குளறுபடிகளுக்கோ அல்லது முரண்பாடுகளுக்கோ இடமில்லை; இருக்க வழியில்லை. அது கர்த்தரின் முடிவான சித்தம். கர்த்தரின் விசுவாசமுள்ள சேவகனாக இருந்து கர்த்தரின் சித்தத்தை உள்ளது உள்ளபடி தவறுகளெதுவுமில்லாமல் அப்படியே ஆத்துமாக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டிய பெருங்கடமை போதகர்களுடையது. அதில் தவறிழைப்பது கர்த்தரின் பேச்சை மாற்றிச் சொல்லுவதற்கு சமமாகும்; பொய் சொல்லுவதில் போய் முடியும். வேத அறிவு இல்லாமலிருந்து அதைச் செய்தாலும் சொல்லுவதெல்லாம் பொய்யாகத்தான் இருக்கும். அதை எவரும் மறுக்க முடியாது. அவருடைய தெளிவான வார்த்தையை வேறுவிதமாக அர்த்தமளித்து சொல்லுவதைக் கர்த்தர் ஏற்றுக்கொள்ளுவாரா? என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். அவர் நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்பதைத்தான் வேதம் விளக்குகிறது.
கர்த்தரின் வேதத்தை உள்ளது உள்ளபடி பிரசங்கிக்கவும், போதிக்கவும் வேண்டுமானால் வேத இறையியல் அறிந்திருக்காமல் முடியாது. வேத இறையியல் என்பது பொதுவான வார்த்தைகள். இதற்குள் நான் வேதத்தை அறிந்துகொள்ள அவசியமான அத்தனைப் பாடங்களையும் உள்ளடக்கியே பயன்படுத்துகிறேன். அதாவது, பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு பற்றிய பொதுவான அறிவு, ஒவ்வொரு வேத நூல்களையும் பற்றிய விபரமான அறிவு, வேதப்பகுதிகளைத் தெளிவாகப் புரிந்துகொள்ளப் பயன்படுத்த வேண்டிய விளக்கப் பயிற்சி முறைகள், வரையறுக்கப்பட்ட இறையியல் அறிவு (வேத சத்தியங்கள் ஒவ்வொன்றையும் பற்றிய முழுமையான தெளிவான அறிவு), மூல மொழிகளில் அறிவு, ஆங்கில வேதத்தைப் பயன்படுத்த அவசியமான ஆங்கில அறிவு, தமிழறிவு போன்ற இத்தனையும் தேவை.
வேதத்தை நம்முடைய மொழியில் உழைப்போடு அடிக்கடியும், வருடந்தோரும் வாசித்து வந்தால் அதிலிருந்து பொதுவான போதனைகளை நாம் தடைகளின்றிப் பெற்றுக்கொள்ள முடியும். கடவுள், சுவிசேஷம், இரட்சிப்பு, பரிசுத்த வாழ்க்கை போன்ற அடிப்படைப் போதனைகளை சாதாரணமாகவே எவரும் அடிக்கடி உழைத்து வேதத்தை வாசித்து அறிந்துகொள்ள முடியும். இதையெல்லாம் விளங்கிக்கொள்ளக்கூடிய வகையிலேயே கர்த்தர் பரிசுத்த ஆவியின் மூலம் வேதத்தைத் தந்திருக்கிறார். சபைப் போதகப் பணியிலிருப்பவர்களுக்கு இதற்கு மேலான வேதஅறிவு தேவைப்படுகிறது. வருடந்தோறும் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் ஆத்துமாக்களுக்கு முழு வேதத்தையும் அவர்களுடைய ஆத்தும தேவைகளுக்கேற்ப பங்கு பங்காகத் தெளிவாகக் கருத்து மாறிவிடாமல் போதனைகளையும், நடைமுறைப் பயன்பாடுகளையும் கொடுத்துப் போதிக்க வேண்டுமானால் அதற்குத் தேவையான வேத இறையியலறிவைப் பெற்றுக்கொண்டிருந்தால் மட்டுமே முடியும்.
படித்தவர்கள் கூடிய சபைகளில் போதகர்களாக இருப்பவர்களுக்கே இந்தளவுக்கு இறையியல் அறிவு தேவை என்று நினைத்துவிடக் கூடாது. படித்தவர்களாக இருந்தாலும், படிக்காத கிராமத்தவர்களாக இருந்தாலும் அனைவருக்கும் வேதத்தை சொல்லிக்கொடுத்து வரும் போதகர்களுக்கு இதுவரை நான் விளக்கியிருக்கும் வேத இறையியல் போதனைகள் நிச்சயம் அவசியம். இந்த இறையியல் போதனைகளைப் பெற்றுக்கொண்டிருந்தால் மட்டுமே வேதப் பகுதிகளில் தெளிவான அறிவிருந்து அவற்றை இலகுவான முறையில் படித்தவர்களுக்கும், படிக்காதவர்களுக்கும் ஏற்ற முறையில் விளங்க வைக்க முடியும். போதகர்களுக்கு இறையியல் அறிவு அவசியம் என்பதை எவரும் நிராகரிக்க முடியாது.
இறையியல் அறிவு தேவை இல்லை, வேதம் மட்டுமே தேவை என்று சிந்திக்காமல் சிலர் பேசுவார்கள். இறையியல் அறிவை அவர்கள் ஏட்டுப்படிப்பாக மட்டும் தவறாக எண்ணிக் கொள்ளுவதால் இப்படிப் பேசுவார்கள். வேத அறிவையே நான் இறையியல் அறிவு என்று குறிப்பிடுகிறேன்; வெறும் ஏட்டுப் படிப்பையல்ல. வேத இறையியல் அறிவு இல்லாமல் எவரும் போதகனாக இருக்க முடியாது. டாக்டருக்குப் படிக்காமல் டாக்டராக பணிபுரிய முடியுமா? கம்பியூட்டர் கல்வி கற்காமல் கம்பியூட்டர் கன்சல்டன்ட்டாக இருக்க முடியுமா? எண்ணிப் பாருங்கள். அதுபோலத்தான் வேத இறையியல் அறிவு இல்லாமல் வேதபோதகனாக இருக்க வழியில்லை.
இறையியல் கல்லூரிகள்
இத்தகைய இறையியலறிவை எங்கிருந்து பெற்றுக்கொள்ளுவது என்று சிந்திக்கும்போதுதான் பிரச்சனை ஏற்படுகின்றது. பொதுவாகவே இறையியல் கல்லூரிகள்தான் நம்நினைவுக்கு வரும். அதில் தவறில்லை. இருந்தாலும் சத்தியத்தை சத்தியமாகப் போதிக்கும் இறையியல் கல்லூரிகள் இன்று நம்மினத்தில் விரல்விட்டு எண்ணக்கூடியளவுக்குக்கூட இல்லை என்பதுதான் உண்மை. இதை மறுக்க முடியாது. இன்றைய இறையியல் கல்லூரிகளில் பல இறைநிந்தனை செய்யும் கல்லூரிகளாகவும், பணத்துக்காக நடப்பவையாகவும், சிலருடைய ஈகோவைத் திருப்திப்படுத்த நடந்துவருகின்றவையாகவும் இருக்கின்றன. முக்கியமாக, தெளிவாக சத்தியத்தை விளக்காமல் முரண்பாடான போதனைகளை அளித்து வேத அதிகாரத்தைக் குறைவுபடுத்துபவையாக இருப்பதே இவற்றின் அடிப்படைக் கோளாறு. சகல டினோமிநேஷன்களையும் திருப்திப்படுத்தி எவருடைய மனதையும் நோகடிக்காமல் போதனைகள் இருந்துவிட வேண்டும் என்ற எண்ணமும் இக்கல்லூரிகளில் இருப்பதால் எது சத்தியம்? என்பதை ஆணித்தரமாக இவற்றின் மூலம் அறிந்துகொள்ளுவற்கு சந்தர்ப்பமே இல்லை. இத்தனை காரணங்களையும் பார்க்கின்றபோது இன்றைய இறையியல் கல்லூரிகளுக்குப் போய் நேரத்தையும், பணத்தையும் விரயமாக்கி, ஆத்துமாவுக்கும் ஆபத்தைத் தேடிக்கொள்ளுவது அவசியமா? என்று எவராலும் சிந்திக்காமல் இருக்க முடியாது. எதுபோனாலும் பரவாயில்லை, எப்படியாவது ஒரு டிகிரி அல்லது டிப்ளோமாவாவது வாங்கிவிட வேண்டும் என்று துடிப்பவர்களுக்கு மட்டுமே இக்கல்லூரிகள் உதவ முடியும்.
வேதத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு போதனையளிக்கும் கல்லூரிகள்
இறையியல் போதனைகள் அனைத்தும் எப்போதும் வேதத்தில் இருந்து மட்டுமே பெறப்பட வேண்டும். அதுவும் வேதத்தைக் கர்த்தருடைய வார்த்தையாக முழுமையாக விசுவாசித்து அதன் அதிகாரத்துக்கும் (Authority), போதுமான தன்மைக்கும் (Sufficiency) எந்தப் பங்கமும் வராதபடி போதனைகள் இருக்க வேண்டும். வேதத்திற்கு முரணாக சிந்திக்கவோ, பேசவோ, போதிக்கவோ கூடாது. 2 தீமோ 3:16-17ல் பவுல் சொல்லுகிறார், ‘வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனிதன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக (That the man of God may be complete, thoroughly equipped for every good work. – NKJV) அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது’ என்று. இதன் அர்த்தம் என்ன தெரியுமா? ஒரு மனிதன் தேவனுடைய மனிதனாக பணிபுரிவதற்கு அவசியமான அத்தனையும் கர்த்தருடைய வேதத்திலே இருக்கின்றது என்பதுதான். தேவமனிதனாக அவன் தேறும்படிச் செய்வதற்கு அது அடிப்படைக் கருவியாக இருக்கிறது. ஒரு நதிக்கு அது உருவாகிப் புறப்படும் ஊற்று எத்தனை அவசியமானதோ அந்தளவுக்கு வேதம் ஒரு மனிதன் போதகனாக உருவாக அவசியமானதாக இருக்கிறது. இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே எந்த இறையியல் போதனையையும் அணுக வேண்டும். இத்தகைய அழுத்தமான, ஆழமான, உறுதியான, விடாப்பிடியான நம்பிக்கையை வேதத்தில் வைத்திராத கல்லூரிகளில் இருந்து கடவுளைப் பற்றி எதைக் கற்றுக்கொள்ள முடியும்?
உண்மையில் நம்மினத்தில் வேத அதிகாரம் என்பது என்ன? என்ற விஷயத்திலேயே தெளிவான புரிந்துகொள்ளுதல் இல்லாமலிருக்கிறது. இந்த ஆக்கத்தில் அதை விளக்கப் போதுமான இடமில்லை. 1689 விசுவாச அறிக்கையின் முதலாம் அதிகாரம் இதைத் தெளிவாக விளக்குகிறது. அதைப் பல தடவைகள் வாசித்துப் பாருங்கள். நாம் வெளியிட்டிருக்கும் ‘கர்த்தருடைய வேதம்’ என்ற நூலிலும் இதைப்பற்றி வாசிக்கலாம். இந்த அடிப்படையில் வேதத்திற்கு மதிப்புக்கொடுத்து இயங்காத இடங்களுக்கு எவரும் ஊழியப் பயிற்சிக்குப் போவதால் எந்த நன்மையுமில்லை; சுயநல நோக்கமுள்ளவர்கள் மட்டுமே அத்தகைய இடங்களை நாடிப்போவார்கள். இந்தவிதத்தில் வேத அதிகாரத்திற்கு மதிப்புக்கொடுத்து கர்த்தருக்குப் பயந்து போதனையளிக்கும் கல்லூரிகளை நம்மினத்தில் காண்பது அரிது.
விசுவாச அறிக்கை, வினாவிடைப் போதனைகளை விசுவாசிக்கும் கல்லூரிகள்
நம்முடைய ஆத்மீகப் பாதுகாப்புக்கும், நம் சபைப் பாதுகாப்புக்கும் தேவையான இறையியல் போதனைகள் எந்த அடிப்படையில் இருக்க வேண்டும்? வரலாறு நமக்குத் தந்திருக்கும் விசுவாச அறிக்கைகளிலும், வினாவிடைப் போதனை நூல்களிலும் தரப்பட்டிருக்கும் அத்தனை கோட்பாடுகளுக்கும் எந்தவிதத்திலும் முரண்பாடில்லாத போதனைகளைக் கொண்டிருந்து அந்த விசுவாச அறிக்கைகளையும், வினாவிடை நூல்களையும் உயர்த்திக் காட்டும் விதத்தில் போதனைகளைக் கொண்டிருக்க வேண்டும். என்னைப் பொறுத்தளவில் இது அடிப்படையான விஷயம். ஏனெனில், நாமும் சபைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற பெருநோக்கத்துடனேயே இவை நமக்குக் கர்த்தரால் அளிக்கப்பட்டிருக்கின்றன. அன்றாடம் மாறிக்கொண்டிருக்கும் வாழ்க்கை முறை, கலாச்சாரம், மனித சிந்தனைகள் நம்மை ஆவிக்குரிய விஷயங்களில் வழிநடத்த முடியாது. வேதம் பற்றிய இந்த விஷயத்தில் என்னால் முரண்பட முடியாது. வேதத்தின் மொத்தப் போதனைகளையும் சுருக்கமாக விளக்கியிருக்கும் வரலாறு நமக்களித்திருக்கும் விசுவாச அறிக்கைகளும், வினாவிடைப் போதனைகளும் நம்முடைய விசுவாசத்தைத் தெளிவாக அறிக்கையிடுகின்றன. இந்த அடிப்படையில் நம்மினத்தில் போதனைகளைத் தரும் கல்லூரிகள் இல்லையென்றுதான் கூறவேண்டும். இந்த விசுவாச அறிக்கைகளின் போதனைகளை விசுவாசித்து அவற்றின் அடிப்படையில் அனைத்துப் போதனைகளையும் அளிக்கும் விரிவுரையாளர்களையும் கல்லூரிகள் கொண்டிருக்கவில்லை. இவற்றை ஏற்றுக்கொள்ளுகிறோம் என்று சொல்லுவது மட்டும் போதாது; இவற்றை விசுவாசித்து இவற்றிற்கு முரண்படாமல் இவற்றை உயர்த்திக் காட்டும் வகையில் போதனைகள் இருக்கவேண்டும். சத்தியத்தைப் பொறுத்தவரையில் முரண்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. அப்படி முரண்படுவது நம் ஆத்துமாவுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்; நாம் பணிபுரியும் மக்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும்.
சபைப்போதக அனுபவமுள்ள அனுபவசாலிகளான விரிவுரையாளர்கள்
இது மட்டுமில்லாமல் இறையியல் கல்லூரி விரிவுரையாளர்கள் போதகப் பணியில் அனுபவமுள்ளவர்களாக, சபைக்கு மதிப்புக்கொடுப்பவர்களாக இருக்கவேண்டும். ஓர் உண்மையான ஆத்துமபாரமுள்ள போதகனால்தான் போதக ஊழியத்துக்குப் போகிற ஒருவருக்கு உதவ முடியும். வெறும் ஏட்டுப்படிப்புப் படித்த விரிவுரையாளர்களால் அது முடியாது. வேதசத்தியங்களை வெறும் ஏட்டுப்படிப்பாக மாற்றிவிடக்கூடாது. உலகத்தில் இருக்கும் செக்யூலர் கல்லூரிகளைப்போல இறையியல் போதிக்கப்படும் இடங்கள் இருக்கக் கூடாது. அந்த ஆபத்தைத் தவிர்க்க வேண்டுமானால் இறையியல் கல்லூரி விரிவுரையாளர்கள் நன்கு கற்ற ஆவிக்குரிய மெய்ப்போதகர்களாக இருந்தால் மட்டுமே அது முடியும். இந்தளவுக்கு இந்த விஷயத்தில் நாம் கருத்தோடு சிந்திப்பது அவசியமா? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். ஆம்! நிச்சயம் அவசியந்தான். இதையெல்லாம் சிந்தித்துப் பார்க்காமல் ஏதோவொரு கல்லூரிக்குப் போய் ஆத்துமாவை இழந்துவிட்டு பின்னால் என்ன ஊழியம் செய்யப் போகிறீர்கள்? நம்முடைய ஆத்தும பாதுகாப்புக்கு எந்தவிதத்திலும் இடையூறை ஏற்படுத்திவிடாததாக கல்லூரிகள் இருக்க வேண்டும். நீங்கள் சத்தியம் கற்றுக்கொள்ளப் போகிறவர், தேர்ந்த, அனுபவசாலியான மெய்ப்போதகராக இல்லாவிட்டால் அவரிடம் சபை ஊழியத்தைப் பற்றி எதைக் கற்றுக்கொள்ளப் போகிறீர்கள்? அனுபவசாலியான கார் மெக்கானிக்கிடம் மட்டுந்தான் நாம் காரையே திருத்தக் கொடுக்கிறோம். இது ஆத்மீக விஷயத்திலும் பயன்படுத்த வேண்டிய நடைமுறைதான்.
இறையியல் அறிவை அடையும் வழி
இறையியல் போதனை தேவை என்கிறீர்கள், இன்றைய இறையியல் கல்லூரிகளில் அநேகமானவைகள் பக்கத்தில் போகாதீர்கள் என்கிறீர்கள், அப்படியானால் போதகர்களுக்கு அவசியமான சுத்தமான, கலப்படமில்லாத இறையியல் போதனைகளைப் பெற்றுக்கொள்ள என்ன வழி? என்று நீங்கள் கேட்கப்போகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். உங்களுடைய கேள்விக்கு என்னால் சுலபமாக பதில்கூற முடியாமல் இருக்கின்ற நிலைமையை நான் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். இந்த விஷயத்தில் நமக்குத் துணைபோகக்கூடிய இறையியல் கல்லூரிகள் இல்லை என்பது உண்மையானாலும் இறையியல் கல்வி அவசியமில்லை என்றாகிவிடாது. அதைப் பெற்றுக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி நாம் கவனத்தோடு சிந்திக்காமல் இருக்க முடியாது.
இறையியல் போதனைகள் தெரியாது வேதத்தைப் பயன்படுத்திப் போதிக்கிறோம் என்ற பெயரில் சபை சபையாக இன்றைக்கு அநேக போதகர்கள் ஆத்துமாக்களின் காதுகளுக்கு ‘செழிப்பு உபதேசத்தையும்’, ‘ஆசீர்வாத வசனங்களையும்’, வாக்குத்தத்த வசனங்களையுந்தான் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். விசுவாச வாழ்க்கையில் அநேகர் இரட்சிப்பின் உறுதியும், நிச்சயமும் இல்லாமல் குழம்பிப்போயிருப்பதற்குக் காரணம் சத்தியத்தில் உறுதி இல்லாததுதான். சத்தியத்தில் உறுதி ஏற்பட சத்தியம் தெரிந்திருக்க வேண்டும். அதைக்கொடுக்க வேண்டிய தற்கால போதகர்கள் அது தெரியாமல் ஊழியப்பணி செய்து வருகிறார்கள். ஆத்துமாக்களுக்கு வேதத்தில் தெரிந்திராத போதனைகள் அநேகம். இரட்சிப்பின் மகிமையையும், பரிசுத்த வாழ்க்கையை வாழ வேண்டிய முறைகளையும், கர்த்தரின் ஈடு இணையற்ற குணாதிசயங்களையும், வேதம் போதிக்கும் மறுபிறப்பு, மனமாற்றம், நீதிமானாக்குதல், மகவேட்பு, தெரிந்துகொள்ளுதல், தேவ கோபம், நித்திய ஆக்கினை, இரட்சிப்பின் நிச்சயம், திருச்சபை அமைப்பு, பத்துக்கட்டளைகள், இறுதிக்காலம் பற்றிய தெளிவான சத்தியங்கள் என்று இன்னும் எத்தனையெத்தனையோ அவசியமான போதனைகளையும் அறியாமல் வாழ்ந்து வருகிற ஆத்துமாக்கள் தொகை அதிகம். இவை மட்டுமல்லாமல் பழைய ஏற்பாடே இருண்ட நூலாக பலருக்கும் இருந்து வருகிறது. பழைய ஏற்பாட்டைப் பயன்படுத்தி அதில் காணப்படும் மனிதர்களுடைய வாழ்க்கையைப் பற்றிய குறிப்புகளைக் கொடுக்கும் போதகர்கள் இருக்கிறார்களே தவிர, பழைய ஏற்பாட்டைக் கர்த்தரின் மீட்பின் திட்டத்தின் அடிப்படையில் ஆராய்ந்து, கர்த்தர் இஸ்ரவேலின் மூலம் செய்து வந்திருக்கின்ற பணி பற்றியும் அதன் புதிய ஏற்பாட்டுத் தொடர்ச்சி பற்றியும் போதிக்க அவர்களுக்குத் தெரியாதிருக்கிறது. புதிய ஏற்பாட்டு நூல்களின் பின்னணி தெரியாமல் அவற்றின் பொருளையும் போதனைகளையும் விளங்கிக் கொள்ள முடியாது. அதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் புதிய ஏற்பாட்டு நூல்களில் இருந்து அநேகர் பிரசங்கித்து மனதில்பட்டதைச் சொல்லி வருகிறார்கள். இன்றைய போதகர்களினதும், போதனைகளினதும் நிலைமை இவ்வாறே இருக்கின்றது. கத்தோலிக்க மதத்தால் சத்தியம் ஒரு காலத்தில் மறைக்கப்பட்டு வேதத்தை மக்கள் வாசிக்க முடியாத நிலை இருந்தது. இன்று வேதம் நம்மொழியில் இருந்தபோதும் அது ஆத்துமாக்களின் இதயத்தை அடைய முடியாதபடி சபைப் பிரசங்க மேடைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சத்தியம் தொடர்ந்தும் மறைக்கப்பட்டு வருகிறது. நான் எழுதுவதைக்கூட உணர முடியாதபடி அநேகருடைய இருதயம் சத்தியத்தைவிட்டு வெகுதூரம் விலகி நிற்கின்றது.
போதகன் தேவ மனிதனாக இருக்க வேண்டும்
சத்திய வாஞ்சையோடு வேதம் படிக்க முதலில், போதகர்கள் தேவ மனிதர்களாக இருக்க வேண்டும். பவுல் சபை மூப்பர்களுக்கு (அப்போஸ்தலர் 20:28) கொடுத்த ஆலோசனையில் ‘உங்களைக் குறித்து . . . எச்சரிக்கையாயிருங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். அதாவது, உங்களுடைய இருதயத்தைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள் என்கிறார் பவுல். போதகனின் இருதயம் ஆவிக்குரியதாகவும், சுத்தமானதாகவும் இருக்கவேண்டும். பெருந்தாழ்மையோடு கர்த்தருக்கும், ஆத்துமாக்களுக்கும் பணி செய்கிறதாக இருக்க வேண்டும். அத்தகைய இருதயம் மட்டுமே சத்தியத்தை அறிந்து அதில் தேர்ச்சி பெற அலையும். போதகன் தன்னுடைய ஆத்மீக வாழ்க்கையில் கர்த்தரை மேலும் அறிந்துகொள்ளவும், அவரில் சந்தோஷத்தை அனுபவிக்கவும் அவனுக்கு சத்திய ஆர்வமும், சத்திய அறிவும் தேவை. உண்மையான போதகன் தான் சத்தியத்தை அறியாமல் இருப்பதை உணர்ந்து உருகிக் கண்ணீர் விடுவான். அத்தகைய அறியாமை தன்னையும், ஆத்துமாக்களையும் ஆழமாகப் பாதிக்கும் என்பது அவனுக்கு நிதர்சனமாகத் தெரியும். ஓய்வு நாட்களில் ஆத்துமாக்களின் முன் நின்று அவர்களை ஏமாற்ற அவன் பயப்படுவான். வேதத்தில் இல்லாததைச் சொல்லக் கூச்சப்படுவான்; அஞ்சுவான். தேவ பயம் அவனுடைய இருதயத்தை வாட்டும். தன்னுடைய சத்திய வளர்ச்சிக்காக ஜெபிக்கும்படி அவன் வெட்கப்படாமல் ஆத்துமாக்களைக் கேட்பவனாக இருப்பான். சத்தியத்தை அறிந்து அதில் தேர்ச்சி பெற ஸ்பர்ஜன் சொல்லியிருப்பதுபோல் தன்னுடைய சட்டையை விற்றாவது அவன் நல்ல ஆவிக்குரிய நூல்களை வாங்கி வாசிப்பான். வேதத்தையும், கையில் இருக்கும் நூல்களையும் கவனத்தோடும், கருத்தோடும் வாசிப்பான். சத்தியத்தில் தேர்ச்சி தரும்படிக் கர்த்தரை நோக்கி ஜெபிப்பான். கற்றவைகளை முடிந்தவரை தெளிவாக மனத்தாழ்மையோடு ஆத்துமாக்களுடன் பகிர்ந்துகொள்ளுவான். தவறானதை ஆத்துமாக்களுக்கு கற்றுத்தர பயப்படுவான். தன் நாவு சத்தியத்தை மட்டுமே பேசப் பயன்படுத்தப்பட வேண்டுமென்பதில் உறுதியாக இருப்பான். இதுவே மெய்ப்போதகனில் நாம் பார்க்கக் கூடியது. இந்த அடையாளங்கள் இல்லாதவர்கள் எப்படிப் போதகர்களாக இருக்க முடியும்?
நல்ல வேதஞானம் வழங்கும் கல்லூரிகள் இல்லாத நிலையில் அவசியமான இறையியலறிவை எங்கிருந்து, எப்படிப் பெற்றுக்கொள்ளுவது? என்ற கஷ்டமான கேள்விக்கு பதில் காண்பது அவசியம்தான். இதை அநேகர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். இந்தக் கேள்வி எனக்குப் புதிதல்ல. பதிலளிப்பதுதான் கொஞ்சம் கஷ்டமான விஷயம். நல்ல வேதஞானம் வழங்கும் கல்லூரிகள் நம்மினத்தில் இன்னும் எழவில்லை என்பதை நீங்கள் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது. இறையியல் கல்லூரிகள் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? வேதம் மட்டுமே கர்த்தருடைய வார்த்தை என்ற உணர்வோடு வேதத்தை அடிப்படையாகக் கொண்டே எந்தப் போதனையையும் கொடுப்பதாக இருக்க வேண்டும். அப்படிப் பார்க்கின்றபோது ஒரு கல்லூரி அறவே ‘லிபரல்’ போதனைகளைக் கொடுக்கக்கூடாது. அதாவது போதனைகள் அடிப்படையிலேயே வேதத்திற்கு முரணானதாக இருக்கக் கூடாது (இயேசு கிறிஸ்துவின், கன்னிப்பிறப்பையும், அற்புதங்களையும், அவருடைய மானுட தெய்வீக தன்மைகளையும், மரணத்தையும், உயிர்த்தெழுதலையும், வேதத்தின் தன்மையையும், அதிகாரத்தையும் மறுதலிப்பது லிபரல் போதனை.) அடுத்ததாக அது பரவசக்குழுப் போதனைகளையும், செழிப்புபதேசத்தையும் கொண்டதாக இருக்கக்கூடாது. இவையும் வேத அதிகாரத்தை குறைவுபடுத்தும் போதனைகள். அடுத்தாக சகல டினோமிநேஷன்களையும் திருப்திப்படுத்தி நடக்கும் கல்லூரிகளாக இருக்கக்கூடாது. முழுக்கு ஞானஸ்நானம், தெளிப்பு ஞானஸ்நானம் எல்லாமே சரி என்றவிதத்திலும், சபை அமைப்பு, ஆளுகை பற்றிய போதனைகள் ஒவ்வோரு டினோமிநேசன்களுக்கும் ஏற்றமுறையில் இருந்துவிடலாம் என்றவிதத்திலும், கர்த்தருடைய ஆராதனை எப்படியும் இருந்துவிடலாம் என்று போதித்து வேதத்தைக் கர்த்தருடைய வார்த்தை என்ற தேவபயத்தோடு அணுகி அதிலுள்ளதை மட்டும் போதிக்காமல் டினோமிநேசன்களைத் திருப்திப்படுத்தும்விதமாகப் போதனையளிக்கும் கல்லூரியாக இருக்கக்கூடாது. அவசியமற்ற பாடங்களைப் போதிக்காமல், மெய்யான சபை வரலாறு, வேத மொழிகள், புதிய, பழைய ஏற்பாட்டு வேத வியாக்கியானம், வரையறுக்கப்பட்ட இறையியல் போன்றவற்றிக்கு முக்கியத்துவம் கொடுப்பவையாக இருக்க வேண்டும். திருச்சபையையும், ஓய்வுநாளையும் அலட்சியப்படுத்தி நடக்கும் கல்லூரியாக இருக்கக்கூடாது. சபை ஊழியத்தில் ஈடுபடும் தேவபக்கியுள்ள மெய்ப்போதகர்கள் வளர்ச்சியடையத் துணைசெய்யும் போதனைகளையும், சூழ்நிலையையும் கொண்டவையாக இருக்கவேண்டும். ஆரம்பம் முதல் கடைசிவரையும் வேதத்தில் உள்ளதை மட்டுமே தைரியத்தோடு போதித்து வரும் கல்லூரிகள் இருக்கின்றனவா? என்றுதான் கேட்கிறேன். இதைப் புரிந்துகொள்ளுங்கள். அத்தகைய கல்லூரிகள் இல்லாத நிலையில் சத்தியத்தின்படி மட்டுமே நடக்க வேண்டும், சபை நடத்த வேண்டும், சத்திய வாஞ்சையுள்ள ஊழியர்களை உருவாக்க வேண்டும் என்கிறவர்கள் என்ன செய்ய வேண்டும்? இதற்கான சில ஆலோசனைகளை இங்கே தர விரும்புகிறேன்.
1. ஊழியப் பணி செய்ய விரும்புகிறவர்களுக்கு வேதத்தில் நல்ல பரிச்சயம் இருக்க வேண்டும்.
வேதத்தில் காணப்படும் அறுபத்தியாறு நூல்களையும் தொடர்ந்து வாசித்து அவற்றில் பரிச்சயமடைய வேண்டும். இதை எல்லா கிறிஸ்தவர்களுமே செய்ய வேண்டும்; அது அவர்களால் முடியும். போதகர்களும், அப்பணிக்குத் தயாராகிறவர்களும் அந்த அறுபத்தியாறு நூல்களில் தேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அதாவது, அந்த நூல்களைப் பற்றிய தெளிவான ஞானத்தை அவற்றைத் தொடர்ந்து கருத்தோடு வாசிப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டும். இதைச் செய்வதற்கு இறையியல் கல்லூரிகள் தேவையில்லை. வேத வியாக்கியான நூல்கள் அவசியமில்லை. இதைச் செய்வதற்கு ஒருவன் கிறிஸ்தவனாக இருக்க வேண்டும்; அது மட்டுமே அவசியம். ஏன், இதைச் சொல்லுகிறேன் என்றால் தன்னுடைய சொந்த மொழியில் வாசிக்கப் படிக்கத் தெரிந்த ஒருவன் வேதத்தை சிரத்தையோடு வாசித்து விளங்கிக்கொள்ளக்கூடிய வகையிலேயே கர்த்தர் தன்னுடைய வேதத்தைத் தந்திருக்கிறார். கர்த்தர் பொய்சொல்ல மாட்டார். கலப்பை பிடிக்கிறவனும், வாசிக்கத் தெரிந்தவனாக இருந்தால் புரிந்துகொள்ளக்கூடிய விதத்திலேயே கர்த்தர் வேதத்தைத் தந்திருக்கிறார். அந்தளவுக்கு நாம் புரிந்துகொள்ளக்கூடிய தெளிவோடு அது அமைந்திருக்கிறது.
வேதம் படிக்கிறபோது, ஒவ்வொரு நாளும் தகுந்த நேரத்தை ஒதுக்கி தியானம் செய்வதற்காக மட்டும் படிக்காமல் அதைப் படித்துப் புரிந்துகொள்ளுவதற்காகப் படிக்க வேண்டும். ஒவ்வொரு நூலையும் பல தடவைகள் வாசிக்க வேண்டும். அதில் எத்தனை அதிகாரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு அதிகாரத்திலும் எத்தனை வசனங்கள் இருக்கின்றன, நூலை யார், யாருக்கு எழுதியிருக்கிறார், நூலின் முக்கிய கருத்து என்ன, அந்தக் கருத்தை விளக்கும் அடிப்படை வசனங்கள் யாவை, என்பவற்றை பேப்பரையும், பேனாவையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு கருத்தோடு வேதத்தை வாசித்து குறிப்பெடுத்து மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்த வகையில் வேதத்தைப் படிப்பது அவசியம். அதற்குமேல்போய் அந்த நூலின் முக்கிய கருத்தை அதை எழுதியவர் என்ன விதத்தில் விளக்குகிறார் என்பதை சிந்தித்துப் பார்த்து வாசிக்க வேண்டும். அந்த நூலில் காணப்படும் முக்கிய கருத்தைவிட வேறு என்ன போதனைகள் இருக்கின்றன? அந்தப் போதனைகளை நூலாசிரியர் எப்படி விளக்குகிறார் என்று ஆராய்ந்து பார்த்து வாசிக்க வேண்டும், குறிப்பெடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கெல்லாம் நிச்சயம் நேரம் தேவைப்படும். பலர் தியானத்துக்காக மட்டும் வேதத்தை வாசிப்பதாலேயே அவர்களுக்கு வேதத்தில் பரிச்சயம் இல்லாமல் இருக்கிறது; வேதம் அறியாதவர்களாக இருக்கிறார்கள். நேரத்தை ஒதுக்கி, ஜெபத்தோடு முழு வேதத்தையும் வாசித்து அதன் ஒவ்வொரு நூல்களைப் பற்றியும் தெளிவான ஞானத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். இப்படிப் படிப்பதன் மூலம் நாம் நாள்போகப்போக கர்த்தரைப் பற்றிய அறிவிலும், அவரோடு இருக்கும் உறவிலும் அதிகம் வளருவோம். வேதத்தோடு நமக்கு இருக்கும் உறவின் அடிப்படையிலேயே கர்த்தரோடு நமக்கு இருக்கும் உறவும் அமையும். நம் வாழ்க்கையில் வேதமில்லாமல் கர்த்தரோடு உறவிருக்க முடியாது. தன்னை விசுவாசிக்கிறவர்களோடு இடைவிடாத உறவை அமைத்துக்கொள்ளவே கர்த்தர் வேதத்தின் மூலம் நம்மோடு பேசுகிறார். வேத வாசிப்பில் தேர்ச்சியடையாமல் இறையியல் கல்லூரியில் அதைப் பெற்றுக்கொள்ளப் பார்ப்பது முதலில் சோம்பேரித்தனம், இரண்டாவது, அந்த மனிதன் இறையியல் கல்லூரிக்குப் போகிற நோக்கமே தவறு.
இதுவரை நான் விளக்கிய வேத அறிவை எழுதப்படிக்கத் தெரிந்த எந்த மனிதனும் தன்னுடைய மொழியில் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில்தான் கர்த்தர் வேதத்தைத் தந்திருக்கிறார். அதனால்தான் வேதம் ‘தெளிவானது’ (Perspicuous, Clear), அதாவது, யாரும் வாசித்துப் புரிந்துகொள்ளக்கூடிய விதத்தில் அது இருக்கிறது என்று சொல்லுகிறோம். இது வேதத்தைப் பற்றிய நிராகரிக்க முடியாத உண்மை; அதன் குணாதிசயங்களில் ஒன்று. இதை வேதமே விளக்குகிறது. நம்மால் வாசித்துப் புரிந்துகொள்ள முடியாத வேதத்தைக் கர்த்தர் தரவேண்டிய அவசியமில்லை. அவருடைய சித்தத்தை நாம் அறிந்துகொள்ளுவது எத்தனை அவசியமானது என்பது அவருக்குத் தெரியும். அவருடைய சித்தத்தின்படி, அதை மீறாமல் நாம் வாழும்படி அவர் கட்டளையிட்டிருக்கிறார். அப்படி வாழ்கிறபோதே நமக்குள் பரிசுத்தமாகுதலும் நிகழ்கிறது. இரட்சிப்புகுரிய நம் வாழ்க்கையை கர்த்தருடைய மகிமைக்காக நாம் வாழ்வதற்கு வேதம் அத்தியாவசியமானதாக இருக்கிறது. அப்படியிருக்கும்போது கர்த்தர் அந்த வேதத்தைத் தெளிவில்லாததாக, நம்மால் புரிந்துகொள்ள முடியாததாக, இறையியல் கல்லூரிக்குப் போய்த்தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற விதத்தில் தந்திருப்பாரா? நிச்சயம் இல்லை. அப்படி நினைப்பது வேதத்தின் தன்மையையும் அதன் அதிகாரத்தையும், ஏன், கர்த்தரையும்கூட குறைத்துமதிப்பிடுவது போலாகிவிடும்.
அத்தோடு, கர்த்தர் நமக்குத் தந்திருக்கும் வேதத்தை நாம் புரிந்துகொள்ள இன்னொரு உதவியையும் செய்கிறார். நமக்குள் இருக்கும்படி அவர் தந்திருக்கும் பரிசுத்த ஆவியானவர் வேதத்தை விளங்கிக்கொள்ள நமக்கு உதவுகிறார். பரிசுத்த ஆவியானவரின் துணையோடுதான் நாம் வேதத்தை விளங்கிக்கொள்ள முடிகிறது. ‘. . . பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்’ என்று இயேசு சொன்ன வார்த்தைகள் நமக்கும் பொருந்தும் (யோவான் 14:26). ‘. . . பரிசுத்த ஆவியானவர் . . . உங்களுக்குப் போதிப்பார் . . .’ என்று இயேசு லூக்கா 12:12ல் சொல்லியிருக்கிறார். பவுல் கொரிந்தியர்களைப் பார்த்து, ‘. . . நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல் பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி; ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக் காண்பிக்கிறோம்’ என்கிறார் (1 கொரி 2:13). ஒவ்வொரு தடவையும் நேரத்தை ஒதுக்கி நாம் வேதத்தை ஜெபத்தோடும் கருத்தோடும் வாசிக்கின்றபோது நமக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியானவர் நம்மை சத்தியத்தை அறிந்துகொள்ளும்படி வழிநடத்துகிறார். நம்முடைய வாசிப்பும், உழைப்பும் இல்லாமல் அவர் நமக்கு உதவி செய்வதில்லை. நாம் கருத்தோடும், ஜெபத்தோடும் சிந்தித்து வாசிக்கின்ற போது அவர் வேத உண்மைகளைப் படிப்படியாக நாம் புரிந்துகொள்ளும்படிச் செய்கிறார். இந்த விஷயத்தில் நமது உழைப்பும், அவருடைய வழிநடத்துதலும் இணைந்து நடக்கின்றன. இதுதான் ஆவிக்குரிய விஷயத்தில் விசேஷமானது. ஆண்டவரை அறியாதவனுக்கு இந்த வசதியில்லை.
மேலே நாம் பார்த்து வந்திருக்கும் விதத்தில் வேதத்தை விளங்கிக்கொள்ள ஒவ்வொரு கிறிஸ்தவனாலும் முடியும். அதை ஒரு கிறிஸ்தவன் செய்யாமல் இருப்பது தவறு. கிறிஸ்துவோடு உறவிருப்பவர்கள் கிறிஸ்துவின் வார்த்தையைக் கேட்பதிலும், அறிந்துகொள்ளுவதிலும் துடிப்போடு செயல்படுவார்கள். அது இல்லாமல் எப்படி ஒருவன் கிறிஸ்தவன் என்று தன்னை அழைத்துக்கொள்ள முடியும்? ஜோன் பனியனின் உடலில் ஊசியால் எங்கே குத்தினாலும் வேதமாகவே சிந்தும் என்று சொல்லுவார்கள். அந்தளவுக்கு வேதத்தை அவர் கரைத்துக் குடித்திருந்தார். அதை அவர் இறையியல் கல்லூரிக்குப் போகாமல் சிரத்தையோடு வேதத்தை அன்றாடம் வாசித்து மட்டுமே கற்றிருந்தார். அதே முறையில்தான் ஸ்பர்ஜனுக்கும், மார்டின் லொயிட் ஜோன்ஸுக்கும் வேதத்தில் ஆழமான பரிச்சயம் இருந்தது. இவர்கள் கர்த்தர் தங்களால் புரிந்துகொள்ளக்கூடிய விதத்தில் வேதத்தைத் தந்திருக்கிறார் என்று நம்பி துடிப்போடும், கருத்தோடும் அதை வாசித்து கற்றுக்கொண்டார்கள். தமிழ்நாட்டில் எனக்குத் தெரிந்த ஒரு சபை மூப்பர் எந்தக் கல்லூரிக்கும் போகாமல் வீட்டில் இருந்து வாசித்து, வாசித்து வேதத்தில் ஆழமான ஞானத்தைப் பெற்றிருக்கிறார். எந்தப் புத்தகத்தில், எந்த அதிகாரத்தில், எந்த வசனத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பது அவருக்கு அத்துப்படி. அவரால் அது எப்படி முடிந்தது? கர்த்தரோடிருக்கும் உறவும், கடுமையான உழைப்பும், கற்றுக்கொள்ள வேண்டும் என்ற துடிப்பும், ஆர்வமும்தான். இதை ஒவ்வொரு விசுவாசமுள்ள கிறிஸ்தவனும் செய்ய முடியும் என்றளவில்தான் கர்த்தர் வேதத்தைத் தந்திருக்கிறார். உண்மையில் போதகப் பணிக்காக இறையியல் கற்றுக்கொள்ள விரும்புகிறவர்களுக்கு சாதாரணமாக எந்தக் கிறிஸ்தவனுக்கும் இருக்கவேண்டிய இந்தளவு போதுமான வேதப் பரிச்சயம் அறுபத்தி ஆறு நூல்களிலும் இருக்கவேண்டும். உண்மையில் இன்று அது அநேகருக்கு இல்லாமலிருக்கிறது. அதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். இருந்தபோதும் ஆத்துமாக்களுக்கு ஆத்தும ஆலோசனை கொடுத்து வழிநடத்த வேண்டியவர்களுக்கு கர்த்தரோடிருக்கும் ஆழமான உறவும், வேதத்தில் ஞானமும் தவிர்க்க முடியாதவை. இந்தளவுக்கு வேத நூல்களில் பரிச்சயம் இல்லாதவர்களுக்கு இறையியல் கல்வி அவசியமில்லை. சாதாரண கிறிஸ்தவர்களுக்கு இருக்க வேண்டிய வேத தகுதிகள் இல்லாமல் எவரும் போதகப் பணியை நினைத்தும் பார்க்கக்கூடாது. தேவமனிதனாக விரும்புகிற எவனும் தான் வேதமனிதனாக இருக்கும்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
2. வேத அடிப்படையில் மட்டும் எழுதப்பட்டிருக்கும் நல்ல சத்தான நூல்களை சிந்தித்து, ஆராய்ந்து வாசித்து அவற்றில் தேர்ச்சி பெறவேண்டும்.
முதலில் ஊழியப்பணி செய்யப் போகிறவர்களுக்கு வேதத்தில் நல்ல பரிச்சயம் இருக்க வேண்டும் என்று பார்த்தோம். அடுத்ததாக, வேதத்தில் மேலும் மேலும் ஞானம் வளர நல்ல நூல்களை வாசிப்பதும் அவசியம். வாசிக்கும் நூல்கள் நம்முடைய ஆத்துமாவைக் கெடுத்துவிடாததாகவும், சத்தியத்தின் அடிப்படையில் அமைந்தவையாகவும் இருக்கவேண்டும். எதை வாசித்தாலும் ஆராய்ந்து சிந்தித்து வாசிக்க வேண்டும். வேதத்தோடு பொருந்திப்போவதாக இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும். வேதத்தில் மேலும் தெளிவு பெற கர்த்தர் நமக்குக் கொடுத்திருக்கும் சிறந்த தேவமனிதர்களின் ஞானத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வரலாற்றில் எழுந்துள்ள அத்தகைய மனிதர்களின் எழுத்தைக் கர்த்தர் பாதுகாத்து நமக்குத் தந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தற்காலத்திலும் எழுதப்பட்டிருக்கும் சிறந்த வேத இலக்கியங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இது கிறிஸ்தவர்களுக்கும் அவசியம். மேலாக ஊழியப்பணி செய்கிறவர்களுக்கு மிகவும் அவசியம்.
ஸ்பர்ஜன் சொல்லுகிறார், ‘ஒருபோதும் வாசிக்காமல் இருப்பவனைப் பற்றி நாம் ஒன்றும் தெரிந்துகொள்ள முடியாது; எதையும் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளாதவனை யாரும் எவரோடும் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். மற்ற மனிதர்களின் அறிவையும், எண்ணங்களையும் பயன்படுத்திக் கொள்ளாதவன், தன்னில் அறிவில்லாதவனாக இருக்கிறான் என்பதையே நிரூபிக்கிறான்.’
ஸ்பர்ஜனின் இந்த வார்த்தைகள்தான் எத்தனை உண்மையானவை. வாசிக்காத கிறிஸ்தவன் தன்னில் அறிவில்லாதவனாகத்தான் இருக்க முடியும். எவரும் வாசிக்காமல் இருப்பதற்கு சோம்பேரித்தனம் முக்கிய காரணம். அதுவே பழக்கமாகிவிட்டால் இரண்டு பக்கங்கள் வாசிப்பதும் கஷ்டமானதாகத்தான் தெரியும். நூல்கள் வாசிப்பதற்கு இப்படித் தடுமாறுகிறவர்கள் வேதத்தை எப்படி அடிக்கடி நெடுநேரம் வாசிக்கப்போகிறார்கள்?
போதக ஊழியப்பணிக்குப் போகிறவர்கள் வாசிக்காமல் இருப்பது அவர்களுடைய பணிக்கே ஆபத்து. கிறிஸ்தவர்கள் வாசிக்காமல் இருப்பது தவறு என்றால் போதிக்கும் பணிபுரிகிறவர்கள் வாசிக்காமல் இருப்பது அவர்களால் மற்றவர்களுக்கு எந்தப் பயனுமில்லை என்றாகிவிடும். நம்மினத்தில் பொதுவாகவே வாசிக்கும் பழக்கம் குறைவு என்பது எல்லோரும் அறிந்ததே. இருந்தாலும் கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரையில் அது பெருந்தவறு. முக்கியமாக போதிக்க விரும்புகிறவர்களுக்கு வாசிப்பது முக்கிய கடமையாக இருக்கிறது.
எதை வாசிக்க வேண்டும்? வேதத்தைத் தவிர நாம் விசுவாசத்திலும், வேதஞானத்திலும் வளரத் துணை செய்யும் நூல்களை மட்டுமே வாசிக்க வேண்டும். இதற்கான சிறு பட்டியலை நான் தர விரும்புகிறேன்.
- 1689 விசுவாச அறிக்கை
- கிறிஸ்தவ வினாவிடைப் போதனைகள்
நிச்சயமாக 1689 விசுவாச அறிக்கையையும், கிறிஸ்தவ வினாவிடைப் போதனைகளையும் வாசித்து அவற்றில் தேர்ச்சியடைய வேண்டும். கர்த்தர் வரலாற்றில் எழுப்பியுள்ள சிறந்த ஞானிகளிடமிருந்து இவை நம்மை வந்தடைந்திருக்கின்றன. அதுவும், தமிழில் வாசிக்கக்கூடியதாக இன்று அச்சில் இருக்கின்றன. இவை இரண்டும் மொத்த வேத இறையியல் போதனைகளைத் தொகுத்து நமக்குக் கொடுக்கின்றன. இதைவிட வேறு என்ன வேண்டும்? என்னைப் பொறுத்தவரையில் எந்தக் கிறிஸ்தவனும் வேதத்தோடு இவைகளைப் பயன்படுத்தி கிறிஸ்தவ அறிவில் உயர முடியும். அத்தோடு போலிப்போதனைகளில் இருந்தும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். இந்த இரண்டையும் தமிழினத்துக் கிறிஸ்தவர்கள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இன்றைக்கு வசதி இருக்கின்றது. (இவ்விதழில் கொடுக்கப்பட்டுள்ள தமிழக முகவரிகளோடு தொடர்புகொண்டு இவைகளைப் பெற்றுக்கொள்ளலாம்).
இவை தவிர 1995ல் இருந்து வெளிவந்து கொண்டிருக்கும் ‘திருமறைத்தீபம்’ காலண்டு பத்திரிகை உங்களுக்குப் பயனளிக்கும். 1689 விசுவாச அறிக்கை, வினாவிடைப் போதனைகளின் அடிப்படையில் வேதபூர்வமான சீர்திருத்த போதனைகளை இந்தப் பத்திரிகை தொடர்ந்து வழங்கி வருகின்றது. இதைப் பயன்படுத்தி இறையியல் போதனைகளைப் பெற்றுக்கொள்ளுகிறவர்கள் அநேகர். இதையும் நீங்கள் கருத்தோடு வாசித்தால் வேத இறையியல் போதனைகளில் ஞானம் பெறலாம். இப்பத்திரிகையை http://www.biblelamp.org எனும் இணைய முகவரிக்குப் போய் ஆரம்பத்திலிருந்து வந்திருக்கின்ற இதழ்கள் அனைத்தையும் வாசிக்கலாம்.
சவரின் கிரேஸ் வெளியீடுகளின் மூலமாக இதுவரை வெளிவந்திருக்கும் நூல்களையும் நீங்கள் http://www.biblelamp.org இணைய முகவரிக்குப் போய் அதிலுள்ள முகவரிகளோடு தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம். இந்த நூல்கள் அனைத்துமே வேதபூர்வமான சீர்திருத்த போதனைகளை அளிப்பவை. அவற்றில் மிகவும் முக்கியமான சிலவற்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.
1. திருச்சபை வரலாறு (பாகம் 1ம், 2ம்) – போதிக்கும் பணிக்கு வருகிறவர்கள் திருச்சபை வரலாறு தெரியாமல் இருக்கக் கூடாது. சபையைப் பற்றி அறிந்திராமல் சபை ஊழியத்தில் ஈடுபடலாமா? தமிழில் திருச்சபை வரலாறு சரியானவிதத்தில் எழுதப்பட்டிராத குறையை இந்நூல்கள் நிறைவு செய்துள்ளன. ஆதிசபைக் காலத்திலிருந்து 16ம் நூற்றாண்டு சபை சீர்திருத்த காலம் வரையிலான வரலாற்றை இவை படங்களுடன் விளக்குகின்றன.
2. வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்க்கை – இந்நூல் பரிசுத்தமாக வாழ்வதைக் குறித்தது. அல்பர்ட் என். மார்டின் எழுதியது. பரிசுத்தவாழ்க்கை வாழ்வது என்பது மேஜிக் நடத்துவது போன்றதல்ல. அது வெறும் ஜெபத்தின் மூலமோ அல்லது அசாதாரண செயல்களின் மூலமோ நம்மில் நிகழ்வதில்லை. பரிசுத்தமாக வாழ்வது நம்முடைய கடமை. அந்தக் கடமையைப் புரிந்துகொள்ளுதலோடு நிறைவேற்ற வேண்டியது நம்முடைய பொறுப்பு. பொறுப்பைத் தட்டிக்கழித்துவிட்டு பரிசுத்தமாக வாழமுடியவில்லையே என்று ஆதங்கப்படுவதில் பொருளில்லை. செய்யவேண்டிய கடமைகளை ஜெபத்தோடும், ஆவியின் துணையோடும் அன்றாடம் செய்தால் பரிசுத்தமாக வாழலாம், அதில் வளரலாம் என்பதை நூலாசிரியர் வேதபூர்வமாக விளக்குகிறார்.
3. அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள் – பலரும் விரும்பி வாசித்து வருகின்ற அல்பர்ட் என். மார்டினின் நூல். திருச்சபை எப்படி இருக்க வேண்டும், திருச்சபை வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று வேதபூர்வமாகவும், தெளிவாகவும் ஆசிரியர் விளக்கியிருக்கிறார். சில தடவைகளாவது வாசித்துப் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய நூல். போதகர்களும், போதக ஊழியப்பணிக்கு வருகிறவர்களும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூலிது.
4. ஆதிசபையின் அற்புத வரங்கள் – ஆதிசபையில் வேதம் முழுவதுமாக எழுதிக் கொடுக்கப்படுவதற்கு முன் தன்னுடைய சித்தத்தை வெளிப்படுத்த கர்த்தர் திருச்சபைக்குக் கொடுத்த வரங்கள் இன்றும் கொடுக்கப்படுகிறதா? என்ற கேள்விக்கான விளக்கத்தை இந்நூலில் காணலாம். 1 கொரி 11–14வரையுள்ள அதிகாரங்களுக்கான தெளிவான விளக்கத்தை இந்நூல் தருகிறது.
5. பிரசங்கிகளும் பிரசங்கமும் – பிரசங்கப் பணி பற்றிய சகல அம்சங்களையும் தெளிவாக விளக்குகின்ற நூல். இதுவரை நான் நடத்தியுள்ள இரண்டு போதகர்களுக்கான பயிற்சி வகுப்புகளில் இந்நூல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது; நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கிறது. தமிழினத்துப் போதகர்களும், போதகப்பணி செய்யத் தயார் செய்துகொள்கிறவர்களும் நிச்சயம் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமான நூல்.
6. தாம்பத்திய உறவில் நெருக்கம் – தலைப்பைப் பார்த்து மலைத்துப்போய் விடாதீர்கள். இந்நூல் கிறிஸ்துவின் சுவிசேஷ அன்பின் அடிப்படையில் எப்படி குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்து நடத்துவது என்பது பற்றியது. அலன் டன் அவர்கள் எழுதியது. ஆதியில் கர்த்தர் மனிதனைப் படைத்தவிதத்தையும், படைப்பிலேயே அவனுக்கும், அவன் மனைவிக்கும் அளித்துள்ள பொறுப்புக்களையும் விளக்கிய பிறகு அவர்களுடைய பாவம் அந்தப் பொறுப்புக்களை அவர்கள் நிறைவேற்ற முடியாதபடி செய்திருப்பதை சுட்டிக்காட்டி, கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள் அந்தப் பொறுப்புகளை திருமணத்திற்கு முன்பே சிந்தித்துப் பார்த்து தங்களைத் தயார் செய்துகொண்டு அந்தப் பொறுப்புக்களை கிறிஸ்துவின் மகிமைக்காக நிறைவேற்றுபவர்களாக குடும்பம் நடத்தவேண்டும் என்பதை விளக்குகிறது. தமிழில் இந்தமுறையில் எழுதப்பட்ட நூலில்லை.
நாம் வெளியிட்டுள்ள நூல்களைத் தவிர இதே அடிப்படையில் வேத சத்தியங்களை ஆராய்ந்து எழுதப்பட்டிருக்கும் நூல்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆங்கிலத்தில் வாசிக்கக்கூடிய திறமை இருக்குமானால் அநேக நல்ல நூல்கள் வசதியாக இருக்கின்றன. தமிழில் மட்டுமே வாசிக்கக்கூடியவர்களுக்கு அந்தளவுக்கு நூல்கள் இல்லாத குறையுண்டு.
3. கல்லூரிகள், பட்டங்கள் என்ற உலக எண்ணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு வேத இறையியலை மட்டுமே கற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
நல்ல போதனைகளை தரமுடியாத கல்லூரிகளும், அங்குபெறப்படும் பட்டங்களும் இந்த உலகத்தில் மக்களுக்கு முன் அங்கீகாரம் பெற உதவலாம்; ஆத்துமாக்களை சத்தியத்தில் வழிநடத்திப் பாதுகாக்க உதவாது. நம்முடைய சொந்த நன்மைக்காகப் போதகப் பணியில் ஈடுபடுவதைப் போன்ற பாவமான செயல் இருக்க முடியாது. உலகத்தில் உள்ள எல்லாப் பணிகளையும்விட வித்தியாசமானது போதகப் பணி. அது ஆத்துமாக்களுக்கு சேவை செய்யும்பணி. அதில் ஈடுபட வேதம் நமக்குத் தேவை; வேத இறையியல் நமக்கு அவசியம். அவற்றைத் தரமுடியாத இடங்களில் நாம் காலத்தை வீணாக்குவதில் பயனில்லை. அப்படியானால் நல்ல இறையியலைப் பெற்றுக்கொள்ள வேறு என்ன வழி?
இதுவரை நான் விளக்கியவிதத்தில் உழைத்துப் போதனைகளைப் பெற்றுக்கொள்ளுகிற போதகர்கள் தங்கள் அனுபவத்தைப் பயன்படுத்தி தங்களுடைய சபைகளில் இருப்பவர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும். இதற்கு நேரத்தை ஒதுக்கி நல்ல திட்டம் வகுக்க வேண்டும். இதைச் செய்வதற்கு பாரமிருக்க வேண்டும். சபையிலிருப்பவர்களை எங்கோ அனுப்பி எதையோ படித்துவிட்டு வரும்படிச் செய்வது சபைக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். தேவையில்லாத, நம் விசுவாசத்திற்கு ஒத்துப்போகாத விஷயங்களை அவர்கள் கற்றுக்கொண்டு வருவது சபைக்கு நல்லதா? என்று சிந்தித்துப் பாருங்கள். சபை வரலாற்றைப் படிக்கிறபோது 3ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் போலிப்போதனைகள் சபைகளைத் தாக்க ஆரம்பித்துவிட்டதைக் காண்கிறோம். அந்தளவுக்கு பிசாசு சபையைத் தாக்குவதில் கருத்தாக இருக்கிறான். எப்படியாவது சபைகளுக்குள் நுழைந்து களைகளை விதைக்கப் பார்ப்பான். இன்று தவறான போதனைகள் பெருகியிருப்பது மட்டுமல்லாமல், சத்தியத்தின் வலிமையைக் குறைக்கும்விதத்தில் போதனைகள் மலிந்து காணப்படுகின்றன. இதிலிருந்தெல்லாம் போதகர்களாகிற நீங்கள் உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஆத்துமாக்களைப் பாதுகாக்க வேண்டாமா? அவர்களைப் பாதுகாக்க வழி நாமே உழைத்து சத்தியத்தைக் கற்று வளர்ந்து அவர்களுக்குப் போதிப்பதுதான். சபையில் போதிக்க விரும்புகிறவர்களை நீங்கள்தான் கருத்தோடு போதித்து வளர்க்க வேண்டும். இந்தப் பணியை நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு வேறு யாரிடமோ ஒப்படைத்துவிடக் கூடாது.
இதற்கும் மேலாக நல்ல சத்தியங்களைக் கற்றுக்கொள்ளும்விதத்தில் அனுபவசாலிகளான, சத்தியத்தை மட்டும் போதிக்கின்ற போதகர்கள் இருந்து நடத்தும் வகுப்புகளுக்கு உங்கள் போதக மாணவர்களை அனுப்பிப் படிக்க வைக்கலாம். சீர்திருத்த சத்தியங்களின் அடிப்படையில் போதனைகளை அளித்து போதக ஊழியத்தில் உதவுமுகமாக போதகர்களுக்கும், போதக பயிற்சி பெறுபவர்களுக்கும் பல காலமாகவே நான் பயிற்சியளித்து வருகிறேன். இதில் ஆத்தும வாஞ்சையோடு ஊழியம் செய்கிறவர்களுக்கும், செய்ய விரும்புகிறவர்களுக்கும் வருடாந்தரம் தொடர்ந்து பயிற்சியளிக்கப்படுகின்றது. இதில் கற்றுப் போதகர்களாக பணிபுரிகிறவர்கள் இன்றிருக்கிறார்கள். இத்தகைய வகுப்புகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
மேலைத்தேசத்து முறைகளையும், பாடங்களையும் பின்பற்றி இன்றைக்கு கல்லூரிகள் நடத்த முயல்கிறார்கள். நம் மக்களுடைய மொழியும், பண்பாடும், எண்ணப்போக்கும், வாழ்க்கை முறையும் வேறு. நம் மக்களுடைய தேவைகள் வித்தியாசமானவை; வாழும் சூழ்நிலை வித்தியாசமானது. அவர்கள் அணுகுகின்ற பிரச்சனைகள் நம்மினத்து சூழ்நிலையைத் தழுவியவை. அத்தோடு நம்மக்களுக்கு வேதம் அதிகம் தெரியாதிருக்கிறது. மேலைத்தேசத்து மக்களும், சபைகளும் அணுகுகின்ற பிரச்சனைகள் அல்ல நம்முடைய பிரச்சனைகள். நம்மினத்து மக்களுக்கு சுவிசேஷத்தை அறிவித்து, விசுவாசிகள் ஆத்தும வாழ்க்கையில் சீரடையப் போதிக்க அவசியமானவற்றையே நம்மினத்துப் போதகர்களும், போதகப்பயிற்சிக்கு வருகிறவர்களும் கற்றுக்கொள்ள வேண்டும். அநாவசியத்துக்கு நாம் வாழ்க்கையில் என்றுமே பயன்படுத்தாமல் இருக்கப்போகிற பாடங்களை நேரத்தை வீணாக்கிக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. இது இன்று நம்மினத்தில் இருக்கும் இறையியல் கல்லூரிகளில் காணப்படும் பாடமுறைகளில் இருக்கும் பெருந்தவறு. டிகிரிக்கும், டிப்ளொமோவுக்கும் மட்டுமே கல்லூரிகள் இருந்து வருகின்றன. மேலைநாட்டு முறைகளைப் பின்பற்றிய பாடங்கள் இருக்கின்றன. பிரசங்கத்தையும், போதனையையும் கொடுக்க எந்தவிதத்திலும் வரத்தையோ, தகுதியையோ கொண்டிராதவர்களையும் இவை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. திருச்சபைபற்றிய வேதஞானமில்லாமல் திருச்சபைக்கு மதிப்புக்கொடுத்து நடக்காத கல்லூரிகள்தான் நம்மத்தியில் அதிகம்.
ஒரு போதகனுக்கோ, போதக ஊழியத்திற்கு வருகிறவருக்கோ எவை தேவை? முதலில், எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இருக்கும் வேதத்தில் மேலதிக ஞானம் பெற உதவும் பாடங்கள் தேவை. முழு வேதஞானத்தை, அதாவது பழைய ஏற்பாட்டு நூல்களிலும், புதிய ஏற்பாட்டு நூல்களிலும் தேர்ந்த அறிவை அளிக்கும்படியாக பாடங்கள் இருக்க வேண்டும். இவற்றை வைத்துத்தான் வாழ்நாள் முழுதும் போதிக்கப்போகிறோம். இவை தெரியாமல் எந்தப் போதக ஊழியத்தை நடத்துவது? அடுத்ததாக, வேதப்பகுதிகளை ஆராய்ந்து புரிந்துகொள்ள உதவும் வேதவிளக்க விதிமுறைகளைக் கற்றுத்தர வேண்டும். இந்தவிதிமுறைகளைத் திறமையோடு பயன்படுத்தக் கற்றுக்கொடுக்க வேண்டும். இதோடு சம்பந்தப்பட்டதுதான் Exegesis. அதாவது, ஒரு வேதப்பகுதியைப் புரிந்துகொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள். இதெல்லாம் இல்லாமல் வேதத்தை எவரும் மற்றவர்களுக்குப் போதிக்க வழியில்லை. சுத்தமாக, உள்ளது உள்ளபடி வேதத்தைப் போதிக்க இந்தப் பாடங்கள் அத்தியாவசியமானவை.
இதற்கு மேலாக ஒருவருக்கு பிரசங்கத்தகுதி வேண்டும். என்ன வேத ஞானமிருந்தும் பிரசங்கிக்கும் வரமும், தகுதியும் இல்லாமல் எந்தப் பேச்சும் ஆவியின் ஆசீர்வாதத்தைப் பெறாது. பிரசங்க வரம் கர்த்தர் அளிப்பது. அது இருந்தால் மட்டுமே ஒருவரால் பிரசங்கம் செய்ய முடியும். அதை எவரும் இன்னொருவருக்கு கொடுக்க முடியாது. ஒரு பிரசங்கியை வளர்க்க (உருவாக்க அல்ல) முடியாத எந்த இறையியல் பாடத்திட்டத்தாலும் எந்தப் பயனும் இல்லை. சுவிசேஷத்தை அறிவிக்கவும், சபையை நிறுவி வளர்க்கவும் தேவை வேதத்தைத் திறமையாகப் போதிக்கக் கூடிய பிரசங்கிதான். அத்தகைய மனிதனில்லாத ஊழியத்தால் யாருக்கு எந்தப் பயன்? கிறிஸ்துவின் மத்தேயு 28:18–20வரையுள்ள கட்டளையை யாரை வைத்து நிறைவேற்றப்போகிறோம்? அதை நிறைவேற்ற இயேசு யாரை உருவாக்கினார்? வேதப்பிரசங்கிகளைத் தவிர வேறு எவரையுமில்லை.
வேதப் பிரசங்கியாக ஒருவர் இருப்பதோடு, ஆத்துமாக்களில் அன்புகாட்டி கரிசனையோடு போதகப் பணி செய்வதிலும் திறமை வேண்டும். இதனால்தான் ஒருவர் அனுபவசாலியான போதகராக இல்லாமல் இன்னொரு போதகரை வளர்க்க முடியாது என்று சொல்லுகிறேன். அனுபவசாலிகளான தேவமனிதர்களே இறையியல் போதனையளிக்கத் தகுந்தவர்கள். இந்த விஷயத்தில் அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலை இருக்கும் இடத்திலேயே எவரும் இறையியலறிவைப் பெறவேண்டும். ஜோன் ஓவன், ஜோன் பனியன், ஜோன் நொக்ஸ், ஜோன் கல்வின் எல்லோருமே பிரசங்க வரமுள்ளவர்களாகவும், ஆத்தும கரிசனையோடு போதக ஊழியம் புரியும் அனுபவசாலிகளாகவும் இருந்தனர். இன்று இவை இரண்டுமே நம்மினத்து இறையியல் பாடத்திட்டங்களிலும், கல்லூரிகளிலும் கடைசி இடத்தைக் கூடப் பிடிக்கமுடியாமல் இருக்கின்றன. அந்தளவுக்கு கிறிஸ்தவ ஊழியங்கள் வேதபோதனைகளைப் பின்பற்றாமல் இருந்துவருகின்றன.
இன்றைய காலகட்டத்தில் இறையியல் பயிற்சி பற்றி நாம் சிந்தித்துப் பார்க்காமல் இருக்க முடியாது. அதுவும், சத்தியத்தை மட்டும் அடிப்படையாகக்கொண்டு சபை நடத்த முனைகிறவர்கள் இந்த விஷயத்தைத் தவிர்க்க வழியே இல்லை. மேலே நான் விளக்கிய அம்சங்களை ஆராய்ந்து சிந்தித்து ஜெபத்தோடு செய்ய ஆரம்பித்தால் சத்திய வாஞ்சையுள்ளவர்கள் உருவாவதற்கு இது ஆரம்பகட்டமாக அமையும். கடந்த வருடம் இத்தகைய பயிற்சியை நான் கொடுத்த ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு போதகர் என்னிடம் சொன்னார், ‘ஐயா, இந்த அடிப்படையில் வாஞ்சையோடு போதனையளிப்பவர்கள் நம் நாட்டில் இல்லை. நீங்களே, தொடர்ந்து ஒரு பயிற்சிக்கூடத்தை ஏன் நடத்தக்கூடாது?’ என்று. எது இல்லை என்பதை உணர்கின்ற தன்மையும், இல்லாமலிருப்பதைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சிந்தனையும் ஆரம்பமாகிவிட்டாலே அது நல்லதுதான். அதற்காக ஜெபிப்பதோடு, வேதத்தைக் கற்றுக்கொள்ளுகிற பணியில் கருத்தோடு நாம் ஈடுபடவேண்டும்.