ஆதியில் தேவன் . . . சிருஷ்டித்தார்

‘ஆதியில் தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்’ (ஆதி 1:1)

ஆதியாகமம் முதலாம் அதிகாரத்தின் முதல் வசனம் மிகவும் முக்கியமானது. அது வேதத்தின் முதல் வசனம் என்பதனால் மட்டும் அல்ல; அது முழு வேதத்திற்குமான அத்திவாரத்தை அமைத்துத் தரும் வசனமாகவும் இருக்கிறது. இந்த வசனம் இதற்குப் பிறகு வரும் வசனப்பகுதியோடு பிரிக்கமுடியாத தொடர்புகொண்டது. கிறிஸ்தவ இவெஞ்சலிக்கள் சமுதாயத்தில் அநேகர் இன்றைக்கு இந்த வசனம் பற்றிய மிகத் தவறான எண்ணத்தைக் கொண்டிருக்கிறார்கள். அதாவது இந்த வசனத்திற்கும் இதற்கு அடுத்த வசனத்திற்கும் இடையில் (1:1-1:2) கோடிக்கணக்கான ஆண்டுகள் கொண்ட இடைவெளி இருந்ததாகவும், அந்த இடைவெளிக்காலத்தில் அநேக நிகழ்ச்சிகள் நடந்ததாகவும் நம்புகின்றனர். இந்தத் தவறான நம்பிக்கைக்கு ‘இடைவெளித் தத்துவம்’ (Gap Theory) என்று பெயர். இந்த இடைவெளித் தத்துவத்தின்படியான இடைவெளிக்காலத்தைப் பற்றி, இதை நம்புகிற எல்லோருமே ஒரே விளக்கத்தைத் தருவதில்லை. கோடிக்கணக்கான இடைவெளிக் காலம் இருந்ததாக பெரும்பாலானோர் நம்பியபோதும், பல்லாயிரக்கணக்கான இடைவெளிக்காலம் மட்டுமே இருந்ததாக நம்புகிறவர்களும் இருக்கிறார்கள். இந்த இடைவெளிக்காலத் தத்துவம் பொதுவாகவே இன்றைக்கு இவெஞ்சலிக்கள் சமுதாயத்தில் பரவலாக இருந்துவருகிறது. அநாவசியத்துக்கு கீழைத்தேய இறையியல் கல்லூரிகள் பெரும்பாலானவற்றிலும் நுழைந்து குடிகொண்டிருக்கிறது. இந்த இடைவெளிக்காலப்பகுதியில் ஆதாமுக்கு முன் இன்னொரு மனிதன் இருந்ததாகவும், சாத்தானின் வீழ்ச்சியும் இந்தக் காலப்பகுதியில்தான் நிகழ்ந்ததாகவும் கட்டுக்கதைகள் பல எழுந்துள்ளன.

கர்த்தரின் வேதத்தைப் பற்றிய உயர்வான நம்பிக்கை கொண்டிருக்கிற நாம் இந்த இடைவெளிக்காலத் தத்துவத்தைப் பற்றி என்ன சொல்ல முடியும்? முதலில் இது முழுத்தவறான போலித்தனமான போதனை என்பதை என்னால் சொல்லாமல் இருக்க முடியாது. ஆணித்தரமாக இப்படி நான் சொல்வதற்குக் காரணமென்ன? எந்தப் போதனை எந்தப் பகுதியில் இருந்து எழுந்தாலும் அந்தப் போதனை கிறிஸ்துவாலும், வேதத்தின் ஏனைய எழுத்தாளர்களாலும் சந்தேகமில்லாமல் நிரூபிக்கப்பட வேண்டுமென்பது வேதவிளக்க விதிகளில் ஒன்று. அந்த விதிப்படிப் பார்த்தால் ஆதி. 1:1க்கும் 1:2க்கும் இடையில் கால இடைவெளி இருந்ததாக வேதத்தின் எந்தப்பகுதியும், எந்த எழுத்தாளரும், இயேசு உட்பட எங்குமே விளக்கியதில்லை. இது ஒன்றே போதும் இடைவெளிக்காலத் தத்துவம் போலியான கட்டுக்கதை என்பதை நிரூபிக்க. இது உருவானதற்குக் காரணம் டார்வினின் பரிணாமவளர்ச்சிக் கோட்பாட்டையும் (Evolution), இயற்கைவாதிகளின் (Naturalists) விளக்கங்களையும் வேதத்திற்குள் திணித்து விஞ்ஞான அடிப்படையில் வேதவிளக்கங்கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை இவெஞ்சலிக்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நம்பியதால்தான். கர்த்தரின் வேதத்தில் அவர் சொல்லியிருப்பதை மட்டுந்தான் நாம் பார்க்கப் பழக வேண்டுமே தவிர அவர் வெளிப்படுத்தியிராத, அவருடைய எழுத்துக்களில் இல்லாதவற்றைக் காண்பதற்கு எந்த முயற்சியும் செய்யக்கூடாது. இத்தகைய முயற்சியே ‘லிபரல்வாதிகளை’ (வேதத்தை கர்த்தருடைய தெய்வீக வார்த்தையாக நம்பாதவர்கள்) உருவாக்கிவிட்டிருக்கிறது.

தேவ பயத்தோடு வேதத்தைப் படிக்காமலும், ஆராயாமலும் உலக நோக்கோடு, அவிசுவாசியின் கண்ணோட்டத்தோடு அதை அணுகும் போதுதான் விசுவாசி வேதத்தை சிதைக்கும் வழியில் போக நேர்கிறது. கர்த்தருடைய வேதம் தவறுகளற்றதும் (without error), தவறிழைக்க முடியாததும் (infallible), அதன் சகல பகுதிகளும், சகல வார்த்தைகளும் (எபிரெய கிரேக்க மூலமொழிகளில்) கர்த்தரால் ஊதி வழங்கப்பட்டதுமான (Verbal plenary Inspiration) தேவ வார்த்தை என்ற உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருப்பவனே மெய்விசுவாசி (2 தீமோத்தேயு 2:16-17; 1 பேதுரு 1:2-21; 1689 விசுவாச அறிக்கையின் முதல் அதிகாரத்தையும் பார்க்கவும்). வேதத்தைப் பற்றிய இந்த அடிப்படை நம்பிக்கையைக் கொண்டிராதவர்கள் வேதத்தை எப்போதுமே தவறான கண்ணோட்டத்தோடேயே பார்ப்பார்கள். வேதத்தைப் பற்றிய இந்த அடிப்படை நம்பிக்கை வேதத்தை ஆராய்ந்து படிப்பதற்கு ஒருபோதும் தடைபோடவில்லை. வேதப்பகுதிகளை ஏனைய வேதப்பகுதிகளுடன் ஒப்பிட்டு, ஆராய்ந்து படித்து கர்த்தரின் வெளிப்படுத்தல்களை அறிந்துகொள்வதற்கு உலக ஞானம் (worldly wisdom) தேவையில்லை. உலக ஞானத்தின் உதவியில்லாமல் பரிசுத்த ஆவியின் துணையோடு வேதத்தின் மூலமொழிகளைப் பயன்படுத்தி நம்மொழியில் இருக்கும் வேதத்தை ஜெபத்தோடு ஆராய்ந்து படிப்பது மட்டுமே விசுவாசியின் கடமை. வேதத்தில் ஆணித்தரமான நம்பிக்கைவைத்து பின்பற்ற வேண்டிய அந்த வழி மட்டுமே கர்த்தரின் வார்த்தையைப் புரிந்துகொள்ளவும், அவரில் வளரவும் துணை செய்யும்.

இனி ஆதியாகமத்தின் முதலாவது வசனத்தை ஆராய்வோம். ‘ஆதியில் தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்’ (ஆதி 1:1). இது ஆங்கில வேதத்தில் ‘In the beginning God created the heavens and earth’ என்றிருக்கிறது. இந்த வசனத்தை நான்கு கேள்விகளைத் தலைப்பாகக் கொண்டு ஆராய்வோம். அந்தக் கேள்விகள் பின்வருமாறு:

  1. படைத்தவர் யார்?
  2. படைப்பு எப்போது நிகழ்ந்தது?
  3. படைப்பு எப்படி நிகழ்ந்தது?
  4. படைக்கப்பட்டவை எவை?

1. படைத்தவர் யார்?

இப்படியொரு கேள்வி தேவையா? என்றுகூட சிலர் நினைக்கலாம். இருந்தபோதும் வசனத்தை ஆராய்கிறபோது அதற்குப் பதில் சொல்ல வேண்டியது அவசியமாகிறது. கர்த்தரே அனைத்தையும் படைத்தவர் என்பதை இந்த வசனம் உறுதியாக விளக்குகிறது. ‘ஆதியில் கர்த்தர்’ என்று அது கர்த்தரை அறிமுகப்படுத்துவதைக் காண்கிறோம். கர்த்தரே மோசேயின் மூலமாக அதை எழுத வைத்தார். எலோகிம் என்ற எபிரெய வார்த்தை தேவன் என்று இந்த வசனத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இது முதலாம் அதிகாரத்தில் 32 தடவைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

கர்த்தரைப் படைத்தவராக இந்த வசனம் காட்டுகிறதை வேதத்தின் ஏனைய பகுதிகள் அங்கீகரிக்கின்றன. அத்தகைய வசனங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

பழைய ஏற்பாடு:
நெகேமியா 9:6
யோபு 9:8
சங்கீதம் 102:25
ஏசாயா 45:18
எரேமியா 51:15

புதிய ஏற்பாடு:
யோவான் 1:1
அப்போஸ்தலர் 17:24
எபிரெயர் 1:10
எபிரெயர் 11:3
வெளிப்படுத்தின விசேஷம் 4:11

இதுவரை நாம் பார்த்துள்ள வசனங்களெல்லாம் கர்த்தரே சிருஷ்டிகர்த்தர், அனைத்தையும் படைத்தவர் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. மோசே மட்டுமல்லாமல் வேதத்தின் ஏனைய தேவ மனிதர்களும், எழுத்தாளர்களும் படைப்பைக்குறித்த ஒரேவிதமான நம்பிக்கைகளைக் கொண்டிருந்ததை நாம் இதன் மூலம் பார்க்கிறோம். எல்லாம் வல்ல கர்த்தரைத் தவிர வேறு எவரும் உலகத்தைப் படைத்திருக்க வழியில்லை. அனைத்தும் படைக்கப்படுவதற்கு முன்பு ஆதியில் ஜீவனுள்ள கர்த்தர் மட்டுமே இருந்ததாகவும், கர்த்தரே காலத்தை உண்டாக்கி உலகத்தைப் படைத்தார் என்பதை இந்த வசனம் விளக்குகிறது. மோசே மூலம் கர்த்தர் தன்னை அறிமுகப்படுத்தி இந்த வசனத்தை ஆரம்பித்து வைக்கிறார். இதேவிதத்தில்தான் யோவானும் தன்னுடைய சுவிசேஷத்தில் (யோவான் 1:1), ‘ஆதியில் வார்த்தை இருந்தது’ என்று ஆரம்பித்து இயேசு கிறிஸ்துவை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.

கர்த்தரில்லாமல் படைப்பு இல்லை; கர்த்தரில்லாமல் வேதம் இல்லை; கர்த்தரில்லாமல் எதுவும் இருக்க வழியில்லை. உங்களுடைய விசுவாசம் கர்த்தரோடு ஆரம்பிக்கிறதா? கர்த்தரை முதன்மைப்படுத்துகிறதா? இறையாண்மையுள்ள கர்த்தரை, அவருடைய வல்லமை மற்றும் குணாதிசயங்களோடு ஏற்றுக்கொள்ளுகிற விசுவாசமாக இருக்கிறதா? ஆதியாகமத்தின் இந்த முதலாம் வசனத்தில் கர்த்தர் முதன்மைப்படுத்தப்படுகிறார். அவரைச் சுற்றி, அவரிலேயே இவ்வசனத்தின் ஏனைய வார்த்தைகளும், அவை விளக்கும் உண்மைகளும் தங்கியிருக்கின்றன. இவ்வசனத்தின் ‘ஆதியில்’ என்ற வார்த்தையும் அதற்குப்பிறகு வரும் ‘சிருஷ்டி’ என்ற வார்த்தையும் பிரிக்க முடியாதபடி ‘கர்த்தர்’ என்ற வார்த்தையில் மொழிப்பிரகாரமாக தங்கியிருக்கின்றன. அதாவது, காலத்தின் ஆரம்பத்தையும், சிருஷ்டியையும் கர்த்தரில்லாமல் பார்க்க வேதம் அனுமதிக்கவில்லை. அந்தவிதத்திலேயே இந்த வசனத்தின் வார்த்தைகள் அமைந்திருக்கின்றன.

பரிணாமவளர்ச்சிக் கோட்பாடு ‘இயற்கைவாதத்தைப்’ பின்பற்றி கடவுளில்லாமல் உலகம் உருவாகியதாக விளக்குகிறது. இது கடவுள் நம்பிக்கையற்ற விளக்கம். கடவுள் நம்பிக்கையற்ற இயற்கைவாத விளக்கங்களுக்கு கிறிஸ்தவர்கள் ஒருபோதும் இருதயத்தில் இடங்கொடுக்கக் கூடாது. அது விஷத்தைப்போல இருதயத்தின் ஆத்மீக நம்பிக்கைகளைப் பாதித்துவிடும். பரிணாமவளர்ச்சிக் கோட்பாட்டைப் பின்பற்றி உருவாகியிருக்கும் ஏனைய போதனைகளான ‘கடவுளை அடிப்படையாகக் கொண்ட பரிணாமவளர்ச்சிக் கோட்பாடும்’ (Theistic evolution), ‘இடைவெளித் தத்துவமும்’ (Gap theory) கடவுளுக்கு படைப்பில் இடங்கொடுத்தபோதும் கர்த்தரை இறையாண்மையுள்ளவராகக் கணித்து விளக்கங்கொடுக்கவில்லை. அவை கர்த்தரின் படைப்புக் கிரியையை மாசுபடுத்துகின்றன. கர்த்தரே அனைத்தையும் படைத்தார் என்று நம்புவது மட்டுமல்லாமல், அவரே அனைத்தையும் தன்னுடைய வார்த்தையின் மூலம் மாபெரும் அற்புதச் செய்கையால் படைத்தார் என்று நம்புவதும் அவசியம். கர்த்தரின் படைப்பின் செயல் ஓர் அற்புதம். அவருடைய அற்புதச் செய்கையில் இயற்கையை நாம் புகுத்தக்கூடாது. கர்த்தர் மட்டுமே அற்புதங்களைச் செய்யக்கூடியவர்.

2. படைப்பு எப்போது நிகழ்ந்தது?

ஆதியாகமத்தின் முதலாம் வசனம் கர்த்தர் ‘ஆதியில்’ படைத்தார் என்று விளக்குகிறது. இது சரியான மொழிபெயர்ப்பு. இதைத் ‘தொடக்கத்தில்’, ‘ஆரம்பத்தில்’ என்றும் பொருள் கொள்ளலாம். இந்த வார்த்தை மூலம் எதைக் கர்த்தர் விளக்குகிறார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆதியில் என்ற இந்த வார்த்தைக்கும் கர்த்தர் என்ற பதத்திற்கும் பெருந்தொடர்பிருக்கின்றது. ஒன்று மற்றதில் தங்கியிருக்கின்றது.

சில ஆங்கில மொழிபெயர்ப்புகள், ‘ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்’ என்பதை ‘கர்த்தர் சிருஷ்டியை ஆரம்பித்தபோது . . .’ என்று மொழிபெயர்த்திருக்கின்றன. (Foot note of Revised Standard Version, Moffatt Bible). முதலில் இது மொழிபெயர்ப்பு இலக்கணங்களை மீறிய ஒரு மொழிபெயர்ப்பாகும். இப்படி மொழிபெயர்ப்பதன் மூலம் இந்த முதலாம் வசனத்தை முடிவற்ற ஒரு வசனமென்றும், அது மூன்றாம் வசனத்தில் ‘தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார்’ என்பதில் தங்கியிருக்கும் வசனம் என்றும் இந்த மொழிபெயர்ப்பாளர்கள் விளக்கமளித்திருக்கிறார்கள். இப்படி இவர்கள் செய்ததற்கு முக்கிய காரணம் உண்டு. இப்படி மொழிபெயர்க்கும்போது இரண்டாம் வசனம் ஓர் இடைச்செருகலாக அமைந்து முதலாம் வசனத்தின் பொருளை மாற்றி, ‘கர்த்தர் சிருஷ்டியை ஆரம்பித்தபோது . . . பூமியானது ஒழுங்கின்மையாகவும், வெறுமையாகவும் இருந்தது’ என்பதில் போய் முடிகிறது. இதன்படி கர்த்தர் சிருஷ்டியை ஆரம்பித்தபோது ஏற்கனவே அவருடைய சிருஷ்டிக்கான மூலப் பொருள்கள் காணப்பட்டன என்ற கருத்து உருவாகின்றது. அதாவது, கர்த்தர் படைப்பை ஆரம்பிக்கும் முன்பே உலகம் இருந்தது, ஆனால் அது ஒழுங்கில்லாமல் இருந்தது என்ற கருத்தை இது தருகின்றது. ஆனால், ‘ஆதியில் தேவன் . . . சிருஷ்டித்தார்’ என்ற நம் தமிழ் வேதத்தில் காணப்படும் சரியான மொழிபெயர்ப்பு எந்தப் பொருளையும் பயன்படுத்தாமல், எதன் துணையும் இல்லாமல் கர்த்தர் உலகத்தைப் படைத்தார் என்ற உண்மையான அர்த்தத்தைத் தருகிறது. ஆதியாகமத்தின் முதலாம் வசனத்தை முடிவற்ற வசனமாக மொழிபெயர்க்கிறவர்கள், ஒன்றையும் பயன்படுத்தாமல் கர்த்தர் உலகத்தை சிருஷ்டித்தார் என்ற போதனையை நிராகரிப்பதற்காக அப்படிச் செய்திருக்கிறார்கள். இதன் மூலம் இவர்கள் படைப்பைப் பற்றித் தாங்கள் கொண்டிருக்கும் நோக்கத்தை வேதத்தில் திணிக்கப் பார்க்கிறார்கள். இது முழுத் தவறு. நம்முடைய சொந்தக் கருத்துகளுக்கு ஏற்றமுறையில் வேதத்தை நாம் மொழிபெயர்க்கவோ, அதன் பொருளை மாற்றியமைக்கவோ முயலக் கூடாது.

ஆதியாகமத்தின் முதல் வசனத்தில், ‘ஆதியில்’ (Bereisheet) என்ற வார்த்தை காலத்தின் துவக்கத்தை விளக்குகிறது. அதற்கு முன் காலம் இருக்கவில்லை. ஆதியில் கர்த்தர் சிருஷ்டித்தபோதே காலம் உருவானது. அதற்கு முன் எதுவுமே இருக்கவில்லை; கர்த்தர் மட்டுமே நித்தியத்திலிருந்து இருந்தார். அவருக்கு ஆரம்பமும் முடிவும் இல்லை. அவர் காலத்துக்குக் கட்டுப்பட்டவர் அல்ல. காலம் ஆதியில் உண்டாவதற்கு முன் எந்தப் பொருளோ, மனிதனோ காணப்படவில்லை. அவ்வாறிருந்தபோதுதான் நித்தியத்திலிருந்து இருந்து வந்த கர்த்தர் இடைப்பட்டு வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்; காலத்தை ஆரம்பித்து வைத்தார்.

3. படைப்பு எப்படி நிகழ்ந்தது?

ஆதியாகமத்தின் முதலாம் வசனம், ‘ஆதியிலே தேவன் . . . சிருஷ்டித்தார்’ என்றிருக்கிறது. இங்கே ‘சிருஷ்டித்தார்’ என்ற வார்த்தை எபிரெய மொழியில் (bara) மிக முக்கியமானது. இது ஒரு வினைச்சொல் ஆனால், எபிரெய மொழியில் இது ஆண்பாலில் இருக்கிறது. ஆங்கிலத்திலும், தமிழிலும் வினைச்சொற்கள் ஆண், பெண்பாலில் காணப்படுவதில்லை. சிருஷ்டி இங்கே கர்த்தரோடு தொடர்புபடுத்திக் காட்டப்படுகிறது. அது மட்டுமல்லாமல் இந்த வார்த்தை வேதத்தில் கர்த்தரோடு மட்டுமே தொடர்புபடுத்திப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கர்த்தரில்லாமல் சிருஷ்டி நிகழ வழியில்லை என்பதை இது சுட்டிக்காட்டுகின்றது. கர்த்தரில்லாமல் சிருஷ்டியைப் பற்றி சிந்திக்க முடியாது என்பதை இது வலியுறுத்துகிறது. இந்த வார்த்தை ஆதியாகமம் 2:3, 4 ஆகிய வசனங்களிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

சிருஷ்டி (பாரா) என்ற இந்த வார்த்தையில் ஆழமானதோர் அர்த்தமுண்டு. அதாவது, ‘ஒன்றுமில்லாததிலிருந்து படைக்கப்படுதல்’ (ex hihilo) என்ற அர்த்தம் இதில் இருக்கிறது. நாம் எதையும் உருவாக்க வேண்டுமானால் நமக்கு மூலப் பொருட்கள் தேவை. மூலப் பொருட்கள் இல்லாமல் நம்மால் எதையும் உண்டாக்க முடியாது. காகிதக் கப்பல் ஒன்று செய்ய வேண்டுமானால் நமக்கு காகிதம் தேவை. எதை உருவாக்க வேண்டுமானாலும் நமக்கு மூலப்பொருட்கள் அவசியம். ஆனால் இறையாண்மையுள்ள கர்த்தருக்கு அவை அவசியமில்லை. அவர் எதன் அவசியமும் இல்லாமல், எதையும் பயன்படுத்தாமல் எதை வேண்டுமானாலும் உருவாக்க வல்லவர். அந்தப்படி மூலப்பொருட்கள் எதுவும் இல்லாமல், ஒன்றுமில்லாததிலிருந்து கர்த்தர் வானத்தையும் உலகத்தையும் படைத்தார் என்பதை இந்த வார்த்தையான சிருஷ்டி நமக்கு விளக்குகிறது. ஆங்கிலத்திலும், தமிழிலும் ‘உருவாக்குதல்’ என்ற வார்த்தை பரந்த அர்த்தத்தைக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே இருப்பவற்றை வைத்து நாம் உருவாக்கும் எதையும் குறிப்பிட இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். எபிரெய மொழியில், இங்கே ஆதி 1:1ல் ‘சிருஷ்டி’ எந்த வார்த்தை ஒன்றுமில்லாததிலிருந்து சிருஷ்டித்தல் என்ற அர்த்தத்தை மட்டுமே கொண்டிருக்கிறது.

எபிரெயர் 11:3, ‘விசுவாசத்தினாலே நாம் தேவனுடைய வார்த்தையினாலே உலகங்கள் உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய் காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம்’ என்று எபிரெயருக்கு எழுதியவர் நாம் மேலே பார்த்த உண்மையைப் புதிய ஏற்பாட்டில் தெளிவாக விளக்கியிருக்கிறார். இங்கே பழைய ஏற்பாட்டு சத்தியத்தைப் புதிய ஏற்பாடு ஆணித்தரமாக நிரூபிப்பதைக் காண்கிறோம்.

சிருஷ்டி ஓர் அற்புதம். அற்புதங்களைக் கர்த்தர் மட்டுமே செய்ய வல்லவர். உலகத்தில் இருக்கும் மெஜிக் வித்தைக்காரனுக்கு மெஜிக் செய்ய பொருட்கள் தேவை. அவற்றைப் பயன்படுத்தியே நம் கண்களை ஏமாற்றி அவன் வித்தை செய்கிறான். கர்த்தர் சிருஷ்டி மூலம் மாஜிக் செய்யவில்லை. அவர் அற்புதத்தை, உலகமே அறிந்திராத, எவரும் செய்யமுடியாத அற்புதத்தைச் செய்தார். கர்த்தருடைய அற்புதங்கள் அனைத்துமே அந்தவகையில்தான் அமைந்திருக்கின்றன. பரிணாமவளர்ச்சிக் கோட்பாடும், அதிலிருந்து புறப்பட்டுள்ள சிருஷ்டி பற்றிய இவெஞ்சலிக்கள் விளக்கங்களும் கர்த்தரின் மாபெரும் சிருஷ்டியாகிய அற்புதத்தை மாசுபடுத்துகின்றன. கர்த்தருடைய வல்லமையைக் குறைவுபடுத்துகின்றன. லாசருவை மரணத்திலிருந்து விடுவித்து உயிர்கொடுக்க இயேசு வார்த்தையை மட்டுமே பயன்படுத்தினார். அவர் பேசியபோது லாசரு உயிர்த்தெழுந்தான். அதேபோல் கர்த்தர் பேசியபோது உலகம் உருவானது. எந்தவித படிமுறைப் பரிணாமவளர்ச்சியையும் அறியாது உடனடியாக, அவர் ‘உண்டாகக்கடவது’ என்ற சொன்ன அதே நிமிடமே, அவர் எது உண்டாகக்கடவது என்று சொன்னாரோ அது உருவானது. இதுவே கர்த்தரின் சிருஷ்டியாகிய மகா அற்புதம். எபிரெயருக்கு எழுதியவர் 11:3ல் சொன்னதுபோல் இதை விசுவாசத்தினால் மட்டுமே ஒருவரால் ஏற்றுக்கொள்ள முடியும். விசுவாசமில்லாதவர்களும், சத்தியப் புரட்டர்களுந்தான் இதை விசுவாசிக்க மறுப்பார்கள்.

4. படைக்கப்பட்டவை எவை?

‘ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்’ என்று ஆதியாகமம் 1:1ல் வாசிக்கிறோம். கர்த்தர் ‘வானத்தையும் பூமியையும்’ படைத்ததாக இந்த வசனம் சொல்லுகிறது. வானத்தையும் பூமியையும் என்ற வார்த்தைப் பிரயோகத்தை ஆராய்வது அவசியம். முதலில் மூலமொழியான எபிரெயத்தில் தமிழில் ‘வானம்’ என்று ஒருமையில் இருப்பது பன்மையில் ‘வானங்கள்’ என்றே இருக்கின்றது. அந்தவிதத்திலேயே தரமான ஆங்கில மொழிபெயர்ப்புகளெல்லாம் மொழிபெயர்த்திருக்கின்றன.

இந்த வசனத்தின் வார்த்தைப் பிரயோகமான ‘வானங்களும் பூமியும்’ என்பது எதைக்குறிக்கவில்லை என்பதை முதலில் பார்ப்போம். முதலாவதாக, எந்தத் துணைப்பொருளையும் பயன்படுத்தாமல் கர்த்தர் வானங்களையும், பூமியையும் சிருஷ்டித்தார். இவற்றை உருவாக்குவதற்கு அவருக்கு எதுவும் தேவையிருக்கவில்லை. ஒன்றிலுமிருந்து இவை உருவாக்கப்படவில்லை. இவற்றில் எதுவும் அதற்கு முன்பு இருந்ததில்லை. முதன்முறையாக கர்த்தரின் வார்த்தையின் மூலம் இவை எந்தப் படிமுறை வளர்ச்சியும் இல்லாமல் உடனடியாக உருவாயின. இதற்கு மேல் எந்த விளக்கத்தையும் நாம் கொடுக்க முடியாது. அப்படிக்கொடுக்கும்படியாக இந்த வசனத்தில் கர்த்தர் வேறு எதையும் சொல்லவில்லை. இதுவே கர்த்தருடைய வார்த்தையின் அற்புதம். அவருடைய வார்த்தையை நாம் உலகத்து எழுத்துக்களைப் போல மனித சிந்தனையின் அடிப்படையில் ஆராய்ந்து விளங்கிக்கொள்ள முடியாது. கர்த்தரின் வார்த்தையின் சிறப்பு அம்சமே அது அவருடைய ஆணித்தரமான, மெய்யான, தவறிழைக்க முடியாத வார்த்தை என்பதுதான். இப்படிச் சொல்லுவதை சிலர் ‘இது கண்மூடித்தனமான நம்பிக்கை’ என்பார்கள். உண்மையில் இது அப்படிப்பட்டதல்ல. இது கர்த்தரை அறிந்துகொள்ளுகிற அறிவால் பரிசுத்த ஆவியால் ஏற்படுகின்ற அசையா நம்பிக்கை; விசுவாசம். இத்தகைய விசுவாசத்திற்கு ஈடு இணை கிடையாது. கடவுளை அறியாதவர்களால் இதை நம்புவது கஷ்டந்தான். இவெஞ்சலிக்கள் விசுவாசிகள் இதை நம்ப மறுப்பதுதான் மிகக் கொடூரமானது. சிருஷ்டியை வேதம் விளக்குகிற முறையில் நம்ப மறுக்கும் இருதயத்தின் விசுவாசம் நிச்சயம் சந்தேகத்துக்குரியதுதான். உண்மையில் விசுவாசம் இல்லாமல் இதை நம்புவது கடினம். கிறிஸ்துவில் மெய்விசுவாசம் இருந்தால் மட்டுமே வேதத்தை உள்ளது உள்ளவாறு கர்த்தரின் வார்த்தையாக ஏற்றுக்கொள்ள ஒருவரால் முடியும்.

இந்த வசனத்தைப் பொறுத்தவரையில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சம், இந்த வசனம் சிருஷ்டியைப் பற்றிய பொதுவான விளக்கத்தைத் தருகிறது என்பதைத்தான். பொதுவான விளக்கத்தை முதலில் தந்துவிட்டு அதற்குப்பிறகு வரும் வசனங்களின் மூலம் அந்த சிருஷ்டி எந்தவகையில் நிகழந்தது என்பதைக் கர்த்தர் விளக்குகிறார். ஆகவே, ‘வானங்களையும், பூமியையும்’ என்ற வார்த்தைப் பிரயோகங்களை நாம் பொதுவானவிதத்தில் மட்டுமே இந்த இடத்தில் விளங்கிக்கொள்ள வேண்டும். அதற்கு மேல் அர்த்தங்களைத் தேட முயற்சிக்கக்கூடாது. உண்மையில் இந்த வார்த்தைப் பிரயோகம் எதை விளக்குகிறது? அதாவது, கர்த்தர் ‘எல்லாவற்றையும் குறிப்பாக அவற்றில் உலகத்தையும்’ படைத்தார் என்பதையே இந்த வார்த்தைப் பிரயோகங்கள் விளக்குகின்றன. இதேமுறையிலான வார்த்தைப் பிரயோகத்தை ஏசாயா 1:1ல் காண்கிறோம். ‘. . . யூதாவையும் எருசலேமையும் குறித்துக்கண்ட தரிசனம்’ என்று அங்கே வாசிக்கிறோம். இதில் ‘யூதாவையும் எருசலேமையும்’ என்ற பதங்களைக் கவனியுங்கள். இதற்கு அர்த்தம் என்ன தெரியுமா? யூதாவையும் குறிப்பாக எருசலேமையும் என்பதுதான். அதேமுறையில்தான் ஆதியாகமம் 1:1ல் ‘வானங்களையும் பூமியையும்’ என்ற பதங்கள் அமைந்திருக்கின்றன. வானங்கள் என்றால் என்ன? பூமி என்றால் என்ன? என்று விளக்குவதை இந்த வசனம் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. அதுபற்றிய விளக்கத்தை இந்த வசனத்தை அடுத்து வரும் வேதப்பகுதி விளக்கப்போகிறது. கர்த்தரின் சிருஷ்டி பற்றிய பொதுவான விளக்கத்தைத் தருவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்கும் இந்த வசனம் ‘அனைத்தையும் குறிப்பாக அவற்றில் உலகத்தையும்? கர்த்தர் படைத்தார் என்பதை இந்த வார்த்தைப் பிரயோகங்களின் மூலம் விளக்குகிறது.

முடிவாக . . .

இதுவரை ஆதியாகமம் 1:1ஐ விளக்கமாக ஆராய்ந்திருக்கிறோம். இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நடைமுறைப் போதனைகள் என்ன தெரியுமா?

1. இந்த ஆரம்ப வசனம் கர்த்தர் எத்தனை பெரியவர் என்பதை நமக்கு உணர்த்தி மிகத்தாழ்மையோடு அவருக்குப் பணிசெய்ய நம்மைத் தூண்டுகிறது.

இன்றைக்கு கிறிஸ்தவர்கள் மத்தியில் அரிதாகக் காணப்படும் அம்சம் தேவபயமே. கர்த்தரை நேசிக்கிறேன், கர்த்தரில் இன்பமடைகிறேன், கர்த்தரிடம் எல்லாவற்றையும் கேட்டு நிற்கிறேன், கர்த்தர் என்னை ஆசீர்வதிக்கிறார், கர்த்தர் என்னைத் தாங்குகிறார், கர்த்தர் என்னோடு பேசுகிறார், கர்த்தர் என் ராஜா என்று இன்னும் எத்தனையெத்தனையோ விஷயங்களைக் கிளிப்பிள்ளைபோல சொல்லுகிறவர்களை எல்லா இடங்களிலும் காண்கிறோமே தவிர ‘கர்த்தருக்கு நான் பயப்படுகிறேன்’ என்று சொல்லுகிற ஒரு கிறிஸ்தவனையாவது நாம் காண்பதில்லை. இது ஏன் என்று என்றாவது சிந்தித்துக் கேட்டுப்பார்த்திருக்கிறீர்களா? இதற்குக் காரணம் அநேகருக்கு தேவபயமென்பதே இல்லாமல் போயிருப்பதுதான். தன்னுடைய இஷ்டத்துக்கு இழுபடுகிற கர்த்தரே இன்றைக்கு மனிதனுக்கு தேவையாயிருக்கிறது. இந்துக் கடவுளுக்குத் தன்னுடைய தேவையை நிறைவேற்றிக்கொள்ள சுயநலத்தோடு தேங்காய் உடைத்து பூசை செய்கிறவனைப்போலவே அநேக கிறிஸ்தவர்கள் கர்த்தரைப் பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறார்கள். கர்த்தருக்குப் பயப்பட்டுப் பணிந்து மிகத்தாழ்மையோடு பணி செய்கிற கிறிஸ்தவர்களைக் காண்பது அரிதாக இருக்கிறது. கிறிஸ்துவை விசுவாசிப்பது சுயநலத்திற்காக, சுவிசேஷம் சொல்லுவது சுயப்பெருமைக்காக, கிறிஸ்தவ ஊழியம் வயிற்றுப்பாட்டுக்காக, கிறிஸ்துவை ஆராதிப்பது சுயமனமகிழ்ச்சிக்காக என்று சுயத்தைச் சார்ந்த கிறிஸ்தவ விசுவாசத்தை எங்கும் பார்க்கிறோமே தவிர தேவபயத்தை வெளிப்படுத்துகிற கிறிஸ்தவத்தை நடைமுறையில் பார்ப்பது அரிதாக இருக்கிறது. ஆதியாகமத்தின் முதல் வசனத்தின் மூலம் கர்த்தர் நம்மைப் பார்த்து, ‘நான் கர்த்தர்’ என்பதை உணர்ந்துகொள், நீ என்னால் படைக்கப்பட்ட, என்னுடைய மகிமைக்காகப் படைக்கப்பட்ட வெறும் மனிதன்தான் என்பதை உணர்ந்து எனக்குப் பயந்து பணிந்து நடந்துகொள் என்று சொல்லுகிறார்.

2. இத்தனைப் பெரிய கர்த்தரை அறியாமலும், அவரை விசுவாசிக்காமலும் இருப்பது எத்தனை தவறு என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

அனைத்தையும் படைத்தவரை அறியாமல் இருந்து மனிதன் கரைசேர்ந்துவிட முடியுமா? படைக்கப்பட்டவன் படைத்தவரில்லாமல் என்ன செய்துவிடமுடியும்? பாவத்தைச் செய்து அதிலிருந்து விடுபட வழியில்லாமல் பாவத்தில் மூழ்கி திணறிக்கொண்டிருக்கும் மனிதா, நீ கர்த்தரை இப்போதே உடனடியாக, அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து அறிந்துகொள் என்று இந்த முதல் வசனம் அறைகூவலிடுகிறது. நான் படைத்தவன், எனக்குப் பணிசெய்வதே உன் வாழ்க்கைக் குறிக்கோளாக இருக்க வேண்டும், நானில்லாமல் நீ இருக்க வழியில்லை, இப்போதே உன் பாவ விடுதலைக்காக, பாவநிவாரணத்திற்குப் பூரணவழி ஏற்படுத்தித்தந்திருக்கும் இயேசு கிறிஸ்துவை மனந்திரும்பி விசுவாசித்து என்னை ஆராதித்து வாழ் என்று இந்த வசனத்தின் மூலம் கர்த்தர் சுவிசேஷ அழைப்பைக் கொடுக்கிறார்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s