தேவ கோபம்

இந்த வருடத்தில் வெளிவந்த இரண்டாவது இதழில் ‘கிருபாதார பலியா, கோபநிவாரண பலியா?’ என்ற ஆக்கத்தில் அதன் இறுதிப் பகுதியில் தேவ கோபத்தைப் பற்றி விளக்கியிருந்தேன். மனிதர் மேலிருக்கும் கர்த்தரின் கோபத்தை நீக்கி அவர்களுக்கு பாவநிவாரணமளிப்பதற்காகவே இயேசு கல்வாரியில் மரித்தார். கிறிஸ்துவின் சிலுவைப்பலியின் மூலம் மனந்திரும்புகிற பாவிகளின் மேலிருக்கும் தேவ கோபம் நீக்கப்படுகிறது என்ற கிரேக்க மொழிபெயர்ப்பில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தையில் காணப்படும் சத்தியத்தைத் தமிழ்வேத மொழிபெயர்ப்பில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ‘கிருபாதார பலி’ என்ற பதம் விளக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி அதற்கு மாற்றுப் பதமாக ‘கோபநிவாரண பலி’ என்ற பதம் பொருத்தமானதாக இருக்கும் என்று விளக்கியிருந்தேன். தேவன் பாவிகள் மீது கோபத்தோடு இருக்கிறார் என்ற வேத உண்மையை மறுதலிக்கிற அநேகர் இருக்கிறார்கள். ஆகவே தேவ கோபத்தைப் பற்றி வேதம் என்ன சொல்லுகிறது என்பதை நாம் ஆராய்ந்து பார்க்காமல் இருக்க முடியாது.

தேவ கோபமும், சி. எச். டொட் போன்றோரும்

தேவகோபத்தை மறுதலித்தவர்களில் முக்கியமானவர் சி. எச். டொட் என்ற இறையியலறிஞர். இவரைப் பற்றி முதல் ஆக்கத்தில் சிறிது விளக்கியிருந்தேன். இவர் கேம்பிரிட்ஜில் 14 வருடங்கள் இறையியல் பேராசிரியராக கடமைபுரிந்ததோடு, புதிய ஆங்கில வேதாகமத்தின் (New English Bible) புதிய ஏற்பாட்டுப் பகுதியை மொழிபெயர்த்தவர்களின் குழுவின் அதிபராகவும் இருந்தவர். இவர் பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தின் 1:18ம் வசனத்திற்குத் தந்த விளக்கத்தில் பின்வருமாறு எழுதியிருக்கிறார்.

“கடவுளுக்கு கோபம் வருகிறது என்று சொல்லுவது மனித குணாதிசயத்தை அவரில் இருப்பதாகக் காட்டுவதாகும். கடவுளைப் பற்றி பவுல் எழுதுகிறபோது அவருக்குக் கோபம் வருகிறது என்ற வினைச்சொல்லைப் பயன்படுத்தி ஒருபோதும் எழுதியதில்லை. ‘கடவுளின் கோபம்’ என்ற வார்த்தைப் பிரயோகத்தில் காணப்படும் ‘கோபம்’ என்ற வார்த்தைக்கு அடிப்படை அர்த்தம் ஆரம்பத்தில் கோப உணர்வாக இருந்தபோதும், பவுலின் காலத்தில் அந்த அர்த்தத்தை அது இழந்து உணர்வுகளற்ற, பாவத்தின் விளைவினால் உண்டானதொன்றாக மட்டுமே கருதப்பட்டது. ஆகவே, கடவுளில் கோபம் என்ற குணாதிசயம் இல்லாமல்போய் அவருடைய அன்பும் கருணையும் மட்டுமே மேலோங்கி நிற்கிறது. இதைப் பவுல் ஏற்றுக்கொண்ட போதும் கடவுளில் கோபம் இருக்கிறது என்பதைத் தன்னுடைய எழுத்துக்களில் இருந்து நீக்கவில்லை. கடவுளில் எல்லையற்ற மன்னிப்பு காணப்படுகிறது என்பதையே நான் நம்புகிறேன்; அதையே இயேசு கிறிஸ்துவும் போதித்தார். கடவுளில் கோபமாகிய குணாதிசயம் காணப்படுகிறது என்று பவுல் எழுதியிருந்தாலும், இது இயேசு கிறிஸ்துவின் போதனைகளில் ஒருபோதும் காணப்படவில்லை. இயேசு கிறிஸ்துவின் உவமைகளுக்கு நாம் நீதியற்ற முறையில் விளக்கங்கொடுத்தால் தவிர கடவுளில் கோபம் இருக்கிறது என்று நிரூபிக்க வழியில்லை.”

சி. எச். டொட்டின் இந்தக் கூற்றின்படிப் பார்த்தால், கடவுள் எந்தவிதத்திலும் கோபப்படுவதற்கு வழியே இல்லை. கடவுளின் கோபத்தைப் பற்றிப் பவுல் எழுதியிருந்தபோதும் மனிதர்களாகிய நாம் கடவுளைப் புரிந்துகொள்ளவே அவர் அப்படி எழுதினாரே தவிர உண்மையில் கடவுளில் கோபத்துக்கு வழியில்லை என்கிறார் டொட். கோபம் என்பது பாவத்தினாலான மனித உணர்வு மட்டுமே என்று கருதும் டொட் கடவுளில் காணப்படும் கோபமாகிய குணாதிசயத்தை அடியோடு மறுதலிக்கிறார். மேலும் கடுமையாக, “ ‘தேவ கோபம்’ என்பதெல்லாம் பழைய பஞ்சாங்கக் கதை என்றும் பழங்காலத்துக்கு மட்டுமே பொருத்தமான” கருத்து என்றும் சாடுகிறார்.

1931ம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகரில் இருந்த எல்ம்வுட் பிரஸ்பிடீரியன் சபையில் ஒரு விவாதம் நிகழ்ந்தது. அந்தக் காலத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்த இரண்டு போதகர்கள் (Dr. Frazer-Hurst and Hyndman) இந்த விவாதத்தில் கலந்துகொண்டனர். விவாதத்தினிடையில் டாக்டர் பிரேசர் தன் சிறுவயதில் இருந்து கற்றிருந்த வினாவிடைப் போதனை நூலில் இருந்து ஒரு வினாவைக் குறிப்பிட்டார். அந்த வினா, ‘பிறப்பிலிருந்து உன்னுடைய குணாதிசயம் என்ன?’ என்பதாகும். அதற்குப் பதில் & ‘நான் கடவுளுக்கு எதிரி, சாத்தானின் குழந்தை, நரகத்துக்குப் பாத்திரமானவன்’ என்பதாகும். இதைக் குறிப்பிட்ட பின் டாக்டர் பிரேசர், இந்தப் போதனை மனிதத்தன்மையற்ற மகாக்கேடான போதனை என்று சொல்ல, ஹைன்ட்மன் அவரோடு இணைந்து, இத்தகைய எண்ணங்கள் பழங்காலத்துப் பரம்பரைக்கே சொந்தமானது என்று கூறியிருக்கிறார். இதை வரலாறு விளக்குகிறது.

லிபரல் போதனையாளரும், கடவுளை அறியாதவர்களும் வேதபோதனையான ‘தேவ கோபத்தை’ அடியோடு நிராகரிக்கிறார்கள். கடவுளின் கோபமாகிய போதனைக்கெதிரான கடும் எதிர்ப்பைக் கவனிக்கின்ற இவெஞ்சலிக்கள் சமுதாயம் கடவுளின் மன்னிப்பிற்கும், அன்பிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து பிரசங்க மேடைகளில் கடவுளின் கோபத்தைப் பற்றிப் பிரசங்கிப்பதையே தவிர்த்துவிடுகிறது. இந்த முறையில் ‘தேவ கோபம்’ பிரசங்க மேடைகளில் தவிர்க்கப்பட்டும், கடவுளின் மன்னிப்பு மற்றும் அன்பின் அடிப்படையில் அதற்குப் புதுவிளக்கம் கொடுக்கப்பட்டும் வருவதால் பாவம் மற்றும் கடவுளின் நியாயத்தீர்ப்பு பற்றிய அடிப்படைக் கிறிஸ்தவ போதனைகள் இன்றைக்கு பெரும் பாதிப்புக்குள்ளாகி கிறிஸ்தவர்கள் மத்தியில் அவை குறித்த குழப்பத்தை உருவாகியிருக்கின்றன. அதனால்தான் இன்றைக்கு அநேகர், தேவ கோபம், கடவுளின் பயங்கரம், நரகம் பற்றியெல்லாம் பிரசங்கிப்பதையும் பேசுவதையும் தவிர்த்து விடுகின்றனர்.

வேதமும், கிறிஸ்தவ விசுவாசமும்

இவெஞ்சலிக்கள் சமுதாயம் இன்றைக்கு அடிப்படை வேத சத்தியங்களுக்கெல்லாம் புதுவிளக்கங்கள் தந்து உருமாற்றி அழித்து வருவதால் ‘வேதத்தை நம்புகிறோம்’ என்று மட்டும் தொடர்ந்து நாம் கிளிப்பிள்ளைபோல் சொல்லிக்கொண்டு வருவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை. நாம் உண்மையில் விசுவாசிக்கும் வேத சத்தியங்களைத் தெளிவாக விளக்கும் விசுவாச அறிக்கைகள், வினாவிடைப் போதனைகளுக்கு ஒப்புக்கொடுத்து, நடைமுறையில் அவற்றைப் பயன்படுத்தி நம்முடைய விசுவாசத்தைக் காத்துக்கொள்ள வேண்டும். வேதத்தை மட்டுமே விசுவாசிப்பேன் என்று பெருமையோடு மார்தட்டித் தான் விசுவாசிப்பதை விளக்கிச்சொல்ல மறுப்பவர்களுடன் பேசி நான் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. வேதத்திற்கு சமமான அதிகாரத்தை விசுவாச அறிக்கைகள் கொண்டிராவிட்டாலும், வேதத்தில் இருப்பதை மட்டும் போதிக்கும் விசுவாச அறிக்கைகளை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களோடு நாம் நடைமுறையில் ஒருமனப்பட்டு ஐக்கியத்தில் வருவது முடியாத காரியம்.

இயேசு கிறிஸ்துகூட நம்முடைய விசுவாசத்தை நாம் அறிக்கை செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார். பவுல் ரோமர் 10ல் நாம் நம்முடைய விசுவாசத்தை வாய் திறந்து அறிக்கை செய்ய வேண்டும் என்கிறார். விசுவாசம் என்று இயேசுவும், பவுலும் சொல்லியிருப்பது வெறுமனே இயேசுவை விசுவாசிக்கிறேன் என்று மட்டும் சொல்வதை அல்ல; எந்த இயேசுவை, எத்தகைய விசுவாசத்தைத் தந்திருக்கிற இயேசுவை, அதை எப்படித் தந்தார் என்பதை, நம் விசுவாசத்தின் மெய்த்தன்மையை அறிக்கை செய்வதையே அவர்கள் விசுவாசம் என்ற வார்த்தையின் மூலம் அர்த்தப்படுத்தியிருக்கிறார்கள். ‘இயேசுவை விசுவாசிக்கிறேன்’ என்ற வார்த்தைகள் இன்றைக்கு அர்த்தமற்ற வார்த்தைகளாக மாறிவிட்டன. அந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகிறவர்களுக்கு மறுபிறப்பு, மனமாற்றம் என்றால் உண்மையில் என்னவென்று தெளிவாகச் சொல்ல முடியாமலிருக்கிறது. சில போதகர்கள், ‘பாவிகள் இயேசுவை விசுவாசிப்பது மட்டுமே அவசியம், அவர்கள் இறையியல் அறிஞர்களாக இருக்க வேண்டியதில்லை’ என்ற அசட்டுத்தனமான பேச்சினால் கிறிஸ்துவை விசுவாசிப்பது என்ற மகோன்னதமான அனுபவத்தை மெரினா பீச்சில் ஐந்து ரூபாய்க்கு சுண்டல் வாங்குகிற அளவுக்கு ‘சீப்பாக்கி’ விட்டிருக்கிறார்கள். கிறிஸ்துவில் தனக்கிருக்கும் விசுவாசத்தைத் தெளிவாக சொல்லத்தெரியாமலும், வாழ்க்கையில் வெளிப்படுத்த முடியாமலும் தடுமாறுகிறவர்கள் கிறிஸ்தவர்களாக இருப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. நம்முடைய விசுவாசம் வேதபோதனைகளோடு ஒத்துக் காணப்பட வேண்டும். கிறிஸ்துவில் விசுவாசம் என்பது வெறும் அனுபவம் மட்டுமல்ல; அது வேதசத்தியத்தை அடிப்படையாகக் கொண்டமைந்திருக்கும் அனுபவம். நம்முடைய விசுவாசம் விளக்கிச் சொல்லப்படக்கூடிய விசுவாசம்; தெளிவாக அறிக்கையிட வேண்டிய விசுவாசம். இன்றைக்கு கிறிஸ்தவ அனுபவமும், கிறிஸ்தவ வாழ்க்கையும் உண்மையானதாக இருக்க வேண்டுமானால் அவை சத்தியத்தின் அடிப்படையில் அமைந்ததாக இருக்க வேண்டும். சத்தியத்தோடு ஒத்துப்போகாத எந்த விசுவாசமும், விசுவாச வாழ்க்கையும் கிறிஸ்துவில் இருந்து வெளிப்பட்டதாக இருக்க முடியாது. அதனால்தான் இன்றைக்கு வேதத்தோடு, விசுவாச அறிக்கைகளையும், வினாவிடைப் போதனைகளையும் பயன்படுத்திப் போதனையளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.

தேவ கோபமும், 1689 விசுவாச அறிக்கையும்

தேவ கோபத்தை வேதம் விளக்கும் விதத்தை நாம் இந்த ஆக்கத்தின் முதல் பகுதியில் ஏற்கனவே பார்த்திருக்கிறோம் (திருமறைத்தீபம் இதழ் 2, 2014). இனி அந்தப் போதனையை எந்தவகையில் 1689 விசுவாச அறிக்கை விளக்குகிறது என்பதை ஆராய்வது நல்லது. அதற்குக் காரணம் வேதம் தேவ கோபத்தைப் பற்றி அளிக்கும் போதனைகளை விசுவாச அறிக்கை தெளிவாகத் தொகுத்துத் தந்திருப்பதுதான். அத்தோடு வேதத்தின் அநேக முக்கிய போதனைகளுக்கும் தேவ கோபத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பையும் விசுவாச அறிக்கை தெளிவாக விளக்கிக் காட்டுகிறது. விசுவாச அறிக்கையென்பது வேதபோதனைகளை நமக்கு உதவுமுகமாக வரிசையாகத் தொகுத்துத் தருகின்ற அருமையான சாதனம்.

கடவுளின் ஆணை (அதி. 3)

1689 விசுவாச அறிக்கையின் 3ம் அதிகாரம் கடவுளின் ஆணையை விளக்குகிறது. கடவுளின் ஆணையை பற்றி வினாவிடைப் போதனை பின்வருமாறு விளக்குகிறது, ‘கடவுள் தன்னுடைய சுயமகிமையின் பொருட்டு, தனது சித்தத்தின் ஆலோசனையின்படி நடைபெறக்கூடிய அனைத்தையும் ஏற்கனவே முன்குறித்துள்ளார்.’ இந்த உலகத்தில் நடைபெறக்கூடிய அனைத்தையும், நன்மை தீமைகள் உட்பட சகலத்தையும் கடவுள் தன்னுடைய மகிமைக்காக ஏற்கனவே முன்குறித்துள்ளார் என்பதே கடவுளின் ஆணை போதிக்கும் உண்மை. கடவுளின் ஆணை இப்படியிருப்பதால் கடவுளே தீமைகளுக்கு காரணகர்த்தா என்று எண்ணிவிடக்கூடாது. மனிதனுடைய எந்தத் தீமையான செயல்களுக்கும் அவர் பொறுப்பாளியல்ல. இருந்தபோதும் பாவத்தின் காரணமாக அனைத்துத் தீமைகளும் நிகழ்ந்தபோதும் கடவுளின் ஆணைக்குள் அனைத்தும் அடங்கியிருக்கின்றன. அவர் இறையாண்மையுள்ள தேவனாக இருப்பதால் அவரை மீறி ஒன்றும் நிகழ்ந்துவிட முடியாது. அவருடைய கட்டுக்குள்ளேயே அனைத்தும் இருந்தபோதும் எந்தப் பாவகரமான காரியங்களுக்கும் அவர் காரணகர்த்தா அல்ல. மனிதனின் தீய எண்ணங்களையும், தீய செயல்களையும், (அவற்றிற்கு அவர் நேரடிக் காரணியாக இல்லாதிருந்தபோதும்), தன்னுடைய திட்டங்களை நிறைவேற்றிக்கொள்ள கடவுள் பயன்படுத்திக் கொள்ளுகிறார்.

கடவுளுடைய ஆணை பற்றிய இந்த அதிகாரத்தில் தேவ கோபத்தை விபரிக்கும் பகுதி எது என்று கவனிப்போம். இதன் 3ம் பத்தி பின்வருமாறு விளக்குகிறது, ‘. . . ஏனையோர் அவரது மேன்மையான நீதி வெளிப்பட்டு துதிபெறும்படியாக தங்கள் பாவத்தில் தொடர்ந்திருந்து நியாயமான கண்டனத்தைப் பெறும்படியாக விடப்பட்டுள்ளார்கள்.’ கடவுளின் ஆணையின் காரணமாக பலர் நித்திய ஜீவனுக்காக நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்று விளக்கியபிறகு ஏனையோர் கடவுளின் நியாயமான கண்டனத்தை அடையும்படி விடப்பட்டுள்ளார்கள் என்று இந்தப் பகுதி விளக்குகிறது. இந்த ‘நியாயமான கண்டனம்’ என்பதை ‘நியாயமான பயங்கரம்’ என்றும் விளக்கலாம். ஆங்கிலத்தில் இது terrors of His justice என்றிருக்கிறது. கடவுளின் ஆணையின்படி சிலர் அவருடைய நீதியான பயங்கரத்தை சந்திக்கப் போகிறார்கள். அதற்குக் காரணம் அவர்கள் தங்களுடைய பாவத்தில் தொடர்ந்திருப்பது மட்டுமே என்று வேதம் விளக்குவதோடு இதுவும் கடவுளின் ஆணையின் ஒரு பகுதியாக விளக்குகிறது. தன்னுடைய அன்பின் காரணமாகத்தான் தெரிந்துகொண்டவர்களுக்கு கிருபையை வெளிப்படுத்தும் கர்த்தர் பாவத்தில் தொடர்ந்திருப்பவர்கள் தன்னுடைய நீதியான பயங்கரத்தை சந்திக்கவும் ஆணையிட்டிருக்கிறார். இதை ரோமர் 9:22&23 விளக்குகிறது. யூதா 1:3&15 வரையுள்ள வசனங்களிலும் இந்தப் போதனையைக் காணலாம். இப்படிச் செய்வதற்கு இறையாண்மையுள்ள கடவுளுக்கு உரிமையுண்டு. நீதியைக் குணாதிசயமாகக் கொண்டுள்ள தேவன் இப்படிச் செய்வதில் முழு நியாயமுண்டு. நீதியானதைத் தவிர அவர் வேறெதையும் செய்யமாட்டார்.

கடவுளின் ‘நியாயமான கண்டனம்’ அல்லது ‘நீதியான பயங்கரம்’ என்று விசுவாச அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது தேவ கோபத்தைத்தான். தேவ கோபத்தையே நியாயத்தீர்ப்பின்போது மனந்திரும்ப மறுப்பவர்கள் (கண்டனத்துக்குள்ளானவர்கள்) சந்திக்கப்போகிறார்கள். இதை விளக்கும் இரண்டு உதாரணங்களைப் பார்ப்போம்.

(1) தன்னுடைய மகன் செய்கிற தவற்றைக் கவனிக்கின்ற தகப்பன் மகனைக் கண்டிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் தவற்றிற்குத் தகுந்த தண்டனையையும் கொடுப்பது வழக்கம்; அதுவே நியாயமானதுமாகும். இந்தத் தண்டனை அடியாக இருந்தால் அது அவனுக்கு சரீரத்தில் துன்பத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். வலிக்காத அடியிருக்க முடியாது. இத்தகைய கட்டுப்பாட்டை, தண்டனையை வழங்கவேண்டுமென்று வேதம் எதிர்பார்க்கிறது. தகப்பன் தன்னுடைய மகனுக்கு வழங்கும் இந்தத் தண்டனையை தகப்பனுடைய பயங்கரத் தண்டனையாகக் கருத முடியாது. இந்தத் தண்டனை மகனைத் திருத்துவதற்காகக் கொடுக்கப்படுவது. கடவுள் அவரால் கைவிடப்பட்டுள்ள, பாவத்தில் இருந்து திருந்த மறுக்கிறவர்களுக்குத் தன்னுடைய நீதியான பயங்கரத்தைக் காட்டுகிறபோது அது அவர்களைத் திருத்துவதற்காகக் கொடுக்கப்படுவதல்ல. அது அவர்கள் நித்தியத்திற்கும் அழியாமல் அனுபவிப்பதற்காகக் கொடுக்கப்படுவது. இந்த பயங்கரத்தை அவர்கள் நரகத்தில் அனுபவிப்பார்கள்.

(2) உள்ளூர் சபைகளில் திருந்தாமல் தொடர்ந்து பாவத்தைச் செய்கிறவர்கள்மேல் ஒழுங்கு நடவடிக்கை கொண்டுவரும்படி வேதம் கட்டளையிடுகிறது. இத்தகைய ஒழுங்கு நடவடிக்கையின் இறுதிக் கட்டமாக சபையில் இருந்து அங்கத்தவர் நீக்கப்படுவார். அவரோடுள்ள சமூக பந்தமும் அகற்றிக்கொள்ளப்படும். ஒழுங்கு நடவடிக்கைக்குள்ளானவருக்கு துன்பத்தையும் அதிக வருத்தத்தையும் ஏற்படுத்துவது இந்த ஒழுங்கு நடவடிக்கையின் நோக்கம். இருந்தபோதும் இந்த ஒழுங்கு நடவடிக்கை திருத்த நடவடிக்கையே தவிர ஒருவரை அழித்துவிடும் பயங்கர நடவடிக்கையல்ல. இந்த ஒழுங்கு நடவடிக்கையிலிருந்து வேறுபட்டது நித்திய ஆக்கினையை பாவத்திலிருந்து மனந்திரும்பாதவர்களுக்கு அளிக்கும் தேவகோபம்.

இந்த உதாரணங்களில் இருந்து தேவ கோபத்தின் தன்மையை நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். சுவிசேஷத்தைக் கேட்டு மனந்திரும்ப மறுத்து பாவத்தில் தொடர்ந்திருப்பவர்கள் மீது காணப்படுவதே தேவ கோபம். இதை விசுவாசிகள் அனுபவிப்பதில்லை. விசுவாசிகள் மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசித்தபோதே அவர்கள்மேலிருந்த தேவகோபம் அகற்றப்பட்டுவிட்டது. விசுவாசிகளில் சிலர் 2 கொரி 5:10 வசனத்தை வாசித்துவிட்டு நியாயத்தீர்ப்பைப் பற்றிய பயத்தோடு இருக்கிறார்கள். அந்த வசனத்தைக் கவனிப்போம்.

‘ஏனென்றால் சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படி நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்பட வேண்டும்.’

இந்த வசனம் சொல்வதென்ன? எல்லோரும் நியாயாசனத்திற்கு முன்பாக நிற்க வேண்டுமென்றும், அப்போது எல்லோருடைய நன்மைகளும், தீமைகளும் பகிரங்கமாக வெளிப்படுத்தப்படும் என்று இந்த வசனம் சொல்லுகிறது. இந்த வசனம் விசுவாசிகள், அவிசுவாசிகளைப்போல நியாயத்தீர்ப்பை எதிர்கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லை. அப்படிப் பொருள்கொள்வதற்கு இந்த வசனம் இடமளிக்கவில்லை. இந்த வசனம் உலகத்து மக்களை தீயவர்கள், நன்மை செய்கிறவர்கள் என்று இரண்டு பகுதியாகப் பிரிக்கிறது. இந்த வசனத்தில் வரும் ‘நாமெல்லாரும்’ என்ற பதத்தை விசுவாசிகளை மட்டும் குறிப்பதாக எடுத்துக்கொள்ளுவது தவறு. இது அவிசுவாசிகள், விசுவாசிகள் எல்லோரையும் இணைத்துக் குறிப்பிடுகிறது. இதில் வரும் ‘அவனவன்’ என்ற பதம் ஒவ்வொருவரும், அதாவது அவிசுவாசியும், விசுவாசியும் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த வசனம் கூறும் ‘தீமைகள்’ தீயவர்களான அவிசுவாசிகளுடையவை; விசுவாசிகளுடையதல்ல. அதேபோல் இந்த வசனம் கூறும் ‘நன்மை’ விசுவாசியுடைய நன்மை. ஆகவே, இந்த வசனத்தின்படி நியாயத்தீர்ப்பு நாளில் விசுவாசிகள் ஆண்டவரால் வரவேற்கப்பட்டு அவர்களுடைய நன்மைகளின் நிமித்தம் அவற்றிற்குரிய பலனை அனுபவிக்க பரலோகத்திற்கு செல்வார்கள். அவர்கள் ஏற்கனவே மன்னிப்புப் பெற்றுள்ள பாவங்களுக்காக இயேசு கிறிஸ்துவால் எல்லோர் முன்பும் அவமானப்படுத்தப்பட மாட்டார்கள். அப்படி எண்ணுவது தவறு. அதேவேளை தீமைகளைச் செய்து ஆண்டவர் முன்பு நிற்கும் அவிசுவாசிகளுடைய பாவத்தின் பலனாக அவர்கள் அன்று நியாயந்தீர்க்கப்பட்டு அதற்குரிய பலனை அனுபவிக்க நரகத்திற்கு அனுப்பப்படுவார்கள். இதைத்தான் இந்த வசனம் விளக்குகிறது.

நியாயத்தீர்ப்பு நாளில் ஒவ்வொருவருடைய விசுவாசத்தின் அடிப்படையிலேயே ஆண்டவர் அவர்களை நியாயந்தீர்க்கப் போகிறார். இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்காதவர்கள் விசுவாசமில்லாதவர்களாகக் கணிக்கப்பட்டு நியாயந்தீர்க்கப்படுவார்கள். விசுவாசிகளுடைய விசுவாசத்தின் பெருமை அந்த நாளில் வெளிப்படுத்தப்பட்டு அவர்கள் பகிரங்கமாக கிறிஸ்துவின் பிள்ளைகளாகக் கணிக்கப்படுவார்கள். விசுவாசிகளுடைய பாவங்கள் இயேசுவின் இரத்தத்தால் முற்றாகக் கழுவப்பட்டிருப்பதால் அன்று அவை கழுவப்பட்டிருப்பதாக மட்டுமே அறிக்கைசெய்யப்படும். கீழ்வரும் வசனங்களைக் கவனியுங்கள். ஏசாயா 43:25. ‘நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்.’ ஏசாயா 44:22, ‘உன் மீறுதல்களை மேகத்தைப் போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப் போலவும் அகற்றிவிட்டேன்; என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக்கொண்டேன்.’ இப்படியெல்லாம் வாக்குறுதி தந்திருக்கும் கர்த்தர் நியாயத்தீர்ப்பு நாளில் தான் ஏற்கனவே மன்னித்து மறந்திருக்கிற பாவங்களை பகிரங்கப்படுத்தி விசுவாசிகளை எல்லோர் முன்பும் அவமானப்படுத்த வேண்டிய அவசியமென்ன? அப்படி நினைப்பதும், பொருள்கொள்வதும் தவறு என்பது இப்போது தெரிகிறதா?

இந்த உலகத்தில் தேவ கோபத்தை சுமந்து நிற்கும் பாவி மனந்திரும்பி விசுவாசத்தை அடைகிறபோது அவன் இயேசுவுக்கு உரியவனாக உடனடியாக நியாயந்தீர்க்கப்படுகிறான். இந்த நியாயத்தீர்ப்பு இரகசியமானது. கர்த்தர் மட்டுமே அறிந்தது. இது பகிரங்கமானது அல்ல. அதே விசுவாசி இந்த உலகத்தில் இறக்கும்போது உடனடியாக, அதே நிமிடம் பரலோகத்தை அடைகிறான். நியாயத்தீர்ப்பு நாளில் இந்த விஷயத்தில் எந்தவித மாற்றமும் நிகழப்போவதில்லை. விசுவாசி பாவசரீரத்தோடு இந்த உலகில் தொடர்ந்து வாழ்ந்தபோதும் அவன் பாவத்தை வெறுத்து அன்றாடம் மனந்திருந்தி வாழ்கிறவனாக, பரலோக நிச்சயத்தோடு வாழ்கிறவனாக இருப்பான். நியாயத்தீர்ப்பு நாளில் அவனுடைய ஆத்துமா சரீரத்துடன் இணைந்து இயேசுவுக்கு முன்பாக அவருடைய ஆடாக அவருடைய வலது பக்கத்தில் நிற்கப்போகிறான் (மத்தேயு 25). இயேசுவோடு இணைந்து நின்று அவன் உலகத்தை நியாயந்தீர்க்கப் போகிறான். அந்த நாளில் அவனுடைய நன்மைகள் வெளிப்படுத்தப்பட்டு, அவன் இயேசுவுக்குரியவனாக வெளிப்படையாக அறிக்கை செய்யப்பட்டு நித்தியத்திற்கும் பரலோகத்தை அனுபவிக்க இயேசுவோடு அங்கு போகப்போகிறான். விசுவாசியினுடைய நன்மைகளே நியாயத்தீர்ப்பு நாளில் பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்டு அவன் பாராட்டுதலுக்குரியவனாக இருப்பான். அவனுடைய பாவங்கள் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டிருப்பதாக அன்று அறிவிக்கப்படும். அத்தோடு விசுவாசிகளுடைய நன்மைகளில் காணப்படும் அனைத்துக் குறைபாடுகளும் அன்று முற்றாக நீக்கப்படும். இதன் காரணமாக விசுவாசிகள் நியாயத்தீர்ப்பை சந்தோஷத்தோடு எதிர்பார்த்துக் காத்திருந்து வாழவேண்டுமே தவிர பயத்தோடு வாழ வேண்டிய அவசியம் இல்லை. நியாயத்தீர்ப்பின் நாள் விசுவாசிகளுக்கு பயங்கரமான நாளல்ல. விசுவாசிகள் அத்தகைய பயத்தோடு வாழும்படி வேதம் எந்த இடத்திலும் விளக்கவில்லை. இந்த வேத உண்மைகள் தெரியாததால்தான் கிறிஸ்தவர்களில் பலர் நியாயத்தீர்ப்பை நினைத்து பயப்படுகிறார்கள். நியாயத்தீர்ப்புக்கு அஞ்ச வேண்டியவன் அவிசுவாசி மட்டுமே.

கர்த்தரின் பராமரிப்பு (அதி. 5)

தேவ கோபம் பற்றிய போதனை வேதத்தின் ஏனைய சத்தியங்களோடு பொருந்திக் காணப்படுவதை நாம் உணர்வது அவசியம். கர்த்தரின் ஆணை பற்றிய சத்தியம், அவருடைய கோபம் கடைசிவரை மனந்திரும்ப மறுத்து வாழ்கிறவர்களின் மேல் பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்டு அவர்கள் நியாயந்தீர்க்கப்படப்போவதாக விளக்குகிறதைப் பார்த்திருக்கிறோம். இனிக் கர்த்தரின் பராமரிப்பு பற்றிய சத்தியத்திற்கும் தேவ கோபத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பைப் பார்ப்பது அவசியமாகிறது. தேவ கோபமாகிய சத்தியம் கர்த்தரின் குணாதிசயங்கள் அனைத்தோடும், அவருடைய செயல்கள் அனைத்தோடும் பிரிக்கமுடியாதபடி இணைந்து காணப்படுகிறது. அதனால் கர்த்தரால் கைவிடப்பட்டு பாவத்தில் இறுதிவரை வாழ்ந்து அழிகிறவர்களில் கர்த்தரின் பராமரிப்பாகிய கிருபை எவ்வாறு செயற்படுகிறது என்பதை நாம் விளங்கிக்கொள்ளுவது அவசியம். 1689 விசுவாச அறிக்கை ‘கர்த்தரின் பராமரிப்பு’ என்ற அதிகாரத்தின் 6வது பத்தியில் தரும் விளக்கத்தைக் கவனிப்போம்.

“நீதியுள்ள நீதிபதியாகிய கடவுள் கேடான, பரிசுத்தமற்ற மனிதர்களை நியாயந்தீர்க்கிறார். அவர்களுடைய பாவத்தினால் அவர்களுடைய இருதயத்தை இருளடையச்செய்து கடினப்படுத்துகிறார். அவர்களுடைய மனத்திற்கு அறிவொளி தந்து, இருதயத்தில் கிரியை செய்திருக்கக்கூடிய கிருபையை அவர்கள் அடையமுடியாதபடி தடுத்துக்கொள்வதோடு, வேறு சிலருக்கு அவர் கொடுத்திருந்த வரங்களையும் திரும்ப எடுத்துக்கொள்கிறார். அவர்கள் தங்களுடைய கேடான இருதயத்தின் பாவத்தினால் பாவ சந்தர்ப்பங்களை நாடிப் பயன்படுத்திக் கொள்ளும்படியான சந்தர்ப்பங்களிலும் கடவுள் அவர்களை விடுகிறார். வேறுவிதத்தில் கூறப்போனால், அவர்களில் காணப்படும் உள்ளார்ந்த பாவத்தின் சீரழிவுகளுக்கும், உலகத்தின் சோதனைகளுக்கும், சாத்தானின் வல்லமைக்கும் அவர்களைக் கைவிட்டுவிடுகிறார். இதன் காரணமாக ஏனையோருடைய இருதயங்களை மென்மையாக்கக் கடவுள் பயன்படுத்தும் அதே சாதனங்களை அவர்கள் தங்களுடைய இருதயத்தைக் கடினப்படுத்தப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.”

இது கர்த்தரின் பராமரிப்பு பற்றிய மிகவும் அருமையான விளக்கம். இதற்கு முன்வந்த பத்தியில் கர்த்தர் தான் தெரிந்துகொண்டிருக்கிறவர்களை எந்தவிதத்தில் பராமரிக்கிறார் என்பதை விளக்கிவிட்டு, பரிசுத்தமற்றவர்களை எந்தவிதத்தில் பராமரிக்கிறார் என்பதை இந்தப் பத்தி விளக்குகிறது. கர்த்தர் எந்தவிதத்திலும் தீங்கு செய்கிறவர் அல்ல என்றும், தீங்கிற்கு அவர் காரணகர்த்தா அல்ல என்பதையும் இந்தப் பத்தி விளக்குகிறது. கேடானவர்களே கர்த்தரின் பொதுவான கிருபையை நிர்த்தாட்சண்யமாக அலட்சியப்படுத்தி தங்களுடைய இருதயத்தை அவருக்கு எதிராக கடினப்படுத்திக் கொள்ளுகிறார்கள் என்பதை இந்தப் பத்தி சுட்டிக்காட்டுகிறது. நீதியுள்ள கர்த்தர் கேடானவர்களை நீதியுடன் அணுகி அவர்கள் தங்களுடைய பாவத்தில் தொடருமாறு கைவிட்டு நியாயந்தீர்த்துத் தன்னுடைய கோபத்தை அவர்கள் மீது வெளிப்படுத்துகிறார். இந்தப் பத்தி தரும் விளக்கத்தில் ‘தேவ கோபம்’ என்ற வார்த்தைப் பிரயோகங்கள் காணப்படாவிட்டாலும் கர்த்தருடைய நீதியான தண்டனையில் அது உள்ளடங்கியிருப்பதை விளங்கிக்கொள்வது அவசியம். இந்தப் பகுதியில் விளக்கப்பட்டிருக்கும் சத்தியங்களுக்கான சில வேத வசனங்களைக் கவனிப்போம்.

சங்கீதம் 81:11-12     ரோமர் 1:28   1 பேதுரு 2:7-8

இன்னும் மூன்று இடங்களில் 1689 விசுவாச அறிக்கையில் தேவ கோபத்தைப் பற்றிய உண்மைகள் விளக்கப்பட்டிருக்கின்றன.

மனிதனின் வீழ்ச்சியும், பாவமும் அதற்குரிய தண்டனையும் (அதி. 6)

இந்த அதிகாரத்தின் மூன்றாம் பத்தி ஆதாம், ஏவாளின் பாவத்தைப் பற்றிய விளக்கத்தைத் தருகிறது. நம்முடைய முதற் பெற்றோர்களின் பாவத்தின் காரணமாகவே முழு மனிதகுலமும் பாவத்தால் கறைபட்டு பாவிகளாயினர். நம் முதற்பெற்றோரே மனிதகுலத்தின் பிரதிநிதிகளாக இருந்தனர். அந்த அடிப்படையில் இந்தப் பகுதி எல்லா மனிதர்களையும் பின்வருமாறு கணிக்கிறது.

‘ஆகவே, ஆதாம் ஏவாளினுடைய வழித்தோன்றல்கள், கருவிலேயே பாவத்தில் உருவாகி, இயற்கையாகவே (கடவுளின்) கோபாக்கினையின் குழந்தைகளாய், பாவத்தின் ஊழியர்களாயும், மரணத்திற்குட்பட்டவர்களாயும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து விடுவித்தாலன்றி மீட்படைய இயலாமல், ஆவிக்குரியதும், இவ்வுலகிற்குரியதும், எல்லையற்றதுமான பல்வேறு துன்பங்களுக்கும் உட்பட்டுவருகிறார்கள்.’

நம்முடைய முதல் பெற்றோர் பாவத்தை மட்டும் சம்பாதித்துக்கொள்ளாமல் அதோடு சேர்த்து தேவ கோபத்தையும், அதன் பலன்களாகிய பல்வேறு துன்பங்களையும் சம்பாதித்துக் கொண்டார்கள் என்பதை இந்தப் பகுதி தெளிவாக விளக்குகிறது. இதன் மூலம் தேவ கோபம் பற்றிய வேத சத்தியம் ஓரிரு இடங்களில் மட்டும் காணப்படும் போதனையல்ல என்பதையும் அது வேதத்தின் ஏனைய சத்தியங்களோடு தொடர்புடைய தவிர்க்கமுடியாத சத்தியம் என்பதையும் உணர்வது அவசியம். தேவ கோபம் தேவனின் நீதியோடு தொடர்புடைய அதிலிருந்து பிரிக்கமுடியாத சத்தியம்.

மத்தியஸ்தராகிய கிறிஸ்து (அதி. 8)

கர்த்தரால் முன்குறிக்கப்பட்டிருப்பவர்களின் மீதிருக்கும் பாவத்திற்கு நிவாரணத்தை ஏற்படுத்தி தேவ கோபத்தை நீக்க அனுப்பப்பட்டிருக்கும் கிறிஸ்துவின் மீட்புப் பணி பற்றிய ஆழமான சத்தியங்களை விளக்கும் இந்த அதிகாரத்தில் தேவ கோபத்தைப் பற்றிய விளக்கத்தை நாம் பார்க்காமல் இருக்க முடியாது. கிறிஸ்துவின் மீட்புப் பணி பற்றி விளக்கும் இந்த அதிகாரம் மிகவும் அருமையானது. வாரங்கள், மாதங்களை செலவிட்டு ஆராய்ந்து கற்றுக்கொள்ள வேண்டிய அதிகாரம் இது.

இந்த அதிகாரத்தில் தேவ கோபம் என்ற பதங்கள் பயன்படுத்தப்படாவிட்டாலும் அந்த சத்தியம் இது கிறிஸ்துவின் மீட்புப் பற்றி விளக்கும் சத்தியங்களில் உள்ளடங்கிக் காணப்படுவதைப் பார்க்கிறோம். அத்தகைய விளக்கங்கள் அடங்கிய பகுதிகளைக் கவனிப்போம்.

நான்காம் பத்தி:

‘நாம் பொறுப்பேற்று அனுபவிக்க வேண்டிய தண்டனைகளை அவர் தன்மேல் சுமந்து அனுபவித்து நமக்காக சாபமானார். தனது ஆத்துமாவில் நாம் புரிந்துகொள்ள முடியாத அளவு கடுமையான வேதனையை அனுபவித்தார். தனது சரீரத்தில் ஏற்பட்ட மிகவும் வேதனையுள்ள துன்பங்களையும் சகித்துக்கொண்டார். சிலுவையில் அறையப்பட்டதன் மூலமாக அவர் மரித்தார்.’

இதில் ‘நாம் பொறுப்பேற்று அனுபவிக்க வேண்டிய தண்டனைகளை அவர் தன்மேல் சுமந்து அனுபவித்து நமக்காக சாபமானார்’ என்பதில் நாம் அனுபவித்ததும் நமக்காக அவர் சுமந்ததுமான தேவ கோபம் அடங்கியிருப்பதை எவரும் மறுக்க முடியாது.

ஐந்தாம் பத்தி:

‘கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கடவுளுடைய நியாயப்பிரமாணத்திற்கு தாம் பரிபூரணமாக கீழ்ப்படிந்ததன் மூலமாகவும், நித்திய ஆவியினாலே ஒரே தரம் தன்னைத்தானே பலியாகக் கொடுத்ததன் மூலமும் தெய்வீக நீதியின் எல்லாக் கோரிக்கைகளையும் முழுவதுமாக திருப்தி செய்தார். அவர் ஒப்புரவாகுதலை இவ்விதமாக உண்டுபண்ணி, பிதாவினால் தமக்கு கொடுக்கப்பட்ட எல்லோருக்காகவும் பரலோக ராஜ்யத்தில் ஒரு நித்திய சுதந்திரத்தை கிரயம்செலுத்தி வாங்கினார்.’

இந்தப் பகுதியில், ‘ஒரே தரம் தம்மைப்பலி கொடுத்ததன் மூலமும் தெய்வீகக் நீதியின் எல்லாக் கோரிக்கைகளையும் முழுவதுமாக திருப்தி செய்தார்’ என்ற வார்த்தைகள் தேவ கோபத்தைக் கிறிஸ்து தம்மேல் சிலுவையில் சுமப்பது தெய்வீகக் கோரிக்கைகளில் ஒன்றாக இருந்தது என்பதை வெளிப்படுத்துகிறது. அதைக் கிறிஸ்து சுமக்காமல் மெய்யான ஒப்புரவாக்குதல் நிகழ வழியில்லை. ஒப்புரவாக்குதலின் மூலம் சமாதானம் உருவாக கிறிஸ்து நம்முடைய கோபநிவாரண பலியாக வேண்டியிருந்தது.

நீதிமானாக்குதல் (அதி. 11)

நீதிமானாக்குதல் பற்றிய விசுவாச அறிக்கை (11ம் அதிகாரம்) தரும் விளக்கங்களில் தேவ கோபம் என்ற பதங்கள் பயன்படுத்தப்படாவிட்டாலும், மனிதர்களின் பாவத்தை நீக்கி இரட்சிப்பை சம்பாதிப்பதற்காக கிறிஸ்துவின் கீழ்ப்படிவோடு கூடிய கிரியைகள் மற்றும் பலி பற்றிய விளக்கங்கள் அதைத் தொடாமலில்லை.

விசுவாசிகளினுடைய கணக்கில் வைக்கப்பட்ட நீதி கிறிஸ்துவின் கீழ்ப்படிவின் மூலம் நிறைவேற்றப்பட்டது என்று விளக்கும் இந்த அதிகாரத்தின் முதலாம் பத்தி, அந்தக் கீழ்ப்படிவின் இரு பக்கங்களைப் பின்வருமாறு சுட்டிக்காட்டுகிறது,

‘கிறிஸ்துவினுடய கீழ்ப்படிவு, நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படிந்து அதை முழுமையாகக் கடைப்பிடித்தல், மரணத்திற்கு தன்னை உட்படுத்திக் கீழ்ப்படிதல் ஆகிய இரண்டு தன்மைகளையும் உள்ளடக்கியுள்ளது.’

இதில் இந்தக் கீழ்ப்படிவின் இரண்டு அம்சங்களிலும் தேவ கோபத்தைக் கிறிஸ்து சுமக்கும் பணி அடங்கிக் காணப்படுகிறது என்பதை வேதம் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. கிறிஸ்து தேவ கோபத்தை சுமக்காமல் பாவம் போவதற்கு வழியே இல்லை. மெய்யான நீதிமானாக்குதல் நிறைவேற கிறிஸ்து அதைச் செய்யாமல் இருந்திருக்க முடியாது.

இறுதி நியாயத்தீர்ப்பு (அதி. 32)

இந்த அதிகாரத்தின் இரண்டாம் பத்தியில் கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கத்தைக் கவனியுங்கள்.

‘தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் நித்திய இரட்சிப்பின் மூலம் தமது கருணையின் மகிமையை வெளிப்படுத்தவும், தன்னால் புறக்கணிக்கப்பட்டவர்களின் அதாவது கேடானவர்களும், கீழ்ப்படியாதவர்களும் நித்திய அழிவின் மூலம் தமது நீதியின் மகிமையை வெளிப்படுத்தவும் கடவுள் நியாயத்தீர்ப்புக்கென்று ஒரு நாளைத் தீர்மானித்துள்ளார். அந்நாளில் நீதிமான்கள் நித்திய ஜீவனையும், தேவனுடைய சந்நிதானத்தில் மனமகிழ்ச்சியையும், மகிமையையும் நித்திய வெகுமதியாகப் பெற்றுக்கொள்வார்கள். ஆனால், கடவுளை அறியாத, இயேசு கிறிஸ்துவின் நற்செய்திக்குக் கீழ்ப்படிய மறுத்த கேடானவர்கள் நித்தியவேதனையை அடையும்படி நியமிக்கப்பட்டு கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமை பொருந்திய மகிமையிலிருந்தும் நீங்கலாகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்.’

இந்தப் பகுதி ‘நித்திய வேதனை’, ‘நித்திய அழிவு’ என்று இரு தடவைகள் நரகத்தில் தேவ கோபத்தை கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிய மறுத்தவர்கள் நிரந்தரமாகத் தொடர்ந்து அனுபவிக்கப் போவதை வெளிப்படுத்துகிறது. அவிசுவாசிகள் இந்த உலகில் மட்டுமல்லாது வரப்போகிற உலகிலும் தேவ கோபத்தைத் தொடர்ச்சியாக அனுபவிப்பார்கள் என்பதை இது விளக்குகிறது.

இப்படியாக 1689 விசுவாச அறிக்கையின் பல பகுதிகளில் ஏனைய வேத இறையியல் சத்தியங்களுக்கும் தேவ கோபமாகிய சத்தியத்திற்கும் இடையில் இருக்கும் பிரிக்க முடியாத தொடர்பைக் கவனிக்க முடிகின்றது. வேதத்தில் ஏதொவொரு பகுதியில் மட்டும், ஏனைய சத்தியங்களோடு தொடர்பில்லாதபடி மறைமுகமாகக் காணப்படுகின்ற ஒரு போதனையல்ல தேவ கோபம். அது கர்த்தரில் காணப்படும், பாவத்தின் மீதும், பாவிகள் மீதும் அவர் காட்டுகின்ற ஒரு குணாதிசயம் என்பதை நாம் தெளிவாகக் காண்கிறோம். (இனியும் வரும்)

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s